Wednesday, August 28, 2019

சிலம்பு ஐயங்கள் - 6

 வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை
ஊழிதொறு ஊழிதொறு உலகங் காக்க
அடியில் தன்னளவு அரசர்க்கு உணர்த்தி
வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு
தென்றிசை ஆண்ட தென்னவன் வாழி

என்ற காடுகாண் காதை 15- 22 ஆம் வரிகள் ஏதோவொரு பட்டறிவுத் தொன்மத்தை நமக்கு உணர்த்துகின்றன. இது என்னவென்று புரியாது இன்றும் பல தமிழர் தடுமாறுகிறார். முதலில் அரசர், மன்னர், வேந்தர் என்று மூன்று சொல் விதப்புக்களை அறிவோம். அரசர் என்போர் பெரும்பாலும் வலிவுடைய இனக்குழுத் தலைவர் (உரவர்>அரவர்>அரகர்>அரசர் என்பார் பாவாணர்); மன்னர் என்போர் மன்னிநிலைத்தவர்- பல இனக்குழுக்களுக்குச் சேர்ந்த தலைவர். (மொத்தத்திற் கணபதங்களின் தலைவர்); வேந்தர் = முடிசூடியவர், இவரைத்தான் koning என்று மேலைமொழிகளிற் சொல்வார். மன்னவர் பெருந்தகை என்பதும் வேந்தருக்குச் சமமே. இங்கே தென்னவன் என்பது உறுதியாகப் பாண்டியனையே குறிக்கிறது.

என் கட்டுரைகளில் பல தடவை சொல்லியிருக்கிறேன். (சிலம்பின் காலம் என்ற என் நூலையும் பாருங்கள்.) சேர, சோழ, பாண்டியர் என்ற பெயர்கள் சந்தனம் பூசிய, மஞ்சள்/குங்குமம் சூடிக்கொண்ட, திருநீறுபூசிய பென்னம் பெரு இனக்குழுக்களைக் குறித்தன. (இவையெலாம் சமய அடையாளங்களே அல்ல. வெறும் இனக்குழு அடையாளங்கள். இன்றும் இவற்றைக் காட்டிக் கொண்டிருக்கிறோம். பலபோது கலந்தும் அணிகிறோம். நம்மோடு ஈனியற் தொடர்புடைய ஆத்திரேலியப் பழங்குடியினரும் விழாக்காலங்களில் திருநீறு பூசுகிறார். அவர் சிவநெறியாளரா, இல்லையே?) கொஞ்சங் கொஞ்சமாய் சிறு இனக்குழுக்கள் இம் மூன்று பெரிய இனக்குழுக்களில் கரைந்துவந்தார். வேளிர் என்போர் இதிற் கரையும்வரை வேந்தரோடு போராடிக்கொண்டே யிருந்தார்.

ஊழியைப் பெரும்பாலும் உரையாசிரியர் நீண்டகாலமென்றே பொருள் கூறுவார். ஆனால் வானியல்வழி விதப்பான பொருளுண்டு. அதற்குமுன் சில அடிப்படைகள் புரிந்துகொள்ள வேண்டும். (http://valavu.blogspot.in/2003/09/2.html). சூரியனைச் சுற்றிவரும் புவி தன்னுருட்டல் (rotation), வலைத்தல் (revolution), கிறுவாடல் (gyration), நெற்றாடல் (nutation) என நான்கு இயக்கங்களைக் காட்டும் ஒவ்வொரு பருவ காலத்திலும் பகலும் இரவும் ஒரே பொழுதாக 12 மணிநேரம் இருப்பதில்லை. கோடையில் பகல் நீளும்; வாடையில் இரவு நீளும். ஆனாலும் ஆண்டில் இருநாட்கள் பகலும் இரவும் ஒத்த நாட்களாக அமையும். அந்த நாட்களை ஒக்கநாட்கள் (equinoxes) என்றே மேலையர் அழைக்கிறார். 

புவியின் கிறுவாட்டம் (gyration) காரணமாய் ஒவ்வோராண்டும் ஆண்டின் ஒக்கநாள்கள் சிச்சிறிதாக முன்நகர்ந்து வருகின்றன. இதை முற்செலவம் (precession; precede = முன்செல்லு) என்பர். ஒருகாலத்தில் ஏப்ரல் 14 -ல் மேழ ஒரைக்கு முன்வந்த ஒக்கநாள் இன்றைக்கு மார்சு 21/22-லேயே நிகழ்கிறது. மேழத்தில் விழுந்த பசந்த ஒக்கநாள் கி.பி. 2012ற்கு முன்னர் மீனத்தில் (pisces) விழுந்தது. இன்றோ நாலாண்டுகள் கழித்து அஃகர (aquarius) ஓரையில் விழுகிறது. அப்படி விழும்போது, புதிய உகத்திற்கு (உகம் = ஒன்றுசேரும் காலம்; உகம்>யுகம்>yuga in Sanskrit) நாம் போகிறோம் என்று வரலாற்றாசிரியர் சொல்லுகிறார். உகம் என்பது தான் வானியற்படி ஒரு ஊழி. மொத்த முன்செலவம் முடிய கிட்டத்தட்ட 25800 ஆண்டுகள் ஏற்படுகின்றன. அளவு கோல்கள் நுணுக நுணுக இயக்கத்தின் நடப்புக் காலம் துல்லியப்படும். 25800 ஆண்டுகள் என்று எடுத்துக்கொண்டால், ஓர் ஓரையில் (உகத்தில்/ஊழியில்) 25800/12 = 2150 ஆண்டுகள் என்ற பருவகாலம் அமையும்.

ஒவ்வொரு ஊழியிலும் ஒருமுறையாவது வானிலிருந்து எரிகோள் விழும் என்பது தமிழ்மாந்தரின் பட்டறிவு. [இதை நம்புவதற்குத் தான் இற்றைத் தமிழரான நம்மில் யாரும் அணியமாயில்லை. ஆனால் முகன அறிவியல் (modern science) அதை நோக்கிக் கிட்டத்தட்ட வந்துவிட்டது.] வடிவேல் என்பது வானிலிருந்து வந்துவிழும் எரிகோளையே (meteorite) குறிக்கிறது. அதன் தலையும் வாலையும் சேர்த்தால் எரியும்வேல் போலவே காட்சியளிக்கும்.  இந்த எரிகோள்கள் பல்வேறு அளவானவை பல்வேறு பருவங்களில் இவை சூழ்மண்டலத்துள் நுழைந்து புவியில் பெரும் மாற்றங்களை விளைத்துள்ளன. நிலத்தில் இவை விழுந்து அதனால் ஏற்படும் குழிவுகளை ஆய்வு செய்தற்கும், புவியில் மரஞ்செடி கொடிகள், விலங்குகளுக்கு ஏற்படும் இழப்புகள் பற்றியும் அறிவியலிற் பல கட்டுரைகள் வந்துள்ளன. இந்நிகழ்வுகள் நடக்கக் கூடிய பருவெண்களை (frequencies) முன்கணிப்பதற்கும் வழிகள் வந்துவிட்டன.

நிலத்தில் எரிகோள்கள் விழுவதுபற்றி ஏராளம் ஆய்வுநடந்தாலும், கடலில் விழுவதுபற்றியும், அதனாலேற்படும் அழிவுகள், மாற்றங்கள் பற்றியுமறிய பல அறிவியலாளர் தடுமாறிக் கொண்டிருந்தார். எரிகோளின் விட்டம் 4 அல்லது 5 கி.மீ இருந்தாற்றான் கடலில் ஆழிப்பேரலைகள் ஏற்பட்டுச் சேதம் விளைவிக்கும் என்று அண்மைக்காலம்வரை நம்பிக்கொண்டிருந்தார். அதுபோல் நிகழ்வுகள் மில்லியன் ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நடக்கும் என்ற கணிப்பாலும் இவற்றைப் பலரும் மறுத்துவந்தார். ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன் புவிக்கு சாத்தாரமாய் வந்துசேரும் 100-400 மீ விட்டம் எரிகோள்களுங்கூடக் குறிப்பிட்டவகையில் கடலில் விழுந்தால்  ஆழிப் பேரலைகளை எழுப்பிக் கடற்கரை நகரங்கள்/ நிலங்களை அழிக்கமுடியும் என இப்பொழுது சொல்லத் தொடங்கியுள்ளார். கீழே கொடுத்துள்ள இரு எடுகோள்களைப் (references) படித்துப்பாருங்கள். இவற்றை மறுக்கும் கட்டுரைகளும் கிடைக்கக் கூடும்.     

https://www.newscientist.com/article/dn9160-tsunami-risk-of-asteroid-strikes-revealed/
http://www.nytimes.com/2006/11/14/science/14WAVE.html?_r=0   

முதற் கட்டுரையில் 6000 ஆண்டுக்கு ஒருமுறை 300 மீ விட்டமுள்ள எரிகோள் கடலில் விழுங்காரணத்தால் ஆழிப்பேரலை ஏற்படுமென்றும், இரண்டாங் கட்டுரையில் மடகாசுகருக்குக் கிழக்கில் மாலத் தீவுகளுக்கு அருகில் கி.மு.2800 ஆண்டுகளில் கடல்பரப்பிலிருந்து 12500 அடிகளுக்குக் கீழே 18 மைல் விட்டங்கொண்ட ஒரு பெருங்குழிவு எரிகோளால் ஏற்பட்டுள்ளதென்றும், இதன் விளைவால் 2004 இல் நடந்த ஆழிப்பேரலையைவிடப் 13 மடங்கு பெரிதான 600 மீ உயரங் கொண்ட ஆழிப்பேரலை ஏற்பட்டதென்றும் ஆய்வாளர் சொல்லுகிறார். இந்த ஆய்வு இன்னும் நடந்துகொண்டிருக்கிறது. இது உண்மையானால், சுமேரியா, எகிப்து, தமிழக நாகரிகங்களில் சொல்லப்படும் கடற்கோள் பெரும்பாலும் உண்மையாகலாம். இந்த ஆய்வை மறுத்தும் பலர் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறார்.

மேலுள்ள காடுகாண்காதை வரிகளில், எறிந்துவரும் எரிகோளின் பெரும் பகையைப் பொறாது, அதேபொழுது ஒவ்வொரு ஊழியிலும் உலகத்தைக் காக்கும் பொருட்டுக் கடலானது தன் அடியளவை (=ஆழத்தை)  அரசருக்கு உணர்த்தி ”பஃறுளியாற்றுடன், பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” அதற்கப்புறம் வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்ட தென்னவன் வாழி - என மாங்காட்டுப்பார்ப்பான் சொல்லுகிறான். இவ்வரிகள் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனுக்கு உரியவையல்ல. அவனுக்கு 2725 ஆண்டுகள் முந்தியதொரு பாண்டியனைப் பற்றிக் கூறியது. பஃறுளி, பன்மையடுக்கம், குமரிக்கோடு என்பவற்றை நான் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன். இன்னும் உறுதியான கருத்துக்கள் எனக்கு வந்துசேரவில்லை. பல்வேறு ஊகங்கள் மட்டுமேயுள்ளன. கண்டம் என்ற இவ்வரிகள் கூறவில்லை. ஏதோவொரு நிலம் அழிந்திருக்கிறது. எவ்வளவு பெரியது என்று எனக்கு இப்பொழுது தெரியாது,

சிலம்பு ஒரு புதினம் என்று சொல்வதைக் கேட்டால், ”அறியாதவர் பேசுகிறார்” என்று நகர்ந்துவிட வேண்டியது தான். 22க்கு அடுத்த வரிகளுக்குப் போவோம்.

அன்புடன்,
இராம.கி.

1 comment:

யாழினி said...

https://www.youtube.com/watch?v=B_lT_SGOAKE&t=75s
இத்தளத்தில் பன்மலையடுக்கம், குமரிக்கோடு பற்றிய அறிவியல் விளக்கம் இருக்கிறது ஐயா. இதைப்பற்றியும் விளக்கம் அளியுங்கள்.