Thursday, February 07, 2013

சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும் - 2

அண்மையில் ”ஒப்பியல் நோக்கில் செவ்விலக்கியக் கோட்பாடுகள்” என்ற தலைப்பில் செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனமும், உலகத் தமிழ்மொழி மெய்யியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனமும் 28/1/2013 - 06/2/2013 இல் இணைந்து நடத்திய தமிழாசிரியர்களுக்கான 10 நாள் பயிலரங்கில் 5/2/2013 அன்று பிற்பகல், “சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும்” என்ற தலைப்பில் நான் ஓர் உரையாற்றினேன். அதன் எழுத்து வடிவக் கட்டுரை அவர்கள் வெளியிடும் பொத்தகத்திற் பங்கு பெறுகிறது. கட்டுரை மூன்று பகுதிகளாகி ”www.valavu.blogspot.com” என்னும் என் வலைப்பதிவிலும், ஒரு சில மடற்குழுக்களிலும் இடுகைகளாக இப்பொழுது வெளிவருகிறது. இது இரண்டாம் பகுதி. உங்கள் வாசிப்பிற்கு,

அன்புடன்,
இராம.கி.

மேலேயுள்ள தினமலர்ச் செய்திக்குப் பின், 2012 செபுதம்பர் 27-29 இல், செருமனி லெய்ப்சிக்கில் “Global Impact of Panchatantra” என்ற கருத்தரங்கில், “Panchtantra stories in Cilappatikaaram” என்ற கட்டுரையை திரு.இரா.நாகசாமி வாசித்தார் [14]. அண்மையில் சந்தவசந்தம் மடற்குழுவில் ஊசுடன் நா.கணேசன் முன்வரித்து இக்கட்டுரையைப் படித்து வியந்தேன்.[15] திரு.இரா.நாகசாமி கூற்றுக்கு மறுப்பாய் என்னுடைய இக்கட்டுரை எழுகிறது.

மூவகைப் பங்காளர்:

நம்மிற் பலரும் புகழ் பெற்ற கல்கியின் ”பொன்னியின் செல்வன்” வரலாற்றுப் புதினத்தைப் படித்திருப்போம். அதில், அருண்மொழி வருமன் (இராசராசன்), அவன் அண்ணன் ஆதித்த கரிகாலன், தமக்கை குந்தவை, தந்தை இரண்டாம் பராந்தகனெனும் சுந்தரசோழன், வல்லவரையன் வந்தியத்தேவன் போன்றோர் வரலாற்றுப் பின்புலங் கொண்டிருக்க, வானதி, நந்தினி, பூங்குழலி, சேந்தன் அமுதன், ஆழ்வார்க்கடியான், கந்தமாறன் போன்றோர் முற்றிலும் புனைவாளர் ஆவர். வரலாற்றில் இருந்திருக்கக் கூடிய ஆனால் இயற்பெயர் விவரம் தெரியாச் செம்பியன் மாதேவி, பூதி விக்கிரம கேசரி, பழுவேட்டரையர், பார்த்திபேந்திர பல்லவன், அநிருத்த பிரம்மராயர் ஆகியோர் மூன்றாம் பக்கலைச் சேர்ந்தவராவர்.

பொதுவாக, ஒரு வரலாற்றுப் புதினம்/காப்பியம், தன் குறிக்கோளை நிலை நாட்ட, விதப்பான நிகழ்வுகளை விவரித்து, “வரலாற்று இயலுமையை (historical plausibility)" அழுத்தியுரைக்கும். இப்படிச்செய்யக் வரலாற்றுறுதிப் பங்காளர், புனைவுப் பங்காளர், வரலாற்றியலுமைப் பங்காளர் என மூவரும் ஒரு காப்பியத்துட் தேவை. அதே போது, கதை மாந்தர் உருவாக்கலிற் ”குண நலச் சிக்கனம் (parsimony of characters)” காட்டுவர். கண்ட படி, புனைவுப் பங்காளரைச் சேர்க்கார். சேர்த்தால், அது தேர்ந்த காப்பியம் ஆகாது; வழவழ எனக் கதை நீண்டு, வரலாற்று நம்பகமின்றிக் காப்பியச் சுவை குன்றும்.

பொன்னியின் செல்வன் போலவே சிலப்பதிகாரத்திலும் மூவகைப் பங்காளர் உண்டு. காலத்தால் மூத்த கரிகாற் சோழன், புகார்ச் சோழன் (மாவண்) கிள்ளி (இவன்பெயரை ”மணிமேகலை”யால் அறிகிறோம்), உறையூர்ச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன், நெடுஞ் செழியன், வெற்றிவேற் செழியன், சேரன் செங்குட்டுவன், அவன் உறவாய் முன்சொன்ன 8 சேரர், கனக விசயர், நூற்றுவர் கன்னர் போன்றோர் வரலாற்றுறுதி மாந்தராவர். [இலங்கைக் கயவாகு, மாளுவ வேந்தர் போன்றோரை இங்குக் கணக்கில் எடுக்க வில்லை. ஏனெனில், என் நூலில், ”பதிகம், வரந்தரு காதை போன்றவற்றை இளங்கோ படைத்திருக்க வாய்ப்பில்லை” என்ற ஐயப்பாட்டை வெளிப்படுத்தியிருப்பேன்.}

கண்ணகியும் வரலாற்றுப் பெண்ணே. அவளை நினைவுட்டும் அம்மன், பகவதி கோயில்கள் இன்றும் பலவுண்டு. (தமிழகத்திற் பல கோயில்கள், செயற்கரிய செய்து உயிர் துறந்த நாயகிகளுக்கு நினைவாற் கட்டிய பள்ளிப் படைகளே. காட்டு: சென்னைக்கருகில் திருவேற்காட்டு, மாங்காட்டு அம்மன் கோயில்கள்) தமிழக, கேரள நாட்டார் வழக்குகள், கொடுங்களூர் பகவதி மரபுகள், ஈழத்தின் (கிழக்கு மாகாண மட்டக்களப்பிற்குப் பக்கம்) பத்தினிப் பரசல்கள், கன்னடச் “சந்திராவின் பழிவாங்கற்” கதை, எனப் பலவும் அவள் வரலாற்றுறுதியைக் காட்டுகின்றன. பந்துறாமல் உறுத்தி (independent confirmation) எருக்காட்டூர் தாயங் கண்ணனாரின் அகநானூறு 149ஆம் பாடலும், மருதன் இளநாகனாரின் நற்றிணை 216ஆம் பாடலும் சிலம்போடு பொருந்தி ஒருமுலையறுத்த திருமாவுண்ணியை அடையாளங் காட்டுகின்றன.

கண்ணகி நிகழ்வுகளைச் சாத்தனார் மூலம், செங்குன்ற நிகழ்வுகளைக் குன்றக் குரவர் மூலம் கேள்விப்பட்டு இளங்கோ காப்பியமெழுதுகிறார். ”கதைசொன்ன சாத்தனார் கற்பனை பேசினார்” என்பது கேள்வியையே இரப்பதாகும். சாத்தனார் இளங்கோவின் கற்பிதமெனிற் குணநலச் சிக்கனக் கொள்கைப் படி, அவர் காப்பியத்துள் வரத் தேவையில்லையே? இளங்கோவே நேரடிக் கதை சொல்லலாமே?” - என்ற கேள்வியெழும். உள்ளமைத் தேவையால், சாத்தனார் என்பார் வரலாற்றிலிருந்ததை முடிவு செய்யலாம்.

காப்பியத்துள் கோவலன், மாதவியின் வரலாற்றிருப்பு சற்று நிரடுகிறது. இவர் போன்றோர் முதல் வகையல்ல. மூன்றாம் வகையாய் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. மாசாத்தன், மாநாய்கன், பொற்கொல்லன், அழும்பில் வேள், வில்லவன் கோதை போன்றோரும் மூன்றாம் பக்கலாகலாம். மாதவி மகள் மணிமேகலைக்கு எந்த வரலாற்றுச் சான்றுமில்லை, அவள் இரண்டாம் வகையோ, மூன்றாம் வகையோ எனத் தடுமாறுகிறோம். (நீலகேசிக் காப்பியத்திற் கற்பனை நீலகேசியே, காப்பியத் தலைவி ஆவாள்.)

கதைநாயகரின் தாய்மார், மாதவியின் தாய் சித்திராபதி, வசந்தமாலை, கவுந்தியடிகள், தேவந்தி, மாடலன், கோசிகன், மாங்காட்டு மறையோன், மாதரி, ஐயை போன்றோர் 2 ஆமவராய், முற்றிலும் புனைப்பங்காளராய், காப்பியத்தில் அமைவதாகவே எமக்குப் படுகிறது. இத்தனை புனைப் பங்காளர் வருவதாலேயே, சிலப்பதிகாரம் வரலாற்றுக் காப்பியமல்ல என்று சொல்லிவிட முடியாது.

வரலாற்று இயலுமை:

”சிலம்பு நிகழ்வுகள் சிலவற்றிற்கு வரலாற்று இயலுமையுண்டா?” எனில் ஆம் எனலாம். வடக்கே போன கரிகாலனின் படையெடுப்பை நினைவு கூர்வதிலும், புகார் நகர விவரிப்பிலும் வரலாற்றியலுமை வெளிப்படும். அப் படையெடுப்பு குமுகாயத்தில் ஆழப்பதிந்திருந்தால் மட்டுமே காப்பியத்திற் பதிய முடியும். அற்றுவானத்தில் இருந்து இதைக் குதிப்பித்து, நிகழ்ப்பொய் சொல்லி ஒரு காப்பியத்தை அரங்கேற்ற முடியாது. காப்பியத்துள் மோரியர் என்போர் வம்பர் - புதியவர் என்று சொல்லப்படும்; பொய்யெனில் புதியவரென்ற கருத்து எழுமா? முதற் கரிகாலன் படையெடுப்பு ”அந்நாளாய்” இறந்த காலத்திற் குறிப்பிடப் படும். எனவே,

மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக்
கோன் இறை கொடுத்த கொற்றப் பந்தரும்
மகத நன்னாட்டு வாள்வாய் வேந்தன்
பகைப்புறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும்
அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த
நிவந்தோங்கு மரபிற் தோரண வாயிலும்

என்ற விவரிப்பு கற்பனையாக இருக்க வழியில்லை. (மேலுள்ள வரிகளிற் கோன், வேந்தன் என்ற இருவகைப் பிரிப்பு. இறை, பகை, உவகை எனும் மூவகைப் பார்வை, பந்தர், மண்டபம், வாயில் என்ற மூவகைக் கட்டுமானம் இவையெல்லாம் வேறுபட்ட விவரிப்பாய் ஏன் வந்துள்ளன?) ”கரிகாலன் பெற்ற வெற்றி பெரிதா, சிறிதா? எச் சூழ்நிலையில் நடந்தது? இளங்கோ பேனைப் பெருமாள் ஆக்கினாரா?” என்ற விவரணையில் வேண்டின், இரு வேறாக வாதிக்கலாம். ஆனாற் பட்டகையே (fact) பழுதாகிவிட முடியாது.

புகார் நகர விவரிப்பு உண்மையென்று புலனாக, புகாரொட்டிய தொல்லாய்வு / கடலாய்வு நடைபெற வேண்டும். குறிப்பாகத் தமிழகத் தொல்லியல் துறை [16], எசு.ஆர்.இராவ் [17], கிரஃகாம் ஆன்காக் [18] ஆகியோர் முயற்சிகளைத் தொடர வேண்டும். தஞ்சைப் பல்கலைக் கழக வழிகாட்டலிற் பெருங் கடலாய்வைத் தமிழக அரசு செய்யப்போவதாக அண்மையிற் கேள்வி யுற்றேன். இது நடப்பின் நல்லது.

மதுரைக் காண்டத்தில் கோன்முறை பிழைத்த கொற்ற வேந்தனான நெடுஞ் செழியன் ஆராயாது தவறியதும், அவனோடு கோத்தொழிலர் (bureaucrats) கோமுறை (governance) தவறியதும், கணவன் கொலைக்களப் பட்டபின் அரசன் முன் வழக்குரைத்த கண்ணகி முடிவில் முலை திருகி எறிந்ததும், மதுரை தீக்கிரையானதும் அன்றைய நிலையிற் குறிப்பிடத் தக்கவை தான்.

இந்நிகழ்வுகளின் உண்மைக்கு முன்னே சொன்னதுபோல் இரு சான்றுகள் உண்டு. கண்ணகி முலை திருகியெறிந்ததை மருதன் இளநாகனாரின் நற்றிணை 216 பதிவு செய்யும். அதில் வரும் திருமாவுண்ணி கண்ணகியினும் வேறுபட்டாள் என்பது சரியில்லை. ”பெண்ணொருத்தி முலை திருகியெறிந்து நகரம் தீக்கிரையாகுமா? – என்ற கேள்விக்குள் நான் போகவில்லை. இலக்கியப் பாங்கில், நாடகக் காப்பிய உத்தியாய், பொதுமக்கள் நம்பிக்கையாய், அதை எளிதாய் ஏற்க முடியும். ஏற்கனவே வேறு காரணத்தில் அரசன் மேல் கோவங் கொண்ட மக்கள், கண்ணகி விதயத்தில் மன்னனை முற்றுகையிட்டு, அதனால் வன்முறை தெறித்து, அரண்மனை தீக்கிரை ஆனதோ, என்னவோ? ஆசிரியர் அதைத் தெய்வச் செயலாய் உரைத்தார் போலும்.

மதுரை தீக்கிரையான பின் பட்டத்திற்கு வந்த வெற்றிவேற் செழியன் பாண்டியர் குலத்தின் மேல் வீழ்ந்த பழியைத் துடைக்க, வெஞ்சினங் கொண்டு, வஞ்சிமேற் சமரெடுத்து, தண்டனை கொடுக்கும் தும்பைப் போரிட்டு (punitiive expedition), கண்ணகியின் படிமத்தை வவ்வித் திரும்புகிறான். எருக்காட்டூர்த் தாயங் கண்ணனாரின் அகநானூறு 149 இதைத் தெளிவாய்ப் பதிவு செய்கிறது, (இருப்பினும் சிலம்பைக் கற்பனையெனும் பரப்புரையிற் பல வரலாற்று ஆய்வாளர் ஆழ்ந்து போய்த் தடுமாறுகிறார்.) தவிரச் சேரன் நிறுவிய படிமத்தைப் பாண்டியன் வவ்விப் போனதை மெய்ப்பிப்பதாய், இன்றும் கொடுங்களூர் மூலத் திருநிலை (சந்நிதி) 4 பக்கமும் மூடி, மூலப் படிமமின்றி பகரிப் (Substitute) படிமத்திற் பகவதி எழுந்தருளுகிறாள்.

இப்படி நற்றிணை, அகநானூறு என 2 பாட்டுக்கள் கண்ணகி என்பாளின்  இயலுமைக்குச் சான்றாகத் தெரிவதை முன்னாள் ஆய்வர் கண்டு கொள்ளாததும், இன்று கொடுங்களூர் பகவதி கோயிலில் படிமம் இல்லாததும் எனக்கு வியப்பே. கால ஒழுங்குமுறையில் ஏற்பட்ட குழப்பம் இம்முரணுக்குக் காரணம் போலும். முன்னாய்வாளர் சிலம்புக் காலத்தை 200 ஆண்டுகள் பின் தள்ளியதால், ஒருமுலை அறுத்த திருமாவுண்ணி அவருக்கு வேறாகவே தெரிவாள். Wrong misplaced theory precedes the fact here and confuses the interpretation. அதன் விளைவாகச் செழியன் படிமம் வவ்வியதும் கூடப் புறக்கணிக்கப்படும். குழப்பம் ஆய்வாளர் புரிதலிற்றான் உள்ளது; பட்டகைகளில் அல்ல.

செங்குட்டுவன் படையெடுப்பும், கல்லெடுப்பின் வரலாற்றியலுமையும், நூற்றுவர் கன்னர் பற்றிய விதப்புக் கூற்றாலும், இற்றைப் பத்தினி வழி பாட்டிலும் பெறப்படுகிறது. எப்போது சான்றுகளைக் (சாட்சிகளைக்) கொணர்வோம்? நடக்கும் நிகழ்ச்சி உண்மையெனில் மட்டுமல்லவா?. சேரன் படையெடுப்பு வெறும் வெற்றுப் புகழ்ச்சியெனில், காப்பியத்தில் நூற்றுவர் கன்னர் ஏன் வருகிறார்? சேரனின் பெருங் கழற்றம் (proclamation) போதுமே? படையெடுப்பும், நூற்றுவர் கன்னராட்சியும் முகன்மையெனில் மட்டுமே, சஞ்சயன் பற்றியும், காசிக்கருகே கங்கை கடக்க வங்கப் பரப்பு உதவியதும், குறிப்பிடப்பட வேண்டும்.

”மத்திம நன்னாட்டு வாரணம்” என்பது சேரர்-கனகர் போர்ப் பறந்தலைக்கு அருகிருந்த வாரணாசியைக் குறிக்கிறது. பொ.உ.முதல் நூற்றாண்டு “Periplus of the Erythryean Sea” இல் சதகர்ணி, படித்தானம், பிருகு கச்சம், சோப்பாரா, கல்யாண் போன்ற இடங்கள் பேசப் படுவதும், கன்னர் நாட்டின் வணிகப் பரிமாற்றங்களும் தக்கணப் பாதையின் [19] முகன்மையை உணர்த்தும். அக் காலத்திற் படித்தானம் (>பயித்தானம்>பைத்தான் (=Paithan) போகாது, நூற்றுவர் கன்னரை நள்ளிக் கொள்ளாது (நட்புக் கொள்ளாது) எந்தத் தெற்குப் படையும் வடக்கே போக முடியுமா?

”வடக்கே கல்வெட்டு, ஆவணச் சான்றில்லை” என்று செங்குட்டுவன் படையெடுப்பை மறுப்போரே இந்திய வரலாற்றாய்வில் மிகுதி. தமிழ் ஆய்வாளரோ இது கண்டு வாளாவிருக்கிறோம். 18 மாத இராமாயணப் போர், 18 நாள் பாரதப் போர் ஆகியவை உள்ளமையென வாதிடும் இந்தியவியலார், 18 நாழிகை செங்குட்டுவ – கனக விசயப் போரைக் கற்பனை என்றால்  என் சொல்வது? ”கடவுள் எழுதவோர் கல்லெடுக்க முனைந்த போர்” 18 நாழிகையில் முடிந்த போது, (This is just a skirmish in terms of historical impact on Kanwa rule in Magadha.), கனகர் வரலாற்றில் சேரர் வெற்றியை எப்படிக் குறிப்பர்? (18 வடமொழிப் புராணங்களில் கனகர் விவரங்கள் அரச பட்டியலாக மட்டுமே இருக்கின்றன; மேல் விவரங்கள் எங்கும் கிடையாது.)

சமயக் குறிப்புக்களை சிலம்பின் மேலேற்றுதல்:

காப்பியத்தின் வரலாற்று இயலுமை பற்றி விரிவாகப் பேசிய நாம், ”சமயக் குறிக்கோள் சிலம்பிற்குண்டு” என்று ஆய்வாளர் சொல்வதையும் பார்க்க வேண்டும். மணிமேகலை, புத்தம் பேசுவது போல், சிந்தாமணி / நீலகேசி செயினம் பேசுவது போல், சிலப்பதிகாரம் ஒரு குறிப்பிட்ட சமயத்திற்குப் பரிந்து பேசுவதல்ல. ஆயினும் சிலம்பைச் சங்கம் மருவிய காலத்திற் பொருத்தி, அது செயினஞ் சார்ந்தது என்று சொல்வது தன்மயப் புரிதலே ஆகும். சைவம், வைணவம், சாக்தம், பவுத்தம், சமணம், ஆசீவகம் ஆகிய சமயக் கருத்துகளை இளங்கோ வெளிப்படுத்தினார் எனும் திரு.இரா.நாகசாமி கூற்றுஞ் சரியல்ல. வெவ்வேறு சமயப் பழக்கங்களை இளங்கோ குறித்ததற்கும் சமயச் சார்பிற்கும் பெருத்த வேறுபாடுண்டு. வரந்தரு காதையன்றி சமயக் கருத்துக்கள் சிலம்பு நூலெங்குஞ் சொல்லப்படவில்லை. தவிர, வரந்தரு காதை என்பது இளங்கோ இயற்றியதாய்த் தோன்றவில்லை

சமணம் என்பது சங்க காலத்திற் (பொ.உ.மு. 600 - பொ.உ. 300) பொதுமை யாகிச் செயினம், புத்தம், ஆசீவகம் என்ற வேதமறுப்பு நெறிகள் மூன்றையும் குறிக்கும். பொ.உ. 300க்குப் பின் தான், சிறிதுசிறிதாய் ஆசீவகம் அழிந்து, புத்தம் தமிழகத்திற் குறைந்து, ஈழத்திற் அது சிறந்த நிலையில், ”சமணம்” என்ற சொல் விதப்பாய்ச் செயினத்தை மட்டுமே தமிழ்நாட்டில் பிற்காலத்தில் குறித்தது. [சங்க காலத்துத் தமிழிக் கல்வெட்டுக்களிலும் இது போல், ஆசீவக, புத்தச் சார்புகளை ஒதுக்கி, அவற்றை வெறும் செயினமாய்ப் பார்ப்பது சரி யல்ல. சங்க காலத்தில் சமணத்தை விதக்காது, பொதுவாய் நோக்கினால், ”சிலம்பு பேசுவது செயினமா, ஆசீவகமா?” என்ற கேள்வியெழும். குறிப்பாக ஊழ்வினை என்பது செயினத்தின் முற்பிறவி வினைப்பயன் குறித்ததா, அன்றி ஆசீவகத்தின் நியதியைக் குறித்ததா? - என்பதில் ஆய்வு வேறுபடும்.

இன்னும் விதப்பாய் ஊசுடனைச் சேர்ந்த திரு.நா.கணேசன், மு.இராகவ ஐயங்காரரைப் பின்பற்றிச் சிலப்பதிகாரம் விண்ணவம் சார்ந்ததென்பார் [20]. (இவரே இன்னொருபொழுதிற் சிலம்பைச் செயினமென்பார். நேரத்திற்குத் தக்கபடி பேசுபவரிடம் என்ன உரையாடுவது?) இவர் கூற்றின் படிக் கோவலன் என்பான் கண்ணனையும், கண்ணகி - இலக்குமியையும், மாதவி – முல்லை ஆய மகளிரைக் குறிக்கிறர்களாம். இப்படித் தற் குறிப்பேற்றங்களை திரு. நா.கணேசன் இளங்கோவின் மேற் சுமத்துவார். இது போல வேத  நெறிக்கு ஆதாரங் காட்ட விழைவாருமுண்டு. ”வேதங்களை ஏற்றிப் போற்றும் தமிழ் இலக்கியங்கள்” என்ற நூலில் (கே.சி.லட்சுமி நாராயணன், எல்.கே.எம். பப்ளிகேஷன், சென்னை 600017) சிலம்பு மட்டுமல்ல, எல்லாச் சங்க இலக்கியங்களும் வேதநெறிக்கு அணைவாய்ச் சொல்லப் படும். மைக்கேல் தானினோ என்ற இந்துத்துவ நெறியாளரும் இதே கருத்தை இணையத்திற் சொல்வார் [21]. இது இந்துத்துவக் காலம்.

தந்தஞ் சமயக் குறிப்புகளைச் சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் ஆகியவற்றின் மேல் ஏற்றுவது காலங் காலமாய் இங்கு நடக்கிறது. சங்க இலக்கியங்களுள், இறைச் சார்பும், இறை மறுப்பும், வேதநெறி விதப்பும், வேதநெறி மறுப்பும், சாங்கியம், ஆசீவகம், செயினம், புத்தம், விதப்பியம் (வைஷேஸிஷம். இதைச் சிறப்பியம் என்றுஞ் சொல்வதுண்டு), சிவம், விண்ணவம் எனப் பல்வேறு சமயக் கருத்துக்களும் இழைகின்றன. சில பாக்கள் இன்னதென்று விதக்க முடியாதும் உள்ளன. நான் புரிந்துகொண்ட வரை சங்க இலக்கியம் என்பது எல்லாங் கலந்த வண்ணக் கோலந்தான்; எல்லா வழிபாடுகளும், சில போது மெய்யியல்களும் கூடத் தொட்டுக் காட்டப் படுகின்றன. சங்க இலக்கியம் அக்காலத் தமிழர் நாகரிகத்தை அப்படியே மறுபளித்து (reflected), குறிப்பிட்ட எச் சமய நெறியையும் விதப்பாகச் சுட்டவில்லை என்பதே என் புரிதல்.

பஞ்ச தந்திரம் பற்றிய அடிப்படைச் செய்திகள்:

வேதநெறியைச் சிறப்பாக்கி, வடமொழியைப் பின்புலமாக்கி, தமிழ் இலக்கியத்தை இவை இரண்டிற்கும் பின்பற்றி என ஆக்குவது ஆழ்ந்து ஓர்ந்தால் ஒருபாற் கோடலே. பஞ்ச தந்திரத்தை முன்னிறுத்தி சிலம்பிற்குத் தோற்றமோதும் திரு.இரா.நாகசாமி அண்மையிற் கருத்துச் சொன்னதும் அப்படியொரு செயற்பாடே.

பஞ்ச தந்திரம் என்பது சுங்கர் காலத்திலும், அதற்கு முன்னும் வாய்மொழியாய் இருந்து, சுங்கருக்குப் பின் அறிவார்ந்த புலவரால் தொகுக்கப்பெற்ற நியதிக் கதை நூலாகும். மோரியர் காலத்து அருத்த சாற்றம் (>அர்த்த சாஸ்த்ரம்) எப்படி வேத நெறிக்குப் பங்கமில்லாததோ, அதுபோலப் பஞ்ச தந்திரமுஞ் செல்கிறது. (அருத்த சாற்றம் போலவே பஞ்ச தந்திரமும் தமிழிலக்கிய, வரலாற்றாய்வாளர் படிக்க வேண்டியதே.)

பல்வேறு காலங்களிற் பஞ்ச தந்திரத்துள் இடைச்செருகல் இருந்திருக்கலாம். பல்வேறு தனிக் கதைகள் புத்த சாதகக் கதைகளோடும், மற்ற நாட்டுப்புறக் கதைகளோடும் தொடர்புற்றதாகச் சொல்கிறார் [22]. {பஞ்ச தந்திரத்தின் நாலாம் பகுதி மூலக் கதையான ”குரங்கும் முதலையும்” பொ.உ.மு. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாய்க் கருதப்படும் பார்ஹட் புத்தமதச் சிற்பங்களில் பொதிந்துள்ளதாகச் சொல்வார் [23]. திரு.இரா.நாகசாமியும் இதை உறுதி செய்கிறார் [24].} பின்னாற் பல மொழிகளுக்கும் பஞ்ச தந்திரம் பெயர்க்கப் பட்டு மீண்டும் வடமொழிக்குள் விரிவுஞ் சுருக்கமும் ஆகி எத்தனை முறை சங்கதத்தில் நூலானதோ? – தெரியாது. பஞ்ச தந்திரம் என்ற நூல் சங்கதத்தில் தான் முதலில் எழுந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. (கம்பனின் இராமாவதாரம் கிடைத்து வான்மீகி நூல் ஒருவேளை கிட்டாது போயின், தமிழில் தான் இராமாயணம் முதலில் எழுந்ததெனச் சொல்ல முடியுமோ?).

மாற்றுக் கருத்துள்ள மூவகைச் சமண நெறியினர் இந்நூலை முதலில் எழுதியிருக்க வாய்ப்பில்லை. அதே பொழுது, வேதநெறிப் போட்டியாற் தூண்டப் பெற்று சமண நெறியினர் வழிநூல் எழுதியிருக்கலாம். (காட்டு: பூர்ண பத்ர சூரி என்ற செயின நெறியரின் பஞ்சாக்கியான நூல்). இப்போது பலருக்கும் அடிப்படையாக எடுகோளாகக் (reference) கொள்ளும் வடமொழிப் பஞ்ச தந்திர வெளியீடு பல நூற்றாண்டுகள் தள்ளி பொ.உ.1199 இல் தான் இறுதி வடிவம் பெற்றதென ஆய்வாளர் சொல்கிறார் [25]. பாட்டு இடையிட்ட உரைநடையான இவ்வரத்தின் (version) ஆசிரியர் யாரென்று தெரியாது, விஷ்ணு சர்மனின் பஞ்ச தந்திரம் என்றே இன்னுங் குறிப்பிடுகின்றனர்.

12 ஆம் நூற்றாண்டு வடமொழி நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு 1859 இல் முதலில் எழுந்தது. மீண்டும் 1924 இல் சுதான்லி ரைசு (Stanly Rice) மூலமும், 1925 இல் புகழ்பெற்ற ஆர்த்தர். டபிள்யூ ரைடர் (Arthur W. Ryder) மூலமும் மொழி பெயர்ப்புக்கள் எழுந்தன [26]. (ரைடர் மொழிபெயர்ப்பு சிறப்பானது. அதிற், பாட்டைப் பாட்டாகவும் உரைநடையை உரைநடையாகவும் மொழி பெயர்த்திருப்பார்.)

இதே 12 ஆம் நூற்றாண்டு நூல், சங்கத மொழியிலிருந்து, தமிழில் 1907 இல் தாண்டவராய முதலியாரால் அற்றைப் பேச்சு வழக்கு விரவிய பண்டித நடையிற், சுருங்க, மொழிபெயர்க்கப் பட்டது. ”Digital library of India" -வில் இருக்கும் இம் மொழிபெயர்ப்பு நூல் பல்வேறு தட்டச்சுப் பிழைகளோடும், தவறுகளோடும் புணர்ச்சொற்கள் தவறாகப் பிரிக்கப்பட்டும், மதுரைத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது [27]. அண்மையில் 12 ஆம் நூற்றாண்டு வடமொழி நூல் “வாழ்வியல் நீதிக் கொத்து எனும் பஞ்ச தந்திர நீதிக் கதைகள்” எனும் தலைப்பில் 2010 இல் வானவில் புத்தகாலயத்தினரால் [29/(7/3) E பிளாக், முதல் தளம், மேட்லி சாலை, தி.நகர், சென்னை 600017 - ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி அலுவலம் எதிரில். தொலைபேசி: 24342771, 65279654] மொழிபெயர்த்து வெளியிடப் பட்டுள்ளது. (இவ்வெளியீட்டிற் சங்கதச் சொலவங்கள், தடித்த எழுத்தில் உரைநடையாகவே, தமிழுக்குப் பெயர்க்கப் பட்டுள்ளன.) இம்மொழிபெயர்ப்பே இப்போதைக்கு என் கட்டுரையில் எடுகோளாகச் சொல்லப் படுகிறது.

மித்ரபேதம் (= நட்பு வேற்றம்), சுகிர்த லாபம் (= நட்புப் பேறு), சந்தி விக்ரகம் (= அடுத்துக் கெடுப்பு), அர்த்த நாசம் அல்லது லப்த ஹானி (= பேறழிவு), அசம்பிரேக்ஷிய கார்யத்வம் (= ஆராயாச் செய்கை) என்ற 5 தந்திரங்களை விளக்குவதாய் 5 மூலக் கதைகளும் அவற்றுளே சங்கிலித் தொடராய் (33+12+17+11+12 =) 85 துணைக் கதைகளுஞ் சொல்லப் படும். (84 என்ற கணக்கும் உண்டு.) நட்புப் பேற்று மூலக் கதைக்குப் பின், ”இரண்டு தலைப் பறவை”க்கு அப்புறம், இலகுபதன் எனும் காக்கைக்கு மறுமொழியாய், இரணியனெனும் எலி சொல்வதாய், 3 செய்திகள் வரும். இம் முச்செய்திகளும் பஞ்சதந்திர மூல நூலின் (Pancha thanthra original) காலத்தை நிறுவ உதவுகின்றன. அவையாவன:

1. “சம்ஸ்கிருத இலக்கணத்தின் தந்தையான பாணினியை ஒரு சிங்கம் கொன்றுவிட்டது”
2. ”மீமாம்ச தத்துவ தரிசனம் அருளிய ஜைமினி முனிவரை ஒரு மதயானை கொன்றது”
3. “யாப்பு இலக்கணக் கருவூலமான பிங்கள முனிவரை ஒரு முதலை கொன்றது”

பாணினி அஷ்டத்யாயி படைத்தது மோரியர் காலம் பொ.உ.மு. 4/3 ஆம் நூற்றாண்டு என்பர் [28]. {பாணினிக்கு மாபாடிய (Mahabhasyam) உரை எழுதிய பதஞ்சலி, சுங்கர் காலமாம் [29].} பூர்வ மீமாம்ச தத்துவ தரிசனஞ் செய்த ஜைமினி பொ.உ.மு. 3 அல்லது 2 ஆம் நூற்றாண்டாகும் [30]. பிங்களர் செய்த சங்கத யாப்பிலக்கணமான சந்த சாற்றம் (சந்த சூத்ரம் என்றுஞ் சொல்வர்) சுங்கர் கால முடிவில் பொ.உ.மு. முதல் நூற்றாண்டில் எழுந்திருக்கலாம் [31]. மேலே சொன்ன செய்திகளை வைத்துப் பார்த்தால், பஞ்சதந்திர மூல ஆவணம் பெரும்பாலும் பொ.உ.மு. முதல் நூற்றாண்டில் கனகர் காலத்தில் எழுந்திருக்கவே வாய்ப்பு அதிகம். {கனகரின் வாசுதேவன் காலம் - பொ.உ.மு. 75-66 என்றும், பூமி மித்ரன் காலம் பொ.உ.மு. 66-52 என்றும், நாராயணன் காலம் பொ.உ.மு. 52-40 என்றும், சுசர்மன் காலம் பொ.உ.மு. 40-30 என்றும் சொல்வர் [32]}.

கதை பிறந்த வரலாறாய் பஞ்ச தந்திரத்தில் ஒரு முன்னுரை வரும். சுதர்சன் என்றொரு மகத மன்னன் இருந்தானாம். (“இவன் கனக சுசர்மனோ? சுசர்மன் – சுதர்மன் – சுதர்சன் என்ற பெருமி (brahmi) எழுத்துக் குழப்பமும் ஏற்பட்டிருக்குமோ?” எனும் ஐயம் இக்கட்டுரையாசிரியனுக்கு உண்டு. சர்மன் எனும் குடிப்பெயர் பார்ப்பனருக்கு உண்டு. சுங்கரும், கனவர்/கனகரும் பார்ப்பனக் குடியினர். அப்படியாயின், பஞ்சதந்திர மூல ஆவணக் காலம் பெரும்பாலும் பொ.உ.மு.40-30க்கு இடைப்படும்.) அவனுக்குப் பல்லாண்டு தவத்தின் பின் 3 பிள்ளைகள் பிறந்து, வசு சக்தி, உக்ர சக்தி, அனந்த சக்தி என்று பெயரிட்டு அரசன் அன்புடன் வளர்த்தான். பல்வேறு ஏந்துகள் கொட்டிக் கிடந்தும், அறிவு மேம்பாடின்றி இளவரசர் இருக்க, அரசவை கூட்டி வழிவகை கேட்ட போது, இம் 3 இளவரசரை ஆறே மாதத்திற் கல்வி, கேள்விகளிற் சிறந்தவர் ஆக்கச் சோமசன்மன் என்பான் சூளுரைத்தான். (பஞ்ச தந்திர ஆசிரியன் விஷ்ணுசர்மனும், சோமசன்மனும் ஒருவரா - தெரியாது.)

சூளுரை முடிவில் 3 இளவரசரையும் தன் இல்லம் அழைத்துச் சென்று, சோம சன்மன் பேணி வந்திருக்கிறான். இளவரசரைக் கூட்டிக் காடு, மேடு, மலை எனச் சுற்றிக் களைத்து, இந்தத் தந்திரக் கதைகளைச் சொல்லியிருக்கிறான். கதைகளைக் கேட்டு இளவரசர் அறிவு மேம்பட்டதா என்பது தெரியாது. {பொ.உ.மு.30 இல் கனகர் ஆட்சி முடிந்து நூற்றுவர் கன்னரின் நேரடி ஆட்சி விதிஷாவில் தொடங்கியது [33].}

பஞ்ச தந்திரம் நிகழிடங்களாய் பாடலி புத்திரம், இராசக் கிருகம், மதுரா, அயோத்தி, காசி, உச்செயினி, பிருகு கச்சம் (இற்றைய பருச். நருமதையாறு கடலிற் சேருந் துறை), படித்தானம் (>ப்ரதிட்டானம் = இக்கால ஔரங்காபாதிற்கு அருகிலுள்ளது), யமுனை, கங்கை, பாகீரதி, நருமதை, கோதாவரி, திரிகூட மலை, தண்டகாரண்யம், போன்ற இயலூர்களும், ஆற்றங்கரைகளும், இருப்பிடங்களும், மகிளா ரூப்யம், வர்த்த மானம், புண்டர வர்த்தனம், பிரமதா ரூப்யம், சண்பகாவதி, பட்டண புரி, அமராவதி, நாராயண நகரம், பண்டா புரம், துளசா புரம், மது புரம் போன்ற கற்பித இடங்களும் பஞ்சதந்திரத்தில் சொல்லப்பெறும்.

பஞ்ச தந்திரத்தின் இயலூர்களைப் பார்த்தால், மகதப் பார்வையில், மத்திய தேசமும் பழந்தக்கண தேசமுமே கதைக்களங்கள் என்பது புரியும். (தக்கணம் என்பது நூற்றுவர் கன்னர் ஆண்ட படித்தானம் வரையிலாகும். அதன் பொருள் நீட்டம் குப்தர் காலத்துக்குப் பிறகே தெற்கில் இன்னும் விரிந்தது). நட்பு வேற்றத்தில் வரும் “நன்றி மறந்த தட்டான்” என்னும் கதை, ஆராயாச் செய்கையில் வரும் ”கீரிப்பிள்ளையும் பார்ப்பனியும்” என்னும் கதை ஆகியவை உட்பட, எந்தக் கதையும் பஞ்ச தந்திரத்தின் வ்ழி பார்த்தால், அவை தமிழகத்தில் நடந்ததே இல்லை. இது மிக அழுத்தமாய்க் குறிப்பிட வேண்டிய செய்தியாகும்.

எடுகோள்கள்:

14. https://groups.google.com/forum/?fromgroups#!topic/mintamil/izKBBBuFgWw;
15. https://groups.google.com/forum/?fromgroups#!topic/santhavasantham/izKBBBuFgWw;
16. http://www.indianetzone.com/26/excavation_at_poompuhar_tamil_nadu.htm
17. Rao, S..R et al, 1995-96 “Underwater explorations off Poompuhar” in J.of.Marine Archaeology, Society for Marine Archaeology, Goa, 5-6, pp7-22. Also http://www.themua.org/collections/archive/files/d7a46a40fffd7b7c0efe02709b5a81c1.pdf
18. Graham Hancock, “Underword – Flooded Kingdoms of the Ice Age – Penguin Books, 2002. Pp 3-6, 150, 208-209, 221, 258-261, 602
19. http://archive.org/details/periplusoferythr00schouoft;
20. இராம.கி, .சிலம்பின் காலம், தமிழினி பதிப்பகம், 102, பாரதியார் சாலை, இராயப்பேட்டை, சென்னை 14. 2011, பக். 125- 134
21. http://micheldanino.voiceofdharma.com/tamilculture.html
22. http://en.wikipedia.org/wiki/Jataka_tales#cite_note-7
23. http://www.orientalthane.com/speeches/speech2008.htm; Also see http://www.indianetzone.com/36/sculpture_tripurantakesvara_temple_indian_sculpture.htm;
24. Same as ref.15
25. http://en.wikipedia.org/wiki/Panchatantra
26. Panchatantra, translated from Sanskrit by Arthur.W.Ryder, Jaico Publishing House, First Jaico impression 1949, 35th Jaico impression 2012.
27. http://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0406.pdf
28. Sheldon Pollock, The Language of the Gods in the world of Men, Permanent Black, Himalayana, Mall Road, Ranikhet Cantt, Ranikhet 263645, 2007 p 45,
29. http://en.wikipedia.org/wiki/Mah%C4%81bh%C4%81%E1%B9%A3ya
30. http://en.wikipedia.org/wiki/Purva_Mimamsa_Sutras
31. http://en.wikipedia.org/wiki/Pingala
32. http://en.wikipedia.org/wiki/Kanva_dynasty
33. http://en.wikipedia.org/wiki/Satavahana_dynasty

No comments: