Friday, August 23, 2019

சங்கதமெனத் தவறாய்க் கொள்ளப்படும் சில தமிழ்ச்சொற்கள் - 5

உல், குல், சுல், துல், நுல், புல், முல் எனப் பல்வேறு வேர்கள் குறுமைப்பொருள் குறிப்பதற்குத் தமிழிலுண்டு.  (இவற்றின் கிளை வேர்களுமுண்டு.) இவற்றில் சுல் என்பதைமட்டும் இங்கு பார்க்கிறோம். இது சல், சில் என்றுந் திரியும். சுண்டைக் காய் சாப்பிட்டிருப்பீர்களே? சுல்>சுள்+ந்+து= சுண்டு= தெறி (வினைச்சொல்); தெறித்துவிழுந்து உருவான துண்டு. சுல்>சில். சில்லுதல் = உடைதல். சில்லிமூக்கு = உடைந்துபோன மூக்கு. சின்னஞ் சிறிதாய் உடைந்தால் சில்லி என்பது பொருந்தும். சுல்>சுள்= சிறுமை; சுள்+கு>சுட்கு> சுக்கு= சிறு துண்டு; (சுக்குநூறாய் உடைஞ்சுபோச்சு.)

சுல்>சில்> சிறு= துண்டு. சில்>சிலை> சிலைத்தல்= துண்டு துண்டாய்ச் செதுக்கி மிஞ்சி மீதமான உருவம். சில்+பு>சிற்பு>சிற்பம்= சிலை. (சிற்பம் வட சொல் என்று என்னுடன் வாதாடியோரும் உண்டு. என்ன செய்வது? நம்மூர்ச் சொல்லை வட சொல் எனக்காட்டுவத்ல் அவ்வளவு நாட்டம். )(சில்லைப் போலவே குல் என்னும் வேரில் பிறந்த குறு, குலை போன்ற சொற்களையும் இணையாய்ப் பொருத்திப் பார்க்கலாம். ) ”சில்+தல்= சிற்றல்= சிறிதாதல்.” என்பதும் ”சில்+உ+தல்= சில்லுதல்” என்பதும் முதல்நிலை வினைச்சொற்கள். நம்மூர்ப் பேச்சு வழக்கில் றகரம் என்பது பலபோது தகரமாகவும், சிலபோது டகரமாகவும் மாறும். வேறுசில இடங்களில் றகரம் ரகரத்தின் போலியாகவும் புழங்கும்.

(உங்களுக்குத் தெரியுமோ? தமிழெழுத்துக்களில் றகரம், வெகுநாட்களுக்கு அப்புறமே எழுந்தது அதனாற்றான் மெய்யெழுத்து வரிசையின் கடைசியில் அது வைக்கப்பட்டது.) அதன்வடிவங் கூட,, டகரத்தை மேலெழுதித் தகரத்தைக் கீழெழுதி உருவாக்கப்பட்டதே. பொ.உ.மு. 500 அளவிலுள்ள பழைய தமிழி எழுத்துக்களைக் கூர்ந்துபாருங்கள். அ, இ, உ எனும் 3 உயிர்களும், க், ங், ச், ஞ், ட், த், ந், ப், ய், ர், ல், வ் எனும் 12 மெய்களும் தான் முதலில் எழுந்தவை. மற்ற எழுத்துகள் அனைத்தும் சிச்சிறு மாற்றங்களில் இவற்றில் எழுந்தவை. பொதுவாய் வரலாறென்பது எழுத்தேற்பட்ட பிறகு என்றும் எழுத்திற்கும் முந்தையது வரலாற்றிற்கு முந்தையதென்றும் சொல்வர். அப்படியெனில் பாதி எழுத்துத் தோன்றிய காலத்தை எப்படிச் சொல்வது?)

நான் மற்றவை விடுத்து சில்லில் பிறந்த சொற்களைப் பார்க்கிறேன். சிற்றது, சிறிதெனவும், சில்+நம் = சின்னமெனவும் சொல்லப்படும், சிற்றல் பேச்சு வழக்கில் சித்தல்/சித்தர் ஆகும். சித்தர் இன்னுங்குறுகிச் சிதர்/சிதறு ஆகும்  சிதர்/சிதறு எனும் பெயரிலிருந்து  2 ஆம் நிலையில் சிதரல்> சிதறல் எனும் தன்வினையும், சிதர்த்தல்/சிதற்றல் எனும் பிறவினையும் பிறக்கும்.  நாளா வட்டத்தில் சிதர் (பொடி, தூள் போன்ற) திண்மம் சிதர்வதற்கும், சிதறு  நீர்/நீர்மம் துளித்துளியாய்ச் சிதறுவதற்கும் விதப்பானது.  தாவரப் பொடிகள், வண்ணக் குழம்புகளைச் சிதர்த்தியே தொடக்க மாந்தன் சுவரோவியங்கள் வரைந்தான்.  சிதர்த்தலின் இன்னொரு வடிவம் சிதரித்தல்/சித்தரித்தல். ( குல்லின்கீழ் குற்றல், குத்தல், குதரல்/குதறல், குதர்த்தல்/குதற்றல் என்ற சொற்களையும் இங்கே ஒப்பிட்டுப் பார்க்கலாம்.)

அவனவன் சிந்தனை, கற்பனைக்குத் தக்கச் சிதர்ப்பு/சித்தரிப்பு நடந்தது. நாளாவட்டத்தில்  சித்தரிப்பு ஒழுங்குபட்டது; நெளிவுசுளிவு துலங்கியது. வண்ணம் பெருகியது சோதனை கூடியது, இயலுமைகள், வரைவின் பின்புலம் எனப் பலவும் விரிந்தன.  ”விதவிதம், வெவ்வேறு, பொட்டு, அழகு, நுணுக்கம், detail, something pleasant, intriguing, kaleidoscopic” என்பவற்றோடு colourful என்ற கருத்தும் கூட எழுந்தது.  சித்திரம், ஓவியமாகவும் பொருள் கொள்ளப் பட்டது.

ஆழ ஓர்ந்துபார்த்தால், சில்>சிற்றல்>சித்தல்>சித்தர்> சித்தரிப்பு> சிதரிப்பு என்றே இச்சொல் வளர்ந்திருக்க வாய்ப்புண்டு. இதற்கு மாறாய் ”செத்து என்பது பொருந்தல் பொருளில் வரும் செத்து> சித்து ஆகும். திரம் என்பது சொல்லாக்க ஈறு” என்று பாவாணர் விளக்கம் வரும். நான் ஆய்ந்த வரை செகரம் மிக அரிதாகவே சிகரம் ஆவதாலும் (சிகரம் செகரமாவது இன்னும் அதிகம்), ஒப்புப் பொருளில் மட்டுமே ஓவியம் வரைவதில்லை என்பதாலும், முற்றிலும் கற்பனையில் இயற்கைக்கு மாறாய் ஓவியம் இருக்கலாம் என்பதாலும், சித்திரம் என்பதற்கு ஓவியம் தவிர வேறு பொருள்கள் இருப்பதாலும் நான் மறுக்க முற்பட்டேன். ஆனால் பாவாணரின் சொல்லாக்க நெறிமுறை தெரியாது இம்முடிவிற்கு நான் வந்திருக்கமுடியாது. எனவே ஆசானில் வேறுபட்டேன்.

ஒன்பதாவது சொல் நடனம், ”நடத்தல், நடை, நடம், நடத்தை, நடப்பு, நடல், நடவு, நடன்” போன்ற  சொற்களைப் பார்த்த பின்னுமா ஒருவர் ”நடனம் வட சொல்” என்பார்?  அப்படியானால், “நட்டம், நாட்டியம், நடவரசன், நட ஈசன்” போன்றவற்றை என் சொல்வார்?  இங்கே குறிப்பிட்ட எல்லாமே நள் எனும் வேரில் கிளைத்தவை. நள்ளுதல்= ஊன்றுதல்  காலை மாற்றிமாற்றி ஊன்றாது  மேற்கூறிய செயல்களை எல்லாம் செய்யமுடியுமோ? ”எடுத்த பொற்பாதம்” என்று தேவாரம், நான்காம் திருமுறை, பதினெட்டாம் பதிகம், நான்காம்  பாடல் வழி திருவதிகை வீர்ட்டானத்து ஆடல்வல்லானை வியந்து நிற்பார் திருநாவுக்கரசர். ”குஞ்சித பாதம்”என்றும் வேறு சிலர் சொல்வார்.  ஒருகால் ஊன்றி இன்னொரு கால் எடுத்துநிற்கும் பொதிப்பைக் (posture) கண்டு வியக்காதார் உலகில் யார்? சிவன் போலும் தமிழ்க் கடவுளன்றி வேறு எந்தவூர்க் கடவுள் இதைச் செய்வதாய் விவரிப்பு உண்டு?  எந்த வேதம் சொல்கிறது?  தெரியவில்லை.

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால் வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்தபொற் பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே

பத்தாவது  சொல் தருமம். இதைப்பற்றிப் பலரும் எழுதிவிட்டார். மெய்யியல் விளக்கங்களை விட்டுவிடுங்கள். குறிப்பிட்ட எல்லைகளை, கோடுகளை, மரபுகளை, ஒழுங்குகளை, வழக்காறுகளை அறுப்பது அறம். இது நல்லது, இது கெட்டது என்று வரையறுப்பது அறம். அதேபோலக் குறிப்பிட்ட எல்லைகளை, கோடுகளை, மரபுகளை, ஒழுங்குகளை, வழக்காறுகளை தருவது தருமம். முன்னோர் அறுத்தால் என்ன, தந்தால் என்ன? எல்லாம் ஒன்றுதான். சரி, தருமம் என்ற சொல் எப்படியெழுந்தது?

வா என்ற சொல் எப்படி வள்>வரு>வார்>வா-வில் பிறந்ததோ அது போல் தான், தா என்ற சொல் தள்>தரு>தார்>தா-வில் பிறந்தது. வாழை குலை ஈனுவதைக் குலை தள்ளுகிறது என்கிறொமே? தள் என்பதே இங்கு வேர்ச்சொல். தள்ளுதல் கருத்திற்றான் தருதல் கருத்து பிறந்தது. (தாநம்> தானம் என்பதும் தமிழ்தான். சில பொருட்பாடுகளில் தருமத்திற்கு அது இன்னொரு சொல்.) கள்>கரு>கார் என்பது இதேவகையில் வேறு சொற்களை உருவாக்கும் கருமம், பருமம், மருமம் போல் தருமமும் தமிழே. எவ்வளவு முட்டிமோதினாலும் தருமம், தானம் போன்ற சொற்களை மற்ற இந்தையிரோப்பிய மொழிகளில் காண்பது கடினம். அது என்னமோ, தெரிய வில்லை. தமிழிலிருந்து இச்சொல் வடக்கே போயிருக்கலாம் என்று சொல்வதில் பலபேருக்குத் தயக்கம் இருக்கிறது.

முடிவில் மா>மகா, இதற்குப் பெரும்விளக்கம் தேவையில்லை. மா என்பது பெரிய என்பதைக் குறிக்கும் தமிழ் முன்னொட்டு. நெடிலில் முடியும் நம் சொற்கள் வடக்கே போகையில் உயிர்நெடிலைக் கொஞ்சம் விலக்கி, விசர்க்கத்தை (ஆய்தம்) நுழைத்து, சிலநாள் புழக்கத்தின்பின் விசர்க்கத்தை ஹகரமாக்கி, முடிவில் விலக்கிவைத்த நெடில் உயிரைச் சேர்ப்பது  பல சொற்களில் நடக்கும் பலுக்கல் திரிவு.   பாணினியின் தாதுபாடம் 17 ஆம் பகுதில் 81 ஆம் தாதுவையும், 35 ஆம் பகுதியில் 15 ஆம் தாதுவையும் இதன் மூலமாய் magh என்று காட்டுவர். தமிழிலும் மக என்பது பேச்சுவழக்கில் மா என்றாகும் (இந்த விதி தமிழில் நூற்றுக்கணக்கான சொற்களில் நடந்துள்ளது. c1v1c2v2>c1V1 என்ற விதியின் படி அகல மரம் ஆலமரமாகும்; அகங்காரம் ஆங்காரமாகும்; பகல். பாலாகும், நான் சொல்லிக்கொண்டே போகலாம். சரி மக என்பதற்கு பெருகுதல் என்றபொருள் எப்படி எழுந்தது. சிவகங்கை பக்கம்  ”ஆறு மகுந்து ஓடுது.” மகுதலும் மிகுதலும் தொடர்புள்ளவை.  மல்குதல் என்பது மகுதலாகும். தமிழ்முறைப்படி மாவின் வேர் முல்>மல் என்பது தான். முல்>மல்>மல்கு>மகு>மக>மா.

மேலே கூறிய மொத்தம் 11 சொற்களும் தமிழ் தான். பலரும் இவற்றைச் சங்கதம் என்று நினைத்துவிடுகிறார். ஆழ ஆய்ந்தால் இவை தமிழென அறியலாம்.  வேறு தொடருக்குப் போவோம்.

அன்புடன்,
இராம.கி.

1 comment:

இ.பு.ஞானப்பிரகாசன் said...

ஆகா!... ஆகா!... ஆகா!...

ஐயா! என்ன சொல்வேன் தங்கள் தமிழ்ப் புலமை எப்பொழுதும் சிலிர்க்க வைப்பது. அதுவும் எனக்காக, சிறியேன் கேட்டதற்காக இவ்வளவு வினைகெட்டு ஐந்து பாகத் தொடர் எழுதிய தங்கள் கனிவை என்றும் மறவேன்! எவ்வளவு உழைப்பை இதற்காக நீங்கள் செலவிட வேண்டியிருந்திருக்கும்! நெஞ்சம் நெகிழும் நன்றி ஐயா!