Friday, February 08, 2013

சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும் - 3

அண்மையில் ”ஒப்பியல் நோக்கில் செவ்விலக்கியக் கோட்பாடுகள்” என்ற தலைப்பில் செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனமும், உலகத் தமிழ்மொழி மெய்யியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனமும் 28/1/2013 - 06/2/2013 இல் இணைந்து நடத்திய தமிழாசிரியர்களுக்கான 10 நாள் பயிலரங்கில் 5/2/2013 அன்று பிற்பகல், “சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும்” என்ற தலைப்பில் நான் ஓர் உரையாற்றினேன். அதன் எழுத்து வடிவக் கட்டுரை அவர்கள் வெளியிடும் பொத்தகத்திற் பங்கு பெறுகிறது. கட்டுரை மூன்று பகுதிகளாகி ”www.valavu.blogspot.com” என்னும் என் வலைப்பதிவிலும், ஒரு சில மடற்குழுக்களிலும் இடுகைகளாக இப்பொழுது வெளிவருகிறது. இது இறுதியாய் வரும் மூன்றாம் பகுதி. உங்கள் வாசிப்பிற்கு,

அன்புடன்,
இராம.கி.

”கீரிப் பிள்ளையும் பார்ப்பனியும்” :

ஐந்தாம் தந்திர மூலக்கதையில் சமணத் துறவிகளை (சமணம் எனும்போது, இது புத்தமா, செயினமா, ஆசீவகமா, என்று உறுதியாய்த் தெரியாது.) அடித்துக்கொன்ற மணிபத்ரன் கதை சொல்லப் படும். அதைக் கண்டு துணுக்குறாது (சமணத்துறவி என்று பலராலும் ஐயப்படும்) இளங்கோ அத் தந்திரத்தின் முதற் துணைக்கதையைத் (கீரிப் பிள்ளையும் பார்ப்பனியும்) தன்னுடைய காப்பியத்தில் ஓர் எடுகோளாய்க் கொண்டார் என்பது பெரும் வியப்பையே தருகிறது. (இளங்கோ உண்மையில் சமணர் தானா? அவருடைய சமயத்தில் அவருக்கு அக்கறையில்லையா?) அம்மூலக் கதையின் முடிவில் கீழுள்ளது போல் வரும்.

------------------------------------

ஆராயாது, துறவிகளை அடித்துக் கொன்ற நாவிதனைக் கழுவிலேற்ற உத்தரவிட்டனர் நீதிபதிகள். “எதையும் நன்றாக ஆராயாமல், நன்றாகத் தெரிந்து கொள்ளாமல், நன்றாக விசாரிக்காமல், நாவிதன் செய்தது போல யாரும் செய்ய முற்படக் கூடாது. அது ஆபத்தை உண்டாக்கும் என்பதற்கு இந்த நிகழ்ச்சியே தக்க உதாரணமாகும். ஆகையால், நன்கு ஆராயாமல் கீரிப் பிள்ளையைக் கொன்ற பிராமணனின் மனைவியைப் போல் பிறகு வருந்த நேரிடும்” என்று கூறினர் நீதிபதிகள். ”அது எப்படி” என்று கேட்டான் மணிபத்ரன்

--------------------------------------

இதற்கப்புறம் தாண்டவராயர் பதிப்பில் கீரிப்பிள்ளை கதை உச்செயினியில் நடந்ததாய் வரும். வானவிற்பதிப்போ அப்படி ஒன்றும் விதந்து குறிப்பிடாது, “ஒருவூர்” என்று பொதுவாகவே சொல்லும். நன்றாய் நினைவு கொள்ளுங்கள் படித்தானத்திற்குத் தெற்கே எந்தப் பஞ்ச தந்திரக் கதையும் நடக்கவே யில்லை. எல்லாம் மகதப் பார்வையில் மத்திய தேசம், பழந் தக்கணத்தைக் களங் கொண்டவை. பின், புகாரென்று சிலம்பில் ஏன் மாறி வருகிறது? புரியவில்லை. இப்படிச் சிலம்பில் வருவது உண்மையில் இளங்கோ எழுதியது தானா? அன்றி யாரோவொருவர் நுழைத்த இடைச்செருகலா? - என்ற கேள்வி நம் மனத்தில் உடனே எழுகிறது. இனி வானவிற் பதிப்பின்படி, ஐந்தாந் தந்திர முதற் துணைக்கதைக்கு வருவோம்.

-------------------------------------------------

”அவசரத்தில் நேர்ந்த கொடுமை”

கதைக்குள் கதை

ஓர் ஊரில், தேவ சர்மா என்னும் ஏழைப் பிராமணனும், அவன் மனைவியும் வாழ்ந்து வந்தனர். பல ஆண்டுகளுக்குப் பின் பிராமணி ஒரு ஆண் குழந்தையையும், ஒரு கீரிப் பிள்ளையையும் பெற்றாள். அதனால் பிராமணனுக்கு அளவற்ற மகிழ்ச்சி உண்டாயிற்று. கணவனும் மனைவியும் குழந்தையைக் கருத்தோடு வளர்த்தனர். கீரிப் பிள்ளையையும் பாசத்தோடு வளர்த்தார்கள் என்றாலும், கொடிய விலங்கு என்பதால், அதனிடம் பிராமணனின் மனைவிக்கு அவ்வளவு நம்பிக்கை உண்டாகவில்லை.

தங்களுடைய பிள்ளை முட்டாளாய் இருந்தாலும், போக்கிரியாய் இருந்தாலும், அழகற்று இருந்தாலும், கெட்ட நடத்தை உடையவனாய் இருந்தாலும் அதனால் பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி குறைவது இல்லை.

ஒரு நாள் பிராமணனின் மனைவி, “நாதா, நான் ஆற்றுக்குச் சென்று நீராடி, நீர் கொண்டு வருகிறேன். குழந்தையைக் கீரி ஒன்றும் செய்துவிடாத படி பார்த்துக் கொள்ளும்” என்று கூறி, குழந்தையைப் பத்திரமாகத் தொட்டிலில் போட்டுவிட்டுச் சென்றாள். மனைவி சென்ற சிறிது நேரத்தில் பிராமணனும் பிச்சை எடுக்க ஆசைப்பட்டு வெளியே போய்விட்டான்

குழந்தைக்குக் கீரி காவலாக இருந்தது. அப்போது கருநாகம் ஒன்று ஒரு துவாரத்திலிருந்து வெளிவந்து, குழந்தையின் தொட்டிலுக்கு அடியில் ஊர்ந்து சென்றது. தன்னுடைய இயற்கைச் சத்துருவான பாம்பைக் கண்ணுற்ற கீரி, குழந்தைக்கு ஏதாவது தீங்கு நேர்ந்துவிடக் கூடாதே என்று கருதி, பாம்பைக் கடித்துத் துண்டு துண்டாக்கியது. தன்னுடைய வீரச்செயலால் மகிழ்ச்சி அடைந்த கீரிப்பிள்ளை இரத்தம் வழியும் வாயோடு தாயின் வரவை எதிர்நோக்கி வாசலில் காத்திருந்தது.

கீரியின் கோலங் கண்ட பிராமணி தன் அருமைக் குழந்தையைக் கீரி கடித்துக் கொன்றுவிட்டதாகக் கருதி, அவசரப்பட்டு, தண்ணீர்க் குடத்தை அப்படியே கீரியின் மீது போட்டுக் கொன்றுவிட்டாள். பிறகு, வீட்டுக்குள் நுழைந்தாள். குழந்தை அமைதியாகத் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தது. தொட்டிலுக்கு அடியில் பாம்பு கொல்லப்பட்டு, துண்டு துண்டாகக் கிடந்தது. அதைக்கண்டதும் பிராமணனின் மனைவி கதறி அழுதாள். “குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய கீரியை அநியாயமாக அவசரப்பட்டுக் கொன்றுவிட்டேனே” என்று அழுது புலம்பிக் கொண்டிருந்தாள். அப்பொழுது பிராமணன் வீட்டுக்கு வந்தான். மனைவியின் அழுகையையும் புலம்பலையும் கண்டு என்னவென்று விசாரித்தான்.

“பேராசைக்கார பிராமணா, உன்னாற்றான் இப்படி நேர்ந்தது. என் சொற்படி கேட்காமல் நீயேன் வீட்டை விட்டு அகன்றாய்? ஆசை வேண்டியது தான். ஆனாற் பேராசை கூடாது. பேராசைக்காரன் தலையில் சக்கரம் சுற்றுகிறது” என்றாள் மனைவி. “எப்படி?” என்றான் பிராமணன். பிராமணி சொல்லத் தொடங்கினாள்

-----------------------------------------------------

”கீரிப்பிள்ளையும் பார்ப்பனியும்” கதைக்குச் சிலப்பதிகாரம் தரும் திருப்பம்:

தேவ சர்மனை எள்ளிய பார்ப்பனி, சக்ரதாரி கதையைத் தொடங்குவாள். சிலம்பிலோ இது வேறு திருகிற் (twist) தடம்மாறிச் செல்லும். இத்திருப்பத்தில், பார்ப்பனி, கணவனோடு இணைந்து செல்லப் பார்க்கிறாளாம். (அரும்பத உரையார் / அடியார்க்கு நல்லார் தரும் விளக்கமும் அப்படித்தான் உள்ளது)

“கீரியைக் கொன்ற கரிசு உன் மேலேறியது; பெரும்பிச்சைக்கு ஆசைப் பட்டதாய் எள்ளினாய்; உன் கையால் வாங்கியுண்ணும் வாழ்வு இனிக் கடவாது. உன்னை விட்டுப் போகிறேன். வடமொழி வாசகம் எழுதிய இந் நல்லேட்டை கடனறி மாந்தர் கையில் கொடுப்பாயாக” என்று சொல்லி மாமறையாளன் (சிலப்பதிகாரக் கூற்றின் படி) வட திசைக்கு ஏகிறான்.

"அபரீக்ஷய ந கர்த்தவ்யம், கர்த்தவ்யம் ஸுபரீக்ஷிதம் பச்சாத்பவதி ஸந்தாபம் ப்ராஹ்மணீ நகுலம் யதா”

என்பது அரும்பதவுரைகாரர் எடுத்துரைத்த சங்கதச் சொலவமாகும். [34]. அது பஞ்சதந்திர சொலவமென்பது திரு.இரா.நாகசாமியின் ஊகம் மட்டுமே. அதன் பட்டகை (fact) இன்று யாருக்கும் தெரியாது. இன்றைக்கு எடுகோளாய்ச் சொல்லும் விஷ்ணு சர்மனின் பஞ்சதந்திரம் 12 ஆம் நூற்றாண்டு நூலாகும். அரும்பதவுரைகாரரின் காலம் 10/11ஆம் நூற்றாண்டென்று மற்ற ஆய்வாளர் சொல்வர். எப்படிப் பார்த்தாலும் அரும்பத உரைகாரர் 12 ஆம் நூற்றாண்டிற்கு முந்தியவர் என்றே கொள்ளமுடியும். குறிப்பிட்ட சொலவம் இருந்த மூல நூலை இன்று வரை யாரும் பார்த்ததில்லை. உண்மை எதுவென்று சிலம்பைப் படித்துத் தெரிவதுமில்லை.

வெறுமே அரும்பத உரைகாரரின் கூற்றை வைத்து, ச.வையாபுரிப் பிள்ளை, ”பஞ்ச தந்திரத்திற்குப் பின்னாற் தோன்றியது சிலப்பதிகாரம்” என்று எப்படிச் சொன்னார்?[35] நமக்குக் கொஞ்சமும் புரியவில்லை. இப்படிப் பொ.உ.மு. 1 நூற்றாண்டின் மூலபாடத்தை யாருமே பார்க்காது, வெறும் 12 ஆம் நூற்றாண்டு சங்கத வழிநூலை மட்டுமே பார்த்து, ”வடமொழிப் பஞ்சதந்திரம் முந்தை, தென்மொழிச் சிலம்பு பிந்தை” என்று ச.வையாபுரிப்பிள்ளை முன்னுரிமை தருவது நமக்கு முற்றிலும் வியப்பாகிறது. மேற்கூறிய பாணினி, ஜைமினி, பிங்கல, சுங்க, கன்னர் – வாதத்தைப் பார்த்தால், சிலம்பிற்கு 35-40 ஆண்டுகள் கழித்தே பஞ்ச தந்திர மூல ஆவணம் எழுந்திருக்க வாய்ப்புண்டு. அதேபொழுது, முன்சொன்னது போல், சில தனிக் கதைகள் இந்தியாவெங்கணும் ஏற்கனவே வாய்மொழியிற் பரவி யிருக்கலாம். அது நூற்றுவர் கன்னர் தேசத்திற்கு அருகிருந்த சேர நாட்டு இளங்கோவுக்கும் (அல்லது அடைக்கலக் காதையின் குறிப்பிட்ட வரிகளுக்குச் சொந்தக்காரருக்கும்) தெரிந்திருக்கலாம்.

அடுத்து, பீடிகைத் தெருவில் (market street), பெருங்குடி வாணிகர் மாட வீதிகளில், மனைதோறும் மறுகி, ஏட்டைத் தூக்கிக் காட்டி ”கருமம் கழியும் பலன்கொள்வார் உண்டோ?“வென அருமறையாட்டி விற்கக் கூவுகிறாள். [அவ்வேட்டைப் படித்துப் பொருளறிந்தால் படிப்பவரின் வினைக்கருமம் ஒழியுமாம்.] கோவலன் ஏட்டை வாங்கித் துயர்துடைத்தான் என்று இளங்கோ எழுதியதும் வியப்பாகிறது.

செயினத்தின்படி வினைப்பயன் என்பது ஒரு ”விற்கும் பண்ட”மல்ல. ஆசீவகத்தின்படி, ஒருவர் நியதியை இன்னொருவருக்கு விற்கமுடியாது. புத்த நெறிப் படியும் ஒருவர் செய்கையின் விளைவு அவரையே சாரும். வேதநெறிப் படி மட்டுமே, வேள்வி நடத்தி, ”பாவ, புண்ணியங்களை” இன்னொருவருக்கு நகர்த்த முடியும். எனவே எழுதிக்கொடுப்பது பார்ப்பனனுக்கும், கூவி விற்பது மனைவிக்கும் சரி. ஆனால், கோவலன் போன்ற ஒரு சமணன் அதை வாங்கியதாய் (இளங்கோ போன்ற) வேறொரு சமணன் (!) எழுத முடியுமோ? எழுதியவன் உண்மையிலேயே சமணன் தானா? படிக்கும் போது வேடிக்கை ஆகிறது. இளங்கோ என்பவன் ஏமாற்றுக்காரச் சமணனாய்த் தெரிகிறதே?

கூவலைக் கேட்ட கோவலன் “நீ உற்ற இடர் யாது? இவ்வோலையென்ன?” என்று கேட்க, ”என் கணவன் என்னைக் கைவிட்டான், பொருட்பாடுள்ள இந்த ஓலையைக் கைப்பொருள் கொடுத்து நீவிர் வாங்கி, என் துயர் களைவீர்” என்கிறாள் பார்ப்பனி. “அஞ்சாதே! உன் துயர் களைவேன்; நெஞ்சு படு துயரத்தில் இருந்து நீங்குவாயாக” எனக் கோவலன் சொல்கிறான். வேத அந்தணர் உரைகளின் வழிகாட்டற் படி, அழனியோம்பும் பார்ப்பனியின் துயர்நீங்கத் தானஞ்செய்து, காடேகிய கணவனைக் கூட்டிவந்து, குறையாச் செல்வமும் உறுபொருளும் கொடுத்து நல்வழிப் படுத்திய செல்லாச் செல்வனே” எனக் கோவலனைப் பாராட்டுகிறான் மாடல மறையோன்.

இந்தப் பொருளில் வரும் சிலம்பு வரிகளைக் கீழே கொடுத்துள்ளேன்.

“பிள்ளை நகுலம் பெரும்பிறி தாக
எள்ளிய மனையோள் இனைந்துபின் செல்ல
வடதிசைப் பெயரும் மாமறை யாளன்
கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை
வடமொழி வாசகஞ் செய்தநல் லேடு
கடனறி மாந்தர் கைந்நீ கொடுக்கெனப்
பீடிகைத் தெருவிற் பெருங்குடி வாணிகர்
மாட மறுகின் மனைதொறு மறுகிக்
கருமக் கழிபலங் கொண்மி னோவெனும்
அருமறை யாட்டியை அணுகக் கூஉய்
யாதுநீ யுற்ற இடர்ஈ தென்னென
மாதர்தா னுற்ற வான்துயர் செப்பி
இப்பொரு ளெழுதிய இதழிது வாங்கிக்
கைப்பொருள் தந்தென் கடுந்துயர் களைகென
அஞ்சல் உன்றன் அருந்துயர் களைகேன்
நெஞ்சுறு துயரம் நீங்குக என்றாங்கு
ஓத்துடை அந்தணர் உரைநூற் கிடக்கையில்
தீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்கத்
தானஞ் செய்தவள் தன்றுயர் நீக்கிக்
கானம் போன கணவனைக் கூட்டி
ஒல்காச் செல்வத் துறுபொருள் கொடுத்து
நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ”

சிலம்புத் திருகலின் மேலே நமக்கு எழும் கேள்விகள்:

மேலுள்ளதில், வெறும் ஒன்றரை வரிக் கீரிப்பிள்ளை கதைக்கு அடுத்து, ஏனென்று தெரியாது இருபத்து அரை வரிகள் முற்றிலும் வேறு திருகிற் செல்கின்றனவே? ஏன்? ஒன்றரை வரிக்கு இருபத்து அரை வரிகள் ஒப்புக்குச் சப்பானியா? இனிக் கேள்விகளையும், முன்னிகைகளையும் பார்ப்போம்.

1. முன்சொன்னது போல், பஞ்சதந்திர நூலின்படி, பார்ப்பனி, கணவனை எள்ளியதோடு உச்செயினியில் கதை முடிந்து, அடுத்த கதைக்குப் போகும். அதை அப்படியே ”அலேக்காய்”த் தூக்கி இடம் மாற்றிக் கொண்டு வந்து பூம்புகாரிற் கோவலனோடு இங்கு ஏன் ”இளங்கோ” பொருத்த வேண்டும்? இவ்வரிகள் உண்மையில் இளங்கோ எழுதியவை தானா? அன்றி யாரோ ஒரு வேதநெறி விழைவோர் இடையிற் கொண்டுவந்து செருகியதா?

2. ஓலை வாங்கியோர் தமக்கு இரக்கமிருந்தால் பார்ப்பனிக்குப் பொருளுதவி செய்யத்தான் போகின்றார். பின் “ஏன் கருமக் கழிபலங் கொள்மினோ?” என்று பார்ப்பனி கூவவேண்டும்? வேத நெறி இங்கு அழுத்தியுரைக்கப் படுகிறதா? அதன் தேவையென்ன? இது இடைச்செருகல் அல்லாது வேறென்ன? எப்படி எண்ணிப்பார்த்தாலும் எனக்கு அப்படித்தான் தெரிகிறது.

3. கீரிப் பிள்ளை பற்றிய சிலம்புக் குறிப்பு இளங்கோ எழுதியதெனில், ”வெவ்வேறு வாய்மொழிக் கதைகளின் புலமைத் தொகுப்பான” பஞ்சதந்திரம் எழு முன்னர், நாவலந்தீவில் அது நாட்டுப்புறக் கதையாகப் பரவியிருக்கக் கூடாதா? – என்ற கேள்வியெழுகிறது. அரும்பதவுரைகாரர் கொடுத்த வடமொழி வாசகம் எப்பொழுது யாரால் எழுதப் பட்டது?

4. சிலம்பின் படி, பார்ப்பனி கணவனோடு ஒத்துப் போக முயல்கிறாள்; அதே பொழுது, கோவம் அடங்காத பார்ப்பான், தன்னை எள்ளிய மனைவியை விலக்கி, ”புண்ணிய திசைக்குப்” பயணம் விழைகிறான். கோவக்காரப் பார்ப்பனன் வெறுமே வாயாற் சொல்லிப் போவது தானே? ஏன் ஒரு வடமொழி ஓலையை மனைவிக்கு எழுதிக் கொடுத்தான்? வடமொழி வாசகத்தால் மனைவி பிழைத்துக் கொள்ளட்டும் என்னுங் கரிசனையா? அதைப் படித்துத் தான் யாரும் புகாரிற் பார்ப்பனிக்குத் தானஞ் செய்வரா? படிக்காது துயரங் கேட்ட அளவில் உதவாரா? அவ்வளவு இரக்கங் கெட்ட ஊரா அது?

5. கோவலன் புகாரில் இருந்தபோது ”எந்தக் கால கட்டத்தில் கீரிப்பிள்ளை கதை நடந்ததெ”ன்று சிலம்பு சொல்லவில்லை. மாதவியோடு இருந்த காலம் எனில், ”சிலம்பு விற்க மதுரை போவோம்” என்றோ, ”பாண்டிய மன்னன் ஆராயாது தன்னைக் கொல்வான்” என்றோ, அப்பொழுது கோவலனுக்குத் தெரியாது. பார்ப்பனன் கொடுத்த ஓலைச்செய்தியையும், கோவலன் பார்ப்பனியைப் புரந்ததையும், மதுரைப் புறஞ்சேரியில் மாடல மறையோன் நினைவுறுத்தத் தேவையென்ன? வருமுன் செய்தியை ஆசிரியன் ஓதுகிறானா? யாருக்கு? படிப்பவருக்கா?

6. இன்னொரு உரைகாரராய்த் தன்னை இரா. நாகசாமி எண்ணிக்கொண்டு, ”கோவலன், பாண்டியனென இருவரும் யோசிக்காமற் செய்த செயல்களின் விளைவுகளால்” என்றும் கோவலனைப் பற்றி “he did not act with diligence and acted senselessly”” என்றுந் தன் சொந்த மதிப்பீட்டைத் திணிப்பது வேடிக்கையாகிறது.

7. ”பாண்டியன் தேராது செயப்போகுஞ் செயலை உணர்த்துவது” என்பது வேண்டுமென்றே திரு. நாகசாமி வரிப்பிளந்து சொல்லும் வலிந்த பொருள் ஆகும். தேரா மன்னன் பற்றி மாடலனுக்கு எதுவுமே முன்னாற் தெரியாது.

8. செல்வ ஆணவத்தாலும், அற்றை நிலவுடைமை வழக்கங்களாலும், மாதவி மேல் மையலாலும் புகார்க் காண்டத்திற் தவறிழைக்கும் கோவலன் மதுரையில் எதையுமே ஓராது செய்யான். முன்னால் இழைத்தது முழுதும் நன்றாக ஓர்ந்தே கண்ணகியிடம் பேசி, பீடிகைத் தெருவிற் சிலம்பு விற்கக் கோவலன் வருகிறான். ஊழின் வலிமையால் பொற்கொல்லனால், ஏமாற்றப் பட்டான். அவ்வளவு தான்.

9. ”கணவன் விட்டுப் போனான்; நானுய்யப் பொருளுதவி செய்வீர்” என்று துயரப்பட்ட பார்ப்பனி வெறுமே கேட்க, செல்லாச் செல்வனான கோவலன் உதவலாமே? “கீரிப் பிள்ளை” கதை இங்கு ஏன் வந்தது? அதன் மெய்ப்பொருள் என்ன? ”ஆராயாச் செய்கை” எனில், மாடலன் சொல்லைப் புரிந்து அதனாற் கோவலன் தன்னைக் காப்பாற்றிக் கொண்டானா? தான் கண்ட தீக்கனாவை முன்னால் சொல்பவன், அதற்கு மேலும் சிலம்பு விற்கப் பீடிகைத் தெருவிற்குப் போகத் தானே செய்கிறான்?

10.தானம் பெற்று, மனம் மாறி மனைவியோடு வாழப் பார்ப்பனன் எப்படி ஒப்புகிறான்? அப்படி மனம் மாறி வருவான் எனில், அதன் பொருளென்ன? பார்ப்பனன் கொண்டது பொய்க் கோவமா? அன்றிக் கருமக் கழிபலம் என்பது ஓர் ஏமாற்றுத் தனமா?

11.புகாருக்கு அடுத்துள்ள தலைச் செங்கானத்து மாடலன், தனக்குத் தெரிந்த செய்திகளைச் சொல்லிக் கோவலனை முகமன் கொள்கிறான். [இங்கே ஒரு கதை மட்டுமே இக்கட்டுரையிற் பேசுகிறேன். மாடலன் சொல்லும் மொத்த 3 கதைகளும் காப்பியத்தோடு கொஞ்சமும் பொருந்தாமலே அமைகின்றன. ”விருத்த கோபாலன்” எனக் கோவலனை அழைப்பது குறித்தும் என் நூலில் முன்னித்திருக்கிறேன் (commented). அங்கும் வேறொரு திறக்கில் இது இடைச்செருகல் என்று ஐயப்பட்டிருப்பேன்.]

12.ஆழ்ந்து ஓர்ந்தால், “Panca Tantra has played a crucial role in Silappatikāram“ என்று .திரு.இரா.நாகசாமி சொல்வதுபோல், சிலப்பதிகாரத்தில் பஞ்ச தந்திரம் எந்தக் கருவான பங்கையும் வகிக்கவேயில்லை. செயினரின் வினைப் பயனையோ, ஆசீவகரின் ஊழ் பற்றியோ கொஞ்சமும் அடிப்படைப் புரிதல் இன்றி பஞ்ச தந்திரம் படித்த யாரோ ஒருவர் வேதநெறியின் கருமக் கழி பலனைக் கதையோடு பொருத்தித் தன் சொந்தத் திருகலை சிலம்பினுள் இடைச்செருக முயன்றிருக்கிறார். அவ்வளவு தான். ஒரு சமணருக்கு இது கொஞ்சமும் ஏற்க முடியாத திருப்பமாகும்.

அண்மையில் கலிபோர்னியாப் பல்கலைக் கழகப் பேரா.சியார்ச்சு ஆர்ட், “ctamil” மடற்குழுவில் திரு.இரா.நாகசாமியின் கருத்தை மறுத்துத் தன் கருத்தைத் தெரிவித்திருந்தார்

”I think this is based on a misconception. Written texts in pre-modern South Asia are like the top of an iceberg, with the vast bulk invisible and comprised of oral stories and the like. Well, this is not really a good analogy, as the written texts in India are often (as with the Cilappatikaram, the Ramayana and the Mahabharata) based on oral material. It is possible that Ilanko actually knew a written "text" called the Pancatantra, but it seems to me much more probable that some of the stories that comprise that "text" were circulating in many forms in oral form all over South Asia and that Ilanko is referring to a story that was commonly told at the time by illiterate storytellers. I don't see how it is warranted to conclude that the written Pancatantra is older than the composition of the Cilappatikaram. Unfortunately, all the literature we have from pre-modern India is what was written down -- we are missing 99% of the material, which was in unwritten form. The interplay between written and unwritten literature was dynamic and ongoing, each borrowing from the other, but I don't think we can assume direct borrowing from a literary text unless the actual words are quoted. George”

இனி முதற்தந்திரம் 11 ஆம் துணைக்கதைக்கு (”நன்றி மறந்த தட்டான்”) வருவோம். முழுதும் இங்கு உரைக்காது சுருங்கத் தருகிறேன்.

--------------------------------------------------------------

”நன்றி மறந்த தட்டான்”:

பிருகுகச்சத்திற்கு அருகிலிருந்த ஊரில் யக்ஞ தத்தன் என்ற பார்ப்பனன் இருந்தான். (கவனங் கொள்ளுங்கள். இது நூற்றுவர் கன்னர் ஆளுகைக்குள் இருந்த, மகதத்திற்கு மேலைக் கடற்கரையிற் பயன்பட்ட, நருமதை யாற்றின் சங்கு முகத்திலிருந்த துறைமுகம். இக்காலத்தில் இது பரூச் எனப் படுகிறது.) ஒவ்வொரு நாளும் மனைவியின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளான யக்ஞ தத்தன் பொருள் உதவி தேடிச் சின்னாட்கள் பயணித்து ஒரு காட்டுக்குள் நுழைந்தான். அவன் தண்ணீரைத் தேடி அலைந்த போது, ஒரு பெரிய கிணற்றைக் கண்டான். கிணற்றுள் புலி, குரங்கு, பாம்பு, ஒரு மனிதன் ஆகியோர் இருந்தனர்.

புலி தன்னைக் கிணற்றிலிருந்து தூக்கிவிடச் சொல்லிக் கேட்கிறது. முதலிற் தயங்கிய யக்ஞதத்தன், “உயிரிகளைக் காப்பாற்றுவதில் தன்னேர்ச்சி நேரிடுமானால் அதுவும் நன்மைக்கே” என்றெண்ணிப் புலி தீங்கு செய்ய மாட்டேன் என உறுதி கொடுத்ததால், தூக்கி வெளியே விட்டான். அடுத்தடுத்து குரங்கு, பாம்பு ஆகியவற்றையும் இதுபோல் உறுதி வாங்கிக் கொண்டு வெளியே தூக்கி விட்டான். அதன் பின்னர், புலி, குரங்கு, பாம்பு மூன்றுஞ் சேர்ந்து, “கிணற்றுள்ளிருக்கும் மனிதன் சகல பாவங்களையும் செய்யத் துணிந்தவன்; அவன் பேச்சை நம்பி மோசம் நம்பாதே!” என எச்சரித்தன.

புலி, யக்ஞ தத்தனை மலைக்குப் பக்கத்திற் காட்டிலுள்ள தன் குகைக்கு ஒரு முறை வரச் சொல்லித் தன்னால் இயன்ற உதவி செய்வதாகச் சொல்லியது. இதேபோல புலிக்குகைக்குப் பக்கத்திலிருந்த குரங்கும் வேண்டிச் சென்றது. “அவசியம் ஏற்படும் போது எனை நீ நினைத்தால் ஓடிவருவேன்” என்று சொல்லிப் பாம்பும் புறப்பட்டது. கிணற்றிலிருந்த மனிதனும் காப்பாற்றச் சொல்லிக் கத்துகிறான். இரக்கம் மேலிட்டு யக்ஞ தத்தன் அவனை வெளியே விடுகிறான். “நான் ஒரு தட்டான்; பிருகுகச்சத்தில் வசிக்கிறேன். தங்க ஆபரணம் செய்ய வேண்டின், என்னிடம் வா” என்றுகூறி அவனும் புறப்பட்டான்.

பிறகு, எங்கெங்கோ சுற்றிவிட்டு, உணவு கிடைக்காது பிராமணன் வீட்டுக்குத் திரும்புகையில் குரங்கு கூறியது நினைவிற்கு வர, அது வசிக்குமிடத்திற்குப் போனான். சுவை மிகுந்த பழங்களைக் கொடுத்து சாப்பிடச் செய்த குரங்கு, பசி தீர்ந்தவனிடம், “பழங்கள் வேண்டுமெனில் விரும்பியபோது இங்கே வந்து போ” என்று கூறியது. “நண்பன் செய்யவேண்டியதை எனக்குச் செய்தாய்; நன்றி! இப்போது புலியின் இடத்தைக் காட்டு” என்று கேட்டான் பிராமணன். குரங்கு புலிக் குகையைக் காட்டியது. புலி உபசரித்து, தங்க மாலைகளைப் பரிசாகக் கொடுத்து, ”ஓர் அரசகுமாரன் இவையணிந்து குதிரை மீதேறிக் காவலர் சூழ வந்தான். வழி தவறி வந்தவனைக் கொன்று இவற்றை வைத்திருந்தேன். நீ எடுத்து விரும்பிய திசையிற் செல்” லெனக் கூறியது.

மகிழ்ச்சியோடு பெற்று பிராமணன் திரும்பும் பொழுது பிருகு கச்சத் தட்டான் நினைவு வந்தது. அவனிடம் சென்றால், மாலைகளை நல்ல விலைக்கு விற்றுத் தருவான் என நம்பிப் போனான். தட்டான் வரவேற்று உபசரித்து,. “என்ன காரியம் ஆக வேண்டும்?” என்றான். “விற்றுத் தரவேண்டும்” என்றான் பிராமணன். நகைகளைக் கண்ட தட்டான், “இவற்றை அரசகுமாரனுக்கு நானே செய்து கொடுத்தேன். அரச குமாரனை பிராமணன் கொன்று அபகரித்தான் போலும்? அரசனிடம் பிராமணனைக் காட்டிக் கொடுத்தால், வெகுமதி கிடைக்குமே?” என்று கருதினான். “யாரிடமாவது காட்டி, விலை தெரிந்து வரும் வரை இங்கேயிரு” என்று பிராமணனிடம் சொல்லிச் சென்றான்.

நேராகச் சென்று காட்டிய போது, “உன்னிடம் எப்படி வந்தன?” என்று அரசன் கேட்கத் தட்டான் தன் வீட்டிற்குப் பிராமணன் கொணர்ந்ததைக் கூறினான். அது கேட்டு அரசன், “நிச்சயமாக, அரச குமாரனைக் கொன்று, பிராமணன் மாலையை அபகரித்திருக்கிறான்.. அவனைக் கைது செய்து சிறையில் அடைத்து, காலையிற் கழுவில் ஏற்றுங்கள்” எனக் கட்டளையிட்டான். சிறைக்குட் சிக்கிய பிராமணன் தன்னிலை நொந்து, பாம்பை நினைக்க, அது வந்தது. “என்னை விடுவி” என, “அந்தப் புரத்தில் இராணியைக் கடித்து விடுகிறேன். மந்திரம் ஓதினும், விடமுறி தடவினும், விடம் இறங்காது. நீ போய்த் தொட்டால், இராணி உயிர் பெறுவாள். உனக்கு விடுதலையும் வெகுமதியும் கிடைக்கும்.” என்று பாம்பு கூறிப் போயிற்று.

சற்று நேரத்தில் இராணியைப் பாம்பு கடித்தது. பலரும் என்னவோ செய்தும் விடம் இறங்க வில்லை. “விடத்தை இறக்கிக் குணப்படுத்துவோருக்கு வெகுமதி வழங்குவதாய்” அரசன் அறிவிக்க, அது கேட்ட பிராமணன் குணப் படுத்துவதாகச் சொல்ல, காவலர் கட்டுக்களை அவிழ்த்து அரண்மனைக்குக் கூட்டிச் சென்று, அரசனிடம் விதயத்தைத் தெரிவித்தனர். பிராமணன் இராணியைத் தொட, விடமிறங்கியது. இராணி மலர் முகத்தோடு எழ, அரசன் பரிசுகள் வழங்கினான். “இவ் ஆபரணங்கள் உனக்கு எப்படிக் கிடைத்தன?” என்று அரசன் கேட்கப் பிராமணன் நடந்ததைச் சொன்னான். உண்மை அறிந்த அரசன் தட்டானைச் சிறையிலடைக்க உத்தரவிட்டான். பிராமணனுக்குப் பலவூர்கள் வழங்கி, அமைச்சனாக ஆக்கிக் கொண்டான். பிராமணன் தன்னூருக்குச் சென்று குடும்பத்தாரையும், உற்றாரையும் அழைத்து வந்து, பல யாகங்களைச் செய்து, அரச அலுவல்களைச் சீராகப் பார்த்துச் சுகமாகக் காலம் கழித்தான்.

---------------------------------------------------------

இதோடு முதல் தந்திரத் தொடர் நீளும். நம் கேள்விகள், முன்னிகைகளுக்கு வருவோம்.

1. நன்றி மறந்த தட்டானில்” நிகழ்வுகள் சுகமாக முடிகின்றன. சிலம்பிலோ ஒரே சோகம். ஆனாலும் தட்டான் பங்கு ஒரே மாதிரியாகவா இருக்கிறது? சிலம்பிற் பொற்கொல்லன் களவுக் குற்றம் மறைக்க கோவலனைக் காட்டிக் கொடுக்கிறான். பஞ்ச தந்திரத்திலோ, தவறு செய்யாத் தட்டான், வெகுமதி விரும்பித் தன் பேராசையால், யக்ஞ தத்தனை மாட்டி விடுகிறான். இரண்டும் நுணுகிய, ஆனால் உறுதியான வேறுபாடுடையவை. பஞ்ச தந்திரத்தில் பேராசை தலையெடுத்ததால் தட்டான் நன்றி மறக்கிறான்; சிலம்பிற் தப்புச் செய்யும் பொற்கொல்லன் அரச தண்டனையிலிருந்து தப்பிக்க, கோவலனை மாட்டிவிடுகிறான்.

2. சிலம்பில் அரச நியதி வழுவுகிறது. பஞ்ச தந்திரத்தில் அது வழுவ வில்லை. பஞ்ச தந்திரத்தில் யக்ஞ தத்தனிடம் அரச குமாரனின் மாலைகளே  உள்ளன. கோவலனிடமிருந்து காவலர் கொணர்ந்த சிலம்பு அரசியுடையது அல்ல; அது கண்ணகியுடையது. பஞ்சதந்திரத்தில் பின்னால் “என்ன நடந்தது?” என்று கேட்டறிந்து, அரசன் தட்டான் செயலைத் தண்டிக்கிறான். சிலம்பில், ஊழால் எல்லாம் தடுமாறிப் போகின்றன. இரு நூல்களின் குறிக்கோள்களும், அழுத்தங்களும் வெவ்வேறானவை. பஞ்சதந்திரத்தில் தட்டான் நன்றி மறக்கிறான். சிலம்பில் அப்படியொரு தேவையே பொற்கொல்லனுக்கு இல்லை. அவன் தன் களவுக் குற்றம் மறைக்க முயல்கிறான். ஆதாரமின்றி, “நன்றி மறந்த தட்டானைப் படித்தே சிலம்புப் பொற்கொல்லன் படைக்கப் பட்டான்” என்பது, ஞாயமின்றித் திரு இரா. நாகசாமி இளங்கோவை ஒரு கதைத் திருடராய்ப் பழிப்பதாகும். இப்படியொரு பழி இளங்கோவிற்குத் தேவையா?

3. சிலப்பதிகாரம் எழுந்தது பொ.உ.மு.75-80 என்று என்னூலில் நிறுவினேன். பஞ்சதந்திர மூலமெழுந்தது பெரும்பாலும் பொ.உ.மு.40-30 ஆகும். இரா.நாகசாமி செருமனிக் கட்டுரைப் படியும் பஞ்ச தந்திரத்தின் மூலக் காலம் பொ.உ.மு. முதல் நூற்றாண்டே. (தினமலர் பொ.உ. முதல் நூற்றாண்டென்று தவறாகக் குறித்தது.) இந்நிலையில் யார் கதைத் திருடர்? கதையை முன்னே சொன்னவர் யார்? அல்லது காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்ததா?

”பாழ்கிணற்றில் வீழ்ந்த பொற்கொல்லன் ஒருவன், தன்னைக் காப்பாற்றியவனை அரசனிடத்தில் கள்வனெனப் பொய் கூறி தண்டனை பெற்றுத் தந்த கதையை, இளங்கோவடிகள் அறிந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆகவே, அக்காலத்து வழக்கிலிருந்த நீதிகளையெடுத்து, தனது காப்பியத்தில் வைத்து, இளங்கோவடிகள் தந்தார்.” என்று திரு.இரா.நாகசாமி சொல்வதைக் கொஞ்சமும் ஏற்கவியலாது. ”இளங்கோ ஒரு கதைத்திருடர்” என்று இரா.நாகசாமி இங்கே நேரடியாய்ச் சொல்லாமற் பூசி மெழுகிச் சொல்கிறார். நாம் அதிர்ந்து போகிறோம். இக்கால நய மன்றங்களில் ”கதைத் திருட்டு” பற்றிய எத்தனையோ வழக்குகள் நடைபெறுகின்றன. ”நன்றி மறந்த தட்டானு”க்கும், சிலம்பின் பொற்கொல்லன் கதைக்கும் இடையே உறவு என்பது ஏணி போட்டாலும் காணாது. பொறுமையாய், ஆழமாய்ப் படித்த எவரும் அப்படிச் சொல்லார்.

ஈற்றுவாய்:

சிலம்பிற்குப் பஞ்ச தந்திரம் அடிப்படை என்பது முறையிலாக் கூற்றாகிக் காலக் கணிப்பை ஒதுக்கித் தன்மயக் கருத்தை வலிந்து திணிப்பதாகும். பார்ப்பதற்கு ஒன்று போல் சில காட்சிகள் (தட்டான், பொற்கொல்லன் கதையில்) தோற்றமளித்தாலும், 2 நூல்களின் உள்ளார்ந்த குறிக்கோள்கள் வேறானவை. வடபுலப் பஞ்சதந்திரம் பார்த்து தென்புலச் சிலம்பின் அடிக்கோள்களைத் தேடாது, சிலப்பதிகாரத்துளேயே திரு.இரா.நாகசாமி ஏன் தேடக் கூடாது? காப்பிய முழுமைக்கும் அடியொலியாய் 3 குறிக்கோள்களைப் பால்வகை தெரிந்த பதிகம் தெளிவாய் உணர்த்துகிறதே? [பெரும்பாலும் பின்னாற் சேர்க்கப்பட்ட பதிகம் இளங்கோ எழுதியதில்லை என்றாலும், கற்றுணர்ந்தோர் கொள்ளும் பாயிரமாய் இதை ஏற்கலாம் தானே?]

“அரைசியற் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதூஉம்
உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும்
ஊழ்வினை யுருத்துவந் தூட்டு மென்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரண மாகச்
சிலப்பதி கார மென்னும் பெயரால்
நாட்டுது மியாமோர் பாட்டுடைச் செய்யுளென”

என்ற வரிகள் நூற்பொருளைப் பிழிந்து தருபவை.

”ஊழ்வினை உருத்துவந்து ஊட்டு”மென்பது கோவலன் மேற் பொதியும் குமுகப் பார்வையாகும்.

”அரைசியற் பிழைத்தோர்க்கு அறங் கூற்றாவது” நெடுஞ்செழியனின் அழிவின் மேற்கொள்ளும் நயதிப் பார்வையாகும்.

”உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலென்பது” குமுக நயதிக்குப் போராடி, பாண்டியனைப் பழி கொண்டு, மதுரை தீக்கிரையானது சொல்லி, குமுகத்தார் பரசும் பத்தினிப் பார்வை.

 [பத்தினியென்பாள் தொழத் தக்கவள் என்பதே முதற் பொருளாகும், கற்புக்கு அரசி என்ற இக்கால விதப்பெல்லாம் இரண்டாம் நிலைப் பொருளாகும்.]

கூடவே, ”முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது, அடிகளே நீரே அருளுக” என்ற அழுத்தத்தால், காப்பியத்தின் 3 குறிக்கோள்களுக்கு அடுத்து, இன்னோர் அடிக்கோளாய், மூவேந்தர் நாடுகளை தமிழகக் கூறுகளாக்கி, தமிழர் ஓரிமையை இளங்கோ வலியுறுத்துவது புலப்படும்.

அந்தத் தூண்டலை தமிழுக்குள் பாராது, வடமொழி நூல்களுக்குள் விழுந்து விழுந்து திரு இரா. நாகசாமி போன்றோர் தேடுவது வேண்டா வேலையாகும். ஆழ்ந்து ஓர்ந்து பார்த்தால், சிலப்பதிகாரம் என்பது உண்மையிலேயே ஒரு தமிழர் காப்பியம் தான்.

எடுகோள்கள்:

34. “சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும், அடியார்க்குநல்லாருரையும்”, டாக்டர். உ.வே.சா. நூல்நிலையம், பத்தாம் பதிப்பு, 2001. பக்.402-403.
35. http://viruba.com/final.aspx?id=VB0003195

1 comment:

Indian said...

அய்யா,

அருமையான இடுகைகள்.