Tuesday, February 13, 2007

தெள்ளிகை - 1

Open source teaching பற்றிய ஒரு வலைதளத்தைச் சுட்டி, "அதைத் தமிழில் மொழிமாற்றித் தர இயலுமா?" என்று, நண்பர் மணிவண்ணன், அவரிடம் இன்னொருவர் கேட்டதைப் புறவரித்து (forward), ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். சுற்றி வளைத்த சொற்களைப் புழங்காமல், இயல்பான தமிழ் நடையும் வழுவாமல், அந்த வலைதளத்தை மொழிபெயர்ப்பது எனக்குச் சரவலாய்த் தெரிந்தது. குறிப்பாக teaching என்ற சொல். பல நேரங்களில், கல்வி, படிப்பு, சொல்லிக் கொடுத்தல் போன்ற சொற்களை வைத்தே teacher, teaching, taught என்ற ஆங்கிலச் சொற்களுக்கு இணையாய் தமிழில் நாம் ஒப்பேற்றி விடுகிறோம். ஒருமுறையாவது, "what is teaching?" என்பதற்கு நேரடியாய்ப் பலரும் விடை சொல்லுவதில்லை.

Teacher என்பதற்கு நாம் பயன்படுத்தும் ஆசிரியர் என்ற சொல்லை, "அறிவில், படிப்பில் பெரியவர், எனவே ஆசிரியர்" என்றுதான் பொருள் கொள்ள முடியும். ('ஆசு + இரியர் = குற்றங்களை இல்லாமற் செய்பவர்' என்பது சரியான விளக்கம் அல்ல.) தவிர, இது ஆச்சார்ய என்ற வடசொல்லின் தமிழ் வடிவம். இன்னும் ஆழம் போய், ஆச்சார்யாவிற்கு மூலம் பார்த்தால், ஆசான் என்ற தமிழ்ச் சொல் வந்து நிற்கும். (தமிழ்-->வடமொழி-->மீண்டும் தமிழ் என்று "மூக்கை நேரே தொடாமல், பின்னாற் சுற்றித் தொடுவது" பல தமிழ்ச்சொற்களில் நடந்திருக்கிறது. பொதுவாய், வடமொழித் தாக்கம் அறியாமல், நல்ல தமிழ்ச் சொற்களை மீட்க முடியாது.)

ஆசான் என்ற தமிழ்ச்சொல் சேரலத்திலும், குமரித் தமிழிலும் "படிப்பு, கலை, ஆயுதம், கருவி" எனப் பல துறைகளில் வெகுவாய்ப் புழங்கும். மற்ற வட்டாரங்களில் இந்தச் சொல் மறைந்தே போய் விட்டது. "அது எப்படி ஆசான்?" என்று கேட்டால், அய்யன்>ஆயன் என்ற தமிழ்த் திரிவைத் தான் சுட்ட வேண்டும். ஆயம் என்பது கூட்டம். ஆயன், ஆதன் என்பவை பெரியவன் அல்லது தலைவன் என்ற பொருளைக் கொண்டவை. பழைய சேர அரசர்களின் தனிப் பெயர்கள் ஆதன் என்று முடிவதும் கூடத் தலைவன் என்ற பொருளைக் கருதியே ஆகும். ஆதன்>ஆசன்>ஆசான் என்று கூட 'ஆசான்' எழுந்த முறையைச் சொல்லலாம்.

அய்யா என்ற நடைமுறைச் சொல்லையும் பெரியவர், தலைவர் என்ற பொருளில் தான் நாம் பயிலுகிறோம். (உபாத்ய என்ற வடசொற் பாடம் உப ஆத்ய என்று பிரியும்; அதிலும் ஆதன்>ஆத்யன்>ஆத்ய என்று அமையும் திரிவை ஓர்ந்து பார்க்க முடியும். உப ஆத்யா>உபாத்யா>உபாத்தியர்>வாத்தியார் என்ற முறையில் மீண்டும் தமிழில் திரித்துக் கடன் வாங்கி நிற்பது இன்னொரு கதை.) ஆசானுக்கு மாற்றான குரு, குரவர், குரிசில் போன்ற சொற்களும் கூடப் பெரியவர், தலைவர் என்ற பொருளிலேயே அமைகின்றன. [போதகர் என்ற இன்னொரு சொல்லைப் பற்றிக் கீழே பார்ப்போம்.]

அய்யன், அத்தன், அந்தன், அந்தை, அச்சன் என்ற தந்தைச் சொற்களும், ஆத்தாள், அய்யை, ஆயாள், ஆச்சி, அத்தை என்னும் பெண்பாற் சொற்களும் கூட பெரியவர், தலைவர் என்ற பொதுப் பொருளைத் (generic meaning) தான் காட்டுகின்றன. அச்சொற்களின் விதுமைப் பொருள்கள் (specific meanings) பேச்சு வழக்கில் வந்தவையாகும். "அன்னை, தந்தை, குரு, தெய்வம்" என்னும் நால்வரையும் தமிழ் மரபின் படி பெரியவர், தலைவர் என்ற பொருளில் தான் இவை போன்ற சொற்களால் அழைக்கிறோம். [கத்தோலிக்கத் துறவியைக் கூட சேரலத்தில் அச்சன் என்று தான் பெரும்பாலும் அழைக்கிறார்கள். ஆனால், இன்றையத் தமிழ்க் கத்தோலிக்கரோ, துறவியை அப்பன்/அத்தன் என்று சொல்லத் தயங்கித் father என்றே பெரும்பாலும் அழைக்கிறார்கள். தமிழைப் பழகுவது தமிழருக்குத் தான் கடிதாய் இருக்கிறது போலும். :-)]

அந்தணர் என்ற சொல் கூடத் தமிழில் தவறாகவே புரிந்து கொள்ளப் படுகிறது. அந்தன் என்ற சொல் மேலும் ஒரு 'அன்'னைப் பெற்று, நடுவில் வரும் னகரத்தைத் ணகரமாய்த் திரித்து, அந்தணன் என்று உருக்கொண்டு, பெரியவன் என்ற பொருளைக் காட்டும். (இதை, அம் + தணன் என்று பிரித்து, விந்தையான முறையில் விளக்கம் சொல்லுவது சரியல்ல.) பெருமானர், அந்தணர், அய்யர், அய்யன்கார் ஆகிய எல்லாச் சொற்களும் தொடக்கத்தில் சாதி குறிக்காமல், "பெரியவர்" என்ற பொதுமைப் பொருளைத் தான் உணர்த்தின. "அந்தணர் என்போர் அறவோர்" என்ற குறள் வரி கூடப் பொதுப் படச் சொன்னது தான். "ஞான நிலை அடைந்தவரே பெருமானர், பெருமானர் என்ற சொல்லைப் பிறப்பை வைத்துக் கையாளக் கூடாது," என்று கோதம புத்தரும் தம்ம பதத்தில் சொல்லுவார்; "யார் பெருமானன்?" என்று அதிலே மிகத் தெளிவாக வரையறை காட்டிச் சொல்லுவார்.

பொதுவாக, வெளிரிய நிறம் குறித்து எழுந்த சொல்லான பால்ப்பார்>பார்ப்பார் என்ற விதப்புச் சொல்லையும், அந்தணர் என்ற பொதுமைச் சொல்லையும் நாம் வேறுபடுத்திப் பார்க்கத் தெரிய வேண்டும். "பார்ப்பனர் என்பவர் அந்தணராய் இருக்கலாம்; அதே பொழுது, எல்லா அந்தணரும் பார்ப்பனர் அல்லர்" என்ற கருத்து சங்க இலக்கியத்தை ஆழமாய்ப் படித்தால் புலப்படும். பின்னாளில் அனைத்தையும் சாதி மயமாய் ஆக்கிப் பொதுமைச் சொல்லுக்கு விதப்புப் பொருளைத் தொடர்புறுத்திச் சிவனையே சிவ பெருமான் என்றும், அதே பெயரைச் சற்று திரித்து சு ப்ரம்மண்யன் என்று முருகனைக் குறித்தும் பெயர் எழுந்த கதை விந்தையானது. (சிவ>சு, சு என்று தொடங்கும் வடமொழிச் சாயலுள்ள சொற்கள் பலவும் சிவ என்ற நல்ல தமிழ் முன்னொட்டில் தொடங்கியவை தான்; ஆழப் பார்த்தால் புரியும். பெருமான்>ப்ரம்மண்யன்).

தந்தை, தாத்தன், ஊர்த் தலைவன். கணங்களின் தலைவன், அகவை கூடியவன், கல்வியில் பெரியவன் எனப் பல்வேறு பொருள்களைச் சுட்டும் சொற்கள் எல்லாம் உயர்ச்சிப் பொருள் கொண்ட ஐ என்னும் வேரில் கிளைத்தவையே. "ஐ வியப்பாகும்" என்பார் தொல்காப்பியர். வியப்பு என்பது இங்கே awe என்றே பொருளில் ஆளப்படுகிறது. நம்மிலும் பெரியவரை, நாம் வியந்து அய்யா என்று அழைக்கிறோம். ஐ பற்றித் தொடர்ந்து எழுதினால் பெருகிக் போகும். [ஆர்ய என்னும் வட சொல்லில் இருந்தே ஐ கிளைத்தது என்னும் வல்வழக்குகளைத் தள்ளி வைத்து மேலே நகருவோம்.]

ஆசானுக்கு எதிராய்ச் சொல்லப்படும் மாணவன்/மாணாக்கன் என்ற சொற்களும் கூட teaching பற்றி எழாமல், மாந்த அளவு பற்றியே கிளைத்தவையாகும். மாணவன் என்பவன் சிறுவன்; மாணாக்கன் சிறுத்தவன்.

"மாணிக் குறளனே தாலேலோ" என்றும் (நாலாயிரப் பனுவல் 44), "மாவலி வேள்வியில் மாணுருவாய்ச் சென்று" என்றும் (நாலாயிரப் பனுவல் 219), மாணாகி வையம் அளந்ததுவும்" என்றும் (நாலாயிரப் பனுவல் 8:10:8)

என்று பெரிய திருமொழி சொல்லும். இங்கே மாணன் என்பவன் குறளன், குட்டையானவன், சிறுவன். அதன் நீட்சியான மாணவனும் சிறுவன் தான். மாற்றுச் சொற்களான பையன், பிள்ளை ஆகியவையும் தமிழில் சிறுமைப் பொருளையே குறிக்கின்றன. பிள்ளைக்கு நிகரான pupil என்ற ஆங்கிலச் சொல்லும் கூட இலத்தீன் வழியே சிறுமையே குறிக்கும். மாணின் தொடர்பான மணி என்ற சொல்லிற்கும் கூடச் சிறுமைப் பொருள் உண்டு. மணிக் கயிறு, மணிக் காடை, மணிக் குடல், மணித் தக்காளி, மணிச் சம்பா, மணிச் சுறா, மணிப் பயறு, மணிப் புறா, மணிக் கட்டு போன்றவற்றை பார்த்தால் மணியின் சிறுமைப் பொருள் புரியும்.

ஆக நாம் பயன்படுத்தும் ஆசான், மாணவன் என்னும் இரண்டு வகைச் சொற்களும், teaching என்ற தொழிலோடு தொடர்பு காட்டாமல், பெரியவன், சின்னவன் என்ற பொருட்பாடுகளிலேயே அமைந்து விடுகின்றன.

சரி, teaching என்பதைக் கல்வி என்று சொல்லலாமே? - என்று யாரோ ஒரு நண்பர் அங்கு கேள்வி எழுப்புகிறார். நான் அறிந்தவரை அப்படிச் சொல்லமுடியாது என்பதே என் மறுமொழி. நம்மில் பலரும் இக் காலத் தமிழில், துல்லியமான சொற்களைப் புழங்குவதை விட்டு, இருப்பதை வைத்துப் பூசி மெழுகிக் கும்மியடிப்பதையே ஒரு கலையாகத் தமிழில் ஆக்கிக் கொண்டிருக்கிறோம். இதன் விளைவாகத் தான் கதை, கவிதை, துணுக்கு, திரைப்படம் போன்ற கலை எழுத்துக்களுக்கு மட்டுமே தமிழை வைத்துக் கொண்டு மற்ற எல்லாவற்றிற்கும், குறிப்பாகத் துறை சார்ந்தவற்றிற்கு, ஆங்கிலம் பயன்படுத்தும் போக்கு நம்மிடம் அதிகப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சிலர் வடசொல் கலந்து எழுதிவிட்டு "அதுதான் சிறந்த நடை, நல்லதமிழ் நடை ஒரு 'முயூசிய நடை' " என்று தலைகீழாய் வவ்விக் கொண்டு இருப்பார்கள். (என்ன சொல்லுவது? ;-) மூயூசியம் என்பதற்குத் தமிழ்ச் சொல் அவருக்குத் தெரியவில்லை; மூதையம் என்ற தமிழ்ச்சொல் நினைவிற்கு வருமோ?)துல்லியச் சொற்களைப் புழங்காததனால் தான், இப்படி நடுநடுவே வடசொற்களையும், ஆங்கிலச் சொற்களையும் பெய்து, ஒரு கலவை மொழியை நாம் உருவாக்கிக் கொண்டு இருக்கிறோம்.

ஏதொரு தமிழ்ச்சொல்லும், அடித்து வைத்தாற் போல, வரையறை செய்தாற் போல் "இதற்கு இது தான்" என்று தெளிவாக இருக்க வேண்டாமோ? பலசொல்-ஒருபொருள், அல்லது ஒருசொல்-பலபொருள் போன்றவை இருக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. எந்த ஒரு பொருளுக்கும் ஒரு சொல்லாவது நம் மொழியில் விதப்பாக இருக்க வேண்டும் என்கிறேன். அப்பொழுது தான் தமிழ்மொழி இன்றையத் தேவைக்கு உகந்தாற் போல் புத்தாக்கம் பெறும். நூறாண்டு கழிந்தாலும் அது நிலைக்கும்; "நம் பிறங்கடைகள் (successors) இனிக் காப்பாற்றுவார்கள்" என்ற நிறைவில் நாம் போகலாம்.

சரி, teaching -ற்கு வருவோம்.

கல்லுதல் என்பது ஓசையெழுப்புவது. கல்+தல் = கற்றல் என்பதும் கூட ஓசையெழுப்புதல் தான். கல்வித்தல்/கற்பித்தல் என்பது கற்றல்/கல்லுதலின் பிறவினை; அதாவது, ஓசையை எழவைத்தல். அந்தக் காலத் திண்ணைப் பள்ளிகளிலும், இந்தக் கால இசுலாமியர் மதரசாப் பள்ளிகளிலும், சத்தம் போட்டே பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள்; அல்லது கற்பிக்கிறார்கள். அது ஒருவகை மரபு. (என் அகவையில் உள்ள பலரும் நாட்டுப் புறங்களில் கீழே வருவது போலத் தான் படித்தோம்; கற்பிக்கப் பட்டோ ம்.)

"ஆ, ஆவன்னா, ஈனா, ஈயன்னா,
ஓரோண் ஒண்ணு; ஈரோண் ரெண்டு;..... எண்ணிரண்டு பதினாறு......
அறஞ்செய விரும்பு...... .......
பிச்சை புகினும் கற்கை நன்றே"

என்ற வகையில் அது போய்க்கொண்டு இருக்கும். (திண்ணைப் பள்ளிக் கூடங்கள் என்பவை இன்று காணாது போய்விட்டன. எல்லோரும் மக்காலே வழிமுறைக்கு வந்துவிட்டோ ம்.) சத்தம் போடாமல் படிக்கும் கலையை பல நாட்கள் கழித்துத்தான் நாம் மரபுவழி சொல்லிக் கொடுக்கிறோம். "சத்தம் போடாத கல்வி" என்ற சொற்றொடர் கூடத் தமிழில் ஒரு முரண்தொடை தான்.

இருப்பினும் இன்றைக்குக் கல்வி என்ற சொல்லின் பொருட்பாடு நீண்டு விட்டது. கிட்டத் தட்ட education என்பதற்கு இணையாகவே அந்தச் சொல்லைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதே நேரத்தில், education என்பதற்கு ஆங்கில அகரமுதலிகளில் கொடுத்துள்ள சொற்பொருளோ சற்றே வேறுபடும்.

educate:

1447, from L. educatus, pp. of educare "bring up, rear, educate," which is related to educere "bring out," from ex- "out" + ducere "to lead" (see duke). Meaning "provide schooling" is first attested 1588 in Shakespeare. Educationese "the jargon of school administrators" is from 1966; educrat first attested 1968, usually pejorative, second element from bureaucrat (q.v.). Educable is from 1845. Educated guess first attested 1954.

இங்கே அறிவூட்டம், அறிவுயர்த்தம் அல்லது அறிவெழுச்சியே education என்று சொல்லப் படுகிறது; சுருங்கச் சொன்னால், to educate somebody is to make him knowledgeable. ஒருவனை ஏதோ ஒன்றை அறியச் செய்தலே education என்று ஆகிவிடுகிறது.

education = கல்வி, அறிவூட்டம்educator = கற்பிப்பவர் (இந்தச் சொல்லைப் பயனாக்குபவர் இப்பொழுது அரிது; பெரும்பாலும் கல்வியாளர் என்றே சொல்கிறார்கள்), அறிவூட்டுநர்

"சரி, கல்வியை விட்டுவிடலாம், teaching- என்பதைச் சொல்லிக் கொடுப்பது என்று சொல்லலாமா?" என்று கேட்டால், அங்கேயும் ஒரு டொக்குப் போட வேண்டியிருக்கிறது.

அன்புடன்,
இராம.கி.

10 comments:

Anonymous said...

ஐயா, "Library" என்ற ஆங்கில சொல்லுக்கு தமிழ் பதம் என்ன? நூலகம் என்றால் பொத்தகங்கள் இருக்கும் இடத்தையே குறிக்கிறது, ஆனால் "Library" என்னும் பதம் "Book Library", "Video Library", "Document Library" போன்ற பலவற்றை குறிக்கிறது. உங்கள் பதிலை விரைவில் எதிர்பார்க்கிறேன், நன்றி.

Suresh said...

தமிழினத் துரோகிகள் உங்கள் பணிகளை தூற்றும் நேரத்தில் என் வாழ்த்தை இங்கே பதிவு செய்வதைக் கடமையாகக் கருதுகிறேன்.
வாழ்க தங்கள் பணி.

-
சுரேஷ்

Anonymous said...

// உபாத்ய என்ற வடசொற் பாடம் உப ஆத்ய//

அய்யா இது சரியா?

இது சரியா?

உப அத்யாய, அத்யாயி என்றால் மாணாக்கன். கூடவே இருந்து ஓதுவிப்பவர் உபாத்யாயர். இந்த சொல்லில் ஆய-> ஆத்ய திரிபு இருப்பதாக தெரியவில்லை

தெளிவித்தருளவும்.

Lazy-sOmberi said...

what is the Tamil for prize, gift?

Which define the Tamil sangams better? The word 'Sangam' or 'Kazagam?'

What is the Tamil for Automatic Weapon? Thaaniyangi? How would you call Automatic Machine Gun? How about Propeller?

Can you give the Tamil names for the Sathurangam game parts?

How should we call the game 'Checker?'

'Enthiram' did it come form the word 'Inthiram?'

Does Enthiram best define 'machine?'

What is the Tamil for 'Tyre' and 'Wheel?' I heard the word 'sillu' isn't Tamil.

nanRi, nanparaE

Anonymous said...

நன்றி ஆசான் இராம. கி.

மாணவன் ஈசன் :)

வெற்றி said...

அன்பின் இராம.கி ஐயா,
பதிவுக்கு மிக்க நன்றி. அறிந்திராத பல தகவல்களை அறியக்கூடியதாக இருந்தது.

சில ஐயங்கள். ஆட்சேபனை இல்லையெனின் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது தெளிவு படுத்துவீர்கள் என நம்புகிறேன்.

/* எனக்குச் சரவலாய்த் தெரிந்தது */

சரவல் = ??

சரவல் = கடினம்?

/* சேரலத்திலும் */

சேரலம் = ??

சேரலம் = முந்தி சேர நாடாக இருந்த தற்போதைய கேரளம்?

/* மாற்றுச் சொற்களான பையன், */

ஐயா, அறிய வேணும் எனும் ஆவலில் கேட்கிறேன். தப்பாக எண்ணாதீர்கள். 'பையன்' எனும் சொல் வட்டாரத் தமிழ்ச் சொல்லா அல்லது தமிழகம் எங்கும் பரவலாகப் புழங்கப்படும் சொல்லா? ஏன் கேட்கிறேன் என்றால் இந்தப் பையன் எனும் சொல் ஈழத்தில் புழங்குவதாக நான் அறிந்திருக்கவில்லை.

மீண்டும் நன்றிகள் ஐயா.

மிது said...

நண்பரே 'teaching' என்பதைப் படிப்பித்தல் என்று சொல்ல முடியாதா?

Anonymous said...

ஐயா lazy-somberi,


machine-எந்திரம்

கழகமே சரி....

சதுரங்கம் தமிழில் கட்டரங்கு..
அரசன், அரசி, அமைச்சர், யானை,

வீல்- சக்கரம்

தமிழநம்பி said...

ஐயா, வணக்கம்.
தனித்தமிழ் குறித்த உங்கள் கட்டுரை படித்திருக்கிறேன். பாரதியின் எழுத்தை வினட கூறப்பயன்படுத்திய உத்தி சிறப்பு.நானும் அதைப்பயன்படுத்திக்கொண்டிருக்கின்றேன். நன்றி.
அம்+தண்+அன்=அழகும் குளிர்ச்சியும் உடையவன் என்றும், சு+ப்ராமண்யன்= பிராமணனுக்கு நல்லவன்= பிராமண அடிமை என்றவாறு மொழி ஆய்வர் கருத்துக்களைப்படித்திருக்கின்றேன்.
பாவாணர் கருத்துக்களை ஏற்பீர்களா? -அன்பன், தமிழநம்பி.

thaamarai chelvan said...

அருமை ஐயா