Friday, June 04, 2010

சிலம்பிற்குப் பின்வந்த வரலாற்றுச் செய்திகள் - 1

சிலம்பின் காலத்தை கி.மு.80க்குச் சற்றுபின் என்று வரையறுத்த போது, வெற்றிவேற் செழியன் வஞ்சியின் மேல் அதிரடித் தாக்குதல் செய்து, பத்தினித் தெய்வத்தின் படிமத்தை வவ்விய செய்தியைச் சொல்லியிருக்கக் கூடிய, அகம் 149 ஆம் பாடலைப் பார்த்த நாம் இன்னொரு இலக்கியமான நற்றிணையில் 216 ஆம் பாடலையும் பார்க்கவேண்டும். அதிலும் சிலம்பிற்குத் தொடர்பான செய்தியொன்று வருகிறது. அதையும் பலர் தனியாகப் பொருத்தமில்லாது பார்த்திருக்கிறார்கள். நற்றிணை 216 ஆம் பாடலைக் கீழே கொடுத்துள்ளேன்.

துனிதீர் கூட்டமொடு துன்னார் ஆயினும்;
இனிதே, காணுநர்க் காண்புழி வாழ்தல்;
கண்ணுறு விழுமம் கைபோல் உதவி,
நம் உறு துயரம் களையார் ஆயினும்,
இன்னாது அன்றே, அவர் இல் ஊரே;
எரிமருள் வேங்கைக் கடவுள் காக்கும்
குருகு ஆர் துழனியின் இதணத்து ஆங்கண்,
ஏதிலாளன் கவலை கவற்ற,
ஒருமுலை அறுத்த திருமாவுண்ணிக்
கேட்டோர் அனையர் ஆயினும்,
வேட்டோர் அல்லது, பிறர் இன்னாரே

இதை எழுதியவர் மதுரை மருதன் இளநாகனார். மேலே வரும் நற்றிணைப் பாடலின் திணை: மருதம் என்பதாகும். மதுரையில் உள்ள பரத்தை ஒருத்தி, தலைமகன் தன்னை நாடி வாராவிடத்து, தலைமகன் பெருமையைத் தலைமகளுக்குச் சுற்றிவளைத்துத் தெரிவிக்கும் பாங்கில் பாணனிடமோ, விறலியிடமோ சொல்லியதாய் இந்தப் பாடல் அமையும்.

[பாடலின் உள்ளே, “நீ நினைப்பது போல் நான் ஒன்றும் காசுக்கு உடன்படும் விலைமகள் அல்லள்; அவரும் விலைமாதரை நாடுங் கூட்டத்தைச் சேர்ந்தவரில்லை. இப்பொழுது அவர் என்னோடு சேர்ந்திருக்கவில்லை. அவரைப் பிரிந்து நானும் தவிக்கிறேன். என் துயரைக் களையாது அவரிருந்தும், அவர்மேல் என்னன்பு சற்றும் குறையவில்லை. எப்பேற்பட்ட துன்பம் வந்தாலும் வேண்டப்பட்டவர் தான் துன்புற்றுக் கலங்குவர். இப்பொழுது நான் கலங்குகிறேன்.”என்ற இறைச்சிப்பொருளை உள்வைத்து வெளியே வேறொரு பொருட்பாட்டை வைத்து அந்தப் பாட்டுப் போகும். அப்படிச் சொல்லும்போது தான் ஒருமுலையறுத்த திருமாவுண்ணி பற்றிய செய்தி வரும். முதலில் பாட்டின் வெளிப்படைப் பொருட்பாட்டைப் பார்ப்போம்.

”புலவிநீட்டம் தீர்க்க முனையும் கூட்டத்தோடு அவர் சேரார் எனினும், காணத்தக்க அவரைக் காணும்படிக்கு வாழ்தல் இனிதேயாகும். கண்பெறும் துன்பத்தை சட்டென்று கை விலக்குதல் போல நாமுற்ற துயரத்தை அவர் களையாரெனினும், அவர் இல்லாத இவ்வூர் இனிமையற்றது. நெருப்பாய்ச் சிவந்த வேங்கைக் கடவுளைக் (முருகனைக்) காக்கும் கோழியின் கூவொலி நிறைந்த காவற்பரணுள்ள களத்தில், அயலார் மனங்கலங்கும்படி தன் ஒருமுலையை அறுத்த அந்த(மாநிறக்குட்டை)த் திருமாவுண்ணியின் அவலத்தை அனைவரும் கேட்டோர் என்றாலும், வேண்டப்பட்டோர் தவிர்த்து மற்றோர் கலங்கமாட்டார் அன்றோ?” என்று வெளிப்படைப் பொருள் அமையும்.

இந்தப் பரத்தை மதுரையில் வாழ்ந்த சாத்தார (சாதாரண) இற்பரத்தை. சோழநாட்டுப் பெண்ணொருத்தி மதுரைக் கொலைக்களத்தில் ஒருமுலை அறுத்தசெய்தி இவளுக்குத் தெரிய வந்திருக்கிறது. [கண்ணகி ஒருமுலை அறுத்தபோது மதுரை முற்றிலும் அழிந்ததென்றே சிலம்புவழி உயர்வு நவிர்ச்சியாய்ப் பலரும் சொல்கிறார்கள். அது முற்றிலும் இல்லை போலும். அரண்மனையையொட்டிய சில பகுதிகளாய் மட்டுமே அழிந்திருக்கலாம், மதுரை என்ற பெருநகரம் மீண்டும் அந்தச் சாம்பலிலிருந்து எழுந்திருக்கிறது, மீண்டும் மீண்டும் அக்கதை பொதுமக்களால் பல்வேறு கோணங்களில் உசாவப் பட்டிருந்திருக்க வேண்டும் என்பதை இந்தப் பாட்டின் வழி குறிப்பாலுணர்கிறோம். ஏனென்றால் பொதுமக்களில் ஒருத்தியிடம் இருந்து எழுந்து எதிர்வினை இது. “ஊரில் பார்ப்பனரையும், குழவிகளையும் ஒரு சிலபெண்டிரையும் விட்டுவிட்டு மற்றுள்ளோரையெல்லாம் அவள் எரிக்கச் சொன்னாள்” என்று சில ஆய்வாளர் சொல்லுவது தவறான புரிதலாய் இருக்கக் கூடும். சிலம்பை இந்தவொளியில் மீண்டும் நாம் படிக்கவேண்டும். சிலம்பைத் தவறாகவே நம்மிற் பலரும் உணர்ந்திருக்கிறோம்.

கண்ணகி மாநிறம் என்ற குறிப்பு இந்தப் பரத்தைக்குத் தெரிந்திருக்கிறது. அதோடு கண்ணகி அவ்வளவு உயரமில்லாது, சற்றே குட்டையாய் தோற்றியிருக்கலாமோ என்று ஐயுற வேண்டி இருக்கிறது. கண்ணகி ஒருமுலையறுத்தபோது ”அவள் கொற்றவையோ? தெய்வவடிவோ?” என்ற அச்சமும் மக்களுக்கு ஏற்பட்டு திரு என்ற அடைமொழி வந்ததோ, என்னவோ? “கருத்த குட்டைச்சி” என்று கண்ணகியைப் பற்றிய ஒரு விவரிப்பு சாத்தாரப் பெண்ணுக்கு ஏற்படக்கூடியதே. நாட்டுப்புறங்களில் சட்டென்று எழும் எந்த விவரிப்பும் உயரம், வண்ணம் பற்றியே அமையும். உண்ணி என்ற சொல் தெண்பாண்டிநாட்டில் இன்றும் உள்ளது தான். உள்நி>உண்ணியாகும். உள்ளுதல் = குறைதல், சிறிதாததல், சுருங்குதல் என்ற பொருட்பாடுகளைக் காட்டும். உள்ளத்தி>ஒள்ளத்தி என்ற சொல் கொஞ்சமாக, குறைவாக, சிறிதுபோல் என்ற பொருளில் சிவகங்கை மாவட்டத்தில் வழங்கும் சொல். “எனக்கு ஒள்ளத்தியோண்டு அந்த மாவுருண்டையில் பிட்டுக் கொடுங்க” “என்ன இவ ஒள்ளத்தியா ஒடுங்கி இருக்கா? இவளுக்கும் ஓங்கியவனுக்கும் சரிப்பட்டு வருமா?” இப்படிப் பல்வேறு வழக்காறுகள் உண்டு.

கோவலனின் கொலைக்களம் மதிலின் காவற்பரணுக்கு அருகில் தான் இருந்தது என்பதைச் சிலம்பின் வழி அறிகிறோம். காவற்பரணுக்கு அருகில் கோழிகள் உலவுவதும், அவை கொக்கொக்கொக் என்று இடைவிடாது கரட்டிக் கூவுவதும் இங்கு விவரிக்கப் படுகிறது. முருகன் சேவற்கொடியோன் தானே? [சூரபன்மனை வென்ற போது சூரன் வேங்கை மரம், கோழி, மயில் என மூன்று வகையில் உருமாறியதாகத் தொன்மம் உண்டு. அதுவரை யானையைத் தன் ஊர்தியாகக் கொண்ட முருகன் சூரசங்காரத்திற்கு அப்புறம் மயிலை ஊர்தியாகவும், தன் காப்பிற்கு அறிகுறியாக கோழியைக் கொடியாகவும், வேங்கை மரத்தைக் காவல்மரமாய்க் கொண்டதாகத் தொன்மக்கதை சொல்லும். நெருப்பைப்போற் சிவந்த பூக்களைக் கொண்ட வேங்கை மரத்தடி முருகன் நிற்கும் இடம் என்று முதியோர் சொல்லுவார்கள்..

முன்னால் மார்ச்சு 2009 இல் கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம் என்ற தொடரை எழுதியபோது, நண்பர் நா. கணேசனின் பல கருத்துக்களுக்கும் மறுமொழி சொல்லி, மூன்று கருத்துக்களுக்கு மட்டும் மறுமொழி சொல்லாது நான் விட்டுப்போனதால், அத்தொடர் முடிவுறாது நிற்கிறது. அதில் ஒரு கருத்து இந்தத் திருமா உண்ணி பற்றியது ”திருமா உண்ணியாய் நற்றிணை 216-ல் கண்ணகி வருகிறாள். உண்ணி < நுண்ணிய (Cf. உண்ணி கிருஷ்ணன்) என்பது மலைநாட்டு வழக்கு. இன்னலெ < நென்னல் என்பது இன்றைய மலையாளம்” என்று நண்பர் நா. கணேசன் சொல்லுவார்.

பலரும் இத்திருமாவுண்ணியையும், சிலம்புக் கண்ணகியையும் வெவ்வேறாகவே பார்ப்பார்கள். சிலம்பை கி.பி.177க்கு அப்புறமாய்த் தள்ளியவர்களிடம் ”இப்படி ஒரு பாடல் நற்றிணையில் வருகிறதே” என்று சொன்னால் ”ஒருமுலை குறைத்த திருமாவுண்ணியின் கதை தனிக்கதை, அந்தக் கதையை கண்ணகியின்மேல் ஏற்றிவிட்டார்கள், இருவரும் வெவ்வேறு” என்று சமதானம் சொல்லுவார்கள். நல்லவேளை நா.க. திருமாவுண்ணியை கண்ணகியென்றே சொல்லிவிட்டார். என்னைப் பொறுத்தவரை திருமாவுண்ணியும், கண்ணகியும் ஒன்றே என்னும் அடையாளத்தில் எந்த மறுப்பும் கிடையாது ஒருமுலை குறைத்தல் என்பது தமிழர் வரலாற்றில் இருமுறை நடந்திருக்க வாய்ப்புக்கள் மிகமிகக் குறைவு. இரண்டும் ஒரே நிகழ்வைத்தான் வெவ்வேறு கோணங்களிற் குறித்திருக்க வேண்டும். அவற்றை எப்படிப் பொருத்துவது என்பதிற்றான் சூழ்க்குமமே அடங்கியிருக்கிறது.

திருமாவுண்ணி, கண்ணகி என்ற இருவரையையும் ஒருவராக்குவதில் ஒருசில வரலாற்று நடப்புகளும் நமக்கு உதவி செய்கின்றன. மதுரை மருதன் இளநாகனார் சங்க இலக்கியத்தில் அதிகம் பாடல் பாடியவர்களில் (பாடல் அடிகள் இல்லை; பாடல் எண்ணிக்கை. 43 பாடல்கள்.) ஒருவராவார். இவர் அகநானூற்றில் 23 பாடல்களும் (59, 77, 90, 131, 220, 255, 269, 297, 312, 343, 368. 34, 104, 121, 184, 193, 206, 245, 283, 358, 365, 380, 387) குறுந்தொகையில் 4 பாடல்களும் (77, 160, 279, 367), நற்றினையில் 12 பாடல்களும் (39, 216, 341, 21, 103, 194, 283, 290, 302, 326, 362, 392) பாடியிருக்கிறார். கூடவே புற நானூற்றில் 52, 55, 138, 139, 349 ஆம் பாடல்களைப் பாடியிருக்கிறார்.

52 ஆம் புறப்பாடல் பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியைப் பாடியது: பாண்டியன், வழுதி என்ற பட்டங்களும், கூடகாரமும் தெளிவாக இவனை மதுரையில் ஆண்டவனாகக் காட்டிவிடுகின்றன. (வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும்) என்ற பாடலின் வரியால் கூடல்நகரத்தின் மருதந்துறை பேசப் படுகிறது.

55 ஆம் புறப்பாடல் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனைப் பாடியது. கொற்கையில் இருந்த பாண்டியருக்கு திருச்செந்தூரின் மேல் ஒரு தனிக்கவனம் இருந்திருக்கவேண்டும், இவன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியின் சமகாலத்தவனாக, பங்காளியாக, இருந்திருக்கவேண்டும்.

138, 139 ஆம் புறப்பாடல்கள் இரண்டும் நாஞ்சில் வள்ளுவன்மேற் பாடப்பட்டவை. இவன் சேரனுக்கு அடங்கிய குறுநில மன்னன். தென்பாண்டி நாட்டிற்கு நாஞ்சில் நாடு அண்மையானது.

349 ஆம் புறப்பாடல் பெருஞ்சிக்கில் கிழான் மகளைச் சோழனொருவன் பெண்கேட்டதை ஒட்டிப் பாடியது. இவன் புகார்ச்சோழனாய் இருக்கலாம். சிக்கில் புகாருக்கு மிக நெருங்கியது. உறையூர்ச் சோழன் நாகநாட்டிற்குள் போய்ப் பெண்கேட்டு மருட்டியிருக்க முடியாது. இப்புகார்ச்சோழன் பெயர் தெரியவில்லை.

இவ்வரசர்களின் சமகாலத்தில் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் உறையூரில் இருந்து ஆண்டிருக்கிறான். ஏனென்றால் ஐயூர் முடவனார் என்ற புலவர் சம காலத்தில் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியையும், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனையும் பாடியிருக்கிறார். குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் தான் பெரும்பாலும் உறையூர் அரியணையில் ஆட்சிக்கட்டிலிற் செங்குட்டுவனால் ஏற்றப்பட்டவன் ஆகலாம் என்று “சிலம்பின் காலம்” என்ற கட்டுரைத்தொடரில் அறிந்தோம். மருதன் இளநாகனாரின் இப்பாடல்கள் எழுந்த காலம் சிலம்பு எழுந்து 25 ஆண்டுகளுக்குள் இருந்திருக்கவேண்டும். (ஒரு தலைமுறைக் காலம் என்பது 25 ஆண்டுகள்.) அப்படியானால் மருதன் இளநாகனார், ஐயூர் முடவனார், கூடகாரத்துத் துஞ்சிய நன்மாறன், இலவஞ்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், நாஞ்சில் வள்ளுவன் (இது பட்டப்பெயர், இயற்பெயரல்ல) ஆகியோரின் காலம் கி.மு.50 ஆகும்.

அன்புடன்,
இராம.கி.

5 comments:

Anonymous said...

neengal arumaiyaga thamiz ezhuthkirir aanal unamiyilungal pillkal oru penn,oru aan iruvvarum gulf valakudaavil thamiz palliyil vittu vittu angila vazhi kalviyil serthirkal ungal manaivi viruppam. appadi ithu eppadi?

இராம.கி said...

நீங்கள் சொல்லுவது புரியவில்லை. மீண்டும் எழுத முடியுமா?

அன்புடன்,
இராம.கி.

காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன் said...

அருமை ஐயா. கண்ணகியைப் பற்றிய சங்கப்பாடல் ஒன்று இருப்பதையும், அதில் கண்ணகி ஒருமுலையால் மதுரையை எரித்தது பற்றியும், அவள் மாநிறத்தவள் சற்று குள்ளமானவள் என்ற குறிப்பு இருப்பது பற்றியும் அறிந்து வியக்கிறேன். நல்லபல கட்டுரைகளைத் தொடர்ந்து வழங்கி வருகின்றீர்கள். நன்றி ஐயா.

Unknown said...

முற்றிலும் உண்மை

சிவா said...

நன்றி