என்னுடைய தெள்ளிகை - 2 இடுகைக்கு கல்வெட்டு ஆய்வாளர் திரு.இராமச்சந்திரன் பின்னூட்டியிருந்தார். அதன் மறுமொழி இங்கு தனிப்பதிவாகிறது: [சட்டென்று இதை எழுத முடியவில்லை. என்னுடைய அலுவலுக்கு நடுவில், இரவு விழித்திருந்து, கொஞ்சம் சரிபார்த்து, மூன்று நான்கு வரைவுகளுக்குப் பின்னால், இதைப் பதிவிட வேண்டியதாயிற்று. அதற்குள் சில விடலைக் காவிக் குஞ்சுகளுக்குப் பொறுக்க வில்லை போலும்; வழக்கம் போல, சேற்றை அள்ளித் தெளிக்கத் தொடங்கிவிட்டன. மருமகள் என்ன சொல்லப் போகிறாள் என்று மாமியார் காத்திருப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறேன்; ஆனாலும் இப்படியா? இவர்களின் லொள்ளு அளவுக்கு மீறுகிறது என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. இவர்களுக்கு விடை சொல்ல மட்டுமே, நான் வலைப்பதிவு வைத்திருக்கிறேனா, என்ன? ;-)]
--------------------------
அன்பிற்குரிய திரு. எஸ். இராமச்சந்திரன்,
"நீங்கள் சமஸ்கிருதத்தில் என்ன படித்திருக்கிறீர்கள்? உங்களுக்கு சமஸ்கிருதத்தில் புலமை அவ்வளவாக இல்லை. நீங்கள் அந்த மொழியை ஓரளவு நன்றாகக் கற்றுக் கொண்டால் இத்தகைய முயற்சிகளில் பிழைகள் வருவதைத் தவிர்க்கலாம். இல்லையென்றால் கொஞ்சம் சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் கூட உங்கள் முயற்சிகளை எள்ளி நகையாட வாய்ப்புள்ளது." என்று எழுதியிருந்தீர்கள்.
உங்களைப்போல் நானும் சங்கதப் பண்டிதன் அல்லன்; பேசத் தெரியாது. ஆனால் சங்கதச் சொல்லறிவு ஓரளவு பெற்றவன். என்னுடைய பிழைகளை, அறிந்தவர் சொன்னால், திருத்திக் கொண்டு தான் வருகிறேன். தோளில் கைபோட்டும், வாயால் பேச வைத்தும், "சங்கதம் தேர்ந்தவனா?" என்று நோடிப் பார்க்கின்ற காலமெல்லாம் மலையேறி விட்டது, அய்யா! என் சங்கத மொழி அறிவை, எந்த அளவு, எங்கிருந்து, எப்படிப் பெற்றேன் என்பதைத் தேர்வெழுதிச் சான்றிதழ் காட்டி நிறுவத் தேவையில்லை.
இப்படித்தான் நண்பர் ஒருவர் "எந்த peer journal-ல் நீ கட்டுரை வெளியிட்டிருக்கிறாய்? தமிழில், இந்தியவியலில் என்ன பொத்தகம் போட்டிருக்கிறாய்?" என்று கேட்பார். நீங்கள் கேட்பதும் அது போலவே இருக்கிறது. துறைக்கு உள்ளே வெளியாள் புகாமல், வரம்பிட்டு, வேலியிட்டுப் புலத்தைக் காக்கும் இந்தியப் பல்கலைச் சட்டாம் பிள்ளைகளுக்கும், புதிய சாதிப் போக்கிற்கும் (பழையதில்லை, உருவகத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்), நான் எங்கே விடை சொல்ல முடியும்? :-)
மும் மூன்று புள்ளிகளாய், 3 அடுக்கில் 9 புள்ளிகளை வைத்து, கையெடுக்காமல், 4 நேர்கோடுகளால் சேர்க்கச் சொல்லி மானகை (management) வகுப்புக்களில் ஒரு புதிர் போடுவார்கள்; அதற்கு விடை காணும் போது தான், "மரபுச் சிந்தனை என்பது நம்மை அறியாமலேயே கட்டிப் போடுவதையும், அந்த மரபு வேலியை உடைத்தால் தான் புதுப் பரிமானங்கள் புரியும், புது இயன்மைகள் (possibilities) தெரியும்", என்பதையும் அறிந்தேன். மொழியாய்வும் கூட அப்படித்தான். கிளிப்பிள்ளை போல், எல்லாவற்றிற்கும் "பாணினி சொன்னான், தாது பாடம் சொன்னது" என்பதும், "தொல்காப்பியன் சொன்னான், நச்சினார்க்கினியன் உரை செய்தான்", என்பதும் நெடுந்தொலைவு நம்மை எடுத்துச் செல்லாது என்பது என் புரிதல்.
தெள்ளிகை பற்றிய என் இடுகை இன்னும் முடியாதது. [இடையில், தனித்தமிழ் பற்றி ஒரு தொடர் இடுகை இட வேண்டிய கட்டாயத்தில், எடுத்த வேலை பாதியானது.] அதில் ஹோத்ரிக்கும் ஓதலுக்கும் இணை சொன்னது ஆழ்ந்து ஓர்ந்து சொன்னது தான். இணை என்றதைக் கூர்ந்து கவனியுங்கள்; "இதிலிருந்து அதா, அதிலிருந்து இதா" என்று நான் சொல்லவில்லை. அப்படிச் சொல்ல இன்னும் ஆய வேண்டும். (இந்தப் பதிவுலக அரசியலில் "தமிழ் தான் எல்லா மொழிகளுக்கும் அப்பத்தா" என்று நான் சொன்னதாய் ஒருசில பெயரிலார்கள் (வித விதமாய்க் கற்பனைப் பெயர்களில் வருபவர்களும்) வரிப்பிளந்து அருத்தம் பண்ணி எழுதியதைப் படித்துச் சிரித்தேன். பாவம், விளங்காதவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களுடைய காவி நிகழ்ப்புகளைத் தொடர்ந்து நடத்துவார்கள். :-))
"crackpot theory" என்ற தங்கள் சொற்றொடரைப் படித்தும் கூடச் சிரித்துக் கொண்டேன். எவ்வளவு எளிதில் இதுபோன்ற வாக்கியங்கள் வந்து விடுகின்றன? குறைந்தது, மோனியர்-வில்லியம்சையும், பாணினியையும், தாதுபாடத்தையும், பர்ரோ-எமெனோவையும் கூடப் பாராமலா, இது போன்ற கருதுகோளை முன் வைப்பேன் என்று நினைக்கிறீர்கள்? தங்களைப் போன்ற ஓர் ஆய்வாளருக்கு இது கூடவா தெரியாது? இந்தக் காலத்தில் தான் கூகுள் சொடுக்கியைத் தட்டினால் கணக்கு வழக்கற்று, செய்திகளைக் கொட்டுகிறதே? அப்புறமும் தமிழ் ஆய்வாளர்கள் கிட்டப் பார்வையுடன் இருப்பார்களோ? இதில் என்ன வருத்தம் என்றால், எங்களைப் போன்ற ஆய்வர்களை இன்னமும் 1950, 60 நிலையிலேயே நீங்கள் வைத்துப் பார்க்கிறீர்கள், பாருங்கள், வியப்புத் தான்.
பொதுவாக, சங்கதச் சொற்களைப் பகுத்து, ஒட்டுருபுகளை வெட்டி, இனியும் பக முடியாது என்ற அளவில், அடிப் பகுதிகளைத் தேடினால், அது தாது பாடத்தின் 2200 வேர்களில் தான் வந்து நிற்கும் என்பது சங்கதம் படிக்கும் ஒவ்வொரு மொழியியல் மாணவனுக்கும் தெரியும்; எனக்கும் தெரியும்.
சந்த மொழிக்குப் பாணினியின் பங்களிப்பு பெரிது தான்; சந்தமும் சங்கதமும் நெருங்கியவையே. என்ன ஒரு சிக்கல்? பாணினி சொல்லும் முறை இந்த 2200-ஓடு நின்று விடும்; மேற்கொண்டு நகராது. அது அவன் குறையில்லை. இந்தப் பகுப்பாய்வின் விளிம்பு அதுதான். "இந்த 2200ம் திடீரென்று பிறந்தனவா? ஓர் இயல்மொழிக்குள் அப்படிப் பிறக்க முடியாதே? அவற்றின் பொருட்பாடுகள் எப்படி வந்தன? அவற்றுள் உள்ள பொருட்பாட்டு வளர்ச்சி என்ன? முதல் வேர்கள் எவை? வழி வேர்கள் எவை?" போன்ற கேள்விகளுக்கு பாணினியில் விடை கிடைக்காது. தாது பாடத்தோடு நின்று போவதால் சொல் வளர்ச்சி அறிய முடியாது.அங்கே பலுக்கத் திரிவுகள் கணக்கெடுக்கப் படுவதில்லை. (தொல்காப்பியத்திலும் கூட இது செய்யப்படுவதில்லை. பாணினியும், தொல்காப்பியமும் அவ்வம் மொழிகளின் இலக்கணங்கள்.) ஒப்பீட்டு மொழியியல், குறிப்பாக, வரலாற்று மொழியியல், இந்தத் திரிவுகளைக் கணக்கெடுத்துக் கொள்ளும்.
"ஒரு இயல் பேச்சு மொழியில், இந்த 2200 வேர்களும் ஒன்றிற்கொன்று தொடாதவையா? அன்றி வட்டாரப் பலுக்க விதப்பில் (regional pronunciation specificities; தமிழில் மகரத்திற்கு வகரம் போலி என்கிறோமே அது போல, வங்கத்தில் வகர ஒலிப்பைப் பகர ஒலிப்பாக்கிச் சொற்களை மாற்றிப் பலுக்குகிறார்களே அதுபோல) ஒருசில ஒப்புமைகள் இராதா?" என்று ஆழமாய்ப் போய், ஆகக் குறைந்த அடிவேர்களைத் தேடும் ஆய்வை, இந்தக் காலத்தில் ஒரு சிலர் செய்ய முற்படுகிறார்கள்.
அதோடு இந்த 2200 -யையும் மற்ற இந்தையிரோப்பியன் மொழிகளின் வேர்களோடும் இணைத்துப் பார்த்து, "அந்தக் குடும்ப முழுமையிலும் எவ்வளவு பொதுமை (genericity) இருக்கிறது? முது-இந்தையிரோப்பிய வேர்கள் எவ்வெவை? இந்தோ இரானியன் குடும்பத்திற்குள் எவ்வளவு பொதுமை இருக்கிறது? நாவலந்தீவினுள்ளேயே வெளிப்பட்ட விதுமைகள் (specificities) எத்தனை? திராவிடத்தில் இருந்து கடன் வாங்கப்பட்ட வேர்ச் சொற்கள் எத்தனை? முண்டா மொழிக் குடும்பத்தில் இருந்து உருவானவை எத்தனை?" - என்ற கேள்விகளும் இப்பொழுது ஆய்வு செய்யப் படுகின்றன.
இது போன்ற கேள்விகளில் நான் ஆர்வம் உள்ளவன். என் ஆர்வம் சங்கதத்தை நடுவண் வைத்துப் பார்ப்பதல்ல; தமிழை அருகே பொருத்தி வைத்துப் பார்ப்பது. நான் ஒரு நோஸ்ட்ராட்டிக் (Nostratic) சார்புப் பேர்வழி. தமிழியக் குடும்பம், இந்தையிரோப்பியத்திற்குச் சற்று விலகிய, ஆனால் அதோடு தொடர்புள்ள குடும்பம் என்றே எண்ணுபவன். இதெல்லாம் தெரியாத அல்லது புரியாத சங்கத வழிபாட்டு வலைப்பதிவர்களும், சட்டாம் பிள்ளைகளும், சில விடலைப் பிள்ளைகளும், "சங்கதத்தை குறைத்துச் சொன்னேன்" என்று வறட்டுத் தனமாக, முட்டாள் தனமாகப் புரிந்து கொள்ளும் அடிப்படைவாதிகளும், குதித்துக் கொண்டு வருகிறார்கள். என்னவென்று தெரியாமல், இந்த அரசியலுக்குள், நீங்களும் உள்புகுந்து நிற்கிறீர்கள்.
சரி, நான் சொன்ன சொல்லிணைக்கு அடுத்த பகுதியில் விளக்கம் கொடுக்கிறேன்.
அன்புடன்,
இராம.கி.
9 comments:
"இப்படித்தான் நண்பர் ஒருவர் "எந்த peer journal-ல் நீ கட்டுரை வெளியிட்டிருக்கிறாய்? தமிழில், இந்தியவியலில் என்ன பொத்தகம் போட்டிருக்கிறாய்?" என்று கேட்பார். நீங்கள் கேட்பதும் அது போலவே இருக்கிறது."
இராமகி,
நீங்கள் இங்கே பொடிவைத்துச் சொல்வது நாககணேசனைத்தானே? கணேசன் காவிக்கட்சியைச் சேர்ந்தவரில்லை. இணையம் போற்றும் மாபெரும் தமிழ் அறிஞர். இடதுகை கொடுப்பது வலதுகைக்குத் தெரியாதுபோல் பல
அறத்தொண்டுகளைச் செய்து வருபவர். மேலும் அவர் சிலரைப்போல் உங்களைக்
கண்மூடித்தனமாக எதிர்ப்பவர் இல்லை. உங்களின் சில முன்முடிபுகளை மீள்பரிசீலனை
செய்யச் சொன்னார். அதுவே உங்களுக்குப் பொறுக்கவில்லை. யூனிகோடு சர்ச்சையில்
கூட நீங்கள்தான் அவரைத் தகாதமுறையில் வம்புக்கிழுத்துத் தாக்கினீர்கள். ஆனால்
இன்று அதே யூனிகோடை வைத்துதான் நீங்கள் இங்கே கொடிகட்டிக் கொண்டிருக்கிறீர்கள். இனியாவது ஒப்பிடும்போது தராதரம் அறிந்து தராசில்
வைக்கவும்.
அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு,
ஆக என்னைச் சில காலம் அறிந்தவர் நீங்கள்; இருந்தாலும் பெயரில்லாத முகத்திற்குள் மூடிக் கொண்டு பின்னூட்டுகிறீர்கள். நல்லது.
வரிப் பிளந்து படித்துப் பொருள் கொள்ளுவது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனாலும் இப்படியா?
நான் நாக.கணேசன் என்று மேலே சொல்லவில்லை. தவிர நான் கூறிய நண்பர் காவிக் கட்சியைச் சேர்ந்தவர் என்றும் கூடச் சொல்லவில்லை. அந்த வரியைத் திருப்பிப் படியுங்கள்; உங்கள் மனம் விரும்பும் இடைச்செருகலை உள்ளே கொண்டு வந்து பொருள் கொள்ளாதீர்கள். நீங்களாகக் கருதிக் கொள்ளும் எண்ணங்களுக்கு நான் விடை சொல்ல இயலாது.
ஒருங்குறி பற்றிய என் கருத்துக்கள் இன்றும் மாறாமல் தான் இருக்கின்றன. அந்தக் கருத்துக்கள் மொழியியல் பற்றி ஏற்பட்டவை. அவை ஒரு மடற்குழுவில், பின்னால் இங்கு வலைப்பதிவில், எல்லோரும் அறியத் தான் தெரிவிக்கப் பட்டன. அதில் நண்பர் கணேசனோடு மாறுபட்டதும் கூட எல்லோரும் அறிந்தது தான். இதில் என்ன பொறுக்காமற் போவது?
பொதுவாக, உரையாடல் / வாக்குவாதம் என்பதே கருத்துக்கள் மோதுவதுதான். இதில் வம்புக்கிழுப்பது என்றெல்லாம் இல்லை. என்னுடைய நிலைபாட்டையும், நேர்மையையும் நண்பர் கணேசன் நன்றாகவே அறிவார். அதை உங்களிடம் நான் முறையிடத் தேவையில்லை. ஏதொன்றையும், தான்னோக்குப் பார்வையில் நீங்கள் பார்ப்பது போல் அவர் பார்ப்பது இல்லை என்றே நான் எண்ணுகிறேன்.
எனக்கு ஒருங்குறியைச் செயலாக்கியதில் கருத்து வேறுபாடு இருப்பதாலேயே அந்தக் குறியேற்றத்தில் நான் கட்டுரைகளோ, வலைப்பதிவுகளோ இடக்கூடாது என்பது ஒரு சிறுபிள்ளைத்தனமான உரையாட்டு. முன்னால் இருந்த ISCII, TSCII 1.6, TSCII 1.7, TAB எனப் பலவற்றிலும் தான் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். அந்த வகையில் ஒருங்குறியிலும் எழுதுகிறேன். அவ்வளவு தான். நாளைக்கு இன்னொரு குறியேற்றம் வந்தாலும், அது எழுப்பும் நுட்பச் சிக்கல் பற்றியும் நான் எழுதுவேன்; அதைப் பயன்படுத்தவும் செய்வேன், போதுமா?
எனக்கு இந்தித் திணிப்பு பிடிக்கவில்லை; அதை எதிர்த்துப் போராடியிருக்கிறேன். அதனால், நான் வடநாட்டில் போய், இந்தியிலேயே பேசக்கூடாது; தொடர்பு கொள்ளக் கூடாது என்பது போல் இருக்கிறது உங்கள் கூற்று.
