Sunday, April 16, 2023

வெப்பம் - 2

 நெடுங்காலம் நான் சொல்லிவருகிறேன். நமக்குத் தெரிந்த 3000, 4000 அடிப்படைச் சொற்களை வைத்துக் கொண்டு அவற்றையே மடக்கியும் (permutation), பிணைத்தும் (combination), விகுதிகளை மாற்றிப் போட்டும், புதிது புதிதாய்த் தமிழில் அறிவியற் சொற்களைப் படைத்துவிடலாம் என்று நம்மிற் பலரும் எண்ணிக் கொள்கிறோம். [ஒரு நண்பர் இன்னும் மேலே போய் ஒரு சொவ்வறை (software) வைத்து கலைச்சொற்களைப் படைக்க முடியும் என்று கூடச் சொன்னார்.] அதோடு, கலைச்சொற்கள் என்றால் அவை ஏதோ விளக்கந் தரும் சொற்தொகுதிகள் என்றும் எண்ணிக் கொண்டு விடுகிறோம். அதே பொழுது, கலைச்சொற்களின் உள்ளிருக்கும் வித்தை, பொறியை, உணர மாட்டேம் என்கிறோம். உயர் அறிவியலைத் தமிழிற் சொல்ல அந்த நடைமுறை நம்மை வெகுதூரம் கொண்டு செல்லாது என்பது என் புரிதல். இப்படிச் சொல்வதால், இவன் ஒரு பித்தன், பழமைவாதி, என்று சிலர் எண்ணிக் கொண்டு, நான் சொல்லவருவதைப் புரிந்து கொள்ள மறுப்பதும் கூட நடக்கிறது. [I am only stating simply that, without increasing the set of basic words we have in store, it would be very difficult to create further new Tamil technical terms.]

இதைச் செய்ய முதன்முதலில் நம்முடைய தமிழ்ச் சொற்தொகுதியைக் கூட்டிக் கொள்ளவேண்டும்; அதற்காகப் பழந்தமிழ் இலக்கியங்களைப் (தொல்காப்பியனை, சங்க இலக்கியத்தை, வள்ளுவனை, இளங்கோவை, சாத்தனாரை, கம்பனை, இன்னும் பலரைப்) படிக்க வேண்டும், வட்டார வழக்குகளைத் தேடவேண்டும், மற்ற தமிழிய மொழிகளைப் படிக்க வேண்டும். நம்மிடம் அருகிப் போய், அவர்களிடம் இருக்கும் தமிழிய வேர்களை இனங்காண வேண்டும். கொஞ்சம் வடமொழியையும் கற்க வேண்டும். [தமிழுக்கும் வடமொழிக்கும் (சங்கதம், பாகதம் இரண்டையும்) உள்ள இடையாட்டைச் சரிவரப் புரிந்து கொள்ள வேண்டும்.] மொத்தத்தில் நம்மிடம் உள்ள அடிப்படைச் சொற்கள் 10000, 20000 என்று பலமடங்கு பெருகவேண்டும் என்று இடைவிடாது சொல்லுகிறேன். என்னவோ, கேட்கத்தான் ஆளில்லை. எங்கு பார்த்தாலும் ஒரு தனியாளாகவே நான் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கிறேன்.

இங்கே ”வெப்ப இயக்கவியல்” என்ற சொல்லிற்கு வருவோம். [நானும் பள்ளிப் பாடத்தில் இதைப் படித்து அறிந்தவன் தான், பயன்படுத்தியவன் தான்]. ஆனால் அந்தக் கூட்டுச்சொல் தவறான உருவாக்கம் என்பதே என் கூற்று. ஏனென்று பார்ப்போம். 

வெப்பம் என்பதை heat என்பதற்கு இணையாக ஆக்கிய பின்னால், thermal என்று சொல்லுவதற்கு வேறு ஒரு சொல்லைத்தான் தேட வேண்டும். வெறுமே குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டு வெப்பத்தை வைத்தே எல்லாவற்றையும் சொல்லக் கூடாது. அடிப்படைப் பொறியியல் படிக்கும் போது, Heat transfer (வெப்பப் பெயர்ச்சி), thermodynamics என்ற இரு தொடர்புடைய பாடங்கள் ஆனால் பெரிதும் விலகி நிற்கும் பாடங்களைப் படிக்கிறோம் இல்லையா? 

முதலில் வரும் வெப்பப் பெயர்ச்சிப் பாடம் எண்ணுதிப் பொருளில் வளர்த்தெடுக்கப் படுகிறது. இரண்டாவது பாடம் எண்ணுதி, தகை போன்ற பலவற்றையும், தேற்றங்களையும், பொதுள்(potential)களைப் பற்றியும் சொல்லுகின்ற பாடம். வெப்பப் பெயர்ச்சியின் விளிம்புகளை (limits), எல்லைகளை (boundaries), நேர்த்திகளை (efficiencies) இது நமக்கு உணர்த்துகிறது. இத்தனை செய்திகளையும் குறிப்பால் உணர்த்த வேண்டுமானால், தமிழில் thermal process என்று குறிக்க வேறொரு சொல் நமக்கு வேண்டும். அது இல்லாமலே ஓட்டிவிடலாம் என்று நினைத்தால், தமிழில் அறிவியல் என்பது ஒரு சவலைப் பிள்ளையாய் சூம்பிப் போய்த்தான் கிடக்கும். 

நண்பர்களே! பொதுமைச்சொல், விதப்புச்சொல் என்ற வேறுபாட்டை ஆழ்ந்து உணர்ந்து கொள்ளுங்கள் (வெப்பம் என்பது ஒரு விதப்புச் சொல். By our convention, we have made it a quantitative term referring specifically the term 'heat' in the last 50 to 60 years.)   

வெப்பப் பெயர்ச்சி (= heat transfer) என்று சொன்ன பின்னால், வெப்பம் என்பதையே thermal என்பதற்கும் இணையாகப் பயன்படுத்தினால், குழப்பம் தான் மிஞ்சும். We would need a common thermal term to denote both intensive and extensive properties. அல்லாமல், வெப்பத்தை மட்டுமே பயன்படுத்தினால் thermodynamics யை heat dynamics என்றே நான் புரிந்து கொள்வேன். அந்தப் புரிதல், பள்ளிக் கூடப் பூதியலுக்குச் சரியாக இருக்கலாம். ஆனால் உயர் அறிவியலில் வேறுபாடு காட்டத் தெரியாமல் என் தமிழ்நடை முழிக்கும் அல்லவா? மாறாகத் தெறும என்ற சொல்லைப் பொதுமையாகப் பயன்படுத்தி, தெறுமச் செலுத்தம் (thermal process) என்னும் போது, அதனுள் வெப்பப் பெயர்ச்சி என்பது துணைப்பாடம் என்பது  எனக்குப் புரிந்து போகும். 

இனி இயக்குதல் என்ற சொல்லிற்கு வருவோம். 

to direct as a director in a company, to operate, to deal with dynamics என நாலைந்து பொருட்பாடுகளுக்கும் இயக்குதல் என்று சொன்னால், நாம் ஏதோ ஒப்பேற்றிக் கொண்டிருக்கிறோம் என்றே பொருள். [Tamil had been such a poetical language where one word - many meanings, or many words - one meaning is an asset-like occurrence; but in scientific expression, we need to move more into one word - one meaning trend. It is not always possible, but at least we can try.] 

இயக்குதல் என்ற சொல்லை to operate என்று வைத்துக் கொண்டு நெறியாள்தல் = to direct என்று கொண்டு, dynamics என்பதற்கு துனவியல் என்று சொல்லவே எம்மைப் போன்றோர் முற்படுகிறோம். ”கதழ்வும் துனைவும் விரைவின் பொருள” என்பது தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரியியல் 798 ஆம் நூற்பா. கதழ்வில் இருந்து உருவான சொல் கதி = velocity; விரைவு, வேகம் என்பது speed. கதி என்பதை velocityக்கு இணையாக 1965 இல் இருந்து கோவை நுட்பியற் கல்லூரியில் பயன்படுத்தினோம்.  துனைவில் இருந்து உருவானது துனவு>துனவியல் = dynamics. சொல்லாய்வறிஞர் ப.அருளியும் அவருடைய தஞ்சைப் பல்கலைக்கழக அறிவியல் அருஞ்சொல் அகரமுதலியில் இதை எடுத்துரைத்திருப்பார். ஒரு காலத்தில் தினவு = force என்னும் பொருளில், தெறுமத் தினவியல் என்றும் நான் கூறிவந்திருக்கிறேன். பின்னால் துனவியல் இன்னுஞ் சரியாக இருக்கும் என்று எனக்குத் தோற்றியது. இதில் எது நிலைத்தாலும் எனக்குச் சரியே.

இனி “Look at the process dynamically, and conduct the operation accordingly” என்ற வாக்கியத்தைத் தமிழிற் சொல்லிப் பார்ப்போம். ”செலுத்தத்தை துனவாய்ப் பார்த்து, இயக்கத்தை அதற்கேற்ப நடத்துங்கள்” - என்னைப் பொறுத்தவரை இது குழப்பமில்லாத வாக்கியம். மாறாக, வெறுமே இயக்கத்தை வைத்துச் சொன்னால், ”செலுத்தத்தை இயக்கமாய்ப் பார்த்து, இயக்கத்தை அதற்கேற்ப நடத்துங்கள்” என்று சொல்ல வேண்டி வரும். இது போன்ற தலைகால் புரியாத வாக்கியங்களை ஆங்கிலத்தில் tautological expression என்று சொல்லுவார். இப்படிச் சொற்களை அமைத்தால், ஓர் அணுங்குழை கூட அறிவியலைத் தமிழிற் சொல்லுவதில் நாம் முன்னேற மாட்டோம்.

மொத்தத்தில் “நீங்கில் தெறும்” என்ற அருமையான குறள் தொடரை நான் அறிந்திராவிட்டால், thermodynamics என்ற பெயர்ச்சிக்கலுக்குத் தீர்வு கண்டிருக்கவே இயலாது.

தொல்காப்பியரும், சங்கப் புலவர்களும், திருவள்ளுவரும், இளங்கோவும், சாத்தனாரும், கம்பனும், இன்னும் பலரும் நமக்கு ஒரு பெருங் கருவூலத்தையே விட்டுச் சென்றிருக்கிறார்கள், பயன்படுத்திக் கொள்ளுவோம். நல்ல தமிழில் அறிவியல் படைக்கமுடியும். அது துல்லியமாகவும் இருக்கும்.

அன்புடன்,

இராம.கி.


No comments: