Saturday, August 31, 2019

சிலம்பு ஐயங்கள் - 9

இப்பொழுது நாம் பார்க்கப்போகும் வரிகள்

தீத்திறம் புரிந்தோன் செப்பக் கேட்டு
மாமறை முதல்வ மதுரைச் செந்நெறி
கூறு நீ”யெனக் கோவலற்கு உரைக்கும்

என்பதாகும். தீயில் திறங்காட்டுவது என்பது யாகம் நடத்துவதே. அக் காலத்தில் யாகஞ் செய்யக் குறைந்தது நால்வர் தேவை. இக்காலத்தில் ஒருவரே 2 வேலைகள் செய்வதும், ஒரே வேலையை இருவர் செய்வதும் நடக்கிறது. ஒவ்வொரு யாகத்திலும் கூர்ந்து கவனித்தால் பொறுப்புப் பகிர்வது தெரியும். முதலாமவர் ஓதி (Hotri; நம் ஓதியே சங்கதத்தில் நம் ஓத்ரி> நம்மோத்ரி>நம்மூத்ரி> நம்பூத்ரி ஆகலாம். முன்குடுமி நம்பூதிகள் சேர நாட்டிலும், சோழியர் சோழ, பாண்டிய நாடுகளிலும் தங்கினார். சங்க காலத்தில் முன்குடுமிச் சோழியரே மிகுதி. இற்றைக் காலத்தில் சென்னைப் பக்கம் ஓதியை வாத்தியார் என்பர்.). இரண்டாமவர் அடுத்தவர் (= நெருங்கியவர்; assistant; சங்கதத்தில் Adhvaryu. யாகத்தின் பூதிக-physical-வேலை செய்பவர்); மூன்றாமவர் உடுகலி (Udgatri; உடன்பாடி; கனபாடிகளும் இவ் வகை தான். கலித்தல்=பாடுதல். கலித்தொகை= பாட்டுத் தொகுதி; கலித்தம்> கயித்தம்>கீதம். அன்று சங்கத கீதம் பாடுவது சாமம் ஓதுவதே.) நாலாமவர் பெருமானர் (Brahmin; யாகம் நிர்வகிக்குங் கண்காணி) மாங்காட்டுப் பார்ப்பான் இந்த 4 வகைகளில் ஏதோவொரு வகையாவான். பணஞ் செலவளித்து யாகஞ் செய்பவர் இயமானர்> இசமானர்>எசமானர் ஆவார். ஆக ஒரு யாகத்திற்கு இயமானர், ஓதி, அடுத்தார், உடுகலி, பெருமானர் என்று 5 பேர் வேண்டும். எல்லாம் தமிழ்ப்பெயர் தான். சங்கத ஒலிப்பிற்கு மாற்றிக் கொண்டார். பெருமானரின் பின்னுள்ள தமிழ்ப்புலத்தை அவரும் உணரார்; நாமும் உணரோம். 

”மாமறை முதல்வ! மதுரைக்கு செந்நெறி (= சரியான வழி) எது?” எனுங் கோவலனுக்கு
:
கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி
வேத்தியல் இழந்த வியனிலம் போல
வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்
தான் நலந்திருகத் தன்மையிற் குன்றி
முல்லையுங் குறிஞ்சியும் முறைமையிற் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிவங் கொள்ளும்
காலை எய்தினீர் காரிகை தன்னுடன்

என்று மறையவன் மறுமொழி தொடங்குவான். மாமறை முதல்வ என்பது இங்கு ஓதியைக் குறிக்கலாம். கோத்தொழிலாளர் = bureaucrats; வேத்தியல் = governance. கோவலனென்ற இயற்பெயர் பற்றி முன்பே சொன்னேன். சென்ற பிறப்பில் பரதன் என்பது இவனுடைய இயற்பெயர்; தொழிற்பெயரோ கோவலன் (கோ வலன் = கோத்தொழிலாளன்) ஆனது; இப்பிறப்பில் கோவலன் இயற்பெயர்; தொழிற்பெயர் பரதன் (= விலை சொல்வான்; trader/import-exporter) ஆனது. கோவலன் பெயருக்கு அடுத்து 2 ஆஞ் சொல்லிலே கோத்தொழிலாளரென மேலே ஆள்வதைக் கண்டுமா, சிலருக்குக் கோவலன் பெயரின் வார்த்தை விளையாட்டுப் புரியவில்லை? ஓர்ந்து பாருங்கள். விதியோ, வினையோ, எதுவாயினும் சமணருக்கு அறநெறி சொல்ல முற்பிறவிக் கதைகள் தேவை. இல்லெனில் பிறவிச் சுழற்சியை எப்படி உணர்த்துவது, அற்றுவிப்பது, செயிப்பது, போதிப்பது?

கோவலன்-கண்ணகி-மாதவி பெயர்விளக்கத்தை முன்னொரு கட்டுரையிற் சொன்னேன். (என் நூலிலும் உண்டு.) பொறுமையோடு படிக்காது, வறட்டுப் பிடிவாதமாய், “இராகவையங்கார் சொன்னார்; இவர் சொன்னார்; கிருஷ்ணன், இலக்குமியே கோவலன், கண்ணகிக்குப் பொருள்” என அடம் பிடித்து, விண்ணவச் சாயலைச் சிலம்பிற்குச் சார்த்தித் தானுங் குழம்பி மற்றோரையும் குழப்புவர்க்கு என்ன சொல்லி என்ன பயன்? விட்டுவிட வேண்டியது தான். எரி விண்கல் பற்றிச் சொல்லும்போது ”எறிந்த” என்றே சொன்னேன். ஆயினும் ”எறிந்த”வை விட்டு ”எரிந்த” என்று பொருள் கொள்வாருக்கு என்ன சொல்ல? நகர வேண்டியது தான். ரகர, றகறங்களுக்கு வேறுபாடு அறியாமலா பொருளெழுத வருவேன்? கட்டுரைத் தொடரைக் கவனமெடுத்து ஆழப் படிப்போருக்கு உறுதியாகச் சொல்கிறேன். சிலம்பைப் புரியாது பழந்தமிழர் வரலாற்றைப் புரிந்துகொள்ள முடியாது. அதுவோர் அரிய திறவு கோல். உ.வே.சா.விற்கு நாமெலோரும் நன்றி சொல்ல வேண்டும்..மேல் வரிகளுக்கு வருவோம்.

ஒரு கொற்றவன் கோத்தொழிலாளரோடு கோடினால் (= விலகினால்) அவனுடைய வியல்நிலம் வேத்தியல் இழந்து போகுமென்ற கருத்து மிக முகன்மையானது. (இதை அருத்த சாற்றமும் அழுத்திச் சொல்லும். இன்றும் அமைச்சர் இந்திய ஆட்சிப் பணியாளரோடு கோடிக் கொண்டால் நாடு அதோ கதி தான்.) அதுதான் கதை நடந்த காலத்திற் பாண்டி நாட்டில் நடந்தது. கோத்தொழிலாளர் அரசனுக்கு எச்செய்தியுஞ் சொல்லவில்லை. (தமிழகம் அறிந்த ஒரு வணிகனின் மகன் கோட்டைக்குள் நுழைந்துள்ளான். ”அவன் யார்? எதற்கு வந்தான்?” என்ற செய்தி கூட அரசனுக்கு அறிவிக்காது ஒரு கோட்டைத் தளபதி இருக்கமுடியுமா? Intelligence officials- ஏ பாண்டிநாட்டில் இல்லையா? கோவலன் என்ன சுப்பனா, குப்பனா? ”பெருநிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த ஒருதனிக் குடிகளோடு உயர்ந்து ஓங்கு செல்வத்தான்” மகனல்லவா? இன்றைக்கு அம்பானியின் மகன் மும்பையில் அடையாளந் தெரியாது போகமுடியுமா?” படித்துப் பார்த்தால் சற்று முரணாய்த் தெரியவில்லையா? ”கோவலன் யார்?” என்று தெரியாமல் கோட்டைக்குள் நுழைந்தான் என்பது பாண்டிய நாட்டில் “வேத்தியல்” குலைந்து கிடந்ததையே உணர்த்துகிறது.

பின்னால் அரசனிடம் வழக்காடையில் கணவன்பெயர் சொல்லாமல் ”மாசாத்துவான் மருமகள்” என்று தானே கண்ணகி தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறாள்? அப்படியாயின் மாசாத்துவான் 3 நாடுகளிலும் அரசுத் தொடர்பாளர்க்குத் தெரிந்தவனாகவே இருப்பானல்லவா? ஆயினும் கோவலன், கண்ணகி யாரென்று அரசனுக்குத் தெரியவில்லையாம். Isn’t it something wrong with governance? பாண்டியன் எப்படி எதையும் விசாரிக்காமல் பொற்கொல்லன் பேச்சை நம்பிக் கோவலனைக் கொன்று சிலம்பு கொணரச் சொன்னான்? வழக்குரை காதையில் அல்லவா, அரசனுக்குத் தன் தவறு புரிகிறது? எனவே பாண்டிய அரசின் நிர்வாகம் அரசனுக்குப் பல செய்திகளைச் சொல்லவில்லை என்று தோன்றவில்லையா?.அரசனும் எதையுங் கேட்கவில்லையே? அரச நடைமுறையில் ஏதோ அடிப்படைத் தவறுள்ளது போல் ஆகவில்லையா? அதைத்தான் இங்கே உருவகமாய் வைத்து இளங்கோ சொல்கிறார்.

பின்னால் கட்டுரைக் காதையில் மதுராபுரித் தெய்வம் மதுரையில் கண்ணகிக்கு முன் நடந்த கலகங்களையும், மக்கள் மன்னனை எதிர்த்த கதையையும் ”ஆடித்திங்கள் மதுரை அழற்படும்” என்ற தானறிந்த முந்தையச் செய்திகளையும் அழற்பாடு சற்று தணிகையிற் சொல்லும். பஞ்ச காலமென நான் சொன்னதற்கு அதுவுமொரு காரணம் மக்களுக்கு அரசன் மேல் ஏராளங் கோபம் இருக்கும் எனில் அது பஞ்சகாலம் தான். இல்லெனில் கண்ணகிக்கு நடந்த நிகழ்ச்சியை வினையூக்கியாய் வைத்து மதுரை எப்படி எரியூட்டப் படும்.? இலக்கிய அழுத்திற்காக அதை இளங்கோ கொங்கையில் விளைந்ததாய்ச்  சொல்லலாம். (அதை ஒழுங்காய்ப் புரிந்துகொள்ள வேண்டாமா?) அதை விடுத்துத் தான் மதிக்கும் நாகசாமி ”சிலம்பைப் புதினம்" என்று சொன்னதால், “கொங்கையிற் பாசுபரசா இருந்தது?” என்று நண்பர் நா.கணேசன் ஈரோட்டுப் பெரியாரை துணைக்கொண்டால் நாம் எங்கே போய் முட்டிக் கொள்வது? மஞ்சட் கண்ணாடி போட்டுப் பார்த்தால் உலகம் மஞ்சளாய்த் தான் தெரியும். "ஆமாங்க! கண்ணகி ஒரு terrorist. இப்பொழுது உங்கள் மனம் மாறியதா? சிலம்பு ஒரு முட்டாள்தனமான புதினம்.” என்று சொல்வதை இவர் போன்றார் எதிர்பார்க்கிறார் போலும். நாகசாமிக்காகச் சிலம்பின் மதிப்பைக் குறைப்பதில் நா. கணேசன் போல் சிலருக்கு அவ்வளவு ஆர்வம். சரி விளக்கத்திற்கு வருவோம்.
      .
கோத்தொழிலாளரொடு கொற்றவன் கோடி, வேத்தியலிழந்த வியனிலம்போல, இங்கே வெங்கதிர் வேந்தன் வேனலங் கிழவனோடு கோடிக் கொள்கிறானாம்.

புவி சூரியனைச் சுற்றும் வலயத்தில் ஓராண்டில் 4 முகன நாட்கள் உண்டு என்று முன்னாற் சொன்னேன். அவற்றில் 2 ஒக்கநாட்கள். மற்று இரண்டில் ஒன்று வேனில் முடங்கல் (summer solstice. இற்றைக் காலங்களில் சூன் 21 இல் நடைபெறும். சிலப்பதிகாரக் காலத்தில் சூலை 15 இல் நடைபெற்றது.) இன்னொன்று பனிமுடங்கல் (winter solstice. இற்றைக் காலங்களில் திசம்பர் 22 இல் நடைபெறும். சிலம்புக் காலத்தில் இது பொங்கலுக்கு அருகில் ஏப்ரல் 14 இல் நடைபெற்றது.) கோடை உச்சமென்பது வேனில் முடங்கலே. வேனில் முடங்கலும், பனி முடங்கலும் புவியின் நாலாம் அசைவான நெற்றாட்டத்தால் (nutation) நெடுங்காலப் பாதிப்பிற்கு உள்ளாகும். அதாவது அவ்வியக்கத்தால் வேனில் முடங்கல் ஒரு சுழற்சிப் பருவத்தை ஒட்டி மிகச் சூடும், குறைவான சூடுமாய் ஆகிவிடும். இந்த நெடுங்கால மாற்றம் போக 12 ஆண்டிற்கு ஒரு முறை சூரியனில் தோன்றும், மறையும் சூரியப் புள்ளிகளாலுங் கோடை கூடுவதுங் குறைவதுமுண்டு. சூரியப்புள்ளிகளால் ஆகும் சூட்டுக் காலத்தையே பஞ்ச காலம் என்றார். அது பெரும்பாலும் தாது ஆண்டிலும் (தாது+12, தாது+24, தாது+36, தாது+48) ஆண்டுகளிலும் நடைபெறுவதாய் ஒரு கணக்கும் உண்டு.

ஏதோவொரு காரணத்தால் வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன் தான் நலந் திருகத் (தான் நலந் திருகிப்போக= அளவிற்கு மீறிய கோடை கூடிப் போக) தன்மையிற் குன்றி (எல்லா ஆண்டுமுள்ள வளம் தருந் தன்மையிற் குன்றி) ”முல்லையுங் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவங் கொள்ளும்“ என்று இளங்கோ சொல்வார். பல தமிழறிஞரும் இம் 3 வரிகளைப் பாலை வரையறையாகக் கொள்கிறாரே ஒழிய, என்ன காலமென்பதிற் கோட்டை விடுகிறார். எல்லாக் காலங்களிலும், முல்லையுங் குறிஞ்சியும் திரிந்து பாலை ஆகாது. இவ்வாண்டு நல்ல மழை பெய்து,. ஏரி-குளங்கள் நிறைந்தன; அடுத்தாண்டு இளவேனிற் காலத்திலும் கோடையிலுங் கூட சிலபோது மழை பெய்கிறது; இந்நிலையில் அடுத்தாண்டு பாலை ஏற்படுமா? ஏற்படாது.

இங்கே ஒரு கட்டியம் (condition) இருக்கிறது. அதைப் பலரும் மறந்து விடுகிறார். வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன் ”தான் நலம் திருக தன்மையிற் குன்றிய” காலத்திற்றான் பாலை ஏற்படும். இப்பொழுது சூரியப் புள்ளிகளைப்பற்றி ஓர்ந்து பாருங்கள். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனின் நலம் திருகிக் கொள்கிறது. தன் வளந்தரும் தன்மையிற் குன்றிப் போகிறது. (மேலையர் 11 இலிருந்து 12 ஆண்டுகள் என்று துல்லியக் கணக்குச் சொல்வார். இந்திய வானியல் அன்றைக்கிருந்த அறிவில் 12 ஆண்டுகள் என்றது.) இதைத் தான் பஞ்ச காலம் என்கிறோம். மாங்காட்டுப் பார்ப்பான் கோவலனைப் பார்த்து, “என்னைய்யா, பஞ்சகாலம் ஏற்படுஞ் சமயத்தில் பெண்டாட்டியோடு இங்கே வந்திருக்கிறாய்?  உங்களூர் போல நீர்வளம் கூடிய நாடு இது அல்லப்பா? இது வறுபடும் நாடு” என்கிறான். அடுத்த பகுதிக்கு வருவோம்.

அன்புடன்,
இராம.கி.   

Friday, August 30, 2019

சிலம்பு ஐயங்கள் - 8

அடுத்து திருவரங்கம், திருவேங்கடம் பற்றிப் பேசிவிட்டு மதுரைக்கான 3 வழிகளுக்குச் செல்லப்போகிறோம். தீது தீர்ச் சிறப்பின் தென்னனை வாழ்த்திய மாமுது மறையோனிடம் ”யாது நும்மூர்? யாது ஈங்கண் வரவு?” என்று கோவலன் கேட்க,

நீல மேகம் நெடும்பொற் குன்றத்துப்
பால்விரித்து அகலாது படிந்ததுபோல்
ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறல்
பாயற் பள்ளி பலதொழுது ஏத்த
விரிதிரைக் காவிரி வியம்பெருந் துருத்தித்
திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்

என்று 35-40 ஆம் வரிகளில் அரங்கத்தம்மானைப் பற்றி மறையோன் கூறுகிறான். மலைப் பாம்பின் மேற்பக்கம் முழுக் கருப்பாகவும், கீழ்ப்பக்கம் வெண்மையாகவும் இருக்கும். இத்தகைப் பாம்பு சுற்றிச் சுற்றி வளைத்து பாயற்பள்ளி அமைப்பது, எப்படியிருக்கிறதாம்? நெடிய பொற்குன்றத்தின் எல்லாப் பக்கங்களிலும் விரிந்து கருமேகம் படிந்ததுபோல் இருக்கிறதாம். இங்கே ஆயிரந் தலைகள் என்பது உயர்வுநவிற்சி (இயற்கையில் எப்போதாவது இருதலைப் பாம்புகள் பிறப்பதுண்டு.) விரியும் குறு அலைகளையுடைய அகன்ற பெரும் துருத்தியின் (காவிரியில் திருவரங்கத் தீவு இன்றும்  துருத்திக்கொண்டு தான் உள்ளது) பாயற்பள்ளியில் எல்லோரும் தொழுது ஏத்தும்படி திரு அமர் மார்பன் கிடந்த வண்ணமும் - என்ற விவரிப்பு நளினமானது. அடுத்து,

வீங்குநீர் அருவி வேங்கடமென்னும்
ஓங்குயர் மையத்து உச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து
மின்னுக்கோடி யுடுத்து விளங்குவிற் பூண்டு
நன்னிற மேகம் நின்றது போல
பகையணங் காழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி
நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
பொலம்பூ ஆடையிற் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்

என்ற 31-51 ஆம் வரிகள் வேங்கடத்துச் சிறப்பைக் கூறுகின்றன. வேங்கடம் என்பது நண்பர் நூ.த.லோ.சு. சொன்னபடி சிலம்பின் காலத்தில் வேங்கடம் (வேகுங் கடம் வேங்கடம். இன்றுள்ள இராயல சீமையிற் பாதியை இது குறிக்கும்.) என்ற பரப்பையும் வேங்கடத்துள் நிற்கும் 7 மலைகளையுங் குறிக்கும். வேங்கடத்திற்கு மேலுள்ள நல்ல மலையைச் சுற்றியுள்ள பகுதியும் வேகுங் கடம் தான். ஆனால் சங்க காலத்தில் அது மொழிபெயர் தேயமென்ற பெயரைக் கொள்ளும். மாமூலனார் நிறையப் பேசியுள்ளார். மொழிபெயர் தேயம் இன்னும் வடக்கே போய் நூற்றுவர் கன்னர் (சாதவா கன்னர்) அரசைத் தொடும்.  [வெங்காலூர்க் குணா பேசிய ”விந்தமலைக்” குறிப்பை  வேறு ஒரு கட்டுரையில் பேசுவேன்  வேங்கடத்திற்கு முற்றிலும் புதிய பார்வையை அவர் கருத்து நல்குகிறது. வேங்கடம் பற்றிப் பேச நிறைய இருக்கிறது. தமிழர் பலரும் சரியாக உணரக்கூடவில்லை.]

இன்றும் திருவேங்கட மலைக்குள் போகும்போது ஒரு வறண்டுபோன அருவியைப் பார்க்கலாம். (கோயில் நிருவாகத்தார் மறுபடியும் அதைப் புதுப்பிக்க முயல்கிறார். கோயிலுக்குச் செல்வங் கொட்டி வழியும் போது இதுபோல் அருவியைப் புதுப்பிக்க முடியாதா, என்ன? அக்காலத்தில் அது வீங்குநீர் அருவியாய் இருந்தது போலும். அம்மலையின் உச்சியில் ஒரு பக்கம் ஞாயிறும், இன்னொரு பக்கம் திங்களும் ஓங்கி நிற்க இடைப்படும் இடத்தில் ஒளி பொருந்திய கோடியுடையை உடுத்தி வானவில்லைக் கையிற் தரித்து நல்ல நிறங் (கருநிறம்) கொண்ட மேகம் நின்றது போல் பகைவர் அணங்கிப் போகும் (ஆட்பட்டுப் போகும்) ஆழியையும், பால்வெண் சங்கத்தையும் தன் தகைபெறும் தாமரைக்கையில் ஏந்தி நலம் கிளர்த்துகின்ற ஆரத்தை மார்பிற் பூண்டு, பொற்பூ ஆடையிற் பொலிந்து (பொற்பூ ஆடையைத்தான் பீத அம்பரம் என்று ஆண்டாளும் ஆழ்வாரும் சொல்லிச்சொல்லிக் குதுகலிப்பர்) தோன்றிய செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும் - திருவரங்கத்தை விட இது இன்னும் நளினமான விவரிப்பு.

இந்த இரு இடங்களையும் காணவந்தேன்.  நான் குடமலை மாங்காட்டில் உள்ளேன். தென்னவன் நாட்டுச்சிறப்பும் செய்கையும் கண்மணி குளிப்பக் காண்டேன் ஆதலின் வாழ்த்திவந்திருந்தேன் இதுவே என் வரவு என்று மாங்காட்டு மறையோன் சொல்லுகிறான்.

இதில் கவனிக்கவேண்டியது திருவரங்கத்தையும், வேங்கடத்தையும் பார்க்க வந்த மாங்காட்டு மறையோன், மதுரைக்குச் செல்லும் 3 வழியையும் விவரிக்கும் போது திருமால்குன்றம் பற்றி ஓரளவு மட்டுமே நிறைவின்றிச் சொல்வான். அதில் அரங்கம் வேங்கடம் போல் ஆழ்ந்த உணர்வு கலந்திருக்காது. ஏதோ நிறைவில்லாதது போல் தெரியும். பேரா. தொ.பரமசிவன் தன் முனைவர் பட்ட ஆய்வேட்டில் திருமால் குன்றம் என்பது ஒருகாலத்தில் புத்த ஆராமமாய் இருந்திருக்கலாமென்று பல்வேறு வகையில் நிறுவுவார். (அருமையான ஆய்வேடு, பொத்தகமாயும் வெளிவந்தது. தமிழினி வெளியீடு.) அப்படி ஆகின் இம்மாற்றம் கி.மு.75 க்கும் முன் நடந்திருக்க வேண்டும். எத்தனையோ புத்த, செயின, அற்றுவிகக் கோயில்கள் சிவ, விண்ணவக் கோயில்களாய் மாற்றம் பெற்றுள்ளன. அவற்றில் இதுவும் ஒன்றோ என்னவோ?  (எங்கெல்லாம் மொட்டை போடுகிறோமோ, அங்கெலாம் சமய மாற்றங்கள் ஏதோவொரு காலத்தில் பெரும்பாலும் நடந்திருக்கலாம். திருப்பதி மொட்டையும், “அக் கோயிலின் தோற்றம் என்ன?” என்று நம்மைக் கேள்வி கேட்க வைக்கிறது. வேறு பெருமாள் கோயில்களில் இது நடப்பதே இல்லையே?)       

இனி மூன்று வழிகளுக்கு வருவோம்.

அன்புடன்,
இராம.கி.

Thursday, August 29, 2019

சிலம்பு ஐயங்கள் - 7

திங்கட் செல்வம் திருக்குலம் விளங்க
செங்கண் ஆயிரத்தோன் திறல்விளங்கு ஆரம்
பொங்கொளி மார்பிற் பூண்டோன் வாழி

என்று காடுகாண்காதையில் வரும் இந்த 23-25 ஆம் வரிகள் முற்றிலும் தொன்மங்களையே குறிக்கின்றன. பாண்டியர் திங்கட் குலமென்றும், சோழர் ஞாயிற்றுக் குலமென்றும், சேரர் நெருப்புக் குலமென்றும் பலருஞ் சொல்வர். முன்னது இரண்டிற்கும் ஆதாரம் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் நெருப்புக் குலத்திற்கு ஆதாரங் கண்டேனில்லை. இந்திரனை ஆயிரங் கண்ணோன் என்பதற்கும் இழிவுக் கதையையே கேள்விப்பட்டுள்ளேன். இங்கே ஆரம் பற்றிச் சொல்கையில் ஆயிரங்கண்ணோன் என்பதால் வேறேதோ நற் பொருள் ஆயிரங்கண்ணோனுக்கு இருக்கலாம். ஆனால் எங்குஞ் சொல்லப் பட வில்லை. ஒருவேளை ஆயிரக்கணக்கில் செந்தழும்புகளை உடல் முழுக்கப் பெற்றானோ என்னவோ? மொத்தத்தில் நற்பொருளை எந்த உரையாசிரியரும் தரவில்லை. எனவே இது விளக்காத கூற்று. இந்திரன் ஆரம் பாண்டியனிடம் சேர்ந்ததும் தொன்மக் கதையால் தெரியவரும். இக் கதைகளால் நாமொன்றும் வரலாறு அறியப்போவதில்லை. எனவே ஒதுக்குகிறேன். அடுத்து,:

முடிவளை யுடைத்தோன் முதல்வன் சென்னி என்று
இடியுடைப் பெருமழை எய்தாது ஏகப்
பிழையா விளையுட் பெருவளஞ் சுரப்ப
மழைபிணித்து ஆண்ட மன்னவன் வாழ்க எனத்

என்ற 26-29 ஆம் வரிகள் ஆழத் தோயவேண்டியவை. ஒன்று பாண்டிய அரசரின் அடையாளம். இன்னொன்று நாட்டின் வெதணம் (Climate). [தவிரப் ”பஞ்சகாலமென எப்படிச்சொல்வீர்?” என்று நண்பர் சிங்கநெஞ்சன் ஒரு முறை கேட்டிருந்தார். பலவிடங்களில் குறிப்புகளுள்ளன. ஒருகுறிப்பு இங்குள்ளது.] முதலிற் பாண்டியர் அடையாளத்திற்கு வருவோம். சென்னி= சிறப்பு. பாண்டிய முதல்வன் சிறப்பு, முடியில் வளையுடன் இருத்தலே. வளை= சங்கு. அதாவது இவன் தன்முடியிற் சங்கு பதித்துள்ளான். அடிப்படையிற் பாண்டியர் கொற்கையிற் தோன்றியவர். மாறோக்கமென அப்பகுதியைச் சொல்வர். கொற்கைப் பரதவர் வழியினரே பின்னாளிற் பாண்டியரானார். பழந்தலைநகர்களான தென்மதுரையும், கவாடபுரமும் நெய்தல் நிலங்களில் இருந்தன. அவற்றை இழந்தபிறகே வைகை மதிரைக்கு வந்துசேர்ந்தார். [இற்றை மதுரைகூடச் சங்ககால மதுரையில்லை. ஒருவேளை அண்மையில் கண்டுபிடித்த கீழடித் தோண்டலுக்குள் இருக்கும் நகரமோ என்பது சுவையார ஊகம்.]

70000 ஆண்டுகளுக்குமுன் M130 வகை மாந்தன் இந்தியவினுள் நுழைந்தபோது (A Journy of Man - A Genetic  Odyssey by Spencer Wells) கடற்கரையை ஒட்டிப் பரவியதாய் இற்றை அறிவியல் சொல்லும். இவரை நெய்தலாரென்றே (Coastal peolple) ஈனியல் கூறும். பாண்டிய இனக்குழு இந்நெய்தலாரிலிருந்து நெடுங்காலம் முன்னே தெற்கே கிளைத்த இனக்குழுவாகும். குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல் என்ற திணைவரிசை பின்னாலெழுந்த அணி வரிசையாகும். (தமிழர் குறிஞ்சியில் தொடங்கியதாகவே பலரும் நினைக்கிறார். அப்படித் தேவையில்லை) பாண்டியரின் முடிவளை, மீன்கொடி, கவரி/சோழிகளின் நாணயமரபு, முத்துவிழைவு, நித்திலின்(> நித்தி>நிதி; முத்து) செல்வ வளர்ச்சி, முத்துவழி மாந்தப்பெயர்கள், முத்துவழி ஊர்ப்பெயர்கள், கோரை ஊர்ப்பெயர்கள் (கொற்கை-மாறோக்கம் என்ற சொற்கள் கோரையாற் தோன்றின), [புனை நாவாய், கோரைப்பாய், கோரைப் படியாற்றங்கள் (applications), கோரைப் பயன்பாடுகள், சுறா எலும்பு / கற்றாழை நார் சேர்ந்த இசைக்கருவி எனக் கணக்கற்ற செய்திகளைப் பார்த்தால் நெய்தலார் வழித் தோற்றம் நமக்கு உறுதிப்படும். வேறொரு கட்டுரையில் விரித்துரைப்பேன்.   

அடுத்துப் பாண்டிய நாடு,  அடிப்படையில் மழைவளங் குன்றியது. (இன்றும் குமரிமாவட்டம் தவிர்த்து திருச்சிக்குத் தெற்கே தென்றமிழ்நாடு வறட்சிப் பகுதியே. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இன்றும் கடும்பஞ்சமுண்டு. அன்றும் அப்படியே.) பாண்டியரின் இனவாழ்க்கை கடலைச் சார்ந்தது. கடலிற் போகிறவர், கடலை நம்பியோர் மழைவேண்டாமென நினைப்பார். இதை மாங்காட்டுப் பார்ப்பான்  உருவகத்தால் உணர்த்துகிறான். இடியுடைய பெரு மழை பாண்டியனைப் பார்த்து ”இவன்முடியில் சங்கு பதித்திருக்கிறான். இவன் எனை விரும்பான். நான் இங்கு ஏன் பெய்யவேண்டும்?” என்று எய்யாது ஏகுகிறதாம். பரதவனாய்த் தொடங்கிய பாண்டியன் இப்பொழுது குறிஞ்சி, முல்லை, மருத நில மக்களுக்கும் மன்னவன் ஆகியதால், ”பிழையா விளையுட் பெருவளஞ் சுரப்பதற்காக” மழையைப் பிணித்துக் கட்டிப் போட்டானாம். குறிப்பு இதுதான்; மழையைப் பிணித்துக் கட்டிப்போடுவது பாண்டியனுக்குக் கடமையாகிறது. எந்நாட்டில் மழையைக் கட்டிப்போட நினைப்பார்? மழையிலாப் பஞ்சநாட்டிலே தானே? ஆகப் பாண்டி நாடு வறள்நாடு என்பது இங்கே குறிப்பாற் பெறப்படுகிறது. வறழ்ச்சி குறிக்கும் வேறிடங்களைப் பின்னாற் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, August 28, 2019

Candi Borobudur- பொதியிலார் சாமிநடையும், வைகறையும் - 2

 அடுத்து Borobudur- க்கு அவருவோம். மலாய் மொழியில் பெயரடை என்பது பெயருக்கு அப்புறம் வரும். ”நல்ல பையன்” என்பது மலாய் மொழியில், “பையன் நல்ல” என்றாகும். சிவன்கோயில்,  “கோயில்சிவன்” என்றாகும். இத் தொடர் கட்டமைப்பை நினைவில் கொண்டால் boro பெயர். budur, Boro விற்கான பெயரடை என்பது புலப்படும். Boro விற்குத் தமிழில் அடித்தொடர்பு உண்டா எனில் உண்டு. மேலே வரும் விக்கிப்பீடியாக் குறிப்பில் Dutch archaeologist A.J. Bernet Kempers இன் கருத்து ஈர்க்கிறது. சாவா மொழியில் ”விகாரை” boro ஆகியிருக்கலாம் என்பார். ”விகாரையைப்” பொருத்தமின்றி வி-காரம் (=வேறுபட்ட தோற்றம்) என்ற சொல்லோடு தொடர்புறுத்தி மோனியர் வில்லியம்சு காட்டும்.  பாலி அகரமுதலிகள் விகாரை= புத்த பிக்குகள் தங்குமிடம் என்னும். நடுவில் ஒரு கூடமும் சுற்றிலும் துறவிகள் தங்கச் சிறு அறைகளும் கொண்டது விகார்/விகாரை ஆகும்.

”விகார்”, “பிகார்” என்று பாலி/பாகதத்தில் புழங்கும். (இற்றைப் ”பீகார்” மாநிலப் பெயரும் இதே மாற்றொலிப்புத் தான்.) விகாரின் பயன்பொருள் கொடுத்த பாலி அகரமுதலிகள் சொற்பிறப்புத் தாரா. சங்கத அகரமுதலியோ தவறான சொற்பிறப்பு காட்டும். பாகதம், தமிழ் இவற்றிடைய நிறையக் கொடுக்கல் வாங்கல் உண்டு. பாகதமே வடதமிழாய் இருக்கலாமென்று பாவாணர் உரைப்பார். வள் எனும் தமிழ்வேருக்கு வளை-தல், சாய்-தல் பொருளுண்டு. இன்றுங்கூட வீட்டுக்குவந்த விருந்தினரை, “வேண்டுமெனில் கொஞ்சநேரம் சாயுங்களேன்?” என்று சொல்வதில்லையா? ”சாய்ந்து அமருங்கள், ஓய்வெடுங்கள், அல்லது படுத்துக் கொள்ளுங்கள், மொத்தத்தில் தங்குங்கள்” என்பதே அதன்பொருள்.

வள்>வய்>வை என்பது தமிழில் தங்குதலைக் குறிக்கும் ஓரெழுத்து ஒரு மொழி.   ”அப்பொருளை இங்கே வை” என்பது இருத்தலைக் குறிப்பது.  வைகுதல் = தங்குதல். (”நெடுந்திமிற் றெழிலோடு வைகிய தந்தைக்கு”- அகநா. 60); வைகல்= தங்குகை.  கழிகை (”மத்துக் கயிறடா வைகற்பொழுது நினையூஉ”- பதிற்று. 71, 16), நாள் (சூரியன் தங்கும் நேரம்;  “இன்னா வைகல் வாரா முன்னே செய்ந்நீ  முன்னிய வினையே”- புறநா.363.), தங்கும் வேளை (”மாதவி தன்னோடு அணைவுறு வைகலின் அயர்ந்தனன்”- சிலப் 3, 173); வைகலும் = நாள்தோறும் (”அடிசில் பிறர் நுகர்க வைகலும்” - புற.வெ.,ஆ/ 10, 8); வைகறை = விடியல் (”வைகறை மலரும் நெய்தல்”- ஐங்குறு. 188)  இதுபோக, வைகறை என்ற சொல்லிற்கு தங்குமிடம் என்ற பொருளும் உண்டு. 

இனித் தமிழுக்கும் வடபால் மொழிகளுக்குமான இடையாற்றம் பார்ப்போம். விகர, வேகாரத்தில் தொடங்கும் வினைகளில் பெயர்கள் பிறக்கையில் வடபால் மொழிகளில் அவை வைகாரமாகும். ”வித்” இல் வேதம் பிறந்ததாயும் வேதத்திலிருந்து 2 ஆம் நிலைப்பெயராய் வைதிகம் பிறந்ததாயுஞ் சொல்வர். விகானசத்திலிருந்து வைகானச ஆகமம் பிறந்ததாம். நம்மூர்ச் சிவத்தைக் கடன்வாங்கிச் சைவமாக்குவர். விண்ணவம் வைணவமாகும்.. இதுபோல் பல்வெறு இகரவழிக் கடன் சொற்கள் வடமொழிச் சொற்களை ஐகாரத்தில் தோன்ற வைக்கும். கடன் வாங்கையில் சில சொற்கள் தவறாய்த் திரிவதும் உண்டு. வைகறையை 2 ஆம் நிலை சங்கதப் பெயராய்க் கொண்டு விகாரதி எனும் முதல்நிலை வினையாகவும் விகாரெனும் முதல்நிலைப் பெயராகவும் தவறாய்த் திரிப்பர். தமிழ்நாட்டின்  ஏராளம் இறைவர் இறைவி பெயர்களும் இதுபோல் தவறாய்ச் சங்கதத்தில் மாறியுள்ளன. wrong translation and wrong transliteration. இத் தவறான பெயர்களை அறியாமல் பயன் படுத்துகிறோம். ஆழ்ந்து பார்த்தால், பெரும்பாலும் boro என்பது நம்மூர் வைகறை (வைகு + அறை) >விகாரையைக் குறிக்கவே வாய்ப்புண்டு.

இனி புதூருக்கு வருவோம்.  புத்தமதத்தின் பல்வேறு பிரிவுகளை இருபெரும் பிரிவினுள் அடக்குவார். ஒன்று பழையது, புத்தருக்குச் சற்றே பிந்தையது; பொ.உ.மு. 473க்கு அப்புறம் எழுந்தது, கொஞ்சம் கட்டுப்பெட்டியானது. இதைத் தேரவாதம் என்பார். (மாற்றார் இதை ஈனயானம் சிறுபான்மையர் வழி என்றும் உரைப்பார். தேரவாதத்தார் ஈனயானம் என்று சொல்லார் ) நமக்கு நன்கு தெரிந்த இற்றைத் தேர வாத நாடுகள் இலங்கையும் மியன்மாரும் ஆகும். தேரவாதத்திற்கு மாற்றாய் புத்தருக்கு  வெகுநாட்கள் கழித்து பொ.உ .200 களில் மகாயானம் (பெரும்பான்மையர் வழி) எழுந்தது. புத்த நிலைக்கு முந்தை நிலையான போதிசத்துவ நிலையின் இருப்பை இந்த வழி பெரிதும் நம்பும்.  தேரவாதம் பாலியைப் பயன்படுத்த மாகாயானம் பாலி கலந்த சங்கதம் பயனுறுத்தும், “எதிர்காலத்தில் அமிதவ புத்தர் என்பவர் எழுவார். அவர் இப்போது போதிசத்துவராய் வேறெங்கோ உள்ளார்” என்றும் அவர் பெயர் ”அவலோகிதர்” என்றும் மகாயானம் நம்பும்.

உலகில் சீனம் (திபெத் இதில் சேர்ந்தது. ஆனால் மகாயானத்தின் வேறு வகையான வயிரயானம்/வஜ்ரயானம் அங்கு பின்பற்றப் படுகிறது.), சப்பான், தாய்லந்து, கம்போடியா, வியத்நாம், லாவோசு போன்ற நாடுகளில் மகா யானமே  பெரிதும் புழங்குகிறது. தமிழ் நாட்டிலும் தேரவாதம் பாண்டி நாட்டிலும், சோழநாடு, தொண்டைநாடு போன்றவற்றில் மகாயானமுமே பொ.உ.200-1000 வரை பரவிச் சிறந்தன. பொ.உ.400-800 களில் தமிழகக் காஞ்சியும், ஆந்திர அமராவதியுமே இந்தியாவில் மகாயானத்தின் சிறப்பான நகரங்கள்/கருவிடங்கள் ஆகும். தமிழக, ஆந்திர, கலிங்கக் கடற்கரையில் இருந்தே மகாயானம் உலகெங்கும் பரவியது. “நெல்லும், தமிழரும் தென்கிழக்காசியாவும்” என்ற தொடரில் தமிழகக் கடல்வழித் தொடர்புகள் பற்றிப் பேசினேன். இந்தோனேசியாவோடும் மலேசியாவோடும் பெரிதும் உறவுகொண்ட இந்தியப் பகுதி தமிழ்நாடே. இந்தோனேசியாவிலும் இசுலாத்திற்கு முன்னர் சிவநெறி, புத்தநெறிகள் பரவியிருந்தன. அங்குள்ள பழங்கட்டுமானங்கள் தமிழர் தொடர்பைப் பெரிதும் உறுதி செய்கின்றன. சைலேந்திரர் தமிழர் தொடர்பால் மகாயானக் கருத்தியலில் ஆழ்ந்து இருந்ததாலேயே “Borobudur” ஐக் கட்டியுள்ளார்.

மகாயானத்தில் அவலோகிதர் என்ற கருத்தீடு ஆழமானது (பார்க்க: https://en.wikipedia.org/wiki/Avalokite%C5%9Bvara) இந்த அவலோகிதரின் இருப்பிடமாய் நம் பொதியமலையையே பல்வேறு ஆய்வாளர் குறிப்பிடுவர். திபெத்தின் வயிரயானம் பொதியிலை பொத்தாலா/பொத்தாரா என்று சொல்லும். லகர, ரகர வேறுபாடு நாட்டுக்கு நாடு வேறுபடும். இந்தியாவிலேயே வடமேற்கில் ரகரம் பயிலும் சொற்கள் வடகிழக்கில் லகரமாகும். பொதியில், மேற்குத் தொடர்ச்சிமலையின் தென்பகுதி. தவிர பொது+இல்= அம்பலம், கோயில் என்றும் பொருள் கொள்ளும்.  ”தூங்கெயில்” தொடரில் (https://valavu.blogspot.com/2018/10/1.html, https://valavu.blogspot.com/2018/10/2_27.html), அவலோகிதர் பற்றிச் சொன்னேன்.

அவலோகிதர் என்ற பாகதச்சொல் சங்கத் தமிழில் பயின்ற ஆந்தையாரின் மொழிபெயர்ப்பாய்த் தெரிகிறது. தூங்கெயில் தொடரிலிருந்து தேவை ஆனவற்றைக் கீழே வெட்டியொட்டியுள்ளேன். அவலோகிதத் தேடலுக்கு மணிமேகலைக்கும் வீரசோழியத்திற்கும் போகவேண்டும், ”உலகிற் பலரும் மாறாது புகழ்ந்து ஓங்குயர் விழுச்சீர் கொண்ட புகார்மூதூரின் பண்பு மேலும் மேம்படுவதாய், ஓங்குயர் பொதியமலையின் அருந்தவன் உரைத்தபடி, தூங்கெயிலெறிந்த தொடித்தோட்செம்பியன் வானவர் அரசனை வணங்கி, 28 நாள் இந்திரவிழாவின் போது புகாரில் தங்கியருளக்” கேட்பதாய் மேகலை நூலின் விழாவறை காதை அலங்காரமாய்த் தொடங்கும். 
-----------------------------------
இதில் வரும் பொதியமலை அருந்தவனைச் சங்கதத்தாக்கில், உரைகாரர் பலரும் அகத்தியன் என்பார். பலரும் இதைக் கேள்வி கேட்டதேயில்லை. ”அது சரியா? தேரவாதத்தில் இல்லெனினும், மகா யான, வயிரயானப் (வஜ்ர யானப்) பாதைகளிற் புத்தர் பாராட்டும் அவலோகிதனாய் அவன் ஏன் இருக்கலாகாது?”- என்று நான் கேட்பேன். இதன் தொடர்பாய், 11/12 ஆம் நூற்றாண்டு  வீர ராசேந்திர சோழனின் காலத்தைச்சேர்ந்த புத்தமித்திரரின் வீரசோழியம் 2 ஆம் பாயிரத்தில் வரும் .

ஆயுங் குணத்து அவலோகிதன் பக்கல் அகத்தியன் கேட்டு
ஏயும் புவனிக்கு இயம்பிய தண்டமிழ் ஈங்குரைக்க
நீயும் உளையோ எனில், கருடன் சென்ற நீள்விசும்பில்
ஈயும் பறக்கும்! இதற்கு என்கொலோ சொல்லும்? ஏந்திழையே!

என்ற பாட்டைக் கவனியுங்கள். இதில், ”அவலோகிதனிடங் கேட்டு தண்டமிழ் ஓதிய அகத்தியனுக்குங் கீழ் புத்தமித்திரர் தன்னை இறுத்திக் கொள்வதைப்” பார்த்தால், என் கருத்து ஒன்றும்  புதிதல்ல. பலரிடம் இன்றிருக்கும் மித மிஞ்சிய அகத்தியப் பெருமிதங்கள் சங்கதம்-->தமிழென்ற ஒற்றை வழி உறவு பார்க்கும் அகத்தியதாசரின் வழிப்பட்டுத் தமிழில் வழங்குகின்றன.

அவலோகிதன் யார்? தமிழில் அவன் பெயரென்ன? என்பது அடுத்தகேள்வி. உல்>ஊல்>ஊள்>ஊளை= ஆந்தையோசை. உல்லுகம்>உலூகம், என்பது பாலியில் ஆந்தையைக் குறிக்கும் சொல். ஊளை, ஊளி, உலூக, owl- என்பவை தொடர்புள்ளவை. (இரவில் உணவு தேடுந் துறவியை வேதமறுப்பாளர் ஆந்தையர் என்பார். இன்றும் இரவில் அலைவோரை தமிழரும் ஆந்தை என்போம். அதே பொழுது, இரவு உணவைச் செயின நெறி ஏற்காது. ’அந்தை’க்கு அச்சனென்றும் ”அந்தன்> அந்தனர்>அந்தணர்= பெரியவர்” என்றும் இரா.இளங்குமரன் சொல்வார்.) உலூக> உலூகித என்பது ஔலோகித> அவ லோகித என்று வடமொழியில் திரியும்

இளங்கீரந்தை, பொதுக்கயத்துக் கீரந்தை, எயினந்தை, கோட்டியூர் நல்லந்தை, சாத்தந்தை என்ற சங்ககால அந்தைப் பெயர்களையும், அஞ்சில் ஆந்தை, ஓதலாந்தை, சிறைக்குடியாந்தை, பிசிராந்தை எனும் ஆந்தைப் பெயர்களையும் பார்த்தால், பொதியில் அவலோகிதன் ஏன் பொதியில் ஆந்தை ஆகக்கூடாது? அந்தை> ஆந்தையென்ற இயற்சொல் வளர்ச்சி ஆதன்+ தந்தை= ஆந்தை என்பதை விடப் பொருந்துவதாய்த் தோன்றுகிறது. இன்றுங் கூடக் கிறித்துவப் பாதிரியை அச்சன் என்றே மலையாளத்தில் சொல்வர். அதே மரபில், பிசிராந்தையார் ஏன் பிசிரைச் சேர்ந்த  ஐயனார் கோயிலின் ஆன்மத் தந்தையாய், அற்றுவிக அறிவராய், ஆகக்கூடாது? ஓர்ந்து பாருங்கள். ஆந்தையார் என்பது இயற்பெயர், தொழிற்பெயர் என்பதுபோல் தெரிய வில்லை. இது ஒருவேளை உறவுப் பெயராய், மதிப்புப் பெயராய் இருக்கலாமே? ஒருமுறை அப்படி எண்ணிப்பார்ப்போமே? நம் பார்வை மாறுமே?
--------------------------------------
மேலே சொன்ன வழியில் பார்த்தால் பொதியில் ஆந்தையார் பொதியில் அவலோகிதர் ஆவார்.  சுருங்கச் சொன்னால் பொதியிலார்>பொதியார் என்றுமாவார்.  எனவே Candi Borobudur என்பது ”பொதியார் விகாரைச் சந்நிதி” என்று பொருள்படும்.  அதாவது ”பொதியிலார் சாமிநடையும், வைகறையும்” இங்கே பேசப்படுகின்றன. என் வாழ்நாளில் கம்போடியாவின் அங்கோர் வாட்டை ஒருமுறை பார்த்துவிட்டேன். எப்படியாவது ஒருமுறை Candi Borobudur பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. ”பொதியில் ஆந்தையார் சாமிநடை” என்பது தமிழரின் தாக்கம். ஆனால், தென்கிழக்கு ஆசியர் கட்டுமானம். (எந்நாளும் வரம்பு மீறாதீர். இணையத்தில் அங்கோர்வாட்டைத் தமிழர் கட்டினார் என்ற தவறான செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. அதைப் பரப்புவோர் தம் உண்மை மீறலை உணரவேண்டும்.)

அன்புடன்,
இராம.கி.

Candi Borobudur- பொதியிலார் சாமிநடையும், வைகறையும் - 1

தமிழ் இணையம், தமிழ்க்கணிமை போன்றவற்றைத் தொடங்கியதில், tamil.net எனும் முதல் தமிழ் மடலாடல் குழுவிற்குப் பெரும்பங்குண்டு. பல்வேறு வார்ப்புகள் (எழுத்துருக்கள், fonts), குயவுப் பலகைத் துரவர்கள் (keyboard drivers), மதுரைத் திட்டத் (Project Madurai) தொடக்கம்,  தமிழ்க் கணிமை முயற்சிகள் என எல்லாமும்  tamil.net இல்  தொடங்கின. அதன் மூலமாகவே தமிழ் இணையம், கணிமை போன்றவற்றில் ஆர்வங்கொண்ட  உலகத்தமிழர் பலரும் இணைந்தோம்  பின் தங்களுக்குத் தெரிந்தவகையில் இப்புலனத்தில் பலரும் பங்களித்தார்.  அத் tamil.net ஐத் தொடங்கியவர் சிட்னி பாலாப் பிள்ளையும், முரசு நெடுமாறனும் ஆவர்.

20 ஆண்டுகளின்பின் நினைவுகளை உரசிக் காண்கையில், எத்தனையோ பேரின் பங்களிப்பைக் கொண்டாடிய தமிழ்கூறு நல்லுலகம், பாலாவை இவ்விதயத்தில் ஏன் அவ்வளவு கொண்டாடாது விட்டது என்பது புரியவில்லை. நான் உசாவிய வரையில், தமிழ் இணையம், கணிமையில் ஆர்வமுள்ள பெரும்பாலான தமிழர் இன்றும் அவரை அறியாதவராய் உள்ளார்.  ஒரு வேளை அவரின்  radical, non-conformist போக்கே அவரைச் சற்று விலக்கி வைத்ததோ, என்னவோ? முன்பு மலேசியாவில் இருந்து இப்போது ஆத்திரேலியா சிட்னியில் இருப்பவரான பாலா சரளமாய்த் தமிழ் பேசத் தடுமாறினும் தமிழருக்காக, தமிழர் முன்னேற்றத்திற்காகத் துடிப்பவர். இன்றும் என்னோடு தொடர்பிலுள்லவர்.  அண்மையில் “I’ve sent via Messenger a video of men building the Borobudur complex. Good framework to imagine 1000 CE. Approximation of 600 E at Kallanai.” என்று ஒரு குறுஞ்செய்தியைப் பாலா அனுப்பிச் சுட்டி கொடுத்திருந்தார்.

https://www.facebook.com/tirto.tirtoykis.3/videos/524912968253466/.

அருமையான விழியம். இதன்பின் பேரா. இரமணியின் ”How I wish there is a "social auditing" of the self financing educational institutions! என் இடுகைகள் பலவற்றின் ஸீரியஸ்நெஸ் முகநூல் நண்பர்களுக்குப் போய்ச் சேருகிறதா என்று தெரியவில்லை.” என்ற இடுகையில் (https://www.facebook.com/Dr.N.Ramani/posts/2833968203299353) பாலா, ”புத்தி >புத்தர் >புத்தூர் >பொறபுதூர் (Borobudur); budi>budur >borobudur. Budi Bahasa” என்ற முன்னிகையைப் பாலா இட்டு, என்னையும் சிலரையும் பங்கேற்க அழைத்தார். இதனால் தூண்டப் பட்டு இணையத்தில் “போரோபுதூர்” பற்றித் துழாவினேன். ”https://en.wikipedia.org/wiki/Borobudur” என்ற பதிவையும் படித்தேன்.  அதில் பார்த்த செய்திகள் வருமாறு:
------------------------------
Borobudur, or Barabudur (Indonesian: Candi Borobudur, Javanese: ꦕꦤ꧀ꦣꦶꦧꦫꦧꦸꦣꦸꦂ, romanized: Candhi Barabudhur) is a 9th-century Mahayana Buddhist temple in Magelang Regency, not far from the town of Muntilan, in Central Java, Indonesia.

In Indonesian, ancient temples are referred to as candi; thus locals refer to "Borobudur Temple" as Candi Borobudur. The term candi also loosely describes ancient structures, for example gates and baths. The origins of the name Borobudur, however, are unclear,[12] although the original names of most ancient Indonesian temples are no longer known.[12] The name Borobudur was first written in Raffles's book on Javan history.[13] Raffles wrote about a monument called Borobudur, but there are no older documents suggesting the same name.[12] The only old Javanese manuscript that hints the monument called Budur as a holy Buddhist sanctuary is Nagarakretagama, written by Mpu Prapanca, a Buddhist scholar of Majapahit court, in 1365.[14]

Most candi are named after a nearby village. If it followed Javanese language conventions and was named after the nearby village of Bore, the monument should have been named "BudurBoro". Raffles thought that Budur might correspond to the modern Javanese word Buda ("ancient")—i.e., "ancient Boro". He also suggested that the name might derive from boro, meaning "great" or "honourable" and Budur for Buddha.[12] However, another archaeologist suggests the second component of the name (Budur) comes from Javanese term bhudhara ("mountain").[15]

Another possible etymology by Dutch archaeologist A.J. Bernet Kempers suggests that Borobudur is a corrupted simplified local Javanese pronunciation of Biara Beduhur written in Sanskrit as Vihara Buddha Uhr. The term Buddha-Uhr could mean "the city of Buddhas", while another possible term Beduhur is probably an Old Javanese term, still survived today in Balinese vocabulary, which means "a high place", constructed from the stem word dhuhur or luhur (high). This suggests that Borobudur means vihara of Buddha located on a high place or on a hill.[16]

The construction and inauguration of a sacred Buddhist building—possibly a reference to Borobudur—was mentioned in two inscriptions, both discovered in Kedu, Temanggung Regency. The Karangtengah inscription, dated 824, mentioned a sacred building named Jinalaya (the realm of those who have conquered worldly desire and reached enlightenment), inaugurated by Pramodhawardhani, daughter of Samaratungga. The Tri Tepusan inscription, dated 842, is mentioned in the sima, the (tax-free) lands awarded by Çrī Kahulunnan (Pramodhawardhani) to ensure the funding and maintenance of a Kamūlān called Bhūmisambhāra.[17] Kamūlān is from the word mula, which means "the place of origin", a sacred building to honor the ancestors, probably those of the Sailendras. Casparis suggested that Bhūmi Sambhāra Bhudhāra, which in Sanskrit means "the mountain of combined virtues of the ten stages of Boddhisattvahood", was the original name of Borobudur.[18]
----------------------------------
”Candi Borobudur” என்னுஞ் சொல்லில் தமிழ் சற்று ஒளிந்துள்ளது. தென்கிழக்காசியாவில் இவற்றைச் சங்கதச் சொல்லாய் மடைமாற்றுவது  தொடர்ந்து நடைபெற்றுள்ளது. உள்ளே புதைந்துள்ள தமிழ்ச்சொல் அறியப்படாமலே போகிறது. சற்றே ஆய்ந்தால் அது புலப்படும்.  (எத்தனை தமிழறிஞர் இதைக் கவனிக்கிறார் சொல்லுங்கள்? தமிழ் வெற்றிடம் விட்டால் சங்கதம் உட்புகும்.) முதலில் சொல்லவேண்டியது candi எனும் மலாய்/இந்தோனேசியச் சொல் பற்றியாகும். இது தமிழ்ச்சொல்லான சாமிநடையைக் (திருநிலையைக்) குறிக்கும். எப்படி? சங்க இலக்கிய  வேலன்/அணங்கு வெறியாட்டு உங்களுக்கு நினைவிற்கு வருகிறதா?  சற்று முயலுங்கள்

நிறுவனப்பட்ட சமயங்கள் எழுமுன், குலதெய்வங்களையே நாம் கும்பிட்டுவந்தோம். முன்னோர் நடுகற்களும் குலதெய்வ அடையாளங்கள் ஆயின. சிலபோது முன்னோர் ஆவி உயிரார் உடம்பினுள் இறங்குவதாகவும் சிலவற்றைக் குறித்து நமக்கது சொல்வதாகவும் நம்மூரில் நம்பிக்கையுண்டு. [அறிவியலின் படி இது சரியா என்பது வேறு விதயம்.] ஆனால் இதை நம் ஊரில் நம்புவோர் மிகுதி. இலக்கியக் குறிப்பான அணங்கு வெறியாட்டு இன்றும் நடக்கிறது. சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ”சாமி” வருவதென இன்றிதைச் சொல்வர். சாமியாடிமேல் வேலன்/அணங்கு/சாமி இறங்குவதை ”சாமி நடம் புரியுது” என்பார்.  சாமி நடத்தைச் சாமிநதம்> சாம்நதம்>சாந்நதம்>சந்நதம் என்று சங்கதம் விதப்பாய் ஒலிபெயர்க்கும். ”சாந்நதம்” நடக்குமிடம் அவரொலிப்பில் ”சந்நதி”யாகும்.  நிறுவனக் கோயில்கள் எழுந்தபின், மூலவர் இருக்குமிடமும் ”சந்நதி” ஆனது.  சந்நதி, சங்கதமல்ல. தமிழ்ச்சொல்லின் விந்தை ஒலித்திரிவு.

ஆய்ந்துபார்த்தால் நெருப்பைக் கும்பிட்டு, யாகம்வளர்க்கும் வேதநெறியில் சந்நிதிக்குப் பொருளில்லை. நம்கோயில்களில் இன்றும் சந்நதியை ”சாமி நடை”என்றும், ”கோயில்நடை” என்றும்,”நடை சாற்றியதா?” என்றுஞ் சொல்வதைக் கவனித்தால்  சந்நதியின் தமிழ்வேர் சட்டெனப் புரியும், நம்மூர் சாமிநடையே சாம்நடை>சாந்நடை ஆகி, இந்தோனேசிய, மலேசியாவில் சாண்டியாகி உள்ளது. “சாமியை” சாந்தி செய்து அமைதிப் படுத்தி பூசை செய்வானை ஒருகாலத்தில் சாந்தி என்றழைத்தார். பல ஐயனார் கோயில் வேளகாரரும் சாந்தி எனப்பட்டார்.  சபரிமலைத் தலைமைப்பூசாரி இன்றும் மேல்சாந்தி எனப்படுவார். சாமிநடை, சாந்தி, போன்றவற்றிற்கும் சங்கதத்திற்கும் தொடர்பில்லை. நம்மவற்றைச் சங்கதத்திற்குத் தாரை வார்ப்பதில் நாம் ஏன் ஈடுபடுகிறோம்?

அன்புடன்,
இராம.கி.

சிலம்பு ஐயங்கள் - 6

 வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை
ஊழிதொறு ஊழிதொறு உலகங் காக்க
அடியில் தன்னளவு அரசர்க்கு உணர்த்தி
வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு
தென்றிசை ஆண்ட தென்னவன் வாழி

என்ற காடுகாண் காதை 15- 22 ஆம் வரிகள் ஏதோவொரு பட்டறிவுத் தொன்மத்தை நமக்கு உணர்த்துகின்றன. இது என்னவென்று புரியாது இன்றும் பல தமிழர் தடுமாறுகிறார். முதலில் அரசர், மன்னர், வேந்தர் என்று மூன்று சொல் விதப்புக்களை அறிவோம். அரசர் என்போர் பெரும்பாலும் வலிவுடைய இனக்குழுத் தலைவர் (உரவர்>அரவர்>அரகர்>அரசர் என்பார் பாவாணர்); மன்னர் என்போர் மன்னிநிலைத்தவர்- பல இனக்குழுக்களுக்குச் சேர்ந்த தலைவர். (மொத்தத்திற் கணபதங்களின் தலைவர்); வேந்தர் = முடிசூடியவர், இவரைத்தான் koning என்று மேலைமொழிகளிற் சொல்வார். மன்னவர் பெருந்தகை என்பதும் வேந்தருக்குச் சமமே. இங்கே தென்னவன் என்பது உறுதியாகப் பாண்டியனையே குறிக்கிறது.

என் கட்டுரைகளில் பல தடவை சொல்லியிருக்கிறேன். (சிலம்பின் காலம் என்ற என் நூலையும் பாருங்கள்.) சேர, சோழ, பாண்டியர் என்ற பெயர்கள் சந்தனம் பூசிய, மஞ்சள்/குங்குமம் சூடிக்கொண்ட, திருநீறுபூசிய பென்னம் பெரு இனக்குழுக்களைக் குறித்தன. (இவையெலாம் சமய அடையாளங்களே அல்ல. வெறும் இனக்குழு அடையாளங்கள். இன்றும் இவற்றைக் காட்டிக் கொண்டிருக்கிறோம். பலபோது கலந்தும் அணிகிறோம். நம்மோடு ஈனியற் தொடர்புடைய ஆத்திரேலியப் பழங்குடியினரும் விழாக்காலங்களில் திருநீறு பூசுகிறார். அவர் சிவநெறியாளரா, இல்லையே?) கொஞ்சங் கொஞ்சமாய் சிறு இனக்குழுக்கள் இம் மூன்று பெரிய இனக்குழுக்களில் கரைந்துவந்தார். வேளிர் என்போர் இதிற் கரையும்வரை வேந்தரோடு போராடிக்கொண்டே யிருந்தார்.

ஊழியைப் பெரும்பாலும் உரையாசிரியர் நீண்டகாலமென்றே பொருள் கூறுவார். ஆனால் வானியல்வழி விதப்பான பொருளுண்டு. அதற்குமுன் சில அடிப்படைகள் புரிந்துகொள்ள வேண்டும். (http://valavu.blogspot.in/2003/09/2.html). சூரியனைச் சுற்றிவரும் புவி தன்னுருட்டல் (rotation), வலைத்தல் (revolution), கிறுவாடல் (gyration), நெற்றாடல் (nutation) என நான்கு இயக்கங்களைக் காட்டும் ஒவ்வொரு பருவ காலத்திலும் பகலும் இரவும் ஒரே பொழுதாக 12 மணிநேரம் இருப்பதில்லை. கோடையில் பகல் நீளும்; வாடையில் இரவு நீளும். ஆனாலும் ஆண்டில் இருநாட்கள் பகலும் இரவும் ஒத்த நாட்களாக அமையும். அந்த நாட்களை ஒக்கநாட்கள் (equinoxes) என்றே மேலையர் அழைக்கிறார். 

புவியின் கிறுவாட்டம் (gyration) காரணமாய் ஒவ்வோராண்டும் ஆண்டின் ஒக்கநாள்கள் சிச்சிறிதாக முன்நகர்ந்து வருகின்றன. இதை முற்செலவம் (precession; precede = முன்செல்லு) என்பர். ஒருகாலத்தில் ஏப்ரல் 14 -ல் மேழ ஒரைக்கு முன்வந்த ஒக்கநாள் இன்றைக்கு மார்சு 21/22-லேயே நிகழ்கிறது. மேழத்தில் விழுந்த பசந்த ஒக்கநாள் கி.பி. 2012ற்கு முன்னர் மீனத்தில் (pisces) விழுந்தது. இன்றோ நாலாண்டுகள் கழித்து அஃகர (aquarius) ஓரையில் விழுகிறது. அப்படி விழும்போது, புதிய உகத்திற்கு (உகம் = ஒன்றுசேரும் காலம்; உகம்>யுகம்>yuga in Sanskrit) நாம் போகிறோம் என்று வரலாற்றாசிரியர் சொல்லுகிறார். உகம் என்பது தான் வானியற்படி ஒரு ஊழி. மொத்த முன்செலவம் முடிய கிட்டத்தட்ட 25800 ஆண்டுகள் ஏற்படுகின்றன. அளவு கோல்கள் நுணுக நுணுக இயக்கத்தின் நடப்புக் காலம் துல்லியப்படும். 25800 ஆண்டுகள் என்று எடுத்துக்கொண்டால், ஓர் ஓரையில் (உகத்தில்/ஊழியில்) 25800/12 = 2150 ஆண்டுகள் என்ற பருவகாலம் அமையும்.

ஒவ்வொரு ஊழியிலும் ஒருமுறையாவது வானிலிருந்து எரிகோள் விழும் என்பது தமிழ்மாந்தரின் பட்டறிவு. [இதை நம்புவதற்குத் தான் இற்றைத் தமிழரான நம்மில் யாரும் அணியமாயில்லை. ஆனால் முகன அறிவியல் (modern science) அதை நோக்கிக் கிட்டத்தட்ட வந்துவிட்டது.] வடிவேல் என்பது வானிலிருந்து வந்துவிழும் எரிகோளையே (meteorite) குறிக்கிறது. அதன் தலையும் வாலையும் சேர்த்தால் எரியும்வேல் போலவே காட்சியளிக்கும்.  இந்த எரிகோள்கள் பல்வேறு அளவானவை பல்வேறு பருவங்களில் இவை சூழ்மண்டலத்துள் நுழைந்து புவியில் பெரும் மாற்றங்களை விளைத்துள்ளன. நிலத்தில் இவை விழுந்து அதனால் ஏற்படும் குழிவுகளை ஆய்வு செய்தற்கும், புவியில் மரஞ்செடி கொடிகள், விலங்குகளுக்கு ஏற்படும் இழப்புகள் பற்றியும் அறிவியலிற் பல கட்டுரைகள் வந்துள்ளன. இந்நிகழ்வுகள் நடக்கக் கூடிய பருவெண்களை (frequencies) முன்கணிப்பதற்கும் வழிகள் வந்துவிட்டன.

நிலத்தில் எரிகோள்கள் விழுவதுபற்றி ஏராளம் ஆய்வுநடந்தாலும், கடலில் விழுவதுபற்றியும், அதனாலேற்படும் அழிவுகள், மாற்றங்கள் பற்றியுமறிய பல அறிவியலாளர் தடுமாறிக் கொண்டிருந்தார். எரிகோளின் விட்டம் 4 அல்லது 5 கி.மீ இருந்தாற்றான் கடலில் ஆழிப்பேரலைகள் ஏற்பட்டுச் சேதம் விளைவிக்கும் என்று அண்மைக்காலம்வரை நம்பிக்கொண்டிருந்தார். அதுபோல் நிகழ்வுகள் மில்லியன் ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நடக்கும் என்ற கணிப்பாலும் இவற்றைப் பலரும் மறுத்துவந்தார். ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன் புவிக்கு சாத்தாரமாய் வந்துசேரும் 100-400 மீ விட்டம் எரிகோள்களுங்கூடக் குறிப்பிட்டவகையில் கடலில் விழுந்தால்  ஆழிப் பேரலைகளை எழுப்பிக் கடற்கரை நகரங்கள்/ நிலங்களை அழிக்கமுடியும் என இப்பொழுது சொல்லத் தொடங்கியுள்ளார். கீழே கொடுத்துள்ள இரு எடுகோள்களைப் (references) படித்துப்பாருங்கள். இவற்றை மறுக்கும் கட்டுரைகளும் கிடைக்கக் கூடும்.     

https://www.newscientist.com/article/dn9160-tsunami-risk-of-asteroid-strikes-revealed/
http://www.nytimes.com/2006/11/14/science/14WAVE.html?_r=0   

முதற் கட்டுரையில் 6000 ஆண்டுக்கு ஒருமுறை 300 மீ விட்டமுள்ள எரிகோள் கடலில் விழுங்காரணத்தால் ஆழிப்பேரலை ஏற்படுமென்றும், இரண்டாங் கட்டுரையில் மடகாசுகருக்குக் கிழக்கில் மாலத் தீவுகளுக்கு அருகில் கி.மு.2800 ஆண்டுகளில் கடல்பரப்பிலிருந்து 12500 அடிகளுக்குக் கீழே 18 மைல் விட்டங்கொண்ட ஒரு பெருங்குழிவு எரிகோளால் ஏற்பட்டுள்ளதென்றும், இதன் விளைவால் 2004 இல் நடந்த ஆழிப்பேரலையைவிடப் 13 மடங்கு பெரிதான 600 மீ உயரங் கொண்ட ஆழிப்பேரலை ஏற்பட்டதென்றும் ஆய்வாளர் சொல்லுகிறார். இந்த ஆய்வு இன்னும் நடந்துகொண்டிருக்கிறது. இது உண்மையானால், சுமேரியா, எகிப்து, தமிழக நாகரிகங்களில் சொல்லப்படும் கடற்கோள் பெரும்பாலும் உண்மையாகலாம். இந்த ஆய்வை மறுத்தும் பலர் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறார்.

மேலுள்ள காடுகாண்காதை வரிகளில், எறிந்துவரும் எரிகோளின் பெரும் பகையைப் பொறாது, அதேபொழுது ஒவ்வொரு ஊழியிலும் உலகத்தைக் காக்கும் பொருட்டுக் கடலானது தன் அடியளவை (=ஆழத்தை)  அரசருக்கு உணர்த்தி ”பஃறுளியாற்றுடன், பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” அதற்கப்புறம் வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்ட தென்னவன் வாழி - என மாங்காட்டுப்பார்ப்பான் சொல்லுகிறான். இவ்வரிகள் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனுக்கு உரியவையல்ல. அவனுக்கு 2725 ஆண்டுகள் முந்தியதொரு பாண்டியனைப் பற்றிக் கூறியது. பஃறுளி, பன்மையடுக்கம், குமரிக்கோடு என்பவற்றை நான் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன். இன்னும் உறுதியான கருத்துக்கள் எனக்கு வந்துசேரவில்லை. பல்வேறு ஊகங்கள் மட்டுமேயுள்ளன. கண்டம் என்ற இவ்வரிகள் கூறவில்லை. ஏதோவொரு நிலம் அழிந்திருக்கிறது. எவ்வளவு பெரியது என்று எனக்கு இப்பொழுது தெரியாது,

சிலம்பு ஒரு புதினம் என்று சொல்வதைக் கேட்டால், ”அறியாதவர் பேசுகிறார்” என்று நகர்ந்துவிட வேண்டியது தான். 22க்கு அடுத்த வரிகளுக்குப் போவோம்.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, August 27, 2019

சிலம்பு ஐயங்கள் - 5

இனிக்

”கோவலன் நாவிற் கூறிய மந்திரம்
பாய்கலைப் பாவை மந்திர மாதலின்” ....
http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=557.

என்ற காடுகாண்காதை (196) வரிகளுக்கு வருகிறேன். மதுரைக்காண்டத்தின் முதலில் வரும் காடுகாண் காதையின் களத்தையும், வேதமறுப்பாளரின் சில பொதுமைகளையும், பார்ப்பனரின் விதப்புக்களையும்  ஓரளவு அறிந்து கொள்வது நம் புரிதலைக் கூட்டும். இம்மடலில் அதைத்தான் செய்யப் போகிறேன்.  கதைநடந்த காலத்தில் உறையூரை விட்டு வெளிவந்தவுடன் காவிரித் தென்கரைக்கு வெகு அருகில் பாண்டியநாட்டெல்லை தொடங்கி விடுகிறது. (அதனாற்றான் இக்காதை மதுரைக்காண்டத்துள் வருகிறது.) “காதம் எவ்வளவு தூரம்?” என்ற உரையாடலில் இக்காலத்திய பாண்டிய, சோழப் பகுதிகளின் அளவைப் பற்றி ”பழந்தமிழர் நீட்டவைகள்” என்ற கட்டுரைத் தொடர் மூலம் கணக்குப் போட்டுச் சொல்லியிருந்தேன். அந்தக் கணக்கு எனக்குப் பெரும் வியப்பைக் கொடுத்தது. சிலம்பைப் புரிந்து கொள்ளவும் வழிவகுத்தது.

அக்காலத்தில் சேரநாடே பென்னம் பெரியது. [அதனாற்றான் சேரன் செங்குட்டுவன் அவ்வளவு துள்ளியிருக்கிறான். தமிழகத்திற்கே தன்னை ஆழிவேந்தன்(சக்ரவர்த்தி) போல் எண்ணி, வடக்கே படையெடுத்துள்ளான்.] பாண்டியநாடு அதற்கடுத்த அளவானது. அளவில் மிகச்சிறியதான அற்றைச் சோழநாட்டில் நாகநாடும் (நாகநாட்டுள் வட இலங்கையையும் சேர்ந்தது. மணிபல்லவம், நாகனார் தீவுதானே?) வளநாடும் முறையே புகாரையும் உறையூரையும் தலைநகராய்க் கொண்ட பகுதிகள். இவற்றிலும் நாகநாட்டை விடச் சிறிய வளநாட்டின் இருப்பை உறுதிசெய்தவன்  செங்குட்டுவனே. தன் மாமன் மகனை (அவன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனாகலாம் என்ற ஊகத்தை என்நூலிற் சொல்லியிருப்பேன்.) இருத்துவதற்காக 9 மன்னர்/வேந்தருடன் போரில் வென்றது சிலம்பிலே சொல்லப்படுகிறது. சிலம்பின் காலத்தை கி.மு.75 என்றே நான்சொல்வேன். கி.பி.144 இல் சிலப்பதிகாரம் எழுந்திருக்கலாமென்பதை நான் முழுக்க மறுப்பேன். வரலாறு மிகுந்து புனைவு குறைந்த சிலம்போடு புனைவுமிகுந்த மணிமேகலையை இரட்டைக் காப்பியமாய் ஆக்கிச் சிலம்பின் காலத்தைக் கீழிழுப்பதை நான் மறுப்பேன். பெரும்பாலும் மணிமேகலையின் காலம் கி.பி.285-385 க்குள் ஆகலாம்.

காவிரிக்குத் தெற்கே அழனி(>அக்னி)யாறு தொடங்கி, பாமணியாறு, அம்புலி யாறு, தெற்கு வெள்ளாறு, மணிமுத்தாறு, பாம்பாறு வரையுள்ள வளை பகுதியைக் (முழுப் புதுக்கோட்டை, கொஞ்சம் போல் சிவகங்கை மாவட்டம்) காலகாலத்திற்கும் சோழரும், பாண்டியரும் பந்தாடினர். அது சோழத் தோற்றமுங் காட்டும்; பாண்டிய மரபுங் காட்டும். மாற்றான் ஏமாந்தால் தினவெடுத்த சோழனும் பாண்டியனும் உடனே பிடுங்கிக் கொள்ளும் இப்பகுதியை முத்தூர்க்கூற்றமென்பார் (முத்தூற்றுக்கூற்றம் என்றுஞ் சொல்வர் முத்தூர்ப் பேட்டை (>முத்துப் பேட்டை), முத்தூரார் வயல் (>மித்திரா வயல்), முத்துக் குடா போன்ற முத்தெச்சங்கள் அங்கு நிறைய உண்டு. தவிரக் கிழக்குத்தொடர்ச்சிக் குன்றுகளிற் தொடங்கிய மேற்கூறிய ஆறுகளின் போக்கில் ஏராளம் கண்மாய்கள் / குளங்கள் ஏற்பட்டன. (கூகுள் படம் பாருங்கள், நான் சொல்வது புரியும்) உறுதியாக வெள்ளாறும் பாம்பாறும் பலகாலம் தடம்புரண்டு கொண்டே இருக்காவிடில் இத்தனை கண்மாய்கள் அங்கு எழ வாய்ப்பேயில்லை. பம்பியது (= அகலத்திற் பரவியது) பாம்பாறு (பாம்பிற்கும் அதற்கும் தொடர்பில்லை). அதேபோல வெள்கிய ஆறு வெள்ளாறு. இற்றை ஆற்றுப்போக்குகளால்  அற்றைக் கதைகளை உணர முடியாது.

இக்கதை நடந்த காலத்தில் முத்தூர்க் கூற்றம் ஆரியப்படை கடந்த நெடுஞ் செழியன் வசமேயிருந்தது. அதனாற்றான் உறையூரை விட்டு வெளி வந்தவுடன் கொடும்பாளூர் போகும் வழியிலுள்ள அடர் விராலிமலைக் காடுகளில் (அக்காடே காடுகாண் காதையின் களம்) குடமலை சேர்ந்த மாங்காட்டுப் பார்ப்பான் தென்னவன் புகழ் பாடுகிறான். [பொதுவாக, இதுபோன்ற படித்தவர் என்பவர், ஒன்று தன்னாட்டு வேந்தனின் புகழைப் பாடுவர். அல்லது தான் பயணஞ் செய்யும் நாட்டு மன்னன் புகழைப் பாடுவர். இங்கே உறையூர்ச்சோழனின் புகழ் பாடப் படவில்லை. வியப்பாக இல்லையா? எனவே காதை நடந்தது பெரும்பாலும் பாண்டிய நாடாகவே இருக்க வேண்டும்.  இங்கே முகுந்தன் கேட்ட கேள்விக்கு உடனே வராது காதையைச் சற்று விவரிக்க விரும்புகிறேன். பொறுத்துக் கொள்ளுங்கள்.

“திங்கள்மூன் றடுக்கிய திருமுக் குடைக்கீழ்ச்
செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து
கோதைதாழ் பிண்டிக் கொழுநிழ லிருந்த
ஆதியில் தோற்றத் தறிவனை வணங்கிக்
கந்தன் பள்ளிக் கடவுளர்க் கெல்லாம்
அந்தி லரங்கத் தகன்மொழி லகவயிற்”

என்ற காடுகாண் காதையின் முதல் 6 வரிகள் ஆதிநாதரை (முதல் தீர்த்தங்கரர்) வணங்குவதையும் நிக்கந்தர் பள்ளிப் பெரியோரையுங் குறிப்பிடுகின்றன. (கடவுள் என்ற சொல் இச்சமயங்களில் பெரியவர், தலைவர் என்றே பொருள்படும். எல்லாம் வல்ல இறைவனை அது குறிக்க வில்லை. சமயங்களுக்குள் இருக்குஞ் சிக்கலே வரையறைகளில் தான். அவை புரியாமற்றான் வீண் வாதங்களில் நாம் ஈடுபடுகிறோம்.) ஆதிநாதரை அற்றுவிகர், செயினர், புத்தர் எனும் மூவருமே ஏற்றுக்கொள்வர். நிக்கந்தர் என்ற சொல் ”பிறவிக்கட்டை நிறுத்துவோர்” என்றே பொருள்படும். கந்து என்றால் தமிழிற் கட்டென்றே பொருள். பார்சுவரை ஏற்ற எல்லாச் சமணருக்கும் நிக்கந்தரென்ற பெயருண்டு. பார்சுவருக்கு அப்புறந்தான் 3 பெரிய பிரிவுகள் ஏற்பட்டன (உண்மையில் ஏராளப் பிரிவுகள் அவருள் ஏற்பட்டன. அவையெல்லாம் ஒன்றுளொன்றாய்க் கரைந்து முடிவில் மூன்றாகின.) எப்படி நிறுவனமாகிய கிறித்துவமதம், ”கத்தோலிக்கம், இரோப்பிய எதிர்ப்பாளர், ஆங்கில எதிர்ப்பாளர், செரிலிக் எதிர்ப்பாளர்” என்று பலவகையாய்ப் பிரிந்ததோ அதுபோல பார்சுவருக்கு 250 ஆண்டுகள் கழித்து நிக்கந்தர் பள்ளியும் உடையத் தொடங்கியது.

இதில் செயினரே பிற்காலக் கத்தோலிக்கர்போல் அக்காலத்தின் நாட் பட்ட நிறுவனத்தைத் தூக்கிப் பிடித்தார். அற்றுவிகமும், புத்தமும் செயினத்திற்கு எதிர்ப்புச் சமயங்களாயின. பார்சுவரை ஏற்ற, மக்கலி கோசலரும், கௌதம புத்தரும் வர்த்தமான மகாவீரரை ஏற்கவில்லை. ”தாமே 24 ஆம் தீர்த்தங்கரர்” என்று  உரிமை கொள்ளத் தொடங்கினர். தமக்கே யுரிய நிறுவனங்களை ஏற்படுத்தினர். இவர் முரண்பட்டு நிக்கந்த நிறுவனத்தை விட்டு விலகியதால், நிக்கந்தப் பெயர் கி.மு.500களுக்கு அப்புறம் செயினரை மட்டுமே குறித்தது. ஆயினும் முப்பிரிவினரும் நிக்கந்தர் பள்ளிகளுக்குள் வந்து சென்று கொண்டிருந்தார். அவரிடையே இருந்த முரண் கி.மு.550 - 500 அளவில் கூராக வில்லை. பகைவர் எனும் அளவிற்கும் அது வளரவில்லை.

3 சமயங்களுமே பகைமுரணை ஏற்பவையல்ல. குறிப்பாக ”ஒரு நிகழ்வைப் பார்ப்பதில் பல்வேறு பார்வைகளுண்டு” எனும் ”அநேகந்த வாதத்தைப்” பின்பற்றிய செயினம் மற்ற இரண்டையும் பகைமுரணாய்க் கருதவில்லை. (ஆனால் மற்ற இரண்டையும் தம்மில் முரணிய மதங்களென்றே செயினம் சொல்லும்.) எனவே அற்றுவிகரும், புத்தரும் நிக்கந்தர் பள்ளிகளுக்கு வந்து போவதும், தங்குவதும், உரையாடுவதும், தானம் (>தியானம்) செய்வதும் நெடுங்காலம் ஏற்றுக்கொள்ளப் பட்டன. எனவே கி.மு.80-75 இல் இது நடை பெற்றது வியப்பில்லை. அதைத்தான் இந்தக் காதை சொல்கிறது. தவிர இப்பள்ளியில் சாவக நோன்பிகளும் தங்கிக் கொள்ளலாம்.  இரவில் சமணர் யாருமே நகரக் கூடாது. எனவே வைகறை யாமத்தில் (2-6 A.M) கோழி கூவிய பின் கதிரவன் கிழக்கே தோன்றிய பின், வளநீர்ப் பண்ணையும் வாவியும் பொலிந்ததோர் இளமரக் கானத்து இருக்கை புக்குழி (பண்ணை = நிறுவனப் படுத்தப் பட்ட வயல்; வாவி = குளம். இளமரக்கானம் = பெரிய மரங்கள் இல்லாத காடு. அப்படியே விராலிமலைப் பக்கத்தை உரித்துச் சொல்லும் விவரிப்பு) மாங்காட்டுப் பார்ப்பான் வருகிறான்.

இவ்விடத்தில் ஓர் இடைவிலகல். பார்ப்பனரைப் பற்றியது. முதலில் மாங்காட்டுப் பார்ப்பான், பின் புகார்க் கோசிகன், பின் தலைச்செங்காட்டு மாடலன், அப்புறம் கட்டுரைக் காதையின் வார்த்திகன் எனப் பல்வேறு பார்ப்பனர் செய்திகள் காப்பியத்தில் தொடர்ந்து வரும். இவரெலாம் வரலாற்று மாந்தரா எனில் வார்த்திகன் தவிர மற்றோரை அப்படி எண்ண முடிய வில்லை. கதையை முன்னகர்த்த சிலம்பின் ஆசிரியர் படைத்துக் கொண்ட கற்பனைப் பங்காளர் இவரென்றே சொல்லவேண்டும். தமிழ் நாட்டிற்கு வந்த பார்ப்பனர் பெரும்பாலும் கங்கைக்கரையில் இருந்து வந்ததாய் வரலாற்றாசிரியர் ந..சுப்பிரமணியன் சொல்வார். (1989 இல் வெளியான The Brahmin in the Tamil Country என்ற அவர் பொத்தகம் படிக்க வேண்டியவொன்று. இப்பொத்தகத்தை யாரேனும் இற்றைப்படுத்தி, கோத்திர வரலாற்று விவரங்களையுங் கூடச்சேர்த்து ஏரணக் கண்ணோட்டத்தோடு புதுநூல் கொணர்ந்தால் நன்றாக இருக்கும்.)

3 அலைகளில் கங்கைப்பகுதியிலிருந்து  பார்ப்பனர் தெற்கே வந்திருக்கலாம் என்று பேரா. ந.சுப்பிரமணியம் சொல்வார். முதலலை கி.மு. 1000-800 (மிகச் சிலர்) என்றும், இரண்டாமலை கி.மு.500-200 என்றும், மூன்றாம் அலை கி.பி. 300-500 என்றும் அவர் சொல்வார். 2 ஆம் அலை மகதநாட்டில் வேதநெறிக்கும் வேதமறுப்பு நெறிகளுக்கும் இடைநடந்த போட்டியில் அடுத்தடுத்த மன்னர் வேதமறுப்பை நோக்கிச் சாய்ந்ததால், வேறு புகலிடம் நாடித் தெற்கே வந்ததாய்ச் சொல்வார். சங்க இலக்கியத்தில் வேதநெறிக் கருத்துக்களும் உள்ளன. வேதமறுப்புக் கருத்துக்களும் உள்ளன. (சங்க இலக்கியச் செய்திகள் பார்த்தால் பெரும்பாலும் 2 ஆம் அலையினர்  முன்குடுமியராய் இருக்கவே வாய்ப்புண்டு. சோழநாட்டில் இவரே மிகுதி. இவரைச் சோழியரென்பார். நம்பூதிகளும் முன்குடுமி வைத்திருப்பர். மாங்காட்டுப்பார்ப்பான் ஒரு நம்பூதியாகலாம் கோசிகனும், மாடலனும் சோழியராகலாம். வார்த்திகன் பற்றிய விவரம் தெரியாது.

தமிழ்ப் பார்ப்பனர் ஆதி சங்கரருக்கு அப்புறம் பெருங்கணம் (பெருகச் சரணம்; இவரே பார்ப்பனர் எண்ணிக்கையில் மிகுதியானவர். அதனாலேயே இப்பெயர் பெற்றார்), எண்ணாயிரவர் (அஷ்ட ஸஹஷ்ரர்; எண்ணிக்கையால் ஏற்பட்டபெயர்) வார்த்திகர் (வாத்திமார்; வேதஞ் சொல்லிக் கொடுப்பவர் போலும்), வடமர் (இவரில் பெரும்பாலோர் மூன்றாம் அலையில் வந்தவர்; பல்லவ, பேரரசுச் சோழ அரசியலில் ஈடுபட்டவர்) என்று 4 வகைகளில் ஒருங்கு இணைந்தவர் ஆனார் ஸ்மார்த்தரென்றே இந்நால்வரும் இன்று அறியப் படுவார். (ஸ்ம்ருதியைச் சார்ந்தவர் ஸ்மார்த்தர்.) நாத முனிகளுக்கு அப்புறம், குறிப்பாக இராமானுசருக்கு அப்புறம், பல ஸ்மார்த்தர்கள் திருவிண்ணவர் (ஸ்ரீவைஷ்ணவா) என ஆகிவிட்டனர். இவருள்ளும் ”தென்கலை, வடகலை” என்று 2 பிரிவுகள் பின் ஏற்பட்டன.

இப்பின்புலத்தோடு, இக்காதையில் மாங்காட்டுப் பார்ப்பான் சொல்வதற்கு வருவோம்.

அன்புடன்,
இராம.கி.   :

Monday, August 26, 2019

சிலம்பு ஐயங்கள் - 4

அடுத்து அடைக்கலக்காதையில் வரும்

“அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய
புறஞ்சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிக்குப்
பான்மடை கொடுத்துப் பண்பிற் பெயர்வோள்
ஆயர் முதுமகள் மாதரி என்போள்”

என்ற (105-108) வரிகளைப்பற்றிக் கேட்டிருக்கிறீர்கள். இதில் வரும் பூங்கண் இயக்கி என்பவள் நேமிநாதருக்கான இயக்கி இவளைக் குசுமாண்டினி, அம்பிகா என்றுங் குறிப்பர். (ஒருமுறை ”சமணம் அறிவோம்” இழையில் நண்பர் பானுகுமார் "பத்மாவதி, சக்ரேசுவரி, சுவாலைமாலினி, குசுமாண்டினி/ கூஷ்மாண்டினி, வராகி, ஜினவாணி" eன்ற இயக்கிகளைப் பற்றிக் குறிப்பிட்டார்.) அம்பிகா தேவி என்பவள் தாமரை மலரின் மேல் நிற்பவள். நேமிநாதத் தீர்த்தங்கரரை, யாதவரைச் சேர்ந்த கண்ணன், பலராமனின் ஒன்றுவிட்ட சோதரனாய்ச் சொல்வர். (வசுதேவருக்குப் பலராமனும், கண்ணனும் புதல்வர்கள் ஆவர்; வசுதேவரின் அண்ணனான சமுத்திர விசயனுக்கு நேமிநாதர் புதல்வராம்.) நேமிநாதரை அரிட்டநேமி (>அரிஷ்டநேமி) என்றுங் குறிப்பிடுவர்.

அரிட்டன்/அரட்டன் என்ற பெயர் தமிழகத்தில் நெடுநாளிருந்தது. ஆனை மலைக் கல்வெட்டில் ”அற்றுவாயி அரட்ட காயிபன்” என்ற பெயர் வரும். (அற்றுவாயி= அற்றுவிக நெறியாளர்.) ஆனைமலைக் கல்வெட்டைத் தவறாய்ப் புரிந்துகொண்டவர் மிகப் பலர். பழந்தமிழிக் கல்வெட்டுக்களைச் செயினரோடு மட்டுமே சிலர் பொருத்துவது பிழையான அணுகு முறை. இன்று நம்மிடையே அற்றுவாயிகள் இல்லாது போனாலும் அன்றைய அவரிருப்பை மறுப்பது சரியல்ல. பல தமிழ்க் கல்வெட்டுக்கள் அற்றுவாயிகளுக்கும் பொருந்தும். அரட்டன் பெயர் அற்றுவாயிகளுக்கும் செயினருக்கும் சேர்ந்தே வரலாம். இருவருமே நேமிநாதரை ஏற்றவர். நேமிநாதரின் காலம் கி.மு.800 க்கும் முன்பாகலாம். எந்தக் காலமென உறுதியாய் இப்போது சொல்லமுடியவில்லை.

குசுமம் என்பது மலருக்கான கணப்புப் (generic) பாகதப் பெயர். என்ன மலர் என்பது நம் புரிதலைப் பொருத்தது. பெரும்பாலும் அது தாமரையையே குறிக்கும். ஓரோ வழி பாதிரிப் பூவையும் (>பாடலிப் பூவையும்) குசுமமென்று பாகதத்தில் அழைத்திருக்கிறார். மகதத்தின் பெருந் தலைநகரான பாடலி புத்தத்தைக் குசுமபுரம் என்றும் அழைத்திருக்கிறார். நம்முரில் கடலூருக்கு அருகிலுள்ள பாதிரிப் புலியூரும் கூடக் குசுமபுரம் என்றழைக்கப்பட்டது. அண்டுதல் என்பதற்கு பொருந்தியிருத்தல், மேலிருத்தல் என்றே பொருள் படும். குசும அண்டினி என்பவள் பூவின் மேல் இருப்பவள். பாகத முறைப்படி குசுமாண்டினி என்று கூட்டுச்சொல் அமையும். செயினத்தின் பழம் நூல்கள் அருத்த மாகதி (அரை மாகதி) என்ற மொழியிலேயே இருந்தன.

மகாவீரர் அருத்தமாகதியிற் பேசினார். புத்தர் மாகதியில் உரை நிகழ்த்தினார்.  மாகதி, அருத்த மாகதியின் கலப்பாய்ப் பாகதம், பாலி என்ற மொழிகள் பின்னால் எழுந்தன. இற்றை வட இந்திய மொழிகள் பலவும் பாலி, பாகதத்திற் கிளைத்தவை தாம். [தமிழகப் பல்கலைக் கழகங்களில் பாகதமும், பாலியும் சொல்லிக் கொடுப்பது நல்லது. பல படிப்பாளிகளும் வெறும் சங்கதத்தோடு நின்று விடுவது ஒரு பக்கப் பார்வையையே தருகிறது. என்னைக் கேட்டால் தமிழ் இலக்கியம் படிக்கும் ஒவ்வொருவரும் பாகதம், பாலி, சங்கதம் போன்றவற்றில் இரு மொழிகளையாவது படிக்கத் தெரிந்து இருக்க வேண்டும். வெறுமே தமிழை மட்டும் படித்துக் குண்டு சட்டிக்குள் குதிரையோட்டுவது நல்லதல்ல.]

குசுமாண்டினியை கூஷ்மாண்டினி என்பது வட்டாரப் பலுக்கல். அம்மா என்ற தமிழ்ச்சொல் பாகதம், சங்கதம் போன்ற மொழிகளில் அம்பா என்றாகும். (அம்பாவை மீண்டுங் கடன்வாங்கி அம்பாள் என்று நாம் ஆக்குவோம். எல்லா அம்மன் கோயில்களையும் அம்பாள் கோயில் என்கிறாரே? அது சங்கதத் தாக்கம்.) அம்பாவின் நெருக்கமான அழைப்பு அம்பிகா என்றாகும். குசுமாண்டினியை குழந்தையைத் தூக்கி வைத்திருக்கும் அம்மா போல் பழஞ் சிற்பிகள் சிலைவடிப்பர். அம்பிகாதேவி என்றபெயர் எழுந்தது அப்படித் தான். அவள் நம்மைப் போற்றிக் காக்கும் தாய். பூங்கண்ணில் வரும் ”கண்” என்பது விழியைக் குறிப்பதில்லை. அதன் பொருள் ”இடம்”. பூவை இடமாய்க் கொண்டவள் பூங்கண் இயக்கி. இப்பொழுது அடைக்கலக் காதையில் வரும் பூங்கண் இயக்கிக்கும், இங்கு சொன்ன குசுமாண்டினிக்கும் உள்ள உறவு உங்களுக்குப் புரிகிறதா?

பூவின் மேல் மங்கை நிற்பதை அலர்மேல் மங்கையென்றுஞ் சொல்வர். (அலமேலு என்பது தென்பாண்டிநாட்டில் எங்கள் பக்கம் மிகச் சாத்தாரமாய் உள்ள பெயர்.) இரு பக்கம் யானைகள் நீர் தூற்றிப் போற்றியபடி, தாமரை மேல் அமர்ந்திருக்கும் அலர்மேல் மங்கையின் சிற்பம் வெறும் விண்ணவக் கோயில்களில் மட்டுமிருக்காது. வேத மறுப்புச் சமயங்களைச் சார்ந்த ஐயனார் கோயில்களில் (குறிப்பாய் ஐயனார் கருவறையின் திருநிலைக்கு மேலும்) இருக்கும். இன்னுஞ் சொன்னால் ஏராளமான சிவன் கோயில்களின் வடமேற்கு மூலையிற் கூட மகாலெட்சுமியின் திருமேனி தனிக் கருவறையில் இருக்கும். நான் சொல்வது கேட்டு அதிர்ந்துவிடாதீர்கள். இலக்குமிக்கும், சமணரின் பத்மாவதிக்கும், குசுமாண்டினிக்கும் ஏராளமான ஒப்புமை, உறவுகள் இருக்கின்றன. (இலக்குமியின் தொன்மத் தொடக்கம் பற்றி அறிய ”வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்” என்ற அரிய நூலைப் படியுங்கள். சுவீரா ஜெயஸ்வால் எழுதிய ஆங்கில நூலை கி.அனுமந்தன், ஆர். பார்த்தசாரதி என்பார் மொழிபெயர்த்து 2010 இல் இரண்டாம் பதிப்பாய் NCBH வெளியிட்டிருக்கிறது.) மடற்குழுக்களில் இதுபோல் சிலவற்றைப் பேசப் பலரும் தயங்குகிறார். நம்பிக்கைகளை நாமெங்கே  குலைத்து விடுவோமோ என்ற பயமும் பலருக்கிருக்கிறது.   எங்கள் சிவகங்கைப் பக்கம்,

காடுவெட்டிப் போட்டுக் கடிய நிலந்திருத்தி
வீடுகட்டிக் கொண்டிருக்கும் வேள்வணிகர் – வீடுகட்கு
அன்றைக்கு வந்த எங்கள் அம்மா இலக்குமியே
என்றைக்கும் நீங்கா திரு.

என்ற ”பாடுவார் முத்தப்பரின்” பாட்டைச் சொல்வார். பெருமாள் கோயிலுக்கே போகாத சிவப் பழமான வீட்டிலும் கூட இது சொல்லப்படும். இது பூங்கண் இயக்கிக்கான பாட்டுத் தான்.  (அம்மா = அம்பிகா; இலக்குமி = குசுமாண்டினி). இப்படிச் சொல்ல இன்னொரு காரணமும் உண்டு.

பெரும்பாலான விண்ணவக் கோயில்களில் பெருமாளுக்கு முதலிற் கருவறை ஏற்பட்டுப் பலகாலங் கழித்தே (ஏதோ ஒட்டுக்கோயிலாய்) தாயாருக்குக் கருவறை ஏற்பட்டதைப் பார்த்து அறியமுடியும். இதேநிலை சிவன் கோயில்களிலும் உண்டு. அம்மனின் திருநிலை (சந்நிதி) சிவன் திருநிலைக்குத் தள்ளி பின்னாலேற்பட்டு அமைந்திருக்கும். ஆனானப்பட்ட சிதம்பரங் கோயிலிலேயே சிவகாம சுந்தரியின் கருவறை நடவரசன் கருவறையிலிருந்து விலகியிருக்கும். மதுரை மீனாட்சி கோயிலும் அப்படித் தான். சொக்கன் கோயில் முதலிலெழுந்ததா? கயற்கண்ணி கோயில் முதலிலெழுந்ததா என்று தெரியாது. ஆனால் இரண்டும் வெவ்வேறு கட்டு மானங்கள். அதுமட்டும் உறுதி. இவற்றை ஆய்வு செய்து சொல்லப் போனால், பலருமென்னைப் புறந்தள்ளுவர். ஆனால் உண்மை அதுதான். சிவநெறியும், விண்ணவநெறிகளும் தாயாரையும், அம்பாளையும் சேர்த்துக் கொண்டது ஏதோ ஒருவித மறுவினையால் மட்டுமே என்று சொல்ல வேண்டியுள்ளது. அவை முதலில் எழுந்தவையல்ல.

மொத்தத்தில் “இயக்கிகளின் தாக்கம்” குமுகாயத்தில் மிகப் பெரியது. ஒவ்வொரு ஐயனார் கோயிலிலும் இயக்கிகளுண்டு. ஐயனார் கோயில்கள் சில செயினத்தாலும், சில அற்றுவிகத்தாலும், சில புத்தத்தாலும் எழுந்தவை. இற்றைய ஐயனார் கோயில்கள் சிவத் தோற்றம் காட்டினாலும் நாட்டுப்புறத் தெய்வங்கள் அங்கு குடிகொண்டிருக்கும். ஐயனார் கோயில்களில் அரிதாகச் சிலவற்றைத் தவிர்த்து மற்றவற்றில் குயவரே வேளகாரராய் இருப்பர். அவரே அங்கு குருக்கள். புறநடையான சில கோயில்களில் மட்டுமே பார்ப்பனர் குருக்களாய் இருப்பர். (காட்டு. சபரி மலை).

அம்மன் கோயில்களாய்த் தனித்தெழுந்த கோயில்களும் நிறுவனப்படுத்தப் பட்ட சிவநெறி, விண்ணவ நெறிகளுக்குள் முதலில் வரவில்லை. இப்பொழுது இந்துமதமென்ற கலவைமதம் இவற்றை இழுத்துக் கொள்கிறது. அம்மன் கோயில்களில் முன்னாளில் குயவரும், பண்டாரங்களுமே பூசாரிகளாய் இருந்தார். பின்னால் சங்கதவாக்கம் கூடிப்போய் 50/60 ஆண்டுகளுக்கு முன் தான் பார்ப்பனக் குருக்கள் கோயில்களுள் வந்தார். சென்னைக்கு அருகில் உள்ள திருவேற்காடு, மாங்காடு போன்றவை பின்னாற்றான் மாறின. என் வாழ்நாளிலேயே பெரியபாளையம் பவானியம்மன் கோயிலில் பண்டாரம் போய், பார்ப்பனக் குருக்கள் வந்துள்ளார். இன்னுஞ் சொன்னால் எண்ணிக்கையில் கணிசமான பார்ப்பனர் இன்றும் குலதெய்வக் கோயில் என்று சொல்லி தம் மூதாதையர் ஊர்களுக்குப் போய் அம்மனைக் கும்பிட்டு வருவதுண்டு. அவையேல்லாமே அவர் வீட்டுப்பெண்களின் அழுத்ததாற் செய்வர்.     

அக்காலத்தில் எம்மதமும் சம்மதமென எல்லாத் தெய்வங்களையும் வழி படுவது இருந்ததா ? - எனில் உண்டு. இன்றுங் கூட உண்டு. நான் வேளாங் கண்ணி மாதா கோயிலுக்கும், தூத்துக்குடி பனிமய மாதா கோயிலுக்கும் போயுள்ளேன். பலமுறை தொழுதுள்ளேன். நாகூர் தருக்காவிற்குப் பலரும் போவார். சீரங்கம் கோயிலில் இன்றும் சில முசுலீம்கள் தொண்டு செய்கிறார். ஐயனார் கோயிலுக்கு எல்லோருமே போகிறார். தமிழர் குமுகாயம் பொதுவாய்ச் சமயப்பொறையுள்ள குமுகாயமே. ஆனாற் சில காலங்களில் சமயப்பொறை குறைந்து குத்து, வெட்டு என்று சீரழிந்த காலமும் உண்டு. 2 ஆம் குலோத்துங்கன் காலத்தில் சிவத்திற்கும் விண்ணவத்திற்கும் ஆகாது. மகேந்திர வருமன் காலத்தில் செயினத்திற்கும் சிவத்திற்கும் ஆகாது. அற்றுவிகம் ஒழித்ததை முன்பே சொன்னேன். பல்லவரின் முடிவில் புத்த நெறியாளர் இங்கு மறைந்தே போனார். அதனால் தான் மணிவாசகர் 9 ஆம் நூற்றாண்டு என்பதை நான் ஒப்புவதில்லை. இல்லாத புத்த நெறியாளரோடு அவர் வாதிடுவாரா? புத்த நெறியாளர் இங்குயர்ந்த காலம் களப்பிரருக்குச் சற்று முன்னும், களப்பிரர் காலத்திலுமே. அக்காலமே மணிவாசகர் காலம். அப்படித் தான் ஏரணம் வழிகாட்டும். அதை வேறிடம் பேசுவோம்.

இப்பகுதியில் பூங்கண் இயக்கியைப் பார்த்தோம். இனி உங்களின் முதற்கேள்விக்கு வருவோம்.

அன்புடன்,
இராம.கி.   

Sunday, August 25, 2019

சிலம்பு ஐயங்கள் - 3

அடுத்தது சாவக நோன்பிகள் பற்றியது. அதற்குமுன் ஓர் அடிப்படைச் செய்தியை அறிந்துகொள்ளவேண்டும்.

இந்தியா எங்கணும் பழங்குடியினர் வரலாற்றுக் காலத்திற்கு முன் பல்வேறு தெய்வங்களை நம்பியிருந்தார். அவை பெரும்பாலும் இனக்குழுத் தெய்வங்கள். அந்நம்பிக்கைகளை மறுத்து “இறைவன் என யாருமில்லை” என்று முதலிற் சொன்னது இறைமறுப்புக் கொள்கையாகும். இதற்கு உலகாய்தம்/ சாருவாகம்/ பூதவாதம் என்று சிறு வேறுபாடுகளுடன் பெயர் உண்டு. உலகாய்வது உலகாய்தம். இக்கொள்கையை ஏற்காது வேதக் கொள்கை இந்தியாவின் வடமேற்கில் எழுந்தது. கொஞ்சங் கொஞ்சமாய் அது கிழக்குநோக்கிப் பரவியது. கணக்குவழக்கின்றி அளவிலும் எண்ணிக்கையிலும் வேள்விகள் பெருகின. அவற்றில் ஆகுதியாகும் பொருட்கள் சில வேளைகளில் விளைபொருட்களாயும், சில வேளைகளில் விலங்குகளாயும் இருந்தன. குறிப்பாக மாடுகள் அளவிற்குமீறி வேள்விகளிற் பலியாகின. இது முல்லை நிலப் பொருளாதாரத்தையும், அப்பொழுது தோன்றிக் கொண்டிருந்த தொடக்க நிலை மருத நிலப் பொருளியலுக்கும் பெரிதும் தாக்கம் விளைவித்தது.

நேமிநாதர் (22 ஆம் தீர்த்தங்கரர் கி.மு 850), பார்சுவநாதர் (23 ஆம் தீர்த்தங்கரர். கி.மு.712) காலங்களில் அங்குமிங்குமாய் வேள்விகளுக்கு எதிர்ப்புக் கிளம்பியது  கி.மு. 600 களில் இந்த எதிர்ப்பு பெரிதும் வெடிக்கத் தொடங்கியது. மக்கலி கோசாலர் (நிருவாணம் கி.மு.543), வர்த்தமான மகா வீரர் (நிருவானம் கி.மு.527), கோதம புத்தர் (நிருவானம் கி.மு.483) ஆகியோர் காலங்களில் இது வேதமறுப்புக் கொள்கையாகவும் உருவெடுத்தது. ”இறை யுண்டா, இல்லையா?” என்ற கேள்வியை இம்மூவரும் ஒதுக்கி, (அதேசமயம் பெரும்பாலும் இறைமறுப்புக் கொள்கையைச் சார்ந்து) வேதமறுப்புக் கொள்கையையே பெரிதும் பேசினார். இம்மூவரில் மக்கலி கோசாலர் தெற்கிலிருந்து (குறிப்பாய்த் தமிழகத்திலிருந்து) போயிருக்கலாம் என்று இற்றை ஆய்வுகள் சொல்கின்றன. வர்த்தமானரும், கோதமரும் மகதத்தின் வடவெல்லையை ஒட்டியவர்.

மாடுகளை வேள்வியிற் பலியிடுவதைத் தடுத்து நிறுத்தியதால் மக்கள் இடையே இவர் மூவருக்கும் ஆதரவு பெருகியது. முடிவில் பெருஞ் செல்வந்தரும் மன்னரும் வேந்தருங் கூட இவர் பக்கம் வந்தார். அதனால் வேதநெறி சற்று ஆட்டங் கண்டது. ஏற்கனவே தொடங்கியிருந்த உபநிடத மாற்றங்கள் பெருகின. வேதநெறியில் பூர்வ மீமாம்சம் என்ற கொள்கை நிலைப்பாடு தாழ்ந்து உத்தர மீமாம்சம் என்ற கொள்கை உயர்ந்தது. வேத மறுப்புக் கொள்கையைக் கொஞ்சங் கொஞ்சமாய் தனக்கேற்ப உருமாற்றி அதன் பகுதிகளை வேத நெறியும் உள்வாங்கத் தொடங்கியது. இந்த மாற்ற காலத்தில் தான், எல்லாச் சமய நெறிகளும் தமிழகத்துட் புகுந்தன. இதனால் தான் சங்க காலத்தைக் கி.மு.600-கி.பி 150 என்றுநான் சொல்வேன். ஏனெனில் எல்லாச் சமய நெறிகளையும் உட்கொண்டு பேசும் பாடல்கள் சங்க இலக்கியத்துள் உள்ளன. (தாம் கொண்ட சமயக் கருத்துகளைச் சார்ந்து, அந்தக் கண்ணாடியால் சங்க இலக்கியத்தைப் பிறழ உணர்ந்தவர் மிக அதிகம்.)

வேதமறுப்பின் 3 சமயத் தலைவருமே பார்சுவரை ஏற்றுக் கொண்டனர் என்பது போற் தெரிகிறது. பின்னால் அவருக்கப்புறம் சமயக் கொள்கை வளர்த்ததில் தான், பிறவிச் சுழற்சியைத் தடுத்து நிறுத்தும் வழிகளைச் சொல்வதில் தான், இவர் மூவரும்  வேறுபட்டு நின்றார். இவரின் கொள்கை வேறுபாட்டை இங்கு சொன்னால் விரியும். எனவே தவிர்க்கிறேன். பிறவிச் சுழற்சியை அற்றுவிக்கும் கொள்கையாய் கோசாலரின் அற்றுவிகம் (>அத்துவிகம்>அஜ்ஜுவிகம்>ஆஜுவிகம்) உணரப்பட்டது. பிறவிச் சுழற்சியைச் செயிக்கும் கொள்கையாய் மகாவீரரின் செயினம் உணரப் பட்டது. பிறவிச் சுழற்சி பற்றி புத்தி தெளிவிக்கும் நெறியாய் புத்தம் உணரப் பட்டது. ஆசீவிகம், செயினம், புத்தம் என மூன்றுமே தான(>தியான) நிலையை அழுத்துபவை. சம்மணம் கொட்டியே மாந்தர் தானிப்பதால் சம்மணம்>சமணம் என்று இம்மூன்றுமே அறியப்பட்டன. 

பின்னால் வேதம், செயினம், புத்தம், சிவம், விண்ணவமென்ற எல்லாஞ் சேர்ந்து அற்றுவிகத்தை கி.பி. 8/9ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்திலிருந்து அறவே ஒழித்தன. இன்று அற்றுவிகத்திற்கு ஒருசில சங்கப் பாடல்களைத் தவிர  தனிப்பட உருப்படியான எந்த நூலுங் கிடைக்கா அளவிற்கு நிலைமை யுள்ளது. அற்றுவிகத்தின் பின் மற்ற சமயங்கள் தமக்குள் சண்டைகளைத் தொடர்ந்தபோது கி.பி. 600/700 களுக்கு அருகில் புத்தம் தமிழ்நாட்டில் காணாது போய் இலங்கையில் பெரிதும் நிலைகொண்டது. செயினம் 12 ஆம் நூற்றாண்டு வரை தாக்குப் பிடித்து திருவண்ணாமலையைச் சுற்றிலும் தங்கிப்போய் ஓரமாய் ஒதுங்கிக் கொண்டது. அற்றுவிகமும், புத்தமும் தமிழகத்தில் இல்லாது போனவுடன் சமணம் என்ற பொதுப்பெயர் செயினரின் விதப்புப் பெயராகவும் ஆகிப் போனது. மதங்கள் பற்றிய ஒழுங்கான புரிதலுள்ளவர் ”சமணர்” என்ற பொதுச்சொல்லை ஆளாது ”செயினர்” என்ற விதப்புச் சொல்லாலேயே மகாவீரரைப் பின்பற்றுவோரைக் குறிப்பர்.

வேத நெறி சிவத்தோடும், விண்ணவத்தோடும் சமரசம் செய்துகொண்டு வேத நெறிப்பட்ட சிவம் (தேவாரத்தில் இதே சொல்லப்படும்), வேத நெறிப் பட்ட விண்ணவம் (நாலாயிரப்பனுவலில் இதே சொல்லப் படும்) என்ற கலப்பு மதங்களைக் கொண்டுவந்து, ஆனாலும் தம் புரிசைகளில் நெருப்பிற்கு முகன்மை கொடுக்காது, நீருக்கே முகன்மை கொடுத்து 15 ஆம் நூற்றாண்டு வரை இருகூறாய்த் தனித்திருந்தன. அதற்கப்புறம் இவையிரண்டும் தமக்குள் கொஞ்சங் கொஞ்சமாய் உறவாடி ஒரு சமதான நிலைக்கு வந்து இன்று சிவா-விஷ்ணு ஆலயங்கள் என்று பொது ஆலயங்கள் எழுப்பும் நிலைக்கு வந்திருக்கிறார். இந்துமதம் என்ற கலவைச்சொல் முகலாய காலத்திற்கும் அப்புறமே எழுந்தது. அந்தப் பெயர், சிந்துவை அறிந்த வடமேற்கு முசுலீம்களால் ஏற்படுத்தப் பட்டது. கொஞ்சம் அழுத்திக் கேட்டால் ”இந்துக்கள்” பலரும் “சைவர்”, ”வைணவர்” என்றே தம்மைப் பிரித்துச் சொல்வர். என் செய்வது? காலம் மாறிவிட்டது. என்பதால் இந்திய அரசாங்கப் பதிவுகளில் “இந்து மதம்” என்று பொதுப்பட எழுதிக் கொள்வர். உண்மையில் இந்துமதம் என்பது ஒரு கலவை மதம்.

இப்பொழுது வேதமறுப்பு சமயங்களுக்கு வருவோம். பிறவிச் சுழற்சியை நிறுத்த உறுதி எடுத்துக்கொண்டோர் துறவிகளாவர். இப்பிறவி துறந்தோர். அடுத்த பிறவி வேண்டாமென்ற சிந்தனையில் தன் வாழ்நாளைக் கழிப்பார். இவரைச் செயினத்தில் முனிவர் என்றும், அற்றுவிகத்தில் அறிவர் என்றும் புத்தத்தில் பிக்குகள் என்றுஞ் சொல்வர். முனிகளுக்கும், அறிவர்களுக்கும், பிக்குகளுக்கும் சேவை செய்வோர் சால்வகர் என்னும் சாவகராவார். எல்லாவித இல்லற நோன்பினரும் சாவக நோன்பிகள் ஆகலாம்.

கோவலன் குடும்பத்தில் இம்மூன்று நெறிகளுக்குமே ஆதரவு இருந்திருக்கலாம். கோவலனின் தந்தை செயினத்திலோ/அற்றுவிகத்திலோ இருந்து பின் புத்த நெறியை ஒழுகியிருக்கிறார். கோவலன் செயினனா என்பது உறுதியாய்த் தெரியாது. ஆனால் மகளுக்கு மணிமேகலை என்ற புத்தப் பெயரைக் கொடுத்தான். அதற்கு கோவலன் தந்தையும் ஒப்பி யிருக்கிறார். கண்ணகியின் தாதை அற்றுவிக நெறியாளி. கோவலனின் மகளும், துணைவியும் புத்தஞ் சேர்ந்தவர். கண்ணகி “குண்டத்தில் குளித்து முன்வினை அறுப்பது பீடன்று’ என்று சொன்னதால் அவள் செயினநெறிப் பட்டவாளாயும் இருக்கலாம். அன்றி அற்றுவிக நெறியானவளாயும் இருக்கலாம். ஏனெனில் அற்றுவிகம் முன்வினையைத் தொலைக்கவே முடியாதென்று சொல்லும் எல்லாம் விதிப்படி (நியதிப்படி) தான் நடக்கும் என்று சொல்லும். செயினம் நல்வினையால் முன்வினையைத் தொலைக்கலாம், விதியை மாற்றமுடியுமென்று சொல்லும். இரண்டிற்குமே குண்டத்தில் குளித்து முந்தைய வினைகளை அறுப்பது ஒப்புக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

சாவக நோன்பிகளுக்கு என்று வெளிப்படை அடையாளம் ஏதும் இருந்தது போற் தெரியவில்லை இன்றும் ஏராளமாய்த் தமிழ்ச்செயினர் உள்ளார். அவருக்கும் நமக்கும் எந்த வேறுபாடும் தோற்றத்தில் காணமுடியாது. தீவிரச் சிவநெறியாளர் திருநீறணிவது போல், தீவிர விண்ணெறியாளர் திருமண் சாற்றிக்கொள்வதுபோல் தமிழ்ச்செயினர் எதையும் நெற்றியிற் காட்டி நான் பார்த்ததில்லை. தவிர, சுழற்குறி (சுவத்திகம்>ஸ்வஸ்திகம்) என்பது செயினத்திற்கும் அற்றுவிகத்திற்கும் பொதுவானது. அதை நெற்றியில் யாரும் குறித்து நான் பார்த்ததில்லை. புத்தருக்குச் சுழற்குறி முகன்மை யில்லை. கோவலன் ஏதும் இதுபோல் அணிந்திருந்தானா, தெரியாது. 

கட்டுரைக் காதையில் (155) வரும் வரிகள் பற்றி ஓரளவு என் நூலிற் பேசி யுள்ளேன். இங்கே இளங்கோவின் வார்த்தை விளையாட்டு நடக்கிறது. இப் பிறப்பில் கோவலன் என்பது அவனின் இயற்பெயர். முற்பிறப்பில் அது பணிப் பெயர் (கோ-வலன். bureaucrat). முற்பிறப்பில் பரதன் என்பது அவனுக்கு இயற்பெயர். இப்பிறப்பில் அது பணிப்பெயர் (பரத்தல் = விலைசொல்லுதல். பரதன் trader) பரதன் என்பவன் கொல்லாமை விரதத்தை நீங்கிய, வெறுப்புக் கொண்டவன் ஆதலால் (கொல்லுவதை தவறென எண்ணாதவன் ஆகையால்), பிடிபட்டவனை “ஒற்றன் இவன்” எனப் பற்றிக் கொண்டான். சங்கமன் வேறு மதத்தவன் என்று கொலை செய்யப்படவில்லை. தவறு இழைக்காத சங்கமன் இறக்க (முற்பிறப்பில் பரதன் ஆகிய) இப்பிறப்புக் கோவலன் காரணமானான். எனவே இப்பிறப்பில் தவறிழைக்காமலே கோவலன் இறக்க நேரிடும் என்று விதிவழியே அற்றுவிகம் சொல்லும். வினைவழியே செயினம் சொல்லும். அதுதான் இங்கே சூழ்க்குமம்,

”விரத நீங்கிய வெறுப்பின னாதலின்
ஒற்றன் இவனெனப் பற்றினன் கொண்டு”
http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=994.

என்பதற்கான பொருள் இதுவாகும். அடிப்படையில் இது வினையா, விதியா என்பது முடிவில்லாத வாதம். சிலப்பதிகாரம் அற்றுவிகக் காப்பியமா, செயினக் காப்பியமா என்பதிலும் பல்வேறு வாதங்களுண்டு.

இனி உங்களின் அடுத்த ஐயத்திற்கு வருவேன். உங்கள் ஐயங்களுக்கு விடைகளை முடித்துவிட்டு இப்பொழுது நீங்கள் எழுப்பும் மற்ற கேள்விகளுக்கும் வருவேன். இல்லையென்றால் தொடர்ச்சி போய்விடும்.

அன்புடன்,
இராம.கி.

Saturday, August 24, 2019

சிலம்பு ஐயங்கள் - 2

 அடுத்து மனையறம்படுத்த காதைக்கு வருவோம்.

”தூமப் பணிகளொன்றித் தோய்ந்தா லெனவொருவார்
காமர் மனைவியெனக் கைகலந்து--நாமந்
தொலையாத இன்பமெலாந் துன்னினார் மண்மேல்
நிலையாமை கண்டவர்போல் நின்று.:

\                                                                       - வெண்பா

இந்தப்பாவில் ”நாமம் தொலையாத இன்பம்” என்பது ”அழகு கெடாத இன்பம்” அல்ல. நாமம் என்பதற்கு நிறைவு என்ற பொருளுமுண்டு. அதுதான் இங்கு சரிவரும். கொஞ்சங்கூட நிறைவு அடையாத கலவியின்பத்தை இருவரும் பெறுகிறார் என்று இந்த வெண்பா கூறுகிறது. இது சற்று நளினமான பாட்டு. இத் திறந்த அவையில் இதை விவரித்துச்சொல்லத் தயக்கமாயிருக்கிறது. இந்த வெண்பா இளங்கோ எழுதியதாவென்று தெரியாது. பொதுவாகக் காதைகளின் பின்வரும் வெண்பாக்களை இளங்கோ எழுதியதாய் நான் கொள்வதில்லை. நாலாயிரப் பனுவலிலும், பன்னிரு ஆழ்வார்களின் பாசுரத் தொகுதிகளின் பின்னே இதுபோன்று "போற்றி வெண்பாக்கள்" வரும். அவையெல்லாம் நாலாயிரப்பனுவலைச் சேர்ந்தவையல்ல. ஆனால் பாடஞ் சொல்லிக்கொடுக்கும்போது அவற்றையும் சேர்த்துச் சொல்லித்தருவார்கள். சிலம்பில் இப்படி வரும் வெண்பாக்களை ”பொருள் சுருக்கும் வெண்பாக்கள்; வேறு யாரோ எழுதியவை” என்று கொண்டு நகரவேண்டும்.

மூன்றாவதாய்க் கடலாடு காதையில் வசந்தமாலை பற்றிய கேள்விக்கு வருவோம். இதை நான் விளக்குவதைக் காட்டிலும், திரு. ஆ. பழநி எழுதிய “சிலப்பதிகாரக் காப்பியக் கட்டமைப்பு” என்ற நூலை (தமிழினி வெளியீடு, முதற்பதிப்பு 2007) tamizhininool@yahoo.co.in என்ற முகவரிக்குக் கேட்டெழுதி வாங்கிப் படியுங்கள். மிக அருமையான நூல். சிலம்பினுள் ஆழ்ந்து பலரும் அறியாத ஓர் உண்மையை அவர் எடுத்தோதுகிறார். அவர் நூலை அறியாதோர் கட்டாயம் வாங்கிப் படிக்கவேண்டும்.

கண்ணகியை விட்டுவந்த கோவலனுக்கு மாதவியோடு மட்டும் தொடர்பு ஏற்படவில்லை. நேரடியாய்ச் சொல்லாவிடினும் பூடகமாய் அங்கங்கே குறிப்போடு இளங்கோ இதைச் சொல்வார். அவனுக்கு வசந்தமாலையோடும் தொடுப்பு ஏற்படுகிறது. மாதவி எப்படியோ அதை நாள்கழித்து இலேசு பாசாய் அறிந்துகொள்கிறாள். கடலாடுகாதையில் வசந்தமாலை வருந்தும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ”கோவலன் - வசந்தமாலை உறவு தகாதது, முறையற்றது” என்று கோவலனுக்கு உணர்த்துவதற்காகத் தான் கானல்வரிப் பாட்டே எழுகிறது. ”காவிரியை மட்டுமா சோழன் கொண்டான்?, கன்னியையும் தான் கொண்டான்?” என்று தொனிக்க கோவலன் மாற்றுப் பாட்டைப் பாடுகிறான். இங்கே மாதவி காவிரிக்கு ஒப்பாகிறாள்; வசந்த மாலை கன்னிக்கு ஒப்பீடாகிறாள். கோவலன் புகாரை விட்டுப் பிரிந்தது மாதவியாலும் அல்ல; கண்ணகியாலும் அல்ல. மாதவின் முன்னேயே கோவலனின் குட்டு வெளிப்பட்டு விட்டது. மாதவி தன் குறிப்பால் அதைக் கேட்கிறாள். கோவலனால் அதற்கு விடைசொல்ல முடிய வில்லை. தன்னைத் திருத்திக்கொள்ளவும் முடியவில்லை. அவனுக்குச் சினமெழுகிறது தான் ஊர் மேய்வதைத் தன் காமக்கிழத்தி கேட்டுவிட்டாளே எனக் கோவங்கொண்டு புகாரைவிட்டு ஒரேயடியாய் விலகுகிறான். அதேபொழுது ”இவ்வளவு தவறுகள் நடந்தும் தன் மனைவி தன்னை மன்னித்து ஏற்றுக்கொண்டாளே?” என்று மனந்திருந்தி மதுரைக்கு வருகிறான். மதுரைக்கோட்டைக்குள் வந்ததும் அவன் முதற்பார்வை கணிகையர் வீதியைத் தான் நாடுகிறது. நாய்வாலை நிமிர்த்தவா முடியும்?

திரு. ஆ. பழநி சொன்ன எல்லாக் கருத்துக்களை நான் ஏற்காவிட்டாலும், அவர் காட்டிய கோணம் ஒரு புதிய புரிதலை எனக்களித்தது. இன்னும் ஆய்ந்து பார்க்க வேண்டும். அவர் சொல்வது பெரும்பாலும் சரியாய் இருக்குமென்றே இப்போதெல்லாம் எண்ணுகிறேன். இதைக் காடுகாண் காதையிலும் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

Friday, August 23, 2019

சிலம்பு ஐயங்கள் - 1

ஒருமுறை ஈழத்தைச் சேர்ந்த முகுந்தன் என்பவர் சிலப்பதிகாரம் பற்றிய 6 ஐயங்களை மின் தமிழ்க் குழுமத்தில் எழுப்பியிருந்தார். அவர் கேட்டிருந்த ஐயங்களுக்கு முழுக்க விடையிறுக்க வேண்டுமெனில் மிகுந்த நேரம் பிடிக்கும். வேறு பணிகள் அப்போது இருந்தாலும், ஆர்வத்தோடு ஒருவர் சிலப்பதிகாரம் பற்றிக் கேட்கும்போது விடையிறுக்காது நகரமுடியவில்லை. சிலம்பை ஆர்வமாய்ப் படித்தவன் நான். அதன்காலம் பற்றியும் ஒரு தனி நூலே எழுதியிருக்கிறேன். இங்கே விடைகள் கொஞ்சம் முன்பின்னாய் இருக்கும் பொறுத்துக்கொள்ளுங்கள். முதலில் அவர்கேட்ட கேள்விகள்:
------------------------------------------------------
1. காடுகாண் காதை (196)

”கோவலன் நாவிற் கூறிய மந்திரம்
பாய்கலைப் பாவை மந்திர மாதலின்” ....

http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=557. இங்கே பாய்கலைப் பாவை எனப்படுவது கொற்றவையா? வேட்டுவ வரி (70) யிலும் பாய்கலைப் பாவை என வருகிறது. கோவலன் சமண மதத்தவர் என்பது பொதுவான கருத்து . அவர் ஏன் கொற்றவை மந்திரத்தைக் கூறவேண்டும் ?

2. பூங்கண் இயக்கிக்குப் (சமண தெய்வம்??) பான்மடை கொடுத்த மாதரி பின்பு ஆய்ச்சியர் குரவையில் மாயவனையும் ஆயவனையும் போற்றிப் பாடுகிறார்... அக்காலத்தில் எம்மதமும் சம்மதம் என்று எல்லாத் தெய்வங்களையும் வழிபடும் முறை இருந்திருக்கின்றதா ?

3. கொலைக்களக் காதை (18)

”சாவக நோன்பிக ளடிக ளாதலின்” எனக் கோவலன் விளிக்கப்படுகின்றார். சாவக நோன்பிகள் என்பவர்களுக்கென்று ஏதாவது வெளியடையாளம் உள்ளதா? (தலைப்பாகை, மாலை , உடையின் நிறம் இதுபோல) ஏனெனின் , மதுராபதி தெய்வம் கூறும் முற்பிறப்புக் கதையில்

கட்டுரை காதை (155)

”விரத நீங்கிய வெறுப்பின னாதலின்
ஒற்றன் இவனெனப் பற்றினன் கொண்டு”

http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=994. இங்கே, வேறு மதம் ஆதலால் ஒற்றன் எனக் கொலைசெய்யப்படுகிறான்..வேறு மதத்தவன் என எவ்வாறு அறியப்படுகிறான்? இதுவே கோவலன் கொலைக்கு ஒரு  காரணமாக இருக்குமா? ( விரத நீங்கிய வெறுப்பினன் , சாவக நோன்பிகள் )

4. இது வசந்தமாலை பற்றியது. கடலாடு காதை (171)

”வருந்துபு நின்ற வசந்த மாலைகைத்
திருந்துகோல் நல்லியாழ் செவ்வனம் வாங்கிக்..”

http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=324
கோவலன் மாதவியுடன் இருக்கும்போது , வசந்தமாலை ஏன் வருந்தி நின்றாள் ?

5. மனையறம்படுத்த காதை

”தூமப் பணிகளொன்றித் தோய்ந்தா லெனவொருவார்
காமர் மனைவியெனக் கைகலந்து--நாமந்
தொலையாத இன்பமெலாந் துன்னினார் மண்மேல்
நிலையாமை கண்டவர்போல் நின்று.:

 (உரை : அழகு கெடாத இன்பத்தையெல்லாம் துய்த்தனர்) http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=110 (வெண்பா இளங்கோவடிகளால் பாடப்படவில்லையென்பது ஒருசாரார் கருத்து. ) இங்கே நாமந் தொலையாத இன்பம் (அழகு கெடாத இன்பம் ) என ஏன் கூறப்படுகின்றது ?

6. உரைபெறு கட்டுரை

”கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன் நங்கைக்குப் பொற்கொல்ல ராயிரவரைக் கொன்று.......

கொங்கிளங் கோசர் தங்கணாட்டகத்து
நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய ....

கயவாகு வென்பான் நங்கைக்கு நாட்பலி பீடிகை கோட்ட முந்துறுத் தாங்கு.....

சோழன் பெருங்கிள்ளி கோழியகத்து எத்திறத்தானும்  வரந்தரு மிவளோர் பத்தினிக் கடவுளாகு மென நங்கைக்குப் பத்தினிக் கோட்டமுஞ் சமைத்து...”.

(http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=63) இங்கே, கோசர் தங்கணாட்டகத்து நங்கைக்கு எனப்படுவதற்கு , கொங்கிளங்  கோசர் நாட்டின் நங்கை எனப் பொருள்கூற முடியுமா?  அதாவது கண்ணகி கொங்கு நாட்டிலிருந்து வந்தவரெனக் கூறமுடியுமா? இதற்கும் வேட்டுவ வரி (47) யில் வரும் “ கொங்கச் செல்வி குடமலை யாட்டி” என்பதற்கும் தொடர்பு இருக்குமா?

--------------------------------------------------
இதற்கான என் மறுமொழிகள்:

முதலில் உரைபெறு கட்டுரைக்கு வருவோம். (உங்களுடைய 6 வது கேள்வி) உரைபெறு கட்டுரையில் முதலில் வருவது, வெற்றிவேற் செழியன் செய்ததைக் குறித்தாகும். சிலம்பை முழுதும் படித்தால் கதை பஞ்ச காலத்தில் நடந்தது புரியும். கதைநடந்த காலத்தில் தென்னிந்தியா முழுக்க வற்கடம் வந்திருக்கக் கூடுமென்று ஊகிக்கிறோம். மழையிலாக் காலம். அப்பொழுது மதுரை எரிபட்டது ”பெரியாரின் கூற்றைக் கொண்டுவந்து” நா. கணேசன் கேலிசெய்கிறாரே, அதுபோல் கண்ணகியின் கொங்கைப் ”பாசுபரசால்” அல்ல. அப்படி இளங்கோ புனைவு கலந்து சொல்கிறாரென்று வேண்டுமானாற் சொல்லலாம். பெரும்பாலும் நெடுஞ்செழியன் மேலிருந்த பஞ்சகாலக் கோபத்தில் மக்கள் கூடி “இதுதான் சாக்கென்று” அரண்மனைக்கும் சுற்றியுள்ள மாளிகைகளுக்கும் தீ வைத்ததாகவே அறிவியல் பூர்வமாய்ச் சொல்லலாம். pure arson.

இக்கலவரம் கேள்விப்பட்டு கொற்கையிலிருந்து வெற்றிச்செழியன் மதுரைக்கு ஓடிவருகிறான். வெற்றிச்செழியன் பெரும்பாலும் நெடுஞ்செழியனின் தம்பியாக இருக்கவேண்டும். நெடுஞ்செழியனின் மகன் அரண்மனைத் தீயில் கருகியது சிலம்பிலேயே சொல்லப்படுகிறது. ஒரு பொற்கொல்லன் செய்த பிழைக்கு, வெற்றிவேற்செழியன் 1000 பொற்கொல்லரை கொன்றது பெரும் முட்டாள் தனம். கண்ணிற்குக் கண்ணென்றாலும், பழிக்குப் பழியென்றாலும் இது ஏற்கமுடியாத கொடுங்கோன்மை. மதுரை எரிந்ததற்குப் பின் நடந்தது இதுவே. இதுபோன்ற பிழைகள் இன்றும் நடைபெறுகின்றன. யாரோவொரு சீக்கியன் இந்திராகாந்தி கொலைக்குக் காரணமானானென்று தில்லி முழுக்க 1000 பேருக்குமேல் சீக்கியரைப் பேராயக் கட்சியின் அரம்பர்கள் கொன்றது இந்தக் காலத்திலும் நடந்திருக்கிறது. இதுபோல் உங்கள் நாட்டிலும் சொல்லமுடியும்.

இவ்வளவு எரிப்புநடந்தால் கணக்கற்ற புகையும் துகளும் வானத்தில் பரவி ஏறும். அது உறுதியாய் மழையை வருவிக்கும். இன்றும் யாகம் நடத்தி மழை வருவிக்கிறார்களே? அதே சூழ்க்குமம் தான். what you need are suspended particles among the moist clouds. Boom..... Rain starts pouring. How long it lasts depends on the humidity of the clouds.

பாண்டிய நாட்டைப் போலவே மழையே காணாத கொங்கிளங்கோசர் தங்கள் நாட்டகத்தும், நங்கைக்கு விழாவோடு சாந்திசெய்ய, மழை அங்கும் பொழிகிறது. அருள்கூர்ந்து முன் வாக்கியத்திற் போட்டிருக்கும் கால்குறியைக் கவனியுங்கள். பாக்களில் கால்குறி இருக்காது. நாம்தாம் பொருள்பார்த்துப் புரிந்துகொள்ளவேண்டும். கண்ணகி  சோழநாட்டுக்காரி, எரிந்தது பாண்டித் தலைநகர். கொங்கு என்பது இன்றுள்ள கொங்கு மண்டலம் அல்ல. முந்தையக் கொங்கு என்பது இன்றையக் கொங்கும் தென்கன்னடமும் சேர்ந்த ஒரு பெரியபகுதி. தென் கன்னடத்திற்கு வட கொங்கு என்றும் பெயர். அந்தக் கொங்கின் அரசர்கள் தான் கங்கர்கள் என்று பின்னால் அழைக்கப்பட்டனர். வடகொங்கர் நாட்டில் மைசூர்ப்பகுதி அடங்கும். மங்களுருக்குச் சற்றுகிழக்கே இருக்கும் நிலம்தான் கோசரின் நாடு. அவரை வலிந்து கோயம்புத்தூருக்கு இழுப்பதெல்லாம் சிலரின் வெற்றுமுயற்சி.

அவ்வளவு பெரியகொங்கில் கோசர்நாடு ஒருபகுதி. (கோசர் நாட்டில் குடமலை என்ற கூர்க் பகுதியும் அடக்கம்.) அதுவே முழுக்கொங்கு அல்ல. தமிழகத்தில் பாண்டிநாடு ஒரு பகுதி என்பதைப் போல இதைப் புரிந்து கொள்ளுங்கள். கோசர் நாட்டில் விழவெடுத்தது வெற்றிவேற் செழியனின் செயலுக்கு அடுத்து ஒருசில மாதங்களுக்குள் நடந்திருக்க வேண்டும். அதனாற்றான். அச்செய்தி அறிந்த இளங்கோ (இந்த நூல் எழுதியது கண்ணகிக்கு வஞ்சியில் கோயிலெடுத்த பொழுது நடந்திருக்க வேண்டும் என்றே நான் எண்ணுகிறேன்.) அதைப் புனைவாய் சாலினிமேல் வைத்து வேட்டுவ வரியிற் கூறுகிறார்.

வெற்றிவேற் செழியன் செய்தது, கோசர் செய்ததெல்லாம் இளங்கோவிற்கு நூலெழுதுவதற்கு முன்பே தெரிந்திருக்கவேண்டும். ஆனால் கயவாகு என்பான் செய்தது அவருக்குத் தெரிந்திருக்க வழியில்லை. தெரிந்திருந்தால் இன்னும் வேட்டுவரியில் இருவரிகள் சேர்த்துக் கூறியிருப்பாரே? கூறவில்லையே?

என் “சிலம்பின் காலம் நூலில்” வருந்தரு காதை என்பது இளங்கோ எழுதியிருக்க வழியில்லை என்று நிறுவியிருப்பேன். அந்த வாதத்தை அங்கு படித்துப்பாருங்கள். கயவாகு என்பான் விழாவிடுத்தது உரைபெறு கட்டுரையில் சொல்லப்படும். “அதுகேட்டு.....” என்று அது தொடங்கும். அதாவது கொங்கிளங்கோசர் விழாவெடுத்தது கேட்டு என்று பொருள். இது எத்தனை ஆண்டுகள் கழித்து என்பது யாருக்கும் தெரியாது. 100 ஆண்டுகளுக்கு அப்புறமும் ஆகியிருக்கலாம்.

பொதுவாக நாட்டுப்புறங்களில் பஞ்சகாலங்களில் கண்ணகி கூத்து நடைபெறும். அதை நடத்துவதால் மழை பொழியும் என்பது மக்கள் நம்பிக்கை மாரியம்மாவையும், கண்ணகியையும் தொடர்புறுத்துவார்கள்.     
”கொங்கச் செல்வி, குடமலையாட்டி” என்பது கொங்கிளங்கோசர் விழவெடுத்ததைக் குறிப்பால் உணர்த்துகிறது.

இனி அடுத்த கேள்விக்கு வருகிறேன். இந்த மடல் நீளம்

அன்புடன்,
இராம.கி.

சங்கதமெனத் தவறாய்க் கொள்ளப்படும் சில தமிழ்ச்சொற்கள் - 5

உல், குல், சுல், துல், நுல், புல், முல் எனப் பல்வேறு வேர்கள் குறுமைப்பொருள் குறிப்பதற்குத் தமிழிலுண்டு.  (இவற்றின் கிளை வேர்களுமுண்டு.) இவற்றில் சுல் என்பதைமட்டும் இங்கு பார்க்கிறோம். இது சல், சில் என்றுந் திரியும். சுண்டைக் காய் சாப்பிட்டிருப்பீர்களே? சுல்>சுள்+ந்+து= சுண்டு= தெறி (வினைச்சொல்); தெறித்துவிழுந்து உருவான துண்டு. சுல்>சில். சில்லுதல் = உடைதல். சில்லிமூக்கு = உடைந்துபோன மூக்கு. சின்னஞ் சிறிதாய் உடைந்தால் சில்லி என்பது பொருந்தும். சுல்>சுள்= சிறுமை; சுள்+கு>சுட்கு> சுக்கு= சிறு துண்டு; (சுக்குநூறாய் உடைஞ்சுபோச்சு.)

சுல்>சில்> சிறு= துண்டு. சில்>சிலை> சிலைத்தல்= துண்டு துண்டாய்ச் செதுக்கி மிஞ்சி மீதமான உருவம். சில்+பு>சிற்பு>சிற்பம்= சிலை. (சிற்பம் வட சொல் என்று என்னுடன் வாதாடியோரும் உண்டு. என்ன செய்வது? நம்மூர்ச் சொல்லை வட சொல் எனக்காட்டுவத்ல் அவ்வளவு நாட்டம். )(சில்லைப் போலவே குல் என்னும் வேரில் பிறந்த குறு, குலை போன்ற சொற்களையும் இணையாய்ப் பொருத்திப் பார்க்கலாம். ) ”சில்+தல்= சிற்றல்= சிறிதாதல்.” என்பதும் ”சில்+உ+தல்= சில்லுதல்” என்பதும் முதல்நிலை வினைச்சொற்கள். நம்மூர்ப் பேச்சு வழக்கில் றகரம் என்பது பலபோது தகரமாகவும், சிலபோது டகரமாகவும் மாறும். வேறுசில இடங்களில் றகரம் ரகரத்தின் போலியாகவும் புழங்கும்.

(உங்களுக்குத் தெரியுமோ? தமிழெழுத்துக்களில் றகரம், வெகுநாட்களுக்கு அப்புறமே எழுந்தது அதனாற்றான் மெய்யெழுத்து வரிசையின் கடைசியில் அது வைக்கப்பட்டது.) அதன்வடிவங் கூட,, டகரத்தை மேலெழுதித் தகரத்தைக் கீழெழுதி உருவாக்கப்பட்டதே. பொ.உ.மு. 500 அளவிலுள்ள பழைய தமிழி எழுத்துக்களைக் கூர்ந்துபாருங்கள். அ, இ, உ எனும் 3 உயிர்களும், க், ங், ச், ஞ், ட், த், ந், ப், ய், ர், ல், வ் எனும் 12 மெய்களும் தான் முதலில் எழுந்தவை. மற்ற எழுத்துகள் அனைத்தும் சிச்சிறு மாற்றங்களில் இவற்றில் எழுந்தவை. பொதுவாய் வரலாறென்பது எழுத்தேற்பட்ட பிறகு என்றும் எழுத்திற்கும் முந்தையது வரலாற்றிற்கு முந்தையதென்றும் சொல்வர். அப்படியெனில் பாதி எழுத்துத் தோன்றிய காலத்தை எப்படிச் சொல்வது?)

நான் மற்றவை விடுத்து சில்லில் பிறந்த சொற்களைப் பார்க்கிறேன். சிற்றது, சிறிதெனவும், சில்+நம் = சின்னமெனவும் சொல்லப்படும், சிற்றல் பேச்சு வழக்கில் சித்தல்/சித்தர் ஆகும். சித்தர் இன்னுங்குறுகிச் சிதர்/சிதறு ஆகும்  சிதர்/சிதறு எனும் பெயரிலிருந்து  2 ஆம் நிலையில் சிதரல்> சிதறல் எனும் தன்வினையும், சிதர்த்தல்/சிதற்றல் எனும் பிறவினையும் பிறக்கும்.  நாளா வட்டத்தில் சிதர் (பொடி, தூள் போன்ற) திண்மம் சிதர்வதற்கும், சிதறு  நீர்/நீர்மம் துளித்துளியாய்ச் சிதறுவதற்கும் விதப்பானது.  தாவரப் பொடிகள், வண்ணக் குழம்புகளைச் சிதர்த்தியே தொடக்க மாந்தன் சுவரோவியங்கள் வரைந்தான்.  சிதர்த்தலின் இன்னொரு வடிவம் சிதரித்தல்/சித்தரித்தல். ( குல்லின்கீழ் குற்றல், குத்தல், குதரல்/குதறல், குதர்த்தல்/குதற்றல் என்ற சொற்களையும் இங்கே ஒப்பிட்டுப் பார்க்கலாம்.)

அவனவன் சிந்தனை, கற்பனைக்குத் தக்கச் சிதர்ப்பு/சித்தரிப்பு நடந்தது. நாளாவட்டத்தில்  சித்தரிப்பு ஒழுங்குபட்டது; நெளிவுசுளிவு துலங்கியது. வண்ணம் பெருகியது சோதனை கூடியது, இயலுமைகள், வரைவின் பின்புலம் எனப் பலவும் விரிந்தன.  ”விதவிதம், வெவ்வேறு, பொட்டு, அழகு, நுணுக்கம், detail, something pleasant, intriguing, kaleidoscopic” என்பவற்றோடு colourful என்ற கருத்தும் கூட எழுந்தது.  சித்திரம், ஓவியமாகவும் பொருள் கொள்ளப் பட்டது.

ஆழ ஓர்ந்துபார்த்தால், சில்>சிற்றல்>சித்தல்>சித்தர்> சித்தரிப்பு> சிதரிப்பு என்றே இச்சொல் வளர்ந்திருக்க வாய்ப்புண்டு. இதற்கு மாறாய் ”செத்து என்பது பொருந்தல் பொருளில் வரும் செத்து> சித்து ஆகும். திரம் என்பது சொல்லாக்க ஈறு” என்று பாவாணர் விளக்கம் வரும். நான் ஆய்ந்த வரை செகரம் மிக அரிதாகவே சிகரம் ஆவதாலும் (சிகரம் செகரமாவது இன்னும் அதிகம்), ஒப்புப் பொருளில் மட்டுமே ஓவியம் வரைவதில்லை என்பதாலும், முற்றிலும் கற்பனையில் இயற்கைக்கு மாறாய் ஓவியம் இருக்கலாம் என்பதாலும், சித்திரம் என்பதற்கு ஓவியம் தவிர வேறு பொருள்கள் இருப்பதாலும் நான் மறுக்க முற்பட்டேன். ஆனால் பாவாணரின் சொல்லாக்க நெறிமுறை தெரியாது இம்முடிவிற்கு நான் வந்திருக்கமுடியாது. எனவே ஆசானில் வேறுபட்டேன்.

ஒன்பதாவது சொல் நடனம், ”நடத்தல், நடை, நடம், நடத்தை, நடப்பு, நடல், நடவு, நடன்” போன்ற  சொற்களைப் பார்த்த பின்னுமா ஒருவர் ”நடனம் வட சொல்” என்பார்?  அப்படியானால், “நட்டம், நாட்டியம், நடவரசன், நட ஈசன்” போன்றவற்றை என் சொல்வார்?  இங்கே குறிப்பிட்ட எல்லாமே நள் எனும் வேரில் கிளைத்தவை. நள்ளுதல்= ஊன்றுதல்  காலை மாற்றிமாற்றி ஊன்றாது  மேற்கூறிய செயல்களை எல்லாம் செய்யமுடியுமோ? ”எடுத்த பொற்பாதம்” என்று தேவாரம், நான்காம் திருமுறை, பதினெட்டாம் பதிகம், நான்காம்  பாடல் வழி திருவதிகை வீர்ட்டானத்து ஆடல்வல்லானை வியந்து நிற்பார் திருநாவுக்கரசர். ”குஞ்சித பாதம்”என்றும் வேறு சிலர் சொல்வார்.  ஒருகால் ஊன்றி இன்னொரு கால் எடுத்துநிற்கும் பொதிப்பைக் (posture) கண்டு வியக்காதார் உலகில் யார்? சிவன் போலும் தமிழ்க் கடவுளன்றி வேறு எந்தவூர்க் கடவுள் இதைச் செய்வதாய் விவரிப்பு உண்டு?  எந்த வேதம் சொல்கிறது?  தெரியவில்லை.

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால் வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்தபொற் பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே

பத்தாவது  சொல் தருமம். இதைப்பற்றிப் பலரும் எழுதிவிட்டார். மெய்யியல் விளக்கங்களை விட்டுவிடுங்கள். குறிப்பிட்ட எல்லைகளை, கோடுகளை, மரபுகளை, ஒழுங்குகளை, வழக்காறுகளை அறுப்பது அறம். இது நல்லது, இது கெட்டது என்று வரையறுப்பது அறம். அதேபோலக் குறிப்பிட்ட எல்லைகளை, கோடுகளை, மரபுகளை, ஒழுங்குகளை, வழக்காறுகளை தருவது தருமம். முன்னோர் அறுத்தால் என்ன, தந்தால் என்ன? எல்லாம் ஒன்றுதான். சரி, தருமம் என்ற சொல் எப்படியெழுந்தது?

வா என்ற சொல் எப்படி வள்>வரு>வார்>வா-வில் பிறந்ததோ அது போல் தான், தா என்ற சொல் தள்>தரு>தார்>தா-வில் பிறந்தது. வாழை குலை ஈனுவதைக் குலை தள்ளுகிறது என்கிறொமே? தள் என்பதே இங்கு வேர்ச்சொல். தள்ளுதல் கருத்திற்றான் தருதல் கருத்து பிறந்தது. (தாநம்> தானம் என்பதும் தமிழ்தான். சில பொருட்பாடுகளில் தருமத்திற்கு அது இன்னொரு சொல்.) கள்>கரு>கார் என்பது இதேவகையில் வேறு சொற்களை உருவாக்கும் கருமம், பருமம், மருமம் போல் தருமமும் தமிழே. எவ்வளவு முட்டிமோதினாலும் தருமம், தானம் போன்ற சொற்களை மற்ற இந்தையிரோப்பிய மொழிகளில் காண்பது கடினம். அது என்னமோ, தெரிய வில்லை. தமிழிலிருந்து இச்சொல் வடக்கே போயிருக்கலாம் என்று சொல்வதில் பலபேருக்குத் தயக்கம் இருக்கிறது.

முடிவில் மா>மகா, இதற்குப் பெரும்விளக்கம் தேவையில்லை. மா என்பது பெரிய என்பதைக் குறிக்கும் தமிழ் முன்னொட்டு. நெடிலில் முடியும் நம் சொற்கள் வடக்கே போகையில் உயிர்நெடிலைக் கொஞ்சம் விலக்கி, விசர்க்கத்தை (ஆய்தம்) நுழைத்து, சிலநாள் புழக்கத்தின்பின் விசர்க்கத்தை ஹகரமாக்கி, முடிவில் விலக்கிவைத்த நெடில் உயிரைச் சேர்ப்பது  பல சொற்களில் நடக்கும் பலுக்கல் திரிவு.   பாணினியின் தாதுபாடம் 17 ஆம் பகுதில் 81 ஆம் தாதுவையும், 35 ஆம் பகுதியில் 15 ஆம் தாதுவையும் இதன் மூலமாய் magh என்று காட்டுவர். தமிழிலும் மக என்பது பேச்சுவழக்கில் மா என்றாகும் (இந்த விதி தமிழில் நூற்றுக்கணக்கான சொற்களில் நடந்துள்ளது. c1v1c2v2>c1V1 என்ற விதியின் படி அகல மரம் ஆலமரமாகும்; அகங்காரம் ஆங்காரமாகும்; பகல். பாலாகும், நான் சொல்லிக்கொண்டே போகலாம். சரி மக என்பதற்கு பெருகுதல் என்றபொருள் எப்படி எழுந்தது. சிவகங்கை பக்கம்  ”ஆறு மகுந்து ஓடுது.” மகுதலும் மிகுதலும் தொடர்புள்ளவை.  மல்குதல் என்பது மகுதலாகும். தமிழ்முறைப்படி மாவின் வேர் முல்>மல் என்பது தான். முல்>மல்>மல்கு>மகு>மக>மா.

மேலே கூறிய மொத்தம் 11 சொற்களும் தமிழ் தான். பலரும் இவற்றைச் சங்கதம் என்று நினைத்துவிடுகிறார். ஆழ ஆய்ந்தால் இவை தமிழென அறியலாம்.  வேறு தொடருக்குப் போவோம்.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, August 21, 2019

சங்கதமெனத் தவறாய்க் கொள்ளப்படும் சில தமிழ்ச்சொற்கள் - 4

4 பகுதிகளில் இத்தொடர் முடியுமென நினைத்தேன். ஆனால் 8 ஆம் சொல்லான சித்திரம் அதிகம் இழுக்கிறது. இதன்விளக்கம் சற்று நீளம். ஏற்கனவே இதற்கு விளக்கங்கூறிய பலரும்  திசைமாறிப் போனார். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியும்,  அதன் ஆதாரப் பாவாணர் விளக்கமும் ( வடமொழி வரலாறு பகுதி 1, பக் 148-149) ஆழ ஓர்ந்தால்,  பொருந்தவில்லை என்பதே இப்போதைய என் முடிபு. பாவாணரை நான் மறுப்பது கண்டு சினங்கொள்ளாதீர். சிலபோது ஆசானை மீறுவதில் தவறில்லை. அதேபொழுது நான் சொல்வதே சரியென வாதாடவும் இல்லை. இது ஒருவித  முயற்சி. அவ்வளவு தான். இதை ஏற்பதும் ஏற்காததும் உங்கள் உகப்பு. சிலப்பதிகாரம் கானல்வரித் தொடக்கத்தில் வரும் கட்டுரையின் முதல் நாலு வரிகள்,

”சித்திரப் படத்துள்புக்குச் செழுங்கோட்டின் மலர்புனைந்து,
மைத்தடங்கண் மணமகளிர் கோலம்போல் வனப்பெய்திப்
பத்தருங் கோடும் ஆணியும் நரம்புமென்று
இத்திறத்துக் குற்றநீங்கிய யாழ்கையில் தொழுதுவாங்கி”

என்று தொடங்கும். யாழைத் தொழுதுவாங்கி இசைக்கத்தொடங்கும் மாதவியை இவ்வரிகள் விவரிக்கின்றன.  செழுங்கோட்டின் மலர் என்பது கோட்டுப்பூ.  மைத்தடங்கண் மணமகளிர் என்பது கண்ணில் மைதீற்றிக் கொண்ட மகளிர். ”அது என்ன சித்திரப்படம்?”- என்பது நம்முன் எழுங் கேள்வி. ”சித்திரப்படம் ஓர் இரட்டைக்கிளவி” என்றே நம்மில்பலர் எண்ணிக் கொள்கிறோம். என்னைக் கேட்டால், சித்திரத்தின் அடிப்பொருள் ஓவியம்/படமாய் இருக்கத் தேவையில்லை . இங்கே அதுவொரு பெயரடை (adjective). சில போதுகளில் அதன் பொருள் படமாகலாம்.  சித்திரப் படத்தைப் புரிந்து கொள்ள நான் பலகாலம் சொல்லிவந்த  ”ஜல சமுத்ரம், நீர்க்கடல்” போன்ற கூட்டுச்சொற்களை ஓர்ந்து பாருங்கள். ஜலமும் சமுத்ரமும் ஒன்றா? நீரும், கடலும் ஒன்றா?

நீர் நிறைந்தது ஜல சமுத்ரம். கடலுக்கு என்ன பொருளென எண்ணுகிறீர்கள்? அகரமுதலி தேடுங்கள். கடல்= பரந்தது, அகன்றது, நிறைந்தது. அதுவொரு பண்புப் பெயர். பயன்பாட்டின் வழி தான் அதனுள் நீரைப் புரிந்து கொள்கிறோம். சமுத்ரத்திலும் ஜலமில்லை. நான் சொல்வது புரிகிறதா? கடல், ஓர் ஆகுபெயராய்  காலகாலமான மரபில், உலகில் பரந்துகிடக்கும் நீரைக் குறிக்கிறது. எல்லா மொழியிலும் இதுபோற் சொற்பயன்பாடுகள் ஓராயிரத்திற்கும் மேலுண்டு. Context determines the meaning here, while the basic meaning may be different. "நல்ல பையன்" என்று சொல்லிவிட்டு ஒரு கதையில் பையனைத் தவிர்த்து நல்லவன் என்று ஆசிரியர் எழுதிப் போவதில்லையா?  இன்னொரு கூட்டுச்சொல் பார்ப்போம்.

சித்திரச்சோறு (பெருமானர் சித்ரான்னம் என்பார் variety rice) என்று பல வீடுகளில் செய்வார். புளிச்சோறு, சருக்கரைச்சோறு,  எலுமிச்சைச் சோறு, எள்சோறு  என விதவிதமாய்ப் பல்வேறு சுவைகளில், பல்வேறு நிறங்களில்  சோறுபடைப்பது சிந்திரச் சோறு. இங்கே ”விதவிதமாய், வெவ்வேறாய்” என்ற பொருள் தான் முகன்மை. இன்னொரு காட்டைப் பார்ப்போம். ”செந்நூல் நிணந்த சித்திரக் கம்மத்து வெண்கால் அமளி விருப்பின் ஏற்றி” என்று பெருங்கதை உஞ்சைக்காண்டம், நருமதை சம்பந்தம் என்ற 35 ஆம் பகுதியில் :98-99 ஆம் அடிகளில்  வரும்.  அமளி =கட்டில். கம்மம்= வேலைப்பாடு. கம்மியர்= தச்சர், துன்னகாரர் (தையல்காரார்), கொல்லர், வினைஞர்= நுட்பியல்/கலை தெரிந்தோர்.

”செந்நூலால் முடைந்த, பின்னப்பட்ட, நெய்யப்பட்ட (=நிணந்த) சித்திரக் கம்மம்” என்பது  விதவிதமான, வெவ்வேறான, அடவுகளில் (design) செய்யப் பட்ட பொட்டு வேலையைக்  குறிக்கும். துணியில், புடவையில் அமையும் இப்பொட்டுகளை இக்கால மங்கையர் ”புட்டா” என்றழைப்பார். சவளிக் கடைகளில் விசாரித்துப் பாருங்கள். புடவையில் வரம்புகளில் அல்லாது உடற்பகுதியில் வரும். வட்டாரத்திற்குத் தக்க பல்வேறு பொட்டு அடவுகள் உண்டு. காஞ்சிபுரம் பட்டுப்புடவைகளில் மாங்காய், மயிலென விதப்புக் காட்டுவர் இராசபுதனப் புடவைகளில் ஒட்டகம், மயிலெனத் திகழும். ஊருக்கு ஊர் இதுமாறும். தமிழ் எழுத்துக்களைப் பொட்டாகப் போட்ட பட்டவங்களும் (pattern) உண்டு. ஒரு காலத்தில் மிகவும் விற்றது. சேரனின் ஒரு திரைப் படத்தில் விளம்பரப் படுத்தினார். பொதுவாய்ப் பொட்டில் காணும் நுணுக்கம், சிறுமை, detail என்பவையே முகன்மை. இப் ”புட்டாத்” தோற்றத்தையே சித்திரம் என்று இரு காட்டுகளிலும் அழைத்திருக்கிறார். இப்பொருட்பாட்டை வேறொரு காட்டின் மூலமும் தெளிவு பெறலாம். சிலப்பதிகாரம் ஊர்காண் காதையில் ,

”...............ஓங்கிரும் பரப்பின்
வங்க ஈட்டத்துத் தொண்டியோர் இட்ட
அகிலும் துகிலும் ஆரமும் வாசமும்
தொரு கருப்பூரமும் சுமந்துடன் வந்த
கொண்டலோடு புகுந்த கோமகன் கூடலை

என்று வரும் 104-109 ஆம் வரிகளுக்கு விளக்கமாய் அடியார்க்கு நல்லார் ”கோசிகம், பீதகம், பச்சிலை, அரத்தம், நுண்துகில், சுண்ணம், வடகம், பஞ்சு, இரட்டு, பாடகம், கோங்கலர் கோபம், சித்திரக் கம்மி, குருதி, சுரியல், பேடகம், பரியட்டக்காசு, வேதங்கம், புங்கர்க் காழகம், சில்லிகை, தூரியம், பங்கம், தத்தியம், வண்ணடை, கவற்றுமடி, நூல்யாப்பு, திருக்கு, தேவாங்கு, பொன்னெழுத்து, குச்சரி, தேவகிரி, காத்தூலம், இறஞ்சி, வெண்பொத்தி, செம்பொத்தி, பணிப்பொத்தி” என்று 35 வகைத் துகில்களை எடுத்து உரைப்பார். இத்துகில்கள் சிலம்புக் காலத்தில் இருந்தனவா? அடியார்க்கு நல்லார் காலத்தவையா? - என்பது  நமக்குத் தெரியாது. ஆனாலும் இப் பெயர்கள் முழு ஆராய்ச்சிக்கு உரியவை. நம்மூர்த் தமிழ்த் துறைகள் இவற்றைச் செய்யவேண்டிக் கேட்டுக் கொள்வோம்.  நாம் புரிந்து கொண்ட அளவில்  சித்திரக் கம்மியும், சித்திரக் கம்மமும் ஒன்றே. துணிகளில் பின்னப்படும் பொட்டுக்களையே அவை குறிக்கும் என்று எண்ணுகிறேன். 

சாப்பாடுத் தட்டில் பொட்டுப்பொட்டாய் விதப்புச்சோறு (variety rice) இட்டுச் சித்திரச் சோறு என்கிறாரே, அங்கும் இதேதான். சித்திரக் கருங்கல்= அங்கங்கே பொட்டுப்பொட்டாய்க் கண்ணைக் கவரும் வண்ணம் இயல்பாய் அமையும் அடவுகளை அடையாளங் காட்டும் கருங்கல்.  இதுபோல், ஒரு குறிப்பிட்ட கோலத்தில் அல்லது கோட்டுப்படத்தில் எழுத்துக்களைப் பொட்டென வைத்து கவி செய்வது சித்திரப்பா. எல்லாக் கவிஞராலும் இது முடியாது. பொட்டுப் பொட்டாய்ப் புள்ளிகள் கொண்ட ஒரு சேரநாட்டு மீனைச் சித்திரக்காரை என்பார். சித்திரக்குள்ளன்/ சித்திரக் குத்தன் என்பவன். கூற்றுவனிடம் உயிர்களின்  நல்வினை./தீவினைக் கணக்கெழுதிப் படிப்பவனாகக் கருதப்படும் வேடிக்கைக் குள்ளன். சித்திர என்று தொடங்கும் கூட்டுச்சொற்கள் மிகுதி.

சித்திர அம்பலம் கேள்விப்பட்டிருக்கிறீரா? தில்லைப் பொன்னம்பலம், மதுரை வெள்ளியம்பலம், நெல்லைத் தாம்பர அம்பலம், ஆலங்காடு அரத்தின அம்பலம் போல், குற்றாலாத்தில் சித்திர அம்பலம் என்றொன்று உண்டு. நெடுநாள் அதன்பொருள் தெரியாதிருந்தேன். எல்லோரையும் போல் அது ஓவிய அம்பலம் என்றே எண்ணினேன். கம்போடியாவின் சியாம்ரீப் (Siem riep) போனபோது தான் புரிந்தது. சியாம்ரீப்பில் அங்கோர்வாட்டும், அங்கோர் தாமும் தான் சுற்றுலாப் பயணியருக்குப் பெரிதாய்த் தெரியும்.  அவை தவிர  7 ஆம் சூரியவர்மன் காலத்தில் 12 ஆம் நூறாண்டில் கட்டப்பட்ட Bayon. Ta Prohm, Preah Khan போன்ற ஆலயங்களும் அங்கு முகன்மையானவயே. இவற்றில் Preah Khan என்பது சற்று வியப்பானது. இன்னும் மீள்கட்டமைக்கப் படாத இக் கோயிற் பலக்கை (temple complex)யில் புத்தர் திருநிலைகளும் (சந்நிதிகளும்) சிவன் திருநிலைகளும், விண்ணவன் திருநிலைகளும் உண்டு. நான் இங்கே ஒரு சிவன் திருநிலையை விவரிக்கிறேன்.

8அடிக்கு 8 அடி கருவறை; கூம்புவடிவ விதானம்; நடுவே இலிங்கம்; சுற்றிலும் தரையிலும், சிவகங்கை மாவட்டத்தில் கிடைப்பதுபோல் செம்பாறாங்கல் (செம்புரான் கல்)  அதை மூடிப் போர்த்தியது போல் மாவுக்கல்லால் (sandstone) ஆன பட்டைச்சுவர். [நம்மூர்ச் சிற்பி/கற்றச்சர் அங்கு எளிதில் பொருந்திக் கொள்வார். இரு நாட்டவர் கலையும் நுட்பமும் ஒன்றுபோல் இருக்கும்.]. செம்புரான் கல்லைப் போர்த்திக் கிடக்கும் மாவுக்கல்லில் பொட்டுப் பொட்டாய்ச் சின்னஞ்சிறு ஒட்டைகளும் பொந்துகளும் இருந்தன.  கூடவந்த வழிகாட்டியிடம் ”இந்த ஓட்டைகள் ஏன்?” என்று கேட்டேன்.

”(1/2 அங்குலத்திலிருந்து 1 1/2 அங்குலம் வரை இருக்கும்) ஒவ்வொரு பொட்டிலும் ஏதோவொரு மணிக்கல் (ஆம், nine types of gems. ஒன்பான் மணிக் கல் - நவரத்னம்) அல்லது முத்து, பவளம் என்று ஏதோ) பதித்திருந்தது. 100, 200 ஆண்டுகளுக்கு ஒருமுறை கம்போடியருக்கும்  வியத்நாமியருக்கும் நடந்த சண்டையில் வியத்நாமியர் இவற்றைப் பறித்துப்போனார்" என்று வரலாற்றுச் சோகக் கதை படித்தார்,  கம்போடியருக்கும்  தாய்லந்து/சியாமியருக்கு இடையிலும் கூட இதுபோல் சதாப் போர்கள் நடந்துள்ளன. ஒருவருக்கொருவர் இப்படிக் கொள்ளையடித்தது அதிலும் அதிகம்தான். [நம் தமிழரசர் மட்டும் “யோக்கியரா” என்ன? மூவேந்தரும் ஒருவருக்கு ஒருவருடனும், குறுநில மன்னருடனும் சண்டையிட்டுச் செல்வம் கொள்ளை யடித்தது இதைவிட ஏராளம். வல்லான் வகுத்ததே அக்கால வாழ்க்கை.]  ஆக Preah Khan இல் நான் பார்த்தது சித்திரக் கருவறை. இப்போது குற்றாலம் சித்திர அம்பலத்தைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். பொட்டுப்பொட்டாய் சுவர் முழுவதும் மணிக் கற்கள், முத்து, பவளம் பதித்திருந்தால். பகைவர் விட்டு வைப்பாரா? முடிவில் சித்திரம் என்னும் பொருளை மாற்றி  ஓவியம் தான் வரையவேண்டும். 

இன்னொரு காட்சி காண்போமா? கேரளத் திருச் சிவபேரூர் (அதாங்க, திருச்சூர்) ஆடிப்பூரத்தில் நிற்கும் பற்பல யானைகளுக்கு பொட்டுக்கள அமைந்த முகபடாம் அணிவிக்கிறாரே அதைச் சித்திரப் படாம் என்றுஞ் சொல்வர்.  சித்திரத் தாளம் என்பது ஒன்பது வகைத் தாளம் சித்திரத் தையல் என்பது பல்வேறு பூவேலைப்பாடுகள் செய்த ஆடை.  சித்திரப்பாவாடை= பூவேலை செய்த பாவாடை. இன்னும் சித்திரத்தில் தொடங்கும் பல்வேறு கூட்டுச் சொற்களை நான் பட்டியலிடமுடியும். இங்கு எல்லாவற்றிலும் சித்திரம் என்பது ஒரு பெயரடை. அதன் பொருள் ”விதவிதம், வெவ்வேறு, பொட்டு, அழகு, நுணுக்கம், detail, something pleasant, intriguing, kaleidoscopic” - இப்படி விரியும்.  அதெப்படிச் சித்திரம் என்ற சொல் பிறந்தது? 

அடுத்த பதிவில் சொல்லிவிடுகிறேன்.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, August 20, 2019

சங்கதமெனத் தவறாய்க் கொள்ளப்படும் சில தமிழ்ச்சொற்கள் - 3

ஆறாவது சொல்லான குருவிற்கு வருவோம். 

குல்>குள்>குரு என இச்சொல் வளரும். குல் எனும் வேர்ச்சொல், அடிப்படையில் தோன்றல் வினையைக் குறிக்கும். பின் முளைத்தல், எழுதல், இளமை, புதுமை, பசுமை, மென்மை, முன்மை, தருதல், முற்செலவு, மேற் செலவு, ஊக்கம், உயர்ச்சி, உச்சி, பெருமை என்று பல்வேறு பொருட்பாடுகளை உணர்த்திச் சொற்களை உருவாக்கும். 

குல்லல்= தோன்றல். அன்றாட வாழ்க்கையில் குலம் என்கிறோமே? அது குல்லலில் எழுந்ததே. lineage என்பது அதன்பொருள். குல்>குழு= சேர்ந்து கொண்டது. இதைக் குழுவியது என்றுஞ்சொல்வார். குல்>குரு-த்தலில் எழுந்த பெயர்ச்சொல்  குருத்து என்பதாகும். ”வாழை, பனை, தென்னை, மரஞ் செடி கொடிகள்” எனப் பல்வேறு குருத்துகளை அன்றாட  வாழ்விற் சொல்வோம். குருத்து= sprout குருகெனினும் குருத்தென்றே பொருள். குருந்தென்றும் அமையும். குரு>குரும்பு>குரும்பை= தென்னை, பனங்காய்களின் பிஞ்சு. குரு= கொட்டை;  குழு>கொழு>கொழுந்து என்பது துள்>துளிர்> தளிரைக் குறிக்கும். குரல்= கூலக் கதிர். பூங்கொத்து என்றும், தினை, வாழை ஆகியவற்றின் தோகை என்றுஞ் சொல்வர்.  குரு>கூர்>கூலம் என்றும் தொடர்பு சொல்லலாம்.

குரல்>குரற்புல்>குரப்புல்= தருப்பைப் புல்= dharba grass. (பார்ப்பனத் துறவியர் மட்டுமின்றி) எல்லாத் துறவிகளும் தருப்பைப்புல் தடுக்கில் அமர்வராம்.  குரம்= தருப்பை;, குரமுளை= எல்லாவகை வித்துகளினின்றும் தோன்றும் முளை, குருக்கு= பிரம தண்டுச் செடி prickly poppy நெருஞ்சி முள்ளுக்கும் குருக்கென்ற பெயர், அதன் கூர்மையாலுண்டு, இன்னொருவரை வையும் போது  “உன் வீட்டிலே எருக்கும் குருக்கும் முளைக்க!” என்பாருண்டு.  சரி தாவரங்களுக்கு மட்டுமே குள்/குழு/கொழு என்ற அடிச்சொல் அமைந்ததா எனில் இல்லை. பல்வேறு உயிரிகள், விலங்குகளுக்கும் கூட அமைந்தது என்றே சொல்லவேண்டியுள்ளது.. 

குரு என்பது, கருவென்றும் திரியும். முட்டைக்குள்ளும் கருவுள்ளதே? குட்டிகள் பிறக்கும்போது  ஆண்விந்தும்,  பெண்முட்டையும் சேர்ந்து கருவாகிறது. கருவைச் சூல் என்கிறோமே?; குழவி, குழந்தை தொடர்பான சொற்களும் குல், குள், குழவில் எழுந்தவையே. அடிப்படையில் இவை இளமை குறிக்கும் சொற்கள்.  குழகு, குழகனும் குழந்தைப் பெயர்களே. குள்>குள்+து=குட்டு> குட்டி என்பதும் தோன்றல் கருத்தில் எழுந்ததே. குள்+ந்+சு>கு(ள்)ஞ்சு என்பதும் தோன்றல் கருத்து வளர்ச்சியே. குருள்>குருளை= குட்டி. ஆங்கிலத்தில் girl. குருத்துக் குழந்தை= அப்போது பிறந்த குழந்தை just-born kid; உடலில் பொக்குளம் ஏற்பட்டு எழுகிறதே? அதையும் குருத்தலென்பார். குரு குருத்தல் = வேர்க்குரு உண்டாதல், நமைத்தல், அம்மைக் கொப்புளமும் எழுவதும் குருத்தல் தான். குருப்பு = பரு; புண், குருப்பித்தல்= பருவுண்டாதல். குருமை= பருமை, பெருமை;  குருக்கல்= குரு (பொக்குளம்) உணடாதல்.

குழுத்தல்= பருத்தல், பெருத்தல். பெருத்தல் என்பது இரு பரிமானத்திலும், முப் பரிமானத்திலும் நடக்கலாம். பருமன் என்பது முப் பரிமானம். பரப்பு என்பது இரு பரிமானம். குழு>குழித்தல் என்பது இரு பரிமானச் சொல். குழுத்தல், குழுமுதல் என்பது, கூடலிற் தொடங்கி சொற்பொருள் வளர்ச்சியிற் குழித்தல் ஆகும். குழுத்தலின் திரிவான கொழுத்தல் திண்மப் பருமனையும் (solid expanse), குழித்தலின் திரிவான கொழித்தல் நீர்மப் பருமனையுங் (liquid expanse) குறிக்கின்றன. குழித்தல் என்ற சொல், முதலில் ஓர் எண்ணை அதே எண்ணாற் பெருக்குவதற்குப் பயனாகிப் பின் எல்லா எண்களையும் பெருக்குதற்கு ஆகியது. (சதுரத்திலிருந்து செவ்வகம் போய்ப் பரப்பைக் காணும் சிந்தனை விரிவை இங்கு அறியலாம்.)  காலங் காலமாய் தமிழகத்தின் செந்தரக் குழி என்பது 16 சாண் சதுரம் = 121 சதுர அடி.  (18 சாண் சதுரம், 12 சாண் சதுரம் போன்றவையும் சிலவட்டாரங்களில் சில காலங்களில் இருந்துள்ளன. 1 சாண்= 8.25 அங்குலம்; 16 சாண்= 132 அங்குலம்= 11 அடி.) குழியிலிருந்தே மா, வேலி என்ற பெரிய பரப்பளவைகள் உருவாகின.

இனிக் குருவின் பெருமைப் பொருளுக்கு வருவோம். குரு+அவன்= குரவன்= தலைவன்; குரு>குரம்>குரத்தி= தலைவி; இச்சொல் குருவின் மனைவி, குருப்பதவி ஏற்றிருப்பவள், சமணப் பெண்துறவி ஆகியோரையுங் குறிக்கலாம். ஐங்குரவர்= அரசன், ஆசிரியன், தாய், தந்தை, தமையன் ஆகியோரைக் குறிக்கும். பொதுவாய், குரு என்பது அறிவாசிரியனைக் குறிக்கும். சிவ சமயக் குரவர் நால்வர். என்பார். அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்பாரே அவராவர். குரவடிகள்= சமண ஆசிரியத் துறவி, குரவு= ஆசிரியத் தன்மை. குரிசில்= பெருமையிற் சிறந்தோன். வள்ளல். தலைவன், குரு= ஐங்கரணன் (பஞ்சாங்கக்காரர். இக்காலத்தில் பெருமானர் வாத்யார் என்றழைப்பார்), வியாழக் கோள்.  சிவன்கோயிலில் இறைவன் திருமேனிக்கு அலங்காரஞ் செய்து ஆகமம் பேணி, திருநீறு அளிப்பவர், (இவர் பெருமானர் மட்டுமென்று பொருளில்லை. சிவ வேளாளராகவும், வேளகாரர்/குயவராகவும் கூட இருக்கலாம். )  தவிர, குரு என்பதற்குக் குருகுலத் தலைவன், அமைச்சன், அயன் (பிரம்மன்) என்ற பொருட்பாடுகளும் உண்டு.  குழு>கெழு>கெழுமை>கிழமை>கிழவன்>கிழான் = உரியவன், தகைவன், கணவன், மருதநிலத் தலைவன் ஆகிய சொற்களும் இதே தொடர்பிள் கிளைத்தவை தாம்.

குரு என்பது பருமன், கனமென்ற பொருளின் நீட்சியாய் வடமொழியில் நிரையசையைக் குறிக்கும் வாய்ப்பாடாகும். நெடில், நெடிலொற்று, குறில், குறிலொற்று என்ற நாலையும் இரு மாத்திரையளவு கூடிய அசையாய் (வடமொழியொட்டி தமிழுக்கு இலக்கணஞ்சொன்ன) வீரசோழியம் அடையாளங்காட்டும்.  (இது நிரையை நிறையெனத் திரித்துப் புரிந்து கொண்டதன் பலன் ஆகும்.) குரு= நிறை ஆகி,  அதன் நீட்சியான குருவம் gravity என்ற பொருளைத் தந்தது.  குருவேற்றக் கொள்கை= gravitation theory.

சரி,  ”குரு தமிழா?” எனில் தமிழ் என்றே சொல்வேன்.. ”சங்கதத்தில் guru ஆகிறதே?”- எனில் மறுக்க முடியவில்லை. அதேபொழுது சில சொற்களின் தொடக்கம் அதிர்ந்து voiced வகையில் ஒலிப்பதாலேயே, சட்டெனச் சங்கதம் என்றுவிட முடியாது.  ஏனெனில், மேற்சொன்ன தோன்றல், முளைத்தல், எழுதல், இளமை, புதுமை, பசுமை, மென்மை, முன்மை, தருதல், முற்செலவு, மேற்செலவு, ஊக்கம், உயர்ச்சி, உச்சி, பெருமை என்ற இத்தனை பொருட்பாடுகளையும் பல்வேறு சங்கதச் சொற்கள் உணர்த்துவதில்லை. ஆனால் தமிழ்ச் சொற்கள் உணர்த்துகின்றன. மேலே கூறிய தமிழ்ச் சொற்களின் வளம், அகல்வரிசையைக் காணும்போது, தோற்றம் அங்கு தானா என்பதில் இன்னும் ஐயமுண்டு.  தமிழுக்கே ஆதாரம் அதிகம்.

ஏழாவது சொல்லான ஞானம் தமிழ் என்பதைச் சொல்லாய்வறிஞர் ப.அருளி தன்னுடைய, “யா” என்ற நூலில் மிக விரித்துச் சொல்லியுள்ளார். அதற்குமேல் சொல்வது கூறியது கூறலாகும். நண்பர் அந்த அருமையான நூலை வாங்கிப் படியுங்கள்.  உங்க்ளைப் போன்றோர் புரந்தால் தானே தமிழ்முயற்சிகள் நடக்கமுடியும். நம்மில் பலரும்  அதையேன் செய்யத் தயங்குகிறோம்?

அடுத்த பகுதியில் முடிவிற்கு வந்துவிடுவேன்.

அன்புடன்,
இராம.கி.

Monday, August 19, 2019

சங்கதமெனத் தவறாய்க் கொள்ளப்படும் சில தமிழ்ச்சொற்கள் - 2

அடுத்தது வாயு. இது வாய் + ஊ >வாயூ>வாயு என்றபடி எழுந்தது. மூக்கால் மூச்சுவிடுவது போல் வாயாலும் காற்றை வெளியிடலாம். ஊ-தலை, ஊது-அல் எனவும் பிரிக்கலாம். ஊ, ஊது என்ற இரு சொற்களுமே தமிழ்தான். ஊது> ஊதை, என்பதும் காற்றுத்தான். ஊ>உய்>உயிர்= ஒருவன்/ஒருத்தி வாழ்கிறான்/ள் எனவுணர்த்தும் காற்று.  உய்தல்= living. உய்தலை விடுத்து உய்த்து>உச்சு> உச்சு-தல் வினையிலெழுந்து உஜ்ஜு-தல் என்றான வடமொழிப் பலுக்கில் பிறந்த ”ஜீவனில்” சிலர்தொங்குவார். ஜீவனென்பது மிகச்சிதைந்த வடதமிழ்ச் சொல். இதற்கு இணையான சொல் எந்த இந்தை யிரோப்பிய மொழியிலும் கிடையாது. ஆனாலும் சங்கதம் பழகுகிறதெனில் என்னபொருள்? கடன் வாங்கியதென்பது தானே? உயிர், சீவன் போன்ற சிந்தனை, நிலைத்த நாகரிகத்தார்க்கே எழும். நாடோடிகளுக்கு எழ வாய்ப்புக் குறைவு.  வாயூவிற்கு வருவோம்.

வாயால் ஊதுவது (ஊ செய்வது) வாயூ >வாயு. வாயுவை வடமொழி கடன் வாங்கிப் பயனுறுத்தி, அதற்கு வா எனும் தாதுவைக் காட்டும், ஆனால் எந்த இயற்கைச் செயலோடும் தொடர்புறுத்தாது. தாதுவாய்ச் சொல்லப்படும் ’வா’ வின் பொருளென்ன? தெரியாது. பாணினிவழித் தாதுகளின் சிக்கலே இதுதான். அவர்களின் தாதும் நம்வேரும் ஒன்றல்ல. அப்படி நாம் எண்ணிக் கொள்கிறோம்  அவ்வளவு தான். ஏறத்தாழ 2200 தாதுக்களை அவர் சங்கத அடிப்படையாக்குவர். தாதுவிற்குத் தண்டென்றும் பொருள் சொல்லலாம். அது உறுதியாக வேராகாது. தமிழ்வேர்கள் நானறிந்தவரை 81 ஐத் தாண்டுவதே அதிகம். (தமிழ்வேர்கள் பற்றி வேறொரு கட்டுரையில் எதிர்காலத்தில் சொல்வேன்.)

வாயை அறியச் சற்று ஆழம் போகவேண்டும். இங்கே சொல்லும் எல்லாச் சொற்களுக்கும் வள்ளே வேர். வள்ளுதல் என்பது வளைதல்/தோண்டல் எனும் 2 பொருள்களையும் குறிக்கும். மரத்தை வள்ளி உருவாக்கிய பரிசல் வள்ளம் ஆகும், மரத்தில், களிமண்ணில் வளைத்தோ, தோண்டியோ பெற்றது வட்டு. வட்டிற் சிறியது வட்டில், வள்ங்கு>வங்கு= பொந்து. வங்கை மூடிய சாய்வுப் பலகை வங்கு/ வாங்குப் பலகை. ”வங்கி (Bank) என்ற சொல் இப்படித்தான் எழுந்தது. வங்குதல்= தோண்டுதல். தென்பாண்டிநாட்டில் வினைச் சொற்களின் நடுவில் வரும் ஙகரம் சிலபோது பலுக்கப்படாது போய் விடும். வங்கு>வகுவாகி வகுதல்= இரண்டாய்ப் பிரிதலைக் குறிக்கும். பல்வேறாய்ப் வகுக்கப்பட்டவை வகை. வகு>வகிர் என்றும் நீளும். வகிர்>வயிர் என்றும் ககரம் யகரமாகிப் பலுக்கலில் திரியும். வள்>வய் என்றுந் திரியலாம். [தொள்> தொய், நொள்>நொய், வெள்>வெய் என்பதுபோல்  புரிந்துகொள்க.]

வகுபட்டது/வயிபட்டது வாயாகிக் கருவிப்பெயர் குறிக்கும். கவாலத்தின் மேல்த்தாடையிலிருந்து கீழ்த்தாடை பிரிந்து வகுபட்டுள்ளதால் வாய் எனப் பட்டது. தாடைகள் வகுபட்டதால்தான் உண்ணல், பேசல் போன்ற இயற் செயல்கள் எழுந்தன. வாய்ப்பட்டதை வாய்த்தல் என்றுஞ் சொல்வோம். வழிப்பட்டதென்று பொருள். வாய்து>வாது என்றும் பலுக்கப்படும்.  வாது என்பது வாயூவிற்கு இன்னொரு சொல். வாது+அம்= வாதம் என்பது சித்த மருத்துவக் கலைச்சொல். வாதம், பித்தம், கபம்/சிலேட்டுமம் என்ற 3 வகைகளில் சித்தமருத்துவம் மாந்த உடல்களை வகைப்படுத்தும்.  உண்ணல், அருந்தல் தொடர்பான பல சொற்களும் குழித் தன்மையையும் முகக் குழிக்குள் உணவை முழுக்கும்/விழுக்கும் தன்மையையும் உணர்த்தும். 

ஆங்கிலத்தில் mouth (n.) என்கிறாரே? அதன் வரையறையாய் Old English muþ "oral opening of an animal or human; opening of anything, door, gate," from Proto-Germanic *muntha- (source also of Old Saxon, Old Frisian muth, Old Norse munnr, Danish mund, Middle Dutch mont, Dutch mond, Old High German mund, German Mund, Gothic munþs "mouth"), with characteristic loss of nasal consonant in Old English (compare tooth), probably an IE word, but the exact etymology is disputed. Perhaps from the source of Latin mentum "chin" (from PIE root *men- (2) "to project," on the notion of "projecting body part"), presuming a semantic shift from "chin" to "mouth." என்று சொல்லப்படும்.  இங்கே   "chin" என்று சொல்லப்பட்டது என்னைப் பொறுத்தவரை தவறு.

வாய்ச்செயல் தொடர்பான எல்லாமே உள்ளிடுதலைக் குறிக்கும். உள்>உண்> உண்ணு>உணவு. முழுங்குதல் என்பது உள்ளிடுதலின் இன்னொருவகை. முழுங்குதல், முங்குதல் என்றுஞ் சொல்லப்படும். (இவ்வளவு சாப்பாட்டை உண்டைக்காட்டி போல் அப்படியே முங்குறானே?) முங்கல், மு(ழு)க்கல் என்றும் பலுக்கப்படும்  முக்கும் குழி முக்கமாயிற்று. சங்கதத்தில் இரண்டாம் ககரமிட்டு மு(க்)கமென்று சொல்லப்படும்  நம் முகமும்  இம் முக்கமும் வெவ்வேறு வகையில் பிறந்தவை.  மு(ழு)க்கலை மு(ழு)த்தலென்றுஞ் சொல்வோம்.  உணவை முழுக்காட்டும்> முக்கும்> முழுத்தும் குழி mouth. முழுத்து> முகுத்து>மூத்து>மௌத்>mouth என்பதே nostratic முறைப்படி சரி யாகும்.  (ழகரம் ககரமாவது பல தமிழ்ச் சொற்களில் நடந்துள்ளது.)  சங்கதத்தில் முக்கம் போக, முக்கவாத்ய (வாய்க்கருவி) என்ற சொல்லும் உண்டு.  இதுபோக, ஆசந், வக்த், ஆஸ்ய என்ற சொற்களும் வாய்க்கு உண்டு.

அடுத்த சொல் ஆகாயம். இது ஆ என்னும் முன்னொட்டுச் சேர்ந்த சொல். அடிப்படைத் தமிழிற் ’காய்ந்து கரிந்தது காயமாகும்’; விண்ணை அதன் நிறம் பற்றிக் காயம் என்பது தமிழர் வழக்கம். (”விண்ணென வரூஉம் காயப் பெயர்” - தொல், எழுத்து 305) காள்>காய்>காயம்  காள்= கருமை. காளி=கருப்பி ஆனவள்; காயாம்பூ = கருநீல வண்ணப் பூ. விண்ணவன் கருநீல வண்ணன். அகல் காயம், ஒலிப்பு நீண்டு, அகன்ற இருள்வெளி உணர்த்தி, ஆல்காயமாகி, ஆகாயமாகும். காயம் காசம் என்றும் வழங்கும்  காசினி என்பது காசத்தில் பிறந்த பெண்விளிப்புச் சொல். காசம்>காசுமம்> cosmology என்று கிரேக்க வழி ஆங்கிலத்தில் நுழையும்.  தமிழ்-கிரேக்கத் தொடர்புகளைக் குறைத்தே மதிப்பிடுகிறோம். அலெக்சாண்டர் தொடர்புக்கு முன்னாலும் யவனர் தமிழகம் வந்திருந்தார். இன்னுஞ் சொன்னால் இசுரேல் நாட்டு மன்னர் சாலமன் காலத்திலிருந்தே, பொனிசியர் காலத்திலிருந்தே தமிழர் தொடர்பு உண்டு.அதையெல்லாம் யார் படிக்கிறார்?! 

மூன்றாவது சொல் சவம்.  தமிழில், சாய்தல்>சாதல் = இறத்தல். இறந்தபின் ஓர் உடல் தானே நிற்காது. கீழே சாய்ந்துவிடும். சாதல்>சவுதல் என்பது நிலா> நிலவு போன்ற ஒலி மாற்றம். கணக்கற்ற சொற்கள் தமிழில் அப்படியாகி யுள்ளன. சாதல் தமிழென்றல் அப்புறம் சவமும் தமிழ் தான். சவுத்தான்> செத்தான் என்பதும் தமிழே. சாவை ஏற்போர் சவத்தை ஏற்கமறுப்பது வியப்பு ஆகிறது. எப்படியெல்லாம் இந்தச் சங்கதம் இவர்களைப் பாடுபடுத்துகிறது? மூளையையே வெட்டிவைத்து விடுவார்களோ, என்னவோ?

நாலாவது சடம். தமிழில் உயிர், உடம்பு பற்றியவற்றியவற்றுள் பொருள்முதல் வாதப் புரிதலும் உண்டு. கருத்துமுதல் வாதப் புரிதலும் உண்டு.  முன்னதச் சாருவாகப் பார்வை உலகாய்தப் பார்வை என்பர். பின்னதை ஆன்மவாதப் பார்வை என்பார். இந்தியாவில் எழுந்த கடவுள்மறுப்புச் சமயங்களான அற்றுவிகம் (>ஆசீவிகம்), செயினம், புத்தம் போன்றவை ஐம்பூதக் கொள்கையையும்  உயிர் என்பதின் இருப்பையும் ஏற்றுக்கொண்டவை தாம்.

எப்படி ஒரு பொருளைப் பொட்டணம்/பொட்டலம் போடும்போது சட்டங் கொண்டு அடித்துப் போர்த்துகிறோமோ, அது போல் உயிரெனும் பொருளைப் போர்த்தும் உடலும் ஒரு சட்டமே என்பது கடவுள் மறுப்புச் சமயங்களுக்கும் உகந்த சிந்தனை தான். கடவுள் ஏற்புச் சமயங்களான சிவமும், விண்ணவம் கூட இவற்றை இயல்பாய் ஏற்கும் யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்திக்கொண்ட சீர்காழிச் சிவன், சட்டைநாதன் எனப்படுவான். நம் உடம்பின் மேல் போடப்படும் இன்னொரு covering-உம் சட்டை எனப்படும். சட்டையைத் தமிழென ஏற்போர், சட்டம்>சடம் என்பதை மறுப்பது விந்தையிலும் விந்தை. வடமொழியார் சடத்தை ஜடமென்று பலுக்குவார். அதனாலேயே சடம் அவர் சொல்லாகுமா? புழங்குபவன் சொல்வது சரியாம். உருவாக்கியவன், பண்ணியவன் சொல்வது சரியில்லையாம். இது என்ன புதுக்கதை?
     
ஐந்தாவது புத்தி.  இதன் வேர்ச்சொல் புல்.  பொழுது புலர்ந்தது என்கிறோமே? இருள் அகன்று வெளிச்சம் அல்லது தெளிவு வருகிறதென்றுதானே பொருள். புலவன் = அறிவில் தெளிந்தவன்.  புலமை = அறிவுத்தெளிவு. புலத்தன், புலத்தி, என்றசொற்களின் லகரத்தில் வரும் உயிர் இழிந்து புத்தன், புத்தி ஆகும்.  புத்தி பெண்பாலுக்கும், தெளிந்த அறிவிற்குமான சொல்லாகும். ஒரு செயலில், செய்தியில் நல்லது கெட்டது எனத் தெளிவுகாணும் அறிவு புத்தி. காரண, காரியம் தெரிந்தவன் புத்திசாலி எனப்படுவான். அறிவிற்கு அடுத்த நிலை புத்தி. Being familar is knowledge. (அறிவு). discerning the right from wrong is புத்தி.  ஆனாலும் 100 க்குத் 99 பேர் இதைச் சங்கதச்சொல் என்றே கருதுகிறார். நாம் சொல்வது புத்தியில் ஏறுவதேயில்லை. அந்தளவிற்கு முன்முடிவுகள் உள்ளன.

அன்புடன்,
இராம.கி.