Saturday, May 15, 2010

எம்மைப் பற்றும் ஆசாகிய தலைவன் எங்குள்ளான்?

சிறிய கள் பெறினே, எமக்கு ஈயும் மன்னே
பெரிய கள் பெறினே
யாம்பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே
சிறு சோற்றானும் நனிபல கலத்தன் மன்னே
பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன் மன்னே
என்பொடு தடிபடும் வழியெல்லாம் எமக்கு ஈயும் மன்னே
அம்பொடு வேல் நுழை வழியெல்லாம் தான் நிற்கும் மன்னே
நரந்த நாறும் தன்கையாற்
புலவுநாறும் எந்தலை தவரும் மன்னே
அருந்தலை இரும்பாணர் அகல் மண்டைத் துளை உரீஇ
இரப்போர் கையுளும் போகிப்
புரப்போர் புன்கண் பாவை சோர
அஞ்சொல் நுண் தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்று வீழ்ந்து அன்று அவன்
அருநிறத்து இயங்கிய வேலே
ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ
இனி,
பாடுநரும் இல்லைப் பாடுநர்க்கு ஒன்று ஈகுநருமில்லைப்
பனித் துறைப் பகன்றை நறைக்கொள் மாமலர்
சூடாது வைகி யாங்குப் பிறர்க்கு ஒன்று
ஈயாது வீயும் உயிர் தவப் பலவே

- புறம் 235: திணை: பொதுவியல்; துறை: கையறு நிலை. இறந்த அதியமான் நெடுமான் அஞ்சியை ஔவையார் பாடியது.
----------------------------------

சிறிய அளவே கள் கிடைத்தால்
எங்களுக்குக் கொடுத்துவிடுவான்;
பெரிய அளவில் கள் கிடைத்தால்
எங்களுக்கும் கொடுத்து
நாங்கள் பாட, அவன் மகிழ்ந்து உண்பான்.

சிறிய சோறானாலும்
மிகப் பலரோடு பகிர்ந்து கொள்ளுவான்
பெருஞ்சோறானாலும்
மிகப் பலரோடு பகிர்ந்து கொள்ளுவான்

எலும்போடு ஒட்டிய
ஊன்தசைகளை அனைத்தையும் எமக்கே ஈவான்

அம்பும் வேலும் நுழையும்
வழியெல்லாம் தான் நின்றுகொள்வான்

நரந்தம் புல் நாறும் தன் கையால்
புலவு நாறும் எங்கள் தலையைக் கோதிக்கொடுப்பான்

தலைமைப் பாணர்களது
அகன்ற சோற்றுக் கலனைத் துளைத்து,
அவனிடம் இரந்தோரின் கைகளுள்ளும் போய்,
அவனாற் காப்பாற்றப்படுவோரின்
புல்லிய கண்பாவை சோர்ந்துபோகச் செய்து.
அருஞ்சொல்லை நுணுகத் தேடிப் பெய்யும்
புலவருடைய நாவிலும் குத்திச் சென்று,

வீழ்ந்தது அவன் மார்பிற் தைத்த வேல்.

எம்மைப் பற்றும் ஆசாகிய தலைவன் எங்குள்ளான்?

இனி,
அவனைப் பாடுநரும் இல்லை; பாடுநருக்கு ஈகுநரும் இல்லை;

குளிர்ந்த துறையில் மலரும் தேன்கொண்ட பகன்றை
யாராலும் சூடப்படாது கழிந்தாற்போல

பிறர்க்கு ஒன்றும் ஈயாது வீணே வீழும் உயிர்கள் மிகப்பல.

----------------------------------
If he found a little liquor,
he would give it to us.

If he had more,
he would drink happily
while we sang.
where is he now?
If he had even a little rice.
he shared it
in many plates.
where is he now?
If he had more,
he shared it
in many more plates.
where is he now?
He gave us
all the flesh
on the bones
where is he now?
Wherever spear and arrow flew,
he was there.
where is he now?
With his palms scented
with lemon grass,
he carressed my hair
smelling of meat.
where is he now?
The spear that pierced his chest
pierced at once
the wide eating bowls
of great and famous minstrels,

pierced many begging patms,

and, dimming the images in the eyes
of men he sheltered,
it went right through the subtle tongues
of poets
skilled in the search
for good words.

Where is he now,
father, mainstay,
king?
where is he now?
No more,
No singers any more
nor anyone to give anything
to singers

As in the cold waters
jalap flowers blossom,
large, full of honey,
but die untouched, unworn,

there are many now living
and dying,

without giving
one thing
to others.

- translated by A.K.Ramanujam "Poems of War and Love" pp 169-170, Columbia University Press, 1985
--------------------------------------------

மே 18 இல் இல்லாது போன தமிழர் தலைவனுக்கு எம் வீர வணக்கம்.

அன்புடன்,
இராம.கி.

2 comments:

Amal said...

ஐயா..மே 18-ற்க்கு முன்பே வேண்டாமே...
பல ஆண்டுகளாய் உங்கள் வாசகன், உங்களுடைய முதல் பதிவிலிருந்து..

மான் said...

வேலென்ன வேல்,
வில் பெருந் தமிழ் வீரர்
வில்லளித்த தென்னாட்டு மன்னர்
எல்லோரும் உள்ளார்,
வீணாக கண்கலங்கீர்
தலைகண்டு தலைவணங்கீர்!