Thursday, August 09, 2018

சங்கம் - 5

இனிச் சங்கென்ற சொல்லின் சொற்பிறப்பிற்கு வருவோம். வரலாற்றுக் கண்ணோட்டத்திற் பார்த்தால் சங்கின் வளைவுப்பொருளே முதலிலெழ வாய்ப்புண்டு. வளைவுப்பொருள் கொண்ட சுல் எனும் வேர்ச்சொல்லில் கிளைத்த நூற்றுக்கணக்கான சொற்களை இன்றும்நாம் பயன்படுத்துகிறோம். சுல்>சுள்>சுழி, சுழி>சுரிதல்>சுரித்தல்; சுரிகுழல், சுரிகை, சுரிதகம், சுரிந்து, சுரிப்புறம்=சங்கு, நத்தை, சுரிமுகம்= சுழித்தமுகமுடைய சங்கு, சுரிகுழல், சுரியாணி, சுருங்கு, சுருக்கு, சுருட்டு, சுருணை, சுருள், சுலவுதல், சுழல், சுளுக்கு, சுறட்டுக்கோல், சுறு>சுற்று>சுத்து எனப் பலசொற்கள் நினைவிற்கு வருகின்றன. சங்கையும் அதன்தொடர்பான சக்கு, சக்கரம், சகடம் தவிர்த்த மற்றவற்றை இங்குநான் விளக்கவில்லை. அப்படிச்செய்தால் கட்டுரை நீளும்.

சுல்க்கு>*சல்க்கு>சக்கு என்பது வட்டப்பொருளையும், உருண்டைப் பொருளையுந் தரும். சக்கு>செக்கு= வட்டமாய்ச்சுற்றி எள்நெய் பிழிவிக்கும் இயந்திரம். (அகரச்சொற்கள் எகரத்தில் திரிவது பல சொற்களில் நடந்துள்ளது. காட்டு: பரு>பெரு.) வட்டப்பொருளே இச்சொல்லில் முகன்மை. வட்டமாய்ப் பூக்கும் பூஞ்சாளம்/பூஞ்சணமும், உருண்டைக் கண்ணும் கூடச் சக்கு எனப்படும். (முகத்தின் வழி பார்ப்பதற்கு மீன்போல் தோற்றமளித்தாலும், கண்ணுறுப்பைத் தனியே எடுத்துப்பார்த்தால் அது உருண்டையே.) சக்கான பலாப்பழம் சக்கைப்பழம். மலையாளத்தில் இதுவே பரவலாய்ப் புழங்கும். (நீளுருண்டை ஆயினும் சக்கையின் பெயர் அப்படித்தான்.) குண்டுமுல்லை சக்கைமுல்லை எனப்படும். உடல்வலியற்றுக் குண்டாய்ப் பருத்தவன் சக்கையன் எனப்படுவான். (யாழ்ப்பாண அகராதி). உருண்டையிலிருந்து மிகுதிப்பொருள் வரும். ”மழை சக்கையாய்ப் பெய்கிறது.” 

சக்கிற் பெரியது சக்கம். இதற்கும் வட்டப் பொருளுண்டு. சக்கத்தின் நீட்சி சக்கடம். சக்கடவண்டி என்பது மேற்கூடு இல்லாத கட்டைவண்டி. நாட்டுப் புறங்களில் வேளாண் ஊடாக இன்றும் சக்கடவண்டி புழங்குகிறார். சக்கட வண்டி சக்கர வண்டியாகவும் திரியும். சக்கரத்தைச் சங்கதம் உள்வாங்கிச் சக்ரமாக்கும். (சக்ரமே முதலென்போர், மேற்சொன்ன மற்ற சொற்களை யெல்லாம் ஒதுக்கிவிடுகிறார். சிக்கல் இதிற்றான் உள்ளது. வெறுமே ஒற்றைச்சொல்பார்த்து முன்னுரிமைகளைச் சொல்லமுடியாது. மொத்தக் கூட்டத்தையும் பார்த்தே சொல்லவேண்டும். அதனாற்றான் இராம.கி. கட்டுரைகள் நீளமாய் உள்ளன.) சக்கு>சக்கம்>சக்கடம்>சக்கரம்>சக்ரம். சக்கடமிருந்தால் ”சக்கடு”வும் இருந்திருக்கலாம். ஆனால் அதன்பயன்பாடு நமக்குத் தெரியவில்லை. அதன்தொகுதியான சகடும், சகடமும் ”சக்கரம், வண்டி”யென்ற பொருட்பாடுகளில் இன்றும் பயிலப்படுகின்றன. சக்கு> *சக்கடு>சகடு>சகடம். அம் ஈற்றிற்கு மாறாய் ஐ ஈற்றைச்சேர்த்து சகடை என்ற சொல் உருவாகி, வண்டியைக் குறித்தது.

[சகடு-சகடை-சகடம் என்ற சொல்லிணை போலவே உருள்-உருளி-உருளம் என்ற இணையுமுண்டு. இங்கும் முதற்சொல் சக்கரத்தையும், 2,3 ஆம் சொற்கள் வண்டியையும் குறித்தன. எப்படிச் சோளம்> சோழம் என்பது தெலுங்கில்போய் டகரம் ஆகி (சோடம்; தெலுங்குச் சோடர்) இன்னும் வடக்கே போய்த் தகரமாய்த் திரிகிறதோ, அதுபோல் உருளம்>உருடம்>(உ)ருதம் என்றாகி உகரவொலி மறைந்து அகரவொலியேறி ரதமாகும். (தமிழரிற்பலரும் ரதமும் தேரும் வேறானவை என்றெண்ணுகிறார். இரண்டும் ஒருபொருட் சொற்களே.) ரதத்தையொட்டி இந்தையிரோப்பியச் சொற்கள் பலவுண்டு. இன்னும் பார்க்கின், சக்கரத்திற்கும் மேலைமொழிகளின் chariot, car க்குங் கூட ஆழ்தொடர்புண்டு. (மூலந் தெரியாது சிந்தனை மயங்கிய நிலையில், முரணைபேசாது, car ஐச் சகடை/சகடம் என்றழைக்க நம்மில் எத்தனைபேர் முன்வருவர்? மரபோடு இவற்றைப் பொருத்தாவிடின், சுற்றிவளைத்துக் காலகாலமும் மகிழுந்தைப் புழங்கவேண்டியது தான்; அன்றேல் காரைக் கடன்வாங்கி எழுதவேண்டியது தான்.]
 
சக்கின் மெல்லோசையில் சங்காகும். சங்கிற்பெரியது சங்கம். சக்கு>சங்கு> சங்கம். வடிவியலில் 360 பாகையில் சுற்றிவரும் போது ஒரே நீள ஆரங் கொண்டிருந்தாற் கிடைக்கும் வடிவம் வட்டமாகும். சக்கரம் வட்டவடிவம். இதில் வளைச்செலுத்தம் (turning process) மட்டுமே நடைபெறுகிறது. மாறாக ஒவ்வொரு பாகைக்கும் வளைச்செலுத்தமொடு ஆரநீளமும் சீராகக் கூடுமெனில், வளைச்செலுத்தம்+ ஆரநீட்டம் ஆகிய செலுத்தங்களால் புரிச்சுருவை (spiral curve) உருவாகும். இதன் இன்னொரு நீட்சியான முப்பரிமானப் புரிச்சுற்றில் சங்கு எழுந்தது. அடிப்படையில் வட்டமென்பது, ஒரு மூடியசுற்று. புரிச்சுருவையோ மூடாச்சுற்று. உயிரியலில், சங்குயிரியின் அஃகில்நெக் காடியைப் (DNA; Deoxytibo Nucleic Acid/ பயந்துவிடாதீர்கள். அ.நெ.கா. என்று சுருங்கச்சொல்லலாம். விரித்துச்சொன்னால் அஃகிலரப நெற்றுக் காடி. எத்தனை நாளைக்கு DNA என்று ஆங்கில எழுத்திலோ, டி.என்.ஏ என்று தமிழெழுத்துப்பெயர்ப்பிலோ எழுதிக்கொண்டிருப்போம்?) பொறுத்து, இடம்புரி, வலம்புரி, சலஞ்சலம், ஐஞ்சுன்னம் என்று பல்வேறுவகைச் சங்குகள் விளையும். நம் விரலிற்காணும் வரிகளில் [வரிகையே சங்கதத்தில் (வ்)ரேகையானது.] கூட ஒருவகை சங்காயும். இன்னொன்று சக்கரமாயும் அமையும்,

இதுவரை சங்கின் வளைப்பொருள் பார்த்தோம். குபேர நிதிகளைச் சேர்ந்த சங்கநிதி (முத்து), பவளநிதியும் சங்கோடு தொடர்புற்றவையே. சங்கை அறுத்துப்பெற்ற கைவளையும், சங்குபோல் வளைவு கொண்ட நெற்றியும், சங்குபோல் ஓசையெழுப்பும் துளைகொண்ட குரல்வளையும், சங்குபோல் வலக்கை, இடக்கைகளைப் பிடித்துக் காட்டுவதால் அமையும் உள்ளடங்கிய கைக்குழியும், காலிற் சங்கு பொருத்தியதுபோல் அமையும் கணைக்காலும் சங்கோடு மரபு வரிதியிற் தொடர்புற்றன. முடிவில் அழகெனும் பொருளும் சங்கின் வெண்மைகருதி ஏற்பட்டது. இப்போது சொல்லுங்கள் சங்கு நிறையக் கிடைத்த இடங்களில் நிலவிய வட்டாரமொழிச்சொல் இந்தியாவெங்கணும் பரவி நிலைக்குமா? எங்கோ இலாகூருக்குப்பக்கம் உருவான மொழியின் வழிப்பட்ட பிற்றைமொழியில் (சங்கதம்) நிலைக்குமா? சங்கு தமிழில்லை யென்பது அது எப்படிச் சரியாகும்? கடலைவிட்டுப் பெரிதும் தள்ளிய, படித்தவரிடையே மட்டுமிருந்த, சங்கதத்திலா பரதவர் “சங்கென்று” பெயரிடுவார்? அவரென்ன முட்டாள்களா? என்னவொரு விந்தையில் இப்படியான சிந்தனை எழுகிறது? இனிச் சங்குபற்றிய, பொ.உ. 6 ஆம் நூற்றாண்டிற்கு முந்தைய, இலக்கியச் சொல்லாட்சிகளைப் பார்ப்போம்..

பெருங்கடல் வெண்சங்கு காரணமாப் பேணாது
இருங்கடன் மூழ்குவார் தங்கை - இருங்கடலுள்
முத்தன்ன வெண்முறுவல் கண்டுருகி நைவார்க்கே
ஒத்தனம் யாமே யுளம்.

என்ற கணிமேதாவியாரின் திணைமாலை நூற்றைம்பது 33.ஆம் பாடலே நானறிந்தவரை சங்கின் நேரடிப்பயன்பாட்டிற்கான (கவனம்: நேரடிப்பயன்பாடு) முதற்சான்று. ”பகையணங் காழியும் பால்வெண் சங்கமும், பணில வெண் குடை” என்று சிலம்பின் 11:43 அடியில் சங்கின் நீட்சியான சங்கம் பயிலும். இந்நீட்சிப்பொருள் சரியானால் சிலம்பே இன்னும் முந்தைக் கூற்றாகும். சிலம்பு பொ.உ. 5 ஆம் நூற்றாண்டென்பதை என்றும்நான் ஒப்பியதில்லை. அது இரண்டாம் நூற்றாண்டென்பதையும் ஏற்றவனில்லை. சிலப்பதிகாரக்காலம் பொ.உ.மு.75 என்றே ’ சிலம்பின் காலம்” நூலில் நிறுவினேன்.

”தத்துநீர் அடைகரைச் சங்கு உழு தொடுப்பின்
முத்துவிளை கழனி முரிசெம் பவளமொடு”

என்ற பொ.உ.400 களைச் சேர்ந்த மணிமேகலையின் 8: 3-4 ஆம் வரிகள் சங்கின் தொடர் பயன்பாட்டை உறுதிசெய்யும்.

‘சங்கறுப்ப தெங்க(ள்)குலஞ் சங்கரர்க்கங் கேதுகுலம்
பங்கமுறச் சொன்னால் பழுதாமோ - சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனாரைப் போல
இரந்துண்டு வாழோ மினி‘

என்பது நக்கீரர் பாடியதாகச் சொல்லப்படும் பாடல். இதன்காலம் தெரியாது. பிறவா யாக்கைப் பெரியோனாகிய சிவபெருமானுக்கும் சங்கரனெனும் பெயருண்டு. ஏனையக் கடவுளர் எதோவொரு தாய் வயிற்றில் பிறந்தவராம். பிறவா யாக்கைப் பெரியோனுக்குக் குலமில்லையாம். சுடலைப்பொடி பூசிப் ’பிச்சாஞ் தேகி’யாகிக் கபாலத்தில் பிச்சையெடுத்து உண்பதாகப் புராணங்கள் சொல்லும். நக்கீரர் பின்னிரண்டு அடிகளில் சிவனின் இரந்துண்டு வாழுஞ் செயலைக் குறிப்பிட்டு ”நாங்கள் சங்கை அரிந்துண்டு வாழ்வோமேயன்றி உம் போல் இரந்துண்டு வாழோமெ”னச் சொன்னதாய் இப்பாடல் கூறும்.   நமக்குக் கதை முகனமில்லை. சங்கென்ற சொல்லாட்சியே இங்கு முகன்மை.

அன்புடன்,
இராம.கி.

No comments: