Tuesday, May 11, 2010

சிலம்பின் காலம் - 3

சிலம்பின் வடிவம்:

சிலம்பின் நூற்கட்டுரையைப் படித்தால்(11), சிலப்பதிகாரம் ஒரு நாடகக் காப்பியம் ஆவதையும், கதைசொல்லும் பாணி ஒரு தேர்ந்த மேடைக்கூத்து வடிவத்தைச் சுட்டுவதையும், அறியலாம். 50, 60 ஆண்டுகளுக்கு முன், தமிழக நாட்டுப்புறங்களில் நடந்த கோவலன் - கண்ணகி,, கீசக வதம், நள தமயந்தி போன்ற 10, 15 நாள் இரவுநேரக் கூத்துக்களை இங்கு எண்ணிப் பார்க்கலாம். சிலம்பின் பல உத்திகளும் நம்முடைய நாட்டுப்புறக் கூத்துகளில் பயன்படுத்தப் பட்டுள்ளன.

இக்கூத்துக்களை அடுத்தடுத்த ஆண்டுகளில் நடிக்கும் கூத்துக்காரர், முன்னாற் பெற்ற பாராட்டையொட்டி, சில விலக்குகளும், சேர்ப்புகளும் செய்துகொண்டேயிருப்பர். இதனால், ஒருசில ஆண்டுகளுள், கூத்தின் உரையாடல், விவரிப்புக்களில் எது ஊற்றாசிரியருடையது (original author), எது இடைச்செருகல் என்பது தெரியாமலே போகும்.. இதே போல, சிலம்புக் கூத்தினுள்ளும் நடந்திருக்கலாம். எது இளங்கோவுடையது, எது பிற்சேர்ப்பு என்று பிரித்தறிவது கடினமான செயலாகும். அடுத்துள்ள பத்திகளில் இதை ஆழ்ந்து செய்யப்போகிறோம். [அதே பொழுது சிலம்பில் எது கற்பனை, எது உள்ளமை (reality) என்பது முற்றிலும் வேறு விதயம்.]

பதிகம் ஊற்றாவணமா?:

”சிலம்பின் பதிகத்தை இளங்கோவோ, அன்றி அவருக்கு வேண்டிய சாத்தனாரோ எழுதினரா? அதுவோர் ஊற்றாவணமா (original document) ?” - என்பதைப் பதிகத்திற்கும், காப்பியச் செய்திகளுக்கும் இருக்கும் ஒத்திசைவைப் (consistency) பொறுத்தே காணமுடியும். ஒரே ஆசிரியர் அன்றிச் சம காலத்தில் வெவ்வேறு ஆசிரியர் எழுதியிருந்தால் இந்த ஒத்திசைவு இருந்திருக்கும். ஆனால் இங்கோ, பெரும் முரண்கள் தெரிகின்றன. ஒவ்வொரு முரணாகப் பார்ப்போம்.

1.பதிகத்தின் தொடக்கத்திலேயே, ‘குடக்கோச் சேரல் இளங்கோவடிகள்’ என்று வருகிறது. முற்றுந் துறந்த ஒருவர், பீடும், பெருமையும் பெயரொடு சேர ‘குடக்கோச் சேரல் இளங்கோவடிகள்’ என்று தன்னைத் தானே அழைத்துக்கொள்வாரா? அது ஒரு துறவி செய்யும் செயலா? பொதுவாய் இயற்பெயர் தவிர்க்கும் துறவுப்பெயர் இருக்குமே? துறவுப்பெயரால் விளிக்காது, அரசப்பெயர் சொல்லுவரோ? (அடிகள் என்ற விளிப்பிலும் ஐயம் உண்டு. மதுரைக்காண்டத்துள் கண்ணகி, கோவலனை அடிகள் என்பாள். எனவே அடிகள் எல்லோரும் துறவியரென்று ஐயந்திரிபறச் சொல்லுதற்கில்லை. ”இளங்கோவடிகள்” என்பது அற்றைப்புரிதலில் துறவியைச் சுட்டுவதாய்க் கொள்ளமுடியாது.)

2.பதிகத்தின்படி, கண்ணகி ‘விட்புலம் போன’ செய்தியைக் குன்றக்குரவர் இளங்கோவிடம் நேரடியாய்ச் சொல்ல, காட்சிக் காதையில் சேரனிடம் தெரிவிக்கப் படுகிறது. (இங்கு அரசன் முன்னிலை இல்லையோ?)

3.இதே போலக் காட்சிக் காதையில் அரசனின் முன்னிலையில் சாத்தனார் உரைக்கும் நிகழ்வுக்கு மாறாய், பதிகத்தில் அவர் இளங்கோவிடம் உரைக்கிறார். அரசனின்றி வஞ்சிக் காண்ட நிகழ்வுகள் நடந்திருக்குமா? இளங்கோவா வஞ்சிக் காண்ட நிகழ்வுகளை நடத்துபவர்? இல்லையே? இது ஒரு முரண் அல்லவா?

4.முற்பிறப்புச் செய்தியை மதுராபுரித் தெய்வம் கண்ணகிக்குச் சொன்னபோது, வெள்ளியம்பலத்து நள்ளிருளில் சாத்தனார் கேட்டதாய்ப் பதிகமும், கதை மாந்தர் வழியாய் நேராக விவரித்துக் கட்டுரைக் காதையிலும் வரும். விவரிப்பில் ஏன் இந்த முரண்?

5.அழற்படு காதையில் மதுராபுரித் தெய்வம் கண்ணகிக்கு முன் தோன்றியது அந்திவிழவு நேரமாகும். பதிகத்தில் இது நடு யாமம் என்று (15 நாழிகை வேறுபாடு) வரும். நிகழ்வுக் காலநிலையை ஒரே ஆசிரியர் வெவ்வேறு இடங்களில் முரணாய்ச் சொல்லுவாரோ?

6.வஞ்சிக் காண்டம் நிகழாது, சாத்தனார் விளக்கிய அளவிலேயே, ”காப்பியக் குறிக்கோள்கள் இன்னின்ன” என்று பதிகம் சொல்வது ஒரு நாடகத் தனமாய் இருக்கிறது. முன்னுக்குப் பின் முரணாய் ஒரு காப்பிய ஆசிரியர் கூறுவாரோ?

7.செங்குட்டுவனே இல்லாது, நிகழ்வுகள் பதிகத்தில் சொல்லப் படுவதும், நூலெழுதக் காரணம் கற்பிப்பதும், சற்றும் பொருத்தமின்றி இருக்கின்றன.

8.பதிக முடிவில், சாத்தனார் இளங்கோவை நூலெழுதச் சொல்வது படர்க்கையிலுள்ளது. ஓர் அரசன் வீற்றிருக்கும் நிலவுடமைக் கொலுவில் அவனிடமின்றி, நேரடியாய் வேறொருவர் மற்றோரிடம் வேண்ட முடியுமோ?

9.பதிகத்தை இளங்கோவோ, சாத்தனாரோ எழுதியதாய்த் தோற்றவில்லை. நீண்ட காலங் கழித்து, பெரும்முரண்களோடு, ”நாடகத்தனமாக”யாரோ பதிகம் செய்திருக்கிறார்கள். பதிகம் ஊற்றாவணத்திற் (original document) சேர்ந்ததல்ல.

உரைபெறு கட்டுரை ஊற்றாவணமா?:

அடுத்திருக்கும் உரைபெறு கட்டுரைக்கு வருவோம். காப்பியத்தைப் படிக்க வருவோரை படிக்கத் தூண்டுவதாய், கூத்தைப் பார்க்கவைப்பதாய் இது அமைகிறது.

1.கூர்ந்து கவனித்தால், நாட்டுப்புறக் கூத்தின் தொடக்கத்தில் வரும் கட்டியங்காரனின் கூற்றுப் போல் இது அமைந்துள்ளது.

2.இந்தக் கட்டுரையுள், ”அது கேட்டு, அது கேட்டு” என்ற சொற்றொடர் அடுத்தடுத்த நிகழ்வுகளைக் கால வரிசையிற் தருவதால், ஒரு வரிசைப் போக்கு புலப்படுகிறது. அந்தக் காலத்தில் எங்கெல்லாம் பஞ்சம் ஏற்பட்டதோ, அங்கெல்லாம் பத்தினி வழிபாடு தொடங்கியது போலும். இன்றைய ‘வாழும் வரலாற்றிலும்’ மழைவேண்டி, மாரியம்மன் விழாக்கள் நடக்கின்றன தானே?

3.உரைபெறு கட்டுரையில் வரும் “களவேள்வி” என்ற சொல் ஒரு போர்க்களச் சொல். மக்கள் பெருங்கோவமுற்று அரசனை எதிர்க்க, சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட, புரட்சியாளரைக் கொன்று, வெற்றிவேற்செழியன் ”களவேள்வி” செய்தானோ?. உள்நாட்டுப் போர் அங்கு நடந்ததோ? மதுரை பஞ்ச காலத்தில் எரிந்ததோ, என்னவோ?

4.உரைபெறு கட்டுரையின் வழி, கொங்கிளங் கோசர் (South Canara) விழவொடு சாந்தி செய்தது பாண்டியனின் கள வேள்விக்கு அப்புறம் என்று புரிகிறது.

5.அடுத்துவரும் ”அது கேட்டுக் கடல்சூழ் இலங்கைக் கயவாகு என்பான், நங்கைக்கு நாட்பலி பீடிகை கோட்ட முந்துறுத்து ஆங்கு அரந்தை கெடுத்து வரந்தரும் இவள் என ஆடித் திங்கள் அகவையின் ஆங்கோர் பாடி விழாக் கோள் பன்முறை எடுப்ப மழை வீற்றிருந்து வளம்பல பெருகிப் பிழையா விளையுள் நாடாயிற்று” - என்னும் இலங்கைச் செய்தி உன்னித்துக் கவனிக்கவேண்டியது [ஆனால் பலரும் செய்யாதது.]

6.கண்ணகிக்கு சாந்தி செய்து கோசர் மழைபெற்றது கேட்டுத் தன் நாட்டு (அதாவது இலங்கையின்) அரந்தை (கொடுங்கோடை) கெடக் கயவாகு பத்தினிக்கு விழா எடுக்கிறான். வரந்தரு காதையோ, செங்குட்டுவன் கூடவே கயவாகு இருந்ததாய்க் கூறுகிறது. ஒரே ஆவணத்துள் இப்படி ஒரு முரண் எப்படி வந்தது? அல்லது இரண்டும் ஒன்றிற்கொன்று தொடர்பில்லாத வெவ்வேறு ஆவணங்களா? இதையேன் பலரும் கவனிக்க மறந்தார்கள்?

7.உரைபெறு கட்டுரை, வரந்தரு காதை – இவற்றில் ஒன்றுதான் உண்மையாக முடியும்.. அடுத்தடுத்த அரசர் செயல்களில் ஒரு கால ஒழுங்கும் ஏரணமும் உரைபெறு கட்டுரையிற் காணுவதால், வரந்தரு காதையை ஏற்கத் தயங்கவேண்டியிருக்கிறது. அக்காதை பற்றி கீழே வருவது போல் நிறையக் கேள்விகள் நமக்கு இருக்கின்றன.

8.உரைபெறு கட்டுரையின் வழி, பெருங்கிள்ளி கோழியகத்துப் பத்தினிக் கோட்டம் சமைத்தது இலங்கைக் கயவாகு பன்முறை (=பல்லாண்டு) விழா எடுத்ததற்கு அப்புறம் என்று அறிகிறோம். இங்கே குறிப்பிடப்பெறும் பெருங்கிள்ளி, செங்குட்டுவனின் சமகாலத்து மைத்துனனின் பிறங்கடையாவான். [எத்துணையாவது பிறங்கடை என்பது தெரியாது.]

9.மொத்தத்தில் உரைபெறு கட்டுரையும் இளங்கோ எழுதிய ஊற்றாவணமாய்த் தெரியவில்லை; அதே பொழுது காப்பியத்திற்குப் பின் நடந்த நெடுங்கால நிகழ்வுகளை உரைப்பதால், இதை ஒதுக்காமல், காலக் கணிப்பிற்கு எடுத்துக் கொள்வது நல்லது.

காப்பியத்தின் மற்ற பகுதிகள் ஊற்றாவணங்களா?:

1.மங்கல வாழ்த்தில் இருந்து வாழ்த்துக் காதை வரை காப்பியத்தில் தொடர்ச்சி இருப்பதால், அவை இளங்கோ எழுதியதே என்று கொள்ளுகிறோம்.

2.அதே பொழுது, இந்தப் பகுதிகளுக்குள் அங்கும் இங்குமாக இடைச்செருகல் இருக்கலாம். அவற்றைப் பாடபேதம் கொண்டே நிறுவமுடியும். (காட்டாக, அழற்படு காதையில் வருண பூதங்கள் மதுரையை விட்டு விலகும் பகுதியை இடைச்செருகல் என்று சுவடி வேறுபாட்டு விளக்கம் சொல்லி ந.மு.வேங்கடசாமி நாட்டார் ஒதுக்குவார்.)

3.காதைகளின் முடிவில் இருக்கும் வெண்பாக்கள் இளங்கோ எழுதியது என்று கொள்ள வேண்டியதில்லை. அவை கதைக்குத் தேவையானைவையும் அல்ல.

4.காண்டக் கட்டுரைகள், நூற்கட்டுரை –ன்பவை இளங்கோவோ, அன்றி வேறெவரோ எழுதியிருக்கலாம். இவையும் நூற்தொடர்ச்சிக்குத் தேவையில்லாதவை.

5.வரந்தரு காதை மட்டும் மற்றவையோடு மாறுபடுகிறது; கூத்துவடிவத்தின் மரபும் அதிற் கிடையாது. கிட்டத்தட்ட மணிமேகலையின் பா வடிவிலும், அதன் முன்னெடுப்பாகவும் தெரிகிறது. மணிமேகலைக்கு வேண்டுமானால் அது தேவையாகலாம், சிலம்பிற்கு அல்ல.
------------------------

எடுகோள்:

11.குமரி வேங்கடம் குணகுட கடலா
மண்டிணி மருங்கிற் தண்டமிழ் வரைப்பிற்
செந்தமிழ் கொடுந்தமிழ் என்றிரு பகுதியின்
ஐந்தினை மருங்கின் அறம்பொருள் இன்பம்
மக்கள் தேவர் என இரு சார்க்கும்
ஒத்த மரபின் ஒழுக்கொடு புணர
எழுத்தொடு புணர்ந்த சொல்லகத்து எழுபொருளை
இழுக்கா யாப்பின் அகனும் புறனும்
அவற்று வழிப்படூஉம் செவ்விசிறந்து ஓங்கிய
பாடலும் எழாலும் பண்ணும் பாணியும்
அரங்கு விலக்கே ஆடல் என்று அனைத்தும்
ஒருங்குடன் தழீஇ உடம்படக் கிடந்த
வரியும் குரவையுஞ் சேதமும் என்றிவை
தெரிவுறு வகையாற் செந்தமிழ் இயற்கையில்
ஆடிநன் நிழலின் நீடிருங் குன்றம்
காட்டுவார் போல் கருத்து வெளிப்படுத்து
மணிமேகலை மேல் உரைப்பொருள் முற்றிய
சிலப்பதிகாரம் முற்றும்.

அன்புடன்,
இராம.கி.

1 comment:

Anonymous said...

Dear Rama.ki

Cannot it be that Silampu refers to Two Gajabahus? They may have ruled at different times or they may be contemporaries?