Monday, May 24, 2010

சிலம்பின் காலம் - 12

கட்டுரையை முடிக்க இன்னும் ஒரு கேள்வி மீதமிருக்கிறது. ”சிலம்புக் கதையின் காலம் கி.மு.75-80 ஆய் இருக்கலாம். சிலம்பு என்னும் காப்பியத்தின் காலம் அதற்கும் பின்னால் சில நூற்றாண்டுகள் கழித்து இருக்கக் கூடாதா?” இதை இந்தப் பகுதியிற் பார்ப்போம்.

1.இத்தகைய கூற்றிற்குத் துணையாக ஒருசிலர் சிலம்பில் வரும் வடசொற்களைக் காரணஞ் சொல்லுவார்கள். [பேரா. வையாபுரிப் பிள்ளை போன்றோரின் கூற்று.]

தமிழில் வடசொற்கள் நுழைவது இன்று நேற்றல்ல; நந்தர், மோரியர் காலத்திலேயே தொடங்கி விட்டது. என்றைக்கு ஆசீவகம், செயினம், புத்தம், உலகாய்தம் போன்ற நம்புநெறிகளும், நம்பாநெறிகளும் வேதநெறியைக் கேள்விகேட்கத் தொடங்கினவோ, அன்றே அறிவாளிகளின், முனிவர்களின் (இருடிகளின்), மெய்யியலாளர்களின், நகர்ச்சி வடக்கிருந்து தெற்கு நோக்கித் தொடங்கிவிட்டது. இங்கிருக்கும் அரசரின் ஆதரவை பெற வேண்டாமா? இந்நகர்ச்சியில் பாகதமும், சங்கதமும் சிறிது சிறிதாய்த் தமிழில் நுழையத் தானே செய்யும்? [அம்மொழிச் சொற்களைத் தமிழில் தக்க வைத்து, தமிழையே மாற்ற முற்படுவது வேறு கதை. அதை நான் பேசவில்லை. கூடியமட்டும் நம் நடையிற் தமிழ்ச்சொற்களை ஆளுவதே சிறந்தது என்று சொல்லுவேன். ”அகிலத்தின் ஒழுங்கின்மை (entropy of the universe) கூடுகிறது” என்பதற்காக எந்தக் கட்டகமும் (system) தன்னுள் ஒழுங்கை (order) உருவாக்காது இருக்கிறதோ? ஒழுங்கு என்பது ஒழுங்கின்மைக்கு நடுவில் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது.]

”வடசொற்கள்” எனுஞ் சொல் சங்கதம், பாகதம் என்ற இரு மொழிச்சொற்களுக்கும் பொதுவானது. ”வடசொற்கள்” எல்லாம் சங்கதமே என்னும் பார்வை ஒருபாற் கோடியது. (தமிழாய்வில் நெடுங்காலம் பாகதத்தைக் குறைத்தே மதிப்பிட்டிருக்கிறார்கள்.) வடசொற்கள் தமிழுள் ஊடுறுவியது வெறும் மெய்யியலார் தொடர்பால் மட்டுமல்ல.அதற்கும் ஆழமான, தமிழகம், மகதம் ஆகிய இரு தேசங்களின் அரசியற் பொருளியல்கள் ஊடாடத் தொடங்கியவுடன், தக்கண, உத்தரப் பாதைகளின் வழி சாத்துக்கள் இடை நகரத் தொடங்கியவுடன் மொழிகளின் பரிமாற்றம் அதனூடாக நடக்கத் தொடங்கும் தானே?

இத்தகைய இயல்பான பரிமாற்றம் நடக்கும் போது, ஒரு சிலரின் மொழிநடை மாற்று மொழியால் பாதிப்பில்லாது இருக்கும்; வேறு சிலரின் மொழிநடையோ பெரிதும் பாதிக்கப்படும். ஏன் ஒருவரே வெவ்வேறிடங்களில், வெவ்வேறு நடை பயிலமாட்டாரா, என்ன? வடசொற் கிளவியைத் தமிழில் சிலர் பயிலத் தொடங்கியதாற்தானே கி.மு. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்காப்பியர் ”வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே” என்று நெறிப்படுத்த முனைந்தார்? ”தமிழை மேலோட்டமாய்ப் பேசத் தெரிந்த, ஆனால் அதை முழுதும் புரிந்துகொள்ளாத, தமிழர் மரபு என்பதை முறையே அறிந்து கொள்ளாத, படித்த, மக்களுக்குச் சொல்லிக்கொடுக்க எழுந்த இலக்கணம் தான் தொல்காப்பியம்” என்று அண்மையில் பேரா. கா.சிவத்தம்பி சொல்லவில்லையா?(95) [பேரா. சிவத்தம்பியோடு தொல்காப்பியரின் காலக் கணிப்பில் நான் வேறுபடுகிறேனேயொழிய இக்கருத்தில் அல்ல.]

தமிழக வரலாற்றில் தொடர்ச்சியாக ஒவ்வொரு காலக் கட்டத்திலும் எழுத்துநடை என்பது ஓரளவு கட்டுப்பட்ட பழமைப் போக்கிலும், பேச்சுநடை என்பது ஓரளவு நீக்குப் போக்கோடு, கலவை நடையாக இருப்பதும் உண்மைதானே? அண்மைக்காலப் பாரதியையே எடுத்துக் கொள்வோமே? வடசொற்கள் அவன் உரைநடையில் மிகுந்தும், கவிநடையிற் குறைந்தும் இல்லையா? இதே போலக் கவிப்பேரரசன் கம்பன் செய்திருக்க மாட்டானா? தேவார மூவர் செய்திருக்க மாட்டாரா? இளங்கோ செய்திருக்க மாட்டானா? அருணகிரிநாதர் எக்கச் சக்கமாகத் திருப்புகழில் வடமொழி பயின்றார் என்பதால் அவர்க்கு முந்திய 14 ஆம் நூற்றாண்டு நச்சினார்க்கினியரில் அதே அளவு காணுவதில்லையே? ஏன் 11 ஆம் நூற்றாண்டு இளம்பூரணருக்கும், 14 ஆம் நூற்றாண்டு நச்சினார்க்கினியருக்கும் எத்துணை அளவு வேறுபாடு கண்டுவிட்டோம்? ஒரே காலகட்டத்தில், வடமொழி விரவிய நடையும், விரவாத நடையும் பயிலத்தான் செய்திருக்கின்றன.

எத்துணை விழுக்காடு வடசொற்கள் சமகாலத்திற் தமிழர் பயின்றார் என்பது அகன்ற பட்டை போன்றது. அதை நூலிழைபோற் கருதிக் கணித்துவிட முடியாது. கூடவே, மொழிநடை என்பதைக் காலத்தோடு நேருறவுற்றதாய்க் (direct relation) கொள்ளக் கூடாது. ஒரு காப்பியத்தை எடுத்துக் கொண்டு அதிலுள்ள வடசொற்களைக் கணக்குப் போட்டு அது எந்தக் காலம் என்று துல்லியமாக 10 ஆண்டுக் கணக்கிற் சொல்லுவது மிகக் கடினம். என்னைக் கேட்டால் இந்தக் கணிப்பில் 100, 200 ஆண்டுத் துல்லியங் கணக்கிடுவது கூடச் சரவலான செயலேயாகும்.

அடுத்த கேள்வியான ”சிலம்பிற்குள் எது வடசொல், எது தமிழ்ச்சொல்?” என்பதிற்கூட ஒரு ஒன்றுபட்ட அளவுகோல் கிடையாது. வடசொல் என்று சிலர் சொல்லுவதை தமிழ்ச்சொல் என்று இன்னொரு அறிஞர் வேர்ச்சொற்கள் கொண்டு சான்றுகளோடு நிறுவுகிறார். மொத்தத்தில் அயல்மொழிச் சொற்களை வைத்து, ஓர் இலக்கியத்தின் காலத்தைத் தெள்ளத் தெளிவாகக் கணிப்பது அவ்வளவு எளிதான செயலல்ல. அது சவ்வாக இழுத்துக் கொள்ளும். இருந்தாலும் சிலம்பிற் பயிலும் வடசொற்கள் எத்தனை விழுக்காடு என்பது சுவையார ஆய்வுதான்.

2. மணிமேகலையோடு சிலப்பதிகாரத்தை இணையாக வைத்து இரட்டைக் காப்பியம் என்று சொல்லி, அதனாற் காலத்தைக் குறைத்துக் காட்டுவார்கள். [பல தமிழறிஞர் கூற்று.]

என்றைக்குப் பதிகத்தையும், வரந்தரு காதையையும் இளங்கோ இயற்றியதாய் இருக்கவியலாது என்று ஒதுக்கினோமோ, அன்றைக்கே இக்கூற்றுப் பட்டுப்போகிறது. கோவலன், மாதவியின் மகள் மணிமேகலை என்பதைத் தவிர்த்து இரண்டு கதைகளுக்கும் தொடர்பு கொஞ்சமும் கிடையாது. புத்தநெறியே சிறந்தது என்று நிலைநாட்டப் பிறந்த மணிமேகலையின் கதைக்களன் முற்றிலும் வேறுபட்டது. அதன் காலத்தைத் தனித்துக் கணிக்க வேண்டுமேயொழிய சிலம்போடு சேர்த்து இரட்டைக் காப்பியம் என்று சொல்லி சிலம்பின் காலத்தை வலிந்து கீழே தள்ளுவது வேண்டாத வேலை. சிலம்பு என்னும் காப்பியம் ”பத்தினிக் கோட்டம் கட்டிய நிகழ்வோடு ஒரு சில ஆண்டுகளிலேயே காப்பியமாய் எழுதப்பட்டிருக்கவேண்டும்” என்று எண்ணுமாப்போல், அகநானூற்றின் 149 ஆம் பாட்டு உறுதி செய்கிறது. அதைக் கீழே பார்ப்போம்.

3. சிலப்பதிகாரத்தைச் செயினக் காப்பியம் என்றுரைத்து, “செயினம் என்பது களப்பிரர் காலத்திற்தான் தமிழகத்தில் பெரிதும் பரவியது” என்று கட்டங்கட்டி, அதனால் சிலம்பு பிற்பட்டது என்று ஒருசிலர் சொல்லுவார்கள். [இது பல இடதுசாரியர் கூற்று]

கட்டுரையின் முன்பகுதிகளிற் சொன்னாற் போல், சிலம்பு ஒரு செயினக் காப்பியம் என்று சொல்ல முற்படுவதற்கு வரந்தரு காதை மட்டுமே சான்றாகும். வரந்தரு காதையை ஏற்பதில் தயக்கம் வந்தபின், சிலம்பு செயினக் காப்பியம் என்று சொல்வதிலும் தயக்கம் ஏற்படும். கவுந்தி என்னும் செயினத் குரத்தி காப்பியத்தின் ஊடே ஒரு கதை மாந்தராய் செயினம் பேசி வருவதாலேயே சிலம்பு செயினக் காப்பியம் ஆகிவிடாது. ”கவுந்தி பேசுவது ஆசீவகம் தான்; அவரை செயினக் குரத்தி என்று சட்டென்று சொல்லிவிட முடியாது, ஊழையும், ஊழ்வினையையும் பலர் குழப்பிக் கொள்கிறார்கள்” என்று பேரா. க.நெடுஞ்செழியன் கூறுவார்(96).

ஆசீவகத்திற்கும், செயினத்திற்கும் இடையுள்ள ஆட்டத்தில் பல்வேறு ஆசீவகச் சான்றுகளை செயினமாய்க் காட்டும் போக்கு 19, 20 ஆம் நூற்றாண்டுத் தமிழறிஞர்களிடையே, தமிழக வரலாற்று ஆய்வாளரிடையே பெரிதும் இருந்திருக்கிறது. ஏதெல்லாம் செயினம் எனப்படுகிறதோ, அவற்றை மீளாய்வு செய்வது இப்பொழுது தேவையாகிறது. சிலம்பும் அதிலோர் ஆய்வுக் களமே.

இன்னொரு செய்தியும் இங்கு சொல்ல வேண்டும். நிக்கந்தர்கள் நெடுங்காலம் வேதநெறிப் பார்ப்பனரைப் போன்றே ஏதொன்றையும் எழுத்தில் வைக்கத் தயங்கினார்கள். “சரசுவதி இயக்கம்” என்ற செயின எழுத்தியக்கம் கி.மு.150 களிற் தொடங்கி கி.பி.100 வரை நடந்தது. அந்த இயக்கத்தையொட்டியே மகாவீரர் போதனைகள் எழுத்தில் ஆவணப்பட்டன. இதன் உச்சகாலம் கி.மு.50 இல் இருந்து கி.பி.50 வரையாகும். இக்காலத்திற் தான் செயின சமய நூல்கள் எழுதிவைக்கப்பட்டன. அதற்கு முன் அவர்களுக்கு வேத நெறியாளரைப் போல எல்லாமே வாயுரைகள் தான்(97).

சிலம்பைப் போன்றதொரு காப்பியம் கி.மு.50-கி.பி.50இலும், அதற்குப் பின் 100 ஆண்டுகளிலும், செயினச் சமய நோக்கில் எழுந்திருக்க வாய்ப்பேயில்லை. அதோடு இன்று நமக்குக் கிடைத்த சீவக சிந்தாமணி, ஐஞ்சிறு காப்பியங்கள் போன்றவை “ஒரு ஊரில் ஒரு இராசா இருந்தார், அவருக்கு இத்தனை மனைவியர், இத்தனை பிள்ளைகள். . . .” என்று சொல்லி, ஊடே மாந்தரை மீறிய மாகைச் (magic) செய்திகளை நுழைத்து, முடிவில் “செயினம் வெல்லுகிறது” என்ற முடிப்போடு, தொன்மம் (புராணம்), பழங்கதை சொல்லும் போக்கிற் தான் இருக்கின்றனவே யொழிய, சிலம்பைப்போற் கூத்துவடிவில் சட்டென்று திரையைத் தூக்கி நாடகப் பாங்கில் ஓர் வரலாற்று இலக்கியமாய்த் தோற்றங் காட்டவில்லை. சிலம்பின் கூத்து வடிவம் செயினக் கருத்தாளருக்கு முற்றிலும் மாறான புதிய வடிவம்.

4. பதிற்றுப் பத்து ஐந்தாம் பத்தில் வரும் கடல்பிறக்கோட்டிய குட்டுவனும் சிலம்பில் வரும் செங்குட்டுவனும் வெவ்வேறானவர்கள் என்று சொல்லியும், பதிற்றுப் பத்தின் பதிகம் மிகப் பிற்காலத்தது, பேரரசுச் சோழர்களின் மெய்கீர்த்திகளையொட்டி பதிகம் எழுந்தது என்று சொல்லிச் சிலம்பின் காலத்தைப் பிந்தையது என்பார்கள். [இதுவும் இடதுசாரியர் கூற்றே.]

சிலம்பினுள் வரும் ஒத்திசைவான சான்றுகளைக் குப்புறத் தள்ளிவிட்டு, பதிற்றுப்பத்துப் பதிகத்தின் காலத்தை வைத்துக் கொண்டு இப்படித் தீர்ப்பு எழுதுவது வேடிக்கையாக இருக்கிறது. பதிற்றுப் பத்தின் பதிகங்கள் காலத்தாற் பிற்பட்டவையாக இருக்கலாம். ஆனால் அவற்றில் வரும் செய்திகள் முற்பட்டவையாக இருக்கக் கூடாதா? கி.பி.100க்கும் பின்னால் எழுந்த குணாட்டியரின் “ப்ருகத்கதா”வில் வரும் செய்திகள் பிம்பிசாரனுக்கும் முந்தைய காலத்தை, அவந்தி, வச்சிரம், வத்தவம், மகதம் என்று தனித்திருந்த கணபதங்களின் காலத்தை, அல்லவா பழங்கதை சொல்லுவது போற் சொல்லுகின்றன? அவை சம காலத்தைச் சொல்லவில்லையே? அதே போல பதிற்றுப் பத்தின் பதிகங்கள் தங்களின் காலத்திற்கு முற்பட்ட செய்திகளை ஏன் சொல்லக் கூடாது?

சற்று முன்னாற் சொன்னது போல் அகம் 149 ஆம் பாட்டைப் படித்தால், சிலம்பு என்னும் காவியம், ’தன் வரலாறு’ நடந்து முடிந்த நாலைந்து ஆண்டுகளுக்குள்ளேயே எழுந்திருக்கலாம் என்ற எண்ணம் ஆழமாய் எழுகிறது. அதைக் கீழே பார்ப்போம்.

5. செங்குட்டுவனோ, தமிழக அரசர்களோ வடக்கே எந்தக் காலத்தும் படையெடுத்துப் போகவில்லை; எல்லாமே “கப்சா”; ”முதல்முதல் வடக்கே போனவன் இராசேந்திர சோழன் தான்; எனவே சிலப்பதிகாரம் ஒரு கற்பனை” என்று சொல்லி ஒரு புது “திரைக்கதை-வசனம்” எழுத முற்படுவார்கள் [இது திரு.செல்லன் கோவிந்தனின் வழிமுறை]

இதற்குச் ”சிலம்பின் காலக் கணிப்பு” என்ற நூலில்(98) முனைவர் இரா. மதிவாணன் ஏற்கனவே விடை கூறிவிட்டார். [அதேபொழுது மதிவாணன் சிலம்பின் காலம் கி.பி.2 ஆம் நூற்றாண்டு என்பார்.]

மேலேயுள்ள ஐந்து கூற்றுகளையும் ஏற்காத நிலையில், ”சிலம்பு என்னும் காப்பியம் எழுந்த காலம் எது?” என்ற கேள்வி நம்முன் நிற்கிறது. அதை இனிப் பார்ப்போம்.

சேரனை வேள்வி நடத்த மாடலன் வேண்டியபோது, சேரன் ஆட்சிக்கட்டிலேறி 50 ஆண்டுகள் ஆயிற்று. பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்தின் பதிகத்தின் படி செங்குட்டுவன் 55 ஆண்டுகள் ஆட்சி செய்தான். 25 அகவையில் ஆட்சிப் பொறுப்பேற்ற சேரனுக்கு, பத்தினிக்கோட்டம் எழுந்தபோது 75 அகவை ஆகியிருக்கும். அதன்பின் 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருக்கிறான். அவனுக்குப் பின் அவன் மகன் குட்டுவன் சேரல் ஆட்சிக்கு வந்திருக்கலாம்.

முன்னே சொன்னது போல், மதுரையில் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனுக்கு அப்புறம் ஆட்சிக்கட்டில் ஏறிய அவன் தம்பி வெற்றிவேற் செழியனின் தொடக்க காலம் குழப்பமாய் இருந்தது. மக்களின் கோவத்தைத் தணிக்கும் வகையில் 1000 பொற்கொல்லரை ”படையற் பலியாடுகள்” போலக் காவு கொடுக்கும் நெருக்கடி அவனுக்கு நேர்ந்திருக்கிறது. எப்பொழுது இந்தப் பலி நடந்தது என்று சொல்ல முடியாவிடினும், பாண்டிநாட்டில் சட்டம்- ஒழுங்கு அரசின் அடக்குமுறை மூலந்தான் நிலைநாட்டப் படுகிறது என்று உறுதியாய்ச் சொல்லலாம். இதன்முடிவில் நாடெங்கும் ஒரு மயான அமைதி ஏற்பட்டிருக்க வேண்டும். [இந்தச் செய்தி, வடசெலவிற் புறப்பட்டுச் சென்ற சேரனுக்கு 32 மாதங்கள் கழித்துத் தான் தெரிகிறது.]

இந்தக் கால முடிவில், பத்தினிக்குக் கல்லெடுக்கச் சேரன் வடக்கே படையெடுத்தது வெற்றிவேற் செழியனுக்கு ஒற்றர் மூலம் தெரிந்திருக்க வேண்டும். எங்கிருந்திருந்தோ வந்த ஒரு சோழநாட்டுப் பெண்ணால் தன்நாட்டுக்குத் தீராப் பழியும் கேவலமும் வந்து சேர்ந்தது, பாண்டியன் வெற்றிவேற் செழியன் மனத்திற் பெருங்கனலை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அந்தக் கோவம், நீலன் கனகவிசயரைக் கொண்டுவந்து பாண்டியனிடம் காட்டும் போது சேரனை ஏளனம் செய்வதில் முடிகிறது(99). “ஊர் இரண்டுபட்டுக் கிடக்கக் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்” என்ற வகையிற் ”தங்களுடைய பரிதவிப்பில் சேரன் சிக்கெடுக்கிறான்” என்றே பாண்டியர் எண்ணியிருப்பர்.

சேர நாட்டு வஞ்சியில் பத்தினிக்குக் கோட்டம் எடுத்ததைப் பாண்டியரால் கொஞ்சங் கூடத் தாங்கிக் கொண்டிருக்கவே முடியாது. ஏனென்றால் அந்தப் பத்தினிச் சிலை பாண்டியர் நீதி தவறியதை மெய்ப்பிக்கும் ஓர் அடையாளச் சின்னம். [பாண்டியர் நீதி குறைப்பட்டுப் போனதை மக்கள் மறந்து தொலைக்க வேண்டுமென்றே பாண்டிய அரசகுலத்தார் நினைந்திருப்பர்.] அந்தச் சின்னத்தை அழிப்பதில் பாண்டியர் பெரும் முனைப்புக் கொள்வது இயற்கையே. அப்படி ஒன்று நடந்திருக்கிறது. அதை அகம் 149 இல் எருக்காட்டூர் தாயங்கண்ணனார் பதிவு செய்திருக்கிறார். சற்று விரிவாகப் பார்ப்போம்.

பாலைத் திணையைச் சேர்ந்த அகம் 149 ஆம் பாட்டில்(100) வணிகத்தின் பேரில் செல்லவிருக்கும் பாண்டிநாட்டு தலைமகன் ஒருவன் இருவேறு காட்சிகளைத் தன் கண்முன்னே எண்ணி, தன் செலவைத் தவிர்க்கிறான். ஒரு காட்சி, அவன் போகவிருக்கும் சுரத்தின் கொடிய விவரிப்பாய் அமைகிறது. அக்காட்சியின் பின், “இப்படிப்பட்ட ஆளைக் கொள்ளும் வழியில் நான் சென்று பொருளீட்ட வேண்டுமா?” என்று தலைவன் தன் நெஞ்சை விளிக்கிறான். இன்னொன்று பரங்குன்றச் சுனையின் நீலமலர் போலச் செவ்வரிபடர்ந்த கண்களுடைய காதலியின் முகத்தோற்றம். இந்த இரு காட்சிகளால் அவன் செலவு அழுங்கிப் போகிறது.

[பாட்டை விவரிக்கும் எருக்காட்டூர் தாயங்கண்ணனார் பாண்டிநாட்டாராக இருக்கப் பெரும் வாய்ப்பு உண்டு. காரைக்குடிக்கு அருகில் இருக்கும் பிள்ளையார்பட்டியில் கண்டெடுத்த ஆறாம் நூற்றாண்டு வட்டெழுத்துக் கல்வெட்டில் “எக்காட்டூர் கோன் பெருந்தச்சன்” என்ற ஒரு வாசகம் வரும்(101). எருக்காட்டூர் என்பது தான் எக்காட்டூராகப் பிழைபடப் பதிவுசெய்யப்பட்டதாக ஐராவதம் மகாதேவன் கருதுவார். எருக்கஞ்செடிகள் நிறைந்த காடு எருக்கங்காடு>எருக்காடு. இன்றைக்கும் அந்தப் பகுதியில் எருக்கஞ் செடிகள் மிகுந்து காணப்படும். உள்ளூர்த் தச்சனாய் இருந்தால் பிள்ளையார்பட்டியின் பழைய பெயர் எருக்காட்டூர் ஆகும். அதே பொழுது ஔவை துரைசாமியார் வேறு அடையாளஞ் சொல்லுவார்(102). எருக்காட்டூர் என்பது பழைய தஞ்சை மாவட்டம், நன்னிலம் வட்டம், குளிக்கரை இருவுள் (Rail) நிலையத்திற்கு மேற்கில் இருக்கிறது என்று அவர் சொல்லுவார். எருக்காட்டூரைச் சேர்ந்த “மணற்குன்று” என்னும் ஊரை “எருக்காட்டூர்ச் சேரிக்குப் பிடாகையான” எனத் திருக்கடவூர்க் கல்வெட்டுக்கள் (A.R. No.32 and 38 of 1906) குறிப்பதாக அவர் சொல்லுவார். எது தாயங்கண்ணனாரின் ஊர் என்பது மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.]

தாயங்கண்ணனார் பரங்குன்றத்தை விவரிக்கும் போது “மதுரையின் மேற்கே மயிற்கொடி உயர்த்தப்பெற்று இடையறாமல் விழா நடக்கும் முருகனின் பரங்குன்றம்” என்று சொல்லுவார். மயிற்கொடியை விவரிக்கும் போது ”நெடுநல் யானை அடுபோர்ச் செழியனின் மீன்கொடி அண்மைக்காலத்தில் சேரனைச் சமரிற் (battle and not war) கடந்து, ”படிமம் வவ்விய” வெற்றியால் அசைந்ததை” ஒப்பீடாகச் சொல்லுவார். இந்த அடுபோர்ச் செழியன் உறுதியாக ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனல்லன்; அவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுமல்லன். வேறு யாரோவொரு செழியன். அவன் சேரன் மேற் கனன்று கொண்டிருந்த வெற்றிவேற் செழியனாய் இருக்கப் பெரும்வாய்ப்பு உண்டு. ஆழ்ந்து போவோம்.

அகம் 149 இன் படி, “சேரலனின் சுள்ளியம் பேரியாற்றில் பொன்கொணர்ந்து, கறியேற்றிச் செல்லும் யவனரின் கலங்கள் அடுத்தடுத்துப் போவதால் வெண்நுரை பொங்கிக்கொண்டேயிருக்கிறது. அப்பேற்பட்ட சிறப்புடைய முசிறித் துறைமுகத்தைச் சுற்றி வளைத்து சேரர்படையை நிலைகுலைய வைத்து, ஆற்றுள் நுழைந்து வஞ்சியிலுள்ள படிமத்தை தன் படையால் பாண்டியன் வவ்விக் கொண்டு போகிறான்.” அப்படியென்ன சிறப்பு அப்படிமத்திற்கு? சிலம்புக் காலத்தின் சூழ்க்குமம் அதிற்தான் இருக்கிறது.

[The Periplus of the Erythraean sea என்னும் நூலில், தொண்டியில் இருந்து கடற்கரையை ஒட்டி 480 ஸ்டேடியா கடந்து பின் ஆற்றிற்குள் நுழைந்து 20 ஸ்டேடியா போனால் முசிறித் துறைமுகம் வந்துவிடும் என்ற குறிப்புண்டு. இந்த ஸ்டேடியாவை ஏதென்சின் அட்டிக் ஸ்டேடியாவாகக் கொண்டால் 1 அட்டிக் ஸ்டேடியா = 0.185 கி.மீ என்றாகும். அதன்படி, தொண்டியில் இருந்து கடற்கரையை ஒட்டி 480*0.185 = 88.8 கி.மீ சென்று பின் ஆற்றிற்குள் 20*0.185 = 3.7 கி.மீ சென்றால் முசிறி வந்து சேரும். முசிறிப் பட்டணத்தில் இருந்து ஆற்றையொட்டிக் குறைந்தது 8/10 கி.மீ தூரத்தில் வஞ்சி மாநகர் இருந்திருக்கலாம். (நமக்கு உண்மைத் தொலைவு தெரியாது.)]

முசிறியை வளைத்தவன், சேரநாட்டைப் பிடிக்கவில்லை. வெறுமே படிமம் கவர இவ்வளவு தொலைவு கடல்வழியே போயிருக்கிறான். ஆழ்ந்து ஓர்ந்து பார்த்தால், ஆங்கிலத்திற் சொல்வது போல் இது திடீரென்று பழிவாங்கும் தாக்குதல், தண்டனை கொடுக்கும் தும்பைப் போர் (punitive expedition). எந்தச் செழியன் படிமத்தைத் தூக்கிவர முற்படுவான்? சேரனை ஏளனமாகப் பேசிய வெற்றிவேற் செழியன் அன்றி அது வேறு யாராய் இருக்க முடியும்? அது கண்ணகியின் படிமம் என்றி வேறேதாக இருக்க வாய்ப்புண்டு? [உரையாசிரியர்கள் பொற்படிமம் என்று சொல்லுவார்கள். ஆனால் அகம் 149 ஆம் பாட்டில் பொன் என்னும் சொல்லாட்சி எங்கணும் கிடையாது. படிமம் மாழைப் படிமமா, கற் படிமமா என்று கூட அகம் 149 சொல்லவில்லை. நம்முடைய ஊகமாய் அது கற்படிமம் என்று சொல்லத் தோன்றுகிறது.]

வெற்றிவேற் செழியன் நெடுநாட்கள் கொற்கையில் இருந்தவன். கொற்கையில் இருந்து முத்துக் குளிப்பதற்கும், மீன்பிடிப்பதற்கும் அந்தக் காலத்தில் இந்தக் காலம் வரை, பருவகாலத்தை ஒட்டி பாண்டிக் கடற்கரையில் இருந்து புறப்பட்டு வஞ்சி வரை (இற்றைக் கொச்சின் வரை) வந்து போவது மீனவர் பழக்கம். இந்த நாவாய், படகுகளுக்கு நடுவில் ஒரு அதிரடிப்படையை அனுப்புவது அப்படியொன்றும் கடினமான செயலல்ல. நிலத்தின் வழியே படையை அனுப்பினால் அது பெரும் போரில் வந்து முடியும். அதைத் தவிர்த்து, பாண்டியன் அதிரடிப் படைகள் கடல்வழியே கரையொட்டிப் போய் முசிறியில் ”அருஞ்சமம்” நடத்தி முடிவில் வஞ்சினம் தீர்க்கும் வழியாய், ”படிமத்தை” வவ்விக் கொண்டு போவதே எளிதானது, இத்தகைய அதிரடிச் சமரைத்தான் எருக்காட்டூர் தாயங்கண்ணனார் அகம் 149-இற் பதிவு செய்கிறார்.

”மீன்கொடிகள் சட்டென்று பறந்து படிமத்தை விரைவாய்க் கவ்விக் கொண்டுவந்துவிட்டன. அதைப்போலப் பரங்குன்றத்து மயிற்கொடிகள் ஆடுகின்றன” என்று ஒப்புமை சொல்லுகிறார்.

தாயங்கண்ணனார் பாடல் வெற்றிவேற் செழியனைக் குறித்தவை என்று எப்படிச் சொல்ல முடிகிறது? - என்றால் அதற்கும் காரணம் இருக்கிறது. அவர் இன்னொரு அரசனையும் தம் வாழ்நாளில் பாடியிருக்கிறார். அவன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்பவனாவான். நினைவிருக்கிறதா? சிலம்பிற் பதிவு செய்தபடி செங்குட்டுவனின் மைத்துனன் ஒரு கிள்ளிவளவன்(103,104,105). ஒன்பது சோழ இளங்கோக்களோடு போரிட்டு அவனை ஆட்சிக் கட்டிலில் ஏற்றிவைத்தது செங்குட்டுவன் தான். இவன் உறந்தை யரசன் என்பது மாறோக்கத்து நப்பசலையார் பாட்டால் (39) விளங்குகிறது. (இவனே பின்னால் சேர அரசிற்கு எதிராகப் படையெடுக்கும் காலம் ஒன்றுண்டு. எனினும் மாறோக்கத்து நப்பசலையார், ”இமயத்தில் வில் பொறித்த சேரனை வென்றவனே” என்று சோழனைப் பாராட்டுவார்(106).மாறோக்கம் என்பது கொற்கைக்கு அருகில் உள்ள சிற்றூர். இவர் பாண்டிநாட்டுப் பெண்புலவர்.

குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் காலத்திலும், அவன் மகன் இராசூயம் வேட்ட பெருநற்கிள்ளி காலத்திலும் இருந்த மாந்தரஞ்சேரல் இரும்பொறையை (இவன் சிலம்புக் காலத்தில் அகவை குறைந்தவனாய் இருந்திருக்கவேண்டும்.)சிலம்பு தெளிவாகக் குறிப்பிடுகிறது. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும் மாந்தரஞ்சேரல் இரும்பொறை காலத்தில் இருந்திருக்கிறான். இந்த நெடுஞ்செழியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனுக்கோ, வெற்றிவேற் செழியனுக்கோ மகனாய் இருக்க வேண்டும். இத்தனை அரசர்களின் சமகாலம் முறைப்படி வெகு எளிதாகப் பொருந்துகிறது. அதைப்பற்றி விவரிக்கப் போனால் வேறு எங்கோ இழுத்துச் செல்லும்; எனவே சிலம்பிற்கு மீண்டும் வருவோம்.

சிலம்பு என்னும் காப்பியம் பல ஆண்டுகள் கழித்து எழுந்திருக்குமானால் படிமம் வவ்விய செய்தியை அதுவே பதிந்திருக்கும். கதையின் பாங்கும் பெரிதும் மாறிப் போயிருக்கும். அதை இளங்கோ பதியாத காரணத்தால், அந்தக் குறிப்பிட்ட நிகழ்வு நடப்பதற்கு முன்னேயே காப்பியம் எழுந்திருக்கவேண்டும் என்று அழுத்தந் திருத்தமாகச் சொல்லலாம். பெரும்பாலும் குட்டுவன் சேரலின் அவையில் சிலம்புக் காப்பியம் அரங்கேறியிருக்கலாம். குட்டுவனுக்குப் பின் அவன் பங்காளியான மாந்தரஞ்சேரல் இரும்பொறை சேரரின் கூட்டரசை ஆண்டிருக்கிறான். அவன் காலத்திற்றான் ஐங்குறுநூறு தொகுப்பிக்கப்பெற்றது என்ற குறிப்புமுண்டு(107). [அன்றி மாந்தரன் சேரல் இரும்பொறையின் அவையிலோ எழுந்திருக்கலாம்.]

குட்டுவன் சேரல் தன் தந்தையின் புகழ் விளங்க வேண்டுமென்று ”சிலப்பதிகாரம்” என்ற இந்நூலுக்கு ஆதரவு அளித்திருக்கலாம். பேரரசுச் சோழர் காலத்தில் குலோத்துங்கனின் பிறங்கடைகள் ஒட்டக்கூத்தரை வைத்து தங்கள் முன்னோருக்கு உலாப் புகழும், பரணிப் புகழும் பாடவில்லையா? இது போன்ற புகழ்ப்பாடுதல்கள் உடனே நடந்துவிடும்; நாட்பட்டு நடக்கா. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வதும், இரும்பு சூடாய் இருக்கும் போதே அடிப்பதும் தான் உலகியல் வழக்காகும்.

எனவே கண்ணகிப் படிமத்தை வவ்வியது வெற்றிவேற் செழியன் தான் என்று உறுதி செய்ய முடிந்தால் சிலம்பு எழுந்தது கதை நடந்து முடிந்த ஒருசில ஆண்டுகளில் என்றே சொல்லவேண்டியிருக்கிறது.

இன்னொரு கேள்வி எழுகிறது. வவ்விய படிமம் எங்கே போயிற்று? அதனாற்றான் கொடுங்களூர் பகவதி கோயிலில் மூலவள் இல்லாது இன்றும் கருவறை நான்கு பக்கமும் அடைபட்டிருக்கிறதா?(108) அந்தப் பகவதி கோயிலுக்குள் இன்னொரு சூழ்க்குமம் இருக்கிறதோ? என்று அதை அவிழ்ப்போம்?

----------------------------------
[இந்த ஆய்வு பற்றிய சுருக்கத்தை, 2007 நவம்பரில் அமெரிக்க ஒன்றிய நாடுகள், தென்கரோலினா மாநிலத் தலைநகரான சார்ல்சுடனில் ஒரு நாள் மாலை, அங்கிருந்த நூலகம் ஒன்றில் எனக்காகக் கூடியிருந்த சில தமிழன்பர்களிடையே உரையாட்டில் சொல்லியிருந்தேன். அந்த உரையாடலை ஏற்பாடு செய்த நண்பர் சுந்தரவடிவேலுக்கும், உரையாடலில் பங்கு கொண்டோருக்கும் நான் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன். அங்கு சொன்னதற்கும் மேல் விரித்து, கூடிய மட்டும் சான்றுகளுடன் இங்கு சொல்ல முற்பட்டிருக்கிறேன்.]

எடுகோள்கள்:

95. பேரா. கார்த்திகேசு சிவத்தம்பி ”பண்டைய தமிழக வரலாற்றின் மீது ஓர் ஆய்வொளிப் பாய்ச்சல்” பனுவல், தொகுதி 1, இதழ் 1, நவம்பர் 2008, பக்கங்கள் 36-66.
96. பேரா., க.நெடுஞ்செழியன் ”ஆசீவகம் என்னும் தமிழர் அணுவியம்”, மனிதம் பதிப்பகம், திருச்சிராப்பள்ளி - 21, 2002
97. Jyoti Prasad Jain, “The Jaina Sources of the History of Ancient India”, pp 64-75, Munshiram Monoharlal Publishers Pvt. Ltd. 2005.
98. முனைவர் இரா. மதிவாணன், “சிலம்பின் காலக் கணிப்பு” சேகர் பதிப்பகம், சென்னை 78, 2005/
99. ஆங்கு நின்று அகன்றபின் அறக்கோல் வேந்தே
ஓங்குசீர் மதுரை மன்னவற் காண
ஆரிய மன்னர் அமர்க்களத்து எடுத்த
சீரியல் வெண்குடைக் காம்பு நனி சிறந்த
சயந்தன் வடிவில் தலைக்கோல் ஆங்குக்
கயந்தலை யானையிற் கவிகையிற் காட்டி
இமயச் சிமையத்து இருங் குயிலாலுவத்து
உமையொரு பாகத்து ஒருவனை வணங்கி
அமர்க்களம் அரசனது ஆகத் துறந்து
தவப்பெரும் கோலம் கொண்டோர் தம்மேல்
கொதியழற் சீற்றம் கொண்டோன் கொற்றம்
புதுவது என்றனன் போர்வேற் செழியன்
நடுகற் காதை 96-107
100.சிறுபுன் சிதலை சேண்முயன்று எடுத்த
நெடுஞ்செம் புற்றத்து ஒடுங்கு இரை முனையில்
புல் அரை இருப்பைத் தொள்ளை வான்பூப்
பெருங்கை எண்கின் இருங்கிளை கவரும்
அத்த நீள் இடைப் போகி நன்றும்

அரிதுசெய் விழுப்பொருள் எளிதினின் பெறினும்
வாரேன் வாழி என் நெஞ்சே! சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்

வளம்கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ
அருஞ்சமம் கடந்து, படிமம் வவ்விய
நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்
கொடிநுடங்கு மறுகின் கூடற் குடாஅது
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய

ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து
வண்டுபட நீடிய குண்டுசுனை நீலத்து
எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரிமதர் மழைக்கண் தெண்பனி கொளவே.
அகநானூறு 7-16, எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்
101. Iravatham Mahadevan, “Early Tamil Epigraphy” pp 474-475, Crea-A, Chennai India, and The Department of Sanskrit and Indian Studies, Harvard University, U.S.A., 2003
102. ஔவை துரைசாமிப் பிள்ளை விரிவுரை, “புறநானூறு 201-400 பாட்டுக்கள்” பக்கம் 453, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1972.
103. நீடு வாழியரோ நீள்நில வேந்தென
மாடல மறையோன் மன்னவற்கு உரைக்கும் நின்
மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா
ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர்
இளவரசு பொறாஅர் ஏவல் கேளார்
வளநாடு அளிக்கும் மாண்பினர் ஆதலின்
ஒன்பது குடையும் ஒருபகல் ஒழித்தவன்
பொன்புனை திகிரி ஒருவழிப் படுத்தோய்
நீர்ப்படை காதை 116-123
104. சித்திர விதானத்துச் செம்பொற் பீடிகைக்
கோயில் இருக்கைக் கோமகன் ஏறி
வாயிலாளரின் மாடலற் கூஉய்
இளங்கோ வேந்தர் இறந்ததற் பின்னர்
வளங்கெழு நன்னாட்டு மன்னவன் கொற்றமொடு
செங்கோற் தன்மை தீதின்றோ என
நீர்ப்படை காதை 156-161
105. ஆர்புனை தெரியல் ஒன்பது மன்னரை
நேரிவாயில் நிலைச்செரு வென்று
நடுகற் காதை 116-117
106. ஓங்கிய
வரையளந்து அறியாப் பொன்படு நெடுங்கோட்டு
இமயஞ் சூட்டிய வேம விற்பொறி
மாண்வினை நெடுந்தேர் வானவன் தொலைய
வாடா வஞ்சி வாட்டுநின்
பீடுகெழு நோன்றாள் பாடுங் காலே
புறம் 39. 13-18
107. அ. பாண்டுரங்கன், “தொகை இயல்” தமிழரங்கம், புதுச்சேரி 605008, 2008.
108. முனைவர் வி. ஆர். சந்திரன், “கொடுங்கோளூர் கண்ணகி” (தமிழில் ஜெயமோகன்), யுனைட்டட் ரைட்டர்ஸ், சென்னை, 2005

அன்புடன்,
இராம.கி.

1 comment:

V.S. Rajam said...

வணக்கம். இந்தப் பத்தி பற்றித் தெரிவிக்க நினைத்த கருத்தை முந்தைய பத்தியின்பின் எழுதிவிட்டேன். முதல்முறைப் போராட்டம்!

சரி. மீண்டும் இடுகிறேன். பொறுமை கொள்ள வேண்டுகிறேன்!

அகநானூறு 149 பற்றி அருமையான விளக்கம்! பெரும்பாலும் "யவனர் தந்த நன்கலம் ... ... ... பெயரும்" என்பதோடு பலரும் நிறுத்திக்கொள்வதிலிருந்து ஒரு திருப்புமுனையைக் காட்டியிருக்கிறீர்கள். நல்லது! நன்றி!

அரசர்களின் பெயர்களையும் அவர்கள் காலத்தையும் ஒரு வரைபடத்தில் விளக்குவீர்களா? படிப்பவரின் விருப்பத்துக்கு எல்லையே இல்லை, இல்லையா!