Saturday, December 30, 2023

Cursive Connection

”இக் கலைச்சொல்லுக்குப் பொருத்தமான தமிழ்ச்சொல்லைத் தேடிக்கொண்டிருக்கிறேன். கையெழுத்தில் இணைத்து எழுதப்படும் எழுத்துகள் இணையும் இடத்தை 'cursive connection' என்றும், சில வேளைகளில் 'cursive attachment' என்றும் சொல்வர். 'கர்சீவ்' எனும் சொல் பயன்பாட்டில் எனக்கு விருப்பம் இல்லை 😉 நல்ல தமிழ்ச் சொல்லை அறிமுகம் செய்யலாம். பரிந்துரைகள் இருந்தால் பகிருங்கள்” என்று நண்பர் முத்து நெடுமாறன் அவரின் முகநூல் பக்கத்தில் நேற்றுக் கேட்டிருந்தார்.

கீழே வருவது என் பரிந்துரை:

ஒரு மாந்தன் இன்னொருவனோடு பூதிகமாய் (physical) இணைத்துக் கொள்கையில், ஒரு கையை நீட்டியே இன்னொருவன் கையைப் பற்றுவான். நீட்டு-தல் பொருளில் நம் பேச்சில் வரும் இன்னொரு வினைச்சொல் வீசு-தல். இதில் பெறும் பெயர்ச்சொல் வீச்சு. வளைகின்ற கையை வீச்சு என்றும் குறிப்பார். வீச்சு = வளைவு = curve. எல்லா நல்ல அகரமுதலிகளிலும் இச்சொல் உண்டு. (காட்டு: செ.சொ.பெ. எட்டாம் மடலம் - இரண்டாம் பாகம், பக்கம் 314.)  இச்சொல் என் வலைப்பதிவிலும் 2006 இல் இருந்து 4  கட்டுரைகளில் உண்டு அங்கு துழாவினால் கிடைக்கும். 

ஓர் ஓலையில்  ஒரு கீற்றைத் தொடங்கி முடிக்கையில், எழுத்தாணியை எடுக்காது முன்னதைத் தொட்ட வண்ணமே தொடர்ந்து அடுத்ததைக் கீற வேண்டுமெனில், அடுத்ததைத் தொடங்குமுன், முதற்கீற்றின் முடிவை கொஞ்சம் வளைத்து ஒரு வீச்சை உருவாக்கி நீட்டுவோம். 

[ஒரு தாளில் ஓரெழுத்தைத் தொடங்கி முடிக்கையில், தூவலை எடுக்காது முன்னதைத் தொட்ட வண்ணமே தொடர்ந்து அடுத்ததை எழுத வேண்டும் எனில், அடுத்ததைத் தொடங்குமுன், முதலெழுத்தின் முடிவை கொஞ்சம் வளைத்து ஒரு வீச்சை உருவாக்கி நீட்டுவோம்.] 

இதைக் கைநீட்டம் எனாது கைவீச்சு என ஏன் சொல்கிறோமெனில், ஒரு கீற்றின் வீச்சு (அல்லது எழுத்தின் வீச்சு) எங்கெழுகிறது என அறுதியாய்ச் சொல்ல முடியாது. நம் கைவண்ணம், எழுத்துருவம், எழுதும் பரப்பின் மேடுபள்ளம் இப்படிப் பலவற்றைப் பொறுத்து வீச்சு அமையும். ”போகிற போக்கு” என்கிறோமே அதுதான் வீச்சு. அங்குமிங்கும் அலையும் இவ்வுறுப்பை வீச்சு என்றுவிட்டால், ஏற்ற இறக்கத்தைச் சரிபண்ணியது போல் ஆகிவிடும். இந்த வீச்சுத் தான் ஆங்கிலத்தில் சொல்லப்படும் cursive.  

இது கொண்டு ஒரு சொல்லில் வரும் எல்லா எழுத்தையும் இணைத்துவிடலாம். வேகமாய் எழுதப்படும் எந்த ஓலைச்சுவடியிலும் வீச்செழுத்து இல்லாது இருக்காது. (புணர்ச்சி கொண்டு ஓரடியையே, ஏன் ஒரு பாவையே, ஒரு தொடர் போல் ஆக்க முடியும்.) வீச்செழுத்தைப் பிரித்துப் பதிப்பது என்பது பென்னம் பெரும் முயற்சி. செய்தாருக்கு எம் தலை வணக்கம். ஓலையை விட்டுத் தாளுக்கு வந்தபின்னும் நம்மூரில் வீச்செழுத்துக் குறையவில்லை. 1850 களில் இருந்து 1950 வரைக்கும்கூட வடிப்பச்சு (type writer) வாராத வரை, கையால் எழுதப்பட்ட நம் வீட்டுப்பத்திரங்கள் எல்லாமும் வீச்செழுத்தில் தான் இருக்கும். அவரவர் குடும்ப பழைய ஆவணப் பத்திரங்களைத் தேடிப் படியுங்கள். 

ஒரு சொல்லிலுள்ள ஒவ்வோர் எழுத்தையும் வீச்சுகள் கொண்டு மாந்தர் கைகள் இணைவது போல் அமைவதால் அந்த எழுத்து முறைக்கு வீச்செழுத்து முறை என்று பெயர். இக் கலைச்சொல்லை இராம.கி. உருவாக்கவில்லை. கால காலமாய் நம்மிடம் இதே துறையில் இருந்த சொல் தான். எங்கள் மாவட்டத்தில் உண்டு. சிறு பிள்ளையில் ஏட்டில் எழுதிப் படித்த எல்லோருக்கும் வீச்செழுத்து என்ற சொல் தெரியும்.    

cursive connection = வீச்சுக் கணுக்கம்.

Friday, December 29, 2023

சதுக்க பூதமும் பிள்ளையாரும்

 சதுக்கபூதம் பற்றி வரலாற்றாசிரியர் திரு. ந. சுப்பிரமணியன், தன் "Sangam Polity" நூலில், (Ennes Publications, Udmalpet 642128, Third ed 1996.) ஓர் அரிய ஊகத்தைக் கூறுவார்: பலரும் எண்ணிப் பாரக்க வேண்டிய கருத்து அதுவாகும்.

"It is true that 'Ganesa' is not particularly mentioned either by that name or any of its modern equivalents in the Sangam Literature; but it seems quite proper to trace him back to Perum Chadukka bhUtham which punished all offenders and had a pAsam or rope in its hand; it gave 'Vigna' to those who offended and protected from ' Vigna' those who behaved; so it had 'pAsahasta' and 'Vignaraja'; it was the demon on the cross-road distinguished from the gods who were housed in temples. Vignesvara, too, punished the offenders and protected the good; he has a pAsam in His hands and He is generally on the cross-road. The Demon on the cross-road was ;'BhUta nAtan', a literal equivalent of 'Bhuta' or 'GaNa' nAtan or 'Ganapati'. The elephant face in fact indicates a South Indian origin, and the pot-belly suggests an ancestry traceable back to Demons."]

பெரும்பாலும் சங்க காலச் சதுக்க பூதமே, சங்கம் மருவிய காலத்தில் பொ.உ.300 க்குப் பிறகு பிள்ளையாராய் மாறியிருக்கலாம். சங்க இலக்கியத்தில், பிற்காலத்தில் இணைத்த கடவுள் வாழ்த்துகள், பாடல்கள் அன்றி விநாயகன் பற்றிய குறிப்புகள் உண்டோ?

Wednesday, December 27, 2023

பொன்னம்பலத்தில் தேவாரம் பாட விடாமை

 சிதம்பரம் தீக்கிதரின் பொன்னம்பலக் கொள்ளை பற்றி நண்பர். நாக. இளங்கோவன் இட்ட பதிவில் அவர் கூறிய வேறொரு கருத்து என்னையும் வருந்த வைப்பதால் கீழ்வருவதை அங்கிருந்து இங்கு வெட்டி ஒட்டுகிறேன்.


அவர் பதிவிற்கும் சென்று படியுங்கள். இனி அவர் கருத்து.
-----------------------------
பதிவில் சொல்ல மறந்த விதயம் தான் நெடுங்காலமாக என்னை வாட்டுவது. ஒருமுறை அந்தியில் தில்லை போயிருக்கேன். மற்றபடி நான் போனதெல்லாம் உச்சிகால பூசைக்குதான். எப்படி பயணத்திட்டம் போட்டாலும் உச்சிகாலத்தில்தான் எனக்கு அமையும். பொன்னம்பலத்தில் நின்று தெரிசனம் செய்வதே இன்று சிக்கல் என்றால், அங்கே தேவாரம் பாடுவது முழுமையாகத் தடை செய்யப் பட்டிருக்கிறது. சரி, பொதுமக்கள் பாட வேண்டாம். ஓதுவார் பாடலாம்தானே. பொன்னம்பலத்திற்கும் (கனகசபை), நடனவம்பலத்திற்கும் (நிருத்தசபை) இடையே நடைபாதைப் பள்ளம் இருக்கும் அல்லவா? உச்சிகால தீபம் காட்டியதும் அங்குதான் ஒதுவார் நின்று இரண்டு பாட்டுப் பாடுகிறார். பள்ளத்தில் கும்பலோடு கும்பலாக தலையைத் தூக்கி எட்டிப் பார்த்து ஓதுவார் பாடுவதைப் பார்க்கும்போது இரங்கத்தக்கதாக இருக்கிறது. மொத்த பூசையையும் சிற்றம்பலத்தில், பொன்னம்பலத்தில் சமற்கிருதத்தில் செய்துவிட்டு, அவற்றின் அடிப்பள்ளத்தில் நிற்க வைத்துத் தமிழை ஓதுவைப்பது எவ்வளவு கொடுமை? பலமுறை இது எனக்கு வலித்துள்ளது. அதே கொடுமை இன்றும் தொடர்கிறது. இப்பொழுதும் பார்த்து நொந்து போம் வந்தேன். இன்னொரு வலி என்ன தெரியுமா? உச்சிகால பூசை நடவரசனுக்குச் செய்கையில் அம்மன் சன்னதி பூட்டியிருக்கிறது. 50 தீட்சிதர் நடவரசனைச் சுற்றி நிற்கிறார். ஒருத்தர் கூட சிவகாமவல்லியிடம் இல்லை. பூட்டிவிடுகின்றனர். தில்லை போய்வரும் போதெல்லாம் ஒரு கண்ணில் களி மறுகண்ணில் வலி என்ற நிலையே தொடர்கிறது.

......................................................
இனி என் கூற்று. பொன்னம்பலத்தில் தேவாரம் பாட ஆறுமுகசாமி ஓதுவார் எவ்வளவு முறை போராடி இருப்பார்? எத்தனை முறை எழுதியிருப்போம், பேசியிருப்போம்? தமிழகமே அவருக்கு முழு ஆதரவாய் நின்றதே? இன்று எல்லாம் தலைகீழாய்ப் போய் விட்டதே? . வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிவிட்டதே? தமிழகம் இனி என்ன செய்யப் போகிறது? கோயில் நிருவாகம் தீக்கிதர் கட்டில் இருந்து முற்றாய் வெளிவந்தால் ஒழிய இது மாறாது. தமிழர் எல்லோரும் கொஞ்சம் வெளிப்படப் பேசுங்கள். சிவநெறியார் ஏன் வாய்மூடி மோனியாகிறார்? எப்படி விண்ணவ நெறிக்குத் திருவரங்கமே ”கோயிலோ” அதுபோல் சிவநெறிக்குச் சிற்றம்பலமே “கோயில்”. என்று உங்களுக்குத் தெரியுமா? கத்தோலிக்கத்திற்கு வத்திக்கான் போலச் சிவநெறிக்குச் சிற்றம்பலம் தான். அங்கு, அம்பலத்தின் மீது நின்று நடவரசன் முன்னால் நம் தமிழைப் பாட வழியில்லையா?

தாண்டவம்

நேற்றுப் பார்த்தால் ”ஆரூத்ராத் தர்ஸனம், ஆருத்ரா அபிஷேகம், ஆரூத்ரா ரதோற்சவம்” என்று எல்லாம் சங்கத மயம்.

ஆரூத்ராவை மூன்றுவிதமாய் அணுகலாம். முதல் வகைக்கு வருவோம்.

இது சிவன் பற்றியது. நடவரசன் தொன்மம் எழாத ஆதிக்காலத்தில் ஆதித் தமிழ்மாந்தன் எரியும் நெருப்பைக் கண்டு அச்சப் பட்டான். அது அவனை உலுக்கியது. உருக்கியது. ஒளித்தது. பின் ஒழிக்கவும் செய்தது.

எல்லாம் உல் எனும் வேரில் தொடங்கிய சொற்கள். உருத்தது முதலில் எருத்தது. பின் எரித்தது, உரு> எரு> எரி. உல்> ஒல்> ஒள்> ஒளி. ஒளியில் பொன்னிறமும், சிவப்பு நிறமும் தெரிந்தன. சிவப்புப் பொருளில், உருத்தது, அருத்து, அரத்து, அரத்தமானது. சிவன் இன்னும் திரிந்து அருத்தன்> அர்த்தன்> ஆர்த்தன் ஆனான். ஆர்த்தன் என்பது சிவனுக்கு இன்னொரு பெயர். ஆர்த்தனைச் சங்கதம் ஆ(ர்/)ருத்ரா> ஆரூத்ரா என்றாக்கும். மீளக் கடன்வாங்கிப் பயன் உறுத்துகையில் அரத்தன் என்ற சொல்லின் இணைப்பை நாம் மறப்போம்.

அடுத்து இரண்டாம் வகைக்கு வருவோம்.

அதே ஆதித் தமிழ்மாந்தன் இரவு நேரத்தில் வானத்தின் உடுக்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது வானத்தின் ஒரு பக்கலில் ஒவ்வொரு ஆண்டின் குறித்த மாதங்களில் 7,8 உடுக்கள் மிகவும் சொலித்தும், அவற்றின் நடுவில் சிவந்த உடுவொன்று வெகுதொலைவில் தெரிவதையும் கண்டான்

அதற்கு ஆர்த்தை> ஆர்த்திரை> ஆத்திரை> ஆதிரை என்ற செம்பொருள் பெயரை இட்டான். தான் வணங்கும் ஆர்த்தன் ஆர்த்தையில் வதிவதாய் ஒரு தொன்மம் கற்பித்துக் கொண்டான். எனவே சிவனுக்கு ஆதிரையான் என்பது இன்னொரு பெயராயிற்று.

திகரம் தவிர்த்த ஆரையான் என்ற சொல் இன்று மேலை வானியலில் Orion உடுக்கூட்டத்திற்குப் பயன்படும் இந்த ஆரையான் உடுக்கூட்டத்தின் நடுவே ஆதிரை (Betelgeuse is the brightest near-infrared source in the sky with a J band magnitude of −2.99; only about 13% of the star's radiant energy is emitted as visible light. If human eyes were sensitive to radiation at all wavelengths, Betelgeuse would appear as the brightest star in the night sky.) தென்படும். ஆக இரண்டாம் வகையில் ஆதிரை என்பது சிவனின் விண்ணுலக இருப்பிடத் தொன்மம்.

இனி, மூன்றாம் வகைக்கு வந்துவிட்டோம்.

காலைத் தூக்கி நின்றாடும் தெய்வம் பற்றிய தொன்மம், பெரும்பாலும் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுந்திருக்கலாம். காலைத் தூக்கி உயர்த்துவதைத் தமிழில் உந்துதல்> உத்துதல் என்பார். உந்து, உத்து, உந்தம், உதை போன்ற சொற்களை இங்கே எண்ணிப் பாருக. உத்தம்>ஊர்த்தம் என்பது நிற்றலையும், உயர்த்தலையும் குறிக்கும்.

ஆல்-தல் = சுற்றல், ஆடல். ஆடு என்பதன் வேர் ஆல் தான். ஆல்> ஆலு> .ஆளு> ஆடு. ஆலூர்த்தம் = காலைத் தூக்கி நின்றாடும் ஆட்டம் இதில் மேலும் ல்>ர் மாற்றம் செய்வதும் தமிழில் உண்டு. ஆரூர்த்தம் என்பதற்கும் அதே பொருள் தான், வழக்கம் போல் ஆருர்த்தத்தில் ரகரம் நுழைத்து ”ஆரூர்த்ரா” என்று சங்கதம் ஆக்கும். இந்த மூன்றாம் கருத்தே நடவரசனைக் குறித்தது. நடத்தின் அரசன் நடவரசன்.

வழக்கம் போல் தமிழை விட்டுச் சங்கதத்தைப் பிடித்து நாம் தொங்குவோம். அம்மாவை எத்தனை தடவை வேண்டுமாயினும் உதைக்கலாம். அவள் பொறுத்துக் கொள்வாள் எனும் அலட்சியம் நமக்கு நிறையவே உண்டு..

இந் நடத்திற்கு இன்னொரு சொல்லும் உண்டு. காலைத் தூக்கி நின்றாடு-தல் எனும் நீள வினையைத் ”தாண்டு-தல்” என்றும் தமிழில் சுருங்கச் சொல்லலாம். அவன் ஆடுவது தாண்டவம். அவன் தாண்டவன். தாண்டுகை - dance. (ஆங்கில c ஒலிப்பை k என ஒலித்துப் பாருக. இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை புலப்படும்.)

”தாண்டவன் தெரியனம், தாண்டவன் முழுக்காட்டு, தாண்டவன் தேரோட்டம்” என்று எப்போது தமிழில் சொல்வோம்?

Friday, December 22, 2023

சங்ககால மக்கள் தொகை

1968 இல் திரு.M. E. MANICKAVASAGAM PILLAI, எளிமையான முறையில் சங்ககால மக்கள் தொகையைக் கணக்கிட்டு, ஒரு கட்டுரையாக ஆக்கி, மலேசியாவில் நடந்த முதல் உலகத் தமிழ் மாநாட்டில் அளித்தார். இவ் எளிய கட்டுரை அற்றைத் தமிழரிடம் மிகப் பெருவலம் கொண்டதாய் அமைந்தது. (இற்றைத் தமிழர்தாம் பழையனவற்றைக் காப்பாற்றாது விட்டோம்.) 

இம்மாநாட்டில் மலேசியப் பேராளரில் ஒருவராய்க் கலந்து கொண்ட என் தந்தையார் முத்தமிழ்ச் செல்வர் ரெ.இராமசாமியின் வழி, 1966/67 இல் இக்கட்டுரையைப் படிக்கும் வாய்ப்பும் பெற்றேன்.  Proceedings of the first international conference seminar of Tamil studies: Kuala Lumpur, Malaysia Apeil 1966 நூலில் 346-349 பக்கங்களில் உள்ளது. மாநாட்டுக் கட்டுரைத் தொகுப்பின்  ஒரு படி எம் வீட்டிலும் இருந்தது. என் தந்தையார் மறைவிற்குப் பின் இக்கட்டுரையைத் தேடிக் கண்டு பிடிக்கமுடியாமல் பல்லாண்டு தடுமாறி, முடிவில் 2010களில், நண்பர் விருபா குமரேசன் உதவியோடு இக்கட்டுரையின் படியைப் பெற்றேன். 

இப்போது https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZIdk0xy#book1/ வலைத்தளத்தின் வழி இருப்பதையும் தெரிவிக்கிறேன். உங்கள் வாசிப்பிற்கு ஒரு படி இணைத்துள்ளேன். 

படிக்கவேண்டிய கட்டுரை.

அவர் கட்டுரையை இங்கு கொடுத்தது போக,  கட்டுரைக்குள்ளே சில பெருக்கல்களில் இருந்த Logarithm பிழைகளைச் சரி செய்துள்ளேன். முடிவில் பெரிதும் மாற்றம் இல்லை.   


POPULATION OF TAMILAKAM DURING THE SANGHAM AGE*

M. E. MANICKAVASAGAM PILLAI


INTRODUCTION

In this paper an attempt is made to probe into the possibilities of reconstructing the population of Tamilakam during the Sangham period.Such an idea would strike the imagination of any one who finds the note of caution cited by the Demographical Year Book of the U.N.O. It mentions the future trends in the population of the world that would become three times greater by a.D. 2000, than what it was in A.D. 1950. If the future trends can be calculated, why would it not be possible for us to calculate backwards? Physical anthropologists have calculated the age of the first true men as 30,000 years{!}. But the number of the species who lived at that time is not known. At the same time the population of the world at the time of the birth of Christ is said to have been 200 millions{2}.

Regarding the population of any country in the present century, we are posted with sufficient information, thanks to the reports of the Census Commissions. Based on these figures, the future trends in population are calculated. Similarly the past trends in population also have to be calculated. The relationship between population and other aspects of culture deems it a necessity to formulate a method to calculate the past trends in population.

IMPORTANCE OF THE POPULATION ANALYSIS

In any country, a proper study of the population should precede the assessment of her economic prosperity. They are relative entities and none of them is absolute of the other. Therefore an analysis of the population of Tamilakam during the Sangham age is essential, if we have to evaluate fully her economic prosperity, as it is gleaned out from the Sangham literature, which does not help us in any way, as no clue is available to probe into the population figures. So a different method is to be adopted.

FORMULATION OF THE METHOD

It is possible to reconstruct the culture of the ancient phase on the basis of modern culture traits existing in cognate cultures within a culture area. A similar method should be formulated for calculating the past population also.

Let P be the population of a country at a given time and n be the number of decades before which R the population to be reconstructed existed. If r is the percentage of variation during a decade, then a formula can be arrived at as follows:

Let R be the population in the beginning, and r the % variation per decade.Then at the end of the first decade, the population will be: R+ R*X*r/100; 

i.e. = R*(1 + r/100). Then the population after n decades will be R (1 + 1/100)^n which is P.: So P= R (1 + r/100)^n 

CALCULATION OF  r

Using the above formula, r can be calculated, if the value of the other entities are known. If we accept the view that the population of the world during the time of Christ was 200 millions, r can be calculated as follows:

P = 1,500 millions in AD. 1900.R = 200 millions and n = 190 decades.By positing these values, we can calculate the value of r:

P = R*(1+r/100)"

ie. 1550 = 200*(1 + r/100)^!90

1550/200 = (1 + r/100)^190

Taking natural logarithm on both sides, 

190*ln (1 + r/100) = ln (1550/200) = ln 7.75 

Therefore, ln(1+r/100) = (ln 7.75)/190 = 0.010777330754554

i.e. (1+r/100) = 1.010835615379693

Hence, r = 1.0835615379693 % per decade.

RECONSTRUCTION OF THE POPULATION OF TAMILAKAM

The Tamilakam of the Sangham age and the modern Tamilnad are not the same. The former comprised the modern states of Kerala also within her area. So the modern Indian states of Kerala and Madras would roughly correspond with the Tamilakam of the Sangham age. The population of Madras according to the Census Report of 1911 was 20,902,616: while that of Kerala in that report was 7,147,673. Therefore the population of the modern area corresponding to the

ancient Tamilakam of the period in question (i.e.1910 the year) is (20,902 + 7,148) x 1,000 = 28,050 x 1,000. If the population of Tamilakam in the first decade of the beginning of the Christian Era is to be calculated, then n = 191 decades.

P = R*(1 + r/100)^191

ie. 28:05 = R*(1 + 1.0835615379693/100)^191

R = 28-05/[(1.010835615379693)^191]

  = 28.05/7.833976019192718 = 3.580557296994447 millions.

Tamil scholars and historians agree with regard to the age of the Sangham period, as the first three centuries of the Christian era. So if we

take up the upper limit of the Sangham period as AD 300, then the population figures can be calculated as follows:

P = R(l + r/100); P = 3.580557296994447 * (1.010835615379693)^30 = 4.942782225693111 millions.

Now we know the minimum and maximum limits of the population range in Tamilakam during the Sangham period. The range is between 3.581 millions in the beginning and 4-962 millions towards the close of that epoch.

FURTHER IMPLICATIONS

As we have calculated above, the population of Tamilakam during the entire Sangham period varied between 3-583 millions 4-951 millions respectively. This knowledge of the population of Tamilakam helps us to make a valid assessment of the economic structure of the ancient Tamil Society. We learn from the Classics that the land was fertile, agriculture flourished and great progress was made in the spheres of internal and international commerce.{4} Foreign ships loaded with gold visited the harbours of the Tamil states to exchange gold for the precious commodities like pepper and the spices.{5} As a consequence Tamilakam maintained a favourable balance of trade. All these aspects suggest that the people enjoyed a prosperous economy which, with a limited population might have maximised the intensity.In the political life of the country, the three crowned kings and the chieftains are said to have maintained a standing four-fold army, in addition to the militia, mobilised during occasions of war[6}. The population figures would explain this discrepancy. There might not have existed ample scope for maintaining a huge standing army with a limited population, for other economic activities also might have needed the services of the people in order to have a stable economy.

Literature does not mention more than one or two diseases and the stress seems to have been on administering curative medicines.Thus it is possible to establish the fact that a study of the population of ancient Tamilakam has great implications on the culture of the ancient Tamils {7)

Thus it is possible to establish the fact that a study of the population of ancient Tamilakam has great implications on the culture of the ancient Tamils.  

------------------------------

References:

1 Krober’s Anthropology, pp. 23-27. 

2.The information is obtained from KUMUDAM, Tamil weekly published from Madras.

3 On the basis of the synchronization of the contents of the Sangham works with those of the foreign works of Pliny, Ptolemy and others, Profeason  S. Valyapuri Pillai and K. A. Nilakanda Sastri have fixed this date. The Roman coins un-earthed in different parts of Tamilakam also confirm this view.

4. Refer to the section ‘Economic Conditions’ in the author’s thesis “Culture of the Early Cheras”, pp. 254-314.

5 Ibid.

6 Ibid. “Political Conditions”, pp. 193-253.

7 Ibid. “Economic Conditions”, pp. 254-314.

SELECT BIBLIOGRAPHY

Kroser, A. L., Anthropology — George G. Harrap & Company, Limited,London, 1923. 

MANICKAVASAGAM PILLAI, M. E., “Culture of The Early Cheras”, M. Litt.Dissertation (Unpublished) submitted to the University of Kerala, Trivandrum,1964.

The author is greatly indebted to Prof. V. I. Subramoniam, of the Kerala University. and Prof. Eliezer of the Department of Mathematics, University of Malaya, for their valuable suggestions in drafting this revised draft of the paper. 



Monday, December 18, 2023

சுவடிப் பதிப்பின் சிக்கல்கள்

 ”அல்லிகதை” என்ற நூலை சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியத்துறைகளில் முன்னாள் தலைவர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேரா. இ.சுந்தரமூர்த்தி வெளியிட்டார். அதன் பதிப்புரையில் வரும் ஒரு பகுதியைத் தட்டச்சி இங்கு கீழே தருகிறேன். Plain text, Word format, PDF என்று பொலப்பொலவெனக் கொட்டும் ஆவணங்களைச் சொடுக்கிப் பெற்று ஒருங்குறி எழுத்தில் படிப்பதற்கும், அச்சில் படியெடுப்பதற்கும், Tamil Concordance போன்ற பேரா. பாண்டியராசவின் தளத்தில் இருந்து எதையும் தேடுவதற்கும் வாய்ப்புப் பெற்ற நம் போன்றோர்  19 நூற்றாண்டின் கடைசியிலும். 20 ஆம் நூற்றாண்டு முழுதும் நமக்காக விழுந்து விழுந்து கண்வலிக்கப் பாடுபட்டுப் பதிப்பித்தோரைச் சட்டென்று குறை சொல்லிவிடுகிறோம். 

ஒழுங்கால இலக்கியப் பதிப்புகளைக் கூர்ந்துபடிக்காது, தம் அரைகுறை அறிவை மறைத்துக் கொண்டு, முகன அப்பாலியம் (post modeenism), இலக்கியக் கட்டமைவம் (structuralism in literature) என ஏதேதோ சொல்லிக் கொண்டும், நக்கீரரென தமை நினைத்துக் கொண்டும் குறை சொல்கிறவர் இன்னும் மோசம்.  

அருள்கூர்ந்து, நம் போன்றோர் எல்லோரும் சுவடிப் பதிப்பின் சிக்கல்களைப் புரிந்துகொள்ளட்டும்.  

------------------------------

நெடிய கால இடைவெளிக்குப் பின்னர் ஒரு நூலினைப் பதிப்பிக்கும் போது ஆசிரியரின் உண்மைப் பாடத்தைத் தெளிந்து பதிப்பிப்பது என்பது மிகவும் சிக்கலான செயலாகும். கிடைக்கின்ற பல்வேறு சுவடிகளையும் திரட்டி அவற்றில் காணும் பல்வேறு பாடங்களையும் நுணுகி ஆராய்ந்து உண்மைப் பாடல் கண்டு புதிப்பித்தல் வேண்டு. ’மூலபாட ஆய்வியல்’ (Textual criticism) என்னும் துறை இன்று விரிவாக ஆராயத்தக்க துறையாக வளர்ந்துள்ளது. இச்சுழலில் பண்டையோர் பதிப்பித்த்த நூலின் பதிப்பு நெறி முறைகளைக் காணும்போதுதான் அவர்களுடைய அரிய முயற்சி நன்கு புலனாகும்.

சுவடிகளில் ஒற்றெழுத்துகளுக்குப் புள்ளியும், நெட்டெழுத்தைச் சுட்டும் கொம்பு வேறுபாடுகளும் சீஇர் அடி பிரித்து எழுதிய முறைகளும் இரா. இவற்றைச் சுவடி இயல் புலமை கொண்டோரே ஓர்ந்து அறிந்து உணர்ந்து எழுதமுடியும், பொறுமையும், பயிற்சியும் இப்பணிக்குத் தேவையாகும். இப்பணியில் உள்ள அருமைப்பாடு குறித்து அறிஞர் முருகவேள் பின்வருமாறு கூறுவார்.

ஏடுபடித்தல் என்பது ஒரு கலை.

எல்லோரும் ஏடு படித்தல் இயலாது.

தனியே அதற்குத் தக்கநற் பயிற்சி

பெரிதும் உழைத்துப் பெறுதல் வேண்டும்.

செல்லும் பூச்சியும் ஏட்டைச் சிதைக்கும்.

ஏடுகள் ஒடிந்தும் கிழிந்தும் இருக்கும்.

மெய்யெ ழுத்துகள் புள்ளி எய்தா.

ஒன்றைக் கொம்பும் சுழீன் கொம்பும் 

வேறுபா டின்றி ஒத்து விளங்க்கும்.

காலும் ரகரமும் ஒன்றே போலு.

பகர யகரம் நிகர்உறத் திகழும்

கசதநற என்பவை  வசதியாய் மாறி

ஒன்றன் இடத்தை மற்றொன்று கவரும்.

எழுதுவோர் பலப்பல பிழைகளைப் புரிவர்.

பக்கங்கள் பலப்பல மாறிக் கிடக்கும்.

சீரும் தளையும் செய்யுள் வடிவும்

சரிவரத் தெரியா வரிகள் விடுபடும்.

இத்தகு நிலைகளால் எத்தனையோ பல

குழப்பமும் கலக்கமும் விளைத்து நிற்கும்.

‘தொன்றுமொழி’ அந்தோ ‘தோன்றுமொழி’ ஆகும்.

‘எதிபங்கம்’ அந்தோ ‘எதிர்பங்கம்’ என ஆம்.

‘யவ மத்திமம்’ எனும் எழிற் பெருஞ் சொல்தான.

’பவ மத்த்மம்’ எனப் பண்பிற் பிறழும்.

‘அரிய வழக்கு’ ஆன்னோ ‘ஆரிய வழக்காம்’.

‘போரவை’ மாறிப் ‘போர்வை’ எனப்படும்.

‘அல்குதடம்’ எனும் அழகிய தொடர்

‘அல்குற்றடமாய்’ அருவருப்புத் தரும்!

தகர சகரம் குறிக்கும் ‘தச்சகரம்’

‘தசக்கரம்’ ஆகித் தரங்கெட்டு நிற்கும்.

இனையபல் பிழைகளை யெல்லாம் களைந்து

செப்பண் இட்டுத் திருத்தி அமைத்து

அறிஞர்கள் ஏற்ப ஆய்ந்தாய்ந்து பதிக்கும்

பதிப்பாசிரியர் பணியின் சிறப்பு

பெரிது! பெரிது! மிகவும் பெரிதே!

எனச் சுவடி படிக்கும் போதும் எழுதும் போதும் ஏற்படுகின்ற பல்வேறு இடர்களையும் பாங்குறப் புலப்பௌத்துகின்றார். இத்தகு இடர்ககையெல்லாம் களைந்து பதிப்புப்பணியில் ஈடுபட்ட தமிழறிஞர்களின் பணியைப் பின்பற்றி உழைப்பதே நாம் அவர்கட்க்குச் செலுத்தும் நன்றியாகும்.

------------------------  

 


 


     

Sunday, December 17, 2023

Heliocentrism in Sangam period

"வாள் நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த, 

இளங்கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து" 

                      - சிறுபா242-243, 

ஒளி நிறைக்கும் (இளங்காலை) வானத்தின், கோள்கள் சூழ்ந்த, இளங்கதிர் ஞாயிற்றை இகழும் தோற்றத்து” 

என்பது மேலேயுள்ள அடிகளின் பொருள். இங்கே வியக்க வேண்டியது 2000 ஆண்டுகளுக்கு முன் ”கோள்கள் ஞாயிற்றைச் சூழ்ந்தன, ஞாயிறு நடுவில் உள்ளது” எனும் சூரிய நடுவக் கொள்கை பேசப் படுகிறது. 

தமிழன் ஒன்றும் சோடையில்லை. நம் பிள்ளைகளுக்கும் உலகத்திற்கும் நம் முன்மை சொல்லப்பட்டுள்ளதோ? பெரிய கேள்வி. 

பொ.உ.மு. 300 இல் Aristarchus of Samos இதைக் ஒரு கருத்தீடாய்ச் சொல்லி யுள்ளார். இங்கே கருத்தீடாக அல்ல, பட்டகையாய் (fact), முடிந்த முடிவாய்ச் சொல்லப் படுகிறது. 

பொ.உ.16 ஆம் நூற்றாண்டில் கோப்பர்நிக்கசு சொன்னபிறகு தான் அறிவியல் புரட்சி ஏற்பட்டதாம். சூரிய நடுவக் கொள்கை ஏற்கப்பட்டதாம். தெரிந்து கொள்க. 

எங்கேயாவது ஆங்கில விக்கிப்பீடியாவில் சூரிய நடுவக் கொள்கையோடு சேர்த்து, சிறுபாணாற்றுப் படை, இடைகழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பெயரைப் பார்த்துள்ளீரா? 

ஐயா, தமிழ்நாட்டு விக்கிப்பீடியரே! நீவிர் ஏதும் செய்யலாமே?

Saturday, December 16, 2023

மினாவக் கிரேக்கமும், தமிழகமும், அப்புறம் யானையும், குங்குமப்பூவும்

தமிழில் யா (ல்) என்பது கருமைநிறங்  குறிக்கும். சொல்லாய்வறிஞர் அருளியின் படி, யால்நை>யானை என்பது யானைச் சொற்பிறப்பு. அதன் பொருள் கருவிலங்கு. இதை  யால்மா> யாலிமா என்றும் சொல்லலாம். தமிழின் மகர- வகரத் திரிவோடு, வெவ்வேறு நாட்டு வணிகர் கூடிய, நம்மூரைச் சேர்ந்த, அற்றைத் துறைகளில் இது யாலிவா என்றும் பலுக்கப் பட்டிருக்கலாம். பொதுவாய், இந்தியக் கிழக்கொலிப்பின் லகரம் மேற்கொலிப்பில் ரகரமாவதும், தெற்கின் ல,ழ,ளகரங்கள் வடக்கே ரகரமாவதும் இயல்பு. இதனால், மேலை நாடுகளுக்கு யானை கொண்டு போகையில் சில வணிகரால் ”யாரிவா” என்று கூட அதன் பெயர் பலுக்கப் பட்டிருக்கலாம். 

இதுபோக, மேலைநாடுகளில் pa-fa-va ஒலிக்குழப்பம் சில சொற்களிலுண்டு. open/offen. Folk/volk மாற்றங்கள் நினைவில் எழுகின்றன. கப்பலில் கேட்ட வ எனும் சொல்லொலி சில இறங்குதுறைகளில் ப ஆகலாம். கிரேக்கத்தில் இது பழக்கம் போலும். ஏனினில் அங்கு f கிடையாது. வகரம் குறைந்தே ஒலிக்கும். இவ்வொலி மாற்றால், யாரிவா> யா-ரி-பா ஆகும். Linear B Greek இல் E-re-pa என்றே எழுதப்பட்டது. elephant என்றே பொருள் சொல்வார். https://encyclopedia.pub/entry/32633 என்னும் தளத்தில் கீழுள்ள செய்தியைச் சொற்பிறப்பு ஒட்டிக் காணலாம்.

The word "elephant" is based on the Latin elephas (genitive elephantis) ("elephant"), which is the Latinised form of the Greek ἐλέφας (elephas) (genitive ἐλέφαντος (elephantos[1]), probably from a non-Indo-European language (compare Berber elu) likely via Phoenician.It is attested in Mycenaean Greek as e-re-pa (genitive e-re-pa-to) in Linear B syllabic script.As in Mycenaean Greek, Homer used the Greek word to mean ivory, but after the time of Herodotus, it also referred to the animal.The word "elephant" appears in Middle English as olyfaunt (c.1300) and was borrowed from Old French oliphant (12th century). 

மேலே பெருபெர் மொழியில் எழுந்திருக்கலாம் என்பது ஒரு பரிந்துரை. அவ்வளவு தான். அதை முடிந்த முடிவென்று கொள்ள வேண்டியதில்லை. தமிழில் எழுந்தது என்பது என் பரிந்துரை. Linear B Greek என்ற அசையெழுத்து 1400 - 800 BC யில் பழங்கிரேக்கத்தில் பயன்பட்டது. அடிப்படையில் இவ்வெழுத்து மைசீனீயன் கிரேக்கம் எழுதப் பயன்பட்டது. மைசீனியன் கிரேக்க மொழியின் தொடக்கம் 1600 BC. 1200 BC இல் தோரியன் உள்நுழைவிற்கு (Dorian Invasion) அப்புறம் இது கொஞ்சங் கொஞ்சமாய்ச் செம்மொழி கிரேக்கமாய் மாறியது. 

E-re-pa என்னும் Linear B Greek சொல்லே  E-re-pa> e-le-pha என்று Phonecian இல் திரியும் என்பார். மீண்டும் ரகரம் லகரமாயிற்று. Phonecian இல் இருந்தே மற்ற மேலை மொழிகளுக்கு இச்சொல் போனதென்பார். அப்படியாயின் யால்மா> யாலிமா என்ற தமிழ்ச்சொல் Linear B அசையெழுத்தில் E-re-ma என்று 3 எழுத்தாய் பதியப் பட்டு 1400 BC இல் இருந்து 1200 BC க்குள் மைசீனியன் கிரேக்கத்தில் நுழைந்திருக்க வேண்டும். Linear B Greek என்பது 800 BC க்கு முந்தை நிலைக்  கிரேக்கத்தைக் குறிக்கும். இதன்பொருள் அங்கும் elephant எனும் யானையே. E-re-pa எனும் Linear B Greek சொல்  பிற்கால Phonecian இல் E-re-pa> e-le-pha ஆகும். Phonecian இல் இருந்து மற்ற மேலை இரோப்பிய மொழிகளுக்கு இச்சொல் போயிருக்கலாம் என்பார். 

”அதெப்படி தமிழென உறுதியாய்ச் சொல்கிறாய்?” என்று கேட்கலாம். என் விடை எளிது. தமிழில் யா (ல்) என்பது கரு நிறங் குறிக்கும் வேர்ச்சொல். நை>னை என்பது விலங்கைக் குறிக்கும் சொல்லாக்க ஈறு. யானை எனும் விலங்கு மைசீனியன் கிரேக்கருக்கும் மற்ற மேலையருக்கும் இந்தியா, ஆப்பிரிக்கா வழி தான் தெரிந்திருக்க முடியும், ஆப்பிரிக்க யானையை  ஆகப் பழங்காலத்தில் மாந்தர் பழக்கக் கூடியதாய், உடமை விலங்காய் (domestic animal) ஆக்கிவிட முடிந்ததில்லை. தொடக்க காலத்தில் அது கண்டம் விட்டு கண்டம்  நகர்ந்ததும் இல்லை. தொடக்ககாலச் சுமேரிய, பாபிலோனிய, கிரேக்க, உரோமானிய யானைக் குறிப்புகள் எல்லாம் பெரிதும் இந்திய யானைகளையே குறித்திருக்கலாம் என்றே வரலாற்று ஆய்வாளர் சொல்கிறார்.    

பொ. உ. மு 1600 களில் கிரேக்க நாகரிகம் கிரீட்டில் தொடங்கியது. கிரீட்டிற்கும் தமிழருக்கும் ஆன தொடர்பு சங்கநூலில் ஒரே ஒரு இடத்தில் வெளிப்படும். கீழே இறக்குமதியாகும் வேறொரு சரக்கு பற்றி நான் சொல்வது உண்மையாகின், யானை விலங்கும், பெயரும் பழந்தமிழ் நாட்டிலிருந்தே பெரும்பாலும் ஏற்றுமதியாகி இருக்க வேண்டும். மறவாதீர். வெறும் சொற்கடன் மட்டுமின்றி, விலங்கும் சொல்லும் ஏற்றுமதியானது.

இனி என் ”சங்க இலக்கியங்களில் ஆரியர் - 5 (https://valavu.blogspot.com/2023/05/5.html)  என்ற கட்டுரைக்கு வருவோம். இதில் பதிற்றுப்பத்தின் 11 ஆம் பாட்டின் சில அடிகளுக்குள் புதைந்துள்ள ஓர் அரிய பழம் வரலாற்றைப் பேசுவேன். இதற்குள் போகுமுன் முன்குறிப்புகளைப் பார்ப்போம். இரண்டாம் பத்து இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பேசுகிறது. குறிப்பிட்ட பாட்டின் தலைப்பு  *புண் உமிழ் குருதி*. பாடியவர் குமட்டூர்க் கண்ணனார். குமட்டூர் பெரும்பாலும் குமிட்டூர் ஆகலாம். 2 ஆம் பதிகத்தின் கீழ் ”பாடிப்பெற்ற பரிசில் உம்பற் காட்டு ஐந்நூறூர் பிரமதாயம் கொடுத்து முப்பத்தெட்டு யாண்டு தென்னாட்டுள் வருவதலிற் பாகங் கொடுத்தான் அக் கோ” என்ற குறிப்பு வரும். 

இக்கூற்றை வைத்து, தமிழகக் கேரள எல்லையில் இன்றுள்ள குமிழி> குமிளியே அற்றைக் குமிழூர்> குமிளூர்> குமிட்டூர் எனலாம். மரத்தொழிலர் நடுவே குமிழ மரம் குமிட்டுத் தேக்கு என்றுஞ் சொல்லப் பெறும் குமிழியில் இருந்து 4 கி.மி. தொலைவில் தேக்கடி (தேக்கு+அடி). தேக்கும், வெண் தேக்கும், குமிட்டுத் தேக்கும் அருகருகே விளைவது வியப்பல்ல.குமிழூர் சங்க காலத்தில் சேரலஞ் சேர்ந்தது தான். 

இவ்வூருக்கு அருகில் தான் இமையவரம்பன் நெடுஞ்சேரல் குமிட்டூர்க் கண்ணனாருக்கு உம்பற் காட்டு ஐநூற்றூரைப் பெருமதாயமாய் அளித்தான். குமிழிக்கு அருகில் தான், குட்ட நாடு. முல்லைப் பெரியாறு; கண்ணகி போய்ச் சேர்ந்த இடம். செங்குட்டுவன் மலைக்காட்சி கண்ட இடம். சிலம்பில் வஞ்சிக் காண்டம் தொடங்குமிடம். சேரலாதன் ஐந்நூற்றூர் தவிர தன்னாட்டு வருவாயில் ஒரு பாகத்தையும் (எத்தனை என்று தெரியவில்லை) தான் அரசனாய் வாழ்ந்த 38 ஆண்டிற் இப் புலவருக்குக் கொடுத்திருக்கிறான்.

செவ்வா யெஃகம் விலங்குந ரறுப்ப

அருநிறந் திறந்த புண்ணுமிழ் குருதியின்

மணிநிற யிருங்கழி நீர்நிறம் பெயர்ந்து

மனாலக் கலவை போல் வரண்கொன்று

முரண்மிகு சிறப்பி னுயர்ந்த வூக்கலை

பலர்மொசிந் தோம்பிய திரள்பூங் கடம்பின்

கடியுடை முழுமுத றுமிய வேஎய்

வென்றெறி முழங்குபணை செய்த வெல்போர்

நாரரி நறவி னார மார்பின்

போரடு தானைச் சேர லாத

என்பது பாட்டின் குறிப்பிட அடிகள். இவற்றைப் பொருள் காணத் தோதாய்ச் சொற்களைப் பிரித்து அடிகளைக் கீழே மாற்றிப் போட்டிருக்கிறேன்.   

கடுஞ்சின விறல்வேள் களிறு ஊர்ந்தாங்கு

வான்பிசிர் உடைய வரைமருள் புணரி 

வளிபாய்ந்து அட்ட துளங்குஇரும் கமஞ்சூல்

நளிஇரும் பரப்பின் மாக்கடல் முன்னி

விலங்குநர் செவ்வாய் எஃகம் அறுப்ப,

மனாலக் கலவை போல 

அருநிறம் திறந்த *புண்உமிழ் குருதி*யின்

மணிநிற இருங்கழி நீர்நிறம் பெயர்ந்து, 

அரண் கொன்று

முரண்மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை

பலர்மொசிந்து ஓம்பிய திரள்பூங் கடம்பின்

கடிஉடை முழுமுதல் துமிய ஏஎய்

இனி ஒரு சில சொற்களுக்கான விளக்கம் பார்ப்போம்.விலங்குநர் = (இச்செயல்) தடுப்போர் (கடற்கொள்ளையர்); செவ்வாய் எஃகம் = கூர்(sharp)ஓர எஃகு வாளால் (இரும்புக் கால முதல் அடையாளங்களும் பழம் எஃகுப் பொருட்களும் தொல்லாய்வின் மூலம் இப்போது தென்னகத்திலேயே கிடைத்துள்ளன. எஃகு = steel; எஃகம் = steel sword); அறுப்ப = அறுத்து; மனாலக் கலவை போல = குங்குமப்பூக் கலவை போல்; அருநிறம் = செந்நிறம்; அருநிறம் திறந்த புண்ணுமிழ் குருதியின் = செந்நிறங் கொண்ட புண்ணுமிழ் குருதியால்; மணிநிற இருங்கழி = நீலப் பெருங்கழி, நீர்நிறம் பெயர்ந்து = நீரின் நிறம் மாற, அரண்கொன்று = (எதிர்த்தவரின்) காவலழித்து; முரண்மிகு சிறப்பின் = முரண் மிகு சிறப்பால்; உயர்ந்த ஊக்கலை = உயரூக்கம் கொண்டவனே! 

இங்கு ஓர் இடைவிலகல். ”மனாலம்” என்ற சொல் சுவடியெழுத்தில் பிழைகள் கொண்டதாகலாம். வ என்பது ல என்று இது போன்ற ஓலைச்சுவடிகளில் பல இடங்களில் மாறிப் புரிந்துகொள்ளப் பட்டுள்ளது. அடுத்தடுத்த பதிப்புகளில் மிக்கும் ம-விற்கும் இடையில் இகரக் கொக்கி தவறிப் போகலாம். இது போன்ற சுவடிப் பிழைகளை ஒரு பழம்பாவின் மூலம் முன்னாள் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் இ.சுந்தரமூர்த்தி ”அல்லிகதை” என்ற நூலின் முன்னுரையில் வெளியிட்டுள்ளார். இன்னொரு பதிவாய் அடுத்து அதை வெளியிடுகிறேன். 

மேலே இருக்கக்கூடிய சுவடிப் பிழைகளைக் கணக்கில் கொண்டால் மனால, மினாவ ஆகும். மினாவ என்பது அப்படியே எழுத்துப் பெயர்ப்பாய்  Minoan crete ஐக் குறிக்கும். மினாவக் கலவை, உரையாசிரியர் குறிப்பின் படி குங்குமப்பூக் கலவைக் குறிக்கும். இங்குதான் நாம் Jumper prize அடிக்கிறோம் எனலாம். பொ.உ.மு. 3000 - 1100 இல் உலகின் மற்ற நாடுகளுக்கு கிரீட்டிலிருந்தே குங்குமப்பூ ஏற்றுமதியானது. இன்று காசுமீரிலிருந்து ஏற்றுமதி ஆவது போல் அன்று கிரீட்டிலிருந்து ஏற்றுமதி ஆனது.   

பார்க்க: https://en.wikipedia.org/wiki/History_of_saffron. Saffron played a significant role in the Greco-Roman pre-classical period bracketed by the 8th century BC and the 3rd century AD. The first known image of saffron in pre-Greek culture is much older and stems from the Bronze Age. A saffron harvest is shown in the Knossos palace frescoes of Minoan Crete, which depict the flowers being picked by young girls and monkeys. 

One of these fresco sites is located in the "Xeste 3" building at Akrotiri, on the Aegean island of Santorini—the ancient Greeks knew it as "Thera." These frescoes likely date from the 16th or 17th century BC` but may have been produced anywhere between 3000–1100 BC. They portray a Minoan goddess supervising the plucking of flowers and the gleaning of stigmas for use in manufacture of what is possibly a therapeutic drug. 

A fresco from the same site also depicts a woman using saffron to treat her bleeding foot. These "Theran" frescoes are the first botanically accurate visual representations of saffron's use as an herbal remedy. This saffron-growing Minoan settlement was ultimately destroyed by a powerful earthquake and subsequent volcanic eruption sometime between 1645 and 1500 BC. The volcanic ash from the destruction entombed and helped preserve these key herbal frescoes.

ஆக இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன், குறைந்தது 3100 ஆண்டுகளுக்கு முன் கிரீட்டில் இருந்து குங்குமப்பூ நம்மூரில் இறங்கியிருக்கிறது. ஏறத்தாழ அதே காலத்தில் யானை அவர் நாட்டிற்கு ஏற்றுமதியாகிள்ளது. நம் யானை பெயரை அவர் கொண்டார் அவர் அரசுப் பெயரான ”மினாவம்” என்பதோடு சேர்த்து இறக்கி மினாவக் கலவை என்று நாம் சொன்னோம். (சங்க காலம் வரைக்கும் மினோவக் கலவை என்ற பெயர் மறையவே இல்ல.) எவ்வளவு பொருத்தமாய் இரு நாட்டு உறவு அமைந்தது பாருங்கள். நம் unique product இற்கு அவர் unique product ஐ மாறு கொண்டிருக்கிறோம்.         

தவிரக் குரு>குருங்கு என்பது தமிழிற் சிவப்பு நிறங் குறிக்கும் சொல். குருங்குமம்>குங்குமம் என்பதன் வழி, நிறத்தை வைத்து ஓர் இறக்குமதிப் பொருளுக்கு ஆன பெயர் தெரிகிறது. (பருத்தி - ஒரு பிறந்த இடப் பெயர். கொட்டை> cotton - இறங்கிய இடங்களில் ஏற்பட்ட பெயர்.) ”குருங்குமம்” பின்னால் (kurkema Aramaic) இலும், krocos என கிரேக்கத்திலும் என மேலை நாடுகளிற் பரவும். அதே பொழுது azupirana என்ற akkadian சொல்லிலிருந்து Saffron என்ற இற்றை மேலைச்சொல் பிறந்தது. 

இன்னொரு விதமாயும் இதை அணுகலாம். 50% மஞ்சள்+ 50% சிவப்பு= நாரங்கை நிறம்; 75% மஞ்சள்+ 25% சிவப்பு= காவி நிறம்; கவி-தல்= மூடு-தல். கவிந்த சிவப்பு= காவி(ச் சிவப்பு). காவி என்ற சொல் தமிழே. கவி-தல் = மூடு-தல் = மங்கு-தல் 

தமிழில் நாரங்கம், நாரங்கி, நாரங்கை என்ற மூன்றும் வெவ்வேறு ஈறுகள் கொண்ட ஒரே சொற்களாகும். அதுபோல் நாரத்தம், நாரத்தை ஆகிய இரண்டும் வெவ்வேறு ஈறுகள் கொண்ட ஒரே சொற்கள். நார்+அத்து+அம், நார்+அத்து+ஐ = நாரோடு கூடியது. நார்+அங்கு+அம், நார்+அங்கு+ அம் = நார் அங்கமானது. நாரங்கையும், நாரத்தையும் உறவுள்ள ஆனால் வேறு வேறு பழங்கள். அதனால் தான் 2 சொற்கள் நம்மிடம் உள்ளன.

மேலே சொன்னது போல் காவி என்பதையும் காவம் என்று தமிழில் சொல்லலாம், கா>சா போலியில் காவம் சாவமாகும். இதில் ரகரம் உள்நுழைந்து சாவ்ரம் ஆகும், இது அக்கேடியன், அரபியில் நுழைந்து பின் மேலை மொழிகளில் saffron ஆகும்.

மேலே சொன்னது போல் இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன், குறைந்தது 3100 ஆண்டுகளுக்கு முன், மீனோவக் கிரீட்டில் இருந்து நம்மூரில் குங்குமப்பூ இறங்கியுள்ளது. குங்குமப்பூவின் இன்னொரு சொல் தான் காவப்பூ என்னும் காவிப்பூ. ஆங்கிலச் சொற்பிறப்பில்,

saffron (n.)

c. 1200, safroun, "product made from the dried stigmas of flowers of the autumn crocus," from Old French safran (12c.), from Medieval Latin safranum (cognate with Italian zafferano, Spanish azafran), ultimately from Arabic az-za'faran, which is of unknown origin. The substance is noted for its sweet aroma and deep orange color. As a color word for deep yellow-orange, and an adjective, by late 14c. In reference to the crocus plant itself from early 15c. German Safran is from French; Russian shafran' is from Arabic. Related: Saffrony (adj.). also from c. 1200

என்பார். குங்குமப்பூ வணிகத்தோடு பதிற்றுப்பத்து வரியையுஞ் சேர்த்து விக்கிப்பீடியாவில் யாரேனுங் குறித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? தமிழன் பெருமிதம் கூடுமே? சேரலாதன், செங்குட்டுவனின் பழங் காலமும் (’சிலம்பின்’ காலமும்) மினாவக் கலவை என்ற கூட்டுச் சொல்லால் உறுதிப் படும். 

எத்தனை இந்திய மொழிகள் அவைகளின் இலக்கியங்களில் ”மினாவத்தைப்” பதிவு செய்தன??? பிரித்தானியக் கலைக்களஞ்சியம் மினாவனுக்கு கீழுள்ளது போல் பதிவு செய்யும்  

Minoan, Any member of a non-Indo-European people who flourished (c. 3000–c. 1100 BC) on the island of Crete during the Bronze Age. The sea was the basis of their economy and power. Their sophisticated culture, based at Knossos, was named for the legendary King Minos. It represented the first high civilization in the Aegean area. The Minoans exerted great influence on the Mycenaean culture of the Greek islands and mainland. Minoan culture reached its peak c. 1600 BC and was noted for its cities and palaces, extended trade contacts, and use of writing (see Linear A and Linear B). Its art included elaborate seals, pottery, and, notably, the vibrant frescoes decorating palace walls, which depicted both religious and secular scenes, including goddesses reflective of a matriarchal religion. Palace ruins show evidence of paved streets and piped water. Familiar Minoan art motifs are the snake (symbol of the goddess) and the bull and leaping dancer, also of mystical significance.

எனக்கறிந்து இல்லை இருந்தும் தமிழின் காலத்தைக் குறைத்துக் கொண்டே இருந்துள்ளார். மினாவம் என்ற பெயர் கிரேக்கருக்கும் முந்தைய crete நாகரிகத்தைக் குறிப்பதெனில், அதை நம் இலக்கியம் குறிகிறதெனில். நம் இருப்பும் பழமை தானே? அவர்கள் இற்றைக்கு 5000 ஆண்டிலிருந்து 3100 ஆண்டுகள் என்று சொல்வர். நாம் குறைந்தது 3100 ஆண்டுகள் என்று  சொல்ல வேண்டாமா? க்டைசியில் சிவகளை தொல்லாய்வின் கரிமச் சோதனை  வரைக்கும் காக்க வேண்டியதாயிற்று. . 

இன்னுமா தமிழே ANcient Ancestral South Indian (AASI) மொழி என்று நாம் சொல்லாமல் இருக்கமுடியும்? 


கோமட்டேசர்

 

கருநாடகத்தில் சமண வெள்ளைக் குளத்தில் இருக்கும் கோமட்டேசரின் திருமேனியைப் பார்த்திருப்ப்பீர்கள். என்றேனும் நீங்கள் இச் சொற்களின் ஆழம் பற்றி எண்ணிப் பார்த்ததுண்டோ?

ஊர்ப்பெயரைக் கன்னடத்தில் Shravanabelagola (Kannada: ಶ್ರವಣ ಬೆಳಗೊಳ, romanized: śravaṇa beḷagoḷa, pronunciation: [ ɕɾɐ.ʋɐˈɳɐ bɛ.ɭɐ.go.ɭɐ ] ) என்றழைப்பர். This is a town located near Channarayapatna of Hassan district in the Indian state of Karnataka and is 144 km (89 mi) from Bengaluru. The Gommateshwara Bahubali statue at Shravanabelagola is one of the most important tirthas (pilgrimage destinations) in Jainism, one that reached a peak in architectural and sculptural activity under the patronage of Western Ganga dynasty of Talakad. Chandragupta Maurya is said to have died on the hill of Chandragiri, which is located in Shravanabelagola, in 298 BCE after he became a Jain monk and assumed an ascetic life style.

சமணம் என்பது சங்கதத்தில் Shramana என்றாகும். அருத்தமாகதியில் இந்த வழக்குமுண்டு. தமிழில் கடன்வாங்கி ஸ்ரமண என்பர். கன்னடத்திலும் இது உண்டு. தமிழில் ம-வும் வ-வும் போலிகள் எனவே shravana ஆவதில் வியப்பில்லை. கன்னடந்ததில் தமிழ் வ, ba ஆகும். சமண வெள்ளைக்குளம் Shravanabelagola ஆவது இப்போது விளங்குகிறதா? 

சரி இங்கிருக்கும் பென்னம் பெரிய வாகுவலியின் (bahubali) சிலை ஏன் கோமட்ட ஈசர் (Gommatteswara) என அழைக்கப் படுகிறது? தமிழில் அம்மணம் என்பதற்கு ஆடையற்றவன் என்று இன்று பொருள் கொண்டாலும், ஒரு காலத்தில் அது கருப்பர் நிலையைக் குறித்தது. (கருப்பரான நாம் நெடுங்காலம் அம்மணமாய் இருந்தோம். நம்மூர் வெதணம் (climate) அப்படி? குளிரால், மணலால் உடலெங்கும் ஆடைபோர்த்திய வெள்ளையர் (இதில் இரோப்பியரோடு ஆரியர், வட இந்திய உயர்வகுப்பார் எனப் பலரும் சேர்த்தி. இன்றும் வடவருக்கு நாம் “காலா” தான்.) ஆடைபோடாத நம் முன்னோர் நிலை கருப்பர் நிலையாய்த் தெரிந்தது. படிக்கும் உங்களுக்குச் சற்று அதிர்ச்சியாகிறதோ? அம்மணம் என்ற என் தொடரைப் படியுங்கள். 

https://valavu.blogspot.com/2006/05/1.html

https://valavu.blogspot.com/2006/05/2.html

https://valavu.blogspot.com/2006/05/3.html 

சரி ”கோமட்ட என்றாலும் அதே பொருளா?” என்று கேட்டால் ஆம் என்றே விடைசொல்ல வேண்டும். சற்று ஆழ முயல்வோம்.  

முதலில் கும்பட்ட> கும்மட்ட> கொம்மட்ட> கோம்மட்ட என்ற திரிவைக் கணக்கில் கொள்க. அணம், அட்டம், அடை என உடம்பை அடுத்தணியும் ஆடை குறிக்கும் சொற்களையும் நினைவு கொள்க. 

கும்பு + அணம் = கும்பணம்; கும்பு + அட்டம் = கும்பட்டம். 

இனிக் கும்பு-தல் சொல்லிற்கும் தொடர்புள்ள சொற்களுக்கும் வருவோம். 

கும்பு-தல் = எரித்தல், தீய்ந்து போதல். கரிந்து போதல். 

கும்பி பாகம் = சூடான எண்ணையில் முக்கிவைத்து உடம்பைக் கருகவைத்தல் (சங்கரின் அன்னியன் திரைப்படம் நினைவிற்கு வருகிறதா?)

கும்பு இடுசட்டி = கணப்புச் சட்டி

கும்பிகம் = கருநிற நீலோற்பழம்.

கும்பி எருசாணி = எரிக்கப்பட்ட உமியின் சாம்பல்

கும்பி = தீ, எரியும் வயிறு, யானை, கரும் நரகம், சுடு சாம்பல்.

கும்பு + அணம் = கும்பணம் = கரிநிறம் பூண்டவன், எனவே ஆடை அற்றவன். 

கும்பு+அட்டம் = கும்பட்டம் = கரி நிறம் பூண்டவன், எனவே ஆடை அற்றவன்

எப்படி இவ்வளவு உறுதியாய் நான் சொல்கிறேன் என்கிறீர்களோ? சமயம்-5 (https://valavu.blogspot.com/2006/03/5.html) என்ற என் வலைப்பதிவைப் படியுங்கள். ஓகிகளை gymnosophists- என்று  கிரேக்க மொழியில் சொல்வார். இப்படி ஒரு சொல்லை Plutarch சொல்லியுள்ளார். [The term gymnosophist was used by Plutarch (c. 46–120 CE) in the 1st century CEhttps://en.wikipedia.org/wiki/Gymnosophists]. அதற்கு "one of the ancient Hindu  philosophic sect going naked and given to contemplation, mystic and ascetic" என்று பொருள் கொள்வார். 

கிரேக்க மொழியில் gumnos- என்றால் 'அம்மணம்' என்றாகும். ஒரு காலத்தில் இரோப்பா எங்கணும் பள்ளிகள் 4 முறைகளில் செயல்பட்டன. முதல் வகை gymnasium எனும் முறை, இரண்டாம் வகை atheneum எனும் முறை, மூன்றாம் வகை lyceum எனும் முறை, நாலாம் வகை technical எனும் முறை. இவற்றை நான் இங்கு விவரிக்கவில்லை. பள்ளிக்கூடம் என்பது அம்மணர்/சம்மணர் சொல்லீக் கொடுத்த முறை என்று நம் உரையாசிரியர் சொல்வாரே? அடை மட்டும் நினைவ்வூட்டுகிறேன். gymnasium என்பது gymnosophists சொல்லிக் கொடுக்கும் இடம். நெதர்லந்தில் 4 ஆண்டுகள் நான் வாழ்ந்த போது, எனக்கு gymnosophists நினைவிற்கு வந்தார். தமிழின்றிப் பலவும் உலகில் விளங்கா. இது உண்மை

கும்பு+ அட்ட + ஈசர்> கும்பட்டீசர்> கொம்ப்பட்டீசர்> கொம்மட்டீசர்> கோமட்டீசர்.



Wednesday, December 13, 2023

LGBTQ

 காதல் - The Core என்ற படத்தை மலையாள நடிகர் மம்முட்டி, மிக மிக நாகரிகமாய்ச் சிறப்பாய்ச் செய்துள்ளார் என்று  சற்று முன் குமுதத்தில் படித்தேன். உடனே LGBTQ இற்கான தமிழ்ச் சொல்லாக்கத் தேவையை  உணர்ந்தேன்.இன்னும் படம் பார்க்கவில்லை. என் சொற்களின் பரிந்துரை:

Lesbian= அல்லியர்; Gay= உகையர்; Bisexual= ஈர்விழையர்; transgender= பாலிழையர்.Queer = விந்தையர்

LGBTQ = அல் உகை ஈரைப் பாலிழை விந்தையர்.

பொதுவாய்ப் பலரும் நீள நீள விளக்கந் தரும் கலைச்சொற்களை இவற்றிற்கு இணையாய்த் தருவார், படித்துப் பலரும் நகர்ந்துவிடுவார், LGBTQ என்பது ஒரு Taboo subject. அதைப் பேசாது நகர்வதே சிக்கிக் கொள்ளாத போக்கு. நான் சொல்லுங் கொடுத்துச் சுருக்கவும் கொடுத்ததால், பலருக்கும் நெருடல் வந்தது போலும். விளக்கம் கேட்டார். என் விடை கீழே.  

அல் எனும் வேரில் இருந்து அன், அள் எனும் பாலிறுகள் தமிழில் கிளைத்தன். அல்> அள்> ஆள்> ஆள்தல் எனும் ஆட்சிவினை அல்லில்  தொடங்கியது. ஆள்தல் வினைச்சொல் ஆண் எனும் பெயரை ஈந்தது. உத்துதல் என்பது உடன் எனும் பொருளைத் தரும். ஒர் + உத்து = ஒருத்து. ஒருத்தன், ஒருத்தி என்ற சொற்கள் ஒருத்தில் பிறந்தவை. அள்-தல்> அள்ளு-தல்> அட்டு-தல்> அத்து-தல் வளர்ச்சியில் சேர்க்கை எனும் சாரியைப் பொருளும் உடன் பொருளை உணர்த்தும். அத்தி என்ற சொல்லும் பெண்ணை உணர்த்தும் ஈறாகும்.

ஆணாதிக்கக் குமுகாயத்தில் பேணப்படுபவளைப் பெண் என்றார். இச்சொல் வேண்டாமெனில், அத்தியும் வேண்டாமெனில், வேறு சொல்லிற்கு, இ எனும் பெண்பால் விகுதியை அல்லோடு சேர்க்கலாம். அல்லி என்பது பெண்ணை இப்படிக்  குறித்தது. நாட்டுப்புற வழக்கு எப்போதுமே அல்லியை உயர்த்திப் பிடிக்கும். ஆரவல்லி, சூரவல்லி, அலங்காரவல்லி என்ற நம்மூர் நாட்டுப்புறக் கற்பனையோடு அல்லி அரசாணியையும் தூக்கிப் பிடிப்பர். அரையன்> அரயன்> அரசன், அரயாண்>அரசாண் என்பன ஆணைக் குறித்தால், அரயாணி>அரசாணி என்பவள் பெண்ணரசி ஆவாள். 

அல்லியைப் பாண்டிய அரசி என்பார். அர்ச்சுனனோடு சேர்த்துக் கதை கட்டுவார். அல்லியைச் சுற்றிப் பெண்குழாம் இருந்ததாம். முற்றிலும் மகளிர் கொண்டாட்டமாம்.  ஆட்சி நடந்ததை அப்படி விவரிப்பார். தறி கெட்டுக் கற்பனை விரியும், இந் நாட்டுப்புறக் கதையை பாண்டேயாய்ப் பெயரிட்டுக் கிரேக்கத்தின் வழி உலகெங்கும் மெகசுத்தெனிசு தெரிய வைத்தார். தனியான பெண்ணுலகக் கற்பனை உலகில் பரவியது.  

lesbian என்ற சொல்லிற்கு ஆங்கிலச் சொற்பிறப்பியலில் அடுத்து வருவது போல் சொல்வார். 1590s, "pertaining to the island of Lesbos," from Latin Lesbius, from Greek lesbios "of Lesbos," Greek island in northeastern Aegean Sea (the name originally may have meant "wooded"), home of Sappho, great lyric poet whose erotic and romantic verse embraced women as well as men, hence meaning "relating to homosexual relations between women, characterized by erotic interest in other women" (in continuous use from 1890; the noun lesbianism from this sense is attested from 1870) and the noun, which is first recorded 1925.

லெ பியசு (Les bios) என்பதற்கு அல்லி (பெண்) வாழிடம் என்று தான் பொருள். நான் அல்லியர் என்றது அப்படித்தான். கிரேக்கரை நம்புங்கள். எங்கள் நாட்டுப்ப்புறத்தை நம்பவேண்டாம். நாங்கள் தூசி. கிரேக்கர் ஒசத்தி.

விழைதல் = விரும்புதல். இரண்டும் ஒரே வேரில் கிளைத்தவை. இக்காலப் பிள்ளைகளுக்கு விழைதல் ஏன் புரியவில்லை?- என்று எனக்குத் தெரியாது. ”தமிழைப் படியுங்கள். அகராதி புரட்டுங்கள். தமிழை ஒதுக்காதீர்” என்று மட்டும் சொல்ல விழைகிறேன். ”எங்கும் முயலமாட்டேன். ஆனால் சுளையாய் யாராவது முகநூலில் எடுத்துத் தரவேண்டும்” எனச் சிலர் எதிர்பார்ப்பது ஒரு சோம்பேறித்தனம்.   .

ஆண்விழையர் அவ்வளவு எளிதில் தம் தனிவிழைவைச் சொல்லமாட்டார். உவகையோடு இருப்பதாய்த் தான் சொல்வார். உக-த்தல், உவ-த்தல்  என்பவை மகிழ்ச்சியையும் உவத்தலையும் (விரும்புதலையும்) குறிக்கும். உவகை, உகை என்பன gayயைக் குறிப்பது அப்படித்தான். அவருக்கு மகிழ்ச்சி.

ஈர்விழையர் Bisexual. ஈருக்கு விளக்கம் வேண்டாம்.

இழைதல் = கலத்தல், மயங்குதல். பாலிழையர் = ஆண், பெண் என இருபால் உணர்வுகளும் இழையும் மாந்தர். நான் திருநங்கை, திருநம்பி போன்ற சொற்களைச் சற்றுத் தயக்கத்தோடு கையாளுவேன். அவை பற்றிக்காலச் சிந்தனையில் எழுந்த சொற்கள். ஏன் ஆன்மீகப் போர்வை போர்த்த வேண்டும் என்று புரியவில்லை Let us be honest. 

Queer = strange = விந்தை 

Sunday, October 22, 2023

Variation of Etymological approach In Tamilic vis-a-vis Indo-european

இந்தையிரோப்பியச் சொற்பிறப்பியலில் உள்ள அடிப்படைச் சிக்கலைக் காண்போம். இங்கு ஆங்கிலச் சொல் ஒன்றை வைத்து இச்சிக்கலைச் சொல்கிறேன். மற்ற மொழிச் சொற்களை வைத்தும் சொல்லலாம். ஒன்று என்பதை உணர்த்தும் one என்ற ஆங்கிலச் சொல்லைப் பார்ப்போம். ஒன்று என்பது பருப்பொருளைக் குறிக்கும் சொல்  அல்ல. அது எண்ணிக்கையை உணர்த்தும் கருத்துமுதல் சொல். நல்லது கெட்டது போன்ற சொற்களும் பருப்பொருள் சொற்கள் அல்ல. அவையும் கருத்துமுதல் சொற்களே. 

பலமுறை நான் எடுத்துரைக்கும் ஓர் அடிப்படைக் கருதுகோளை (basic hypothesis) மீண்டும் சொல்ல விழைகிறேன். [இதை நான் அறிந்தது. காரைக்குடி செல்விப் பதிப்பகம் வாயிலாக T.பக்கிரிசாமி அவர்கள் வெளியிட்ட "சிந்தனை வளர - பாடநூல் அமைப்பு" என்னும் அருமையான பொத்தகம். என் சிந்தனை தெளிவுற, அதுவே வழிவகுத்தது.] 

”ஆதி மனிதனிடம் பருப்பொருள், இடப்பொருட் சொற்களே இருந்தன. கருத்துச் சொற்கள், அறிவால் உணரவல்ல சொற்கள், கலைச்சொற்கள், பண்புச் சொற்கள் - இவை ஆதியில் இல்லை. அமானுஷ்யச் சொற்களும் (supernatural) சொற்களும் இல்லை” - என்று திரு. பக்கிரிசாமி அவர் நூலிற் சொல்லுவார். இதையே, சற்று மாறிய முறையில், "எந்தக் கருத்தும் முதலில் விதப்பான பயன்பாட்டில் இருந்து, பின்னரே பொதுமைக்கு வரும்" என்று நான் வரையறுப்பேன். (அதாவது specific to generic என்பதே என் புரிதல்.) 

நெய் என்ற பயன்பாட்டை, விலங்குக் கொழுப்பில் அறிந்த பழந்தமிழ் மாந்தன், பின் எள்ளைக் கடைந்து எடுத்த நெய்க்கு, எள்நெய் (=எண்ணெய்) என்றே பெயரிடடிருக்கிறான்; பின்னால், மற்ற வித்துக்களில் இருந்தும் நெய்யெடுக்க முடிந்த போது, எள்நெய் என்பது, எண்ணெய் எனும் பொதுமைச்சொல்லாய்த் திரிந்து, எள் அல்லாதவற்றில் இருந்து கிடைத்த எண்ணெய்களையும் குறித்திருக்கிறது. 

இங்கு ”ஒன்று” என்ற எண்ணிக்கைச் சொல்லும் கருத்துமுதல் சொல் தான். முதலில் வேடுவச் சேகர நிலையில் இது ஒரு பருப்பொருளை உணர்த்தியிருக்க வேண்டும். பின்னால்,  நாளாவட்டத்தில் எல்லாப் பருப்பொருள்களுக்கும் ஒரு பெயரடையாய் அமையக் கூடிய எண்ணுமையாக அது மாறும்.  பாவாணர் வழிப்பட்ட சொல்லாய்வு என்பது இப்படித் தான் நகரும். பருப்பொருள், கருத்துப்பொருள், எழுத்துத் திரிவுகள், மற்ற மொழிச்சொற்கள் இதனோடு எப்படி ஒன்றுகின்றனவோ அப்படியே நகர்ந்து சொற்பிறப்பியல் அமையும்.. ஆனால் இந்தையிரோப்பியச் சொற்பிறப்பியலோ, பருப்பொருள் தொடக்கத்தைக் கண்டு கொள்ளாது. கீழே  வருவது etymonline என்ற ஆங்கில வலைத்தளத்தில் வரும் கூற்றைப் பாருஙகள்.

one (adj., pron., n.)

"being but a single unit or individual; being a single person, thing, etc. of the class mentioned;" as a pronoun, "a single person or thing, an individual, somebody;" as a noun, "the first or lowest of the cardinal numerals; single in kind, the same; the first whole number, consisting of a single unit; unity; the symbol representing one or unity;" c. 1200, from Old English an (adjective, pronoun, noun) "one," from Proto-Germanic *ainaz (source also of Old Norse einn, Danish een, Old Frisian an, Dutch een, German ein, Gothic ains), from PIE root *oi-no- "one, unique.

மேலே உள்ளதில்  ஒன்றிற்கு இணையான வெவ்வேறு இந்தையிரொப்பிய மொழிகளில் இருக்கும்  சொற்களைக் கூறி, கிரேக்கம்,இலத்தீன்,சங்கதம் என்ற மொழிகளில் உள்ள ஏதோ ஒன்றை அடிப்படைச் சொல்லாய்க் கொண்டு அதிலிருந்து எழுததுக்களை jugglery செய்து, மாற்றிப் போட்டு, நிறைய மொழிச் சொற்களை ஒரு வரிசை முறையில் வரும்படி திரிவு விதிகளைக் கொண்டுவந்து இதுதான் தாது  என்று சொல்லிவிடுவார். (தாதிற்கும் வேரிற்கும் கூட வேறுபாடு உண்டு. ஆனால் மேலையர் அதைக் கண்டுகொள்ள மாட்டார்.) ”ஒன்று” தொடர்பான ஒவ்வொரு மொழிச் சொல்லிற்கும் எண்ணிக்கைப் பொருளுக்கு முன்னால் வேறொரு பொருள் இருந்திருக்க வேண்டுமே என்று கேட்டால் அதற்கு ம் விடை அங்கிருந்து வராது. திரிவு விதிகளின் வழியே one என்பதற்கு முயன்று PIE root *oi-no- "one என்று சொல்லிவிடுவார்.  

என் முதல் கேள்வி: oi-on- என்பது ஒன்றைக் குறிக்கும் என்றால், ”அது கருத்துமுதல் சொல்லாயிற்றே, அதன் அடியிலுளள பருப்பொருள் யாது? அதற்கான.சொல் என்ன? அந்தப் பருப்பொருளின் மூலம் எண்ணிக்கை எனும் கருத்துமுதல் பொருள் எப்படிக் கிளைத்தது? ஒன்று என்ற எண்ணிக்கைப் பொருள் எந்தக் காலததில் எழுந்திருக்க முடியும்?  ஒன்றைக் குறிக்கும் இந்தையிரோப்பியச் சொற்களில் எல்லாம் இந்தப் பருப்பொருள் உள்ளதா? எவ்வெவற்றில் பருப்பொருள் இல்லாது கருத்துப் பொருள் மட்டுமே உள்ளது? இப்படிப் பல கேள்விகள் சொற்பிறப்பியலில் எழும். இந்தக் கேள்விகளை இந்தையிரோப்பியச் சொற்பிறப்பியலில் யாரும் கேட்டதாய் நான் கண்டதே இல்லை. 

தமிழில் என் பார்வையை https://valavu.blogspot.com/2005/11/blog-post_03.html என்ற இடுகையிற் காணலாம்.  

Wednesday, October 11, 2023

Gastroesophageal reflux (acid reflux)

 அண்மையில் https://www.msn.com/en-in/health/medical/acidity-treatment-8-symptoms-of-excess-stomach-acid-and-tips-to-cure-it/ar-AA193SKo?ocid=MSNHP_W069&pc=W069&cvid=7ad7c6676b164708aabf259475a635f1&ei=22.என்றதோர் இடுகையைக் கண்டேன். கண்ட இடங்களில் கண்ட கண்ட உணவுகளை முறைதுறை இன்றி நாம் உட்கொள்வதால், செரிமானக் கோளாறுகள் உண்டாகின்றன. இக்கோளாறுகளில் ஒன்றான Gastroesophageal reflux (acid reflux) என்பது ஒரு பெருஞ்சிக்கல். இக் கோளாற்றை ஆங்கிலம் தெரியாதோருக்கும் தெரியப்படுத்த, தமிழில் சரியான கலைச்சொல் வேண்டும். ”இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய்” என்றும் ”அமிலப் பின்னோட்ட நோய் (acid reflux)” என்றும் தமிழ் விக்கிப்பீடியாவில் குறிப்பது சரியெனத் தோன்றாததால் வேறு ஒரு சொல்லாக்கத்தை இங்கு விவரிக்க முயல்கிறேன். முதலில் gastro என்ற பெயரடையைப் பார்ப்போம். 

ஏற்கனவே ”வளவு” வலைப்பதிவில் 2022 மார்ச்சு 10 இல் ”வெளிக்கிடல்” எனும் இடுகையில் குட்டக் குடலியலுக்கான (Gastro-enterology) கலைச்சொல்லைக் குறித்திருந்தேன். குழிவுப் பொருள் வழி எழுந்த, குட்ட (gastro-) எனும் பெயரடையின் விளக்கத்தை ஆங்கிலச் சொற்ப்பிறப்பியல் அகரமுதலி  gastro-: also gastero-, before vowels gastr-, scientific word-forming element meaning "stomach," from Greek gastro-, combining form of gaster (genitive gastros) "belly, paunch; womb" (see gastric). Also used in compounds in ancient Greek, as gastrobarys "heavy with child." என்று விளக்கும். 

இவ்விளக்கத்திற்கு ஏற்ப, Gastrointestinal (adj) என்பதைத் தமிழில் “குட்டக் குடலிய” எனலாம். இரைப்பை/இரையகத்தை விட ”குட்டு/குட்டம்” என்பது அறிவியல் கட்டுரைகளுக்குச் சரிவரும். பொருட் குழப்பம் தராது. பேச்சுவழக்கில்  இரைப்பை (= இரை கிடக்கும் பை) எனும் கூட்டுச்சொல்லால் stomach ஐக் குறிக்கலாம். (சிலர் இதை வயிறு என்ற நடைமுறைச் சொல்லால் குறிப்பார். உண்மையில் வயிறு தனிச்சினையல்ல. அது இரைப்பையும் பல சினைகளும் சேர்ந்த  ஒரு கட்டகத்தைக் குறிக்கும். வயிறு, இரைப்பை, இரையகம் என்பவற்றைத் தவிர்த்து, குழிவுப் பொருளில் குட்டத்தைப் பயிலலாம்.அதே பொழுது, கலைச்சொல் விளக்கத்திற்கு இரைப்பை/ இரையகம் என்ற சொற்களைப் பயிலலாம். 

இனித் தொண்டையிலிருந்து, அண்டு (anus) வரை உடலில் அமையும் உணவுக் கணலில் [உள்வது> உண்பது. உள்வு> உணவு; அது போல், கணுவது/ கணுக்குவது கணல்.)  கணல் என்பது உணவுச் செரிமானக் கட்டகங்களின் முழுத் தொகுதியைக் குறிக்கும். கணல் (canal. n.) early 15c., in anatomy, "tubular passage in the body through which fluids or solids pass;" mid-15c., "a pipe for liquid;" from French canal, chanel "water channel, tube, pipe, gutter" (12c.), from Latin canalis "water pipe, groove, channel," noun use of adjective from canna "reed". தொண்டையையும்  அண்டையையும்  பல்வேறு கட்டகங்களால், உணவுக்கணல் கணுக்கிறது.] 

உணவுக் கணலில் முதலிலுள்ள குழலை esophageal என்பார். இதற்கு Oesophageal என்ற எழுத்துக்கூட்டும் ஆங்கிலத்திலுண்டு. late 14c., from Greek oisophagos "gullet, passage for food," literally "what carries and eats," from oisein, future infinitive of pherein "to carry" (from PIE root *bher- (1) "to carry") + -phagos, from phagein "to eat" (from PIE root *bhag- "to share out, apportion; to get a share"). அடிப்படையில் நாம் சாப்பிடும் உணவை இரைப்பை நோக்கி எக்கித் தள்ளும் குழல் இதுவாகும்.Oesophage ஐ ஏகுங்குழல் எனலாம். இன்னுஞ் சுருக்கி ஏங்குழல் என்றும், கூட்டுச் சொற்களில் ஏகுதல் என்ற செலுத்தத்தைச் சொல்லாது,  வெறும் குழல் என்றாலும் தவறில்லை.

இனி reflux என்பதைப் பார்ப்போம். வேதித் திணைக்களங்களில் தென்படும் துள்ளெடுப்புத் தூணத்தில் (distillation tower), மேலெழுந்துவரும் ஆவியை நன்றாய்க் குளிரவைத்து ஒரு பகுதியை மேற்றலைப் புதுக்கு (overhead product) என எடுத்துக் கொண்டு, இன்னொரு பகுதியை மட்டும் எதிர்க்கு அளிக்காய்த் (reflux) திருப்பி அனுப்புவார். அதுபோல் இங்கும் ஆகிறது.  எதிர்க்களி> எதுக்களி = reflux. 

வாய்ந்திக்கு முன்னதான “எதுக்களி” என்பது சிவகங்கை மாவட்டத்தில் இன்றும் இருக்கும் பேச்சு வழக்குச் சொல்லாகும். இரைப்பைக்குள் சென்ற உணவையும், அமிலம்/காடி செலுத்தங்களால் உருவான செரிமானச் சாறுகளையும் சேர்த்து எதுக்களிக்க வைத்து வாய்ந்தியாய் ஆக்கும் இக் கோளாற்றைக் 

குட்டக் குழல் எதுக்களி ( gastroesophageal reflux disease) - கு கு எ - GERD எனலாம்.



Tuesday, September 19, 2023

தமிழில் நுல்லியத்திலும் (million) பெரிய எண்கள்

 iLangoo pitchandi  என்பவர் கீழ்வரும் கட்டுரையை  அவரின் முகநூல் பக்கத்தில் இட்டிருந்தார். 

...........................................

மில்லியன், பில்லியன், டிரில்லியன் போன்ற சொற்களுக்குச் சமமான தமிழ்ச் சொற்கள்!

-------------------------------------------------------------------

1995ஆம் ஆண்டிலேயே மேற்கூறிய ஆங்கில எண்ணுப் பெயர்களுக்கு உரிய தமிழ்ச் சொற்களை உருவாக்கினேன். எட்டு  ஆண்டுகளுக்கு முன்பு நான் உருவாக்கிய தமிழ் சொற்களை இணையத்தில் கூகுளில் ஒரு நண்பர் சேர்த்திருந்தார்.

மில்லியன் = எண்ணம் 

பில்லியன் = இரட்டம் 

டிரில்லியன் = மூவ்கம் 

குவாட்ரில்லியன் = நாவகம் 

குவின்டில்லியன் = ஐவகம்

செக்ஸ்டிலியன் =  அறுவகம் 

செப்டில்லியன் = எழுவகம்

ஆக்டிலியன் = எண்மகம்

நானில்லியன் = தொட்டகம் 

டெசில்லியன் = பத்தகம்.

undecillion = பதினொன்றகம் 

duodecillion = பன்னிருவகம் 

இப்படியே தொடரும். தமிழ்த்தொண்டு என்றால் இதுதான்! தமிழ் தமிழ் என்று போலியாகக் கூச்சலிட்டுக் கொண்டு இருக்கும் குட்டி முதலாளித்துவக் கபோதிகள் இச்சொற்களை மக்களிடையே பரப்புவார்களா? ஒருநாளும் செய்ய மாட்டார்கள்!பெ மணியரசன் உயிரோடு இருக்கிறாரா?இருந்து என்ன பயன் என்கிறீர்களா?தமிழ் தேசியம் பேசும் தற்குறி சீமானுக்கு இதெல்லாம் ஏதாவது புரியுமா? செக்ஸ்டிலியன் என்பதற்கு அறுவகம் என்று தமிழாக்கி இருக்கிறேன். செக்ஸ்டிலியன் என்றால் சீமானின் அகராதியில் என்ன பொருள்?

தமிழை நான் வாழ வைத்துக் கொண்டிருக்கிறேன் என்று என்னால் தலைநிமிர்ந்து சொல்ல முடியும்.எத்தனை பேரால் இப்படிச் சொல்ல முடியும்?

*************************************************

நண்பர் சிலர் இந்த இடது சாரியார் இடுகையை எனக்குச் சுட்டிக் காண்பித்திருந்தார். வேறு பொழுதுகள் எனில் இது போன்ற அரைகுறை இட்டியை படித்துவிட்டு நகர்ந்திருப்பேன். வசவும் சூளுரையும் பொதிந்த கட்டுரையைப் பார்த்தவுடன், ”விடைதராது நகரக்கூடாது” என்று தோன்றியது. என் விடையை ”வளவில்” இட்டு, சுட்டியை என் முகநூல் பக்கத்தில் தனி இடுகையிலும், அவர் பக்கத்தில் முன்னிகையாகவும் கொடுத்துள்ளேன். 

_____________________________________

நண்பரே! யாரோடு கத்திச் சண்டை போடுகிறீர்? - என எனக்குப் புரியவில்லை. நான் உம் எதிரி அல்ல. குட்டி முதலாளித்துவக் கபோதி  எனும் வசவைப் (கண்போகி> கண் போதி> குருட்டுப்பயல்) பார்த்தபின் சும்மா இருக்கத் தோன்றவில்லை. முதலில் திருக்குறளில் வருவதை நினைவு கொள்க. 

யாகாவார் ஆயினும் நா காக்க. காவாக்கால் 

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.  

ஒரு மார்க்சீயருக்கு இவ்வளவு ஆற்றாமையா? தமிழ்த் தேசியரான திரு. மணியரசனையும், திரு. சீமானையும் பற்றி நாலாந்தர மொழியில் அவதூறு பேசும் தேவை உமக்கிருப்பின் அதை வேறு இடுகையில் செய்துகொள்க. ஒரே இடுகையில் என்னையும் அவரோடு இணைத்துப் பேச முயல்வது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. நான் உமக்கு முள்ளாய் இருந்துள்ளேன் போலும். சில நண்பர்கள் உம் இடுகையில் என் பெயரைக் கனிவாய்க் கூறி என்னை உசுப்பிய காரணத்தால் உந்தப்பட்டு, இங்கு வந்தேன்.

1995 இலேயே ஒரு சில எண்ணுப் பெயர்களுக்கான தமிழ்ச் சொற்களை நீர் பரிந்துரைத்து இருந்தால் அதற்கு என் பாராட்டு. அதேபொழுது, எந்தக் காலத்தில் என் பரிந்துரைகளைச் செய்தேன் என உரைத்து உம்மோடு குழாயடிச் சண்டை போடவேண்டிய தேவை எனக்கில்லை. நீரோ அல்லது நானோ தமிழைத் தாங்கிப் பிடித்துக் காப்பாற்றிக் கொள்வது போல் வேயம் (வேசம்) கட்டவும் வேண்டாம். 

இதுவரை நான் பரிந்துரைத்த ஆயிரக்கணக்கான சொற்களை மட்டுமே  எல்லோரும் பயில வேண்டுமென நான் எங்கும் சொன்னதில்லை. சொல்லவும் மாட்டேன். எது நிலைக்குமோ அது நிலைக்கட்டும். எது அழியுமோ அது அழியட்டும். தமிழுக்கென்று உருவான கொம்பு முளைத்த மொழி ஆணத்தி (authority or commissar) நானல்லன். சட்டாம்பிள்ளைகளுக்கும் எனக்கும் என்றும் ஒத்துக் கொள்ளாது. எப்போதுமே ஏழரை நாட்டுப் பொருத்தம் தான். உம் பதிவின் மூலம் ஒரு சட்டம்பிள்ளையாய் உம்மைக் காட்டிக் கொள்ள முயல்வதால் உம்மை நான் மறுக்க வேண்டியுள்ளது. இனி உம் முன்னிகைக்கு வருவோம்.  

நீர் பரிந்துரைத்த எண்களை வைத்து ஒரு சில வாக்கியங்களை எழுதிப் பார்க்கலாமா? பொருத்தம், பொருந்தாமை அதில் தெரிந்துவிடும்.முதலில் மில்லியனுக்கு நீர் பரிந்துரைத்ததை வைத்து ஒரு தொடர் எழுதிப் பார்ப்போம்.. 

--------------------------

“இவ்விரண்டு எண்களையும் கூட்டினால்  4 எண்ணம் (million) வருமோ?” என்ற எண்ணம் (thought) எனக்கு எழுந்தது. 

--------------------------

வெவ்வேறு பொருள்கள் கொண்ட ஒரே சொல் இருமுறை ஒரு வாக்கியத்தில் வந்தால் குளறுபடி ஆகாதோ? உம் பரிந்துரையின் பொருந்தாமை புரிகிறதா?  பிறைக் கோட்டினுள் வரும் ஆங்கிலச் சொல் இல்லாவிடில் இவ் வாக்கியம் படிப்போருக்குப் புரிபடுமோ?  

அடுத்தது பில்லியன் பற்றிய கேள்வி:

--------------------------

”இரட்டம்” என்ற சொல் எதைக் குறிக்கிறது ? இரு மில்லியனா? அல்லது  இராட்டிரகூடரின் பெருநிலப் பகுதியா? > அல்லது  ”இரட்டியது” என்று பொருள்படும் இரட்டைக் கிளவியா? 

--------------------------

தமிழில் ”ஒரே மாதிரி முன்பகுதி இருந்து ஈறு மட்டும் மாறுபடும் சொற்கள்” பலவுண்டு. அம் எனும் ஈறு பெற்ற சொற்களுக்கும் ஐ எனும் ஈறு பெற்ற சொற்களுக்கும் பெரும்பாலும் ஒரே பொருள் அமையலாம். இரட்டம் என்ற சொல்லின் பொருந்தாமை இப்போது உமக்குப் புரிபடுகிறதா? இனி மூன்றாவதாய் டிரில்லியன் என்பதைப் பார்ப்போமா? 

--------------------------

இதை மூவகம் என்று சொன்னால் 3 வீடுகளா? 3 தேசமா? அகம் என்றால் மில்லியமா? இல்லியமா. இல்லியம் எனில் ”ஒன்றும் இல்லாதது” என்று பொருளாகுமே? அகம் என்ற சொல்லிற்கு மில்லியன் என்னும் பொருள் உண்டா? எந்த ஆவணத்தில் வருகிறது?

--------------------------

நாலாவது குவாட்ரில்லியன். 

--------------------------

உம் பரிந்துரையான நாவகத்தில், நாவு என்றால் நாலா? எங்கு இப்படித் தமிழ் சொல்லிக் கொடுக்கிறார்? நால்வு என்றால் நாலு, நான்கு, நான்மம் எனும் சொற்களோடு ஒரு தொகுதியாய் ஒத்துவரும். அது என்ன நாவு? வாயில் தொங்கும் சதையா? நாவு என்றால் 4 என்று 70 ஆண்டுகளுக்கு முன் 1953 இல் என் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் யாரும் சொல்லிக் கொடுத்ததில்லை. அகம் என்ற சொல்லிற்கு எண்ணிக்கைப் பொருள் இருப்பதாய் எந்தத் தமிழ்நூலில் தேடினும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை, 

அப்புறம் எப்படி ஐவகம், அறுவகம், எழுவகம், எண்மகம், தொட்டகம், பத்தகம்,பதினொன்றகம், பன்னிருவகம் - என்று தொடர்வது? உங்களின் முதல் 4 சொற்கள் இடுகுறியாய்த் தென்படுகின்றன.

இந்த எண்களை தமிழாக்குவதற்கு முன்னால், இரோப்பிய, அமெரிக்க, இங்கிலாந்தியப் பயன்பாட்டின் அடிப்படைகளைச் சற்று அறிந்து கொள்க.  பில்லியன் என்பது தொடக்கப் பயன்பாட்டின் படி இங்கிலாந்தில் 10^6*10^6 என்றும், அமெரிக்காவிலும் இரோப்பாவிலும் 10^3*10^6 = 10^9 என்றும் பொருள். இப்போது பலரும் அமெரிக்க முறைக்கு மாறி வந்துகொண்டுள்ளார். இங்கிலாந்திலும் கூட இப்போது மாறுகிறது. கீழே வருவதை  (https://en.wikipedia.org/wiki/Billion) விக்கிப் பீடியாவிலிருந்து எடுத்து, ஓரிரு பத்திகளை மட்டும் வெட்டியொட்டியுளேன். முழுதும் படிக்கவேண்டின் விக்கிப்பீடியாவின் அப் பக்கத்தை அணுகுங்கள்.  

Billion is a word for a large number, and it has two distinct definitions:

1,000,000,000, i.e. one thousand million, or 109 (ten to the ninth power), as defined on the short scale. This is its only current meaning in English.

1,000,000,000,000, i.e. one million million, or 1012 (ten to the twelfth power), as defined on the long scale. This number, which is one thousand times larger than the short scale billion, is now referred to in English as one trillion. However, this number is the historical meaning in English for the word "billion" (with the exception of the United States), a meaning which was still in official use in British English until some time after World War II.

American English adopted the short scale definition from the French (it enjoyed usage in France at the time, alongside the long-scale definition).The United Kingdom used the long scale billion until 1974, when the government officially switched to the short scale, but since the 1950s the short scale had already been increasingly used in technical writing and journalism. 

இனித் தமிழுக்கு வருவோம். mill என்பதற்கு அயிர/ஆயிர என்பது போக நுல்லு என்றும் தமிழில் சொல்லலாம். நுல்லில் பிறந்த சொற்கள் பலவுண்டு. நுல் என்பது நுணுகு, நூகு எனப் பல சொற்களுக்கும் வேராக அமையும். மகர நகரப் போலி பற்றி முன்னால் என் கட்டுரைகளில் சொல்லியிருக்கிறேன்.10^3*10^3 என்பதில் முதலில் வரும் 10^3 ஐ mill என்றும் பின்னால் வரும் 10^3 ஐ ion என்றும் கொண்டு அமெரிக்க முறையில் million என்பார். million எனும் எண் தொகுதியை நுல்லியம் என்றே தமிழில் சொல்லலாம். 

இனி (10^3*10^3)*10^3 ஐயை bill-ion என்றார். 10^9 ஐத் தான் இருமநுல் என்கிறோம். (ஏற்கனவே நெய்தல் (10^5), இலக்கம் (10^5), குவளை(10^7), கோடி (10^7), ஆம்பல் (10^9), சங்கம் (10^12), தாமரை (10^13), வெள்ளம் (10^14) என்ற எண்கள் சங்க நூல்களில் உண்டு). இரும நுல்லியம் என்பதைப் பழகப் பழகப் பெயரடை பயில்வதைத் தவிர்க்கலாம் தான். அந் நிலையில் இருமநுல்லியத்தை ஈர்- இல்லியம் எனலாம். அது போல் (10^3*10^3*10^3)*10^3 என்பதை trill-ion என்று படிப்படியாய்ச் சொல்லிப் போகலாம். அதாவது பழகப் பழக மூ-இல்லியம் மூவில்லியம் ஆகலாம். 

மொத்தத்தில், நுல்லியத்தின் மடங்குகளைக் குறிக்க, இரும நுல்லியம் (billion) அல்லது ஈரில்லியம், மும்ம நுல்லியம் (trillion) அல்லது மூவில்லியம். நால்ம நுல்லியம் (quadrillion) அல்லது நாலில்லியம், ஐம நுல்லியம் (quintillion) அல்லது ஐயில்லியம், அறும நுல்லியம் (sechstiliion) அல்லது ஆறில்லியம், எழும நுல்லியம் (septillion) அல்லது ஏழில்லியம், எண்ம நுல்லியம் (octillion) எண்ணில்லியம், தொண்ம நுல்லியம் (nanillion) அல்லது தொள்ளில்லியம் என்றே பழகலாம். பன்மடங்கு நுல்லியத்தை (zillion) பன்ம நுல்லியம் என்றே சொல்லலாம்.


Saturday, September 09, 2023

excavators and bulldozers,

 Poclain and JCB are brand names of excavator manufacturers. In India, these brand names have become synonymous with excavators, similar to how people in some countries refer to all photocopying machines as Xerox machines. 

தமிழிலும் அதே தவற்றைச் செய்யவேண்டுமா? பொரிம்புகளுக்கு (brands) பெயரிடுவதைத் தவிருங்கள். சரியாகச் சொன்னால், excavator -உக்குத் தான் தமிழ்ச்சொல் வேண்டும். ”கவ்வெடுப்பி” என்று சொல்வது இதைச் சரியாகக் காட்டும். 

அடுத்தது bulldozer இதை crawler என்றும் சொல்வர். A bulldozer or dozer (also called a crawler) is a large, motorized machine equipped with a metal blade to the front for pushing material: soil, sand, snow, rubble, or rock during construction work. It travels most commonly on continuous tracks, though specialized models riding on large off-road tires. 

bull (n.1) "male of a bovine animal," c. 1200, bule, from Old Norse boli "bull, male of the domestic bovine," perhaps also from an Old English *bula, both from Proto-Germanic *bullon- (source also of Middle Dutch bulle, Dutch bul, German Bulle), perhaps from a Germanic verbal stem meaning "to roar," which survives in some German dialects and perhaps in the first element of boulder (q.v.). The other possibility [Watkins] is that the Germanic word is from PIE root *bhel- (2) "to blow, swell." 

bull என்பதை பாறல், புல்லம், பாண்டில், மூரி, ஏறு, பூணி, இறால், பெற்றம், எருது, சே, விடை, இடபம் போன்றவை தமிழில் ஆண் மாட்டைக் குறிக்கப் பயனுறும்  என்று திவாகர நிகண்டு சொல்லும். நாம் புல்லு, புல்லம் என்ற சொற்களை bull-இற்கு ஈடாய்ப் பயன்படுத்தலாம். 

doze = தாட்டு-தல் = அடித்து வீழ்த்தல். ”தாட்டி விடுவான், தாட்டி” இன்றும் வழக்கில் இருக்கும் சொற்றொடரே.  

எனவே bulldoze (v.) புல்லத் தாட்tடு; bulldozer = புல்லத்தாட்டி 

by 1880, "intimidate by violence," from an earlier noun, bulldose "a severe beating or lashing" (1876), said by contemporary sources to be literally "a dose fit for a bull," a slang word referring to the intimidation beating of black voters (by either blacks or whites) in the chaotic 1876 presidential election. See bull (n.1) + dose (n.). The bull element in it seems to be connected to that in bull-whip and might be directly from that word. The meaning "use a mechanical ground-clearing caterpillar tractor" is from 1942 (see bulldozer); figurative use in this sense is by 1948. 



Wednesday, August 30, 2023

Metro

அண்மையில் metro விற்கு  ஈடாய்த் தமிழில் என்ன சொல்லலாம்? - என்ற கேள்வி இணையத்தில் எழுந்தது. metro என்பது metropolis ஐயும், metropolitan ஐயும் சுருக்கிச் சொல்வதாகும். A metropolis is a large city or conurbation which is a significant economic, political, and cultural area for a country or region, and an important hub for regional or international connections, commerce, and communications. தமிழில் metropolis ஐப் பெருநகர் எனலாம். (மாநகர் என்பது corporation. அதனிலும் பெரியது பெருநகர். தமிழ்நாட்டில் பல்வேறு மாநகரங்களின் நடுவில் பெருஞ்சென்னை மட்டுமே பெருநகராகும்.  

பிரித்தனின் தலைநகரான இலண்டன், பெருநகரான போது Euston பகுதியில் இருந்த பேடிங்க்டன் (Paddington) இருவுள் தட முனையத்தையும் (Railway terminal), அரச குறுக்க (King's cross) இருவுள் தட முனையத்தையும் இணைப்பதற்கு, துரவு மிகுந்த நகர வீதிகளின் அடியில் சுருங்கை வழியில் ஒரு  நிலவடித் தடத்தை ஏற்படுத்தினார். இத் தடத்தை ஏற்படுத்திய குழுமத்தைப் ”பெருநகர் இருவுளி (metropolitan railway) நிறுவனம்” என்று அழைத்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் பல சுருங்கைத் தடங்களை இலண்டன் நிலவடி மின் இருவுள் குழுமத்தால் (Underground Electric Railways Company of London) ஏற்படுத்தினார். பின் இருவேறு குழுமங்களும் இணைக்கப்பட்டு ”இலண்டன் பெருநகர் இருவுளி நிறுவனம்” என்று பெயர்கொண்டது. 

இது போல், சென்னை நகரம் வளர வளர, பொதுநிலங்களில், தென்னக இருவுள் (Southern Railway) துறை, தொடரி வழித்தடங்களைக் கூட்டி, 1931 இல் மின்தொடரி வலையைத் தொடங்கியது. இதுதான் இடப்பெயர்ப்பின் முதல் வளர்ச்சி. 

இதன் இரண்டாம் வளர்ச்சியாய், 1995 இல் சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து வேளச்சேரி வரை (இப்போது பரங்கிமலை வரை) 19.34 கி.மீ.க்கு ஒரு மேலெழுந்த இருவுள் தடத்தை (Elevated Railway Track) ஏற்படுத்தி, அதன் வழி தொடரிகளை இயக்கினார். இந்த இரண்டாம் வளர்ச்சிக்காகச் செய்யப்பட்ட குழுமத்திற்கு திரள் விரை இடப்பெயர்ப்புக் கட்டகம் (mass rapid transit system) (இடப்பெயர்வு = transit = carrying of people, goods/materials from one place to another) என்று பெயரிட்டார். சுருக்கமாய்த் "MRTS= திவிரைப் பெயர்ப்பு” எனலாம். (சிங்கப்பூரில் metro வை MRT என்றே இன்றும் அழைக்கிறார்.   

இதன் 3ஆம் வளர்ச்சியாய், சென்னைப் பெருநகர் இருவுள் குழுமத்தின்- Chennai Metro Rail Limited (CMRL)- மூலம் (மேழுந்தாற் போலும், சுருங்கையிலும் ஓடும் படி) தடங்கள் அமைத்து தொடரிகளை இயக்கினார். இதுவரை நீலம், பச்சை என 2 தடங்கள் உள்ளன. இன்னும் 3 தடங்களுக்கான கட்டுமான வேலை இப்போது நடக்கிறது. முன் அமைந்த MRTS ஐயும், இப்போதைய CMRL ஐயும் ஒன்றுசேர்த்து CMRL என்றே அழைக்கவுள்ளார். எனவே ”சென்னைப் பெருநகர் இருவுள் குழுமம்” என்ற பெயர் நிலைக்கும். சுருக்கமாய்ப் பெருநகர் இருவுளி என்றோ, திவிரை இருவுளி என்றோ அழைக்கலாம்.   


Wednesday, August 23, 2023

மறதியும் மொழியழிவும்

 பொதுவாக மாந்தருக்கு மறதி என்பது ஏற்பட்டுக் கொண்டு தான் இருக்கும். நம்முடைய சொற் குவையை நாமே புழங்காது வைத்திருந்தால், நாளாவட்டத்தில் நாம் ஒருசிலவற்றை மறந்து தான் போவோம். (இதனால் தான் சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம் என்று சொன்னார்கள்.)

நமக்குத் தெரிந்த தமிழ்ச்சொற்கள் 1000 என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் 2 விழுக்காடு அளவை நாம் மறந்தாலும், ஏழு தலைமுறைக்கு (175 ஆண்டுகளில்) அதே மேனியில் தொடர்ந்தால், அப்புறம் இன்று இருப்பதில் கிட்டத்தட்ட 15% தமிழ்ச் சொற்கள் பயன்படாது ஒழிந்தே போகும். அப்புறம் அந்தச் சொற்களுக்கு ஈடாய் இன்னொரு மொழிச் சொற்களை அன்றையத் தமிழர் கொஞ்சங் கொஞ்சமாய்ப் பயன்படுத்தத் தொடங்குவார்; முடிவில் மொழி என்பது மாறிப் போகும். இப்படித்தான் தமிழியக் கிளைமொழிகள் எல்லாம் ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகளில் கொடுந்தமிழில் இருந்து மற்ற மொழிகளாய்க் கிளைத்தன. முடிவில், மகதம் வரை விரிந்திருந்த தென்மொழி, இன்று மாலவன் குன்றத்திற்கும் கீழே குறுகிப் போனது.
நம் மொழியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், நம் முன்னோர் நம்மிடம் ஒப்படைத்ததை, 2000-3000 ஆண்டுகள் காப்பாற்றி வந்ததை, நாம் தொலைப்பது அவ்வளவு சரியாகத் தென்படவில்லை. நம் பெற்றோரின் கண்ணுக்கெதிரே தோட்டத் தொழிலாளராய்ப் போன தமிழர்கள் (அது போலத் தெலுங்கர்) போன இடத்தில், ஓரளவு மக்கள் தொகை இருந்தும், தம் அறியாமைப் போக்கால், தம் மொழியைக் காப்பாற்றாது போனார். விளைவு? தமிழும், தெலுங்கும் அந்த இடங்களில் தொலைந்து போயின. முத்தம்மா, முட்டம்மா ஆகி, தண்டபாணி தெண்டாபணி ஆகி, காளிச்சரண் கல்லிச்சரன் ஆகி, சரவணன் சர்வன் ஆகி மொத்தத்தில் தமிழ் அடையாளமே தொலைந்தது. மறவாதீர்! தமிழனுக்குத் தமிழே முகவரி.
உங்களுக்குத் தெரியுமா? ஓலாவ் மொழியைத் தொலைத்த அமெரிக்கக் கருப்பர் (ஓலாவ் மொழி மேற்கு ஆப்பிரிக்க மொழி. ஓலாவ் பேசும் பலர் கருப்பு அடிமையாக அமெரிக்க ஒன்றிய நாடுகளுக்கு அழைத்துச் செல்லப் பட்டார்.) பெருமிதத்தையும் சேர்த்துத் தான் 400 ஆண்டுகளில் அவர் தொலைத்தார். இன்றைக்கும் அவர் முகத்தில் பெருமிதத்தைத் தேட வேண்டியிருக்கிறது. மாறாக, மொழியைக் காப்பாற்றியதால், சுரினாம், ஜமைக்கா, மொரிசியசு, பிஜி போன்ற இடங்களில் பத்தொன்பதாம் நூற்றாண்டு இந்தி இன்றைக்கும் நிலைத்து நிற்கிறது; இந்த இந்திக்காரர் அரசியல், பொருளியல், கல்வி இன்ன பிற துறைகளில் அந்த இடங்களில் முன்னணியில் தான் இருக்கிறார். அவர் முகத்தில் பெருமிதம் இன்றும் இருப்பதைக் கூர்ந்து பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.
தமிழ் நடை, தமிழ்நாட்டிலேயே ஒருமுறை சீரழிந்து மணிப்பவளம் பெருகி, இப்பொழுது மீண்டும் இருபதாம் நூற்றாண்டில் ஓரளவு உயிர்பெற்று வந்திருக்கிறோம். மீண்டும் ஒரு முறை அது அழிய வேண்டாம். நம் வீட்டை நாம் காப்பாற்றாமல், இன்னொருவரா காப்பாற்றுவார்? வரலாறு அறியாதவர் பேச்சைப் பொருட்படுத்த வேண்டாம்.


மேகம்

In meteorology, a cloud is an aerosol consisting of a visible mass of miniature liquid droplets, frozen crystals, or other particles suspended in the atmosphere of a planetary body or similar space. பல்வேறு வகை நீர்மத் துளிகளும், உறைந்துபோன மீச்சிறு கட்டிகளும், அலைபடும் தூசுகளும் நிறைந்து, ஊதும அழுத்தத்திற்குச் (atmospheric pressure) சற்று மேல் அழுத்தம் கொண்டு, கூவளைப் (convex) பேறு கொண்ட கோளப் பொதியைத் தான் aerolsol என்பார். இதைத் தமிழில் காற்றுக் கரைவு என்று சொல்லலாம்.  

இக் காற்றுக் கரைவுகள்  புவிப் பரப்பிற்குச் சற்றுமேல் இருக்கும். நாம் வானைப் பார்க்கையில் ஊதுமக் கோளத்தில் காற்றுக் கரைவுகள் நகர்ந்து கொண்டே இருப்பதைக் காணலாம். இவற்றல் நீர் மட்டுமின்றி. மற்ற நீர்மங்களும் இருக்கலாம். கடலின் மேல் இக் கரைவுகள் வரும் போது கடலிலிருந்து வெளிவரும் நீராவி இக் கரைவுளுக்குள் புகுந்து, அவற்றின் நீர்ச்செறிவை கூட்டும். நிலத்தின் மேல் வரும்போது ஏதோவொரு வெதணத்தில் (climate) கரைவுகளில் இருந்து நீர் வெளிவரலாம். இப்படி நீர் வெளிவருவதைத் தான் மழை என்கிறோம். 

நீர்க்கரைவுகள் எப்போதும் நமக்கு மேலேயே தனித்துத் தெரிவதால் மேகம் என்ற பெயரைப் பெற்றன. ”மேகச்” சொற்பிறப்பு விளக்கத்தைச் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, 7 ஆம் மடலம், 3 ஆம் பாகம், 54 ஆம் பக்கத்தில் காணலாம். நம்மில் பாதிப்பேர் மேகத்தை megam என்று தவறாய் ஒலிப்பதால், மேகம் வடசொல் ஆகிவிடாது. உண்மையில் ஈருயிர்களுக்குள் இடையில் (intervocalical) வரும் ககரத்தை ”ha” என்று ஒலிக்க வேண்டும். 

சரி, மேகம் என்ற சொல் எப்படி எழுந்தது? 

மீ> மே> மேல் என்பது உள்ளிற்கு எதிரான கருத்தைக் குறிக்கும். ”மேல்” இன்னும் திரிந்து மேல்> மேல்வு> மேவு> மேகு  என்ற சொற்களை உருவாக்கும். (வகரமும் ககரமும் தமிழில் போலிகள்). இனி, மேகு+அம் = மேகம் என இன்னொரு சொல்லும் பிறக்கும். மேகம் அடிப்படையில் வெள்ளைத் தோற்றம் காட்டும். வெவ்வேறு அளவில் ஈரம் மேகத்தில் செறியும் போது காற்றுக்கரைவுகள் கொஞ்சங் கொஞ்சமாய் கறுத்து வரும். கருப்புப் பொருளால், மேகம் என்ற பெயர்ச்சொல் எழவில்லை. மேலே இருப்பதால், மேகம் என்ற சொல் எழுந்தது.  

இனி ஈரம் ஏற ஏற மேகம் என்பது கருமேகம் ஆகும். கருமேகத்தை முகில் என்கிறோம்.

Thursday, June 22, 2023

ஆலயம்

 ஆலயம் என்பது நல்ல தமிழ்ச் சொல். ஆல்> ஆலு> ஆலு-தல் = சுற்றுதல். ஆலை = சுற்றி இயங்குவது. சுற்றி வருவது; ஆலத்தி> ஆரத்தி;  திருவிளக்கை இறைப் படிமத்தின் முன்னோ, திருமணத்தில் மாப்பிள்ளை முன்னோ, மேலிருந்து கீழ்வரை வலம் வருவது போல் சுற்றிக் காட்டுவது. திருச்சுற்றுகளைக் (சுற்றுமதில், சுற்றாலை) கொண்ட பெருஙகோயில். temple having prahAra. இக் கோயில்களில் 2,3 சுற்றாலைகள் கூட இருக்கலாம். திருவரங்கம் போன்ற கோயில்களில் 5 சுற்றாலைகள் இருக்கலாம்.

Monier-Williams Sanskrit-English Dictionary கீழே உள்ளவாறு போட்டிருப்பர். இதில் ஆ என்பது முன்னொட்டு. லயம் என்பதற்கு √lī என்பதைத் தாதுவாகக் காட்டுவர் வால்மீகி இராமாயணத்தைத் தொடக்கமாய்க் காட்டுவர். வால்மீகி இராமாயணம் பொ.உகத்தில் தான் முழுமையானது. ஆலய என்ற சொல் வேறு எந்த இந்தையிரோப்பிய மொழியிலும் கிடையாது. வேதநெறியாளருக்கு இறையைக் குறிக்கும் எந்தப் படிமமும் கிடையாது. நடு கல் பழக்கமும் வேத நெறியாருக்குக் கிடையாது. அவருக்குச் சுடுகாடு உண்டு. இடுகாடு கிடையாது. வேத நெறி என்பது பூர்வ மீமாம்சத்தில் தொடங்கி உத்தர மீமாம்சையில் நகரும். இதற்கும் இற்றைச் சிவ, விண்ணவ நெறிகளுக்கும். அற்றுவிகம் (ஆசீவிகம்), செயினம், புத்தம் ஆகிய சமண நெறிகளுக்கும் தொடர்பு கிடையாது.  

தமிழியர் பண்பாட்டில் இடு காடும், நடு கல்லும் தொடக்கம். பின்னால் நடுகல் வழிபாடே, கோயில் வழிபாடாய் மாறி வளர்ந்தது. நம்மூரில் பல கோயில்கள் பள்ளிப்படையாய் இருந்து கிளர்ந்தவை. இந்தியா வந்ததால் வேத நெறியார் இங்குள்ள பழக்கத்தோடு கொஞ்சங் கொஞ்சமாய் ஒன்றுபட்டு மாறி, நம் ஆலயத்தை அவர் கடன் கொண்டார். மோனியர் வில்லியம்சு கொடுத்த விளக்கம் கீழே உள்ளது: ஆலயம் என்ற சொல்லை அவர் கோயிலுக்கு மட்டுமின்றி எல்லாக் கட்டிடங்களுக்கும் பயில்வார். காரியாலய என்று அலுவலகத்தைக் குறிப்பார். நாம் கோயிலுக்கு மட்டுமே குறிப்போம்.    

1) Alaya (अलय):—[=a-laya] m. (√lī), non-dissolution, permanence, [Rāmāyaṇa iii, 71, 10] ([varia lectio] an-aya)

2) [v.s. ...] mfn. restless, [Śiśupāla-vadha iv, 57.]

3) Ālaya (आलय):—[=ā-laya] a See ā-√lī.

4) [=ā-laya] [from ā-lī] b m. and n. a house, dwelling

5) [v.s. ...] a receptacle, asylum, [Rāmāyaṇa; Yājñavalkya; Kathāsaritsāgara etc.]

6) [v.s. ...] (often ifc. e.g. himālaya, ‘the abode of snow.’)

ஆனாலும் ஆலயம் போல் பல சொற்களுக்கு ஒரு சிலர் ஆதாரமே இன்றி சங்கதத்தை அடையாளம் காட்டுகிறார். 

என்று தான் சங்கத விளக்கத்தை விட்டு தமிழுக்கு நாம் வருவோம்?


Bonfire

சொல் எனும் குழுவில் 19/06/2023 அன்று, திரு. சிதம்பரநாதன் ரெங்கசாமி என்பார் ”Bonfire என்ற சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல் என்ன?. சொக்கப்பனை என்று சொல்லலாம், ஆனால் அது பெரும்பாலும், ஆன்மிகம் சார்ந்ததாக உள்ளது.” என்று கேட்டிருந்தார்.  

உடனே, திரு. ரவீந்திரன் வெங்கடாசலம், “வெயில் கொளுத்தும் தமிழ்நாட்டில் bonfire எல்லாம் கிடையாது; அதனால் சொல்லும் இல்லை. சாற்றுத்தீ எனலாம்” என்று எல்லாம் தெரிந்தாற்போல் முன்னிகை கொடுத்தார். இதைப் படித்தவுடன் எனக்குச் சிரிக்கத்தான் தோன்றியது. விடை தெரியாதெனில், பேசாது இருந்திருக்கலாம்”. இப்படி தமிழையும், தமிழரையும் இழித்து முன்னிகை கொடுக்க வேண்டாம். 

க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி வரை தமிழில் உள்ள எல்லாத் தமிழ்-அகராதிகளிலும், “குளிர்காய்தல்” என்ற சொல் இதைக் குறிக்கும். இன்னும் விளக்கம் தரவேண்டின், “ கொள்ளி, எரி, நெருப்பு, தீ, சொக்கம்” என்று ஏதோ ஒன்றைக் கடைசியில் சேர்த்திருக்கலாம். மொத்தமாய் ”குளிர்காயற் கொளுந்து/கொளுத்து” என்றுகூடச் சொல்லலாம்.

தமிழர் ஐந்திணைகளில் வாழ்வதாய்ச் சொல்கிறோம். ஒவ்வொரு திணையிலும் வெதணம் (climate) மாறும். மருதம், முல்லையில் இருப்பது குறிஞ்சியில் மாறலாம். தமிழகத்தின் மேற்கில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் உள்ளன. 3000 அடிக்குமேல் உள்ள ஊர்களில் மக்கள் இன்றும் குடியிருக்கிறார். சங்க காலத்திலும் இதுபோல் இருந்தார். குறிஞ்சி நிலத்தில் துலாம் (ஐப்பசி) வந்தாலே அதிகாலையில் சற்று நடுக்கம் இருக்கும். கூதிர்காலம் எனும் பெரும்பொழுதின் கடைசியில் அதாவது நளி (கார்த்திகை)மாதத்தில் இன்னும் நடுக்கம் கூடும். பெரும்பாலான மரங்களின் இலைகள் குவிந்து கொள்ளும் காலத்தையே கூதிர்காலம் என்பார். 

கூதிருக்கு அடுத்தது முன்பனிக் காலம். இக் காலத்தில் நம்மூரில் 0 பாகை செல்சியசிற்கும் கீழே வெம்மை (temperature) போவதில்லை. ஆனால் 15,20 பாகைக்காவது போகலாம். அதுவும் குளிர்தான். எல்லோராலும் அதைத் தாங்கிவிட முடியாது. அப்போது அதிகாலை நேரத்தில் குப்பை, கூளங்களைச் சேகரித்து எரியூட்டிக் குளிர்காய்வது ஏழைகள் பலருக்கும் உள்ள பழக்கம். குளிர் காய்தல் என்ற சொல் அப்படி நம்மிடை எழுந்தது. 

bonfire என்பது மேலைநாடுகளில் மட்டும் உள்ளதல்ல. நம் கோடைக்கானலிலும், ஒற்றைக் கல் மந்திலும், மூணாற்றிலும், வயநாட்டிலும், நீலமலையிலும் உள்ள பழக்கம் தான். நம்மூராருக்கு ice கூடத் தெரியும். அதற்கும் அவர் ஒரு சொல் வைத்திருந்தார். ஆலங்கட்டி, ஆலி என்பது ice ஐக் குறிக்கும். ஆலியும் ice  உம்  ஒன்று தான். அதிகக் குளிர்நிலைக்கு சில்,சிலீர் என்றும், சிந்து என்றும், சொற்கள் கொண்டிருந்தார். இன்னும் பல குளிர்ச் சொற்கள் நம்மிடம் இருந்தன.            

நம்முடைய எட்டாம் மாதமான நளி (கார்த்திகை) கார் (மழை) திகையும் மாதம். இன்னொரு வகையில் இது (நெருப்பில்) காயும் திகையும் கூட. இதைச் சாரற் காலம் என்றும் சொல்வர். ஐப்பசி (துலை), கார்த்திகை (நளி) குளிர் காயும் காலம்.

சொக்கப்பனை என்பது சொக்குவதற்கான, எரிப்பதற்கான பனையோலை. சொக்குதல் = எரித்தல்.  ”சொக்கப்பனை கொளுத்து” என்பதே கார்த்திகைத் திருவாதிரையில் ஆடும் பண்டிகை. பண்டிகையையும் பொருளையும் குழப்பிக் கொள்ளக் கூடாது..

Saturday, May 13, 2023

சங்க இலக்கியங்களில் ஆரியர் - 8

அடுத்தது அகநானூறு 386, இதைப் பாடியவரும் பரணரே. இதன் திணையும் மருதமே. மருதம் பாடுவதில் பரணருக்கு ஒரு விழைவு இருந்துள்ளது. இங்கும் நீர்நாய், ஆற்றுவாளை போன்ற குறியீடுகள் வந்து போகின்றன. இவர் காலத்தில் தமிழகம் வந்து போன உத்தேயர் பற்றிய குறிப்பு இலைமறை காயாய் உள்ளது. பாணர், விறலியரின் தொடர்பு தொட்டுக் காட்டப் படுகிறது. பாணரின் தோள், கைவலியும் வெளிப்படுகிறது. 

துறை; தோழி வாயில் மறுத்தது. தலைமகள் தகுதி சொல்லியதுமாம். தலைவனின் பரத்தமை ஒழுக்கங் கண்டு தலைவி ஊடல் கொண்டாள். தேடி வரும் தலைவனிடம் தோழி பரத்தையால் நடந்தது சொல்லி, ”அப் பரத்தை எப்படியெலாம் கள்ளமாய்ப் பேசினாள்? அவள் பேச்சுக் கேட்டு எவ்வளவு வெட்கினேன் தெரியுமா” என்றும், “அவள் இப்படி பேசக் காரணம் யார்? உன் நடத்தை தானே? உடன் மாற்றிக் கொள்” என்ற உட்கருத்தையும் இப் பாடலால் விளங்கிக் கொள்ளலாம். பாடலினூடே ஆரியப் பொருநன் பற்றிய செய்தியும் வருகிறது.

பொய்கை நீர்நாய்ப் புலவுநாறு இரும்போத்து

வாளை நாளிரை தேரும் ஊர

நாணினேன் பெரும யானே பாணன்

மல்லடு மார்பின் வலியுற வருந்தி

எதிர்தலைக் கொண்ட ஆரியப் பொருநன்

நிறைத்திரண் முழவுத்தோள் கையகத் தொழிந்த

திறன்வேறு கிடக்கை நோக்கி நற்போர்க்

கணையன் நாணி யாங்கு மறையினள்

மெல்ல வந்து நல்ல கூறி

மையீர் ஓதி மடவோய் யானுநின்

சேரி யேனே அயலி லாட்டியேன்

நுங்கை ஆகுவென் நினக்கெனத் தன்கைத்

தொடுமணி மெல்விரல் தண்ணெனத் தைவர

நுதலும் கூந்தலும் நீவி

பகல்வந்து பெயர்ந்த வாணுதல் கண்டே.

என்பது பாட்டு. இதன் விளக்கம் கூடுவதற்காக, இதனுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப் போட்டு ”நாணினேன் யானே” என்பதை இரண்டுதரம் திருப்பிப் போட்டுக் கீழே கொடுத்திருக்கிறேன்.

புலவு நாறு இரும் போத்து வாளை 

பொய்கை நீர்நாய் நாள் இரை தேரும் ஊர

பெரும  

மை ஈர் ஓதி மடவோய் யானும் நின்

சேரியேனே அயல் இலாட்டியேன்

நுங்கை ஆகுவென் நினக்கு எனத் தன் கைத்

தொடு மணி மெல் விரல் தண்ணெனத் தைவர

நுதலும் கூந்தலும் நீவி

மெல்ல வந்து நல்ல கூறி

பகல் வந்து பெயர்ந்த வாணுதல் மறையினள் கண்டே.

நாணினேன் யானே

பாணன் மல்லடு மார்பின் வலியுற வருந்தி

எதிர் தலைக்கொண்ட ஆரியப் பொருநன்

நிறைத் திரண் முழவுத் தோள் கையகத்து 

ஒழிந்த திறன் வேறு கிடக்கை நோக்கி 

நற்போர்க் கணையன் நாணியாங்கு 

நாணினேன் யானே

இனிச் சில சொற்பொருள்களையும் விளக்கக் குறிப்புகளையும் பார்ப்போம். புலவு நாறு இரும் போத்து வாளை = தசைநாற்றமுள்ள பெரிய ஆண் ஆற்றுவாளையை; பொய்கை நீர்நாய் = குளத்து நீர்நாய் (Otter); நாள் இரை தேரும் ஊர = நாளிரையாய்த் தேர்ந்து கொள்ளும் ஊரைச் சேர்ந்தவனே! பெரும = பெருமகனே!

”மைஈர் ஓதி மடவோய் = ”கருவகிள் கூந்தலுடைய இளம் பெண்ணே!; யானும் நின் சேரியேனே = நானும் உன் சேரியள் தான்; அயல் இலாட்டியேன் = பக்கத்து வீட்டுக்காரி; நுங்கை ஆகுவென் நினக்கு = உனக்குத் தங்கையாவேன் என; தன் கைத் தொடு = என்று தன் கையால் தொட்டு; மணி மெல் விரல் = மாணிக்கம் பொருந்திய விரலால் (இங்கே மாணிக்க மோதிரமிட்ட விரல் குறிக்கப் படுகிறது); தண்ணெனத் தைவர = தண்ணெனத் தடவி; நுதலும் கூந்தலும் நீவி = என் நெற்றியும், கூந்தலும் நீவி; மெல்ல வந்து நல்ல கூறி = மெதுவாய் வந்து நல்லன கூறி; பகல் வந்து பெயர்ந்த வாணுதல் மறையினள் = பகலில் வந்து பெயர்ந்த (அவ்) வாள்நுதற் கள்ளியைக் கண்டு; நாணினேன் யானே = (“ஒரு வேளை தவறாக ஐயுற்றோமோ?” என) நான் நாணினேன்.  

பாணன் மல்லடு மார்பின் வலியுற வருந்தி = பாணனின் மற்போர் நெஞ்சுரங் கண்டு வருந்தி; பெரும்பாணர், சிறுபாணர் என்பார் விறலியாட்டத்தில் முழவடித்துத் (accompanying artists) துணை நிற்பர். முன்னே பேசப்பட்ட பரத்தை ஒரு விறலியாயும் (ஆட்டக்காரி) இருந்தாள் போலும். இவ்வுவமையில் பாணன் விறலிக்குப் பகரியாகிறான். ஓர் இசைக் கச்சேரியோ, நடனக் கச்சேரியோ 3,4 மணிநேரம் நடந்தால், முழவும், பறையும் தொடர்ந்தடிக்க நல்ல வலு வேண்டும். உடல்வலுக் குன்றியவரால் அது முடியாது. பாணர் (இக்கால மேளகாரருங் கூட) நல்ல கட்டுப் பாங்கான உடல்வலுக் கொண்டிருப்பர். அக் காலப் பாணனுக்கு மற்போர் தெரிவதும் வியப்பில்லை. இங்கே கணையன் [கணை = தண்டாயுதம், வளரி, தூண், குறுக்குமரம். அக்காலத்தில் வீட்டின் பெருங்கதவுகளில் தாழ்ப்பாள் போட்டு கணைய மரத்தைக் குறுக்கே செருகி வைப்பர். பின்னாளில் இது இரும்புப்பட்டையாய் மாறியது. செட்டிநாட்டு பெருங்கதவுகளுக்கு இன்றுங் கணையப் பட்டயங்கள் உண்டு. கணையன் = வலியன்; கணைக்கால் இரும்பொறை என்னுமோர் சேர மன்னனும் இருந்தான்.] என்பான் பாணனோடு தான் பொருதற்கு மாறாய் ஆரியப் பொருநனைக் கூலிக்கமர்த்திப் பொருத வைத்தான். 

இத்தொடரின் 3 ஆம் பகுதியில் உத்தேயர் (>யுத்தேயே>யௌதேய) என்ற ஆரிய கணம் (merceneries) பற்றிச் சொன்னேன். அவர் ஆயுத கணமென்றும் சொல்லப் பட்டார். முடியரசு இல்லாது குடியரசாயும் இனக்குழு ஆட்சியும் கொண்டிருந்த இவர் போர் மூலம் பொருள் திரட்டி நாட்டினுள் நகர்ந்து கொண்டிருந்தார். அகண்ட  அரசை அவர் ஏற்படுத்தவில்லை. ஆங்காங்கே கூட்டங் கூட்டமாய்ச் சில காலம் வாழ்த்து பின்பிரிந்து வேறிடஞ் சென்று விரிந்து கொண்டிருந்தார். அக்கால robber - barons, mercenaries என இவரைச்சொல்லலாம். 

எங்கெலாம் வளமிருந்ததோ, அங்கெலாம் உழிஞை, வஞ்சிப் போர் நடத்துவார். கொள்ளை அடிப்பார்; நகர்ந்து போவார். தென்னாடு நோக்கி இவர் படையெடுத்ததை இவர் நாணயம் தெற்கே கிடைத்ததனாலும், இவருடைய ”கார்த்திகேயன், சுப்ரமண்யன், சண்முகன்” வழிபாடும், நம்மூர்க் குறிஞ்சி முருகன் வழிபாடும் இரண்டறக் கலந்து போனதாலும் அறிகிறோம். இவற்றைப் பின்னிப் பிணைந்து திருமுருகாற்றுப்படையும், பரிபாடலும் சொல்லுங் கதைகள் பற்பல. (இவ் வழிபாட்டுக் கலப்பு என்பது ஒரு தனியாய்வு. யாராவது செய்ய வேண்டும்.) யாரேனும் பொருள் கொடுத்து ஒரு வேலைக்கு அனுப்பி வைத்தால், (இக்கால அடியாட்கள், சப்பானிய ninja க்கள்  போல) இந்த உத்தேயர் யாரோடும் மற்போர் செய்யவோ, போர்கொள்ளவோ தயங்க மாட்டார். இங்கே ஆரியப் பொருநன் என்பான் ஓர் அடியாள் (mercenary) என்பது மறைபொருள்.. 

எதிர்த்  தலைக் கொண்ட ஆரியப் பொருநன் = எதிரே சண்டையிடும் ஆரியப் பொருநன்; [இங்கே தலைவியின் தோழிக்கு கணையனும், தலைவிக்குக் கணையன் ஏற்பாடு செய்த ஆரியப் பொருநனும் உவமை ஆகிறார். ஒருவேளை தலைவி ஆரியன் போல வெள்நிறங் கொண்டவளோ, என்னவோ?] நிறைத்திரண் முழவுத் தோள் கையகத்து ஒழிந்த திறன் வேறு கிடக்கை நோக்கி = திரண்ட, முழவுத் தோளிலும், கையிலும் திறனொழிந்து போய் சரிந்து கிடக்கை நோக்கி; [நல்ல முழவடிக்கக் கூடிய வலுக் கொண்ட தோள் இங்கே ஆரியப் பொருநனுக்கும் அணியாய்ச் சொல்லப்படுகிறது.] நற்போர்க் கணையன் நாணியாங்கு = நற்போர் செய்யக் கூடிய கணையன் நாணியது போல; நாணினேன் யானே = நானும் நாணினேன்.

”நான் பெரிதாய் நினைத்துக் கொண்டிருந்த என் தலைவியை இந்தக் கள்ளி கீழே சாய்த்துவிட்டாள். என் தலைவியின் நிலை கண்டு நான் வெட்கிப் போனேன்” என்பது உட்கருத்து. இனிப் பாட்டின் மொத்தப் பொருளை உரைவீச்சாய்ப் பார்ப்போம்..

“கருவகிள் கூந்தலுடைய இளம்பெண்ணே! 

நானும் உன் சேரியள் தான்; 

பக்கத்து வீட்டுக்காரி; 

உனக்குத் தங்கையாவேன்” 

என்று தன் கையால் தொட்டு, 

மாணிக்கம் பொருந்திய விரலால் 

தண்ணெனத் தடவி, 

என் நெற்றியும், கூந்தலும் நீவி, 

மெதுவாய் வந்து நல்லன கூறி, 

பகலில் வந்து பெயர்ந்த, 

(அவ்) வாள்நுதற் கள்ளியைக் கண்டு, 

“ஒருவேளை தவறாக ஐயுற்றோமோ?” என) 

நான் நாணினேன்.  

பாணனின் மற்போர் 

நெஞ்சுரங் கண்டு வருந்தி,

எதிரே சண்டையிடும் 

ஆரியப் பொருநன் 

திரண்ட, முழவுத்தோளிலும், 

கையிலும் திறனொழிந்து போய், 

சரிந்து கிடக்கை நோக்கி, 

நற்போர் செய்யக்கூடிய கணையன் 

நாணியது போல் 

நானும் நாணினேன்

அன்புடன்,

இராம.கி.