Thursday, February 15, 2007

தெள்ளிகை - 2

"சரி, கல்வியை விட்டுவிடலாம், teaching- என்பதைச் சொல்லிக் கொடுப்பது என்று சொல்லலாமா?" என்று கேட்டால், அங்கேயும் ஒரு டொக்குப் போட வேண்டியிருக்கிறது.

சுல்>சொல் என்ற வளர்ச்சியிலும் கூட ஒலி என்ற பொருளே உள்ளிருக்கிறது. சொல்>சல் என்ற திரிவில் வருவதும் ஒலிப்பொருள் தான். சலசலத்துப் போகும் நீரோட்டத்தைச் சலம் என்று சொல்லும் போதும் ஒலித்தற் பொருள் தான் உள்ளே நிற்கிறது. (சலம் என்பது நல்ல தமிழ்ச்சொல்; ஜலம் என்ற வடசொல்லில் இருந்து அது வந்ததாய்ப் பலரும் தலைகீழாய்ப் புரிந்து கொள்ளுகிறார்கள்; இல்லை, ஜலம் என்பது தமிழ்ச் சலத்தின் திரிவு. நம்முடையது இல்லையென்று நாம் தொலைத்தவை மிகவும் அதிகம்.) ஒலித்தற் பொருளில் சல் என்ற வேரில் இருந்து கிளைத்து வரும் இன்னொரு சொல்லான சலங்கையை இங்கே நினைவு கொள்ளுங்கள்.

சுல்>சில் என்ற திரிவில் எழுந்த சிலம்புதல், சிலைத்தல் போன்ற வினைச் சொற்கள் கூட ஒலித்தல் என்ற பொருளையே உணர்த்துகின்றன. அறுபடை வீட்டில் ஒன்றான பழமுதிர் சோலையில் ஒலித்துப் பாய்கிற ஓடையைச் சிலம்பாறு என்றே சொல்லுகிறார்கள் அல்லவா? (அதை நூபுர கங்கை என்று வடமொழியில் பெயர்த்துச் சொல்வது வேதாரண்யம் போன்ற ஒரு தவறான, முட்டாள்தனமான, மொழிபெயர்ப்பு). பெண்கள் காலணியான சிலம்பும் ஒலிப்பொருள் வழியே எழுந்த சொல் தான். முத்துச் சிலம்பிற்கும், மாணிக்கச் சிலம்பிற்கும் ஒலி வேறுபட்டு எழும். ஒன்று பாண்டியொலி, இன்னொன்று சோழவொலி, இல்லையா? :-)

"அப்படியானால், teaching என்பதற்கு மறுதலையாய் learning என்று பயன்படுத்துகிறார்களே?" என்று சொல்லி, அதற்கு அணைவாய், செருமன் சொல்லான lehren என்பதைக் காட்டினால், நான் புன்சிரித்துக் கொள்ளுவேன்; அது சரியா என்பதை கீழே உள்ள பத்தியைப் படிக்கச் சொல்லி உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

to learn:

O.E. leornian "to get knowledge, be cultivated," from P.Gmc. *liznojan (cf. O.Fris. lernia, O.H.G. lernen, Ger. lernen "to learn," Goth. lais "I know), with a base sense of "to follow or find the track," from PIE *leis- "track." Related to Ger. Gleis "track," and to O.E. laest "sole of the foot" (see last (n.)). The transitive sense (He learned me how to read), now vulgar, was acceptable from c.1200 until early 19c., from O.E. laeran "to teach" (cf. M.E. lere, Ger. lehren "to teach;" see lore), and is preserved in the adj. learned "having knowledge gained by study" (c.1340).

ஆக, முன்னால் போட்ட தடத்தில் பின்னால் போவது தான் learning. எங்கள் ஊர்ப் பக்கம் திண்ணைப் பள்ளிக்கூட ஆசான், மணலிலோ, தாளிலோ "ஆனா, ஆவன்னா....." என்று வரைவுகளை எழுதி வைத்து, அதன் மேல் நம்மையும் (தடங்களைப்) பின்பற்றி எழுதச் சொல்லுவார். (மணலில் விரல் தேய மாய்ந்து, மாய்ந்து, எழுதியிருக்கிறேன்.) "நான் எழுதுவதைப் பார்த்து அப்படியே விளம்பு" என்று ஆசான் சொல்லுவார். விளம்புதல் என்பது விளாம்புதலின் வழி வந்தது. விளாம்புதலுக்கும், விளாவுதலுக்கும் தொடர்பு உண்டு. "வெந்நீரை விளாவி விட்டாயா?" என்பது தென் தமிழகப் பேச்சு. இதில் இருக்கும் சொற்பொருள் நீட்சியைப் பாருங்கள். விளாவுதல் என்பது ஒரு ஏனத்தில் இருப்பதை அப்படியே ஒரு குச்சி வைத்துச் சுற்றிச் சுற்றிக் கலப்பது. விளாவுதல் என்பது விளாம்புதல் ஆகி முடிவில் விளம்புதல் எனவும் ஆனது. விளம்புதலை விளர்த்தல் என்றும் சொல்லுவது உண்டு. முடிவில், ஏதொன்றையும் ஆசான் சொல்ல, நாம் திருப்பிச் சொல்வது, திருப்பி எழுதுவது, திருப்பிச் செய்வது என எல்லாமே விளம்புதல் என்று ஆயிற்று. திண்ணைப் பள்ளி வழக்கின் படி,

to learn = விளம்புதல்
learning = விளம்பு

"learning disability ஒரு சிறுவனுக்கு இருக்கிறது", என்று சொன்னால், விளம்புவதில் இயலாமை இருக்கிறது என்று பொருள். நம்மூர் மரபுகளை விடாது இருந்தால், "விளம்புதலை"க் காப்பற்ற வேண்டாமோ? நம்முடைய கவனக் குறைவால், நம் மொழிநடை மொண்ணையாக இருக்க வேண்டுமா?

இனி, teaching என்ற கருத்தைச் சற்று நேரம் தொய்வு விட்டுப் பிறகு பிடிப்போம்; அந்த நேரத்திற்குள் மற்ற தொடர்புடைய சொற்களைப் பார்ப்போம்.

இந்த வரிசையில் வருவது lecture. உரத்த குரலில் பேசினான் என்று சொல்லுகிறோமே, அந்த உரத்தலின் பொருளும் ஓசை எழுப்புதலே. உரத்தது உரை = lecture. உரை என்பதை விளக்கம் என்ற பொருளிலும் நாம் பயன்படுத்துகிறோம். உரத்தலின் முந்தைய உரு உலத்தல். ஒவ்வோர் உலத்தமும் ஒரு பாடம் என்பதைத்தான், ஆங்கிலத்தில் lesson என்கிறார்கள். சங்கத் தமிழில், ஓத்து, ஓதம் என்று சொல்லுவது கூட lesson தான்; பல இலக்கிய உரையாசிரியர்கள் தங்கள் உரைகளின் ஒவ்வொரு பெரும் பகுதியையும் ஓத்து என்று சொல்லுவார்கள். அதன் வழி, lecture என்பதற்கு இணையாய், உலத்து, ஓத்து, உரை எனப் பலவாறாய்ச் சொல்லலாம்; உலத்தர், ஓதகர், உரையாளர் என்பவர் lecturer.

அழனிக்கு முன்னால் இருந்து வேள்வி மந்திரங்களைத் திரும்பத் திரும்ப ஓதுபவன் அழனியோதி (agnihotri; அழனியை வடமொழியில் அக்னி என்று சொல்லுவார்கள். ஓதி ரகரம் நுழைந்து otri ஆகும்; h என்பது உடம்படு ஒலியாய் உள்நுழைந்து நிற்கும். இதை விளக்கப் போனால், இன்னும் நாலுபேர் நான் சங்கதத்தைக் கீழிறக்கி விட்டேன் என்று வலைப்பதிவுகளில் காவிகட்டிப் பாய்ந்து வருவார்கள். அய்யா, சங்கதத்தைக் கீழிறக்குவது என் வேலையல்ல. தமிழின் ஆழத்தைக் காண்பது என் வேலை; தமிழை இந்தக் காலத்திற்குத் தகுந்தாற் போலப் புதுக்குவது என் முயற்சி. இதில் நான் வெல்லலாம்; வெல்லாமலும் போகலாம். அதனால் என்ன? என் கடன் பணி செய்து கிடப்பதே.); சிவன் கோயிலில் தேவாரத்தை ஓதுபவர் ஓதுவார். அதே போலக் கல்லூரியில் ஒரு பாடத்தை நமக்கு ஓதுபவரும் ஓதுவார் தான்.

"அய்யோ, போச்சு! என்ன இவர்? அழனியோதியையும், தேவார ஓதுவாரையும் ஒரே தட்டில் வைத்து lecturer-ஓடு இணைத்து வைத்துப் பேசுகிறார்?" என்று ஒரு சிலர் திகைத்துப் போகலாம். ஆனால், சாதி வழக்கு கூடிப் போன நம்முடைய அரை நிலவுடைமை - அரை முதலாளியக் குமுகாயத்தில், இது போன்ற சிந்தனைக் கட்டுப்பாடுகள் நம்முடைய முரண்பாடுகளைக் களையவொட்டாமல் தடுக்கின்றன. நிலவுடைமைப் போக்கில் அழனியோதி உயர்ச்சியாகவும், ஓதுவார் தாழ்ச்சியாகவும், முதலாளியப் போக்கில் இரண்டுமே தாழ்ச்சியாகவும் தோன்றி, முடிவில் விரிவுரையாளர் என்று lecturer - யை நீட்டி முழக்கிச் சொன்னால் தான் "அப்பாடா" என்று சிலர் நிறைவு கொள்ளுகிறார்கள்.

lecturer -யை, ஓதகர் என்று சொன்னால் நாம் குறைந்து விடுவோமோ, என்ன?

lesson = உலத்தம், ஓதம்
lecture = உலத்து, ஓத்து, உரை
lecturer = உலத்தர், ஓதகர், உரையாளர்

ஒதகரை ஏற்றுக் கொள்ளுவது சரவலாய் இருந்தால், குறைந்தது lecturer -யைக் குறிக்கும் விரிவுரையாளர் என்று சொல்லின் விரியென்ற முன்னொட்டையாவது வீசி எறியலாமே? உரையாளர் என்றாலே புரிந்து போகும் அல்லவா? (தொழில் நுட்பத்தில் தொழிலைத் தூக்கி எறியப் பரிந்துரைத்தது போல இதை வைத்துக் கொள்ளுங்களேன்!:-))

அடுத்தது study, student என்ற சொற்கள்.

அன்புடன்,
இராம.கி.

5 comments:

Anonymous said...

அன்புள்ள திரு. ராமகிருஷ்ணன் அவர்களே,

என் நண்பர் ஒருவர் சொல்லி நீங்கள் எழுதியிருப்பதைப் படித்தேன்.

// அழனிக்கு முன்னால் இருந்து வேள்வி மந்திரங்களைத் திரும்பத் திரும்ப ஓதுபவன் அழனியோதி (agnihotri; அழனியை வடமொழியில் அக்னி என்று சொல்லுவார்கள். ஓதி ரகரம் நுழைந்து otri ஆகும்; h என்பது உடம்படு ஒலியாய் உள்நுழைந்து நிற்கும். //

நான் சமஸ்கிருத பண்டிதன் அல்ல. ஆனால் இந்தத் தவறு மிக எளிதாக சமஸ்கிருத மாணவர்களே கண்டுபிடித்து விடக் கூடியது.

ஹ்வே, ஹூ, ஹோ - அழைத்தல் என்பதற்கான வேர்ச்சொல் வடிவங்கள். சமஸ்கிருத இலக்கணத்தில் தாது (Dhatu) ரூபம் என்று சொல்வார்கள்.
தேவதைகளை "அழைக்கும்" யாகத்தில் தொடர்புள்ள எல்லாமே இதிலிருந்து வருகிறது. “ஹோத்ரி” என்று ஒரு சொல்லை மட்டும் எடுத்துக் கொண்டு அது தமிழில் “ஓதி”யிலிருந்து வந்தது என்று சொல்வது கற்பனை கலந்த ஒரு crackpot theory !

ஹோமம், ஹவனம் - வேள்வி
ஆஹ்வானம் - வேள்வியில் "வா" என்று அழைத்தல் (ஆவாஹனம் )
ஹோத்ர், ஹோத்ரி, ஹோதா - வேள்வியில் மந்திரம் சொல்லி அழைப்பவர்
ஹவி - ஹவிசு (அவி) - வேள்வியில் இடும் பொருள்
ஹவ (வினைச் சொல்) - வேட்டல்
ஹவாமஹே - வேண்டுவோம் ("கணானாம் த்வா" என்ற கணபதி மந்திரத்தில் இந்த சொல் வருகிறது)
ஹவ்யவாஹன் - அவியை சுமப்பவன், அக்னி
ஹுதம் - வேள்வியில் எரிந்து பொசுங்கியது
ஹுதசேஷம் - வேள்வியில் எரிந்ததன் மிச்சம்
ஹுதாசனன் - எரித்துப் பொசுக்கியதை உண்பவன், அக்னி

ஹும் என்கிற துர்கா தேவியின் ஹுங்கார பீஜாட்சரமும் இதோடு தொடர்புடையது..

இந்த சொற்கள் தொடர்பான சம்ஸ்கிருத அகராதி பக்கங்கள்:
http://www.ibiblio.org/sripedia/ebooks/mw/1300/mw__1334.html
http://www.ibiblio.org/sripedia/ebooks/mw/1300/mw__1339.html
http://www.ibiblio.org/sripedia/ebooks/mw/1300/mw__1341.html

நீங்கள் சமஸ்கிருதத்தில் என்ன படித்திருக்கிறீர்கள்? உங்களுக்கு சமஸ்கிருதத்தில் புலமை அவ்வளவாக இல்லை என்று இதன்மூலம் தெரிய வருகிறது.

நீங்கள் அந்த மொழியை ஓரளவு நன்றாகக் கற்றுக் கொண்டால் இத்தகைய முயற்சிகளில் பிழைகள் வருவதைத் தவிர்க்கலாம். இல்லையென்றால் கொஞ்சம் சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் கூட உங்கள் முயற்சிகளை எள்ளி நகையாட வாய்ப்புள்ளது. ஒரு சொல்லுக்கு வேர் உண்மையிலேயே அந்த மொழியில் உள்ளதா இல்லை வேறு மொழியில் இருந்து வருகிறதா என்பதை அறிந்து சொல்வதற்கு குறிப்பிட்ட இரு மொழிகளிலும் தேர்ந்த புலமை என்பது எதிர்பார்க்கப் படும் அல்லவா? இது நியாயம் தானே?

// இதை விளக்கப் போனால், இன்னும் நாலுபேர் நான் சங்கதத்தைக் கீழிறக்கி விட்டேன் என்று வலைப்பதிவுகளில் காவிகட்டிப் பாய்ந்து வருவார்கள். அய்யா, சங்கதத்தைக் கீழிறக்குவது என் வேலையல்ல. தமிழின் ஆழத்தைக் காண்பது என் வேலை; //

சரி தான். ஆனால் சம்ஸ்கிருதச் சொல் ஒன்று எப்படி வந்தது என்று நீங்கள் விளக்க முற்படும்போது அந்த மொழியைப் பற்றிய குறைந்த பட்ச அறிவாவது இருக்க வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?

இதற்கு நேர்மையாக பதில் சொல்லவும்.

இராம.கி said...

வாங்க இராமச்சந்திரன்,

வணக்கம். அக்னிஹோத்ரி பற்றிய என் கருத்திற்கு மறுப்புச் சொல்ல வந்த உங்களுக்கு என் முகமன்கள். தங்களைச் சந்தித்து, நாட்களாயிற்று. "தமிழ்க் கணக்கில் தானக் கருத்தீடு (digit concept) எப்பொழுது எழுந்தது? கல்வெட்டுச் சான்றுண்டா?" என்ற ஆய்விற்காய், பெருமி எண்கள் (brahmi numbers) பற்றிய ஒரு கட்டுரைப் படியை, திரு. இராசகோபாலிடம் நான் வாங்க வந்த போது, தமிழகத் தொல்லியற் துறை அலுவத்தில், உங்களுடன் பேசியது உங்களுக்கும் நினைவிருக்கும் என்று எண்ணுகிறேன்.

வலையுலகில் இராம.கி என்றே நான் அறியப்படுகிறேன். அப்படியே நீங்களும் அழைக்கலாம். உங்களிடம் இருந்து பின்னூட்டை நான் எதிர்பார்க்கவில்லை. என் நேர்மையை நீங்கள் அய்யுற்றிருக்க வேண்டாம். உங்களைப் போன்ற ஆய்வாளாரைக் கூட, வலை அரசியல் மாற்றலாம் என்று வியந்து கொள்ளுகிறேன். என் மறுமொழி நீண்டதால், அதை ஒரு தனிப்பதிவுத் தொடராகவே போடுகிறேன். பார்த்துக் கொள்ளுங்கள்.

அன்புடன்,
இராம.கி.

Anonymous said...

பெருமதிப்புக்குரிய தமிழ் நுட்பியலாளர் நண்பர் இராம.கி உங்கள் விளம்புதல் மற்றும் விளாவுதல் பற்றிய கருத்தை வாசித்தபோது ஈழத்தில் ஏதனத்தில்(ஏதனம் - container; இதைத்தான் நீங்கள் 'ஏனம்' என்கிறீர்களா?) உள்ள சுடுதண்ணியைக் குச்சியால் அல்லது அகப்பைப் பிடியால் கலக்கி விடுவதைத் "துலாவுதல்" என்று நாம் அழைப்பது ஞாவகம் வந்தது.

தமிழ் நடையில் ஈழத்தில் சற்று வேறு படுகிறது. விளம்பு விளாம்புதல் போன்ற சொற்களைப் பாவிப்பதில் நான் பெருமையடைகிறேன். இருப்பினும் விளாவுதல் என்ற சொல்லிற்கு ஈடாக நான் கருதும் ஈழத்தில் இன்றும் வழக்கில் உள்ள துலாவுதல் என்ற சொல்லையும் நாம் பயன்பாட்டில் வைத்தால் நம் தமிழ்தானே செழிக்கும். மேலும் ஈழத்தவர்கள் நாவில் விளம்புதல் விளம்பு ஏற மறுத்தாலும் அவர்களிற்குப் பழகிப்போன துலாவுதல் சொல்லுடன் தொடர்புபட்ட சொற்கள் நன்கு ஏறுமே.

துலாவுதல் போல் மட்டக்களப்பு, அம்பாறை, திரிகோணமலை ஈழப் பகுதியில் வேறு சொற்கள் பாவிக்கின்றனரா தெரியவில்லை. சேரத் தமிழர்கள் எவற்றைப் பாவிக்கின்றார்கள் என்று அறியவும் ஆவலுடன் உள்ளது.

இதற்கு உங்கள் பின்னூட்டை எதிர்பார்க்கிறேன்.

நன்றி

ஆதவா said...

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகளை நிறைய படித்திருந்தாலும் (எல்லாம் மொக்க) இதுபோன்று அர்த்தம் பொதிந்த ஆழமான கட்டுரையை இப்பொதுதான் பார்க்கிறேன்... அத்தனை செறிவு மிகுந்திருக்கு.

எனக்குத் தேவையானது இங்க கிடைக்கும்னு ஒரு நம்பிக்கை எனக்கு உண்டு.

உங்கள் தமிழ் பணிக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் (வயதுக்கு மீறினாலும்...)

திண்டுக்கல் தனபாலன் said...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை…

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_6.html) சென்று பார்க்கவும்... நன்றி...