Monday, August 26, 2019

சிலம்பு ஐயங்கள் - 4

அடுத்து அடைக்கலக்காதையில் வரும்

“அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய
புறஞ்சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிக்குப்
பான்மடை கொடுத்துப் பண்பிற் பெயர்வோள்
ஆயர் முதுமகள் மாதரி என்போள்”

என்ற (105-108) வரிகளைப்பற்றிக் கேட்டிருக்கிறீர்கள். இதில் வரும் பூங்கண் இயக்கி என்பவள் நேமிநாதருக்கான இயக்கி இவளைக் குசுமாண்டினி, அம்பிகா என்றுங் குறிப்பர். (ஒருமுறை ”சமணம் அறிவோம்” இழையில் நண்பர் பானுகுமார் "பத்மாவதி, சக்ரேசுவரி, சுவாலைமாலினி, குசுமாண்டினி/ கூஷ்மாண்டினி, வராகி, ஜினவாணி" eன்ற இயக்கிகளைப் பற்றிக் குறிப்பிட்டார்.) அம்பிகா தேவி என்பவள் தாமரை மலரின் மேல் நிற்பவள். நேமிநாதத் தீர்த்தங்கரரை, யாதவரைச் சேர்ந்த கண்ணன், பலராமனின் ஒன்றுவிட்ட சோதரனாய்ச் சொல்வர். (வசுதேவருக்குப் பலராமனும், கண்ணனும் புதல்வர்கள் ஆவர்; வசுதேவரின் அண்ணனான சமுத்திர விசயனுக்கு நேமிநாதர் புதல்வராம்.) நேமிநாதரை அரிட்டநேமி (>அரிஷ்டநேமி) என்றுங் குறிப்பிடுவர்.

அரிட்டன்/அரட்டன் என்ற பெயர் தமிழகத்தில் நெடுநாளிருந்தது. ஆனை மலைக் கல்வெட்டில் ”அற்றுவாயி அரட்ட காயிபன்” என்ற பெயர் வரும். (அற்றுவாயி= அற்றுவிக நெறியாளர்.) ஆனைமலைக் கல்வெட்டைத் தவறாய்ப் புரிந்துகொண்டவர் மிகப் பலர். பழந்தமிழிக் கல்வெட்டுக்களைச் செயினரோடு மட்டுமே சிலர் பொருத்துவது பிழையான அணுகு முறை. இன்று நம்மிடையே அற்றுவாயிகள் இல்லாது போனாலும் அன்றைய அவரிருப்பை மறுப்பது சரியல்ல. பல தமிழ்க் கல்வெட்டுக்கள் அற்றுவாயிகளுக்கும் பொருந்தும். அரட்டன் பெயர் அற்றுவாயிகளுக்கும் செயினருக்கும் சேர்ந்தே வரலாம். இருவருமே நேமிநாதரை ஏற்றவர். நேமிநாதரின் காலம் கி.மு.800 க்கும் முன்பாகலாம். எந்தக் காலமென உறுதியாய் இப்போது சொல்லமுடியவில்லை.

குசுமம் என்பது மலருக்கான கணப்புப் (generic) பாகதப் பெயர். என்ன மலர் என்பது நம் புரிதலைப் பொருத்தது. பெரும்பாலும் அது தாமரையையே குறிக்கும். ஓரோ வழி பாதிரிப் பூவையும் (>பாடலிப் பூவையும்) குசுமமென்று பாகதத்தில் அழைத்திருக்கிறார். மகதத்தின் பெருந் தலைநகரான பாடலி புத்தத்தைக் குசுமபுரம் என்றும் அழைத்திருக்கிறார். நம்முரில் கடலூருக்கு அருகிலுள்ள பாதிரிப் புலியூரும் கூடக் குசுமபுரம் என்றழைக்கப்பட்டது. அண்டுதல் என்பதற்கு பொருந்தியிருத்தல், மேலிருத்தல் என்றே பொருள் படும். குசும அண்டினி என்பவள் பூவின் மேல் இருப்பவள். பாகத முறைப்படி குசுமாண்டினி என்று கூட்டுச்சொல் அமையும். செயினத்தின் பழம் நூல்கள் அருத்த மாகதி (அரை மாகதி) என்ற மொழியிலேயே இருந்தன.

மகாவீரர் அருத்தமாகதியிற் பேசினார். புத்தர் மாகதியில் உரை நிகழ்த்தினார்.  மாகதி, அருத்த மாகதியின் கலப்பாய்ப் பாகதம், பாலி என்ற மொழிகள் பின்னால் எழுந்தன. இற்றை வட இந்திய மொழிகள் பலவும் பாலி, பாகதத்திற் கிளைத்தவை தாம். [தமிழகப் பல்கலைக் கழகங்களில் பாகதமும், பாலியும் சொல்லிக் கொடுப்பது நல்லது. பல படிப்பாளிகளும் வெறும் சங்கதத்தோடு நின்று விடுவது ஒரு பக்கப் பார்வையையே தருகிறது. என்னைக் கேட்டால் தமிழ் இலக்கியம் படிக்கும் ஒவ்வொருவரும் பாகதம், பாலி, சங்கதம் போன்றவற்றில் இரு மொழிகளையாவது படிக்கத் தெரிந்து இருக்க வேண்டும். வெறுமே தமிழை மட்டும் படித்துக் குண்டு சட்டிக்குள் குதிரையோட்டுவது நல்லதல்ல.]

குசுமாண்டினியை கூஷ்மாண்டினி என்பது வட்டாரப் பலுக்கல். அம்மா என்ற தமிழ்ச்சொல் பாகதம், சங்கதம் போன்ற மொழிகளில் அம்பா என்றாகும். (அம்பாவை மீண்டுங் கடன்வாங்கி அம்பாள் என்று நாம் ஆக்குவோம். எல்லா அம்மன் கோயில்களையும் அம்பாள் கோயில் என்கிறாரே? அது சங்கதத் தாக்கம்.) அம்பாவின் நெருக்கமான அழைப்பு அம்பிகா என்றாகும். குசுமாண்டினியை குழந்தையைத் தூக்கி வைத்திருக்கும் அம்மா போல் பழஞ் சிற்பிகள் சிலைவடிப்பர். அம்பிகாதேவி என்றபெயர் எழுந்தது அப்படித் தான். அவள் நம்மைப் போற்றிக் காக்கும் தாய். பூங்கண்ணில் வரும் ”கண்” என்பது விழியைக் குறிப்பதில்லை. அதன் பொருள் ”இடம்”. பூவை இடமாய்க் கொண்டவள் பூங்கண் இயக்கி. இப்பொழுது அடைக்கலக் காதையில் வரும் பூங்கண் இயக்கிக்கும், இங்கு சொன்ன குசுமாண்டினிக்கும் உள்ள உறவு உங்களுக்குப் புரிகிறதா?

பூவின் மேல் மங்கை நிற்பதை அலர்மேல் மங்கையென்றுஞ் சொல்வர். (அலமேலு என்பது தென்பாண்டிநாட்டில் எங்கள் பக்கம் மிகச் சாத்தாரமாய் உள்ள பெயர்.) இரு பக்கம் யானைகள் நீர் தூற்றிப் போற்றியபடி, தாமரை மேல் அமர்ந்திருக்கும் அலர்மேல் மங்கையின் சிற்பம் வெறும் விண்ணவக் கோயில்களில் மட்டுமிருக்காது. வேத மறுப்புச் சமயங்களைச் சார்ந்த ஐயனார் கோயில்களில் (குறிப்பாய் ஐயனார் கருவறையின் திருநிலைக்கு மேலும்) இருக்கும். இன்னுஞ் சொன்னால் ஏராளமான சிவன் கோயில்களின் வடமேற்கு மூலையிற் கூட மகாலெட்சுமியின் திருமேனி தனிக் கருவறையில் இருக்கும். நான் சொல்வது கேட்டு அதிர்ந்துவிடாதீர்கள். இலக்குமிக்கும், சமணரின் பத்மாவதிக்கும், குசுமாண்டினிக்கும் ஏராளமான ஒப்புமை, உறவுகள் இருக்கின்றன. (இலக்குமியின் தொன்மத் தொடக்கம் பற்றி அறிய ”வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்” என்ற அரிய நூலைப் படியுங்கள். சுவீரா ஜெயஸ்வால் எழுதிய ஆங்கில நூலை கி.அனுமந்தன், ஆர். பார்த்தசாரதி என்பார் மொழிபெயர்த்து 2010 இல் இரண்டாம் பதிப்பாய் NCBH வெளியிட்டிருக்கிறது.) மடற்குழுக்களில் இதுபோல் சிலவற்றைப் பேசப் பலரும் தயங்குகிறார். நம்பிக்கைகளை நாமெங்கே  குலைத்து விடுவோமோ என்ற பயமும் பலருக்கிருக்கிறது.   எங்கள் சிவகங்கைப் பக்கம்,

காடுவெட்டிப் போட்டுக் கடிய நிலந்திருத்தி
வீடுகட்டிக் கொண்டிருக்கும் வேள்வணிகர் – வீடுகட்கு
அன்றைக்கு வந்த எங்கள் அம்மா இலக்குமியே
என்றைக்கும் நீங்கா திரு.

என்ற ”பாடுவார் முத்தப்பரின்” பாட்டைச் சொல்வார். பெருமாள் கோயிலுக்கே போகாத சிவப் பழமான வீட்டிலும் கூட இது சொல்லப்படும். இது பூங்கண் இயக்கிக்கான பாட்டுத் தான்.  (அம்மா = அம்பிகா; இலக்குமி = குசுமாண்டினி). இப்படிச் சொல்ல இன்னொரு காரணமும் உண்டு.

பெரும்பாலான விண்ணவக் கோயில்களில் பெருமாளுக்கு முதலிற் கருவறை ஏற்பட்டுப் பலகாலங் கழித்தே (ஏதோ ஒட்டுக்கோயிலாய்) தாயாருக்குக் கருவறை ஏற்பட்டதைப் பார்த்து அறியமுடியும். இதேநிலை சிவன் கோயில்களிலும் உண்டு. அம்மனின் திருநிலை (சந்நிதி) சிவன் திருநிலைக்குத் தள்ளி பின்னாலேற்பட்டு அமைந்திருக்கும். ஆனானப்பட்ட சிதம்பரங் கோயிலிலேயே சிவகாம சுந்தரியின் கருவறை நடவரசன் கருவறையிலிருந்து விலகியிருக்கும். மதுரை மீனாட்சி கோயிலும் அப்படித் தான். சொக்கன் கோயில் முதலிலெழுந்ததா? கயற்கண்ணி கோயில் முதலிலெழுந்ததா என்று தெரியாது. ஆனால் இரண்டும் வெவ்வேறு கட்டு மானங்கள். அதுமட்டும் உறுதி. இவற்றை ஆய்வு செய்து சொல்லப் போனால், பலருமென்னைப் புறந்தள்ளுவர். ஆனால் உண்மை அதுதான். சிவநெறியும், விண்ணவநெறிகளும் தாயாரையும், அம்பாளையும் சேர்த்துக் கொண்டது ஏதோ ஒருவித மறுவினையால் மட்டுமே என்று சொல்ல வேண்டியுள்ளது. அவை முதலில் எழுந்தவையல்ல.

மொத்தத்தில் “இயக்கிகளின் தாக்கம்” குமுகாயத்தில் மிகப் பெரியது. ஒவ்வொரு ஐயனார் கோயிலிலும் இயக்கிகளுண்டு. ஐயனார் கோயில்கள் சில செயினத்தாலும், சில அற்றுவிகத்தாலும், சில புத்தத்தாலும் எழுந்தவை. இற்றைய ஐயனார் கோயில்கள் சிவத் தோற்றம் காட்டினாலும் நாட்டுப்புறத் தெய்வங்கள் அங்கு குடிகொண்டிருக்கும். ஐயனார் கோயில்களில் அரிதாகச் சிலவற்றைத் தவிர்த்து மற்றவற்றில் குயவரே வேளகாரராய் இருப்பர். அவரே அங்கு குருக்கள். புறநடையான சில கோயில்களில் மட்டுமே பார்ப்பனர் குருக்களாய் இருப்பர். (காட்டு. சபரி மலை).

அம்மன் கோயில்களாய்த் தனித்தெழுந்த கோயில்களும் நிறுவனப்படுத்தப் பட்ட சிவநெறி, விண்ணவ நெறிகளுக்குள் முதலில் வரவில்லை. இப்பொழுது இந்துமதமென்ற கலவைமதம் இவற்றை இழுத்துக் கொள்கிறது. அம்மன் கோயில்களில் முன்னாளில் குயவரும், பண்டாரங்களுமே பூசாரிகளாய் இருந்தார். பின்னால் சங்கதவாக்கம் கூடிப்போய் 50/60 ஆண்டுகளுக்கு முன் தான் பார்ப்பனக் குருக்கள் கோயில்களுள் வந்தார். சென்னைக்கு அருகில் உள்ள திருவேற்காடு, மாங்காடு போன்றவை பின்னாற்றான் மாறின. என் வாழ்நாளிலேயே பெரியபாளையம் பவானியம்மன் கோயிலில் பண்டாரம் போய், பார்ப்பனக் குருக்கள் வந்துள்ளார். இன்னுஞ் சொன்னால் எண்ணிக்கையில் கணிசமான பார்ப்பனர் இன்றும் குலதெய்வக் கோயில் என்று சொல்லி தம் மூதாதையர் ஊர்களுக்குப் போய் அம்மனைக் கும்பிட்டு வருவதுண்டு. அவையேல்லாமே அவர் வீட்டுப்பெண்களின் அழுத்ததாற் செய்வர்.     

அக்காலத்தில் எம்மதமும் சம்மதமென எல்லாத் தெய்வங்களையும் வழி படுவது இருந்ததா ? - எனில் உண்டு. இன்றுங் கூட உண்டு. நான் வேளாங் கண்ணி மாதா கோயிலுக்கும், தூத்துக்குடி பனிமய மாதா கோயிலுக்கும் போயுள்ளேன். பலமுறை தொழுதுள்ளேன். நாகூர் தருக்காவிற்குப் பலரும் போவார். சீரங்கம் கோயிலில் இன்றும் சில முசுலீம்கள் தொண்டு செய்கிறார். ஐயனார் கோயிலுக்கு எல்லோருமே போகிறார். தமிழர் குமுகாயம் பொதுவாய்ச் சமயப்பொறையுள்ள குமுகாயமே. ஆனாற் சில காலங்களில் சமயப்பொறை குறைந்து குத்து, வெட்டு என்று சீரழிந்த காலமும் உண்டு. 2 ஆம் குலோத்துங்கன் காலத்தில் சிவத்திற்கும் விண்ணவத்திற்கும் ஆகாது. மகேந்திர வருமன் காலத்தில் செயினத்திற்கும் சிவத்திற்கும் ஆகாது. அற்றுவிகம் ஒழித்ததை முன்பே சொன்னேன். பல்லவரின் முடிவில் புத்த நெறியாளர் இங்கு மறைந்தே போனார். அதனால் தான் மணிவாசகர் 9 ஆம் நூற்றாண்டு என்பதை நான் ஒப்புவதில்லை. இல்லாத புத்த நெறியாளரோடு அவர் வாதிடுவாரா? புத்த நெறியாளர் இங்குயர்ந்த காலம் களப்பிரருக்குச் சற்று முன்னும், களப்பிரர் காலத்திலுமே. அக்காலமே மணிவாசகர் காலம். அப்படித் தான் ஏரணம் வழிகாட்டும். அதை வேறிடம் பேசுவோம்.

இப்பகுதியில் பூங்கண் இயக்கியைப் பார்த்தோம். இனி உங்களின் முதற்கேள்விக்கு வருவோம்.

அன்புடன்,
இராம.கி.   

No comments: