Wednesday, December 19, 2012

கணித்தமிழ் வளர்ச்சி மாநாட்டில் உரை

அண்மையில் கணித்தமிழ் வளர்ச்சி மாநாட்டில் மின்னணுக் கருவிகளிற் தமிழ்ப்பயன்பாடு என்ற இரண்டாம் அமர்விற்கு என்னைத் தலைமை தாங்கி நடத்தப் பணித்தார்கள். அதில் நான் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் இது. இந்த உரையைப் பேச்சு வடிவில் மாற்றி நான் அங்கு உரைத்திருந்தேன். இப்பொழுதெல்லாம் மேடைத்தமிழ் என்பதை எழுத்து வடிவிற்கு மட்டுமே பயன்படுத்துகிறேன். பேசும் பொழுது, பேச்சுத்தமிழ் நடையையே பயன்படுத்துகிறேன்.

அன்புடன்,
இராம.கி.

--------------------------------------
மொழி என்பது அடிப்படையிற் பேச்சையே குறிக்கும். எல்லா மாந்த மொழிகளும் பேசும் வலுவை (speaking ability) இயல்பாகப் பெற்றுள்ளன. அவ்வலு இல்லாதுபோயின், வெறும் ஓசைக்கூட்டங்களாய், பிதற்றல்களாய், விலங்கொலிப் பரட்டல்களாய் மொழிகள் நின்று போயிருக்கும்.

மொல்லுதல் வினைச்சொல்லின் வழிப்பிறந்தது மொழியாகும். மொல்> (மொள்)> மொழி. மொல்மொல் எனல் பேசற் குறிப்பு; மொலு மொலுத்தல் = விடாது பேசல், இரைதல், முணு முணுத்தல். மொல்லுதல் = தாடையசைத்தல்; ஒலி எழுப்பல். சாப்பிடுகையில் ஓசையெழுவதையும் நாம் மொல்லுதலென்றே சொல்கிறோம். ”அவன் என்ன வாய்க்குள் மொல்லுகிறான்? வாயைத் திறந்து சொல்லவேண்டியதுதானே? இந்த மொல்லல் தானே வேண்டாங்கிறது?.”

மொல்லலின் இன்னொரு வளர்ச்சி முணுங்கல். [மொல்லல்> (மொள்ளல்)> மொணுங்கல்> முணுங்கல்].. வேறொரு புடை வளர்ச்சியாய், மொணுமொணுத்தல்> மொனுமொனுத்தல்> மோனம்> மௌனம் என்றாகும். சொற்பிறப்பிற்குள் மேலும் ஆழப் போகாது, கருத்து வளர்ச்சிக்கு வருவோம்.

பேசும் வலுப்பெற்ற மொழிகளிற் சில, ஒரு காலகட்டத்தில் எழுத்து வலுப் (writing enabled) பெற்றன. இன்னும் நாட்செல, அவற்றிற் சில, அச்சு வலு (printing enabled) உற்றன. அவற்றிலுஞ் சில, வளர்ந்த மொழிகளாகி, மின்னி வலுப் (electronically enabled) பெற்றன / பெறுகின்றன.

மின்னி என்பது electron-யைக் குறிக்கும்; [இது 1960 களில் எழுந்த சொல்.] மின்னணு என்று நீட்டி முழக்கவேண்டாம். மின்னியெனச் சுருக்கிச் சொல்லலாம். மின்னி என்பது கணிக் (=computer) கருத்தீட்டிற்கும் மேலானது; அகண்டது. கணிகளுக்கும் (computers) மீறி பல மின்னிப் பொறிகளில் (electronic equipments) இன்று மொழிப் பயன்பாடு இருக்கிறது. காட்டு: நகரும் போதே, ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளப் பயன்படும் நகர்பேசி அல்லது செல்பேசி (= cell phone) இன்னும் தொலைக்காட்சி (television), இசையியக்கி (music player). உறையூட்டி (refrigerator), கட்டிட ஒளிமையைக் கட்டுறுத்தும் (control) கருவிகள் எனக் கணக்கற்ற கருவிகளுக்குள் மொழிப் பயன்பாடு வந்துவிட்டது. பேச்சாலும், எழுத்தாலும் எதையும் இயக்குவிக்க முடியும் போலும்.

கணி வலுவைக் காட்டிலும், மின்னி வலு விரிந்தது. அதே பொழுது, கணி வலுவிற்கான செயற்பாடுகள் மின்னி வலுவிற்கும் உதவுகின்றன. இற்றை நுட்பியல் வளர்ச்சியில் மின்னிக் கருவிகளிற் பயன்படும் வகையில் இயல்மொழிகளை ஏற்றதாக்கும் கட்டாயமிருக்கிறது.

எழுத்து வலு, அச்சு வலு, மின்னி வலு என ஒவ்வொன்றும் மொழிவளர்ச்சியில் ஒரு நுட்பியல் எழுச்சியாகும். இவ்வெழுச்சிகளைத் தாண்டி வளர்ந்த மொழிகளே முகல்ந்து (modernized) முன்னெடுத்து வருகின்றன; நிலைத்து நிற்கின்றன. உலகத்திற் பல மொழிகள் (காட்டாக ஆங்கிலம், சீனம், இசுப்பானியம், பிரஞ்சு, செருமானியம், உருசியம், சப்பானியம், அரபி, துருக்கி போன்று பல்வேறு மொழிகள்) இத்தகுதியைப் பெற்றிருக்கின்றன.

அதே பொழுது, உலகத்தில் ஏறத்தாழ 10 கோடிப்பேர் பேசும் தமிழ்மொழி (தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 7.5 கோடிப்பேர் தமிழ் பேசுவதாகவும், மற்ற மாநிலங்களையும் சேர்த்தால் 8.75 கோடிப்பேர் இருப்பதாகவுஞ் சொல்கிறார்கள்.) இவ்வலுக்களிற் தமிழ் எப்படி வளர்ந்து வந்திருக்கிறது - என்பது கேள்விக்குறியே ஆகும்.

எழுத்து வலுவைத் தமிழ் மொழி, 2500 ஆண்டுகளுக்கு முன் பெற்றதாக ஆய்வாளர் கூறுகின்றனர். குடியேற்ற (colonialism) ஆதிக்கத்தால், கிறித்துவ விடையூழியர் மூலம் தூண்டப்பெற்று அச்சு வலுவை இம்மொழி 400, 450 ஆண்டுகளாகப் பெற்றிருக்கிறது. இந்தியத் துணைக்கண்டத்திலேயே அச்சுக்குள் முதலில் நுழைந்த மொழி தமிழ் தான்.

இன்று குடியேற்றத் தாக்கம் போய், இந்தியா விடுதலை பெற்றுவிட்டது. “நாமே இந்நாட்டு மன்னராகிவிட்டோம்” ஆனால் பல்வேறு வரலாற்றுப் பிழைகளுக்கு அப்புறம், ”இன்று தமிழ்மொழி மின்னி வலுவைப் பெற்றதா?” எனில் இல்லெனச் சொல்லவேண்டும். தமிழினும் இளமையான இந்தி மொழி, நடுவணரசின் பெரும் முயற்சிகளால், தகுதியான மின்னி வலுவை நம் கண்ணெதிரே பெற்றுக் கொண்டிருக்கிறது. அதே பொழுது, தமிழையும் சேர்த்த மாநில மொழிகளோ ஆட்சி வலுப் பெறாது, மின்னி வலுவுறாது, தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. (தமிழர் பெரும்பாலும் பழம்பெருமை பேசுவதிலேயே ஓய்ந்து விடுகிறோம். இன்றைய நிலையைக் கொஞ்சங்கூட எண்ணிப் பார்ப்பதேயில்லை.)

கூடவே, நம் விளங்காமையால்,, தமிழ்ப் பேச்சுவலு, எழுத்துவலு, அச்சுவலு என எல்லாவற்றையுங் குறைத்துக் கொண்டிருக்கிறோம். ”தமிழாற் தனித்தேதுஞ் செய்ய முடியாதோ?” எனும் நிலைக்கு வந்து, தமிங்கிலக் கலப்பு அவ்விடத்திற் புற்றீசலாய்ப் பரவிக் கொண்டிருக்கிறது. பத்து வார்த்தை பேசினால் அஞ்சு வார்த்தை அதில் ஆங்கிலமாக வந்து கொண்டிருக்கிறது. அதைத்தான் பெரிதாக நினைத்து நம் சிறார்களை “இங்கிலிபீசு” பேசவைப்பதில் முனைப்பாக ஈடுபடுகிறோம். இனிமேலும் கட்டுமுகமாய் ஏதுஞ் செய்யாதிருந்தால், நம்மூரிலேயே தமிழைச் சில பதின்மங்களிற் தேட வேண்டியிருக்கும். நான் சொல்லுவது வெறும் எச்சரிக்கையல்ல. உள்ளமை நிலையாகும்.

உலகம் கணிமயமாக மாறிக் கொண்டிருக்கிறது. நம்முடைய குமுக, அரசு நடவடிக்கைகளும், அரசு-பொதுமக்களிடையுள்ள இடையாட்டங்களும் (interactions) இனிமேலும் வெறுமே எழுத்துமயம், அச்சு மயம் என்று மட்டுமே ஆகிக் கொண்டிருப்பதிற் பொருளில்லை. பல்வேறு தரவுத் தளங்கள் வெறுமே எழுத்துக் கோப்புகளில், அச்சுக் கோப்புக்களில் சேகரித்து வைக்கப்படவில்லை. அவை மின்னி மயமாக்கிக் காப்பாற்றப்படுகின்றன.

உலகெங்கும் எல்லா இடையாட்டங்களும் நேரே ஓர் அரசு அலுவகத்திலோ, தனியார் அலுவகத்திலோ, அலுவர் முகம் பார்த்து விண்ணப்பிக்கப் படுவதில்லை.

பிறப்புச் சான்றிதழ் பெறுவது,
திருமணத்தைப் பதிவது,
மனை விற்பனையைப் பதிவது,
சுற்றுச் சூழல் வெம்மைகள் (temperatures தெரிந்து கொள்வது,
மழைப் பொழிவு அறிவிப்புக்கள் (rainfall announcements) செய்வது
வெதணங்கள் (climates) பற்றி அறிவிப்பது,
வேளாண்மை அறிவுரைகள்,
அரசிற்குப் பொதுமக்கள் விடுக்கும் வெவ்வேறு வேண்டுகோள்கள்,
பொதுமக்களுக்கான அரசுச் சேவைகள்,
வணிகங்களுக்கு இடையே, பொதினங்களுக்கு (businesses) இடையே நடைபெறும் பரிமாற்றங்கள்,
பொதினங்கள்-அரசுகள் இடையே பரிமாற்றங்கள்,
பொதினங்களுக்கும் நுகர்வோருக்கும் இடையே பரிமாற்றங்கள்

என எல்லாமே உலகெங்கும் அந்தந்தவூர் மொழிகளில் மின்னிக் கருவிகள் வழியே, நடைபெறுகின்றன. தமிழில் மட்டும் தான் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அரிதாய் நடக்கிறது. கணிமயப்படுத்தல் என்பது வளர்ந்த நாடுகளில் 99% நடக்கிறதென்றால், இந்தியில் 10% நடக்கிறதென்றால் தமிழில் 1% கூட நடைபெறுவதில்லை. நாம் வெற்றுப் பேச்சுப் பேசிக்கொண்டிருக்கிறோம்.

இது போன்ற பரிமாற்றங்களையும், கணுக்கங்களையும் (connections) மின்னி மயமாக்கும் போது நமக்கு ஆழ்ந்த கவனம் தேவை. தமிழில் ”செருப்பிற்கேற்ற காலா? காலிற்கேற்ற செருப்பா?” என்ற சொலவடையுண்டு. மின்னிமயப் படுத்தலுக்கு ஏற்ற மொழியா, மொழிக்கேற்ற மின்னிமயப் படுத்தலா? இந்தக் காலத்திற் செருப்பிற்கேற்ற காலாக நாம் மொழியை வெட்டிக் கொண்டிருப்பது போற் தெரிகிறது. தமிழ்மொழிக்குப் பயன்படும்படி கணிமயப் படுத்தாமல், கணிமயப் படுத்தலுக்குத் தக்க நம் மொழியையே மாற்றிக் கொண்டிருக்கிறோம். இது தவறான அணுகுமுறையாகும். தமிழைச் சவலைப் பிள்ளையாக வைத்து, கணிமயப் படுத்தலைச் செயற்படுத்தும் தேவையில் ஆங்கிலக் குண்டுப் பிள்ளையை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். நடுவண் அரசோ, தன்வேலையிற் கவனமாய், ஆள், பேர், அம்பு வைத்து அந்தந்த இடங்களில் இந்தி மொழியை வளர்த்துக் கொண்டிருக்கிறது. தமிழக அரசு விழித்துக் கொள்ளவேண்டும். தமிழின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது.

”புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினிலில்லை
சொல்லவுங் கூடுவதில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக்கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசையோங்கும்

என்று ஒரு பேதை சொன்னது உண்மையாகிக் கொண்டிருக்கிறது. நாம் விழித்துக் கொள்ளாதிருப்பின், இதைத் தவிர்க்க முடியாது. விழித்துக் கொள்ளவேண்டியதின் பொருள், தமிழுக்கு மின்னி வலு கொடுப்பது தான்.

மின்னி வலுவென்பதற்கு முதலடிப்படை ”கணிக்குள் எப்படிக் குறியேற்றம் பெறுவது?” என்ற கேள்விக்கான விடையாகும். இதற்கான முயற்சிகள் வெவ்வேறு மொழிகளுக்கு நடந்தாலும், இந்திய மொழிகளுக்கான முயற்சிகள் 1970, 80 களிற் தொடங்கின. இவையெல்லாம் தனியார், தனி நிறுவனங்கள், தனியரசுகளின் முயற்சிகளாகும். [சிங்கப்பூர், மலேசிய அரசுகளை இங்கு குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். தமிழக அரசு ஒரு உள்ளுறுத்த நுட்பியற் கோட்பாடு (information technology policy) இல்லாது இன்னும் தடுமாறிக் கொண்டிருக்கிறது.] இவற்றை வரலாறு பூருவமாக நான் இங்கு விவரிக்க முற்படவில்லை. இவற்றின் முடிவில் 1990 களில் உலகின் பல்வேறு நிறுவனங்களும், அரசுகளும் ஏற்கும் வகையில் ஒருங்குறிக் குறியேற்றம் ஏற்பட்டது.

அந்த ஒருங்குறிக் குறியேற்றத்தில் உலகின் பல மொழிகளுக்கு இடங் கொடுத்தார்கள். தமிழுக்கும் கொடுத்தார்கள். உரிய நேரத்தில் தமிழ்பேசுவோரின் தன்னார்வக் குழுக்களோ, நிறுவனங்களோ, அரசுகளோ தமிழுக்கு வேண்டிய இடங்களைக் கேட்டிருந்தால், தமிழின் உயிர், மெய், உயிர்மெய் என அனைத்து எழுத்துக்களுக்கும் இடம் கிடைத்திருக்கும். அந்த நேரத்தில் நாம் சரியாகச் செயற்படாது, உள்ளூர் அரசியலாற் தூங்கிப் போன காரணத்தால், நடுவண் அரசுப் பரிந்துரையில் உயிர், அகர உயிர்மெய், சில உயிர்மெய் ஒட்டுக்குறிகள் என மொத்தம் 128 இடங்களே கிடைத்தன. இவற்றை வைத்துக்கொண்டு, ஒரு சில கணிநுட்பங்களின் மூலம் சில சித்து வேலைகள் செய்து உயிர்மெய் எழுத்துக்களைக் கணித்திரையிற் கொண்டு வருகிறோம். இதுதான் இன்றைய நிலை.

இந்தச் சித்துவேலைகள் தமிழை இணையத்திற் பயன்படுத்துவதற்கும் கணிக்கோப்புக்களைச் சேமித்து வைப்பதற்கும், ஒரு கணியில் இருந்து இன்னொரு கணிக்கு பரிமாறுவதற்கும் பெரிதும் பயன்பட்டன. சொற்செயலிகளிலும், பல்வேறு அச்சிகளிலும் (printers) இது ஒழுங்காகவே செயற்பட்டது. ஆனால் பெரும் பொத்தகங்கள், ஆவணங்கள் போன்றவற்றை PDF கோப்புகளில் கொண்டுவந்து அச்சு நுட்பத்திற்கு மாற்றுவதில் ஒரு சில உயிர்மெய்கள், ஒகர, ஓகாரம் போன்றவை, முரண்டு பிடித்தன. எளிதில் ஒன்றிற்கொன்று என்ற வகையில் எழுத்துக்களுக்கும் குறிகளுக்குமிடயே கணுக்கம் (connection) ஏற்படுத்தி உயிர்மெய்களைப் பெறாததால், கணியில் இருந்து அச்சு நுட்பத்திற்கு மாறும் பொழுது ஒருசில குறைகள் ஏற்பட்டன. கணிநுட்பியல் அறிஞர்களின் உள்ளூர்ச் சண்டையால் இந்த இழப்பு ஏற்பட்டது. உயிர், மெய் ஆகியவற்றோடு உய்ர்மெய்களுக்கும் சேர்த்து இடம் வாங்கியிருந்தால் நாம் எங்கோ போயிருக்க முடியும்.

இதன் விளைவாக ஆறுதற் பரிசாகத் தமிழ் நுட்பியலாளர்கள் அனைத்தெழுத்துக் குறியேற்றம் (all character encoding) என்ற ஒன்றைப் பரிந்துரைத்தனர். இதை ஒருங்குறிச் சேர்த்தியத்திடம் (unicode consortium) தமிழக அரசு வழித் தெரிவித்தோம். இதுகாறும் ஒருங்குறிச் சேர்த்தியம் தன் ஒப்புதலை இதற்கு வழங்கவில்லை. இதற்கிடையில் தமிழக அரசு தமிழில் உள்ள இணையப் பரிமாற்றங்களுக்கும் ஏதுவாக ஒருங்குறியையும். அச்சு நுட்பத்திற்குத் தேவையான வகையில் அனைத்தெழுத்துக் குறியேற்றத்தையும் ஏற்று 2009 இல் அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணைக்கு அப்புறம், மின்னிவலுப் பெறுவதற்கான எந்த முயற்சியும் சொல்லத்தகும் வகையில் நடைபெறவில்லை.

மின்னிவலுப் பெற சொவ்வறையாளர் (software specialists) பலரும் ஒருங்கிணைந்து வேலை செய்யவேண்டும். எப்பொழுது அவர்கள் இதை இயல்பாக செய்வார்கள்? அவர்கள் உருவாக்கும் சொவ்வறை நிரலிகளுக்குச் சந்தை ஏற்பட்டாற் தானே? இப்பொழுது தான் சந்தையே, இல்லையே? நாம் தான் குண்டுசட்டிக்குள் குதிரையோட்டிக் கொண்டிருக்கிறோமே? அப்புறம் ”தமிழ் எங்கும், எதிலும் இல்லையே?” என்று குறைப்பட்டுக் கொள்வதிற் பொருளென்ன? இந்தக் குறையைச் சரிசெய்ய என்ன செய்திருக்கிறோம்? தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, தமிழ்ப் பயன்பாட்டிற்குச் சந்தை உருவாக்காது இருக்கிறோமே? “அவர்கள் சதி செய்கிறார்கள், இவர்கள் குலைக்கிறார்கள்” என்று எங்கோ எதிரியைத் தேடுவதற்கு மாறாய், நம்முடைய குறையென்ன? நாம் எதைச் சரிசெய்யது இருக்கிறோம் என்று கவனிக்க வேண்டாமா? இதுவரை கணித்தமிழ் முயற்சிகளில் நடந்தவையெல்லாம் பொருளியலில் அளிப்பு பக்கத்தையே (supply side economics) பார்த்துக் கொண்டிருந்தன. காட்டாக,

1. தமிழிற் குறியேற்றச் சிக்கல் (8 மடை, 16 மடைக் குறியேற்றங்கள், ஒருங்குறி, அனைத்தெழுத்துக் குறியேற்றம்) உள்ளீட்டுச் சிக்கல் (இப்பொழுது இ-கலப்பை, NHM writer, Microsoft இன் PME எழுதி எனப் பல உள்ளீட்டுச் செயலிகள் – inputting softwares - இலவசமாக வந்துவிட்டன. ஆனாலும் இன்னும் தனியார் குறியேற்ற எழுத்துரு/வார்ப்புக்களை (fonts) அரசும் தனியாரும் அளவற்ற காசு கொடுத்து வாங்கிக் கொண்டிருப்பதும், அதைச் சில தனியார் நிறுவனங்கள் நடத்திக் கொண்டிருப்பதும் வடித்தெடுத்த ஏமாற்றுச் செயல் தான். ஒருங்குறிக்கும் அனைத்தெழுத்துக் குறியேற்றத்திற்கும் அரசும் பொதுமக்களும் உடனடியாக மாறவேண்டும். இனியும் ஏமாந்து கொண்டிருக்கக் கூடாது.),

2. சொல்லாளர்ச் சொவ்வறைகள் (எழுத்துப் பிழைகள், சொற்றொடர்ப் பிழைகள், வாக்கியப் பிழைகள், நடைப் பிழைகள் எனப் பல்வேறு பிழைகள் மலிந்து தமிழிற் கதைகள், கவிதைகள், கட்டுரைகள், மடல்கள், பட்டியல்கள், பரத்தீடுகள் (presentations), எனப் பல்வேறு ஆக்கங்கள் வருவதை இப்பொழுதெல்லாம் யாருமே கண்டு கொள்வதில்லை. முன்பு பிழை திருத்திக் கொண்டிருந்த தமிழாசிரியர்கள் எத்தனை நாள் ஏமாந்து கொண்டிருப்பார்கள்? எனவே பட்டிமன்றம், பாட்டரங்கம் பேச்சரங்கம் என்று போய் விட்டார்கள். இப்பொழுது வருத்தத்திற்குரியதாய், நம்மிற்பலரும் தமிழையாவை மதிக்கமாட்டேம் என்கிறோம். திரைப்படங்களிற் கூட அவரைக் கேலிப்பொருளாக்கி விட்டார்கள். யாராவது எதிர்ப்புச் செய்கிறோமா? ஆங்கிலத்தில் யாராவது பிழைமலிந்த நடையைப் பயன்படுத்துகிறார்களோ? இந்து நாளிதழில் தப்பும் தவறுமாய் ஓர் ஆசிரியருக்கு மடல்கள் வருமா? தமிழில் மட்டும் ஏன் இப்படியொரு மெத்தனம்? அண்மையில் ஒரு நல்ல தமிழ்ச் சொல்லாளர்ச் செயலியை பேரா. தெய்வசுந்தரம் மென்தமிழ் என்ற பெயரில் உருவாக்கியிருக்கிறார். அது சொற்திருத்தியாகவும், இலக்கணத் திருத்தியாகவும் வேலை செய்கிறது.)

3. Excel, Powerpoint Presentation போன்ற சொவ்வறைகளைத் தமிழில் உருவாக்குவதிலும் புதுப் புது முயற்சிகள் நடந்து கொண்டுதானிருக்கின்றன. சில இயங்கு கட்டகச் சொவ்வறை (operating system softwares) முயற்சிகளும் நடக்கின்றன.

4. இன்னொரு பக்கம் கணித்தமிழுக்கும், அறிவியற்றமிழுக்கும் தேவையான கலைச்சொற்கள் தொடர்ந்து படைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. (யாரும் இவற்றை ஒழுங்குறப் பயன்படுத்துவது தான் குதிரைக் கொம்பாக இருக்கிறது. ஆழ்ந்து ஓர்ந்தால், நம் குறை சொற்களில் அல்ல. சொற்களைப் பயன்படுத்துவதிலே தான் இருக்கிறது. சட்டென்று ஆங்கிலம் பயன்படுத்தத் தாவிவிடுகிறோம். எப்பொழுது அன்றாட வாழ்க்கையில் வெட்கவுணர்ச்சி தவிர்த்துத் தமிழ்ப் பயன்பாட்டைக் கூட்டுகிறோமோ, எப்பொழுது தமிங்கிலம் பயன்படுத்துவதைக் குறைக்கிறோமோ, அப்பொழுது தான் கலைச்சொற்களுக்கு விடிவுகாலமுண்டு.)

மொத்தத்திற் கணித்தமிழ் வளர்ச்சியில் அளிப்புப் பக்கச் சிக்கல்களையே இதுகாறும் செய்துவந்து கொண்டிருந்தோம். இவையெல்லாம் கிடைத்தால் தமிழர்கள் தானாகத் தமிழுக்கு மாறிவிடுவார்கள் என்பது கானல்நீர் போன்ற எதிர்பார்ப்பாகும். நானும் 15/20 ஆண்டுகளாய்ப் பார்த்துவருகிறேன். அப்படியொன்றும் நடக்கவில்லை. பிறகு இந்த முயற்சிகளில் ஏமாற்றம் அடைந்தே சிந்திக்கத் தொடங்கினேன். நம்முடைய சிக்கல் அளிப்புப் பக்கமில்லை. அது பொருளியலின் தேவைப் பக்கம் (demand side economics) இருக்கிறது – என்று புரிந்தது.

நம் மக்கள், தமிழின் தேவையை உணராது இருக்கிறார்கள். ஆர்வலர்கள் அதை வலியுறுத்த மாட்டேம் என்கிறோம். 7.5 கோடி மக்கள் இருக்கிறோம் என்ற பெயர்தான். 7 கோடிப் படிப்பறிவில்லா மக்களை ஒதுக்கி, அரைக்கோடிப் படித்தவர்கள் ஆங்கிலத்திலேயே எல்லா வேலைகளையும் செய்து கொண்டு, மற்ற 7 கோடிப் பேரையும், ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம். ஆங்கிலம் என்பது அரைக்கோடிப் பேரின் ஆயுதமாக இருக்கிறது. 7 கோடிப்பேரை அறிவியல், நுட்பியல், முன்னேற்றம் பற்றிய அறியாமையில் ஆழ்த்தி நம் வல்லாண்மையை உறுதிசெய்ய வழி வகை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதை மாற்றாது தமிழர் முன்னேற்றம் அடையமுடியாது. நாம் செய்ய வேண்டியவை என்ன? என் அறிவிற்குப் பட்ட வரை, அவற்றை இங்கு குறிப்பிடுகிறேன். கணித்தமிழ் வளர்ச்சி மாநாட்டுத் தீர்மானங்களாய், எதிர்வரும் உத்தமம் மாநாட்டுத் தீர்மானங்களாய் அவை மாறுமானால் எனக்கு மகிழ்ச்சியே.

1. தமிழக அரசு தானே 2009 இல் அறிவித்த அரசாணையை நடைமுறையில் முழுதும் செயற்படுத்தாது இருக்கிறது. இந்த அரசாணை வரும் பொழுது, தமிழகத்தின் அனைத்து அரசியற் கட்சிகளும், இயக்கங்களும், கணியரும், தமிழறிஞரும், ஆர்வலரும் வரவேற்றனர். அதுநாள் வரை அரசுக்குள்ளும், அரசு-பொதுமக்களிடையேயும் இருந்த பரிமாற்றங்கள் தனியார் குறியேற்றத்திலேயே நடந்து வந்தன, இவ்வாணை மூலம் ஒருங்குறி, அனைத்தெழுத்துக் குறியேற்றங்களுக்கு அரசுப்பணிகளும் குமுகச் சேவைகளும் மாறவேண்டும் என்று தமிழக அரசு உறுதியாக நெறிப் படுத்தியது. ஆனால் மூன்றாண்டாக இவ்வாணை செயற்படாதிருக்கிறது. அரசுப் பணிகள் தமிழின் மூலம் கணி மயமாக வேண்டுமென்றால், மின்னி மயமாக வேண்டுமென்றால், இவ்வரசாணை உடனடியாகச் செயற்படுத்தப் படவேண்டும். இன்றும் கூடத் தமிழக அரசுச் செயலகத்துட் செயற்பட்டுக்கொண்டிருக்கும் வெவ்வேறு தனியார் கணிக் குறியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். (ஒருங்குறியிற் தமிழை உள்ளிட இலவயமாகவே இணையத்தில் இ-கலப்பை, NHM writer போன்ற மென்பொருள்கள் கிடைக்கின்றன. தமிழக அரசு தமிழ் உள்ளீட்டுக்காக எந்தக் காசும் செலவழிக்க வேண்டியதில்லை.)

2. தமிழக அரசு பல்வேறு இணையத்தளங்களை தன் சேவையையொட்டி ஏற்படுத்தியிருக்கிறது. (இவையெல்லாம் இற்றைப்படுத்தப்படாமலே இருக்கின்றன. உடனடியாக இவற்றை இற்றைப்படுத்த வேண்டும்.) தமிழக அரசின் பல துறைகளும் பல்வேறு விண்ணப்பங்களை/படிவங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. (தமிழக அரசிற்கென இருக்கும் படிவங்கள் வெவ்வேறு துறைகளின் கீழ் இருப்பவற்றைக் கூட்டினால் ஒரு 500, 1000 தேருமா? அவையெல்லாம் தமிழில் இணையத்தில் அமைந்தாலென்ன?) அவையெல்லாம் ஒருங்குறிவடிவில் இணையத்தில் பொதுமக்கள் அணுகும் வகையில் அமையவேண்டும். தமிழில் எல்லத் துறைகளிலும் மின்னாளுமை என்பது இன்னும் 6 மாதங்களிற் கட்டாயமாகச் செயற்படவேண்டும்.

3. நேரடியாக அரசு அலுவலகத்திற்கு வந்து அலுவலரைத் தொடர்புகொள்ளும் தேவை படிப்படியாகக் குறைக்கப்பட வேண்டும். வெறுமே கணிமயப்படுத்தலில் மட்டுங் கவனஞ் செலுத்தாது, எல்லாவற்றையும் ஆங்கிலத்திற் செயற்படுத்திக் கொண்டிராது, தமிழ்வழி கணிமயப்படுத்தவேண்டும்.

4. தமிழக அரசிற்கென உள்ளுறுத்த நுட்பியற் கோட்பாடு (IT policy) அறிவிக்கப்படவேண்டும். அடுத்த 10, 20 ஆண்டுகளில் தமிழை ஆட்சிமொழியாக்குவதிலும், தமிழ்வழிக் கணிமயப்படுத்துவதிலும் அரசு என்ன செய்யப்போகிறது, மின்னாளுமை என்பதை எப்படிச் செயற்படுத்தப் போகிறது என்று ஒரு கோட்பாட்டின் வழி அரசு சொல்லவேண்டாமா?

5. தமிழக வருவாய்த்துறையின் அடியில் வரும் பத்திரப் பதிவுத் துறை கணிமயமாக்கப் பட்டுவருகிறது. அதில் எல்லாப் படிவங்களும் தமிழில் ஏற்படுத்தப்பட்டு, பெறுதிச் சீட்டுக்கள் தமிழிலேயே கொடுக்கப்படவேண்டும்.

6. தமிழக அரசு நடத்தும் பல்வேறு கல்வி வாரியங்கள், பல்கலைக்கழகங்களின் அலுவல்கள் தமிழிலேயே நடந்து தமிழ்வழி மின்கல்வி பெருகவேண்டும்.

7. முதுகலை, முது அறிவியல், இளம் பொறியியல், மருத்துவம், இளமுனைவர், முனைவர் பட்ட நேர்முகத் தேர்வுகளுக்கான புறத்திட்ட அறிக்கைகள் (project reports), ஆய்வேடுகள் (theses) 5 பக்கங்களுக்காவது தமிழ்ச்சுருக்கம் கொண்டிருக்கவேண்டும். நேர்முகத் தேர்வில் 15 நுணுத்தங்களாவது (minutes) தமிழில் கேள்விகள் கேட்டு, விடைவாங்கி, அதற்கப்புறமே பட்டமளிப்புத் தேர்ச்சி கொடுக்கவேண்டும். தமிழே தெரியாது தமிழ்நாட்டிற் பட்டம் பெறுவது சரியல்ல.

8. இப்பொழுது தமிழ்நாட்டில் வணிகப் பெயர்ப் பலகைகள் தமிழ்ப் படுத்தப்பட்டு வருகின்றன. இது ஒரு தொடக்கப்பணியே. தமிழ்நாட்டு வணிகம் தமிழிலேயே நடைபெறவேண்டும். எந்தக் கடையில், நிறுவனத்தில் பெறுதிச் சீட்டு வாங்கினாலும் அது ஆங்கிலத்திலேயே இருக்கிறது. தனியார் பேருந்துகளில் பயணச்சீட்டு கூட ஆங்கிலத்தில் இருக்கிறது. தமிழ் மட்டும் தெரிந்த 95% மக்கள், வெறுமே அதிகாரிகள் முகம் பார்த்து, “என்ன சொல்வாரோ?” என்று ஏமாந்து நிற்பதாய் நிலைமையிருக்கிறது அவரவர் சிக்கலில் அவர்களே முறையிடும் வகையில் குமுக நடைமுறைகள் இருக்கவேண்டும். தமிழில் பெறுதிச் சீட்டு அளிப்பதை ஊக்குவிக்கும் வகையில், மாநில அரசு விற்பனைவரியில் மாற்றமிருக்க வேண்டும். ஒரு நுகர்வோர் தமிழில் விற்பனைப் பெறுதிச் சீட்டு கேட்டால், குறிப்பிட்ட விழுக்காடும், ஆங்கிலத்திற் கேட்டால் அதற்கு மேல் 1% அதிக விற்பனை வரியும் அரசு விதிக்கவேண்டும். இதன் மூலம் எல்லா வணிக நிறுவனங்களிலும் தமிழ் மெய்யாகப் புழங்கும் மொழியாக மாறும். தமிழ்ச் சொவ்வறைகளுக்கு ஒரு தேவையெழும். இப்பொழுது தமிழ்ச் சொவ்வறைகளுக்குச் சந்தையேயில்லை. சொவ்வறைகளுக்குச் சந்தையில்லாது தமிழ் கணி மயமாகாது. Office softwares தமிழில் வரவேண்டுமானால் இந்தத் தூண்டுதல் மிகவும் தேவையான ஒன்றாகும்.

9. தமிழகத்தில் விற்கும் எந்த மின்னிக் கருவிகள், மற்ற இயந்திரங்கள் என எல்லாவற்றிற்கும் உடன் அளிக்கப்படும் கையேடுகள் தமிழிலேயே இருக்க வேண்டும். அப்படி இருந்தால் 1% விற்பனைவரிச் சலுகை தரப்படும் என்று அறிவிக்கவேண்டும். தமிழில் இல்லாது ஆங்கிலம் போன்று வேறுமொழிகளில் மட்டுமேயிருந்தால் சலுகை கிடைக்காது என்று ஆகவேண்டும்.

10. தமிழை ஆட்சிமொழியாக்கி, தமிங்கிலப் பயன்பாட்டைக் குறைக்கும் நாளிதழ்கள், தாளிகைகள், ஊடகங்களுக்கே தமிழக அரசு தன் அரசு விளம்பரங்களைக் கொடுக்கவேண்டும்.

11. தமிழகத்தில் இருக்கும் நடுவண் அரசுத் துறைகள், நிறுவனங்களில் நடக்கும் பரிமாற்றங்கள் தமிழிலேயே நடைபெற ஊக்குவிக்க வேண்டும் அரசு வங்கிகளிலும் இது நடைபெறவேண்டும். தமிழ்நாட்டில் தமிழுக்கு மதிப்பில்லை என்றால் அது வெட்கப்படவேண்டியதில்லையா?

12. இன்னும் ஓராண்டில் பேச்சிலிருந்து எழுத்து (speech to text), எழுத்திலிருந்து பேச்சு (text to speech), இயந்திர மொழிபெயர்ப்பு (machine translation), தமிழ் அறிதியியல் (tamil informatics) போன்ற துறைகளிற் தமிழ்ச் சொவ்வறைகள் வரும் படி திட்ட ஒதுக்கீடு செய்யவேண்டும். அந்த முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டும்.

13. நாடாளுமன்றத்திற் கொண்டுவரும் சட்டத் திருத்தின் மூலம், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் ஆட்சிமொழி அதிகாரத்தைப் பெறவேண்டும்.

14. தமிழ் வழக்குமன்ற மொழியாக மாறவேண்டும்.

இந்தக் கருத்துக்களை என் பார்வையிற் சொன்னேன். இவ்வமர்வில் இன்னும் பலர் தங்கள் கருத்தை வழங்க இருக்கிறார்கள். அவற்றையும் செவிமடுப்போம். நன்றி.

5 comments:

nayanan said...

தொடர்புடையப் படச்சுட்டி: http://www.facebook.com/media/set/?set=a.10151203156485966.428003.675150965&type=3

நன்றி: பேரா.செல்வா

இ.பு.ஞானப்பிரகாசன் said...

அற்புதம் ஐயா! அற்புதம்! தமிழர்க்கென ஒரு தனித்திருநாடு முகிழ்க்கும் வரை தமிழுக்கென ஒரு சந்தையைப் பிறப்பித்தல் இயலாதென எண்ணியிருந்தேன் சிறியேன். ஆனால், தாங்கள் கூறும் யோசனைகளையெல்லாம் செயல்படுத்தினால் தமிழ் இங்கே தவிர்க்க இயலாத மொழியாகக் கட்டாயம் ஆகி விடும். இந்த அற்புதமான யோசனைகளுக்காக என்றும் நந்தமிழுலகந் தங்களுக்குக் கடமைப்பட்டிருக்க வேண்டும் ஐயா!

ஆனால், இந்தளவு மின்னிமயமான மாநிலமாக வேண்டுமானால் தமிழ்நாடு முழுதும் கணிமயமாதல் வேண்டும். அப்படிக் கணிமயமானாலும் அந்தக் கணினிகளைப் பயன்படுத்த மாநிலம் முழுதும் மின்சாரம் வேண்டும். அதுதான் இங்கே இல்லையே ஐயா! மின் தட்டுப்பாட்டால் ஏற்கனவே ஒட்டுமொத்த மாநிலமும் எல்லா வகைகளிலும் சீரழிந்து போயிருக்கும் நிலையிலும் இன்னும் விடாது, மேன்மேலும் அயல்நாட்டு நிறுவனங்களை வரவழைத்துக் கொண்டிருக்கிறார் நம் முதல்வி! தமிழ்நாட்டு மக்கள் எப்படிச் செத்தொழிந்தாலும் தேவலை. தனக்கு வேண்டியது வருமானமே என்பதில் இந்...த நிலையிலும் சற்றும் மாறாதிருக்கும் இவர்களா தமிழ் வளர இப்பேர்ப்பட்ட தங்களுடைய கட்டுத்திட்டங்களையெல்லாம் அமல்படுத்தப் போகிறார்கள்? ஆற்றாமையாக இருக்கிறது ஐயா! உண்மையான தமிழ்ப்பற்றுள்ள ஒருவர் ஆட்சிக்கு வரும்வரை எதுவுமே இயலாது ஐயா!

இராம.கி said...

அன்பிற்குரிய ஞானப்பிரகாசன்,

மின்னி மயமாவதற்கு முன்னால் மாநிலமெங்கும் மின்மயம் கூடுவது முகன்மையான தேவையே! அதற்காகச் செய்யவேண்டியவை பற்றிப் பல அறிஞரும் சொல்லியுள்ளார்கள். வேறொரு பொழுதில் அதுபற்ரிப் பேசுவோம். சூலைக்குள் நிலைமை மாறும் என்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

பாக்கியராஜ் said...

ஐயா தங்களை நேர்காணல் செய்ய விழைகிறேன். மொழி ஆய்வு, வேர்ச்சொல் தொடர்பாக பல ஐயங்கள் உலவிவருகின்றன. அவற்றைத் தொகுத்துத் தெளிவிக்கும் பொருட்டு அது நிகழ வேண்டும் என்கிற ஆவல் எனக்குண்டு. உங்கள் கைப்பேசி எண் அல்லது உங்களைத் தொடர்பு கொள்ளும் வழி சொல்லுங்கள் ஐயா.

இராம.கி said...

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இப்படியொரு வேண்டுகோளா? வியந்துபோனேன். என் மின்னஞ்சல் iraamaki@bsnl.in தொடர்பு கொள்ளுங்கள்.

இராம.கி.