நண்பர் கணேசனின் தராதரம் பற்றி நீங்கள் சொல்லி நான் அறியவேண்டியது இல்லை. நண்பர்களின் தராதரம் பற்றி பெயரில்லாதவரிடம் நான் தெரிந்து கோள்ளும் நிலைக்கு வரவில்லை.
அவரை நான் அறிவேன்; மதிக்கிறேன்.
அன்புடன்,
இராம.கி.
ஐயா, சொல்கின்றவர் சொல்லட்டும். விடை சொல்லிக்கொண்டேயிருந்தால் மாளாது. நமக்கென்று வேலை இருக்கிறது. அவைகளைப் பார்க்கலாம். நீங்கள் கொடுக்கும் தமிழமுது பருகக் காத்திருக்கிறோம்.
// என் ஆர்வம் சங்கதத்தை நடுவண் வைத்துப் பார்ப்பதல்ல; தமிழை அருகே பொருத்தி வைத்துப் பார்ப்பது. நான் ஒரு நோஸ்ட்ராட்டிக் (Nostratic) சார்புப் பேர்வழி. தமிழியக் குடும்பம், இந்தையிரோப்பியத்திற்குச் சற்று விலகிய, ஆனால் அதோடு தொடர்புள்ள குடும்பம் என்றே எண்ணுபவன். //
ஆக, நீங்கள் சமஸ்கிருத மொழியை வெறுப்பவர் அல்ல என்று ஆகிறது. தமிழும், சமஸ்கிருதமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை, எதிரிகள் அல்ல என்கிற மாதிரி சொல்லுகிறீர்கள் என்று கொள்ளலாமா?
இப்படி ஒரு தொடர்பைப் பற்றிப் பேசுவதால் ஆரிய-திராவிட இனப் பகைமைக் கோட்பாடுகளையும் நீங்கள் முழுதாக ஏற்றுக் கொள்ளவில்லை. இல்லையா?
அப்படியானால் ஆரியர், வந்தேறி என்றெல்லாம் தமிழ்மணத்தில் திட்டிக் கொண்டிருப்பவர்கள் தவறானவர்கள் தானே? தமிழில் இவ்வளவு புலமை உள்ள தாங்களே சொல்லிவிட்ட பிறகாவது அவர்கள் அடங்குவார்களா?
நல்ல வேளையாக உங்களுக்கு அரசில் மொழி சார்ந்த முடிவுகளெடுக்கும் பொறுப்புகள் ஏதுமில்லை. இருந்தால் உங்கள் தமிழ்க்கொலையால் தமிழ் வேகமாகச் செத்துவிடும். பிறகு எந்த மேனகை(management)யும் தமிழைக் காப்பாற்ற முடியாது.
அவர் எங்கே தமிழ்க்கொலை செய்தார்? தமிழ்க்கொலை செய்வது உங்களை போன்றோர்தான்.
இவரைபோல் சிலரால் தான் தமிழ் வாழ்கிறது.
சும்மா விளல் அலம்பகூடாது
Dear Dr.iraama.ki aiya.
vanakkam.
(bear with my comments in english - as i am on travel).
1) Some gang is very purposefully trying to drive wedge among good people in the net. Their intention is only to irritate you in any may ways and reduce your output.
Many know about Dr.NG a lot for more than a decade and know
the quality of the personality.
Many in the net have lived as good human beings irrespective of the differences. So, I am sure you will not worry for this.
Probably, the guy who has commented, may be expecting something from NG's right hand without the knowledge of his Left hand :-) Probably NG needs to be very careful about this guy ;-))
2)
//
இருந்தால் உங்கள் தமிழ்க்கொலையால் தமிழ் வேகமாகச் செத்துவிடும். பிறகு எந்த மேனகை(management)யும் தமிழைக் காப்பாற்ற முடியாது
//
I am glad that this.tamilan also
using your word 'mAnagai' :-)
However, I am concerned that you respond to such people's comments.
Request you to not even bother for this.
anbudan
naaga elangovan
அடையாளம் காட்டாமலும், போலிப் பெயரிலும் எல்லாம் பின்னூட்டுபவர்களுக்கு எல்லாம் உங்கள் பதிலைத் தந்து உங்கள் திறன், மதிப்பு, நேரம் ஆகியவற்றை வீண்டிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்
Thiru. Ki. Irama,
Please ignore the provoking/unintelligent anonymous comments. They are taking the valuable time away from you. I would rather learn more about Thamizh. We don't have too many Thamizh scholars like you out on the net. Please keep updating your wonderful blog.
Nanri,
Easan
Post a Comment