Saturday, May 22, 2010

சிலம்பின் காலம் - 11

மாடலன் வருகையும், மன்னவர்க்கு உரைத்ததும்:

”கானற்பாணி கனக விசயர்தம் முடித்தலை நெறித்தது”என்ற வாசகமும், ”குடவர் கோவே நின்னாடு புகுந்து வடதிசை மன்னர் மணிமுடி ஏறினள்” என்ற வாசகமும் இங்குதான் சொல்லப்படுகின்றன. கூடவே ”கவுந்தியின் உண்ணாநோன்பு, மதுரை நிகழ்வுகள், மாசாத்துவன், மாநாய்கன் துறவு, இருவரின் மனைவியர் இறந்தது, மாதவி, மணிமகலை துறவு, மாடலன் நன்னீர்க் கங்கை ஆடப் போந்தது” என்று அடுத்தடுத்த செய்திகள் சொல்லப்படுகின்றன. பொதுவாக தெற்கிருந்து வந்து கங்கையிற் புனித நீர் ஆடுவதென்பது அன்றிலிருந்து இன்றுவரை. காசியன்றி வேறெங்கும் நடப்பதில்லை. மாடலன் செங்குட்டுவனைப் பார்க்கும் இடத்தில் தான் அருகில் செங்குட்டுவனின் தென்கரைப் பாடி இருந்திருக்கிறது. இதனாலேயே செங்குட்டுவனின் போர்க்களம் பெரும்பாலும் காசிக்கு வடக்கே இருந்திருக்கலாம் என்று ஊகிக்கிறோம். கங்கைக்குத் தென்கரையில் காசியிற் தங்கிய பாடிக்கு அருகில் ஏதோ ஒரு சிறுகுன்றம் இருந்ததாகச் சிலம்பு சொல்கிறது(87). இதைப் பற்றியும் கள ஆய்வு தேவை.

மாடலனை அரசன் கேட்கும் கேள்விகள் அத்தோடு முடியவில்லை. மைத்துனன் கிள்ளிக்காக ஒன்பது சோழிய இளங்கோக்களோடு செங்குட்டுவன் பொருதியதும் இங்கு நினைவுகூரப் படுகிறது(88).

முடிவில் கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன் 1000 பொற்கொல்லரைக் கொன்று உயிர்ப்பலியூட்டிய செய்தி சொல்லப்படுகிறது. இந்தச் செய்தி மதுரை எரியுண்டு 32-36 மாதங்களுக்கு அப்புறம் தான் செங்குட்டுவனுக்குத் தெரிகிறது.

மொத்தத்தில், செங்குட்டுவனின் வடசெலவைக் குறைத்து மதிப்பிடமுடியாது. அது வழிநெடுகப் பல தாக்கங்களை ஏற்படுத்திக்கொண்டே சென்றிருக்க வேண்டும். இந்த 32-36 மாதங்களில் பாண்டிய நாட்டில் கலகமும் போராட்டங்களும் வெடித்திருக்க வேண்டும். முடிவில் மக்களின் கோவத்தைக் குறைக்க 1000 பொற்கொல்லர் பலியாடுகளாக ஆக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். நீதிவழி தப்பிய அரசனும் அதனால் ஏற்பட்ட பிற விளைவுகளும் கொடிதானவை என்பது சிலம்பைப் படித்த யாருக்கும் விளங்கும்.

சேரனின் பெருங்கணி “எண்ணான்கு (32) மதியம் வஞ்சி நீங்கியது” என்ற அறிவிப்பைத் தருகிறான். அதற்கு மறுமொழி சொல்வதற்கு மாறாய், தன் மைத்துனன் கிள்ளியையே நினைந்து, ”இளங்கோ வேந்தர் இறந்ததிற் பின்னர் வளங்கெழு நன்னாட்டு மன்னவன் (உறையூர்ச் சோழன்) கொற்றமொடு செங்கோல் தன்மை தீதின்றோ? – என்ற கேட்பதால், நேரிவாயிற் போரின் பின் உறையூர் ஆட்சியை மைத்துனனுக்கு பிடித்துக் கொடுத்தது கண்ணகி கதைக்குச் சற்று முன் நடந்திருக்கலாம் என்று உணர்கிறோம். காசியில் இருந்தபோது செங்குட்டுவனுக்கு அந்தக் கவலையும் இருந்திருக்கிறது. எனவே அந்த நேரிவாயிற் போர் வடசெலவிற்கு ஓரிரு ஆண்டுகள் முன்னர்தான் நடந்திருக்க வேண்டும். நாக நாட்டுச் சோழன், பாண்டியன் ஆகியோரின் கோவம் இயற்கையாகவே சிலம்புக் காலத்திற் அதிகமாக இருந்திருக்க வேண்டும்.

32 மாதங்களில் நடந்த செய்தியைச் சொன்ன மாடலனுக்கு, குறிப்பாகத் தன் மைத்துனன் கிள்ளியைப் பற்றிச் சொன்ன மாடலனுக்கு, தன்னிறைக்குத் தக்க 50 ஆடகப் பெருநிறையைச் சேரன் கொடுக்கிறான். அடுத்து ஆரிய மன்னரை (கனக விசயனோடு களத்தில் இருந்த 100 பேரை) நாடு செல்க என்கிறான். ஆரியப் பேடியொடு, எஞ்சிய மன்னர், சேரனுடைய இறைமொழி மறுக்கும் கஞ்சுக முதல்வர் ஈரைஞ்ஞூற்றுவர், கனக விசயர் ஆகியோரை இருபெரு வேந்தர்க்குக் காட்டுமாறு ஏவுகிறான். இது எதற்கு என்று புரியமாட்டேன் என்கிறது. ஒருவேளை இந்தக் கண்காட்சி சோழ, பாண்டியர் கோவத்தை, மாற்றும் என்று நினைத்தானோ? - தெரியவில்லை.

வடபுலத்தை விட்டுப் புறப்படுமுன் வடதிசை மன்னரின் மண்ணெயில் முருக்கிக் கவடி (= வெள்வரகு, கொள்) வித்தி, கழுதையாற் சேரன் ஏருழுகிறான்(89). இவ்வளவு விவரம் சொல்லும் சேரன் படையெடுப்பையே ”பொய்”யென்று சொல்லி வடநாட்டு வரலாற்றாசிரியரும் (சில தமிழ்நாட்டு வரலாற்றாசிரியரும்) மேலைநாட்டாரும் ஒதுக்குகிறார்களே? அது என்னவிதமான ஆய்வு? - என்ற வியப்பும் நமக்குள் எழுகிறது.

காப்பியத்தின் முடிப்புச் செய்திகள்:

கதை விரைவாக வஞ்சிக்கு மாறுகிறது. ஒரு நாள் மாலை, வேண்மாளோடு வஞ்சி அரண்மனை நிலாமுற்றத்தில் பறையூர் சாக்கையன் கூத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போது (கொடுங்கோளூர் - எர்ணாகுளம் இடையே இன்றைக்கும் பறையூர் உள்ளது. சாக்கைக்கூத்தின் இன்னொரு வளர்ச்சி தான் இந்தக் காலத்துக் கதகளியும், மோகினியாட்டமும். இதைப் படித்த பிறகும் செங்குட்டுவன் இருந்தது குடவஞ்சியில்லை, கொங்கு வஞ்சி என்று சொல்லச் சில ஆய்வாளருக்கு எப்படி மனம் வருகிறது?) நீலன் வந்து, ஆரிய அரசரோடு நாகநாட்டுச் சோழனையும் பாண்டியனையும் பார்த்த கதையைச் சொல்லுகிறான். செங்குட்டுவனின் சினம் கூடிப்போகிறது.

கூத்துப் பார்க்கும் போது கூடவிருந்த மாடலன் செங்குட்டுவனின் சினம் தணித்து :”ஆட்சியேற்று 50 ஆண்டுகள் ஆனபின் இன்னும் வேள்வி செய்யவில்லையே?” என்று கேட்கிறான். இந்த ஒரு செய்தியால், நடுகற் காலத்தில் செங்குட்டுவனின் அகவை 70-75 ஆக இருந்திருக்கலாம் என்று நாம் ஊகிக்க இடம் தருகிறது. இந்தச் செய்தியை பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்துப் பதிகம் அவன் ஆட்சிக்காலம் சொல்லுவதன் மூலம் உறுதி செய்கிறது(90).

அதுவரை வேள்வி செய்யாத சேரர்கள், அடுத்தடுத்து ஏதோவொரு காரணத்தால் வேள்வி செய்யும் படி தூண்டப்பட்டிருக்கிறார்கள், அவர்களும் அதற்கு இணங்கியிருக்கிறார்கள். இந்தக் கேள்வியும் ஆய்வு செய்யப்படவேண்டியதே. வேதநெறி அவ்வளவு தூரம் அவர்களை ஆட்படுத்தியதா? கொஞ்சங் கொஞ்சமாக மற்ற நெறிகளின் தாக்கம் தமிழ்நாட்டில் குறைந்தது போலும். பல்லவர் காலம் வரும் போது வேதநெறியோடு பிணைந்து கலவையான சிவநெறியும், விண்ணவ நெறியுமே இங்கு ஆட்சி செய்யத் தொடங்கின. மாடலன் கூற்றில் செங்குட்டுவனின் வெவ்வேறு பங்காளிகளைப் பற்றிய கூற்றும் வருகிறது(91). வேத வேள்வி செய்து முடிந்தபின், வஞ்சிப் புறநகர் ஆற்றங்கரையில் வேளாவிக்கோ மாளிகையில் இருந்த ஆரிய அரசரையும், மற்றோரையும் வில்லவன் கோதைமூலம் சேரன் சிறையிருந்து விடுவிக்கிறான். குடிமக்களின் வரியைக் குறைக்குமாறு அழும்பில் வேளுக்கு ஆணையிடுகிறான்.

அதன் பின்னால் பத்தினிக் கோட்டம் சென்று, கைவினை முற்றிய கண்ணகியின் தெய்வப் படிமத்தைப் பார்க்கிறான். பார்த்து, மனம் களித்து, ”பூப்பலி செய்து காப்புக்கடை நிறுத்தி, வேள்வியும் விழாவும் நாள் தொறும் வகுத்து, கடவுள் மங்கலம் செய்கு” என்று ஆணையிடுகிறான். நிகழ்வுகள் எல்லாம் சடசடவென்று நடைபெறுகின்றன. இடையில் மலைப்பாதை வழி எந்தப்பயணமும் சேரன் மேற்கொண்டதாய்ச் சொல்லப்படவில்லை.

நினைவிருக்கிறதா? முன்னால் கண்ணகி பற்றிய செய்தி அறிந்த போது ஆற்றைக் கடந்து செங்கோட்டின் மேல் ஏதோவொரு இடத்தில் தங்கியிருந்தான். அவ்விடம் செல்லச் சேரனுக்குச் சிலநாட்கள் கூடப் பிடித்தன. அது போன்ற பயணம் இங்கு விவரிக்கப்படவில்லை. இந்தக் காதையில் எல்லாமே அடுத்தடுத்த செய்திகளாக, அரண்மனையில் இருந்து அருகே ஊருக்குள் நகர்ந்த வண்ணமே விவரிக்கப்படுகின்றன.

இதைக் கூர்ந்து கவனித்தால், கண்ணகி. கோயில் என்பது குடவஞ்சியில் அமைந்ததுதான், எங்கோவொரு மலையில் அமைந்ததல்ல, என்று புரிந்துபோகும். இதை நிறுவுவதற்கு நடுகற் காதை 226-234 ஆம் வரிகளில் வரும் ஒரு விவரிப்புப் போதும்(92). அதோடு எந்த அரசனும் இதுபோன்று கோயிலெழுப்பும் செயலைத் தன் தலைநகரிற் செய்வானேயொழிய நாட்டு எல்லையிற் செய்ய மாட்டான். [இன்றைக்கு தமிழக எல்லையில் இருக்கும் மங்கலாதேவிக் கோட்டம் பின்னால் எழுந்த எத்தனையோ கண்ணகி கோயில்களில் ஒன்றாக இருக்கவே வாய்ப்பு அதிகம். அதோடு அங்கே உடைந்து கிடக்கும் படிமங்களும் கேரளபாணிச் சிற்பங்களை நமக்கு உணர்த்தவில்லை.

அடுத்து வாழ்த்துக் காதையில், தேவந்தி, கண்ணகியின் காவற்பெண்டு, கண்ணகியின் அடித்தோழி, ஐயை ஆகியோர் பத்தினிக்கோட்டம் வந்த செய்தி சொல்லப்படுகிறது; அவர்களில் மூவர் அழுது அரற்றியதும் சொல்லப்படுகிறது. ”தென்னவன் தீதிலன்; நானவன் மகள்” என்னும் கண்ணகியின் வான்குரல் எழுகிறது. இந்தகைய முடிப்பு நாட்டுப்புறத் தொன்மங்களில் அப்படியே உண்டு.

”கண்ணகியைப் பாண்டியன் மகளாக உருவகப்படுத்தும் கதைக்கூறு ”கோவலன் கதை”என்னும் நாட்டுப்புறக் கூத்திலும்(93), ”சந்திராவின் பழிவாங்கல்” என்ற கன்னட நாட்டுப்புறக் கதையிலும்(94) உண்டு. இது ஒருவிதமான கருத்தீடு. இது உண்மையாய் இருக்கத் தேவையில்லை. கதை நாயகியை எதிரியின் மகளாகச் சொல்வதும், குழந்தையை ஆற்றில் விடுவதும், அதை இன்னொருவர் கண்டுபிடித்து வளர்ப்பதும், உலகெங்கும் காலகாலமாய் பயன்படுத்தப்படும் புனைவு உத்திகளாகும். யூத நெறியாளர் மோசே குழந்தையாய் இருந்தபோது நீல நதியாற்றில் இதுபோலக் கூடையில் வைத்து மிதந்து வந்ததும், எகிப்திய அரசனால் பின்னால் இராமசிசோடு சேர்த்து வளர்க்கப்படுவதும் இங்கு நினைவிற்கு வருகின்றன. இதுபோன்ற கதையுத்திகள் யாரோ ஒரு கதையில் நடந்திருக்கலாம். ஆனால் அவை மக்கள் மனத்தை பெரிதும் கவர்ந்திருப்பதால், அதே யுத்திகளை வெவ்வேறு கதைகளில் புனைவாளர் இடைச்செருகிறார்கள். ”கண்ணகி பாண்டியன் மகள்” என்னும் பாமர மக்களின் கருத்தீட்டைப் புறம் தள்ளவேண்டாம் என்று இளங்கோ வாழ்த்துக் காதையிற் சேர்த்திருக்கலாம். இளங்கோவின் குறிப்பில் இருந்தே அதற்குப் புனைவுகள் சேர்த்து, மேலே சொன்ன நாட்டுப்புறக் கூத்துக்கள் எழுந்திருக்கலாம். இந்தக் கூத்துக்கள் மிக மிகப் பிற்காலத்தன. [எவ்வளவு முனைந்து கணித்தாலும், இவை 16 ஆம் நூற்றாண்டிற்கு முன்னாற் போகாதவை.] இவற்றை வைத்துக் கொண்டு சில ஆய்வாளர் சிலம்பின் காலத்தைப் பிற்காலத்திற்குத் தள்ளமுயல்வது “பேரன் தாத்தனுக்கு முன்னோன்” என்று சொல்வதைப் போன்றது. இது போன்ற முயற்சிகளைச் சரியான ஆய்வாளர் புறந் தள்ளுவர்.

ஈற்றுவாய்:

இந்தக் கட்டுரைத் தொடரை எழுதத் தொடங்கிய காரணமே சிலப்பதிகாரத்தின் வஞ்சிக் காண்டமும், அதன் தொடர்ச்சியான செய்திகளும் தான்.

