மேலே நான்தந்த பின்புலத்தோடு, கீழே அகப்பாட்டைப் படியுங்கள். பாட்டின் 24 வரிகளை வழக்கம் போல ஐந்தைந்தாய்ப் பிரிக்காது, கருத்தறிதலுக்குத் தக்கப் பிரித்துக் கொடுத்திருக்கிறேன். எந்த ஆசிரியர் எழுதினாலும், அது மதிப்பிற்கு உரிய உரொமிலா தாப்பரேயாயினும், அருள்கூர்ந்து அதை வரலாறாய்க் (history) கொள்ளாது, வெறும் வரலாற்றுவரைவாகவே (historiography) கொள்க. ஒவ்வொரு வரலாற்றுவரைவிலும் விதப்புப்பார்வைகளும் படிமங்களும் (forms) கட்டாயமுண்டு. இங்கு தந்துள்ளது நான் அடவிய (design) படிமம்; என் வரலாற்று வரைவு. அவ்வளவுதான் வேறுபாடு.
நெஞ்சுநடுங் கரும்படர் தீர வந்து
குன்றுழை நண்ணிய சீறூ ராங்கண்
செலீஇய பெயர்வோள் வணர்சுரி யைம்பால்
நுண்கோல் அகவுநர்ப் புரந்த பேரிசைச்
சினங்கெழு தானைத் தித்தன் வெளியன்
இரங்குநீர்ப் பரப்பின் கானலம் பெருந்துறை
தனந்தரு நன்கலஞ் சிதையத் தாக்குஞ்
சிறுவெள் ளிறவின் குப்பை யன்ன
உறுபகை தரூஉம் மொய்ம்முசு பிண்டன்
முனைமுர ணுடையக் கடந்த வென்வே
லிசைநல் லீகைக் களிறுவீசு வண்மகிழ்ப்
பாரத்துத் தலைவ னார நன்ன
னேழில் நெடுவரைப் பாழிச் சிலம்பிற்
களிமயிற் கலாவத் தன்ன தோளே
வல்வில் லிளையர் பெருமகன், நள்ளி
சோலை யடுக்கத்துச் சுரும்புண விரிந்த
கடவுட் காந்த ளுள்ளும், பலவுடன்
இறும்பூது கஞலிய யாய்மலர் நாறி
வல்லினும் வல்லா ராயினுஞ் சென்றோர்க்குச்
சாலவிழ் நெடுங்குழி நிறைய வீசும்
மாஅல் யானை ஆஅய் கானத்துத்
தலையாற்று நிலைஇய சேயுயர் பிறங்கல்
வேயமைக் கண்ணிடை புரைஇச்
சேய வாயினும், நடுங்குதுயர் தருமே.
- அகம் 152
இப்பாடலின் விளக்கம் கூடுவதற்காக, பாட்டினுள்வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, பாட்டின் யாப்பையும் சிலவிடங்களில் நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப் போட்டு, வணர்சுரி ஐம்பால், தோள் ஆகிய இருவேறு சினை விவரிப்புக்களும் புரிவதற்காகக் கடைசி வரியை 2 முறை அடுக்கிப் பொருத்திக் கீழே கொடுத்திருக்கிறேன்.
குன்று உழை நண்ணிய சீறூர் ஆங்கண்
நெஞ்சு நடுங்கு அரும்படர் தீர வந்து
செலீஇய பெயர்வோள் வணர்சுரி ஐம்பால் -
நுண்கோல் அகவுநர்ப் புரந்த பேர் இசைச்
சினம் கெழு தானைத் தித்தன் வெளியன்
இரங்கு நீர்ப் பரப்பின் கானல் அம் பெருந்துறை
தனம் தரு நன்கலம் சிதையத் தாக்கும்
சிறுவெள் இறவின் குப்பை அன்ன
உறு பகை தரூஉம் மொய்ம் முசு பிண்டன்
முனை முரண் உடையக் கடந்த வென்வேல்
சேய ஆயினும், நடுங்கு துயர் தருமே.
இசை நல் ஈகைக் களிறு வீசு வண் மகிழ்ப்
பாரத்துத் தலைவன் ஆர நன்னன்
ஏழில் நெடு வரைப் பாழிச் சிலம்பில்
களி மயிற் கலாவத்து அன்ன, தோளே-
வல் வில் இளையர் பெருமகன், நள்ளி
சோலை அடுக்கத்துச் சுரும்பு உண விரிந்த
கடவுட் காந்தள் உள்ளும், பலவுடன்
இறும் பூது கஞலிய ஆய் மலர் நாறி
வல்லினும் வல்லார் ஆயினும் சென்றோர்க்குச்
சால் அவிழ் நெடுங்குழி நிறைய வீசும்
மாஅல் யானை ஆஅய் கானத்துத்
தலையாற்று நிலைஇய சேய் உயர் பிறங்கல்
வேய் அமைக் கண் இடை புரைஇச்
சேய ஆயினும், நடுங்கு துயர் தருமே.
இனிச் சில சொற்பொருள்களையும் குறிப்புகளையும் பார்ப்போம். (வேண்டும் என்றே சில பொருண்மைகளை நீட்டி முழக்கியிருக்கிறேன்.)
”யாருமறியாது பொதுவிடத்தில் தலைமகளைச் சந்திப்பது மற்றோர்க்குத் தெரிந்து விடுமோ?” என நடுங்குந் தலைமகன், காதலியைப் பார்த்துத் திரும்புகையிற் தன்னெஞ்சோடு பேசும் பாடல் இதுவென்று சொல்லலாம்.. படபடப்பது படராகும். அவள் வரும்போது ஒரு பக்கம் படர் தீர்கிறது இன்னொன்றில் நடுங்குதுயர் தருகிறது. தலைவியின் சேரநாட்டு ஊர் ஏதென்று பாட்டில் தெரியவில்லை. ஒரு வேளை வயநாட்டிற்கு அருகில் அது இருக்கலாம். பொதுவாகச் சேர நாட்டிற் சிலவிடங்களிற் குன்றிலிருந்து கடற்கரைக்குச் சட்டென இறங்கும் பாதைகளுண்டு. உரிப்பொருள்களை வைத்தே இப்பாடலைக் குறிஞ்சித் திணையிற் சேர்க்கிறோம்.
களவொழுக்கத்தில் தலைவனும் தலைவியும் ஆரத்தழுவி மெய்ம்மறந்து இருக்கிறார். (சந்திப்பிற் கலவி நடந்ததா? இல்லையா? - என்பது தெரியாது.) தலைவன் தன் கைகளையும், மார்பையும் இணைத்துத் தலைவியைத் தழுவும் போது, ஊடுவந்த தலைவியின் வணர்சுரி ஐம்பாலும் தோளும் தலைவனுக்குத் காதலை மேலுந் தூண்டியுள்ளன. வணர்சுரி ஐம்பாலை உவமையாலும், உருவகத்தாலும் தலைவியின் தோளை இரு வகையாலும் தலைவன் விதந்து சொல்கிறான். ஐம்பாலையும், தோளையும் இப்படி நூதனமாய் உவமித்தும் உருவகித்தும் நானெங்கும் பார்த்ததில்லை. இது பா விதப்பு இல்லெனில் வேறெது பாவிதப்பு? - என்றுந் தோன்றுகிறது. (கவித்துவம் - poetical sense - என்கிறாரே, அதற்கு நான் பழகும் தமிழ்ச்சொல் பாவிதப்பாகும். விதத்தல் = சிறப்பித்தல். விதத்தலின் பெயர்ச்சொல் விதப்பு. ”கவித்துவம்” என்ற வட சொல் பழகுவதால் பாவும் போய், விதத்தலும் போய், மொத்தத்தில் தமிழ்ச் சொல்லையே தொலைத்தோம். பிற சொற்களைத் தொடர்ந்து தமிழ் வழக்குகளிற் பழகப்பழக, அதுவே இயல்பாகி நம் சொற்கள் நமக்கு மறந்து போகும். இற்றைத்தமிழர் தமிழ்தொலைத்து தமிங்கிலராவது இப்படித்தான். )
குன்று உழை நண்ணிய சீறூர் ஆங்கண் = குன்றின் பக்கம் நெருங்கி அமைந்த சிற்றூரின் கண்ணே
நெஞ்சு நடுங்கு அரும்படர் தீர வந்து செலீஇய பெயர்வோள் = நெஞ்சு நடுங்கும் அருந்துன்பம் தீர வந்துசென்று பெயர்பவள்
வணர்சுரி ஐம்பால் = வளைந்த சுரிகளாற் பின்னிய ஐம்பாற்சடை. பாட்டின் 2 குவிப்புள்ளிகளில் இதுவுமொன்று. சடைக்கு (plaited hair) மாறாய்க் குழலென்றே உருளைப் பொருளில் அன்று சொல்வார். பூங்குழலி = பூச்செருகிய சடைக்காரி. ஐம்பாலாய் (பால்=பகுதி=புரி) முடிபிரித்துத் திருகி (torque) முடைவது போல் பின்னுவது சுரித்தலாகும். மடிதலையும் சுரிதலென்பர். சேலைக்கட்டில் இடுப்பிற் செருக 4,5 மடிப்புகள் வைப்பாரே, அதுவும் சுரித்தல் தான். கலிப்பா, பரிபாட்டிலும் சுரிதகம் வரும். வணர்சுரி என்பது வளைத்துச் சுரிந்தது. மீள மீளச் சுரித்துப் பின்னிய முடி 10,15 சுரிகள் (cycles) கொண்டு, அலையாகும் (wavy). தமிழக / கேரளப் பெண்களின் முடி அலைத் தோற்றங் காட்டுவது சுரித்தற் பழக்கத்தாலென்க. (மின்னியற் - electrical engineering - கட்டுரைகளிற் சுரியைச் சுற்றென்பார். சுரி என்ற சொல் இன்னும் பொருந்துமோ?- என எண்ணுகிறேன்.) வணர்சுரி என்பது இங்கே வினைத்தொகை. ஒவ்வொரு சுரியும் ஏறியிறங்கிப் பின்னேறி... கணிதத்தில் sine wave என்பாரே, அதுபோல் தோற்றும் (sine-ஐயே சாய் எனுந் தமிழ்மூலங் கொண்டு வெங்காலூர்க் குணா விளக்குவார். தெளிவான அச்சிந்தனையை ஒரு முக்கோணவியற் (trigonometry) கட்டுரையில் விரித்துப் பேச வேண்டும். இங்கு விளக்கத் தொடங்கின் பெரிதும் விலகித் தெரியும் என்பதால் தவிர்க்கிறேன்.)
இக்கால மகளிரின் தலைமுடிப் பட்டவம் (fashion) சடைமுடியாத மயிரோடோ, அன்றி இழுவை வளையத்தாற் (rubber band) குஞ்சமாய்ப் பிணைத்தோ அமைகிறது. மேற்கத்தியத் தாக்கங்கூடிய இற்றை மகளிர்க்கு, இப்போது, பின்னுவதில் விருப்பமும், நேரமுமில்லை. 20 ஆண்டுகள் முன், முப்பாற்சடை பின்னிக்கொள்வது இயல்பானது. ஆனால் ஐம்பாற்சடையோ ஒப்பனையகம் மூலமாகவன்றி அரிது. ஓவியர் மணியம் 1950 களில் வரைந்து காட்டிய குந்தவை, நந்தினிக் கொண்டைகளை முடிந்தவர் ஒருவரோ, இருவரோ இன்றிருந்தால் வியப்பு. ஐம்பாற்சடைக்குப் பரணர் ஓர் உவமையும், இன்னோர் உருவகமுஞ் சொல்வார். பாவில்வருந் தலைவன் நெய்தல்நிலத்தை நெருங்கிப் பழகியவனாதல் வேண்டும். அதற்குமுன், சோழநாட்டைப் பற்றிய சுற்றி வளைத்த வரலாற்றுப்பாடந் தேவை.
அன்புடன்,
இராம.கி.
No comments:
Post a Comment