”இக் கலைச்சொல்லுக்குப் பொருத்தமான தமிழ்ச்சொல்லைத் தேடிக்கொண்டிருக்கிறேன். கையெழுத்தில் இணைத்து எழுதப்படும் எழுத்துகள் இணையும் இடத்தை 'cursive connection' என்றும், சில வேளைகளில் 'cursive attachment' என்றும் சொல்வர். 'கர்சீவ்' எனும் சொல் பயன்பாட்டில் எனக்கு விருப்பம் இல்லை 😉 நல்ல தமிழ்ச் சொல்லை அறிமுகம் செய்யலாம். பரிந்துரைகள் இருந்தால் பகிருங்கள்” என்று நண்பர் முத்து நெடுமாறன் அவரின் முகநூல் பக்கத்தில் நேற்றுக் கேட்டிருந்தார்.
கீழே வருவது என் பரிந்துரை:
ஒரு மாந்தன் இன்னொருவனோடு பூதிகமாய் (physical) இணைத்துக் கொள்கையில், ஒரு கையை நீட்டியே இன்னொருவன் கையைப் பற்றுவான். நீட்டு-தல் பொருளில் நம் பேச்சில் வரும் இன்னொரு வினைச்சொல் வீசு-தல். இதில் பெறும் பெயர்ச்சொல் வீச்சு. வளைகின்ற கையை வீச்சு என்றும் குறிப்பார். வீச்சு = வளைவு = curve. எல்லா நல்ல அகரமுதலிகளிலும் இச்சொல் உண்டு. (காட்டு: செ.சொ.பெ. எட்டாம் மடலம் - இரண்டாம் பாகம், பக்கம் 314.) இச்சொல் என் வலைப்பதிவிலும் 2006 இல் இருந்து 4 கட்டுரைகளில் உண்டு அங்கு துழாவினால் கிடைக்கும்.
ஓர் ஓலையில் ஒரு கீற்றைத் தொடங்கி முடிக்கையில், எழுத்தாணியை எடுக்காது முன்னதைத் தொட்ட வண்ணமே தொடர்ந்து அடுத்ததைக் கீற வேண்டுமெனில், அடுத்ததைத் தொடங்குமுன், முதற்கீற்றின் முடிவை கொஞ்சம் வளைத்து ஒரு வீச்சை உருவாக்கி நீட்டுவோம்.
[ஒரு தாளில் ஓரெழுத்தைத் தொடங்கி முடிக்கையில், தூவலை எடுக்காது முன்னதைத் தொட்ட வண்ணமே தொடர்ந்து அடுத்ததை எழுத வேண்டும் எனில், அடுத்ததைத் தொடங்குமுன், முதலெழுத்தின் முடிவை கொஞ்சம் வளைத்து ஒரு வீச்சை உருவாக்கி நீட்டுவோம்.]
இதைக் கைநீட்டம் எனாது கைவீச்சு என ஏன் சொல்கிறோமெனில், ஒரு கீற்றின் வீச்சு (அல்லது எழுத்தின் வீச்சு) எங்கெழுகிறது என அறுதியாய்ச் சொல்ல முடியாது. நம் கைவண்ணம், எழுத்துருவம், எழுதும் பரப்பின் மேடுபள்ளம் இப்படிப் பலவற்றைப் பொறுத்து வீச்சு அமையும். ”போகிற போக்கு” என்கிறோமே அதுதான் வீச்சு. அங்குமிங்கும் அலையும் இவ்வுறுப்பை வீச்சு என்றுவிட்டால், ஏற்ற இறக்கத்தைச் சரிபண்ணியது போல் ஆகிவிடும். இந்த வீச்சுத் தான் ஆங்கிலத்தில் சொல்லப்படும் cursive.
இது கொண்டு ஒரு சொல்லில் வரும் எல்லா எழுத்தையும் இணைத்துவிடலாம். வேகமாய் எழுதப்படும் எந்த ஓலைச்சுவடியிலும் வீச்செழுத்து இல்லாது இருக்காது. (புணர்ச்சி கொண்டு ஓரடியையே, ஏன் ஒரு பாவையே, ஒரு தொடர் போல் ஆக்க முடியும்.) வீச்செழுத்தைப் பிரித்துப் பதிப்பது என்பது பென்னம் பெரும் முயற்சி. செய்தாருக்கு எம் தலை வணக்கம். ஓலையை விட்டுத் தாளுக்கு வந்தபின்னும் நம்மூரில் வீச்செழுத்துக் குறையவில்லை. 1850 களில் இருந்து 1950 வரைக்கும்கூட வடிப்பச்சு (type writer) வாராத வரை, கையால் எழுதப்பட்ட நம் வீட்டுப்பத்திரங்கள் எல்லாமும் வீச்செழுத்தில் தான் இருக்கும். அவரவர் குடும்ப பழைய ஆவணப் பத்திரங்களைத் தேடிப் படியுங்கள்.
ஒரு சொல்லிலுள்ள ஒவ்வோர் எழுத்தையும் வீச்சுகள் கொண்டு மாந்தர் கைகள் இணைவது போல் அமைவதால் அந்த எழுத்து முறைக்கு வீச்செழுத்து முறை என்று பெயர். இக் கலைச்சொல்லை இராம.கி. உருவாக்கவில்லை. கால காலமாய் நம்மிடம் இதே துறையில் இருந்த சொல் தான். எங்கள் மாவட்டத்தில் உண்டு. சிறு பிள்ளையில் ஏட்டில் எழுதிப் படித்த எல்லோருக்கும் வீச்செழுத்து என்ற சொல் தெரியும்.
cursive connection = வீச்சுக் கணுக்கம்.
No comments:
Post a Comment