"சேரன் செங்குட்டுவனின் காலம் என்ன? சிலம்பில் விவரிக்கப்படும் வடக்கு நோக்கிய படையெடுப்பு உண்மையிலேயே நடந்ததா? அல்லது அது வெறும் கதையா? (அதைக் கதை என்று சொல்லிச் சிலம்பின் காலத்தை கி.பி. 500 க்குப் பின் தள்ளும் ஆய்வாளர் வையாபுரியாரிலிருந்து, இக்கால இடதுசாரிகள் வரை பலருண்டு. பேரா. ரொமிலா தாப்பர் போன்றோரும் கூடச் சிலம்பின் காலத்தைப் பின் தள்ளுவார்கள்.) செங்குட்டுவன் வென்றதாகச் சொல்லப்படும் கனக விசயர் யார்? வடபுலத்து மன்னர்கள் என்று வஞ்சிக் காண்டத்துள் ஏழெட்டுப் பெயர்கள் சொல்லப் படுகிறதே, அவரெல்லாம் யார்? சிலம்பைப் படிக்கும் போது, மகதத்தில் மோரியர் ஆட்சி இல்லை என்று புரிகிறது; பிறகு யார் அப்போது மகதத்தை ஆண்டார்கள்? அந்தக் காலத்தில் பெரும்நகரமான பாடலிப் பட்டணத்திற்கு அருகில் செங்குட்டுவனோ, வில்லவன் கோதையோ போனார்களா? இமயமலையில் இருந்து செங்குட்டுவன் கல் எடுத்தான் என்றால், கிட்டத்தட்ட அந்த இடம் எங்கிருக்கலாம்? வஞ்சிக் காண்டத்தில் வரும் நூற்றுவர் கன்னர் யார்? நூற்றுவர் கன்னரின் கொடிவழியில் செங்குட்டுவனுக்குச் சம காலத்தில் இருந்த மன்னரின் பெயர் எது? செங்குட்டுவனுக்கு உதவி செய்யும் அளவுக்கு, ஆதிக்கம் பெற்றவராய், நூற்றுவர் கன்னர் எப்படி இருந்தார்கள்?"

இது போன்ற பல கேள்விகள் வஞ்சிக் காண்டம் படிக்கும் நமக்கு எழுகின்றன. ஒரு சில கேள்விகளுக்கு இந்தத் தொடரில் விடை காண முயன்றிருக்கிறேன் (எல்லாக் கேள்விகளுக்கும் அல்ல.) நாவலந்தீவின் தெற்கே இருக்கும் ஒரு சிறிய மன்னனான சேரலன் (நமக்கு நம் நாடு பெரிதென்றாலும், நாவலந்தீவில் சேர நாடு சின்னது தானே?) வடக்கே படையெடுத்துப் போக முற்படும் பொழுது தனக்கு வடக்கே இருக்கும் மன்னர்களில் ஏதேனும் ஒரு சிலரையாவது நட்புடையவர்களாய் ஆக்கிக் கொள்வது ஓர் அரசதந்திரம் தான்; இருந்தாலும் "நூற்றுவர் கன்னரோடு ஏன் அப்படி ஒரு தொடர்பு கொண்டான்? அவர் தவிர்க்க முடியாதவரா?" என்ற கேள்வி எண்ணிப் பார்க்க வேண்டியது தான். [சிலம்பில் ஏற்பட்ட வரலாற்று வேட்கையும் எனக்கு நூற்றுவர் கன்னரில் தான் தொடங்கியது.]

மொத்தத்தில் சிலம்பை ஆழ்ந்து படித்தால், பெரும்பாலும் சிலம்புக் கதையின் காலம் கனகர் ஆட்சிக்குச் சற்று முன், கி.மு.75-80 யை ஒட்டியிருந்திருக்க வேண்டும் என்ற முடிவிற்கே வரவேண்டியிருக்கிறது. வெறுமே வரந்தரு காதையையும், மகாவம்சப் பட்டியலையும் வைத்துக் கொண்டு உள்ளிருக்கும் முரண்களைப் பார்க்காது முதலாம் கயவாகுவின் காலமாய் கி.பி.177-யை வைத்துக் கொண்டு அதையே சிலம்பிற்கும் காலமாய்ச் சொல்லுவது சற்றும் பொருத்தமில்லை.

இன்னும் ஒரு கேள்வி மீதமிருக்கிறது. ”சிலம்புக் கதையின் காலம் கி.மு.75-80 ஆய் இருக்கலாம். சிலம்பு என்னும் காப்பியத்தின் காலம் அதற்கும் பின்னால் சில நூற்றாண்டுகள் கழித்து இருக்கக் கூடாதா?” இதை அடுத்த கடைசிப் பகுதியிற் பார்ப்போம்.

எடுகோள்கள்:

