இந்தையிரோப்பியச் சொற்பிறப்பியலில் உள்ள அடிப்படைச் சிக்கலைக் காண்போம். இங்கு ஆங்கிலச் சொல் ஒன்றை வைத்து இச்சிக்கலைச் சொல்கிறேன். மற்ற மொழிச் சொற்களை வைத்தும் சொல்லலாம். ஒன்று என்பதை உணர்த்தும் one என்ற ஆங்கிலச் சொல்லைப் பார்ப்போம். ஒன்று என்பது பருப்பொருளைக் குறிக்கும் சொல் அல்ல. அது எண்ணிக்கையை உணர்த்தும் கருத்துமுதல் சொல். நல்லது கெட்டது போன்ற சொற்களும் பருப்பொருள் சொற்கள் அல்ல. அவையும் கருத்துமுதல் சொற்களே.
பலமுறை நான் எடுத்துரைக்கும் ஓர் அடிப்படைக் கருதுகோளை (basic hypothesis) மீண்டும் சொல்ல விழைகிறேன். [இதை நான் அறிந்தது. காரைக்குடி செல்விப் பதிப்பகம் வாயிலாக T.பக்கிரிசாமி அவர்கள் வெளியிட்ட "சிந்தனை வளர - பாடநூல் அமைப்பு" என்னும் அருமையான பொத்தகம். என் சிந்தனை தெளிவுற, அதுவே வழிவகுத்தது.]
”ஆதி மனிதனிடம் பருப்பொருள், இடப்பொருட் சொற்களே இருந்தன. கருத்துச் சொற்கள், அறிவால் உணரவல்ல சொற்கள், கலைச்சொற்கள், பண்புச் சொற்கள் - இவை ஆதியில் இல்லை. அமானுஷ்யச் சொற்களும் (supernatural) சொற்களும் இல்லை” - என்று திரு. பக்கிரிசாமி அவர் நூலிற் சொல்லுவார். இதையே, சற்று மாறிய முறையில், "எந்தக் கருத்தும் முதலில் விதப்பான பயன்பாட்டில் இருந்து, பின்னரே பொதுமைக்கு வரும்" என்று நான் வரையறுப்பேன். (அதாவது specific to generic என்பதே என் புரிதல்.)
நெய் என்ற பயன்பாட்டை, விலங்குக் கொழுப்பில் அறிந்த பழந்தமிழ் மாந்தன், பின் எள்ளைக் கடைந்து எடுத்த நெய்க்கு, எள்நெய் (=எண்ணெய்) என்றே பெயரிடடிருக்கிறான்; பின்னால், மற்ற வித்துக்களில் இருந்தும் நெய்யெடுக்க முடிந்த போது, எள்நெய் என்பது, எண்ணெய் எனும் பொதுமைச்சொல்லாய்த் திரிந்து, எள் அல்லாதவற்றில் இருந்து கிடைத்த எண்ணெய்களையும் குறித்திருக்கிறது.
இங்கு ”ஒன்று” என்ற எண்ணிக்கைச் சொல்லும் கருத்துமுதல் சொல் தான். முதலில் வேடுவச் சேகர நிலையில் இது ஒரு பருப்பொருளை உணர்த்தியிருக்க வேண்டும். பின்னால், நாளாவட்டத்தில் எல்லாப் பருப்பொருள்களுக்கும் ஒரு பெயரடையாய் அமையக் கூடிய எண்ணுமையாக அது மாறும். பாவாணர் வழிப்பட்ட சொல்லாய்வு என்பது இப்படித் தான் நகரும். பருப்பொருள், கருத்துப்பொருள், எழுத்துத் திரிவுகள், மற்ற மொழிச்சொற்கள் இதனோடு எப்படி ஒன்றுகின்றனவோ அப்படியே நகர்ந்து சொற்பிறப்பியல் அமையும்.. ஆனால் இந்தையிரோப்பியச் சொற்பிறப்பியலோ, பருப்பொருள் தொடக்கத்தைக் கண்டு கொள்ளாது. கீழே வருவது etymonline என்ற ஆங்கில வலைத்தளத்தில் வரும் கூற்றைப் பாருஙகள்.
one (adj., pron., n.)
"being but a single unit or individual; being a single person, thing, etc. of the class mentioned;" as a pronoun, "a single person or thing, an individual, somebody;" as a noun, "the first or lowest of the cardinal numerals; single in kind, the same; the first whole number, consisting of a single unit; unity; the symbol representing one or unity;" c. 1200, from Old English an (adjective, pronoun, noun) "one," from Proto-Germanic *ainaz (source also of Old Norse einn, Danish een, Old Frisian an, Dutch een, German ein, Gothic ains), from PIE root *oi-no- "one, unique.
மேலே உள்ளதில் ஒன்றிற்கு இணையான வெவ்வேறு இந்தையிரொப்பிய மொழிகளில் இருக்கும் சொற்களைக் கூறி, கிரேக்கம்,இலத்தீன்,சங்கதம் என்ற மொழிகளில் உள்ள ஏதோ ஒன்றை அடிப்படைச் சொல்லாய்க் கொண்டு அதிலிருந்து எழுததுக்களை jugglery செய்து, மாற்றிப் போட்டு, நிறைய மொழிச் சொற்களை ஒரு வரிசை முறையில் வரும்படி திரிவு விதிகளைக் கொண்டுவந்து இதுதான் தாது என்று சொல்லிவிடுவார். (தாதிற்கும் வேரிற்கும் கூட வேறுபாடு உண்டு. ஆனால் மேலையர் அதைக் கண்டுகொள்ள மாட்டார்.) ”ஒன்று” தொடர்பான ஒவ்வொரு மொழிச் சொல்லிற்கும் எண்ணிக்கைப் பொருளுக்கு முன்னால் வேறொரு பொருள் இருந்திருக்க வேண்டுமே என்று கேட்டால் அதற்கு ம் விடை அங்கிருந்து வராது. திரிவு விதிகளின் வழியே one என்பதற்கு முயன்று PIE root *oi-no- "one என்று சொல்லிவிடுவார்.
என் முதல் கேள்வி: oi-on- என்பது ஒன்றைக் குறிக்கும் என்றால், ”அது கருத்துமுதல் சொல்லாயிற்றே, அதன் அடியிலுளள பருப்பொருள் யாது? அதற்கான.சொல் என்ன? அந்தப் பருப்பொருளின் மூலம் எண்ணிக்கை எனும் கருத்துமுதல் பொருள் எப்படிக் கிளைத்தது? ஒன்று என்ற எண்ணிக்கைப் பொருள் எந்தக் காலததில் எழுந்திருக்க முடியும்? ஒன்றைக் குறிக்கும் இந்தையிரோப்பியச் சொற்களில் எல்லாம் இந்தப் பருப்பொருள் உள்ளதா? எவ்வெவற்றில் பருப்பொருள் இல்லாது கருத்துப் பொருள் மட்டுமே உள்ளது? இப்படிப் பல கேள்விகள் சொற்பிறப்பியலில் எழும். இந்தக் கேள்விகளை இந்தையிரோப்பியச் சொற்பிறப்பியலில் யாரும் கேட்டதாய் நான் கண்டதே இல்லை.
தமிழில் என் பார்வையை https://valavu.blogspot.com/2005/11/blog-post_03.html என்ற இடுகையிற் காணலாம்.
No comments:
Post a Comment