"தமிழை வளர்க்கத் தமிழை எளிமைப் படுத்துவோம். தம் தாய்மொழியை அனைவரும் எளிதே பயன்படுத்திட அதனை எளிதாய் வைத்திருப்போம். தங்கள் சொல்லாக்கம் தவிர்ப்பீர்! தமிழைக் காப்பீர்!"
என்று எளியன் என்பவர் என்னுடைய முந்தையப் பதிவில் ஒரு பின்னூட்டுக் கொடுத்திருந்தார். அதற்கு,
"தமிழை எளிதாக வைத்திருக்க உங்கள் இலக்கணம் ஏதென்று எனக்குத் தெரியாது. தமிழுக்கு ஏதும் நான் குறை செய்ததாகவும் எனக்குத் தோன்றவில்லை. போகிற போக்கில் இப்படி "பொன்னான" கருத்துச் சொல்லும் உங்களைப் போன்றோருக்கு என்னிடம் மறுமொழி இல்லை. ஏதேனும் தவற்றை விதப்பாகச் சொன்னால் மறுமொழி சொல்லலாம். உங்கள் வருகைக்கு நன்றி"
என்று நான் மறுமொழி சொல்லியிருந்தேன். எளியன் சொல்லும் இலக்கணம் ஏதென்று எனக்குத் தெரியாவிட்டாலும், ஒன்று மட்டும் உறுதியாய்ப் புரிந்து கொள்ளுகிறேன். என்னுடைய பதிவுகளைப் படிக்கும் ஒரு சாராருக்கு நான் பெரும் முள்ளாய் இருந்து கொண்டிருக்கிறேன். ஏனென்றால் எங்கெங்கோ தொடர்பு இல்லாத இடங்களிற் கூட (காட்டாக, கலைஞரின் கையெழுத்து பற்றிய நண்பர் ஹரன் பிரசன்னாவின் பதிவிற்கான பின்னூட்டில்) "மொட்டைத் தாதன் குட்டையில் விழுந்தான்" என்ற கணக்காய், கையெழுத்து மாற்றத்திற்கும் சொற்பெயர்ச்சிகளுக்கும் உறவு சொல்லி, அடிப்படை அறிவு கூட இல்லாமல், என் சொல்லாய்வு முயற்சிகளைப் பற்றி முட்டாள் தனமாக எதிர்வினை செய்கிறவர்கள் இருக்கிறார்கள். (இங்குமே பெயரில்லாதவர்கள்). வலைப்பதிவு நுட்பங்களின் நெளிவு சுளிவுகளால் எளிதாகும் முகமூடி விளையாட்டு, இது போன்ற கோழைப் பின்னூட்டுக்களுக்கு வாய்ப்பாய் அமைந்து விடுகிறது.
தமிழைக் கவிதை, கதை, துணுக்கு, திரைப்படம் என்று நாம் களியாட்டக் களத்தில் வைத்திருக்கும் வரை இந்தப் பெயரில்லாதவர்களுக்கு அது உகந்ததாய் ஆகிறது. கூடிச் சேர்ந்து கும்மியடிக்க முடிகிறது. ஏனென்றால் அந்தக் கும்மாளம் நம்மை அறியாமலேயே "மெல்லத் தமிழ் இனிச் சாகும்" என்ற நிலைக்கு கூட்டிச் செல்கிறது அல்லவா? நாமும் "கொஞ்சம் கொஞ்சமாய் சூடேறும் நீர்த்தாங்கலில் (water tank) அமிழ்ந்து கிடக்கும் தவளையைப் போல" நம் அழிவை உணராமல் "சும்மா கிடப்பதே சொல்க்கம்" என்று இருப்போம் அல்லவா?
மாறாகத் தமிழ்நடையைத் துல்லியப்படுத்தும் வகையில், அறிவியல், நுட்பியல், மாந்தவியல், பொருளியல், குமுகியல் என்று போய், வேர்ச்சொல் ஆய்ந்து, பழஞ் சொற்களைப் புதுக்கி, புதுச் சொற்கள் ஆக்கி, சமய வழி மூதிகக் கதைகளை ஒதுக்கி, வரலாற்றுப் பிழைகளைச் சொல்லி, மாற்றுக் கருத்தியல் வைத்தால் இந்தப் பெயரில்லாதவர்களுக்கு இருப்புக் கொள்ளாமற் போய்விடுகிறது. சுற்றிச் சுற்றி வந்து நாலாந்தரமாகப் பெயரை நாறடிக்க முற்படுகிறார்கள். (இப்படித்தான் சிற்றம்பலம் நடவரசன் திரு முன்னால் திருவாசகம் படிப்பது பற்றி நான் எழுதிய போது, அதைத் தன்மயமாய்த் திரித்து என்னையும், என் குடும்பத்தினரையும் ஒருவர் தூற்றி இருந்தார்.) என்பால் கனிவு கொண்டவர்கள் என்னை அகவை கருதியும், தமிழ் மரபு கருதியும், "அய்யா" என்று அழைப்பது கூட இவர்களுக்கு உறுத்துகிறது.
கழிப்பறைச் சுவரில் விடலைப் பிள்ளைகள் பாலியற் செய்திகளை ஊகமாய் எழுதுவது போல், கண்ட கண்ட இடங்களில் தூற்றி எழுதிக் கொண்டிருக்கும் இவர்களுக்கெல்லாம் மறுமொழி சொல்லிக் கொண்டிருக்கத் தேவையில்லை தான். ஆனாலும் தமிழுக்கு "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்று பொதுப்படச் சொல்லுவதற்காக இந்தப் பதிவு.
"போற்றுபவர் போற்றட்டும்; புழுதி வாரித்
தூற்றுபவர் தூற்றட்டும்; தொடர்ந்து செல்வேன்;
ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால்
எடுத்துரைப்பேன்; எவர்வரினும் நில்லேன்; அஞ்சேன்."
என்றான் கண்ண தாசன்.
அன்புடன்,
இராம.கி.
25 comments:
ஐயா.... இது நுட்பச் சிக்கல். முகமில்லாமல் பின்னூட்டம் தர வசதி இருக்கிற சூழ்நிலையிலே இவை போன்ற விஷயங்கள் சகஜம் தான். அதையெல்லாம் கண்டு கொள்ளாமல், உங்கள் பணியைத் தொடருங்க...
என் கடன் பணி செய்து கிடப்பதே - என்பது சரியான பதில். நீங்கள் சொல்வது சரியாக தவறா என்பது அவரவர் துணிபு, விருப்பம், கருத்துச் சாய்வு பொருத்து அமைகிறது. உங்களை போல் சிந்திக்க, வெளிப்படுத்த இன்னும் பலர் வர வேண்டும். அப்பொழுது தான் தமிழ் சிறக்கும்.
தொடர்ந்து உங்கள் இடுகைகளை தாருங்கள். நன்றி
வருத்தமான ஒன்று, உங்களின் பதிவின் மூலம் எத்தனையோ விடயங்களை தெரிந்து கொள்கிறோம், இப்படியான சிலவைகளினால் அயற்சி ஏற்படுமென்றாலும் எங்களைப் போன்றவர்களுக்காகவாவது உங்கள் பணி தொடரட்டும்.
நன்றி
தமிழுக்கு நீங்கள் ஆற்றும் பணி சீரியது. அதன் அருமையினை அறியாதவர்களின் மொழியால் தடைபடாது தொடர்வீராக!
//கழிப்பறைச் சுவரில் விடலைப் பிள்ளைகள் பாலியற் செய்திகளை ஊகமாய் எழுதுவது போல், கண்ட கண்ட இடங்களில் தூற்றி எழுதிக் கொண்டிருக்கும் இவர்களுக்கெல்லாம் ...//
இராமகி. ஐயா,வணக்கம்!
தங்கள் பதிவைப் படித்தபோது மேற்காணும் வாக்கியம் எவ்வளவு உண்மையென்பதை உணர்ந்தேன்!ஏனெனில் வலைபதியும் ஜேர்மனிய மொழிச் சூழலுக்குள்ளும் இதே பிரச்சனை.உலகத்தில் மிகப் பெரும் வளர்ச்சியைக் கண்ட சமுதாயத்திலும் இத்தகைய காழ்ப்புணர்வுப் பிரச்சனைகளுண்டு.
உதாரணத்துக்கு: Weblogs: "Wir haben wirkliche Macht!",Klowand oder neues Medium?என்றொரு பார்வையை ஜேர்மனியச் சஞ்சிகை போக்குஸ் வைத்தது.இதன் காரணங்கள் பல இருக்கின்றன.ஒன்று செய்திகளை மிக வேகமாகப் பரப்பும் வலைப்பதிவு அதேயிடத்தில் பத்திரிகைகளின் செய்திக்கு ஆப்பும் வைக்கிறது.அதேபோன்று தனிநபர் வாதமாக மாறி ஒருவரையொருவர் சாடுவதிலும் அதுவே முன்னணியில் இருக்கிறது.
நீங்கள் குறிப்பிட்ட "கழிப்பறைச் சுவர்" என்பதைத்தாம் இங்கும் சுட்டிக் கருத்தாடுகிறார்கள்."வலப்பதிவு எமக்கு வல்லமையா: கழிப்பறைச் சுவரா இஃதன்றியிது புதிய ஊடகமா?" என்பதுதாம் இவர்களின் கேள்வியும்.
தங்கள் பணியென்பது தமிழுக்கு அவசியமானதென்பதை நாம் இங்கிருந்து உணர்வது மிகச் சுலபம்.மேற்குலக மொழிகளுக்குள் இடம் பெறும் மாற்றங்கள்,விவாதங்கள் அனைத்தும் உங்களை ஞாபகப்படுத்துபவை.உங்களது பணியின் அருமையை தமிழர்கள் பல அந்நிய மொழிகளுக்குள் தங்கள் அநுபவங்களைத் தொலைக்கும்போது புரிவார்கள்.உங்கள் பணி தொடரட்டும்.
மதிப்பிற்குரிய ஐயா,
உங்கள் இடுகைகள் எல்லாம் போற்றிப் பாதுகாக்க வேண்டியவை. இடுகைகளுக்கு மட்டுமல்லாது
பின்னூட்டுகளுக்குப் பதிலிடுவதிலும் நீங்கள் எடுத்துக்கொள்ளும் சிரத்தை மிக அதிகம்.
உங்கள் எழுத்துக்களைப் படிக்கும்போது, தமிழின், தமிழரின் தொன்மையும் மேன்மையும் தெளிவாய்த் தெரிகிறது.
அதன் ஆழம் புரிகிறது. நானும் தமிழன் என்று பெருமையாய் இருக்கிறது. மேலும்மேலும் படிக்கத் தூண்டுகிறது.
எங்கள் சொல்வளம் பெருகுகிறது. பேச்சு கொச்சையென்று ஏளனம் செய்யப்படும்போது, கோவப்படாமல்
தவறென்று ஆதாரத்தோடு எடுத்துரைக்க முடிகிறது.
எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள், நம்மிடம் தமிழ் உணர்வு நிரையவே இருக்கிறது. கூடவே தமிழ் அறிவும் வளர்த்துக்
கொள்ளவேண்டும் என்று சொன்னார். உங்கள் தமிழ்ப்பணி அதை செவ்வனே செய்கிறது.
தாங்கள் பல்லாண்டு நலமுடன் இருந்து மேலும் எழுதி எங்களை ஊக்க வேண்டும்.
என்றும் அன்புடன்,
குலவுசனப்பிரியன்
இராம.கி.ஐயா,
உங்கள் பதிவுகளை விரும்பிப் படிப்பவர்களில் நானும் ஒருவள். நீங்கள் தொடர்ந்து எழுதிவாருங்கள். யார் யாருக்கு எது விருப்பமோ அது செய்யப்படுகிறது இவ்வலையுலகத்தில். உங்களின் விருப்பமும், ஆர்வமும் தூய்மையானது. மொழியின் ஆழத்தை, அழகைத் தொலைத்துவரும் எம் தலைமுறைக்கு அவற்றைத் தக்கவைத்துக்கொள்ளச் சொல்லித்தருபவை உங்கள் எழுதுக்கள்! நன்றி.
முனை. இராமகி ஐயா,
நான் விரும்பிப் படிக்கும் பதிவுகளில் உங்கள் வளவும் ஒன்று. பெரும்பாலும் படிப்பதோடு நின்றுவிடுவதுண்டு, பின்னூட்டுவதில்லை. நீங்கள் தமிழுக்காற்றும் பணி அரியது, ஒரு சிலரின் தூற்றல்கள் கண்டு துவழாமல் தொடர்ந்து செயலாற்றுமாறு வேண்டுகிறேன். நீங்கள் சொல்வது போல் தமிழ்சொற்களின் நுண்ணிய பொருளுணர்ந்து சொலலும், இயன்றளவு வினையையொட்டி சொற்காணலும், பல்வைகைத் துறையிலும் நற்றமிழ் புழங்கலும் நம் தாய்த்தமிழ் செழிப்புறத் தேவையான செயல்கள். அதற்கு தங்களைப் போன்ற ஆழ்ந்த தமிழறிவுள்ளோரின் தமிழ்த்தொண்டு இன்றியமையாதது, ஆகவே தங்களுக்கு நேரமும் வசதியும் கைகூடும் பொழுதெல்லாம் தமிழ்ப்பணி செய்யுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.
அன்பின் அய்யா,
வணக்கம்.
அநாநிகள் நல்லது எழுதினாலும் தீயது எழுதினாலும்
பதில் அளிப்பதைத் தவிருங்கள். அநாநிகள் பின்னூட்டுக் கொடுக்க
இயலாமல் செய்தால் இன்னும் நல்லது.
கீழே உள்ள சுட்டி பின்னூட்டல்ல. இருப்பினும்
இதனை இங்கு இணைத்து வைக்கிறேன்,
http://nayanam.blogspot.com/2007/02/blog-post.html
அன்புடன்
நாக.இளங்கோவன்'
ஐயா!
உங்களைப் போன்றோருக்கு உபத்திரம் வருவது; ஆச்சரியமில்லை!
சிற்றறிவாளரை மன்னித்து;பணியைத் தொடருங்கள்!
யோகன் பாரிஸ்
ஐயா. தங்கள் பணி எல்லோருக்கும் தேவை. தொடர்ந்து செய்து வாருங்கள். உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படித்து நிறைய கற்றுக் கொள்ளும் என்னைப் போன்றவர்களுக்காகவாவது உங்கள் கருத்துகளைச் சொல்லி வாருங்கள்.
இராமகி ஐயா உங்கள் பதிவுகள் தமிழை அதன் முழு வடிவத்தில் முழு பலத்துடன் சுவைக்கத் தருகின்றன.
நீங்கள் தருவது தமிழ்ப்பால் சிலர் கோக் பெப்சி போதும் என்கிறார்கள் விடுங்கள்.
தொடர்ந்து எழுதுங்கள் எங்களுக்காக.
தங்கள் அளவுக்கு இன்றைக்கு தமிழ் வலைப்பதிவுகளில் பெரிய எழுத்தாளர் யாரும் இல்லை. நான் தொடர்ந்து படித்து வருகிறேன் தங்கள் பதிவை. தயவு செய்து எழுதுங்கள் சார்.
//கழிப்பறைச் சுவரில் விடலைப் பிள்ளைகள் பாலியற் செய்திகளை ஊகமாய் எழுதுவது போல்..//
பலதடவை சொன்ன கருத்துதான். போகட்டும் விடுங்கள். நானும் இதைப் பற்றி எழுதினேன்; பாருங்கள்
அய்யா!
திரு நயனம் அவர்கள் எழுதியுள்ள "முனைவர் இராம.கியும் தேவநேயப் பாவாணரும்" பதிவில் நான் இந்தப் பின்னூட்டம் இட்டேன் :
"..அய்யா இராம.கி அவர்கள் நம் தமிழ் இணையத்தின் பாவாணராக விளங்குபவர். பெருமைசால் பெரியாரான இராம.கி அய்யா இங்கே எழுதுவது நமக்கெல்லாம் ஒரு நற்பேறு என்றே சொல்ல வேண்டும்".
வெறும் வாய்ச்சொல்லுக்கு அன்று, உண்மைதான் அது!.
என்னைப் போல பலரும் உங்களை வாசித்துவிட்டு பின்னூட்டம் இடாமல் செல்வார்கள் என எண்ணுகிறேன். ஆனால், பலருக்கும் உங்கள் பதிவுகள் ஆழக் கற்கும் இடமாக உள்ளது என்றால் அது மிகையன்று.
தொடர்ந்து எழுதுங்கள் - தமிழெதிரிகள் தவிர மற்றையோருக்கு உங்கள் பதிவுகளின் அருமை புரியும்.
//கழிப்பறைச் சுவரில் விடலைப் பிள்ளைகள் பாலியற் செய்திகளை ஊகமாய் எழுதுவது போல், கண்ட கண்ட இடங்களில் தூற்றி எழுதிக் கொண்டிருக்கும் இவர்களுக்கெல்லாம் மறுமொழி சொல்லிக் கொண்டிருக்கத் தேவையில்லை தான் //
இந்த முடிவுக்கு நான் வந்து பல காலங்கள் ஆகி விட்டது. சொல்லப்போனால் இந்தப் பதிவே நீங்கள் எழுதி இருக்கத் தேவை இல்லை. கவனம் கிடைக்கிற சந்தோஷத்தில் இவர்கள் இன்னமும் சந்தோஷம் அடைவார்கள்.
Dear Sir!
Tamils have producedoutstanding literature and will do so in years to come. This is not certainly by anglicizing it or reducing the word set of Tamil. God bless you for your service to Tamil. I am for one used the words that you have coined here.
we will be animals if we cannot come up with fine literature. vilanggkodu makkaL aNaiyar ilangku nuuul kaRRaaarodu Enai yavar
தொடர்ந்து எழுதுங்கள் அய்யா, உங்கள் எழுத்து எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு ஊக்கமூட்டும் மருந்து
அய்யா.. தங்களின் இன்றைய உழைப்பு காலத்தோடு என்றும் அழிக்க முடியாதவையே..
சரியான தமிழ் சொற்கள் தெரியாததினால் தான்.. பிறமொழி சொற்களை பயன்படுத்தி வருகிறோம்.
எவனுடைய ஊளையிடுதலுக்காகவும் தாங்கள் சோர்ந்து போகவேண்டாம்.
இந்தியாவின் தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீது வந்தேறிகள் இந்தியாவிற்குள் ஊடுறுவிய ஆரம்ப காலம் தொட்டே ஆதிக்கம் செய்ய முனைந்து, அதில் முழுமையான வெற்றி பெற முடியாமல், அந்த மொழியுடன் கள்ளத் தொடர்பு ஏற்படுத்தி கிளை மொழிகளைத் தோற்றுவித்து இப்படி பல்வேறு சதிவேலைகளை செய்தும் தமிழை அழிக்க முடியவில்லை. ஆதிக்கம் செய்ய முனைந்த மொழி செத்துவிட்டது.
புழக்கத்தில் உள்ள பல சொற்களை அவை ஆதிக்க மொழியிலிருந்து வந்தது என பிழையான தகவல்களைத் தந்து ஆனந்தப்பட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் தங்களைப் போன்றோர், அவை ஆதிக்க மொழியிலிருந்து பெறப்பட்ட சொற்கள் அல்ல, இந்த மண்ணின் தாய் மொழியாம் தமிழிலிருந்து பெறப்பட்டவையே என்பதை நிருவும்போது அவாள்களுக்கு எரிச்சல் ஏற்படுவது இயல்பே.
எவனுடைய ஊளையிடுதலுக்காகவும் தாங்கள் சோர்ந்து போகவேண்டாம்.
\|||/
(o o)
,----ooO--(_)-------.
| Please |
| don't feed the |
| TROLL's ! |
'--------------Ooo--'
|__|__|
|| ||
ooO Ooo
அய்யா அந்த தமிழ் மாணாக்கனை மன்னித்துவிடுங்கள். உகம் உகமாக வலிந்து வளர்த்துவரும் காழ்ப்பு அது. பொருளீட்ட உதவும் ஒரே காரணத்தால் மட்டுமே ஆங்கிலத்துக்கு அளவுக்கு மீறிய முக்கியத்துவம் தரும் அவர்களுக்கு ஆங்கிலம் தான் தாய்மொழி. சங்கதம் மற்றும் அவர்கள் கூறும் அத்துனை காரணங்களும் வெறும் ஏமாற்று வேலையே, அதை சொல்ல முடியாமல் தான் இப்படி சங்கதம் என்ற புலம்பல். நாளைக்கே கொரிய மொழி தெரிந்தால் இன்னமும் இதைவிட அதிகம் பொருள் ஈட்டலாம் என்று நிலைவந்தால், கொரிய மொழி என்ன, அவர்களது உடை முதல் உணவு வரை அனைத்தும் சுகம் என்றும் கூட சொல்லக்கூடும். மணிபிரவாளம் போல் கொரியபிரவாளம் கூட தோன்றும். பிறகு கொரியத்தில் ஆத்தா என்ற சொல்லை தமிழிழ் என்னால் சொல்ல முடியவில்லை அவமானமாக இருக்கிறது ஆகவே இனிமேல் தமிழர்கள் அனைவரும் கொரிய ஆத்தாவை சொல்ல 56 புதிய எழுத்துகள் சேர்க்கவேண்டும் என்பான். காரணம் கேட்டால் கொரியமொழியில் எனக்கு 100 வார்த்தைகள் தெரியும், அதை அப்படியே தமிழ் மொழியில் எழுதினால் அது கொரியம் என்று தனியாக தெரியாதல்லவா ஆதனால் இன்னமும் 56 எழுத்துக்களை சேர்த்துதான் எழுதுவான். அதோடு நிற்காமல் நம்மை பார்க்கும் பொழுதெல்லாம் அந்த 100 வார்த்தைகளை சுழித்தும் வளைத்தும் இயல்பாக பேசுவதை போல் காட்டிகொள்வதோடு மட்டும் அல்லாது தமிழிலே இந்த 100 வார்த்தைகளை சொல்ல 56 எழுத்துகள் போதாது அப்படி இன்னமும் 100 எழுத்துகள் சேர்த்தாலும் தமிழால் கொரிய வார்த்தைகளை கொரியம் போல உச்சரிக்க முடியவில்லை என்றும் கூட கூறுவான். மன்னியுங்கள் அந்த மாணாக்கனை, அவன் தான் மாணாக்கன் ஆச்சே. என்ன கொரியம் என்றும் சொன்னால் உதைகிடைக்கும் அதனால் மறுபடியும் இறைவன் கல்கி அவதாரத்தில் சொன்னதாக அந்த புதிய 100 கொரிய வார்த்தைகளையும் இன்னமும் அதை நீட்டி மடக்கி பெறும் வார்த்தைகளையும் வைத்து புதுகதை சமைத்து நமக்கு ஊட்டுவான்.
பக்குடுக்கையார் கூறுவது போல் இன்பம் நீக்கி துன்பம் அறிமுகமானால் திரட்ச்சி நின்று துன்பம் வலு பெற்றால் அருவம் ஆகி அடையாளம் தெரியாமல் போகுமே என்ற நப்பாசையினால் முயலுகிறான் அந்த தமிழ் மாணாக்கன். மன்னித்து விடுங்கள் அவனை.
எங்களுக்காக தொடரட்டும் உங்கள் பணி, அனைவரின் சார்பாக வேண்டிக்கொள்கிறேன்.
அன்புடன்,
அகல்யா
அன்பு இராமகி,
காலங்கடந்துதான் நோக்கினேன் இவ்விடுகையை.
"கலமிடு வாய்வீணர் மெத்தவுண்டு
கண்டறிந்து அகன்றுவிடு தர்க்கம் வேண்டாம்
விலகிவிடும் போதுமவன் திரும்பிவந்து
விகற்கமுடன் திரமறிய முயலுவானே..."
திருமூலன் சொன்னபடி புறம்பேசுவோர்களின் சொற்களைப் புறந்தள்ளி தங்களின் சீரிய பணியினைத் தொடருமாறு வேண்டுகிறேன்.
மதிப்பிற்குரிய இராம.கி ஐயா,
இப் பதிவு இப்போதுதான் கண்ணில் பட்டது.
ஐயா, தங்களின் பதிவுகள் மூலம் பயனடைந்து வரும் ஆயிரக்கணக்கானவர்களில் நானும் ஒருவன். ஈழத்தில் நடக்கும் இன அழிப்பு யுத்தத்தால் தாயகத்தை விட்டுப் பிரிந்ததனால் ஒழுங்காக தமிழ் இலக்கணத்தையோ, இலக்கியங்களையோ படிக்கும் வாய்ப்பை இழந்தவர்களில் நானும் ஒருவன். இப்படியான வாய்ப்பிழந்த என் போன்றோர் உங்களின் பதிவுகள் மூலம் அடையும் பயனை எழுத்தில் விபரிக்க முடியாது.
எனவே தங்களின் இந்த மகத்தான பணி தொடர வேண்டும். தொடருங்கள்.
மிக்க நன்றி.
Respected Sir,I am Panneerselvam from TamiNadu,a very humble ahigh School Tamil Teacher but a eager Tamil pupil.I do not know computers or other related things.When one of my friends who know about blogspots made me know about your things ,so this reply.PLEASE DO YOUR GOLDEN & HONOURABLE WORKS CONTINUOUSLY DONT TRY TO ANSWER ANY IRRESPONSIBLE COMMENTS.I AM PROUD OF YOU THAT WE HAVE ANOTHER "PAVANAR" HERE.I DO NOT WANT TO WASTE HIS TIME ANSWERING THOSE FOOLS FOOLS.PLEASE.VANAKKAM ONCE AGAIN.
Post a Comment