Sunday, May 16, 2010

சிலம்பின் காலம் - 8

சேரரின் வஞ்சி:

சேரன் செங்குட்டுவனின் சமகாலப் பங்காளிகளைப் பார்த்தோம் அல்லவா? இவர்களின் மையப் புள்ளி எங்கிருந்திருக்கும்? பங்காளிகளுக்கு நடுவிலா? அன்றி, விளிம்பிலா? - என்பது அடுத்த கேள்வி. குறிப்பாக இது குட நாட்டு வஞ்சியா? கொங்கு வஞ்சியா? - என்ற கேள்வியெழும். கொங்குமண்டலப் பற்றுக் கொண்ட பல ஆய்வாளர்கள் ஆன்பெருநை என்னும் பெயர் தமிழக அமராவதிக்குப் பொருந்துவதாலும் [ஆன்பெருநை = ஆன்பெருவதி> ஆம்பெராவதி> ஆம்ப்ராவதி> ஆம்ராவதி> அமராவதி], அங்கு ஏராளம் தொல்லியற் பொருட்கள், நாணயங்கள் கிடைப்பதாலும், அதையே சேரர் தலைநகர் வஞ்சி என்று சொல்வார்கள். ஆனால் சிலம்பைச் சரியாக ஆராய்ந்தால் தலைமை வஞ்சி கொங்கிலில்லை, அது அடுத்த வஞ்சி என்பது எளிதில் விளங்கிப் போகும். [இதற்காகக் கொங்குக் கருவூரின் முகன்மையை நாம் குறைக்கிறோம் என்று பொருளில்லை. ஒரே பெயர் இருவேறு ஊர்களுக்கு இருப்பது தமிழருக்குப் புதிதா, என்ன?]

நெடியோன் மார்பில் ஆரம் போன்று ’பெருமலை விலங்கிய பேரியாற்று அடைகரை” என்று காட்சிக் காதை 21-22 ஆம் வரிகள் சொல்லுவதால்,. செங்குட்டுவனின் வஞ்சி என்பது உறுதியாக இன்றையக் கொடுங்களூர் தான்; (முன்னாற் சொன்ன எடுகோள் 12.) வஞ்சிக் காண்டம் நெடுகிலும் இதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன(43). இன்றைய கொடுங்களூரில் இருந்து சுள்ளியம் பேரியாற்றை ஒட்டியே, மூவாற்றுப் புழை வழியே அயிரிமலை (= கூர்த்த மலை) வரை போகமுடியும். செங்கோடு என்பதற்கும் செங்குத்து மலை என்று பொருள் கொள்ள முடியும். அயிரி மலைக்குக் கிழக்குப் பக்கம் வையை தோன்றுகிறது. மேற்குப் பக்கம் சுள்ளியம் பேரியாறு தோன்றுகிறது. ஆறு தொடங்கும் இடத்தில் அயிரியாறு என்றும் அழைக்கப் படுகிறது.

கோன்முறை பிழைத்த கொற்ற வேந்தன்:

செங்குட்டுவனின் பங்காளிகளையும், அவன் வஞ்சியையும் பார்த்த நாம் இனி அவனுடைய தமிழக எதிராளிகளைப் பார்ப்போம். முதலிற் நாம் பார்ப்பது பாண்டியன் நெடுஞ்செழியன் ஆகும்.

“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்” என்ற புறப்பாட்டை எழுதிய அரசன் இந்த நெடுஞ்செழியனாவான். ”வடவாரியர் படைகடந்து, தென்றமிழ்நாடு ஒருங்கு காணப் புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் அரைசுகட்டிலிற் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியனோடு ஒரு பரிசா நோக்கிக் கிடந்த மதுரைக் காண்டம் முற்றிற்று” என்ற சொல்லால், இவன் வடவாரியர் படைகடந்த பாண்டியன் என்பதை அறிகிறோம். [இது செங்குட்டுவனின் முதற் படையெடுப்பிற்கு முந்தியதோ, பிந்தியதோ, தெரியாது. ஆனால், இவன் இமையம் போகவில்லை, வடவாரியர் என்போர் “அரசன் இல்லா ஆயுதகணத்தார் (யௌதேய கணத்தார்= merceneries)” என்று ம.சீ.வே சரியாக நிறுவுவார்(44). இவன் எதிரியான நெடுஞ்சேரலாதன் வடசெலவிற் வெற்றி கொண்ட காரணத்தால் அதற்குப் போட்டியாய், இப்படியோர் பெயரைத் தனக்குச் சூட்டிக் கொண்டான் போலும்.]

ஆனாலும் நெடுஞ்செழியன் கடைசிக் காலம் பெரிதும் குழப்பமானது. சிலம்புக் காலத்தில் மக்களின் பெருங்கோவத்திற்கு இவன் ஆளாகியிருக்கிறான். மக்கள் இவன் ஆட்சியின் மேல் குறை கொண்டிருந்திருக்க வேண்டும். கோவலன் கொலைக்கு முன்பும், நெடுஞ்செழியனின் கோத்தொழிலர் (bureaucrats), கோமுறை (goveranance) தவறியதால், மக்களின் முணுமுணுப்பு அரசனுக்கு எதிராய்க் கூடியிருந்திருக்கிறது. வார்த்திகனை விடுவித்து, ”கோன்முறை பிழைத்த கொற்ற வேந்தன் தான்முறை பிழைத்த தகுதி” பற்றிச் சிலம்பு ஆழமாகப் பேசுகிறது(45).

கணவன் கொலைக்களப் பட்டபின் அரசன் முன் வழக்குரைத்த கண்ணகி, கோவலன் தந்தையின் பெயரை முன்னுரைத்தே தன்னை அறிமுகம் செய்வாள். அப்படியெனில் மாசாத்துவான் என்னும் வணிகன் தமிழகமெங்கும் பேர்பெற்றவன் என்பது புலப்படுகிறது. அப்படிப் பன்னாட்டு மன்னராலும் அறியப் பட்டவன் மாசாத்துவானெனில், கோவலனைக் கொல்லச் செழியன் ஆணையிட்டது எப்படி? கோவலன் நாடு புகுந்த செய்தியை கோத்தொழிலர் எப்படி அரசனுக்குச் சொல்லாது இருந்தனர்? கோட்டை வாசலில் நுழையும் போது “கோவலன் யார்?” என்று கேட்டு, செய்திகள் உரியமுறையில் அறியப்பட்டு அரசனுக்குச் சொல்லப் படாமற் போயிருக்கிறதே? நெடுஞ்செழியனின் புலனறிவாளர் (intelligence people) தரங் குறைந்தவரா? அரசனுக்குச் செய்திகளைச் சரியானபடி தராதவரா? செழியன் எடுப்பார் கைப்பிள்ளையா? அன்றி அரசனுக்கும் கோத்தொழிலருக்கும் நடுவே ஒருவேளை பெருத்த இடைவெளி இருந்ததோ? இந்த இடம் நமக்குப் புரிபடாமல் போகிறது. மொத்தத்தில் பாண்டியன் அரசு தடுமாறிக் கொண்டிருந்த காலத்தில், மக்களின் கோவம் கூடியிருந்த காலத்தில், சிலம்புக் கதை நடந்திருக்கிறது.

”மதிரையில் நடந்த செய்திகள் குன்றக் குரவரும், சாத்தனாரும் சொல்வதற்கு முன் சேரனுக்குத் தெரியாதா?” என்ற கேள்வி சிலருக்கு எழலாம். ஒற்றர்கள் இல்லாது அரசகருமம் என்பது என்றுமேயில்லை. ஆனால் இற்றைப் போல் அன்று நடைச்செலவு எளிதானதல்ல. மதுரையை எரித்து 14 ஆம் நாள் பகற்பொழுதில் கண்ணகி செங்கோடு வந்து சேருகிறாள். அதற்கு இரண்டு, மூன்று நாட்களில் மலைவளங் காணவந்த சேரனிடம் குன்றக் குரவர் செய்தியைச் சொல்லியிருக்க வேண்டும். ஒற்றர்களுக்கும் சேரனையடைய கிட்டத்தட்ட இதே காலம் பிடித்திருக்கும். ஒற்றர் கூறிய செய்தியை கதைமாந்தர் வழியாகவே வெளிப்படுத்துவது சிறப்பென்று இளங்கோ எண்ணியிருக்கலாம். சம காலத்தில் (அதாவது நிகழ்வுகள் நடந்த சில காலத்துள்) காப்பியம் எழுதப்பட்டிருந்தால், புலனாய்வுச் செய்திகளை வெளியிட இளங்கோ போன்றவர் முற்படமாட்டார்.

சிலம்பிற் காணும் உதிரிச் செய்திகள்:

சிலம்புக் காலச் சமயப்பின்னணி பற்றி முன்பே பேசினோம். அதே பொழுது, வரந்தருகாதையை ஒதுக்கினால், இந்தக் காப்பியம் எந்தச் சமயநெறியையும் சிறப்பித்துச் சொல்லவில்லை. வேதநெறி, சிவநெறி, விண்ணவநெறி, ஆசீவகம், செயினம், புத்தம் எனப் பல்வேறு நெறிகளைப் பின்பற்றியோர் இதன் கதைமாந்தராய் வருகின்றனர். பலநெறிப் பாடல்களும், பரவுதல்களும் பேசப்படுகின்றன. ஆசீவகக் கருத்துகள் சிலம்பின் உள்ளே பெரிதும் பொதிந்திருப்பதாக க.நெ. குறிப்பிடுவார். ஆனாலும் எந்த நெறியும் முதல் நெறியாகப் பேசப்படவில்லை. ”தமிழர் என்று பொதுமை” பேசப்புகுந்த காப்பியம் அதன் நோக்கிலிருந்து தவறி மதம் பேசப் புகுமோ?

ஒருசில உதிரிச் செய்திகள் நம் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. முருகன் கோயிலாய்ச் சிலம்பிற் சொல்லப்படும் இடங்களில்(46) செந்திலைத் தவிர மற்றவற்றை இன்னுஞ் சரியாக யாரும் அடையாளம் காணவில்லை. அழகர் மலை(47), திருவரங்கம்(48), வேங்கடம்(49), குயிலாலுவம்(50) (கைலாயம்) பற்றிச் சொல்லும் முதற் தமிழ் நூல் சிலம்பே. மதுராபதித் தெய்வத்தின் விவரிப்பு அப்படியே இன்றைய சொக்கர் -மீனாட்சியின் இருபுடை விவரிப்பாய்த் தெரிகிறது(51).

செங்குட்டுவனின் வடசெலவுக் காரணம்:

உதிரிச் செய்திகளை ஒருபுறந் தள்ளி, செங்குட்டுவனின் வடசெலவுக் காரணம் பற்றி இனி ஆழ்ந்து பார்ப்போம். செங்குட்டுவனின் வடநாட்டுப் போர், உண்மையில், காட்சிக்காதையின் 127-130 ஆம் அடிகள்(52) சொல்வது போல் கல்லெடுக்கத் தான் எழுந்ததா? அன்றிக் காலகாலமாய்த் தமிழரோடு போட்டிபோட்ட மகதத்தை ஒறுக்க எழுந்ததா? (மறக்கவேண்டாம் அது பகைப்புறத்து மகதம்)

இப்படிச் சொல்வதற்குக் காரணங்கள் உண்டு. தமிழகத்து மூவேந்தரிடையே ஒருவருக்கொருவர் நம்பாமை இருந்திருக்கிறது. ஓரிரு தலைமுறைகளுக்கு முன்னால் கொங்குக் கருவூரைப் பிடித்துச் சேரர் தம்பகுதியாய் அறிவித்தது சோழ,பாண்டியருக்கு கடுப்பை விளைவித்திருக்கும். சோழநாட்டு அரசவுரிமையில் செங்குட்டுவன் தலையிட்டு, உறையூரில் தன் மைத்துனனை ஆட்சிக்கு அமர்த்தியது புகார் வேந்தனுக்குப் பகைமையைக் கிளப்பிவிட்டிருக்கும். வேளிருக்கிடையேயும் குழப்பம் இருந்திருக்கலாம். ”எப்போதெல்லாம் உள்நாட்டில் சிக்கல் ஏற்படுகிறதோ அப்போது, வெளிநாட்டைக் காரணங் காட்டி அவரை நோக்கிப் படையெடுக்க வைத்து உள்நாட்டினரை அமைதிப் படுத்துவது காலகாலமாய் பல்வேறு அரசுகளுக்கு உள்ள பழக்கம் தானே?” இற்றைக் காலத்தும் இத்தகைய தடந்தகைகள் (strategies) இருக்கின்றனவே?

எனவே முன்னே செங்குட்டுவன் தந்தை சேரலாதன் காலத்தில் வடக்கே படையெடுத்தது(53), இப்பொழுது வடபுலத்தார் செயலைப் பெரிதுபடுத்துவது என எல்லாமே செங்குட்டுவனைப் பொருத்த மட்டில் வேறு அரசியற் காரணம் காட்டுகின்றன. செங்குட்டுவனுக்கு வந்த உளவுச் செய்திகள் பலவாக இருந்திருக்கலாம்; அவன் வடநாட்டுச் செய்திகளை அறிவதில் கவனத்தோடு இருந்திருக்கிறான்(54). கண்ணகிக்குக் கல் கொள்ளுவது, வடநாட்டுப் படையெடுப்பிற்கான சாக்கா? - என்ற எண்ணம் சிலம்பை ஆழ்ந்து படிக்கும் யாருக்கும் எழாது போகாது. அவனுடைய சூளுரையும் இந்த எண்ணத்திற்குப் பின்புலம் காட்டுகிறது(55).

எடுகோள்கள்:

43.குட வஞ்சிக்கான வஞ்சிக் காண்ட ஆதாரங்கள்: .காட்சிக்காதை 9,34,148,174,180, .கால்கோட்காதை 46,50,79,99, நீர்ப்படை காதை 113,149,256, நடுகற் காதை 4,147,196, வாழ்த்துக் காதை உரைப்பாட்டு மடை (இருமுறை). 11,14,28 ஆம் பாட்டுக்கள்.
44. மயிலை சீனி வேங்கடசாமி “தமிழுக்கு வழங்கிய கொடை” - ”14. ஆரியப்படை கடந்த அரசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன் - செந்தமிழ்ச்செல்வி சிலம்பு -46”, பக். 172-179”, 19. ஆரியப்படையும் யௌத்தேய கணமும் - கல்வெட்டுக் கருத்தரங்கம் 1966”, பக்.201-209, வெளியிடுவோர்: எம்.வெற்றியரசி, மனை எண் -9, கதவு எண் -26, ஜோசப் காலணி, ஆதம்பாக்கம், சென்னை 600088, 2001.
45. நன்கலன்
புனைபவும் பூண்பவும் பொறாஅ ராகி
வார்த்திகன் தன்னைக் காத்தனர் ஓம்பிக்
கோத்தொழில் இளையவர் கோமுறை அன்றிப்
படுபொருள் வௌவிய பார்ப்பான் இவன் என
இடுசிறைக் கோட்டத்து இட்டனராக அதுகண்டு
மையறு சிறப்பின் ஐயை கோயில்
செய்வினைக் கதவம் திறவாது ஆதலின்
மறவேல் மன்னவன் கேட்டனன் மயங்கிக்
கொடுங்கோல் உண்டுகொல் கொற்றவைக்கு உற்ற
இடும்பை யாவதும் அறிந்தீம் என்னென
கட்டுரை காதை (98-112)
46.சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன் கை வேலன்றே
- குன்றக்குரவை 8
47. காடுகாண் காதை 91
48. காடுகாண் காதை 35-40,
49. காடுகாண் காதை 41-51
50. நடுகற் காதை 102
51. சடையும் பிறையும் தாழ்ந்த சென்னிக்
குவளை உண்கண் தவளவாள் முகத்தி
கடையெயிறு அரும்பிய பவளச்செவ் வாய்த்தி
இடைநிலா விரிந்த நித்தில நகைத்தி
இடமருங் கிருண்ட நீல மாயினும்
வலமருங்கு பொன்னிறம் புரையும் மேனியள்
இடக்கை பொலும்பூந் தாமரை யேந்தினும்
வலக்கை அம்சுடர்க் கொடுவாள் பிடித்தோள்
வலக்கால் புனைகழல் கட்டினும் இடக்கால்
தனிச்சிலம்பு அரற்றுந் தகைமையள் பனித்துறைக்
கொற்கைக் கொண்கன் குமரித் துறைவன்
பொற்கோட்டு வரம்பன் பொதியிற் பொருப்பன்
குலமுதற் கிழத்தி
- கட்டுரைக் காதை 1-13
52. புன்மயிர்ச் சடைமுடி புலரா உடுக்கை
முந்நூல் மார்பின் முத்தீச் செல்வத்து
இருபிறப்பளரொடு பெருமலை யரசன்
மடவதின் மாண்ட மாபெரும் பத்தினிக்
கடவுள் எழுதவோர் கல்தாரான் எனின்
- காட்சிக் காதை 127- 130
53. நும்போல் வேந்தர் நும்மோடு இகலிக்
கொங்கர் செங்களத்துக் கொடுவரிக் கயற்கொடி
பகைப்புறத்துத் தந்தனர் ஆயினும் ஆங்கு அவை
திகைமுக வேழத்தின் செவியகம் புக்கன
கொங்கணர் கலிங்கர் கொடுங்கருநாடர்
பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர்
வடவா ரியரொடு வண்டமிழ் மயக்கதுன்
கடமலை வேட்டம் என் கட்புலம் பிரியாது
கங்கைப் பேர்யாற்றுக் கடும்புனல் நீத்தம்
எங்கோ மகளை ஆட்டிய அந்நாள்
ஆரிய மன்னர் ஈரைஞ்ஞூற்றுவர்க்கு
ஒருநீ யாகிய செருவெங்கோலம்
கண்விழித்துக் கண்டது கடுங்கட் கூற்றம்
இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய
இது நீ கருதினை யாயின் ஏற்பவர்
முதுநீர் உலகில் முழுவதும் இல்லை
- காட்சிக் காதை 132-167
54. வியம்படு தானை விறலோர்க் கெல்லாம்
உயர்ந்தோங்கு வெண்குடை யுரவோன் கூறும்
இமையத் தாபதர் எனக்கீங் குணர்த்திய
அமையா வாழ்க்கை அரைசர் வாய்மொழி
நம்பா லொழிகுவ தாயி னாங்கஃது
எம்போல் வேந்தர்க் கிகழ்ச்சியுந் தரூஉம்
- கால்கோட் காதை 7-12
55. இமையத் தாபதர் எமக்கு ஈங்கு உணர்த்திய
அமையா வாழ்க்கை அரைசர் வாய்மொழி
நம்பால் ஒழிகுவது ஆயின் அஃது
எம்போல் வேந்தர்க்கு இகழ்ச்சியும் தரூஉம்
வடதிசை மருங்கின் மன்னர்தம் முடித்தலைக்
கடவுள் எழுதவோர் கற்கொண்டு அல்லது
வறிது மீளும் என் வாய்வாளாகில்
செறிகழல் புனைந்த செருவெங் கோலத்துப்
பகையரசு நடுக்காது பயங்கெழு வைப்பிற்
குடிநடுக் குறூஉம் கோலேன் ஆகு என
கால்கோட் காதை 9-18

அன்புடன்,

இராம.கி.

No comments: