Wednesday, July 29, 2020

மாறியும் வேறியும் - 1

”மாறு-தல் போல் வேறு-தல் என்ற வினைச்சொல் கிடையாது. வேறு என்பது பெயர்ச்சொல் மட்டுமே” என்றுசில தமிழறிஞரும். தமிழார்வலரும் சொல்லப் புகுந்து நான் வேறி (variable) என்ற சொல்லைக் கையாண்டதைப் பேரா. செல்வாவின் முகநூல் பக்கத்தில் கிடுக்கியிருந்தார். இங்கே எழுதுவது அதற்கான மறுமொழி. என் வலைப்பதிவிலும் முகநூல் பக்கத்திலும் சேமிக்க வேண்டித் தனியே இடுகிறேன். பந்தாளியைப் பந்தாடுவது சிலர்க்கு வழக்கமாய்ப் போனது. வாதங்கள் பலநேரம் குழாயடிச் சண்டையாய் ஆகிவிடுகின்றன. மீண்டும் மீண்டும் சொல்கிறேன். என் சொல்லாக்கங்களை விரும்புவோர் பயிலுங்கள். விரும்பாதோர் உங்கள் விழைவின்படி போங்கள். என்ஞாயத்தைக் கேட்போருக்குச் சொல்லத்தான் செய்கிறேன். என்மேல் பொரிம்பு (brand) குத்த  நினைப்போருக்கு, “வேறிடம் பாருங்கள்” என்றுசொல்லக் கடமைப்பட்டுள்ளேன். I don't have to be apologetic. Period.

இனிச் செய்திக்குள் வருவோம். மாறு என்பது வளைவுப் பொருளில் விழைந்த சொல். மாறுதலின் சொற்பிறப்பையும் அது வளர்ந்த விதம் பற்றியும் இங்கு நான் சொல்லவில்லை. வேறு என்ற சொல் துளைத்தல், பிளத்தல், பிரித்தல் பொருளில் பிறந்தசொல். நான் ”எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்ற கொள்கையை நம்புகிறவன். தவிர, தமிழில் பெயர்ச்சொற்கள் எண்ணிக்கையில் ஏராளம் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட தொகுதியின் அடியில் ஒரு வினைச்சொல்லாவது இருக்கவேண்டும் என்ற கொள்கையும் உடையவன். இடைச்சொற்கள் என்று நாம் என்னுவன கூட ஒரு கால் வினையிலெழுந்து இன்று உருத்தெரியாது மாறியிருக்கலாம்.

அவ்வகையில் வேறு என்பதைப் பார்க்கலாம். முதலில் (வேறு, வேற்று) நிலை, (வேறு, வேற்றுப்) புலம், (வேறு, வேற்று) முகம், (வேறு, வேற்று) இடம் என்ற 4 சொல்லிணைகளைப் பாருங்கள். வேறு என்பது வெறும் பெயர்ச்சொல் (அதற்கு எந்த வினைப்பகுதியும் அடிப்படையில்லை) எனில், அச்சொல் எப்படிப் பிறந்தது? தானாய்ப் பிறக்குமா? எந்தப் பெயரிணைகளில் இதுபோல் றகரம் இரட்டித்து ஒரே பொருள் தந்திருக்கிறது? இதுபோல் இரட்டித்து கிட்டத்தட்ட ஒரே பொருள் வரும் வினைச்சொற்களைப் பாருங்கள். காயம் (ஆறு-தல், ஆற்று-தல்), ஏதோவொன்று (ஏறு-தல், ஏற்று-தல்), வாயிலிருந்து (காறு-தல், காற்று-தல்), சாறு-தல், சாற்று-தல் = பெருகு-தல், விரி-த்தல்,  நீர் (தூறு-தல், தூற்று-தல்), உடம்பு (தேறு-தல், தேற்று-தல்), சுண்ணம் (நீறு-தல், நீற்று-தல்), பாறு-தல், பாற்று=தல் = அழி-தல், அழி-த்தல், துணி (பீறு-தல், பீற்று-தல்), நிலை (மாறு-தல், மாற்று-தல்), பொருளை (வீறு-தல், வீற்று-தல்) = பிரித்தல். 

இதுபோல் வேறு-தல், வேற்று-தல் என்ற வினைச்சொற்கள் ஏன் இருக்கக் கூடாது? நமக்குக் கிடைத்த ஆவணங்களையும், பேச்சுவழக்கையும் வைத்து அகரமுதலிகள் ஏற்பட்டன. ”அவற்றில் எல்லாமே இருக்கும், அவற்றில் இல்லாதன தமிழில் இல்லை” என்பது சரியான வாதமா? தமிழின் சொற்சேகரம் இந்த அகரமுதலிகளா? ஏன் அவை ஒவ்வொரு எடுவிப்பிற்கும் (edition) பெரிதாகின்றன? விட்டுப்போனவற்றையும், புதிதானவற்றையும் சேர்க்கிறாரே? வேறு-தல், வேற்று-தல் என்பது விட்டுபோனது ஆகக்கூடாதா? சங்க இலக்கியம் எல்லாவற்றையும் பதிவு செய்து விட்டது என்று எண்ணுகிறோமா? நம்முர் அகரமுதலிகளில் தமிழின் எல்லாச் சொல்லும் இருக்கிறதா? எங்கூரில் புழங்கும் பல சொற்கள் பதிவாகவில்லை. அதுபோல் உங்க்ளூர்ச் சொல்லும் பதிவாகாமல் இருக்கலாமே?   
  
இன்னொரு சொல்லும் பார்ப்போம். தோற்றுதல் = காட்சியளித்தல். தோறும் என்பது இடைச்சொல். பல மொழியாளர் ”என்றும்” என்ற இடைச்சொல்லின் பின்னால் என்னுதல் என்ற வினைச்சொல் இருக்கிறது என்று ஊகித்தறித்தது போல், தோறும் என்ற இடைச்சொல்லின் பின் தோறுதல்= காணல் என்ற வினை இருக்கவேண்டும் என்று ஊகிக்கலாம்.  அப்போது (*தோறுதல், தோற்றுதல்) என்ற சொல்லிணை மேலுள்ளது போல் அமையும்.     

இனி வேற்றலம் என்ற சொல்லுக்கு வருவோம். இச்சொல் காற்றுக்கு எப்படி வந்திருக்கும்? வேறு+தலம் என்பது சரியாகுமா? அல்லது வேற்று+அலம் என்பது சரியாகுமா?  காற்று. வீறிக் கொண்டு, வேறிக் கொண்டு இருந்தால் தானே வேற்றலம் என்ற சொல் எழமுடியும்? வேற்றலத்திற்குள் அமையும் வினைச் சொல் தான் என்ன? இன்னொரு இணைக்கு வருவோம். வேற்றவன் = பகைவன்; வேறு செய்தல் = பகை விளைத்தல். இங்கே வேறு, வேற்று என்ற தொடர்பு எப்படி ஏற்பட்டது? வேறல், வேற்றல் = பகைத்தல் என்ற பொருள் இவற்றிற்கு இருந்தால் தானே இரு பொருளும் ஒன்றாகும்?.  வேறாள் = வேற்றாள் = அயலான்; இங்கும் வேறு, வேற்று தொடர்பு உள்ளது.  எப்படி ஏற்பட்டது?

வேற்றுநர் = மாறுவடிவங் கொண்டவர் இப்படி ஒரு சொல்வடிவம் எழவேண்டும் எனில் வேற்று-தல் அல்லது வேறு-தல் என்ற வினைவடிவம் இல்லாமலா? வேற்றுமை = பெயரின் வேறுபட்ட தன்மை. இப்படி ஒரு மை விகுதி கொண்ட பெயர் எழவேண்டுமாகில் வேற்று- என்பது குறிப்பு வினையாகவோ, இயல் வினையாகவோ இருக்க வேண்டும் தானே?  வேற்றான் என்றாலும் அயலான், வேற்றுவன்  என்றாலும் அயலான் என்று அகரமுதலிகள் சொல்கின்றன. இது எப்படி முடியும்?.வேற்றல் என்ற வினை இதனுள் இருக்கவேண்டும் அல்லவா?

முடிவில் வேறல் = வெல்லல், வெற்றிகொளல் என்ற சொல்லுக்கு வருவோம். இது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வழி திரு. மு.சண்முகம் பிள்ளை வெளி யிட்டது.  வேறல் என்பது பெயர்ச் சொல் வைத்து வரவில்லை. வலப்பக்கம் இருக்கும் வெல்- எப்படி வினைச்சொல்லின் பகுதியோ, அதேபோல் இடப்பக்கம் இருக்கும் வேறு- என்பதும் வினைச்சொல் பகுதி தான். இன்னும் சொன்னால் வெல்லுதல் என்பது விலங்காண்டி காலத்தில் இன்னொருவனைக் குத்திக் கொல்வதே. வெல்லும் கருவி வேலாயிற்று. வெல்>வெள்>வெட்டு என்பதும் குத்திக் கிழித்தலே. வெற்றி என்ற பெயர்ச்சொல்லின் பின் வெற்றுதல் என்ற சொல் உள்ளது. வெற்றுதலும். வெட்டுதலும் ஒரே பொருளன. வெற்று-தல்> வேற்று-தலை உருவாக்கும். வேற்று-தல் = பிரி-த்தல் (உடம்பையும் உயிரையும் பிரித்தல்) வேற்று-தலிலிருந்து வேறு-தல் உருவாகமுடியும். அதிலிருந்து வேறல் என்ற மேலே சொன்ன வினைச்சொல் உருவாகும். வேறு-தல், வேற்று-தல் என்பதை மறுக்கிறவர் வெற்றி என்பதையும் மறுக்கிறார் என்று பொருள்.

ஆங்கிலத்தில் parsimony என்ற கொள்கையைச் சொல்வார். அறிவியலிலும் அப்படியே. மீக்குறைந்த கருதுகோள்களைக் கொண்டு மிக நிறைந்த விளக்கம் கொடுக்கமுடியுமானால் அதுவே சிறந்தது.  வேற்று-தல், வேறு-தல் என்ற இணைச்சொற்களை  இருந்தன என்று ஏற்றுக்கொண்டால், மேலே கூறிய அத்தனையும் தமிழில் தொங்கி நிற்காது. We need to infer the existence of வேறு-தல் and வேற்று-தல். After all research is inference. Not just the blind following of facts. 

அகரமுதலியை நான் என்றும் மொழியின் சேகரம் என்று கொண்டவனில்லை. அதுவொரு வழிகாட்டி. அதற்கு மேல் ஏரணம் வேண்டும் என்று நம்புவேன். அகரமுதலிகள் சில பெயர்ச் சொற்களைக் கொடுக்கும். அடியிலுள்ள வினைச்சொல்லைக் கொடுக்காது. சில வினைச்சொற்களைக் கொடுக்கும். அவற்றில் விளையும் பல்வேறு பெயர்ச்சொற்களைக் கொடுக்காது. printed salvation ஐ எப்படி மறுக்கிறேனோ, அதேபோல் dictionary salvation ஐயும் நான் மறுப்பேன். எனக்கு இலக்கியம். பேச்சுவழக்கு, கொஞ்சம் ஏரணம், simple common sense ஆகியவை முகன்மை என்று எண்ணுவேன். இதை மறுத்து, ”மாறி என்று தான் சொல்வேன்” என்போர் சொல்லிப் போங்கள் எனக்கு ஒன்றுமில்லை.  நான் வேறியும் மாறியும் சொல்லிப் போவேன். வேறியில் தவறில்லை.   

அன்புடன்,
இராம.கி.          

1 comment:

ந.தெய்வ சுந்தரம் said...

// இதுபோல் வேறு-தல், வேற்று-தல் என்ற வினைச்சொற்கள் ஏன் இருக்கக் கூடாது? நமக்குக் கிடைத்த ஆவணங்களையும், பேச்சுவழக்கையும் வைத்து அகரமுதலிகள் ஏற்பட்டன. ”அவற்றில் எல்லாமே இருக்கும், அவற்றில் இல்லாதன தமிழில் இல்லை” என்பது சரியான வாதமா? தமிழின் சொற்சேகரம் இந்த அகரமுதலிகளா? ஏன் அவை ஒவ்வொரு எடுவிப்பிற்கும் (edition) பெரிதாகின்றன? விட்டுப்போனவற்றையும், புதிதானவற்றையும் சேர்க்கிறாரே? வேறு-தல், வேற்று-தல் என்பது விட்டுபோனது ஆகக்கூடாதா? சங்க இலக்கியம் எல்லாவற்றையும் பதிவு செய்து விட்டது என்று எண்ணுகிறோமா? நம்முர் அகரமுதலிகளில் தமிழின் எல்லாச் சொல்லும் இருக்கிறதா? எங்கூரில் புழங்கும் பல சொற்கள் பதிவாகவில்லை. அதுபோல் உங்க்ளூர்ச் சொல்லும் பதிவாகாமல் இருக்கலாமே?// இராம்கி ஐயா அவர்களின் கருத்து 100 விழுக்காடு உண்மை. ஒரு சொல் அகராதிகளில் பதிவுசெய்யப்பட்டிருந்தால்தான், அது நீடித்ததற்கு அல்லது நீடிப்பதற்குச் சாட்சி என்று கூறுவது அறிவியல் ஆய்வுநெறிக்கு அப்பாற்பட்டது. தன்வினைகள் பிறவினைகள்மாறி, பின்னர் அம் என்ற விகுதி எடுத்து பெயர்ச்சொற்களாக மாறுவது ஒர பொது உண்மை. கலங்கு-கலக்கு-கலக்கம், இயங்கு-இயங்கு-இயக்கம். ஆனால் தயங்கு என்பதற்கு தயக்கு என்பதோ வணங்கு என்பதற்கு வணக்கு என்பதோ தற்போது தமிழ் நூல்களில் இயக்குவினைகளாகக் காணப்படவில்லை. ஆனால் தயக்கம், வணக்கம் இருக்கின்றன. எனவே தயக்கு , வணக்கு என்பவற்றைக் கணக்கில்கொண்டால்தான், தமிழ் சொல்லாக்க விதிகள் முறையாக இருக்கும். இந்த இரண்டு சொற்களும் தற்போது இல்லை என்பதற்காக , இவை போன்ற சொற்கள் தமிழ் வரலாற்றிலேயே இல்லை என்று கூறமுடியாது. சொல் ஆய்வில் ஈடுபடும்போது, இதுபோன்ற எத்தனையோ உண்மைகள் தெரியவருகின்றன. ந. தெய்வ சுந்தரம்