Saturday, April 29, 2023

பரத நாட்டியம்

நாட்டிய வல்லாரான பத்மா சுப்பிரமணியம், பரத முனிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று ஒரு முறை சொன்னார்.  இந்தப் ”பரதமுனி” என்ற கட்டுக் கதையை மிகுந்த நாட்களாய் பத்மா சுப்பிரமணியம் போன்றோர் பரப்பிக் கொண்டுள்ளார் 

நானறியச் சிலப்பதிகாரத்தில் ”பரதம்”  என்ற சொல் கிடையாது. சொல்லாய்வர் ப, அருளி, பரத்தில் (பரம்= மேல், மேடை) ஆடும் ஆட்டம் பரத்து நாட்டியம் என்பார். பேச்சுவழக்கில் இது பரத்த நாட்டியம்>  பரத நாட்டியம் என்றாகும். பரத்தின் நீட்சியான பரதத்திற்கும் ”மேலான இடம்” என்றே பொருள் சொல்வர். இதோடு தொடர்புடைய வேறு சொற்களையும் பாருங்கள். பரமன் = மேலானவன். விதப்பாய்ச் சிவன். பரம ஈசன் என்ற தமிழ்ச் சொற்கள் வடக்கே கடனிற் போய் வடமொழிப் புணர்ச்சியில் பரமேசன் ஆகும். அதை மேலுந் திருத்தி பரமேஸ்வரன் என்பார். இதுவும் சிவனையே குறிக்கும். பரவல் / பரவுதல் = போற்றுதல், வழிபடுதல். என்பது அடுத்த வளர்ச்சி. இனி, நிலவு> நிலா என்பது போல், பரவு>பரா என்றாகும். பரவுதல்>  பராதல்> பராவுதல்= புகழ்தல் ”தற்பராய் நின்று” என்று பு.வெ.10,15 இன் உரையில் வரும். 

பராதலுக்கு உரியவன் பராதி. இங்கு சங்கத வழக்கும் ஊடு வரும். metathesis முறையில் இது பாரதியாகும். சிவ பெருமானை சிவ ப்ரான் > சிவ பிரான் என்று சங்கதத்தில் சொல்வார். பரதத்தில் உள்ளவன் பாரதி என்றாவது வியப்பில்லை. இனிச் சிலப்பதிகாரம் கடலாடு காதையில் 38-43 ஆம் வரிகளில்

சீரியல் பொலிய நீரல நீங்கப்
பாரதி யாடிய பாரதி அரங்கத்துத்
திரிபுர மெரியத் தேவர் வேண்ட
எரிமுகப் பேரம்பு ஏவல் கேட்ப
உமையவள் ஒருதிறன் ஆக வோங்கிய
இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும்
என்று வரும். இங்கு வரும் பாரதியைப் பைரவி என்று வேங்கடசாமி நாட்டார் பொருள் சொல்வார். இதை உறுதி செய்யுமாப் போல் வேறெங்கும் வழக்குக் கிடைக்க வில்லை. நாட்டார் எப்படி இதைக் காளிக்குப் பெயராய்ச் சொன்னார் என்று தெரியவில்லை. அவர் கூற்றை வைத்துக் கொண்டு, அகர முதலி தொகுப்புநரும் அகரமுதலிகளில் ஏற்றி விட்டார். நான் அறிந்தவரை, 

”திரிபுரத்தை எரிக்கும்படித் தேவர் வேண்ட, 
எரிமுகங் கொண்ட பேரம்பின் ஏவலைக் கேட்க, 
உமையவள் ஒரு பக்கம் நிற்க, 
சிவனாடும் சிவனரங்கத்தில், 
ஓங்கிய இமையவன், 
தாள இயல்பு பொலிய, 
அவையல்லாதன நீங்க, 
ஆடிய கொடு கொட்டி ஆடலும்” 

என்பதே இதன் பொருளாகும். கொடு கொட்டி ஆடல் என்பது கயிலாயத்தில் நடந்ததாகவே ஒரு தொன்மம் உண்டு. உடுக்கையின் தாளத்திற்கு ஏற்ப நடந்த கூத்து. கொடுகொட்டி பற்றி நிறையக் கூறலாம். ஆனாலும் இங்கு தவிர்க்கிறேன். அடுத்து அதே காதை 44-45 ஆம் வரிகளில்
தேர்முன் நின்ற திசைமுகன் காணப்
பாரதி ஆடிய வியன்பாண் டரங்கமும்
என்று சொல்லப்படும். மேலேயுள்ள 39-43 ஆம் வரிகளில் பாரதியைப் பைரவி என்ற சொன்ன வேங்கடசாமி நாட்டார், 44-45 ஆம் அடிகளில் பாரதியைச் சிவன் என்றே சொல்வார். இது முன்னுக்குப் பின் முரணாகவே நமக்குத் தெரிகிறது. இங்கே பாண்டரங்கம் என்பது சுடுகாட்டில் நடப்பது. பாண்டல் = சாம்பல். பாண்டரங்கம் = சாம்பல் மேவிய அரங்கம். தேரின்முன் நின்ற நான்முகன் காணப் பரமன் ஆடிய விரிந்த பாண்டரங்கக் கூத்து இவ்வர்களில் சொல்லப்படுகிறது. தவிர, பாண்டல்/சாம்பலோடு தொடர்புடைய  பாண்டு என்ற சொல் பாண்டியர் என்ற சொல்லுக்கு முன்னானதாகும். பாண்டு எனும் சாம்பலைத் தம் நெற்றியில் பூசியோர் பாண்டியர். 
பரதம்>பரத முனி>பரத சாத்திரம் என்பன முற்றிலும் கட்டுக்கதைகள் நிறைந்த சொற்கள். இ்த்காலத்தில் பரத சாத்திரம் என்று சொல்லப்படும் நூல் சிலம்பிற்குப் பல நூற்றாண்டுகள் கழித்து ஏற்பட்ட நூலாகும். மணிமண்டபம் எழுப்ப வேண்டும் எனில் அது இளங்கோவிற்கும் சிலம்பிற்கும் தாம் ஏற்படமுடியும். 

பத்மா சுப்பிரமணியத்தின் நாட்டியம் சிறப்பு. ஆனால் அவர் கூற்றுப் பிழை.

Tuesday, April 25, 2023

பண்டமும் சரக்கும்.

வெறும் goods ஐ நான் பொருட்களென்றே சொல்வேன். பண்ணப்பட்டது பண்டம். It is a manufactured good. பண்டப்பொருள் என்பது பண்டமாய்ச் சுருங்கிற்று. நல்ல மாந்தன் > நல்லவன் என்பது போற் பல நேரங்களில் பெயரடையே பெயரைக் குறிக்கும். (கொள்ளப் பட்டது தமிழில் கொள்ளை என்றுமாகும். இச் சொல் இன்று திருடப் பட்டவற்றைக் குறிப்பதால் நாமால் பயன்படுத்த முடியாது போகின்றது. வேண்டும் எனில் ”கொளு” என்ற சொல்லால் goods ஐக் குறிக்கலாம்.)

சரக்கென்பது விற்கப்படும் பண்டம். It is a sales good. இங்கும் பொருளென்பது தொக்கி நிற்கிறது. ஏழாண்டுகள் முன்னால் என் வலைப்பதிவில் வேறு சில சொற்களை விளக்கும் போது சரக்கு பற்றியுஞ் சொன்னேன். முடிந்தால் அதையும் பாருங்கள்.

http://valavu.blogspot.in/2010/10/3.html

------------------------------------

உல், துல் என்னும் வேர்களைப் போலவே, சுல் எனும் வேரும் உலர்தல் பொருளில் சில சொற்களை உருவாக்குகிறது. சுல்>சுர்>சுரு>சுரித்தல் = வற்றுதல், காய்தல், சுருங்குதல். நீர் வற்றியதை நீர் சுருங்கியது என்றும் சொல்லுகிறோம் அல்லவா? இனிச் சுருதல் என்னும் வினை, சருதல் என்றும் திரிந்து உலர்தலைக் குறிக்கும். சரு>சருகு என்ற வளர்ச்சியில் காய்ந்த இலைகளைக் குறிக்கிறோம்.

வற்றிப் போனவை நெடுங்காலம் வைத்திருந்தாலும் கெடாது இருக்கும். இன்னுஞ் சில பொருட்கள், மீன்கள், பல்வேறு தசைகள் போன்றவற்றை உப்போடு சேர்த்து உணக்கிப் போட்டுவைத்தால் கெடாது இருக்கும். இப்படிச் சுருங்கிப் போன இயல்பொருட்களைப் பண்டமாற்றிற் பரிமாறிக் கொண்டிருந்ததால் அவை சுருகு>சருகு>சருக்கு>சரக்கு என்றாயின. இன்றோ விலைக்கு விற்கும் எல்லா goods -களுமே சரக்குகள் எனப்படுகின்றன. பல்வேறு சரக்குகளை, வறைகளை (wares) வாங்கும் நமக்கு உலர்தல் விலை நினைவுக்கு வருகிறதோ? .வறண்டு போன பொருள்களை வைக்கும் கூடத்தை வறைக் கூடம் (ware house) என்றும் சொல்ல முற்படுகிறோம். 

---------------------------------

அன்புடன்,

இராம.கி.

பத்தினியும் வேசியும்

ஒரு முறை பத்தினி, வேசி என்ற சொற்களின் பிறப்பு பற்றி ஒரு நண்பர் கேட்டிருந்தார். 

படுதல் = தங்குதல்; படு>பட்டு = தங்குமிடம், ஊர் (காட்டு: செங்கழுநீர்ப் பட்டு); படிதல் = தங்குதல்; படி>பட்டி = தங்குமிடம். ஊர் (காட்டு: உசிலம் பட்டி); படி>பட்டி>பட்டினம் = தங்குமிடம், பெரிய ஊர். விதப்பாக கடற்கரையில் இருக்கும் பேரூர். (காட்டு: சென்னைப்பட்டினம்). 

பட்டினத்தில் இருப்பவன் பட்டினவன்>பட்டினன் (விதப்பாக மீனவன்); பட்டினி = பட்டினவன் மனைவி (ஊர்க்காரி என்ற பொருளில் வரும். (இதில் உயர்பொருள் ஏதோவொன்று இருக்கிறது. இது சொத்துள்ளவரை மறைமுகமாய்க் குறிக்கலாம்.) படி> பட்டினி> பத்தினி = ஊர்க்காரி (இல்லறவாழ்க்கை வாழ்பவள்.) 

பட்டினி என்ற சொல்லிற்குப் பல்வேறு பொருள்கள் உண்டு. வேறுபாடு காட்டுவதற்காக மக்கள் வழக்கில் சொற்கள் திரிபுறும். அப்படித்தான் பட்டினி> பத்தினி ஆனது.

அடுத்து வேசி என்பதற்கு வருவோம். 

வேளுதல் என்பது விரும்புதல். வேள்>வேட்கை, வேள்>வேட்சை, வேள்>வேட்டை, வேள்>வேட்பு ஆகியவை விருப்பத்தைக் குறிக்குஞ் சொற்கள். இன்னொரு வகையிற் பார்த்தால் வேள்>வேய்தல் என்பது மூடுதல். வேய்தல் என்பது முகம் மூடிக்கொள்ளுதல். நாடகத்தில் வெவ்வேறு வேயங்களைக்  கட்டிக் கொள்கிறோம். வேயம்>வேசம் ஆகும்  பின் சங்கதத்திற்குள் போய் வேஷமாகும். மீண்டும் அதைக் கடன் வாங்கி நாம் வேடம் என்போம். தமிழ்த் தொடக்கம் புரியாது வேஷம் சங்கதச்சொல் என்போம். 

வலைப்பதிவில் ஒருவர் கட்சி என்ற தமிழ்ச் சொல்லைக் கக்ஷி என்று எழுதுவார். கட்டுவது கட்சி. அது  கள் எனும் வேர் கொண்டது. அவர்கள், நாங்கள் எனும்போது ஒரு கூட்டத்தையே திரட்சிபொருளாற் சொல்கிறோம். 

கட்பலம்= திரண்ட தேக்கு, தான்றி மரம், 

கட்கம் = திரண்டிருக்கும் வாள் 

கள்ளால் ஆன பல்வேறு கூட்டுச் சொற்களை இங்கு எண்ணிப் பார்க்கலாம். வேசம் செய்வது என்பது வெறுமே நாடகத்திற்கு மட்டுமல்ல. இயல்பு வாழ்க்கையிலும் உண்டு. வேசங்கட்டினாள் = வஞ்சித்தாள். பரத்தையென்பவள் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவள் என்ற பொருளில் வேசை/வேசியானாள். அதாவது உங்கள் மேல் விருப்பங் கொண்டவள் போல் நடிக்கிறாள்.

பத்தினியும் வேசை/வேசியும் தமிழ்ச்சொற்கள் தான். நம்முடைய தமிழ்ச்சொற்களை அடையாளங் காணுவதில் பெரிதும் தடுமாறும் அளவிற்குச் சங்கதத் திரை நம் கண்ணை மறைக்கிறது. என்று மாறுவோம் என்று எனக்குத் தெரியவில்லை. நம்மிடம் அறியாமை இருக்கும் வரை நம் மேல் ஏறி மேய்வது நடந்துகொண்டு தான் இருக்கும்.

அன்புடன்,

இராம.கி.



     . 




 

பத்ம பூசன், பத்ம விபூசன்

 நண்பர் ஒருவர், தனி மடலில், “பத்ம பூசன், பத்ம விபூசன் ஆகியவற்றிற்குத் தமிழாக்கம் என்ன?” என்று கேட்டார். 

”பூட்டுதல் = பொருத்தல். சிவகங்கை மாவட்டத்தில் நகரத்தார் திருமணங்களில், தாலி கட்டுவதைத் திருப்பூட்டுதல் என்பார். அணி/அணம் = நகை போன்றது. பூட்டணம்> பூடணம்> பூஷணம் என்று சங்கதத்தில்  அமையும். பத்ம பூஷணம் - தாமரைப் பூடணம். பத்ம விபூஷணம்  = தாமரை விகு பூடணம். விகுதல்>வீங்குதல் = பெருகுதல்” என்றேன் 

“பதுமம் தமிழ் அல்லவா ?” என்று மீண்டும் வின்வினார். 

“பள்>படு->படி> பதி->பதம்/பாதம் என்ற சொல்வரிசை பள்ளத்தில் பதியும் பாதச்சொல்லுக்குக் கொண்டு போகும். பாதத்தின் அடிப்பாகம் சிவப்பானதால், தாமரை  நிறமும், பாதம்/பதத்தின் அடிநிறமும் ஒப்பிட்டுப் பதப்பெயர் தாமரைக்கு ஆகுபெயராகிக் பதுமம் எனும் 2 ஆம் நிலைப் பெயர் கிளர்ந்தது. 

தாமரை முதற்பெயர், பதுமம் 2 ஆம் நிலை. எதை விரும்புவீர் என்பது உம் உகப்பு. ”பத்மம்” சங்கத பாரதத்தில்  (பொ.உ.400) தான் முதலில் புழங்கியது. அது தமிழ்ச்சொல்லே. நான் முதல்நிலைச் சொல்லை இங்கு பயனுறுத்தினேன்” என விடையளித்தேன்.

வெக்காலித்தல்

 விள் என்பது வெளிச்சம், சூடு, எரிதல், சிவப்பு, வெளுப்பு, வெறுமை ஆகியவற்றிற்கான வேர். இங்கே வெண்மைக் கருத்தை மட்டும் கூறுகிறேன். (மற்றவற்றிலும் நிறையப் பயன்பாடுகள் உள்ளன.)

வெள்+து = வெட்டு = வெளிச்சம். வெட்டவெளிச்சம் என்பது வெளிச்சத்திலும் வெளிச்சம் = அதிகவெளிச்சம் 

வெள்+சி = வெட்சி = வெண்மையான நறுமணமுள்ள பூ. ixora coccinea. 

வெள்+கு = வெட்கு = வெளிச்சம் வெட்கு+அம் = வெட்கம். நாணும்போது முகம் வெளிறுவதாய்ச் சொல்லுவர்.  

வெட்கு +ஐ = வெட்கை = சூடு.  வெட்கு, வெட்கை  என்பவற்றின் உள்ளேயிருக்கும் வெளிச்சப் பொருளை நாம் உணரத் தவறுகிறோம். வெட்கு என்பது வெக்கு என்று பேச்சுவழக்கில் திரியும். 

அடுத்து, 

அகல்தல் = விரிதல். அகலம்= விரிவு. அகலித்தல் = விரிவாதல், பெருகுதல். அகலித்தல் என்பது பேச்சுவழக்கில் ஆலித்தலாகும். அகலமரம் ஆலமரம் ஆகும். பகல், பாலாகும். இதுபோல்  பல்வேறு சொற்கள் உள்ளன. 

(வெட்கு + ஆலித்தல்)> (வெக்கு + ஆலித்தல்) = வெக்காலித்தல். வெக்கலித்திற்று என்பது பேச்சுவழக்கில் இன்னும் திரிந்து வெக்களித்திற்று>. வெக்களிச்சிற்று> வெக்களிச்சிட்டு என்றாகியிருக்கிறது.அடிப்படைப் பொருள் ”வானம் வெளுத்து விரிந்தது”.

Sunday, April 16, 2023

வெப்பம் - 3

 தெறுமத் துனவியல் தொடங்கிய காலத்தில் எல்லாமே heat என்றுதான் இருந்தது. பின்னால் கொஞ்சங் கொஞ்சமாய், குழப்பம் தவிர்க்க, மேலும் சில சொற்களை உருவாக்கத் தொடங்கினார். 

Maxwell (the great British scientist) வெளியிட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பூதியல் (physics) பொத்தகத்தை ஒருமுறை மாண்ட்ரியால் மக்கில்லில் பிடித்தேன். அந்தப் பொத்தகத்தில் இருந்த Thermodynamics தொடர்பான பக்கங்களை மட்டும் கண்ணித்துப் (scan. பின்னற் துணியில் கண்ணி கண்ணியாய்ப் பார்த்துப் பின்னல் செய்வார்கள். அந்தத் துணி கண்ணி கண்ணியாய் இருக்கும். அதே போலப் பின்னற் துணியில் இருப்பதைக் கண்ணி கண்ணியாய்ப் படிக்க வேண்டும். கண்ணி = pixel. அதே போலக் கண்ணி கண்ணியாய் scan செய்ய வேண்டும். வருடுதல் என்ற சொல்லைக் காட்டிலும் கண்ணித்தல் மிகப் பொருத்தம் என்பது என் புரிதல்.) படியெடுத்து வைத்துக் கொண்டேன். [இப்பொழுது என்னுடைய தாள்க்குப்பைகளில் அதைத் தேடவேண்டும்.] அடிப்படை அறிவியலுக்கு அருமையான பொத்தகம். 

அந்தக் காலத்தில் எல்லா இடத்திலும் heat என்றே சுற்றிச் சுற்றி வளைத்துச் சொல்லியிருப்பார். காட்டாக, heat function at constant volume. இது என்ன தெரியுமோ? internal energy இப்படி நீள நீளமாய்ச் சொல்ல வேண்டுமா என்று Rudolf Clausius பார்த்தார்; internal energy என்ற சொல்லை உருவாக்கி விட்டார். இப்பொழுது heat function at constant volume என்று வெளிப்படையாகச்சொல்லுகிறோமா, இல்லையே? சுருக்கமாக ”உள்ளாற்றல்” என்று சொன்னாற் போயிற்று. கலைச்சொற்கள் இப்படித்தான் பிறக்கின்றன.

இனி heat function at constant pressuure பார்ப்போமா? நினைவிற்கு வருகிறதா? ஆங்கில விக்கிப்பீடியா சொல்லுகிறது.

Over the history of thermodynamics, several terms have been used to denote what is now known as the enthalpy of a system. Originally, it was thought that the word "enthalpy" was created by Benoit Paul Emile Clapeyron and Rudolf Clausius through the publishing of the Clausius-Clapeyron relation in "The Mollier Steam Tables and Diagrams" in 1827, but it was later published that the earliest recording of the word was in 1875, by Josiah Willard Gibbs in the publication "Physical Chemistry: an Advanced Treatise", although it is not referenced in Gibbs' works directly. In 1909, Keith Landler discussed Gibbs' work on the 'heat function for constant pressure' and noted that Heike Kamerlingh Onnes had coined its modern name from the Greek word "enthalpos" (ενθαλπος) meaning "to put heat into." 

The term enthalpy was composed of the prefix en-, meaning "to put into" and the Greek word -thalpein, meaning "to heat", although the original definition is thought to have stemmed from the word "enthalpos" (ένθάλπος).[1]

பாருங்கள், நிலைத்த அழுத்தத்தில் இருக்கும் வெப்ப வங்கம் (heat function for constant pressure) என்ற சொற்றொடர் எங்கேயோ ஓடிப் போய்விட்டது. புதிய கலைச்சொல் வந்துவிட்டது. உட்தளிப்பு என்று தமிழிற் சொல்லலாம். [தமிழில் தள தள என்ற ஒலிக்குறிப்பு எரிதல், சுடுதல், ஒளிர்தல் ஆகிய வினைகளைக் குறிக்கும். இந்தத் ’தள தள’வில் இருந்து தான் தழல் (=நெருப்பு), தணல்(=நெருப்பு), தாளிப்பு (=சமையலில் எண்ணெயில் சுவைப் பொருள்களைப் போட்டுச் சூடாக்கும் செயல்), தளிகை (=வெந்த சோறு, இன்று விண்ணவர்களிடையே மட்டும் புழங்கும் ஒரு வட்டாரச் சொல்) ஆகிய சொற்கள் பிறந்தன. தள தள > தக தக என்ற திரிவில் பொன் ஒளியைக் குறித்துப் பின் தங்கம் என்ற சொல் கூட இந்தக் குறிப்பில் எழுந்தது தான். தளுத்தல்/தளித்தல் என்ற வினைச்சொல்லை மட்டும் எப்படியோ காணோம். தொலைத்து விட்டோம். ஆனால் அதில் இருந்து பிறந்த மற்ற பெயர்ச்சொற்கள் இன்றும் மேலே இருக்கின்றன. தணப்பு (=சூடு; வேம்பாவில் தணப்பைக் கூட்டு. Increase the heat in the boiler) என்ற சொல் கூட எங்கள் சிவகங்கை மாவட்டப் பேச்சு வழக்கில் இருக்கிறது. என்னவோ தெரியவில்லை, அகரமுதலிகளிற் பதிவு செய்யப் படாது கிடக்கிறது. வட்டாரச்சொற்கள் பெரிதும் நம் அகரமுதலிகளில் ஏறாமலேயே இருக்கின்றன. புதிய அகரமுதலிகளாவது அதைச் செய்யவேண்டும். தாளிப்பு, தளிகை, தணப்பு ஆகியவற்றைப் பார்த்து தளி-த்தல் என்ற வினைச்சொல்லை மீட்டுருவாக்கலாம். அதன் வழிப் பிறக்கும் பெயர்ச்சொல் தளிப்பு என்றாகும் (தணப்பைப் போலவே இருக்கும் சொல்.) உட்தளிப்பை நான் உருவாக்கியது இப்படித்தான்.

எல்லாவற்றையும் வெப்பம் என்றே வைத்துச் சொல்ல வேண்டும் என்றால், சொல்லலாம் தான். ஆனால் மாந்த மூளைக்கு மிகவும் சரவலாய் இருக்கும். காட்டாக எண் முறையில், இரும எண்முறை சரியானது தான் 0, 1 என்ற இரு அடிமங்களை வைத்து எல்லா எண்களையும் உருவாக்கிவிடலாம். மாறாக 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 என்று 10 அடிமங்களை வைத்தும் எண்முறையை உருவாக்கலாம். ஏன், இன்னும் மேலே போய் 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F என்று பதினறும அடிமங்களை வைத்துக் கூட எண்முறையை உருவாக்கலாம். ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பயன் உண்டு. ஆனால் மாந்தப் புரிதலுக்கு பதின்ம எண்ணைத் தானே வைத்துக் கொள்ளுகிறோம்?

அது போல, வெப்பம், சூடு ஆகியவற்றை மட்டும் வைத்துக் கொண்டு thermodynamics தமிழிற் சொல்லித் தரவேண்டுமானால் சற்று நீள நீளமான தொடர்களால் சுறி வளைத்துச் சொல்லித் தர வேண்டும். அதற்கு மாறாய், வெப்பம், சூடு, தெறுமம், உருமம், தணப்பு/தளிப்பு, கொதி, காய்ச்சல், கனல், இப்படிச் சற்று கூடுதலான சொற்களைப் புதிய வழக்கிற்கு ஒத்துவரும் வகையில் ஆக்கிக் கொண்டால் நமக்குச் சொற்சுருக்கம் கிடைக்கும், தமிழில் அறிவியல் வளரும், என்பது என் கருத்து.

thermal energy யைத் தமிழில் தெறும ஆற்றல் என்று சொல்லுவேன். பல்வேறு ஆற்றல்களை விளக்கி, சூடு, வெப்பம் என்ற பட்டறிவையுஞ் சொல்லி, பின்னால் தெறும என்ற சொல்லும் ”சூட்டிற்கு உண்டு” என்று சொல்லி, புழக்க மரபு (convention) கருதித் தெறும ஆற்றல் என்று கொள்ளுவதாகச் சொல்லி, வெப்பம் என்பது இன்றைய அறிவியலின் படி ”பெயர்ச்சியின் போது வெளிப்படும் அல்லது உள்ளிடும் தெறும ஆற்றல் - heat is thermal energy in transition” என்று விளக்குவேன்.  

மேலே இவ்வளவு சொன்ன பிறகு heat energy என்பது அதாகுவியல் (tautology) ஆகிப் போய்விடும் என்பதால் அதை இந்தக் கால அறிவியல் தவிர்க்கிறது என்று சொல்லி தனியே வெப்பம் (heat) என்றும், பொதுவாய் ஆற்றல் (energy) என்றும் விளக்கிப் போய்க் கொண்டே இருப்பேன்.

heat energy என்பதைத் தொடக்க காலப் புரிதலில் வேண்டுமானால் சொல்லலாம். வெப்ப ஆற்றல் என்பது ஒரு குழப்பமான வரையறை. ”தெறும ஆற்றல் (thermal energy) ஒரு கட்டகத்தில் (system) இருந்து வெளிப்படும் போதோ, அல்லது கட்டகத்துள் இடும் போதோ, வெப்பமாய் உணர்கிறோம்” என்று சொல்லுவதே தெறுமத் துனவியலின் படி சரியாக இருக்கும். ஒரு கட்டகத்துள் தெறும ஆற்றல் இருக்கிறது. கட்டகத்திற்கு வெளியேயும் தெறும ஆற்றல் இருக்கிறது. இந்த இரண்டும் பொருந்தும் எல்லைகளில் (boundaries) வெப்பம் உணரப் படுகிறது. அதன் விளைவாய் ஒரு பொதி (body) வெப்பமாய் இருப்பதாய்ப் புரிந்து கொள்ளுகிறோம் என்பதே தெறுமத் துனவியல் நமக்குச்சொல்லும் அடிப்படைக் கருத்து..

அன்பரே! தவறிருந்தால் சொல்லுங்கள். பள்ளிக்கூடப் பூதியல் தெளிவாக இருக்க வேண்டும், எளிமையாக இருக்க வேண்டும், என்பது ஒரு பக்கம், இன்னொரு பக்கம் உயர் அறிவியலுக்குத் தமிழின் வழி படிப்போரை இழுத்துச் செல்வதும் நம்முன் உள்ள பணி தான். இரண்டையும் வழுவாமற் செய்ய வேண்டுமானால் சொற்துல்லியம் வேண்டும். அதற்கு நம்முடைய சொற்றொகுதியைக் கூட்டிக் கொள்ள வேண்டும். 

மன்னியுங்கள், இருப்பதை வைத்து ஒப்பேற்றக் கூடாது. பலகாலம் ஆழ்ந்து சிந்தித்து, அதற்குப் பின்னே தான் இந்தக் கொள்கைக்கும், நடைமுறைக்கும், வந்தேன். 

அன்புடன்,

இராம.கி.

வெப்பம் - 2

 நெடுங்காலம் நான் சொல்லிவருகிறேன். நமக்குத் தெரிந்த 3000, 4000 அடிப்படைச் சொற்களை வைத்துக் கொண்டு அவற்றையே மடக்கியும் (permutation), பிணைத்தும் (combination), விகுதிகளை மாற்றிப் போட்டும், புதிது புதிதாய்த் தமிழில் அறிவியற் சொற்களைப் படைத்துவிடலாம் என்று நம்மிற் பலரும் எண்ணிக் கொள்கிறோம். [ஒரு நண்பர் இன்னும் மேலே போய் ஒரு சொவ்வறை (software) வைத்து கலைச்சொற்களைப் படைக்க முடியும் என்று கூடச் சொன்னார்.] அதோடு, கலைச்சொற்கள் என்றால் அவை ஏதோ விளக்கந் தரும் சொற்தொகுதிகள் என்றும் எண்ணிக் கொண்டு விடுகிறோம். அதே பொழுது, கலைச்சொற்களின் உள்ளிருக்கும் வித்தை, பொறியை, உணர மாட்டேம் என்கிறோம். உயர் அறிவியலைத் தமிழிற் சொல்ல அந்த நடைமுறை நம்மை வெகுதூரம் கொண்டு செல்லாது என்பது என் புரிதல். இப்படிச் சொல்வதால், இவன் ஒரு பித்தன், பழமைவாதி, என்று சிலர் எண்ணிக் கொண்டு, நான் சொல்லவருவதைப் புரிந்து கொள்ள மறுப்பதும் கூட நடக்கிறது. [I am only stating simply that, without increasing the set of basic words we have in store, it would be very difficult to create further new Tamil technical terms.]

இதைச் செய்ய முதன்முதலில் நம்முடைய தமிழ்ச் சொற்தொகுதியைக் கூட்டிக் கொள்ளவேண்டும்; அதற்காகப் பழந்தமிழ் இலக்கியங்களைப் (தொல்காப்பியனை, சங்க இலக்கியத்தை, வள்ளுவனை, இளங்கோவை, சாத்தனாரை, கம்பனை, இன்னும் பலரைப்) படிக்க வேண்டும், வட்டார வழக்குகளைத் தேடவேண்டும், மற்ற தமிழிய மொழிகளைப் படிக்க வேண்டும். நம்மிடம் அருகிப் போய், அவர்களிடம் இருக்கும் தமிழிய வேர்களை இனங்காண வேண்டும். கொஞ்சம் வடமொழியையும் கற்க வேண்டும். [தமிழுக்கும் வடமொழிக்கும் (சங்கதம், பாகதம் இரண்டையும்) உள்ள இடையாட்டைச் சரிவரப் புரிந்து கொள்ள வேண்டும்.] மொத்தத்தில் நம்மிடம் உள்ள அடிப்படைச் சொற்கள் 10000, 20000 என்று பலமடங்கு பெருகவேண்டும் என்று இடைவிடாது சொல்லுகிறேன். என்னவோ, கேட்கத்தான் ஆளில்லை. எங்கு பார்த்தாலும் ஒரு தனியாளாகவே நான் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கிறேன்.

இங்கே ”வெப்ப இயக்கவியல்” என்ற சொல்லிற்கு வருவோம். [நானும் பள்ளிப் பாடத்தில் இதைப் படித்து அறிந்தவன் தான், பயன்படுத்தியவன் தான்]. ஆனால் அந்தக் கூட்டுச்சொல் தவறான உருவாக்கம் என்பதே என் கூற்று. ஏனென்று பார்ப்போம். 

வெப்பம் என்பதை heat என்பதற்கு இணையாக ஆக்கிய பின்னால், thermal என்று சொல்லுவதற்கு வேறு ஒரு சொல்லைத்தான் தேட வேண்டும். வெறுமே குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டு வெப்பத்தை வைத்தே எல்லாவற்றையும் சொல்லக் கூடாது. அடிப்படைப் பொறியியல் படிக்கும் போது, Heat transfer (வெப்பப் பெயர்ச்சி), thermodynamics என்ற இரு தொடர்புடைய பாடங்கள் ஆனால் பெரிதும் விலகி நிற்கும் பாடங்களைப் படிக்கிறோம் இல்லையா? 

முதலில் வரும் வெப்பப் பெயர்ச்சிப் பாடம் எண்ணுதிப் பொருளில் வளர்த்தெடுக்கப் படுகிறது. இரண்டாவது பாடம் எண்ணுதி, தகை போன்ற பலவற்றையும், தேற்றங்களையும், பொதுள்(potential)களைப் பற்றியும் சொல்லுகின்ற பாடம். வெப்பப் பெயர்ச்சியின் விளிம்புகளை (limits), எல்லைகளை (boundaries), நேர்த்திகளை (efficiencies) இது நமக்கு உணர்த்துகிறது. இத்தனை செய்திகளையும் குறிப்பால் உணர்த்த வேண்டுமானால், தமிழில் thermal process என்று குறிக்க வேறொரு சொல் நமக்கு வேண்டும். அது இல்லாமலே ஓட்டிவிடலாம் என்று நினைத்தால், தமிழில் அறிவியல் என்பது ஒரு சவலைப் பிள்ளையாய் சூம்பிப் போய்த்தான் கிடக்கும். 

நண்பர்களே! பொதுமைச்சொல், விதப்புச்சொல் என்ற வேறுபாட்டை ஆழ்ந்து உணர்ந்து கொள்ளுங்கள் (வெப்பம் என்பது ஒரு விதப்புச் சொல். By our convention, we have made it a quantitative term referring specifically the term 'heat' in the last 50 to 60 years.)   

வெப்பப் பெயர்ச்சி (= heat transfer) என்று சொன்ன பின்னால், வெப்பம் என்பதையே thermal என்பதற்கும் இணையாகப் பயன்படுத்தினால், குழப்பம் தான் மிஞ்சும். We would need a common thermal term to denote both intensive and extensive properties. அல்லாமல், வெப்பத்தை மட்டுமே பயன்படுத்தினால் thermodynamics யை heat dynamics என்றே நான் புரிந்து கொள்வேன். அந்தப் புரிதல், பள்ளிக் கூடப் பூதியலுக்குச் சரியாக இருக்கலாம். ஆனால் உயர் அறிவியலில் வேறுபாடு காட்டத் தெரியாமல் என் தமிழ்நடை முழிக்கும் அல்லவா? மாறாகத் தெறும என்ற சொல்லைப் பொதுமையாகப் பயன்படுத்தி, தெறுமச் செலுத்தம் (thermal process) என்னும் போது, அதனுள் வெப்பப் பெயர்ச்சி என்பது துணைப்பாடம் என்பது  எனக்குப் புரிந்து போகும். 

இனி இயக்குதல் என்ற சொல்லிற்கு வருவோம். 

to direct as a director in a company, to operate, to deal with dynamics என நாலைந்து பொருட்பாடுகளுக்கும் இயக்குதல் என்று சொன்னால், நாம் ஏதோ ஒப்பேற்றிக் கொண்டிருக்கிறோம் என்றே பொருள். [Tamil had been such a poetical language where one word - many meanings, or many words - one meaning is an asset-like occurrence; but in scientific expression, we need to move more into one word - one meaning trend. It is not always possible, but at least we can try.] 

இயக்குதல் என்ற சொல்லை to operate என்று வைத்துக் கொண்டு நெறியாள்தல் = to direct என்று கொண்டு, dynamics என்பதற்கு துனவியல் என்று சொல்லவே எம்மைப் போன்றோர் முற்படுகிறோம். ”கதழ்வும் துனைவும் விரைவின் பொருள” என்பது தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரியியல் 798 ஆம் நூற்பா. கதழ்வில் இருந்து உருவான சொல் கதி = velocity; விரைவு, வேகம் என்பது speed. கதி என்பதை velocityக்கு இணையாக 1965 இல் இருந்து கோவை நுட்பியற் கல்லூரியில் பயன்படுத்தினோம்.  துனைவில் இருந்து உருவானது துனவு>துனவியல் = dynamics. சொல்லாய்வறிஞர் ப.அருளியும் அவருடைய தஞ்சைப் பல்கலைக்கழக அறிவியல் அருஞ்சொல் அகரமுதலியில் இதை எடுத்துரைத்திருப்பார். ஒரு காலத்தில் தினவு = force என்னும் பொருளில், தெறுமத் தினவியல் என்றும் நான் கூறிவந்திருக்கிறேன். பின்னால் துனவியல் இன்னுஞ் சரியாக இருக்கும் என்று எனக்குத் தோற்றியது. இதில் எது நிலைத்தாலும் எனக்குச் சரியே.

இனி “Look at the process dynamically, and conduct the operation accordingly” என்ற வாக்கியத்தைத் தமிழிற் சொல்லிப் பார்ப்போம். ”செலுத்தத்தை துனவாய்ப் பார்த்து, இயக்கத்தை அதற்கேற்ப நடத்துங்கள்” - என்னைப் பொறுத்தவரை இது குழப்பமில்லாத வாக்கியம். மாறாக, வெறுமே இயக்கத்தை வைத்துச் சொன்னால், ”செலுத்தத்தை இயக்கமாய்ப் பார்த்து, இயக்கத்தை அதற்கேற்ப நடத்துங்கள்” என்று சொல்ல வேண்டி வரும். இது போன்ற தலைகால் புரியாத வாக்கியங்களை ஆங்கிலத்தில் tautological expression என்று சொல்லுவார். இப்படிச் சொற்களை அமைத்தால், ஓர் அணுங்குழை கூட அறிவியலைத் தமிழிற் சொல்லுவதில் நாம் முன்னேற மாட்டோம்.

மொத்தத்தில் “நீங்கில் தெறும்” என்ற அருமையான குறள் தொடரை நான் அறிந்திராவிட்டால், thermodynamics என்ற பெயர்ச்சிக்கலுக்குத் தீர்வு கண்டிருக்கவே இயலாது.

தொல்காப்பியரும், சங்கப் புலவர்களும், திருவள்ளுவரும், இளங்கோவும், சாத்தனாரும், கம்பனும், இன்னும் பலரும் நமக்கு ஒரு பெருங் கருவூலத்தையே விட்டுச் சென்றிருக்கிறார்கள், பயன்படுத்திக் கொள்ளுவோம். நல்ல தமிழில் அறிவியல் படைக்கமுடியும். அது துல்லியமாகவும் இருக்கும்.

அன்புடன்,

இராம.கி.


வெப்பம் - 1

 அன்புடையீர்,

நான் படிப்பால், ஆய்வால் ஒரு தெறுமத் துனவியன் - thermodynamicist. தெறுமத் துனவியல் (thermodynamics) அதன் தொடக்க காலத்தில் இப்படித் தகைகளையும் (qualities) எண்ணுதிகளையும் (quantities) குறிக்கும் மேலைச் சொற்களுக்கு இடையிருந்த பெருங் குழப்பத்தோடு [காட்டு heat and temperature, hotness and temperature, power and energy........ It goes on.] தான் தொடங்கிப் பின்னால் அவற்றைக் கொஞ்சங் கொஞ்சமாய்ச் சீர் செய்து கொண்டு, முடிவில் துல்லிய கலைச்சொற்களோடு இன்று புழங்குகிறேன். தெறுமத் துனவியல் தொடர்பான செய்திகளைத் தமிழிற் சொல்ல வேண்டுமானால் நம்மிடம் சொற்துல்லியம் கூடவேண்டும். கடந்த 60 ஆண்டுகளாய் அது நடந்து வருகிறது. ஆனாலும் சொல் துல்லியம் இன்னும் கூடவில்லை.

சூடு, வெப்பம், உருநம் (>உண்ணம்>உஷ்ணம்) ஆகியவை தமிழிற் பேச்சுவழக்கில் தகையைச் சிலபோதும், எண்ணுதியைச் சிலபோதும் குறித்தன. இந்தக் குழப்பம் நெடுநாள் நம்மிடையே இருந்தது. [சூடு, வெப்பம் ஆகியவற்றைத் தமிழ் என்று கொள்ளும் நாம், உஷ்ணத்தின் சொற்பிறப்பைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. உருநம் தான் உஷ்ணமானது. உருநம்>உண்ணம்>உஷ்ணம்; சுர்>சுள்>சூடு போல, உர் என்று ஒலிக்குறிப்புச் சொல்லில் உர்>உரு>உருநம் என்று சொல்வளர்ச்சி தொடங்கியது. உச்சிவெயிற் காலத்தை உரும வேளை என்பது நெல்லை மாவட்டத்தார் வழக்கு. நடு உண்ணம் என்பது தான் மத்ய அண்ணம் >மத்யாண்ணம் என்னும் இருபிறப்பிச் சொல்லாயிற்று. விண்ணு, விஷ்ணு ஆவது போல், உண்ணம் உஷ்ணம் ஆகும். கருநன்>கண்ணன்> க்ருஷ்ணன் ஆவதும் இதே போக்கில் தான். க்ருஷ்ணன் எனும் சொல்லில் இரு மடிச் செலுத்தம் (two fold process) இருக்கிறது. தமிழ்ச் சொல்லிற் தொடங்கி முடிவில் இருபிறப்பிச் சொற்களாய் ஆன சொற்கள் மிகப்பல. முடிவில் உள்ள வடிவம் வடசொல்லாகி, தொடக்கம் தமிழாய் இருக்கும்.] 

நாளாவட்டத்தில் பள்ளிப் பூதியற் (school physics) பாடத்தை தமிழ்நாட்டில் ஒழுங்கு படுத்தியவர் 1950 களில் ஓர் ஒழுங்கைக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக வெப்பம் என்ற சொல்லை எண்ணுதிக்கும், வெப்ப நிலை என்பதை temperature என்ற தகைக்கும் பாவித்து வந்தார். பின்னால் வெப்ப நிலை என்பதைக் காட்டிலும் வெம்மை என்ற பண்புப் பெயரையே சுருக்கமாய்ச் சொல்லலாமே என்ற முனைப்பில், ”நிலை என்பது தேவையில்லை” என்று கொண்டு, [தவிர கூட்டுச் சொற்களைப் பயன்படுத்தும் போது “நிலை” என்பது இடறலாய் இருக்கும் என்ற கருத்தில்] எங்களைப் போன்ற பலரும் தவிர்த்து வருகிறோம். [மின்சாரத்தில் சாரத்தைப் போக்குவதும், தொழில்நுட்பத்தில் தொழிலைத் தொலைப்பதும், அலுவலகத்தை அலுவமாய் ஆக்குவதும் இதே கருத்திற் தான். இன்றைக்கு நிலை என்ற சொல்லைத் தெறுமத் துனவியலில் பெரும்பாலும் point என்று ஊடே வரும் இடங்களில் மட்டுமே நான் பயன்படுத்துகிறேன். காட்டு கொதி நிலை = boiling point.]  

என்னுடைய வலைப்பதிவில் இருக்கும்

நீங்கில் தெறும்

http://valavu.blogspot.com/2005/08/blog-post.html

என்ற கட்டுரையையும், 

வாகை மாற்றங்கள் (phase changes)

http://valavu.blogspot.com/2007/05/phase-changes.html

வாகை மாற்றங்கள் (phase changes) - 2

http://valavu.blogspot.com/2007/05/phase-changes-2.html

என்ற முடிவுறாத கட்டுரைத் தொடரையும் படிக்குமாறு கேட்டுக் கொள்ளுகிறேன். அங்கு பயன்படுத்திய சில சொற்களை இங்கு உங்கள் பார்வைக்குத் தொகுத்துத் தந்திருக்கிறேன்.

to heat = சூடேற்றல் 

caloric / heat energy = வெப்பம்

temperature = வெம்மை 

thermal = தெறும 

hotness = சூடு

to freeze = உறைதல்

chill = சில்லீடு

cold = குளிர்

warm = வெதுப்பு

mild hot = இளஞ்சூடு

very hot = கடுஞ்சூடு

to boil = கொதித்தல்

phase equilibria = வாகை ஒக்கலிப்பு

power = புயவு

thermometer = தெறும மானி

quality = தகை/தகுதி 

quantity = எண்ணுதி

boiling point curve = கொதிநிலைச் சுருவை  

vapour pressure curve = ஆவியழுத்தச் சுருவை 

fluid = விளவம் அல்லது பாய்மம்

flow = விளவு

space = வெளி

volume = வெள்ளம் 

இவற்றை ஏற்பதும் ஏற்காததும் உங்கள் உகப்பு. 

அன்புடன்,

இராம.கி.


Friday, April 14, 2023

பொதுள்

 தமிழில் புல்>பொல் என்னும் வேரில் இருந்து ”பொத்து” எனும் வினைச்சொல் பிறக்கும். பொத்துதல் என்பது மூடுதல் ஆகும். பொத்திக் கிடந்தது புதையலுமாகும். புதை என்ற சொல்லும் புல் எனும் வேரிற் பிறந்தது தான். பொதிந்து கிடத்தலும் உள்ளே புதைந்து கிடப்பதைத் தான் குறிக்கும். பொதிதல் தன்வினை. பொதித்தல் பிறவினை.

பொதிதல் = சேமித்தல்; “பொன்போற் பொதிந்து” - குறள் 153; 

         = உள்ளடக்குதல் “செழுந்தேனும் பொதிந்து” - திருக்கோவையார் 46; 

         = மறைத்தல், “தூண்டிலுட் பொதிந்த தேரையும்” (திரிகடுகம் 24

பொதி என்ற சொல் நிறைவு, மூட்டை, பண்டம், செல்வம் போன்று பல்வேறு பொருட்பாடுகளைக் குறிக்கும். நாற்பதாண்டுகளாய் body என்னும் பொருளில் தெறுமத் துனைமவியலில் (thermodynamics; dynamics என்பதற்கான துனைமவியல் என்னும் சொல்லை அருளியின் அருங்கலைச்சொல் அகரமுதலியிற் பாருங்கள்; இல்லையென்றால் என் வலைப்பதிவுகளிற் தேடுங்கள்.) பொதியைப் புழங்கி வருகிறோம்.   

”பொத்தி உள்ளது” என்றால் ”பொதிக்குள் மறைந்து உள்ளது” என்று பொருள். அதைப் பொத்துள் என்னும் போது வினைத்தொகையாகும். ”பொத்திக் கிடக்கும் உள், பொத்துகின்ற உள், பொத்தும் உள்” என்று காலம் விரித்துப் புரிந்து கொள்ளலாம். உள் என்பதை உள்ளாற்றலாய்ப் (internal energy) புரிந்து கொண்டால், பொத்துள் என்ற கூட்டுச் சொல் பொதியுள் அடங்கிய உள்ளாற்றலைக் குறிக்கும். நடுவில் வரும் த் என்னும் ஒலியை சொல் எளிமைக்காக இன்னும் தொகுக்கலாம். பொத்துள் “பொதுள்” என்றே ஆகலாம். பொதிந்து கிடக்கும் ஆற்றல் என்று பொருள் கொள்ளும். 

potential என்பது ஓர் அலகிற்கு ஆகும் (per mole, per gm) உள்ளாற்றல். ஆங்கிலத்தில் potential என்ற சொல் potent என்ற சொல்லிலிருந்து பிறந்தது. வடமொழியில் இதை ”வீரியம்” என்பார்கள். அது உள்ளே கிடக்கும் ஆற்றற் பொதிவைப் பொறுத்தது. பொதிவு கூடக் கூட ”வீரியம்” கூடும். ”வேதிப் பொதுள்” என்ற சொல் ”chemical potential” யை எங்கும் குழப்பமின்றிக் குறிக்கும். [நான் பல்வேறு வாக்கியங்களில் அமைத்துப் பார்த்திருக்கிறேன்.] 1965 இல் உருவாக்கிய இந்தச் சொல்லைப் பல்வேறு கட்டுரைகளிற் புழங்கியிருக்கிறேன். வலையில் கிடக்கும் என்னுடைய மூன்று ஆக்கங்களைத் தேடினால் பொதுள் என்ற சொல்லின் பயனாக்கம் உங்களுக்கு விளங்கும்.

1. காலும் காற்று http://valavu.blogspot.in/2010/10/blog-post.html என்ற தளத்தில் potential energy யைப் ”பொதுள் ஆற்றல்” என்று குறித்திருந்தேன். 

2. ”பணத்திற்கு எதிரான அறிவு” என்ற இடுகையில் (http://valavu.blogspot.in/2005/04/blog-post_12.html) பொதுள் பயன்படுத்தியிருக்கிறேன்.

3. தமிழெழுத்துப் பரம்பல் - 2 பற்றிய உரையாடல் தமிழ் உலகத்தில் எழுந்தது https://groups.google.com/forum/?fromgroups#!msg/tamil_ulagam/5TyVl18efU8/q7Dtl3BOHFQJ. அதிலும் இந்தப் பொதுள் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறேன்.

அன்புடன்,

இராம.கி.

Sunday, April 09, 2023

முதலமைச்சாய் நானிருந்தால் - 3


வேளாண்மை / மர வளர்ப்பு:


மாநிலத்தின் நிலப்பரப்பில் மூன்றிலொன்று காடானால்,

நானிலத்தில் நமைவெல்ல யாருமிங்கே வரமாட்டார்;

மேற்குமலைச் சரிவுகளில் மிகுமரங்கள் நட்டிடுவேன்;

தாக்குமந்தக் கருவைமரத்(15) தடவேரைக் கில்லிடுவேன்;

பார்க்கின்ற இடமெல்லாம் பரம்பரையாய் வருமரங்கள்

வேர்கொள்ள விளைத்திடுவேன்; வியன்காடு பெருகட்டும்.

தாளடியில் நெல்லின்றி தரம்குறையாக் கோதுமையை(16)

நீள்பயிராய் ஆக்கிடுவேன்; நீர்த்தேவை குறையாதோ?

எங்கெல்லாம் புழுதி எடுத்தெறிந்து பறக்கிறதோ(17),

அங்கெல்லாம் அதைத்தடுத்து அடக்கின்ற வகையினிலே

மண்வளங்கள் பெருக்கிடுவேன்; மரம்புதர்கள், செடிகொடிகள்

நண்ணுதற்கு வழிசெய்வேன். நானிலம் பின் செழிக்காதோ?


அடிக் கட்டுமானம்(18):


அடிக்கட்டு மானத்தில் அதிசிறந்த மாநிலமாய்

கொடிகட்டிப் பறப்பதற்கு கூட்டாகச் செயல்முடிப்பேன்.

நகர்ச்சாலை, நெடுஞ்சாலை, நாலிரண்டில் ஒழுங்கை(19)யென

அகலிட்டுச் செய்தால்தான் அடர்துரக்கு(20) இருக்காது;

மூன்றுமணி நேரத்தில் சென்னைமுதல் திருச்சிவரை;

தாண்டிஒரு மணிநேரம் தடம்பெயர்ந்தால் மதுரைநகர்;

ஏழுமணி நேரத்தில் எங்குமரி முனைசெல்ல,

ஆலநெடுஞ் சாலைகளை அமைத்திடவே வழிவகுப்பேன்;

குமுகத்தில் எங்கிருந்தும் கூடுதொலைத் தொடர்புகொள

குமுனேற்ற ஏந்துகளை(21) கொண்டுவந்து குவித்திடுவேன்


கல்வி:


வதிகின்ற தமிழ்நாட்டில் வாழுகின்ற இளஞ்சிறுவர்

பதினாறு அகவுவரை இனிப்படிப்பர் தமிழில்தான்;

ஆனாலும் தெளிவாக ஆங்கிலத்தில் ஆளுதற்கு

வேணுகின்ற வழிமுறைகள் விரிவாகச் செய்திடுவேன்;

மாநிலத்துப் பள்ளியெலாம், மடிக்குழையோ(22), மற்றதுவோ,

மாநிலத்தில் ஒருபாடத் திட்டத்தில் மாற்றிடுவேன்

எந்தவொரு பிள்ளையுமே ஈரயிர மாத்திரி(23)க்குள்

அண்டிப் படிப்பதற்கு ஆவனதாய்ச் செய்திடுவேன்;

மாநிலத்தின் வரும்படியில் ஆறே விழுக்காடு

தானாக்கி கல்விக்கே தரமுயர வழிசெய்வேன்.

கல்லூரிப் படிச்செலவு கடுசாகிப் போனாலும்

பள்ளிப் படிச்செலவு பாடாக விடமாட்டேன்.

பொதுவிடத்தில் தமிழ்புழங்க புதுஆணை பிறப்பிப்பேன்;

எதுவேனும் கட்டுறுத்தல்(24) தேவையெனில் இயற்றிடுவேன்;


மருத்துவம்:


அடிப்படையாய் மருத்துவங்கள் அய்ந்தயிர மாத்திரி(25)யில்

தொடுப்பதற்கு வழிசெய்வேன்; தொண்டார்வப் படைபோல

அடுக்கடுக்காய் மருத்துவர்கள் அமைவதற்கும் வழிசெய்வேன்;

இடுக்கண்கள் எழுகாமல் இதன்செலவை ஏற்றிடுவேன்.


அரசு நிர்வாகம்:


அன்றாட வாழ்க்கையிலே அரசின் குறுக்கீடு

குன்றுதற்கு வழிசெய்வேன்; கூடிவரும் துறைகளெலாம்

குழுமாக்கிப்(26) பணியாற்ற கூடவொரு முயற்சிசெய்வேன்

பழுவான பணியாளர் பத்திலொரு பங்காக்கி

அரசின் பணச்சுமையை அதிரடியாய்க் குறைத்திடுவேன்;

அரசுத் துறைகளெலாம் ஆங்காங்கே நகர்மாற்றி

சென்னைச் சுமைகுறைப்பேன்(27); சீரமைப்பை ஒழுங்குசெய்வேன்;

சென்னையொரு அரசாளும் நகரென்று அமையாது;

சட்டத்தின் பேரவையும் ஆளுநரின் இருக்கைமட்டும்

இட்டதுபோல் சென்னையிலே இருந்திட்டால் தாழ்வில்லை;

சென்னையெனும் நகரினிமேல் வணிகத்தால் பெயர்பெறட்டும்;

சென்னைக்கு வளர்ச்சியினி அரசியலால் வாராது;


அரசுச் சீரமைப்பு:


அறுபத்தைந் தகவையின்பின் யாருமினித் தேர்தலிலே

உறுவதற்கு முடியாமல் ஓய்வுபெற வழிசெய்வேன்;

இனித்தேர்தல் நிற்பவர்கள் ஈரைந்து ஆண்டின்மேல்(28)

முனைந்துவர முடியாமல் போவதற்கும் சட்டம்வரும்.

..........................


திடீரென்று நான் விழித்தேன் ......


என் புயவுக்(29) கனவு வியந்தோடியது.

இதுவரைக்கும் வந்திருந்த கனவெங்கே நீண்டிருக்கும்?

இதன்நிகழ்ப்பு யாரறிவார்? என்றாலும் எண்ணுதற்கு

வாய்ப்பளித்த கவியரங்கத் தலைவருக்கு என்வணக்கம்;

நோய்ப்பட்ட(30) எனைத்தூண்டி துவளாமல் சிலசொல்லிப்

பங்கெடுக்க வைத்த அவர் பண்பிற்கு என்நன்றி!

இங்குற்ற பாவலர்கள் எத்தனையோ கனவுகளை

சொல்லி நெகிழவைத்த சுற்றிடையே என்றனையும்

புல்லி யணைத்ததற்குப் புலனறிந்து வணங்குகிறேன்;

கொள்ளுவதோ, கூறிட்டுத் தள்ளுவதோ, மாறாக

விள்ளுவதோ உங்களுடை வேட்பு.

அன்புடன்,

இராம.கி.


15. கருவை மரம்; இங்கு வேலிக்கருவை = Julia Flora; மேற்கு ஆத்திரேலியாவில் இருந்து கொண்டுவந்த இந்தமரம் இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் மரபு சார்ந்த மரங்களை வளரவிடாமல் தான்வளர்ந்து சீரழிக்கிறது. இதை ஒழித்தால் தான் மரவளம் திரும்பக் கிடைக்கும்.

16. தாளடிக்குக் கோதுமைப் பயிரீடு என்பது தஞ்சைத் தரணியில் இப்பொழுது சொல்லப்பட்டுவரும் பரிந்துரை. தண்ணீர் குறைவாகத் தேவைப்படும் காரணத்தால் இது நல்லது என்று வேளாணியலார் சொல்லுகிறார்கள்.

17. நீர்வளம் குறைந்த காரணத்தால் புழுதி பறக்கிறது. தமிழ்நாடு சிறக்க இது மாறவேண்டும். செடி,கொடி,புதர்கள் மண்டினால், மண்வளம் கூடி இந்தநிலை மாறும்.

18. அடிக்கட்டுமானம் = infrastructure

19. நாலிரண்டு ஒழுங்கை = எட்டு ஒழுங்கை = eight lane

20. அடர் துரக்கு = heavy traffic

21. குமுனேற்ற ஏந்துகள் = communication facilities.

22. மடிக்குழை = matriculation

23. ஈர் அயிர மாத்திரி = 2 kilo meter

24. கட்டுறுத்தல் = control

25. அய்ந்து அயிர மாத்திரி = 5 kilo meter

26. குழுமாக்கல் = corporatization; this does not mean privatization

27. அரசுத் துறைகள் மாநிலத்தின் மற்றநகர்களுக்கு இடம் மாற்றப் பட்டு, சென்னை நகர் அரசாங்க நகர் என்ற பெயர் மாறவேண்டும். நெதர்லாந்தில் இப்படித்தான் நடக்கிறது. ஒவ்வொரு துறையும் ஒவ்வொரு நகரில் இருக்கும். நுட்பியல் பெருகிப் போன இந்தக் காலத்தில் இது எந்த வாய்ப்புக் குறைச்சலையும் ஏற்படுத்தாது. ஆனால் அதிகாரம் என்பது அகலப் படுத்தப்படும். சென்னைநகர் அளவிற்கு மீறி வளராது.

28. பத்தாண்டிற்கு மேல் யாரும் அரசில் பங்கு பெறமுடியாது.

29. புயவு = power

30. சிலநாட்களாய் கணியின்முன் அமர்ந்து தட்டச்சுவது சரவலாய் இருக்கிறது. 

தலைச்சுற்று, கிறுகிறுப்பு போன்றவை கூடுதலாய் இருக்கின்றன. சிந்தனை நகர  மறுக்கிறது. இருந்தாலும் முனைவர் சுவாமிநாதனின் தூண்டுதல் இந்தப் பாவரங்கில் பங்குகொள்ள வைத்தது.      


முதலமைச்சாய் நானிருந்தால் - 2

 இய்யதாகு முதலமைச்சன்


அரசொன்றில் முதலமைச்சாய் ஆவதெனில் எளிதாமோ?

அரசியலில் மற்றவரை அழிக்காமல் ஆளாமோ?

ஆளுவதும் பொருதுவதும் அடுத்தடுத்த நடைமுறைகள்;

நீளனைத்தும் செய்தபின்தான் நெடுங்கட்சித் தலையானேன்;

பார்ப்பதற்கோ நான்எளிமை; பலக்குறுத்தல்(1) அடிப்புறத்தில்;

வேர்த்துவிட மற்றவரை விரட்டுவதில் மேலாளன்;

தடந்தகை(2)யும், வழிதகை(3)யும், தரவுகளின் செயல்தகை(4)யும்

உடன்தெரிந்து உழுவதிலோ உள்ளார்ந்த கோடலன்(5)நான்;

எனைமிகுத்து எவனுமிங்கே அதிகாரி, அமைச்சனிலை;

எனைத்தவிர்த்து எவனுமிங்கே எழுந்திருக்க முடியாது;

எனைவிடுத்து ஒருபயலும் இடைநுழைந்து செயலாற்றான்;

எனைவிடுத்த எல்லோரும் தொண்டரெனப் படுவார்கள்;

இந்தநிலை கொண்டபின்தான் இந்நிலத்தில் முதலமைச்சாய்

எந்தவொரு தலைவனுமே இருந்திடுவான் இயல்பாக!

நானென்ன விதிவிலக்கா? நான்சிங்கச் சொப்பனம்தான்;

நான்விழிக்க மறந்தாலோ, நட்டாற்றில் கவிழுதற்கு,

இரண்டே நுணுத்தம்(6)தான்; இப்புலத்தில் இதுநியதி;

அரண்டுவதும் அரட்டுவதும் அன்றாடம் செய்பணிகள்;

அரசியலில் இதுவெல்லாம் அமைவதுதான் விளையாட்டு;

அரசியலில் அதனால்தான் அத்தனைபேர் நுழைகின்றார்;

முதலமைச்சாய் ஆனமுதல், மும்முனைப்பாய் வரும்தேர்தல்

விதப்புகளில் வென்றிடவே வினைகின்ற பரபரப்பை,

நானுலகில் இருக்குமட்டும் நாளும்தான் மறப்பேனோ?

நானிலத்தில் நல்லரசை நாடுவதும் அப்புறம்தான்;

இத்தனையும் சொன்னதனால் இவன்தன்னைப் பேணியென

வித்தகமாய் நினைப்பீர்கள்; இருந்தாலும் வெள்ளந்தி

நிலையாளன் நானல்லன்; நீளுலகில் தற்பேணல்

குலையாது கொள்ளுவதும் குமுகத்தில் தவறாமோ?

சொந்தநலம் பார்ப்பவனும், சூழ்தேர்வில் வெல்லுதற்காய்,

அந்தந்தப் போதுகளில் அளவாகச் செய்வதுதான்;

குமுகத்தில் அதுநலமா, கொள்கேடா எனக்கேட்டால்,

"அமைவதெலாம் ஊழ்வினையால் ஆழ்த்துவந்து உருட்டாதோ?"

"அரசியலில் பிழைத்தோர்க்கு அறங்கூற்று ஆகாதோ?"

அரசியலின் அடிப்படையே இதுவறிந்த பின்னேதான்

"கல்லென்ற நெஞ்சமிது கனியாது" எனநீவீர்

சொல்லிடவே எழுந்தாலும் சொல்லுவது என்கடமை;

நான்கடுசு; இருந்தாலும் நான்மனிதன்; எனக்குள்ளும்

தேன்சுரக்கும்; சிலபோது திருவினைகள் செய்வேன்தான்;

நீர்வளமா? வேளாண்மை? மரம்வளர்ப்பா? கட்டுமானச்

சீரமைப்பா? செழுங்கல்வி? மருத்துவமா? சிறுசிறிதாய்

அரசினுடை நிர்வாக அமைப்புச்சீர் நடவடிக்கை?

உரசிவிட என்தடங்கள் ஊன்றிடுவேன்; வியந்தீரோ?

இப்படியாய் இருகலவை இயன்றவன்தான் முதலமைச்சன்;

தப்படியைப் போடாமல், தடுமாற்றம் அடையாமல்

செப்புவது ஐந்தாண்டில் செய்யநினைக் கும்செயல்கள்;

இப்புலத்தில் இவைசெய்தால் எம்பருவம் பத்தாண்டு.


நீர்வளம்


வளநாட்டை வானத்தின் மேலிருந்து பார்க்கும்போழ்,

அளவைந்தில் ஒருபாகம் அம்மெனவே சொல்வகையில்

நீர்வளத்தைக் கூட்டுவதே நெடுநாளாய் என்கனவு;

ஆர்வலர்கள் சேர்ந்துவரின் அத்தனையும் மெய்யாகும்;

ஆறோடும் படுகைகளில் ஆங்காங்கே தடுப்பணைகள்,

நீர்கசியும் குட்டைகளும், நிலைப்பதற்கு வழிசெய்வேன்;

தடம் அகல்ந்த கொள்ளிடத்தில், தண்பொருநை, வைகையினில்,

இடம்போட்டு நிலமகழும் ஏமாற்றை நிறுத்திடுவேன்;

பாசனத்திற் கேற்றபடிப் பண்ணுதற்கும் வழிசெய்வேன்;

பாசனங்கள் ஒருங்கிணைக்க வாய்ப்புக்கள் பெருக்கிடுவேன்;

நிலத்தடிநீர் குறையாமல் நிலைப்பதற்கும் முறைசெய்வேன்;

சிலதுளிகள் எனச்சேர்த்தால் பலவெள்ளம் பெருக்கெடுக்கும்;


சேமுறுத்திய குடிநீரும், சாக்கடை மாசெடுப்பும்:


குடிப்பதற்கு ஒழுங்கான குடிநீரே இல்லாமல்

தடுக்கின்ற மாசொழித்து, தாகத்தைப் போக்கிடுவேன்.

பருநிலத்தில் சேமுற்ற குடிநீரை(7)ப் பகிர்ந்தளித்து

தருவதற்குத் தூம்புகளை(8)த் தடம்பதிப்பேன்; அதனோடு

பாதாளச் சாக்கடைகள் பள்ளுதற்கும் வழிசெய்வேன்;

ஆதாரச் சென்னையிலோ அந்நீரைச் சேகரித்து,

மூன்றாட்டாய் இழுத்துவைத்து(9) முன்னாலே விழுத்துறுத்தி(10),

சேர்ந்தாட்டு உயிர்வேதிச் செய்முறையில்(11) மாசெடுத்து,

எதிரூட்டோ(12), மின்னிளக்கி எடுவித்தோ(13), துளித்தெடுத்தோ(14),

விதவிதமாய் முயன்றிடுவேன்; வேண்டுவது நன்னீரே!


1. பலக்குறுத்தல் = complication

2. தடந்தகை = strategy

3. வழிதகை = tactics

4. செயல்தகை = operationality

5. கோடலன்>கௌடில்யன் = சாணக்கியன்

6. நுணுத்தம் = minute

7. சேமுற்ற குடிநீர் = safe drinking water

8. தூம்பு = tube

9. மூன்றாட்டு இழுத்துவைப்பு = tertiary treatment

10. விழுத்துறுத்தல் = filtration

11. உயிர்வேதிச் செய்ம்முறை = biochemical process

12. எதிர் ஊட்டு, எதிர் ஊடுகை = reverse osmosis

13. மின்னிளக்கி எடுவித்தல் = electro - dialysis

14. துளித்தெடுத்தல் = distillation


Saturday, April 08, 2023

முதலமைச்சாய் நானிருந்தால் - 1

இது 2004 இல் செபுதெம்பர் மாதம் 4 ஆம் நாள், சந்தவசந்தம் கூகுள் மடற் குழுவில் நடந்த 14 ஆவது கவியரங்கத்தில் ”இப்படி நானிருந்தால்” என்ற தலைப்பில் நானிட்ட கவிதைத் தொகுப்பு.  பாட்டெழுதுவதில் அப்போது எல்லாம் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன். அந்தப் பங்களிப்பைச் சேமிக்கும் வகையில் இங்கு வலைப்பதிவில் இடுகிறேன்.

-------------------------------- 

அன்பிற்குரிய சந்தவசந்தத்தாருக்கும், தலைவருக்கும்

என் வணக்கம். வழக்கமான முறையில் நான் இங்கு வரவில்லை. சற்று பொறுத்துக் கொள்ளுங்கள்.

...........................................................................................

"ஆயா, வீதியெல்லாம் ஒரே கூட்டமாப் போகுது; கையிலே கொஞ்சப்பேரு வேறே, தலகாணி, பாயெல்லாம் சுருட்டி வச்சுக்கிட்டுப் போறாக! இவுகள்லாம் எங்கே போறாக, ஆயா?"

"அட மக்குப்பயலே, இது தெரியலியா ? மகார்நோன்புப் பொட்டல்லே கண்ணகி - கோவலன் கூத்து இன்னைக்கித் தொடங்கப் போகுதுடோய்"

நீட்டி முழக்கிப் பழக்கப் பட்டவள் என் ஆத்தாளுக்கு ஆத்தாள். கதையைச் சொல்ல ஆரம்பித்தாள்.

"சோழராசாவோட பெரிய ஊரு காவிரிப் பூம்பட்டினம். அங்கே நாடு விட்டு நாடு போய் கொண்டு விக்கிறவகள்லே. சாத்தப்பன்கிறவர் ரொம்பப் பெரிய ஆளு. அவரோட பையன் கோவாலனுக்கு, இதே மாதிரிப் பெரிய வளவு மாணிக்கம் பொண்ணு கண்ணாத்தாவைக் கல்யாணம் பண்ணி வச்சாக! வாக்கப் பட்ட பொம்பிளையை மாமனாரும், மாமியாருமாச் சேர்ந்து ஊர் வழக்கப்படி வேறு வச்சாக; அதென்னவோ கொஞ்ச நாளைக்கப்புறம் கண்ணாத்தாவுக்குச் சொகமே காணலை! அவளுக்கு வாய்ச்ச ஆம்படையான் கல்யாணம் பண்ண கொஞ்ச நாளா கூத்தியாள் வீடே கதின்னு கிடந்தான்; மாணிக்கம் பொண்ணுக்கு ஒரு பொட்டு, புழுப் புறக்கலே; சீரு செனத்தி போட்டுக்கலே; நாளெல்லாம் புருசங்காரன் திரும்பி வந்துருவான்னு காத்துக் கிடந்தது தான் மிச்சம்; மாமனார், மாமியாருக்கும் என்ன சொல்றதுன்னே தெரியலை; 

சொத்து, பத்தெல்லாம் தாசிமடிலே கொட்டிக் கரைஞ்சு சீரழிஞ்சுது குடும்பம். பின்னாடி புத்தி வந்து புருசங்காரன் கண்ணாத்தா வீட்டுக்கு வந்து சேர்ந்தான். இனிப் பட்டினத்துலே இருக்கவேணாம், பங்காளிகளும், தாயபுள்ளைகளும், பக்கத்து வீட்டுக்காரவுகளும் நம்மைப் பலவிதமாப் பேசுவாக, அதனாலே மருதைக்குப் போயிறலாம், பொண்டாட்டி கொலுசை வித்துப் பொழச்சிக்கலாம்னு இளசுகள் ரெண்டும் புறப்பட்டாக; 

மருதையிலே விதி விளையாடிருச்சு; அங்கே ஒரு தங்க ஆசாரி பண்ணின சூழ்ச்சிலே கோவலனைச் சிக்க வச்சதாலே கோவாலன் உசிரைக் காலன் கொண்டுக்கிணு போனான். கட்டளை போட்ட பாண்டியராசா தப்புச் செய்ஞ்சாருன்னு சொல்லி, அவருக்கு முன்னாடிக் கொலுசை உடைச்சா கண்ணாத்தா;  எல்லாரும் உக்கார்ந்திருக்கிற சவையிலே முத்துத் தெறிக்கிறதுக்கு மாறா மாணிக்கப் பரல் தெறிச்சுது; தப்பைப் புரிஞ்சுக்கின இராசாவும் இராணியும் அங்கேயே உசுரை விட்டாக! அதுக்கப்புறமும் கண்ணாத்தாவுக்கு கோவம் அடங்கலே! ஆம்படையானைப் பறி கொடுத்ததாலே மருதை ஊரையே எரிச்சு, முடிவிலே மானத்துக்குப் போய்ச் சேர்ந்தா! அவளுக்கு வந்த ரோதனை யாருக்குமே வரப்படாதப்பா!

அப்பறம் இதைக் கேட்ட சேர மகாராசா திகைச்சுப் போனாரு! பத்தினிக்கிக் கோவம் வந்தா, பாராளும் அரசு கூடப் பத்தி எரிஞ்சிரும்னு அவருக்கு புரிஞ்சுது. எப்பேர்க்கொத்த பத்தினிப் பொண்ணு எங்க நாட்டுலே வந்து சேர்ந்தான்னு சொல்லி அவளுக்குப் பொங்கலிட்டுப் படையல் வச்சு, வடக்கே இமயமலைலேர்ந்து கல்லெடுத்துக் கொண்ணாந்து, மஞ்சணமிட்டு, முழுக்காட்டிக் கோயில் கட்டிக் கொண்டாடினாரு.

நாட்டரசங்கோட்டை கண்ணாத்தா கோயில் கூட அந்த நினைப்புலே தாண்டா கட்டிருக்கு. இந்தக் கதைதான் பத்துநாளைக்கி இராத்திரி முழுக்க விடிய விடியக் கூத்தா நடக்கும். பார்க்கணும்னா சினேகிதக்காரங்களோட நீயும் போய்ப் பாரேன்."

என்றாள் என் ஆயாள். முதன்முதல் சிறிய அகவையில் இதைக் கேட்ட எனக்கு, எங்கள் ஆயாளின் மூக்கோசைப் பேச்சில், கதை சற்றும் விளங்கவில்லை தான். இருந்தாலும் நண்பர்களோடு போனேன். 

அரசியற் கூத்தின் ஆரம்பக் காட்சி, 

திமிகிட.....திமிகிட என்ற சத்தத்தோடு, இறைப்பாட்டு முழங்க, சந்திர சூரியர்களையும், மழையையும் வணங்கித் தொடங்கியது. புகார்நகர வீதியில் இந்திர விழாவுக்கு முன்னால், மன்னன் கிள்ளிவளவன் இரவு நேரத்தில் நகரச் சோதனை செய்கிறான். கூடவே அவனுடைய அமைச்சன் அருகில் போகிறான். 

"மந்திரி! நாடெல்லாம் எப்படி இருக்கு? மாதம் மும்மாரி மழை பொழியுதா?"

"சோழ மகராசா ஆட்சியிலே மழைக்கு என்ன குறை ராசா, மழை நல்லாவே பொழியுது?"

"காவிரி, வெண்ணாறு, குடமுருட்டி, கொள்ளிடம், தென்பெண்ணை, பாலாறு, கால்வாய்கள் எல்லாத்திலும் தண்ணீர் ஓடுதா?"

"மகாராசா, உங்க ஆட்சிலே கட்டிவச்ச குளம், ஏரி, கால்வாய், இதுக்கெல்லாம் குறையேது, மகராசா? தண்ணி நல்லாவே ஓடுது இன்னம் பத்து வருசத்துக்கு பஞ்சம்கிறதே நம்ம நாட்டுலே இருக்காது"

"சாலைகள்லே வழிப்போக்கர்கள் பயமில்லாமப் போக முடியுதா?"

"ராசா, உங்கள் படை தான் ஊரெங்கும் காவல் காக்குதே, பின்னெ மக்கள் பயப்படத் தேவையில்லீங்களே? சாவடிகள் எல்லாத்துலேயும் அன்னதானம் ஒழுங்கா நடக்குது. வணிகச் சாத்துகள் ஒழுங்காப் போய் வந்துக்கிட்டு இருக்கு."

"ஊரில் பிள்ளைகுட்டிகள் படிக்கிறதுக்கு கல்விச்சாலைகள், மருத்துவத்துக்கு ஆதூல சாலைகள் எல்லாம் ஒழுங்கா நடக்குதா, இல்லை பணமில்லாமல் சிரமப் படுதா?"

"இல்லை, மகராசா, ஒரு குறையும் இல்லை, நல்ல காரியம் செய்யுறதுக்கு எவ்வளவோ செல்வந்தர்கள் முன்வர்றாங்க. உங்களோட ஒரு ஆணை போதுமே, இதெல்லாம் செய்யுறதுக்கு."

"அப்ப, இந்திர விழா எப்போ ஆரம்பிக்குது?"

நாடகத் தனமான  தொடக்கக் காட்சிக்கு அப்புறம் கூத்துப் போய்க்கொண்டே இருந்தது. எந்தக் கூத்தானாலும் இந்தக் காட்சி தான் முதலில் இருந்திருக்கும். என்ன, அரசனின் பேர்மட்டும் கொஞ்சம் மாறி வந்திருக்கும். (இதுவரை நான் பார்த்திருக்கும்  நாலைந்து கூத்துக்களில் கோவலன் - கண்ணகி கூத்தை முதலில் பார்த்ததால், எனக்கு இப்படி ஓர் நினைவு ஆழப் பதிந்திருக்கிறது. அவ்வளவு தான்.)

அரசு - நாடு - ஆட்சி என எண்ணும் போது, கூத்தில் வந்த அந்த முதல்காட்சி இன்றைக்கும் முகமையாக எனக்குத் தோற்றம் அளிக்கிறது. நாட்டை ஆளுதல் என்பதை இப்படித் தான் எளிய முறையில் அன்றும் பார்த்தார்கள்; இன்றும் பார்க்கிறோம். ஆனால் என்ன, உள்ளே இருக்கும் சூக்குமம் புரியாமல் பார்க்கிறோம் 

.........

அன்றைய அரசனுக்கு மாறாய் இன்றைய முதலைமைச்சு என்று எண்ணிக் கொண்டு இனிப்படியுங்கள். இது அதுவாய் ஆகுற்ற கனவு. இங்கே வெண்கலிப்பாவில் விரிந்துவருகிறது. (இய்>இய்து>இது) (இய்யதாகுற்ற >இய்யதாகுத்த>யதார்த்த; இய்யதாகல் = இயல்வாகல் = யதார்த்தமாதல்)

..................................................................................................