Monday, May 10, 2010

சிலம்பின் காலம் - 2

தோற்றுவாய்:

”ஆரியர் கருத்தாடல்” என்னும் தலைப்பில், 2007 இல், பேரா. தாமசு ஆர் டிரௌட்மன் ஒரு நூலைத் தொகுத்தளித்தார். அதில் சப்பானைச் சேர்ந்த, தென்னிந்திய வரலாற்றாசிரியர் பேரா. நொபுரு கராசிமாவின் சிறப்பான சொற்றொடர் ஒன்றைக் குறிப்பிட்டிருந்தார்(1).

”The great Japanese historian of South India, Noboru Karashima, speaks of the ‘whispering’ of the inscriptions, by which he means the subtle facts that can only be found by paying close attention to the small details of a text.”

கராசிமாவின் குறிப்பிடத்தக்க இச்சொற்றொடரைப் படித்த போது, இன்னோர் எண்ணமும் சட்டென்று எழுகிறது. “கல்வெட்டுக்கள் மட்டுமா முணுமுணுக்கின்றன? காப்பியங்களும்தான் முணுமுணுக்கின்றன. ஆனால், நம்மில் எத்தனை பேர் அதைக் கூர்ந்து கவனிக்கிறோம்?”

பொதுவாகத் தமிழர் சார்ந்த இலக்கியங்கள், கல்வெட்டுக்கள் போன்ற ஆவணங்களை, மேம்போக்காக இரண்டாமவர் கருத்துக்களை ஒட்டியே, நம்மிற் பலரும் படிக்கிறோம். அதோடு ஏற்கனவே வழக்குற்ற கருத்துக்களுக்கு மாறாய் அவற்றை அணுகினால், வரலாற்றாசிரியர் பலரும் ஏற்பதில்லை. பெரும்பாலும், மூல ஆவணங்களை, நாமே ஆழப் படித்து, ஏரணத்தோடு புரிந்து அதன்வழி நம் நிலைப்பாடுகளை எடுப்பதில்லை. இரண்டாமவர் புரிதலையே உச்சிமேற்கொண்டு, அதன்படி உருவான பொதுக்கருத்தையே நம்மைச் சுற்றியுள்ளோரிடம் பரப்பவும் செய்கிறோம்.

காட்டாகச் சிலப்பதிகாரம் படிப்பதையே எடுத்துக்கொள்வோமே? அக்காப்பியம் நெடுகிலும் ஆசிரியர் இளங்கோ சிறுசிறு குறிப்புக்களை நாம் புரிந்துகொள்ளும் வகையிற் தருகிறார். அந்தக் குறிப்புக்களைத் தவிர்த்தால், அற்றை வரலாறு, குமுகாய வாழ்நிலை, கதை மாந்தரின் நடப்புகள் நமக்கு ஒழுங்காய் விளங்காது. ஆனாலும் அதைக் கவனியாது, உரைகாரரும், இரண்டாமவரும் தரும் இடைப்பரட்டில் (interpretation) மனந்தோய்ந்து, பிறழ்வாகவே சிலப்பதிகாரத்தைப் புரிந்துகொள்கிறோம். அதோடு அப்பிறழ்ச்சிகளையே சரியென்று நம்மிற் சிலர் சாதிக்கிறோம்.

இப்படியொரு நுனிப்புற் புரிதலில், வரலாற்றின் சரியான காலத்திலன்றி வேறெங்கோ பொருத்தி, சிலம்பின் கதைமாந்தரைக் குறிப்பாக, கண்ணகி, கோவலன், மாதவி, நெடுஞ்செழியன், செங்குட்டுவன் ஆகியோரை வழமையான அச்சடிப்பிற் பார்த்து, கருத்துச் சொல்கிறோம். சிலம்புக் கதைமாந்தரை, குறிப்பாகக் கண்ணகியை, எள்ளி நகையாடுவாரும் நம்மிடையுண்டு. இன்னும் சிலர் ‘வரலாறாவது, ஒன்றாவது, சிலம்பு ஒரு கட்டுக்கதை’ என்றும் சொல்வர்.

”சிலம்பின் வழியாய் அதன் காலம் அறியவொண்ணுமா?” என்றால் “ஓரளவு இயலும்” என்றே நான் சொல்லுவேன். குறிப்பாகச் சிலம்புச்செய்திகளை நுணுகிக் கவனித்து, மற்ற ஆவணங்களோடு, பல்துறை நோக்கிற் பொருத்திப் பார்த்தால். சிலம்பின் காலத்தை உறுதியாய்க் கணிக்கலாம். அதற்கு, இப்பொழுதையக் கட்டுக்களில் இருந்து வெளிவருவது முகன்மையானது.

வரலாறும், வரலாற்று வரைவும்:.

“இன்னாருக்கு, இன்னது நடந்தது” என்ற பழஞ்செய்திகளைத் தொகுத்துரைக்கும் இயலைக் குறிக்கும் ”வரலாறு” என்ற சொல் வெறும் நூறாண்டுப் பழமை கொண்ட சொல்லாகும். அதற்கு இணையாய்க் கட்டுரை எனும் இன்னொரு சொல்லை முன்னாற் புழங்கியிருப்பது சிலம்பிலிருந்து தெரிகிறது. உரைபெறு கட்டுரை, காண்டங்களின் முடிவில் உள்ள கட்டுரைகள், வாழ்த்துக் காதையில் வரும் கட்டுரை, நூற்கட்டுரை போன்றவை, சொல்லப் போகும் கதைக்கு முற்பட்ட செய்திகளை, கதையின் நடுவார்ந்த, அல்லது கதைக்குப் பிற்பட்ட செய்திகளைக் கட்டி உரைக்கின்றன. கட்டி உரைப்பதால் அவை கட்டுரையாயின. History என்ற ஆங்கிலச்சொல்லும் கூட இதே பொருளைத்தான் உணர்த்துகிறது.

”இன்னாருக்கு இன்னது, இதனால் நடந்தது” என்று காரணம் காட்டுவதும், அதை அலசுவதும், முன்னால் எழுதிய வரலாற்றை மீளாய்வு செய்வதும் வரலாற்று வரைவியல் (historiography) எனப்படும். பொதுவாக, எழுதுவோனின் கருத்தியலும், குமுகச் சாய்வும் ஊடுவதால், வரலாற்று வரைவையும், வரலாற்றையும் பிரித்துப்பார்ப்பது யாருக்கும் கடினம்.

இந்தச் சாய்வினால், புதுப் ‘பழஞ்செய்திகள்’ நமக்கு ஆய்வின் வழி தெரியும் போது, வரலாற்றையும், வரலாற்று வரைவையும் மீளாய்வு செய்யும் தேவையும் நமக்கு ஏற்படும். சுருக்கமாய்ச் சொன்னால், எந்த வரலாற்றுத் தரவும், அதனாலமையும் வரலாற்று நிகழ்வரிசையும் நிலைத்தனவாகா. “மாற்றம் ஒன்றே மாறாதது”.

சிலம்பின் காலம் பற்றிய முந்தையக் கணிப்புக்கள்:

தமிழ்த்தாத்தா உ.வே.சா. சிலம்புச் சுவடிகளை ஏட்டிலிருந்து தாளுக்குக் கொண்டுவந்த நாளில் இருந்தே (1892), கடந்த 90, 100 ஆண்டுகளில், தமிழ்நாட்டின் அறிஞர்கள் பலர் சிலம்பின் காலத்தைக் கணிக்க முற்பட்டிருக்கிறார்கள். அப்படிக் கணிக்கப்பட்ட காலங்களும் பல்வேறாகும்.

1. கி.பி.2 ஆம் நூற்றாண்டு:

— இம்முடிவிற்கு வந்தோர் மிகப் பலர். இவருள் குறிப்பாக, மு.இராகவ ஐயங்கார், இரா.நாகசாமி, மயிலை. சீனி.வேங்கடசாமி, கா.சு.பிள்ளை, ஞா.தேவநேயப் பாவாணர், தனிநாயக அடிகள், கே.என். சிவராசப் பிள்ளை, பி.டி.சீனிவாச ஐயங்கார், மு.சண்முகம் பிள்ளை, இரா.வை. கனகரத்தினம், வி.சீ.கந்தையா, துளசி.இராமசாமி, க.சண்முகசுந்தரம் ஆகியோரைக் குறிப்பிடலாம்(2). பல வரலாற்றுப் பாடநூல்களும் இந்தக் கணிப்பையே செந்தர நோக்காய்ச் சொல்லுகின்றன. இந்தக் கணிப்பு வரந்தரு காதையின் கயவாகு குறிப்பை, சிங்கள மகாவம்சத்தின் காலவரிசையோடு, பொருத்தி வந்ததாகும்.

2. கி.பி. 5 ஆம் நூற்றாண்டு:

— இம்முடிவிற்கு வந்தது பேரா. வையாபுரிப்பிள்ளையாவார்(3). வஞ்சிக் காண்டத்தில் வரும் “பங்களர்” என்ற சொல் வங்காளத்தைக் குறிப்பதாகவும், ”மேகலையும், சிலம்பும் ஏராளமாய் வடசொற்களைப் பயில்வதால், சிலம்பு பிற்காலமே” என்றும் உரைப்பார்.

3. கி.பி. 8 ஆம் நூற்றாண்டு:

— இப்படிக் கணித்தவர் எல்.டி.சாமிக்கண்ணுப் பிள்ளை.(4) கட்டுரைக் காதை 133-137 அடிகளில் வரும் “ஆடித் திங்கள் பேரிருட் பக்கத்து அழல்சேர் குட்டத்து அட்டமி ஞான்று வெள்ளி வாரத்து” என்னும் சோதியக் குறிப்பால், இம்முடிவிற்கு வந்தார்.

4. கி.பி.11 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி:

— இது 1935 இல் திரு. செல்லன் கோவிந்தனால் கணிக்கப் பட்டதாகும்(5). ”முதலாம் இராசேந்திரன் தான் தமிழர்வரலாற்றில் முதன்முதல் வடக்கே படையெடுத்தவன். அவனுக்குமுன், யாரும் வடக்கே போனதில்லை” என்றுரைத்து, “இராசேந்திரன் படையெடுப்பைப் போல்மமாக்கி, செங்குட்டுவன் படையெடுப்பும், இக்காப்பியமும் கற்பனையாக எழுந்திருக்கின்றன” என்று அவர் கூறுவார்.

வரலாற்று நிகழ்வுகளின் அக, புற, ஒழுங்குகள்:

பொதுவாகப் பழங்கல்வெட்டுக்களிலும், இலக்கியங்களிலும், உறவான (relative) கால நிலைகளே சொல்லப்பெறும்; அதாவது ”இவ்வரசன் பட்டமேறியதிலிருந்து இத்தனையாவது ஆண்டு” என்றே கல்வெட்டுக்களில் காலங் குறிக்கப்படும். பல கல்வெட்டுக்களில், அரசனின் பட்டப்பெயர் அல்லது குலப்பெயர் மட்டுமே இருக்கும், இயற்பெயரே வாராது. கலி (கி.மு.3101), விக்ரம (கி.மு.57), சக (கி.பி.78) போன்ற முற்றாண்டுகளும் (absolute years) இந்த ஆவணங்களில் அரிதாகவே வரும். பொதுவாக, (ஏதோ ஓராண்டை அடிப்படையாக்கி, மற்ற நிகழ்வுகளை அதையொட்டிக் கணக்குப் போடும்) ஒற்றையாண்டுமுறை, தமிழரின் மரபாக, இருந்ததில்லை.

இப்படி உறவுக் காலநிலை கொண்ட ஒரு கல்வெட்டில், அதன் உள்ளடக்கம், எழுத்தமைதி, பிற தொடர்புகளைக் கணக்கிலெடுத்து, இன்னொரு கல்வெட்டோடு அதைத் தொடர்புறுத்தி, இரண்டையும் ஒன்றின்பின் ஒன்றாக்கிக் கால வரிசைப் படுத்துவர். இதே போல ஓர் இலக்கியத்தில் இருந்து கல்வெட்டு, அல்லது கல்வெட்டில் இருந்து இலக்கியம், என்றும் தொடர்புறுத்திக் காலவரிசைப் படுத்துவதும் உண்டு. இந்தக் காலக் கணிப்பில், உள்ளே பொருந்தி நிற்கும் ஏரணம் (logic), ஒன்றிற்கொன்று ஒத்திசைவு (consistency) ஆகியவை முகன்மையாகும்.

தமிழாவணங்களை வரிசைப்படுத்தி, உள்ளடக்கம், எழுத்தமைதி போன்றவற்றை வேறிடங்களிற் கிடைத்த, தமிழருடையதல்லாத வெளியாவணங்களோடு ஒப்பிட்டு, அவற்றிற்கு அறுதி முற்றாண்டு (கி.பி./கி.மு.) ஏற்கனவே கணித்திருந்தால், அதே ஆண்டுகளை நம் ஆவணத்துக்குப் பொருத்துவார்கள். இப்படியாக, நம் வரலாற்றுக் காலக் கணிப்பு பலராலும் அறுதியாக்கப் பட்ட முற்றைப் புள்ளிகளால் (absolute markers) ஒழுங்கு செய்யப் படும்.

இதில் கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு. முற்றைப்புள்ளிகளும், காலவொழுங்கும் ஒன்றிற்கொன்று முரணானவை. இவற்றில், ஒன்றை நெகிழ்த்தி, மற்றொன்றை அசைப்போம். இந்த முரணியக்கச் செயற்பாட்டில் (dialectical movement), எடுகோள் (reference) முற்றாண்டுகளும் கூடச் சிலபோது அசைக்கப் படலாம். இதனால் நாம் ஒழுங்கு செய்த வரலாற்று நிகழ்வரிசை, புதிதாய்க் கிடைத்த ‘பழஞ் செய்திகளால்’, மாறலாம். இந்த மீளாய்வில், குமுக வரலாற்று அகம், புறம் ஆகிய இரண்டுமே முகன்மையாய்க் கருதப்படும்.

இந்திய, தமிழக வரலாறுகளின் முற்றைப் புள்ளிகள்:

முன்னே சொன்ன முற்றைப் புள்ளிகளை இனிப் பட்டியலிடுவோம்.

1. வடநாட்டு வரலாற்றின் முற்றைப் புள்ளிகள் :

— அலெக்சாந்தர் படையெடுப்பு - கி.மு. 327

— அசோகரின் பாறைக் கல்வெட்டு II, XIII இல் வரும் குறிப்பு - கி.மு.258 [Antiochus II Theos of West Asia (261-246 BC), Ptolemy II Philadelphus of Egypt (285-247 BC), Antigonus Gonatas of Macedonia (277-239 BC), Magas of Cyrene in North Africa (282-258 BC), Alexander of Epirus (272-255BC) or of Corinth (252-244 BC). சோழன், பாண்டியன், சேரமான், அதியமான், தாம்ப பன்னி அரசன் ஆகியோர் இதில் குறிக்கப் படுகின்றனர்](6)

2. தமிழக முற்கால வரலாற்றின் முற்றைப் புள்ளிகள்:

— கலிங்க அரசன் காரவேலனின் அத்திகும்பா கல்வெட்டு - கி.மு.172(7)

— சிங்கள அரசன் முதலாம் கயவாகு காமினியின் காலம் - கி.பி. 171-193(8)

3. பிற்காலப் பல்லவர், பாண்டியர் வரலாற்றின் முற்றைப் புள்ளிகள்

— கங்க அரசன் மாதவ வர்மனின் பெனுகொண்டாச் செப்பேடு - கி.பி.475(9)

— செழியன் சேந்தன் இறந்ததைக் குறிக்கும் யுவாங் சுவாங் குறிப்பு - கி.பி.640(10)

4. பேரரசுச் சோழர், பாண்டியர் வரலாற்றின் முற்றைப் புள்ளிகள்

— இவை பலவாறாகும். பொதுவாக இக்காலகட்டத்திற் குழப்பங்கள் குறைவு.

---------------------------------------------

எடுகோள்கள் (References):

1. Thomas R.Trautmann, “The aryan debate”, page xv, OUP, 2007
2. இரா.மதிவாணன், “சிலம்பின் காலக் கணிப்பு”, ப 13-18, சேகர் பதிப்பகம், சென்னை - 78, 2005
3. மேற்படி நூல், ப 13, சேகர் பதிப்பகம், சென்னை - 78, 2005
4. மேற்படி நூல், ப. 18, சேகர் பதிப்பகம், சென்னை - 78, 2005
5. செ.கோவிந்தன், “சிலம்பின் காலம்”, ப.177, சேகர் பதிப்பகம், சென்னை - 78, 2004
6. DC Sircar, Inscriptions of Asoka, 4th ed. P.6, New Delhi: Publications Division, 1998
7. Shashi Kant, “The Hāthīkumphā inscripṭion of Khāravela and the Bhabru Edict of Asoka”, p.46, D.K.Printworld (P) Ltd.,2000
8. வில்ஹெம் கய்கர், (தமிழில் மறவன் புலவு க.சச்சிதானந்தன், கவிஞர் அண்ணா கண்ணன், “சிங்கள வரலாற்று நூல்களின் நம்பகத்தன்மை”, ப.55, காந்தளகம், சென்னை -2, 2002
9. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், “பல்லவர் செப்பேடுகள் முப்பது”, பக்.ix, தமிழ் வரலாற்றுக் கழகம் 1966இல் வெளியிட்ட நூலின் மறுவச்சு, 1999.
10.உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். “பாண்டியர் செப்பேடுகள் பத்து”, பக்.xii தமிழ் வரலாற்றுக் கழகம் 1967இல் வெளியிட்ட நூலின் மறுவச்சு. 1999. இது இரண்டாம் நிலை எடுகோளாதலால், யுவான் சுவாங் பற்றிய இந்தக் குறிப்பு ஊற்றாவணம் கொண்டு உறுதி செய்யப்படவேண்டும்.

அன்புடன்,

இராம.கி.:

2 comments:

senthamizh said...

அன்பின் இராம கி. அவர்களுக்கு..

சிறப்பான துவக்கம்.. வாழ்த்துகள்.. என் முழுமையான கருத்தினை தொடர் முடிவில் தருகிறேன்..அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்நோக்கும்..

அன்பன்..

உதயா

வெற்றிவேல் said...

வணக்கம் அய்யா...

சிறப்பான தொடக்கம்.
— சிங்கள அரசன் முதலாம் கயவாகு காமினியின் காலம் - பொ.உ இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கம் எனக்கொண்டே செங்குட்டுவனின் காலம், சிலம்பின் காலம் இவற்றை பொ.உ 2ம் நூற்றாண்டு என்பார். இவருக்கு 4 தலைமுறை முற்பட்டவன் கரிகாலன் எனக் கொண்டு கரிகாலனை பொ.உ 10 ம் ஆண்டு என மயிலை வேங்கட சாமி அவர்கள் குறிப்பிடுவார்.

தொடர்கிறேன்... வாசிக்கையில் ஐயம் நேர்ந்தால் கேட்கிறேன்...

நன்றி...