Friday, May 21, 2010

சிலம்பின் காலம் - 10

செங்குட்டுவன் வடசெலவு பொருந்துங் காலம்:

முன்னர் சொன்ன செய்திகளில், சுங்கரின் நிலப்பரப்புச் சுருக்கத்தையும், அதே போல நூற்றுவர் கன்னரின் நிலப்பரப்புச் சுருக்கத்தையும், கூடவே மகதத்தை வெற்றிகொள்ள கன்னர் வேட்கை கொண்டதையும், அவர் செல்வாக்கையும் பார்க்கும் போது, செங்குட்டுவனின் வடசெலவுகள் இலம்போதரக் கன்னன் காலத்தில் (கி.மு.87-69), சுங்கன் தேவபூதி காலத்தில், (கி.மு.86-75 இக்கு நடுவில்), கனகர் ஆட்சி (கி.மு.75-26) தொடங்குமுன், கி.மு.80 அளவில் நடந்திருக்கலாம் என்றே எண்ணவேண்டியிருக்கிறது. அப்படியோர் இடைவேளையே செங்குட்டுவனின் வடசெலவுச் செய்திகளுக்குச் சரியான இடங் கொடுக்கிறது.

இலம்போதரக் கன்னன் காலத்தில் (கி.மு.87-69) நூற்றுவர் கன்னர் வலிமை குன்றியிருந்ததால் தான், தெற்கேயிருந்து சேரன் படையெடுத்து வந்தபோது, அவனுக்கு உதவி செய்து தம்நிலையைச் சீர்படுத்திக் கொள்ள முயன்றிருக்கின்றனர். “கல்லெடுப்பதற்கு நீங்கள் போகவேண்டுமா? உங்கள் சார்பாக நாங்கள் போரிட்டுக் கல்லெடுத்துத் தரமாட்டோமா?” என்று செங்குட்டுவனிடம் கன்னர் சொல்லச் சொன்னதாகச் சஞ்சயன் பேசுவது ஒருவகையிற் பார்த்தால் இருபுலப் பேச்சாகும் (diplomatic speech). அந்த நேரத்தில் சேரருக்கும் சிறியவராய் குறைவலிமை கொண்டிருந்த நிலையில், கன்னர் இப்படிப் பேசாமல் வேறு எப்படிப் பேசுவர்? அதனாற்றான், பல்வேறு பொருள்களும் படையும் சேரனுக்குக் கொடுத்து உதவிக்குப் போயினர் போலும். செங்குட்டுவனுக்கு நூற்றுவர் கன்னர் கொடுத்தவை கால்கோட்காதை 128-140 வரிகளிற் பேசப்படுகின்றன(72).அதோடு தம் உள்ளூர ”சேரன் வடபுலத்திற்கு வரவேண்டும்; போரிட வேண்டும்; சுங்கரும், அவருக்கு அமைச்சராய் இருந்த கனகரும் வலிகுன்ற வேண்டும்” என்ற விழைவு கன்னருக்கு இருந்திருக்கலாம். இல்லையெனில் காட்சிக் காதையில் வரும் இந்த நிகழ்வைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாது.


படம் 5:செங்குட்டுவனின் வடசெலவுப் பாதை.

செங்குட்டுவன் வடசெலவு படம் 5 இல் இருப்பது போல், பெரும்பாலும் குடவஞ்சியில் தொடங்கி, கடலொட்டி நகர்ந்து, வயநாட்டுச் சாரலில் ஏறி (80 கி.மீ), நீலமலை தாண்டி, (இது வரை சிலம்பு பேசுகிறது(73)). முன்னால் முதலாங் கரிகாலன் படையெடுத்த போது சென்ற பாதையிலேயே, குடகு, அதியர், கங்கர் நாடு வழி (ஐம்பொழில் ஊடாக, வடுகவழி மேற்கு) கருநாடு கடந்து, படித்தானம் (கன்னரின் தலைநகர்) பிடித்து தக்கணப் பாதை வழியாகப் மகேசர், உஞ்சை, பில்சா, சாஞ்சி, கோசாம்பி கடந்து, முடிவில் மகதத்தில் முடிந்திருக்கும்.

அந்தக் காலத்தில் குடகு, அதியர் நாடுவழி ஐம்பொழில், படித்தானம் போக்காமல் வடக்கே செல்லமுடியாது. ஏனென்றால், இன்னொரு மாற்றான கலிங்க வழி, அடர்காடுகளின் காரணமாய், பல நூற்றாண்டுகள் கழித்தே ஏற்பட்டது. அது பிற்காலப் பேரரசுச் சோழர் காலத்தது. கலிங்கம் என்ற நாடு கடற்கரையை ஒட்டிப் பாலூரைத் (இந்தக் கால ஒரியா மாநிலத்துப் பாரதீப்பைத்) தலைநகராய்க் கொண்டு இருந்தது. அதன் மேற்கு எல்லை காடுகளால் நிறைந்தது. அதன் தெற்கு எல்லை (இன்றைய ஆந்திர மாநிலத்தின் நெய்தல் நிலம் தவிர மற்றவை எல்லாமே) அடர்ந்த முல்லையும் குறிஞ்சியும், பாலையுமாய் இருந்ததால், தமிழர்களின் வடநாட்டுத் தொடர்பே பெரும்பாலும் கருநாடகம் வழியாகத்தான் இருந்தது

கருநாடகமும் சாதவா கன்னரின் அரசிற்குள் அடங்கியதே. கருநாடக மக்கள் கொடுங் கருநாடராய்ச் சிலம்பிலும் அதற்குப் பின்வந்த நூல்களிலும் சொல்லப் படுகின்றனர். கொடுமை என்பதற்கு இந்தக் காலப் பொருள் கொள்ளக் கூடாது. அவர் மொழி கொடுந்தமிழாய் இருந்ததையே அந்தச் சொற்றொடர் குறிக்கிறது. பழங் கன்னடம் என்பது பழந்தமிழுக்கு நெருங்கிக் கொடுந்தமிழாய் இருந்தது. கன்னடத்தின் இப் பழநிலையை மறுப்பது தமிழருக்கும் வடபுலத்தாருக்கும் இருந்த தொடர்பையே மறுப்பதாகும்.

இடைப்பட்ட அவந்தியும், கன்னரின் வீச்சும்:

படித்தானத்திற்கு அடுத்த பெரிய ஊர் உஞ்சை. அவந்தியின் தலைநகர். சிலம்பின் படி இதை ஆண்டவர் “பாலகுமாரன் மக்கள்” எனப்படுவர்(74). இவர் யார் என்றறிவது அப்படியொன்றும் கடினமானதல்ல. கி.மு.550 களில் நடந்த உதயணன் கதை இந்தியாவெங்கும் பெரிதும் பேர் பெற்றது. இது நெடுங்காலம் பொதுமக்களிடையே பெருவழக்கில் இருந்தது. [குணாட்டியரின் ’ப்ருஹத் கதா’ பிசாச மொழியில் எழுதப்பட்டது. கங்கன் துர்விநீதன் கி.பி.570-580 இல் இதைச் சங்கதத்தில் எழுதினான். கொங்குவேளிர் இதைப் பெருங்கதை என்று தமிழில் ஆக்கினார்.]

இந்தக் கதையில், வச்சிர நாட்டு உதயணன் பல்வேறு சூழ்ச்சிகள், போர்கள், நிகழ்ச்சிகளின் பின் அவந்தி நாட்டு வாசவதத்தையை மணப்பான். [ஞாவகம் வருகிறதா? முதற் கரிகாலன் காலத்தில் அவந்தி சோழனுக்குத் துணையாய் இருந்தது. மகதம் சண்டையிட்டது. வச்சிரம் சண்டைபோடாமலே அடிபணிந்தது.] அவந்தியின் அரசன் பெருத்தோதன் (பிரத்யோதனன்). அவனுடைய மக்கள் ”பாலகன், பாலகுமாரன், கோபாலகன்.”என்று அழைக்கப்படுவர்(75). பின்னால் பாலகுமாரன் குடியே அவந்தியை ஆளும். ”பாலகுமாரன் மக்கள்” என்ற குறிப்பு இப்படியெழுந்தது தான்.

செங்குட்டுவனின் வடசெலவுக் காலத்தில் அரசாண்ட அரசன் பெயர் தெரியவில்லை. ஒருவேளை கி.மு.80 களில் அது கன்னரின் மிரட்டலுக்கு ஆட்பட்டதாகவும் இருந்திருக்கலாம். ஆனால் கி.மு.74-61 இல் அவந்தியின் (மாளுவத்தின்) அரசன் ”கருதவில்ல மகேந்திராதித்யன்”என்று செயின ஆவணங்கள் பதிவு செய்யும்(76).

உஞ்சை தாண்டி, கோசாம்பி வழியே மகதம் நுழைந்த செங்குட்டுவன் கங்கையின் தென்கரையில் காசிக்கு அருகிலேயே ஆற்றைக் கடந்திருக்க வேண்டும். அவன் பாடலிப் பட்டணம் போனதாய் சிலம்பின் எங்கணும் அறியமுடியவில்லை. முன்னால் அவன் தாய் புனித நீர் ஆடியது கூடக் காசியாய் இருக்கலாம் இரண்டாம் முறையும் அதற்கருகிலேயே கங்கையைக் கடந்திருக்கலாம் என்பது ஒரு கருதுகோளே. ஆற்றைக் கடக்க நூற்றுவர் கன்னர் ஒரு வங்கப் பரப்பையே (படகுப்பரப்பையே) ஏற்பாடு செய்கிறார்கள். கங்கையாற்றின் அகலம் பாடலி அளவிற்கு காசியிற் பெரிதில்லை. ஆற்றின் வடமருங்கில் கன்னர் சேரரை எதிர்கொள்ளுகிறார்கள் [கன்னரின் வீச்சு கங்கையின் வடகரை வரை இருந்திருக்கிறது என்றால் சுங்கர்/கனகரின் வலிமை பெரிதும் அங்கு குன்றியிருக்க வேண்டும்.] அந்த நாடும் கழிந்து, இன்னும் வடக்கே போகிறார்கள்; பகைப்புலம் வந்துவிடுகிறது. எனவே கங்கையைக் கடக்குமிடம் சுங்கர்/கனகர் கையில் இல்லை. இத்தனை செய்திகளும் கால்கோட் காதை 175-181 ஆம் வரிகளில் தெரிய வருகிறது(77).

கனகனும் விசயனுமா? கனக விசயனா?:

முன்னே சொன்னது போல், செங்குட்டுவன் படையெடுப்பின்போது சுங்கன் தேவ பூதிதான் பெரும்பாலும் மகத அரசனாக இருந்திருக்கலாம்(78).இருந்தாலும் சுங்கனின் தலைமை யமைச்சனாகக் கனக விசயன் என்ற குறுநில மன்னன் இருந்திருந்தான் என்பதையும் பார்த்திருந்தோம். இனிக் கனக விசயன் என்பவன் ஒருவனா, இருவரா என்ற ஐயப்பாட்டிற்கு வருவோம்.

தமிழகப் புரிதலில் சிலம்பையொட்டிய வரலாற்று ஆய்வுகள் புதிதாக ஏற்படாததால், 60, 70 ஆண்டுகளுக்கு முன் இருந்த புரிதலில் கனகர், விசயர் என்று இரண்டு பேராகவே பலரும் சொல்லிவருகிறார்கள். அரச குலத்தவரைக் குப்பன் சுப்பன் என்று ஒற்றைப்பெயரால் அழைப்பது வரலாற்றில் யாருக்கும் பழக்கமில்லை சேரன் செங்குட்டுவனை சேரன், செங்குட்டுவன் என்று இரண்டாகப் பிரிப்போமோ? பாண்டியன் நெடுஞ்செழியனை பாண்டியன், நெடுஞ்செழியன் என்று இரண்டாய்ப் பிரிப்போமோ? மகதத்தை ஆண்ட சுங்கனுக்கும், அவன் அமைச்சன் கனகனுக்கும் குடிப்பெயர் ஒன்றும், இயற்பெயர் ஒன்றும் தனித்தனியாய் இருக்காதோ?

சிலம்பில் இரண்டு இடங்களில் கனகனும் விசயனும் என்று உம்மை சேர்த்தும்(79) 4 இடங்களில் கனக விசயன் என்று உம்மை சேர்க்காமலும்(80) இந்தப் பெயர் குறிப்பிடப்படும். உம்மை சேர்த்த இரு இடங்களிற் கூட உம்மையை எடுப்பதனால் வாக்கிய அமைப்போ, சீரமைப்போ, தளையோ ஒன்றும் மாறுபடாது. இந்த இரு இடங்களும் ஏன் படியெடுப்பின் பிழைகளாக இருக்கக் கூடாது?

தவிர கனகவிசயரின் கதிர்முடி ஏற்றியது அவ்வளவு பெரிய கல்லா, இரண்டு பேர் தூக்க? பொதுவாய்க் கேரளப் படிமங்களின் உரு சிறிதாக ஒரே கல்லிலான புடைப்புச் சிற்பமாகவே இருக்கும். [இன்றைக்கும் கேரளக் கோயில்களைப் பார்த்தால் இது விளங்கும். அவர்களின் ஊருலவர் (உர்ச்சவர்) திருமேனியும் நம்மூரைப்போல நாலுபேர் தூக்கும்படிப் பெரிதாக இருக்காது. ஒருவர் தன்தலையிலோ, அன்றி இரு உள்ளங்கைகளிலோ வைத்துக் கொள்ளும்படி சிறிதாகவே இருக்கும். பெருந்திருமேனிகளைக் கையாளுவது அவர்கள் பழக்கம் அல்ல.) இற்றைத் தமிழ்நாடு போல பெரிய கருங்கற்களில் பெருத்த படிமங்களைச் செதுக்குவது அங்கு மரபல்ல.

பல்லவர், பேரரசுச் சோழர், பிற்காலப் பாண்டியர் காலத்துக் கோயில்களின் சிற்பங்களைப் பார்த்துப் பார்த்துச் சிலைகள் என்றாற் பெரிதாக இருக்கும் என்றெண்ணும் நிலைக்கு நாம்தான் வந்து விட்டோம். ”கடவுள் எழுதவோர் கல்”.என்னும் போது அது சிறிய புடைப்புச் சிற்பமாகத்தான் இருக்கக் கூடும் என்று நாம் எண்ணினால் என்ன? தவறா? 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இருக்கும் சிற்பங்கள் சிறியதாக இருந்திருக்கக் கூடாதா? அதோடு, இமயமலையிலிருந்து கருங்கற்கள் எடுத்துவருவதற்கு வாய்ப்புக்கள் குறைவு.

[கருங்கற்கள் இந்தியத் தீவக்குறையிலே தான் சிலை செய்யப் பயன்படுகின்றன. வடக்கே கருங்கற்கள் அல்லாதவையே பயன்படுத்தப் படும்.] கருங்கல் அல்லாத ஒன்றை கிட்டத்தட்ட 15, 20 அயிர எடை (கிலோ எடை) அளவுள்ள கல்லை ஒருவரே தம் தலையிற் தூக்க முடியும். கல் தூக்கி வந்தது ஒருவர் தலையிலா? இருவர் தலையிலா? என்பது கள ஆய்வின் மூலம் செய்து பார்த்து முடிவு செய்ய வேண்டிய கேள்வி.

ஒருவரா, இருவரா என்ற கேள்விக்குச் சான்றளிப்பது பதிற்றுப் பத்து 5 ஆம் பத்தின் பதிகமே(81). தெள்ளத் தெளிவாக ஆரிய அண்ணல் என்று ஓர் அரசனையே சொல்லும். எந்த அரசன் போரை முன்னின்று நடத்தினானோ, அவனைத்தானே ‘வீட்டி (வீழ்த்தி) ” என்று சொல்லமுடியும். எனக்குப் புரிந்த வரையில் கனகவிசயன் என்பவன் ஒருவன் தான்.

அன்றைக்கு நடைமுறையில் மகத அரசன் கனகனே; சுங்கன் தேவபூதி ஒரு பாவை போலத் தான் பாடலியிலோ, அன்று கோசம்பியிலோ கொலுவீற்றிருந்தான். அவன் போரில் கலந்து கொள்ளாது மற்ற பங்காளிகளையும், சுற்றியுள்ள வட அரசர்களையும் போரில் இறக்கியிருக்கலாம். கனகவிசயன் போரில் தோற்றபின், கல்லைச் சுமந்து சேரனோடு வர, உடன் போரிட்ட வடபுலத்தரசரை போர்க்கள முடிவில் சேரனே விடுவிக்கிறான். அதற்குப் பின்னால் சுங்கனின் ஆட்சியில் விசயனின் மகன்(?) வசுதேவன் அமைச்சனாகி கி.மு.75-இல் சுங்கரிடமிருந்து ஆட்சியைப் பிடித்துக் கொள்கிறான் போலும்(82). இதுபோன்றதொரு இயலுமையே வரலாற்றிற் தெரிந்த உண்மைக்கும், சிலம்பில் வரும் காட்சிகளுக்கும் பொருத்தம் காட்டுகிறது.

கனகரோடு சேர்ந்த வடதிசை மன்னவர்:

கண்ணகிக்குக் கல் எடுப்பதற்காகப் போர் நடப்பதற்கு முன்னால், சேரனின் முதற் படையெடுப்பிற்குப் பின்னால், நடந்த ஒரு விருந்தில் வடபுலத்து அரசர் (அவருள் அவந்தி அரசரும், மற்றவரும், கனக விசயனும் அடக்கம்) தமிழரை இகழ்ந்தது சிலம்பில் பேசப்படுகிறது83.

கனகரோடு சேர்ந்து பொருதிய வடதிசை மன்னவரைக் கால்கோட் காதையின் 182-192 ஆம் வரிகள் உரைக்கும்(84). ஆனால் இந்தப் பட்டியலிலும் எது குடிப்பெயர், எது இயற்பெயர் என்ற தடுமாற்றம் உண்டு. ”சுவடிப் பெயர்ப்புப் பிழைகள் இங்குமுண்டா?” என்ற கேள்வியும் எழுகிறது

”உத்தரன் விசித்திரன் உருத்திரன் பைரவன் சித்திரன் சிங்கன் தனுத்தரன் சிவேதன்” என்று அடுத்தடுத்துப் பெயர்கள் எழும்பொழுது ”உத்தர விசித்திரன், ருத்ர பைரவன்” எனச் சொல்லலாமா? அதே போல “சித்திரன்” என்பவன் யார்? சிங்கன் சுங்கனாய் இருக்கலாமோ? [இது போன்ற சுகர, சிகரக் குழப்பங்கள் சிங்கள அரசர் பெயர்ப்பட்டியலிலும் உண்டு. தமிழில் ஒருவிதமாயும் , பாலியில் இன்னொரு விதமாயும் வரும்] சிங்கனோடு சித்ரனா? தனுத்ரனா? ”சிவேதன்” யார்? அரசர்க்கான மரபில் குலப்பெயரும் தனிப்பெயரும் சேர்ந்தல்லவா வரும்? - என்ற கேள்விகளும் எழுகின்றன. [த்ர’என்ற ஒலிக்கூட்டு வடநாட்டு அரசர் பெயர்களின் பெரிதும் உள்ளதே. இந்தப் பெயர்கள் வடபாற் பெயர்கள் தான்] இவர்களை அடையாளம் காணும் பணி இன்னும் மீந்து நிற்கிறது. தேவபூதியை தனுத்ரபூதி என்றோர் ஆவணம் சொல்லுகிறதாம். இதையும் ஆய வேண்டும். தேவபூதியின் தந்தை பாகபத்ரன் பற்றியும், சுங்கர்/கனகர் காலத்து வடபுல அரசர் குறிப்புக்களையும் ஆயவேண்டும்.

”ஒருபகல் எல்லையில் ஆரியப் படையைச் செங்குட்டுவன் சாய்த்தான். கனக விசயர் 100 கடுந்தேராளரொடு களம் புகுந்தனர். தோற்றபின் துறவி வேடம் பூண்டுத் தப்ப முயன்று பிடிபட்டனர்” என்பவை அடுத்துவரும் செய்திகளாகும். துறவி வேடம் பூண்டு தப்பமுயன்றதில் ஒன்றும் வியப்பில்லை. காசிக்கருகில் சாம்பற் பூசிய துறவிகள் இன்றைக்கும் கணக்கற்றுத் திரிவர். காசிக்கு அருகில் தப்புதற்கு அந்த வேடம் மிகவும் எளிய வழியாகும். இவர்கள் இப்படித் தப்பியதே, போர் ஒருவேளை காசிக்கு அருகில் நடந்திருக்குமோ என்ற எண்ணத்தை எழுப்புகிறது. முன்னாற் சொன்னது போல், வடபுலத்தில் காசிதான் முதலில் எழுந்த பெரு நகரம். அதற்கு அப்புறம் தான் மற்ற நகரங்கள் அங்கு தோன்றின.

இந்தப் போருக்குப்பின் செங்குட்டுவன் கங்கைத் தென்கரையில் பாடிகொள்கிறான். வில்லவன் கோதையோடு படைகளை மேலும் வடக்கே அனுப்பி இமையத்தில் இருந்து கல்லெடுத்துவரச் செய்கிறான்(85). ஆனால் அப்படிப் போகும் போது போர் ஏதும் நடந்ததாய்த் தெரியவில்லை. கனக விசயனின் முடிமேல் கல்லேற்றிக் கொண்டு வந்து அதைக் கங்கையில் நீர்ப்படை செய்கிறார்கள்(86).

அதன்பின் தெள்ளுநீர்க் கங்கையின் தென்கரையில் ஆரிய மன்னர் அழகுற அமைத்த பாடியில் இருக்கும் போது மாடலன் வருகிறான். [இன்றைக்கும் தெள்ளுநீர்க் கங்கை காசிக்குத் தென்கரையில் தான் என்பது வியக்கத் தக்க செய்தி. வடகரையில் இருக்கும் சுடுகாட்டுக் கரைகளைத் தவிர்த்து, சாம்பல் பூச்சிதறல் இல்லாமல், உருப்படியாக நீராட வேண்டுமென்றால் படகில் ஏறித் தென்கரைக்குத்தான் வரவேண்டும். அங்கு தான் சோலைகளும் தோட்டங்களும் உண்டு. தென்கரை அழகு அன்றைக்கும் இருந்தது வியக்கத்தக்க ஒற்றுமைத் தொடர்ச்சியாகும். வாரணசி நகருக்கு வடக்கே இன்றும் பறந்தலைகள் தான். முற்காலத்திற் பறந்தலைகளே போர்க்களங்களாய் ஆயின. போர்க்களம் எது என்றறிவது அங்குள்ள நிலவரைவை (geography) ஆய்வு செய்வதிற்றான் தெளிவாகும்.

எடுகோள்கள்:

72. நாடக மகளிர் ஈரைம்பத்து இருவரும்
கூடிசைக் குயிலுவர் இருநூற்று எண்மரும்
தொண்ணூற்று அறுவகைப் பாசண்டத் துறை
நண்ணிய நூற்றுவர் நகைவேழம்பரும்
கொடுஞ்சி நெடுந்தேர் ஐம்பத்திற்று இரட்டியும்
கடுங்களி யானை ஓரைஞ் ஞூறும்,
ஐயீராயிரங் கொய்யுளைப் புரவியும்
எய்யா வடவளத்து இருபதினாயிரம்
கண்ணெழுத்துப் படுத்தன கைபுனை சகடமும்
சஞ்சயன் முதலாத் தலைக்கு ஈடு பெற்ற
கஞ்சுக முதல்வர் ஈரைஞ் ஞூற்றுவரும்
சேயுயர் விற்கொடிச் செங்கோல் வேந்தே
வாயிலோர் என வாயில் வந்து இசைப்ப
- கால்கோட் காதை 128-140
73. தண்டத் தலைவரும் தலைத்தார்ச் சேனையும்
வெண்டலைப் புணரியின் விளிம்புசூழ் போத
மலைமுதுகு நெளிய நிலைநாடு அதர்பட
உலக மன்னவன் ஒருங்குடன் சென்றாங்கு
ஆலும் புரவி யணித்தேர்த் தானையொடு
நீலகிரியின் நெடும்புறத்து இறுத்து ஆங்கு
- கால்கோட் காதை 80-85
74. பால குமாரன் மக்கள் மற்றவர்
காவா நாவிற் கனகனும் விசயனும்
விருந்தின் மன்னர் தம்மொடுங் கூடி
அருந்தமிழ் ஆற்றலர் அறிந்திலர் ஆங்கு எனக்
கூற்றங் கொண்டு இச்சேனை செல்வது
நூற்றுவர் கன்னர்க்குச் சாற்றி யாங்குக்
கங்கைப் பேர்யாறு கடத்தற் காவன
வங்கப் பெருநிரை செய்க தாம் எனச்
- கால்கோட் காதை 159-165
75. பாலகுமாரன் - பெருங்கதைக் குறிப்பு. ”கொங்கு வேளிர் இயற்றிய பெருங்கதை - பகுதி 1. எடுவிப்பு: டாக்டர் உ.வே.சா, உ.வே.சா. நூல்நிலையம், 2000, கீழே வருவன அப்பொத்தகத்தில் வரும் அருஞ்சொல்லகராதிக் குறிப்புகள் பக்கங்கள் நூலில் வரும் இடங்களைக் குறிக்கின்றன.

[பிரச்சோதனன் = ஒரு மகாச் சக்கரவர்த்தி; வாசவதத்தையின் தந்தை. இவன் நாடு அவந்தி; இராசதானி உச்சைனி நகர்; உதயணனை வஞ்சத்தாற் பிடித்துச் சிறாஇயில் வைக்கும்படி செய்தவன்; இவன் தேவியர் பதிறாயிரவருள் வாசவதத்தையைப் பெற்ற நற்றாயாகிய பதுமகாரிகை என்பவள் முதன்மை வாய்ந்தவள். இவனுக்குப் பாலகன், பாலகுமாரன், கோபாலகன் என்பவர் முதலிய குமாரர்கள் பலர் உண்டு.

பாலகன் = பிரச்சோதனன் புதல்வர்களுள் ஒருவன், பக்.92;

பாலகுமாரன் = பிரச்சோதனன் புதல்வன், உஞ்சை நகரில் உதயணன் நளகிரியை அடக்கிய பின்பு தந்தையின் கட்டளைப் படி அவனுக்கு வேண்டியவைகளைக் குறிப்பறிந்து செய்து வந்தவன், பக்.43. பாலகுமரார் = பிரச்சோதனனுடைய பிள்ளைகளின் பொதுப்பெயர், பக்.116]

76. அவந்தி அரசன் பற்றிய செயினக் குறிப்பு. Jyoti Prasad Jain, “The Jaina Sources of the History of Ancient India (100 BC-AD 900)”pp 32-38, Munshiram Manoharlal Publishers Pvt.Ltd. 2005.

77. பாடி யிருக்கை நீங்கிப் பெயர்ந்து
கங்கைப் பேரியாற்றுக் கன்னரிற் பெற்ற
வங்கப் பரப்பின் வடமருங்கு எய்தி
ஆங்கு அவர் எதிர்கொள அந்நாடு கழிந்தாங்கு
ஓங்கு நீர் வேலி உத்தரம் மரீஇப்
பகைப்புலம் புக்குப் சறை யிருந்த
தகைப்பருந் தானை மறவோன் தன் முன்
- கால்கோட்காதை 175-181
78. தேவபூதியின் ஆட்சிக் காலம். http://en.wikipedia.org/wiki/Devabhuti
79. காவா நாவிற் கனகனும் விசயனும் – கால்கோட்காதை 176
காய்வேற் தடக்கைக் கனகனும் விசயனும் – கால்கோட் காதை 222
80. கலந்த மேன்மையிற் கனக விசயர் – கால்கோட் காதை 186
கனக விசயர் தம் கதிர்முடி ஏற்றி – நீர்ப்படைக் காதை 4
கானற் பாணி கனக விசயர் தம் – நீர்ப்படைக் காதை 50
தெரியாது மலைந்த கனக விசயரை – நீர்ப்படைக்காதை 190
81. ”வடவ ருட்கும் வான்தோய் வெல்கொடிக்
குடவர் கோமான் நெடுஞ்சேர லாதற்கு
சோழன் மணக்கிள்ளி ஈன்றமகன்
கடவுட் பத்தினிக் கற்கோள் வேண்டிக்
கானவில் கானங் கணையிற் போகி,
ஆரிய அண்ணலை வீட்டி பேரிசை
இன்பல் அருவிக் கங்கை மண்ணி”
- பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்து பதிகம்
82. கண்வ வசுதேவன் ஆட்சியைப் பிடித்தது. http://en.wikipedia.org/wiki/Kanva_dynasty
83. பால குமாரன் மக்கள் மற்றவர்
காவா நாவிற் கனகனும் விசயனும்
விருந்தின் மன்னர் தம்மொடுங் கூடி
அருந்தமிழ் ஆற்றலர் அறிந்திலர் ஆங்கு எனக்
கூற்றங் கொண்டு இச்சேனை செல்வது
நூற்றுவர் கன்னர்க்குச் சாற்றி யாங்குக்
கங்கைப் பேர்யாறு கடத்தற் காவன
வங்கப் பெருநிரை செய்க தாம் எனச்
கால்கோட் காதை 159-165
வடபுலத்தரசர் ஒரு விருந்தில் தமிழரை இழித்துப் பேசியது. குமரியொடு வடவிமயத்து ஒருமொழி வைத்து உலகாண்ட சேரலாதற்குத் திகழொளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்ற மைந்தன் கொங்கர் செங்களம் வேட்டுக் கங்கைப் பேர்யாற்றுக் கரைபோகிய செங்குட்டுவன் சினஞ் செருக்கி வஞ்சியுள் வந்திருந்த காலை, வட ஆரிய மன்னர் ஆங்கோர் மடவரலை மாலைசூட்டி உடனுறைந்த இருக்கை தன்னில் ஒன்றுமொழி நகையினராய்த் தென்றமிழ் நாடாளும் வேந்தர் செருவேட்டுப் புகன்றெழுந்து மின் தவழும் இமயநெற்றியில் விளங்கு வில், புலி, கயல் பொறித்த நாள் எம்போலும் முடிமன்னர் ஈங்கில்லை போலும் என்ற வார்த்தை அங்கு வாழும் மாதவர் வந்து அறிவுறுத்தவிடத்து, - வாழ்த்துக் காதை உரைப்பாட்டு மடையின் முதற்சில வரிகள்.

84. உத்தரன் விசித்திரன் உருத்திரன் பைரவன்
சித்திரன் சிங்கன் தனுத்தரன் சிவேதன்
வடதிசை மருங்கின் மன்னவர் எல்லாம்
தென் தமிழாற்றல் காண்குதும் யாம் எனக்
கலந்த கேண்மையிற் கனக விசயர்
நிலத்திரைத் தானையொடு நிகர்த்து மேல்வர
இரைதேர் வேட்டத்து எழுந்த அரிமாக்
கரிமாப் பெருநிரை கண்டு உளம் சிறந்து
பாய்ந்த பண்பிற் பல்வேல் மன்னர்
காஞ்சித் தானையோடு காவலன் மலைப்ப
- கால்கோட் காதை 182-192
85. வில்லவன் கோதையொடு வென்றுவினை முடித்த
பல்வேற் தானைப் படைபல ஏவி
பொற்கோட்டு இமையத்துப் பொருவறு பத்தினிக்
கற்கால் கொண்டனன் காவலன் ஆங்கென்.
- கால்கோட் காதை 251-254
86. வடபேர் இமயத்து வான் தரு சிறப்பிற்
கடவுட் பத்தினிக் கற்கால் கொண்டபின்
சினவேல் முன்பிற் சருவெங் கோலத்துக்
கனக விசயர்தம் கதிர்முடி யேற்றிச்
செறிகழல் வேந்தன் தென்தமிழ் ஆற்றல்
அறியாது மலைத்த ஆரிய மன்னரைச்
செயிர்த்தொழில் முதியோன் செய்தொழில் பெருக
உயிர்த்தொகை உண்ட ஒன்பதிற் றிரட்டியென்று
யாண்டும் மதியும் நாளும் கடிகையும்
ஈண்டுநீர் ஞாலம் கூட்டி எண்கொள
வருபெருந் தானை மறக்கள மருங்கின்
ஒருபகல் எல்லை உயிர்த்தொகை யுண்ட
செங்குட்டுவன் தன் சினவேல் தானையொடு
கங்கைப் பேர்யாற்றுக் கரையகம் புகுந்து
பாற்படு மரபிற் பத்தினிக் கடவுளை
நூல் திறன் மாக்களின் நீர்ப்படை செய்து
- நீர்ப்படை காதை 1- 14
அன்புடன்,
இராம.கி.

No comments: