சிலம்புக் காலத் தமிழக நில முகப்பு (map):
படம் 1: தமிழர் வரலாறு - பி.இராமநாதன், தமிழ்மண் பதிப்பகம்
மேலேயுள்ள படம் - 1(30) கிட்டத்தட்ட கி.மு. முதல் நூற்றாண்டில் நிலவிய தமிழக எல்லைகளைக் குறிக்கும். இந்தக்காலத்தில் சேரர் நாடு என்பது கொங்குநாட்டையும் இணைத்து மூவரிலும் பெரிதானது. செங்குட்டுவன் காலத்தில் இன்னும் இது வடக்கே விரிந்திருக்கலாம். குடநாட்டு வஞ்சி மூன்று திசைகளிலும் வீச்சுக் கொண்டதாய் இருந்தது. கோசர் நாடு (south canara) என்னும் துளுநாடு இற்றை மங்களூரைச் சுற்றியது. சிலம்பின் காலத்தில் இதுவும் சேரருக்கு அடங்கியது என்றே தோன்றுகிறது.
படத்தில் தொண்டை,நாட்டையும், நாகநாட்டையும் பிரிப்பது தென்பெண்ணை ஆறாகும். வளநாடு தான் அன்றிருந்த மூவேந்தர் நாடுகளுள் மிகவும் சிறியது. வளநாட்டிற்கும், நாகநாட்டிற்கும் இடையே காவிரியின் தென்கரை வரைக்கும், பாண்டிநாடு துருத்தியதை மாங்காட்டு மறையவன் கூற்றால் அறிகிறோம். பெரும்பாலும் இற்றைத் திருவாங்கூரையும், அதற்குத் தெற்கிலும் இருக்கும் வேணாடு உட்பட்ட கேரள நிலங்கள் தென்பாண்டி நாட்டிற் சேர்ந்திருக்கலாம். படத்தில் பாண்டிநாட்டிற்கும், வளநாட்டிற்கும், நாகநாட்டிற்கும் இடைப்பட்ட எல்லைகள் தெளிவாகக் குறிக்கப் படவில்லை. இவையும் ஆய்விற்குரியன. மூவேந்தர் போக, குறுநில வேளிர் பலரும் அவரிடை இருந்திருக்கின்றனர். அவர்நாடுகளும் படத்திற் குறிக்கப் படவில்லை.
முதற் கரிகாலன் பற்றிய செய்திகள் / உத்தர, தக்கணப் பாதைகள்:
தமிழ் மூவேந்தரின் பின்புலத்தைப் பார்க்கும் போது, சிலப்பதிகாரக் காலத்தில் அவரிடையே பெரும் ஒற்றுமைக்குலைவு இருந்ததை மேலே குறிப்பாகப் பார்த்தோம். இத்தகைய குலைவில் இருந்து தமிழர்நிலை மாறவே, தமிழரெனும் குடை பிடித்து, முன்னோர் பெருமிதங்களை இளங்கோ தன் காப்பியத்துள் சொல்லுகிறார் என்பது சிலம்பைப் படிக்கும் யாருக்கும் விளங்கும். முதற் கரிகாலன் பற்றிய சிலம்பின் செய்தியும் அத்தகைய முன்னோர் பெருமிதங்களில் ஒன்றே.
சிலம்பை ஆழ்ந்து படிக்காத பலரும் முதற் கரிகாற் சோழனைச் சிலம்பு காலத்தவனாகவே சொல்கிறார்கள். அந்தப் புரிதல் முற்றிலும் தவறு. இந்திரவிழவு ஊரெடுத்த காதையின் 89-104 ஆம் வரிகளைப்(31) படித்தால், கரிகாலன் புண்ணிய திசைமுகம் (= வடக்கே காசியை நோக்கிய பயணம்) போனது ‘அந்நாள்’ (= ’சிலம்பிற்கு நெடுங்காலம் முன்னால்’) என்பது தெள்ளத் தெளிவாக விளங்கும். அந்த விவரிப்பின் 96 ஆம் வரியில் வரும் ’பகைவிலக்கிய பயங்கெழு மலை’ என்பது இமயத்தைக் குறிக்கும்.
திருமாவளவன் வடநாட்டுச் செலவில் சென்ற நாடுகள் வச்சிரம், மகதம், அவந்தி ஆகிய மூன்றாகும். இவற்றில் ’பகைப்புறத்து மகத’த்தோடு போர் நடந்திருக்கிறது. ’உவந்து கொடுத்த அவந்தி’யோடு போர் நடக்கவில்லை. மகதத்திற்கு மேற்கில் இருந்த வச்சிரம் இறை கொடுத்ததால், போர் நடவாது போயிருக்கலாம். கோசலத்திற்கு வடக்கே இருந்த இமயத்தில்.எங்கு புலிச்சின்னம் பொறித்தான் என்பது கள ஆய்விற்குறியது.
அவந்திக்குப் போகும் வழியிலிருந்த நாடுகள் மொழிபெயர் தேயத்தில் இருந்தவை. அவை பற்றி ஏதும் இங்கு பேசாததால், எந்தவிதமான எதிர்ப்புமின்றி திருமாவளவன் எளிதிற் கடந்திருக்கிறான் என்றே பொருள் கொள்ளலாம். மூவேந்தர் காவலுக்குட்பட்ட மொழி பெயர் தேயம் ஆங்கிலத்தில் சொல்லப் படுவது போல், ஒருவகை buffer states ஆகவே இருந்திருக்கலாம். கீழேயிருக்கும் படத்தில்(32) தக்கண, உத்திரப்பாதைகள் சுட்டிக் காட்டப் படுகின்றன. கரிகாலனின் வடசெலவைப் புரிந்து கொள்ள உதவும் தக்கணப்பாதை இக்கட்டுரையாசிரியனால் படத்தில் படித்தானத்திற்கும் (Paithan) தெற்கில் நீட்டிக் காட்டப் பட்டிருக்கிறது.
கி.மு.600ல் இருந்து கி.பி.300 வரை இந்திய அரசுகள் என்பவை இன்றைய ஆந்திரப் பிரதேசத்தையும், ஒரிசாவையும், சத்திசுகாரையும், சார்க்கண்ட், பீகார், வங்காளம் போன்ற இடங்களையும் முழுதும் ஆட்கொள்ளவில்லை. இவ்விடங்கள் எல்லாம் பெருங்காடுகளாய் இருந்தன. காடுகள் குறைந்த உத்திரப் பிரதேசம், ஓரளவு மத்தியப் பிரதேசம், குசராத், மராட்டியம் போன்றவை வழியாகத்தான் வடக்கு/தெற்கு வணிகமே நடந்தது.
அன்றைய உத்தர, தக்கணப் பாதைகள் வணிகத்துக்கு மட்டுமல்லாது, அரணம் (army) நகர்வதற்கும், கோட்டைகள் அமைத்துக் காவல் செய்வதற்கும் கூட முகன்மையானவை. இந்தப் பாதைகளைக் கைக்குள் வைத்துக் கொள்ளாத எந்தப் பேரரசும் மிக எளிதில் குலைந்து போயிருக்கும். அதே போல எந்த எதிரியும், இந்தப் பாதைகளைத்தான் முதலில் கைக்கொள்ளத் துடிப்பான். மாதண்ட நாயகர்கள் இந்தப் பாதைகளின் விளிம்புகளில் தான் பேரரசால் பணிக்கு அமர்த்தப் படுவார்கள். இந்தப் பாதைகள் பெருவழிகள் என்று வரலாற்றில் சொல்லப்படும்.
படம் 2: உத்தர, தக்கணப் பாதைகள்
வடமேற்கில் தக்கசீலம் தொடங்கி, (ஜீலம், செனாப், ராவி, சட்லஜ் என்னும்) நான்கு ஆறுகளைக் கடந்து கங்கையையும் கடந்து அத்தினாபுரம் வழி, சாவத்தி, கபிலவாய்த்து, குசினாரா, வேசாலி, பாடலிபட்டணம் வழியாக அரசகம் (முதல் இந்தியப் பேரரசான மகத்தின் தலைநகரான இராசகிருகம் - Rajgir) வரை வந்து சேரும் பாதையை உத்தர பாதை என்று சொல்லுவார்கள்.
இதே போல, கோதாவரியின் வடகரையில் இருக்கும் படித்தானம் (patiththaana> prathisthana; patiththaana> payiththaana> paithan; இன்றைய அவுரங்காபாதிற்கு அருகில் உள்ளது) தொடங்கி அசந்தா, எல்லோரா வழியாக வடக்கே நகர்ந்து, தபதி, நர்மதை ஆறுகளைக் கடந்து, நர்மதைக் கரையில் இருக்கும் மகேசர் வந்து, பின் கிழக்கே திரும்பி, குன்றுப் பகுதியில் (Gond country) இருக்கும் கோனாதா வந்து, உஞ்சைக்குப் (Ujjain) போய், பில்சா(Bhilsa) வந்து நேர்வடக்கே திரும்பி தொழுனை (=யமுனை) ஆற்றின் கரையில் இருக்கும் கோசாம்பி (kosam) வந்து, அயோத்தி என்ற சாகேதம் (Fyzaabaad) வந்து முடிவில் சாவத்தியில் சேருவது தக்கணப் பாதையாகும். (சாவத்தி கோசலத்தின் தலைநகர் கிட்டத்தட்ட நேபாள எல்லையில் உள்ளது. கோசலமும், மகதமும் கி.மு. 6ம் நூற்றாண்டில் ஒன்றிற்கொன்று போட்டி போட்டிருந்த நாடுகள்.)
உத்தர, தக்கணப் பாதைகள் போக, கங்கையை ஒட்டியே பாடலியில் இருந்து மேற்கே சென்றால் வாரணசி வழி, கோசாம்பி அடையும் பெருவழியும் அந்தக் காலத்தில் முகன்மையான ஒன்றாகும்.
எந்த வடநாட்டுப் படையெடுப்பும் இந்த முப்பெரும் பாதைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் நடக்க முடியாது. மேலேயுள்ள படம் -2 இல் காட்டப்பெறும் தக்கண, உத்தரப் பாதைகள் இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறுகளை நிருணயித்தவை.
முதற்கரிகாலன் காலத்தில் வடக்கில் இருந்த 16 பெருங்கணப் பதங்களில் (mahajana padas) முகன்மையானவை காசி - கோசலம் (தலைநகர் - சாவத்தி / சாகேதம்), மகதம் (தலைநகர் - இராச கிருகம்), வத்சம் / வச்சிரம் (தலைநகர் - கோசாம்பி), அவந்தி (தலைநகர் - உஞ்சை என்னும் உச்சயினி) ஆகிய நாலு பதங்களாகும். வட இந்திய வரலாற்றின் முதற் பேரரசு காசி-கோசலம். அதன்பின் எழுந்த இரண்டாம் பேரரசு மகதமாகும். கி.மு.546-494 ஆண்டுகளில் மகதத்தை ஆண்ட பிம்பிசாரன் மகதத்தின் முதற் பேரரசனாவான். அவனுக்கு முன்னால் வரலாற்றுக் கால அரசர்கள் யாரும் குறிப்பிடப் படுவதில்லை. இந்த அரசனின் காலத்துக்கு நடுவில் தான், கி.மு.527ல் செயின மதத்தின் 24 ஆவது தீர்த்தங்கரர் மகாவீரர் இறந்ததாகச் சொல்லுவார்கள்(33). [மகாவீரர் நிருவாணநாள் குறித்துக் காலக்குழப்பம் இதுவரை சொன்னதில்லை.]
பிம்பிசாரனுக்கு அடுத்து கி.மு.494-462 இல் மகத்தை ஆண்டவன் பிம்பிசாரன் மகனான அசாதசத்து ஆவான். அவன் தன் மாமன் பெருஞ்சேனாதியின் (Presnejit) கோசலத்தையும், விச்சி (தலைநகர் - வைசாலி) யையும் பிடித்ததால், புத்தர் காலத்திற்குப் (கி.மு.563-483) பின், 3 பெருநாடுகளே மீந்தன. [விச்சியும் வச்சிரமும் வெவ்வேறானவை.] இவற்றிலும் அவந்திக்கும் மகதத்திற்கும் இடையே பெரும் புகைச்சல் இருந்ததாகவே வரலாறு சொல்லுகிறது. இவ்விரு நாடுகளுக்கு நடுவிருந்த வச்சிரம் பெரிதும் வலி குறைந்திருந்தது. கி.மு.462-446 இல் அசாதசத்துவிற்குப் பின் வந்த அவன் மகன் உதயன் காலத்தில், கி.மு.459 இல் பாடலிபுத்ரம் என்னும் தலைநகரம் உருவாகியது.
முதற் கரிகாலனின் வடசெலவு அசாதசத்துவின் கடைசிக் காலத்தில் அல்லது உதயனின் தொடக்க காலத்தில், கி.மு.462 -க்கு அண்மையில், நடந்திருக்கவே பெரிதும் வாய்ப்புண்டு. இதே கருத்தைப் பேரா. க.நெடுஞ்செழியனும் வலியுறுத்தியிருக்கிறார்(34). சிலம்பிற் கூறியுள்ளபடி, இப்படையெடுப்பில் அவந்தியரசன் கரிகாலனோடு சேர்ந்து மகதனை எதிர்த்துப் பொருதி இருக்கிறான். அவந்திக்கு அடுத்திருந்த வச்சிர நாடு போரிடாமலேயே கரிகாலனுக்கு அடங்கிப் போயிருக்கிறது. மகதப் போரின் பின்னால் இமையம் ஏறி கரிகாலன் புலிச்சின்னம் பொறித்திருக்கலாம். [அந்தக் காலத்தில் கோசலத்தைக் கடந்தே இமையம் செல்லவேண்டும். அசாதசத்துவின் காலத்தில் கோசலம் மகதத்தின் ஆளுகைக்கு உட்பட்டு விட்டது. எனவே மகதத்தைத் தோற்கடித்தால் இமையம் செல்வது கடினமானது அல்ல.]
இப்படியாக, அசாதசத்துவின் வழியினரோடு கரிகாலன் முதன்முறை பொருதியதற்குப் பின்னால், நந்தர்(35), மோரியர்(36), சுங்கர், கனகர் (இவர்கள் இருவரின் காலத்துச் செய்தி சிலம்பில் வருகிறது; பின்வரும் பத்திகளில் பேசப் படுகிறது), என அடுத்தடுத்து பகைப்புறத்து மகதத்தோடு தமிழகம் தொடர்ந்து பொருதியிருக்கிறது. இந்தப் போர்களை மகதத்தின் பக்கமுமிருந்து யாரேனும் வரலாற்றாய்வு செய்வது நலம் பயக்கும். அப்படியோர் எதிரி அங்கில்லாது இருந்தால், நமது செவ்விலக்கியம் விளம்பும் தமிழ்வேந்தரின் வடசெலவுகளுக்குப் பொருளில்லை. உண்மை எங்கோ பொதிந்திருக்கிறது. இருந்தாலும் தமிழிலக்கியம் கூறுவதை இந்திய, மேல்நாட்டு வரலாற்றாசிரியர்கள் ஒதுக்கியே தள்ளுகிறார்கள்.
மகத்திற்கும் தமிழ்மூவேந்தருக்கும் இடையே விருப்பு-வெறுப்பு உறவுமுறை [love-hate relationship] நிலவி, ஒரேவிதமாய்ச் சிந்திக்கும் ஈர் எதிராளிகளாய்த் (like minded opposites.) இவர்கள் இருந்திருப்பாரோவென்று எண்ணவேண்டியிருக்கிறது. [இருவரிடத்தும் இருந்த அறிவுச் செறிவு, மெய்யறிவியல் வாக்குவாதங்கள் (பட்டிமண்டபங்கள்), ’பனையோலை’ மரங்கள், இரும்பு, வாணிகம், கிட்டத்தட்ட ஒரே மாதிரியான நெல்வேளாண்மை, பல்வேறு குமுக அடையாளங்கள், சமகாலத்திய எதிராளித் தன்மையை ஆழ்ந்து உணர்த்துகின்றன.] மேலே சொன்ன பல்வேறு மகத ஆட்சியாளரைக் கவனித்தால், நந்தரோடு தமிழர் சற்றுக் குறைத்துப் போர் புரிந்திருக்கிறார்கள் என்றும், அவந்தி வச்சிரங்களோடு சிலபோதே போர் நடந்திருக்கலாம் என்பதும் புலப்படுகிறது. .
இந்தப் போர்ச் செய்திகள் மட்டுமல்லாது, தமிழர்கள் அடிக்கடி வடக்கே புனித நீராட்டுப் பயணம் கொள்ளும் போக்கைக் குறிக்குமாப் போல, மத்திய தேசத்தில் இருந்த வாரணாசியும் சிலம்பின் அடைக்கலக் காதை 178 ஆம் வரியில் ”மத்திம நன்னாட்டு வாரணம்” என்று பேசப்படுகிறது(37). செங்குட்டுவனின் அன்னை புனித நீராடியதும் வாரணாசியில் இருக்கலாம். கங்கை நீராடல் என்பது தமிழகத்தின் நெடுநாட் பழக்கம் போலும். இன்றுவரை நிலவுகிறது. [காசித் தடங்கண்ணி (விசாலாட்சி) - ஆலமர் செல்வன் (விசுவநாதன்) என்ற தொன்மங்கள் தமிழரிடம் இன்றுவரை பெரிதும் நிலைத்தன. ஆலங்காடு (Ficus Bengalensis) செழித்திருந்த நாடு மகதம் ஆகும்.]
செங்குட்டுவனின் சமகாலப் பங்காளிகள்:
செங்குட்டுவனோடு, அவன் காலத்துப் பங்காளிகளைச் சிலம்பின் மூலமாகவும், மற்ற சங்க நூல்கள் மூலமாகவும், அடையாளம் காணுவது செங்குட்டுவன் பின்புலத்தை மேலுந் தெளிவாக்க உதவும்.
செங்குட்டுவனின் தந்தையைப் பதிற்றுப் பத்தின் இரண்டாம் பத்துவழியாகவே அறிகிறோம். அவன் இமயம் வரை சென்ற செய்தி மேலும் ஆய்வு செய்யப் படவேண்டியது. ஒருவேளை செங்குட்டுவனின் முதல் வடசெலவும் (அவன் தாய் காசியில் புனித நீராடியது), இமயவரம்பனின் வடசெலவும் ஒன்றாய் இருக்கலாம். தந்தையின் பெயரால் மகன் போரிட்டிருக்கலாம்.
அடுத்தது செங்குட்டுவனின் சிற்றப்பனான பல்யானைச் செல்கெழு குட்டுவன். கட்டுரைக்காதையின் 61-64 ஆம் வரிகள் இவனைக் குறிக்கின்றன(38). இவன் வானுறை கொடுத்த செய்தி பாலைக் கௌதமனாரால் பதிற்றுப்பத்து - 3 ஆம் பத்திலும் உறுதி செய்யப் படுகிறது.
செங்குட்டுவனின் அண்ணன் (பெரிய தாய் மகன்) களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல், (நார்முடிச் சேரலின் நேரடித்) தம்பி ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆகியோர் பற்றிப் பதிற்றுப் பத்தின் 4, 6 ஆம் பத்துகள் வாயிலாக அறிகிறோம். இளங்கோ என்பவர் சேரனின் தம்பியா என்பது வரந்தரு காதையினாலன்றி வேறெங்கும் நமக்குத் தெரிவதில்லை. [வரத்தருகாதை என்ற ஆக்கம் இளங்கோ பற்றி உண்மையைச் சொல்லியிருக்கலாம். அதேபொழுது, எப்பொழுது வரந்தரு காதையை இளங்கோ எழுதியதன்று என நாம் ஒதுக்கினோமோ, அப்பொழுதே நம்மைப் பொருத்தவரை இளங்கோ என்பவர் சேரனின் தம்பி என்ற கதை பட்டுப் போகிறது. உண்மை ஏதென்று நாம் சொல்லுதற்கில்லை.]
கட்டுரை காதையின் படி (79-84ஆம் வரிகள்), ஐங்குறுநூற்றைத் தொகுப்பிக்க உதவிய (யானைக்கண் சேய்) மாந்தரஞ் சேரல் இரும்பொறை செங்குட்டுவனின் சமகாலத்தவன் ஆகிறான். ஆனால், இவன் கொங்குக் கருவூரில் இல்லாது பல்யானைச் செல்கெழு குட்டுவனுக்குப் பிறகு இன்றையப் பொன்னானிக்கருகில் குடநாட்டின் வடக்கிலிருந்த மாந்தரத்தில் ஆட்சி கொண்டிருக்கலாம். யானைக்கண் சேய் மாந்தரஞ்சேரல் குறிக்கப்படுவதன் காரணமாய், முகன்மைச் சங்க இலக்கியத்தொகுப்பு ஏற்பட்டது கூடச் செங்குட்டுவனுக்குச் சற்றுப் பின்னுள்ள காலமாகலாம்.
இளஞ்சேரல் இரும்பொறை பற்றிய செய்தியும் சிலம்பில் வருவதால்(39), அவனுமே செங்குட்டுவன் காலத்தான் ஆகிறான். கொங்குக்கருவூரில் ஆண்ட தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையும் செங்குட்டுவன் காலத்தில், அன்றி அவனுக்குச் சற்று பின்னால் இருந்திருக்க வாய்ப்புண்டு.
மொத்தத்தில், செங்குட்டுவன் வாழ்நாளில் அவனுக்குச் சமகாலத்திலும், சற்றுமுன்னும் பின்னுமாய், கொங்குச் சேரர் உட்பட, 8, 9 சேரர்கள் இருந்திருக்கிறார்கள். குட வஞ்சி, குட்ட நாடு, கொங்கு வஞ்சி, பூழிநாடு, மாந்தரம், தொண்டி எனப் பல்வேறு இயலுமைகள் சேரரிடை இருந்ததால், இத்தனைபேர் சமகாலத்தில் இருந்திருக்க வழியுண்டு. எல்லாச் சேரரும் யாப்பிற்குத் தகுந்தாற் போல் சேரல், பொறையன், மலையன், வானவன் என்று விதந்து சொல்லப் பட்டிருக்கிறார்கள்(40).
பொதுவாகச் சொன்னால், சங்க கால வரலாறு, குறிப்பாகச் சேரர் வரலாறு, மீண்டும் முறையாக ஒழுங்கு செய்யப் படவேண்டும்.
நாம் சேரர்பற்றி உணரவேண்டிய, இன்னொருசெய்தியும் உண்டு. வேதநெறித் தாக்கம் சேரரிடம், சிறிதுசிறிதாய்க் கூடியது பதிற்றுப்பத்தில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது. மற்ற நெறிகளின் பாதிப்பும் வஞ்சியில் இருந்திருக்க வேண்டும். குறிப்பாக புத்தநெறித் தாக்கம். அசோகப் பேரரசனின் தாக்கம், சேரர் காலத்துச் சமயப்பழக்கத்தில் மட்டுமின்றி, அரச நடைமுறைகளிலும் இருந்திருக்க வேண்டும்.. சங்கப் பாடல்களிலும், சிலம்பிலும் பலவிடங்களில் வரும் திகிரி என்னும் சொல்லின் பயன்பாடு. வெறும் தேர்க்காலைக் குறிக்காது, அறத்தோடு கூடிய அரச நெறி, அறவாழி என்பதையே குறித்தது, என்று பேரா. க.நெடுஞ்செழியன் சொல்லுவார்(41). இதையும் ஆழ்ந்து ஆயவேண்டும். அற்றைச் சமண நெறிகள் (ஆசீவகம், செயினம், புத்தம் என்ற மூன்றுமே) மகதத்தார் போலவே தமிழரிடை பெரிதும் புழங்கியிருக்க வாய்ப்புண்டு. அவை வேதநெறியோடு போட்டிகொண்ட காலநோக்கில், சங்க இலக்கியம் ஆயப்படவேண்டும்.
“தேவனாம்பிய” என்னும் பெயர் அசோகனுக்கும், அவன் வழியாருக்கும் அன்றி, அவனுக்குச் சற்று பிற்பட்ட இலங்கை அரசன் தீசனுக்கும் உரிய பட்டமாய் வரும். ”சேரருக்கான வானவரம்பன், இமையவரம்பன் ஆகிய பட்டங்கள் அது போன்றதே” என்று ஓர்ந்துரைப்பார் மயிலை.சீனி.வேங்கடசாமியார்(42). [வானவரன்பன்>வானவரம்பன், இமையவரன்பன்>இமையவர் அம்பன் என்று ஏடெழுதுவோரால் திருத்தப் பட்டிருக்கலாம் என்று அவர் சொல்லுவார்]. இதுவும் அசோகனின் தாக்கத்தை நமக்கு உணர்த்துகிறது. அவ்வளவு பெரிய அரசனின் புத்தநெறிப் பரப்பல் தமிழரைப் பாதிக்காது இருந்தல் இயலாது. [இதே போல பல சங்கப் பாடல்கள் ஆசீவக நெறியை உணர்த்துவதாய் பேரா. க.நெடுஞ்செழியன் சொல்லுவார். அதையும் ஒதுக்க முடியாது.]
எடுகோள்கள்:
30. பி.இராமநாதன், “தமிழர் வரலாறு”, ப.88, தமிழ்மண் பதிப்பகம், 2008.
31. இருநில மருங்கில் பொருநரைப் பொறாஅர்
செருவெங் காதலின் திருமா வளவன்
வாளும் குடையும் மயிர்க்கண் முரசும்
நாளொடு பெயர்த்து தண்ணார்ப் பெறுக இம்
மண்ணக மருங்கில் என் வலிகெழு தோள் எனப்
புண்ணிய திசைமுகம் போகிய அந்நாள்
அசைவில் ஊக்கத்து நசைபிறக்கு ஒழியப்
பகை விலக்கியது இப் பயங்கெழு மலையென
இமையவர் உறையுஞ் சிமையப் பிடர்த்தலைக்
கொடுவரி யொற்றிக் கொள்கையிற் பெயர்வோற்கு
மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக்
கோன் இறை கொடுத்த கொற்றப் பந்தரும்
மகத நன்னாட்டு வாள்வாய் வேந்தன்
பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண்டபமும்
அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த
நிவந்தோங்கு மரபில் தோரண வாயிலும்
- இந்திரவிழவூர் எடுத்த காதையின் (89-104)
32. D.D.Kosambi, “The Culture and Civilization of Ancient India in Historical Outline”, pp 136-137, Vikas Publishing House Pvt Ltd., 1994. [within the figure shown here, a tentative extension of the Dakshina Patha upto Vanji is shown by the present author. This is done to aid visualization.]
33. Jyoti Prasad Jain, “The Jaina Sources of the History of Ancient India (100 BC-AD 900)” pp 16-27. Munshiram Maniharlal Publishers Pvt. Ltd, 2005
34. க.நெடுஞ்செழியன், “இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும்”, ப.99, பத்ப்பாசிரியர். இரா.சக்குபாய், மனிதம் பதிப்பகம், திருச்சி 620021.
35. அகம்: 265.4, அகம் 251.5
36. அகம்:69.10, 251.12, 281.8, புறம்: 175.6
37. வாருண, அசி என்ற என்பவை கங்கையில் இணையும் ஆறுகளாகும். அவற்றையொட்டியே வாரணவாசி>வாரணாசி என்ற பெயர் தோன்றியது.
38. வலவைப் பார்ப்பான் பராசரன் என்போன்
குலவுவேற் சேரன் கொடைத்திறங் கேட்டு
வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த
திண்டிறல் நெடுவேற் சேரலற் காண்கு எனக்
கட்டுரைக் காதை (61-64)
39. சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து
மதுக்கொள் வேள்வி வேட்டோன் ஆயினும்
நடுகற் காதை (147-148)
40. காவல் வெண்குடை
விளைந்துமுதிர் கொற்றத்து விறலோன் வாழி
கடற்கடம் பெறிந்த காவலன் வாழி
விடர்ச்சிலை பொறித்த வேந்தன் வாழி
பூந்தண் பொருநைப் பொறையன் வாழி
மாந்தரஞ் சேரல் மன்னவன் வாழ்கெனக்
41. க.நெடுஞ்செழியன், “இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும்”, ப.104-130, பதிப்பாசிரியர். இரா.சக்குபாய், மனிதம் பதிப்பகம், திருச்சி 620021.
42. மயிலை. சீனி.வேங்கடசாமி, ”சேரன் செங்குட்டுவன்”, ப 93-98, வ.உ.சி.நூலகம், சென்னை 14, 2005
அன்புடன்,
இராம.கி.,
No comments:
Post a Comment