திராமிர சங்காத்தம் / தமிழ் மூவேந்தர் உடன்பாடு:
தமிழகத்தை அடுத்திருந்த மொழிபெயர்தேயம் மூவேந்தர் காவலுக்குட்பட்டதாக மாமூலனாரின் அகநானூறு 31-ஆம் பாட்டில் வரும் ”தமிழ்கெழுமூவர் காக்கும் மொழிபெயர்த் தேஎத்த பல்மலை” என்ற சொற்றொடரால் உணருகிறோம். மாமூலனார் காலம் மோரியருக்குச் சற்று பின்பட்டது. மாமூலனார் சொல்வது போல், [வடபுலத்தார் படை தென்புலத்துள் நுழையா வண்ணமும், தென்புலத்துச் சாத்துக்கள் தயக்கமின்றி தக்கணப்பாதையின் வழியாக மகதம் வரை போய்வரும் வண்ணமும்,] ஓர் ஒன்றிணைந்த காவலைத் தமிழ்மூவேந்தர் மொழிபெயர் தேயத்தில் ஏற்படுத்தியிருப்பார்களேயானால், மூவேந்தரிடையே ஏதோவோர் அரசியல் உடன்பாடும் புரிதலும் இருந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. [தமிழரா? ஒற்றுமையா? எப்படி? - என்ற நகைப்புக் கேள்வி இங்கு எழுகிறதோ?]
இதைக் கலிங்கவேந்தன் காரவேலனின் புகழ்பெற்ற அத்திகும்பாக் கல்வெட்டும் உறுதி செய்கிறது. காரவேலனின் கல்வெட்டுக் காலம் கி.மு.172 என்று அண்மையில் வெளிவந்த “The haathigumphaa Inscription of Khaaravela and the Bhabru Edict of Asoka” என்ற நூலில் சசி காந்த் (Shashi Kant) என்பவர் நிறுவுவார். [அவருக்கு மாறாய் அத்திக்கும்பாக் கல்வெட்டின் காலம் கி.மு.117க்கு அண்மையில் என்று சொல்வாரும் உண்டு],
இந்தக் கல்வெட்டில்”திராமிர சங்காத்தம்” என்ற பாகதச் சொல்லால் தமிழ் மூவேந்தர் உடன்பாடு குறிக்கப்படும். ”திராமிர” என்ற அடையாளம் முதன்முதலில் ஒரு கல்வெட்டில் இதிற்றான் புழங்கியது. இங்கே குறிப்பிடப்படும் ”திராமிர சங்காத்தம்” என்பது கல்வெட்டிற் சொன்னபடி ”1300 ஆண்டுகள்” நிலைத்ததாகவும், ”அவ்வளவு நீண்டகாலம் இருந்திருக்க வழியில்லை” என்று தமக்குள் வியப்புக் கொண்டு, அதை வெறும் ”113 ஆண்டுகள்” என்ற சொந்தக் கருதுகோளை முன்வைத்து தாம் வாசித்ததாகவும் புகழ்பெற்ற கல்வெட்டாய்வாளர்கள் K.P Jaiswal-உம், R.D. Bannerji-யும் தங்கள் கட்டுரையில் வெளிப்படுத்துவார்கள் (23). பின் வந்த பல வரலாற்றாசிரியரும் ”113 ஆண்டுகள்” என்ற செயிசுவால் - பானர்சி கருதுகோளை அப்படியே உண்மை என்று ஏற்று தமிழர் வரலாற்றைப் பின்னுக்குத் தள்ளுவர். [அடிக்கோள் மறந்து கருதுகோள் உண்மையாகிப் போன சோகம் இங்கு நிலவுகிறது.]
ஆனால் மேலே குறிப்பிட்ட அண்மையாய்வாளர் Shashi Kant என்பார், ஜெய்சுவால் - பானர்சியில் இருந்து முற்றிலும் வேறுபட்டு, இக்கல்வெட்டின் உள்வரும் காலக் குறிப்புகள் எல்லாம் மகாவீரரின் இறப்பின் பின்வந்த முற்றாண்டுகளையே குறிக்கின்றன என்று நிறுவி, ”திராமிர சங்காத்தம்” என்பது ம.பி. [மகாவீரருக்குப் பின்] 113 ஆம் ஆண்டில் ஏற்பட்டது என்று வரையறுப்பார். அதாவது திராமிர சங்காத்தம் ஏற்பட்டது (கி.மு.527-113=) கி.மு.414 என்பார் (24).
இப்படியாக, கி.மு.172 ஆம் ஆண்டுக் காலத்துக் காரவேலன் கல்வெட்டு கி.மு.414 இல் இருந்த தமிழ் மூவேந்தர் உடன்படிக்கை பற்றிப் பேசுவது, முன்னாற் சொன்னது போல், சங்ககாலம் பற்றிய புதிய பார்வையை நமக்குத் தருகிறது. [இந்தக் கட்டுரையில் சசி காந்த்தின் ஆய்வுமுடிவுகளை அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளேன். தமிழக வரலாற்றாசிரியர் யாரும் காரவேலன் கல்வெட்டை தமிழர் பார்வையில் ஊன்றிப் படித்ததாய்த் தெரியவில்லை. அப்படிப் படிப்பது தமிழர்க்குத் தேவையானது. (கல்வெட்டும் அதன் ஓரளவு தமிழ் மொழிபெயர்ப்பும் இந்தக் கட்டுரைத் தொடரின் இறுதியிற் கொடுக்கப்பட்டுள்ளன.) பாகத மொழி, இலக்கணம் நன்கு தெரிந்த தமிழகக் கல்வெட்டாய்வாளர் இதை மீளாய்ந்தால், தமிழர் வரலாறு இன்னுந் தெளிவு பெறூம். தமிழர் வரலாற்றைக் கணிப்பதற்கு இக்கல்வெட்டு ஒரு திறவுகோல் என்றே நான் எண்ணுகிறேன்.]
இந்தத் ”திராமிர சங்காத்தத்தின்” கூறுகளாய் மூன்று கருத்துக்களை நாம் உன்னித்துக் கருதலாம்.
1. மூவேந்தரும் தம்முள் எவ்வேளிரையும், அடக்கலாம்; ஆனால் அவரிடம் இறைபெற்ற பின், தனியாட்சிக்கு விட்டுவிடவேண்டும். அவர் கொடிவழியை அழிக்கக் கூடாது. [வேளிருக்கும் வேந்தருக்கும் இடையே கொள்வினை, கொடுப்பினைகள் காலகாலமாய் உண்டு.]
2. தமிழகத்திற்கு வெளியிருந்து மூவேந்தர் / வேளிர் மேல் யாரேனும் படையெடுத்தால், தமிழகம் காக்க மூவரும், தங்களுக்குள் என்ன மாறுபட்டாலும், அதைப் பொருட்படுத்தாது, ஒருவருக்கொருவர் உதவ வேண்டும்;
3. தமிழகத்தில் இருந்து தக்கணப்பாதைவழி வடக்கே போய்வரும் சாத்துக்களைக் காப்பாற்றும் வகையில், மொழிபெயர் தேயத்தில் மூவேந்தர் நிலைப்படைகள் (standing armies) நிறுத்திச் செயற்பட வேண்டும். [நிலைப்படையை மாமூலனார் பாடல்கள் குறிப்பாக சொல்லுகின்றன.]
கொங்குக் கருவூரும், சேரரும்:
காரவேலனின் அத்திகும்பா கல்வெட்டால் இன்னொரு செய்தியும் தெரிகிறது. அதாவது, Pithumda என்ற நகரில் உள்ள ஆவ (<ஆவியர்) அரசனை அழித்து, நகரைச் சூறையாடி, கவடிப் (வெள்வரகு) பயிரை வித்தி, கழுதையால் காரவேலன் உழுதிருக்கிறான். பாகதத்தில் Pithumda என்பதற்கு round walled என்ற பொருளுண்டு. பித்திகை என்ற தமிழ்ச் சொல்லிற்கும் வட்டச் சுவர் என்று பொருள் உண்டு. வட்ட மதில் கொண்ட இவ்வூர் தமிழக ஊராகச் சொல்லப்படுவதால், அதைக் கருவூராகக் கொள்ளுதற்குப் பெரும்வாய்ப்புண்டு. ஏனெனில், அக்காலத் தமிழகத் தலைநகர்களில் மதிரையும் கருவூருமே வட்ட மதில் கொண்ட பெருநகரங்களாகும். (மதில்>மதிரை = walled city மதுரை என்னும் இலக்கியப் பெயர் மீத்திருத்தமாகவே தெரிகிறது. இதுவரை கிடைத்த பழந்தமிழிக் கல்வெட்டுக்களில் மதிரை என்ற பெயரே இருக்கிறது; மதுரையில்லை.)
கருவூர் நகரை அழிக்கும் அளவிற்கு அந்நகரில் என்ன சிறப்பு? அருகில் இருந்த கொடுமணமா? [கொடுமணம் என்பது கருவூருக்கு அருகில் பெரும் மணிகளைக் கடைந்து அணிகலன்கள், மாலைகள் செய்த இடமாகும் (25). கொங்குக் கருவூர் என்றும் வணிகச் சிறப்புக் கொண்ட ஊர் தான்]. மறுமொழியில்லாத கேள்விகள் பலவும் நம்முள் எழுகின்றன. இந்த ஊரைப் பிடிப்பதற்கு முன்னோ, பின்னோ, மூவேந்தருக்கு இடையிருந்த உடன்பாட்டை (திராமிர சங்காத்தத்தை) முறித்ததாகவும் இக்கல்வெட்டு ஆவணப்படுத்துகிறது. இதுபோன்றதொரு வேளிர் நாட்டைப் பிடிக்க, திராமிர சங்காத்தத்தை ஏன் முறிக்க வேண்டும்? அந்தக் காலத்தில் ஆவியருக்கும் மூவேந்தருக்கும் என்ன தொடர்பு? - என்ற கேள்விகள் நம் மனத்தை உறுத்துகின்றன.
வேளாவிக் குடியினர் என்பார் பொதினியைத் (இற்றைப் பழனியைத்) தலைநகராய்க் கொண்டு ஒரு பெரும்பகுதியை ஆண்டவர். சேரரோடு கொள்வினை கொடுப்பினை உறவு கொண்டவர். நெடுஞ்சேரலாதனுக்கும் அவனுடைய ஒன்றுவிட்ட தம்பி செல்வக்கடுங்கோ வாழியாதனுக்கும் ஆவியர்குடியைச் சேர்ந்த அக்கா (பதுமன்தேவி) தங்கையர் மாலையிட்டிருக்கிறார்கள். நெடுஞ்சேரலாதன் தந்தை உதியச் சேரலுக்கு வெளியன் வேள்மான் மகள் நல்லினி வாழ்க்கைப் பட்டிருக்கிறாள். அந்துவஞ் சேரலுக்கும் இந்தப் பக்கத்தில் இருந்த வேளிர் மகளே வாழ்க்கைப் பட்டிருக்கிறாள். [அவள் தந்தை பெயர் சங்க இலக்கியத்தின் வழி தெரியவில்லை.] அவளும் ஓர் ஆவிக்குடிப் பெண்ணோ, என்னவோ? ஆவியர் குடிக்கு ஒன்றென்றால், தாய்வழியுறவு கருதிச் சேரர் முன்வந்து மாற்றாரைப் பழிவாங்குவது பதிற்றுப் பத்துப் பதிகங்களைப் படித்தால் நடக்கக் கூடியதே. ஆனாலும் திராமிர சங்காத்தம் இதனுள் எப்படி வந்தது? - மறுமொழி கிடைக்கவில்லை.
காரவேலனுக்குப் பின் கொங்குக்கருவூரைச் சேரரே மீட்டிருக்கிறார்கள். அந்துவஞ்சேரல் கொங்குக் கருவூரைப் பிடித்தபின்னால், ஆவிக்குடியினர் மீண்டும் அங்கு ஆளவில்லை. ஒருவேளை பொதினிக்கருகில் தம் பாதிநிலத்தோடு அவர் ஒடுங்கினரோ என்னவோ? [18 ஆம் நூற்றாண்டிற் சசிவர்ணத்தேவருக்கு பெண்கொடுத்த கிழவன் சேதுபதி தன்நாட்டை இருகூறாக்கிச் சிவகங்கைச்சீமை என்ற புது அரசை உருவாக்கித் தன்மகளுக்குப் பாதிநிலஞ் சீராய்க் கொடுத்து, அது தனியுரிமை பெற்றது போல் இது நடந்ததா என்பது ஆய்விற்குரியது. ஏனெனில் செல்வக்கடுங்கோ வாழியாதன் தொடக்கத்திற் தன்னுடைய ஒன்றுவிட்ட சோதரனான பல்யானைச் செல்கெழுகுட்டுவனோடு சேர்ந்து பூழிநாட்டிலேயே வாழ்நாளைக் கழித்திருக்கிறான். (இற்றைப் பொன்னாணிக்கு அருகில் உள்ள. பூழி என்பது சேரநாட்டிலும் உண்டு; பாண்டிநாட்டிலும் உண்டு. பாண்டிநாட்டுப் பூழி என்பது சங்கரன் கோயிலுக்கு அருகில் உள்ளது. 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பூழித் தேவன் பூலித்தேவன் என்று ழகரம் திரிந்த நிலையில் அழைக்கப் பட்டிருக்கிறார். பூழி = புழுதி) வாழியாதன் தந்தை அந்துவன்தான் கொங்குக் கருவூரை ஆண்டவன். அந்துவனுக்குப் பின் சிறிது காலமே செல்வக்கடுங்கோ கொங்குக் கருவூரை ஆண்டிருக்கிறான்.]
தங்கம் போன்ற கனிமங்கள் விளையும் கொங்குநாட்டின் நடுவுநிலை குலைந்து அதன் ஒருபகுதி சேரருக்குள் அமிழ்ந்தது மற்றவிரு வேந்தருக்கும் ஏற்பில்லாது, அதனால் திராமிர சங்காத்தம் முறிந்ததா? இதில் காரவேலன் பங்கென்ன? - தெரியாது. சூழ்ச்சியும், இருபுலப் பரிமாற்றமும் (diplomatic exchanges) நடந்திருக்கின்றன. என்னெவென்று, நமக்கு விளங்கவில்லை. ஆனால் திராமிர சங்காத்தம் முறிந்ததால், மூவேந்தருக்கிடையே மூண்ட பெரும் புகைச்சலும், ஒருவருக்கொருவர் நம்பாமையும், வன்மமும் காரவேலனுக்குப் பெருவாய்ப்பைத் தந்திருக்க வேண்டும். ஒருவேளை அதனாலேயே கொங்குக் கருவூர்மேல் அவன் படையெடுத்தான் போலும்.
சிலம்பில் சோழ, பாண்டியர் நிலை:
இனிச் சோழநாட்டு நிலைக்கு வருவோம். சிலம்பிற்குச் சற்று முன்பு சோழநாடு இரண்டானது சிலம்பிலேயே வெளிப்படுகிறது. வள நாட்டுச் சோழன் (உறையூர்ச் சோழன்) ஒரு கிள்ளி/வளவன். இவன் செங்குட்டுவனின் மாமன் மகன். உறையூர் அரசு கட்டிலில் அவனை ஏற்றியவனும் செங்குட்டுவனே. நாகநாட்டுச் சோழன் (புகார்ச்சோழன்) ஒரு செம்பியன்; செங்குட்டுவனை மதியாதவன். [நாக நாடு என்பது சிலம்புக் காலத்தில் புகாரைச் சுற்றிய சிறு நாடு. இதுவும் சோழநாடு தான். நாக நாட்டை சரியாக அடையாளம் காணாது அதனைப் ”பாதாள உலகம்” என்று புரிந்துகொண்டவர் பலர். நாக நாடு என்பது ஒருபக்கம் புகாருக்கு அருகிலும், இன்னொரு பக்கம் யாழ்ப்பாணத்திலும் விரிந்தது போலும் (26). நாகனார் தீவான நயினாத் தீவு, மணிபல்லவம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டது. புகாருக்கே, நாகரோடு தொடர்புடைய சம்பாதி என்ற பெயரும் உண்டு. தவிர அதே நாட்டுள் நாக(ர்)பட்டினம் என்ற இன்னொரு துறைமுகமும் உண்டு.]
நாகநாடும், வளநாடும், நாடுகாண் காதை (40-43) வரிகளின் படிச் சிறு நாடுகளாவே இருந்திருக்கின்றன. காடுகாண் காதையில் வரும் வரிகளை (27A) ஆய்ந்து பார்த்தால் இந்த நாடுகளின் நீட்சியை ஓரளவு அறியலாம். புகார் நகரிலிருந்து காவிரியை ஒட்டினாற் போல் நாகநாட்டின் எல்லை வெறும் 50-60 கி.மீ மட்டுமே இருந்தது என்று நம்பமுடிகிறாதா? அண்மை ஆய்வின் முடிவில் இவ்வுண்மை அறிந்து நானும் வியப்பில் ஆழ்ந்தேன் (27B) இதே போல, வளநாட்டின் கிழக்கெல்லை திருவரங்கத்திற்கு அருகிலே முடிந்து விடுகிறது. நாகநாட்டின் வடக்கெல்லை தென்பெண்ணையாற்றில் இருந்திருக்கலாம். வளநாட்டின் வடக்கெல்லை தெரியவில்லை. வளநாட்டின் மேற்கெல்லை உறையூருக்கும், கொங்குக் கருவூருக்கும் இடைப்பட்டது. பொதுவாக, வளநாடும், நாகநாடும் சிலம்பின் காலத்தில் சிறு நாடுகள். வளநாட்டிற்கும் நாகநாட்டிற்கும் இடைத்தொலைவு காவிரியை ஒட்டி பாண்டியனிடமே இருந்திருக்கிறது. இது மாங்காட்டு மறையவன் கூற்றால் விளங்குகிறது (28).)
பாண்டியன் நெடுஞ்செழியனும், அவன் தம்பி வெற்றிவேற் செழியனும் கூட செங்குட்டுவன் மேலாளுமையை ஏற்காதவர். [”இளங்கோ வேந்தன் துளங்கொளி ஆரம்” என்ற கொலைக்களக் காதை 163 வரிகளின் பின் செழியன்மகன் பற்றிக் குறிப்பு வருகிறது. மதுரை எரியுண்டதில் செழியன் மகன் இறந்ததால், கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன், நெடுஞ்செழியனின் தம்பியாய் இருக்கவே வாய்ப்பு அதிகம்.]
மொத்தத்தில் சோழரும், பாண்டியரும் வலிவின்றி அதே பொழுது சேரரோடு முரணிய காலமே சிலம்பின் காலமாகும். தமிழ் மூவேந்தர் உட்பகை கூடிய காலமாததால், அதைக் குறைக்கும் முகமாய் தமிழ்-தமிழர் என்பதை முன்னிறுத்தி, சிலப்பதிகாரம் எழுந்திருக்கலாம். மூன்று குறிக்கோள்களுக்கும் மேல்,”ஒற்றுமை” வேட்கை உட்கிடக்கையாய் நூலுள் இருந்திருக்கிறது. ‘சங்காத்தம்’ குலைத்த சேரரிடம் இருந்தே இத்தகைய ஒற்றுமை முயற்சி எழுந்திருக்கலாம். [சிலப்பதிகாரம் என்ற காவியப் பெயருக்கே இரு பொருட்பாடுகள் உண்டு. ஒன்று சிலம்பால் அதிகரித்த கதை; இன்னொன்று சிலம்பின் (=மலை, மலைநாடு) அதிகாரம் கூடிய கதை.]
பொதுவாக வம்ப மோரியர் தங்கள் காலத்தில் தமிழகத்தைத் தாக்கியதும், மோரிய அசோகனுக்குப் பின்னால் வந்த சுங்கரின் கடைசி வலிக்குறைவும், சேரரின் வடசெலவுக்குக் காரணமாகலாம். சிலம்பை மீளாய்வது, தமிழர் வரலாற்றைப் புரிய வைக்கும். உள்ளூர்ச் சண்டையைக் குறைத்து, ”தமிழகம் ஒன்றே” என்பதை நிலைநிறுத்தும் முயற்சியில் வெளியாரை வெற்றிகொண்ட செய்திகள் முன்கூறப்படுவதை வேனிற்காதை (1-5), ஆய்ச்சியர் குரவை (1-5) வரிகளிற் காணலாம் (29).
எடுகோள்கள்:
23. http://enc.slider.com/Enc/Hathigumpha
24. Shashi Kant, “The Hāthīkumphā inscripṭion of Khāravela and the Bhabru Edict of Asoka”, pp.35-36, D.K.Printworld (P) Ltd.,2000
25. முனைவர். கா.ராஜன் “தொல்லியல் நோக்கில் சங்ககாலம்” பக.117-130, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2004.
26. http://www.tamilnet.com/art.html?catid=98&artid=31711
27. A.முதிராக் கிழவியின் முள்ளெயிறு இலங்க
மதுரை மூதூர் யாதென வினவ
ஆறைங் காதம் மகனாட்டு உம்ப
நாறைங் கூந்தல் நணித்து என
- நாடுகாண் காதை (40-43)
B. அளவைகள் - 6. இராம.கி. யின் வலைப்பதிவு இடுகை: http://valavu.blogspot.com/2009/07/6.html
28. அடியில் தன்னளவு அரசர்க்கு உணர்த்தி
வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி
- காடுகாண் காதை (17-22)
29. நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நன்னாட்டு
மாட மதுரையும் பீடார் உறந்தையும்
கலிகெழு வஞ்சியும் ஒலிபுனற் புகாரும்
அரைசு வீற்றிருந்த உரைசால் சிறப்பின்
- வேனிற் காதை (1-5)
கயல் எழுதிய இமய நெற்றியின்
அயலெழுதிய புலியும் வில்லும்
நாவலந்தண் பொழில் மன்னர்
ஏவல் கேட்பப் பாரர சாண்ட
மாலை வெண்குடைப் பாண்டியன் கோயிலில்
- ஆய்ச்சியர் குரவை (1-5)
அன்புடன்,
இராம.கி.
4 comments:
இந்தக் கட்டுரையில் சசி காந்த்தின் ஆய்வுமுடிவுகளை அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளேன்...
அடிகோளை மறுத்து கருதுகோளை உருவாக்கிய அவர்களின் கூற்றை தாங்களும் ஏற்றுக் கொண்டுள்ளது எனக்கு பெரும் வியப்பாக உள்ளது அய்யா...
பஃருலி ஆற்றின் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள..." இதற்குச் சரியான விளக்கம் என்ன என எவரும் கொடுக்க வில்லையே!
மகாவீரர் ஏன் பரசுராமசேத்ரம் எனப்பின்னர் பெயர்பெற்ற சேரளநாட்டைக் கைப்பற்றிய பரசுராமராக இருக்கக்கூடாது? நீர் ஆறு கடல் என்பன சிறு நடுத்தர மற்றும் பெரும் படைத் தொகுதிகள் எனக் கொள்ளலாமே!
பரசுராமர் தனது மழுப்படையை நீரில் வீசியதால் கடல் விலகிச்சென்றதாகத் தகவல்கள் உள்ளன! பெரும் போர் நடந்துள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள இயலும்!
குமரிப் பகுதி பரசுராமரால் கைப்பற்றப்பட்டதையே பாடல் சொல்கிறது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியே அன்றைய குமரிக்கோடு என இடம்பெற்றுள்ளது.
"...பஃருளி ஆற்றின் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள..."
என உள்ள பாடல் அடிகளுக்கு சரியான விளக்கத்தை எவராவது கொடுங்களேன்.
மகாவீரரை ஏன் பரசுராமராக ஏற்கக்கூடாது?
ஆறு கடல் என்பன போர்ப்படையின் அளவையும் திறத்தையும் குறிபாபதாகவே உள்ளது!
சேரளநாட்டுக்கு பரசுராமசேத்ரம் என்றபெயர் எப்படி உருவானது?
அந்நாட்டை அவர் கைப்பற்றியதாலேயே அப்பெயர் உருவானதாகத் தெரிகிறது.
பரசுராமர் தனது மழுப்படையை கடல்நீரில் வீசியதால் கடல்நீர் விலகிச் சென்றுள்ளதாக - அவரது படையுடன் வலிமையற்றோர் போரிட்டு வீழ்ந்ததால் மேற்குத்தோடர்ச்சிமலையும் பஃருளி ஆற்றுப்பன்மலை அடுக்கமும் அவர்வசமாயின!
வேதங்களிலும் இதற்கான சான்றுகள் பல உள்ளன! சுதாசன் என்பானுடன் நடந்த போர் குறித்த தகவல்கள் இங்கு நோக்கத்தக்கது.
சமதக்கினியின் மகனே பரசுராமர். மணிமேகலையில் மதங்கள் குறித்தும் அவற்றுக்கான நூல்கள் குறித்தும் வினா எழுப்பி விடைகாண நடந்த நிகழ்வில் பரசுவிடம் பலகேள்விகள் கேட்கப்பட்ட போது அவை பரசுராமரிடம் கேட்கப்பட்டதாகவே கொள்ளவேண்டும்!
நேரத்தில் பரசுராமரால் உருவான நெறிக்கேடுகளை அவரது மகன் நீக்கியதாக உள்ள தகவல்களும் உண்மையே!
இந்த வரலாறு மிகமிக நீண்டது. அதன் தொடக்கமே நமது பழந்தமிழ் இலக்கியப் பாடல் "வில்லோன் காலன கழலே தொடியோள் ..." என உள்ள பாடல்! அதில் ஆரியரும் இடம்பெற்றுள்ளனர்! அதில் வில்லாளியாக இடம்பெற்றவரே பரசுராமர் தான்! அவருடன் சென்ற சிறுமியே சுதாசனான கரிகால் சோழன் யின் தங்கை. அவள் சோழநாட்டு இளவரசி மாவால்!
Post a Comment