87. நீர்ப்படை காதை 196.
88. பதிற்றுப்பத்து 5 ஆம் பத்துப் பதிகம், அகநா.125:18-21
89. வடதிசை மன்னர் மன்னெயில் முருக்கிக்
கவடி வித்தியக் கழுதையேர் உழவன்
குடவர் கோமான் வந்தான். . .
நீர்ப்படைக் காதை.225-227
90. பதிற்றுப் பத்து 5 ஆம் பதிகம். கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைக் கரணமைந்த காசறு செய்யுட் பரணர் பாடினார் பத்துப் பாட்டு. பாடிப் பெற்ற பரிசில்: உம்பற்காட்டு வாரியையும் தன் மகன் குட்டுவன் சேரலையும் கொடுத்தான் அக் கோ. கடல் பிறக் கோட்டிய செங்குட்டுவன் ஐம்பத்தையாண்டு வீற்றிருந்தான். தன் மகன் குட்டுவன் சேரலைக் கொடுத்தது என்றவுடன் அவனைக் கொடை கொடுத்தான் என்று பொருள் கொள்ளக் கூடாது. சிறுவன் குட்டுவன் சேரலைப் பரணரிடம் அளித்து உரிய காலம் படிப்பித்துத் தரும்படி “இவன் நின் அடைக்கலம்” என்று கூறியதாகவே பொருள் கொள்ளவேண்டும். செங்குட்டுவன் பத்தினிக்குக் கல் எடுத்தபோது பெரும் முதுமையடைந்திருக்க வேண்டும். இங்கே பரணர் பாடியது குட்டுவன் சேரல் சிறுபிள்ளையாய் இருந்த போது என்பதால், பரணரின் பாடலில் இமயத்திற் கல்லெடுத்த செய்தி வராதது இயற்கைதான். பதிகம் பாடப்பட்டது வடசெலவிற்குப் பின் இருந்திருக்க வேண்டும் என்பதும் இந்தத் தருக்கத்தாற் புலப்படுகிறது.
91. கடற் கடம்பு எறிந்த காவலன் – நெடுஞ்சேரலாதன், நடுகற் காதை 135
விடர்ச்சிலை பொறித்த விறலான் - நெடுஞ்சேரலாதன், நடுகற் காதை 136
நான்மறை யாளன் செய்யுட் கொண்டு
மேல்நிலை உலகம் விடுத்தோன் – செல்கெழு குட்டுவன், நடுகற் காதை 137-138
போற்றி மன்னுயிர் முறையிற் கொள்கு எனக்
கூற்றுவரை நிறுத்த கொற்றவன் - யாரென்று தெரியவில்லை, நடுகற் காதை 139 -140
வன்சொல் யவனர் வளநாடு ஆண்டு
பொன்படு நெடுவரை புகுந்தோன் - யாரென்று தெரியவில்லை, நடுகற் காதை 141-142
மிகப்பெருந் தானையோடு இருஞ்செரு வோட்டி
அகப்பா எறிந்த அருந்திறல் - செல்கெழு குட்டுவன், நடுகற் காதை 143-144
உருகெழு மரபின் அயிரை மண்ணி
இருகடல் நீரும் ஆடினோன் – செல்கெழு குட்டுவன், நடுகற் காதை 145-146
சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து
மதுக்கொள் வேள்வி வேட்டோன் – இளஞ்சேரல் இரும் பொறை, நடுகற் காதை 147-148
92. இமையவர் உறையும் இமையச் செவ்வரைச்
சிமயச் சென்னித் தெய்வம் பரசிக்
கைவினை முற்றிய தெய்வப் படிமத்து
வித்தகர் இயற்றிய விளங்கிய கோலத்து
முற்றிழை நன்கலம் முழுவதும் பூட்டிப்
பூப்பலி செய்து காப்புக்கடை நிறுத்தி
வேள்வியும் விழாவும் நாள் தொறும் வகுத்துக்
கடவுள் மங்கலம் செய்கு என ஏவினன்
வடதிசை வணக்கிய மன்னவர் ஏறு என்
- நடுகற் காதை 226-234
93. ”கோவலன் கதை” பதிப்பாசிரியர் முனைவர் சூ. நிர்மலாதேவி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2003. சிலம்பினின்றும் மாறுபட்ட நிகழ்ச்சிகள் இதில் விவரிக்கப் படுகின்றன. பாண்டியன் தேவியாகிய கொப்புலிங்கி (<கோப்பெருங்கி) பெற்றெடுத்த மகள் கண்ணகி என்றும், காளியே கண்ணகியாக வந்து பிறந்தாள் என்றும், சோதியர் அறிவுறுத்தியபடி குழந்தை ஒரு பெட்டிக்குள் வைக்கப்பட்டு வையையாற்றில் விடப்பட்டது என்றும், மாசாத்துவானும் அவன் மைத்துனன் வண்ணமாலைச் செட்டியும் (மாநாய்கன்) பெட்டியைக் கண்டெடுத்து, வண்ணமாலைச்செட்டி கண்ணகியை எடுத்து வளர்த்தான் என்றும் கதை போகும். மாசாத்துவான் மனைவி வண்ணமாலை என்று சொல்லப்படுவாள். இங்கும் முறை மாப்பிள்ளை/பெண் உறவு கண்ணகிக்கும், கோவலனுக்கும் சொல்லப்படுகிறது. முழுவிவரிப்பையும் அந்தக் கதையுள் கண்டு கொள்க. கோவலன் கதை என்பதைப் 12-13 ஆம் நூற்றாண்டுகளில் இருந்த புகழேந்திப் புலவர் இயற்றினார் என்று ஒரு சிலர் சொல்லுவார்கள். ஆனால் கொச்சி, கொல்லம் போன்ற துறைமுகங்களைப் பற்றிப் பேசும் கோவலன் கதை அவ்வளவு முந்திய காலமாய் இருக்க வாய்ப்பில்லை.
94. ”சந்திராவின் பழிவாங்கல்” என்ற கன்னட நாட்டுப்புறக் கதை The Cilappatikaaram - The tale of an anklet”, Penguin Classics, 2004, என்ற பொத்தகத்தில் பக்கங்கள் 321-326 இல் சொல்லப்படும். இந்தக் கதை முன்னாற் சொன்ன கோவலன் கதையில் இருந்தும் சிறிது வேறுபடும்.

அன்புடன்,
இராம.கி. .

1 comment:

V.S. Rajam said...

வனக்கம். அகநானூறு 149 பற்றி அருமையான விளக்கம்! பெரும்பாலும் "யவனர் தந்த நன்கலம் ... ... ... பெயரும்" என்பதோடு பலரும் நிறுத்திக்கொள்வதிலிருந்து ஒரு திருப்புமுனையைக் காட்டியிருக்கிறீர்கள். நல்லது! நன்றி!

அரசர்களின் பெயர்களையும் அவர்கள் காலத்தையும் ஒரு வரைபடத்தில் விளக்குவீர்களா? படிப்பவரின் விருப்பத்துக்கு எல்லையே இல்லை, இல்லையா!