Wednesday, March 22, 2006

தமிழெனும் கேள்வி

பாரத் வெள்ளைச்சாமி, சத்தியா என்ற துடிப்புள்ள நண்பர்கள் துபாயில் இருக்கிறார்கள். அவர்கள் "கணினியில் தமிழ்" என்ற பொருளில் திருவாரூரில் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஆகஸ்ட் 15, 2003 ல் நடத்தினார்கள். அந்த நிகழ்ச்சியை ஒட்டி வெளியிட்ட பொத்தகத்தில் நான் ஒரு கட்டுரை எழுதிப் பங்காற்றவும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். கடைசி நேரத்தில் என்னால் அலுவற் பளு காரணமாய்க் கலந்து கொள்ள முடியாது போயிற்று. நம் ஞானவெட்டியானும், நாக. இளங்கோவனும் கலந்து கொண்டார்கள் என்று எண்ணுகிறேன். நான் அனுப்பிய கட்டுரை (மடல் வடிவில் உள்ளது) இங்கு உங்கள் வாசிப்பிற்கு கொஞ்சம் திருத்தத்துடன்.
--------------------------------------------------------
அன்பிற்குரிய வாசகருக்கு,

இந்த மலர் உங்களுக்கு வந்து சேர்ந்து, இந்தக் கட்டுரை வரைக்கும் விருப்பத்தோடு நீங்கள் படிக்க முற்பட்டு இருப்பீர்களானால், தமிழ் மேல் உங்களுக்கு ஏதோ ஒரு பற்று அல்லது அக்கறை இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அப்படியானால் உங்களோடு பேசலாம்; இன்னும் சொன்னால் பேசத்தான் வேண்டும்; உங்களைப் போன்றவர்களுடன் கலந்து உரையாடாமல், வேறு யாருடன் நான் உரையாடப் போகிறேன்?

தமிழ் மொழியைப் பேச, படிக்க, மற்றும் எழுத எங்கு கற்றுக் கொண்டீர்கள்? உங்கள் பெற்றோரிடம் இருந்தா, ஆசிரியரிடம் இருந்தா, அல்லது உங்களைச் சுற்றி உள்ள சுற்றம், மற்றும் நட்பில் இருந்தா? நீங்கள் எந்த இடங்களில் எல்லாம் தமிழில் பேசுகிறீர்கள்? எங்கெல்லாம் ஆங்கிலத்தில் பேசுகிறீர்கள்? உங்கள் நெடு நாளைய நண்பரையோ, அல்லது முன்பின் தெரியாத தமிழரையோ பார்க்கும் பொழுது, அந்தக் கணத்தில் நீங்கள் தமிழில் உரையாடுகிறீர்களா, அல்லது ஆங்கிலத்தில் உரையாடுகிறீர்களா?

நீங்கள் பேசும் ஆங்கிலத்திற்குள் உங்களை அறியாமல் தமிழ் ஊடுறுவுகிறதா? அப்படி ஊடுறுவினால், அதை ஒரு நாகரிகம் இல்லாத பட்டிக் காட்டுத் தனம் என்று எண்ணிக் கொஞ்சம் வெட்கப் பட்டுக் கொண்டு, அதைத் தவிர்க்க முயன்றிருக்கிறீர்களா? உங்கள் ஆங்கில வன்மை கூடுவதற்காகப் பல்வேறு பயிற்சிகள் செய்ய முற்பட்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் ஆங்கிலம் - ஆங்கிலம் அகரமுதலி வைத்திருக்கிறீர்களா? உங்களுக்குத் தெரியாத ஆங்கிலச் சொற்களைப் பயிலும் போது, அவற்றின் பொருள் அறிய வேண்டிச் சட்டென்று அகர முதலியைத் தேடுகிறீர்களா?

ஆங்கிலப் பேச்சில் சிறக்க வேண்டும் என்ற ஒய்யார எண்ணத்தால் (fashionable idea) உந்தப் பெற்று, உச்ச கட்டமாக, தங்கள் பெற்றோரோடும் சுற்றத்தாரோடும் இருக்கும் உறவையே கூடச் சில போது முற்றிலும் துண்டித்துக் கொள்ள ஒரு சிலர் முயலுவார்கள்; அந்த விவரங் கெட்ட நிலைக்கு நீங்கள் போனதுண்டோ ? ஆங்கிலம் அறியாப் பெற்றோர், சுற்றத்தாரின் வாடையே, உங்களூக்கும், உங்கள் பிறங்கடைகளுக்கும் (சந்ததியாருக்கும்) வரக்கூடாது என்று நீங்கள் எண்ணியதுண்டோ ?

உங்கள் பேச்சில் தமிழ் மிக மிகக் குறைந்து இருந்தால், அது எதனால் ஏற்படுகிறது? தமிழும், தமிழன் என்ற அடையாளமும் வேண்டாம் என்று முடிவெடுத்து விலக்குகிறீர்களா? அல்லது சோம்பலாலும், கவனக் குறைவாலும், ஆங்கிலம் பழகினால் குமுகாயத்தில் ஒரு மேலிடம் கிடைக்கும் என்ற உந்துதலாலும், தமிழை விலக்குகிறீர்களா? தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல, அது தமிழ நாகரிகத்தின் கருவூலம் என்பதை மறுத்து, அது வெறும் கருத்துப் பரிமாற்ற மொழி, இனி வரும் நாட்களில் ஆங்கிலமே போதும், என்று எண்ணுகிறீர்களா?

இதற்கெல்லாம் ஆம் என்று நீங்கள் விடையளித்தால், உங்களோடு மேற்கொண்டு உரையாடுவதில் பொருள் இல்லை; மேற்கு இந்தியத் தீவுகளில் இருந்து கொண்டு, நாலைந்து தலைமுறைக்கு அப்புறமும், தன் பெயரை முட்டம்மா என்று வைத்துக் கொண்டு, தன் தாத்தா தண்டபாணிக்குக் கொஞ்சூண்டு தமிழ் தெரியும் என்று சொல்லித் தமிழில் பேச இயலாத ஒரு பெண்ணுக்கும், உங்களுக்கும் மிகுந்த வேறுபாடு இல்லை. வெகு விரைவில் நீங்கள் எங்களை விட்டுப் பெருந் தொலைவு விலகிப் போய்விடுவீர்கள்; என்றோ ஒரு நாள் தமிழராய் இருந்ததற்காக உங்களோடு நாங்கள் அன்பு பாராட்ட முடியும். அவ்வளவே. எங்கிருந்தாலும் வாழ்க, வளமுடன்!

மாறாக மேலே உள்ள கேள்விகளுக்கு ஆம் என்று சொல்லாமல் கொஞ்சமாவது தடுமாறினீர்கள் என்றால், உங்களோடு உரையாடுவதில் இன்னும் பலன் உண்டு. அந்த எண்ணத்தினாலேயே, மேலும் இங்கு உரையாடுகிறேன்.

சுற்றம், நட்பு போன்ற இடங்களில் நீங்கள் தமிழ் பேசத் தவித்திருக்கிறீர்களா? அலுவல் தவிர்த்து, மற்றோரோடு நீங்கள் பேசும் உரையாடல்களில், எத்தனை விழுக்காடு தமிழில் இருக்கும்? அடிப்படை வாழ்க்கைச் செய்திகளில், உங்களால் தமிழில் உரையாட முடிகிறதா? தமிழ் பேசும் போது ஆங்கிலம் ஊடுறுவினால், அதைப் பட்டிக் காட்டுத் தனம் என்று எண்ணாமல், நாகரிகம் என்று எண்ணுகிறீர்களா? அந்த ஊடுறுவலைத் தவிர்க்க முடியும் என்று அறிவீர்களோ? உங்கள் வீட்டில் தமிழ்-தமிழ் அகரமுதலி இருக்கிறதா? தமிழ்- ஆங்கிலம் அகரமுதலி இருக்கிறதா? உங்களுக்குத் தெரியாத தமிழ்ச் சொற்களைப் பயிலும் போது, உடனே தமிழ்-தமிழ் அகரமுதலியைத் தேடுகிறீர்களா?

உங்கள் பெற்றோர் அறிந்த தமிழோடு, உங்கள் தமிழை ஒப்பிட்டால் இப்பொழுது அந்தப் பேச்சில் தமிழ் என்பது எவ்வளவு தேறும்? 98 விழுக்காடாவது தேறுமா? இரண்டு விழுக்காடு குறைந்தாலேயே, ஏழாவது தலைமுறையில், மடக்குச் செலுத்தத்தில் (exponential process) பார்த்தால், முக்கால் பங்கு தமிழ் "போயே போயிந்தி" என்று உங்களுக்குத் தெரியுமா? எந்த ஒரு மொழியிலும் கிட்டத்தட்ட 85 விழுக்காடு வினையல்லாத பெயர், இடை மற்றும் உரிச் சொற்கள் என்றும், 15 விழுக்காடுகளே வினைச்சொற்கள் என்றும் உங்களுக்குத் தெரியுமா? சொல்வளத்தைக் கூட்டுவது என்பது பெயர்ச் சொற்களை மேலும் மேலும் அறிந்துகொள்ளுவதே என்று கேட்டிருக்கிறீர்களா? நம் ஊர்ப்பக்கம் நாம் கற்றுக் கொண்டவை கூடப் புழங்கிக் கொண்டே இருக்கவில்லை என்றால் மறந்துவிடும் என்று அறிவீர்களா? தமிழ் வட்டாரத்திற்கு வட்டாரம் ஓரளவு மாறிப் புழங்குகிறது என்று தெரியுமா? இந்தத் தமிழ் நிலைத்திருக்க நாம் என்னெவெல்லாம் செய்கிறோம் என்று எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? தமிழ் என்பது நாம் பழகும் ஒரு மொழி என்பதோடு மட்டுமல்லாமல், மேலும் சில கடமைகள் நமக்கு உண்டு என்று எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? தமிழ் நமக்கு என்ன தருகிறது? தமிழுக்கு நாம் என்ன தருகிறோம் என்ற இருபோக்கு நடைமுறையைக் கொஞ்சம் கூர்ந்து பார்ப்போம்.

மொழி என்பது கருத்துப் பரிமாறிக் கொள்ள ஒரு வகையான ஊடகம், மிடையம் என்பதை நாம் எல்லோரும் ஒப்புக் கொள்ளுகிறோம். தமிழர்க்குப் பிறந்த ஒரு குழந்தையை, அந்தக் குழந்தையின் பெற்றோர்களுடைய பண்பாட்டுத் தாக்கம் இல்லாத ஒரு குமுகாயத்தில், தமிழ் அறியாத ஒரு குமுகாயத்தில், வளர்த்தோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், அது தமிழப் பிள்ளையாக அல்லாமல் வேறு வகைப் பிள்ளையாகத் தான் வளரும்; ஆனால் தமிழ் என்பது வெறும் ஊடகமா? மீனுக்கு அதைச் சுற்றிலும் உள்ள நீர் வெறும் ஊடகமா? பின் புலமா? உப்பில்லாத நல்ல தண்ணீரில் வளர்ந்த ஒரு கெண்டை மீனைக் கொண்டு போய் உப்புங் கழியில் போட்டால் அது உயிர் வாழ முடியுமோ? பின் புலத்தை மீறிய ஒரு வாழ்வு உண்டோ ? ஊடகம், ஊடகம் என்று சொல்லி மொழியின் பங்கைக் குறைத்து விட்டோ மே? மொழி என்பது ஊடகம் மட்டுமல்ல; அது ஒரு பின்புலமும் கூட. இந்தப் பின் புலம் ஒரு சூழ்நிலையை உருவாக்குகிறது. அது நம் சிந்தனையை ஒரு விதக் கட்டிற்குக் கொண்டு வருகிறது. நாம் மொழியால் கட்டுப் படுகிறோம். மாந்தரும் கூட தாம் வாழும் சூழ்நிலைக்கு ஏற்பத் தானே இருக்க முடியும்? பிறக்கும் போது இருக்கும் பின் புலத்தின் தாக்கம் (அது பெற்றோர் வழியாகவோ, மற்றோர் வழியாகவோ) ஏற்பட்ட பின், தமிழை ஒதுக்கி ஒரு தீவு போல, வேறொரு மொழியின் பின்புலத்தில் வளர முடியுமோ? இப்பொழுது நீங்கள் தமிழ் நாட்டில் பிறந்து விட்டீர்கள், (அல்லது ஈழத்தில் பிறந்து விட்டீர்கள்), அல்லது வேறு நாட்டில் பிறந்தும் உங்கள் பெற்றோர் தமிழ்ப் பின்புலத்தை விடாது காப்பாற்றி வருகிறார்கள், இந்த நிலையில் நீங்கள் தமிழை விட முடியுமா? ஒன்று கிணற்றைத் தாண்டாமல் இருக்கலாம், அல்லது முற்றிலும் தாண்டலாம்; இடைப் பட்ட நிலையில் பாதிக் கிணற்றைத் தாண்டி உயிர் வாழ முடியுமோ?

தமிழும் அது போலத் தான். தமிழ் என்னும் பின்புலம் தமிழ்ப் பண்பாடு, இலக்கியங்கள், இலக்கணங்கள், சிந்தனைகள் ஆகிவற்றின் தொகுப்பைக் குறிக்கிறது. அவற்றைத் தெரிந்து கொள்ளாமல், தமிழ் அறியாதவனாக இருக்கலாம்; அல்லது தெரிந்து கொண்டு, தமிழ் அறிந்தவனாக இருக்கலாம். இடைப் பட்ட நிலை என்பது ஒருவகையில் திரிசங்கு சொர்க்கமே! தமிழ் கற்பது என்பது ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சி. உங்களோடு இந்தப் பழக்கம் நின்று போகவா, நீங்கள் இதைக் கற்றுக் கொண்டீர்கள்? இல்லையே? வாழையடி வாழையாய் இந்த மொழி பேசும் பழக்கம் தொடர வேண்டும் என்று தானே உங்களுக்கு மற்றவர்கள் கற்றுக் கொடுத்தார்கள்? அப்படியானால், இந்தத் தொடர்ச்சியைக் காப்பாற்ற யாருக்கெல்லாம் நீங்கள் தமிழ் பேசக் கற்றுக் கொடுத்தீர்கள்? குழந்தையாய் இருந்த போது, கற்றுக் கொண்ட "நிலா! நிலா! ஓடி வா" வையும், "கை வீசம்மா, கைவீசு" வையும் இன்னொரு தமிழ்க் குழந்தைக்கு நீங்கள் கற்றுக் கொடுத்திருக்கிறீர்களா? வாலறுந்த நரி, சுட்ட பழம் - சுடாத பழம் போன்ற கதைகளை இன்னொருவருக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறீர்களா? ஆத்திச் சூடி, திருக்குறள், நாலடியார் போன்றவற்றில் இருந்து ஒரு சிலவாவது மற்றவர்க்குச் சொல்ல முடியுமா? இந்தக் கால பாரதி, பாரதிதாசன் ஏதாவது படித்திருக்கிறீர்களா? கொஞ்சம் மு.வ., கொஞ்சம் திரு.வி.க. படித்திருக்கிறீர்களா? ஓரளவாவது புதுமைப் பித்தன், மௌனி, லா.ச.ரா, செயகாந்தன் படித்திருக்கிறீர்களா? பல்வேறு காலத் தமிழ்ப் பாட்டுக்கள், மற்றும் உரைநடைகளைப் படித்திருக்கிறீர்களா? (ஈழத்தார்கள் இதற்கு இணையான செய்திகளை நினைவில் கொள்ளுங்கள்; நான் இங்கே தமிழ்நாட்டுச் செய்திகளைச் சொன்னது திருவாரூர் நிகழ்ச்சிக்காக.)

தமிழ் சோறு போடுமா என்று சிலர் கேட்கிறார்கள்; தமிழ் கற்றுக் கொடுக்கும் ஒரு சிலருக்குச் சோறு போடக் கூடும்; தமிழ்த் தாளிகைக் காரருக்குச் சோறு போடக் கூடும்; இன்னும் ஒரு சிலருக்கும் சோறு போடக் கூடும்; ஆனால் பொதுவான மற்றவருக்குச் சோறு போடா விட்டாலும், சிந்தனையைக் கற்றுக் கொடுக்கிறது என்று அறிவீர்களா? மேலே நான் சொன்ன தமிழ் ஆக்கங்களை எல்லாம் படிக்கும் போது, தமிழ் வாழ்க்கை முறையைக் கற்றுக் கொள்ளுகிறீர்கள் அல்லவா? ஏரணம் என்பது சிந்தனை வளர்ச்சியில், காரண காரியம் பார்க்கும் முறை; இதை வேறு ஒரு மொழியின் மூலம் கற்றுக் கொள்ளுவது ஓரளவு முடியும் என்றாலும் தாய் மொழியில் கற்பது எளிது என்று அறிவீர்களா?

சிந்தனை முறை கூட மொழியால் மாறுகிறது என்று அறிவீர்களோ? "நான் அவனைப் பார்த்தேன்" என்று சொல்லும் போது, கொஞ்சம் நின்று, எண்ணிப் பார்த்துச் சொல்ல வேண்டி இருக்கிறது அல்லவா? செய்யும் பொருள், செயப்படும் பொருள் ஆகியவற்றை முன்னிலைப் படுத்திப் பிறகு தானே வினையைச் சொல்லுகிறோம்? இந்திய மொழிகள் எல்லாவற்றிலும், குறிப்பாக தமிழிய மொழிகளில், இந்தச் சிந்தனை முறை இயல்பானது. இதை SOV (Subject - Object - Verb) என்று மொழியியலார் சொல்லுவார்கள். மாறாக மேலை மொழிகளில் SVO - "நான் பார்த்தேன் அவனை" என்ற முறையில் வாக்கியத்தை அமைக்க வேண்டும். SOV சிந்தனை முறை இருக்கும் ஒருவன், SVO பழக்கம் இருக்கும் ஒருவனைச் சட்டென்று புரிந்து கொள்ளுவது கடினமே. சப்பானியர்கள் முற்றிலும் SOV பழக்கம் உடையவர்கள். அவர்கள் வெள்ளைக் காரர்களைப் புரிந்து கொள்ளுவதும், வெள்ளைக் காரர்கள் சப்பானியரைப் புரிந்து கொள்ளுவதும் மிகக் கடினம் என்பார்கள். அதே பொழுது நாம் ஓரோ முறை இலக்கியத்தில் SVO முறையைப் பயன் படுத்துகிறோம். சீதையைப் பார்த்து வந்த சேதியைச் சொல்லும் அனுமன் இராமனிடம் சொல்லுவதாகக் கம்பன் சொல்லுவான்: "கண்டேன் சீதையை". இது போன்ற சொல்லாட்சிகள் தமிழ் இலக்கியத்தில் பல இடங்களில் உண்டு. அதாவது பெரும்பான்மை SOV என்றே சிந்திக்கும் நாம், ஓரோ முறை SVO என்றும் சிந்திக்கிறோம். இந்தியர்கள் கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையில் பாலமாக இருப்பது இதனால் தான் போலும். என்ன சொல்ல வருகிறேன் என்றால் நம் மொழி நம் சிந்தனையைக் கட்டுப் படுத்துகிறது. "நீ உன் பெற்றோருக்கு எத்தனாவது பிள்ளை?" என்ற கேள்வி தமிழில் மிக இயல்பாக எழும். ஆங்கிலத்தில் இதைச் சுற்றி வளைத்துத் தான் சொல்ல இயலும். இது போல ஆங்கிலத்தில் சொல்லுவது சிலபோதுகளில் தமிழில் நேரடியாகச் சொல்ல முடியாது.

இந்தச் சிந்தனை ஒரு வகையில் பார்த்தால், பண்பாட்டு வருதியானது; மொழி வருதி(=ரீதி)யானது. இதில் ஒரு மொழியின் வருதி உயர்ந்தது; இன்னொரு மொழியின் வருதி தாழ்ந்தது என்பது தவறான கூற்று. நம் வருதி நமக்கு உகந்தது என்பதை நாம் உணரவேண்டும்; இன்னும் சொன்னால், தமிழ் என்னும் வருதி, தமிழனுக்கு ஒரு அடையாளம்; ஒரு முகவரி. தமிழ் நமக்கு இதைத்தான் கொடுக்கிறது.

சரி, தமிழுக்கு நாம் என்ன கொடுக்கிறோம்? அதாவது பண்பாட்டு வருதிக்கு நாம் என்ன செய்கிறோம்? நமக்கு அடுத்த தலைமுறையினருக்கு என்ன தருவோம்? இருக்கின்ற சொத்தோடு கூட. நாம் என்ன சேர்த்து வைத்துப் போகிறோம்? இன்றைக்குத் தமிழ் என்பது பழம் பெருமை பேசுதற்கும், பழைய இலக்கியம், இலக்கணம், அண்மைக் காலக் கதை, கவிதை, கட்டுரை, துணுக்குகள், கொஞ்சம் அரசியல், ஏராளம் திரைப்படம் பற்றி அறிய மட்டுமே பயன் பட்டு வருவது ஒரு பெருங்குறை என்று அறிவீர்களா? நம்மை அறியாமலேயே அலுவல் என்பதற்கு ஆங்கிலமும், நுட்பவியல் என்பதற்கு ஆங்கிலமும், மற்றவற்றிற்குத் தமிழும் என ஆக்கி வைத்திருப்பது எவ்வளவு சரி? புதுப் புது அறிவுகளைக் கலைகளைத் தமிழில் சொல்ல வில்லை என்றால் தமிழ் குறை பட்டுப் போகாதா? அப்புறம் தமிழில் என்ன இருக்கிறது என்ற நம் பிறங்கடைகள் கேட்க மாட்டார்களா? நாம் சொல்லிப் பார்த்து அதன் மூலம் மொழி வளம் கூட்டவில்லை என்றால் நம் மொழி பயனில்லாத ஒன்று என்று, இன்னும் ஒரு தலை முறையில் அழிந்தே போகாதா? நாம் தமிழுக்கு என்ன செய்தோம்? நமக்குத் தெரிந்த செய்திகளை, அறிவைத் தமிழில் சொல்லிப் பார்க்கிறோமா? ஆங்கிலம் தெரியாத நம் மக்களுக்குப் புரிய வைக்கிறோமா? எல்லாவற்றிற்கும் ஆங்கிலமே புழங்கி, நம் எதிர்காலத்தை நாமே போக்கிக் கொள்ளுகிறோமே, அது எதனால்?

இந்தக் கட்டுரையில் கேள்விகளை மட்டுமே எழுப்பிக் கொண்டு இருக்கிறேன். அதற்கான விடைகளை நீங்கள் தேட வேண்டும் என்ற எண்ணம் கருதியே கேள்விகளை எழுப்புகிறேன். எண்ணிப் பாருங்கள்.

தமிழுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? கணி வழிக் கல்வி, கணிப் பயன்பாடு என எத்தனையோ படிக்கப் போகிறீர்கள். இந்தக் கணியுகத்திலும் தமிழ் தலை நிமிர்ந்து நிற்க முடியும், நீங்கள் ஒத்துழைத்தால்.

செய்வீர்களா?

அன்புடன்,
இராம.கி.

3 comments:

முத்துகுமரன் said...

நீங்கள் குறிப்பிடுபவர் பாரத் வெள்ளைச்சாமியா இல்லை பரத் வெள்ளைச்சாமியா... கொஞ்சம் தெளிவு படுத்துங்களேன்.

பரத்தாக இருந்தால்,
அவர் இனிமையான நண்பர், நல்ல தமிழ் ஆர்வலர். தமிழ் சமுதாயம் மேம்படவேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை உடையவர்..

*

சிறப்பான கட்டுரை. நன்றி

ஞானவெட்டியான் said...

திருவாரூர் பக்கத்தில் உள்ள ஊரில் பிறந்த நம்ம பரத் வெள்ளைச்சாமிதான். எக்குத் தப்பாக மாட்டிக்கொண்டு இறுதியில் அவ்விழாவினைத் தலை மேலே தாங்கினது நான்தான்.

இராம.கி said...

எனக்கு அவர் அனுப்பிய மின்னஞ்சல்களில் பாரத் என்றே இருக்கிறது. ஒருவேளை அது தட்டச்சுப் பிழையாக இருக்கலாம். பரத் என்பதை ஞானவெட்டியான் உறுதி செய்திருக்கிறார். அவர், இந்த நண்பர்களை நேரே பார்த்தவர்; எனக்குப் பார்க்கக் கொடுக்கவில்லை.

இருந்தாலும், அவர்களுடைய பணி என்னை ஈர்த்தது. அதனால் என்னுள்ளே இன்றும் நினைவு இருக்கிறது.

அன்புடன்,
இராம.கி.