Wednesday, February 21, 2007

தனித் தமிழ் - 5

இந்தத் தொடர்வரிசைக் கட்டுரைகளில் இப்போதைக்கு இது தான் கடைசிக் கட்டுரை.

"தனித் தமிழ் என்ற பெயரில் இடையில் வழங்கிய சலிப்பூட்டும் போலி நடையில் எழுதிய காழ்ப்புணர்ச்சி உமிழும் சமாசாரங்களைக் காலமே கபளீகரம் செய்துவிட்டது. அதிலிருந்து எழும் தூசியைத் தட்டிக் கொண்டிருக்கும் ஒருவரது எழுத்து நடை பற்றி "காலத்துக்கு ஒவ்வாதது" என்று நான் செய்த சாதாரண விமரிசனம் பற்றி "ஐயகோ, ஐயாவை அவமதித்து விட்டார்கள்" என்று தமிழ்த் தாலிபான்கள் கூட்டம் ஒன்று கூப்பாடு போட்டுக் கத்திக் கொண்டிருக்கிறது என்பதாகக் கேள்வி. Come on, get a life, guys!" என்று மேலும் சொல்லுகிறார் திரு.ஜடாயு.

திரு.ஜடாயுவுக்குத் தன்னுடைய நடையே எப்படி எழுந்தது, எந்த இயக்கத்தின் தாக்கம் அவர் அறியாமலேயே அவருள்ளே இருந்திருக்கிறது என்று கூடத் தெரியவில்லை. 19ம் நூற்றாண்டு, அல்லது 20ம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் இருந்த தமிழ் நடையைக் கொஞ்சம் ஆய்ந்து பார்த்திருந்தால், எது சலிப்பூட்டும் நடை, எது கபளீகரம் செய்யப்பட்டது என்று அவருக்குப் புரிந்திருக்கும். பட்டவைகளைப் (facts) பார்க்காமலேயே வெறும் கருத்தியலில் கற்பனை வாதத்தை அள்ளித் தெளிப்பவருக்கு, தமிழ்நடை கால காலமாய் எப்படி எல்லாம் மாறியது, எங்கு போனது, எப்படித் திரும்பி வந்தது, எத்தனை முறை சீரழிந்து பின் உருப்பட்டது என்ற வரலாறெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. பூனை கண்னை மூடிக் கொண்டால் உலகமே இருண்டுவிட்டது என்று எண்ணுமாம். அதுபோலக் கருத்து முதல் வாதமாய் எதையோ நினைத்துக் கொண்டு காவிக் கண்ணாடி போட்டுப் பார்த்தால், உலகமே காவியாய்த் தான் தெரியும். அதனால் தான் தாலிபான்கள், மிசனரிகள் என்ற பார்வை வந்து சேருகிறது. இவர் நினைத்ததெல்லாம் நடந்திருந்தால், அப்புறம் வரலாற்று உண்மைகள் என்பவை என்ன ஆவது?

கீழே 97 ஆண்டுகளுக்கு முந்திய ஒருவரின் நடையைக் குறித்திருக்கிறேன்.
-------------------
தமிழ்நாட்டில் தேசியக் கல்வி நடைபெற வேண்டுமாயின் அதற்கு அகரமுதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லா வ்யவஹாரங்களும் தமிழ்பாஷையில் நடத்த வேண்டும் என்பது பொருள்.

ஆரம்ப விளம்பரம் தமிழில் ப்ரசுரம் செய்ய வேண்டும். பாடசாலைகள் ஸ்தாபிக்கப் பட்டால் அங்கு நூல்களெல்லாம் தமிழ்மொழி வாயிலாகக் கற்பிக்கப்படுவதுமன்றிப் பலகைக் குச்சி எல்லாவற்றுக்கும் தமிழிலே பெயர் சொல்லவேண்டும். 'ஸ்லேட்', 'பென்ஸில்' என்று சொல்லக் கூடாது
..............
மெம்பர் என்பதற்குச் சரியான தமிழ்ச்சொல் எனக்கு அகப்படவில்லை, இது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். 'அவயவி' சரியான வார்த்தை இல்லை, 'அங்கத்தான்' கட்டி வராது, 'சபிகன்' சரியான பதந்தான். ஆனால் பொதுமக்களுக்குத் தெரியாது. யாரேனும் பண்டிதர்கள் நல்ல பதங்கள் கண்டுபிடித்துக் கொடுத்தால் புண்ணியமுண்டு. அரைமணி நேரம் யோசித்துப் பார்த்தேன். 'உறுப்பாளி' ஏதெல்லாமோ நினைத்தேன். ஒன்றும் மனத்திற்குப் பொருந்தவில்லை, என்ன செய்வேன், கடைசியாக 'மெம்பர்' என்று எழுதிவிட்டேன். இன்னும் ஆர அமர யோசித்துப் பார்த்துச் சரியான பதங்கள் கண்டுபிடித்து மற்றொரு முறை சொல்லுகிறேன்.
..............
தமிழ்நாட்டில் முழுதும் தமிழ்நடையை விட்டு இங்கிலீஷ் நடையில் தமிழை எழுதும் விநோதமான பழக்கம் நம் பத்திராதிபர்களிடம் காணப்படுகிறது.
-------------------------------

மேலே வருவது 1920ல் "தேசியக் கல்வி" என்ற கட்டுரையின் நிறைவில் பாட்டுக்கொரு புலவன் என்று நாம் எல்லாம் பெருமை கொள்ளும் பாரதி எழுதிய பகுதி. அன்றைய உரைநடை அப்படித்தான் இருந்தது. நல்ல தமிழில் பாவெழுதிய பாரதி அன்றைய மணிப்பவள நடையில் தான் உரைநடை எழுதினான். (பலருக்கும் இந்த முரண்பாடு வியப்பாய்த் தான் இருக்கிறது.) இந்த மணிப்பவள நடையையா இப்பொழுது திரு.ஜடாயு எழுதுகிறார்? குறைந்தது வ்யவஹாரங்கள், தமிழ்பாஷை, ப்ரசுரம், ஸ்தாபிதம், மெம்பர், ஆச்சர்யம், அவயவி, அங்கத்தான், சபிகன், பதம், பண்டிதர், புண்ணியம், இங்கிலீஷ், விநோதம், பத்திராதிபர் போன்றவற்றை மாற்றியிருக்க மாட்டாரா? மேலே இருப்பதைக் காட்டிலும் அவர் நடையில் வடமொழிச் சொற்கள் குறைந்து இல்லையா? அவ்வப்போது கவனக் குறைவால் தமிங்கிலம் பழகினாலும், அவருடைய நடை உறுதியாக 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தைக் காட்டிலும் தமிழ் கூடியதாகத் தான் இருக்கிறது. காலவோட்டத்தில் திரு. ஜடாயுவும் கூட நீந்தியிருக்கிறார். அப்புறம் என்ன தனித்தமிழ் பற்றிய முட்டாள் தனமான சில்லடிப்பு?

இன்னும் ஓர் எடுத்துக்காட்டைப் பாரதியில் இருந்தே கீழே தருகிறேன். 'தமிழில் சாஸ்த்ர பரிபாஷை' என்ற தலைப்பில் அவர் எழுதுகிறார்.

------------------------------
ஐரோப்பாவில் வழங்கும் லௌகிக சாஸ்திரங்களைத் தமிழில் எழுத வேண்டும் என்று மிகவும் ஆவலோடிருக்கிறார்கள். முன்னதாகவே பாண்டிதர்கள் செய்துவைக்க வேண்டிய அடிப்படைக் காரியம் ஒன்றுண்டு. கூடியவரை சாஸ்த்ர பரிபாஷையை நிச்சயப்படுத்தி வைத்தால் பிறகு மொழிபெயர்ப்புத் தொடங்குவோர்க்கு அதிக சிரமம் இராது. ஸங்கடமிராது. பரிபாஷை, ஸங்கேதம், குழூவுக்குறி என்ற மூன்று சொல்லும் ஒரே பொருளைப் பல வகையிலே குறிப்பன. அதாவது ஒரு கூட்டத்தார் அல்லது ஒரு சாஸ்த்ரக்காரர், விசேஷார்த்தம் தோன்றும்படி உடன்பட்டு வழங்கும் பொதுவழக்கமில்லாத சொல். இங்ஙனம் பரிபாஷையை நிச்சயப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் சேலத்தில் வக்கீல் ஸ்ரீ சக்கரவர்த்தி ராஜகோபாலசார்யரும் ஸ்ரீ வெங்கட சுப்பையரும் சேர்ந்து ஒரு மாதப் பத்திரிக்கையைத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தப் பத்திரிக்கையின் பெயர் 'தமிழ் சாஸ்த்ர-பரிபாஷைச் சங்கத்தாரின் பத்திரிக்கை'.

மேற்கண்ட பெயருடன் ஒரு சங்கம் சேலத்தில் ஏற்பட்டிருக்கிறது. அந்தச் சங்கத்தின் கார்யஸ்தர் அந்த ஊர்க் காலேஜின் ப்ரகிருதி சாஸ்த்ர பண்டிதராகிய ஸ்ரீராமநாதய்யர்.

'தமிழில் சாஸ்த்ர பரிபாஷை மாஸப்பத்திரிக்கை' என்ற சேலத்துப் பத்திரிக்கையின் முதலாவது சஞ்சிகை இங்கிலீஷில் வெளிப்பட்டிருக்கிறது. ஆரம்பத்திலே தமிழில் எழுதாமல் தமிழுக்கு வேண்டிய இக்காரியத்தை இங்கிலீஷ் பாஷையிலே தொடங்கும்படி நேரிட்டதகு ஸ்ரீ ராஜகோபாலாசார்யர் சொல்லும் முகாந்தரங்கள் எனக்கு முழு நியாயமாகத் தோன்றவில்லை. ஆனால் கூடிய சீக்கிரத்தில் தமிழ்ப்பகுதியொன்று அந்தப் பத்திரிக்கையில் சேருமென்று தெரிகிறது. அனேகமாக இரண்டாம் ஸஞ்சிகையிலேயே தமிழ்ப்பகுதி சேருமென்று கேள்விப்படுகிறேன். அங்ஙனம் தமிழ் சேர்ந்து நடக்கும் சாஸ்த்ரப் பத்திரிக்கையினால் தமிழ்நாட்டாருக்கு மிகப்பெரிய பயன் விளையும் என்பதில் சந்தேகமில்லை

ஸ்ரீகாசியிலே, 'நாகரி ப்ரசாரிணி சபையார்' ஐரோப்பிய ஸங்கேதங்களையெல்லாம் எளிய ஸமஸ்க்ருத பதங்களில் போட்டு மிகப்பெரியதோர் அகராதி உண்டாக்கி வருகிறார்கள். அந்தச் சொற்களை வேண்டியவரை, இயன்றவரை, தேச பாஷைகள் எல்லாவற்றிலும் ஏக காலத்தில் கைக்கொண்டு வழங்கலாம். ஐரோப்பாவில் எல்லா பாஷைகளும் இவ்விதமாகவே லத்தீன், யவன பரிபாஷைகளைக் கைக்கொண்டிருக்கின்றன. இவ்வாறு செய்வதால் நமது தேசபாஷைகளில் ஸங்கேத ஒற்றுமை யேற்படும். அதனால் சாஸ்த்ரப் பயிர் தேசமுழுவதிலும் வளர்ந்தோங்கி வருதல் எளிதாகும்.
---------------------------------------

இது போன்ற நடையிலா திரு ஜடாயு இப்பொழுது எழுதி வருகிறார்? ப்ரகிருதி சாஸ்த்ரம் என்றால் என்னவென்று சொல்ல முடியுமா? சொன்னால் அசந்து விடுவீர்கள். [பாரதியாரின் கருத்திற்குள் நான் இங்கு போகவில்லை. அது வேறு இடத்தில் பேசவேண்டியது, அலச வேண்டியது.] 97 ஆண்டுகளுக்கு முன் இருந்த இது போன்ற நடையைப் பெரிதும் மாற்றி நல்ல தமிழ் நடைக்குக் கொண்டு வந்தது மறைமலை அடிகளின் முயற்சியால் தான். இந்த உண்மையைப் பதிவு செய்யாத தமிழறிஞர்கள் தமிழ்நாட்டில் இல்லை; அடிகளாரின் கருத்தியலில் உடன்படாதவர்கள் கூட அவருடைய ஆக்கத்தையும், தனித்தமிழ் இயக்கத்தின் தாக்கத்தையும் பதிவு செய்தே இருக்கிறார்கள். யாரும் மறுத்தவர்கள் இல்லை. தனித்தமிழ் இயக்கம் மட்டும் இருந்திராவிட்டால் இருபதாம் நூற்றாண்டில் இன்னுமொரு மலையாளம் பிறந்திருக்கும். "மெல்லத் தமிழினிச் சாகும்" என்ற வாக்குக் கூட ஒருவேளை உண்மையாகியிருக்கும்.

தன் நடை ஏதென்று தனக்கே தெரியாமல் சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி? தனித்தமிழ் என்பது ஒருவர் போய்ச் சேர முற்படும் ஒரு குறியீடு, அடையாளம், இலக்கு. அதைப் பலராலும் அடைய முடியாமற் போகலாம். ஆனாலும் வடக்கிற்கு ஒரு துருவம் இருப்பது போல, தெற்கிற்கு ஒரு துருவம் இருப்பது போல திசைகளை அடையாளம் காட்டிக் கொண்டிருக்கும் குறியீடு தனித்தமிழ். இன்றைக்கு 50 விழுக்காடு பிறமொழிச் சொல் பயின்று, மறுபாதி 50க்கு தமிழை வைத்துக் கொண்டிருப்பவர், நாளைக்கு அதை 51 தமிழ், 49 பிறமொழிச்சொல் என்று ஆக்கிக் கொண்டு அதே போலத் தொடர்ச்சியாய் தன்னுடைய தமிழ்த் தொகுதியைக் கூட்டிக் கொண்டு வந்தால் தான், தமிழ் நிலைக்கும், தமிழர் என்ற இனம் நிலைக்கும் என்று சொல்லலாம். அதை விடுத்து 50:50 -யையே எந்நாளும் வைத்துக்கொள்ளுவேன்; இல்லையென்றால் தமிழில் இன்னும் சுருங்குவேன் என்றால் அது என்ன முட்டாள் தனம்?

நீரில் உப்பைச் சேர்க்கச் சேர்க்க வாயில் வைக்கவா முடியும்? மண்ணூறல் எடுவித்த (demineralized) நீரை அல்லவா நாம் குடிக்கத் தேடிக் கொண்டிருக்கிறோம்? அப்புறம் மொழியில் மட்டும் என்ன ஒரு முட்டாள் தனம்? உப்பு நீரைத் தேடிக் குடிப்பது? யார் அழிவை நோக்கிச் செத்துப் போய்க் கொண்டிருக்கிறார்கள்? "come on guys, get some life" என்று யாரைப் பார்த்து யார் சொல்ல வேண்டும்?

பரத்தில் ஆடத் தெரியாதவள் தெருக் கோணல் என்றாளாம்.

"நேனோ டெக்னாலஜியில் உள்ள nano எங்கிருந்து வருகிறது தெரியுமா? monolithic rocks என்ற பாறை வகையின் பொருள் தெரியுமா? அந்தச் சொற்கள் எங்கிருந்து வந்தன தெரியுமா? அணு, அண்டம், பிரபஞ்சம், கந்தகம் என்ற சொற்களெல்லாம் எம்மொழியைச் சேர்ந்தவை? தமிழ்நாட்டை விட்டு வெளியே இந்தியாவின் பல மாநிலங்களிலும் போய்ப் பார்த்ததுண்டா? அந்த மொழிகளில் உள்ள கலைச்சொற்கள் பற்றி கொஞ்சம் சிந்தித்தது உண்டா? அவற்றில் 95% சொற்கள் சம்ஸ்கிருத மொழிச் சொற்கள் தான். " என்றெல்லாம் கேள்வி கேட்டு அடுக்குகிறார் திரு. ஜடாயு. அதற்கெல்லாம் விடை சொல்லலாம் தான். ஆனால் அந்த விடையிறுப்பு அவ்வளவு முகன்மையானது இல்லை.

"இந்த 95% சங்கதச் சொற்கலப்பு எல்லாம் தமிழில் இல்லை; கூடிய மட்டும் கலைச்சொற்களைத் தமிழ் வேரில் இருந்தே உருவாக்கிக் கொள்ளுகிறோம்" என்று மட்டுமே சொல்லி இப்போது அமைய விரும்புகிறேன். தமிழர் தமிழிலேயே சொற்களை உருவாக்கிப் புழங்கிக் கொள்ளுவது தான் திரு.ஜடாயு போன்றவர்களைக் குதிக்க வைக்கிறது. "அது எப்படி சங்கதத்தின் தேவையில்லாமல் ஒரு மொழி இயங்கலாம்? அதை எப்படி விட்டு வைப்பது?" என்ற எதிர் உணர்ச்சி தான் பேச வைக்கிறது; வேறொன்றுமில்லை.

அடுத்து "சம்ஸ்கிருதம் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் சாதனம். பாரதியும், காந்தியும், விவேகானந்தரும், அரவிந்தரும் கூட இப்படித் தான் பேசினார்கள். இந்திய தேசியத்தின் சிற்பிகள் இவர்கள்" என்று பேசுகிறார். மறுபடியும் பூசனியைச் சோற்றிற்குள் முழுக்கும் வேலை. எல்லாவற்றிற்கும் விடை சொல்லி எனக்குச் சலித்துப் போகிறது. காந்தியார் சங்கதத்தை நாட்டின் பொதுமொழியாக்கச் சொல்லவே இல்லை; அவர் இந்துசுத்தானியையே தேச ஒற்றுமைக்காக வலியுறுத்தினார்.

முடிவில் "உலகம் முழுவதும் பல அறிஞர்கள் இந்த மொழியைத் தேடிப் பிடித்துப் பயின்று வருகையில், இப்படி உங்களை சம்ஸ்கிருதம் பற்றி ஏளனம் செய்ய வைப்பது தமிழ் நாட்டு திராவிட அரசியல் தாக்கம் தான். இல்லை இந்த வெறிபிடித்த மொழிச் சூழலில் நான் சம்ஸ்கிருத எதிர்ப்பாளர் தான் என்ற பிம்பத்தை நிலை நிறுத்த வேண்டிய அவசியமா?" என்று நண்பர் பத்ரியைப் பார்த்துக் கேட்கிறார். திரு. பத்ரி இன்னும் விடை சொல்லவில்லை.

நாம் சொல்லும் விடை இதுதான்:

விவரம் தெரிந்த யாருமே சங்கதத்தை ஏளனம் செய்யவில்லை. குமுகாயக் காரணங்களால் சங்கதத்தின் மேலாண்மையை மறுக்கிறார்கள்; அவ்வளவு தான். சங்கதத்தின் நூல்களையும் அவற்றுள் பொதிந்துள்ள பட்டறிவுகளையும் தேடிப் படிக்கிறவர்கள் இன்றும் இருக்கிறார்கள். அது தேவையானதும் கூட. அதே பொழுது, சங்கதப் பதாகையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டே, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் தமிழுக்குள் நஞ்சு ஏற்றிக் கொண்டிருக்கிற திருகு வேலையைக் கண்டிக்கிறார்கள்.

வெறி பிடித்த மொழிச்சூழல் என்ற சொல்லாடலைக் கேட்டும் எங்களுக்குச் சலித்துப் போயிற்று. "இன்னாபா, இப்ப, என்னா பண்ணோனுன்றே" என்று சென்னைத் தமிழில் எதிர்த்துக் கேட்கத் தோன்றுகிறது. உங்களுக்குத் தெரிந்ததைச் செய்து கொள்ளுங்கள்.

----------------------------
இதுவரை இட்ட இந்தத் தொடர் இடுகைகளில் உள்நின்று இருப்பது புலவர் இரா. இளங்குமரனின் கருத்துக்கள். அவருக்கு நான் கடன்பட்டவன்.

இதுவரை இந்தத் தனித்தமிழ்க் கட்டுரை வரிசையில் ஓர் எக்கில் வலதுசாரிக் கருத்துக்களை எதிர்கொண்டாலும், இன்னோர் எக்கில் இடதுசாரிக் காரர் ஒருவரின் பதிவு ஒன்றிற்கு பின்னாளில் மறுமொழி சொல்ல வேண்டும். செய்வேன்.

அன்புடன்,
இராம.கி.

9 comments:

நற்கீரன் said...

தனித் தமிழ் பதிவுகள் தகவல்களின் தகவல் குவிப்பு.
நன்றி.


ஆரம்பத்தில் எல்லா மொழிகளுக்கும் சமசுகிருதத்தில் இருந்து கலைச்சொற்கள் ஆக்குவதற்கு இந்திய அரசு திட்டம் போட்டு செயற்படுத்தினர். http://www.languageinindia.com/march2001/technicalterms.html

ஆரம்பத்தில் தமிழும் அதை ஏற்றுக்கொண்டது போலதான் தெரிகின்றது. இன்றும் ஈழத்தில் இதன் எச்சங்கள் இருக்கின்றது.

பின்னர் தமிழ் வேர்ச் சொற்களில் இருந்து கலைச்சொற் உருவாக்கம் வேகம் கொண்டது. விஞ்ஞானம் அறிவியல் ஆனது. ரசாயனம் வேதியியல் ஆனது.

பிற மொழிகள் மீளவில்லை என்று நினைக்கின்றேன்.

த.வி.யிலும் இது ஒரு சிக்கலான விடயமே. இங்கு நாம் இலங்கை உச்சரிப்பும் தமிழக உச்சரிப்பும் தமிழ் பொது நடைக்கு விதிக்கும் தடைகளை நேரடிகாக எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. இலகுவான தீர்வுகள் இன்னும் இல்லை. புரிந்துணர்வே இருக்கின்றது.

செந்தமிழ் ஒரு தரப்படுத்தப்பட்ட பேச்சு மொழி என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது நன்று. பேச்சு தமிழில் ஒரு சீர்தரம் வேண்டும், அதை அனைத்து தமிழர்கள் அறிய வேண்டும். ஊடகங்கள் அதை பயன்படுத்த வேண்டும்.

இலக்கியத்தில் நாம் ஏற்ற வாறு ஈழத் தமிழையும், சென்னைத் தமிழையும், தலித் தமிழையும் பயன்படுத்தலாம். உணர்ச்சி வேகம், ஆழம் வெளிப்படுத்த இவை உதவும். ஆனால் எழுத்து தமிழில் ஒரு பொதுத் தமிழ் நடை இருக்க வேண்டும்.

தமிழில் வேர்ச் சொற்கள் பற்றியும், எவை நல்ல தமிழ் சொற்கள் என்று கண்டறியும் முறை பற்றியும் நீங்கள் எழுத வேண்டும். இது த.வி.விற்கு மிகவும் உதவும்.

மொழி, உயிரினங்கள், அலகுகள் என்று எல்லாவற்றையும் வகைப்படுத்தும் முறைகளையும் கண்ணைமூடிக்கொண்டு நாம் ஏற்பதும் அவ்வளவு நல்லதல்ல. இருப்பினும் இதற்கு அறிவியல் அடிப்படையில் இருக்குபோது இசைந்து போவதே நன்று. அவற்றின் தமிழ்ப்படுத்தல் பற்றி உங்கள் கருத்தறியவும் ஆவல்.

தமிழக பாட நூற்களில் எந்த அகராதியை அடிப்படையாக வைத்து சொற்களை பயன்படுதுகின்றார்கள். அவற்றின் பொருத்தப்பாடு பற்றியும் உங்கள் கருத்து அறிய ஆவல்.

....
ஈழமும் தமிழகமும் கலைச்சொல் சீர்தரப்படுத்தலில் இணைய வேண்டும்....


நன்றி.

வித்யாசாகரன் (vidyasakaran) said...

ஐயா,
தனித்தமிழ் பற்றிய உங்கள் இடுகைகளுக்கு உளம் நிறைந்த நன்றிகள்.
மணிப்பவள நடையிலிருந்து நாம் இவ்வளவு தூரம் வந்திருப்பதை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது. தமிழின் எதிர்கால நிலை பற்றிய ஈடுபாட்டையும், நம்பிக்கையையும் உங்கள் பதிவுகள் தொடர்ந்து தருகின்றன.
தமிழறிவும், உணர்வும் அற்றவர்களின் செயல்களைக் குறித்து என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அதிலும், அவர்களது நிலைப்பாடு தெளிவாகத் தெரிந்தபோதிலும், தமிழன்பு உடையவர்களாக அவர்கள் இடும் வேடம் சிரிப்பைத்தான் வரவழைக்கிறது.

Anonymous said...

எங்களின் மதிபிற்குரிய அய்யா,

உங்களை இப்படி நாங்கள் விளிப்பதன் பொருள் இந்த இடுக்கைகளை படிக்கும் உங்களை இதுவரையில் அறியாத அனைவருக்கும் கூட புரியும். இந்த மாதிரி 100 வார்த்தை வித்தகரை எல்லாம் மொழி ஆராட்சியாளர் அளவுக்கு விளக்கம் கொடுத்தது அதிகம் என்றும் கூட எங்களால் சொல்ல முடியவில்லை. காரணம் மறுப்பிலே சொல்லும் செய்திகளும் ஆதாரங்களும் எங்களுக்கு புதிது மட்டும் அல்லாது தமிழின் செழிப்பையும் இனிமையும் பார்த்து அதை அப்படியே பழகி. பின் மெல்ல தமிழின் இனிமையும் இளமையும் கூட்டி திசை திருப்ப முயலும் தமிழ் மாணாக்கற்களை எதிர்கொள்ள ஏதுவாய் என்றும் கூட இல்லை, என் தமிழ் இனிது, அதனினும் இனிது தழிழே என்று கர்வம் கொள்ளவும் தூண்டுகிறது. இந்த பொன்னான் வாய்ப்பினை எங்களுக்கு கொடுத்த அந்த தமிழ் மாணாக்கன் வாழ்க வளர்க. மேன் மேலும் இது போல நமக்கு நல்ல பல தெரிய மேலும் அடி எடுத்துகொடுக்குமாறு விழைகிறொம்.

அன்புடன்,
அகல்யா.

ரவிசங்கர் said...

தனித்தமிழ் தொடருக்கு மிகவும் நன்றி. பல புதிய செய்திகளை அறிய முடிந்தது

அன்பே சிவம் குமார் said...

அய்யா ஜடாயுவின் ஜெயகாந்தன் உரையையிட்ட பதிவைப் பார்த்தால் ஜடாயுப்பூனைக்குட்டி யாரென்பது வெளியிலே வந்திருக்கிறதுபோலத் தோன்றுகிறதே. அது கிடக்கட்டும். அது நமக்குத் தேவையற்ற விதயம். ஆயினும் ஜெயகாந்தன் என்பார் சில ஆண்டுகள் முன்னால் தமிழையும் சமசுகிருதத்தையும் ஒப்பிட்டுப் பேசியதை எம்மிலே எவர் மறந்திருப்பார்? வையாபுரிப்பிள்ளை, ஜெயகாந்தன் ஆகியோர் வரிசையிலே ஓரிருவர் இன்னும் சமசுகிருதத்தினைத் தழுவியே தமிழ் படர்கின்றதென்பதாகக் கருத்தாக்கம் தொடர முயற்சிக்கின்றார்கள்.

Balaji said...

மிக நல்ல தொடர்பதிவு. நக்கீறன் அவர்கள் குறிப்பிட்டது போல பிறநாட்டு அறிவியல் குறியீடுகளை தமிழில் எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி தங்கள் கருத்துக்களை பதிவுசெய்யுங்கள். மற்றபடி நூறு ஆண்டுகளில் தமிழ் உரைநடை அடைந்துள்ள மாற்றத்தை நினைவூட்டியது வியப்படையச் செய்தது. ஆங்கில வார்த்தை கலவாமல் இரண்டு வாக்கியங்கள் பேசத்தெரியாத என்னைப் போன்றவர்களுக்கு நல்ல பாடம்!

Anonymous said...

நீங்கள் இவ்வளவு எழுதியும் உங்கள் கட்டுரையின் அடிநாதம் சிலருக்குப் புரியவில்லை,
அல்லது புரியாதது போல் நடிக்கிறார்கள்.அவரவருக்கு ஒரு நிகழ்ப்பும், அரசியலும்!
அவ்வளவு தான் சொல்ல முடிகிறது.

தனித் தமிழ் என்பது ஒரு குறியீடு, போய் சேர வேண்டிய இடம், முழுமையாய் அடையப் படா விட்டாலும்
ஒன்றும் பாதகமில்லை என்று எத்தனை முறை சொன்னாலும் புரிந்து கொள்ளப் போவதில்லை பலர்.
அந்தக் குறியீட்டை முன்னிறுத்தி மொழியியலாளர் முயற்சிகள் மேற்கொள்கிறார்கள் அதைக் கண்டு
பலருக்கு குத்துகிறது!

தனித்தமிழ் மத நம்பிக்கையருக்கு சொல்க்கம் போல, பொதுவுடைமையருக்கு சமவுடைமைக் குமுகாயம் போல்
ஒரு விதயத்தை அடைய , முயற்சிகள் மேற்கொள்ள, போராட ஒரு குறியீடு அவ்வளவே!
ஒரு மொழியியலாளர் சொற்களை பரிந்துரைக்காது, ஆராய்ச்சியுண்மைகளை எடுத்துரைக்காது, நம் மொழிநடையைத்
திருத்தாது வேறுயார் அதைச் செய்வது? மொழி நமக்கு பா புனைய, கட்டுரை வரைய அவ்வளவே, மொழியியலாளனுக்கோ
அவன் சிந்தனை முழுதும் அவன் பணிப் பொருளான மொழியைச் சுற்றித் தானே சுழலும்,
அதில் கிடைத்த துய்ப்பை,பட்டறிவை, முடிபுகளை அவன் தன் குமுகாயத்தோடு பகிராது வேறு யாருடன் பகிர்வான்,
அவனை விட்டால் வேறு யாருக்கு அத்தகுதி உண்டு. அதில் உடன்பாடு கொண்டோர் அவன் பரிந்துரைக்கும்
சொற்களைப் பயன்படுத்துகின்றனர்.இல்லாதோர் விட்டு விடுகின்றனர். இதை விடுத்து தேவையற்று
சேற்றை வாரியிறைப்பது அவத்தமானது(ஐயா சொல்வது போல் பந்தை விட்டுப் பந்தாளியைப் பந்தாடும் செயல்)!
இப்படி யாரோ ஒருவர் பரிந்துரைத்து, யாரோ பயன்படுத்தி பரவலமாகி பொதுப்பயன்பாட்டிற்கு எவ்வளவு
சொற்கள் வந்தின்றெம்மிடையே உள்ளன.எண்ணிப்பார்க்க!

1800களில் தொட்டு 19ம்நூற்றாண்டின் இடைப்பகுதி வரை தமிழ் எப்படி எழுதப் பட்டு வந்தது திடீரென்று
மணிப்பவள நடை மாறி, இப்போது நாம் எழுதுவது போன்ற சங்கதக் கலப்புக் குறைவாக உள்ள
நடை எப்படி வந்தது,யார் அதன் காரணர், திடீரென சொடுக்கியை அமுக்க வந்துவிட்டதா போன்ற
செய்திகள் சிலருக்குத் தெரியாதா, இல்லை தெரிந்தும் தெரியாதது போல் - தம் அரசியல் காரணமாக -
பாசாங்கு பண்ணுகிறார்களா நானறியேன்.

தனித் தமிழ்வாதியரை அல்லது மாற்றுச் சொற்களிற் சொல்வதென்றால் எம்மொழியிற் புகுந்துள்ள
ஆதிக்க மொழிக் கூறுகளைக் களைய முற்படுவோரை பெருமான எதிரிகள்,சங்கத வெறுப்பாளர்,
பொதுக்கையர், பிற்போக்காளர்,தம்மைத்தாமே நக்கும் நன்றியுள்ள உயிரிகள் எனச் 'சில நிகழ்ப்புகளைக் கொண்டோர்'
வைவதும் பொரிம்படிப்பதும் வழக்கமாக நிகழும் ஒன்று(இவர்கள் காட்டாய் காட்டுவதற்கு சிலரை
வைத்திருப்பர்: செயகாந்தன்,வையாரிப்பிள்ளை வகையறா..).எல்லோரும் ஒரே மாதிரி சிந்திக்க வேண்டியதில்லை.
இவர்களை மாற்று கருத்தாளர், அல்லது தூங்குவது போல் நடிப்போர் எனக் கூறிவிடுத்து நம் பணியைப்
பார்க்க வேண்டியது தான்.ஏனெனில் இது போன்று எதிரெதிர்த் துருவங்கள் எல்லாக் கருத்தியல்களிலும்
உண்டு, இது விடாது தொன்று தொட்டு வரும் ஒரு ஆட்டம்.

இராம.கி அய்யாவின் தமிழைப் பலர் அறிவர்.அவர் தமிழ்.நுளை மடற்குழுவில் எழுதத் தொடங்கிய
காலந் தொட்டு, அகத்தியர்,சந்தவசந்தம்,தமிழுலகம்,கலைச்சொற்குழு என அவரெழுதும் ஒவ்வோர்
மடற்குழுக்களிலும் அவர் கட்டுரைகளை தேடித் தேடிப் படித்துத் தொகுத்து வருபவன் நான்.
பத்து அகவையில் நாடுவிட்டு வேற்றுமொழி மண்ணில் வேரூன்றி வீட்டில் அன்னை கொடுத்த
தமிழில் (ஊரில் ஆங்கில மிடையம்) தட்டுத் தடுமாறி எழுதப் பழகியவன்.
ஒரு காலகட்டத்தில் என் தமிழை மேம்படுத்த உதவியவை பாவாணர்,அருளி,கு.அரசேந்திரன் போன்றோர் நூல்கள்,
பின்னர் தற்செயலாய்க் கண்டுகொண்ட இராம.கி அய்யாவின்(பல நேரம் பாவாணரையே மறுத்துரைக்கும்
திடமான ஆய்வு) அருமையான எழுத்துக்கள்.தனிப்பட்ட முறையில் அவருடன் தொடர்பில்லாவிடினும்,
மோனமாக அவர் வரிப்புக்களைச் சுவைப்பவன்.அவர் போகிற போக்கில் ஒரு கட்டுரையிற் சொல்லிச் செல்லும்
செய்திகள்,உள்ளுருமங்கள் ஏராளம்.என்னை சொல்லியலில், வேர்ச்சொல் ஆராய்ச்சித் துறை ஈடுபாடு கொள்ள
வைத்தவர் அவர்.அவர் தன் கட்டுரைகளில் சங்கத வெறுப்பையோ(ஏதோ ஓர் இடுகையில் காளிதாசனின் செய்யுள் ஒன்றை காட்டியிருப்பார்,மறந்துவிட்டது!), எதேனும் அரசியலையோ முன்னிறுத்துபவரா என்பது அவர் வரிப்புகளை
நன்கறிந்தோர் அறிவர்.இங்கு வலைப்பதிவுகளில் வகைப்படுத்தப்பட்டுப் பலர் தங்களை ஒரு கோட்பாட்டின்,
கொள்கையின்,அரசியலின் நிகராளிகளாகவே காட்டி எழுதி வருகின்றனர்.
அய்யாவோ எதற்குள்ளும் வகைப்படுத்த முடியாதவராகவே இருக்கிறார்.அவரிடமிருந்து சிவனியம் விண்ணவம் என
ஆத்திகமும் வரும் , பொதுவுடைமை விளக்கமும் வரும், தமிழுணர்வு, மாந்தநேயமும் வரும்.
அவர் பண்டிதத் தமிழ் எழுதுபவரல்லர், இயல்பான வட்டார வழக்கோடு, நேரியல் நடையில், தேவைப்பட்டால்
சங்கதம்,ஆங்கிலம் எல்லாங் கலந்துங் கூட எழுதுபவர்.

புதிதாக ஒன்றும் தூய்மைப் படுத்த அவர் புறப்படவில்லை.அவர் பரிந்துரைக்கும் பல சொற்கள்
நம் வட்டார வழக்குகளில் உள்ளவை, அவற்றை அவர் பளிச்சூட்டிக் கொடுக்கும் விதமே தனி!
செந்தரப்படுத்தப்படாத பொதுத் தமிழ் நம்மிடையே இல்லாததால் இது போன்று மற்றைய வழக்குச்
சொற்களை கண்டு சொல்லவே ஒருவர் தேவை தான்!

இங்கு இதையெல்லாம் எழுத வேண்டுமென்று தோன்றியது,பதிகிறேன்!
வழக்கமாக எல்லோருக்கும் பின்னூட்டிக் கொண்டிருப்பவனல்லன், இன்று தோன்றியது,
எழுதியுள்ளேன், கொஞ்சம் நீண்டுவிட்டது...
----------------------------------------------------------------------------------------

அய்யா,
உங்கள் இடதுசாரி எக்கில் தனித்தமிழ் பற்றிய விளக்கப்பதிவுக்காகக் காத்திருக்கிறேன்.
நானும் இடதுசாரியக் கோட்பாடுகளால் ஈர்க்கப் பட்டவன் தான், என்னுள்ளும் மொழி பற்றிய விவாதங்கள்
கிடுக்கியங்கள்,கேள்விகள்,தெளிவுகள் உண்டு.அது பற்றி பின்பொரு முறை பேசிக் கொள்வோம்!

தெள்ளிகை-3-க்காக காத்திருக்கும்,
பிரதாப்

Thamizhan said...

பேரன்பு அய்யா!
நூறாண்டுகட்கு முன்னே தமிழ் எப்படி இருந்தது என்பதை அனைவர்க்கும் புரியும்படிச் சொல்லியுள்ளீர்கள்.இன்னும் விவாஹ சுப முஹூர்த்ததிலும்,அக்கிராசன்ர்,ஜலம் போஜனத்திலுமே இருக்கவேண்டும் என்பவர்கள்தாம் தமிழர்கள் மீதியெல்லாம் த்லிபான்கள் என்று பட்டங்கொடுக்கப்படும் வேதனையை அனைவரும் உணர்ந்திருப்பார்கள்.ஆம் அவர்களுடைய தலைவர் ச்த்தியமூர்த்தி சட்டமன்றத்திலே சொன்ன வார்த்தைகள்"ராம்ராஜ்யம் என்பது அவரவர் தம் ஜாதி முறைப்படியே தொழில் செய்ய வேண்டும் என்ற வருணாசர்ம தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது.திராவிடக் கவியாகிய கம்பனே இதை ஒத்துக்கொண்டிருக்கிறார்.இது பற்றிய வடமொழி இலக்கியத்தைத் தமிழில் மொழி பெயர்த்துமிருக்கிறார்.ராம்ராஜ்யம் ஏற்பட வேண்டுமானல் அனைவரும் ச்மசுகிருதம் படித்தே தீரவேண்டும்.
என் கைக்குச் சர்வாதிகாரம் வந்தால்,அதாவது நான் சர்வாதிகாரியானால் இந்தியர்களை இந்தியுடன் சமசுகிருதத்தையும் கட்டாயப் பாடமாகப் படிக்கச் செய்வேன்.அரசு அலுவலர்கள் அத்துனை பேரும் ச்ம்சுகிருதம் படித்திருக்க வேண்டும் என்கிற நிபந்தனையை உடனே ஏற்படுத்தி விடுவேன்".
இன்று எத்துனையோ கோடிகளை செலவிடும் சமசுகிருத வெறியர்களின் எண்ணமும் அதேதானே!
அப்புறம் என்ன பெரிய தமிழன்பர்கள் போல நடிப்பு?சிதம்பரம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறதா?நடராசப் பெருமான் உங்களிடம் தமிழ் வேண்டாம் என்று சொல்லிவிட்டாரா?
சமசுகிருதம் செத்துவிட்டது தமிழ் வாழ்வதா?தமிழை சம்சுகிரிதத்தால் கொன்றுவிட்டோம் என்ற வேளையிலே இந்தத் தனித் தமிழ் பயல்கள் வந்துவிட்டார்களே என்ற வெறுப்புத்தானே?
ஏன் மறைத்து மொழுகுகிறீர்கள்?

Madhu said...

Search in தமிழ் http://www.yanthram.com/ta/