Sunday, May 09, 2010

சிலம்பின் காலம் -1

கீழே வரும் கட்டுரைத் தொடர் முதன்முதலில் 2009 திசம்பர் மாதம் பாரதிதாசன் பல்கலைக்கழகமும், செம்மொழித் தமிழ் நிறுவனமும் சேர்ந்து நடத்திய செவ்விலக்கியப் பயிலரங்கில் ஒரு பரத்தீடாக (presentation) அளிக்கப்பட்டது. அப்படி அளிப்பதற்கு வாய்ப்புக் கொடுத்த பேரா. க.நெடுஞ்செழியனுக்கு முதற்கண் என் நன்றிகள். புதிய கண்ணோட்டங்களை வரவேற்கக் கூடியவர் அவர். படைப்பவரின் பின்புலம் பார்க்காது (வேதிப் பொறிஞனாய் இருந்து ஓய்வு பெற்று தமிழ்த் துறையிலும், வரலாற்றிலும் இப்பொழுது உழன்று கொண்டிருப்பவன் என்ற என் பின்புலம் பார்க்காது) படைப்பை மட்டுமே பார்க்கக் கூடிய ஒரு சில அரிதான தமிழறிஞர்களில் அவரும் ஒருவர். அங்கு கூடியிருந்த பலரும் என் பரத்தீட்டைப் பார்த்து, கேட்டு, வெகுவாகப் பாராட்டித் தங்களுடைய முன்னிகைகளைத் தந்தார்கள். மனத்திற்கு நிறைவாக இருந்தது.

அந்த முன்னிகைகள் என்னை மேலும் தூண்டி, அவற்றின் வழி சில திருத்தங்களுடன் என் பரத்தீட்டை ஒரு கட்டுரையாக மாற்றி, கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற் படிக்கும் வகையில் அனுப்ப முன்வந்தேன். ஒருபக்கக் கட்டுரைச் சுருக்கம் எழுதி அனுப்ப வேண்டும் என்று மாநாட்டினர் சொன்னார்கள்; அனுப்பி வைத்தேன். அனுப்பும் போதே என் உள்ளூற ஒரு ஐயப்பாடும் எழுந்தது. இதை ஏற்பார்களா? நான் வெளியாள் ஆயிற்றே?

பலரையும் போல, முகனமாக (modern) எழுந்துள்ள ஏதேனும் ஒரு பொதுத் துறையில் கட்டுரை எழுதாமல், நாட்பட்டு நிலைத்து ஆகிவந்த துறையில் [இங்கு வரலாறு] வெளியாட்கள் உள் நுழைந்து, ஏற்கனவே கல்லெழுத்துப் போல் ஏற்கப்பட்ட கருத்தீட்டை மறுக்கின்ற கட்டுரையை, மரபுசார்ந்த வரலாற்றாய்வாளர்கள் ஏற்பார்களா? ”இவன் யார்? நேற்றுவந்த கற்றுக் குட்டி, நிலைத்தூன்றிய எங்கள் கருத்துக்களை எதிர்த்துச் சொல்லுவதற்கு இவனுக்கு என்ன துணிச்சல்?” என்று கட்டுரையைத் தேர்வு செய்யும் குழுவினரும், அமைப்பாளரும் எண்ணமாட்டார்களா? ”சிலம்பின் காலம் இரண்டாம் நூற்றாண்டில்லை, அதற்கும் 200 ஆண்டுகள் முந்தியது என்று சான்றுகளுடன், தருக்கத்துடன், நிறுவ முற்படும் இந்தக் கட்டுரை ஏற்கப்படுமா? - என்ற எண்ணம் இடைவிடாது ஊறிக் கொண்டே இருந்தது. என் கெழுதகை அன்பர்கள் ஒருசிலர் (என்னுடைய பரத்தீட்டைப் படித்தவர்கள், கேட்டவர்கள்) “கட்டுரை ஏற்கப்படும், தேவையற்று கவலுகிறீர்கள்” என்று என்மேல் இருக்கும் அன்புணர்வினாற் ஆற்றுப்படுத்திக் கொண்டேயிருந்தார்கள். நானும் அவர்கள் பேச்சிற்காகப் பொறுத்துப் பார்த்தேன். முடிவில் ”கட்டுரை வந்து சேர்ந்தது” என்று சொன்ன மாநாட்டு அழைப்பாளர்கள் கட்டுரையை ஏற்கவில்லை. ”என்ன காரணம்?” என்றும் அவர்கள் இதுவரையும் சொல்லவில்லை. ஒரு சில அன்பர்கள் விசாரித்துப் பார்த்த பொழுதும் சரியான விவரம் கிடைக்கவில்லை. ”ஒருவேளை அவர்கள் எதிர்பார்க்கும் தரம் என் கட்டுரையில் இல்லை போலும்” என்று எண்ணி என்னைச் சமதானம் செய்துகொண்டேன்.

’சரி, அதனால் என்ன? இந்த மடம் இல்லையென்றால் இன்னொரு மடம் என்ற எண்ணத்திற் கட்டுரையை மேலும் விரிவாக்கி ஒரு தொடராகவே மாற்றி என் வலைப்பதிவிலும், ஓரிரு மடற்குழுக்களிலும் போடுவோம்’ என்ற விழைவில் தமிழ்கூறு நல்லுலகிற்கு இந்தத் தொடரைப் படைக்கிறேன். நான் ஆழ அறிந்த செய்திகளைத் தொகுத்து, இடையே சில இன்றியமையாத கருதுகோள்களையும் பிணைத்து, முடிவில் ஏரணம் உள்ளிருப்பதாக உறுதிப் பட்டு, இந்தத் தருக்கக் கட்டுரையைத் தருகிறேன். ”படிப்போரே எழுத்தாளனின் உரைகல்” என்று சொல்லுவார்கள். உங்களைத் தவிர வேறு யார் எனக்குச் சொல்லவேண்டும்? ஏதேனும் தவறுகள் இருப்பின் தெரியப்படுத்துங்கள். திருத்திக் கொள்வேன்.

பின்னால் முடிந்தால் சிலம்பைப் பற்றிய என்னுடைய மற்ற கட்டுரைகளோடு சேர்ந்து ஒரு பொத்தகமாகப் போடும் எண்ணமும் உண்டு. இனி உங்கள் வாசிப்பிற்கு.

அன்புடன்,
இராம.கி.

சிலம்பின் காலம்

முனைவர் இராம.கி.

www.valavu.blogspot.com

கட்டுரைச் சுருக்கம்


வரலாற்றுக் காலக்கணிப்பு முற்றைப் புள்ளிகளால் (absolute markers) ஒழுங்கு செய்யப் படுவதைச் சொல்லி, இந்திய, தமிழக வரலாறுகளின் முற்றைப் புள்ளிகளையும், சிலம்பின் பழைய காலக் கணிப்புக்களையும் இக்கட்டுரை முதலில் தெரிவிக்கிறது. அதோடு, காரவேலனின் அத்திகும்பா கல்வெட்டின் காலம் கி.மு.165 ஆகவும், முதலாம் கயவாகு காமினியின் காலத்தை கி.பி.171-193 ஆகவும் கொண்டு, பழந்தமிழக வரலாற்றை ஒழுங்கு செய்வதையும் கேள்வியெழுப்புகிறது.

அடுத்து, மேடைக்கூத்து வடிவங்கொண்ட சிலம்பிற்குள், முன்னால் வரும் பதிகமும், கடைசியில் வரும் வரந்தரு காதையும், மற்ற காதைகளோடும், உரைபெறு கட்டுரையோடும், பெரிதும் முரண்படுவதால், அவற்றை இளங்கோ எழுதியிருக்க வாய்ப்பில்லை என்பது சான்றுகளோடு தெளிவாக நிறுவப் படுகிறது. [அதே பொழுது, இளங்கோ எழுதாத போதும், உரைபெறு கட்டுரையில் வரும் செய்திகளின் இயலுமைக்காக உரைபெறு கட்டுரை ஏற்கப் படுகிறது.]

அடுத்து, சிலம்பிற் புகழப்படும் கரிகாலன் ”சிலம்புக் காலத்திற்கு மிகவும் முற்பட்டோன்” என்பதை விளக்கி, அவன் வட படையெடுப்பு மகதன் அசாதசத்துவின் கடைசியில், அன்றேல் அவன் மகன் உதயனின் தொடக்கத்தில், கி.மு.462க்கு அருகில், நடந்திருக்கலாம் என்பது நிறுவப் படுகிறது.

அடுத்து, காரவேலனின் அத்திகும்பா கல்வெட்டைக் கொண்டு, சிலம்பிற்கு முன்பிருந்த மூவேந்தர் பின்புலத்தை ஆய்ந்து, செங்குட்டுவன் காலத்தையொட்டி கிட்டத்தட்ட 9 சேரர் இருந்திருக்கலாம் என்பதையும், செங்குட்டுவனின் வஞ்சி இன்றையக் கேரளத்துச் சுள்ளியம் பேரியாற்றுக் கரையில் தான் இருந்தது என்பதையும் நிறுவுகிறது. நெடுஞ்செழியன் மேல், நாட்டு மக்களுக்கு இருந்த கோவமும், பாண்டியநாட்டில் சட்டம்-ஒழுங்கு குலைந்திருந்த நிலையும், விளக்கப் படுகின்றன.

செங்குட்டுவனின் வடசெலவு கண்ணகி பொருட்டா, அன்றி வேறொன்றா என்பதும் கட்டுரையில் அலசப் படுகிறது, மகதத்தில் இருந்த சுங்க அரச குடியினர் விரிவும், அவருக்குப் பின்வந்த கனவர்/கனகர் பற்றியும், இக்காலத்துச் சாதவா கன்னர் நிலையும், தெளிவாக விவரிக்கப் படுகின்றன. நூலில் வரும் செய்திகளைப் பார்த்தால், பெரும்பாலும் கி.மு.87-69க்கு நடுவில், தன் நாட்டுப் பெரும் பகுதியை இழந்து, ஆட்சி வலி குறைந்திருந்த, இலம்போதர சதகர்ணி காலத்திலேயே, செங்குட்டுவனின் வடசெலவு நடந்திருக்கலாம் என்பது நிறுவப் படுகிறது.

அதோடு, ”கனகவிசயர் ஒருவரே, கனகர், விசயர் என இருவரில்லை” என்ற செய்தி நிறுவப் படுகிறது. கனக விசயன் என்பான் சுங்கரை வீழ்த்திப் பின்னால் மகதம் கைப்பற்றிய கனக வசுதேவனின் தந்தையாக இருந்திருக்கலாம் என்பதும் உணர்த்தப்படுகிறது. ”பாலகுமாரன் மக்கள்” என்னும் சொற்றொடர் அவந்தி அரச குடியினரைக் குறிப்பதும், கனக விசயனோடு இருந்த ஆரிய மன்னரின் அடையாளமும், சுட்டிக் காட்டப் படுகிறது. படைபோன வழியாய், அன்றையப் பழம் இந்தியாவின் தக்கண, உத்தரப் பாதைகள் விவரிக்கப் படுகின்றன.

கடைசியில் கற்கோள், நீர்ப்படை, கங்கைக்கரையில் மாடலன் கூற்று, போருக்குப் பின் நடந்தவை, நடுகல், வாழ்த்து ஆகியவை சுருக்கமாய்ச் சொல்லப் பட்டு, சிலம்புக் கதை நடந்த காலம் பெரும்பாலும் மகதத்துக் கனவர் ஆட்சிக்குச் சற்று முன், கி.மு.75-80யை ஓட்டியதே என்றும், அது உறுதியாகக் கி.பி.177-க்கு அருகில் அல்ல என்றும் தெளிவாக நிறுவப் படுகிறது.

1 comment:

வெற்றிவேல் said...

வணக்கம் அய்யா...

இப்பொழுது தான் தங்கள் கட்டுரையை வாசிக்கத் தொடங்குகிறேன்.

பல முன்னனி வரலாற்று ஆய்வாளர்களின் கருத்திலிருந்து தாங்கள் மாறுபட்டு எழுதியிருப்பது சங்க காலம் பற்றிய புது பார்வையை வழங்கும் என நம்புகிறேன்...

பாராட்டுக்கள்...