Monday, December 06, 2021

வணர்சுரி ஐம்பாலும், தோளும் - 4

இனி அகம் 152 இன் 4 ஆவது அடிக்குப் போவோம்.

நுண்கோல் அகவுநர்ப் புரந்த = இசை நடத்துநரைப் புரந்த. 

இற்றைக் காலத்தில் பல இடங்களில் கருவி இசைஞரை வைத்துச் சேர்ந்திசை (symphany orchestra) நிகழ்ச்சிகள் நடக்குமே? பார்த்திருக்கிறீர்களா? இவற்றில், சிறுகோல் கொண்டு மேலுங் கீழும் இசைக்கேற்ப ஆட்டி, கட்டளைகளைக் குறிப்பால் இசைநடத்துநர் உணர்த்துவாரே? அது நினைவிற்கு வருகிறதா? அவ் உணர்த்தல் ஒருவர் அகவுவது போலவே இருக்கும். ஒருவர் இன்னொருவரிடம் வாயாற் பேசினாற் தான் உண்டா? பிரம்பாற் பேசக் கூடாதா? இப்படி அகவும் இசைநடத்துநர் (conductor) அக்காலத்திலும் நம்மூரில் இருந்தார் போலும். பரணருக்கு மிகவும் பிடித்த. இப்பாடலோடு இணைத்துக் காணத்தக்க அகம் 208 ஆம் பாடலிலும் ”நுண்கோல் அகவுநர்” எனும் சொல்லாட்சியைப் பரணர் பயன்படுத்துவார். 

பேரிசைச் சினங்கெழு தானை = பெரும்புகழும் அடுங்கொற்றும் [வெற்றிக்காக, அடுத்துவருங் குணம் கொற்றமெனும் ஆக்குமம் (aggression) ஆகும்.] நிறைந்த படை (இங்கே சினத்தைக் கோவமெனாது, போரில் வெற்றியுறக் கொள்ளுங் குணமெனக் கொள்ளவேண்டும். கொல்லெனும் வேர்வழிப் பிறந்த சொல் கொற்றாகும். அதனினும் எழுந்த சொற்கள் கொற்றம், கொற்றவன், கொற்றவை போன்றனவாகும். கொற்றெனும் சொல்லின் பொருளை மறந்து, ”ஆக்கிரமிக்குங் குணம்” என்று சங்கதங் கலந்தே இக்காலத்தில் ஆக்குமத்தைச் சொல்கிறோம்; கொற்றம், ஆக்குமம் எனும் வீரக் குணத்திற்கான தமிழ்ச் சொற்களை நாம் மறந்துவிட்டோம். கொற்றவையை விழுந்து விழுந்து கும்பிடும் ஊரில் கொற்றெனுஞ் சொல்லே மறக்கடிக்கப் பட்டது பெரும் விந்தை தான். அந்த அளவிற்கு வேதமறுப்புக் கொல்லாமைச் சமயங்களில் நாம் ஆழ்ந்துவிட்டோமோ, என்ன?) 

இரங்கு நீர்ப்பரப்பின் கானலம் பெருந்துறை = ஓசையிடும் நீர்ப்பரப்பாலான காடுநிறைக் கோடிக்கரைத் துறை. பிச்சாவரம், கோடிக்கரை போன்ற சோழர் துறைகளிலும், எர்ணாகுளம், ஆலப்புழை போன்ற சேரர் துறைகளிலும், இடைவிடா மெல்லிய சலசலப்போடு குற்றலைகள் கழிக்கரைகளில் மோதி யிருக்கும். இடையிலா ஓசையிடலே இரங்கலாகும். குற்றலைகளைக் காணாது இரங்கலோசையாலும் ”கழிக்கானலை” உணரலாம். உயரோதம் (High tide), தாழோதம் (Low tide) ஆகிய இரண்டிலும் இரங்கலோசையுண்டு. இரங்கலையில் இருந்து ஆழிப்பேரலை வரை எழுச்சியும், அகற்சியும், வீச்சும், பருவமும், ஓசையும் பலதரப் பட்டன. இதற்கான சொற்கள் சங்க இலக்கியங்களில் விரவியுள்ளன. யாராவது இவற்றைத் தேடி யெடுத்துப் போட்டால் தமிழில் பெருங்கடல் கிறுவு (oceanography) நூலை எழுத முடியும்.

”தனம்தரு நன்கலம் சிதையத் தாக்கும் சிறுவெள் இறவின் குப்பை அன்ன” என்ற வரிகள் சூழியல் (ecology), கடல்விலங்கியலில் (marine biology) பரணரின் கேள்வியறிவைச் சொல்லும். இவ்வரிகளைப் புரிந்து கொள்வதிற்றான் ctamil இல் முரண் பேச்சு எழுந்தது. ”பரணர் ”கப்சா” விடுவதாய்ச் சிலர் நினைத்தார் போலும். (சங்க இலக்கியத்தை மதியாதோர் இன்றும் நிறைய உள்ளார்.) பொறுமையோடு சிச்சிறிதாய் இவ்வரிச் சொற்களை அவிழ்ப்போம். பொதுவாகப் பாடல்களை விளக்கும்போது சொல் சொல்லாக நான் விவரிப்பது இல்லை. ஒரு தொடருக்கு என்று நேர்பொருள் சொல்லவே விழைவேன். இங்கு அவ்வழக்கத்திலிருந்து நான் மாறுபடுகிறேன். 

”தனத்திற்குத்” தங்கமெனும் விதுப் பொருளினும் செல்வமெனும் பொதுப் பொருளே இங்கு போதும். பேரரசுச் சோழர் காலத்திலும் தன அதிகாரி என்பார் தங்கத்தை மட்டும் கையாள்பவரல்லர். சோழ அரசின் செல்வங்கள் எல்லாமும் கையாள்பவர் அவர். பொ.உ.மு.135 - பொ.உ.150 வரை மிளகுக் கறி, மணிகள், முத்துக்களைத் தேடி, இவண் வந்த யவனர் [கிரேக்கரும், உரோமானியரும், அவர் தாக்கம் பெற்ற பலர்], சோனகர் [அரபியர். ”சோனகரும்”, ”யவனரும்” ஒருவருக்கொருவர் ஊடாடியே தமிழகம் (Damirica) வந்தார்] சீனர் [இவர் பற்றிய ஆய்வு தமிழகத்திற் குறைவு. அதேபொழுது, அழகன்குளத்திற் சீனரின் பீங்கான் துண்டுகள் கிட்டியுள்ளன] ஆகியோரின் கப்பல்கள் தமிழகத்தில் எங்கெலாம் துறை கொள்ளும்? சங்க காலத்தில் கடல் வாணிகம் எப்படி யிருந்தது? - என்ற கேள்விகளுக்கு நம்மிடை சரியான விளக்கங் கிடையாது. 

இந்த வணிகத்திற்குச் சான்றாய், பட்டினப்பாலையை மட்டும் எத்தனை நாட்களுக்கு நாம் சொல்லிக் கொண்டிருப்பது? பொதுவாக, நம்மூரிற் கடல் ஆய்வு செய்யும் ஆட்களை விரல் விட்டு எண்ணலாம். இப்போதைக்கு நண்பர் ஒரிசா பாலுவை விட்டால் நம்மிடம் ஆளில்லைபோல் தெரிகிறது. நம் தொல்லாய்வுகள் குறைப்படும் புலம் இதுவே. இதற்கு எக்கச் சக்கப் பணமும், நிதி நல்கைகளும் வேண்டும். தமிழ் வளர்ச்சித் துறை கண்டு கொள்ளுமா? 100 கோடி உருபாயைச் செலவு செய்து தமிழ்த் தாய்க்குச் சிலை நிறுவுதற்கு மாறாய் இதைச் செய்யலாமே?. எந்தக் கட்சியார் நம் சொல்லைக் கேட்பார்? ”சிலை வைப்பது, மண்டபங் கட்டுவது, தமிழ் வாழ்க - என்று பதாகை எழுப்புவது” என்பவற்றை ஏன் அளவோடு செய்யமாட்டேம் என்கிறோம்?. 

அடுத்து கலமெனும் சொல். கல்லப் (=தோண்டப்) பட்டது கலம். ஆங்கிலத்தில் dug-out canoe. தோணியும், தொள்ளையுங் கூடத் ”தோண்டற்” பொருளின. குயவன் தோண்டியதும் தோண்டியே. களிமண்ணைத் தோண்டிப் பொருள்களைக் கொள்வதற்கும், மரந்தோண்டி நீரைக் கடப்பதற்கும் பயன்பட்ட சொல் கலமாகும். பின்னால் உண்கலன், கொள்கலன், அணிகலன், படைக்கலன், அறைகலன், மென்கலன் என்று பொருட்பாடு விரிந்தது. கலமென்பது, வளர்நிலையிற் dug-out canoe வை மட்டும் குறிக்காது, பல்வகைக் கடல் ஓடங்களையும் குறித்தது. மரத்தோணி என்பது 2,3 பேர் போகும் அளவானது. ”தனம்தரு நன்கலம்” என்று சிலர் தோணியைச் சொல்லார். தோணியைப் புரட்டிப் பாசி, ஒட்டுண்ணிகள், சிப்பி உயிரிகள் (barnacles) போன்றவற்றைச் சுரண்டியழித்துப் பேண முடிவதாலும், தோணியைச் சிதையாமற் பலகாலம் காப்பாற்ற முடிவதாலும் இங்கு தோணி பேசப்பட வில்லையென உறுதியாய்க் கூறலாம்.  

அடுத்ததாய், மரத்தோணிகள் மட்டும் நீர் கடக்கப் பயனுறவில்லை. மிதக்கும் புற்கட்டுகளும் இதற்குப் பயனுற்றன. குறிப்பாகக் கோரைப்புற் கட்டுகள். வளைபொருள் சுட்டும் கொடுக்குப் புற்களைக் கொறுக்குப் புற்களென்றும் அழைத்தார். கொடு>கோடு>கோறு>கோறை>கோரை என்றும் இச்சொல் திரியும். (நம்மூரில் பலவிடங்களில் - சென்னை வேளச்சேரிக்கு அப்புறம் பள்ளிக்கரணை போகும் வழியில் சதுப்பு நிலம், சிதம்பரம்-சீர்காழி வழியில் கொள்ளிடந் தாண்டி வரும் தைக்கால், திருநெல்வேலி-செங்கோட்டை சாலையில் சேரன்மாதேவிக்குச் சற்று முந்தையப் பத்தமடை - எனப் பல பகுதிகளிற் கோரை செழித்து வளர்கிறது. 

கோரைகளிற் கனம், சன்னம், கோலெனப் பல்வேறு விதப்புகளுண்டு.) கோரைப்புற் கட்டுகளைப் புணைத்துச் (>பிணைத்து) செய்தது புணையாகும். ”கொழுங்கோல் வேழத்துப் புணை” என்று அகம் 186-12 இல் இதே பரணர் சொல்வார். கொழுங்கோல் = கொழுத்தகோல். வேழம் = கொறுக்கம்புல் தட்டை. (வெள்ளைநார்த் தட்டை வேழமாகும். இது ஒரு வகையான நாணல். வேழம் என்ற சொல்லைக் கரும்பிற்கும் நாம் பயன்படுத்துவதாற் குழம்புகிறோம்.) ”புணை” என்ற சொல்லின் கீழ் 38 இடங்களுக்கு மேல் சங்க காலக் குறிப்புகள் உண்டு. அவற்றை ஆய்ந்தால் பலன் கிடைக்கும். 

எகிப்து, சிந்து, சுமேரிய, அசிரிய, பாபிலோனிய. பொனீசிய, அஸ்டெக், மாய, இங்க்கா, (ஈசுடர் தீவு போன்ற) பாலினீசியப் பழநாகரிகங்களிற் புழங்கிய reed-ship, read boat ஆகியவை நம்மூரிலும் ”புணை”ப் பெயரில் இருந்தன. (அழகன் குளத்தில் கண்டெடுத்த, ஓட்டுச் சில்லில் இருந்த, கீற்றோவியமும் புணையைக் காட்டியது.) புணைநுட்பியல் மேற்சொன்ன நாடுகளின் தனித்தனியே எழ வாய்ப்பில்லை. எங்கு முதலில் இது எழுந்ததென்று இன்னும் அறியவில்லை. இவற்றைக் கட்டும் நுட்பம் சில நாடுகளில் மட்டும் இன்று எஞ்சியுள்ளது. இவை கொண்டு பெருங்கடல்களையும் மாந்தர் ஒருகாலத்திற் கடந்திருக்கலாம் என ஆய்வாளர் எண்ணுகிறார். இற்றைக் கப்பல் நுட்பியல் புணைநுட்பியலில் இருந்தே வளர்ந்திருக்குமென எண்ணுகிறார். 

Pliny யின் நூலில் (Historia Naturalis, Book VI, XXIII, 82) அலெக்சாண்டிரியாவைச் சேர்ந்த Eratosthenes தன் நூலிற் கூறியதாகச் சொல்லுவார். “It begins at the Eastern sea, and lies extended over against India east and west. The island in former days, when the voyage to it was made with vessels constructed of papyrus and rigged after the manner of the vessels of the Nile, was thought to be twenty days' sail from the country of Prasi, but the distance came afterwards to be recokened at a seven days' sail, according to the rate of speed of our ships. The sea between the island and India is full of shallows not more than six paces in depth, but in some channels so deep that no anchors can find the bottom.For this reason ships are built with prows at each end to obviate the necessity of their turning about in channels of extreme narrowness.” எராட்டொசுதெனெசு என்ற யவன நூலகர் சங்ககாலத்தின் தொடக்கத்திலிருந்தார்.   

prasii என்பது கிழக்கேயுள்ள மகததேசமாகும். (”திசைகள்” தொடரில் prasii யின் சொற்பிறப்பு சொன்னேன்.) மகதப் பெருந்துறை தாமலித்தி. அங்கிருந்து கொறுக்குப் புற்களாற் கட்டிய புணையில் 20 நாட்கள் பயணித்தால் இலங்கை யாழ்ப்பாண மாவட்டம் வந்துசேருமென்றும், உரோம மரக்கப்பல் வழி 7 நாட்கள் ஆனதென்றும் மேலேயறிகிறோம். கொடுங்கோல் வேழத்துப் புணை நம்மூரில் இருந்ததை Pliny யின் குறிப்பு கட்டாயம்  உறுதி செய்கிறது. நாம்தான் நம் இலக்கியங்களைக் கவனிப்பதில்லை; மற்றோரும் வடவரைக் கவனிப்பது போல் நம்மை மதிப்பதில்லை. 

நார்வே நாட்டுத் தோர் அயர்தால் (Thor Heyerdahl) புணைப்பயணங்கள் பற்றிப் பேசுவார். (Early man and the ocean, Vintage books, 1980, Ra expeditions, A Signet book from New American Library, 1971) உலகம் வியக்கிறது. அவரைப் பார்த்து நம்மூரில் தேட மறுக்கிறோம். (மாலத்தீவிலும் அவர் ஆய்வுசெய்தார். (The Maldive Mystery, Adler&Adler, 1986) பழந்தீவு பன்னீராயிரம் என பெயர் சொல்லி என்ன பயன்? கூடப்போய் அங்கு ஆய்ந்தோமா?  இந்தோனேசியாவுக்கோ, சிம்பாப்வேக்கோ, பாஃக்ரினுக்கோ புணைகளை ஓட்டிப் பார்த்தோமா? என்ன சோகம் பாருங்கள்? 

அடுத்துத் தோணியையும், புணையையும் கலந்து செய்ததாய் ஓர் ஓட(raft) நுட்பியல் வந்தது. அடித்தண்டோடு (நெஞ்செலும்புகளைப் போன்று) 2 பக்கம் மரச்சட்டங்களைப் பொருத்திக் குவியும் கூட்டுச் சட்டகமும் வந்தது. (hull ற்கும் கூட்டிற்கும் சொற்பொருட் தொடர்புண்டு. நம்மூர் சீரை>சீலையே sail ஆனது. கப்பல் நுட்பியலின் பல சொற்களுக்கும் தமிழுக்குமுள்ள ஆழ்தொடர்பைப் பாவாணர் சொல்வார்: இவற்றை விரித்தால் அது தனிக்கட்டுரையாகும்.) முடிவாக (நெஞ்சாங்கூட்டைத் தசைகள், தோலால் மூடுவதுபோல்) நீர் நுழையாதபடி மரப் பலகைகளை இழைத்துப் பொருத்தி, கயிறு, மர ஆணிகளாற் (அப்புறம் இரும்பாணிகள்) கூட்டை மூடி/கவ்வி/கப்பிச் செய்யும் கப்பல் நுட்பியல் உலகெங்கும் பரவியது (”கப்பல்” சொல் எப்படியெழுந்தது, இப்போது தெரிகிறதா?)

பொ.உ. 1421 இல் சீன மாவேந்தரின் ஆணையால் உலகுசுற்ற முற்பட்ட சீன மாநாய்கன் செங்ஃகோ, தன் கலங்களைச் செய்யும் ஏவலை (order) கோழிக் கோட்டிற்கு அருகிற் கொடுத்து (பின்னால் வாசுகோடக் காமாவும் இங்கு தான் வந்திறங்கினார். சாலியாற்றங்கரை அவ்வளவு சிறப்புப் போலும்.) ஓராண்டு இருந்து கப்பல்களைத் தனக்கு வேண்டியபடி செய்து போனானாம். அவ்வளவு தெளிவான கப்பல் நுட்பம் தமிழரிடம் (அப்பொழுது சேரலர்>கேரளர் என்பார் வட்டாரத் தமிழ் பேசினார்.) இங்கிருந்தது. நுட்பந் தெரிந்தவர் சொல் உலகு எங்கும் பரவாதா? 

(இந்தையிரோப்பிய மொழிகளில் ஒளிந்து கிடக்கும் ”கப்பற்” சொல்லின் மூலம் யாருக்குத் தெரிகிறது, சொல்லுங்கள்? ship (n.) Old English scip "ship,boat," from Proto-Germanic *skipam (cognates: Old Norse, Old Saxon, Old Frisian, Gothic skip, Danish skib, Swedish skepp, Middle Dutch scip, Dutch schip, Old High German skif, German Schiff), "Germanic noun of obscure origin" [Watkins]. Others suggest perhaps originally "tree cut out or hollowed out," and derive it from PIE root *skei- "to cut, split.") 

மரக்கலம் பொதுவாக மரத்தில் கல்லியதென்றும், விதப்பாக மரச் சட்டங்களின் மேற் கப்புகளை வைத்து மூடும் நுட்பியலாற் செய்ததென்றும் பொருள்படும். (கப்பியது கப்பல்). கொண்டுசெல்லும் கொண்மை (carrying capacity) குறைவு ஆனதால், மரத்தோணி நுட்பியல் பெரிதாய் வளரவில்லை. ஆனால், எகிப்திய, சுமேரிய, இங்க்கா சான்றுகளைப் பார்க்கையில் 100 பேர் பயணிப்பதற்கும், பெருஞ்சுமை கொண்டுசெல்லும் அளவிற்கும் புணை நுட்பியல் எளிதாய் வளர்ந்தது புரிகிறது. 

அலைகளில் ஏறி இறங்கையில் எந்தப் புனைக்கும் கட்டாயங் கவனிக்க வேண்டியது, விலாங்குப் பகுதியும் (bow; விலாங்கு மீனைப் பார்த்து இப்பெயர்), திரிங்கைப் பகுதியும் (stern; திரிங்கை>திரிக்கை> திருக்கை மீன் பார்த்து இப்பெயர்) சேர்த்துப் புணையின் பிறைவடிவம் குலையாதிருப்பது தான். ஏதோ வகையிற் புணையின் கட்டுமானஞ் சரிந்தால், விலாங்கோ, திரிங்கையோ முறிந்து புணை முற்றிலுஞ் சிதைந்து போகும்; அல்லது புணையின் (வலது கை) திரிப் பக்கம் (starboard side) நீரில் அமிழ, (இடது கைப்) புகற் பக்கம் (port side) உயர்ந்து நிற்கும் (புணை கட்டிச் சோதித்த தோர் அயர்தாலின் Ra I - இல் இந்த விளைவு நடந்தது; Ra I - இன் திரிங்கையும் முறிந்து, திரிப் பக்கமும் நீருள் அமிழ்ந்தது.) 

மற்றபடி பெருங்கடற் சுறாக்கள், திமிங்கிலங்கள், இறாக்கள், பல்வேறு கடல் உயிரிகள் புணைகளைச் சிதைத்ததாய் இதுவரை எந்தக் குறிப்புமில்லை. தோணி, புணை, மரக்கலம் என்ற மூன்றுமே பாய்களைக் கட்டிக் காற்றின் விசையாலும், நகர்த்துப் பட்டைகள் (conveyer belts) போலியங்கும் கடல் நீர் ஓட்டங்களாலும், துடுப்புகள் வழி மாந்தவுழைப்பாலும் கடற் பயணங்களைச் செய்தன. படகு, பஃறி, பாதை, பாரதி, பாறு, புணை, பகடு, பட்டிகை, படுவை, மிதவை, வங்கம், அம்பி, போதம், மதலை, யானம், நாவாய், திமில் என்பவற்றில் எவ்வெவை தோணி, புணை, மரக்கலம் என்ற வகைப் பாட்டை நான் இன்னுந் தெளியேன். தோணிகள், புணைகளைப் போன்று கட்டமை வழுக் (structural defect) கொண்ட மரக்கலங்களும் அலைகளிற் சிக்கிக் குலைந்து போகலாம். அடுத்த பகுதியில் கலஞ்சிதைவு பற்றிப் பார்ப்போம்.

அன்புடன்,

இராம.கி.


No comments: