Wednesday, February 06, 2013

சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும் - 1

அண்மையில் ”ஒப்பியல் நோக்கில் செவ்விலக்கியக் கோட்பாடுகள்” என்ற தலைப்பில் செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனமும், உலகத் தமிழ்மொழி மெய்யியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனமும் 28/1/2013 - 06/2/2013 இல் இணைந்து நடத்திய தமிழாசிரியர்களுக்கான 10 நாள் பயிலரங்கில் 5/2/2013 அன்று பிற்பகல், “சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும்” என்ற தலைப்பில் நான் ஓர் உரையாற்றினேன். அதன் எழுத்து வடிவக் கட்டுரை அவர்கள் வெளியிடும் பொத்தகத்திற் பங்கு பெறுகிறது. கட்டுரை மூன்று பகுதிகளாகி ”www.valavu.blogspot.com” என்னும் என் வலைப்பதிவிலும், ஒரு சில மடற்குழுக்களிலும் இடுகைகளாக இப்பொழுது வெளிவருகிறது. இது முதற்பகுதி. உங்கள் வாசிப்பிற்கு,

அன்புடன்,
இராம.கி.

தோற்றுவாய்:

அறம், பொருள், இன்பம், வீடு எனும் நாலுறுதிப் பொருள்களை நவின்று, தொடர்நிலைச் செய்யுள், உரைப்பாட்டு, உரைநடையென ஏதேனுமொரு வடிவில், சம கால நாகரிகத்தைச் சுவைபடக் கதைப்பது காப்பியமாகும். இவ்வரையறையில் சுமேரியக் கில்கமேசு, ஓமர் இலியது, வான்மீகி இராமாயணம், வியாசபாரதம் ஆகியவற்றைச் சொல்லலாம். அவற்றுள் கடையிரண்டும் இந்திய எழுத்து வழக்கிலும், நாட்டார் வழக்கிலும், தென்கிழக்காசிய மரபிலும் பெருந்தாக்கஞ் செலுத்தியவை. சங்க நூல்களிலும் இவை சிறிது தெறித்திருக்கின்றன. (காட்டு: மருதன் இளநாகனாரின் அகநானூறு 59). வாய்மொழி இலக்கியமாய் பொ.உ.மு.(BCE) 3 ஆம் நூற்றாண்டில்.[1] இறுதி பெற்ற இராமாயணம் எழுத்திலெழுந்தது பொ.உ.(CE) 150க்கு அப்புறமாகும் [2]. வியாச பாரதம் எழுத்துற்றது பொ.உ. 300/400 [3] ஆகும்.

வான்மீகி நூலுக்குச் சற்றொப்ப 2 நூற்றாண்டுகளுக்கும் முன், குன்றக் குரவர், சீத்தலைச் சாத்தனார் வழி வாய்மொழிச் செய்திகளைச் சேகரித்து, ஓரிமையும் (uniqueness), விதப்பும் (specificity) கூடித் தமிழில் எழுந்த சிலப்பதிகாரம் மூவேந்தர் நாட்டில் நிகழ்வதாய் அமையும்; ஆனால் மூவேந்தரும் காப்பியத் தலைவராகார். அதே பொழுது, கதையினூடே அந்தக் கால வாழ்வு நெறி, பன்னாட்டியற்கை, நகர விவரிப்பு, வணிக நடைமுறை, சமய விவரிப்பு, மக்களின் மூட நம்பிக்கை, மனப்பாங்கு, கற்பிதங்கள், இசை, கூத்து, குரவை, வரி, அரங்கேற்றம், இந்திர விழா, கடலாடல், நாட்டார் மரபு, காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல், வாழ்த்து எனப் பல்வேறு காப்பியக் கூறுகள் வெளிப்படும்.

சிலம்பின் நூற்கட்டுரை படித்தால், அது ஒரு நாடகக் காப்பியமாயும், கதை சொல்லும் பாணி மேடைக் கூத்து வடிவாயும் இருப்பது புலப்படும். சிலம்பின் பல உத்திகளும் தமிழக நாட்டுப்புறக் கூத்துகளிற் பயின்றுள்ளன; நாடகம், நாட்டியம், கதை களி, யக்ச கானம், தெருக் கூத்து, திரைப் படம் போன்ற நிகழ்த்து கலைகளில் இன்றும் பயன்படுகின்றன. பொதுவாக, அடுத்தடுத்த ஆண்டுகளில் முன்னாற் பெற்ற பாராட்டுரையை ஒட்டிக் கூத்துக்காரர் விலக்கும், சேர்ப்புஞ் செய்து கொண்டே இருப்பர். ஒருசில ஆண்டுகளுள், கூத்தின் உரையாடல், விவரிப்பில், எது மூல ஆசிரியருடையது (original author), எது இடைச்செருகல் என்பது தெரியாது போகலாம். இதுபோல சிலம்புக் கூத்திலும் நடந்திருக்கக் கூடும்.

வேறு காப்பியங்கள் சிலம்பிற்கு முன் தமிழில் இருந்திருக்கலாம்; ஆனாற் கிடைத்தில. நம் போகூழ், தகடூர் யாத்திரை உதிரியாகி, நூல்முழுதும் கிட்ட வில்லை. மணிமேகலை, சிந்தாமணிக் காப்பியங்களோ முழுதும், பகுதியுமாய்க் கிடைத்தன. கம்பனுக்கு முந்தைய, சங்க காலத்து இராமகாதை, பாரதங்கள் துண்டாகவே கிடைத்தன. தி.ஈ.சீனிவாசராகவ ஆச்சாரியார் (1872), தி.க. சுப்புராயச் செட்டியார் (1880), உ.வே.சாமிநாத ஐயர் (1892) ஆகியோருக்கு [4] ஒருவேளை சிலம்பு கிடைக்காது போயிருப்பின், தமிழ்க்காப்பியக் காலத்தைச் சிந்தாமணிக்குப்பின், பொ.உ. 9 ஆம் நூற்றாண்டிற்குத் தள்ளியிருப்பர்.

சிலம்பு நூற்றாண்டுக் காலத்தை, திரு.செல்லன் கோவிந்தன் பொ.உ.11ஆம் நூறென்றும், திரு.எல்.டி. சாமிக் கண்ணுப் பிள்ளை 8 ஆம் நூறென்றும், திரு.வையாபுரிப்பிள்ளை 5ஆம் நூறென்றும், இதுநாள் வரை நூறாண்டு முன்சொல்லி, இப்போது முரண்படும் திரு.இரா. நாகசாமி 3 ஆம் நூறென்றும், மு.இராகவ ஐயங்கார், மயிலை.சீனி.வேங்கடசாமி, கா.சு.பிள்ளை, ஞா.தேவநேயப் பாவாணர், தனிநாயக அடிகள், கே.என். சிவராசப்பிள்ளை, பி.டி.சீனிவாசையங்கார், மு.சண்முகம் பிள்ளை, இரா.வை.கனகரத்தினம், வி,சீ.கந்தையா, துளசி.இராமசாமி, க.சண்முகசுந்தரம் போன்றோர் 2 ஆம் நூறென்றும் காட்டுவர் [5].

இராம.கி.யின் ”சிலம்பின் காலம்” – ஆய்வுக் கருத்துக்கள்:

மேலுள்ள கணிப்புகளை ஏற்கத் தயங்கி, பொ.உ.171-193 இல் முதலாம் கயவாகு காலத்தொடு தமிழர் வரலாற்றைப் பொருத்தும் ஒழுங்கை மறுத்து, ”சிலம்பின் காலம்” .பெரும்பாலும் பொ.உ.மு. 75-70 ஆக இருக்கவே வாய்ப்பு உண்டு என்ற வரலாற்றியலுமையைப் (historical plausibility) பல்வேறு ஏரணங்களில் அலசி என் நூலிற் தெரிவித்தேன் [6]. நினைவு கொள்ள வேண்டிய அதன் கருத்துக்கள் பின்வருமாறு:

1. பதிகம், வரந்தரு காதை போன்றவை மூல ஆவணங்களாய் (original documents) இருக்க வாய்ப்பில்லை, அவை இடைச்செருகல்களே.

2. உரைபெறு கட்டுரை மூல ஆவணம் இல்லெனினும், வரலாற்றாவணமாய்க் கொள்ளலாம்.

3. மங்கல வாழ்த்திலிருந்து வாழ்த்துக் காதை வரை இளங்கோ எழுதியிருக்க முடியும். அதே பொழுது, அங்குமிங்கும் இடைச்செருகல் இருக்கக் கூடும்,

4. காதைகளின் முடிவு வெண்பாக்களை இளங்கோ எழுதியதாகக் கொள்ளத் தேவையில்லை,

5. காண்டக் கட்டுரை, நூற் கட்டுரை ஆகியவற்றை இளங்கோவோ, வேறெவரோ கூட, எழுதியிருக்கலாம்.

6. வடக்கே படையெடுத்த முதலாங் கரிகாற் சோழன் என்பான் சிலம்புக் காலத்திற்கு மிக முற்பட்டோன் ஆவான். ”அந்நாள்” என்ற குறிப்பை நோக்கின், முதலாம் கரிகாலன் படையெடுப்பு, மகதன் அசாதசத்துவின் கடைக் காலத்தில், அன்றேல் அவன் மகன் உதயனின் தொடக்க காலத்தில், பொ.உ.மு.462 க்கு அருகே, நடந்திருக்கலாம்.

7. நெடுஞ்செழியன் நியதி தவறிக் கோவலன் கொலையுற்று, அதனால் கண்ணகி, வஞ்சினங் கொண்டு தன்முலையைத் திருகியெறிந்து, மதுரை தீக்கிரையானதைப் பார்க்கின், ஏற்கனவே அரசன் மேல் மக்களுக்குக் கோவம் இருந்து, நாட்டிற் சட்டம்-ஒழுங்கு குலைந்திருந்தது புலப்படும். (நியந்தது நியதி>நீதி. நியத்தல் = ஏற்படுத்தல்; குமுகம் ஏற்படுத்திய ஒழுங்கே நியதியாகும். ஒரு குமுக நியதியை இன்னொரு குமுகம் ஏற்காது போகலாம் நியதி என்பது வேறு பொருளில் விதியைக் குறிக்கும். ஆசீவக நியதிக் கொள்கையை இங்கெண்ணிப் பார்க்கலாம். நயம்>நாயம்=ஞாயம் என்ற கொள்கையும் மெய்யியலிலுண்டு.)

8. மதுரைக் காண்டத்தில் சொல்லப்படும் மீமாந்த செயல்களை இலக்கிய வழக்காய்க் கொள்வது நல்லது.

9. கலிங்கத்துச் சேதியரசன் காரவேலனின் அத்திகும்பா (யானைக்குகைக்) கல்வெட்டையொட்டி, மூவேந்தர் பின்புலத்தை ஆய்ந்தால், செங்குட்டுவன் ஆட்சியை ஒட்டி,

a. அவன் தந்தை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்,
b. சிற்றப்பன் பல்யானைச் செல்கெழு குட்டுவன்,
c. ஒன்றுவிட்ட அண்ணன் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்,
d. ஒன்றுவிட்ட உடன்பிறந்தான்/தம்பி ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்,
e. மகன் குட்டுவன் சேரல்,
f. பங்காளி (யானைக்கட் சேய்) மாந்தரஞ் சேரல் இரும்பொறை,
g. அவன் மகன் இளஞ்சேரல் இரும்பொறை,
h. இன்னொரு பங்காளி தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை

என மேலும் 8 சேரர், சம காலத்திலும், சற்று முன்னும் பின்னும், இருந்திருக்கலாம். சமகால புலவர் - அரசரின் அண்ணக மடிக்கையை (adjacency matrix) வலைப்பின்னல் அலசல் (network analysis) மூலம் ஆய்ந்தால், அவரின் சமகால இருப்பு சட்டெனப் புலப்படும்.

10.செங்குட்டுவனின் வஞ்சி, கேரளச் சுள்ளியம் பேரியாற்றுக் கரையில் உள்ள கொடுங்களூருக்கு அருகில் இருந்தது. அது தமிழ்நாட்டுக் கரூர் அல்ல. (அதே பொழுது, தமிழ்நாட்டுக் கரூரையும் வஞ்சியென்றது உண்டு.)

11.”தமிழ்கெழு மூவர் காக்கும் மொழிபெயர்த் தேஎத்த பல்மலை” எனும் மாமூலனார் கூற்றின் படி (அகநானூறு 31), வடக்கே மொழிபெயர்த் தேயம் என்பது, மூவேந்தர் கட்டுப்பாட்டில் இருந்தது போலும்.

12.செங்குட்டுவன் வட செலவு ”கண்ணகியின் பொருட்டா, அன்றி வேறொன்றின் பொருட்டா?” என்பது ஆழ ஆய வேண்டிய கேள்வியாகும்.

13.தக்கண, உத்தரப் பாதைகளால், வடவிந்திய, தென்னிந்திய நாடுகளின் பொருளியல், வணிகப் பரிமாற்றங்கள் விதந்திருந்தன. இப்பாதைகளைப் பொருத்தே அற்றைச் சூழ்நிலை புரியும்.

14.தக்கணப் பாதையின் போக்கால், ”சங்க காலத் தமிழரின் வடநாட்டுப் படையெடுப்புகள் பெரும்பாலும் மகதத்திற்றான் முடிந்தனவோ?” எனும் ஐயமெழுகிறது.

15.மகதம், தமிழகம் ஆகியவற்றின் ஒற்றுமை பார்த்தால், மகத வேந்தருக்கும் தமிழ் மூவேந்தருக்கும் இடையே ஒரு விருப்பு-வெறுப்பு உறவு (love-hate relationship) நிலவி, ”ஒரே விதமாய்ச் சிந்திக்கும் எதிராளிகளாய் (like minded opposites) இருவரும் இருந்திருப்பரோ?” என்று தோன்றுகிறது.

16.மோரியருக்குப் பிந்தைய சுங்கர், கனவர்/கனகர் (வகரம், ககரம் ஒன்றிற்கு ஒன்று போலிகள்) நிலையும், நூற்றுவர் கன்னர் (சாதவா கன்னர்) நிலையும், சிலம்பின் பின்புலங்களாகும்.

17.கனக விசயர் இருவரில்லை, ஒருவரே. சுங்கர் முதலமைச்சனாய்த் தொடங்கிப் பின் சுங்கரை வீழ்த்தி மகதத்தை ஆண்ட கனக வாசுதேவனின் தந்தையாய்க் கனக விசயன் ஆகலாம். அன்றி கனுவ வாஸ்யன் எனும் வடமொழிக் குடிப்பெயர் தமிழிற் கனக விசயன் ஆகியிருக்கலாம்

18.பால குமாரன் மக்கள் எனுந்தொடர் அவந்தி நாட்டு அரச குடியினரைக் குறிக்கிறது. (உச்செயினி இதன் தலைநகர்; தமிழில் இது உஞ்சை)

19.கனக விசயரோடு இருந்த ஆரிய மன்னர் அடையாளம் ஓரளவே விளங்குகிறது. வட நாட்டுச் சான்றுகளைத் தீவிரமாய்த் தேட வேண்டும். இதில் நம்முடைய ஆய்வு பற்றாது.

20.தனிப்பட்ட பந்திலா உறுத்தாய் (independent confirmation) எருக்காட்டூர் தாயங்கண்ணனாரின் அகநானூறு 149 ஆம் பாடல்வழி, சிலம்பிற்குப் பிந்தைய நிகழ்வை நாம் உணருகிறோம்.

21.பெரும்பாலும் பொ.உ.மு.87-69இல், இன்னும் கூர்ப்பாய் பொ.உ.மு.80-75 க்கு நடுவில், சுங்கராட்சியின் முடிவில், மகதக் கனகராட்சிக்குச் சற்று முன்னால், நாட்டுப் பெரும்பகுதியிழந்து ஆட்சிவலி குறைந்த இலம்போதரச் சதகர்ணி காலத்தில், செங்குட்டுவன் வடசெலவு நடந்திருக்கலாம்; சிலம்பைச் சங்க காலத்தோடு பொருத்த வேண்டுமேயொழிய சங்கம் மருவிய காலத்திலல்ல.

இவ்வாய்வு, நூலாக வெளிவருமுன், வளவு வலைப்பதிவில் கீழ்வரும் 12 இடுகைகளாய் வெளிவந்தது.

http://valavu.blogspot.com/2010/05/1-2009-presentation.html
http://valavu.blogspot.com/2010/05/2.html
http://valavu.blogspot.com/2010/05/3.html
http://valavu.blogspot.com/2010/05/4.html
http://valavu.blogspot.com/2010/05/5.html
http://valavu.blogspot.com/2010/05/6_14.html
http://valavu.blogspot.com/2010/05/7_15.html
http://valavu.blogspot.com/2010/05/8.html
http://valavu.blogspot.com/2010/05/blog-post_20.html
http://valavu.blogspot.com/2010/05/10.html
http://valavu.blogspot.com/2010/05/11.html
http://valavu.blogspot.com/2010/05/12.html

கூடவே, சிலம்பிற்குப் பின்வந்த ஒருசில வரலாற்றுச் செய்திகள் (காட்டாக,

1. ”ஒருமுலை அறுத்த திருமாவுண்ணி” என்ற கண்ணகி விவரிப்பைச் சொல்லும் மருதன் இளநாகனாரின் நற்றிணை 216 ஆம் பாட்டு,

2. சிலம்பு எழுந்து 25 ஆண்டுகளுக்குப் பின், கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி, இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன், நாஞ்சில் வள்ளுவன், பெருஞ்சிக்கில் கிழான், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், மருதன் இளநாகனார் ஆகியோரின் சமகால இருப்பு,

3. சிலம்பிற்கு 25 ஆண்டுகள் பின், அகநானூறு, குறுந்தொகை, பரிபாடல் ஆகிய சங்க நூல்கள் கூடகாரத்துத் துஞ்சிய மாறன்வழுதி காலத்திற் தொகுக்கப்பட்டிருக்கும் வரலாற்று இயலுமை,

4. செங்குட்டுவன் மகன் குட்டுவஞ்சேரலுக்குப் பின் வந்த மாந்தரஞ்சேரல் இரும்பொறை காலத்தில் ஐங்குறுநூறு தொகுக்கப் பெற்ற வரலாற்றியலுமை

5. சிலம்பிற்கு 25 ஆண்டுகளின் பின்னால், பதிவுற்ற பழந்தமிழர் குடவோலைப் பழக்கம்

ஆகியவை) மேற்சொன்ன இடுகைகளிலும், கீழ்வரும் இரு இடுகைகளிலும், அலசப் பட்டன.

http://valavu.blogspot.in/2010/06/1.html
http://valavu.blogspot.in/2010/06/2.html

இலக்கிய, வரலாற்றாய்விற் தன்மயப் போக்கு:

பொதுவாக கல்வெட்டு, இலக்கியச் செய்திகளை ஒத்திசைவு (consistency), ஏரணத்தோடு (reason) ஆய்ந்து, வரலாற்றில் இது கற்பனை, இது நடந்திருக்கலாம், என ஒரு முடிவிற்கு வருகிறோம். அதே பொழுது தமிழ் வரலாற்று முன்மையை மறுக்கும் ஆய்வாளரோ, தன்மயம் கொண்டுத் தமிழ் இலக்கியத்தை ஒதுக்குகிறார். (தமிழியெழுத்து முன்மைக்கும் இதே கதி தான். எத்தனை மேனாட்டாருக்குப் ”பழனிப் பொருந்தற் தொல்லாய்வின் [7] முகன்மை (பொ.உ.மு.490) புரிந்திருக்கிறது? சொல்லுங்கள். அது அசோகர் எழுத்திற்கும் முன்னால் சான்றாகும் போது, வரலாற்றை மாற்றியெழுதுமாறு நொதுமல் (neutral) அவைகளில் நாம் என்ன வாதிட்டிருக்கிறோம்?”)

”ஆதி காவியமான வான்மீகி இராமாயணத்தாற்றான் இந்திய இலக்கியச் சிந்தனையே எழுந்தது” என்று முழங்குவாரும் இன்றுளர். இவர் போன்றோருக்கு வால்மீகி இராமாயணம், வியாச பாரதம், சாகுந்தலம், குமார சம்பவம் போன்றவையே காப்பியங்களாகின்றன. அவற்றின் வரலாற்றுத் தாக்கம், வடமொழிக்கு இந்திய மொழிகளின் கடப்பாடு என்றே இந்தியவியற் (Indology) களத்திற் பேசு பொருள்கள் அமைகின்றன. காட்டு: ஷெல்டன் போலாக் [8]. இதுவரை இல்லெனின், இனிமேலாவது இவர் போன்றோர் சங்க இலக்கியம், குறிப்பாய்ச் சிலப்பதிகாரம், படிப்பது நல்லது. வடமொழி மட்டுமே மேடு, மற்றவை தாழ்வென்று கீறல் விழுந்தாற் போல் இன்னுஞ் சொல்லுவது போகாவூருக்கு வழி கேட்பதாகும்.

இன்னொரு காட்டு: நெதர்லாந்தின் ஹெர்மன் தீக்கன் [9]. ”வடமொழிக் காப்பிய மரபுகள், பரதரின் நாட்டிய சாற்றம், போன்றவையாற் தூண்டப் பெற்றே சங்க இலக்கியங்கள் பெருஞ்சோழர் காலத்தில் 9ஆம் நூற்றாண்டிற் படைக்கப்பட்டன” என்ற தேற்றை இவர் முன்வைப்பார். “சேரரே அழிந்து சிறுகிப்போன காலத்தில் சேரரின் சிறப்பைப் பெரிதுவக்கும் காப்பியம் எழுமா?” என இவரிடம் யார் போய்க் கேட்பது? தமிழி, வட்டெழுத்துக் கல்வெட்டுக்களின் வரலாற்றுமையும், சமய இலக்கியங்களுக்கு முற்பட்ட சங்க இலக்கிய வரலாற்று இயலுமையும் கூறி, இவர் வாதின் உள்ளீடின்மையை விளக்க வேண்டும்.

மூன்றாவது காட்டு தொல்லியல் துறை முன்னாள் நெறியாளர் திரு. இரா.நாகசாமியாகும். சிலம்பின் வரலாற்றுப் பரிமானத்தை மறுத்து, ”இது ஒரு புனைகதை, [வான்மீகி இராமாயணம், வியாச பாரதம் மீதும் இக்கூற்று எழலாம்.] தமிழர்க்கென இலக்கியக் கொள்கை, வரலாற்று மரபுகள் கிடையா; சங்கதத் தூண்டலால் இக்காப்பியம் உருவானது” என்ற கொள்கையில் இவர் இப்போது புகல்கிறார். சில மாதங்களுக்கு முன் “தமிழ், வடமொழிக் கண்ணாடி” என்ற நூலையும் இவர் வெளியிட்டார் [10]. அந்நூற் செய்தி அனைத்து நாட்டு மொழியிலக்கிய ஆய்வுக் களங்களில் சட்டென இணையத்திற் பரவியது; ஆனால், தமிழறிஞர்,  திரு. நாகசாமியின் ஆய்வு முடிவை ஏற்காதது மீக் குறைந்தே வெளிப்பட்டது. திரு.நாகசாமி கருத்தை உணர்வு பூர்வமாக மறுக்காது, அறிவார மறுத்து நூல் வெளியிடுவதே ஆய்விற்கு வழி வகுக்கும்.

பொதுவாக, எல்லா வரலாற்று நிகழ்ச்சிகளுக்கும் இரு பக்கச் சான்றுகள் கிடைப்பதில்லை. அசோகரின் வரலாற்றிற்கு அவர் கல்வெட்டன்றி விதந்த சான்றுகளுண்டோ? அசோகப் பியதசி எனும் இயற்பெயர் கூட  அவருடைய 2 கல்வெட்டுகளில் மட்டும் தாம் இருக்கின்றன [11]. அவை இல்லெனில் அசோகர் அடையாளங் காணப்படார். அசோகர் கல்வெட்டிற் சேர, சோழ, பாண்டியர், அதியமான் பற்றிய குறிப்புக்கள் இருக்கின்றன. ஆனாற் தமிழ் இலக்கியத்தில் அசோகர் பற்றிய குறிப்புண்டோ? ”திராமிர சங்காத்தம்” பேசும் காரவேலனின் அத்திகும்பா கல்வெட்டில் அசோகரின் பெயருண்டோ? [12]. தமிழர் முன்னணி 1300 ஆண்டுகளா? 113 ஆண்டுகளா? [13]. சங்க இலக்கியத்தில் காரவேலன் பெயருண்டா? தமிழ் வரலாற்றாய்வாளரில் பலரும் காரவேலன் கல்வெட்டைப் படித்ததில்லை; பிறமொழி ஆவணங்களையும் தேடாது இருக்கிறார். உங்களுக்கு அடிப்படைச் சிக்கல் புரிகிறதா?

சிவநெறிச் செல்வரான மணிவாசகர் பற்றித் திருவாசகம், கோவையார் தவிர்த்து, பொ.உ. 1100 வரை எங்கும் நேரடிக் குறிப்பில்லை; தேவார மூவருக்கு முன்னா, பின்னா என்பதும் குழம்பும். தமிழ் வரலாற்று வரைவிற்குத் இக் கேள்வி தேவையில்லை போலும்!!! பல தமிழறிஞருக்கும் இலக்கிய ஆய்வு, பொ.உ. 3 ஆம் நூற்றாண்டைத் தாண்டின், 19 ஆம் நூற்றாண்டிற்கு வந்து விடுகிறது. மூத்த திருப்பதிகம், திருவாசகம், தேவாரம், நாலாயிரப் பனுவல், இராம காதை, பெரிய புராணமென ஏதுந் தொடாது, தென்னிந்தியக் கல்வெட்டுக்களையும், இலக்கியங்களையும் பொருத்திப் பார்க்காது இருக்கிறார். அதுவொரு ஓட்டம், இதுவொரு ஓட்டமாய். தனிச்சால் தரித்துத் தமிழ் அறிவாண்மை (scholarship) தடை வேலி போடுகிறது.

தமிழறிஞர் மிகப் பலரும் இணையத்துள் இந்தியவியலுக்குள் நுழையாது, ”மறைவாக நமக்குளே பழங்கதை பேசும்” கருத்தரங்குகள், பட்டிமன்றங்கள், பாட்டரங்குகள், என்றே பங்கு கொள்கிறார். அனைத்து நாட்டுப் பார்வையில், முறையியல் (methodology) வழுவாது, மாற்றோர் ஏற்கும் அனைத்துநாட்டு ஆய்வுத் தாளிகைகளிற் கட்டுரைத்தலும் குறைவு. தமிழறிஞருக்கும் எதிராளருக்கும் இடையே, உரையாட்டு நடப்பதேயில்லை. தமிழ்ப் பழமை மறுப்போரே இதிற் பங்குகொள்கிறார். இவர் சொல்லைக் கேட்டு வடமொழி விதக்கும், வெளிநாட்டு அறிஞரும் கூடத் தமிழிலக்கியக் கால முன்மையை மறுத்தே வருகிறார். (செம்மொழி என்பதெல்லாம் இருவேறு கருத்தின் வீண் வீறாப்பாய், விழையரசியலாய் ஆகிப் போனது.)

சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும் – திரு.இரா.நாகசாமியின் பார்வை:

சிலப்பதிகாரத்திற்கு மூலங்களில் ஒன்றாய் வடமொழியிலெழுந்த பஞ்ச தந்திரத்தைக் காட்டி திரு.இரா.நாகசாமி ஒரு கருத்துச் சொன்னதாய் அண்மையில் 2012 செபுதம்பர் 25 தினமலர் நாளிதழில் வெளியானது. (http://www.dinamalar.com/News_Detail.asp?Id=554126). அது கீழே வருமாறு உள்ளது.:

---------------------------------------------------------

"பஞ்ச தந்திரக் கதைகளிலுள்ள நீதிகளையும், செயல்பாடுகளையும், சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் அமைத்துள்ளார்,'' எனத் தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் நாகசாமி தெரிவித்தார். பெசன்ட் நகர், தமிழ் ஆர்ட்ஸ் அகடமி சார்பில், ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், திரு. நாகசாமி "சிலப்பதிகாரம் ஒரு புதிய நோக்கு' என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையில் கூறியதாவது:

ஐந்திணைகள்

சிலப்பதிகாரத்தை நாடக காப்பியம் என்று, உரையாசிரியர் குறிக்கிறார். கதைப் போக்கில் ஆங்காங்கே இசைப் பாக்களையும், பல்வகைக் கூத்துக்களையும் பொருத்தி, அதன் வாயிலாக முக்கிய நீதிகளை இளங்கோவடிகள் எடுத்துரைக்கிறார். எடுத்துக்காட்டாக, தமிழ் இலக்கண மரபுப்படி, ஐந்திணைகளை இந்நூலில் அமைத்து இயற்றியிருக்கிறார். சைவம், வைணவம், சாக்தம், பவுத்தம், சமணம், ஆசீவகம் ஆகிய சமயக் கருத்துகளையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அவரின் கதையமைப்பில் ஏற்கனவே, வழக்கில் இருந்த பல கதைகளையும், நீதிகளையும் அடிப்படையாகக் கொண்டே, தன் இலக்கியத்தை அமைத்துள்ளார் என்பது தெளிவாகிறது.

கீரிப்பிள்ளை கதை ஒரு இன்றியமையாத நீதியை, இளங்கோவடிகள் கோவலனுக்கு மாடலன் கூறியதாக அமைத்துள்ளார். அதில், ஒரு பெண், கீரிப்பிள்ளையைக் கொன்ற கதை வருகிறது. இந்த கதை, "பஞ்ச தந்திரம்' எனும், சமஸ்கிருத நூலில் உள்ளது. அது, முதலாம் நூற்றாண்டைச் சார்ந்தது. இக்கதையை மேலும் விரித்து இளங்கோவடிகள் கூறியுள்ளார். அதை, "வடமொழி வாசகம் செய்த நல்லேடு கடன் அறி மாந்தர் கைநீ கொடுக்க' என்று குறிக்கிறார். வட மொழி வாசகம் என்பது பற்றி, அரும்பத உரை ஆசிரியரும், அடியார்க்கு நல்லாரும் தமது உரையில் கூறும்போது, இது ஒரு "கிரந்தம்' என்று குறித்து, அதை, "அபரீக்ஷய ந கர்த்தவ்யம், கர்த்தவ்யம் ஸுபரீக்ஷிதம் பச்சாத்பவதி ஸந்தாபம் ப்ராஹ்மணீ நகுலம் யதா' என, சமஸ்கிருத மொழியில் அப்படியே கொடுத்திருக்கின்றனர். இதை அடியார்க்கு நல்லார், "கவி' என்றும் கூறுகிறார். ஆகவே, இவ்வடமொழி வாசகம் பஞ்ச தந்திரத்தில் உள்ள பாடல் என்பதில் ஐயமில்லை. இதன் கருத்து, ”எந்தவொரு செயலையும் பரிசீலிக்காமல், ஆழ்ந்து எண்ணாமல் செய்யக் கூடாது. அவ்வாறு செய்பவர்கள் மிகவும் கொடுமையானவர்கள். துன்பத்தில் ஆழ்வர்” என்பது தான்.

சிற்பங்களாக...

