Sunday, December 05, 2021

வணர்சுரி ஐம்பாலும், தோளும் - 3

 தித்தன் என்பான் உறையூர்ச் சோழன். தித்தன் = நெருப்பானவன், ஒளி பொருந்தியவன், ஒளிதிகழ்வோன். யா என்பது இருளைக் குறிக்கும் (”யா”வழிச் சொற்பிறப்புக்களை ப.அருளியின் பொத்தகத்திற் காண்க.) இற்றல் = போக்குதல்; யாயிற்றன் = இருளை இற்றுகிறவன் / போக்குகிறவன். யா>ஞா>நா திரிவில் யாயிற்றனை ஞாயிற்றனாகவும், நாயிற்றனாகவும் பலுக்கலாம். இருள் போக்கும் சூரியனை ஞாயிறென்பர். செங்குட்டுவனின் தாய்வழிப் பாட்டனான, உறையூர்ச் சோழனைத் திகழொளி ஞாயிற்றுச் சோழனென்று சிலம்பு புகலும். 

யாயிற்றன்>ஆயிற்றன்>ஆதிற்றன்>ஆதித்தன்>ஆதித்த என்ற சொல் வடபுல மொழிகளில் சூரியனைக் குறித்தது. ஆதித்தனின் முதற்குறையாய் தித்தன் தமிழில் மீந்து நிற்கும். பரணர் பாடிய சமகால அரசரை ஒருங்கே வைத்துப் பார்த்தாற் தித்தனே, செங்குட்டுவனின் தாய் வழித் தாத்தனான ஞாயிற்றுச் சோழனென முடிவு செய்யலாம். குட்டுவனின் தாய் நற்சோணை. (சோணை = சோணாட்டுக்காரி; பொன் போன்றாள் என்றுஞ் சொல்லலாம். சோணை யெனும் பொன்னாறு மகதத்திலும், பொன்னியெனும் மற்றொன்று சோழ நாட்டிலும் ஓடின. பொன் நிறத்திற்கும் சோழருக்குமான பெருந்தொடர்பை நாமின்னும் உணர்ந்தோமில்லை. ”சோழர்” பெயரைக் கீழே பார்ப்போம்.) அகம் 6-இன் 3,4ஆம் அடிகளைப் பார்த்தால் ஐயை என்பது ஞாயிற்றுச் சோழனின் மகளுக்கு விதுப் பெயராகவும், நற்சோணை என்பது பொதுப் பெயராகவும் இருக்கலாம்.  

இனி பதிற்றுப்பத்தில் ஐந்தாம்பத்தின் பதிகம், 

”வடவர் உட்கும் வான் தோய் வெல்கொடிக் 

குடவர் கோமான் நெடுஞ்சேர லாதற்குச் 

சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன்” 

என்று செங்குட்டுவனைக் குறிக்கும். ”இதில் வரும் மணக்கிள்ளி யார்? தித்தன் எனும் திகழொளி ஞாயிற்றுச் சோழனுக்கு இது எப்படிப் பொருந்தும்?” என்று பார்ப்போம். மருவல்=தழுவல், சேரல். (”மருவுகை” என்பது இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் - ஆங்கிலத்தில் marriage - போயிருக்கிறது.) மரு மகன் / மகள் என்பார் தழுவிச் சேர்த்துக் கொண்ட மகனும் மகளும் ஆவர். மருவற் பொருளில் இன்னொரு சொல் மணத்தலாகும். ஒரு குடும்பம் இன்னொன்றைத் தழுவி உறவு கொள்ளும் நிகழ்வே மணமாகும். (அகம் 86-இன் படி மண்ணுதல் எனும் மஞ்சள் நீராடலும். பூ,நெல் சொரிவதும், வாழ்த்தலுமே மணமாகும்.) மணமகனும் மணமகளும் பந்தங் கொண்ட மகனும் மகளுமாவர். மணமகன்/மணமகள் வீடு, மணவீடு/மருவீடு ஆகும். 

சேரரின் மணவீட்டைச் சேர்ந்தவன், ஐயை/ நற்சோணையின் தந்தை தித்தன் ஆவான். மணக்கிள்ளியின் பொருள் ”சம்பந்தங் கொண்ட கிள்ளி” என்பது தான். (சம்பந்தம் என்பது ”பந்தத்தோடு” சம் எனும் வடமொழி முன்னொட்டுச் சேர்த்தது. வடசொல் ஆண்டு மீண்டுந் தமிழ்ச் சொல்லை இழந்தோம்.), மணக் கிள்ளி எனும் உறவுப் பெயரைப் பதிகம் பாடினோர் இயற்பெயர் ஆக்கி விட்டார். பதிகத்திற்கு புத்துரை எழுதினோரும் இதை உணரவில்லை. சோழன் மணக்கிள்ளி(யின் வழி) நெடுஞ்சேரலாதற்கு ஈன்ற மகன்” என்றே மேலுள்ள அடியைப் புரிந்துகொள்ள வேண்டும். நெடுஞ்சேரலாதற்கு இன்னொரு மனைவி வழி பெற்ற இரு மக்களுண்டு. 

இப்பொழுது ”சோழர் ”எனும் இனக்குழுப் பெயரின் சொற்பிறப்பை நினைவு கொள்ளலாம். பண்டு> பாண்டெனும் சாம்பல்/நீறு எப்படிப் பாண்டியர் (பாண்டு> பாண்டியர்) இனக்குழு அடையாளமோ, (பண்டு> பாண்டு எனுஞ் சொல் பழங்குடிப் பொருளுந் தரும்.) சாரலெனும் சந்தனம், எப்படிச் சேரர் (சாரல்>சாரலர்>சேரலர்) இனக்குழு அடையாளமோ, அப்படி மஞ்சள்/ குங்குமம், சோழர் இனக்குழுவின் அடையாளம் ஆகும். (கொல்>கொழு நிறம்= மஞ்சள்/பொன் நிறம். கொழுவின் திரிவான கோழி, குங்கும நிறங் குறிக்கும். மஞ்சளும் குங்குமமும், நீரக அயனிச் செறிவால் (Hydrogen ion concentration) நிறம் மாறும். கொழு>கோழி>கோழியர் என்பது சோழியராகும். உறையூர் கோழியூராகும். (கோழி யானையைத் துரத்தியது என்பது சுவையாரமான கட்டுக்கதை.) 

இற்றைத் தமிழர் மலையாளிகளிடை நிலவும் நீற்று, சந்தன, மஞ்சள்/குங்குமப் பூச்சு என்பவை இனக்குழுப் பழக்கங்களின் மிச்ச சொச்சமே. (இதை இந்துப் பழக்கமென்பது முற்றிலுந் தவறு. வடவர் இவற்றை விரும்பி அணிவதில்லை. தமிழரைப் பார்த்துப் படியெடுத்து அணிந்து கொள்வர். தமிழரோடு ஈனியல் (genetics) உறவுற்ற ஆத்திரேலியப் பழங்குடியாரும் தம் கொண்டாட்டங்களில் முப்பட்டைத் திருநீற்றை உடல் மேற் பூசிக் கொள்கிறாரே? அவரெலாம் சிவ நெறியாளரா, என்ன? திருநீற்று முப்பட்டை சிவநெறிக்கும் முந்தியது என்று புரிகிறதா?)

சென்னி, செம்பியன் என்பன குடிப் பெயர்கள்; கிள்ளி, வளவன் போன்றன இயற்பெயர் முடிபுகள். தித்தனின் மகன் வெளியனாவான். வெள்ளையன், வெள்ளைச்சாமி, வெள்ளையப்பன் என்கிறோமே அக்கருத்தின் முற்பெயர் வெளியனாகும். இதன் பொருளை ”வெள்ளைப் பிள்ளை” என்னாது, வெளிறிய கருப்பெனக் கொள்ளலாம். பட்டஞ் சூடுமுன் ”வெளியன்” என்பது தித்தன் மகனின் இயற்பெயராய் இருந்திருக்கலாம். ஏதோ காரணத்தால் தித்தனுக்கும் வெளியனுக்கும் மனம் வேறாகி மகன் உறையூரை விட்டு விலகித் தந்தையின் நாட்டுள் வேறெங்கோ இருந்ததைத் தமிழறிஞர் உய்த்திருக்கிறார். 

தந்தையோடு கருத்து மாறுபட்டு நாட்டின் துறைமுகத்தில் ஆண்ட தித்தன் வெளியன் வீர விளையாட்டுக்கள், இசை, நடனக் கூத்துக்களென்றே சிலகாலங் கழித்திருக்கிறான். தத்தனுக்குப் பின், வேற்பல் தடக்கை பெருவிறற்கிள்ளி (பல்வேறு தடங்களில் - வழிகளில் - வேல் வீசுந் திறன்கொண்ட கிள்ளி) என்றும் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி (போர்வை எனும் ஊரின் அரசன்; இற்றை உறையூருக்கு அருகிலுள்ள பேட்டைவாய்த் தலை, போர்வையெனப் பட்டதாம்.) என்றும் அழைக்கப் பட்டு, தித்தன் வெளியன் உறையூரில் ஆண்டிருக்கிறான். நெடுஞ்சேரலாதனின் மைத்துனன் தித்தன் வெளியனே. 

[இங்கொரு இடைவிலகல். மைதுனம் என்பதைப் பலரும் வடசொல்லென்று கருதுகிறார். அது தவறு. முயத்தல்= தழுவுதல். மேற் சொன்ன மருவுதலை ஓர்ந்து பாருங்கள். அதுவும் தழுவுதலே. "வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை போழப் படாஅ முயக்கு” என்பது புணர்ச்சி மகிழ்தல் அதிகாரத்தின் 1108 ஆங் குறள். முயத்தன் என்பவன் தழுவிக்கொண்டவன். அந்தனென்ற தமிழ்ச் சொல் அந்தனன்>அந்தணன் என இன்னொரு ஈற்றை எடுத்தது போல் முயத்தன்> முய்த்தனன்> முயத்துனன்> மைத்துனன் என்றாகியது. முயத்தனின் பேச்சு மொழித் திரிவே மச்சானாகும். ஒரு பெண்ணிற்கு அவள் கணவனும், கணவனுடன் பிறந்தாரும் முயத்துனர் ஆவார். ஓராணிற்கு மனைவியின் உடன் பிறந்தாரும் முயத்துனர் ஆவார். முயத்துனி (மைத்துனி), முயத்துனம் (மைதுனம்) போன்றவையும் முயத்தல் வினையிற் பிறந்த சொற்களே. இச் சொற்களைக் கண்டு நாம் வெட்கப்படத் தேவையேயில்லை]

சேரலாதனும் தித்தன் வெளியனும் ஒருவருக்கொருவர் ஏதோ முரணாற் சண்டையிட்டு போர்க்களத்தில் இறந்ததைக் கழாத்தலையார் பாடினார் (புறம் 62, 368). இவனுக்குப் பின் இவனுடைய இள அகவை மகனோடு (பெரும்பாலும் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆகலாம் என உய்த்துணர்கிறோம்.) பகை கொண்ட 9 அரசருடன் செங்குட்டுவனே போரிட்டு உறையூரை நிலை நிறுத்த உதவினான். இச்செய்திகள் எல்லாம் சிலம்பின் வஞ்சிக் காண்டத்தில் வருவதை அறிய முடியும். இவ்வளவு பொருத்தங்களை உணர்ந்த பிறகாவது, சிலம்புக் காலத்தைச் சங்கம் மருவிய காலமென்று குழம்பாது ஒழியலாம். (ஒரு காலத்தில் இப்படித் தடுமாறிய நான் சிலம்பை ஆழ்ந்து படித்தபின் மாறினேன். சங்ககால ஆய்வுக்குச் ”சிலம்பு” ஒரு திறவுகோலும், சமன்கோல் ஆணியுமாய் இருப்பதை உணர்ந்தேன். இதைப் புதினம் என்போர், தாமுங் குழம்பி மற்றோரையுங் குழப்புகிறார்.)  

”சிலம்பின் காலம்” பொத்தகத்தில் வளநாடு, நாகநாடென 2 பகுதிகளாய் சோழநாடு பிரிந்தது பற்றிச் சொன்னேன். (ஒரு காலத்தில் பாண்டிய நாடும் 5 பகுதிகளாய் ஆளப்பட்டது. பாண்டியருக்குப் பஞ்சவர் என்ற பெயருமுண்டு. சேர நாட்டிலும் பல பகுதிகளுண்டு. செங்குட்டுவனின் சம காலத்தில் 9 பங்காளிகள் இருந்தார்.) சிலம்புக் காலத்தில் நாக நாட்டிற்கு ஒருவனும் வளநாட்டிற்கு ஒருவனுமாய்ச் சோழர் இருந்தார். கண்ணகி நாக நாட்டவள். நாக நாட்டின் கோநகர் புகார்; வள நாட்டின் கோநகர் உறையூர். சிலம்பு, புகாரையும், உறையூரையும் சமமாய்ப் பேசும். நாக நாட்டிற்கும், வள நாட்டிற்கும் பகையென்று சொல்லவியலாது. இருவரும் சோழரே ஆயினும் யார் வேந்தர் என்பதில் முரண்களும், பங்காளிச் சண்டைகளும் இருந்தன. பொதுவாகச் சங்க காலச் சோழருள் ஒற்றுமைக் குறைச்சல் கூடவேயிருந்தது. 

சேர, பாண்டிய நாடுகளில் உட்பகுதிகள் இருந்தும், அவை குடவஞ்சியையும், மதுரையையும் வேந்தர் இடங்களாய் ஏற்றன. (கொற்கையோ, கொங்குக் கருவூரோ தத்தம் தலைநகரோடு முரண்படவில்லை. ஒருமுறை தினமலர் இரா.கிருட்டிணமூர்த்தி ”கொற்கைப் பாண்டியர் மதுரைப் பாண்டியரினும் விட, வேறொரு பட்டவத்தில் கயற்கொடி கொண்டிருக்கலாம்; அசோகர் கல்வெட்டுக்களின் தாம்பபன்னி விவரிப்பு மேற்கு இலங்கையோடு நம் தாமிர வருணிப்பகுதியையும் சேர்த்துக் குறிக்கலாம்” என்று கொற்கையருக்குத் தனியிருப்புக் காட்டுவார்.)

கொங்குவஞ்சி குடவஞ்சிக்கு அடங்கி இருந்ததால் உதியன் உட்குடியும், இரும்பொறை உட்குடியும் ஒருவரையொருவர் மதித்து தம் பொதுவான ஆதன்குடிக்குப் பங்கம் வராது இருந்தார். அதே போல, பங்காளி உறவு முறைகளில் பாண்டியருக்குள் சங்க காலத்தில் தகறாறு இருந்தது போல் தெரியவில்லை. பிற்காலப் பாண்டியரிற்றான் பங்காளிச் சண்டைகள் கூடித் தமிழகம் அடிமைப் பட்டது. பொதுவாக மாமன்/ மச்சான், பங்காளிச் சண்டைகளாலேயே தமிழர் வரலாறு கால காலத்திற்கும் சிதைந்தது. (இன்றும் திராவிடக் கட்சிகளின் பங்காளிச் சண்டைகளால் அதே நிலை.. கன்னடரும், தெலுங்கரும், மலையாளிகளும் பங்காளிச் சண்டை போடுவது மிகக் குறைவே. அவருக்கு இன உணர்வு அதிகம்.) 

தித்தனுக்குத் துறைமுகமாய் பூம்புகார் இருந்திருக்கக் கொஞ்சமும் வழி யில்லை. ஏனெனில் தித்தன் வள நாட்டவன்; புகார் நாக நாட்டைச் சேர்ந்தது. அதே பொழுது கடற்கரையின்றி, வள நாடு நிலத்தால் மூடிய நாடா? - என்பதும் ஐயத்திற்குரியது. வள நாட்டிற்குத் துறைமுகங்கள் உண்டெனில், உறையூரில் இருந்து, தஞ்சை வழி கிழக்கு வந்தால், நாகநாட்டின் தென்பால் எல்லையான நாகைக்குத் தெற்கே அவை தொடங்கியிருக்கலாம். பிற்றை வரலாற்றையுஞ் சேர்த்து நோக்கின், குணக் கடலும், (ஆங்கிலேயர் பெயரிட்ட) பால்க் ஒடுக்கமும் (Palk straits) சந்திக்கும் கோடிக்கரையே வளநாட்டின் துறையாக வாய்ப்புண்டு. (மன்னார் வளைகுடா பால்க் ஒடுக்கத்தின் கீழ் உள்ளது.) 

துருத்தி நிற்கும் கோடிக்கரையை promontory என்று பொதுவாயும், கழிமேட்டு முனை (Point calimere) என விதப்பாயும் ஆங்கிலத்திற் சொல்வார். திருவணைக் கரை, தொல்முது கோடி, தலைஞாயிறு என்றும் இவ்வூர் சொல்லப்பட்டது. கோடிக்கரையின் வணிக வாய்ப்புப் பற்றி Ptolemy யின் நூலும், Pliny இன் நூலும், Periplus of the Erythraean Sea யும் பேசுகின்றன. பெரும் படகுகளும், புணைகளும், மரக்கலங்களும் இத்துறையிற் தொடர்ந்து இயங்கியிருக்கின்றன.  

கோடிக்கரைக்குச் சற்றுமேலே மரைமான்கள் உலவும் மரைக்காடு இருந்தது. தேவார காலத்தில் மறைக்காடெனத் தவறாய்ப் பொருள்கொண்டு வேதாரண்யமாய்ச் சங்கதத்தில் மொழிபெயர்ப்பர். தலை ஞாயிற்றிற்கு மேற்கே கோடிக்காடும் பஞ்சனடிக்குளம் என்ற உப்புக் கடல் ஏரியும், அதன் மேற்கே முத்தூர்ப் பேட்டை அலையாற்றிக் காடுகளுமுண்டு. Mangrove = கழிக் கானல்;  கானற் பயன்பாட்டை ஆலங்கானம், கானப்பேர், மாமல்லைக்குத் தெற்கே மரக்கானம் (சிறுபாணாற்றுப் படையின் எயிற் பட்டினம்) போன்றவற்றால் அறியலாம். 

கானலென்ற பெயருக்குக் கழிப் பொருளுமுண்டு. கோடிக்கரையின் கிழக்கிலும், தெற்கிலும் அலை குறைந்த ஆழமிலாக் கடலேயுண்டு. அங்கங்கிருக்கும் ஆழிடங்களில் வங்கங்களையும், கலங்களையும் (பெருங் கப்பல்களையும்) நங்கூரமிட்டு நிறுத்திக் கப்பற் பொருட்களை படகின் வழி இத்துறையில் இறக்க முடியும். இப்போது 50 ஆண்டுகளுக்கு முன் நாக பட்டினத்திற் கூட இப்படியே பெருங்கப்பல்கள் இயங்கின. (சேரர் முசிறியும், சோழர் புகாருங் கூட இப்படித் தான் இருந்தன. இக்காலத் துறைமுகங்களைப் பார்த்து வேறு விதம் நாம் குழம்பிக் கொள்கிறோம். கடலைத் தோண்டி மண்ணை வாரித் துறையருகே ஆழப் படுத்துவது இக்காலத்து முறையாகும்.) 

ஞாழலும், புன்னையும் நிறைந்த, கோடிக்காடும் தலைஞாயிறும் சேர்ந்த, ”கானலம் பெருந்துறை”க்கு (= காடுநிறைந்த பெருங்கடல் துறை) இராமன் வந்ததாய், அகம் 70 இல் மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளரின் நெய்தற்பாடல் சொல்லும். இவ்வூர் பற்றிப் பல குறிப்புகள் சங்க இலக்கியத்தில் உள்ளன. ஆனால் அவற்றை ஆழ ஆய்ந்தோர் குறைவு. கோடிக்கரைக்கு நேர் தெற்கே சில தீவுகளும் உண்டு. அங்கிருந்து யாழ்ப்பாண மாவட்ட  நாகனார் தீவு (நயினார் தீவு) வரை ஆதிசேது எனும் இயற்கைச்சேது (பாலம்) உள்ளது. அதே போலத் தனுசுக்கோடியில் இருந்து மன்னார் தீவு வரை இன்னொரு இயற்கைச் சேதுண்டு. (இதை இராமர் சேதென்பர். இது மாந்தன் செய்ததாய்ச் சொல்வது வெறுந் தொன்மமே.) கடலடி மட்டத்திலிருந்து பார்த்தால் இராமர் சேதுவினும் ஆதிசேது உயரங்குறைந்தது, கடலுக்குள் இப்போது உள்ளது.). 

இரு சேதுக்களுக்கும் இடைப்பட்ட நிலமே முந்நாளிற் கடல் கொண்ட பாண்டி நிலமாகும். (குமரிக்குத் தெற்கிலும் கடல் நிலங் கொண்டது. மொத்தத்தில் தமிழரிழந்தது இற்றை நிலத்தை ஒட்டிய பெருநிலமே. ஆனால் அதுவொரு கண்டமா? -எனில், இல்லை என்றே இற்றை அறிவியல் சொல்கிறது. எவ்வளவு நிலம் எந்த உகங்களில் அழிந்தது என்பதைப் பெருங்கடல் கிறுவியல் (oceanography) வழி ஆய்வதே சரியான முறையாகும். இப்புலன ஆய்வு முடியாத நிலையில் காத்திருக்கவே நான் விழைவேன்.) இந்நிலத்திற்கும் கிழக்கில் இலங்கையின் மேற்குக் கடல் ஒட்டிய நிலங்களிருந்தன. அவையும் கடற்கோளின் முன் பாண்டி நிலம் தான் (இதை மறந்து, கால காலத்திற்கும் இலங்கை, தீவாயிருந்ததென நாம் எண்ணிக் கொள்கிறோம்.) 

இலங்கையின் மேற்குக் கரை சங்க காலத்திற் பாண்டியரைச் சேர்ந்தது. சிங்களர் எண்ணிக்கையிற் பெருகியது சங்க காலப் பிற்பகுதியில் தான். தவிர, அவரொன்றும் நம்மிருந்து முற்றிலும் வேறானவர் அல்லர்; தமிழ்க் குடியின் பெண் வழியினரே சிங்களர் என்று அவர் வரலாற்றுக் குறிப்புகளே தெரிவிக்கின்றன. கலிங்க விசயன் கூட்டத்திற்கும் தெற்குப் பாண்டியருக்கும் இடைநடந்த மணவுறவுகள் சுவையார வரலாறு; அவற்றை உருப்படியாய் யாரும் ஆயவில்லை. (இலங்கை உரோகண அரசு பாண்டியர் வழியதென்று சிங்கள நூல்களே கூறுகின்றனவாம்.) இற்றைச் சூழ்நிலையின் போகூழும் கொடுமையும் அவற்றை ஆயவும் விடா. தமிழ் மாமனை/ மச்சானை மதியாத சிங்கள மருமகன் சண்டை இன்றுந் தொடர்கிறது.    

கடற்கோளின் பின் (இற்றைப் புதுக்கோட்டை மாவட்டஞ் சேர்ந்த முத்தூர்ப் பேட்டை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கிப் பகுதியான) மிழலைக் கூற்றத்தையும், அதற்குக் கீழுள்ள  முத்தூர்க் கூற்றத்தையும் பாண்டியர் கைப்பற்றினர். மிழலைக் கூற்றமும், முத்தூர்க் கூற்றமும் அன்றிலிருந்து இன்று வரைச் சோழ, பாண்டிய அடையாளங்களைக் கலவையாய்க் காட்டும். இவற்றின் எச்சமாய் முத்துக்கள் விலை போகிய ”முத்தூர்ப்பேட்டை” எனும் பெயரும் விளங்கும் (நம்மூரில் பேட்டையெனிற் பொதுவாக வணிகர் கூடும் ஊராகும்.). கடற்கோளில் தன்னாட்டுப் பரப்பு குறைந்ததால் சோழனிடம் மிழலைக் கூற்றத்தையும், முத்தூர்க் கூற்றத்தையும், சேரனிடம் குண்டூர்க் கூற்றத்தையும் பாண்டியன் வளைத்துப் பறித்தது கலித்தொகை 104.4 ல் கீழ் வருமாறு சொல்லப்படும். 

மலிதிரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின்

மெலிவு இன்றி, மேல்சென்று, மேவார் நாடு இடம்பட

புலியொடு வில்நீக்கி, புகழ்பொறித்த கிளர்கெண்டை

வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்

இக் கூற்றங்களின் பெயர்களைக் கலித்தொகை உரையாசிரியர் வழியாகவே அறிகிறோம். மணிவாசகர் காலத்தில் பரிவாங்கத் தங்கிய  பெருந்துறையும் (ஆவுடையார் கோயிலும்) மிழலைக் கூற்றத்தில் தான் உள்ளது. (பரி வாங்கிய போது இது பாண்டியர் கூற்றம் போலும். ஏனெனில் சோணாட்டுக் கூற்றத்தில் பாண்டி முதலமைச்சர் ஒரு மாதத்திற்கும் மேல் தங்கியது நம்பும் படியாக இல்லை. எனவே மிழலைக் கூற்றமும், முத்தூர்க் கூற்றமும் விடாது பந்தாடப் பட்டது தமிழர் வரலாற்றிற் தொடர் கதை போலும். மிழலைக் கூற்றத்தை விடுத்து நாக நாட்டில் பெருந்துறையை வலிந்து தேடுவோரை என் சொல்வது?  

சங்க காலத்திற்குச் சற்று முன் கடைசிச் கடற்கோள் ஏற்பட்டதால், அச்சங் காரணமாகவும், குறையாழங் காரணமாகவும் 2 சேதுக்களுக்கும் இடையிருந்த கடலுக்குள் பெருங்கப்பல்களில் யாரும் வரமுயலார். பாண்டியர் தொண்டியோ (இது மிகவும் பின்னெழுந்த துறைமுகம் ஆகும். சங்கப் பாட்டுக்களில் பேசப் படுவது சேரரின் தொண்டியே. தொள்ளப் பட்டது தொண்டி.), பெருந்துறையோ, மணல் மேற்குடியோ, மீமிசலோ சங்க காலத்திற் துறைமுகமாக இருந்திருக்க கொஞ்சங் கூட வழியில்லை. அவற்றின் வரலாறுகள் தேவார காலத்திற்குச் சற்றே தான் முற்பட்டன. பெரும்பாலான வங்கங்களும், கப்பல்களும் தெற்கில் இருந்து வரும் பொழுது கொற்கை, காயல் (காயலுக்கும் கழியென்ற பொருளே யுண்டு.), அழகன் குளம் கடந்த பின் இலங்கையைச் சுற்றிக் கோடிக் கரைக்குத் தான் முதலில் வர வேண்டும். 

(The Periplus of the Erythraean Sea என்ற நூற்செய்தியும் இதைச் சொல்கிறது. “Beyond Colchi there follows another district called Coast Country, which lies on a bay, and has a region inland called Argaru. At this place, and nowhere else, are bought the pearls gathered on the coast thereabouts; and from there are exported muslins, those called Argaritic.” Colchi = கொற்கை. கோடிக்கரை என்பதில் ”கோடி” என்பது Coty>County>Country என்று திரிவடைந்த எழுத்துப் பெயர்ப்பாகவும் ”கரை” மொழிபெயர்ப்பாகவும் இங்கு ஆளப்படுகிறது. Argaru = உறையூர். Argaritic என்பது உறையூர் கூறைப் புடைவையைக் குறிக்கிறது.) கோடிக்கரையின் முகன்மை புரிகிறதா? தெற்கிற் சோழரின் முதல் துறை கோடிக்கரை தான். இங்கிருந்து பெரும் ஏற்றுமதி நடந்திருக்க வேண்டும். 

”கானலம் பெருந்துறை” வழி கழிநிறைந்த கோடிக்கரையின் அடையாளங் கண்ட நாம் இனி அகம் 152 இன் 4 ஆவது அடிக்குப் போவோம்.

அன்புடன்,

இராம.கி.


No comments: