”ஆபத்தி”ற்கான இணைத் தமிழ்ச்சொல்லைத் தமிழ்ச்சொல்லாய்வுக் குழுவில் ஒரு முறை கேட்டிருந்தார். கொடுக்கப்பட்ட வடிவில் பார்த்தால், ஆபத்து என்பது சங்கதச் சொல் தான். (ஆனால் அதற்குள் தமிழ்ச்சொல் வடிவம் புதைந்து கிடக்கிறது. சற்று முயன்றால் அதைக் காணலாம்.) இவற்றை விளக்க முன் வந்தால் பலரும் அதைக் கேட்கத் தயங்கலாம் என்று எண்ணியே, தன்னேர்ச்சி என்று மாற்றுச் சொல்லைப் பரிந்துரைத்த போது, என் விளக்கம் தவிர்த்தேன். ஆபத்தை உரோமனெழுத்தில் aapad என்று எழுதுவார். தமிழொலிப்பில் aabaththu ஆகும். aa-pad எனப் பிரித்தால், உள்ளுறைந்து கிடக்கும் தமிழ்ச்சொல் விளங்கி விடும்.
”என்ன ஆச்சு? உன்னைக் காணமுடியலியே? வகையாய் மாட்டிக்கிட்டியா?” என்று நண்பர் ஒருவரிடம் கேட்கிறோமென வையுங்கள்.. “எக்குத் தப்பான நெலை. ஆப்பட்டுக் கொண்டேன்”, என்று விடை சொல்கிறார். “அகப்பட்ட” நிலையே சற்று திரிந்து, நமக்கு ஆப்பட்டதாய், ஆபத்தாய் தோற்றும். ஆப்பு என்பது அகப்பின் திரிவு தான். ஆப்பில் சிக்க குரங்கின் வால் போன்ற சொலவடையை எண்ணிப் பாருங்கள். அக என்பது ஆ என்று எப்படித் திரிகிறது என்பது அடுத்த கேள்வி. அகல மரத்தை ஆல மரம் என்கிறோமே? அதுபோல், ”அகப்பட்டு” என்பது ஆப்பட்டு என்று பேச்சுவழக்கில் திரியும். தமிழில் அகப்பட்டு என்பது வினையெச்ச வடிவம். அதன் பெயர் வடிவம் அகப்பாடு என்றாகும். (அகப்பாட்டிற்கு அகந்தை, ego என்று வேறு பொருளுமுண்டு.)
அகப்பட்டு/அகப்பாடு என்பதை ஆபத்து என்ற பெயர்ச்சொல்லாய் மாற்றிச் சங்கதம் பயன்கொள்ளும். வடக்கே போகப் போக, பல சொற்களில் டகர ஒலி தகரமாய்த் திரியும். (இலையைக் குறிக்கும் இன்னொரு தமிழ்ச் சொல்லான பட்டம் வடக்கே பத்ரமாகும்) ஆபத்து என்பது சங்கதம் தழுவிய இந்திய மொழிகளில் உண்டு. ஆனால், இந்தியாவிற்கு வெளியிலுள்ள மற்ற இந்தை யிரோப்பியன் மொழிகளில் கிடையாது. அதுவே இச்சொல் தமிழியல் மொழிகளிலில் இருந்து கடன் வாங்கப்பட்டது என்பதை உணர்த்தும்.
ஆபத்து என நாமின்று புழங்கலாமா? - என்று கேட்டால் வேண்டாம் என்பேன். அகப்பாடும் (அகந்தை, ego) வேறு பொருளில் தான் பெரிதும் அறியப்படுகிறது. எனவே தான் ”தன்னேர்ச்சி” நமக்குப் போதும் என்கிறேன்.
விபத்து என்பதில் வரும் வி என்பது வீழ் என்பதன் திரிவு. பத்து என்பது பட்டு என்பதன் திரிவு.
2 comments:
ஆகா! இப்படிப்பட்ட விளக்கங்களையெல்லாம் உங்களால் மட்டும்தான் தர முடியும் ஐயா!
சிறியேன் என்னால் இயன்ற வரை அயற்சொல் தவிர்த்து எழுதி வருகிறேன். என்னுடைய அந்தப் பழக்கத்துக்கு அடிக்கடி முட்டுக்கட்டையாய் வரும் சில சொற்களில் ‘ஆபத்து’ம் ஒன்று. ஆப்பட்டுக் கொள்வதால் நேர்வது ஆபத்து, வீழ்பட்டுப் போவதால் ஏற்படுவது விபத்து என்பது பொருத்தமாகத்தான் இருக்கிறது ஐயா! மிக்க நன்றி!
அப்போ "நான் பெரியதொரு தன்னேர்ச்சியில் அகப்பட்டுக்கொண்டேன்" எனலாமா?
Post a Comment