காதல் - The Core என்ற படத்தை மலையாள நடிகர் மம்முட்டி, மிக மிக நாகரிகமாய்ச் சிறப்பாய்ச் செய்துள்ளார் என்று சற்று முன் குமுதத்தில் படித்தேன். உடனே LGBTQ இற்கான தமிழ்ச் சொல்லாக்கத் தேவையை உணர்ந்தேன்.இன்னும் படம் பார்க்கவில்லை. என் சொற்களின் பரிந்துரை:
Lesbian= அல்லியர்; Gay= உகையர்; Bisexual= ஈர்விழையர்; transgender= பாலிழையர்.Queer = விந்தையர்
LGBTQ = அல் உகை ஈரைப் பாலிழை விந்தையர்.
பொதுவாய்ப் பலரும் நீள நீள விளக்கந் தரும் கலைச்சொற்களை இவற்றிற்கு இணையாய்த் தருவார், படித்துப் பலரும் நகர்ந்துவிடுவார், LGBTQ என்பது ஒரு Taboo subject. அதைப் பேசாது நகர்வதே சிக்கிக் கொள்ளாத போக்கு. நான் சொல்லுங் கொடுத்துச் சுருக்கவும் கொடுத்ததால், பலருக்கும் நெருடல் வந்தது போலும். விளக்கம் கேட்டார். என் விடை கீழே.
அல் எனும் வேரில் இருந்து அன், அள் எனும் பாலிறுகள் தமிழில் கிளைத்தன். அல்> அள்> ஆள்> ஆள்தல் எனும் ஆட்சிவினை அல்லில் தொடங்கியது. ஆள்தல் வினைச்சொல் ஆண் எனும் பெயரை ஈந்தது. உத்துதல் என்பது உடன் எனும் பொருளைத் தரும். ஒர் + உத்து = ஒருத்து. ஒருத்தன், ஒருத்தி என்ற சொற்கள் ஒருத்தில் பிறந்தவை. அள்-தல்> அள்ளு-தல்> அட்டு-தல்> அத்து-தல் வளர்ச்சியில் சேர்க்கை எனும் சாரியைப் பொருளும் உடன் பொருளை உணர்த்தும். அத்தி என்ற சொல்லும் பெண்ணை உணர்த்தும் ஈறாகும்.
ஆணாதிக்கக் குமுகாயத்தில் பேணப்படுபவளைப் பெண் என்றார். இச்சொல் வேண்டாமெனில், அத்தியும் வேண்டாமெனில், வேறு சொல்லிற்கு, இ எனும் பெண்பால் விகுதியை அல்லோடு சேர்க்கலாம். அல்லி என்பது பெண்ணை இப்படிக் குறித்தது. நாட்டுப்புற வழக்கு எப்போதுமே அல்லியை உயர்த்திப் பிடிக்கும். ஆரவல்லி, சூரவல்லி, அலங்காரவல்லி என்ற நம்மூர் நாட்டுப்புறக் கற்பனையோடு அல்லி அரசாணியையும் தூக்கிப் பிடிப்பர். அரையன்> அரயன்> அரசன், அரயாண்>அரசாண் என்பன ஆணைக் குறித்தால், அரயாணி>அரசாணி என்பவள் பெண்ணரசி ஆவாள்.
அல்லியைப் பாண்டிய அரசி என்பார். அர்ச்சுனனோடு சேர்த்துக் கதை கட்டுவார். அல்லியைச் சுற்றிப் பெண்குழாம் இருந்ததாம். முற்றிலும் மகளிர் கொண்டாட்டமாம். ஆட்சி நடந்ததை அப்படி விவரிப்பார். தறி கெட்டுக் கற்பனை விரியும், இந் நாட்டுப்புறக் கதையை பாண்டேயாய்ப் பெயரிட்டுக் கிரேக்கத்தின் வழி உலகெங்கும் மெகசுத்தெனிசு தெரிய வைத்தார். தனியான பெண்ணுலகக் கற்பனை உலகில் பரவியது.
lesbian என்ற சொல்லிற்கு ஆங்கிலச் சொற்பிறப்பியலில் அடுத்து வருவது போல் சொல்வார். 1590s, "pertaining to the island of Lesbos," from Latin Lesbius, from Greek lesbios "of Lesbos," Greek island in northeastern Aegean Sea (the name originally may have meant "wooded"), home of Sappho, great lyric poet whose erotic and romantic verse embraced women as well as men, hence meaning "relating to homosexual relations between women, characterized by erotic interest in other women" (in continuous use from 1890; the noun lesbianism from this sense is attested from 1870) and the noun, which is first recorded 1925.
லெ பியசு (Les bios) என்பதற்கு அல்லி (பெண்) வாழிடம் என்று தான் பொருள். நான் அல்லியர் என்றது அப்படித்தான். கிரேக்கரை நம்புங்கள். எங்கள் நாட்டுப்ப்புறத்தை நம்பவேண்டாம். நாங்கள் தூசி. கிரேக்கர் ஒசத்தி.
விழைதல் = விரும்புதல். இரண்டும் ஒரே வேரில் கிளைத்தவை. இக்காலப் பிள்ளைகளுக்கு விழைதல் ஏன் புரியவில்லை?- என்று எனக்குத் தெரியாது. ”தமிழைப் படியுங்கள். அகராதி புரட்டுங்கள். தமிழை ஒதுக்காதீர்” என்று மட்டும் சொல்ல விழைகிறேன். ”எங்கும் முயலமாட்டேன். ஆனால் சுளையாய் யாராவது முகநூலில் எடுத்துத் தரவேண்டும்” எனச் சிலர் எதிர்பார்ப்பது ஒரு சோம்பேறித்தனம். .
ஆண்விழையர் அவ்வளவு எளிதில் தம் தனிவிழைவைச் சொல்லமாட்டார். உவகையோடு இருப்பதாய்த் தான் சொல்வார். உக-த்தல், உவ-த்தல் என்பவை மகிழ்ச்சியையும் உவத்தலையும் (விரும்புதலையும்) குறிக்கும். உவகை, உகை என்பன gayயைக் குறிப்பது அப்படித்தான். அவருக்கு மகிழ்ச்சி.
ஈர்விழையர் Bisexual. ஈருக்கு விளக்கம் வேண்டாம்.
இழைதல் = கலத்தல், மயங்குதல். பாலிழையர் = ஆண், பெண் என இருபால் உணர்வுகளும் இழையும் மாந்தர். நான் திருநங்கை, திருநம்பி போன்ற சொற்களைச் சற்றுத் தயக்கத்தோடு கையாளுவேன். அவை பற்றிக்காலச் சிந்தனையில் எழுந்த சொற்கள். ஏன் ஆன்மீகப் போர்வை போர்த்த வேண்டும் என்று புரியவில்லை Let us be honest.
Queer = strange = விந்தை
No comments:
Post a Comment