Friday, December 03, 2021

வணர்சுரி ஐம்பாலும், தோளும் - 1

ctamil மடற்குழுவில் ”உயிர்”பற்றிய பெருந்தருக்கம் ஒன்று மிகுந்த சூட்டோடு சில திங்கள்களுக்கு முன் எழுந்தது. அக்குழுவை அமைதியடையவைத்து ஆற்றுப்படுத்த அகம் 152 இன் உரையாட்டைப் பின்னால் சிலர் தொடங்கினர். பாட்டின் வரிகளுக்குப் பொருள்காண்பதிலும் பலரிடையே வேறுபாடு ஏற்பட்டது. பாட்டின் உருப்படியான விளக்கத்தை நானெங்குங் கண்டதும் இல்லை. அந்த மடற்குழுவில் வந்த பின்னூட்டுகளைப் பார்த்தால், 1935-1950 களில் வந்த விளக்கங்களையே கிளிப்பிள்ளை போல் பலரும் ஒப்பிப்பது புரிந்தது. கண்ணெதிரே நடந்த இத் தடுமாற்றங் கண்டு, ”புதுப்பார்வையில் ஏன் விளக்கக் கூடாது?” என்ற உந்தலில் ஆங்கிலத்தில் அங்கெழுதாது, தமிழில் இங்கெழுதுகிறேன். 

மரபு விளக்கங்களை உடும்பெனப் பிடித்தவர் இம் மாற்றுக் கருத்தை ஏற்பது அரிது. தவிர, விளக்கம் தமிழிலா, ஆங்கிலத்திலா என்பது நம் உகப்பு அல்லவா? தமிழறிந்த மேலைப் படிப்பாளிகள் இங்கு வந்து படிப்பதால், இருவரின் இடை நடக்கும் ஊடாட்டம் 2 திசையிலும் நடக்கலாமே? உருப்படியான தமிழாய்வுகள் சிச்சிறிதாய் ஆங்கிலந் தாவுவதும், உணர்ச்சிக் குமுறல்களும், சாரமற்ற ஒப்பீடுகளும் மட்டுமே தமிழில் தேங்குவதும் கண்டு இப்போதெல்லாம் நான் கவல்கிறேன். ஒரு பக்கம் புதுக் குடியேற்ற (neo-colonial) மனப்பான்மை தொடராது விருந்தினர் நம் மொழியைப் படிக்க நாமெல்லாம் விழைகையில், இன்னொரு பக்கம், நம்மூர் ஆய்வுத் தாள்களும் ஆழமாய் நிலையுற வேண்டும். 

வெவ்வேறு சங்கப்பா உரைகளைக் கேள்வியின்றிப் பயிலரங்குகளிற் தமிழ் ஆசிரியர் பரப்புவதும், அவற்றை மேலைத் தமிழறிஞர் மாற்றமின்றி ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதும், நம்மவர் அப்பெயர்ப்புகளைப் பிடித்துத் தொங்கி, “இன்னாரே சொல்லிவிட்டார்; இனி முறையீடுண்டோ?” என வாய் பிளப்பதும், செம்மொழி விருதுகளை/ பீடங்களை அள்ளிவாரிக் கொடுப்பதுமே தமிழ்வளர்ச்சி என நினைத்துக் கொள்கிறோம். உடனே, விருதளிப்பதையே இராம.கி கிடுக்குகிறானென (criticize) எண்ணிவிடாதீர். அப்படியில்லை. விருந்தோம்பலும், விருந்தினர் புலமையை மதிப்பதும் நல்லதே. ஆனால் என் கேள்வி வேறு. ஒவ்வொரு ”துபாசி”க்கும் பின் இருந்த/இருக்கும் தமிழாசிரியரை நாம் நினைக்கிறோமா? அவருக்கு விருது கொடுத்தோமா? 

வீரமாமுனிக்குத் தமிழ் சொன்னவரை, கால்டுவெலுக்குத் தமிழ் சொல்லியவரை, போப்பிற்குத் தமிழ் கற்பித்தவரை, எல்லிசுக்குத் தமிழ் ஓதியவரை, சீகன்பாலுக்குத் தமிழ் படிப்பித்தவரை, இப்படி விரலிட்டு எண்ணத் தகுந்தவரை வரலாற்றில் மதித்தோமா? எத்தனை பேர் பெயர் தெரியாது போய் இருப்பர்? சரி, அவர் வேண்டாம். பெயர் தெரிந்த தி.வே.கோபாலய்யருக்கு தொல்காப்பிய விருது தந்தோமா? அவர் வேலை பார்த்த EFEO - French school of Asian studies அவருக்கு விருது கொடுக்குமாறு பிரெஞ்சு அரசிடம் என்றாவது பரிந்துரைத்ததா? (நடிகர் திலகம் சிவாசி கணேசனுக்குப் பிரஞ்சு அரசு செவாலியர் விருது கொடுத்தது. அது போன்று இலக்கியத்திற் தமிழர்க்குக் கொடுத்ததாய் அறிந்தேனில்லை.) இந்த எதிர்பார்ப்புகள் கனவுகளாக, சோகமாகவே நின்று தவிக்கின்றன. தமிழ் வளர்ச்சி ஒரு சண்டிக் குதிரை யென்பது சரி. முன்னாற் போனால் முட்டும். பின்னால் வந்தால் உதைக்கும். 

சரி, அகம் 152 ற்கு வாருங்கள்..  [நீளத் தொடருக்குப் பொறுத்துக் கொள்ளுங்கள். ஏற்கனவே ”உண்ணாநோன்பும் வடக்கிருத்தலும்” தொடரை இன்னும் முடிக்காது இருக்கிறேன். சிந்தனை அலைவதால் கொஞ்சம் விட்டுப் பிடிக்கிறேன். ”யோவ், எந்தத்தொடரை இதுவரை ஒழுங்கா முடிச்சீரு? ஆரவாரமாத் தொடங்கி அம்போன்னு விடுறது ஒன் பொழைப்பாச்சே?” – என்ற சாடலும் எனக்குக் கேட்கிறது.] சங்கப்பாக்கள் என்பவை பாணர்/புலவரின் நூலறிவால் மட்டுமின்றி, அற்றைப் பட்டறிவைக் கொண்டும் எழுந்தன. 

ஒரு பக்கம் வேடுவச் சேகர (hunter-gatherer) வாழ்வும், இன்னொரு பக்கம் தொடக்கக் கிழாரிய (feudalism) வாழ்வும் அடங்கிய சங்க காலக் குமுகாயம் மூவேந்தராட்சியின் பின் (”நில்லு, நில்லு. அதென்ன மூவேந்தர்? கதை விடுறியே? அவர் வெறும் இனக்குழுத் தலைவர்” என Burton Stein-ஐப் பின்பற்றி மதிப்பிடுவாரும் உண்டு; பேரா. கைலாசபதி, சிவத்தம்பி போன்ற இடதுசாரிப் பெருந்தலைகள், இம் மேலைக் கூற்றுக்களைப் போற்றியதும் உண்டு), களப்பிரர், பல்லவர், பேரரசுப் பாண்டியர், பேரரசுச் சோழர், மீட்சிப்பாண்டியர், வடக்கிருந்து வந்த படையெடுப்புகள், விசயநகரப் பேரரசர், நவாபுக்கள், கிழக்கிந்தியக் குழுமங்கள் என அடுத்தடுத்து மாறியது; குமுகாயக் கட்டமைப்பும் வேடுவச் சேகரம், அடிமைக் குமுகாயம், கிழாரியம், முதலாளியம் என்று புரண்டது. சமவுடைமை (socialism), பொதுவுடைமைக் (communism) கருத்துக்களுங் கடந்த நூறாண்டுகளில்; விரவிப் பல்வேறு மீட்டுருவாக்கங்கள் நடந்தன. 

சங்கத ஆதிக்கம் உறைந்த (இதைச் சொல்வதற்கே சிலரெனைத் திட்டுவார்) காலங்களில் (கி.பி.1200-1700), சங்க இலக்கியப் பட்டறிவிலா உரையாசிரியர்  ”இலக்கியம், இலக்கணம், நடைப் பனுவல்” என்று சங்கமூலம் பார்த்துத் தம்கால வரலாற்று வரைவையும் கருத்தாடல்களையும் தம்மையறியாது தம்முரையிற் கலக்கவே செய்தார். அக்கலப்பு, சங்க மூலங்களில் இருந்து நம்மை விலக்கியது. மஞ்சளாடி போட்டுப் பார்த்தால் உலகம் மஞ்சளாகத் தெரியும். சங்கதவழி, தமிழ் மூலங்களை புரிந்துகொண்ட உரைகளைக் கையாண்டால், ”சங்கதம் மேடு, தமிழ் பள்ளம்” என்ற முடிவிலிருந்து வெளி வரவே முடியாது. We will be conditioned by that thinking ad infinitum. (இன்றேல் நச்சினார்க்கினியாரின் திரண துமாக்கினிக் கதைகள் நம்மூரில் நிலைக்குமா?) பெரும்பாலான மேலை இந்தியவியலாளருக்கு இந் நிலைப் பாடே இக்கட்டாகும். சங்கதந் துறந்து இந்தியாவைப் பார்க்க அவரில் யாரும் அணியமாய் இல்லை. அந்த அளவிற்குக் கண்கட்டு இங்கே நடந்துள்ளது.

இதற்கு மாறாய், பழம் பட்டறிவில்லா நாம், உரைகளை மட்டும் பாராது, ஒத்திசைவு (consistency), கணுக்கம் (connection), படியெடுப்புப் பிழை (copying error) ஆகியவை பற்றிக் கேள்வி மேல் கேள்வி கேட்டுச் சூழியல் (ecology), புதலியல் (botany), விலங்கியல் (zoology), புவியியல் (geology), பூதியல் (physics), வேதியல் (chemistry), மெய்யியல் (philosophy), மாந்தவியல் (anthropology), குமுகவியல் (sociology) ஆகிய அறிவியற் புலனங்களால் “உப்பிட்டு உரசிப்” புதுப்பார்வை கொண்டாற் பழமைக்கும் புதுமைக்கும் இடையாட்டமாய் மூல விவரிப்பின் பண்பாட்டு நடைமுறைகளைப் (cultural practices) புரிந்து கொள்ளலாம். அகம் 152 உம் கூடப் பல்வேறு புலன அறிவுகள் தேவைப் படும் ஒருவகைப் பாட்டுத் தான். வேரிற் பழுத்த பலாச் சுளையைப் பறித்துப் பகுந்து சுவைத்தோருக்கு அதன் அருமை புரியும். 

பாட்டின் திணை குறிஞ்சி. இரவுக் குறிப்பால் வந்த தலைமகன் தலைவியிடங் களவோடு ஒழுகித் திரும்பும் வழியில் தன் நெஞ்சிற்குத் சொல்வதாய் அதன் துறையமையும். பாடலைப் பாடியவர் பரணர். அக்காலச் சுவடிகளில் ரகரத்திற்கும் ஆகாரக் காலுக்கும் இடையே வேறுபாடு தெரியாது. பாணரைப் பரணரென்றும் படிக்கலாம். பின் எப்படிப் பரணரென எல்லா உரையாசிரியரும் அழுந்தச் சொல்கிறார்? - புரியவில்லை. பாணரென்பது இயற் பெயராயும் தோற்ற வில்லை. இவர் ஒருவரா, பலரா? - தெரியாது. உரை யாசிரியர் பலரும் ஒருவரென்று கொள்கிறார். வன்பரணரென இன்னொருவரையும் சொல்வர். அகமும், புறமும் பாடிய சங்கப்புலவரில் 235 பாக்கள் பாடிய கபிலருக்குப் பின் பரணரே அதிகமாய் 85 பாக்கள் பாடி யுள்ளார், இவருக்கடுத்து 79 பாக்கள் பாடிய மருதன் இளநாகனார் வருவார். 

பரணர்/பாணர் என்பார் நம்மூர் வழக்கில் வெறுங் குப்பன், சுப்பன் போலல்லர். அரசியற் புலங்களிற் புகுந்து அதகளம் ஆடிய பெரும்புலவர். (கபில, பரணரைப் புரிந்துகொள்ளாது சங்ககால அரசியல் புரியாது.) பெரும்பாலும் சேரரையும், அவரோடு மணவுறவுற்ற உறையூர்ச் சோழரையும், இவ்விரு குலஞ்சார்ந்த குறு நில மன்னரையும் (ஓரோவழி புகார்ச் சோழரையும்) பற்றிப் பாட்டெழுதினார். குறுநில மன்னரைப் பெரிதுஞ் சார்ந்து, மூவேந்தரோடு சம உறவு வைத்த பாண்டி நாட்டுக் கபிலர் போல் இவரில்லை. பல்வேறு காரணங்களால் இவர் காலம் பொ.உ.மு.135-85 எனக் கொள்கிறேன். (ஏனென்று சொல்ல நீண்ட விளக்கம் தேவை, அவற்றை இங்கு விவரிக்கவில்லை.) சிலம்பின் காலம் பொ.உ..மு.75 என்று என் கட்டுரைத்தொடர்/ பொத்தகத்தில் நிறுவியதை ஒட்டியே பரணர் காலம் பற்றிய முடிவிற்கு வந்தேன். என்னாய்வு நிறைகையில், இக்கால இடைவெளிகள் சற்று முன்பின் ஆகலாம். இக்கட்டுரை படிப்போர் ”சிலம்பின் காலம்” என்ற என்னூலையும் படியுங்கள். 

சிலம்பின் காலத்தைக் கி.பி. 2 - 9 ஆம் நூற்றாண்டாய்க் கொள்ளின், தமிழக வரலாறும், அதன் களன்களும், பாக்களின் விதப்புக்களும் புரியாது. Wrong historical setting leads to faulty contextualization of the subject and more inconsistencies with archeological facts. இனியுஞ் இலங்கைக் கயவாகுவைப் பிடித்துத் தொங்கி 250 ஆண்டுகள் கீழிழுத்துச் சிலம்பின் காலத்தைப் பொருத்துவதிற் பொருளில்லை. சமகாலத்துப் புலவரும் வேந்தரும், மன்னரும், தலைவரும் யாரார்? 2000 ஆண்டுகளுக்கு முன் எவ்வகையில் நாம் வடபுலத் தொடர்பு கொண்டோம்? எத்தனை கரிகாலன்கள், நெடுஞ்செழியன்கள், சேரலாதன்கள் இருந்தார்? சேர, சோழ, பாண்டியரின் இயற்பெயர், குடிப்பெயர், பொதுப்பெயர், பட்டப்பெயர் ஆகியவற்றை ஒழுங்காய் விளங்கிக் கொண்டோமா? ”புலிமான்கோம்பை, பொருந்தல், கொடுமணத்திற்கு” அப்புறம் தொல்லியலால் வெளிப்பட்ட பண்பாட்டெச்சங்களைச் சங்க இலக்கியக் குறிப்புகளோடு பொருத்திப் பார்த்தோமா? - ஆகிய கேள்விகளுக்கு விடைதேடிச் சங்க காலத்தை மீள ஆய்வது கட்டாயந் தேவை.   

என் சிந்தனைப்படி, மகத தேசத்துச் சேணியப் பிம்பிசாரன் தொடங்கி நந்தர், மோரியர், சுங்கர், கனவர், சாதவாகன்னர் வரை இணையாய்ப் பார்க்க வேண்டியதே சங்க காலமாகும். மூவேந்தரின் தொடக்கம் எப்பொழுதென்று சொல்லமுடியவில்லை. ஆனால், அவர் உச்சம் வந்தபொழுது, அவருக்குப் பகைப்புறமாகிய மகதந் தவிர்த்துச் சங்ககால வரலாற்றைப் பார்ப்பது சரியான புரிதலைத் தராது. மூவேந்தர் ஆட்சியை முழுதும் முற்றியவர், சாதவா கன்னரின் தக்கண அரசு சிதைந்தபின் அவர் தலைநகர் படித்தானத்தில் (Paithan near Aurangabad) உருவான கள அப்ரரே (kal Abra) ஆகும். ஆனால் கள அப்ரர் காலத்தை ”இருண்டகால” எனச்சொல்லி சரிவர நாம் புரிந்துகொள்ளவில்லை. (சங்ககால ஆராய்ச்சிக்கு இக்கட்டுரை களனில்லை. ஆயினும் காலக்குறிப்பை நான் தவிர்க்கமுடியாது.)

[”நந்தருக்கும் துளுநாட்டு நன்னருக்கும் உறவுண்டோ?” என வெங்காலூர்க் குணா ஐயப்படுவார். கி.மு.600 தொடங்கி 700/800 ஆண்டுகள் மகததேசம் ஆண்டவரில் தமிழரோடு இணங்கியவர் நந்தர் மட்டுமே. ’சூத்திரரான’ நந்தரையும் நன்னரையும் பொருத்தி எழுதினால் அதுவே இங்கு தனிக்கட்டுரை யாகிவிடும். பல்லவருக்கும் ஈரானியப் பஃலவருக்கும் இடையே விதந்து சொல்லி உறவு நோக்கும் வடபுல விழையர், நன்னர்- நந்தர் உறவு சொன்னால் மட்டும் ஏற்கத் தயங்குவார். என்ன இருந்தாலும் வெள்ளையென்பது மேன்மை, கருப்பு தாழ்ச்சியல்லவா?:-))) ஒரு முறை வாசிங்க்டன் போசுட்டில் வெளிவந்த ஒரு புள்ளிவிவரக் கட்டுரையை நண்பர் வேந்தனரசு மடற்குழுவிற்கு அனுப்பி வைத்தார். ”இந்தியரைப் போல் இனவேறுபாடு பார்ப்போர் உலகிலேயே வேறெங்கும் இல்லையாம்.”], 

அன்புடன்,

இராம.கி.


No comments: