சிதம்பரம் தீக்கிதரின் பொன்னம்பலக் கொள்ளை பற்றி நண்பர். நாக. இளங்கோவன் இட்ட பதிவில் அவர் கூறிய வேறொரு கருத்து என்னையும் வருந்த வைப்பதால் கீழ்வருவதை அங்கிருந்து இங்கு வெட்டி ஒட்டுகிறேன்.
அவர் பதிவிற்கும் சென்று படியுங்கள். இனி அவர் கருத்து.
-----------------------------
பதிவில் சொல்ல மறந்த விதயம் தான் நெடுங்காலமாக என்னை வாட்டுவது. ஒருமுறை அந்தியில் தில்லை போயிருக்கேன். மற்றபடி நான் போனதெல்லாம் உச்சிகால பூசைக்குதான். எப்படி பயணத்திட்டம் போட்டாலும் உச்சிகாலத்தில்தான் எனக்கு அமையும். பொன்னம்பலத்தில் நின்று தெரிசனம் செய்வதே இன்று சிக்கல் என்றால், அங்கே தேவாரம் பாடுவது முழுமையாகத் தடை செய்யப் பட்டிருக்கிறது. சரி, பொதுமக்கள் பாட வேண்டாம். ஓதுவார் பாடலாம்தானே. பொன்னம்பலத்திற்கும் (கனகசபை), நடனவம்பலத்திற்கும் (நிருத்தசபை) இடையே நடைபாதைப் பள்ளம் இருக்கும் அல்லவா? உச்சிகால தீபம் காட்டியதும் அங்குதான் ஒதுவார் நின்று இரண்டு பாட்டுப் பாடுகிறார். பள்ளத்தில் கும்பலோடு கும்பலாக தலையைத் தூக்கி எட்டிப் பார்த்து ஓதுவார் பாடுவதைப் பார்க்கும்போது இரங்கத்தக்கதாக இருக்கிறது. மொத்த பூசையையும் சிற்றம்பலத்தில், பொன்னம்பலத்தில் சமற்கிருதத்தில் செய்துவிட்டு, அவற்றின் அடிப்பள்ளத்தில் நிற்க வைத்துத் தமிழை ஓதுவைப்பது எவ்வளவு கொடுமை? பலமுறை இது எனக்கு வலித்துள்ளது. அதே கொடுமை இன்றும் தொடர்கிறது. இப்பொழுதும் பார்த்து நொந்து போம் வந்தேன். இன்னொரு வலி என்ன தெரியுமா? உச்சிகால பூசை நடவரசனுக்குச் செய்கையில் அம்மன் சன்னதி பூட்டியிருக்கிறது. 50 தீட்சிதர் நடவரசனைச் சுற்றி நிற்கிறார். ஒருத்தர் கூட சிவகாமவல்லியிடம் இல்லை. பூட்டிவிடுகின்றனர். தில்லை போய்வரும் போதெல்லாம் ஒரு கண்ணில் களி மறுகண்ணில் வலி என்ற நிலையே தொடர்கிறது.
......................................................
இனி என் கூற்று. பொன்னம்பலத்தில் தேவாரம் பாட ஆறுமுகசாமி ஓதுவார் எவ்வளவு முறை போராடி இருப்பார்? எத்தனை முறை எழுதியிருப்போம், பேசியிருப்போம்? தமிழகமே அவருக்கு முழு ஆதரவாய் நின்றதே? இன்று எல்லாம் தலைகீழாய்ப் போய் விட்டதே? . வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிவிட்டதே? தமிழகம் இனி என்ன செய்யப் போகிறது? கோயில் நிருவாகம் தீக்கிதர் கட்டில் இருந்து முற்றாய் வெளிவந்தால் ஒழிய இது மாறாது. தமிழர் எல்லோரும் கொஞ்சம் வெளிப்படப் பேசுங்கள். சிவநெறியார் ஏன் வாய்மூடி மோனியாகிறார்? எப்படி விண்ணவ நெறிக்குத் திருவரங்கமே ”கோயிலோ” அதுபோல் சிவநெறிக்குச் சிற்றம்பலமே “கோயில்”. என்று உங்களுக்குத் தெரியுமா? கத்தோலிக்கத்திற்கு வத்திக்கான் போலச் சிவநெறிக்குச் சிற்றம்பலம் தான். அங்கு, அம்பலத்தின் மீது நின்று நடவரசன் முன்னால் நம் தமிழைப் பாட வழியில்லையா?
No comments:
Post a Comment