Tuesday, January 22, 2013

ஒருங்குறியும் தேவையான வினையூக்கமும்

அண்மையில் (சனவரி 10 இல்) திருச்சிராப்பள்ளி புனித வளனார் கல்லூரி வரலாற்றுத் துறையினர், செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனத்தோடு சேர்ந்து “Contributions of Sangam and Post-Sangam Classics to Ancient Indian History" என்ற கருத்தரங்கை ஏற்பாடு செய்து, அதற்குப் பலரையும் உரையாற்ற அழைத்திருந்தனர். ”சிலம்பின் காலம்” பற்றி உரையாற்ற என்னையும் அழைத்திருந்தார்கள். நான் (1964-65 இல் புகுமுக வகுப்பு) படித்த பழைய கல்லூரி என்பதாலும், என்னாய்வோடு தொடர்புற்ற உரை என்பதாலும் ஒப்புதல் அளித்திருந்தேன். கருத்தரங்க ஏற்பாடு 2 மாதங்களுக்கு மேல் நடந்துவந்தது. கருத்தரங்கின் இரண்டாம் நாள் மாலையில் என் உரையை ஒழுங்கு செய்திருந்தனர். ஒருங்குறியிற் கட்டுரை வரைவையும், என்னைப் பற்றிய தன்விவரக் குறிப்பையும் கருத்தரங்கிற்கு 15 நாட்கள் முன்பே அனுப்பியிருந்தேன்.

தன்விவரக் குறிப்பைக் கேட்டுப் பெறுவதில் வரலாற்றுத் துறை இளமுனைவர் ஒருவர் என்னோடு தொடர்பிலிருந்தார். சனவரி 10 ஆம் நாள் காலை போய்ச் சேர்ந்த போது, குறிப்பிட்ட இளமுனைவர் என்னைச் சந்தித்து, “தன்விவரக் குறிப்பைத் தரமுடியுமா?” என்று மீண்டுங் கேட்டபோது, “மின்னஞ்சலில் அனுப்பியிருந்தேனே? திறந்து பார்க்கவில்லையா?” என்று வியந்து மறுமொழித்தேன். சற்று வெட்கத்தோடு, “இல்லை ஐயா. அது திறக்காக் குறியேற்றத்தில் இருந்தது” என்று சொன்னார். ”எல்லோரும் படிக்கக்கூடிய ஒருங்குறியிற்றானே அனுப்பினேன். எங்கு தவறு நடந்தது? உங்கள் கணியின் இயங்கு கட்டகம் எது? Windows XP யா, Windows 7 ஆ, Windows 8 ஆ?” என்று கேட்டேன். ”Windows XP” என்றார். ”அதில் language enabled - தமிழ் என்று தேர்ந்தெடுத்தீர்களா?” என்று கேட்டேன். அவர் ”தேர்ந்தெடுக்கவில்லை” என்றார். அப்படியோர் ஏந்து இயங்கு கட்டகத்துள் இருப்பது அவருக்குத் தெரியாது போலும்.

”ஐயா, எங்கள் வரலாற்றுத் துறைக் கணிகளிற் பாமினிக் குறியேற்றமே புழங்குகிறோம். அதில் அனுப்பியிருந்தால் எனக்குத் திறக்க எளிதாய் இருந்திருக்கும்” என்றார். ”பாமினி போன்ற தனியார் 8 மடைக் குறியேற்றங்களில் இருந்து பலரும் நகர்ந்து 16 மடைக்கு வந்து சில ஆண்டுகள் ஆயினவே? இப்பொழுது பலரும் ஒருங்குறியிற்றானே பரிமாறிக் கொள்கிறார்கள்? ஒருங்குறி என்பது உலகெங்கும் புழக்கத்திலுள்ள நடைமுறை. மைக்ரொசாவ்ட்டு இயங்கு கட்டகத்தில் எல்லாக் கணிகளும் அவ்வல்லமை பெற்றுள்ளன. தமிழாவணம் உருவாக்க எந்தக் குறியேற்றத்தையும் புதிதாய் நிறுவ வேண்டியதில்லையே? தமிழ்க் கணி, இணையப் பயன்பாட்டிற்கு ஒருங்குறியையும், அது இணங்கா இடங்களில் தமிழ் அனைத்தெழுத்துக் குறியேற்றத்தையும் (TACE) பயன்படுத்தப் பரிந்துரைத்து, தமிழக அரசாணை பிறப்பித்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதே? தெரியாதா? ” என்றுஞ் சொன்னேன். அவருக்கு நான் சொன்னதெல்லாம் புதியதாய் இருந்தது.

ஒருவேளை இணையத்திற்குள் தொடர்ச்சியாக அவர் போனதில்லையோ, என்னவோ? இணையத்திற்குள் தொடர்ந்து போனவர்கள் கணித்தமிழுக்குள் நடந்த வெவ்வேறு மாற்றங்கள் பற்றியும், 8 மடைக் குறியேற்றங்கள் போய் 16 மடைக்கு நகர்ந்தது பற்றியும், ஒருங்குறியேற்றம் பற்றியும் எப்படியாவது தெரிந்து வைத்திருப்பார்கள். மடற்குழுக்கள் / வலைப்பதிவுகள் / வலைத்தளங்கள் / வலைத்திரட்டிகள் பற்றியும் ஓரளவு தெரிந்திருப்பார்கள். பாமினியிலேயே தொடர்ந்து தேங்கிப்போகும் நிலை அவருக்கு ஏற்பட்டிருக்காது. பொதுவாக எந்தக் கல்லூரியிலும் இதுபோன்ற வளர்ச்சியை அறிந்து கொள்ளும் வாய்ப்பு மாணவர்களுக்குச் சட்டென்று ஏற்படுமென்றே நான் கேள்விப் பட்டுள்ளேன். அதையும் மீறி ஒருவர் அறியாதிருந்தால் எழுத்தர் / தட்டச்சர் / கணிகளைப் பேணும் பொறியாளர் / DTP இயக்கர் ஆகியோரின் தாக்கம் அவரைச் சுற்றிலும் பெரிதும் இருப்பதாகவே எனக்குப் படுகிறது.

அன்று கருத்தரங்கில் புனித வளனார் கல்லூரி அதிபரும் (College Rector) தன்னுடைய பரத்தீட்டில் பாமினியைப் பயன்படுத்தியிருந்தார். அந்த அதிபர் இணையத்தை நேரே பயன்படுத்திக் கணிபற்றிய நுட்பச் செய்திகளை அறிந்திருந்தாரா, அன்றி கல்லூரி நிர்வாகப் பொறுப்பில் இருப்பதால், தன் ஆக்கத்தைக் கையெழுத்திற் செய்து இன்னொரு எழுத்தர்/ தட்டச்சர்/ DTP இயக்கர் மூலம் கணியில் தன் பரத்தீட்டை உருவாக்கினாரா என்று எனக்குத் தெரியாது. அன்று கருத்தரங்கக் கணியில் பாமினி எழுத்துருவை இயங்க வைக்க முடியாதுபோனதால் அவர் பரத்தீட்டில் இருந்த தமிழ் எழுத்துரு திரையிற் தெரியாமற் போகும் நிலை ஏற்பட்டது.

தமிழ்நாட்டிற் கணியைப் புழங்கும் பலரின் நிலையும் இப்படித்தான் இருக்கிறது. தனியார் குறியேற்றங்களைக் கொண்டு இந்த நுட்ப வேலைகளை விதப்பாக்கி வைப்பதால், தடுமாறிப் போகிறார்கள். கணியில் ஆங்கிலம் மட்டுமே புழங்கி, தமிழைப் புழங்குவது அறியாதிருப்பதால் மழலைப் பாடம் எடுக்கவேண்டியதாகிறது.

இத்தனைக்கும் இன்று கணியிற் தமிழைப் புழங்க எல்லா ஏந்துகளும் நீக்கமற நிறைந்துள்ளன. தமிழாவணங்களுக்குத் தேவையான பொதுக் குறியேற்றம் இருக்கிறது. உள்ளிடுவதற்கு உதவியாய் இ-கலப்பை, NHM Writer போன்ற இலவயச் சொவ்வறைகள் இருக்கின்றன. எல்லா மைகொரொசாவ்ட்டுச் சொவ்வறைகளிலும் எந்த விதப்பான முயற்சியும் இல்லாது தமிழை எளிதாகப் புழங்கமுடியும். இருந்தாலும் என்னவோ தெரியவில்லை, (Shreelipi, Softview, TAB, TAM, TSCII, Vanavil போன்ற) 8 மடைக் குறியேற்றங்களிலேயே தேங்கி, அதைவிட்டு நகராது பலரும் இருக்கின்றனர். இவர்கள் இணையத்திற்குள் நேரடியாக வருவதும் அரிதாக இருக்கிறது.

{நம் பேரா.மு.இளங்கோவன் போன்றோர் கல்லூரி, கல்லூரியாய்ப் படையெடுத்துப் வெவ்வேறு பட்டறைகள் எடுத்து அருமையாகச் சேவை செய்கிறார்கள். இன்னும் பலர் அந்தப் பொறுப்பில் பங்கேற்கவேண்டும். ஆனாலும் தமிழைப் புழங்க வேண்டிய தேவையிருப்போரிடம் செய்தி இன்னும் பரவவில்லை போலும்.}

யாரோவொரு எழுத்தர் / தட்டச்சர் சொல்லித் தந்ததையும், கணிகளைப் பேணும் பொறிஞர் சொல்லிக் கொடுத்ததையும், தங்களுடைய புறத்திட்டு அறிக்கை (project report), ஆய்வு நூல் (thesis) ஆகியவற்றிற்காகத் தொடர்பு கொண்ட DTP இயக்கர் சொல்லித் தந்ததையும் வைத்துத் தமிழை உள்ளிட்டு, அவ்வாவணங்களை ஒரு கணியிலிருந்து இன்னொரு கணிக்கு இணையம் மூலம் சிதறாது பகிர்ந்து கொள்வதறியாது, தங்களுடைய வட்டத்திற்குள் மட்டும் தூவல் துரவியால் (pen drive) அறிக்கைகள், பரத்தீடுகள், கட்டுரைகள், நூல்கள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டு பலரும் பிளவு பட்டுக் கிடக்கிறார்கள்.

தமிழைப் புழங்கும் பலரும் தமிழ்நாட்டில் இப்படித்தான் சிதறிக் கிடக்கிறார்கள். எழுத்தர் / தட்டச்சர் / கணிகளைப் பேணும் பொறியாளர் / DTP இயக்கர் ஆகியோரின் தாக்கம் பெரிதும் இருப்பதாகவே எனக்குப் படுகிறது. நான் பல்வேறு நிகழ்வுகளைச் சொல்லமுடியும்.

அண்மையில் ஒரு மடற்குழுவில் நண்பர் ஒருவர் தான் கையெழுத்தில் உருவாக்கிய மொழிபெயர்ப்பு ஆவணத்தை ஒரு தட்டச்சு செய்பவரிடம் கொடுத்திருக்கிறார். தட்டச்சருக்கோ, பாமினி தான் தெரிந்திருக்கிறது. ஒருங்குறியின் வாய்ப்பு பற்றித் தெரியவில்லை. அதன் விளைவாக, அவர் பாமினியில் அடித்துக் கொடுத்த ஆவணத்தை ஒருங்குறியில் மாற்றுவதற்குக் ஒரு குறியேற்ற மாற்றியை (encoding converter) நம் நண்பர் தேடிக் கொண்டிருந்தார். NHM Converter பற்றிச் சிலரும் (நானும்) சொன்னோம். பின் மாற்றிக் கொண்டார். முதலிலேயே ஒருங்குறியில் உள்ளிட்டிருக்கலாமே? - என்பது தான் இங்கு கேள்வி.

இன்னொரு எடுத்துக் காட்டும் சொல்ல வேண்டும். ஒரு பேர்பெற்ற தமிழக அரசு நிறுவனத்தார் 2013 பிப்ரவரி மாதம் ஓர் இலக்கியக் கருத்தரங்கம் நடத்துவதற்குக் கட்டுரைகள் கேட்டிருந்தார்கள். எல்லாக் கட்டுரைகளும் TAM குறியேற்றத்தில் இருக்கவேண்டுமாம். 3 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது என்னவாயிற்று? - என்று புரிபடவில்லை.

தமிழக அரசு அலுவங்களுக்குள் சென்றால் இன்னொரு வியப்பான காட்சியைக் காணமுடியும். நாம் பார்க்கப் போகும் அலுவர் மிகப் பெரிய அதிகாரியிருப்பார். இந்திய ஆட்சிப் பணியாளராய்க் கூட இருப்பார். அவர் மேசைக்கருகில் இன்னொரு தனிமேசையிருக்கும். அதில் ஒரு மடிக்கணியும் காட்சிப்பொருளாய் இருக்கும். ஆனால் அதைப் பயன்படுத்துவது அவருடைய தனிச் செயலராய், எழுத்தராய், தட்டச்சராய், DTP இயக்கராய் இருப்பார். இவர்கள் யாருக்கும் இணையத்துள் போவதற்கான தனி அனுமதி பெரும்பாலும் இருக்காது. அலுவலர் கொடுக்கும் அனுமதி வைத்தே எதுவும் முடியும். இந்த எழுத்தர்/ தட்டச்சர்/ தனிச்செயலருக்குப் பட்டறிவும் பற்றாது. ஆகக் குறைந்த நுட்பியல் அறிவோடு ஆவணம் உருவாக்குவது பற்றியே அந்த தனிச்செயலர் / எழுத்தர் / தட்டச்சர் தெரிந்திருப்பார்.

பொது நுணவ அடிவகுப்பில் (common miminum denomination) .அந்தத் துறையின் நுட்பியல் இயங்கிக் கொண்டிருக்கும். பின் எப்படி நாம் அனுப்பும் ஒருங்குறி மின்னஞ்சல் அந்தத் துறைக்குள் செல்லுபடியாகும்? அங்கிருந்து நமக்கு ஒருங்குறியில் ஒரு மின்னஞ்சல் வந்து சேரும்? ஏன் மின்னஞ்சல் என்னும் நுட்பியல் அரசிற்குள் வேலை செய்வதில்லை என்று இப்பொழுது விளங்குகிறதா? என்றைக்காவது தமிழக அரசின் அமைச்சகங்களுக்கும் துறைகளுக்கும் மின்னஞ்சல் பரிமாற்றஞ் செய்து பார்த்திருக்கிறீர்களா? ஒரு மின்னஞ்சல் பார்ப்பதே அலுவலர்/அதிகாரி இல்லையென்றானபிறகு நுட்பியற் பயன்பாடு எப்படி முன்னேறும்? அவர்கள் கொடுக்கும் மின்னஞ்சல் முகவரிகள் எல்லாம் உப்புக்குச் சப்பாணி என்று புரிகிறதா?

அரசின் It policy எப்படி முன்னகரும்? இங்கு ஒரு எழுத்தர்/ தட்டச்சர் / தனிச்செயலர் அல்லவா அதை நிருவகிக்கிறார்? இப்படி நான் அப்பட்டமாய்ச் சொல்வதற்கு என்னை நீங்கள் மன்னியுங்கள். எந்த அதிகாரியும் நேரடியாக மின்னஞ்சல் போன்ற ஏந்துகளை அரசிற் பயன்படுத்துவதேயில்லை. யாரோவொரு எழுத்தர் /தட்டச்சர் / தனிச்செயலர் தான் பயன்படுத்துகிறார்.] கணி, இணையம் பற்றிய நுட்பியல் மாற்றங்களின் சரவலும் தேவையும் அரசு அதிகாரிகளுக்குத் தெரியவே தெரியாது. அவர்கள் தனிச்செயலுருக்கோ, எழுத்தருக்கோ, தட்டச்சருக்கோ dictation கொடுக்கின்றனர். யாரோவொருவர் அதைத் தன் கணியில் அச்சடித்துக் கொண்டுவருகிறார். அலுவலர் முடிவிற் கையெழுத்துப் போடுகிறார். ஒரு ஆவணம் எப்படி உருவாகிறது, அதிலுள்ள சிக்கல்கள் என்ன என்று கடுகளவும் அதிகாரிக்குத் தெரியாது. இதைப் புரிந்து கொள்ளாது எப்படி அரசு நடவடிக்கைகள் கணிமயமாகும்?

[இத்தனைக்கும் கணித்தமிழ் பற்றி நாமறிந்த வரை தமிழ்நாட்டின் இரண்டு பெரிய கட்சிகளும் தங்களுக்கிடையே மாறுபட்ட கருத்துக்களை ஒரு நாளும் வெளிப்படுத்தியதில்லை. இரண்டு கட்சியரசுகளுமே கணித்தமிழுக்கு என்றுமே உறுதுணையாக இருப்பதாய்த்தான் சொல்லிவந்துள்ளன. ஆனாலும் ஏதோவொரு தடை செயல்முறையில் தொடர்ந்திருப்பது நன்றாகவே தெரிகிறது. அது இந்த எழுத்தர் / தட்டச்சர் / தனிச்செயலர்களின் புரிதற் சிக்கல் தான். நுட்பியல் என்பது இப்படி அந்தத் தரத்திலேயே இயங்குகிறது/ பின் எப்படி கணிச்சிக்கல்களைப் புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும்?

”அரசு நடவடிக்கைகளைக் கணிமயமாக்கப் போகிறோம்” என்று இடைவிடாது மேடைகளெங்கும் அரசியல்வாதிகள் முழங்குகிறார்கள். இதுவெறும் முழக்கம் தான் போலிருக்கிறது. செயற்பாடு வேறொன்று போலும். இன்றுங் கூட தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் ஒருங்குறியோ, தமிழ் அனைத்தெழுத்துக் குறியேற்றமோ கொஞ்சமும் செயற்படவில்லை. அங்கு வானவில்லே செயற்பட்டுச் செங்கோலோச்சிக் கொண்டிருக்கிறது. ஆக அரசின் அரசாணை அரசிற்குள்ளேயே செயற்படக் காணோம். யாரோவொரு தனியார் குறியேற்றம் தான் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கிறது. கணித்தமிழ் நடைமுறையிற் புழங்க ஒரு IT policy வேண்டாமா? தமிழக அரசு அதைப்பற்றி எண்ணிச் செயற்படவில்லையே? “எண்ணித் துணிக கருமம்” - என்னவாயிற்று?]

[கணித்தமிழுக்கான சிக்கல்கள் அரசில் மட்டுமல்ல குமுகாயத்திலும் ஏராளம். தமிழ்நாட்டில் ஒவ்வோர் நாளிதழும் தாளிகையும் தனித்தனிக் குறியேற்றத்தைக் கொண்டுள்ளன. தினமலர், தினமணி, தினகரன்........ஆனந்த விகடன், குமுதம், கல்கி......கொண்டிருக்கின்றன. அவர்களில் பலருக்கும் Shreelipi தான் தெரியும்.

5 அகவைக்கும் கீழ்ப்பட்ட பிள்ளைகளுக்கான மழலைப் பாட்டுக் குறுந்தகடுகள் கூட இப்படித் தனியார் குறியேற்றங்களிற்றான் உலவுகின்றன. வெவ்வேறு இணைய நூலகங்களில் சேகரிக்கப்படும் ஆவணங்களும், சுவடிகளும் ஒருங்குறியில் இருப்பது பெரிதும் குறைவே. தனியார் குறியேற்றத்திலேயே அவை கிடைக்கின்றன.

இவை போன்றவை ஒருபக்கம் இருக்க, இன்னொரு பக்கம் தமிழின் பயன்பாட்டையே நம் பொதுவாழ்விற் குறைத்துக் கொண்டிருக்கிறோம்.

தமிழே தெரியாது ஒரு மாணவன் தமிழ்நாட்டிற் கல்வி பெற்றுவிடமுடியும். [சீனம் தெரியாது, சப்பானியம் தெரியாது, டாயிட்சு தெரியாது, பிரெஞ்சு தெரியாது, அரபி தெரியாது, துருக்கி தெரியாது, ஈப்ரு தெரியாது அந்தந்த நாடுகளில் கல்வி பெற்றுவிட இயலுமா?] தமிங்கிலம் எங்கு பார்த்தாலும் தகத்தகாய ஒளிவீசிச் சிறந்து கொண்டிருக்கிறது. மிடையத்துறை முழுதும் - தொலைக்காட்சி, தாளிகை, பண்பலை, வானொலி, திரைப்படம் - என்று பலவிடங்களில் 10 சொற்களுக்கு 6/7 சொற்கள் ஆங்கிலம் பேசித் திளைக்கிறோம். ஆங்கில வினைச்சொற்களைப் பண்ணி ஆங்கிலப் பெயர்ச்சொற்களை முன்னால் வைத்து தமிழ்ச் சொற்கள் வெறுமே ஒட்டு இடைச் சொற்களாகிவிட்டன. தமிழே வேண்டாம் என்று வேப்பங்காயாகக் கசந்து கொண்டிருக்கும் போது எந்தச் சொவ்வறையாளன் தமிழிற் சொவ்வறை உருவாக்க முன்வருவான்? இங்கு தான் தமிழ்க் கணிமைக்குச் சந்தையேயில்லையே? உப்புக்குச் சப்பாணி வேலைகள் எத்தனை நாளைக்கு நிலைக்கும்?

ஒரு அண்ணாச்சி கடையில் பெறுதிச் சீட்டு தமிழிற் தரப்படுவதேயில்லை. தமிழ்நாட்டில் விற்கப்படும் மின்னியியற் சரக்குகள் தமிழிற் கையேடு இல்லாது விற்கப்படுகின்றன. இங்கு விற்பனை செய்யப்படும் கணிகள், கைபேசிகள் தமிழ் இடைமுகம் கொள்ளாது இருக்கின்றன. “தமிழ் என்றைக்கு ஒழியும்?” என்று வழிமேல் விழிவைத்துப் பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். மக்களாகிய நாமோ கோடியிற் புரளும் யாரோவொரு திரைப்படக் கலைஞனின் வெட்டுப் பதாகைக்கு பாலும், சந்தனமும் தெளித்து முழுக்குச் செய்யக் காத்து நிற்கிறோம். நம் சிறார் நம்முடைய விழாக்களில் “Record Dance" ஆடிக்கொண்டிருக்கிறார்கள். நாமும் கூட இருந்து அவர்களைக் கைதட்டி ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிறோம். தமிழாவது ஒன்றாவது? ஏதோ சில பைத்தியங்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.]

[தமிழருக்குள் சிதறு மனப்பான்மை என்பது ஊறித் திளைப்பது போலும். ஒன்றுபட்டு ஒரு குறியேற்றத்திற்குள் வாரார் போலும். வெறுமே மேடைகளிற் “தமிழ் வாழ்க” என்று கூக்குரலிடுவதற்கும். தப்புந் தவறுமாக “ஆங்கிலத்திற்கு அப்புறம் இணையத்தில் உயர்ந்திருக்கும் மொழி தமிழ்” என்று பொய்யாகப் பெருமை பேசுவதற்கும் தான் கணித்தமிழ் பயன்படுகிறது போலும்.]

இப்படி ஒரு தமிழ்க் குறியேற்றம் செயற்படாது பற்பல குறியேற்றம் செயற்பட்டால், என்ன நன்மை நமக்கு விளையும்?

தமிழில் ஒரு சொலவடையுண்டு. கூரையேறிக் கோழிபிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போக ஆசைப்பட்டானாம். பேச்சாவணத்தில் இருந்து எழுத்தாவணம் (speech to text), எழுத்தாவணத்திலிருந்து பேச்சாவணம் (text to speech), இயந்திர மொழிபெயர்ப்பு (machine translation), ஒளிவழி எழுத்துணரி (optical charactert recognition) என்று ஏதேதோ உயர் நுட்பவியல் பற்றிப் பேசவிழைகிறோம். இந்த நுட்பியல் எல்லாம் நமக்கு நடக்கவேண்டும் தான். ஆனால் அடிப்படையில் ஒரு குறியேற்றத்திற்கே இவ்வளவு தடுமாறிக் கொண்டிருந்தால், நம்முடைய கனவுகள் என்று நனவாவது?