கோவலன், பாண்டிய மன்னன் யோசிக்காமல் செய்த செயல்களால் ஏற்பட்ட விளைவுகளை அடிப்படையாக்கி, சிலப்பதிகாரத்தை இளங்கோ இயற்றினார். சிலம்பின் காலம், கி.பி., 3ம் நூற்றாண்டு என்பர். அக்காலத்தில், பஞ்ச தந்திர நீதிக்கதைகள் இந்தியா முழுவதும் புழக்கத்தில் இருந்தன. இந்தக் கதைகள், அரேபியம், பாரசீகம், ஹீப்ரு, செகோஸ்லோவேகியம், போலந்த், லத்தீன், கிரேக்கம், பிரெஞ்சு, ஆங்கிலம், ஜெர்மானியம், டேனிஷ் உள்ளிட்ட மொழிகளில், பதினாறாம் நூற்றாண்டில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. இந்தியாவில் 6ஆம் நூற்றாண்டு சாளுக்கியர், இராட்டிர கூடர்கள் போன்ற கர்நாடகத்தை ஆண்ட மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில்களில் சிற்பங்களாகவும், அச்சிற்பங்களின்கீழ் பஞ்சதந்திரக் கதையின் நீதி வாக்கியங்கள், சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளன.

கொல்லன் கதை

மற்றுமொரு பஞ்சதந்திரக் கதையில், பாழ்கிணற்றில் வீழ்ந்த பொற் கொல்லன் ஒருவன், தன்னைக் காப்பாற்றியவனை அரசனிடத்தில் கள்வனென, பொய்கூறி தண்டனைபெற்றுத் தந்ததையும் குறிப்பிடுகிறது. அக்கதையை, இளங்கோவடிகள் அறிந்திருக்கவேண்டும் என்பதில் ஐயமில்லை.

ஆகவே, அக்காலத்தில் வழக்கிலிருந்த நீதிகளையெடுத்து, தனது காப்பியத்தில் வைத்து, இளங்கோவடிகள் தந்துள்ளார். இவ்வாறு நாகசாமி கூறினார். இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு, தமிழ்ப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் அவ்வை நடராஜன் தலைமை தாங்கினார்.

----------------------------------------------------

அடுத்த பகுதியில் தொடர்வோம்.

எடுகோள்கள்:

1. http://www.sscnet.ucla.edu/southasia/Religions/texts/Ramaya.html
2. http://www.ramayanaresearch.com/ramayana.html
3. http://en.wikipedia.org/wiki/Mahabharata;
4. டாக்டர் க.பஞ்சாங்கம், ”சிலப்பதிகாரத் திறனாய்வுகளின் வரலாறு”, பக் 24-30, முதற் பதிப்பு ஜூன் 2010, வெளியீடு: அன்னம், மனை எண் 1, நிர்மலா நகர், தஞ்சாவூர் 613007.
5. இரா.மதிவாணன், “சிலம்பின் காலக் கணிப்பு”, பக் 13-18, சேகர் பதிப்பகம், சென்னை – 78, 2005
6. இராம.கி., சிலம்பின் காலம், தமிழினி பதிப்பகம், 102, பாரதியார் சாலை, இராயப் பேட்டை, சென்னை 14. 2011
7. A great past in bright colours, T.S.Subramanian, Frontline Oct 8, 2010, pp-64-75.
8. Sheldon Pollock, The Language of the Gods in the world of Men, Permanent Black, Himalayana, Mall Road, Ranikhet Cantt, Ranikhet 263645, 2007
9. Tieken, Herman Joseph Hugo. 2001. Kavya in South India: old Tamil cankam poetry. Groningen: Egbert Forsten, Also see: http://www.ulakaththamizh.org/JOTSBookReview.aspx?id=194;
10. http://www.tamilartsacademy.com/journals/volume23/articles/article2.xml
11. The Gujarra and Maski versions of Minor Rock Edict ! are the only two inscriptions of Asoka which refer to him by name. Inscriptions of Asoka, p 4, D.C.Sircar, Publications Division, Ministry of Information and Broadcasting, Govt.of India. Fourth Edition 1998. ISBN 81-230-0665-9
12. The Hathigumpha Inscription of Kharavela and The Bhabru Edict of Asoka, Shashi Kant, D.K.Printworld (P) Ltd, ‘Sri Kunj’ F-52, Bali Nagar, New Delhi 110015.
13. K.P.Jayswal, Hathigumpha Inscription of the Emperor Kharavela (173 BC to 160 BC). J.of Bihar and Orissa Research Society, III (1917), pp 425-473; JBORS, IV, pp 364ff; JBORS, XIII, pp 221ff, XIV, pp 150ff.
1 comment:

தங்கமணி said...

ஐயா, திரு நாகசாமியின் கருத்தை ஆய்வு நோக்கில் மறுக்கும் தொடரை வாசிக்க இங்கு பதிந்தமைக்கு நன்றி.