Monday, August 19, 2019

சங்கதமெனத் தவறாய்க் கொள்ளப்படும் சில தமிழ்ச்சொற்கள் - 2

அடுத்தது வாயு. இது வாய் + ஊ >வாயூ>வாயு என்றபடி எழுந்தது. மூக்கால் மூச்சுவிடுவது போல் வாயாலும் காற்றை வெளியிடலாம். ஊ-தலை, ஊது-அல் எனவும் பிரிக்கலாம். ஊ, ஊது என்ற இரு சொற்களுமே தமிழ்தான். ஊது> ஊதை, என்பதும் காற்றுத்தான். ஊ>உய்>உயிர்= ஒருவன்/ஒருத்தி வாழ்கிறான்/ள் எனவுணர்த்தும் காற்று.  உய்தல்= living. உய்தலை விடுத்து உய்த்து>உச்சு> உச்சு-தல் வினையிலெழுந்து உஜ்ஜு-தல் என்றான வடமொழிப் பலுக்கில் பிறந்த ”ஜீவனில்” சிலர்தொங்குவார். ஜீவனென்பது மிகச்சிதைந்த வடதமிழ்ச் சொல். இதற்கு இணையான சொல் எந்த இந்தை யிரோப்பிய மொழியிலும் கிடையாது. ஆனாலும் சங்கதம் பழகுகிறதெனில் என்னபொருள்? கடன் வாங்கியதென்பது தானே? உயிர், சீவன் போன்ற சிந்தனை, நிலைத்த நாகரிகத்தார்க்கே எழும். நாடோடிகளுக்கு எழ வாய்ப்புக் குறைவு.  வாயூவிற்கு வருவோம்.

வாயால் ஊதுவது (ஊ செய்வது) வாயூ >வாயு. வாயுவை வடமொழி கடன் வாங்கிப் பயனுறுத்தி, அதற்கு வா எனும் தாதுவைக் காட்டும், ஆனால் எந்த இயற்கைச் செயலோடும் தொடர்புறுத்தாது. தாதுவாய்ச் சொல்லப்படும் ’வா’ வின் பொருளென்ன? தெரியாது. பாணினிவழித் தாதுகளின் சிக்கலே இதுதான். அவர்களின் தாதும் நம்வேரும் ஒன்றல்ல. அப்படி நாம் எண்ணிக் கொள்கிறோம்  அவ்வளவு தான். ஏறத்தாழ 2200 தாதுக்களை அவர் சங்கத அடிப்படையாக்குவர். தாதுவிற்குத் தண்டென்றும் பொருள் சொல்லலாம். அது உறுதியாக வேராகாது. தமிழ்வேர்கள் நானறிந்தவரை 81 ஐத் தாண்டுவதே அதிகம். (தமிழ்வேர்கள் பற்றி வேறொரு கட்டுரையில் எதிர்காலத்தில் சொல்வேன்.)

வாயை அறியச் சற்று ஆழம் போகவேண்டும். இங்கே சொல்லும் எல்லாச் சொற்களுக்கும் வள்ளே வேர். வள்ளுதல் என்பது வளைதல்/தோண்டல் எனும் 2 பொருள்களையும் குறிக்கும். மரத்தை வள்ளி உருவாக்கிய பரிசல் வள்ளம் ஆகும், மரத்தில், களிமண்ணில் வளைத்தோ, தோண்டியோ பெற்றது வட்டு. வட்டிற் சிறியது வட்டில், வள்ங்கு>வங்கு= பொந்து. வங்கை மூடிய சாய்வுப் பலகை வங்கு/ வாங்குப் பலகை. ”வங்கி (Bank) என்ற சொல் இப்படித்தான் எழுந்தது. வங்குதல்= தோண்டுதல். தென்பாண்டிநாட்டில் வினைச் சொற்களின் நடுவில் வரும் ஙகரம் சிலபோது பலுக்கப்படாது போய் விடும். வங்கு>வகுவாகி வகுதல்= இரண்டாய்ப் பிரிதலைக் குறிக்கும். பல்வேறாய்ப் வகுக்கப்பட்டவை வகை. வகு>வகிர் என்றும் நீளும். வகிர்>வயிர் என்றும் ககரம் யகரமாகிப் பலுக்கலில் திரியும். வள்>வய் என்றுந் திரியலாம். [தொள்> தொய், நொள்>நொய், வெள்>வெய் என்பதுபோல்  புரிந்துகொள்க.]

வகுபட்டது/வயிபட்டது வாயாகிக் கருவிப்பெயர் குறிக்கும். கவாலத்தின் மேல்த்தாடையிலிருந்து கீழ்த்தாடை பிரிந்து வகுபட்டுள்ளதால் வாய் எனப் பட்டது. தாடைகள் வகுபட்டதால்தான் உண்ணல், பேசல் போன்ற இயற் செயல்கள் எழுந்தன. வாய்ப்பட்டதை வாய்த்தல் என்றுஞ் சொல்வோம். வழிப்பட்டதென்று பொருள். வாய்து>வாது என்றும் பலுக்கப்படும்.  வாது என்பது வாயூவிற்கு இன்னொரு சொல். வாது+அம்= வாதம் என்பது சித்த மருத்துவக் கலைச்சொல். வாதம், பித்தம், கபம்/சிலேட்டுமம் என்ற 3 வகைகளில் சித்தமருத்துவம் மாந்த உடல்களை வகைப்படுத்தும்.  உண்ணல், அருந்தல் தொடர்பான பல சொற்களும் குழித் தன்மையையும் முகக் குழிக்குள் உணவை முழுக்கும்/விழுக்கும் தன்மையையும் உணர்த்தும். 

ஆங்கிலத்தில் mouth (n.) என்கிறாரே? அதன் வரையறையாய் Old English muþ "oral opening of an animal or human; opening of anything, door, gate," from Proto-Germanic *muntha- (source also of Old Saxon, Old Frisian muth, Old Norse munnr, Danish mund, Middle Dutch mont, Dutch mond, Old High German mund, German Mund, Gothic munþs "mouth"), with characteristic loss of nasal consonant in Old English (compare tooth), probably an IE word, but the exact etymology is disputed. Perhaps from the source of Latin mentum "chin" (from PIE root *men- (2) "to project," on the notion of "projecting body part"), presuming a semantic shift from "chin" to "mouth." என்று சொல்லப்படும்.  இங்கே   "chin" என்று சொல்லப்பட்டது என்னைப் பொறுத்தவரை தவறு.

வாய்ச்செயல் தொடர்பான எல்லாமே உள்ளிடுதலைக் குறிக்கும். உள்>உண்> உண்ணு>உணவு. முழுங்குதல் என்பது உள்ளிடுதலின் இன்னொருவகை. முழுங்குதல், முங்குதல் என்றுஞ் சொல்லப்படும். (இவ்வளவு சாப்பாட்டை உண்டைக்காட்டி போல் அப்படியே முங்குறானே?) முங்கல், மு(ழு)க்கல் என்றும் பலுக்கப்படும்  முக்கும் குழி முக்கமாயிற்று. சங்கதத்தில் இரண்டாம் ககரமிட்டு மு(க்)கமென்று சொல்லப்படும்  நம் முகமும்  இம் முக்கமும் வெவ்வேறு வகையில் பிறந்தவை.  மு(ழு)க்கலை மு(ழு)த்தலென்றுஞ் சொல்வோம்.  உணவை முழுக்காட்டும்> முக்கும்> முழுத்தும் குழி mouth. முழுத்து> முகுத்து>மூத்து>மௌத்>mouth என்பதே nostratic முறைப்படி சரி யாகும்.  (ழகரம் ககரமாவது பல தமிழ்ச் சொற்களில் நடந்துள்ளது.)  சங்கதத்தில் முக்கம் போக, முக்கவாத்ய (வாய்க்கருவி) என்ற சொல்லும் உண்டு.  இதுபோக, ஆசந், வக்த், ஆஸ்ய என்ற சொற்களும் வாய்க்கு உண்டு.

அடுத்த சொல் ஆகாயம். இது ஆ என்னும் முன்னொட்டுச் சேர்ந்த சொல். அடிப்படைத் தமிழிற் ’காய்ந்து கரிந்தது காயமாகும்’; விண்ணை அதன் நிறம் பற்றிக் காயம் என்பது தமிழர் வழக்கம். (”விண்ணென வரூஉம் காயப் பெயர்” - தொல், எழுத்து 305) காள்>காய்>காயம்  காள்= கருமை. காளி=கருப்பி ஆனவள்; காயாம்பூ = கருநீல வண்ணப் பூ. விண்ணவன் கருநீல வண்ணன். அகல் காயம், ஒலிப்பு நீண்டு, அகன்ற இருள்வெளி உணர்த்தி, ஆல்காயமாகி, ஆகாயமாகும். காயம் காசம் என்றும் வழங்கும்  காசினி என்பது காசத்தில் பிறந்த பெண்விளிப்புச் சொல். காசம்>காசுமம்> cosmology என்று கிரேக்க வழி ஆங்கிலத்தில் நுழையும்.  தமிழ்-கிரேக்கத் தொடர்புகளைக் குறைத்தே மதிப்பிடுகிறோம். அலெக்சாண்டர் தொடர்புக்கு முன்னாலும் யவனர் தமிழகம் வந்திருந்தார். இன்னுஞ் சொன்னால் இசுரேல் நாட்டு மன்னர் சாலமன் காலத்திலிருந்தே, பொனிசியர் காலத்திலிருந்தே தமிழர் தொடர்பு உண்டு.அதையெல்லாம் யார் படிக்கிறார்?! 

மூன்றாவது சொல் சவம்.  தமிழில், சாய்தல்>சாதல் = இறத்தல். இறந்தபின் ஓர் உடல் தானே நிற்காது. கீழே சாய்ந்துவிடும். சாதல்>சவுதல் என்பது நிலா> நிலவு போன்ற ஒலி மாற்றம். கணக்கற்ற சொற்கள் தமிழில் அப்படியாகி யுள்ளன. சாதல் தமிழென்றல் அப்புறம் சவமும் தமிழ் தான். சவுத்தான்> செத்தான் என்பதும் தமிழே. சாவை ஏற்போர் சவத்தை ஏற்கமறுப்பது வியப்பு ஆகிறது. எப்படியெல்லாம் இந்தச் சங்கதம் இவர்களைப் பாடுபடுத்துகிறது? மூளையையே வெட்டிவைத்து விடுவார்களோ, என்னவோ?

நாலாவது சடம். தமிழில் உயிர், உடம்பு பற்றியவற்றியவற்றுள் பொருள்முதல் வாதப் புரிதலும் உண்டு. கருத்துமுதல் வாதப் புரிதலும் உண்டு.  முன்னதச் சாருவாகப் பார்வை உலகாய்தப் பார்வை என்பர். பின்னதை ஆன்மவாதப் பார்வை என்பார். இந்தியாவில் எழுந்த கடவுள்மறுப்புச் சமயங்களான அற்றுவிகம் (>ஆசீவிகம்), செயினம், புத்தம் போன்றவை ஐம்பூதக் கொள்கையையும்  உயிர் என்பதின் இருப்பையும் ஏற்றுக்கொண்டவை தாம்.

எப்படி ஒரு பொருளைப் பொட்டணம்/பொட்டலம் போடும்போது சட்டங் கொண்டு அடித்துப் போர்த்துகிறோமோ, அது போல் உயிரெனும் பொருளைப் போர்த்தும் உடலும் ஒரு சட்டமே என்பது கடவுள் மறுப்புச் சமயங்களுக்கும் உகந்த சிந்தனை தான். கடவுள் ஏற்புச் சமயங்களான சிவமும், விண்ணவம் கூட இவற்றை இயல்பாய் ஏற்கும் யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்திக்கொண்ட சீர்காழிச் சிவன், சட்டைநாதன் எனப்படுவான். நம் உடம்பின் மேல் போடப்படும் இன்னொரு covering-உம் சட்டை எனப்படும். சட்டையைத் தமிழென ஏற்போர், சட்டம்>சடம் என்பதை மறுப்பது விந்தையிலும் விந்தை. வடமொழியார் சடத்தை ஜடமென்று பலுக்குவார். அதனாலேயே சடம் அவர் சொல்லாகுமா? புழங்குபவன் சொல்வது சரியாம். உருவாக்கியவன், பண்ணியவன் சொல்வது சரியில்லையாம். இது என்ன புதுக்கதை?
     
ஐந்தாவது புத்தி.  இதன் வேர்ச்சொல் புல்.  பொழுது புலர்ந்தது என்கிறோமே? இருள் அகன்று வெளிச்சம் அல்லது தெளிவு வருகிறதென்றுதானே பொருள். புலவன் = அறிவில் தெளிந்தவன்.  புலமை = அறிவுத்தெளிவு. புலத்தன், புலத்தி, என்றசொற்களின் லகரத்தில் வரும் உயிர் இழிந்து புத்தன், புத்தி ஆகும்.  புத்தி பெண்பாலுக்கும், தெளிந்த அறிவிற்குமான சொல்லாகும். ஒரு செயலில், செய்தியில் நல்லது கெட்டது எனத் தெளிவுகாணும் அறிவு புத்தி. காரண, காரியம் தெரிந்தவன் புத்திசாலி எனப்படுவான். அறிவிற்கு அடுத்த நிலை புத்தி. Being familar is knowledge. (அறிவு). discerning the right from wrong is புத்தி.  ஆனாலும் 100 க்குத் 99 பேர் இதைச் சங்கதச்சொல் என்றே கருதுகிறார். நாம் சொல்வது புத்தியில் ஏறுவதேயில்லை. அந்தளவிற்கு முன்முடிவுகள் உள்ளன.

அன்புடன்,
இராம.கி.

2 comments:

பாக்கியராஜ் said...

ஐயா, தாங்கள்
தமிழில் உள்ள வேர்கள் அனைத்தும் பற்றி எழுதும் நாளுக்காய் தவம் கிடக்கிறேன்.

இ.பு.ஞானப்பிரகாசன் said...

ஐயா! விளக்கங்கள் அனைத்தும் அமர்க்களம்! அதுவும் கடைசி மூன்று சொற்களுக்கான விளக்கம் மறுக்க முடியாத, அசைக்க முடியாத நெற்றியடி! பல தெளிவுகளைக் கொடுத்திருக்கிறீர்கள். அகமார்ந்த நன்றி!