Sunday, August 25, 2019

சிலம்பு ஐயங்கள் - 3

அடுத்தது சாவக நோன்பிகள் பற்றியது. அதற்குமுன் ஓர் அடிப்படைச் செய்தியை அறிந்துகொள்ளவேண்டும்.

இந்தியா எங்கணும் பழங்குடியினர் வரலாற்றுக் காலத்திற்கு முன் பல்வேறு தெய்வங்களை நம்பியிருந்தார். அவை பெரும்பாலும் இனக்குழுத் தெய்வங்கள். அந்நம்பிக்கைகளை மறுத்து “இறைவன் என யாருமில்லை” என்று முதலிற் சொன்னது இறைமறுப்புக் கொள்கையாகும். இதற்கு உலகாய்தம்/ சாருவாகம்/ பூதவாதம் என்று சிறு வேறுபாடுகளுடன் பெயர் உண்டு. உலகாய்வது உலகாய்தம். இக்கொள்கையை ஏற்காது வேதக் கொள்கை இந்தியாவின் வடமேற்கில் எழுந்தது. கொஞ்சங் கொஞ்சமாய் அது கிழக்குநோக்கிப் பரவியது. கணக்குவழக்கின்றி அளவிலும் எண்ணிக்கையிலும் வேள்விகள் பெருகின. அவற்றில் ஆகுதியாகும் பொருட்கள் சில வேளைகளில் விளைபொருட்களாயும், சில வேளைகளில் விலங்குகளாயும் இருந்தன. குறிப்பாக மாடுகள் அளவிற்குமீறி வேள்விகளிற் பலியாகின. இது முல்லை நிலப் பொருளாதாரத்தையும், அப்பொழுது தோன்றிக் கொண்டிருந்த தொடக்க நிலை மருத நிலப் பொருளியலுக்கும் பெரிதும் தாக்கம் விளைவித்தது.

நேமிநாதர் (22 ஆம் தீர்த்தங்கரர் கி.மு 850), பார்சுவநாதர் (23 ஆம் தீர்த்தங்கரர். கி.மு.712) காலங்களில் அங்குமிங்குமாய் வேள்விகளுக்கு எதிர்ப்புக் கிளம்பியது  கி.மு. 600 களில் இந்த எதிர்ப்பு பெரிதும் வெடிக்கத் தொடங்கியது. மக்கலி கோசாலர் (நிருவாணம் கி.மு.543), வர்த்தமான மகா வீரர் (நிருவானம் கி.மு.527), கோதம புத்தர் (நிருவானம் கி.மு.483) ஆகியோர் காலங்களில் இது வேதமறுப்புக் கொள்கையாகவும் உருவெடுத்தது. ”இறை யுண்டா, இல்லையா?” என்ற கேள்வியை இம்மூவரும் ஒதுக்கி, (அதேசமயம் பெரும்பாலும் இறைமறுப்புக் கொள்கையைச் சார்ந்து) வேதமறுப்புக் கொள்கையையே பெரிதும் பேசினார். இம்மூவரில் மக்கலி கோசாலர் தெற்கிலிருந்து (குறிப்பாய்த் தமிழகத்திலிருந்து) போயிருக்கலாம் என்று இற்றை ஆய்வுகள் சொல்கின்றன. வர்த்தமானரும், கோதமரும் மகதத்தின் வடவெல்லையை ஒட்டியவர்.

மாடுகளை வேள்வியிற் பலியிடுவதைத் தடுத்து நிறுத்தியதால் மக்கள் இடையே இவர் மூவருக்கும் ஆதரவு பெருகியது. முடிவில் பெருஞ் செல்வந்தரும் மன்னரும் வேந்தருங் கூட இவர் பக்கம் வந்தார். அதனால் வேதநெறி சற்று ஆட்டங் கண்டது. ஏற்கனவே தொடங்கியிருந்த உபநிடத மாற்றங்கள் பெருகின. வேதநெறியில் பூர்வ மீமாம்சம் என்ற கொள்கை நிலைப்பாடு தாழ்ந்து உத்தர மீமாம்சம் என்ற கொள்கை உயர்ந்தது. வேத மறுப்புக் கொள்கையைக் கொஞ்சங் கொஞ்சமாய் தனக்கேற்ப உருமாற்றி அதன் பகுதிகளை வேத நெறியும் உள்வாங்கத் தொடங்கியது. இந்த மாற்ற காலத்தில் தான், எல்லாச் சமய நெறிகளும் தமிழகத்துட் புகுந்தன. இதனால் தான் சங்க காலத்தைக் கி.மு.600-கி.பி 150 என்றுநான் சொல்வேன். ஏனெனில் எல்லாச் சமய நெறிகளையும் உட்கொண்டு பேசும் பாடல்கள் சங்க இலக்கியத்துள் உள்ளன. (தாம் கொண்ட சமயக் கருத்துகளைச் சார்ந்து, அந்தக் கண்ணாடியால் சங்க இலக்கியத்தைப் பிறழ உணர்ந்தவர் மிக அதிகம்.)

வேதமறுப்பின் 3 சமயத் தலைவருமே பார்சுவரை ஏற்றுக் கொண்டனர் என்பது போற் தெரிகிறது. பின்னால் அவருக்கப்புறம் சமயக் கொள்கை வளர்த்ததில் தான், பிறவிச் சுழற்சியைத் தடுத்து நிறுத்தும் வழிகளைச் சொல்வதில் தான், இவர் மூவரும்  வேறுபட்டு நின்றார். இவரின் கொள்கை வேறுபாட்டை இங்கு சொன்னால் விரியும். எனவே தவிர்க்கிறேன். பிறவிச் சுழற்சியை அற்றுவிக்கும் கொள்கையாய் கோசாலரின் அற்றுவிகம் (>அத்துவிகம்>அஜ்ஜுவிகம்>ஆஜுவிகம்) உணரப்பட்டது. பிறவிச் சுழற்சியைச் செயிக்கும் கொள்கையாய் மகாவீரரின் செயினம் உணரப் பட்டது. பிறவிச் சுழற்சி பற்றி புத்தி தெளிவிக்கும் நெறியாய் புத்தம் உணரப் பட்டது. ஆசீவிகம், செயினம், புத்தம் என மூன்றுமே தான(>தியான) நிலையை அழுத்துபவை. சம்மணம் கொட்டியே மாந்தர் தானிப்பதால் சம்மணம்>சமணம் என்று இம்மூன்றுமே அறியப்பட்டன. 

பின்னால் வேதம், செயினம், புத்தம், சிவம், விண்ணவமென்ற எல்லாஞ் சேர்ந்து அற்றுவிகத்தை கி.பி. 8/9ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்திலிருந்து அறவே ஒழித்தன. இன்று அற்றுவிகத்திற்கு ஒருசில சங்கப் பாடல்களைத் தவிர  தனிப்பட உருப்படியான எந்த நூலுங் கிடைக்கா அளவிற்கு நிலைமை யுள்ளது. அற்றுவிகத்தின் பின் மற்ற சமயங்கள் தமக்குள் சண்டைகளைத் தொடர்ந்தபோது கி.பி. 600/700 களுக்கு அருகில் புத்தம் தமிழ்நாட்டில் காணாது போய் இலங்கையில் பெரிதும் நிலைகொண்டது. செயினம் 12 ஆம் நூற்றாண்டு வரை தாக்குப் பிடித்து திருவண்ணாமலையைச் சுற்றிலும் தங்கிப்போய் ஓரமாய் ஒதுங்கிக் கொண்டது. அற்றுவிகமும், புத்தமும் தமிழகத்தில் இல்லாது போனவுடன் சமணம் என்ற பொதுப்பெயர் செயினரின் விதப்புப் பெயராகவும் ஆகிப் போனது. மதங்கள் பற்றிய ஒழுங்கான புரிதலுள்ளவர் ”சமணர்” என்ற பொதுச்சொல்லை ஆளாது ”செயினர்” என்ற விதப்புச் சொல்லாலேயே மகாவீரரைப் பின்பற்றுவோரைக் குறிப்பர்.

வேத நெறி சிவத்தோடும், விண்ணவத்தோடும் சமரசம் செய்துகொண்டு வேத நெறிப்பட்ட சிவம் (தேவாரத்தில் இதே சொல்லப்படும்), வேத நெறிப் பட்ட விண்ணவம் (நாலாயிரப்பனுவலில் இதே சொல்லப் படும்) என்ற கலப்பு மதங்களைக் கொண்டுவந்து, ஆனாலும் தம் புரிசைகளில் நெருப்பிற்கு முகன்மை கொடுக்காது, நீருக்கே முகன்மை கொடுத்து 15 ஆம் நூற்றாண்டு வரை இருகூறாய்த் தனித்திருந்தன. அதற்கப்புறம் இவையிரண்டும் தமக்குள் கொஞ்சங் கொஞ்சமாய் உறவாடி ஒரு சமதான நிலைக்கு வந்து இன்று சிவா-விஷ்ணு ஆலயங்கள் என்று பொது ஆலயங்கள் எழுப்பும் நிலைக்கு வந்திருக்கிறார். இந்துமதம் என்ற கலவைச்சொல் முகலாய காலத்திற்கும் அப்புறமே எழுந்தது. அந்தப் பெயர், சிந்துவை அறிந்த வடமேற்கு முசுலீம்களால் ஏற்படுத்தப் பட்டது. கொஞ்சம் அழுத்திக் கேட்டால் ”இந்துக்கள்” பலரும் “சைவர்”, ”வைணவர்” என்றே தம்மைப் பிரித்துச் சொல்வர். என் செய்வது? காலம் மாறிவிட்டது. என்பதால் இந்திய அரசாங்கப் பதிவுகளில் “இந்து மதம்” என்று பொதுப்பட எழுதிக் கொள்வர். உண்மையில் இந்துமதம் என்பது ஒரு கலவை மதம்.

இப்பொழுது வேதமறுப்பு சமயங்களுக்கு வருவோம். பிறவிச் சுழற்சியை நிறுத்த உறுதி எடுத்துக்கொண்டோர் துறவிகளாவர். இப்பிறவி துறந்தோர். அடுத்த பிறவி வேண்டாமென்ற சிந்தனையில் தன் வாழ்நாளைக் கழிப்பார். இவரைச் செயினத்தில் முனிவர் என்றும், அற்றுவிகத்தில் அறிவர் என்றும் புத்தத்தில் பிக்குகள் என்றுஞ் சொல்வர். முனிகளுக்கும், அறிவர்களுக்கும், பிக்குகளுக்கும் சேவை செய்வோர் சால்வகர் என்னும் சாவகராவார். எல்லாவித இல்லற நோன்பினரும் சாவக நோன்பிகள் ஆகலாம்.

கோவலன் குடும்பத்தில் இம்மூன்று நெறிகளுக்குமே ஆதரவு இருந்திருக்கலாம். கோவலனின் தந்தை செயினத்திலோ/அற்றுவிகத்திலோ இருந்து பின் புத்த நெறியை ஒழுகியிருக்கிறார். கோவலன் செயினனா என்பது உறுதியாய்த் தெரியாது. ஆனால் மகளுக்கு மணிமேகலை என்ற புத்தப் பெயரைக் கொடுத்தான். அதற்கு கோவலன் தந்தையும் ஒப்பி யிருக்கிறார். கண்ணகியின் தாதை அற்றுவிக நெறியாளி. கோவலனின் மகளும், துணைவியும் புத்தஞ் சேர்ந்தவர். கண்ணகி “குண்டத்தில் குளித்து முன்வினை அறுப்பது பீடன்று’ என்று சொன்னதால் அவள் செயினநெறிப் பட்டவாளாயும் இருக்கலாம். அன்றி அற்றுவிக நெறியானவளாயும் இருக்கலாம். ஏனெனில் அற்றுவிகம் முன்வினையைத் தொலைக்கவே முடியாதென்று சொல்லும் எல்லாம் விதிப்படி (நியதிப்படி) தான் நடக்கும் என்று சொல்லும். செயினம் நல்வினையால் முன்வினையைத் தொலைக்கலாம், விதியை மாற்றமுடியுமென்று சொல்லும். இரண்டிற்குமே குண்டத்தில் குளித்து முந்தைய வினைகளை அறுப்பது ஒப்புக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

சாவக நோன்பிகளுக்கு என்று வெளிப்படை அடையாளம் ஏதும் இருந்தது போற் தெரியவில்லை இன்றும் ஏராளமாய்த் தமிழ்ச்செயினர் உள்ளார். அவருக்கும் நமக்கும் எந்த வேறுபாடும் தோற்றத்தில் காணமுடியாது. தீவிரச் சிவநெறியாளர் திருநீறணிவது போல், தீவிர விண்ணெறியாளர் திருமண் சாற்றிக்கொள்வதுபோல் தமிழ்ச்செயினர் எதையும் நெற்றியிற் காட்டி நான் பார்த்ததில்லை. தவிர, சுழற்குறி (சுவத்திகம்>ஸ்வஸ்திகம்) என்பது செயினத்திற்கும் அற்றுவிகத்திற்கும் பொதுவானது. அதை நெற்றியில் யாரும் குறித்து நான் பார்த்ததில்லை. புத்தருக்குச் சுழற்குறி முகன்மை யில்லை. கோவலன் ஏதும் இதுபோல் அணிந்திருந்தானா, தெரியாது. 

கட்டுரைக் காதையில் (155) வரும் வரிகள் பற்றி ஓரளவு என் நூலிற் பேசி யுள்ளேன். இங்கே இளங்கோவின் வார்த்தை விளையாட்டு நடக்கிறது. இப் பிறப்பில் கோவலன் என்பது அவனின் இயற்பெயர். முற்பிறப்பில் அது பணிப் பெயர் (கோ-வலன். bureaucrat). முற்பிறப்பில் பரதன் என்பது அவனுக்கு இயற்பெயர். இப்பிறப்பில் அது பணிப்பெயர் (பரத்தல் = விலைசொல்லுதல். பரதன் trader) பரதன் என்பவன் கொல்லாமை விரதத்தை நீங்கிய, வெறுப்புக் கொண்டவன் ஆதலால் (கொல்லுவதை தவறென எண்ணாதவன் ஆகையால்), பிடிபட்டவனை “ஒற்றன் இவன்” எனப் பற்றிக் கொண்டான். சங்கமன் வேறு மதத்தவன் என்று கொலை செய்யப்படவில்லை. தவறு இழைக்காத சங்கமன் இறக்க (முற்பிறப்பில் பரதன் ஆகிய) இப்பிறப்புக் கோவலன் காரணமானான். எனவே இப்பிறப்பில் தவறிழைக்காமலே கோவலன் இறக்க நேரிடும் என்று விதிவழியே அற்றுவிகம் சொல்லும். வினைவழியே செயினம் சொல்லும். அதுதான் இங்கே சூழ்க்குமம்,

”விரத நீங்கிய வெறுப்பின னாதலின்
ஒற்றன் இவனெனப் பற்றினன் கொண்டு”
http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=994.

என்பதற்கான பொருள் இதுவாகும். அடிப்படையில் இது வினையா, விதியா என்பது முடிவில்லாத வாதம். சிலப்பதிகாரம் அற்றுவிகக் காப்பியமா, செயினக் காப்பியமா என்பதிலும் பல்வேறு வாதங்களுண்டு.

இனி உங்களின் அடுத்த ஐயத்திற்கு வருவேன். உங்கள் ஐயங்களுக்கு விடைகளை முடித்துவிட்டு இப்பொழுது நீங்கள் எழுப்பும் மற்ற கேள்விகளுக்கும் வருவேன். இல்லையென்றால் தொடர்ச்சி போய்விடும்.

அன்புடன்,
இராம.கி.

No comments: