Wednesday, August 23, 2023

மறதியும் மொழியழிவும்

பொதுவாக மாந்தருக்கு மறதி என்பது ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். நம் சொற்குவையை நாமே புழங்காதிருந்தால், நாளா வட்டத்தில் ஒரு சிலவற்றை நாம் மறந்தே போவோம். (இதனாற்றான் சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம் என்றார்.)

நமக்குத் தெரிந்த தமிழ்ச்சொற்கள் 1000 என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் 2 விழுக்காடு நாம் மறந்தாலும், ஏழு தலைமுறைக்கு (175 ஆண்டுகளில்) அதே மேனி தொடர்ந்தால், அப்புறம் இன்று இருப்பதில் 15% தமிழ்ச் சொற்கள் பயன்படாது ஒழிந்தே போகும்.

அப்புறம் அச்சொற்களுக்கு ஈடாய் வேறு மொழிச்சொற்களையே அற்றைத் தமிழர் கொஞ்சங் கொஞ்சமாய்ப் பயன்படுத்தத் தொடங்குவார்; முடிவில் நம் மொழி மாறிப் போகும். இப்படித்தான் தமிழியக் கிளைமொழிகள் 1000, 2000 ஆண்டுகளில் கொடுந்தமிழிலிருந்து மற்ற மொழிகளாய்க் கிளைத்தன. முடிவில், மகதம் வரை விரிந்திருந்த தென்மொழி, மாலவன் குன்றத்திற்கும் கீழ் எனக் குறுகிப் போனது.
நம் மொழியைக் காப்பாற்ற வேண்டுமெனில், நம் முன்னோர் நம்மிடம் ஒப்படைத்ததை, 2000 ஆண்டுகள் காப்பாற்றி வந்ததை, நாம் தொலைப்பது அவ்வளவு சரியாகத் தென்படவில்லை.

நம் பெற்றோரின் கண்ணுக்கெதிரே தோட்டத் தொழிலாளராய்ப் போன தமிழர் (அது போலத் தெலுங்கர்) போன இடங்களில், ஓரளவு மக்கள் தொகை இருந்தும், தம் அறியாமைப் போக்கால், தம் மொழியைக் காப்பாற்றாது போனார். விளைவு? தமிழும், தெலுங்கும் அவ்விடங்களில் தொலைந்தே போயின. விளவு? முத்தம்மா, முட்டம்மா ஆகி, தண்டபாணி தெண்டாபணி ஆகி, காளிச்சரண் கல்லிச்சரனாகி, சரவணன் சர்வனாகி மொத்தத்தில் தமிழ் அடையாளமே அங்கு தொலைந்துபோனது. மறவாதீர் நண்பரே! தமிழனுக்குத் தமிழே முகவரி.
உங்களுக்குத் தெரியுமா? ஓலாவ் மொழியைத் தொலைத்த அமெரிக்கக் கருப்பர் (இது மேற்கு ஆப்பிரிக்க மொழி. ஓலாவ் பேசிய பன்னூற்றுவர் கருப்பு அடிமையாக அமெரிக்க ஒன்றிய நாடுகளுக்குக் கொண்டுசெல்லப் பட்டார்.) பெருமிதத்தையும் சேர்த்துத் தான் 400 ஆண்டுகளில் தொலைத்தார். இன்று அவர் முகத்தில் பெருமிதத்தைத் தேட வேண்டியுள்ளது.

மாறாக, மொழியைக் காப்பாற்றியதால், சுரினாம், சமைக்கா, மொரிசியசு, பிஜி போன்ற இடங்களில் பத்தொன்பதாம் நூற்றாண்டு இந்தி இன்றும் நிலைத்து நிற்கிறது; இந்த இந்திக்காரரே அங்கு அரசியல், பொருளியல், கல்வி இன்னபிற துறைகளில் முன்னணியில் உள்ளார். அவர் முகத்தில் இன்றும் பெருமிதமுள்ளதைக் கூர்ந்து பார்த்துப் புரிந்து கொள்ளலாம்.
தமிழ்நடை, தமிழ்நாட்டிலேயே ஒருமுறை சீரழிந்து மணிப்பவளம் ஆகி, இப்போது மீண்டும் உயிர்பெற்று வந்திருக்கிறோம். மீண்டும் ஒரு முறை தமிழ் அழிய வேண்டாம். நம் வீட்டை நாம் காப்பாற்றாது, இன்னொருவரா காப்பாற்றுவார்? வரலாறறியார் பேச்சைப் பொருட்படுத்த வேண்டாம்.


No comments: