Wednesday, February 06, 2013

சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும் - 1

அண்மையில் ”ஒப்பியல் நோக்கில் செவ்விலக்கியக் கோட்பாடுகள்” என்ற தலைப்பில் செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனமும், உலகத் தமிழ்மொழி மெய்யியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனமும் 28/1/2013 - 06/2/2013 இல் இணைந்து நடத்திய தமிழாசிரியர்களுக்கான 10 நாள் பயிலரங்கில் 5/2/2013 அன்று பிற்பகல், “சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும்” என்ற தலைப்பில் நான் ஓர் உரையாற்றினேன். அதன் எழுத்து வடிவக் கட்டுரை அவர்கள் வெளியிடும் பொத்தகத்திற் பங்கு பெறுகிறது. கட்டுரை மூன்று பகுதிகளாகி ”www.valavu.blogspot.com” என்னும் என் வலைப்பதிவிலும், ஒரு சில மடற்குழுக்களிலும் இடுகைகளாக இப்பொழுது வெளிவருகிறது. இது முதற்பகுதி. உங்கள் வாசிப்பிற்கு,

அன்புடன்,
இராம.கி.

தோற்றுவாய்:

அறம், பொருள், இன்பம், வீடு எனும் நாலுறுதிப் பொருள்களை நவின்று, தொடர்நிலைச் செய்யுள், உரைப்பாட்டு, உரைநடையென ஏதேனுமொரு வடிவில், சம கால நாகரிகத்தைச் சுவைபடக் கதைப்பது காப்பியமாகும். இவ்வரையறையில் சுமேரியக் கில்கமேசு, ஓமர் இலியது, வான்மீகி இராமாயணம், வியாசபாரதம் ஆகியவற்றைச் சொல்லலாம். அவற்றுள் கடையிரண்டும் இந்திய எழுத்து வழக்கிலும், நாட்டார் வழக்கிலும், தென்கிழக்காசிய மரபிலும் பெருந்தாக்கஞ் செலுத்தியவை. சங்க நூல்களிலும் இவை சிறிது தெறித்திருக்கின்றன. (காட்டு: மருதன் இளநாகனாரின் அகநானூறு 59). வாய்மொழி இலக்கியமாய் பொ.உ.மு.(BCE) 3 ஆம் நூற்றாண்டில்.[1] இறுதி பெற்ற இராமாயணம் எழுத்திலெழுந்தது பொ.உ.(CE) 150க்கு அப்புறமாகும் [2]. வியாச பாரதம் எழுத்துற்றது பொ.உ. 300/400 [3] ஆகும்.

வான்மீகி நூலுக்குச் சற்றொப்ப 2 நூற்றாண்டுகளுக்கும் முன், குன்றக் குரவர், சீத்தலைச் சாத்தனார் வழி வாய்மொழிச் செய்திகளைச் சேகரித்து, ஓரிமையும் (uniqueness), விதப்பும் (specificity) கூடித் தமிழில் எழுந்த சிலப்பதிகாரம் மூவேந்தர் நாட்டில் நிகழ்வதாய் அமையும்; ஆனால் மூவேந்தரும் காப்பியத் தலைவராகார். அதே பொழுது, கதையினூடே அந்தக் கால வாழ்வு நெறி, பன்னாட்டியற்கை, நகர விவரிப்பு, வணிக நடைமுறை, சமய விவரிப்பு, மக்களின் மூட நம்பிக்கை, மனப்பாங்கு, கற்பிதங்கள், இசை, கூத்து, குரவை, வரி, அரங்கேற்றம், இந்திர விழா, கடலாடல், நாட்டார் மரபு, காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல், வாழ்த்து எனப் பல்வேறு காப்பியக் கூறுகள் வெளிப்படும்.

சிலம்பின் நூற்கட்டுரை படித்தால், அது ஒரு நாடகக் காப்பியமாயும், கதை சொல்லும் பாணி மேடைக் கூத்து வடிவாயும் இருப்பது புலப்படும். சிலம்பின் பல உத்திகளும் தமிழக நாட்டுப்புறக் கூத்துகளிற் பயின்றுள்ளன; நாடகம், நாட்டியம், கதை களி, யக்ச கானம், தெருக் கூத்து, திரைப் படம் போன்ற நிகழ்த்து கலைகளில் இன்றும் பயன்படுகின்றன. பொதுவாக, அடுத்தடுத்த ஆண்டுகளில் முன்னாற் பெற்ற பாராட்டுரையை ஒட்டிக் கூத்துக்காரர் விலக்கும், சேர்ப்புஞ் செய்து கொண்டே இருப்பர். ஒருசில ஆண்டுகளுள், கூத்தின் உரையாடல், விவரிப்பில், எது மூல ஆசிரியருடையது (original author), எது இடைச்செருகல் என்பது தெரியாது போகலாம். இதுபோல சிலம்புக் கூத்திலும் நடந்திருக்கக் கூடும்.

வேறு காப்பியங்கள் சிலம்பிற்கு முன் தமிழில் இருந்திருக்கலாம்; ஆனாற் கிடைத்தில. நம் போகூழ், தகடூர் யாத்திரை உதிரியாகி, நூல்முழுதும் கிட்ட வில்லை. மணிமேகலை, சிந்தாமணிக் காப்பியங்களோ முழுதும், பகுதியுமாய்க் கிடைத்தன. கம்பனுக்கு முந்தைய, சங்க காலத்து இராமகாதை, பாரதங்கள் துண்டாகவே கிடைத்தன. தி.ஈ.சீனிவாசராகவ ஆச்சாரியார் (1872), தி.க. சுப்புராயச் செட்டியார் (1880), உ.வே.சாமிநாத ஐயர் (1892) ஆகியோருக்கு [4] ஒருவேளை சிலம்பு கிடைக்காது போயிருப்பின், தமிழ்க்காப்பியக் காலத்தைச் சிந்தாமணிக்குப்பின், பொ.உ. 9 ஆம் நூற்றாண்டிற்குத் தள்ளியிருப்பர்.

சிலம்பு நூற்றாண்டுக் காலத்தை, திரு.செல்லன் கோவிந்தன் பொ.உ.11ஆம் நூறென்றும், திரு.எல்.டி. சாமிக் கண்ணுப் பிள்ளை 8 ஆம் நூறென்றும், திரு.வையாபுரிப்பிள்ளை 5ஆம் நூறென்றும், இதுநாள் வரை நூறாண்டு முன்சொல்லி, இப்போது முரண்படும் திரு.இரா. நாகசாமி 3 ஆம் நூறென்றும், மு.இராகவ ஐயங்கார், மயிலை.சீனி.வேங்கடசாமி, கா.சு.பிள்ளை, ஞா.தேவநேயப் பாவாணர், தனிநாயக அடிகள், கே.என். சிவராசப்பிள்ளை, பி.டி.சீனிவாசையங்கார், மு.சண்முகம் பிள்ளை, இரா.வை.கனகரத்தினம், வி,சீ.கந்தையா, துளசி.இராமசாமி, க.சண்முகசுந்தரம் போன்றோர் 2 ஆம் நூறென்றும் காட்டுவர் [5].

இராம.கி.யின் ”சிலம்பின் காலம்” – ஆய்வுக் கருத்துக்கள்:

மேலுள்ள கணிப்புகளை ஏற்கத் தயங்கி, பொ.உ.171-193 இல் முதலாம் கயவாகு காலத்தொடு தமிழர் வரலாற்றைப் பொருத்தும் ஒழுங்கை மறுத்து, ”சிலம்பின் காலம்” .பெரும்பாலும் பொ.உ.மு. 75-70 ஆக இருக்கவே வாய்ப்பு உண்டு என்ற வரலாற்றியலுமையைப் (historical plausibility) பல்வேறு ஏரணங்களில் அலசி என் நூலிற் தெரிவித்தேன் [6]. நினைவு கொள்ள வேண்டிய அதன் கருத்துக்கள் பின்வருமாறு:

1. பதிகம், வரந்தரு காதை போன்றவை மூல ஆவணங்களாய் (original documents) இருக்க வாய்ப்பில்லை, அவை இடைச்செருகல்களே.

2. உரைபெறு கட்டுரை மூல ஆவணம் இல்லெனினும், வரலாற்றாவணமாய்க் கொள்ளலாம்.

3. மங்கல வாழ்த்திலிருந்து வாழ்த்துக் காதை வரை இளங்கோ எழுதியிருக்க முடியும். அதே பொழுது, அங்குமிங்கும் இடைச்செருகல் இருக்கக் கூடும்,

4. காதைகளின் முடிவு வெண்பாக்களை இளங்கோ எழுதியதாகக் கொள்ளத் தேவையில்லை,

5. காண்டக் கட்டுரை, நூற் கட்டுரை ஆகியவற்றை இளங்கோவோ, வேறெவரோ கூட, எழுதியிருக்கலாம்.

6. வடக்கே படையெடுத்த முதலாங் கரிகாற் சோழன் என்பான் சிலம்புக் காலத்திற்கு மிக முற்பட்டோன் ஆவான். ”அந்நாள்” என்ற குறிப்பை நோக்கின், முதலாம் கரிகாலன் படையெடுப்பு, மகதன் அசாதசத்துவின் கடைக் காலத்தில், அன்றேல் அவன் மகன் உதயனின் தொடக்க காலத்தில், பொ.உ.மு.462 க்கு அருகே, நடந்திருக்கலாம்.

7. நெடுஞ்செழியன் நியதி தவறிக் கோவலன் கொலையுற்று, அதனால் கண்ணகி, வஞ்சினங் கொண்டு தன்முலையைத் திருகியெறிந்து, மதுரை தீக்கிரையானதைப் பார்க்கின், ஏற்கனவே அரசன் மேல் மக்களுக்குக் கோவம் இருந்து, நாட்டிற் சட்டம்-ஒழுங்கு குலைந்திருந்தது புலப்படும். (நியந்தது நியதி>நீதி. நியத்தல் = ஏற்படுத்தல்; குமுகம் ஏற்படுத்திய ஒழுங்கே நியதியாகும். ஒரு குமுக நியதியை இன்னொரு குமுகம் ஏற்காது போகலாம் நியதி என்பது வேறு பொருளில் விதியைக் குறிக்கும். ஆசீவக நியதிக் கொள்கையை இங்கெண்ணிப் பார்க்கலாம். நயம்>நாயம்=ஞாயம் என்ற கொள்கையும் மெய்யியலிலுண்டு.)

8. மதுரைக் காண்டத்தில் சொல்லப்படும் மீமாந்த செயல்களை இலக்கிய வழக்காய்க் கொள்வது நல்லது.

9. கலிங்கத்துச் சேதியரசன் காரவேலனின் அத்திகும்பா (யானைக்குகைக்) கல்வெட்டையொட்டி, மூவேந்தர் பின்புலத்தை ஆய்ந்தால், செங்குட்டுவன் ஆட்சியை ஒட்டி,

a. அவன் தந்தை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்,
b. சிற்றப்பன் பல்யானைச் செல்கெழு குட்டுவன்,
c. ஒன்றுவிட்ட அண்ணன் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்,
d. ஒன்றுவிட்ட உடன்பிறந்தான்/தம்பி ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்,
e. மகன் குட்டுவன் சேரல்,
f. பங்காளி (யானைக்கட் சேய்) மாந்தரஞ் சேரல் இரும்பொறை,
g. அவன் மகன் இளஞ்சேரல் இரும்பொறை,
h. இன்னொரு பங்காளி தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை

என மேலும் 8 சேரர், சம காலத்திலும், சற்று முன்னும் பின்னும், இருந்திருக்கலாம். சமகால புலவர் - அரசரின் அண்ணக மடிக்கையை (adjacency matrix) வலைப்பின்னல் அலசல் (network analysis) மூலம் ஆய்ந்தால், அவரின் சமகால இருப்பு சட்டெனப் புலப்படும்.

10.செங்குட்டுவனின் வஞ்சி, கேரளச் சுள்ளியம் பேரியாற்றுக் கரையில் உள்ள கொடுங்களூருக்கு அருகில் இருந்தது. அது தமிழ்நாட்டுக் கரூர் அல்ல. (அதே பொழுது, தமிழ்நாட்டுக் கரூரையும் வஞ்சியென்றது உண்டு.)

11.”தமிழ்கெழு மூவர் காக்கும் மொழிபெயர்த் தேஎத்த பல்மலை” எனும் மாமூலனார் கூற்றின் படி (அகநானூறு 31), வடக்கே மொழிபெயர்த் தேயம் என்பது, மூவேந்தர் கட்டுப்பாட்டில் இருந்தது போலும்.

12.செங்குட்டுவன் வட செலவு ”கண்ணகியின் பொருட்டா, அன்றி வேறொன்றின் பொருட்டா?” என்பது ஆழ ஆய வேண்டிய கேள்வியாகும்.

13.தக்கண, உத்தரப் பாதைகளால், வடவிந்திய, தென்னிந்திய நாடுகளின் பொருளியல், வணிகப் பரிமாற்றங்கள் விதந்திருந்தன. இப்பாதைகளைப் பொருத்தே அற்றைச் சூழ்நிலை புரியும்.

14.தக்கணப் பாதையின் போக்கால், ”சங்க காலத் தமிழரின் வடநாட்டுப் படையெடுப்புகள் பெரும்பாலும் மகதத்திற்றான் முடிந்தனவோ?” எனும் ஐயமெழுகிறது.

15.மகதம், தமிழகம் ஆகியவற்றின் ஒற்றுமை பார்த்தால், மகத வேந்தருக்கும் தமிழ் மூவேந்தருக்கும் இடையே ஒரு விருப்பு-வெறுப்பு உறவு (love-hate relationship) நிலவி, ”ஒரே விதமாய்ச் சிந்திக்கும் எதிராளிகளாய் (like minded opposites) இருவரும் இருந்திருப்பரோ?” என்று தோன்றுகிறது.

16.மோரியருக்குப் பிந்தைய சுங்கர், கனவர்/கனகர் (வகரம், ககரம் ஒன்றிற்கு ஒன்று போலிகள்) நிலையும், நூற்றுவர் கன்னர் (சாதவா கன்னர்) நிலையும், சிலம்பின் பின்புலங்களாகும்.

17.கனக விசயர் இருவரில்லை, ஒருவரே. சுங்கர் முதலமைச்சனாய்த் தொடங்கிப் பின் சுங்கரை வீழ்த்தி மகதத்தை ஆண்ட கனக வாசுதேவனின் தந்தையாய்க் கனக விசயன் ஆகலாம். அன்றி கனுவ வாஸ்யன் எனும் வடமொழிக் குடிப்பெயர் தமிழிற் கனக விசயன் ஆகியிருக்கலாம்

18.பால குமாரன் மக்கள் எனுந்தொடர் அவந்தி நாட்டு அரச குடியினரைக் குறிக்கிறது. (உச்செயினி இதன் தலைநகர்; தமிழில் இது உஞ்சை)

19.கனக விசயரோடு இருந்த ஆரிய மன்னர் அடையாளம் ஓரளவே விளங்குகிறது. வட நாட்டுச் சான்றுகளைத் தீவிரமாய்த் தேட வேண்டும். இதில் நம்முடைய ஆய்வு பற்றாது.

20.தனிப்பட்ட பந்திலா உறுத்தாய் (independent confirmation) எருக்காட்டூர் தாயங்கண்ணனாரின் அகநானூறு 149 ஆம் பாடல்வழி, சிலம்பிற்குப் பிந்தைய நிகழ்வை நாம் உணருகிறோம்.

21.பெரும்பாலும் பொ.உ.மு.87-69இல், இன்னும் கூர்ப்பாய் பொ.உ.மு.80-75 க்கு நடுவில், சுங்கராட்சியின் முடிவில், மகதக் கனகராட்சிக்குச் சற்று முன்னால், நாட்டுப் பெரும்பகுதியிழந்து ஆட்சிவலி குறைந்த இலம்போதரச் சதகர்ணி காலத்தில், செங்குட்டுவன் வடசெலவு நடந்திருக்கலாம்; சிலம்பைச் சங்க காலத்தோடு பொருத்த வேண்டுமேயொழிய சங்கம் மருவிய காலத்திலல்ல.

இவ்வாய்வு, நூலாக வெளிவருமுன், வளவு வலைப்பதிவில் கீழ்வரும் 12 இடுகைகளாய் வெளிவந்தது.

http://valavu.blogspot.com/2010/05/1-2009-presentation.html
http://valavu.blogspot.com/2010/05/2.html
http://valavu.blogspot.com/2010/05/3.html
http://valavu.blogspot.com/2010/05/4.html
http://valavu.blogspot.com/2010/05/5.html
http://valavu.blogspot.com/2010/05/6_14.html
http://valavu.blogspot.com/2010/05/7_15.html
http://valavu.blogspot.com/2010/05/8.html
http://valavu.blogspot.com/2010/05/blog-post_20.html
http://valavu.blogspot.com/2010/05/10.html
http://valavu.blogspot.com/2010/05/11.html
http://valavu.blogspot.com/2010/05/12.html

கூடவே, சிலம்பிற்குப் பின்வந்த ஒருசில வரலாற்றுச் செய்திகள் (காட்டாக,

1. ”ஒருமுலை அறுத்த திருமாவுண்ணி” என்ற கண்ணகி விவரிப்பைச் சொல்லும் மருதன் இளநாகனாரின் நற்றிணை 216 ஆம் பாட்டு,

2. சிலம்பு எழுந்து 25 ஆண்டுகளுக்குப் பின், கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி, இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன், நாஞ்சில் வள்ளுவன், பெருஞ்சிக்கில் கிழான், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், மருதன் இளநாகனார் ஆகியோரின் சமகால இருப்பு,

3. சிலம்பிற்கு 25 ஆண்டுகள் பின், அகநானூறு, குறுந்தொகை, பரிபாடல் ஆகிய சங்க நூல்கள் கூடகாரத்துத் துஞ்சிய மாறன்வழுதி காலத்திற் தொகுக்கப்பட்டிருக்கும் வரலாற்று இயலுமை,

4. செங்குட்டுவன் மகன் குட்டுவஞ்சேரலுக்குப் பின் வந்த மாந்தரஞ்சேரல் இரும்பொறை காலத்தில் ஐங்குறுநூறு தொகுக்கப் பெற்ற வரலாற்றியலுமை

5. சிலம்பிற்கு 25 ஆண்டுகளின் பின்னால், பதிவுற்ற பழந்தமிழர் குடவோலைப் பழக்கம்

ஆகியவை) மேற்சொன்ன இடுகைகளிலும், கீழ்வரும் இரு இடுகைகளிலும், அலசப் பட்டன.

http://valavu.blogspot.in/2010/06/1.html
http://valavu.blogspot.in/2010/06/2.html

இலக்கிய, வரலாற்றாய்விற் தன்மயப் போக்கு:

பொதுவாக கல்வெட்டு, இலக்கியச் செய்திகளை ஒத்திசைவு (consistency), ஏரணத்தோடு (reason) ஆய்ந்து, வரலாற்றில் இது கற்பனை, இது நடந்திருக்கலாம், என ஒரு முடிவிற்கு வருகிறோம். அதே பொழுது தமிழ் வரலாற்று முன்மையை மறுக்கும் ஆய்வாளரோ, தன்மயம் கொண்டுத் தமிழ் இலக்கியத்தை ஒதுக்குகிறார். (தமிழியெழுத்து முன்மைக்கும் இதே கதி தான். எத்தனை மேனாட்டாருக்குப் ”பழனிப் பொருந்தற் தொல்லாய்வின் [7] முகன்மை (பொ.உ.மு.490) புரிந்திருக்கிறது? சொல்லுங்கள். அது அசோகர் எழுத்திற்கும் முன்னால் சான்றாகும் போது, வரலாற்றை மாற்றியெழுதுமாறு நொதுமல் (neutral) அவைகளில் நாம் என்ன வாதிட்டிருக்கிறோம்?”)

”ஆதி காவியமான வான்மீகி இராமாயணத்தாற்றான் இந்திய இலக்கியச் சிந்தனையே எழுந்தது” என்று முழங்குவாரும் இன்றுளர். இவர் போன்றோருக்கு வால்மீகி இராமாயணம், வியாச பாரதம், சாகுந்தலம், குமார சம்பவம் போன்றவையே காப்பியங்களாகின்றன. அவற்றின் வரலாற்றுத் தாக்கம், வடமொழிக்கு இந்திய மொழிகளின் கடப்பாடு என்றே இந்தியவியற் (Indology) களத்திற் பேசு பொருள்கள் அமைகின்றன. காட்டு: ஷெல்டன் போலாக் [8]. இதுவரை இல்லெனின், இனிமேலாவது இவர் போன்றோர் சங்க இலக்கியம், குறிப்பாய்ச் சிலப்பதிகாரம், படிப்பது நல்லது. வடமொழி மட்டுமே மேடு, மற்றவை தாழ்வென்று கீறல் விழுந்தாற் போல் இன்னுஞ் சொல்லுவது போகாவூருக்கு வழி கேட்பதாகும்.

இன்னொரு காட்டு: நெதர்லாந்தின் ஹெர்மன் தீக்கன் [9]. ”வடமொழிக் காப்பிய மரபுகள், பரதரின் நாட்டிய சாற்றம், போன்றவையாற் தூண்டப் பெற்றே சங்க இலக்கியங்கள் பெருஞ்சோழர் காலத்தில் 9ஆம் நூற்றாண்டிற் படைக்கப்பட்டன” என்ற தேற்றை இவர் முன்வைப்பார். “சேரரே அழிந்து சிறுகிப்போன காலத்தில் சேரரின் சிறப்பைப் பெரிதுவக்கும் காப்பியம் எழுமா?” என இவரிடம் யார் போய்க் கேட்பது? தமிழி, வட்டெழுத்துக் கல்வெட்டுக்களின் வரலாற்றுமையும், சமய இலக்கியங்களுக்கு முற்பட்ட சங்க இலக்கிய வரலாற்று இயலுமையும் கூறி, இவர் வாதின் உள்ளீடின்மையை விளக்க வேண்டும்.

மூன்றாவது காட்டு தொல்லியல் துறை முன்னாள் நெறியாளர் திரு. இரா.நாகசாமியாகும். சிலம்பின் வரலாற்றுப் பரிமானத்தை மறுத்து, ”இது ஒரு புனைகதை, [வான்மீகி இராமாயணம், வியாச பாரதம் மீதும் இக்கூற்று எழலாம்.] தமிழர்க்கென இலக்கியக் கொள்கை, வரலாற்று மரபுகள் கிடையா; சங்கதத் தூண்டலால் இக்காப்பியம் உருவானது” என்ற கொள்கையில் இவர் இப்போது புகல்கிறார். சில மாதங்களுக்கு முன் “தமிழ், வடமொழிக் கண்ணாடி” என்ற நூலையும் இவர் வெளியிட்டார் [10]. அந்நூற் செய்தி அனைத்து நாட்டு மொழியிலக்கிய ஆய்வுக் களங்களில் சட்டென இணையத்திற் பரவியது; ஆனால், தமிழறிஞர்,  திரு. நாகசாமியின் ஆய்வு முடிவை ஏற்காதது மீக் குறைந்தே வெளிப்பட்டது. திரு.நாகசாமி கருத்தை உணர்வு பூர்வமாக மறுக்காது, அறிவார மறுத்து நூல் வெளியிடுவதே ஆய்விற்கு வழி வகுக்கும்.

பொதுவாக, எல்லா வரலாற்று நிகழ்ச்சிகளுக்கும் இரு பக்கச் சான்றுகள் கிடைப்பதில்லை. அசோகரின் வரலாற்றிற்கு அவர் கல்வெட்டன்றி விதந்த சான்றுகளுண்டோ? அசோகப் பியதசி எனும் இயற்பெயர் கூட  அவருடைய 2 கல்வெட்டுகளில் மட்டும் தாம் இருக்கின்றன [11]. அவை இல்லெனில் அசோகர் அடையாளங் காணப்படார். அசோகர் கல்வெட்டிற் சேர, சோழ, பாண்டியர், அதியமான் பற்றிய குறிப்புக்கள் இருக்கின்றன. ஆனாற் தமிழ் இலக்கியத்தில் அசோகர் பற்றிய குறிப்புண்டோ? ”திராமிர சங்காத்தம்” பேசும் காரவேலனின் அத்திகும்பா கல்வெட்டில் அசோகரின் பெயருண்டோ? [12]. தமிழர் முன்னணி 1300 ஆண்டுகளா? 113 ஆண்டுகளா? [13]. சங்க இலக்கியத்தில் காரவேலன் பெயருண்டா? தமிழ் வரலாற்றாய்வாளரில் பலரும் காரவேலன் கல்வெட்டைப் படித்ததில்லை; பிறமொழி ஆவணங்களையும் தேடாது இருக்கிறார். உங்களுக்கு அடிப்படைச் சிக்கல் புரிகிறதா?

சிவநெறிச் செல்வரான மணிவாசகர் பற்றித் திருவாசகம், கோவையார் தவிர்த்து, பொ.உ. 1100 வரை எங்கும் நேரடிக் குறிப்பில்லை; தேவார மூவருக்கு முன்னா, பின்னா என்பதும் குழம்பும். தமிழ் வரலாற்று வரைவிற்குத் இக் கேள்வி தேவையில்லை போலும்!!! பல தமிழறிஞருக்கும் இலக்கிய ஆய்வு, பொ.உ. 3 ஆம் நூற்றாண்டைத் தாண்டின், 19 ஆம் நூற்றாண்டிற்கு வந்து விடுகிறது. மூத்த திருப்பதிகம், திருவாசகம், தேவாரம், நாலாயிரப் பனுவல், இராம காதை, பெரிய புராணமென ஏதுந் தொடாது, தென்னிந்தியக் கல்வெட்டுக்களையும், இலக்கியங்களையும் பொருத்திப் பார்க்காது இருக்கிறார். அதுவொரு ஓட்டம், இதுவொரு ஓட்டமாய். தனிச்சால் தரித்துத் தமிழ் அறிவாண்மை (scholarship) தடை வேலி போடுகிறது.

தமிழறிஞர் மிகப் பலரும் இணையத்துள் இந்தியவியலுக்குள் நுழையாது, ”மறைவாக நமக்குளே பழங்கதை பேசும்” கருத்தரங்குகள், பட்டிமன்றங்கள், பாட்டரங்குகள், என்றே பங்கு கொள்கிறார். அனைத்து நாட்டுப் பார்வையில், முறையியல் (methodology) வழுவாது, மாற்றோர் ஏற்கும் அனைத்துநாட்டு ஆய்வுத் தாளிகைகளிற் கட்டுரைத்தலும் குறைவு. தமிழறிஞருக்கும் எதிராளருக்கும் இடையே, உரையாட்டு நடப்பதேயில்லை. தமிழ்ப் பழமை மறுப்போரே இதிற் பங்குகொள்கிறார். இவர் சொல்லைக் கேட்டு வடமொழி விதக்கும், வெளிநாட்டு அறிஞரும் கூடத் தமிழிலக்கியக் கால முன்மையை மறுத்தே வருகிறார். (செம்மொழி என்பதெல்லாம் இருவேறு கருத்தின் வீண் வீறாப்பாய், விழையரசியலாய் ஆகிப் போனது.)

சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும் – திரு.இரா.நாகசாமியின் பார்வை:

சிலப்பதிகாரத்திற்கு மூலங்களில் ஒன்றாய் வடமொழியிலெழுந்த பஞ்ச தந்திரத்தைக் காட்டி திரு.இரா.நாகசாமி ஒரு கருத்துச் சொன்னதாய் அண்மையில் 2012 செபுதம்பர் 25 தினமலர் நாளிதழில் வெளியானது. (http://www.dinamalar.com/News_Detail.asp?Id=554126). அது கீழே வருமாறு உள்ளது.:

---------------------------------------------------------

"பஞ்ச தந்திரக் கதைகளிலுள்ள நீதிகளையும், செயல்பாடுகளையும், சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் அமைத்துள்ளார்,'' எனத் தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் நாகசாமி தெரிவித்தார். பெசன்ட் நகர், தமிழ் ஆர்ட்ஸ் அகடமி சார்பில், ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், திரு. நாகசாமி "சிலப்பதிகாரம் ஒரு புதிய நோக்கு' என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையில் கூறியதாவது:

ஐந்திணைகள்

சிலப்பதிகாரத்தை நாடக காப்பியம் என்று, உரையாசிரியர் குறிக்கிறார். கதைப் போக்கில் ஆங்காங்கே இசைப் பாக்களையும், பல்வகைக் கூத்துக்களையும் பொருத்தி, அதன் வாயிலாக முக்கிய நீதிகளை இளங்கோவடிகள் எடுத்துரைக்கிறார். எடுத்துக்காட்டாக, தமிழ் இலக்கண மரபுப்படி, ஐந்திணைகளை இந்நூலில் அமைத்து இயற்றியிருக்கிறார். சைவம், வைணவம், சாக்தம், பவுத்தம், சமணம், ஆசீவகம் ஆகிய சமயக் கருத்துகளையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அவரின் கதையமைப்பில் ஏற்கனவே, வழக்கில் இருந்த பல கதைகளையும், நீதிகளையும் அடிப்படையாகக் கொண்டே, தன் இலக்கியத்தை அமைத்துள்ளார் என்பது தெளிவாகிறது.

கீரிப்பிள்ளை கதை ஒரு இன்றியமையாத நீதியை, இளங்கோவடிகள் கோவலனுக்கு மாடலன் கூறியதாக அமைத்துள்ளார். அதில், ஒரு பெண், கீரிப்பிள்ளையைக் கொன்ற கதை வருகிறது. இந்த கதை, "பஞ்ச தந்திரம்' எனும், சமஸ்கிருத நூலில் உள்ளது. அது, முதலாம் நூற்றாண்டைச் சார்ந்தது. இக்கதையை மேலும் விரித்து இளங்கோவடிகள் கூறியுள்ளார். அதை, "வடமொழி வாசகம் செய்த நல்லேடு கடன் அறி மாந்தர் கைநீ கொடுக்க' என்று குறிக்கிறார். வட மொழி வாசகம் என்பது பற்றி, அரும்பத உரை ஆசிரியரும், அடியார்க்கு நல்லாரும் தமது உரையில் கூறும்போது, இது ஒரு "கிரந்தம்' என்று குறித்து, அதை, "அபரீக்ஷய ந கர்த்தவ்யம், கர்த்தவ்யம் ஸுபரீக்ஷிதம் பச்சாத்பவதி ஸந்தாபம் ப்ராஹ்மணீ நகுலம் யதா' என, சமஸ்கிருத மொழியில் அப்படியே கொடுத்திருக்கின்றனர். இதை அடியார்க்கு நல்லார், "கவி' என்றும் கூறுகிறார். ஆகவே, இவ்வடமொழி வாசகம் பஞ்ச தந்திரத்தில் உள்ள பாடல் என்பதில் ஐயமில்லை. இதன் கருத்து, ”எந்தவொரு செயலையும் பரிசீலிக்காமல், ஆழ்ந்து எண்ணாமல் செய்யக் கூடாது. அவ்வாறு செய்பவர்கள் மிகவும் கொடுமையானவர்கள். துன்பத்தில் ஆழ்வர்” என்பது தான்.

சிற்பங்களாக...

கோவலன், பாண்டிய மன்னன் யோசிக்காமல் செய்த செயல்களால் ஏற்பட்ட விளைவுகளை அடிப்படையாக்கி, சிலப்பதிகாரத்தை இளங்கோ இயற்றினார். சிலம்பின் காலம், கி.பி., 3ம் நூற்றாண்டு என்பர். அக்காலத்தில், பஞ்ச தந்திர நீதிக்கதைகள் இந்தியா முழுவதும் புழக்கத்தில் இருந்தன. இந்தக் கதைகள், அரேபியம், பாரசீகம், ஹீப்ரு, செகோஸ்லோவேகியம், போலந்த், லத்தீன், கிரேக்கம், பிரெஞ்சு, ஆங்கிலம், ஜெர்மானியம், டேனிஷ் உள்ளிட்ட மொழிகளில், பதினாறாம் நூற்றாண்டில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. இந்தியாவில் 6ஆம் நூற்றாண்டு சாளுக்கியர், இராட்டிர கூடர்கள் போன்ற கர்நாடகத்தை ஆண்ட மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில்களில் சிற்பங்களாகவும், அச்சிற்பங்களின்கீழ் பஞ்சதந்திரக் கதையின் நீதி வாக்கியங்கள், சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளன.

கொல்லன் கதை

மற்றுமொரு பஞ்சதந்திரக் கதையில், பாழ்கிணற்றில் வீழ்ந்த பொற் கொல்லன் ஒருவன், தன்னைக் காப்பாற்றியவனை அரசனிடத்தில் கள்வனென, பொய்கூறி தண்டனைபெற்றுத் தந்ததையும் குறிப்பிடுகிறது. அக்கதையை, இளங்கோவடிகள் அறிந்திருக்கவேண்டும் என்பதில் ஐயமில்லை.

ஆகவே, அக்காலத்தில் வழக்கிலிருந்த நீதிகளையெடுத்து, தனது காப்பியத்தில் வைத்து, இளங்கோவடிகள் தந்துள்ளார். இவ்வாறு நாகசாமி கூறினார். இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு, தமிழ்ப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் அவ்வை நடராஜன் தலைமை தாங்கினார்.

----------------------------------------------------

அடுத்த பகுதியில் தொடர்வோம்.

எடுகோள்கள்:

1. http://www.sscnet.ucla.edu/southasia/Religions/texts/Ramaya.html
2. http://www.ramayanaresearch.com/ramayana.html
3. http://en.wikipedia.org/wiki/Mahabharata;
4. டாக்டர் க.பஞ்சாங்கம், ”சிலப்பதிகாரத் திறனாய்வுகளின் வரலாறு”, பக் 24-30, முதற் பதிப்பு ஜூன் 2010, வெளியீடு: அன்னம், மனை எண் 1, நிர்மலா நகர், தஞ்சாவூர் 613007.
5. இரா.மதிவாணன், “சிலம்பின் காலக் கணிப்பு”, பக் 13-18, சேகர் பதிப்பகம், சென்னை – 78, 2005
6. இராம.கி., சிலம்பின் காலம், தமிழினி பதிப்பகம், 102, பாரதியார் சாலை, இராயப் பேட்டை, சென்னை 14. 2011
7. A great past in bright colours, T.S.Subramanian, Frontline Oct 8, 2010, pp-64-75.
8. Sheldon Pollock, The Language of the Gods in the world of Men, Permanent Black, Himalayana, Mall Road, Ranikhet Cantt, Ranikhet 263645, 2007
9. Tieken, Herman Joseph Hugo. 2001. Kavya in South India: old Tamil cankam poetry. Groningen: Egbert Forsten, Also see: http://www.ulakaththamizh.org/JOTSBookReview.aspx?id=194;
10. http://www.tamilartsacademy.com/journals/volume23/articles/article2.xml
11. The Gujarra and Maski versions of Minor Rock Edict ! are the only two inscriptions of Asoka which refer to him by name. Inscriptions of Asoka, p 4, D.C.Sircar, Publications Division, Ministry of Information and Broadcasting, Govt.of India. Fourth Edition 1998. ISBN 81-230-0665-9
12. The Hathigumpha Inscription of Kharavela and The Bhabru Edict of Asoka, Shashi Kant, D.K.Printworld (P) Ltd, ‘Sri Kunj’ F-52, Bali Nagar, New Delhi 110015.
13. K.P.Jayswal, Hathigumpha Inscription of the Emperor Kharavela (173 BC to 160 BC). J.of Bihar and Orissa Research Society, III (1917), pp 425-473; JBORS, IV, pp 364ff; JBORS, XIII, pp 221ff, XIV, pp 150ff.




Tuesday, January 22, 2013

ஒருங்குறியும் தேவையான வினையூக்கமும்

அண்மையில் (சனவரி 10 இல்) திருச்சிராப்பள்ளி புனித வளனார் கல்லூரி வரலாற்றுத் துறையினர், செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனத்தோடு சேர்ந்து “Contributions of Sangam and Post-Sangam Classics to Ancient Indian History" என்ற கருத்தரங்கை ஏற்பாடு செய்து, அதற்குப் பலரையும் உரையாற்ற அழைத்திருந்தனர். ”சிலம்பின் காலம்” பற்றி உரையாற்ற என்னையும் அழைத்திருந்தார்கள். நான் (1964-65 இல் புகுமுக வகுப்பு) படித்த பழைய கல்லூரி என்பதாலும், என்னாய்வோடு தொடர்புற்ற உரை என்பதாலும் ஒப்புதல் அளித்திருந்தேன். கருத்தரங்க ஏற்பாடு 2 மாதங்களுக்கு மேல் நடந்துவந்தது. கருத்தரங்கின் இரண்டாம் நாள் மாலையில் என் உரையை ஒழுங்கு செய்திருந்தனர். ஒருங்குறியிற் கட்டுரை வரைவையும், என்னைப் பற்றிய தன்விவரக் குறிப்பையும் கருத்தரங்கிற்கு 15 நாட்கள் முன்பே அனுப்பியிருந்தேன்.

தன்விவரக் குறிப்பைக் கேட்டுப் பெறுவதில் வரலாற்றுத் துறை இளமுனைவர் ஒருவர் என்னோடு தொடர்பிலிருந்தார். சனவரி 10 ஆம் நாள் காலை போய்ச் சேர்ந்த போது, குறிப்பிட்ட இளமுனைவர் என்னைச் சந்தித்து, “தன்விவரக் குறிப்பைத் தரமுடியுமா?” என்று மீண்டுங் கேட்டபோது, “மின்னஞ்சலில் அனுப்பியிருந்தேனே? திறந்து பார்க்கவில்லையா?” என்று வியந்து மறுமொழித்தேன். சற்று வெட்கத்தோடு, “இல்லை ஐயா. அது திறக்காக் குறியேற்றத்தில் இருந்தது” என்று சொன்னார். ”எல்லோரும் படிக்கக்கூடிய ஒருங்குறியிற்றானே அனுப்பினேன். எங்கு தவறு நடந்தது? உங்கள் கணியின் இயங்கு கட்டகம் எது? Windows XP யா, Windows 7 ஆ, Windows 8 ஆ?” என்று கேட்டேன். ”Windows XP” என்றார். ”அதில் language enabled - தமிழ் என்று தேர்ந்தெடுத்தீர்களா?” என்று கேட்டேன். அவர் ”தேர்ந்தெடுக்கவில்லை” என்றார். அப்படியோர் ஏந்து இயங்கு கட்டகத்துள் இருப்பது அவருக்குத் தெரியாது போலும்.

”ஐயா, எங்கள் வரலாற்றுத் துறைக் கணிகளிற் பாமினிக் குறியேற்றமே புழங்குகிறோம். அதில் அனுப்பியிருந்தால் எனக்குத் திறக்க எளிதாய் இருந்திருக்கும்” என்றார். ”பாமினி போன்ற தனியார் 8 மடைக் குறியேற்றங்களில் இருந்து பலரும் நகர்ந்து 16 மடைக்கு வந்து சில ஆண்டுகள் ஆயினவே? இப்பொழுது பலரும் ஒருங்குறியிற்றானே பரிமாறிக் கொள்கிறார்கள்? ஒருங்குறி என்பது உலகெங்கும் புழக்கத்திலுள்ள நடைமுறை. மைக்ரொசாவ்ட்டு இயங்கு கட்டகத்தில் எல்லாக் கணிகளும் அவ்வல்லமை பெற்றுள்ளன. தமிழாவணம் உருவாக்க எந்தக் குறியேற்றத்தையும் புதிதாய் நிறுவ வேண்டியதில்லையே? தமிழ்க் கணி, இணையப் பயன்பாட்டிற்கு ஒருங்குறியையும், அது இணங்கா இடங்களில் தமிழ் அனைத்தெழுத்துக் குறியேற்றத்தையும் (TACE) பயன்படுத்தப் பரிந்துரைத்து, தமிழக அரசாணை பிறப்பித்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதே? தெரியாதா? ” என்றுஞ் சொன்னேன். அவருக்கு நான் சொன்னதெல்லாம் புதியதாய் இருந்தது.

ஒருவேளை இணையத்திற்குள் தொடர்ச்சியாக அவர் போனதில்லையோ, என்னவோ? இணையத்திற்குள் தொடர்ந்து போனவர்கள் கணித்தமிழுக்குள் நடந்த வெவ்வேறு மாற்றங்கள் பற்றியும், 8 மடைக் குறியேற்றங்கள் போய் 16 மடைக்கு நகர்ந்தது பற்றியும், ஒருங்குறியேற்றம் பற்றியும் எப்படியாவது தெரிந்து வைத்திருப்பார்கள். மடற்குழுக்கள் / வலைப்பதிவுகள் / வலைத்தளங்கள் / வலைத்திரட்டிகள் பற்றியும் ஓரளவு தெரிந்திருப்பார்கள். பாமினியிலேயே தொடர்ந்து தேங்கிப்போகும் நிலை அவருக்கு ஏற்பட்டிருக்காது. பொதுவாக எந்தக் கல்லூரியிலும் இதுபோன்ற வளர்ச்சியை அறிந்து கொள்ளும் வாய்ப்பு மாணவர்களுக்குச் சட்டென்று ஏற்படுமென்றே நான் கேள்விப் பட்டுள்ளேன். அதையும் மீறி ஒருவர் அறியாதிருந்தால் எழுத்தர் / தட்டச்சர் / கணிகளைப் பேணும் பொறியாளர் / DTP இயக்கர் ஆகியோரின் தாக்கம் அவரைச் சுற்றிலும் பெரிதும் இருப்பதாகவே எனக்குப் படுகிறது.

அன்று கருத்தரங்கில் புனித வளனார் கல்லூரி அதிபரும் (College Rector) தன்னுடைய பரத்தீட்டில் பாமினியைப் பயன்படுத்தியிருந்தார். அந்த அதிபர் இணையத்தை நேரே பயன்படுத்திக் கணிபற்றிய நுட்பச் செய்திகளை அறிந்திருந்தாரா, அன்றி கல்லூரி நிர்வாகப் பொறுப்பில் இருப்பதால், தன் ஆக்கத்தைக் கையெழுத்திற் செய்து இன்னொரு எழுத்தர்/ தட்டச்சர்/ DTP இயக்கர் மூலம் கணியில் தன் பரத்தீட்டை உருவாக்கினாரா என்று எனக்குத் தெரியாது. அன்று கருத்தரங்கக் கணியில் பாமினி எழுத்துருவை இயங்க வைக்க முடியாதுபோனதால் அவர் பரத்தீட்டில் இருந்த தமிழ் எழுத்துரு திரையிற் தெரியாமற் போகும் நிலை ஏற்பட்டது.

தமிழ்நாட்டிற் கணியைப் புழங்கும் பலரின் நிலையும் இப்படித்தான் இருக்கிறது. தனியார் குறியேற்றங்களைக் கொண்டு இந்த நுட்ப வேலைகளை விதப்பாக்கி வைப்பதால், தடுமாறிப் போகிறார்கள். கணியில் ஆங்கிலம் மட்டுமே புழங்கி, தமிழைப் புழங்குவது அறியாதிருப்பதால் மழலைப் பாடம் எடுக்கவேண்டியதாகிறது.

இத்தனைக்கும் இன்று கணியிற் தமிழைப் புழங்க எல்லா ஏந்துகளும் நீக்கமற நிறைந்துள்ளன. தமிழாவணங்களுக்குத் தேவையான பொதுக் குறியேற்றம் இருக்கிறது. உள்ளிடுவதற்கு உதவியாய் இ-கலப்பை, NHM Writer போன்ற இலவயச் சொவ்வறைகள் இருக்கின்றன. எல்லா மைகொரொசாவ்ட்டுச் சொவ்வறைகளிலும் எந்த விதப்பான முயற்சியும் இல்லாது தமிழை எளிதாகப் புழங்கமுடியும். இருந்தாலும் என்னவோ தெரியவில்லை, (Shreelipi, Softview, TAB, TAM, TSCII, Vanavil போன்ற) 8 மடைக் குறியேற்றங்களிலேயே தேங்கி, அதைவிட்டு நகராது பலரும் இருக்கின்றனர். இவர்கள் இணையத்திற்குள் நேரடியாக வருவதும் அரிதாக இருக்கிறது.

{நம் பேரா.மு.இளங்கோவன் போன்றோர் கல்லூரி, கல்லூரியாய்ப் படையெடுத்துப் வெவ்வேறு பட்டறைகள் எடுத்து அருமையாகச் சேவை செய்கிறார்கள். இன்னும் பலர் அந்தப் பொறுப்பில் பங்கேற்கவேண்டும். ஆனாலும் தமிழைப் புழங்க வேண்டிய தேவையிருப்போரிடம் செய்தி இன்னும் பரவவில்லை போலும்.}

யாரோவொரு எழுத்தர் / தட்டச்சர் சொல்லித் தந்ததையும், கணிகளைப் பேணும் பொறிஞர் சொல்லிக் கொடுத்ததையும், தங்களுடைய புறத்திட்டு அறிக்கை (project report), ஆய்வு நூல் (thesis) ஆகியவற்றிற்காகத் தொடர்பு கொண்ட DTP இயக்கர் சொல்லித் தந்ததையும் வைத்துத் தமிழை உள்ளிட்டு, அவ்வாவணங்களை ஒரு கணியிலிருந்து இன்னொரு கணிக்கு இணையம் மூலம் சிதறாது பகிர்ந்து கொள்வதறியாது, தங்களுடைய வட்டத்திற்குள் மட்டும் தூவல் துரவியால் (pen drive) அறிக்கைகள், பரத்தீடுகள், கட்டுரைகள், நூல்கள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டு பலரும் பிளவு பட்டுக் கிடக்கிறார்கள்.

தமிழைப் புழங்கும் பலரும் தமிழ்நாட்டில் இப்படித்தான் சிதறிக் கிடக்கிறார்கள். எழுத்தர் / தட்டச்சர் / கணிகளைப் பேணும் பொறியாளர் / DTP இயக்கர் ஆகியோரின் தாக்கம் பெரிதும் இருப்பதாகவே எனக்குப் படுகிறது. நான் பல்வேறு நிகழ்வுகளைச் சொல்லமுடியும்.

அண்மையில் ஒரு மடற்குழுவில் நண்பர் ஒருவர் தான் கையெழுத்தில் உருவாக்கிய மொழிபெயர்ப்பு ஆவணத்தை ஒரு தட்டச்சு செய்பவரிடம் கொடுத்திருக்கிறார். தட்டச்சருக்கோ, பாமினி தான் தெரிந்திருக்கிறது. ஒருங்குறியின் வாய்ப்பு பற்றித் தெரியவில்லை. அதன் விளைவாக, அவர் பாமினியில் அடித்துக் கொடுத்த ஆவணத்தை ஒருங்குறியில் மாற்றுவதற்குக் ஒரு குறியேற்ற மாற்றியை (encoding converter) நம் நண்பர் தேடிக் கொண்டிருந்தார். NHM Converter பற்றிச் சிலரும் (நானும்) சொன்னோம். பின் மாற்றிக் கொண்டார். முதலிலேயே ஒருங்குறியில் உள்ளிட்டிருக்கலாமே? - என்பது தான் இங்கு கேள்வி.

இன்னொரு எடுத்துக் காட்டும் சொல்ல வேண்டும். ஒரு பேர்பெற்ற தமிழக அரசு நிறுவனத்தார் 2013 பிப்ரவரி மாதம் ஓர் இலக்கியக் கருத்தரங்கம் நடத்துவதற்குக் கட்டுரைகள் கேட்டிருந்தார்கள். எல்லாக் கட்டுரைகளும் TAM குறியேற்றத்தில் இருக்கவேண்டுமாம். 3 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது என்னவாயிற்று? - என்று புரிபடவில்லை.

தமிழக அரசு அலுவங்களுக்குள் சென்றால் இன்னொரு வியப்பான காட்சியைக் காணமுடியும். நாம் பார்க்கப் போகும் அலுவர் மிகப் பெரிய அதிகாரியிருப்பார். இந்திய ஆட்சிப் பணியாளராய்க் கூட இருப்பார். அவர் மேசைக்கருகில் இன்னொரு தனிமேசையிருக்கும். அதில் ஒரு மடிக்கணியும் காட்சிப்பொருளாய் இருக்கும். ஆனால் அதைப் பயன்படுத்துவது அவருடைய தனிச் செயலராய், எழுத்தராய், தட்டச்சராய், DTP இயக்கராய் இருப்பார். இவர்கள் யாருக்கும் இணையத்துள் போவதற்கான தனி அனுமதி பெரும்பாலும் இருக்காது. அலுவலர் கொடுக்கும் அனுமதி வைத்தே எதுவும் முடியும். இந்த எழுத்தர்/ தட்டச்சர்/ தனிச்செயலருக்குப் பட்டறிவும் பற்றாது. ஆகக் குறைந்த நுட்பியல் அறிவோடு ஆவணம் உருவாக்குவது பற்றியே அந்த தனிச்செயலர் / எழுத்தர் / தட்டச்சர் தெரிந்திருப்பார்.

பொது நுணவ அடிவகுப்பில் (common miminum denomination) .அந்தத் துறையின் நுட்பியல் இயங்கிக் கொண்டிருக்கும். பின் எப்படி நாம் அனுப்பும் ஒருங்குறி மின்னஞ்சல் அந்தத் துறைக்குள் செல்லுபடியாகும்? அங்கிருந்து நமக்கு ஒருங்குறியில் ஒரு மின்னஞ்சல் வந்து சேரும்? ஏன் மின்னஞ்சல் என்னும் நுட்பியல் அரசிற்குள் வேலை செய்வதில்லை என்று இப்பொழுது விளங்குகிறதா? என்றைக்காவது தமிழக அரசின் அமைச்சகங்களுக்கும் துறைகளுக்கும் மின்னஞ்சல் பரிமாற்றஞ் செய்து பார்த்திருக்கிறீர்களா? ஒரு மின்னஞ்சல் பார்ப்பதே அலுவலர்/அதிகாரி இல்லையென்றானபிறகு நுட்பியற் பயன்பாடு எப்படி முன்னேறும்? அவர்கள் கொடுக்கும் மின்னஞ்சல் முகவரிகள் எல்லாம் உப்புக்குச் சப்பாணி என்று புரிகிறதா?

அரசின் It policy எப்படி முன்னகரும்? இங்கு ஒரு எழுத்தர்/ தட்டச்சர் / தனிச்செயலர் அல்லவா அதை நிருவகிக்கிறார்? இப்படி நான் அப்பட்டமாய்ச் சொல்வதற்கு என்னை நீங்கள் மன்னியுங்கள். எந்த அதிகாரியும் நேரடியாக மின்னஞ்சல் போன்ற ஏந்துகளை அரசிற் பயன்படுத்துவதேயில்லை. யாரோவொரு எழுத்தர் /தட்டச்சர் / தனிச்செயலர் தான் பயன்படுத்துகிறார்.] கணி, இணையம் பற்றிய நுட்பியல் மாற்றங்களின் சரவலும் தேவையும் அரசு அதிகாரிகளுக்குத் தெரியவே தெரியாது. அவர்கள் தனிச்செயலுருக்கோ, எழுத்தருக்கோ, தட்டச்சருக்கோ dictation கொடுக்கின்றனர். யாரோவொருவர் அதைத் தன் கணியில் அச்சடித்துக் கொண்டுவருகிறார். அலுவலர் முடிவிற் கையெழுத்துப் போடுகிறார். ஒரு ஆவணம் எப்படி உருவாகிறது, அதிலுள்ள சிக்கல்கள் என்ன என்று கடுகளவும் அதிகாரிக்குத் தெரியாது. இதைப் புரிந்து கொள்ளாது எப்படி அரசு நடவடிக்கைகள் கணிமயமாகும்?

[இத்தனைக்கும் கணித்தமிழ் பற்றி நாமறிந்த வரை தமிழ்நாட்டின் இரண்டு பெரிய கட்சிகளும் தங்களுக்கிடையே மாறுபட்ட கருத்துக்களை ஒரு நாளும் வெளிப்படுத்தியதில்லை. இரண்டு கட்சியரசுகளுமே கணித்தமிழுக்கு என்றுமே உறுதுணையாக இருப்பதாய்த்தான் சொல்லிவந்துள்ளன. ஆனாலும் ஏதோவொரு தடை செயல்முறையில் தொடர்ந்திருப்பது நன்றாகவே தெரிகிறது. அது இந்த எழுத்தர் / தட்டச்சர் / தனிச்செயலர்களின் புரிதற் சிக்கல் தான். நுட்பியல் என்பது இப்படி அந்தத் தரத்திலேயே இயங்குகிறது/ பின் எப்படி கணிச்சிக்கல்களைப் புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும்?

”அரசு நடவடிக்கைகளைக் கணிமயமாக்கப் போகிறோம்” என்று இடைவிடாது மேடைகளெங்கும் அரசியல்வாதிகள் முழங்குகிறார்கள். இதுவெறும் முழக்கம் தான் போலிருக்கிறது. செயற்பாடு வேறொன்று போலும். இன்றுங் கூட தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் ஒருங்குறியோ, தமிழ் அனைத்தெழுத்துக் குறியேற்றமோ கொஞ்சமும் செயற்படவில்லை. அங்கு வானவில்லே செயற்பட்டுச் செங்கோலோச்சிக் கொண்டிருக்கிறது. ஆக அரசின் அரசாணை அரசிற்குள்ளேயே செயற்படக் காணோம். யாரோவொரு தனியார் குறியேற்றம் தான் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கிறது. கணித்தமிழ் நடைமுறையிற் புழங்க ஒரு IT policy வேண்டாமா? தமிழக அரசு அதைப்பற்றி எண்ணிச் செயற்படவில்லையே? “எண்ணித் துணிக கருமம்” - என்னவாயிற்று?]

[கணித்தமிழுக்கான சிக்கல்கள் அரசில் மட்டுமல்ல குமுகாயத்திலும் ஏராளம். தமிழ்நாட்டில் ஒவ்வோர் நாளிதழும் தாளிகையும் தனித்தனிக் குறியேற்றத்தைக் கொண்டுள்ளன. தினமலர், தினமணி, தினகரன்........ஆனந்த விகடன், குமுதம், கல்கி......கொண்டிருக்கின்றன. அவர்களில் பலருக்கும் Shreelipi தான் தெரியும்.

5 அகவைக்கும் கீழ்ப்பட்ட பிள்ளைகளுக்கான மழலைப் பாட்டுக் குறுந்தகடுகள் கூட இப்படித் தனியார் குறியேற்றங்களிற்றான் உலவுகின்றன. வெவ்வேறு இணைய நூலகங்களில் சேகரிக்கப்படும் ஆவணங்களும், சுவடிகளும் ஒருங்குறியில் இருப்பது பெரிதும் குறைவே. தனியார் குறியேற்றத்திலேயே அவை கிடைக்கின்றன.

இவை போன்றவை ஒருபக்கம் இருக்க, இன்னொரு பக்கம் தமிழின் பயன்பாட்டையே நம் பொதுவாழ்விற் குறைத்துக் கொண்டிருக்கிறோம்.

தமிழே தெரியாது ஒரு மாணவன் தமிழ்நாட்டிற் கல்வி பெற்றுவிடமுடியும். [சீனம் தெரியாது, சப்பானியம் தெரியாது, டாயிட்சு தெரியாது, பிரெஞ்சு தெரியாது, அரபி தெரியாது, துருக்கி தெரியாது, ஈப்ரு தெரியாது அந்தந்த நாடுகளில் கல்வி பெற்றுவிட இயலுமா?] தமிங்கிலம் எங்கு பார்த்தாலும் தகத்தகாய ஒளிவீசிச் சிறந்து கொண்டிருக்கிறது. மிடையத்துறை முழுதும் - தொலைக்காட்சி, தாளிகை, பண்பலை, வானொலி, திரைப்படம் - என்று பலவிடங்களில் 10 சொற்களுக்கு 6/7 சொற்கள் ஆங்கிலம் பேசித் திளைக்கிறோம். ஆங்கில வினைச்சொற்களைப் பண்ணி ஆங்கிலப் பெயர்ச்சொற்களை முன்னால் வைத்து தமிழ்ச் சொற்கள் வெறுமே ஒட்டு இடைச் சொற்களாகிவிட்டன. தமிழே வேண்டாம் என்று வேப்பங்காயாகக் கசந்து கொண்டிருக்கும் போது எந்தச் சொவ்வறையாளன் தமிழிற் சொவ்வறை உருவாக்க முன்வருவான்? இங்கு தான் தமிழ்க் கணிமைக்குச் சந்தையேயில்லையே? உப்புக்குச் சப்பாணி வேலைகள் எத்தனை நாளைக்கு நிலைக்கும்?

ஒரு அண்ணாச்சி கடையில் பெறுதிச் சீட்டு தமிழிற் தரப்படுவதேயில்லை. தமிழ்நாட்டில் விற்கப்படும் மின்னியியற் சரக்குகள் தமிழிற் கையேடு இல்லாது விற்கப்படுகின்றன. இங்கு விற்பனை செய்யப்படும் கணிகள், கைபேசிகள் தமிழ் இடைமுகம் கொள்ளாது இருக்கின்றன. “தமிழ் என்றைக்கு ஒழியும்?” என்று வழிமேல் விழிவைத்துப் பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். மக்களாகிய நாமோ கோடியிற் புரளும் யாரோவொரு திரைப்படக் கலைஞனின் வெட்டுப் பதாகைக்கு பாலும், சந்தனமும் தெளித்து முழுக்குச் செய்யக் காத்து நிற்கிறோம். நம் சிறார் நம்முடைய விழாக்களில் “Record Dance" ஆடிக்கொண்டிருக்கிறார்கள். நாமும் கூட இருந்து அவர்களைக் கைதட்டி ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிறோம். தமிழாவது ஒன்றாவது? ஏதோ சில பைத்தியங்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.]

[தமிழருக்குள் சிதறு மனப்பான்மை என்பது ஊறித் திளைப்பது போலும். ஒன்றுபட்டு ஒரு குறியேற்றத்திற்குள் வாரார் போலும். வெறுமே மேடைகளிற் “தமிழ் வாழ்க” என்று கூக்குரலிடுவதற்கும். தப்புந் தவறுமாக “ஆங்கிலத்திற்கு அப்புறம் இணையத்தில் உயர்ந்திருக்கும் மொழி தமிழ்” என்று பொய்யாகப் பெருமை பேசுவதற்கும் தான் கணித்தமிழ் பயன்படுகிறது போலும்.]

இப்படி ஒரு தமிழ்க் குறியேற்றம் செயற்படாது பற்பல குறியேற்றம் செயற்பட்டால், என்ன நன்மை நமக்கு விளையும்?

தமிழில் ஒரு சொலவடையுண்டு. கூரையேறிக் கோழிபிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போக ஆசைப்பட்டானாம். பேச்சாவணத்தில் இருந்து எழுத்தாவணம் (speech to text), எழுத்தாவணத்திலிருந்து பேச்சாவணம் (text to speech), இயந்திர மொழிபெயர்ப்பு (machine translation), ஒளிவழி எழுத்துணரி (optical charactert recognition) என்று ஏதேதோ உயர் நுட்பவியல் பற்றிப் பேசவிழைகிறோம். இந்த நுட்பியல் எல்லாம் நமக்கு நடக்கவேண்டும் தான். ஆனால் அடிப்படையில் ஒரு குறியேற்றத்திற்கே இவ்வளவு தடுமாறிக் கொண்டிருந்தால், நம்முடைய கனவுகள் என்று நனவாவது?

பாழாய்ப்போன இந்த மாற்றத்திற்கு ஒரு 6 மாதம் போதாதா? அதற்குள் மற்ற குறியேற்றங்களை மூட்டை கட்டி, எல்லோரும் ஒரு குறியேற்றத்திற்கு வந்து சேரக் கூடாதா? - என்ற ஏக்கம் நம்மை வாட்டுகிறது. “மறுமடியும், மறுபடியும் தாயம் போடு” என்று தடுமாறி ”பரமபத சோபனம்” ஆடிக்கொண்டிருந்தால் எப்படி?

இதற்கு வினையூக்கமாய் நாம் என்ன செய்யப்போகிறோம்?

புலம்பலுடன்,
இராம.கி.

Sunday, January 13, 2013

2013 சென்னைப் பொத்தகக் கண்காட்சியும் பொத்தகப் பரிந்துரையும்

2013 சென்னைப் பொத்தகக் கண்காட்சியில் வாங்கிய நூல்களின் பட்டியல், வாங்கிய கடைகளின் பெயர்களும் (20), அவற்றின் கீழ் பொத்தகங்கள் (39) பற்றிய குறிப்புமாய்க் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக வெவ்வேறு ஆட்கள் வாங்கும் பொத்தகங்கள் அவரவர் விழைவிற்குத் தகுந்து மாறுபடும். ஒரே ஆளின் விழைவுகளுங் கூட பல்வேறு காரணங்களால் பல்வேறு பொழுதுகளில் மாறுபடும். ஒரு பொழுது வாங்கியது இன்னொரு பொழுது வாங்கப் படாமலே போகலாம். நண்பர்களின் கவனத்திற்கும், பரிந்துரைக்குமாய் இவற்றைக் கீழே கொடுத்துள்ளேன்.

கண்காட்சியில் எந்த ஆண்டைக் காட்டிலுங் கூடுதலாய்க் கடைகள் இருக்கின்றன. மக்கள் நெரிசலும் கூடவே இருக்கிறது. பொத்தகங்களின் விலைவாசியும் கூடியிருக்கிறது. எல்லாக் கடைகளும் ஏறியிறங்க வேண்டுமானால் குறைந்தது 4,5 மணி நேரங்கள் ஆகும். (இத்தனைக்கும் முழுதும் ஆங்கிலப் பொத்தகங்கள் மட்டுமே விற்கும் எல்லாக் கடைகளுக்குள்ளும் நான் போகவில்லை. ஓரளவு நான் எதிர்பார்த்த கடைகளுக்குள் மட்டுமே போய்வந்தேன்.)

சென்ற ஆண்டு நடந்த (புனித சியார்ச்சு பள்ளி வளாகம், பச்சையப்பன் கல்லூரிக்கு எதிர்ப்புறம்) இடத்தைக் காட்டிலும் இவ்விடம் (உடற்பயிற்சிக் கல்லூரி, நந்தனம்) அவ்வளவு ஏந்துகளுடன் இல்லை. நிறைய நடக்க வேண்டியிருக்கிறது. (கழிப்பிடங்களும் பற்றாது.) சிற்றுண்டி சாப்பிடுவதும் இன்னும் நன்றாக அமைந்திருக்கலாம். வருங்காலங்களில் கண்காட்சி அமைப்பாளர்கள் வேறு ஏதேனும் ஒரு நல்ல இடத்தைத் தேர்ந்தெடுத்தால் நல்லது. (பேசாமல் நந்தம்பாக்கம் பொருட்காட்சி இடத்திற்கு இவர்கள் நகரலாம். ஏன் அங்கு போக இன்னுந் தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை.. அது எல்லாவிதத்திலும் ஏந்துகளும் வாய்ப்புகளும் கூடியது. நகரின் மையத்திலிருந்து கொஞ்சம் தொலைவு கூடியது என்பதைத் தவிர வேறு குறைகள் இருப்பதாய்த் தோன்றவில்லை.)

அன்புடன்,
இராம.கி.

பொத்தகப் பட்டியல்:

1 கீழைக்காற்று
a தமிழர் உணவு - பக்தவத்சல பாரதி - காலச்சுவடு பதிப்பகம்
b தமிழகக் கடலோரத்தில் முத்துக் குளித்தல் வரலாறு - எஸ்.அருணாச்சலம் - தமிழாக்கம் சா.ஜெயராஜ் - பாவை பப்ளிகேஷன்ஸ்.

2 விடியல்
a இந்திய வரலாறு - ஓர் அறிமுகம் - டி.டி.கோசாம்பி
b பகவான் புத்தர் - தர்மானந்த கோஸம்பி - புத்தா வெளியீட்டகம்
c கதைக் கருவூலம் - சமணக் கதைகள் ஸி.எச்.தானி - தமிழில் ராஜ்கௌதமன்

3 குமரன் புத்தக இல்லம்
a Early Historic Tamil Nadu c 300 BCE - 300 CE - edited by K.Indrapala

4 விழிகள் பதிப்பகம்
a அகநானூறும் காதா சப்தசதியும் - ஓர் ஒப்பாய்வு - வே.ச. திருமாவளவன், நோக்கு பதிப்பகம்

5 உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்
a தமிழ்ச்சொற் பிறப்பாராய்ச்சி - ஞானப்பிரகாச சுவாமிகள்

6 சென்னைப் பல்கலைக் கழகம்
a Facets of Jainism - series 1 - ed.by N.Vasupal
b பத்துப்பாட்டு ஆராய்ச்சி - டாக்டர் மா.இராசமாணிக்கனார்

7 காவ்யா
a திராவிடத் தெய்வம் கண்ணகி - பேரா.காவ்யா சண்முகசுந்தரம்

8 சாகித்ய அகடமி
a கயிறு - 3 தொகுதிகள் - தகழி சிவசங்கர பிள்ளை - தமிழில் சி,ஏ.பாலன்

9 கிழக்குப் பதிப்பகம்
a உடையும் இந்தியா - ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும் - ராஜீவ் மல்ஹோத்ரா, அரவிந்தன் நீலகண்டன்

10 விசா
a ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா
b ஆயிரம் கணிப்பொறி வார்த்தைகள் - சுஜாதா

11 தமிழினி
a நட்ட கல்லைத் தெய்வமென்று - கரு.ஆறுமுகத்தமிழன்
b காலம் தோறும் தொன்மங்கள் - அ.கா.பெருமாள்
c ஒரு குடும்பத்தின் கதை - அ.கா.பெருமாள்
d வஜ்ஜாலக்கம் - சுவேதாம்பர சமணமுனி ஜயவல்லபன் இயற்றியது - தமிழில் மு.கு.ஜகந்நாதராஜா
e மொழிக்கொள்கை - இராசேந்திர சோழன்

12 இந்திய அரசு வெளியீட்டுத்துறை
a இந்திய இசை - ஓர் அறிமுகம் - பி.சைதன்ய தேவா

13 காந்தளகம்
a சக்கரவாளக் கோட்டம் - குணா
b தமிழர் வரலாறு - கிழாரியம் முதல் முதலாளியம் வரை - குணா
c முன்தோன்றி மூத்தகுடி - குணா

14 காலச்சுவடு
a பண்பாட்டு அசைவுகள் - தோ.பரமசிவன்

15 தேசியப் புத்தக அறக்கட்டளை
a தென்னிந்தியக் கோயில்கள் - கே.ஆர்.சீனிவாசன்.
b Garden Flowers - Vishnu Swarup

16 தஞ்சைப் பல்கலைக் கழகம்
a Foreign notices of Tamil Classics - An appraisal - S.N.Kandasamy

17 நியூ செஞ்சுரி
a A History of Ancient Tamil Civilization - A.Ramasamy
b இந்தியாவில் மெய்யியல் - மிருணாள் காந்தி காங்கோபாத்யாயா - மொழிபெயர்ப்பு சா.ஜெயராஜ்
c பழங்கால இந்தியாவில் அரசியல் கொள்கைகள், நிலையங்கள், சில தோற்றங்கள் - ஆர்.எஸ்.சர்மா
d வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும் - சுவீரா ஜெயஸ்வால் - தமிழாக்கம் கி.அனுமந்தன், ஆர்.பார்த்தசாரதி

18 மோதிலால் பனார்சிதாசு
a History of Ancient India - Ramashankar Tripathi
b Jainism - History, Scociety, Philosophy and Practice - Agustin Paniker

19 தமிழ்த்தேசம்
a தமிழின் வேர்ச்சொற்கள் - முதல் தொகுதி - அ.சவரிமுத்து
b தமிழின் வேர்ச்சொற்கள் - இரண்டாம் தொகுதி - அ.சவரிமுத்து
c தொல்காப்பியம் - திருக்குறள் காலமும் கருத்தும் - க.நெடுஞ்செழியன்
d சங்க இலக்கியக் கோட்பாடுகளும் சமய வடிவங்களும் - க.நெடுஞ்செழியன்

20 சேகர் பதிப்பகம்
a சிலம்பின் காலம - மீண்டும் ஒரு விளக்கம் - டாக்டர் செல்லன் கோவிந்தன்

Wednesday, December 19, 2012

கணித்தமிழ் வளர்ச்சி மாநாட்டில் உரை

அண்மையில் கணித்தமிழ் வளர்ச்சி மாநாட்டில் மின்னணுக் கருவிகளிற் தமிழ்ப்பயன்பாடு என்ற இரண்டாம் அமர்விற்கு என்னைத் தலைமை தாங்கி நடத்தப் பணித்தார்கள். அதில் நான் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் இது. இந்த உரையைப் பேச்சு வடிவில் மாற்றி நான் அங்கு உரைத்திருந்தேன். இப்பொழுதெல்லாம் மேடைத்தமிழ் என்பதை எழுத்து வடிவிற்கு மட்டுமே பயன்படுத்துகிறேன். பேசும் பொழுது, பேச்சுத்தமிழ் நடையையே பயன்படுத்துகிறேன்.

அன்புடன்,
இராம.கி.

--------------------------------------
மொழி என்பது அடிப்படையிற் பேச்சையே குறிக்கும். எல்லா மாந்த மொழிகளும் பேசும் வலுவை (speaking ability) இயல்பாகப் பெற்றுள்ளன. அவ்வலு இல்லாதுபோயின், வெறும் ஓசைக்கூட்டங்களாய், பிதற்றல்களாய், விலங்கொலிப் பரட்டல்களாய் மொழிகள் நின்று போயிருக்கும்.

மொல்லுதல் வினைச்சொல்லின் வழிப்பிறந்தது மொழியாகும். மொல்> (மொள்)> மொழி. மொல்மொல் எனல் பேசற் குறிப்பு; மொலு மொலுத்தல் = விடாது பேசல், இரைதல், முணு முணுத்தல். மொல்லுதல் = தாடையசைத்தல்; ஒலி எழுப்பல். சாப்பிடுகையில் ஓசையெழுவதையும் நாம் மொல்லுதலென்றே சொல்கிறோம். ”அவன் என்ன வாய்க்குள் மொல்லுகிறான்? வாயைத் திறந்து சொல்லவேண்டியதுதானே? இந்த மொல்லல் தானே வேண்டாங்கிறது?.”

மொல்லலின் இன்னொரு வளர்ச்சி முணுங்கல். [மொல்லல்> (மொள்ளல்)> மொணுங்கல்> முணுங்கல்].. வேறொரு புடை வளர்ச்சியாய், மொணுமொணுத்தல்> மொனுமொனுத்தல்> மோனம்> மௌனம் என்றாகும். சொற்பிறப்பிற்குள் மேலும் ஆழப் போகாது, கருத்து வளர்ச்சிக்கு வருவோம்.

பேசும் வலுப்பெற்ற மொழிகளிற் சில, ஒரு காலகட்டத்தில் எழுத்து வலுப் (writing enabled) பெற்றன. இன்னும் நாட்செல, அவற்றிற் சில, அச்சு வலு (printing enabled) உற்றன. அவற்றிலுஞ் சில, வளர்ந்த மொழிகளாகி, மின்னி வலுப் (electronically enabled) பெற்றன / பெறுகின்றன.

மின்னி என்பது electron-யைக் குறிக்கும்; [இது 1960 களில் எழுந்த சொல்.] மின்னணு என்று நீட்டி முழக்கவேண்டாம். மின்னியெனச் சுருக்கிச் சொல்லலாம். மின்னி என்பது கணிக் (=computer) கருத்தீட்டிற்கும் மேலானது; அகண்டது. கணிகளுக்கும் (computers) மீறி பல மின்னிப் பொறிகளில் (electronic equipments) இன்று மொழிப் பயன்பாடு இருக்கிறது. காட்டு: நகரும் போதே, ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளப் பயன்படும் நகர்பேசி அல்லது செல்பேசி (= cell phone) இன்னும் தொலைக்காட்சி (television), இசையியக்கி (music player). உறையூட்டி (refrigerator), கட்டிட ஒளிமையைக் கட்டுறுத்தும் (control) கருவிகள் எனக் கணக்கற்ற கருவிகளுக்குள் மொழிப் பயன்பாடு வந்துவிட்டது. பேச்சாலும், எழுத்தாலும் எதையும் இயக்குவிக்க முடியும் போலும்.

கணி வலுவைக் காட்டிலும், மின்னி வலு விரிந்தது. அதே பொழுது, கணி வலுவிற்கான செயற்பாடுகள் மின்னி வலுவிற்கும் உதவுகின்றன. இற்றை நுட்பியல் வளர்ச்சியில் மின்னிக் கருவிகளிற் பயன்படும் வகையில் இயல்மொழிகளை ஏற்றதாக்கும் கட்டாயமிருக்கிறது.

எழுத்து வலு, அச்சு வலு, மின்னி வலு என ஒவ்வொன்றும் மொழிவளர்ச்சியில் ஒரு நுட்பியல் எழுச்சியாகும். இவ்வெழுச்சிகளைத் தாண்டி வளர்ந்த மொழிகளே முகல்ந்து (modernized) முன்னெடுத்து வருகின்றன; நிலைத்து நிற்கின்றன. உலகத்திற் பல மொழிகள் (காட்டாக ஆங்கிலம், சீனம், இசுப்பானியம், பிரஞ்சு, செருமானியம், உருசியம், சப்பானியம், அரபி, துருக்கி போன்று பல்வேறு மொழிகள்) இத்தகுதியைப் பெற்றிருக்கின்றன.

அதே பொழுது, உலகத்தில் ஏறத்தாழ 10 கோடிப்பேர் பேசும் தமிழ்மொழி (தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 7.5 கோடிப்பேர் தமிழ் பேசுவதாகவும், மற்ற மாநிலங்களையும் சேர்த்தால் 8.75 கோடிப்பேர் இருப்பதாகவுஞ் சொல்கிறார்கள்.) இவ்வலுக்களிற் தமிழ் எப்படி வளர்ந்து வந்திருக்கிறது - என்பது கேள்விக்குறியே ஆகும்.

எழுத்து வலுவைத் தமிழ் மொழி, 2500 ஆண்டுகளுக்கு முன் பெற்றதாக ஆய்வாளர் கூறுகின்றனர். குடியேற்ற (colonialism) ஆதிக்கத்தால், கிறித்துவ விடையூழியர் மூலம் தூண்டப்பெற்று அச்சு வலுவை இம்மொழி 400, 450 ஆண்டுகளாகப் பெற்றிருக்கிறது. இந்தியத் துணைக்கண்டத்திலேயே அச்சுக்குள் முதலில் நுழைந்த மொழி தமிழ் தான்.

இன்று குடியேற்றத் தாக்கம் போய், இந்தியா விடுதலை பெற்றுவிட்டது. “நாமே இந்நாட்டு மன்னராகிவிட்டோம்” ஆனால் பல்வேறு வரலாற்றுப் பிழைகளுக்கு அப்புறம், ”இன்று தமிழ்மொழி மின்னி வலுவைப் பெற்றதா?” எனில் இல்லெனச் சொல்லவேண்டும். தமிழினும் இளமையான இந்தி மொழி, நடுவணரசின் பெரும் முயற்சிகளால், தகுதியான மின்னி வலுவை நம் கண்ணெதிரே பெற்றுக் கொண்டிருக்கிறது. அதே பொழுது, தமிழையும் சேர்த்த மாநில மொழிகளோ ஆட்சி வலுப் பெறாது, மின்னி வலுவுறாது, தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. (தமிழர் பெரும்பாலும் பழம்பெருமை பேசுவதிலேயே ஓய்ந்து விடுகிறோம். இன்றைய நிலையைக் கொஞ்சங்கூட எண்ணிப் பார்ப்பதேயில்லை.)

கூடவே, நம் விளங்காமையால்,, தமிழ்ப் பேச்சுவலு, எழுத்துவலு, அச்சுவலு என எல்லாவற்றையுங் குறைத்துக் கொண்டிருக்கிறோம். ”தமிழாற் தனித்தேதுஞ் செய்ய முடியாதோ?” எனும் நிலைக்கு வந்து, தமிங்கிலக் கலப்பு அவ்விடத்திற் புற்றீசலாய்ப் பரவிக் கொண்டிருக்கிறது. பத்து வார்த்தை பேசினால் அஞ்சு வார்த்தை அதில் ஆங்கிலமாக வந்து கொண்டிருக்கிறது. அதைத்தான் பெரிதாக நினைத்து நம் சிறார்களை “இங்கிலிபீசு” பேசவைப்பதில் முனைப்பாக ஈடுபடுகிறோம். இனிமேலும் கட்டுமுகமாய் ஏதுஞ் செய்யாதிருந்தால், நம்மூரிலேயே தமிழைச் சில பதின்மங்களிற் தேட வேண்டியிருக்கும். நான் சொல்லுவது வெறும் எச்சரிக்கையல்ல. உள்ளமை நிலையாகும்.

உலகம் கணிமயமாக மாறிக் கொண்டிருக்கிறது. நம்முடைய குமுக, அரசு நடவடிக்கைகளும், அரசு-பொதுமக்களிடையுள்ள இடையாட்டங்களும் (interactions) இனிமேலும் வெறுமே எழுத்துமயம், அச்சு மயம் என்று மட்டுமே ஆகிக் கொண்டிருப்பதிற் பொருளில்லை. பல்வேறு தரவுத் தளங்கள் வெறுமே எழுத்துக் கோப்புகளில், அச்சுக் கோப்புக்களில் சேகரித்து வைக்கப்படவில்லை. அவை மின்னி மயமாக்கிக் காப்பாற்றப்படுகின்றன.

உலகெங்கும் எல்லா இடையாட்டங்களும் நேரே ஓர் அரசு அலுவகத்திலோ, தனியார் அலுவகத்திலோ, அலுவர் முகம் பார்த்து விண்ணப்பிக்கப் படுவதில்லை.

பிறப்புச் சான்றிதழ் பெறுவது,
திருமணத்தைப் பதிவது,
மனை விற்பனையைப் பதிவது,
சுற்றுச் சூழல் வெம்மைகள் (temperatures தெரிந்து கொள்வது,
மழைப் பொழிவு அறிவிப்புக்கள் (rainfall announcements) செய்வது
வெதணங்கள் (climates) பற்றி அறிவிப்பது,
வேளாண்மை அறிவுரைகள்,
அரசிற்குப் பொதுமக்கள் விடுக்கும் வெவ்வேறு வேண்டுகோள்கள்,
பொதுமக்களுக்கான அரசுச் சேவைகள்,
வணிகங்களுக்கு இடையே, பொதினங்களுக்கு (businesses) இடையே நடைபெறும் பரிமாற்றங்கள்,
பொதினங்கள்-அரசுகள் இடையே பரிமாற்றங்கள்,
பொதினங்களுக்கும் நுகர்வோருக்கும் இடையே பரிமாற்றங்கள்

என எல்லாமே உலகெங்கும் அந்தந்தவூர் மொழிகளில் மின்னிக் கருவிகள் வழியே, நடைபெறுகின்றன. தமிழில் மட்டும் தான் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அரிதாய் நடக்கிறது. கணிமயப்படுத்தல் என்பது வளர்ந்த நாடுகளில் 99% நடக்கிறதென்றால், இந்தியில் 10% நடக்கிறதென்றால் தமிழில் 1% கூட நடைபெறுவதில்லை. நாம் வெற்றுப் பேச்சுப் பேசிக்கொண்டிருக்கிறோம்.

இது போன்ற பரிமாற்றங்களையும், கணுக்கங்களையும் (connections) மின்னி மயமாக்கும் போது நமக்கு ஆழ்ந்த கவனம் தேவை. தமிழில் ”செருப்பிற்கேற்ற காலா? காலிற்கேற்ற செருப்பா?” என்ற சொலவடையுண்டு. மின்னிமயப் படுத்தலுக்கு ஏற்ற மொழியா, மொழிக்கேற்ற மின்னிமயப் படுத்தலா? இந்தக் காலத்திற் செருப்பிற்கேற்ற காலாக நாம் மொழியை வெட்டிக் கொண்டிருப்பது போற் தெரிகிறது. தமிழ்மொழிக்குப் பயன்படும்படி கணிமயப் படுத்தாமல், கணிமயப் படுத்தலுக்குத் தக்க நம் மொழியையே மாற்றிக் கொண்டிருக்கிறோம். இது தவறான அணுகுமுறையாகும். தமிழைச் சவலைப் பிள்ளையாக வைத்து, கணிமயப் படுத்தலைச் செயற்படுத்தும் தேவையில் ஆங்கிலக் குண்டுப் பிள்ளையை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். நடுவண் அரசோ, தன்வேலையிற் கவனமாய், ஆள், பேர், அம்பு வைத்து அந்தந்த இடங்களில் இந்தி மொழியை வளர்த்துக் கொண்டிருக்கிறது. தமிழக அரசு விழித்துக் கொள்ளவேண்டும். தமிழின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது.

”புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினிலில்லை
சொல்லவுங் கூடுவதில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக்கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசையோங்கும்

என்று ஒரு பேதை சொன்னது உண்மையாகிக் கொண்டிருக்கிறது. நாம் விழித்துக் கொள்ளாதிருப்பின், இதைத் தவிர்க்க முடியாது. விழித்துக் கொள்ளவேண்டியதின் பொருள், தமிழுக்கு மின்னி வலு கொடுப்பது தான்.

மின்னி வலுவென்பதற்கு முதலடிப்படை ”கணிக்குள் எப்படிக் குறியேற்றம் பெறுவது?” என்ற கேள்விக்கான விடையாகும். இதற்கான முயற்சிகள் வெவ்வேறு மொழிகளுக்கு நடந்தாலும், இந்திய மொழிகளுக்கான முயற்சிகள் 1970, 80 களிற் தொடங்கின. இவையெல்லாம் தனியார், தனி நிறுவனங்கள், தனியரசுகளின் முயற்சிகளாகும். [சிங்கப்பூர், மலேசிய அரசுகளை இங்கு குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். தமிழக அரசு ஒரு உள்ளுறுத்த நுட்பியற் கோட்பாடு (information technology policy) இல்லாது இன்னும் தடுமாறிக் கொண்டிருக்கிறது.] இவற்றை வரலாறு பூருவமாக நான் இங்கு விவரிக்க முற்படவில்லை. இவற்றின் முடிவில் 1990 களில் உலகின் பல்வேறு நிறுவனங்களும், அரசுகளும் ஏற்கும் வகையில் ஒருங்குறிக் குறியேற்றம் ஏற்பட்டது.

அந்த ஒருங்குறிக் குறியேற்றத்தில் உலகின் பல மொழிகளுக்கு இடங் கொடுத்தார்கள். தமிழுக்கும் கொடுத்தார்கள். உரிய நேரத்தில் தமிழ்பேசுவோரின் தன்னார்வக் குழுக்களோ, நிறுவனங்களோ, அரசுகளோ தமிழுக்கு வேண்டிய இடங்களைக் கேட்டிருந்தால், தமிழின் உயிர், மெய், உயிர்மெய் என அனைத்து எழுத்துக்களுக்கும் இடம் கிடைத்திருக்கும். அந்த நேரத்தில் நாம் சரியாகச் செயற்படாது, உள்ளூர் அரசியலாற் தூங்கிப் போன காரணத்தால், நடுவண் அரசுப் பரிந்துரையில் உயிர், அகர உயிர்மெய், சில உயிர்மெய் ஒட்டுக்குறிகள் என மொத்தம் 128 இடங்களே கிடைத்தன. இவற்றை வைத்துக்கொண்டு, ஒரு சில கணிநுட்பங்களின் மூலம் சில சித்து வேலைகள் செய்து உயிர்மெய் எழுத்துக்களைக் கணித்திரையிற் கொண்டு வருகிறோம். இதுதான் இன்றைய நிலை.

இந்தச் சித்துவேலைகள் தமிழை இணையத்திற் பயன்படுத்துவதற்கும் கணிக்கோப்புக்களைச் சேமித்து வைப்பதற்கும், ஒரு கணியில் இருந்து இன்னொரு கணிக்கு பரிமாறுவதற்கும் பெரிதும் பயன்பட்டன. சொற்செயலிகளிலும், பல்வேறு அச்சிகளிலும் (printers) இது ஒழுங்காகவே செயற்பட்டது. ஆனால் பெரும் பொத்தகங்கள், ஆவணங்கள் போன்றவற்றை PDF கோப்புகளில் கொண்டுவந்து அச்சு நுட்பத்திற்கு மாற்றுவதில் ஒரு சில உயிர்மெய்கள், ஒகர, ஓகாரம் போன்றவை, முரண்டு பிடித்தன. எளிதில் ஒன்றிற்கொன்று என்ற வகையில் எழுத்துக்களுக்கும் குறிகளுக்குமிடயே கணுக்கம் (connection) ஏற்படுத்தி உயிர்மெய்களைப் பெறாததால், கணியில் இருந்து அச்சு நுட்பத்திற்கு மாறும் பொழுது ஒருசில குறைகள் ஏற்பட்டன. கணிநுட்பியல் அறிஞர்களின் உள்ளூர்ச் சண்டையால் இந்த இழப்பு ஏற்பட்டது. உயிர், மெய் ஆகியவற்றோடு உய்ர்மெய்களுக்கும் சேர்த்து இடம் வாங்கியிருந்தால் நாம் எங்கோ போயிருக்க முடியும்.

இதன் விளைவாக ஆறுதற் பரிசாகத் தமிழ் நுட்பியலாளர்கள் அனைத்தெழுத்துக் குறியேற்றம் (all character encoding) என்ற ஒன்றைப் பரிந்துரைத்தனர். இதை ஒருங்குறிச் சேர்த்தியத்திடம் (unicode consortium) தமிழக அரசு வழித் தெரிவித்தோம். இதுகாறும் ஒருங்குறிச் சேர்த்தியம் தன் ஒப்புதலை இதற்கு வழங்கவில்லை. இதற்கிடையில் தமிழக அரசு தமிழில் உள்ள இணையப் பரிமாற்றங்களுக்கும் ஏதுவாக ஒருங்குறியையும். அச்சு நுட்பத்திற்குத் தேவையான வகையில் அனைத்தெழுத்துக் குறியேற்றத்தையும் ஏற்று 2009 இல் அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணைக்கு அப்புறம், மின்னிவலுப் பெறுவதற்கான எந்த முயற்சியும் சொல்லத்தகும் வகையில் நடைபெறவில்லை.

மின்னிவலுப் பெற சொவ்வறையாளர் (software specialists) பலரும் ஒருங்கிணைந்து வேலை செய்யவேண்டும். எப்பொழுது அவர்கள் இதை இயல்பாக செய்வார்கள்? அவர்கள் உருவாக்கும் சொவ்வறை நிரலிகளுக்குச் சந்தை ஏற்பட்டாற் தானே? இப்பொழுது தான் சந்தையே, இல்லையே? நாம் தான் குண்டுசட்டிக்குள் குதிரையோட்டிக் கொண்டிருக்கிறோமே? அப்புறம் ”தமிழ் எங்கும், எதிலும் இல்லையே?” என்று குறைப்பட்டுக் கொள்வதிற் பொருளென்ன? இந்தக் குறையைச் சரிசெய்ய என்ன செய்திருக்கிறோம்? தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, தமிழ்ப் பயன்பாட்டிற்குச் சந்தை உருவாக்காது இருக்கிறோமே? “அவர்கள் சதி செய்கிறார்கள், இவர்கள் குலைக்கிறார்கள்” என்று எங்கோ எதிரியைத் தேடுவதற்கு மாறாய், நம்முடைய குறையென்ன? நாம் எதைச் சரிசெய்யது இருக்கிறோம் என்று கவனிக்க வேண்டாமா? இதுவரை கணித்தமிழ் முயற்சிகளில் நடந்தவையெல்லாம் பொருளியலில் அளிப்பு பக்கத்தையே (supply side economics) பார்த்துக் கொண்டிருந்தன. காட்டாக,

1. தமிழிற் குறியேற்றச் சிக்கல் (8 மடை, 16 மடைக் குறியேற்றங்கள், ஒருங்குறி, அனைத்தெழுத்துக் குறியேற்றம்) உள்ளீட்டுச் சிக்கல் (இப்பொழுது இ-கலப்பை, NHM writer, Microsoft இன் PME எழுதி எனப் பல உள்ளீட்டுச் செயலிகள் – inputting softwares - இலவசமாக வந்துவிட்டன. ஆனாலும் இன்னும் தனியார் குறியேற்ற எழுத்துரு/வார்ப்புக்களை (fonts) அரசும் தனியாரும் அளவற்ற காசு கொடுத்து வாங்கிக் கொண்டிருப்பதும், அதைச் சில தனியார் நிறுவனங்கள் நடத்திக் கொண்டிருப்பதும் வடித்தெடுத்த ஏமாற்றுச் செயல் தான். ஒருங்குறிக்கும் அனைத்தெழுத்துக் குறியேற்றத்திற்கும் அரசும் பொதுமக்களும் உடனடியாக மாறவேண்டும். இனியும் ஏமாந்து கொண்டிருக்கக் கூடாது.),

2. சொல்லாளர்ச் சொவ்வறைகள் (எழுத்துப் பிழைகள், சொற்றொடர்ப் பிழைகள், வாக்கியப் பிழைகள், நடைப் பிழைகள் எனப் பல்வேறு பிழைகள் மலிந்து தமிழிற் கதைகள், கவிதைகள், கட்டுரைகள், மடல்கள், பட்டியல்கள், பரத்தீடுகள் (presentations), எனப் பல்வேறு ஆக்கங்கள் வருவதை இப்பொழுதெல்லாம் யாருமே கண்டு கொள்வதில்லை. முன்பு பிழை திருத்திக் கொண்டிருந்த தமிழாசிரியர்கள் எத்தனை நாள் ஏமாந்து கொண்டிருப்பார்கள்? எனவே பட்டிமன்றம், பாட்டரங்கம் பேச்சரங்கம் என்று போய் விட்டார்கள். இப்பொழுது வருத்தத்திற்குரியதாய், நம்மிற்பலரும் தமிழையாவை மதிக்கமாட்டேம் என்கிறோம். திரைப்படங்களிற் கூட அவரைக் கேலிப்பொருளாக்கி விட்டார்கள். யாராவது எதிர்ப்புச் செய்கிறோமா? ஆங்கிலத்தில் யாராவது பிழைமலிந்த நடையைப் பயன்படுத்துகிறார்களோ? இந்து நாளிதழில் தப்பும் தவறுமாய் ஓர் ஆசிரியருக்கு மடல்கள் வருமா? தமிழில் மட்டும் ஏன் இப்படியொரு மெத்தனம்? அண்மையில் ஒரு நல்ல தமிழ்ச் சொல்லாளர்ச் செயலியை பேரா. தெய்வசுந்தரம் மென்தமிழ் என்ற பெயரில் உருவாக்கியிருக்கிறார். அது சொற்திருத்தியாகவும், இலக்கணத் திருத்தியாகவும் வேலை செய்கிறது.)

3. Excel, Powerpoint Presentation போன்ற சொவ்வறைகளைத் தமிழில் உருவாக்குவதிலும் புதுப் புது முயற்சிகள் நடந்து கொண்டுதானிருக்கின்றன. சில இயங்கு கட்டகச் சொவ்வறை (operating system softwares) முயற்சிகளும் நடக்கின்றன.

4. இன்னொரு பக்கம் கணித்தமிழுக்கும், அறிவியற்றமிழுக்கும் தேவையான கலைச்சொற்கள் தொடர்ந்து படைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. (யாரும் இவற்றை ஒழுங்குறப் பயன்படுத்துவது தான் குதிரைக் கொம்பாக இருக்கிறது. ஆழ்ந்து ஓர்ந்தால், நம் குறை சொற்களில் அல்ல. சொற்களைப் பயன்படுத்துவதிலே தான் இருக்கிறது. சட்டென்று ஆங்கிலம் பயன்படுத்தத் தாவிவிடுகிறோம். எப்பொழுது அன்றாட வாழ்க்கையில் வெட்கவுணர்ச்சி தவிர்த்துத் தமிழ்ப் பயன்பாட்டைக் கூட்டுகிறோமோ, எப்பொழுது தமிங்கிலம் பயன்படுத்துவதைக் குறைக்கிறோமோ, அப்பொழுது தான் கலைச்சொற்களுக்கு விடிவுகாலமுண்டு.)

மொத்தத்திற் கணித்தமிழ் வளர்ச்சியில் அளிப்புப் பக்கச் சிக்கல்களையே இதுகாறும் செய்துவந்து கொண்டிருந்தோம். இவையெல்லாம் கிடைத்தால் தமிழர்கள் தானாகத் தமிழுக்கு மாறிவிடுவார்கள் என்பது கானல்நீர் போன்ற எதிர்பார்ப்பாகும். நானும் 15/20 ஆண்டுகளாய்ப் பார்த்துவருகிறேன். அப்படியொன்றும் நடக்கவில்லை. பிறகு இந்த முயற்சிகளில் ஏமாற்றம் அடைந்தே சிந்திக்கத் தொடங்கினேன். நம்முடைய சிக்கல் அளிப்புப் பக்கமில்லை. அது பொருளியலின் தேவைப் பக்கம் (demand side economics) இருக்கிறது – என்று புரிந்தது.

நம் மக்கள், தமிழின் தேவையை உணராது இருக்கிறார்கள். ஆர்வலர்கள் அதை வலியுறுத்த மாட்டேம் என்கிறோம். 7.5 கோடி மக்கள் இருக்கிறோம் என்ற பெயர்தான். 7 கோடிப் படிப்பறிவில்லா மக்களை ஒதுக்கி, அரைக்கோடிப் படித்தவர்கள் ஆங்கிலத்திலேயே எல்லா வேலைகளையும் செய்து கொண்டு, மற்ற 7 கோடிப் பேரையும், ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம். ஆங்கிலம் என்பது அரைக்கோடிப் பேரின் ஆயுதமாக இருக்கிறது. 7 கோடிப்பேரை அறிவியல், நுட்பியல், முன்னேற்றம் பற்றிய அறியாமையில் ஆழ்த்தி நம் வல்லாண்மையை உறுதிசெய்ய வழி வகை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதை மாற்றாது தமிழர் முன்னேற்றம் அடையமுடியாது. நாம் செய்ய வேண்டியவை என்ன? என் அறிவிற்குப் பட்ட வரை, அவற்றை இங்கு குறிப்பிடுகிறேன். கணித்தமிழ் வளர்ச்சி மாநாட்டுத் தீர்மானங்களாய், எதிர்வரும் உத்தமம் மாநாட்டுத் தீர்மானங்களாய் அவை மாறுமானால் எனக்கு மகிழ்ச்சியே.

1. தமிழக அரசு தானே 2009 இல் அறிவித்த அரசாணையை நடைமுறையில் முழுதும் செயற்படுத்தாது இருக்கிறது. இந்த அரசாணை வரும் பொழுது, தமிழகத்தின் அனைத்து அரசியற் கட்சிகளும், இயக்கங்களும், கணியரும், தமிழறிஞரும், ஆர்வலரும் வரவேற்றனர். அதுநாள் வரை அரசுக்குள்ளும், அரசு-பொதுமக்களிடையேயும் இருந்த பரிமாற்றங்கள் தனியார் குறியேற்றத்திலேயே நடந்து வந்தன, இவ்வாணை மூலம் ஒருங்குறி, அனைத்தெழுத்துக் குறியேற்றங்களுக்கு அரசுப்பணிகளும் குமுகச் சேவைகளும் மாறவேண்டும் என்று தமிழக அரசு உறுதியாக நெறிப் படுத்தியது. ஆனால் மூன்றாண்டாக இவ்வாணை செயற்படாதிருக்கிறது. அரசுப் பணிகள் தமிழின் மூலம் கணி மயமாக வேண்டுமென்றால், மின்னி மயமாக வேண்டுமென்றால், இவ்வரசாணை உடனடியாகச் செயற்படுத்தப் படவேண்டும். இன்றும் கூடத் தமிழக அரசுச் செயலகத்துட் செயற்பட்டுக்கொண்டிருக்கும் வெவ்வேறு தனியார் கணிக் குறியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். (ஒருங்குறியிற் தமிழை உள்ளிட இலவயமாகவே இணையத்தில் இ-கலப்பை, NHM writer போன்ற மென்பொருள்கள் கிடைக்கின்றன. தமிழக அரசு தமிழ் உள்ளீட்டுக்காக எந்தக் காசும் செலவழிக்க வேண்டியதில்லை.)

2. தமிழக அரசு பல்வேறு இணையத்தளங்களை தன் சேவையையொட்டி ஏற்படுத்தியிருக்கிறது. (இவையெல்லாம் இற்றைப்படுத்தப்படாமலே இருக்கின்றன. உடனடியாக இவற்றை இற்றைப்படுத்த வேண்டும்.) தமிழக அரசின் பல துறைகளும் பல்வேறு விண்ணப்பங்களை/படிவங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. (தமிழக அரசிற்கென இருக்கும் படிவங்கள் வெவ்வேறு துறைகளின் கீழ் இருப்பவற்றைக் கூட்டினால் ஒரு 500, 1000 தேருமா? அவையெல்லாம் தமிழில் இணையத்தில் அமைந்தாலென்ன?) அவையெல்லாம் ஒருங்குறிவடிவில் இணையத்தில் பொதுமக்கள் அணுகும் வகையில் அமையவேண்டும். தமிழில் எல்லத் துறைகளிலும் மின்னாளுமை என்பது இன்னும் 6 மாதங்களிற் கட்டாயமாகச் செயற்படவேண்டும்.

3. நேரடியாக அரசு அலுவலகத்திற்கு வந்து அலுவலரைத் தொடர்புகொள்ளும் தேவை படிப்படியாகக் குறைக்கப்பட வேண்டும். வெறுமே கணிமயப்படுத்தலில் மட்டுங் கவனஞ் செலுத்தாது, எல்லாவற்றையும் ஆங்கிலத்திற் செயற்படுத்திக் கொண்டிராது, தமிழ்வழி கணிமயப்படுத்தவேண்டும்.

4. தமிழக அரசிற்கென உள்ளுறுத்த நுட்பியற் கோட்பாடு (IT policy) அறிவிக்கப்படவேண்டும். அடுத்த 10, 20 ஆண்டுகளில் தமிழை ஆட்சிமொழியாக்குவதிலும், தமிழ்வழிக் கணிமயப்படுத்துவதிலும் அரசு என்ன செய்யப்போகிறது, மின்னாளுமை என்பதை எப்படிச் செயற்படுத்தப் போகிறது என்று ஒரு கோட்பாட்டின் வழி அரசு சொல்லவேண்டாமா?

5. தமிழக வருவாய்த்துறையின் அடியில் வரும் பத்திரப் பதிவுத் துறை கணிமயமாக்கப் பட்டுவருகிறது. அதில் எல்லாப் படிவங்களும் தமிழில் ஏற்படுத்தப்பட்டு, பெறுதிச் சீட்டுக்கள் தமிழிலேயே கொடுக்கப்படவேண்டும்.

6. தமிழக அரசு நடத்தும் பல்வேறு கல்வி வாரியங்கள், பல்கலைக்கழகங்களின் அலுவல்கள் தமிழிலேயே நடந்து தமிழ்வழி மின்கல்வி பெருகவேண்டும்.

7. முதுகலை, முது அறிவியல், இளம் பொறியியல், மருத்துவம், இளமுனைவர், முனைவர் பட்ட நேர்முகத் தேர்வுகளுக்கான புறத்திட்ட அறிக்கைகள் (project reports), ஆய்வேடுகள் (theses) 5 பக்கங்களுக்காவது தமிழ்ச்சுருக்கம் கொண்டிருக்கவேண்டும். நேர்முகத் தேர்வில் 15 நுணுத்தங்களாவது (minutes) தமிழில் கேள்விகள் கேட்டு, விடைவாங்கி, அதற்கப்புறமே பட்டமளிப்புத் தேர்ச்சி கொடுக்கவேண்டும். தமிழே தெரியாது தமிழ்நாட்டிற் பட்டம் பெறுவது சரியல்ல.

8. இப்பொழுது தமிழ்நாட்டில் வணிகப் பெயர்ப் பலகைகள் தமிழ்ப் படுத்தப்பட்டு வருகின்றன. இது ஒரு தொடக்கப்பணியே. தமிழ்நாட்டு வணிகம் தமிழிலேயே நடைபெறவேண்டும். எந்தக் கடையில், நிறுவனத்தில் பெறுதிச் சீட்டு வாங்கினாலும் அது ஆங்கிலத்திலேயே இருக்கிறது. தனியார் பேருந்துகளில் பயணச்சீட்டு கூட ஆங்கிலத்தில் இருக்கிறது. தமிழ் மட்டும் தெரிந்த 95% மக்கள், வெறுமே அதிகாரிகள் முகம் பார்த்து, “என்ன சொல்வாரோ?” என்று ஏமாந்து நிற்பதாய் நிலைமையிருக்கிறது அவரவர் சிக்கலில் அவர்களே முறையிடும் வகையில் குமுக நடைமுறைகள் இருக்கவேண்டும். தமிழில் பெறுதிச் சீட்டு அளிப்பதை ஊக்குவிக்கும் வகையில், மாநில அரசு விற்பனைவரியில் மாற்றமிருக்க வேண்டும். ஒரு நுகர்வோர் தமிழில் விற்பனைப் பெறுதிச் சீட்டு கேட்டால், குறிப்பிட்ட விழுக்காடும், ஆங்கிலத்திற் கேட்டால் அதற்கு மேல் 1% அதிக விற்பனை வரியும் அரசு விதிக்கவேண்டும். இதன் மூலம் எல்லா வணிக நிறுவனங்களிலும் தமிழ் மெய்யாகப் புழங்கும் மொழியாக மாறும். தமிழ்ச் சொவ்வறைகளுக்கு ஒரு தேவையெழும். இப்பொழுது தமிழ்ச் சொவ்வறைகளுக்குச் சந்தையேயில்லை. சொவ்வறைகளுக்குச் சந்தையில்லாது தமிழ் கணி மயமாகாது. Office softwares தமிழில் வரவேண்டுமானால் இந்தத் தூண்டுதல் மிகவும் தேவையான ஒன்றாகும்.

9. தமிழகத்தில் விற்கும் எந்த மின்னிக் கருவிகள், மற்ற இயந்திரங்கள் என எல்லாவற்றிற்கும் உடன் அளிக்கப்படும் கையேடுகள் தமிழிலேயே இருக்க வேண்டும். அப்படி இருந்தால் 1% விற்பனைவரிச் சலுகை தரப்படும் என்று அறிவிக்கவேண்டும். தமிழில் இல்லாது ஆங்கிலம் போன்று வேறுமொழிகளில் மட்டுமேயிருந்தால் சலுகை கிடைக்காது என்று ஆகவேண்டும்.

10. தமிழை ஆட்சிமொழியாக்கி, தமிங்கிலப் பயன்பாட்டைக் குறைக்கும் நாளிதழ்கள், தாளிகைகள், ஊடகங்களுக்கே தமிழக அரசு தன் அரசு விளம்பரங்களைக் கொடுக்கவேண்டும்.

11. தமிழகத்தில் இருக்கும் நடுவண் அரசுத் துறைகள், நிறுவனங்களில் நடக்கும் பரிமாற்றங்கள் தமிழிலேயே நடைபெற ஊக்குவிக்க வேண்டும் அரசு வங்கிகளிலும் இது நடைபெறவேண்டும். தமிழ்நாட்டில் தமிழுக்கு மதிப்பில்லை என்றால் அது வெட்கப்படவேண்டியதில்லையா?

12. இன்னும் ஓராண்டில் பேச்சிலிருந்து எழுத்து (speech to text), எழுத்திலிருந்து பேச்சு (text to speech), இயந்திர மொழிபெயர்ப்பு (machine translation), தமிழ் அறிதியியல் (tamil informatics) போன்ற துறைகளிற் தமிழ்ச் சொவ்வறைகள் வரும் படி திட்ட ஒதுக்கீடு செய்யவேண்டும். அந்த முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டும்.

13. நாடாளுமன்றத்திற் கொண்டுவரும் சட்டத் திருத்தின் மூலம், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் ஆட்சிமொழி அதிகாரத்தைப் பெறவேண்டும்.

14. தமிழ் வழக்குமன்ற மொழியாக மாறவேண்டும்.

இந்தக் கருத்துக்களை என் பார்வையிற் சொன்னேன். இவ்வமர்வில் இன்னும் பலர் தங்கள் கருத்தை வழங்க இருக்கிறார்கள். அவற்றையும் செவிமடுப்போம். நன்றி.

Thursday, November 01, 2012

சொவ்வறை - 2

வறை பற்றி ஓரளவு அறிந்த நாம், இனி soft-ற்கு இணையான, (ஒலிக்குறிப்பில் எழுந்த) சொவ்வறையின் முதலசை பற்றிப் பார்ப்போம். அதற்கு முன்னால், நெடுங்காலமாய் நான் சொல்லிவரும் அடிப்படைப் புரிதலை இங்கு நினைவு கொள்வோம்.
------------------------------------------

"சிந்தனை வளர - பாடநூல் அமைப்பு " என்ற நூலில் திரு T.பக்கிரிசாமி (செல்விப் பதிப்பகம், காரைக்குடி) ஓர் ஆழ்கருத்தைச் சொல்லியிருந்தார்.
"ஆதி மனிதனிடம் பருப்பொருள், இடப்பொருட் சொற்களே இருந்தன. கருத்துச் சொற்கள், அறிவாலுணரும் சொற்கள், கலைச் சொற்கள், பண்புச் சொற்கள் ஆதியிலில்லை. அமானுஷ்யச் சொற்களும் (supernatural) இல்லை." என்பார். இத்தகைய இயல்பான பருப்பொருள், இடப்பொருட் சொற்களை அவர் ஐம்புலன் சொற்கள் என்பார். அதாவது நல்லது, உயர்ந்தது, ஞானம் போன்ற கருத்துமுதற் சொற்களை மனிதன் ஆதிகாலத்தில் உருவாக்கி இருக்க முடியாது, பின்னால் தான் அவை உருவாகின என்பார். இன்றைக்கு வழங்கும் கருத்தியற் சொற்களின் (idealogical words) மூலம் ஐம்புலன் சொற்களாகவே இருந்திருக்க வேண்டுமென்பார்.

இதற்கு அவர் தரும் எடுத்துக்காட்டு: 'மதம்' என்ற சொல்லாகும். இச்சொல்லுக்கு religion என்றே இப்போது பொருள் கொள்கிறோம். ஆதியில் 'மதி -சந்திரன்' எனும் பருப்பொருளிலிருந்து இச்சொல் வந்திருக்க வேண்டும் என்ற சொல்வரலாறு காட்டிப் புலப்படுத்துவார். இதே போல், பருப்பொருளறிவுக் கருத்திலிருந்து மெய்ப்பொருளறிவு சுட்டும் ஞானம் என்ற சொல்லெழுந்தது. அவர் ஆய்வுமுறை சொற்பிறப்பியலிற் கைக்கொள்ள வேண்டிய ஒன்று. இது பாவாணர் சொல்லாத, அதேபொழுத் பாவாணரிடம் இருந்து வேறுபடும் முறை. 

(நல்லென்ற கருத்துமுதற் சொல்லும் நெல்லெனும் பருப்பொருளிற் தோன்றியதே. தமிழகத்திற் பல்லவர் (பின்னாற் பேரரசுச் சோழ,பாண்டியர்) பார்ப்பனர்க்குக் கொடுத்த ஊர்கள் சதுர்வேத மங்கலங்களென்றும், பார்ப்பனர் அல்லாதார்க்குக் கொடுத்தவை நெல்லூர்>நல்லூர் என்றும் ஆயின. சென்னையை அடுத்த சோழங்க நெல்லூர் இப்படித் தான் சோழிங்க நல்லூர் என்றாயிற்று.)

ஐம்புலன் சொற்களிலிருந்து கருத்துமுதற் சொற்கள் எழுந்த வளர்ச்சியோடு, இன்னொரு கருத்தையும் இங்கே சொல்லவேண்டும். எந்த மொழியிலும் கருத்து வளர்ச்சி என்பது, பொதுமை (generic)-யிற் தொடங்கி விதுமைக்கு (specific) வராது. விதுமையிலிருந்தே பொதுமைக்கு வரும். ஓர் இயல்மொழியில் அப்படித் தான் சொற்சிந்தனை வளரும். மார்க்சிய முரணியக்கச் சிந்தனையும் (Marxian Dialectical thinking) இதையே சொல்கிறது. இதுபற்றி முன்னரே என்னுடைய பல கட்டுரைகளிற் சொல்லி வந்திருக்கிறேன்.

எ.கா: தமிழர் நாகரிகத்தில் நெய்ப் பொருளை முதற் கண்டது பால், கொழுப்பு ஆகியவற்றில் இருந்தே. பின் அறிவு கூடி, நுட்பம் துலங்கி, எள்வித்தில் நெய் எடுத்தவன், எள்நெய் (=எண்ணெய்) என்றே அதையும் சொன்னான். பின் நாளில் கடலை, தேங்காய், ஏன் மண்ணிலிருந்தும் கிட்டியவைகளையும் எண்ணெய்ப் பொதுமை கொண்டு, கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், மண் எண்ணெய் எனும் விதுமைச் சொற்களால் அழைக்கத் தொடங்கினான்.

ஒரு மொழியிற் கருத்து/சொல் வளர்ச்சி, இப்படி நீள்சுருளாய் (helical spring), மறுகி மறுகித் தோன்றி, விதுமையும் பொதுமையுமாய் எவ்வளித்துப் பல சொற்களை உருவாக்கும். (எழுவுதல் எவ்வுதலாய்த் தொகுந்தது. இதுவே எகிறுதல் என்றும் பொருள் கொள்ளும், evolve = எவ்வி அளிப்பது. எல்லாவற்றையும் பொதுப் படையாய் ’வளர்ச்சியாக்கி’ எவ்வுதலை மறக்கவேண்டாம்.) 'நெய்'யெனுஞ் சொல் ஆவின் நெய்யாய் விதுமையிற் தோன்றியிருக்க வேண்டும். (’நெய்’ வரலாற்றை நான் இன்னும் அறிந்தேனில்லை.) பின் 'நெய்', பொதுமைக் குறியீடாகி, 'எள்நெய்' எனும் விதுமைக் குறியீடாகி, முடிவில் 'எண்ணெய்' எனும் பொதுமைக் குறியீடாக மீண்டும் வளர்ந்திருக்கிறது.
------------------------------------------

மேலே கொடுத்த புரிதலோடு சொவ்வறையின் முதலசைக்கு வருவோம். ”ஐயையோ, இராம.கி சொல்லி விட்டான்” என்று கைகொட்டிச் சிரித்துச் சொவ்வெனும் ஒலிக்குறிப்பைக் கேலி செய்வது எளிது. அதன் அடிப்படை புரிந்து கொள்வது கடினம். 

இது சுவையோடு ஒட்டியது. இப்பொதுமைக் கருத்துமுதலுக்கு அடிப்படை, முன்சொன்னது போல் ஐம்புலன் சொல்லே. இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு ஆகிய ஆறு விதப்புக்களை நாவால் உணர்வதாலேயே ”சுவை” எனும் சொல் எழுந்திருக்கும். வாசம், மணம் என்பது முகரும் வழி. (மெய்ப்பாட்டுச் சுவைகளான நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை போன்ற கருத்துமுதற் சொற்கள் நாகரிகம் வளர்ந்த நிலையில் ஏற்பட்டிருக்கலாம்.)

சுவையின் மாற்று வடிவமாய்ச் ”சுவடு” என்ற சொல் தமிழிலுண்டு. [“அடிமையிற் சுவடறிந்த” (ஈடு.2.6:5). சுவடன் (=சுவைஞன்) என்ற வளர்ச்சியும் அதே ஈட்டில் காட்டப் பெறும். (”சுவடர் பூச்சூடும் போது புழுகிலே தோய்த்துச் சூடுமாப் போலே” (திவ்.திருப்ப. 9 வியா.) ”சுவண்டை” இன்சுவையைக் குறிக்கும். 

இத்தனை சொற்களுக்கும், சுவைத்தலுக்கும் முதலாய் வேறு வினைச்சொல் அகரமுதலியிற் காட்டப்படவில்லை. இவை அப்பூதியாகவே (abstract) காட்சி அளிக்கின்றன. இவை கடன் சொற்களா எனில் இல்லையென்றே சொல்ல வேண்டியுள்ளது. சுவைத்தல் என்பது தமிழில் மட்டுமல்ல. மற்ற தமிழிய மொழிகளிலும் புழங்குகிறது சவை> சுவை>சுவைத்தல்; [த. சுவைத்தல், ம. சுவய்க்குக, க. சவி, தெ: சவிகொனு, து.சம்பி, சவி, கோத.சய்வ், நா.சவத், கொலா.சவ்வி (இனிப்பு). 

ஐகாரமும், டு - வும் சொல்லாக்க ஈறுகள். ஆழ்ந்து ஓர்ந்துபார்த்தால், "சொவச்சொவ / சவச்சவ" என்ற ஒலிக்குறிப்பே இவற்றிற்கு வேராய்த் தோன்றுகிறது.

taste-ற்கு வேர்தெரியாதென்று பல ஆங்கில அகராதிகள் பதிந்தாலும், நாக்கால் தடவல், மெல்லல், உணரல் போன்றவற்றையே முன்வினை என்பார். to become soft என்பதை ஆழ்ந்து ஓர்ந்தால், அது ஒரு தனிவினையல்ல, கூட்டுவினை என்பது புரியும். சில பொருட்கள் soft ஆனவை. சில hard ஆனவை. hard-ற்கு இணையாய் கடினம் என்கிறோம். (கடித்தல் வினையை எண்ணுங்கள்.) ஆனால் soft-ற்கு மெல் என்ற சொல் பகரியாகவே இருக்கிறது. அது ஒரு near description; not the real thing. அதனால் தான் விதப்பான வேறு சொல் இருந்திருக்க வேண்டும் என்கிறோம்.

கடிபட்டு மெல்லாகிச் சில்லாகி, அழுத்தம் நிலவும் வரை கூனிக் குறுகி, மெலிந்து, வளைந்து, நெளிந்து, குழைந்து நொய்யாகிப் போனதை, பரப்பு வழவழ என்று ஆனதை, இத்தனையும் சேர்ந்தாற்போற் அடிப்படையிற் புதிய பண்பைக் குறிக்கும் வகையில் சவ்வுதல் > சவைத்தல் > சுவைத்தல் என்ற வினைச்சொல்லும் சுவை என்ற பெயர்ச்சொல்லும் கிளைத்தன போலும். வாயில் மெல்லும் போது (சவைக்கும் போது) நாவின் வினையால் ஏற்படும் ஒலிக் குறிப்பே இவ்வினைச்சொல்லை உருவாக்குகிறது.

soft என்பது வாயிற் போட்டு மெல்லும் போது கடினத் திண்மம் (solid) சவைத்துப் போவதைக் குறிக்கும். ”என்ன இது சவச்சவ என்றுள்ளது?” என்று சொல்கிறோம் அல்லவா? சிலர் வழக்கில் இது சுவையிலா நிலையைக் குறிக்கும். (மொள்ளல் வினையின் வழி மொழியும் எழுந்து, ஒலியிலா மோனமும் எழுந்தது போல இதைக் கொள்ளுங்கள். மோனம், முனங்குதல் என்ற இன்னொரு வினைச்சொல்லையும் இது எழுப்பும்.) 

மெல்லுதல் வினையாற் சவைத்த நிலை (softy state) ஏற்படுகிறது. மெல்லுதல் என்பது சிறிய grinding - process - செயல்முறை; சவை என்பது தட நிலை - state. I prefer to use a state than a process here. மெல் என்பது சில இடங்களிற் சவைக்குப் பகரியாய் நிற்கலாமே ஒழிய முற்றிலும் அல்ல. (my question is simple. What is the etymology of suvai?) சொவ்விய / சவ்விய நிலை என்பது இயற்கையிலோ, மாந்தர் செய்கையாலோ ஏற்படலாம். மெல்லுதல், மாந்தர் செய்கை மட்டுமே. இந்த நுணுக்கத்தைச் சொல்ல ஒலிக்குறிப்பைத் துணைக்கொண்டால் குடிமுழுகியா போகும்? :-)

சவ்விய நிலையின் தொழிற்பெயராய், மெல் பொருளில், மெல்லிய மூடு தோலைக் குறிக்கும் வகையில் சவ்வு (membrane) எழும். sago வின் சோற்றை, நொய்யான மாவுப் பொருளை, காய்ச்சிச் செய்யப்படும் பண்டம் சவ்வரிசி எனப்படும். சவ்வாயிருப்பது பிசின் (to be viscid) போலாவதைக் குறிக்கும். சவுக்குச் சவுக்கெனல் எனும் அடுக்குத் தொடர் வளைந்து கொடுக்கும் குறிப்பைக் காட்டும். சவ்வை ஒட்டிய இத்தனை சொற்களும் கடன் சொற்களா? வியப்பாக இல்லையா? இவற்றின் வேர்கள் தாம் என்ன?

சவத்தலுக்குத் தொடர்பான சப்புதலும் சப் எனும் ஒலிக்குறிப்பில் எழுந்தது தான். இதுவும் தமிழிய மொழிகளில் பல்வேறு விதமாய்ப் புழங்குகிறது (ம.சப்புக; க.சப்பரிக, சப்படிக, சப்பளிக, தப்படிக; தெ.சப்பரிஞ்சு, சப்பு; து. சப்பரிபுனி; கோத.சப்; துட.செப்; குட.சப்பெ, சபெ; நா.சவ்ல்; பர்.சவ்ல்,சல்; மா.சொப்பு; பட.சப்பு; சப்புதல் = அதுங்குதல் to be bent, pressed in, to become flat. சுவையில்லாது உள்ளதையும் சப்பெனக் குறிப்பதுண்டு.

இன்னொரு வளர்ச்சியாய், ”வாயிற் போட்டு மெல்லுதல்” வழி சவள்தல், சவட்டுதல் என்று சொற்கள் ஏற்பட்டு மெல்லுதல், மிதித்தல் போன்றவற்றைக் குறிக்கும். மிதிவண்டியைத் தென்பாண்டியிற் சவட்டு வண்டி எனச் சொல்லி வந்தார். உறுதியில்லாது வளைந்து கொடுப்பானைச் சவடன் என்பார். (”அஞ்சுபூத மடைசிய சவடனை” என்பது திருப்புகழ் 5.57) வீண்பகட்டுக் காட்டுவதைச் சவடால் என்பார்கள். (சவடால் வேற்றுமொழிச் சொல் என்பாரும் உண்டு.) நீரைச் சவட்டும் படகுத் துடுப்பு சவள் எனப்படும். சவளுதல் என்பது வளைதல் என்றும் பொருள் கொள்ளும். சவள் தடி = துவளும் தடி, குந்தம்; இது சவளமென்றுஞ் சொல்லப் பெறும். சவளக்காரர் ஈட்டிபிடிக்கும் போர்வீரர். ஆங்கிலச் சொல்லான javelin என்பதை அடுத்தெழுதி விட்டால் சட்டாம் பிள்ளைகள் ”ஆங்கில ஒலிப்புக் காட்டுகிறான்” என்று சாடிவிடுவர். வங்காள விரிகுடாவில் இவற்றைக் கொட்டுவதுதான் சரியான முடிவு போலும்.

வளைந்து நெளியும் புளியம்பழம் ”சவளம்” எனப்பெறும். வளைந்த காலுள்ளவன் ”சவளன்” எனப் படுவான். வளைந்து நெளியும் துணிச்சரக்கு ”சவளி” எனப்படும். ஊரெல்லாம் சவளிக்கடைகள் இழைகின்றனவே? சவண்டிய காரணத்தால் அது சவளி. 

சில தமிழர் வடமொழிப் பலுக்கைக் கொணர்ந்து ஜவளி என்றாக்கி உள்ளதையும் தொலைப்பார். வடமொழியில் இச்சொல் இல்லை. ”சவளைக்காரர்” என்பது நெல்லை மாவட்டத்தில் நெசவுத்தொழிலரைக் குறிக்கும். மெலிதற் பொருளில் சவு-த்தல் என்ற சொல் யாழ்ப்பாணம் அகராதியிற் குறிக்கப் பெற்றுள்ளது. சவட்டி (அடிக்கப்) பயன்படும் வளைகருவி சவுக்காகும்.

நெளிவுற்ற இலை சவண்டிலை எனப்படும். சவள்> சவண்> சவணம் என்பது மாழைக் கம்பி இழுக்கும் கம்மியக்கருவியைக் குறிக்கும். ஆண்டு வளர்ச்சி பெற்றும் உடலுறுதி பெறாது, துவளும் பிள்ளையைச் சவலைப் பிள்ளை என்பர். 

சவலைக்குள் soft என்ற பொருள் இருப்பதை இப்போது எளிதாய் உணரலாம். சவலை என்ற சொல் திருவாசகத்திலும் பயில்கிறது. tender என்ற பொருளும் அதற்குண்டு. தவசமணி இல்லாக் கதிர், உள்ளீடில்லாக் கதிர் சவலைக்கதிர் எனப்பெறும். தனிச்சொல்லின்றி இரு குறள்வெண்பாக்களை இணைத்துச் சொல்வது சவலை வெண்பா எனப்படும். தனிச்சொல் தான் நேரிசை வெண்பாவிற்கு உறுதி தந்து கட்டுகிறது. இல்லையெனில் அது சவலை தான்.

soft-இன் வரையறை புரியத் திண்ம மாகனவியலுக்குப் (solid mechanics) போக வேண்டும். பொதிகளைத் திண்மம், நீர்மம், வளிமம் என 3 வாகைகளாய்ப் (phases) பிரிப்பர். திண்மத்திற்கு வடிவுண்டு. நீர்மம், வளிமங்களுக்கு வடிவு இல்லை; அவை கொள்கல வடிவையே கொள்ளும். ஒரு கொள்கலத்தில் நீர்மம் பகுதியாய் நிறைந்தால், வெளிப்பரப்பு (external surface) காட்டும். வளிமமோ கொள்கலம் முழுதும் நிறைக்கும். நீர்ம, வளிமங்களைச் சேர்ந்தாற்போல் தொகுத்துப் பூதியலில் (physics) விளவம் (fluid) என்பார் (1960களிற் பாய்மம் என்று குறித்தோம். இப்போது சிக்கல் காணுவதால் விளவம் என்கிறோம். வேறொரு கட்டுரையில் இதை விளக்குவேன்.)

பொதுவாகப் பொதிகளின் (bodies) நகர்ச்சியும் (motion), வளைப்புகளும் (deflections), மொத்தை விசைகளாலும் (bulk forces - காட்டு: புவியீர்ப்பு விசை, அழுத்தம்), பரப்பு விசைகளாலும் (surface forces - காட்டு: கத்திரி விசை - shear force) ஏற்படுகின்றன. விளவங்கள் தொடர் விளவுகளையும் (continous flows), திண்மங்கள் வளைப்புக்களையும் ஏற்படுத்துகின்றன. பொதுவாக விசைகளையோ (forces), அவற்றால் ஏற்படும் துறுத்தங்களையோ (stresses), நிறுத்தினால் தொடர் விளவுகள் நின்றுபோகும். மாறாய்த் திண்மங்களை விசைகளுக்கு உட்படுத்தினால் தெறித்து உடையும் வரை வெறும் வளைப்புகளே ஏற்படுகின்றன; விசைகள் நின்றவுடன் வளைப்புகளும் கலைகின்றன.

அழுத்துதல் என்பது to press என்றே புரிந்துகொள்ளப்படுகிறது. அதைப் பொதுமைப்படுத்தி, 'துகள்களை நெருங்கவைத்தல்' என்னும் ஆழ் பொருளிற் துறுத்தலெனும் வினை பொறியியலில் ஆளப்படும். இது ஆங்கிலத்தில் to stress என்ற வினைக்கு ஈடானது. துறுத்தலுக்கு மாறாய் தகைத்தல் என்றும் சிலர் ஆளுவர். [தமிழ்ப் பல்கலைக்கழக அருங்கலச் சொல் அகரமுதலியிலும் 'தகைத்தல்' இருக்கிறது. இருந்தாலும், to tighten என்பதற்கே தகைத்தல் சரியாகும் என்பதாலும், ஐகாரம் பயிலும் தகைப்பைக் காட்டிலும், உகரம் பயிலும் துறுத்து என்ற சொல் பலுக்க எளிது என்பதாலும் நான் துறுத்தலைப் பரிந்துரைக்கிறேன். துறுத்திற்கு மாறாய் தகைப்பு என்பது நிலைத்தாலும், எனக்கு உகப்பே.]

ஒவ்வொருவகை விசை/துறுத்திற்கும் ஒவ்வொரு வகை வளைப்பு ஏற்படும். அவற்றைத் துறுங்குகள் (strains) என்பார்கள். அழுத்தப்பட்ட பொதி அழுங்குவதைப் போலத் துறுத்தப்பட்டது துறுங்கும் (to get strained). 3 விதத் துறுத்தங்களை, மாகனவியல்-mechanics குறிக்கும். அவை திணிசுத் துறுத்தம் - tensile stress, அமுக்கத் துறுத்தம் - compressive stress, கத்திரித் துறுத்தம் = shear stress என்றாகும். அதே போல, நீளவாட்டுத் துறுங்கு (longitudinal strain), குறுக்குச் செகுத்தத் துறுங்கு (cross sectional strain), பருமத் துறுங்கு (bulk strain), கத்திரித் துறுங்கு (shear strain) என்று வெவ்வேறு துறுங்குகளுண்டு.

to stretch என்பதைக் குறிக்கத் துயர்தல்/துயக்குதல் என்ற சொல் பயின்று, நீளுதல்/நீட்டுதல் பொருளைக் கொடுக்கும். (ஏதோவொன்று stretch ஆகி நீண்டு போவதைத் ”துயர்ந்து கொண்டே வருகிறது” என்று சிவகங்கைப் பக்கம் சொல்லுவார்கள். தொடர்ந்து வரும் துன்பம் துயரம் என்றே சொல்லப் பெறும்.) ஒரு நீளத்தின் துயக்கத் திரிவை (change in the stetch) பொதியின் நீளத்தால் வகுத்துக் கிடைக்கும் எண், நீளவாட்டுத் துறுங்கு எனப் படும். இது போல் பருமத் துறுங்கு = பருமத் திரிவு / பொதியின் பருமன் என்றாகும். கத்தரித் துறுங்கு = குறுக்குச் செகுத்தத் திரிவு (change in cross section) / பொதியின் குறுக்குச் செகுத்தம் என்று வரையறை கொள்ளும்.

ஒரு திண்மத்தின் பருமத் துறுங்கு, பொதுவாக அழுத்த வேறுபாட்டால் எழுவது. காட்டாக, ஓர் இலவம்பஞ்சுத் தலையணையின் தடிமன் (thickness) 5 அணுங்குழை (inches) என்று வையுங்கள். மேற்பரப்பு 10X10 சதுர அணுங்குழை என்றும் கொள்ளுங்கள். தலையணைப் பருமன் 500 கன அணுங்குழையாகும். அதன்மேல் இன்னொரு பொதியை எடையாக வைக்கிறோம். எடைக்குத் தகுந்தாற் போல் இலவம்பஞ்சின் தடிமன் குறுங்கி, தலையணையின் பருமன் குறைகிறது. [எடைக்குப் பகரியாய் நேரடியழுத்தம் கொடுத்தாலும் பருமக்குறைவை ஏற்படுத்தலாம்.]

பொதுவாக, எந்தத் திண்மப் பொதியும் அழுத்தமிருக்கும் வரை பருமன் குறையும்; அழுத்தம் நிறுத்திவிட்டாற் பழைய பருமனுக்கு வந்துவிடும். [காட்டாக, A பொதி B - யை அழுத்துகிறது; இதை B-யின் நோக்கில், தன்வினையாய், எப்படிச் சொல்லலாம்? A - ஆல் B அழுங்குகிறது. அழுங்குதல் தன் வினை; அழுத்துதல் பிறவினை. ஒரு பொதி அழுங்க, அதன்மேல் அழுத்தம் கூடிக் கொண்டேயிருக்கிறது. அழுங்குவதால் அது அழுக்கு; அழுத்துவதால் அழுத்து. (மாசைக் குறிக்கும் அழுக்குச் சொல் வேறுவகையிற் பிறந்தது.) அழுக்கின் நீட்சியாய் அழுக்கு ஆறுதல் என்ற சொல் to get strained என்ற பொருளிற் பிறக்கும்.. அழுக்காறு என்று திருக்குறளில் வருகிறதே, நினைவிற்கு வருகிறதா? அது strained state - யைத்தான் குறிக்கிறது. தொடர்ச்சியாய் அழுங்கிக் கிடக்கும் நிலை. அழுங்குதல் வினை தற்பொழுது அரிதாகவே பயன்படுகிறது. அதற்குப் பகரியாய் அமுங்குதல் என்று பயன்படுத்துகிறோம். மாசு என்ற பொருட்குழப்பமும் இல்லாது போகிறது.]

”அழுத்தத்திற்குத் தக்க, ஒரு திண்மம் எவ்வளவு அமுங்கும்/அழுங்கும்?” என்ற வினவிற்கு விடையாய் soft எனும் குறிப்பிருக்கிறது. காட்டாக, 500 கன அணுங்குழைப் பருமன் கொண்ட இருவேறு திண்மங்களில், முதற்பொதி 200 கன அணுங்குழையும், இரண்டாம் பொதி 400 கன அணுங்குழையும் குறைவதாய்க் கொள்ளுங்கள். மாகனவியற் புரிதலின்படி, முதற் பொதி இரண்டாம் பொதியைக் காட்டிலும் soft ஆனது என்பார்கள். (இலவம் பஞ்சுத் தலையணை, யூரிதேன் நுரைத் - urethane foam - தலையணையைக் காட்டிலும் soft ஆனது. இரும்பைக் காட்டிலும் ஈயம் soft ஆனது. வயிரத்தைக் காட்டிலும் இரும்பு soft ஆனது. பொத்திகை - plastic - யைக் காட்டிலும், நெகிழி - elastic, soft ஆனது.) softness என்ற சொல் திண்மங்களுக்கே பொருந்தும். யாரும் soft gas, soft liquid என்று சொல்வதில்லை. soft solid என்றால் பொருளுண்டு. [soft water, hard water என்பவை நீரிற் கரைந்திருக்கும் உப்புக்களைப் பொறுத்துச் சொல்லப் படுகின்றன. அவை விதப்பான பயன்பாடுகளாகும்].

மாகனவியலின் படி, soft என்பது பருமன் குறுங்கலைக் குறிக்கிறது என்று பார்த்தோம். குறுங்கல்/குறைதற் பொருளில் அவ்வுதல்> அவ்வியம் என்ற சொல்லைப் பாவலரேறு பெருஞ்சித்திரனார், 'திருக்குறள் மெய்ப்பொருளுரையிற்' சொல்லுவார். சங்க இலக்கியத்தில் ஆவணப் படாத 'அவ்வியம்' என்ற சொல் திருக்குறள் 167, 169 பாக்களில் தான் முதலில் ஆவணப்பட்டுள்ளது. பின்னால் "ஔவியம் பேசேல்" என்ற திரிவில் ஆத்திச் சூடியிலும், "ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு" என்ற திரிவில் கொன்றை வேந்தனிலும் சொல்லப் பட்டுள்ளது.

அவ்வியம் என்பதற்குப் பொறாமை (= பொறுக்காத தன்மை) என்றே பலரும் பொருட்பாடு காட்டுவர். (unbearable; காட்டாகப் பரிமேலழகர், பாவாணர்). ஆனால் அழுக்காறு, அழுக்காறாமை, அவ்வியம் என மூன்றிற்கும் ஒரே பொருள் சொல்லுவது சரியல்லவே? மற்ற உரைகாரருக்கு மாறாய்ப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் மட்டுமே பொருள் சொல்லுவார். இந்தப் புரிதலோடு, 167 ஆம் குறளைப் பார்த்தால்,

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டிவிடும்

என்பதன் பொருள் புரியும். "மனம் குறுகி அழுக்காறு உள்ளவனை, தன் மூத்தாளுக்குக் காட்டிவிட்டு திருமகள் விலகி விடுவாள்" என்ற பொருள் வரும். திருமகள் / மூத்தாள் என்ற தொன்மத்தை வள்ளுவர் ஏன் சொன்னார் என்ற கருத்தை நான் விளக்குவதைக் காட்டிலும் பெருஞ்சித்திரனார் விளக்குவதே சரியாய் அமையும். எனவே அதைத் தவிர்க்கிறேன். அவர் நூலில் பார்த்துக் கொள்ளுங்கள். அடுத்து 169 ஆம் குறளில் அவ்விய என்ற சொல்லாட்சி வரும்.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.

இதற்கும் பெருஞ்சித்திரனார் “குறுகிய நெஞ்சத்தவனின் ஆக்கமும் செவ்வையானின் கேடும் பலராலும் நினைக்கப் படும்” என்றே பொருள் சொல்லுவார். அவ்வுதலின் ஆதிப் பொருளும் அவ் எனும் ஒலிக் குறிப்புத் தான். 'வடையை அவ்வெனக் கடித்தான்'. அவ்வெனப் பல்லாற் கடிக்கும் குறிப்பு, மீதி வடை குறைந்திருப்பதையும் உணர்த்துமல்லவா? நாளாவட்டத்தில் இந்த ஒலிக் குறிப்பின் பொருட்பாடுகள் பலவாகின. அவற்றுள் முகன்மையானது குறுகுதல், குறுங்குதல், குறைதல், சுருங்குதல், தட்டையாதல், கெடுதல், பள்ளமாதல் போன்றவையாகும்.

அவ்வுதலின் இன்னொரு வெளிப்பாடு அம்முதலாகும். இது அம்மியெனும் அடுப்படிக் கருவியை நமக்குச் சுட்டிக் காட்டும். அம்முதலின் நீட்சி அமுக்குதல் = to press என்றாகும். இதே லத் தொம்முதல்> தும்முதல்> துமுக்குதல்> துவுக்குதல்> துவைத்தல் என்பதும் அடித்து அமுக்குதலைக் குறிக்கும். தேங்காய்த் துவையல் (=துகையல்) என்கிறோமே, அதுவும் ஒரு அவையல் தான். அவல் என்பதும் அவையலில் உருவான பண்டம் தான். அவற் பொரி நினைவிற்கு வருகிறதா? முதலிற் பருமனாய் இருந்தது இப்பொழுது தட்டையாய், சின்னதாய் அவலாய் ஆயிற்று. அவல் பள்ளத்தையும் குறிக்கும். அவ்வையாரின் 187 ஆம் புறநானூற்றுப் பாட்டு “நாடா கொன்றோ காடா கொன்றோ, அவலா கொன்றோ, மிசையா கொன்றோ?.....” நினைவிற்கு வருகிறதா? அவம் என்ற சொல்லும் பள்ளத்தையே குறிக்கும். பல்வேறு அவச் சொற்களை தப்பான புரிதலில், தமிழ் அகரமுதலிகள் வடசொல் என்றே காட்டுகின்றன. ”வடசொல், வடசொல்” என நாம் தொலைத்தவை மிகப்பல.

அவ்வை என்ற சொல்லுக்கு தாய்ப் பொருளையே பலருஞ் சொல்லுவர். மாறாக அவ்வுதலை ஒட்டி உயரம் குறைந்தவள் என்றும் பொருள் சொல்ல முடியும். அவ்வன் = குள்ளன். அவ்வை = குள்ளச்சி. பொதுவாக நாட்டுப் புறங்களில் பெயர் தெரியாதவரை, அவர் உயரம், நிறம், தோற்றம், அல்லது தொழிலை வைத்தே அடையாளம் சொல்வர். நெட்டையன், குள்ளச்சி/கூளைச்சி, கருப்பன், வெள்ளையன், முறுக்கன், மீசைக்காரன் இப்படித்தான் ஒருவருக்கொருவர் முன்றாமவரைச் சொல்வர். சங்க காலப் புலவர் அவ்வை ஒரு வேளை குள்ளமாய் இருந்திருக்கலாம்.

அவ்வுதலுக்கும் சவ்வுதலுக்கும் ஒரு சகரவொலியே வேறுபாடு. எத்தனையோ சொற்கள் சகரம் தவிர்த்தும் அதே பொருளைக் காட்டுகின்றன. காட்டு: சமணர்/அமணர், சந்தி/அந்தி, சாரம்/ஆரம். சாலுதல்/ஆலுதல், சள்ளல்/அள்ளல், சடைதல்/அடைதல், சப்பளம்/அப்பளம், சவை/அவை, சமைதல்/அமைதல், சமயம்/அமயம், சமர்/அமர், இச்சொற்கள் மிகப்பல தேறும். நான் விரிவஞ்சித் தொகுக்கவில்லை.

சவ்வுதலுக்கும், சவச்சவ என்பதற்கும், சுவைக்கும், சுவட்டிற்கும், சப்பு, சவள், சவட்டு போன்ற இன்னும் பல சொற்களுக்கும் பொதுவாய்ச் சொற்பிறப்பு ஏற்பட்டிருக்குமானால் உகரத்திற்கும், அகரத்திற்கும் ஏற்றாற்போல் பொதுவானதாய் அது சொவச்சொவ என்ற ஒகர வேரிற்றான் உருவாக வாய்ப்புண்டு. பொத்தகம் புத்தகமாயிருக்கிறது. கொடுத்தது கல்வெட்டுக்களில் குடுத்தது என்று பயில்கிறது. பேச்சுவழக்கிற் ஒகரம் ஒலிக்குறிப்பாய் எழுவது இயல்பானவொன்று.

எனக்குச் ”சொவ்> சவ்” என்பது சொல்ல எளிதான ஒலிக்குறிப்பு. சுவை, சுவடு, சவச்சவ, சப்பு, சவள், சவட்டு, அவல், அவம், அவை, அவ்வியம் என்ற பல்வேறு சொற்களை இயல்பாய் அது பிறப்பிக்க முடியும். ஒரு முழுமையான தொடர்ச்சியை அதில் காணமுடியும். அப்படித்தான் software க்கு இணையாய் நான் சொவ்வறை பரிந்துரைத்தேன். 

சொவ்வைத் தவிர்த்து மென்னையே புழங்க விரும்புகிறவர் புழங்கிப் போகலாம். எனக்கு அவமொன்றுமில்லை. மென்வறை என்றுஞ் சொல்லலாம். என்ன? தமிழில் soft - ற்குச் சொல்லில்லாது தொடர்ந்து சுற்றி வளைத்துப் பகரியையே நாம் புழங்கிக் கொண்டிருப்போம். தமிழ் தொடர்ந்து குறைப்பட்டிருக்கும். என் தமிழ் நிறைக்க வேண்டுமென நான் விழைகிறேன்.

அன்புடன்,
இராம.கி.





சொவ்வறை -1

சொவ்வறை என்ற சொல் இன்று, நேற்றுப் பிறந்ததில்லை. 10/12 ஆண்டுகளுக்கு முன், ”மென்பொருள், மென்கலன்” போன்ற சொற்களை ஏற்கத் தயங்கி, நீண்ட விளக்கத்தின் பின்னால், அடியேனாற் பரிந்துரைக்கப்பட்டது. ”மென்மம், கணியம்” போன்றவை அப்போது எழுந்திருக்கவில்லை. ”யம்மும், மம்மும் ஒட்டினால் தமிழில் எதுவும் பண்டம்/ ஆக்கம்/ விளை/ பொருள்/ சரக்காகி விடும்” என்ற சூழ்க்குமம் தெரியாத காலமது:-). சொவ்வறையின் பரிந்துரை கேட்டுச் சில சட்டாம்பிள்ளைகள் வீறு கொண்டு, கடைந்த சொற்களால் ’உள்ளுக்குள் துரோகம் செய்யும் இராம.கி” என அருச்சிக்க முற்படுவதும் தெரியாது. ”இப்படிச் சொற்களை அமைக்கும் நெறி, மொழியை புற்றுநோய் போல் மறைந்திருந்து அடியோடு அழுகடிக்கும்” என்று செய்யப்படும்  பேரழிவுக் கணிப்பும் அப்போது தெரியாது :-))))).

அண்மையில் நண்பரொருவர் கூறியதினும் இழிந்து வல்லடியாகக் குடத்தை வரிசையில் இருத்திக் குழாய்ச்சண்டை போட எனக்கும் நேரம் பிடிக்காது. ஒரு வேளை இளந்திமிரில் 40/45 ஆண்டுகளுக்கு முன் செய்திருப்பேனோ, என்னவோ?. இப்பொழுது மூத்த அகவையில், சற்று நாகரிகம் கற்றதாற் புன்சிரித்து நகர்கிறேன். 1000-ங்களுக்கும் மேற்பட்டுப் புதுச்சொற்கள் பரிந்துரைத்த நான், அவை நிலைக்க என்றுமே முயன்றதில்லை. ஆணவம் தொனிக்க அரசியலும் பண்ணியதில்லை. ”பயனர்க்கு எது உகப்போ, அது நிலைக்கும்” என்றே அமைந்துள்ளேன். நிலைத்தவை பல. அழிந்தவை ஒரு சில.

சொவ்வறை என்ற சொல் எழுந்தது தமிழிணையம் மடற்குழுவிலா (ஆம், எல்லோரும் எளிதாய் மறந்துவிட்ட பாலாப் பிள்ளையின் tamil.net), அன்றித் தமிழுலகம் யாகூ மடற்குழுவிலா என்று இப்போது நினைவில்லை, ஏதோ ஒன்றில் எழுதினேன். 2 குழுக்களும் அன்று தகுதரத்தில் (TSCII இல்) இயங்கியன. தமிழுக்கு வந்த போகூழ், அவ்விரு குழுக்களுமே இன்று இல்லாது போயின. (’தமிழுலகம்’ ஒருங்குறி ஆக்கத்தில் இப்போது கூகுளில் இயங்குகிறது.) இக்குழுக்களில் எழுதி இணையத்தில் அழிந்துபோன கட்டுரைகள் ஏராளம். அவை என் கணி நினையங்களிலும் (memory devices) கூட அழிந்துவிட்டன. அங்குமிங்குமாய்த் தேடி எம் நண்பர்கள் பழையதை அனுப்ப, இப்போது ஒன்றொன்றாய்ச் சேர்த்துக் கொண்டிருக்கிறேன்.

அந்த ஊற்றுக் கட்டுரை மூலமும், குமுகக் கணுக்கத்தின் மூலமும் [ஒரு முரண்நகை தெரியுமோ? கணுக்கம் - connection - என்ற சொல்லைப் படைத்து விளக்கமெலாஞ் சொன்னவர், தான் படைத்த முறையை வசதியாய் மறந்து, இப்போது அடம்பிடிக்கிறார்], என் வலைப்பதிவின் மூலமும், தமிழ்-விக்சனரியிற் பேசப்பட்டதன் மூலமும், சொவ்வறை என்ற சொல் தயக்கத்தோடு சிச்சிறிதாய்ப் பலருக்குந் தெரிய வந்தது.

”இராம.கி. பரிந்துரைத்த சொற்களெலாம் ஆங்கில ஒலிப்புக் கொண்டவை.” என்ற அவதூறை இணைய அரசியல்வாதி ஒருவர் ஓதி, இன்னுஞ் சிலரைத் துணுக்குற வைத்ததால், நான் என்றும் கவன்றதில்லை. ஆங்கிலமும், சங்கதமும் உடன்பிறப்புக்கள் என (மாக்சு முல்லரோ, ஜோன்சோ) யாரோ ஒரு மேனாட்டார் சொன்னாராம். நம்மவரும் இக்கருதுகோளை ஏற்று அதை உண்மையாக்கித் தமிழை நம் ஆய்விலிருந்து விரட்டி அகற்றுவதிற் துணை நிற்கின்றனர். இக் கருதுகோளின்படித் தமிழிய மொழிகளுக்கும், இந்தையிரோப்பிய மொழிகளுக்கும், ”மிளகுத் தண்ணீர், கட்டை மரம்” போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய இணைகளைத் தவிர்த்து வேறு ஒட்டுதல் கிடையாதாம். இப்படிச் சில படித்தவர் செய்தது, மாற்றாருக்கு வசதியாயிற்று. நூற்றுக்கணக்கில் தமிழ்ச்சொற்களை தன்மய ஒப்பீட்டிற் பார்த்து, அவற்றின் முன்னுரிமையைச் சங்கதத்திற்கே கொடுத்து, 50%-க்கும் மேற்பட்ட தமிழ், சொற்கள் கடனுற்றதாய்க் காட்டி, நம் பெருமிதத்தைக் குலைத்தார். ”செம்மொழி” என்பதெலாம் முடிவில் ஒரு பாவனை தான் போலும்.

"எந்த முன்முடிவும் இன்றி தமிழ்வேர்களின் வழி பாருங்கள், தமிழிய மொழிகளுக்கும், இந்தையிரோப்பியத்திற்கும் இடை ஏதோ உறவு தென்படுகிறது" என்று கரட்டிக் கத்தியும் பலனில்லை; மேலையர் கருதுகோளைச் சிக்கெனப் பிடித்து “எங்கெழுந்து அருளுவது இனியே!” என அமைகிறார். அறிவோட்டம் குறைந்து தொண்டூழியங் கூடி, மூதிகம் மூடி, தமிழரும் உணராதிருக்கிறார். 

”வறை”க்கும் ”ware”-க்கும் உள்ள உறவு புரியாது (புரிவது மட்டுமின்றி, மேலும் அது பற்றி வியக்காது) குளிப்பாட்டிய குழந்தையை குழிதாடியோடு தூக்கியெறிவும் செய்கிறார். மொத்தத்திற் தமிழ்மூலம் காட்டுபவரைப் பித்தர், வெறியரெனக் காட்சிப் பொருளாக்கி, மேனாட்டுக் கருதுகோளைப் பிடித்து ஆடுவாரை ”வல்லார்” என வியக்கும் பம்மாத்து குமுகாயத்தில் தொடர்கிறது. கேட்கத் தான் ஆளில்லை. கடக்க வேண்டிய தொலைவும் அதிகமாகிறது. எவனொருவன் தன் வாழ்விற் பெருமிதம் தொலைத்தானோ, அவன் சொந்தச் சிந்தனை வற்றி அந்தி நாள் அளவும் அடிமையாயிருக்கக் கடவன் ஆகுக.

வறை என்பது சரக்கு. உலர்ந்த பண்டம். (பல தமிழிய மொழிகளுக்குள் இந்தச் சொல் இருக்கிறது. த.சரக்கு, ம.சரக்கு, க.சரகு,சர்கு, தெ.து. சரக்கு) வேடுவச் சேகர (hunter - gatherer) வாழ்க்கையில், தொல்பழங்காலத்தில் இயற்கையில் உலர வைத்துக் கிட்டிய பொருட்களையே (பின்ன்னால் கிட்டாத நாட்களின் பயன்பாட்டிற்காக) பண்டம் மாற்றி விற்றனர். கருவாடு, உப்புக் கண்டம், உலர்ந்த மீன், உலர்ந்த காய், பழங்கள் என வெய்யிலில் வற்றியவை இவற்றில் ஒரு சில. இவற்றையே பின்னால் நாகரிகம் வளர்ந்த நிலையிற் காசுக்கு விற்றார். இப்படி உலர்பொருட்களில் தான் மாந்தரின் முதல் வாணிகம் தொடங்கியது. மாந்தரின் செயற்கை ஆக்கம் பின்னாற் சேர்ந்துகொண்டது.

உணங்குகள் (உலர்ந்த பொருட்கள்)
கருவாடுகள் (கருத்து, உலர்ந்த, ஊன் தசைப் பிண்டங்கள்)
கண்டங்கள் (புலவின் உப்புக் கண்டங்கள்; கண்டுதல் என்பதும் வற்றுவதே; கண்டுமுதல் - களத்தில் காய்வதற்கு முன்னிருக்கும் ஈரமில்லாக் கூலத்தை வேளாண்மையிற் குறிக்கிறது.)
சருகுகள் (உலர் இலைகள், பூக்கள்; சருகிக் கிடந்தது சரக்கு),
சுக்குகள் (காய்ந்த இஞ்சி)
சுண்டுகள் (நீர்வற்றிச் சுண்டியது. சுண்டின் திரிவு சண்டு. ”சண்டும் சருகும்” என்பது தென்றமிழ் நாட்டுச் சொல்லிணை)
சுவறல்கள் (வற்றிக் கிடைத்த பொருள்)
துவட்டல்கள் (நீர் வற்றிய பொருட்கள்)
பண்டங்கள் (பண்டிக் கிடந்த பொருள் பண்டம்; பண்டு = உலர்ந்த பழம்),
பொருக்குகள் (காய்ந்த சோற்றுப் பருக்கைகள்)
வற்றல்கள் (வெய்யிலில் உலர்த்தி வற்றிய காய்கள்.)

எனப் பல்வேறு சொற்கள் தமிழில் உலர்பொருளைச் சுட்டும். இயலிரை கிடைக்காத காலத்தில் இவற்றில் பலவும் மாந்தருக்கு உணவும் ஆயின. நடையும் பயணமும் பண்டமாற்று வழியாகி, பாலை தாண்டும் பழக்கம் பண்டைத் தமிழர்க்கு ஏற்பட்டது. பாலையாகிய மொழிபெயர்த் தேயம் பெரும்பாலும் இற்றை இராயல சீமை தான். (சங்க இலக்கியத்தில் உலவும் இராயல சீமையின் தாக்கத்தை இன்னும் நாம் உணர்ந்தோமில்லை.) 50%க்கும் மேற்பட்ட சங்கப் பாக்கள் பாலைத்திணையையே பேசுகின்றன. பாலைத் திணையில் வணிகம் பிணைந்தது நம்மேல் பூகோளம் விதித்த கட்டுப்பாடு.

இடைக்காலத்திற் சரக்காறு என்று ஆறுவகைச் சரக்குகளைக் குறிப்பார். ஒவ்வொரு பகுதிக்கும், வெவ்வேறு வகைகள் முதன்மையாகின. சில பகுதிகளின் ஆறு சரக்குகளைச் சாம்பசிவம் மருத்துவ அகரமுதலி குறித்துள்ளது.

அ. வங்காள நாட்டின் அறுவகைச் சரக்குகள்:

1. இலிங்கம்: cinnabar
2. பச்சைக் கற்பூரம்: crude camphor
3. குங்குமப்பூ: European saffron
4. படிகாரம்: alum
5. சாரம்: sal ammoniac
6. சுக்கு: dried ginger

ஆ. மலையாள நாட்டின் அறுவகைச் சரக்குகள்

1. கொச்சிவீரம்: Cochin corrosive sublimate
2. மிளகு: black pepper
3. திப்பிலி: long pepper
4. ஏலம்: cardamon
5. கிராம்பு: clove
6. சிற்றரத்தை: lesser galangal

இ. கிழக்குக் கடற்கரையில் விளையும் அறுவகைச் சரக்குகள்

1. கல்லுப்பு: inslouble sea salt
2. இந்துப்பு: sindh slat
3. பொட்டிலுப்பு: nitre
4. அப்பளாகாரம்: sub-carbonate of soda
5. பலகறை: cowry
6. கடல்நுரை: sea froth

ஈ. வடமேற்குக் கடற்கரையில் விளையும் அறுவகைச் சரக்குகள்

1. கோதளங்காய்: fruit of common Indian rak
2. கடுக்காய்: gall nut
3. சீயக்காய்: soap pad
4. பொன்னங்காய்: soap-nut
5. தேற்றான்கொட்டை: water clearing nut
6. வலம்புரிக்காய்: Indian sarew tree (right)

உ. உள்ளூரின் (நமது நாட்டின்) அறுவகைச் சரக்குகள்

1. சவுரிப் பழம்: shavari fruit
2. தூதளம் பழம்: fruit of prickly shoonday
3. பிரண்டைப் பழம்: cissus fruit
4. கண்டங்கத்திரிப் பழம்: fruit of prickly birinjal
5. கோவைப் பழம்: red bitter-melon fruit
6. இந்திரகோபப் பூச்சி: leady's fly

மேலேயுள்ளவை நீரின்றியோ, நீர்வற்றியோ, கிடைத்த இயற்பொருட்கள். வறட்டி என்பது வைக்கோலும் உலர்சாணமுங் சேர்ந்த கலவை. வறுவல்- வினையையும் பெயரையும் அது குறிக்கும். வறல், வறழ், வறள், வறை என்பன எல்லாம் வறுத்தலில் பிறந்த சொற்கள். ஈர மண்ணிற் செய்து உலரக் காய வைத்துச் சுட்ட கலமே வறையாகும். அது வெறுங்கலமல்ல. சுட்ட கலம். 

சுடாக் கலம் விலைக்கு வாராது; பயனுக்குமாகாது. ஆங்கிலத்திற் கூட ware என்பது சுட்ட கலத்தையே பெரிதுங் குறித்தது. அதனால் தான் மென்கலன் என்பதைத் தவிர்த்து, ஆழ்ந்த சிந்தனையில் வறையில் முடியும் சொல்லான சொவ்வறையைப் பரிந்துரைத்தேன்.

[கலன், பொருள் என்பவை இங்கு சரி வராது. குறிப்பாகக் கலன், ”இன்னொரு பொருளைக் கொள்ளும்”வினையையே அது குறிக்கும். something to contain about. உண்கலன் = உணவிருக்கும் கலன், உண்ணப் பயன்படும் கலன். மின்கலன் = மின்வேதி இருக்கும் கலன், மின்னாக்கும் கலன். மட்கலன் = மண்ணால் ஆன கலன். செப்புக் கலன் = செம்பால் ஆன கலன். (பல்வேறு மாழைக் கலன்கள் உண்டு.) 

எனவே கலன் என்பது கொள்வினையைக் குறிக்கிறது. ware அப்படியிருக்கத் தேவையில்லை. இன்னொரு சொல்லான மென்பொருளில் வரும் ”பொருள்” good ஆ, material ஆ, substance ஆ? உங்களுக்குத் தெரியுமோ? எனக்குத் தெரியாது. தவிர, 2500 ஆண்டுகளாய் meaning எனும் பொருட்பாட்டையும் “பொருள்” சுமந்து வருகிறது. I don't know why do we have information overload on the word "பொருள்"?]

என்னுடைய ஒரு பதிவின் பின்னூட்டில், திரு. ஆறுமுகத் தமிழன், “வறை என்பது சுட்ட கலம் என்று நீங்கள் சொன்னதைக் கண்ட பிறகு தான்

’ஊத்தைக் குழிதனிலே மண்ணை எடுத்தே
         உதிரப்புனலில் உண்டை சேர்த்து
வாய்த்த குயவனார் பண்ணும் பாண்டம்
         வறையோட்டுக்கும் ஆகாதென்று ஆடு பாம்பே’

என்ற பாட்டில் வருகிற ”வறையோடு” என்ற பதத்தின் பொருள் அடியோடு புரிந்தது” என்று கூறினார்.

வறை என்பது சித்தர் பாடலில் மட்டுமல்ல. ”நெய் கனிந்து வறையார்ப்ப” என்பதால், மதுரைக்காஞ்சி 756 -இல், ”நெய் போட்டு வறுக்கும் செயல்” உணர்த்தப் படுகிறது. வறை முறுகல் = அளவிற்கு மீறிக் கருகியது (”அது வறைமுறுகல் ஆகையிலே பின்பு தவிர்த்தது” ஈடு 6.5.12) வறையல் என்ற சொல் திருவிளையாடற் புராணத்தில் வறையைக் குறித்திருக்கிறது. வறையோடு - பொரிக்கும் சட்டி/கலத்தைக் குறித்தது. தென்பாண்டியிற் சருகச் சட்டி > சருவச் செட்டி என்பது (சருகுதலை நினையுங்கள்) frying pan ஐயே குறிக்கும்.

இங்கெல்லாம் வறையும் ware-உம் வேறுபடுகிறதா? இல்லையே? சரியாய்ப் பொருந்தாத ”கலத்தை” நாம் ஏற்போம், ஆனால் முற்றும் பொருந்தும் வறையை நாம் ஏற்க மாட்டோமா? சரக்கு, கண்டம், சுண்டல், பண்டம், போன்ற சொற்களுக்கு எத்துணை ஏற்புண்டோ, அத்துணை ஏற்பு வறைக்கும் உண்டே? ”மற்றதெலாம் கொண்டு, வறையை மட்டும் கொள்ளோமா?” அதுவென்ன பித்துக்குளித் தனம்? ஒருகண்ணில் வெண்ணெய், இன்னொன்றில் சுண்ணமா? ”ஓகோ.,.பாழாய்ப் போன ஆங்கிலவொலி உள்ளேவந்து தொனிக்கிறதோ?” 

அந்த நாளில் எங்கள் கோவை நுட்பியற் கல்லூரி விடுதியில், புதிதாய்ச் சேர்ந்த நாட்டுப்புற இளைஞன் ஒருவன் வேளாண்மை மரபு பொருந்திய தன் தகப்பனை தன்னோடு படிக்கும் நண்பருக்கு அறிமுகஞ் செய்ய வெட்கி, ஒதுக்கி வைத்த மடமை எனக்குச் சட்டென நினைவிற்கு வருகிறது.

ஒலியொப்பீட்டை மட்டுமே நான் பார்ப்பதாய்ப் பெரிய பரப்புரை செய்யும் மெத்தப் படித்த மேதாவிகளே! தொனியைப் பார்க்காது, ஆழமாகப் போய் உள்ளே இருக்கும் வேர்ப்பொருளைக் காணுங்கள். ”எந்த ஆங்கிலச்சொல் ஊடே தொனிக்கிறது? அதைத் தவிர்க்க வேண்டுமே?” என்று குத்திக் கிளறுவது என் வேலையில்லை. அப்படித் தொனித்தால் தான் என்ன குறை வந்துவிடும்? தமிழன்னை தவித்துப்போவாளா? தடுக்கி விழுவாளா? தமிழ்ப்பொருள் உள்ளிருந்தால் எனக்குப் போதும்.

present- ற்கு இணையாய்ப் ”பரத்துதல்” என்பது தோன்றினால் அது தீண்டத் தகாததோ? "இராம.கி சொன்னானா? போட்டுச் சாத்து” என்ற முனைப்புடன் ”பரத்தீடு” கேட்டுக் கிடுகிப் பரந்த நண்பர், ஒரு பரிமானப் பார்வையில் அதைச் சாடாது, பல்வேறு நாட்டுப்புறங்களையும் சற்று நுணுகி அறியலாமே? 

பரத்தி இடுதல் ஒப்பொலியா? தமிழன் பரத்தி இட்டதே இல்லையா? பரத்தும் வினை நெல்வயல், உப்புவயல்களில் உண்டு. நெற்களத்திற் பரம்புக் கட்டை என்றும், உப்பளத்திற் பரத்துக் கட்டை என்றுஞ் சொல்வார். அதற்குப் பரவுக் கட்டை > பலுவுக் கட்டை > பலுகுக் கட்டை என்ற பெயரும் உண்டு. 

பலுகுக் கட்டையை ஓரோவழி மொழுக்கு மரம் என்பர். [இச்சொற்களை உப்பளத்திலும், களத்து மேட்டிலும் நானே கேட்டிருக்கிறேன். எங்கள் உரச்சாலை யூரியாப் பரற் கோபுரத்தின் - Urea prill tower - அடியில் விளவப் படுகையில் (fluid bed) கட்டிகளை வெளிக்கிட்டிக் குருணைகளைப் (granular particles) பரப்பப் பரத்துக் கட்டையைப் பயன்படுத்தியும் இருக்கிறேன்.]

முகன்மை வாசகங்களை, படங்களை, கருத்துக்களை, விழியங்களை(videos)ப் பரத்திக் காட்டி விளக்குவதைப் பரத்தீடு என்று சொல்லக் கூடாதா? இங்கு தமிழ் முகன்மையா? இல்லை, மாக்சுமுல்லர், ஜோன்சின் தேற்றம்/கருதுகோள் முகன்மையா? 19 ஆம் நூற்றாண்டுத் தேற்றத்தைத் தலைமேற் சுமந்து பணிவோடு காப்பாற்ற, எம் நாட்டு நடைமுறையைத் தவிர்க்க வேண்டுமா? நேரே தொடவேண்டிய மூக்கைச் சுற்றிவளைத்துத் தொடவேண்டுமா? நாம் எங்கே போகிறோம்? எனக்குக் கொஞ்சமும் புரியவில்லை.

ஈடு என்ற சொல் இடுதல் வினையடிப் பெயராய் எழும். [விதப்பாக, விண்ணவர் (வைணவர்) வழக்கில், ஈட்டிற்குப் பல்வேறு விளக்கமுண்டு. ஈடு = கவசம் என்பது ஒரு பொருள், இடுதல் = எழுதுதல் என்ற அளவில், நம்பிள்ளை பேசியதை வடக்குத் திருவீதிப் பிள்ளை எழுதிவைத்ததால், ஈடு என்று மணிப்பவள ‘வியாக்கியானத்தை’ச் சொல்லுவர்; ஈடு = ஒப்பு என்ற பொருளும் அதற்குண்டு; இறைவனோடு ஈடுபடச் செய்வதால் ஈடு என இன்னொரு வகைப் பொருளுமுண்டு.] பரத்தி இடப்பட்டதால் பரத்து ஈடு (=பரத்தீடு) ஆயிற்று.

வறு, வறல், வறள், வறழ் என்ற தொடர்ச்சியில் நூற்றுக் கணக்கான கூட்டுச்சொற்கள் உள்ளன. எல்லாவற்றையும் சேர்த்து ஆங்கில ஒப்பொலி தருவதாய்க் கருதி, வங்காள விரிகுடாவில் நாம் கொட்டி விடலாமா? இப்படித் தான், ஒரு காலத்தில் சங்கத ஒப்பீடு பார்த்து ”இது தமிழில்லை, அது தமிழில்லை” என ஒதுக்கிய மூடத்தனம் எழுந்தது. இக் காலத்தில் ஆங்கில ஒப்பீடு பார்த்து இன்னும் பல தமிழ்ச்சொற்களைத் தவிர்த்து விட்டால், முடிவில் எங்குபோய் நிற்போம்? ”உள்ளதும் போச்சுடா, தொள்ளைக்காதா.”

 ஜியார்ச்சு ஆர்வெலின் ”1984” என்ற புதினத்தில் வரும் good, plus good, double plus good, double plus ungood என்பது போல் வெறும் 2000, 3000 சொற்களை மட்டும் வைத்து முன்னும், பின்னும் ஒட்டுக்களைப் பிதுக்கியொட்டிச் சரஞ்சரமாய் sausage மொழியாக்கி எதிர்காலத் தமிழ்ச் சொற்களை உருவாக்கலாமா? அப்படித் தானே படித்த மக்கள், வழக்குத் தமிழைப் புத்தாக்கஞ் செய்கிறோம்? பின்னொட்டு மரபு சுத்தரவாய் மாறி, சிறிது சிறிதாய்த் தமிழை முன்னொட்டு மொழியாய் ஆக்குகிறோமே? [post-modernism பின்நவீனத்துவமாம்:-)))] கூடிய மட்டும் பெயர்ச்சொற் சரங்களைத் தவிர்த்தால், அல்லது பெரிதுங் குறைத்தால், தமிழ், செருமன் மொழி மாதிரித் தோற்றம் காட்டாது.

தமிழ்நடையின் சிக்கலே படித்தோரின் நினைவிற்கு வரும் சாத்தார (இது தான் சாதாரணம் என்ற சொல்லின் தமிழ் மூலம்.) வழக்குச் சொற்களை மட்டுமே வைத்துப் பூசிமெழுகி, இட்டளி கிண்டிய உப்புமாவைப் போலப் புரட்டி எடுத்து, புது/பழஞ் சொற்றொகுதியைக் கூட்டிக் கொள்ளாது, துல்லியம் பாராது, விதப்பு நோக்காது, பொதுச்சொற்களோடு முன்னும், பின்னும் ஒட்டுப்பெய்து, குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது தான். மேலைநாட்டுப் புலவுக்கடைகளில் மாலை மாலையாய் ஊன்சரம் தொங்குவது போலத் தமிழ்க் கலைச்சொற்கள் தமிழ்க் கடைகளிற் இப்பொழுது தொங்கிக் கொண்டிருக்கின்றன:-)))). இவற்றை வாங்கிப் புழங்கத் தான் ஆட்களில்லை.

show, exhibit, display, demonstrate, present என எல்லாவற்றையும் ”காட்டலாக்கி”, “ஷொட்டு”க் கொடுத்து ஒட்டுக்கள் பிசைந்து மழுங்க வேண்டியதன் தேவை என்ன? [example என்பதைக் கூடக் காட்டு என்று இக்காலத்திற் சொல்கிறோம். அப்புறம் எங்கே காட்டலின் பொருளை அகலப்படுத்துவது?] 

இவையிடையே பொருட்பாட்டில் வேறுபாடே கிடையாதா? எல்லாம் ஒரே களிமண்ணா? இடம், பொருள், ஏவல் பாராமோ? இவற்றை வேறுபடுத்த வெவ்வேறு சொற்கள் வேண்டாமா? ஆங்கிலம் அறிவுலகில் வெற்றி பெறுவது நுண்ணிய வேறுபாடு காட்டுவதில் தானே? தமிழ்நடை அதற்கு ஈடு கொடுக்காது எனில், துல்லிய விதப்புக் காட்டாது எனில், அப்புறம் ஏணி வைத்தாலும் குறிக்கோளை எட்டுவோமோ? அடுத்த பகுதியில் தொடர்வோம்.

அதற்குமுன் சொவ்வறையை ஒட்டிய மற்ற வறைச் சொற்களை இங்கு மாதிரிக்குப் பட்டியல் இடுகிறேன். இவற்றையெல்லாம் ஒருங்குபடச் சொல்ல நான் அறிந்த வரையில் மென்பொருள், மென்கலன் போன்ற சொற்கள் வாய்ப்புத் தரா. (ஒரு பக்கம் அறைகலன் - furniture - என்று புதிய, ஆனாற் தவறான, முறையிற் சொல்லிக் கொண்டே, இன்னொரு பக்கம் மென்கலன் என்றால் பொருந்துமா?) கலைச் சொற்கள் என்பவை துறை சார்ந்து தமிழ்நெறியின் படிச் செய்யவேண்டியவை. இதை மறக்கக் கூடாது. பட்டியலுக்கு வருகிறேன்.

 software = சொவ்வறை, [softness என்பது மென்மையா? கலன்/பொருளோடு சேரும் போது, என்ன பொருளில் மெல்லெனும் பெயரடை (adjective) அமைகிறது? மெல்லுதல் என்பது வினையா? மெலிவு என்பது என்ன? 

thin, nice, smooth, tender, supple, fleecy, spongy, flexible, pliable, malleable, ductile, tractile, extendable, plastic, mellow - இவற்றிடையே அமைந்துள்ள நுணுகிய, அறிவியல் தழுவிய, பொருள் வேறுபாட்டைத் தமிழிற் காட்டவேண்டாமா? தமிழ்ச் சொற்களின் துல்லியம், கூர்மை என்பன எங்கே? soft - இன் அடிப்படை வறையறையை எங்கேனும் பார்த்தோமா? இராம.கி.யின் முதுகை மத்தளம் ஆக்கிச் சாடுமுன், தமிழில் அடிப்படைச் சொற்களை வற்று ஆழப் பார்க்கலாமே? Have we got precision in our choice of words?

இன்னும் mass-க்கும் weight-க்கும் கூட வேறுபாடின்றி, நிறை, எடையைக் குழப்பிக் கொள்கிறோமே? volume பற்றிச் சொல்வதிற் கனத்தின் குழப்பம் - எண்ணிப் பார்த்தோமா? இயற்பு என்ற சொல் தமிழிலுண்டா? கேள்விப் பட்டுள்ளீரா? (இயல்பு உண்டு) physics ற்கு இணையாய் ”இயற்பியல்” புழங்குகிறோமே? Is it not meaningless? ”இயல்பியலை” முதலிற் பரிந்துரைத்த நானே இற்றை ”இயற்பியலைக்” கண்டு வியக்கிறேன். வழக்குத் திரிவு என்பது எண்ணிப் பார்க்க முடியாத நேர்ச்சி போலும். முதற் கோணல் முற்றுங் கோணல். இன்னும் பல சொற்களின் பொருந்தாமையை எடுத்துரைப்பின். விரியும் என்றெண்ணி விடுக்கிறேன். soft-ஐ மட்டும் அடுத்த பகுதியில் நீளச் சொல்கிறேன்.]

hardware = கடுவறை (இது கணி சார்ந்தது மட்டுமல்ல, இரும்புக்கடைச் “சாமான்”களையும் குறிக்கிறது. சாமான் என்ற கடன் சொல்லே எப்படிப் புழக்கத்திற்கு வந்தது? உரிய தமிழ்ச்சொல்லை நாம் பயிலாததால் தானே?) shareware = பகிர்வறை,
firmware = நிறுவறை (கணியாக்கர் நிறுவிய சொவ்வறைகள்)
freeware = பரிவறை, (பரிக்கு விளக்கம் வேண்டில் என் வலைப்பதிவிற்குப் போங்கள்.)
free software = பரிச் சொவ்வறை,
licensed software = உரி(ம)ச் சொவ்வறை
office software = அலுவச் சொவ்வறை
spyware = உளவறை (உளத்தல் = தோண்டியெடுத்தல். உளத்தலின் திரிவு உழத்தல். உழவும் போது நிலத்தில் தோண்டிக் கீறுகிறோம். இங்கே செய்தி, புலனங்களை, நம்மிடமிருந்து உளந்தெடுக்கிறார்.)
anti-spyware = உளவு ஒழிவறை (எதிர் என்ற முன்னொட்டுப் போடாது, ஒழி வினையாய்க் காட்டுவது தமிழ்நடைக்கு உகந்தது.)
open source software = திறவூற்றுச் சொவ்வறை
pirated software = பறியாண்ட சொவ்வறை.
warehouse = வறைக்கூடம்.  (இது சொவ்வறையைப் பற்றி மட்டுமல்ல. எல்லாத் தொழிலங்கள், சேகரங்கள் போன்றவற்றிலிருக்கும்  ஆன சொல் “வறைகள் சேர்ந்து கிடக்கும் கூடம்”. மின்சாரத்திற் சாரம் போனது மாதிரி, தொழில் நுட்பத்தில் தொழிலைப் போக்கி நுட்பியல் ஆக்கியது மாதிரி, அலுவலகம், தொழிலகம் போன்ற சொற்களில் ”க” என்பது மறையவேண்டும்.)
data warehousing software = .தரவு வறைக்கூடச் சொவ்வறை

வறையை வைத்து இப்படிப் பல்வேறு படியாக்கங்களை (applications) எளிதில் ஆளமுடியும். கலனையோ, பொருளையோ வைத்துச் செய்ய முடியாது.

அன்புடன்,
இராம.கி.