Monday, March 13, 2006

பேரீச்சை

நம்மூரில் பேரிச்சை என்பது மளிகைக்கடைகளில், ஏதோ ஒரு கிளர்ப் புட்டிலில் (glass bottle)* கிடக்கும் பழமாகவே எனக்குச் சிறு அகவையில் தோற்றமளித்தது. அந்தக் காலத்தில் ஓரணாவுக்கு (ஒரு உருவாய்க்கு 16 அணா) 7,8 என எங்கள் ஊரில் அவ்வப்போது வாங்கிச் சாப்பிட்டதற்கு மேலாக அது என்னை ஈர்த்ததில்லை. இந்தக் காலத்து Lion dates, விதவிதமான விளம்பரங்கள், எல்லாம் அப்பொழுது நான் அறிந்தது கூடக் கிடையாது.

நாலு ஆண்டுகளுக்கு முன், அலுவல் நிமித்தமாய், சவுதி அரேபியத் தலைநகர் ரியாதில் இருபது மாதங்கள் வாழ நேர்ந்தது. அங்கு, பேரீத்தம் பழத்துக் கொட்டையை எடுத்து விட்டு, அதற்குள் வாதாம் பருப்பு, முந்திரிப்பருப்பு, இன்னும் இது போன்ற பருப்புக்களையும், பல்வேறு இனிப்புக்களையும் உள்ளடக்கிப் புடம் போட்டு, விதம் விதமாக பல்வேறு மேலாடைகளைப் போர்த்தி, பேரிச்சம் பழங்களை அழகு செய்து, சுவிஸ் சாக்லெட்டுகளைப் போல, நல்ல பண்டங்களாய் விலையுயர்ந்த பெட்டிகளில் அடைத்து, ஒய்யாரமாக அடுக்கி, மிக உயர்ந்த விலைக்கு விற்கும் கடைகளை பார்த்து, அசந்து போனேன். என்னடா இது? இந்த ஓரணாப் பேரிச்சைப் பழத்திற்கு, இப்படி ஒரு பட்டுக் குஞ்சலமா, இவ்வளவு காசா என்று எனக்குத் தோன்றியது. பெரிய பெரிய ஈச்சம் பண்ணை வைத்திருப்பவர்கள், இதற்கென்று தனி ஆலை வைத்து, பின்னால் ஈச்சம் பழத்தைப் பதப்படுத்தி, ரியாத் நகரில், இப்படிப் பண்டங்களாய் விற்பார்கள். குறிப்பாக பெருங் கோடைக்குச் (வெம்மை கிட்டத் தட்ட 50 C) சற்று முன்னால், நகரமெங்கும், பேரங்காடி, காய்கறிக் கடைகள், பழக் கடைகள் தோறும் பேரீச்சை குவிந்து கிடக்க, அங்கங்கே "எடுத்துக் கொள்ளுங்கள், எடுத்துக் கொள்ளுங்கள்" என்று பரியாக (free) அளித்து, அரபிகள் விருந்தோம்புவது கண்டு, முதல் முறையாய் எனக்கு ஒரு குறுகுறுப்பு ஏற்பட்டது.

பின்னால் பரியில் இருந்து, குறைந்த காசுக்குப் பொது வகை, அப்புறம் கூடக் காசுக்குச் சிறப்பு வகை, என்று படிப் படியாக பேரீச்சை மேல் அளவு கடந்த ஆசை எனக்கு அரும்பியது. இனிப்பு எனக்குக் கூடாது என்றாலும், என்னால் கட்டுப் படுத்த முடியவில்லை. ஒவ்வொரு முறையும் ரியாதில் இருந்து ஊருக்கு வரும்போது, வித விதமான பேரீச்சைப் பண்டங்களை வாங்கி வருவேன். அவற்றைச் சாப்பிட்டு, வியந்து போகாத என் நண்பர்கள், உறவினர்கள், சொந்தக்காரர்கள் இல்லை என்றே சொல்லலாம். என் பித்து இன்னும் கொஞ்சம் கூடிப் போனது. மேலும் அது ஆழமாய்ப் போக, ஒரு பேரிச்சம் பண்ணையை பார்ப்பதற்காக, அந்தூர் அரபிகள், சோமாலிகள், சூடானிகள் மூலம், நாட்டுப் புறங்களுக்குப் போகத் தொடங்கினேன். அதுவரை தெரியாத சவுதியின் இன்னொரு பக்கம், எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாய் விளங்கத் தொடங்கிற்று. மேலும் மேலும் வியப்பு. நாம் இதுவரை மற்றவர் மூலம் கேட்டது ஒன்று; அறிவது மற்றொன்று என்று ஆனது. அவர்களின் முரட்டுத் தனத்திற்குள்ளும் ஓர் ஈரம்; ஒரு நாகரிகம் இருப்பதை அறிந்தேன். மாந்தர்கள் எங்கிருந்தாலும் அடிப்படையில் ஒன்று போலத்தான் என்ற எண்ணம் எனக்கு மேலோங்கியது.

பாறைநெய் (petroleum), பெடூவாய்ன் அரபிகள், களிமண் கோட்டைகள், மெர்சிடசு சீருந்துகள் (cars) என்று ஒரு பக்கச் சார்பாகவே செல்வத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த நாட்டின் இன்னொரு பரிமானம் எனக்குப் புரியத் தொடங்கிற்று. பாலைவனத்திலும் ஒரு வேளாண்மை; உலகத்தின் மிகப் பெரிய அல்-மராய் பால் பண்ணை. மறு ஊடகை (reverse osmosis), பல்மடி ஆவியாக்கல் (multi-effect evaporation) ஆகியவற்றின் மூலம் கிடைத்த நல் நீரையும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த நிலத்தடி மண்ணூற்று நீரையும் (நிலக்கரி, பாறைநெய்யை எடுப்பது போலப் புவிக்கடியில் 200, 400 மீட்டர்களுக்கும் கீழ் ஆழக் கிடக்கும் நீர் மண்ணூறல் நீர் - mineral water) கலந்து செய்யும் சொட்டு நீர்ப் பாசனங்கள், நேர்த்தியான முறையில் நகரங்களுக்குள் நடப்படும் தேர்ந்தெடுத்த பாலை மரங்கள், கால் நடைகளுக்காக அங்கு வளர்க்கப்படும் பெரும்மாண்ட புல்வட்டங்கள்; கால்வாய்கள், அணைக்கட்டுக்கள், நீர்த் தேக்கங்கள், 400 கி. மீட்டருக்கு இடப்பட்டிருக்கும் நல்நீர்க் குழாய்கள் - இப்படி அந்த நாட்டின் பாலைவனம் சிறிது சிறிதாய்ச் சோலைவனம் ஆகும் காட்சி என் கண் முன்னே விரிந்தது. பாலையிலும் அழகைக் காணமுடியும் என்று உணர்ந்தேன். எண்ணெயில் கிடைக்கும் பணத்தை ஓரளவு சரியாகத் தான் நாட்டிற்குப் பயன்படும் வேறு வகையில் செலவழிக்க முற்படுகிறார்கள் என்று தெரிந்து கொண்டேன்.

இந்தத் தெரிதலில் நான் அறிந்த பேரீச்சைக் குறிப்புகளை இங்கு தருகிறேன். பேரீச்சை பற்றிய பல செய்திகள் மற்றோரிடம் இருந்து அறிந்து கொண்டவை தான்; இருந்தாலும் இவை தமிழுக்குப் புதியவை; மரங்கள், பழங்கள் பற்றிய ஆதாரங்களை ஆங்கில வலைத்தளங்களில் இருந்தும் உறுதி செய்து கொண்டேன்.

பேரீச்சை பற்றிய தமிழ்ப்பெயர் விளக்கத்தோடு தொடங்குவோம்.
-------------------------------------
பேரீந்து>பேரீந்தை>பேரீத்தை என்பதன் மருவிய பலுக்கமே பேரீச்சை என்று ஆயிற்று. ஈந்தின் மூலம் அந்தப் பழத்தின் நிறத்தில் இருக்கிறது.
ஈல் என்பது ஒளிநிறத்தைக் குறிக்கும் என்பதை இல்>எல் என்ற வேர்மூலத்தில் இருந்து கிளைத்த சொற்களைக் கொண்டு ஓர்ந்து பார்க்கலாம். [நம்மூர் ஈச்ச மரம் பேரீச்சை மரத்தோடு நெருங்கிய உறவு உடையது; ஆனாலும், அதன் காயும், பழமும் வேறு சுவை. நம்மூரில் ஈச்சங்காயில் உள்ள துவர்ப்பான பருப்புக்காகவே, தோலை ஒதுக்கிச் சாப்பிடுவது உண்டு. அங்கோ, கொட்டைகள் சாப்பிடுவதாக, நான் கேள்விப் படவில்லை; ஒதுக்கவே படுகின்றன. நம்மூரிலும் கனிந்த ஈச்சம் பழங்களின் சதையைத் துய்த்து, கொட்டைகள் ஒதுக்கப் படுவது ஓரோ வழி உண்டு. காரைக்குடியில் இருந்து அறந்தாங்கி போகும் இருவுள் தடத்தை (railway track) ஒட்டி அவற்றின் இரு பக்கச் செம்மண் மேடுகளில் (அந்த மேடுகளில் ஈச்சையும் பனையும் மிகுதி; இப்பொழுது எல்லாம் அங்கு ஒரே முந்திரிக் காடாய் ஆகிவிட்டது.), நண்பர்களுடன் நெடிய தொலைவுக்கு நடை பழகும் பொழுது, ஈச்சங் காய்களைப் பறித்துத் தின்றது எனக்கு இன்னும் நினைவுக்கு வருகிறது.]

இந்தச் சொற்களுக்கு வேர்ச்சொல் "இல்" எனத் தொடங்கும். அது பின் கொஞ்சம் கொஞ்சமாய்த் திரிந்து தொடர்புள்ள சொற்களை நமக்கு இனங் காட்டும்.

இல்>எல் = ஒளிவிடும் கதிரவன்
இல்>இலகுதல் = விளங்குதல், ஒளி செய்தல்
இலகுதல்>இலங்குதல் = ஒளி விடுதல்

இல்>இலங்கு>இலக்கு>இலக்குமி = ஓளி விடுகின்ற தெய்வப் பெண் = திருமகள்; இதன் காரணமாகத் தான் தாயார் கருவறையில் மஞ்சள் பொற் சுண்ணம் கொடுக்க வேண்டும். விவரம் தெரியாத பட்டர்கள் குங்குமம் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். குங்குமம் என்ற செஞ்சுண்ணம் பூதேவி (=அல்லது ஆண்டாள்) கருவறையின் முன் கொடுக்கப் பட வேண்டியது.

இலங்கு>இலிங்கு>இலிங்கம் = ஓளித் தோற்றம் காட்டும் சிவனின் அடையாளம். திருவண்ணாமலையைப் பார்த்தவர்களுக்குப் புரியும். ஓளி தான் சிவனின் முதல் அடையாளம்; ஒளியும் நெருப்புமே இறையின் முதல் அடையாளங்களாய், மாந்தன் உணர்ந்தான். அதை இன்றைக்கு இருக்கும் இலிங்கப் படிமத்தோடு ஒன்று படுத்துகிற தொன்மங்களை இங்கே சொன்னால் கட்டுரை நீண்டு விடும்.

இலங்கு>இலங்கை = ஒளிவிடுகிற இடம்; அங்குள்ள காடெல்லாம் மஞ்சளாகப் பூத்ததோ, என்னமோ, எனக்குத் தெரியாது. கடல் கொண்ட பழந் தமிழகம் (அதன் மிஞ்சிய பகுதிகளில் இன்றைய இலங்கையும் ஒன்றே. யார் ஏற்காவிட்டால் என்ன, நம்முடைய பழைய நிலம் அங்கும் அதற்குத் தெற்கும் இருக்கிறது.) பற்றிப் பேசுகிற போது 49 நாடுகள் தவிர, ஒளி நாடு என்ற ஒன்றும் சொல்லப்படும்.

இலம்>ஈலம்>ஈழம் = இதுவும் ஒளி விடுகிற இடம் தான்.

[ஒளி என்பது போக, இன்னொரு விதமாவும் இந்தச் சொற் பிறப்பைப் பார்க்கலாம். அது ஈல்தல் = பிரித்தல்; ஈலம்>ஈழம் என்பது பெருநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட நிலம்; ஈலப் பட்ட நிலம் என்றும் சொல்லலாம். ஈல்தலின் நீட்சியாய் ஈள்தலும், அந்த ஈள்தலைச் செய்யும் ஓர் ஆயுதம் ஈட்டி என்பதையும் எண்ணிப் பார்க்கலாம். இதே போல ஓர் ஆற்றின் நடுவே அரக்கப் பட்டது (= பிரிக்கப் பட்டது) அரங்கம். திருவரங்கம் என்ற பெயரின் உட்பொருள் இதுதான். தென்பெண்ணையின் நடுவே, இன்றையப் புதுச்சேரிக்கு அருகில், அந்தக் கால மாவிலங்கை (மா இலங்கை) என்னும் ஊர் இருந்திருக்கிறது. அதில் வரும் இலங்கையும் தென்பெண்ணையின் ஆற்றின் நடுவே வரும் ஒரு தீவு போன்ற அமைப்புத் தான். பிரித்தலைச் செய்வது ஆறாக இருக்கலாம்; கடலாகவும் இருக்கலாம். இன்னும், ஏன்? தீரப் பட்டது தீர்வு>தீவு என்று ஆகும்; தீர்தல் =பிரித்தல். (தீர்த்துவிடு என்பது ஆளை இரண்டாக்கி விடு என்ற பொருளில் தான் முதலில் எழுந்தது.) ஈல்தல் = பிரித்தல், இலங்குதல் = ஒளிவிடுதல் என்ற இரு வினைகளில் எது பொருத்தமாக இருக்கும் என்பது இன்னும் முடிவு செய்யப் படாமல் இருக்கிறது. இன்னும் தீவிரமாகத் தரவுகளைத் தேடவேண்டும். இந்த இலங்கை / ஈழம் பற்றிய சொல்லாய்வுகளை நேரம் கிடைக்கும் போது பிறகு பார்க்கலாம்.]

இலகுதல்>இலவுதல்>இலவம்>இலாவம்>இலாபம்; தமிழில் தொடங்கிப் பின் வடமொழிப் பலுக்கைக் கொண்டது; இது ஒரு இருபிறப்பிச் சொல். விளைச்சலிலும், வணிகத்திலும், பொலிவாக, மிகுதியாகக் கிடைக்கிற பொருளை இலாபம் என்று சொல்லுவார்கள். இன்றைக்கும், களத்து மேட்டில் நெல் அளக்கும் போதோ, அல்லது வணிகம் செய்பவர்கள் எண்ணும் போதோ, இலாபம், இரண்டு, மூன்று ... என்றுதான் எண்ணுவார்கள். பின்னாட்களில் பொருளுக்கு மட்டும் அல்லாமல், பொலுவாய்க் கிடைக்கும் பணத்திற்கும் இலாபம் என்ற பெயர் ஏற்பட்டது. பொலுவு, இலவம் என இரண்டுமே profit என்பதைக் குறிப்பன தாம்.

இனி ஈச்சுக்கு வருவோம். இல்>ஈல்>ஈல்ந்து>ஈந்து>ஈத்து>ஈச்சு என்று இது திரியும். ஈல்ந்தம் பழம் = ஒளி நிறத்துப் பழம், பொன்னிறப் பழம்.
அரபு நாட்டுச் செய்திகளுக்கு வருவோம்.

பார்ப்பதற்கு வெள்ளைக் கோதுமை போன்ற ஈச்சாங் குலை, காய்ந்து குலை தள்ளும் போது, பொன்னிற நிறத்தை அடைகிறது. கோடையின் உச்சியில், வெப்பம் சூடேறச் சூடேற, ஒரு மூன்று வார இடைவெளியில், பொன் நிறம் கொஞ்சம் கொஞ்சமாக புகர் நிறம் (brown) கொள்ளுகிறது. அரபி மக்கள் "அது புழுங்கி வெக்கையில் கொதிக்கிறது" என்றே சொல்லுவார்கள். [புழுங்குதல் என்பதே boiling என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல். புழுங்குவது புழுங்கல்>புழுக்கல் என்றே சொல்லப் படும். parboiled அரிசி என்பது தமிழில் புழுங்கல் அரிசி என்றே சொல்லப் படுவதைக் காணுக.]

நம்மூரில் வாழைக்குலையை மூடிப் புகையேற்றி பழுக்க வைக்கும் செயலைப் போல், அரபு நாடுகளில் ஈச்சங் குலையையும் பழுக்க வைக்கும் பழக்கம் உண்டு. (ஆனால் அப்படிப் புகைபோட்ட பழங்கள் நல்ல சுவை பெறுவதில்லை.) ஈச்சம் பழத்தை இப்படி வெய்யிலில் போட்டு புழுங்க வைப்பது போதாது என்று சிலவகைகளைத் தேனில் ஊற வைப்பதும் உண்டு.

ஈத்த மரத்தில் ஆண் ஈந்து, பெண் ஈந்து என இருவகை உண்டு. பெரும்பாலும் பண்ணைகளில் ஆண் ஈந்து மரங்களை அளவுக்கு மேல் போகா வண்ணம் அவ்வப்போது வெட்டித் தள்ளிவிடுவார்கள். ஒரு ஆண் ஈந்து இருந்தால் அதைச் சுற்றிலும் பெண் ஈந்து மரங்களை வைப்பது வழக்கம். இந்த மரங்களின் பூப்புக் காலம் பெரும்பாலும் பெப்ருவரி மாத முடிவில் தான் இருக்கும். பூக்களின் குலை மேலே உள்ள இலைத் தோகைகளுக்கு நடுவில் இருந்து கிளைத்து கோதுமை மணிகள் அடங்கிய கதிர் போலக் குலுங்கும். இனிப்பாக இருக்கும் ஆண்மரத்தின் பூவை அப்படியேயும், அல்லது வறுத்தும் அரபிகள் சாப்பிடுவது உண்டு. சில பொழுது அரபிய பருத்துகளில் (bread) இவற்றைச் சுவைக்கெனச் சேர்த்து இடுவதும் உண்டு. பெண்மரத்தின் பூ துவர்ப்பாகவும், சிலபொழுது கசந்தும் கூட இருக்கும். ஆனாலும் பெண் பூக்களில் இருந்து தான் பேரீச்சம் பழம் பிறக்கிறது; இதுவும் ஒருவகை இயற்கையின் விந்தை தான். சில அரபியர்கள் ஆண் பூவில் இருந்து மகரந்தத்தை எடுத்து பெண் மரங்களின் கூந்தல் முடிச்சுகளில் தூவி மகரந்தச் சேர்க்கையைத் தூண்டி விடுவதும் உண்டு. பழங்கள் ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் பழுக்கின்றன.

ஈத்தை மரங்களில் அவற்றின் கொடி வழி (heredity) கருதி, விலை பேசுவார்கள். வளர்ந்த ஒரு சில உயர் வகை மரங்களை வாங்கி இன்னொரு இடத்தில் நடவேண்டுமானால் சவுதி அரபியப் பணம் 13000, 15000 ரியால்கள் கூட ஆவது உண்டு. ஈத்த மரங்கள் இந்த நாட்டில் பெரும் சொத்தாகவும் கூடக் கருதப் படுகின்றன. ஓரொரு மரங்கள் 50, 100 ஆண்டுகள் கூடப் பலன் தருவது உண்டு.

ஈத்தை மரங்கள் மிகப் பழங்காலத்தில் இருந்து, எகிப்திய நாகரிகம் தொட்டு, வளர்க்கப் படுகின்றன. பழங்களை அப்படியே மரங்களில் இருந்து இனிப்புக் கண்டுகளைப் போலவும், உலரவைத்தும், பழங் காலத்தில் சாப்பிட்டிருக்கிறார்கள். கொட்டையை எடுத்த பேரீச்சம் பழங்களை ஒன்றாகப் பிசைந்து நம்மூர்களில் செய்யும் கருப்புக் கட்டிகள், புளி உருண்டைகள் போலாக்கிப் பின் நெடுங்காலத்திற்கு வைத்துக் கொள்ளும் பழக்கமும் அரபியருக்கு உண்டு. (நம்மூர்களில் நாட்டுப் புறங்களில், புளி உருண்டைகளை வைத்திருப்பதை நினைவு கொள்ளுங்கள்.) நாட்டுப்புற அரபிகள் (bedouins) கனிந்த ஈச்சங் குலைகளைத் தொங்க வைத்து அவற்றில் இருந்து வடியும் கனிச் சாற்றைச் சருக்கரை (sugar), தேன் போன்ற இனிப்புப் பொருளாகக் கொண்டதும் உண்டு. குளிர் காலத்தில் ஈரம் உள்ளிறங்காமல் இருக்க மரத்தில் கிடக்கும் ஈச்சாங் கூந்தலை ஒன்றாகக் கட்டிவைக்கும் முறையும் இங்கு உண்டு. பின்னால், வெட்டப் பட்ட ஈச்சாங் குலைகளை ஈரத்தோடு, ஈச்சோலைக் கூடைகளில், மூடிவைக்கும் போது, அவை கெட்டு விடாமல் இருக்க, அவற்றின் அளவுக்கு மீறிய சர்க்கரையே கூடப் பாதுகாப்பைத் தரும்.

பேரீச்சங் கனிச் சாற்றை சொட்டுத் தேன் என்று அரபியர் பேச்சு வழக்கில் சொல்வது உண்டு. அரபியன் ஒருவன் தன் காதலியை "சொட்டுத் தேனே" என்று அழைப்பதாக ஆயிரத்தொரு அரபிய இரவுகள் கதைகளில் கூறுவார்கள். கருப்ப காலத்திலும், பால்குடிப் பருவத்திலும், தாய்மார்கள் பேரீச்சையைப் பயன்படுத்துகிறார்கள். இரமதான் நோன்பு காலத்தில், ஒவ்வொரு நாளும் நோன்பை முடிப்பது பேரீச்சையும், நீராலும் தான். (அல்லது ஏதேனும் ஒருவகைக் கஞ்சி அல்லது சாறு.) இது போக, நோன்புக் காலத்தில் பேரீச்சையால் ஆன பொரித்த பண்ணியங்களும் (cokkies) உண்டு.

பேரிச்சை என்பது நம்மூர்ப் பனையைப் போல, நூற்றுக்கணக்கான முறைகளில் இந்த நாடுகளில் துய்க்கப் படுகிறது. ஈச்சம் பட்டையை அடித்து, நாராக்கி, பின் அவற்றைக் கொண்டு கயிறாய்த் திரித்து, வடமாய் ஆக்கிப் பயன்படுத்திக் கொள்வதும் உண்டு. ஈர்க் குச்சிகளும் பல்வேறு பயன்களுக்கு ஆளப் படுகின்றன. நம்மூர்களில் தென்னை மரங்களில் கிடக்கும், காய்ந்த தென்னம்பட்டைகளை அவ்வப் பொழுது வெட்டி, மரங்களை ஒழுங்கு செய்கிறார்களே, அதே வகைத் தோரணையும் இங்கு ஈச்ச மரங்களைப் பேணுவதில் உண்டு. இது போன்ற செய்கைகள் எல்லாமே விளைச்சலைப் பெருகவைக்கும் செயல்கள் தான். ஈச்சமரத்தின் அடியில் இருக்கும் சிரட்டை முள்ளுகள், ஈர்க்கஞ் குச்சிகளைச் சேர்ந்த விளக்குமாறு, ஈச்சந் தோகைகளைக் கொண்டு பாய், தட்டு போன்றவற்றை முடையும் கலை, கூரை வேய்வது எனப் பெரும்பாலான செய்திகள் நம்மூர் தென்னை, பனையைப் போன்றவையே.

ஈச்ச மரம் என்பது அரபு நாடுகளில் ஓர் அடிப்படையான மரம். நம்மூர்ப் பனையைப் போல. கற்பகம் கற்பகம் என்று பலரும் சொல்லுகிறோமே, அது நம்மூரில் எந்த மரம் என்று நினைக்கிறீர்கள்? அது கற்பனையான மரம் அல்ல; பனை மரம் தான். பனை தவிர்த்தால், தென் தமிழகம் மற்றும் ஈழம் இல்லை.

அரபுநாடுகளில் ஈச்சமரம் தான் கிட்டத்தட்டக் கற்பக மரம். (வேண்டுமானால் கற்பகம் என்பது கருப்பு நிறத்தைக் குறிப்பதால், மாறாக கிரண மரம் (ஒளி மரம்) என்று சொல்லலாம்.)

அன்புடன்,
இராம.கி.

*ஆங்கிலத்திலும் ஒளிவிடுகிற காரணத்தால் தான் glass என்ற சொல் வந்தது. அதனோடு தொடர்புடைய glare என்ற சொல்லும் ஒளி கிளர்ந்து சொலிப்பதையே காட்டுகிறது. கிளர் என்ற சொல்லடியே, தமிழில் ஆய்ந்து பார்த்தால், இங்கு பொருந்துவதாகத் தெரிகிறது. கிளர் என்றாலே தமிழில் ஒளிதான். ஆனால் அரிதாக இதுவரை பயன்படுத்திய சொல்.

12 comments:

சிவக்குமார் (Sivakumar) said...

சுவையான பதிவு.

ஐயா, இது போல தமிழின் வேர்ச்சொற்களைத் தெரிந்து கொள்ள புத்தகங்கள் உள்ளனவா?

Jafar ali said...

அருமையான பதிவு!

Anonymous said...

இராம.கி அய்யா

நீங்கள் அரபுநாட்டில் வேலை செய்த போது அதன் நல்ல புறங்களைச் சொல்கிறீர்கள். தொடருங்கள். பெரும்பாலும் அரபுகளைப் பற்றி குறைகூறும் பதிவுகளே படித்ததால் அங்கே நல்ல செய்திகளே இல்லையோ என எண்ண நேர்ந்தது.

பேரீத்தம் பழம் குறித்த சுவையான பதிவுக்கு நன்றி

அபுல் கலாம் ஆசாத் said...

இனிய இராம கி. அய்யா,

பேரீச்சை நாட்டில் பல ஆண்டுகளாக வாழ்ந்தும் பேரீச்சை குறித்து அதிகமான அறிந்தேனில்லை.

மதீனா, அஜ்வா, கலிமா, சுக்கரி என பெயர் தெரிந்த சில பேரீச்சை வகைகளை வாங்கி வருவதோடு பேரீச்சைக்கும் எனக்குமான உறவு முடிந்தது.

இன்று உங்கள் பதிவால் அதிகமான விவரங்கள் கிடைக்கப்பெற்றன.

பேரீச்சம் பழங்களை மாவுக்குள் அடைத்து சுடப்படும் இனிப்பு வகைக்கு 'மாமூல்' என்பது பெயர். தாங்கல் அறிந்திருப்பீர்கள்.

ஒவ்வொரு பயணத்தின்போதும் இரண்டு கிலோ மாமூல்களை அடைக்காமல் என் பெட்டி நிரம்புவதில்லை :)

அன்புடன்
ஆசாத்

இராதாகிருஷ்ணன் said...

பதிவை வாசிக்க வாசிக்க பாலைக்கே மனது போய்விட்டது. பதிவிற்கு நன்றி!

நம்மூரில் பழைய இரும்பிற்குப் பேரீச்சையை எப்படி மாற்றாகக் கொடுத்தார்கள் (கொடுக்கிறார்கள்) என்பது ஆச்சரியமாக உள்ளது; அவ்வளவு சல்லிசாக இறக்குமதியாகிறதா இப்பழம்?!

//புகர் நிறம் (brown)// இதற்கு ஒரு சிறிய விளக்கம் அளிக்கிறீர்களா? தமிழில் நிறங்கள் விரல்விட்டு எண்ணும் அளவிற்கே பொதுவில் வழங்கப்படுகிறது. தெரியாத போது அது பொருளைக் குறித்துச் சொல்லப்படுகிறது. காட்டாக, சாம்பல் நிறம்!!!

//பனை தவிர்த்தால், தென் தமிழகம் மற்றும் ஈழம் இல்லை. //
பனையைத் தவிர்த்து இப்போதெல்லாம் தென்னையால் நிலத்தைப் போர்த்தி விட்டார்கள்! :(

இராம.கி said...

அன்பிற்குரிய பெருவிஜயன்,

நன்றி. வேர்ச்சொற்கள் பற்றிப் படிக்கவேண்டுமானால், தேவநேயப் பாவாணர், இளங்குமரன், ப.அருளி, கு.அரசேந்திரன் போன்றோரின் பொத்தகங்களைப் படியுங்கள். நிறைய இருக்கின்றன. என்னால் முடிந்ததையும் நான் அவ்வப்போது எழுதிவருகிறேன்.

ஜாபர் அலி,

நன்றி.

கைகரி நோவா,

அரபிகளிலும் நல்லவர் உண்டு. எனக்கும் மோசமான நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. ஆனால், அதை மட்டுமே பேசிக் கொண்டிருந்தால் எப்படி?

நல்லதைப் பொதுவில் சொல்லத் தானே வேண்டும்.

அன்பிற்குரிய ஆசாத்,

மாமூல் பற்றிய பெயரை ஏற்கனவே குறித்து வைத்து இருந்தேன். ஆனால் இப்பொழுது எழுதும் போது அதன் விளக்கம் சரியாக நினைவுக்கு வராமலே போனது. உங்கள் பின்னூட்டைப் படித்தவுடன் தான் என்னால் அதைப் பொருத்திக் கொள்ள முடிந்தது. "மாமூல்" கொடுப்பது என்ற கையூட்டுச் சொல் கூட இந்த இனிப்பை ஒட்டி வந்ததோ? கொஞ்சம் ஆய்வு செய்து எழுதுங்களேன்? சுவையாக இருக்கும். மாமூல் என்ற இனிப்பு எகிப்திலும் உண்டு என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஒருவேளை நடுக்கிழக்கு எங்கணும் இருந்ததோ? நாம் பாரசீகரிடம் இருந்து பெற்றோமா, அல்லது நேரடியாகவா? அறிந்துகொள்ள ஆர்வம் கூடுகிறது.

அன்பிற்குரிய இராதாகிருஷ்ணன்,

பேரீச்சையை இரும்புக்கு மாற்றாகக் கொடுத்தது எப்படி வந்தது என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் இப்படி நடந்ததை, இளம் அகவையில் பார்த்திருக்கிறேன். இப்பொழுதெல்லாம், பழைய பொருட்களை எடுத்துப் போகிறவர்கள், பெரும்பாலும் பணத்தையே பரிமாற்றாகக் கொடுக்கிறார்கள். பொருள் கொடுப்பது நாட்டுப் புறங்களில் குறைந்தே இருக்கிறது.

நிறங்கள் பற்றிய விளக்கத்தைத் தனியே சொல்லுவேன்; குறித்துக் கொள்ளுகிறேன்.

தென்னை கூடியிருந்தாலும், தென் தமிழகத்தில் உள்ள வறண்ட மாவட்டங்களில் (எங்கள் சிவகங்கையும் அதில் சேர்ந்தது தான்.) பனையின் பயன்பாடும், விரிவும் இன்னும் கூடத்தான் இருக்கிறது.

பேரீச்சை பற்றிய பதிவு உங்கள் எல்லோரையும் ஈர்த்தது குறித்து மகிழ்ச்சி.

மரங்கள் பற்றி எழுதுவது எனக்கு எப்பொழுதுமே உகப்பானது.

அன்புடன்,
இராம.கி.

வசந்தன்(Vasanthan) said...

இலங்கைப் பாடத்திட்டத்தில் "இலங்கையின் கற்பகதரு தென்னை" என்று படிப்பித்தார்கள். ஆனால் எங்கள் கற்பக தரு பனைதான் என்று உள் ஊரில் சொல்லிக்கொள்வோம். பனை சம்பந்தமான எந்த அமைப்புமே 'கற்பக தரு' என்ற பெயரில்தான் உள்ளது. தமிழீழக் கல்விக் கழகத்தால் 'கற்பக தரு பனைதான்' என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. இப்போது எங்கள் மாணவர்கள், இலங்கை அரசின் தேர்வுத் தாட்களில் தென்னையென்றும் ஏனைய சந்தர்ப்பங்களில் பனையென்றும் சொல்லிக் கொள்கிறார்கள். பனையா தென்னையா என்று தெரிவு செய்வது 'கற்பக தரு' என்ற சொல்லுக்கான விளக்கத்தில்தான் இருக்கிறதென்று நினைக்கிறேன்.
*******************************
சிறுவயதில் ஈச்சங்காய் சிவத்தவுடன் அது பழுத்துவிட்டதென்றே நினைத்திருக்கிறேன். எங்கள் ஊரில் ஈச்சம்பழம் செடியிலேயே பழுத்து நான் பார்த்ததில்லை. காய் சிவந்துவிட்டாலே அதைவெட்டி கடல்நீரில் தோய்த்தெடுத்து வைத்துவிட்டால் 3 நாட்களில் பழம் தயார். யாழ்ப்பாணத்தைவிட்டு வந்தபின் வேறோர் இடத்தில் சீந்துவாரற்றுக் கிடந்த ஈச்சம்பற்றைகளில்தான் நான் முதன்முதல் பழுத்த ஈச்சங்குலைகளைக் கண்டேன்.

Simulation said...

சூடான் நாட்டில் சென்ற இடங்களிலெல்லாம், விருந்தினருக்கு வேர்க்கடலையையும் பேரீச்சையும் கொண்டு வந்து வைப்பர். அந்தப் பேரீச்சை, காய்ந்து கட்டையாக இருக்கும். காயா அல்லது காய வைக்கப்பட்ட பழமா என்று தெரியாது. ஆனால் அடுத்தவர் முன்னால் சத்தம் வராமல் சாப்பிடுவதற்குள் போதும் போதுமென்றாகி விடும்.

அது சரி பேரீச்சையில் இரும்புச் சத்து அதிகம் என்று கேள்விப்படுகிறோம். அதனால்தானோ, அதற்கு ஈடாக பழைய இரும்பு கொடுக்கின்றனர்!!!

இராம.கி said...

அன்பிற்குரிய வசந்தன்,

கற்பகத்தரு என்பது நம்மைப் பொறுத்தவரை பனையே. தென்னை தென்கிழக்கு ஆசியா, மற்றும் பாலினேசியாவிலிருந்து கொண்டுவரப் பட்ட மரம். ஆனால் வரலாற்றிற்கு முன் ஏற்பட்டிருக்க வேண்டும். தென்னையும், ஆலும் பற்றி ஒரு பதிவு எழுதவேண்டும். ஏனென்றால் அது தென் திசையும், வட திசையும் என இரு திசைத் தொடர்பு கொண்ட சொற்கள். சுவையான செய்திகள் சில இருக்கின்றன.

ஈழத்தில் ஈச்ச மரம் எந்த அளவுக்கு அடிப்படையானது, அதன் விரிவு, பயன்பாடு பற்றி ஒருமுறை எழுத முடியுமா?


அன்பிற்குரிய சமலாற்றக் காரரே!

ஊருக்கு ஊர் நடைமுறை மாறக்க்கூடும். உலர்ந்த பேரீச்சையில், கொட்டைடை எடுத்திருப்பார்கள் தானே?

பேரீச்சையில் இரும்புச் சத்து அதிகம் என்று சிலர் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் குறிப்பிடத்தக்க அளவு அதிகமா என்று தெரியவில்லை.

அன்புடன்,
இராம.கி.

Unknown said...

அய்யா., அருமையான பதிவு. வேர்ச் சொற்களை அறிந்து கொள்ள "வேர்ச் சொல் அகராதி" யும் உண்டல்லவா?. உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. பல சொற்களையும் அதன் முதல் மற்றும் பயன்பாட்டைப் பாங்குடன் பகர்கின்றது. மரங்கள் பற்றி எழுதுங்கள் அதிகம் :))).

பத்மா அர்விந்த் said...

மிக அருமையான பதிவு. பல புதிய சொற்களையும் அறிந்துகொள்ள முடிந்தது. இலவசம் என்பதை பரி என்று சொல்வது ஏன் என்று விளக்குவீர்களா? முன்பே எழுதி இருந்தால் எங்கே என்று தெரிவியுங்கல். உபரி என்பதில் இருந்து வந்ததா என்று அறிய ஆவல்.
பேரீச்சை பழத்தில் எளிதில் உறிஞ்ச கூடிய வேதியியல் தன்மையில் இரும்பு சத்து இருப்பதால் அதிகம் என்று கூறப்படுகிறது. மற்ற உணவுப்பொருட்களில் இரும்பை வேதியியல் வினைகளால் மாற்றியபிறகே உறிஞ்ச முடியும்.

இராம.கி said...

அன்பிற்குரிய தேன்துளி,

பரி என்பதை முன்னால் facist, independence, freedom பற்றி எழுதிய பதிவில் இருக்கும். என் பதிவின் பழையதைத் தேடிப் பாருங்கள். சட்டென்று அதை எப்பொழுது எழுதினேன் என்று நினைவுக்கு வரவில்லை.

இலவயம் என்பது காசு வாங்காமல் பொருள் கொடுக்கும் நிலையை மட்டுமே விதப்பாகக் குறிக்கும். பொதுமையான free என்பதற்கு இதைப் பயன்படுத்த முடியாது.

பேரீச்சம் பழத்தில் இரும்புச் சத்து கூட என்பதை இப்பொழுது அறிந்து கொள்ளுகிறேன்.

அன்புடன்,
இராம.கி.