பாழாய்ப்போன இந்த மாற்றத்திற்கு ஒரு 6 மாதம் போதாதா? அதற்குள் மற்ற குறியேற்றங்களை மூட்டை கட்டி, எல்லோரும் ஒரு குறியேற்றத்திற்கு வந்து சேரக் கூடாதா? - என்ற ஏக்கம் நம்மை வாட்டுகிறது. “மறுமடியும், மறுபடியும் தாயம் போடு” என்று தடுமாறி ”பரமபத சோபனம்” ஆடிக்கொண்டிருந்தால் எப்படி?

இதற்கு வினையூக்கமாய் நாம் என்ன செய்யப்போகிறோம்?

புலம்பலுடன்,
இராம.கி.

8 comments:

தருமி said...

மிகவும் பொடி எழுத்து. வாசிக்க மிகச் சிரமம் ...

இராம.கி said...

அன்பிற்குரிய தருமி,

உங்கள் பின்னூட்டிற்குப் பின், எழுத்துருவைப் பெரிதாக்கியிருக்கிறேன்.

அன்புடன்,
இராம.கி.

தருமி said...

//ஒருவேளை இணையத்திற்குள் தொடர்ச்சியாக அவர் போனதில்லையோ, என்னவோ?//

க்ல்லூரிப் பேராசிரியர்கள் பலருக்கு கணினியில் எந்தவொரு தொடர்பும் இல்லாதிருப்பது ஆச்சரியமும், வேதனையும். கணினித் துறையில் இருந்தும் கூட பலர் இதனைப்பயன்படுத்துவம் மிகக் குறைவு.

நேற்று தான் ஒரு பெல்ஜிய புகைப்படக்காரர் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டார். அவர்கள் நாட்டின் மொழிக் கதை பற்றியும் சொன்னார். அனேகமாக என் அடுத்த பதிவு அது பற்றியதாகத்தான் இருக்கும்.

தருமி said...

//தமிழே தெரியாது ஒரு மாணவன் தமிழ்நாட்டிற் கல்வி பெற்றுவிடமுடியும். [சீனம் தெரியாது, சப்பானியம் தெரியாது, டாயிட்சு தெரியாது, பிரெஞ்சு தெரியாது, அரபி தெரியாது, துருக்கி தெரியாது, ஈப்ரு தெரியாது அந்தந்த நாடுகளில் கல்வி பெற்றுவிட இயலுமா?] //

நேற்று தான் ஒரு பெல்ஜிய புகைப்படக்காரர் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டார். அவர்கள் நாட்டின் மொழிக் கதை பற்றியும் சொன்னார். அனேகமாக என் அடுத்த பதிவு அது பற்றியதாகத்தான் இருக்கும்.

இராம.கி said...

ஐயா,

எழுதுங்கள்.

உங்களின் பழைய கல்லூரியில் கணித்தமிழ் பற்றியும், இணையம் பற்றியும் ஒரு பட்டறை நடத்தி ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு கொண்டு வாருங்கள். தமிழ்நாட்டுக் கல்லூரிகளில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும். அதையோர் இயக்கமாகச் செய்தாற்றான் முடியும். தமிழக ஆசிரியரும், மாணவரும் இணையத்தைப் பயன்படுத்துவதும், தமிழில் எடுகோட்டு உள்ளடக்கம் (online - content) கூடுவதும் தேவையானவை.

அன்புடன்,
இராம.கி.

தருமி said...

ஏற்கெனவே மதுரைப் பதிவர்கள் எங்கள் கல்லூரியில் ஒரு பட்டறை நடத்தினோம். இப்போது கல்லூரியின் நிலமை சரியில்லாததால் தொடரவில்லை.

R.Shanmugham said...

தருமி அவர்களே!.. எழுத்தைப் பெரிதாக்கிப் படிக்க Ctrl பொத்தானை அழுத்திக்கொண்டு Mouse'ன் Roller ஐ மேலே சுழற்றுங்கள்.. எழுத்துக்க்ள் பெரிதாகும்..

தருமி said...

சண்முகம் அவர்களே,
சின்ன .. ஆனால், பெரிய பயனுள்ள உத்தி.
மிக்க நன்றி