Wednesday, February 21, 2007

தனித் தமிழ் - 1

அண்மையில் இந்தியக் குடியரசுத் தலைவரின் சங்கதம் பற்றிய உரையை திரு.ஜடாயு தன்னுடைய வலைப்பதிவில் கொடுத்திருந்தார். அதில் எழுந்த பின்னூட்டுக்களுக்கு மறுமொழி சொல்லப் புகுந்தவர் தொடர்பே இல்லாத என்னை வலுக் கட்டாயமாய்ப் பெயர் சொல்லி இழுத்தார். இப்படித்தான் கலைஞர் ஏதோவொரு காசோலையில் தமிழில் அன்றி ஆங்கிலத்தில் கையெழுத்திட்டார் என்று ஹரன் பிரசன்னா போட்ட இடுகையில், பின்னூட்டிய இன்னொருவரும் தொடர்பில்லாமல் என் பெயரை இழுத்திருந்தார். ஆக, இவர்களுக்கெல்லாம் என்னை வம்பிழுக்க வேண்டியிருக்கிறது; ஒரு சிலரின் காவி நிகழ்ப்புக்களுக்கு என் இடுகைகள் முட்களாய்க் குத்துகின்றன போலும்.

பொதுவாய், தன்மயமாகத், தூற்றலை வாரி இறைக்கும் நாலாந்தர முன்னிகைகளுக்கு நான் மறுமொழி தருவதில்லை. [பட்டறிவும், பொறுமையும் பெறாத இளம் அகவையில் ஒருவேளை தேர்ந்தெடுத்த சொற்களை எடுத்து மறுமொழியாய் இவர்கள்மேல் வாரி இறைத்திருப்பேன். இப்பொழுது பட்டறிவும் பொறுமையும், நேரமின்மையும் ஓரளவு வந்து சேர்ந்ததால், அதைச் செய்யாது விடுக்கிறேன்.] அதே பொழுது, முழுப்பூசனியைச் சோற்றில் மறைப்பவர்களுக்கு மறுமொழி சொல்லாமல் போவது சரியில்லை.

"முதலில் ஒரு விஷயத்தை ஒழுங்காகத் தெரிந்து கொண்டு பேச வந்தால் நல்லது" என்று இன்னொருவருக்குச் சொல்லும் திரு. ஜடாயு, அந்த அறிவுரையைத் தான் பின்பற்ற மாட்டார் போலிருக்கிறது. "கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு" என்றாள் ஒரு முதுபாட்டி.

// தமிழில் என்ன இருக்கிறது. எல்லாம் சமசுகிருதத்திலிருந்து வந்ததுதான். தமிழில் ஐந்தெழுத்தைத் தவிர மீதியெல்லாம் சமசுகிருதத்திலிருந்து வந்ததுதான் என்ற பெரிய சமசுகிருத அறிஞர்களின் வார்த்தைகள்தான் தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தது. //

என்று திரு. தமிழன் பின்னூட்டியதற்கு,

"சரியான காமெடி! இப்படி எந்த சம்ஸ்கிருத அறிஞர் சொன்னார் என்று ஆதாரம் உள்ளதா? ஒரு பாதுகாப்பற்ற மிசனரி போதனையில் மயங்கி விட்ட உனர்வு தான் தனித்தமிழ் இயக்கம் என்ற கொடுமையான தமிழ் நடையைக் கண்டுபிடித்தது. நல்லவேளை அந்த நடை தானாகவே செத்துவிட்டது, அதை முயூசியத்திலிருந்து எடுத்துவந்து சில ஆட்கள் (உதாரணமாக இராம.கி என்பவர்) இணையத்திலும் எழுதுவதைப் பார்த்தால் பரிதாபம் தான் ஏற்படுகிறது."

என்று மறுமொழியுரைத்திருந்தார். [இதில் என்னைப் பற்றிய இவரின் தனித்த கருத்தை ஒதுக்கித் தள்ளுகிறேன்.] குறியீட்டு இயல் என்று யாரோ "cryptology" பற்றிச் சொன்னதையும், "கணதந்திர" என்ற அழகு இந்திச் சொல்லையும் கண்டு வியந்து போகும் திரு.ஜடாயுவுக்கு, "சங்கதம் அது கொடுத்தது, இது கொடுத்தது அணு, அண்டம், பிரபஞ்சம், கந்தகம் என்ற சொற்களெல்லாம் எம்மொழியைச் சேர்ந்தவை?" என்று ஓயாமல் சவடால் அடித்து, இல்லாததையும் பொல்லாததையும் முன்கொண்டு வந்து நிற்கும் திரு.ஜடாயுவுக்கு "முது, மூது, மூதையர், மூதையம் போன்ற தமிழ்ச் சொற்கள் மட்டும் நினைவிற்கு வராமல், "முயூசிய நடை" என்ற தமிங்கிலமே எழுத வருகிறது. தன் அழகை ஆடியில் பார்க்காமல், மற்றவரைக் கிண்டல் செய்பவரைக் கண்டு, சிரிக்காமல் என்ன செய்ய? பரிதாபப் படவா முடியும்? ஒய்யாரக் கொண்டையாம், தாழம் பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்.

"தமிழ் உட்பட இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் சொல், பொருள் களஞ்சியமாக விளங்கும் மொழியை செத்தமொழி என்று சொல்லி அதில் ஒரு குரூர சந்தோஷம் அடைவதாயிருந்தால் அடைந்து விட்டுப் போங்கள். ஆனால் அதனால் உண்மை மாறிவிடாது" என்று திரு. ஜடாயு எழுதியிருந்தார். யாருக்குக் 'குரூர சந்தோஷம்'? மேலே உள்ள வாக்கில் வரும் "உட்பட" என்ற சொல்லில் தொக்கும் மேற்குடி ஆணவம் எவ்வளவு கிலோ தேறும்?

"சங்கதம் மற்றவைக்குக் களஞ்சியம்" என்று சொல்லுவது திரு.ஜடாயுவின் காவி விருப்பம். "தமிழுக்குத் தமிழே சொல், பொருள் களஞ்சியமாக விளங்கும்; சங்கதத்தின் உதவி தேவையில்லை" என்று சொல்லுவது எங்களின் உரிமை. அப்படிச் சொல்லுவது சங்கதத்தின் மேல் உள்ள வெறுப்பால் அல்ல; எங்கள் மொழியின் மேல் இருக்கும் விருப்பால், தமிழ்ச் சொல்வளத்தின் மேல் இருக்கும் நம்பிக்கையால், என்று கொள்ளுங்கள். இதை வெறி என்று சொல்லித் திரிக்க விரும்பினால், செய்யுங்கள்; எங்களுக்குக் கவலையில்லை.

"தங்கள் உதவியில்லாமல் இந்த நாடு நிற்காது, கவிழ்ந்துவிடும்" என்று வெள்ளைக்காரன் கூட 60 ஆண்டுகளுக்கு முன்னால் சொன்னான்; "அட போங்கய்யா, நாங்கள் பார்த்துக் கொள்ளுவோம்" என்றான் ஒரு தண்டு கிழவன். வெள்ளைக்காரன் மேல் இருந்த வெறுப்பாலா, அந்தக் கிழவன் அப்படிச் சொன்னான்? தன் நாட்டினர் மேல் இருந்த நம்பிக்கையால், விடுதலை உணர்வால், அல்லவா சொன்னான்? இந்திய நாடு பற்றிய விடுதலை உணர்வு இருக்கலாம்; தமிழ், தமிழர், தமிழகம் பற்றிய காப்புணர்வு மட்டும் இருக்கக் கூடாதோ? என்ன ஞாயம் அய்யா அது?]

"அரண்டவன் கண்ணிற்கு இருண்டதெல்லாம் பேய்" என்று சொல்லுவார்கள். அது போல எல்லா இடங்களிலும் "மிசனரி"களைத் தேடித் தேடிப் பார்க்கும் பார்வையும், "உலகமே என் கையில்" என்ற ஆணவமும் (இங்கு தான் பிழையே இருக்கிறது! தமிழ், தமிழர், தமிழக வரலாறுகளைத் தெரிந்து கொள்ளாமல் பாரதம், தேசியம் என்று சில்லு அடித்துக் கொட்டுவதும், மீறி நாம் பேசிவிட்டால் எல்லாவித தூற்றுகளையும், அடக்குமுறைகளையும் ஏவிப் பார்ப்பதும் காலம் காலமாய் நடப்பது தானே?) கூடிப்போன நிலையில், வரலாறு தெரியாத திரு.ஜடாயு ஆதாரம் கேட்கிறார்.

எனக்குத் தெரிந்ததைச் சொல்லுகிறேன்.

சாமிநாத தேசிகர் என்று ஒருவர் முன்னூறு ஆண்டுகளுக்கு முன் 17ஆம் நூற்றாண்டில் திருநெல்வேலி ஈசான மடத்தில் இருந்தார். அதனால் ஈசான தேசிகர் என்றும் அவருக்குப் பெயருண்டு. இலக்கணக் கொத்து என்ற அவருடைய நூலுக்கு, அவரே ஒரு பாயிரமும் எழுதியிருக்கிறார். (இலக்கணக் கொத்தை ஆறுமுக நாவலர் ஓலைச்சுவடியில் இருந்து வெளிக் கொணர்ந்தார்.) அந்தப் பாயிரத்தில் தான் இந்த "ஐந்தெழுத்துப் பாடை" என்ற சொற்றொடர் வருகிறது. வடமொழியில் இல்லாத ழ. ற, ன, எ, ஒ ஆகிய ஐந்தெழுத்துக்கள் தமிழில் உள்ளனவாம்; மற்றவை எல்லாம் வடமொழியில் இருக்கின்றனவாம். எனவே தமிழ் மொழி 5 எழுத்துக்களால் ஆன மொழியாம். சொல்லுகிறார் ஈசான தேசிகர்:

வடமொழி இலக்கணம் சிலவகுத்து அறிந்து
தொல்காப் பியத்தினும் தொல்காப் பியத்தினும்
அருகிக் கிடந்ததைப் பெருக உரைத்தனன்
வேறுவிதி நவமாய் விளம்பிலன் என்க;
தொல்காப் பியந்திரு வள்ளுவர் ஆதிநூல்
வடமொழி நியாயம் வந்தன சிலவே
தமிழின் நியாயம் தந்தன பலவால்
தமிழ்விதி வல்லராய் வடமொழி விதிசில
அறிந்தவர்க் கேஇந் நூலாம் என்க;
வடநூல் வழிகல வாதே தமிழைத்
தனியே நீர்தராத் தன்மை என்னெனின்
இலக்கணம் இலக்கியம் ஏது நிமித்தம்
சாத்திரம் சூத்திரம் தந்திர உத்தி
பகுதி விகுதி பதமே பதார்த்தம்
ஆதி அந்தம் அகார மகாரம்
உதாரணம் மாத்திரை உவமை உருவகம்
விகற்பம் சந்தி விதிஅலங் காரம்
காலம் இலேசம் காரகம் ஞாபகம்
விசேடணம் விசேடியம் விகாரம்அதி காரம்
குணம்குணி ஆதியாம் சொற்கோள் அன்றியும்
பிறிதின் இயைபின்மை நீக்குதல் பிறிதின்
இயைபு நீக்குதல் என்னும் இலக்கணம்
முதலாப் பலவா மொழிபெயர்த் தனவும்
கொண்டனர் பண்டையர் உண்டோ இன்றோ?
அன்றியும் தமிழ்நூற்கு அளவிலை அவற்றுள்
ஒன்றேயாயினும் தனித்தமிழ் உண்டோ ?
அன்றியும் ஐந்தெழுத்தால் ஒரு பாடை என்று
அறையவே நாணுவர் அறிவுடை யோரே!
ஆகையால், யானும் அதுவே; அறிக
வடமொழி தமிழ்மொழி எனுமிரு மொழியினும்
இலக்கணம் ஒன்றே என்றே எண்ணுக

மேலே வருவது சாமிநாத தேசிகர் பாயிரத்தின் ஒரு பகுதி. அதாவது, "வடநூல் வழி கலவாது, தமிழைத்
தனியே தர முடியாது - வேறு வாக்கில் சொன்னால், வடமொழி இன்றி தமிழ் தனித்தியங்காது; தமிழ்நூல் ஒன்றிலும் தனித் தமிழ் கிடையாது; ஐந்தெழுத்தால் ஒரு பாடை என்று சொல்லிக் கொள்ள அறிவுடையோர் நாணுவோர்; நானும் நாணுகிறேன்; வடமொழி, தமிழ்மொழி ஆகிய இரண்டிற்கும் ஒரே இலக்கணம்" என்று சொல்லுகிறார். அதே சாமிநாத தேசிகரின் வழியில், திரு.ஜடாயுவும் "தமிழ் உட்பட இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் சொல், பொருள் களஞ்சியமாக விளங்கும் மொழி" என்று உண்மை(?) விளம்புகிறார். இதுபோன்ற திமிர்ப் பேச்சைக் கேட்டு தமிழ்ர்கள் எதிர்க்காமல் அமைதி காக்க வேண்டுமாம்; அது எப்படி முடியும், சொல்லுங்கள்.

ஓர் இடைவிலகல். தனித்தமிழ் என்ற சொல்லாட்சியை தமிழ்கூறும் நல்லுலகிற்கு முதலில் அளித்தவர் சாமிநாத தேசிகர். இலக்கணக் கொத்தில் தான் அது முதலில் ஆளப்பட்டது. இந்த விதையை ஊன்றியவர் ஈசான தேசிகரே! வரலாற்றின் விளையாட்டு விந்தையானது. தனித் தமிழ் என்றவுடன் குதித்துக் கும்மியாடும் ஜடாயு போன்றவர்கள் தேசிகரை நினைவு கொள்ளட்டும். விதைப்பது ஒன்று முளைப்பது வேறொன்று என்றும் உணரட்டும்.

அன்புடன்,
இராம.கி.

17 comments:

தமிழே உன் தாய் said...

//மேலே உள்ள வாக்கில் வரும் "உட்பட" என்ற சொல்லில் தொக்கும் மேற்குடி ஆணவம் எவ்வளவு கிலோ தேறும்? //

அட இவங்களை விடுங்கோ இராமகி

எல்லாம் நம்ம ஆட்கள் செய்த பிழை. வடுகுப் பூசாரிகளை நம்ம மண்ணில் குடியேர்த்தி, அவர்கள் பரகதத்திலிருந்து சமற்கிருதத்தை உருவாக்கி அதற்குத் தமிழ் எழுத்துகளையும் தமிழ் எழுத்து வடிவத்தையும் கையாண்டு (பெருமி எழுத்து), அதன்பின்னர் தமிழில் இருந்த அரிய பொக்கிடங்களை எல்லாம் சமற்கிருதத்தில் மொழிபெயர்த்து (அதுவும் பிழை பிழையா), பின்னர் அந்தத் தமிழ் நூல்களை எல்லாம் இல்லாதவாறு மோட்சம் பெறுவாய் ஏட்டை ஆற்றினுள் விட்டாய் போன்ற கதைகள் கட்டி அழித்து, தற்போது சமற்கிருதம்தான் பெருசாம். உண்மை இப்பஇப்பத்தான் வெளிவருகின்றது. புண்ணை மூடி மறைப்பதால் புண்ணின் நாற்றம் காட்டிக் கொடுக்காமல் விடுமோ?

நாற்றம் நீங்கித் தமிழ்த் தோற்றம் கண்டு அவர் ஞானம் பெறட்டும்.

இல்லை நாறும் புண்ணைத் தோறும் கட்டிக் காலம் போக்கட்டும்!

Anonymous said...

அய்யா, தங்களின் பதிவுகள் சமீபகாலமாக படிப்பதற்கு ஏதுவற்று உடைந்து உடைந்து தெரிகிறது. முடிந்தால் சரிபண்னுங்கள். இத்தனைக்கும் நான் பயர்பாக்ஸ் உபயோகிப்பவன் அல்ல. :(

ஜடாயு said...

அன்புள்ள திரு.இராமகி,

உங்களைப் பற்றி சமீபத்தில்தான் கேள்விப்பட்டேன். நீங்கள் என்னைவிட வயதில் மிகமிக மூத்தவர் என்றும், வைணவ அன்பர் என்றும் அறிகிறேன். என் எழுத்து உங்களை எவ்வகையிலாவது காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். நான்
சொல்ல வந்ததை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்ற சந்தேகத்தின் பேரில், மீண்டும் இங்கே சொல்கிறேன்.

என் பதிவில் ஒருவர் பின்னூட்டம் இட்டிருந்தார். அதையே மேற்கோள் காட்டிக் கேட்கிறேன் - ஜார்ஜ் புஷ் என்பதை சியார்ச்சு புச்சு என்று எழுதுவதால் மட்டுமே நாம் தமிழை வளர்த்து விட முடியுமா? இல்லை ஒரு வீம்புக்காக வடசொற்களைத் தூக்கி எறிவதால் மட்டுமே தான் தமிழை வளர்த்து விட முடியுமா?

அவ்வளவுதான் நான் கேட்க வந்த்து. மற்றபடி உங்கள்
கலைச்சொல் ஆக்கத்திற்கு நான் எதிரானவன் அல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய முயற்சிகளை வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்.

மேலும், நான் தமிழ்வழியில் பள்ளி இறுதிவரை படித்தவன். படிக்கும் காலத்தில் கம்பன் கழகத்தில் மிக ஈடுபாட்டோடு கலந்திருந்தவன். என் எழுத்துக்கள் அனைத்திலும் திருக்குறள், திருமுறைகள், திவ்வியப் பிரபந்த வரிகள் இழையோடி வருவதை வாசகர்கள் பலர் கவனித்திருக்கக் கூடும்.

பழந்தமிழ் நூல்களை முறையாகப் படித்ததால் தான் எனக்கு இந்துத்துவ உணர்வே வளர்ந்தது
என்பதையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

குமரன் (Kumaran) said...

ஐயா,

கேட்டிலும் உண்டோர் உறுதி. ஈசான தேசிகரைப் பற்றிய புதிய செய்தியை (எனக்கு புதிது) இன்று அறிந்து கொண்டேன். மிக்க நன்றி.

ஞானவெட்டியான் said...

அன்பு இராமகி,
இன்றுதான் கண்டேன் இவ்விடுகையை.
ஈசான தேசிகர் பற்றிய விவரங்கள் இன்றுதான் தெரியப்பெற்றேன்.
மிக்க நன்றி.

சுப்பிரமணி said...

// சம்ஸ்கிருத ஐம்பது எழுத்துக்கள் அடிப்படையில் ஒலிக்குறிப்புகளாகும். இவை பலவித சேர்க்கையில் (combination) அண்டசராசரங்களின் தோற்றத்திற்கும் அடிப்படையாகும். இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டால் ஐந்தெழுத்தின் சூட்சுமத்தையும் புரிந்து கொள்ள முடியும் என்று பாடுகிறார் திருமூலர்.

ஐம்பது எழுத்தே அனைத்து வேதங்களும்
ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமங்களும்
ஐம்பது எழுத்தின் அடைவை அறிந்தபின்
ஐம்பது எழுத்தும் ஐந்தெழுத் தாமே
//

இது ஜடாயு பதிவிலிருந்து அப்படியே எடுத்தது. இதுக்கு என்ன பொருள்?

இன்னும் கொஞ்ச நேரம் கழித்து திருமூலரையும் திட்டப் போறீங்களா இல்ல அவரும் வடமொழி வெறுப்பாளர் தான், ஆனால் ஆதாரம் தந்து எழுதுவதற்கு நேரம் இல்லை அப்படின்னு மழுப்பப் போறீங்களா?

Anonymous said...

ஐயா சுப்பிரமணி, நான் அறிந்த வரையில் சம்ஸ்கிருதத்தில் ஐம்பத்தி ஓர் எழுத்துக்கள் உண்டே. திருமூலர் ஐம்பது எழுத்துக்களைத் தானே சொல்கிறார்?

Anonymous said...

அய்யா சுப்பிரமணி,
//சம்ஸ்கிருத ஐம்பது எழுத்துக்கள் அடிப்படையில் ஒலிக்குறிப்புகளாகும்.//

முதலில் சமஸ்கிருத எழுத்துக்கள் என்னென்ன? அ, ஆ, இ ... போல.

எழுத்துக்கள் ஒலிக்குறிப்புக்கள் என்று சொல்லி இருக்கீங்க.
வடிவம் இருந்தால்தானே எழுத்துக்கள் ஆகும்.

ஒலிக்குறிப்புக்களை எழுத்து என்று சொல்லும் அளவுக்குத் திருமூலர் மடையனா?
எனக்குத் தெரியலே. தெரிஞ்சா சொல்லுங்களேன்.

சுப்பிரமணி said...

// நான் அறிந்த வரையில் சம்ஸ்கிருதத்தில் ஐம்பத்தி ஓர் எழுத்துக்கள் உண்டே. திருமூலர் ஐம்பது எழுத்துக்களைத் தானே சொல்கிறார்? //

ஓம் என்ற பிரவணத்தையும் சேர்த்தால் 51 வரும்.

ஓம் என்ற ஓரெழுத்து பிரபஞ்சத்தின் ஆதி நாதம் என்பதால் இங்கே மூலர் பிரான் சேர்க்கவில்லை, மற்ற எழுத்துக்களை மட்டுமே கூறினார்.

885.
ஓரெழுத் தாலே உலகெங்கும் தானாகி
ஈரெழுத் தாலே இசைந்துஅங்கு இருவராய்
மூவெழுத் தாலே முளைக்கின்ற சோதியை
மாவெழுத் தாலே மயக்கமே உற்றதே

51 எழுத்துக்கள் எப்படி வரும் என்பதையும் மிகத் தெளிவாக இன்னொரு பாடலில் சொல்லுகிறார் -

963.
ஓதும் எழுத்தோடு உயிர்க்கலை மூவைஞ்சும்
ஆதி எழுத்தவை ஐம்பதோடு ஒன்றென்பர்
சோதி எழுத்தினில் ஐயிரு மூன்றுள
நாத எழுத்திட்டு நாடிக்கொள் ளீரே

http://thevaaram.org/10/10401001.htm

// ஒலிக்குறிப்புக்களை எழுத்து என்று சொல்லும் அளவுக்குத் திருமூலர் மடையனா? //

கேட்கும் நீங்கள் தான் மடையர்.

சிவபெருமானின் திருநடனத்தின் போது அவனது உடுக்கையினின்றும் எல்லாவற்றிற்கும் மூலமான சப்த ரூபங்கள் பிறந்தன - இவையே ஒலிக்குறிப்புக்கள். "மாஹேஸ்வர சூத்திரங்கள்" என்றும் அழைப்பார்கள். பாணினியின் இலக்கணமும் இவற்றை விளக்கும். இந்த ஒலிக்குறிப்புக்களே பின்னர் எல்லா எழுத்துக்களாகவும் பரிணமித்தன என்பது சைவ சித்தாந்தம். திருமூலர் சொல்லவந்த கருத்தை சுருக்கமாக ஜடாயு எழுதியிருக்கிறார், தவறாக அல்ல.

இது பற்றி மேலும் அறிந்துகொள்ள http://thevaaram.org/10/0101h.htm தளத்திற்குச் சென்று நான்காம் தந்திரத்தில் வரும் பாடல்களை எல்லாம் படிக்கவும்.

ஓம் நமசிவாய. திருச்சிற்றம்பலம்.

விடாதுகருப்பு said...

அன்புள்ள இராமகி அய்யா,

தமிழையும் தமிழறிஞரான தங்களையும் வசைச்சொல் பாடிய ஜடவாயுக்கு நான் எனது தனிப்பட்ட சொல்லாட்சியின் மூலம் தகுந்த பதில் அளித்து விட்டேன்.

செத்த மொழிக்கு உயிர்கொடுக்க எத்தனை மருத்துவர்கள் வந்தாலும் முடியாது என்பது தெரியாமல் புறம்பேசித் திரிகின்றனர்.

தங்கள் பாணியில் அமைந்த அருமையான பதிவு.

நன்றி.

ஞானவெட்டியான் said...

அன்புடையீர்,

//சிவபெருமானின் திருநடனத்தின் போது அவனது உடுக்கையினின்றும் எல்லாவற்றிற்கும் மூலமான சப்த ரூபங்கள் பிறந்தன - இவையே ஒலிக்குறிப்புக்கள். "மாஹேஸ்வர சூத்திரங்கள்" என்றும் அழைப்பார்கள். பாணினியின் இலக்கணமும் இவற்றை விளக்கும். இந்த ஒலிக்குறிப்புக்களே பின்னர் எல்லா எழுத்துக்களாகவும் பரிணமித்தன என்பது சைவ சித்தாந்தம்.//

திருமூலனின் செறிவடங்கிய பாடல்களை, சூக்குமங்களை அறியாது மொழிச்சண்டைக்குத் துணையாக இழுப்பது கண்டு நகைப்பதா? அழுவதா?

"சிவபெருமானின் திருநடனத்தின் போது அவனது உடுக்கையினின்றும் எல்லாவற்றிற்கும் மூலமான சப்த ரூபங்கள் பிறந்தன" என்றால் சிவன் எங்கே இருக்கிறான்; தலையில் இருக்கும் சிவன் எங்கே ஆடினான்? அவன் உடுக்கையிலிருந்து எழுந்த ஒலிகளை யார் கேட்டது?

காட்டுமிராண்டியாய் இருந்தபொழுது மனிதனின் தொண்டையிலிருந்து எழுந்த வியப்புக் குரல்களும், அச்சத்தின் ஒலிக்குறிப்புகளும் தான் முதல் எழுத்தாகப் பரிணமித்தது.
ஆதிமனிதன் குரல் கொடுத்ததும் சிவன் உடுக்கு அடித்தானா? அல்லது அவன் அடித்ததும் மனிதன் கத்தினானா?

//ஒலிக்குறிப்புக்கள். "மாஹேஸ்வர சூத்திரங்கள்" என்றும் அழைப்பார்கள். பாணினியின் இலக்கணமும் இவற்றை விளக்கும்.//

இவ்வொலிக்குறிப்புக்களை, யார் வேண்டுமாகிலும் எப்படி வேண்டுமாகிலும் அழைத்துவிட்டுப் போகட்டும். ஆனால் இவைகள் சைவசித்தாந்தம் என்று மட்டும் கூறி மற்றவர்களை திசை திருப்ப வேண்டாம்.

எது "சைவ சித்தாந்தம்?" என்பதை, சைவன் சிவனைத் தன் தலையில் கண்டு, தன் சித்தத்தை உணர்ந்து அதன் முடிவு என்ன எனக் கண்டுணர்ந்தபின் அவன் முடிவு செய்யவேண்டும்.

தொடக்கமே தெரியாது; நாம் எல்லோரும் முடிவைப் பற்றிப் பேசுகிறோம்.

ஆன்மிகத்தில் இருப்போருக்கு "எல்லாம் ஒன்றுதான்; தன்னைப்போல் பிறரை நேசி....."
இந்நிலையில் உள்ளோர்கள்கூட மற்றவர்களைப்போல் வேறுபாடுகளை மட்டும் கண்டு வழக்காடுவதும், சண்டையிட்டுக்கொள்வது நல்லது அல்ல என்பது என் கருத்து.

Thamizhan said...

பெருமதிப்பிற்குரிய அய்யா,
நன்றிகள் பல.அந்தப் பதிவாளரின் மற்ற பொய்களுக்கு ஆதாரங்களுடன் பின்னூட்டம் செய்தேன்.அய்ந்தெழுதது்ப் பாடைதான் தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தேன்.நன்றி.
வடமொழி ஆதிக்கத் திமிர்தான் தமிழ் அழிந்துவருவதைத் தமிழர்க்கே நினைவூட்டியது.வடமொழியுந் தமிழும் அறிந்த பல தமிழ்றிஞர்களின் அதிலே சில் பார்ப்பனர்களின் எழுத்துக்களையும் எடுதது்க் காட்டியிருந்தேன்.
என்ன இருந்தாலும் என்னதான் தமிழ் படித்திருந்தாலும் தமிழால் பிழைப்பு நடத்தும் பார்ப்பனர்கள் கூட சமசுகிருத வெறியர்களாக இருக்கிறார்களே என்பது மற்ற தமிழர்கட்குப் புரிந்தால் சரி.

இராம.கி said...

அன்பிற்குரிய தமிழே உன் தாய்,

வரலாற்றைச் சொன்னால் பலருக்கும் ஆவதில்லை; இவர்களில் பலரும், தங்கள் குடி வரலாற்றை அறிய முற்படுவதில்லை; சோழர், பாண்டியர் என்ற நாட்டு வரலாறுகளையும் படிப்பதில்லை.

நம்பூதிகள் அருமையான வ்லைத்தளத்தில் தாங்கள் கடம்ப நாட்டில் (மயூர சன்மனின் தொடக்கத்தில்) இருந்து சேரலம் புகுந்ததையும், அதன் பின் மலையாளம் பிறந்த கதையையும், எந்தத் தயக்கமும் அன்றி எழுதியிருக்கிறார்கள்.

நம்மூரிலோ பெரிய கணம் (ப்ரஹச் சரணம்), எண்ணாயிரவர் (அஷ்ட ஸகஷ்ரம்), வடமர் (வடமா) இன்னும் பல வகையினர், எப்படி இருந்தார்கள், வந்த வரலாறு என்ன, எப்படி வேத நெறியோடு சிவநெறியும், விண்ணெறியும் கலந்தன, எந்த அளவு மகதத்தில் இருந்த சமயச் சண்டைகள் மறுவினையாகத் தமிழகத்தீற்குக் கொண்டு வரப்பட்டன, ஏன் அல்லிருமையும் (அத்வைதம்), விதப்பொருமையும் (விசிஷ்டாத்வைதம்) வடக்கே உருவாகாமல், இங்கு தமிழகத்தில் உருவாயின, ஆனாலும இந்த இரு மெய்யியல்களும் நம்மூரில் ஒருசாராரோடு மட்டுமே நின்று போய், பொதுமக்களிடம் ஏன் சிவக் கொன்முடிவே (சைவ சிந்தாந்தம்) பரவியது, ஆசிவகம் முற்றிலும அழிந்து, புத்தமும் அதே கதிக்கு ஆளாகி, செயினம் மட்டும் அங்குமிங்குமாய் ஓரளவு தங்கி இங்கு ஒரு 400 ஆண்டு பேய்த்தனம் சூல்கொண்டது எவ்வாறு, என்று ஆய்வுக் கண்னோடு ஆய்கிறவர் மிகவும அரிது. அதனால் தான இந்த வடமொழி -தமிழ்ப்[ பிணக்கின் பின்புலம் அறியாது இருக்கிறார்கள்.

மூட நம்பிக்கை பெரிதும் பரவிக் கிடக்கிறது. நமக்கும் தெய்வம் என்ற வகையில் அச்சம் கூடிக் கிடக்கிறது. நம் அச்சங்களும அறியாமையும் பலருடைய ஆதாயங்களுக்குப் பயன்படுகின்றன.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு,

என் பதிவுகள் படிப்பதற்கு இயலாமல் உடைந்து வருகின்றன என்ற குறைக்கு விடை சொல்ல எனக்கு நுட்ப அறிவு போதாது. மற்றவர்கள் இந்தக் குறையைச் சொல்லவில்லையே? நான் என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள். முயல்கிறேன்.

அன்பிற்குரிய ஜடாயு,

என்னைப் பற்றி அறிந்ததற்கு நன்றி.

நம்மிடையே எழுந்த உரையாடல் ஆழ்ந்த மாற்றுக் கருத்தில் ஏற்பட்டது, அது போன்ற உரையாடல்கள் தொடரத்தான் செய்யும்.

ஜார்ஜ் புஷ் என்பதை சியார்ச்சு புசு என்று எழுத வேண்டுமா, எழுத வேண்டாமா என்பதையும், அப்படிக் கிரந்த எழுத்தை ஒருவி எழுதுவதால் தமிழை வளர்த்துவிட முடியுமா, வடசொற்களைத் தூக்கி எறிவதால் தமிழ் வளர்ந்திருக்கிறதா என்பதைப் பற்றி நான் என்ன சொல்வது? வரலாறு சொல்கிறது; சொல்லும்.

தமிழ் பரவலாய்ப் பேசப்பட்ட (முற்றிலும் அல்ல) சாதவ கன்னர் நாடும் (தென், தென்கிழக்கு மாராட்டம், தெலிங்கானா, வடகன்னடம்), கடம்பர் நாடும் (நடுக் கன்னடமும், துளுவும்) இன்று தமிழ் பேசுவதில்லை. ஓரளவு தமிழ் பேசிய வேங்கி நாடு (இன்றைய தெலிங்கானா தவிர்த்த ஆந்திரா) இன்று தமிழ் பேசுவதில்லை; தமிழ் முற்றிலும் பேசிய நன்னனின் ஏழில் நாடு (இன்றையக் கொங்கணம், தென் மேற்குக் கன்னடம்) தமிழ் பேசுவதில்லை. கங்கர் நாடும் (தென்கிழக்குக் கன்னடம்), எருமை நாடும் (மைசூர்), அருகில் உள்ள சிறுசிறு நாடுகளும் (மேற்கு மலை நாடுகள்) இன்று தமிழ் பேசுவதில்லை. தமிழ் பூத்துக் குலுங்கிய சேர நாடே கூடத் தமிழை மறந்து தான் போயிற்று.

எங்களின் ஆயிரமாண்டு எல்லை கூடக் குறைந்து, நாங்கள் வட மாலவன் குன்றத்தையும் இழந்து, ஒடுங்கிக் கிடக்கிறோம். ஒரு நூறாண்டுகளுக்கு முன்னால் இருந்த பேச்சுநடை தொடர்ந்திருக்குமானால், இன்றையத் தமிழகத்திலும் கூட தமிழ் ஒழிந்திருக்கும். முடிவில் நீங்கள் சொன்னாற் போல ஒரு மூதையத்திற்குள் தான் இது செத்த மொழியாய்ச் சிறைப்பட்டிருக்கும். அதை வாழவைத்தது ஒரு 60,70 ஆண்டுகளுக்கு முன்னால் எழுந்த தமிழியக்கம். அதற்கு நாங்கள் மக்களுக்கும், இறைவனுக்கும் நன்றி சொல்லுகிறோம்.

இனிமேல் இது போன்ற நிலை ஏற்படவே கூடாது என்று விரும்பும் ஒரு சிலர் எங்களால் இயன்றதைச் செய்து கொண்டிருக்கிறோம். தமிழன் தன் முகவரியைத் தொலைத்தால் உங்களுக்கென்ன? உங்களுக்கு இந்து ராஷ்டிரம் என்பது முகன்மையானது இல்லையா? நீங்கள் எதிரணியில் இருந்து உங்கள் தாக்குதலைத் தொடருங்கள். ஏக இந்தியா என்ற முழக்கத்தைச் செய்யுங்கள். :-(

தமிழைப் படித்தவன் என்று பெருமை கொள்ளுவதை இனியும் தொடருவது உங்கள் உகப்பு. எனக்குச் சொல்ல ஒன்றுமில்லை.

அன்பிற்குரிய குமரன், ஞானவெட்டியான்,

ஈசான தேசிகர் பற்றிய செய்தி தமிழியக்கம் பற்றியறிந்த பலரும் மறவாத ஒன்று. அவருடைய நூல் எழவில்லை என்றால் இப்படி ஒரு சாட்டையடியை யாரும் உணர்ந்திருக்க மாட்டார்கள்.

ஒருவகையில் நம்மை உசுப்பிக் கொண்டு வந்ததற்கு அவருக்கும் நன்றி சொல்ல வேண்டும். முன்னே சொன்னது போல் தனித்தமிழ் என்ற சொல் கூட அவர் கொடுத்தது தான்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய சுப்பிரமணி,

முனைவர் சுப. அண்ணாமலை 17 பதிப்புக்களையும், 27 சுவடிகளையும் ஆய்ந்து, இந்தியப்பண்பாடு ஆராய்ச்சி நிறுவனம் (84, கலாச்சேத்திரா சாலை, திருவான்மியூர் சாலை, சென்னை 600 041)
வழியாக திருமந்திரத்திற்கு ஒரு மூலபாட ஆய்வுப் பதிப்பு வெளியிட்டிருக்கிறார். அதில் பல்வேறு ஒப்பீட்டுக்களின் அடிப்படையில் 154 இடைச்செருகல்களைக் கண்டிருக்கிறார். அதில் நீங்கள் சுட்டிய பாடலும் ஒன்று. இந்த இடைச்செருகற் பாடலுக்கு அவர் காட்டியிருக்கும் வடிவம் கீழே உள்ளது.

ஐம்பது எழுத்தே அனைத்து வேதங்களும்
ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமங்களும்
ஐம்பது எழுத்தேயும் ஆவது அறிந்தபின்
ஐம்பது எழுத்தும் போய் அஞ்செழுத் தாமே

ஜடாயுவின் பதிவில் இருந்து எடுத்ததாக நீங்கள் காட்டியுள்ள அடிகள் இதனின்றும் விலகியுள்ளன. முனைவர் அண்ணாமலை தான் காட்டிய உருவத்தை, "நடைச்சிறப்பு இன்மை, சில சுவடிகளில் இல்லாமை" என்ற காரணத்திற்காக இடைச்செருகல் என்று சொல்லி விலக்குகிறார்.

அதே பொழுது ஐம்பத்தொன்று எழுத்துக்களைக் குறிக்கும் மற்ற சில பாட்டுக்கள் உண்டு தான். அவை ஐம்பத்தோரு கிரந்த எழுத்துக்களைக் குறிக்கலாம். [நீங்கள் ஐம்பத்தோராம் எழுத்து ஓம் என்று "guuns" ஆகச் சொல்லியிருந்தீர்கள். அப்படியெல்லாம் தான் தோன்றித் தனமாய்ச் சொல்லமுடியாது. ஓம் என்பது ஒரு கூட்டெழுத்துக் குறியீடு; அது தனியெழுத்தில்லை. வடமொழியின் அடிப்படை எழுத்துக்கள் 16 உயிர் (அனுஸ்வரம், விசர்க்கம் சேர்த்தது), 35 மெய்யெழுத்துக்கள். (இவற்றில் ளகரம், ழகரத்தைச் சேர்க்காது 33 என்று சொல்பவர்களும் உண்டு. இவற்றைச் சேர்ப்பது திராவிடத் தாக்கத்தை ஏற்றுக் கொள்வதாய் ஆகக் கூடும். மோனியர் வில்லியம்சு இவற்றை மெய்யெழுத்துக்களில் சேர்த்தே சொல்லுகிறது.)]

ஒரு பெயரில்லாதவரோடு நீங்கள் நடத்திய உரையாடலை மேலே பார்த்தால், உங்களுக்கு ஒலிகள், எழுத்துக்கள் பற்றிய சரியான புரிதல் இருப்பது போல் தெரியவில்லை. இந்த நிலையில் கொஞ்சம் உணர்வு மீறி இன்னொருவரை மடையர் என்கிறீர்கள்.

எழுத்து என்பது ஒலியைக் குறிக்கும் ஒரு முகப்பு (map). அது மொழியில் இருந்து விலகி நிற்பது. [ஒரு மொழியை எழுதிக் காட்டப் பல எழுத்து முறைகள் அமையலாம்.] அதே பொழுது இந்த எழுத்து-ஒலி என்ற இணை ஒன்றிற்கொன்று (one-to-one) என்றுள்ள முகப்பு இல்லை. பல ஒலிக்கு ஓரெழுத்து அமையலாம் காட்டாகத் தமிழில் க என்னும் எழுத்து (ka, ga, ha) என்ற மூன்று ஒலிகளுக்கான ஒரே முகப்பு. அந்த எழுத்து வரும் இடத்தைப் பொறுத்து ஒலி மாறும். எழுத்தைச் சரியாகப் புரிய வேண்டுமானால் கொஞ்சம் இலக்கணம் படியுங்கள். வெறுமே சைவசித்தாந்தத்தில் இருந்து கோலத்தில் பாயாதீர்கள்.

மொழி, ஒலி, எழுத்து என்பவை மாந்தன் உருவாக்கியவையே, அதில் சிவன் உடுக்கை, திருநடனம் என்பவைல்லாம் நம்பிக்கையின் பாற்பட்டன. அதனுள்ளே அறிவியல் இல்லை. இறைநம்பிக்கை உள்ள நான், அதே பொழுது அறிவியலை வாழ்நிலைக்கு வகையாய் வைத்திருக்கும் நான், இப்படி ஒரு எடுத்தேன், கவிழ்த்தேன் என்னும் விளக்கம் சொல்ல மாட்டேன்.

பாணினி நூலுக்கு துணையாய் இருக்கும் சிவசூத்திரங்களின் ஆசான் யார் என்று தெரியாது என்றுதான் பல ஆய்வாளர்களும் சொல்லுகிறார்கள். அது பாணினியாக இருக்கலாமோ என்று ஒரு சிலர் அய்யுறுகிறார்கள். சிவசூத்திரங்கள் என்பவை பாணினியின் அஷ்டத்யாயியில் பேசப்படுபவை அல்ல. அதற்கு வெளியில், புறத்தில், நிற்பவை.
பாணினியைப் பொறுத்துக் கேட்டால், அவை அவன் நூலுக்குக் கொடுக்கப் பட்டவை; புறமித்தவை. (given; primitives). சிவக் கொண்முடிவுகளைப் பற்றியெல்லாம் நாம் இங்கு பேசவில்லை; ஒரு மொழி எழுத்துக்கள் பற்றிப் பேசுகிறோம். இப்படிச் சிந்தாந்தக் குழப்பம் கொண்டுதான் பலரும் வடமொழி / தமிழ் பிணக்கத்தைப் புரிந்து கொள்ளுகிறார்கள்.

திருமந்திரம் பற்றிய என் ஆய்வு இன்னும் முடியாதது. அரைகுறைப் படிப்பில் நான் ஏதும் சொல்லக் கூடாது. அதை ஆய்வு செய்தவரின் நூலை உங்களுக்குப் பரிந்துரைக்கிறேன். "திருமூலர்: காலத்தின் குரல் - ஆறுமுகத் தமிழன், தமிழினி வெளியீடு, 2004". இப்போதைக்கு நான் மேலும் இதுபற்றிச் சொல்ல முடியாது இருக்கிறேன். இன்னொரு நாள் இந்தத் தலைப்பிற்கு வரமுயல்வேன்.

"இன்னும் கொஞ்ச நேரம் கழித்து திருமூலரையும் திட்டப் போறீங்களா இல்ல அவரும் வடமொழி வெறுப்பாளர் தான், ஆனால் ஆதாரம் தந்து எழுதுவதற்கு நேரம் இல்லை அப்படின்னு மழுப்பப் போறீங்களா?" என்ற உங்களின் முன்முடிவு உளறல்களுக்கு நான் கருத்துச் சொல்ல முடியாது. உங்கள் மேல் கழிவிரக்கம் தான் ஏற்படுகிறது. அய்யா, இளைஞரே! ஊரில் இல்லாத அவக்கரம் உங்களுக்கு எங்கே வந்தது; இத்தனைக்கும் சைவசித்தாந்தம், திருச்சிற்றம்பலம் வேறெ.

நீங்கள் எல்லாம் ஆணையிட்டுத் தூண்டிவிட்டால், உங்கள் அலம்பல்களுக்கு விடை சொல்லுவதற்காகவே நான் வலைப்பதிவில் எழுதவில்லை. ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறீர்கள்; குறித்து வைத்துக் கொள்ளுகிறேன். நேரம் கிடைக்கும் போது வருவேன். நம்பிக்கை இருந்தால் பொறுத்திருங்கள்; இல்லையென்றால், வேலையைப் பார்த்துக் கொண்டு போய்ச்சேருங்கள்.

"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்செய்யுமாறே" என்றுதான் நான் திருமூலனை அறிந்திருக்கிறேன்.

அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு,

ஐம்பது, ஐம்பத்தோரு எழுத்துக்கள் பற்றிய திரு.சுப்பிரமணியின் உளறல்களைப் பொருட்படுத்த வேண்டாம். மேலே எழுதியிருப்பதைப் படித்தால் அவக்கரப்படும் ஓர் இளைஞனின் ஆற்றாமை புலப்படும்; ஒதுக்கிவிட்டு மேலே போங்கள்.

அன்புடன்,
இராம.கி.

சின்னக் காளை said...

அய்யா!
தனக்கும் தெரியாது. சொன்னாலும் கேக்கமாட்டாக.
பழுத்த மரத்தில கல் எறியுறாங்க.
நீங்க பாட்டுக்கு நெறைய தமிழ் வார்த்தைகளை கொடுத்துக்கிட்டே இருங்க.
நல்லா இருக்கணும் அப்பு.

இராம.கி said...

அன்பிற்குரிய விடாது கருப்பு,

உங்கள் வருகைக்கு நன்றி. நீங்கள் உங்கள் வழியில் விடை கொடுத்துக் கொண்டே இருங்கள். நான் என் வழியில் முயல்கிறேன்.

அன்பிற்குரிய ஞான வெட்டியான்,

உங்கள் தெளிவிற்கு நன்றி.

வெறும் நம்பிக்கைகளை வைத்துக் கொண்டு, அதே நேரத்தில் சிவ கொண்முடிபுகளையும் மேலோட்டமாய்ப் புரிந்து கொண்டு உடுக்கு அடித்துவரும் இவர்களைக் கண்டால் என்ன சொல்வது?

உங்களின் ஐம்பது, ஐம்பத்தொன்று பற்றிய பதிவைப் படித்தேன்.

அன்பிற்குரிய தமிழன்,

உங்களின் பெயரைக் கொண்ட இன்னொருவர் அப்படியே என்னுடைய வேறொரு பதிவில் தலைகீழாகக் கருத்துத் தெரிவித்திருந்தார். கணநேரம் அதிர்ந்து போனேன். பின்னால் ஓர்ந்து பார்த்தபிறகுதான், அடையாளக் குழப்பம் விளங்கியது. (உங்களுடையது ஆங்கில எழுத்தில் வரும் பெயராயும், அவருடையது தமிழ் எழுத்திலுமாய்ப் பெயராயும் ஆள்மாறாட்டம் செய்திருந்தார். நீங்கள் கண்டுகொண்டீர்களோ?)

உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

அன்பிற்குரிய சின்னக்காளை,

உங்கள் வருகைக்கும், கனிவிற்கும் நன்றி. என் பணி இயன்றவரை தொடரும், அய்யா.

அன்புடன்,
இராம.கி.