Thursday, August 27, 2020

பல்வேறு வகைக் கூடல்கள்

meeting - சந்திப்பு = an occasion when people come together to discuss things and mak decisions.

conference = அரங்கம்  = a large formal meeting, often lasting for several days

session = செற்றம் = a formal meeting or groups of meetings of a parliament or a law court

summit = சிமையம் = a meeting or set of meetings between the leaders of two or more governments

convention = வணையம் = a conference of people who do a particular job or have a similar interest.

gathering = கூட்டம் = an occasion when people come together for a specific purpose

assembly = அவையம் = a meeting of people gathered for a particular purpose

Friday, August 14, 2020

valve = வாவி

valve (n.) என்ற ஏந்து (equipment) பற்றி ஒரு கேள்வி தமிழ்ச் சொல்லாய்வுக் களத்தில் எழுந்தது. ஆங்கிலத்தில் அதன் சொற்பிறப்பை late 14c., "one of the halves of a folding door," from Latin valva (plural valvae) "section of a folding or revolving door," literally "that which turns," related to volvere "to roll," from PIE root *wel- (3) "to turn, revolve" என்று சொல்வார். 

தமிழில் வளைவுப் பொருளிற்குள் நான் செல்லவே இல்லை. மாறாக நீர்ப்பிடிப்பிற்குள் சென்றேன். எங்கள் ஊர்ப்பக்கம் ஏரி, கண்மாய், குளம், ஊருணி என்று பல்வேறு நீர்நிலைகள் உண்டு, எங்கள் பகுதி பாலை நிலம். மழைக்காலத்தில் பெய்யும் நீரைப் பிடித்து வைத்துக்கொள்வோம். மற்ற காலங்களில் அதைப் பயன்படுத்துவோம். கண்மாயிலிருந்து திறந்துவிடும் நீரையும், ஓடைகள், கால்வாய்கள் வழி, சில இடங்களில் மண்ணை உடைத்து, சில இடங்களில் அடைத்துத் திருப்பி விடுவோம். அதாவது ஓடைகளைச் சில இடங்களில் பற்றிக்கொள்வோம். சில இடங்களில் அடைத்துவிடுவோம். இப்படித்தான் அங்கு பாயனம்>பாசனம் நடக்கிறது.valve இன் செயற்பாடும் இது தான். இதற்குப் பெரிய கம்பசூத்திரம் தேவையில்லை. எங்கு பற்றவேண்டும், எங்கு விடவேண்டும் என்று புரிந்தால் போதும். 

தமிழில் வல்வுதல்>வவ்வுதல் என்பது ”பற்றிக் கொள்ளுதல் to take hold of” என்பதைக் குறிக்கும். ”கடும்பரிப் புரவியொடு களிறுபல வவ்வி” (அகநா.348.23). "அரசர் செறின் வவ்வார்” (நாலடி 134), “வவ்வித் துழாயதன் மேல் சென்ற” (திவ்.பெரியதிரு. 9,4,4) என்று பல காட்டுகள் இதற்குண்டு. பற்றிக் கொள்ளும் செயலைத் தமிழில் அவ்வுதல், கவ்வுதல், வவ்வுதல் என்று 3 வழிகளில் சொல்வோம். இவற்றில் எது சொன்னாலும் சரியே. 20 ஆண்டுகளுக்கு முன் நான் வவ்வுதலைத் தேர்ந்தேன். அவ்வளவாகப் பயன்படாத சொல் அது என்பதே காரணம். எனவே இதிலிருந்து பெயர்ச்சொல் உருவாக்கி வாவி என்று பயனுறுத்தினேன் வவ்வுதலை அறியாதோர், ”நான் ஆங்கில ஒலியில் சொல் படைக்கிறேன்” என்பார். சொல்லிப் போகட்டும். 

valve இற்குள்ளே ஒரு விளவம் (fluid) வருகிறது. வெளியே அனுப்ப பல்வேறு வழிகள் இருக்கலாம். அவற்றில் ஏதேனும் ஒருவழியைப் பற்றிக்கொண்டு மற்ற வழிகளை அடைக்க வேண்டுவதே valve இன் வேலை. இதற்கான சொல்லைத் தமிழில் ஆக்கும் போது, “பற்றிக் கொள்ளும்” செயலைச் சொல்லியும் சொல் ஆக்கலாம். அடைக்கும் செயலைச் சொல்லியும் ஆக்கலாம். பல வழிகள் இருக்கும் போது பற்றிக் கொள்வதைச் சொல்வது நலம் பயக்கும். சொல் நீளாது, வவ்வும் தொழிலைச் செய்யும் ஏந்து வாவு>வாவி (valve) ஆகும். [படுவது பாடு என்றும் அவ்வுவது ஆவு>ஆவி, கவ்வுவது காவு>காவடி என்றும் ஆவது போல் இதைப் புரிந்துகொள்ளுங்கள்.] valve ஓடு சேர்த்து பல்வேறு கூட்டுச் சொற்களை வேதியாலைகளில் கையாளுவோம். எல்லா valve களின் முடிவிலும் வாவி எனச் சிறு சொல் இருப்பது பயன்கொடுக்கும். ஒருசில வாவிகளைக் கீழே பட்டியலிடுகிறேன். 

அமைப்பால் வழங்கும் சில வாவிகள்: 

ball valve = பந்து வாவி 
butterfly valve = பறவட்ட வாவி (வண்ணத்துப் பூச்சி என்று சொல்லமுடியாது. இது திகிரி-disc-போல் உள்ளது. பறக்கின்ற வட்டம் எனவே பறவட்டம்.) 
choke valve = சொருக்கு அல்லது அடைப்பு வாவி (சொருகு என்றும் சொல்லலாம்; சொருக்கு என்றும் சொல்லலாம்) 
gate valve = கதவு வாவி 
globe valve = கோள வாவி 
knife valve = கத்தி வாவி 
needle valve = ஊசி வாவி 
pinch valve = பிதுக்கை வாவி 
piston valve = பொலுத வாவி (சரியான சொல்லைப் பொது அவையில் சொல்லமுடியாது என்பதால் இடக்கர் அடக்கலாய்ப் பொலுத என்று மாற்றியுள்ளேன்.) 
plug valve = புழுக்கை வாவி 
solenoid valve = சுருள்காந்த வாவி 
spool valve = பொந்து வாவி 

செய்முறையில் வழங்கும் சில வாவிகள்: 

check valve = துழவு வாவி 
flow control valve = விளவக் கட்டு வாவி 
pr.reducing valve = அழுத்தம் குறைக்கு வாவி 
thermal expansion valve = தெறும விரிப்பு வாவி 
safety or relief valve = சேம அல்லது வெளிவு வாவி 
 sampling valve = மாதிரியெடுப்பு வாவி 

ஆனாலும் சிலருக்கு நான் சொல்வது புரிபடுவதில்லை. “வாவி ஆங்கில ஒலிப்புக்கு இணையாக உள்ளது. வாவி என்றால் நீர்நிலை, குளம் என்றும் பெயர் உண்டே?” என்று ஒரு நண்பர் வழக்கம் போற்கேட்டார். 

என் மறுமொழி இது: 

“வாவி = குளம், நீர்நிலை என்ற சொல் எப்படி வந்ததென்று ஒருமுறையாவது எண்ணிப் பார்த்தீர்களா? நீங்களாக ஏதோவொரு ஓரப் புரிதலில் கருத்துச் சொன்னால் எப்படி? அவை நீர்ப் பிடிப்புகள் தானே? பிடித்தலும் பற்றலும், வவ்வுதலும் ஒன்று தானே? நான் வேறு ஏதாவது ஒரு மொழி் பேசுகிறேனா? நீரைப் பற்றிக்கொள்வதை நீரை வவ்விக்கொள்வது என்று எனக்குத் தெரிந்த குறைத் தமிழில் கட்டாயம் சொல்லலாம். எனவே நீர்ப்பிடிப்பும் வாவியானதில் வியப்பில்லை. இன்னொன்றும் பாருங்கள் நீரை நிலைத்துப் பிடிப்பது மட்டுமே வாவியல்ல, ஆற்றோடையும் கூட வாவி தான். ஒரு நல்ல அகரமுதலியில் தேடிப் பாருங்கள். இதெல்லாம் இராம.கி.யின் ஆக்கங்கள் அல்ல, தூக்கித் தள்வதற்கு, “வண்டார் குவளைய வாவியும்” என்பது சீவக 337 இல் வரும் சொல்லாட்சி. 

 ”நீங்களெல்லாம் சிந்தாமணியில் வரும் நீரோடை யை ஏற்பீர்கள்? ஆனால் இராம.கி. அடையாளங் காட்டிய, valve இன் வழி ஏற்படும் நீர்ம ஓட்டத்தைத் தவிர்ப்பீர்கள்? ”என்றால் எனக்கு முற்றிலும் வியப்பே ஏற்படுகிறது. நாம் இந்த உலகில் தான் இருக்கிறோமா? அல்லது இல்லையா? நீங்கள் சிறந்த பழஞ் சொல்லாட்சிகளை எல்லாம் தவிர்த்துவிட்டு, உங்களுக்குத் தோன்றும் விந்தைப் புரிதலில் சொற்களைத் தேடுவது உங்கள் உகப்பு என்று நான் நகர்ந்து விடுவேன். வாவி என்ற சொல்லை நான் உரிய பொருள் கொண்டே ஆழப் புரிந்து இத்தனை காலம் (20 ஆண்டுகள்) பயனுறுத்தி வருகிறேன். அப்புறம் ஒன்று சொல்லவேண்டுமே? ” இந்த ஆங்கில ஒலிப்பு: என்பதைக் கேட்டுக் கேட்டு எனக்குப் புளித்துவிட்டது. உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று நேரடியாய்ச் சொல்லிப் போங்கள். அது இருவருக்கும் நல்லது”. 

 இதற்கு நண்பரின் மறுமொழி: 

 “ஐயா, பொறுத்தருள வேண்டுகிறேன், உங்களின் ஆழ்ந்த வேர் சொல்லாய்வு என்னை வியக்க வைக்கிறது. வாவிப் பொருள் மட்டுமே அறிவேன் அதன் ஆழ்ந்த வேரறியேன். இன்று தங்களால் தெளிவாகியது. மிக்க நன்றி ஐயா. Catchment area என்பதற்கு ஏற்ற தமிழ்ச்சொல் நீர்பிடிப்புப் பகுதியை வாவி என அழைத்தலாகும்.” 

 என் மறுமொழி: 

நான் வேரறிந்து சொல்லிப் பலனென்ன? அது யாருக்கு உறைக்கிறது? ”நான் ஆங்கில ஒலிப்பில் சொல்படைக்கிறேன்” என்று யாரோவொரு விவரங் கெட்டவர் சொன்னதை நம்பித் தானே, வாவியை மறுத்தீர்கள்? உங்களிடம் நான் எதைச்சொல்லி என்ன பயன்? அவதூறுகளே நிலைக்கின்றன.

முடிவாக ஒன்று சொல்லவேண்டும். ”தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் இருக்கும் உறவைக் காட்டிவிடக் கூடாது” என்ற தீண்டாமைக் கொள்கைச் சிலரைக் குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்ட வைக்கிறது என்பது நன்றாகவே புரிகிறது.  “அது செய்யக்கூடாது, இது செய்யக் கூடாது” என்று வரும் வாய்ப்புக்களைத் தவறவிட்டு ஒழுமுழ நீளத்திற்கு இன்னும் எத்தனை நாள் சொல்படைப்பார்கள் என்று தெரியவில்லை. வாவி இரண்டெழுத்துத் தான். ”அது வேண்டாம் ஆங்கிலம் மாதிரி இருக்கிறது” என்று சொல்லி நீளச் சொற்களை நாடிப் பலரும் தமிழைக் காப்பாற்றுகிறார் போலும். 

அன்புடன், 
இராம.கி.

Tuesday, August 11, 2020

துயில்

துபாயில் இருந்த நண்பர் சாபு ஒருமுறை மடற்குழுவில் நித்திரை, உறக்கம், தூக்கம் பற்றிக் கேட்டிருந்தார். உடனேயே எழுத முடியாது போய், கொஞ்சம் நாள் கழித்து மடல் எழுதினேன். அதை உங்கள் வாசிப்பிற்குத் தருகிறேன். 

துயில், பள்ளி, துஞ்சல், அனந்தல், 
கிடை, படை, சயனம், கனவு, 
கண்படை, கண்வளரல், கண்ணடைத்தல், 
கண்ணயர்தல், கண்படுதல், கண்முகிழ்த்தல் 

என இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். உறங்குவது என்பதும், இருட்டு, கிடத்தல், படுத்தல், அயர்வு, சோர்வு, வாட்டம், தங்குதல், அடைதல், அணைதல், தாமதம், சோம்பல், சாவு போன்ற கருத்துக்களும் ஒன்றோடு ஒன்று இழைந்தே தமிழில் பயிலுகின்றன. ஒவ்வொன்றாகப் பார்ப்போம். 

 1. ஒரு இடத்தைப் பள்ளும் போது (தோண்டும் போது) பெரிதாகச் செய்தால் பள்ளம். சிறிதாகச் செய்தால் பள்ளி(ல்). நாளாவட்டத்தில் இந்த வேறு பாடு குறைந்து போய், ஏன் மாறிக் கூடப் போய், குகைக்கு மற்றொரு சொல்லாகவே 'பள்ளி' என்பது ஆயிற்று. நாகரிகம், மதங்கள் வளர்ந்த பிறகும் பள்ளிகள் மனிதனின் வாழ்விலிருந்தே வந்தன. குராப் பள்ளி, சிராப் பள்ளி போன்ற ஊர்ப்பெயர்கள் எல்லாமே குகைகள் இருந்ததையும், அதில் ஒரு சாரார் வசித்து வந்ததையும் தெரிவிக்கின்றன. இதே பள்ளி, பின் சமயக் காலத்தில், சமணப் பள்ளி, புத்தப் பள்ளி, பள்ளி வாசல் எனப் புதிய மதத்தார் கோயில்களுக்கும் பயன்பட்டது. இச் சமயப் பள்ளிகளில் கல்வியும் கற்றுக் கொடுக்கப் பட்ட போது, கல்விச் சாலையும் பள்ளியாயிற்று. 

 2. காலையெல்லாம் வேட்டையாடி தன் உண்பசி தீர்த்து அயர்ந்து, சோர்வுற்று மாலையில் திரும்பும் ஆதிகால மனிதனுக்குப் பொழுதுசாய்ந்தால் போக்கிடம் இருட்டும், குவையும், கொடியும் தானே! என்ன தான் தீயின் அண்மையில் இருந்து விழிப்பைக் கூட்டிக் கொண்டாலும், சோர்வும், அயர்ச்சியும் கண்ணைச் சொக்கிக் கொண்டு வரும் தானே! பள்ளப்பட்ட குகையில் கண்ணை மூடிக் கொண்டு கிடக்கும் போது (கொடிய, ஆனால் சிறிய, பாம்புகள் போன்ற ஊருயிரிகள் தன்னைத் தாக்கிவிடக் கூடாது என்பதற்காக கல்லை வெட்டிச் செய்து கொண்ட படுக்கைகளில் படுக்கும் பழக்கம் வந்தது. இந்தப் படுக்கைகளும் பள்ளியென்றே அழைக்கப் பட்டன. பள்ளியில் இருந்து தோன்றியதே படுக்கை. 

அதம் என்றாலும் பள்ளம் (பா அதலம் = பாதாலம் (=பாதாளம்)). பள்ளி எனும் சொல் அதன் நீட்சியில் தூக்கத்தையும் குறித்தது. 

கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அடைந்தான்; 
            கன இருள் அகன்றது; காலையம் பொழுதாய் 
மது விரிந்து ஒழுகின மாமலர் எல்லாம்; 
             வானவர் அரசர்கள் வந்துவந்து ஈண்டி 
எதிர்திசை நிறைந்தனர்; இவரொடும் புகுந்த 
            இரும் களிற்று ஈட்டமும் பிடியொடும் முரசும் 
அதிர்தலில் அலைகடல் போன்றுளது எங்கும்; 
            அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே!

பள்>படு>படுகு>படுக்கு>படுக்கை. (பள்ளப்பட்ட இடத்தில் தான் படுத்தனர் போலும்.) 

 3. நிதலம் என்பது கீழ் உலகங்களில் ஒன்று. (இன்றைய நெதர்லாந்து என்ற நாட்டின் பெயரும் இதே பொருளில் தான் இருக்கிறது. நெதர் என்றால் அந்த மொழியிலும் பள்ளம், தாழ்ந்தது என்றே பொருள்.) நித்திக் கிடப்பது நித்தை. நித்தை வடமொழியில் நித்திரை என்று ஆகும். 

 4. இதே போல கீழே கிடந்தது கிடை. (என்ன ஆச்சு, ஒரே கிடையா இருக்கா? மருத்துவர் கிட்டே போகலாமா?) 

 5. சாய்ந்து இருந்தது சயனம். (பெருமாள் திருவரங்கத்திலே கிடந்த திருக்கோலம். தெற்கே பார்த்து சயனம்) 

 6. படுப்பது படை என்று அறிவது மிக எளிது.
 
 7. அதேபோல ஒடுங்கிக் கிடப்பது, உறங்கிக் கிடப்பது ஆகும். 

 8. கொடிகள் மற்றும் மரக்கிளைகளில் தொங்கித் தூங்கியது தூக்கம் (பிள்ளை தாலில் தொங்கும் போது, தூங்கத்தானே செய்கிறது?) 

 9. இனி அனந்தல். கொஞ்சம் சரவலான சொல். கண்ணை மூடினால் இருட்டு எனும் போது இருட்டே உறக்கத்தின் கூராய்ப் போனது. அல்-இரவு, இருள். அந்,அன் - இன்மை அந்தம் - உள், மறைவு அந்தப்புரம் - உள்ளே இருக்கும் புரம் அல்லது கட்டு, மறைவான கட்டு. அத்தமித்தல் - மறைதல், படுதல், உட்புகுதல், அற்றுப்போதல், இல்லாமற் போதல் அன்+அந்தல் = அனந்தல், இதுவும் உறக்கம் தான். திருவனந்தபுரத்தில் அறிதுயில் கொண்டு படுத்துக்கிடக்கும் அனந்தனைத் தெரியாதார் யார்? அறிதுயில் ஒரு நுண்மையான சொல். அவன் முற்று முழுதாக அறிந்து கொண்டே துயில்வதாக ஒரு பாவனை. 

 10. கனவு என்பது இருட்டு எனும் பொருளில் கல் ஏனும் வேர்ச்சொல்லில் மலர்ந்தது. நாளாவட்டத்தில் dream என்ற இற்றைப் பொருளிற்கு நீண்டுள்ளது. 

மத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்றூத, 
முத்துடைத் தாம நிரை தாழ்ந்த பந்தற் கீழ், 
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து என்னைக் 
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்! 

 11. கண் வளரல் என்பது சுவையான சொல்லாட்சி. ஒரு அருமையான சப்பானிய ஐக்கூ பல ஆண்டுகள் முன் படித்தேன். அடிகள் நினைவில் இல்லை. பொருள் மட்டும் ஞாவகத்தில் உள்ளது. தலைவன் கல் ஒன்று வளருவதைப் பார்த்துக் கொண்டிருப்பதாக அதிலொரு முரண் வரும். அப்படிப் பட்ட ஓர் உணர்வில் வருவது தான், கண் வளரல். (கண் எப்படித் தூக்கத்தின் போது வளரும்? பிள்ளையை மடியில் வைத்து ஆராரோப் போட்டால், பின் அது வளராமல் என்ன செய்யும்?) 

இது பெரும் பாலும் குழந்தைகளைத் தொட்டிலில் போட்டுத் தூங்க வைப்பதற்குப் பயன்படும். ஒரு நாட்டுப்புறப் பாடல்: 

கரும்புருகத் தேனுருகக் கண்டார் மனமுருக, 
எலும்புருகப் பெற்றகண்ணே! இலக்கியமே! கண் வளராய்! 

 12. கண்ணடைத்தல் என்பது சேர்ந்துபோய் எழுகவொண்ணாதபடி கண் செருகிக் கொண்டு வருவது. 

 13. கண்ணயர்தல் கிட்டத் தட்ட அதே பொருளில் தான். 

 14. கண் படுதல் என்பது திட்டிப் (=திருஷ்டி) பொருளாக மட்டுமல்லாது தூங்குவதற்கும் ஓரோவழி பயன்படுகிறது. உடம்பு படுவது போலக் கண்ணும் படுகிறது, பதிகிறது. 

 15. கண்படை, கண்படுதலின் தொடர்ச்சியே. 

 16. கண்முகிழ்த்தல் 'தோன்றும்' பொருளில் அல்லாது. 'மூடல்'  அமங்கலம் என்று கருதி எதிர்ச் சொல்லைப் பயன்படுத்துகிறோம். எங்கள் பக்கம் வீட்டிற்குள், சாமி அறையிலுள்ள விளக்கை 'அணை'யென்று சொல்ல மாட்டார். அதை இடக்கர் அடக்கலாக, 'விளக்கை நல்லா வை' என்று சொல்வார். அதுபோலத் தான் கண்முகிழ்த்தலும். 

 17. எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன். இந்தத் துயில், துஞ்சல் மட்டும் தான் கொஞ்சம் சரவல். இரண்டிற்குமே வேர் துய் தான். துயக்கு, துயங்குதல், துயரம் எனப் பல சொற்கள் சோர்ந்து போகும் பொருளிலேயே வழக்கில் உள்ளன. அதேபொழுது ”துயல்தல்” அசைதல் பொருளில் வருவதைப் பார்க்கும் போது கொஞ்சம் வியப்பு வருகிறது. துயல் = அசைதல் துயில் = ஆழ்ந்த அசைவில்லாத நிலை. இது எப்படி என்றால், மண்= செறிந்த நிலை, மணல் என்பது மண் அல்லாதது= செறியாதது என்பதைப் போல. இங்கே ஓர் உயிர் எழுத்து மாற்றத்தில் மாறுபட்ட பொருள்கள் கிடைக்கின்றன. 

 18. துஞ்சல், துயிலின் நீட்டமே. 

அன்புடன், 
இராம.கி.

Friday, August 07, 2020

புனிதம்

இச்சொல் பற்றி தமிழ்ச் சொல்லாய்வுக் குழுவில் கேட்கப் பட்டது. அது ”புண்யம் எனும் சங்கதச் சொல் தொடர்பானது” என்று ஒருவர் கூறினார். நானறிந்தவரை அது தவறு. ஒரு சொல்லைச் சங்கதம் என்றுசொல்ல விழைவோர் கூடியமட்டும்  இணையச் சங்கத அகரமுதலிகளில் சொல்லைச் சரிபார்த்துப் பின்னர் சொன்னால் நன்றாக இருக்கும். மாறாக, கேள்விப் பட்டதையெலாம் வைத்துத் தான்தோன்றியாய்ச்  சொல்ல முற்படுவது பலநேரம் முரணாக அமைந்து விடும். மீண்டும் சொல்கிறேன் புண்யத்திற்கும் புனிதத்திற்கும் எத்தொடர்பும் இல்லை. சங்கத அகரமுதலியே கூட அப்படிச் சொல்லவில்லை. புனிதமெனும் சொல் பெரும்பாலும் வேறு உருவில் தமிழில் எழுந்து பின் சங்கதம் போய்த் திரிந்து, மீண்டும் தமிழுக்கு மாற்றுருவில் வந்தது. 

வேள்வி செய்வதை  நாடும், இறப்பின் பின்னால் உடலை எரிக்கும், ஆரியரின் பண்பாட்டில் படிமைகள் என்பன தொடக்க காலத்தில் கிடையா. தமிழருக்கும் அவர் தொடர்பாளருக்கும் மட்டுமே, இறந்தோர் உடலைப் புதைக்கும் காரணத்தால், நடுகற்களும், படிமைகளும் உண்டு, ஒவ்வொரு நினைவு நாளிலும். நடுகல்லை/ படிமையைக் கழுவித் துடைத்துப் பொட்டிட்டு, துணி கட்டி, அலங்காரம் பண்ணி, பூச்சூடி, படையலிட்டு வருவது இன்றும் உள்ள நாட்டார் பழக்கம். இப்பழக்கங்களைப் படிமைகளுக்கும் செய்து நாம் அழகு பார்ப்போம். இற்றைக் கோயில்களிலும் இதையே செய்கிறோம். நடுகல் பேணுதலில் வந்த பழக்கம் இதுவாகும். இதற்குச் சொல்லைச் சங்கதத்தில் தேடுவது பொருளற்றது/

படிமையைக் கழுவித் தூய்மை செய்வதை பூசுதல் என்றே தமிழில் சொல்வர். ”நீரான் வாய் பூசுப”-நான்மணிக் கடிகை 35. ”பூசிக் கொளினும் இரும்பின் கண் மாசொட்டும்”-நான்மணிக் 99 . தரை மெழுகுதலும் தமிழில் பூசுதல் எனப்படும். ”புனலொடு விரவியே பூவின் அல்லது” புரலிங். இட்டலிங். 37 . சந்தனம், நீறு போன்றவற்றைப் படிமையில் அல்லது உடலில் தடவுவதும் ”பூசுதல்” எனப்படும் ”நீறு பூசி நிமிர்சடை மேற்பிறை” - தேவா.627. 

”பூசு” என்பது மற்ற தமிழிய மொழிகளிலும் உண்டு. ம. பூசுக. க. பூசு; கூசு; தெ. பூயூ, து புசுனி, பட. கூசு. இது புல் எனும் பொருந்தற் கருத்தில் எழுந்த சொல். நடுகல் பரப்பில் நீர், சந்தனம், நீறு போன்றவற்றைப் பொருந்திப் பரவுவது. புல்> புள்> புய்>* (பூய்)> பூசு> பூசு-தல் என்று இச்சொல் வளரும். இதன் பெயர்ச்சொல் தான் பூசை. அதைச் சிலர் பூசெய் என்றெலாம் தவறாய்த் திரிப்பார். 

எச்சிலைத் தன் முன்னங்காலால் எடுத்து முகத்தில் பூசிக் கொள்ளும் விலங்கும் பூசை எனப்பட்டது. *பூய்/பூசு என்பது யகர> ஞகர>நகரத் திரிவில் பூசு> பூஞு> பூநு என்று திரியும். பூசுதலின் பெயர்ச்சொல்லான பூசை, படிமங்களுக்குச் செய்யும் கடனோடு நின்றுகொண்டது.  பூசை> பூஞை> பூநை> பூனை என்று இயல்பாய்த் திரியும் சொல்லோ விலங்கிற்குப் பயனாகியது, தமிழில் உள்ள பூசையும், பூனையும் இன்றும் புழக்கத்தில் வெவ்வேறு பொருளைக் குறிப்பன.  ஆனால் சங்கதத்தில் *பூய் என்ற தமிழ் வேர், பூ என்ற தாதுவாய் மலர்ந்திருக்கிறது  இதில் உருவான சொற்களாய், மோனியர் வில்லியம்சில்  (https://sanskrit.inria.fr/MW/161.html#puu) கீழ்க்கண்டவாறு போட்டிருப்பர்.

पू [ pū ] [ pū ]1 Root cl. [9] P. Ā. ( Lit. Dhātup. xxxi , 12) [ punā́ti ] , [ punīté ] ( 3. pl. Ā. [ punáte ] Lit. AV. , [ punaté ] Lit. RV. ; 2. sg. Impv. P. [ punīhi ] Lit. RV. , [ punāhí ] Lit. SV.) ; cl. [1] Ā. ( Lit. xxii 70) [ pávate ] ( of P. only Impv. [ -pava ] Lit. RV. ix , 19 , 3 , and p. gen. pl. [ pavatām ] Lit. Bhag. x , 31 ; p. Ā. [ punāná ] below , [ pávamāna ] see p. 610 , col. 3 ; 1. sg. Ā. [ punīṣe ] Lit. RV. vii , 85 , 1 ; pf. [ pupuvuh ] . [ °ve ] Lit. Br. ; [ apupot ] Lit. RV. iii , 26 , 8 ; aor. [ apāviṣuḥ ] Subj. [ apaviṣṭa ] Lit. RV. ; fut. [ paviṣyati ] , [ pavitā ] Gr. ; ind.p. [ pūtvā́ ] Lit. AV. ; [ pūtvī́ ] Lit. RV. ; [ pavitvā ] Gr. ; [ -pū́ya ] and [ -pāvam ] Lit. Br. ; inf. [ pavitum ] Lit. Br.) , to make clean or clear or pure or bright , cleanse , purify , purge , clarify , illustrate , illume (with [ sáktum ] , " to cleanse from chaff , winnow " ; with [ krátum ] or [ manīṣā́m ] , " to enlighten the understanding " ; with [ hiraṇyam ] , " to wash gold " ) Lit. RV. ; (met.) to sift , discriminate , discern ; to think of or out , invent , compose (as a hymn) Lit. RV. Lit. AV. ; (Ā. [ pávate ] ) to purify one's self. be or become clear or bright ; (esp.) to flow off clearly (said of the Soma) Lit. RV. ; to expiate , atone for Lit. ib. vii , 28 , 4 ; to pass so as to purify ; to purify in passing or pervading , ventilate Lit. RV. (cf. √ [ pav ] ) : Pass. [ pūyáte ] , to be cleaned or washed or purified ; to be freed or delivered from (abl.) Lit. Mn. Lit. MBh. : Caus. [ paváyati ] or [ pāvayati ] ( ep. also [ °te ] ; aor. [ apīpavat ] Gr. ; Pass. [ pāvyate ] Lit. Kāv.) , to cleanse , purify Lit. TS. Lit. Br. Lit. : Desid. , [ pupūṣati ] , [ pipaviṣate ] Gr.: Desid. of Caus. [ pipāvayiṣati ] Gr. ( ( cf. Gk. 1 ; Umbr. (pir) ; Germ. (Feuer) ; Eng. (fire) . ) )
  .           
தவிர,  पुनीत [ punīta ] [ punītá ] m. f. n. cleaned , purified Lit. MBh. என்றும்  கொடுத்து இருப்பர். பூவிலிருந்து புனித எப்படி வந்ததென்று அங்கு சொல்லமாட்டார். தமிழில் சொல்வது எளிது. 

பூசு-தல் வினையிலிருந்து பூசிதம் என்ற பெயர்ச் சொல் எழலாம். பூசைக்கு உரியவரை. நம்மூரில் பூசிக்கப் படுபவர் என்போம். முன்சொன்ன ய>ஞ>ந திரிவில் இது பூசிதம்> பூஞிதம்> பூநிதம் ஆகும்.  பெரும்பாலும் பூநிதமே வடக்கே கடன் வாங்கப்பட்டு, முதலெழுத்தைக் குறிலாக்கி புநித என்றாகி இருக்க வேண்டும். மீண்டும் தமிழில் அதைக் கடன் வாங்கிப் புநித என்பதைப் புனிதம் ஆக்கியுள்ளோம். பேசாமல் பூசிதம் என்றே சொல்லலாம். சங்கதத்தில் பூசை, பூசையர் என்பதையும் வேறுவகையில் பூஜ்ய, பூஜ்ய(ர் என்றாக்குவார். பூஜ்யஸ்ரீ என்பது நம் பூசிதத்திற்கு இணையாகவும் வேறு வகையில் ஆளப் படும். பேரன் தாத்தனுக்கு முந்தி என இன்று நம்காதில் சிலர் பூசுற்றுகிறார். 

ஒரு காலத்தில் நான் படித்த St Joseph's college ஐ புனித வளனார் கல்லூரி என்று சொல்வோம். சிலர் தூய வளனார் கல்லூரி என்றுஞ் சொல்வர். மேலே எழுந்த புரிதலுக்குப் பின் பூசித வளனார் கல்லூரி அல்லது தூய வளனார் கல்லூரி என்று சொல்லுமாறு பரிந்துரைக்கிறேன்.       

On-line, off-line

மேலே உள்ள ஆங்கிலச் சொற்களுக்கு நண்பர் ஒருவர் தமிழில் இணை கேட்டிருந்தார். நம்மில் பலரும் இதில் முகன்மையான line இற்குச் சொல் தேடாது, on, off இற்குச் சொல் தேடிச் சுற்றி வளைத்து ஒப்பேற்ற முயல்வோம். என்னைக் கேட்டால் பல இடத்தும் பயனுறுத்தும்படி line க்குப் பொதுச்சொல் காணாது இக் கலைச்சொல் சிக்கலைத் தீர்க்க முடியாது என்பேன். பொதுவாக,  line க்குக் கோடு என்றே பலரும் சொல்வர். ஆனால் அதுமட்டும் இணைத் தமிழ்ச்சொல்லல்ல. கோடலின் அடிப்பொருள்  வளைதலே.  “சரி, நேர்கோடு” எனச் சிலர் சொல்ல விழைவார். அதுவும் முரண்தொடையே. அடிப்படையில் 2 புள்ளிகளைக் கயிறால் கட்டித் தொடர்புறுத்துவதை  line என்பார். ஆங்கிலத்தில், இப்படியே வரையறுப்பார். கயிறு தொய்யின் சரியான தொலைவு காணவியலாது. இழுத்துக் கட்டியே line நீளம் அளக்கமுடியும். 

line (n.) a Middle English merger of Old English line "cable, rope; series, row, row of letters; rule, direction," and Old French ligne "guideline, cord, string; lineage, descent" (12c.), both from Latin linea "linen thread, string, plumb-line," also "a mark, bound, limit, goal; line of descent," short for linea restis "linen cord," and similar phrases, from fem. of lineus (adj.) "of linen," from linum "linen". 

இழுக்கப் பட்டது (to draw, to pull, to haul) தமிழில் இழையாகும். திருக்கு ஏறாத நூலைக் குறிக்க இழை பயன்பட்டது. எல்லா இடத்தும் பொதுக் கலைச் சொல்லாய் இழையைப் பயன்படுத்தினால், குழம்பும்.  இழை என்ற சொல் filament இற்கு வெகு சிறப்பாய்ப் பொருந்தும். கயிறு (string) நூல் (spun), கோடு, திரி என வெவ்வேறு சொற்கள் வெவ்வேறு விதப்பிற்குப் பொருந்தியவை. (திரி, பஞ்சைத் திரிப்பதற்குப் பயன்படும். thread இக்குச் சரிவராது. திரியீடு (= திருக்கு இடு) என்று சற்று திரித்து நான் சொன்னது ஒரு பேராசிரியருக்குப் பொறுக்க வில்லை. ”ஆங்கில ஒலிச்சொல் படைக்கிறேன்” என்று  திட்டிவிட்டார். இங்கே சொல்லும் line இற்கும் திட்டத்தான் போகிறார். இருப்பினும் செய்கிறேன்.

இழை, நூல், திரி, கயிறு போன்றவற்றோடு தொடர்புடைய, அதேபொழுது line எனும் புதுக்கருத்தை உள்வாங்கி, ஒருசொல் வேண்டுமென நினைத்தேன். இழுக்கலை இழுவல் (இழுவு-அல்) என்றும் சொல்லலாம். இழுவு, இழுக்கும் தொழில் குறிக்கும்.  இதை இழும்/இழுன் என்றும் சொல்லலாம். இழுக்கப் பட்டது இழுவை/இழுமம்/இழுனம்/இழுனை ஆகும். இழுத்துக் கட்டலை இழுமுதல்/ இழுனுதல் என்றும் சொல்லலாம். இழுமம்/இழுனம்,  அல்லது இழுனை என்பதை line க்கு ஈடாய்ப் பயன்படுத்துகிறேன். இதுவரை எச் சிக்கலும் இப்பயன்பாட்டில் நான் காணவில்லை. இதன் வினைச்சொல் இழுனு-தல் என்றாகும்.

நாம்புரியும் செலுத்தில் (process) சாரா வேறி (independent variable)யின் மதிப்பில் கொஞ்சம் வேறுபட, சாரும் வேறியும் (dependent variable) அதே விழுக்கு வேறுபடும் எனில், இத்தகை உறவுள்ள செலுத்தை, இழுனியச் செலுத்து (linear process) என்றும், கன்னா, பின்னாவென அளவிறந்து சாரும் வேறியில் நிறைய விழுக்கு வேறுபடுமானால் இழுனாச் செலுத்து (non-linear process) என்றும் இற்றை அறிவியலில் சொல்வார். இழுனிய செலுத்தில் அதன் சாய்வு (gradient) மாறாதிருக்கும்;  இழுனாச் செலுத்தில் சாய்வு மாறிக் கொண்டே வரும் (gradient will keep changing). இழுனாச் செலுத்துகள் பலவும் அவற்றின் வாகு (behaviour) களால், இன்றும் அறிவியலில் புதிராகவுள்ளன. அதனால் பலரும் இவற்றை ஆழ்ந்து படிக்கிறார். கணிப்பயன்பாடு கூடிய பிறகே,  இப்படிப்பு ஓரளவு பெருகியுள்ளது. இப்போது கூட்டுச் சொற்களுக்கு வருவோம். இதில் நான் இயலுமையைச் சொல்கிறேன். இவற்றைக் காட்டிலும் பழகிய சொற்கள் இருப்பின் பயிலலாம்.

lineo- = இழுனிய
airline = பறப்பு இழுனம்
align = இழுனாக்கு
baseline = அடியிழுனை/அடியிழை
bee-line = தும்பி இழுனை/தும்பியிழை
borderline = வரம்பிழுனை/வரம்பிழை
byline = எழுதிழுனை = எழுனை
clothes-line = துணி இழுனை/கயிறு
coastline = கடற்கரை
curvilinear = சுருவு இழுனை
dateline = நாள் இழுனை
deadline = முடிவு இழுனை
delineate = இழுனப் படுத்து
flat-line = மட்ட இழுனை
front-line = முன் இழுனை
guideline = காட்டு இழுனை
hairline = முடியிழை
hard-line = கடு இழனை
headline = தலை இழுனை
hemline = முன்றானை

இனி, 
on-line = இழுனை(யின்) மேல். Will you come on the line? இழுனையின் மேல் வருவீர்களா? 
off-line = இழுனை(யை) விட்டு Will you come off the line? இழுனையை விட்டு வருவீர்களா?

switch on = மேற்சொடுக்கு Can you switch  it on? மேற்சொடுக்க முடியுமா?
switch off = விடுச்சொடுக்கு Can you switch it off? விடுச்சொடுக்க முடியுமா?

 

Thursday, August 06, 2020

இராமேசம் - 3

கடற்கரை மணலில் நுணுகித் துளைக்கும் இல்லிப் பூச்சியைப் பார்த்திருக்கிறீர்களா? இல்லிக் கொண்டே போவதால் அது இல்லிப் பூச்சியானது.  இல்லி - துளை, இல்(லு)தல் - குத்துதல் to pierce, துளைத்தல் to make a hole, பிளத்தல் to cut into two, கீறுதல் to divide; பொடித்தல், நுண்ணிதாக்கல் எனப் பல்வேறு பொருள்களுண்டு. 

இல்> ஈல்> ஈர்>  ஈர்ந்தை = பொடுகு, பேன்முட்டை. என்ற பொருள்களுண்டு. இல்லிக் குடம்= ஓட்டைக் குடம், இல்லப் பட்டது இல். மலைகளிற் குகைகள் உள்ளனவே? இயற்கையாய் இருந்தாலும் சரி, செயற்கையாய் இருந்தாலும் சரி, அவை தாம் முதலில் உருவான இல்கள். மாந்தனாற் கட்டப்பட்ட மற்றவை யெல்லாம் அப்புறம் எழுந்தவை. இல்லியது இல். கல்லில் தோண்டியது, துளைக்கப் பட்டது இல். இல்>ஈல்>ஈ என்றாலும் குகைப் பொருளுண்டு. குகையைப் பார்த்தே வீடு, மனைக் கட்டுமானங்கள் எழுந்தன.

”இல்லெனில் இடமென்றும்  பொருளுண்டு. இருத்தல் வினையும் இல்லிலிருந்தே இல்> இர்> இரு எனத் தோன்றியது. இருத்தலுக்குப் பகரியாய் ’குத்த வைத்தல்’ என்பார். இருந்தல் = குந்தல்; உள்ளுதலில் இருந்து உட்கார்தல் எழுந்தது போல் இல்லுதலில் இருந்து இருத்தல் எழுந்தது.” இல் தமிழ்ச்சொல் மட்டுமல்ல, தமிழிய மொழிக் குடும்பச் சொல்லும் தான். ம.இல்; க. இல், இல்லு; தெ. இல்லு; து. இல்லு; கோண். இல், இந்த்; பர் இல், பொதி (கூரை0; நா. எல்ல; கொலா.எல்ல; கூ.இடு; குவி. இல்லு.

இல்> ஈல்> ஈள்; ஈள்தல்> ஈளுதல்> ஈட்டுதலின் கருவிப் பெயர் ஈட்டி. ஈல்தல்/ஈர்தல் என்றால் பிரித்தல், பிளத்தல் என்ற பொருளுண்டு. ஈல்> ஈர்> ஈ = பிரித்தல், பிளத்தல்”

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர் ஈரும் 
வாளது உணர்வார்ப் பெறின் 
                          - திருக்குறள் 334

இல்> ஈல்> ஈலி. ஈலி எனில் கைவாள் (sword), சுரிகைப் (dagger) பொருள்களுண்டு. ஈர்தல் = இரண்டாக்கல். பனை, தெங்கு, ஈச்சை போன்றவற்றின் ஓலைக் காம்பை இரண்டாய்ப் பிரிப்பதால், ”ஈர்க்கு” என்ற சொல் எழும். ஈரும் பொருள் நிறைந்த மரம் ஈந்தாகும். பேச்சு வழக்கில் ஈச்ச மரம். ஈர்- இரு- இரள்- இரண்டு என்ற சொற்களும்  இல்- ஈலிற் பிறந்தவையே. 

ஓர் எண்ணை இன்னொன்றால் வகுப்பதும் ஈல்தலே. வகுத்து வருவதை ஈல்வு> ஈர்வு> ஈவு என்போம். ஓர் ஆறு போகும் வழியில் 2 ஆய்ப் பிரிந்து மீளக் கூடும் எனில்,  நடுத்தீவை அரங்கம் என்பார். *அருத்தது> அறுத்தது அரங்கம். அரங்கம் போல் அமையும் சொல் இலங்கை. இல்லியதை (= அறுபட்டதை) இலங்கியது என்பார். (ஈழமும் ஈலில் எழுந்ததே.) சிறுபாணாற்றுப்படையில் ஓய்மா நாட்டு மன்னன் நல்லியங் கோடனின் ஊர் மாவிலங்கை. இது தென்பெண்ணை ஆற்றில் திண்டிவனம் அருகிலுள்ள ஓர் ஆற்றுத் தீவு.” தமிழ்நாட்டின் தென்கிழக்கிலுள்ள இலங்கைத் தீவும் இப்படி முகன நிலத்தில் இருந்து பிரிந்ததே.  

ஒரு காலத்திற் கடல் மட்டம் உயர்ந்து, முகனை நிலத்திலிருந்து (main land)ஈல்ந்து (>ஈழ்ந்து) பிரிந்தது அந்நிலம். ஈழம், இலங்கை என்ற இரண்டுமே நற்றமிழ்ச் சொற்கள். யாரோ புரியாமல் இலங்கையைச் சிங்களமென்று தவறாகச் சொல்ல, சிலர் அதைப் பிடித்துத் தொங்குவார். அந்நாட்டின் பெயரே தமிழ்ப் பெயர் தான். இல்> ஈல் என்பது முகனைச் செய்தி. 

பழந்தமிழகம் என்பது இற்றைத் தமிழ் நாடு மட்டுமல்ல; இலங்கைத் தீவும் அதன் தெற்கே கடலுள் மூழ்கிய பகுதிகளும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவையே. இற்றைத் தமிழ்நாடு ஈழம் ஆகியவற்றின் இடைப்பட்ட கடற்பகுதியும், குமரியின் தெற்கே கடல்கொண்ட பகுதிகளும் எனத் தமிழர் இழந்த நிலப்பகுதி ஏராளம்  கடல் கொண்ட குமரிக்கண்டம் என்பது கற்பனை. ஆனால் கடல் கொண்ட குமரிநிலம் என்பது முற்றிலும் உண்மை. 

இன்னொரு செய்தியுமுண்டு. ஆங்கிலத்தில் isle உண்டல்லவா? மேலையன் ஈல்>ஈழ் என்று தானே அதைப் பலுக்குகிறான்?. ”சொல் தோற்றம் தெரியாது” என்று அகர முதலியிற் போடுவார். island இற்கும் ”தண்ணீர் மேலுள்ள நிலம்” என்று சுற்றி வளைப்பார். 

ஈழம் என்ற சொல் தெரிந்த பின்னும் நாம் சுற்றி வளைக்க வேண்டாம். முகனை நிலத்தில் இருந்து ஈல்ந்தது என்பதில் அறிவியல் உண்மை உள்ளது. கூர்ந்து கவனியுங்கள் ஈழமெனும் விதப்புப் பெயர், இதுவே மேலை நாடுகளில் உலகத் தீவுகளைக் குறிக்கும் பொதுப் பெயராகலாம் என்று நாம் உணர்கிறோம். அப்படியெனில் தமிழன் கடலோடியது எப்போது? நாமோ ஈல்>ஈழம் என்பதும் இல்> இலங்கு> இலங்கையும் தமிழில்லை எனச் சொல்லித் திரிகிறோம். 

இல்லை என்றவுடன் இன்னொன்று நினைவுக்கு வரும். இல்-தல்= துளைத்தல். துளைத்த பின் குறித்த இடத்தில் உள்ளீடு இருக்காது. அதனால் இன்மைப் பொருள் இல் எனும், துளைப்பொருளில் இருந்து, எழும்பியது. மேலே, ”இலம் பாடு” போலும் வறுமைச் சொற்களும் எழும். இலகு போல் நொய்மைச் சொற்களும், இலவு போல் மென்மைச் சொற்களும் இல்லிலிருந்து எழுந்தன. நூறாயிரங் குறிக்கும் இலக்கமும் நொய்மைப் பொருளில் எழுந்ததே. இலக்கத்தின் வேர் தமிழிலிருந்து, பின் வடக்கே போய்ப் பெயர்ச்சொல்லாகி மிகப் பின்னாளில் தமிழுக்குள் கடன்வாங்கி வந்த சொல். 

இன்னொன்றும் உண்டு. இல்லிக் கொண்டே போனால் என்னவாகும்? ஒரு மட்டத்திலிருந்து இறங்குவோம் தானே? இல்லித்தது இலியும்; பின் இழியும். இழிதல் எனில் இறங்குதல். இச் சொல் நீர்மம் இறங்குதற்கு விதப்பாய்ப் பயனாகும். இழிவெனும் தாழ்ச்சிப் பொருளும் இதில் எழுந்ததே. இழிகுதல்> இயிகுதல்>ஈகுதல்>இகுதல் வளர்ச்சியில் இறங்குதலுக்கு இன்னொரு சொல் எழும். (ழகரம் யகரமாய் மாறுவது வட தமிழ்நாட்டுப் பழக்கம்.) இகுத்தல் எனும் பிறவினை தாழ்த்தற் பொருள் கொள்ளும். இகழ்தல் வினையும் இகுதலின் நீட்சி தான். 

இலங்குதலின் எதிர் இலங்காதிருத்தல். சுள்> சொள்)> சொள்கு>  சொகு> சோகு> சோகம் என்ற சொல் திரண்ட தொடையைக் குறிக்கும். [ஊருவும் கவானும் சோகமும் குறங்கே” திவாகரம் 351]  திகு திகு எனத் திரள்வதாலேயே thigh எனும் இந்தை யிரோப்பியச் சொல் பிறந்தது. இலங்கா சோகம்= பிரியாத் தொடை. இற்றை வட மலேசியாவின் இப் பழம்பெயர் எத்தனை பேருக்குத் தெரியும்? ஜோகூர் வரை ம்லேசிய நிலம் தொடையாய் நீண்டு கிடக்கிறது. பொ.உ. 2 ஆம் நூ.வில் காழக(கடார) அரசு என்பது இலங்கா சோகத்தில் தொடங்கியது என்பார். இதுவே தென்கிழக்கு ஆசியாவின் முதலரசுத் தொடக்கமாம். 

இலங்கை முகனை நிலத்திலிருந்து இற்றைக்கு 18000-3000 ஆண்டுகள் முன் இந்தியாவில் இருந்து நிலம் பிரிந்த போது ஒரேயொரு துருத்தி மட்டும் நம்மில் இருந்து பிரியாதிருந்தது. தமிழ் மக்களின் பொதுப் புத்தியில் இந்த உண்மை  நிலைத்துப் போனது. ”இலாத” என்பது ”இராத” என்றும் திரிவு பெறும். இரா நிலம் = பிரியா நிலம். நம்மூரில் பிரியாத துருத்தியை இராமம் என்றே அழைத்திருக்க வேண்டும். 

இன்று கோயிலையும்  ஊரையும் சேர்த்து. இராமேசம் என்கிறோம். இராமத்தின் ஈசர் இராமேசர்.  சங்கதம் இராமேசத்தை இராமேஸ்வரமாக்கும். 

இலங்கையை இதனோடு உடன்சேர்த்து ஒரு இராமாயணக் கதையைக் கட்டி, ”சண்டை முடிந்து, இராமர் இங்கு வந்தார், ”இராம நாதர்” எனும் மணல் இலிங்கத்தைச் சீதை.இராமர் பிடித்தாள்/ர். வடக்கிருந்து அனுமன் இன்னொரு  கல்லைக் கொண்டு வந்தான். அதை “இராமலிங்கம்” என்றாக்கினார்.  - இப்படி அந்தக் கதை போகும். 

இரு இலிங்கங்கள் இன்றும் கருவறையில் உள்ளதற்கு இப்படியாகச் ஒரு சுவைக்கதை எழும். யாருக்கு உண்மை தெரியும்? சொல்லுங்கள். சம்பந்தர் கூட இக்கதையை நம்புகிறார். அவரின் இராமேச்சுரப் பதிகம் படித்தால் புரியும். உண்மை எதுவென்று தெரியவில்லை. வால்மீகி இராமாயணத்தை ஆய்ந்தவர், இலங்கையின் இருப்பிடத்தை வேறாகச் சொல்வார். நம்மூர் ஊண்பொதிப் பசுங்குடையார் பாடலில் தொன்முதுகோடிக்கு (கோடிக்கரைக்கு) இராமன் வந்ததாய்ச் சொல்வர். ஆக இன்னும் ஆய்வு செய்ய வேண்டிய புலம். இராமேசத்தின் உட்பொருளாய் உள்ளது 

முடிவாக என் கூற்று: ”இரு/ஈர்” என்பது புரிந்தால் இராமம்= பிரியாநிலம் என்பது புரியுமென எண்ணுகிறேன்.  இராமனை விட்டுவிடச் சம்மதியா அந்த ஊர்க்காரர் நான் சொல்வதை ஏற்கமாட்டார். 

அன்புடன்,
இராம்.கி.



Wednesday, August 05, 2020

இராமேசம் - 2

”இராமேசம்” கட்டுரையை ஒருவழி முடித்ததாகவே முதலிற் கருதினேன். ஆனால் அது முடியவில்லை என்று தோன்றியது. 2 காரணங்கள். 

1. சேதுவும் கோடியும் வடமொழியெனச் சிலர் சொன்னது. 
2. ”இராமேசத்தில்” இன்னும் நான் தோய்ந்தது. 

முதற்கூற்றிற்கு விடை சொல்வதும், 2 ஆவதைப் பதிவு செய்வதும் தேவை. அதனாற்றான் இத்தொடர்ச்சி ஏற்பட்டது. 

முதலில் ”வடமொழி” ஆட்டையைப் பார்ப்போம். ”சேரே திரட்சி” என்பது தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரியியலின் 65 ஆம் நூற்பா. சேரிற் பிறந்த சொற்கள் மிகப்பல. அச்சொற்கள் பிறக்கையில், சிலவற்றில் ரகரம் வெளித் தெரிவதும், சிலவற்றில் கரந்துறைவதும் உண்டு. இன்னும் சில சொற்களில் ரகரந் திரிந்து வேற்றொலிகள் ஆவதுமுண்டு. 

மொழிவளர்ச்சி, இது போன்ற சொற்றிரிவுகளாலேயே ஏற்படுகிறது. ஈன் (gene) வெளிப்பாட்டு மாற்றங்களால் (mutations) எப்படி உயிரினங்கள் உலகிற் பெருகினவோ, அதுபோல் சொல் திரிவுகளால் மொழிச் சொற்கள் பெருகின. அதே பொழுது, கண்டமேனிக்கு மொழிச்சொற்கள் திரிவதுங் கிடையாது, அவற்றின் மாற்றங்களில் வியக்கத் தக்க ஒழுங்கும், விதிமுறைகளுமுண்டு. 

குருமிய (chromosomes) ஒழுங்கு முறைகளையும், மாற்றங்களையும் எப்படி ஈனியல் கண்டுபிடிக்கிறதோ, அதுபோல் தான் சொற்றொகுதிகளின் ஒழுங்கு முறைகளையும், திரிவுகளையுஞ் சொற்பிறப்பியல் கண்டுபிடிக்கிறது. இற்றை ஈனியல் எப்படியோர் அறிவியலோ, அதுபோற் சொற்பிறப்பியலும்  ஓர் அறிவியல் தான். 

(தமிழரின் போகூழாய் இணையத்தில் தமிழ்சொற்பிறப்பியல் பற்றி, இனம் புரியாக் குழப்பமுள்ளது. ”பொய்யுடை ஒருவன் சொல் வன்மையினால் மெய்போலும்மே மெய்போலும்மே” என்பார் பெரியோர். தமிழ்ச்சொல் பலவும் சங்கதக் கடன் எனும் பொய்யைக் காலங் காலமாய்க் கேட்டு வந்ததால், நம் மேலேயே நமக்கு நம்பிக்கையில்லாது போனது போலும். தமிழர்களே! அருள் கூர்ந்து விழிப்புறுங்கள். 

இங்கே சேரையும், அதனோடு தொடர்புடைய, சேருக்கு முந்தைய, ’சால்’, ’சார்’ தொடர்பான சொற்களையும் பார்க்கிறோம். (இவற்றிலும் திரிவுகளுண்டு.) சாகார/சேகாரச் சொற்களை மட்டுமே பட்டியலிடுகிறேன். இவற்றின் சொற் பொருள்களுள் கூட்டம், திரட்சி, பிணைப்பு என்பன, தெளிவாக வெளிப்படும். முதலில் சாகாரச் சொற்களைக் காண்போம். ரகரம் வெளியில் தெரிவதையும், கரந்துறைவதையும், திரிவதையும் சேர்த்தே தருகிறேன். 
 
சார்= கூடுகை, பக்கம், அணைக்கரை (3ஆம் பொருள் முகன்மை), தாழ்வாரம்; 

சார் கொடுத்தல்= அணுகவிடல்; 
சார்ச்சி= தொடர்பு, சேருகை; 
சார்த்தல்= இணைத்தல், சாரச் செய்தல்; 
சார்த்து வகை= சார்பு வகையால் கூறும் முறை; 
சார்த்துவரி= பாட்டுடைத் தலைவனை இடம், பேரோடு சார்த்திப் பாடும் வரிப்பாட்டு; சார்தல்; 
சார்ந்தவர்= சுற்றத்தார், நண்பர்; 
சார்ப்பு= ஆதாரம்; 
சார்பறுத்தல்= துறத்தல்; 
சார்பு; சார்பெழுத்து; சார்மனை; சார்மானம்; சார் வணை= சாய்தற்குரிய அணை; சார்வு; 
சாரி= கூட்டம்; 
சாரியை= சார்ந்து வரும் இடைச்சொல்; 
சாரை= அடுத்தடுத்து வருவது; 
சால்= நிறைவு; 
சால்தல் = நிறை தல், பொருந்தல்; 
சாலம்= கூட்டம்; 
சாலை= நிறையுமிடம், கூடம், கொட்டில், மண்டபம், மரஞ்செறிந்த பாதை; சாவகன்= சார்ந்திருப்பவன் வேதமறுப்பு நெறிகளில் பழகுஞ் சொல், அறிவரைச் சார்ந்தவர்; 
சா(ர்)வடி = சாரும் இடம், தங்குமிடம்; 
சார்>சாறுதல் = பெருக்கல்; 
சாறு = பெருகிய கூட்டம் சேரும் திருவிழா,

இனிச் சேகாரத்தில். ரகரம் வெளித்திரிவதையும், கரந்துறைவதையும், திரிவதையும் தனிப் பட்டியல்களில் காட்டுகிறேன். முதலில் ரகரம் வெளித் தெரியுஞ் சொற்கள்: 
சேர்க்கை= திரள்கை, கூடுகை; 
சேர்கட்டல்= தானியம் அளந்து நெற்கட்டி விடல்; 
சேர்கால்= தளைகால்; 
சேர்த்தல்= இயைத்தல், தொடுத்தல், கலத்தல், புணரச்செய்தல், கூட்டிக் கொள்ளல், கட்டல், இடைச் செருகல், ஈட்டல், தனதாக்கல், அடைவித்தல்; 

(சேதுப்பொருளறிய முகன்மைத் தொழிற்பெயர் சேர்த்தல்.); சேர்த்தி; சேர்தல்; சேர்ப்பு= வாழ்விடம், கடற்கரை; 
சேர்பு= வாழ்விடம்; 
சேர்மானம்= இணைப்பு, கூடுகை; 
சேர்விடம்; சேர்வு; சேர்வை; சேர= கூட; சேரக்கட்டுதல்; 
சேரி= ஊர். 

இச்சொற்களின் எல்லாப் பொருள்களையும் இங்கு பட்டியலிடவில்லை. அடுத்து ரகரம் கரந்துறையும் சொற்கள்: 

சே(ர்)க்காளி= தோழன்; 
சே(ர்)க்குப் புள்ளி= உறவினரற்றுத் திரிந்தவன்; 
சே(ர்)க்கை= மக்கட் படுக்கை, விலங்குப் படுக்கை, தங்குமிடம், பறவைக்கூடு; சே(ர்)க்கைப்பள்ளி= படுக்கை; 
சே(ர் )கண்டி= காவலர் உறைவிடம்; 
சே(ர்)கரம்= கூட்டம்; 
சே(ர்)து= செய்கரை, நீரணை, பாலம் (இவற்றின் விளக்கம் கீழே. செய்வதும் சேர்ப்பதும் தொடர்புள்ளவை) 
சேது பந்தனம்= அணைக்கட்டு (சங்கதமெனத் தெரியுஞ் சொல். பந்தனம், பந்தத்தில் உருவானது. பல்+து>பற்று தமிழானால், பல்+ந்+து= பந்தும் தமிழே. இந்தையிரோப்பியனில் இது bind ஆகும். உடையெலும்பு ஒட்டுக்குக் கட்டும் மட்டையை நுட வித்தகர்(வைத்யர்) பற்று> பற்றை>பத்தை என்பார். பத்தையில் ப(த்)துகை> பதிகை என்பதில் ரகரஞ் சேர்க்க bridge ஆவது புரியும்); 

சே(ர்)வகம்= ஊழியம்; 
சே(ர்)வனை= ஊழியத் தொழில்; 
சே(ர்)வித்தல்= பணி செய்தல், வணங்கல் (சேவித்தலில்லாப் பெருமாள்கோயில் உண்டோ?); 
சேவுகம்= ஊழியம்; 
சேவை= தொண்டு (சேவையின்றிப் பொருளியல் இயங்குமோ?) 

அடுத்து ரகரம் றகரமாகிய, டகரமாகிய காட்டுகள்: சேறு= சகதி, குழம்பு, சாரம்; சேடு= திரட்சி.
 
மேலிருக்கும் பல்வேறு சொற்களையும், கூட்டுச்சொற்களையும் ஆழ்ந்து பார்த்தால் சேது என்பது, தமிழ்ச்சொல்லே என்று விளங்கும். அதைச் சங்கதம் என்பது அறியாக் கூற்று. 

(சேது சங்கதமெனில், மேலே உள்ள எல்லாச் சொற்களுக்கும் சங்கதப் பின்புலம் சொல்ல வேண்டுமே? ஒப்புவீர்களா?) ”அரண்டவன் கண்ணிற்கு இருண்டதெலாம் பேய்” என்பார். ஒரு சிலருக்குக் கண்டதெல்லாம் வடமொழி என்பதே வாடிக்கை ஆகிறது. 

2 இடங்களை, 2 பொழுதுகளை, 2 மாந்தரைச் சேர்த்தலும் தமிழ் தானே? விற் கோடி ஒருமுனை, மன்னார் இன்னொரு முனை எனில். இவற்றைச் சேர்ப்பது சே(ர்)து. இதை (மாந்தர்) செ(ய்)தது எனும்  தொன்மத்தை இற்றையறிவியல் உறுதி செய்யவில்லை. ஆனால் 2 முனைகளைச் சேது என்னும் ஏந்து சேர்ப்பது உண்மை. 

தவிரமேற்கூறிய ”சாரின்” பொருளான அணைக்கரையையும்,  ’சார்வணை’யையும் பாருங்கள். ’சாரை’ உறுதி செய்வது போல் ’பார்’ என்ற சொல்லும் நெய்தலிலுண்டு. “வரம்பு, அணை” என்று அதற்குப் பொருள் சொல்வர். பார்க் கட்டல்= வரம்பு கட்டல். உள்ளே அலை வராதிருக்கக் கட்டுவது. பாரோடு தொடர்பு உள்ளதே பல்>பால்>பாலம். (பத்தைக்குச் சொன்ன பல்லே இதற்கும் வேர். பாலத் தூண்கள் பல் போலக் கீழ்நிலம் பற்றும்.) இதற்கு ”நீர் அணைச் சுவர்” என்றும், ”நீர் கடக்கும் கட்டுமானம்” என்றும்  பொருள். இனி சங்கதம் சொல்லும் கருத்திற்கு வருவோம். மோனியர் வில்லியம்சில், setu என்பதற்கு,

(H1) sétu [p= 1246,1] [L=252089] mfn. (fr. √1. si) binding , who or what binds or fetters RV.
(H1B) sétu [L=252090] m. a bond , fetter ib.
(H1B) sétu [L=252091] m. a ridge of earth , mound , bank , causeway , dike , dam , bridge , any raised piece of ground separating fields (serving as a boundary or as a passage during inundations) RV. &c
(H1B) sétu [L=252092] m. rāma's bridge (» setubandha) BhP.
(H1B) sétu [L=252093] m. a landmark , boundary , limit (also fig. = " barrier , bounds ") Mn. MBh. &c
(H1B) sétu [L=252094] m. a help to the understanding of a text , an explanatory commentary (also N. of various commentaries) Cat.
(H1B) sétu [L=252095] m. an established institution , fixed rule MW.
(H1B) sétu [L=252096] m. the praṇava or sacred syllable Om (which is said to be mantrāṇāṃ setuḥ) Ka1lP.
(H1B) sétu [L=252097] m. Crataeva Roxburghii or Tapia Crataeva (= varaṇa , varuṇa) L.
(H1B) sétu [L=252098] m. N. of a son of druhyu and brother of babhru Hariv.
(H1B) sétu [L=252099] m. of a son of babhru Pur.
(H1B) sétu [L=252100] m. of a place MW. 

என்று போட்டிருப்பர். இதன் வேராக si என்பது காட்டப்படும். அதையுந் துழாய்ந்தால், Westergaard Dhatupatha links: 27.2, 31.5, Whitney Roots links: sA1 என்பது சொல்லி,

(H1) si 1 [p= 1213,1] [p= 1212,3] [L=243722] (cf. √4. sā) cl.5.9. P. A1. ( Dha1tup. xxvii , 2 ; xxxi , 5) sinoti , sinute ; sinā́ti , sinite (really occurring only in pres. sinā́ti , impf. asinot ; pf. siṣāya RV. ; aor. [?] siṣet ib. ; asaiṣīt , aseṣṭa Gr. ; fut. setā ib. ; siṣyati MBh. ; seṣyati , °te Gr. ; inf. sétave AV. ; setum Gr.) , to bind , tie , fetter RV. AV. VS. Pa1rGr2. Kat2hUp. : Caus. sāyayati (aor. asīṣayat) Gr.: Desid. sisīṣati , °te ib. : Intens. seṣīyate , seṣayīti , seṣetiib. [cf. Gk. á¼±-μάς , á¼±-μονία ; Lett. sinu , " to bind " ; Angl.Sax. sa7l ; Germ. Seil.]
(H1) si 2 [L=243729] (» sāyaka , senā) , to hurl , cast.
(H1) si 3 

என்ற விளக்கமும் வரும். ஸேது, சங்கமன என்பன பாலத்திற்கான பாலிச் சொற்கள். சேது என்பது பாகதத்திலும் உண்டு. 

ஆணி வேரின் பொருள் பந்துதலே. சேது என்பது பந்தமென்ற பொருளிலேயே பருப் பொருள் குறியாது, கருத்துப் பொருளில் இருக்குவேதத்தில் ஆளப்பட்டது. பொதுவாகக் கருத்துப் பொருள் குறிக்கும் சொற்களை முதற் சொற்களாய்ச் சொல்ல முடியாது. இன்னும் ஆய்வு தேவை. பருப்பொருளில் முதன்முதல் குறித்தது பாகவத புராணமே (இது தென்னக உருவாக்கம். நம்மூர் ஆழ்வார் காலத்தது.) அடுத்து மாபாரதம். அங்கும் எந்தக் களத்தில் இது சொல்லப்பட்டது என்று தெரியவில்லை. மாபாரதம் இறுதி செய்யப்பட்டது பொ.உ.400 இல் என்பார். சேதுவுக்கு முந்தைய, மேலே காட்டிய, பல தமிழ்ச் சொற்கள் சங்க இலக்கியத்தில் உண்டு. சேது அதில் இல்லை தான். ஆனால் சேது பற்றிய பருப்பொருட் குறிப்பு ஆழ்வார் பாசுரங்களிற்றான் முதலில் வருகிறது போலும். .
சேர் என்ற சொல் கூட்டுப்பொருளில் சுள்> செள்> செரு> சேர் என்று உருவானதாய்த் தமிழ்ச்சொற்பிறப்பியல் சொல்லும். சுள்> செரு> செறி = கூடு; சுல்> (சொல்)> சோலை, சொல்> சொது> சொதை = குழாம், கூட்டம்; சார்> சார்த்து> சாத்து = வணிகக்கூட்டம், சுல்> சொல்> சோல்> சால்> சாலுதல் = நிறைதல்; சால் = மிக; சான்றோர் = நற்குணம் நிறைந்தோர்; சான்றாண்மை = நற்குணங்கள் நிறைந்து அவற்றை ஆளுந்தன்மை; சுள்> செள்> செழு> செழுத்தல்> செழித்தல் = மிகுதல்; செழியன் = பாண்டியனின் குடும்பப் பெயர்; செய் = நிலம்; செய் = கை;   

இனி இன்னும் ஒன்று மீந்திருக்கிறது. இராமேசத்தில் ஈசத்தின் பொரூள்  பார்த்தோம். இராமத்தின் பொருளென்ன? ஏன் இலங்கையோடு சேர்த்துப் பார்க்க வேண்டும்?

அன்புடன்,
இராம.கி.

Tuesday, August 04, 2020

இராமேசம் - 1

திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணம் 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (~ கி.பி.1230) செல்லிநகர்ப் பெரும்பற்றப்புலியூர் நம்பியால் இயற்றப்பட்டது. பிறவா யாக்கைப் பெரியோனின் 64 திருவிளையாடல்களை விவரிக்கும் நூல்களில் இதுவே தமிழில் முதலெழுந்ததாய்த் தெரிகிறது. நம்பியார் புராணத்தை ஏட்டுச்சுவடியிலிருந்து அச்சுநூலாக முதன்முதல் 1906 இல் வெளியிட்டவர் உ.வே.சா. ஆவார். அதன் மறுபதிப்பு உ.வே.சா. நூலகத்தால் 1972 இல் மீண்டும் வெளியிடப் பெற்றது. இதற்குமுன் முழுதாகவன்றி அங்குமிங்கும் உதிரி உதிரியாய்ச் சில செய்திகளைத், தேவாரம், கல்லாடம், திருவாசகம் போன்றவற்றில் அறியலாம். இதற்கப்புறம் எழுந்த பல நூல்களில் கி.பி. 1660 இல் எழுந்த பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணமும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியதாகும்.. 

அது என்னவோ தெரியவில்லை. பின்னவர் நூலையே பலரும் இக்காலத்திற் பேசுவார். ஆனால் உள்ளீட்டைப் பார்த்தால், அக்காலச் செய்திகளை (குறிப்பாக பாண்டியன் கடுங்கோன், அவனுக்கும் முந்தைய களப்பாளர் காலச் செய்திகளை) அறிய பரஞ்சோதியார் நூலை விட நம்பியார் புராணமே பயன்படும். (இதன் pdf படியை ஒருமுறை முனைவர் ழான்லுக் செவ்வியார் எனக்கு அனுப்பி வைத்தார். மாணிக்கவாசகர் காலம் பற்றிய என்னாய்விற்கு இந்நூலே பெரிதும் உதவியது.) தமிழறிஞரில் மிகப் பலர் நம்பியார் புராணப் பயன்பாட்டை உணர மறுக்கிறார். என்னைக் கேட்டால் திருவாலவாயுடையார் புராணத்தை மீளாய்வு செய்வது பயன்தரும். உருப்படியாக ஆய்வு செய்யத் தான் நம்மூரில் ஆளில்லை. தமிழாய்வு பெரிதும் தளர்ந்துள்ளது. 

நானிங்கே சொல்ல வருவது வேறு. உ.வே.சா. வெளியீட்டின் முகவுரையில் பாண்டி நாட்டுத் தேவாரத் தலங்களாய் 14 தலங்களைக் குறிப்பிடும் வெண்பாவொன்று வரும்..
 
கூடல் புனவாயில் குற்றால மாப்பனூ
ரேடகநெல் வேலி யிராமேச - மாடானை
தென்பரங்குன் றஞ்சுழிய றென்திருப்புத் தூர்கானை
வன்கொடுங்குன் றம்பூ வணம்

ஒருமுறை இப்பாடல் குறித்து மின்தமிழ் குழுவில் உரையாடலெழுந்தது. அப்போது, திரு.வேந்தன் அரசு “இராமேசத்தின் பழைய பெயரென்ன?” என்று கேட்டார். நல்ல கேள்வி. இதன் விடையோடு தொடர்புடைய மற்ற செய்திகள் பலருக்கும் பயன்படுமென எண்ணி இங்கு பதிகிறேன். 

முதலில் ஈசமென்ற சொல்லின் பொருளறிவோம். (சிவன் கோயில்கள் பலவும் ஈசமென்றே சொல்லப் படும்.) ஈசமென்பது திசை தொடர்பான சொல். திசைகள் பற்றிய என் பழந்தொடரின் 3 ஆம் பகுதியில் (http://valavu.blogspot.in/2008/04/3.html) ஈந்து> ஐந்து> ஐந்திரம் என்பது கிழக்குத் திசையைக் குறிக்குமென நிறுவினேன்.  ஈந்து> ஈத்தின் தொடர்பாய் ’ஈசம்’ என்ற சொல் எழுந்து, வடகிழக்கைக் குறிக்கும். 

ஈசன்/சிவன் வடகிழக்குத் திசைக்கு உரியனென்றே மனையடிநூலிற் சொல்வர். இந்தியப் பெருநிலத்தின் வடகிழக்கில் தான் குயிலாலுவ>கயிலாலுவ என்னும் மலையுள்ளது. சிவன் அம்மலையில் உள்ளதாகவே தமிழரிற் பலரும் தொன்மஞ் சொல்வர். 

கயிலாயமன்றி ஈசன் திருவுரு அமைந்த இடங்களும்/கோயில்களும் கூட ஈசமென்றே அழைக்கப்பட்டன. ”ஈசம்” என்னும் சொல்லிற்குள் வகரஞ் சேர்த்து சங்கதம் பழகுவோர் ஈஸ்வமாக்குவர். இதே போல் ஈசனை தமிழ் முறைப் படி மதிப்புக் கூட்டி ஈசராக்கி சங்கத முறைப்படி ஈஸ்வர் என்றும் ஆக்குவர். ஈஸ்வரிலிருந்து மீண்டும் தமிழ்முறைப் படி ஈஸ்வரம்>ஈச்சுரம் ஆகும். இப்படித் தமிழும் சங்கதமும் மாறிமாறி ஊடாடியே சிவன் கோயில்களுக்கான பெயர் எழுந்தது. சங்கதம் பழகவேண்டாமெனில் ”ஈசம்” என்பதே நமக்குப் போதும்.   

சிவனுக்கு உரியதாய்ச் சொல்லப் படும் 12 சோதி இலிங்கங்களில் 

இராமேசத்தைத் தமிழ்நாட்டிலும், 
சோமேசத்தைக் கூர்ச்சரத்திலும், 
நாகேசம், குசுமேசம் போன்றவற்றை மாராட்டத்திலும், 
விசுவேசத்தை உத்திரப் பிரதேசத்திலும் 

பொருத்துவர். இவையத்தனையும் ஈசமென முடியுந் தலங்கள். அகரமும் ஈகாரமுஞ் சேர்ந்து வடமொழிப் புணர்ச்சியில் ஏகாரமாகும். இது போக, 

வித்தநாதம் (வைத்யநாதம்), 
வீமநாதம் (பீமநாதம்), 
திரியம்பகமென 3 தலங்கள் மாராட்டத்திலும், 
திருப்பருப்பதம் (சிரீசைலம்) ஆந்திரத்திலும், 
ஓங்காரம், உஞ்சை (உச்செயினி) மத்தியப் பிரதேசத்திலும், 
கேதாரம் உத்திரப்பிரதேசத்திலும் காட்டப்படும். 

இராமேசத்தில் 2 இலிங்கங்கள் உண்டு, முன்னால் உள்ள இலிங்கம் மணலால் ஆனது. இரண்டாம் இலிங்கம் கல்லால் ஆனாது. முதலாவதைச் சீதை/ இராமன் பிடித்துவைத்தார் என்றும், 2 ஆவதை அனுமன் வடக்கிருந்து கொண்டு வந்தான் என்றுஞ் சொல்வர். (தொன்மக் கதைகள் எல்லாம் உண்மையா, இல்லையா என்ற சிக்கலுக்குள் நான் போகவில்லை. நம்புபவனுக்கு அவை உண்மை.) 

இராமேசக் கோயில் தேவார காலத்தில் மீச்சிறிதே. இன்றுள்ள மண்டபங்கள், சுற்றாலைகள் எல்லாம் அன்றில்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால் கருவறையைச் சுற்றி ஒரு சுற்றாலை இருந்திருக்கும். 12 ஆம் நூறறாண்டில், பாண்டியரின் தாயாதிச் சண்டையில் ஒருவனுக்கு ஆதரவாய் ஊடுவந்த  சிங்கள மாமன், மன்னன் பராக்கிரம பாகுவே பழங் கோயிலை இடித்து இற்றைக் கோயிலின் அடிப்படை அடவை உருவாக்கினான் என்பர். 

(நாம் விரும்பினாலும், விரும்பா விடினும், தமிழர்-சிங்களர் ஊடாட்டம் நம் வரலாற்றில் நெடுகவேயுண்டு. வரலாற்றில் அதைத் தவிர்க்கவே முடியாது. அவனுக்கு நாம் பெண் கொடுத்தோம், அவன் வீட்டில் பெண் எடுத்தோம். எனவே அது ஒரு தொடர்கதை.)    

கோயில் இறைவர் பெயர் இராமநாதர் (மணல் இலிங்கத்திற்கு அதுவே பெயர்.). முன்னிருக்கும் கல் இலிங்கத்திற்கு இராமலிங்கமென்று பெயர். 

(எத்தனை பேருக்குத் தெரியுமென்று தெரிய வில்லை. இராமசாமியெனில் பெருமாளைக் குறிக்கும். இராமநாதனெனில் சிவனைக் குறிக்கும். இவன் ”ரம்மியம்” ஆனவனா? அன்றி இராமனுக்கு நாதனா? இராமத்தின் நாதனா? -என்பது பார்வையைப் பொறுத்தது. (நான் மூன்றாம் விளக்கத்தை நம்புபவன். கீழே பார்ப்போம்.) 

இறைவியின் பெயர் மலைவளர் காதலி., (பருப்பத/பர்வத வர்த்தினி என்பது அதன் சங்கதவாக்கம்.). கோயிலுக்குள் உள்ள பல்வேறு நீர்நிலைகள் உப்புநீர் மேல் கூடியுள்ள நன்னீரால் ஏற்படுவன. இன்று நம்மூர் ஐயர்கள் இங்கு பூசகத்தில் பங்குறுவதில்லை. பண்டாக்கள் எனும் மராட்டியக் குருக்களே உண்டு. வரலாற்றில் வந்த விசயநகர, மராட்டிய, நாயக்கர் தாக்கம் இது என்று எண்ணுகிறேன். இற்றை மண்டபங்களெல்லாம் இவர்களாலும்,  பின்வந்த சேதுபதிகளாலும், எழுந்தவை. மூன்றாம் சுற்றாலை என்பது மிகப் பெரியது. இற்றைக் காலத்தில் கோயிலிற் காணப்படும் கூட்டம் சொல்லி மாளாது. ஒரே இரைச்சல். அங்குமிங்கும் பற்றர்களின் ஓட்டம். எங்கு பார்த்தாலும் நீர்ச்சகதி. 

காசிக்கும், குமரிக்கும் (சோழர் காலக் கல்வெட்டுகள் அப்படிச் சொல்கின்றன) சொல்லப்பட்ட இடையுறவு எப்படியோ காசிக்கும், இராமேசத்திற்குமாய் மாறி விட்டது. எப்போது இப்படி மாறியது என்பது ஒரு சுவையான ஆய்வு. ஒரு வேளை பாண்டியராட்சி முடிந்த பின் விசயநகர ஆட்சியில் இது ஏற்பட்டதோ, என்னவோ? கோயிலுக்குள் இந்தியே இன்று அன்றாட மொழி. விரைவு வண்டிகளில் நம்மூர்க்காரரை விட வடவர் கூட்டமே மிகுத்துள்ளது. 

கோயில் கிழக்கு வாசலுக்கு முன் நீராடுங் கடலில் குப்பைகளும், மாசுகளும் நிரவிக் கிடக்கின்றன. யாராவது இதைச் சரி செய்தால் என்ன? - என்று தோன்றுகிறது. ”ஸ்வட்ச் பாரத்” என்று சொல்வதெல்லாம்  எங்கு போயிற்றென்று தெரியவில்லை. இன்னுங் கூட மரங்களை நட்டுத் தீவைச் சரி செய்யலாம். வறட்சி அங்கு பெரிதும் கூடிவருகிறது. நன்னீர்த் தட்டுப்பாடு அங்கு பெரிதாகவேயுள்ளது. கோயிலில் தெரிசனம் முடித்த பின், அப்துல் கலாம் நினைவகத்தில் கூட்டம் கூடுகிறது. தீவின் பொருளியல் வளர்ச்சியில் அதுவொரு மாற்றம்.   
 
தேவார காலத்தில் இராமேசம் என்பது ஒரு தீவில்லை. (ஏனெனக் கீழே சொல்வேன்.) இராமநாதபுரத்திலிருந்து கடலுள் நீண்டு செல்லும் துருத்தியாகவே இதுவன்று இருந்திருக்கலாம். துருத்தியின் முடிவில் வில் வடிவத்தில் பாதி முழுகியும் மீதி முழுகாதும் படி நிலமிருந்து அது அந்தப்பக்கம் மன்னாரை இணைத்தது. இப்படி இணைத்த பாதையே சேது என்றார். 

மன்னாருக்கு அடுத்தது திருக்கேதீச்சுரம். வில்வடிவின் தொடக்கமான விற்கோடியை தனுஷ்கோடியென சங்கதத்தில் பெயர்த்துச் சொல்வார். (விற்கோடியைத் தொல்முதுகோடி எனச் சிலர் சொல்ல முற்படுவது வெறும் புரட்டு. அகநானூறு சொல்வது இந்த இடமில்லை. அது திருமறைக்காட்டிற்கு அருகிலுள்ள கோடிக்கரை. அதைப் பற்றி வேறிடங்களில் நெடுகப் பேசி உள்ளேன். மீண்டும் இங்கு பேசிப் பொரித்தெடுக்க வேண்டாம் என விடுக்கிறேன்.) 

இன்று இராமேச்சுரத்திலிருந்து விற்கோடி வரை தமிழக அரசினர் உருப்படியான சாலை ஒன்றைப் போட்டுள்ளார். 2018 இல் இராமேசம் போனபோது இதைப் பார்த்தேன். வியந்து போனேன். இப்போது இராமேசம் வருவோர், ஒரு தானியை வாடகைக்கு எடுத்துக் கொண்டு விற்கோடி வரை போய் வருகிறார். அடுத்த முறை நீங்களும் போய் வாருங்கள். பார்த்து வியக்க வேண்டிய இடம். 

துருத்திக்குள் நடந்து சென்று இந்திய முனையைத் தொடும்போது, அங்கிருந்து வில் நீருக்கடியில் வளர்ந்து கிடப்பதை நன்றாகவே உணரமுடியும், நாசா வெளியிட்ட படத்திலும் இதைப் பார்க்கலாம். இது மாந்தன் செய்த சேது என்பதை மட்டும் நான் ஏற்கேன்.  வானம் தெளிவாகி, பார்வை கூர்ந்து, கையில் ஒரு தொலைப்பெருக்கியும் (telescope) இருக்குமானால், அந்தப் பக்கக் கோடியில் உள்ள நிலத்தையும் பார்க்கலாம். 

சம்பந்தர் காலத்தில், இன்றிருப்பதை விட  2,3 மீட்டர்கள் கடலாழம் குறைந்து இருக்கும். அதனால் துருத்தி இன்னும் ஒரு சில கிலோமீட்டர் நீண்டிருக்கும். வெகு எளிதில் இராமேசத் தீவில் இருந்தே தொலைபெருக்கி கொண்டு (வானம் தெளிவானால் வெறும் மாந்தக் கண் வழியாகவே தொலைபெருக்கி இல்லாது கேதீச்சுரத்தைப் பார்க்க முடியும். எனவே அந்தத் தொலைவிற்குப் சம்பந்தர் போயிருப்பார் என்று கூட நாம் கொள்ளலாம். இப்பக்கத்திலிருந்து திருக் கேதீச்சுர விமானத்தையே கூட சம்பந்தர் பார்த்திருக்கலாம். யார் கண்டார்? 

இராமேசம் அன்று தீவில்லை என்று ஏன் சொன்னேன்? தீவாயிருந்தால், படகு வைத்தல்லவா சம்பந்தர் இராமேசம் கோயிலுக்குப் போயிருக்க முடியும்? பின்னால் அதே படகில் திருக்கேதீசம் வரை போக என்ன சிக்கல்? அவர் போகவில்லையே? இங்கிருந்தே கேதீசத்திற்கும் கோணேசத்திற்கும் (திரிகோண மலை) அவர் பதிகம் பாடியுள்ளாரே? இத்தனைக்கும் பாண்டிய அரசி மங்கையர்க்கரசியும், அமைச்சர் குலச்சிறையாரும் அவர் அருகில் கூட இருந்தாரே? 

அப்படி எனில் என்ன பொருள்? கேதீசத்தை விற்கோடியிலிருந்து சம்பந்தரால் பார்க்க முடிந்தது என்று தானே நாம் கொள்ள முடியும்? இடையில் கடல். ”ஆளுடைப் பிள்ளையை” அருகில் வைத்துக் கொண்டு ஓர் இக்கை (risk) எடுக்க அரசியும், அமைச்சரும் விரும்பவில்லை. அதேபொழுது இராமநாதபுரத்தில் இருந்து எல்லோரும் நடந்தே, அல்லது ஊர்தி வழி நகர்ந்தே, இராமேசம் வர முடிந்தது என்றுதானே பொருள்? இவ் ஏரணத்தைச் சற்று ஆழ்ந்து உணருங்கள். 

மயிலை சீனி வேங்கடசாமியும், 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை, குறிப்பிட்ட விழா நாட்களில் இராமேசத்து இராமலிங்க ஊருலவரைத் தூக்கிக் கொண்டு இராமநாதபுரம் அரண்மனையான இராமலிங்க விலாசம் வரை வந்து, ஒருநாள் அங்கு வைத்திருந்து மீண்டும் கோயிலுக்கு எடுத்துச்செல்வர் என்று தெளிவாக ஆதாரத்துடன் பதிவு செய்வார். 

ஆகப் 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை இராமேசம்  என்பது ஒரு தீவல்ல. வெறும் துருத்தி. பார்த்தீர்களா? இவ்வளவு சொன்னேன். இராமேசத்தின் மறு பெயரைச் சொல்லாது விட்டேனே? ஒரு காலத்தில் எம் அரசர்களின் குடும்பப் பெயர் சேதுபதி. அவர் சேதுக்கு ”பதி”. சேதென முன் சொன்னேனே அது விற்கோடிக்கு அப்புறமுள்ள ஓர் இயற்கை இணை. சேது உள்ள ஊர் சேதூர். அவ்வூருக்குப் போகும் 2 விரைவு வண்டிகளில் ஒன்றின் பெயர்  இராமேசுரம் விரைவி, இன்னொன்று சேது விரைவி. சேது தான் அவ்வூரின் மாற்றுப் பெயர். இராமநாதபுரச் சீமையில் யாரைக் கேட்டாலும் இந்த மாற்றுப் பெயரைச் சொல்வர். 

”சேதுவை மேடுறுத்தி வீதி செய்வோம்” என்றான் பாரதி.  ”சேடனென்னப் பொலிந்தது சேதுவே” கம்பரா. சேதுப. 66. “சேதுவின் இராமநாதனை நிறுவிய காதை” என்பது சேதுபுராணம். “சேது காவலன் திருவணைக் காவலன்” என்பது கல்லாடம். “சேது புராணம்” என்பது 16 ஆம் நூற்றாண்டில் நிரம்ப அழகிய தேசிகரால் பாடப் பெற்ற இராமேசுரப் புராணம் ஆகும். இனி இராமேசம் என்ற பெயர் எப்படி எழுந்தது என்று பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

Monday, August 03, 2020

SOME ACRONYMS


Wi-Fi = Wireless Fidelity = கம்பியிலாப் பற்றை
LED = Light Emitting Diode = ஒளி உமிழ் ஈரோடை
GPS = Global Positioning System = கோளப் பொதிக் கட்டகம்
USB = Universal Serial Bus = ஒருங்குற்ற சரப் பட்டி
SMS = Short Message Service = குறுஞ் செய்திச் சேவை

PDF = Portable Document Format = புகற்றாவண உருவல்
GB = Giga Byte = ஆம்பல் தொடை
WWW = World Wide Web = வைய விரி வலை
SIM = Subscriber Identity Module =உறுப்ப அடையாள மூட்டு.
ATM = Automated Teller Machine = தானியங்கித் தரும் மாகனம்

RSVP = Re'pondez, S'il Vous Plait (French for please reply) = விடை தருக
FAQ = Frequently Asked Questions = அடிக்கடி எழும் கேள்விகள்
IQ = Intelligence Quotient = அறிவு ஈவு
SOS = Save Our Soul / Save Our Ship = கலம்/உயிர் காப்பாற்றுக
OCD = Obsessive Compulsive Disorder = விடாப்பிடிக் கட்டாய ஒழுகாமை

LASER = Light Amplification by Stimulated Emission of Radiation = தூண்டு கதிரெழுச்சி மூலம் ஒளிகூட்டல்
CVS = Consumer Value Stores = நுகர்வோர் மதிப்புக் கடை
M&M = Mars and Murrie's (the founders) = மார்சும் முர்ரியும்
YAHOO = Yet Another Hierarchical Official Oracle = இன்னொரு படிநிலை அலுவ ஓரக்கிள்
ZIP = zone Improvement Plan = பகுதி வளர்ச்சிப் படிவு

TIME = The International Magazine of Events = நிகழ்வுகளின் அனைத்துநாட்டுத் தாளிகைIKEA
IKEA = Ingvar Kamprad Elmtaryd Agunnaryd (founders initials and his hometown) = இங்வார் காம்ப்ராடு எல்ம்தாரிடு அகுன்னாரிடு
CAPTCHA = Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart = கணிகளையும் மாந்தரையும் பிரித்தறியும்படி, முழுதும் தானியங்கும் பைம்புலத் தூரிங் சோதனை
GIF = Graphics Interchange Format = கிறுவ இடைமாற்று உருவல்
GEICO = Government Employees Insurance Company = அரசலுவர் காப்புறுதிக் கும்பணி

NERF = Non Expandable Recreational Foam = விரிக்கவியலா பொழுதுபோக்கு நுரை
SPAM = Special Processed American Meat (yep, that's true) = விதந்து செய்த அமெரிக்கக் கறி
BMW = Bayerische Motoren Werke (German" Bavarian Motor Works) = பேயர் நகர்த்தி உழையம்
CDROM = Compact Disc Read-Only Memory = படிக்க மட்டுமான நினைவுச் செறி திகிரி

Wednesday, July 29, 2020

மாறியும் வேறியும் - 1

”மாறு-தல் போல் வேறு-தல் என்ற வினைச்சொல் கிடையாது. வேறு என்பது பெயர்ச்சொல் மட்டுமே” என்றுசில தமிழறிஞரும். தமிழார்வலரும் சொல்லப் புகுந்து நான் வேறி (variable) என்ற சொல்லைக் கையாண்டதைப் பேரா. செல்வாவின் முகநூல் பக்கத்தில் கிடுக்கியிருந்தார். இங்கே எழுதுவது அதற்கான மறுமொழி. என் வலைப்பதிவிலும் முகநூல் பக்கத்திலும் சேமிக்க வேண்டித் தனியே இடுகிறேன். பந்தாளியைப் பந்தாடுவது சிலர்க்கு வழக்கமாய்ப் போனது. வாதங்கள் பலநேரம் குழாயடிச் சண்டையாய் ஆகிவிடுகின்றன. மீண்டும் மீண்டும் சொல்கிறேன். என் சொல்லாக்கங்களை விரும்புவோர் பயிலுங்கள். விரும்பாதோர் உங்கள் விழைவின்படி போங்கள். என்ஞாயத்தைக் கேட்போருக்குச் சொல்லத்தான் செய்கிறேன். என்மேல் பொரிம்பு (brand) குத்த  நினைப்போருக்கு, “வேறிடம் பாருங்கள்” என்றுசொல்லக் கடமைப்பட்டுள்ளேன். I don't have to be apologetic. Period.

இனிச் செய்திக்குள் வருவோம். மாறு என்பது வளைவுப் பொருளில் விழைந்த சொல். மாறுதலின் சொற்பிறப்பையும் அது வளர்ந்த விதம் பற்றியும் இங்கு நான் சொல்லவில்லை. வேறு என்ற சொல் துளைத்தல், பிளத்தல், பிரித்தல் பொருளில் பிறந்தசொல். நான் ”எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்ற கொள்கையை நம்புகிறவன். தவிர, தமிழில் பெயர்ச்சொற்கள் எண்ணிக்கையில் ஏராளம் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட தொகுதியின் அடியில் ஒரு வினைச்சொல்லாவது இருக்கவேண்டும் என்ற கொள்கையும் உடையவன். இடைச்சொற்கள் என்று நாம் என்னுவன கூட ஒரு கால் வினையிலெழுந்து இன்று உருத்தெரியாது மாறியிருக்கலாம்.

அவ்வகையில் வேறு என்பதைப் பார்க்கலாம். முதலில் (வேறு, வேற்று) நிலை, (வேறு, வேற்றுப்) புலம், (வேறு, வேற்று) முகம், (வேறு, வேற்று) இடம் என்ற 4 சொல்லிணைகளைப் பாருங்கள். வேறு என்பது வெறும் பெயர்ச்சொல் (அதற்கு எந்த வினைப்பகுதியும் அடிப்படையில்லை) எனில், அச்சொல் எப்படிப் பிறந்தது? தானாய்ப் பிறக்குமா? எந்தப் பெயரிணைகளில் இதுபோல் றகரம் இரட்டித்து ஒரே பொருள் தந்திருக்கிறது? இதுபோல் இரட்டித்து கிட்டத்தட்ட ஒரே பொருள் வரும் வினைச்சொற்களைப் பாருங்கள். காயம் (ஆறு-தல், ஆற்று-தல்), ஏதோவொன்று (ஏறு-தல், ஏற்று-தல்), வாயிலிருந்து (காறு-தல், காற்று-தல்), சாறு-தல், சாற்று-தல் = பெருகு-தல், விரி-த்தல்,  நீர் (தூறு-தல், தூற்று-தல்), உடம்பு (தேறு-தல், தேற்று-தல்), சுண்ணம் (நீறு-தல், நீற்று-தல்), பாறு-தல், பாற்று=தல் = அழி-தல், அழி-த்தல், துணி (பீறு-தல், பீற்று-தல்), நிலை (மாறு-தல், மாற்று-தல்), பொருளை (வீறு-தல், வீற்று-தல்) = பிரித்தல். 

இதுபோல் வேறு-தல், வேற்று-தல் என்ற வினைச்சொற்கள் ஏன் இருக்கக் கூடாது? நமக்குக் கிடைத்த ஆவணங்களையும், பேச்சுவழக்கையும் வைத்து அகரமுதலிகள் ஏற்பட்டன. ”அவற்றில் எல்லாமே இருக்கும், அவற்றில் இல்லாதன தமிழில் இல்லை” என்பது சரியான வாதமா? தமிழின் சொற்சேகரம் இந்த அகரமுதலிகளா? ஏன் அவை ஒவ்வொரு எடுவிப்பிற்கும் (edition) பெரிதாகின்றன? விட்டுப்போனவற்றையும், புதிதானவற்றையும் சேர்க்கிறாரே? வேறு-தல், வேற்று-தல் என்பது விட்டுபோனது ஆகக்கூடாதா? சங்க இலக்கியம் எல்லாவற்றையும் பதிவு செய்து விட்டது என்று எண்ணுகிறோமா? நம்முர் அகரமுதலிகளில் தமிழின் எல்லாச் சொற்களும் இருக்கின்றனவா? எங்கூரில் புழங்கும் பல சொற்கள் அகரமுதலிகளில் பதிவாகவில்லை. அதுபோல் உங்க்ளூர்ச் சொல்லும் கூடப் பதிவாகாமல் இருக்கலாமே?   
  
இன்னொரு சொல்லும் பார்ப்போம். தோற்றுதல் = காட்சியளித்தல். தோறும் என்பது இடைச்சொல். பல மொழியாளர் ”என்றும்” என்ற இடைச்சொல்லின் பின்னால் என்னுதல் என்ற வினைச்சொல் இருக்கிறது என்று ஊகித்தறித்தது போல், தோறும் என்ற இடைச்சொல்லின் பின் தோறுதல்= காணல் என்ற வினை இருக்கவேண்டும் என்று ஊகிக்கலாம்.  அப்போது (*தோறுதல், தோற்றுதல்) என்ற சொல்லிணை மேலுள்ளது போல் அமையும்.     

இனி வேற்றலம் என்ற சொல்லுக்கு வருவோம். இச்சொல் காற்றுக்கு எப்படி வந்திருக்கும்? வேறு+தலம் என்பது சரியாகுமா? அல்லது வேற்று+அலம் என்பது சரியாகுமா?  காற்று. வீறிக் கொண்டு, வேறிக் கொண்டு இருந்தால் தானே வேற்றலம் என்ற சொல் எழமுடியும்? வேற்றலத்திற்குள் அமையும் வினைச் சொல் தான் என்ன? இன்னொரு இணைக்கு வருவோம். வேற்றவன் = பகைவன்; வேறு செய்தல் = பகை விளைத்தல். இங்கே வேறு, வேற்று என்ற தொடர்பு எப்படி ஏற்பட்டது? வேறல், வேற்றல் = பகைத்தல் என்ற பொருள் இவற்றிற்கு இருந்தால் தானே இரு பொருளும் ஒன்றாகும்?.  வேறாள் = வேற்றாள் = அயலான்; இங்கும் வேறு, வேற்று தொடர்பு உள்ளது.  எப்படி ஏற்பட்டது?

வேற்றுநர் = மாறுவடிவங் கொண்டவர் இப்படி ஒரு சொல்வடிவம் எழவேண்டும் எனில் வேற்று-தல் அல்லது வேறு-தல் என்ற வினைவடிவம் இல்லாமலா? வேற்றுமை = பெயரின் வேறுபட்ட தன்மை. இப்படி ஒரு மை விகுதி கொண்ட பெயர் எழவேண்டுமாகில் வேற்று- என்பது குறிப்பு வினையாகவோ, இயல் வினையாகவோ இருக்க வேண்டும் தானே?  வேற்றான் என்றாலும் அயலான், வேற்றுவன்  என்றாலும் அயலான் என்று அகரமுதலிகள் சொல்கின்றன. இது எப்படி முடியும்?.வேற்றல் என்ற வினை இதனுள் இருக்கவேண்டும் அல்லவா?

முடிவில் வேறல் = வெல்லல், வெற்றிகொளல் என்ற சொல்லுக்கு வருவோம். இது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வழி திரு. மு.சண்முகம் பிள்ளை வெளி யிட்டது.  வேறல் என்பது பெயர்ச் சொல் வைத்து வரவில்லை. வலப்பக்கம் இருக்கும் வெல்- எப்படி வினைச்சொல்லின் பகுதியோ, அதேபோல் இடப்பக்கம் இருக்கும் வேறு- என்பதும் வினைச்சொல் பகுதி தான். இன்னும் சொன்னால் வெல்லுதல் என்பது விலங்காண்டி காலத்தில் இன்னொருவனைக் குத்திக் கொல்வதே. வெல்லும் கருவி வேலாயிற்று. வெல்>வெள்>வெட்டு என்பதும் குத்திக் கிழித்தலே. வெற்றி என்ற பெயர்ச்சொல்லின் பின் வெற்றுதல் என்ற சொல் உள்ளது. வெற்றுதலும். வெட்டுதலும் ஒரே பொருளன. வெற்று-தல்> வேற்று-தலை உருவாக்கும். வேற்று-தல் = பிரி-த்தல் (உடம்பையும் உயிரையும் பிரித்தல்) வேற்று-தலிலிருந்து வேறு-தல் உருவாகமுடியும். அதிலிருந்து வேறல் என்ற மேலே சொன்ன வினைச்சொல் உருவாகும். வேறு-தல், வேற்று-தல் என்பதை மறுக்கிறவர் வெற்றி என்பதையும் மறுக்கிறார் என்று பொருள்.

ஆங்கிலத்தில் parsimony என்ற கொள்கையைச் சொல்வார். அறிவியலிலும் அப்படியே. மீக்குறைந்த கருதுகோள்களைக் கொண்டு மிக நிறைந்த விளக்கம் கொடுக்கமுடியுமானால் அதுவே சிறந்தது.  வேற்று-தல், வேறு-தல் என்ற இணைச்சொற்களை  இருந்தன என்று ஏற்றுக்கொண்டால், மேலே கூறிய அத்தனையும் தமிழில் தொங்கி நிற்காது. We need to infer the existence of வேறு-தல் and வேற்று-தல். After all research is inference. Not just the blind following of facts. 

அகரமுதலியை நான் என்றும் மொழியின் சேகரம் என்று கொண்டவனில்லை. அதுவொரு வழிகாட்டி. அதற்கு மேல் ஏரணம் வேண்டும் என்று நம்புவேன். அகரமுதலிகள் சில பெயர்ச் சொற்களைக் கொடுக்கும். அடியிலுள்ள வினைச்சொல்லைக் கொடுக்காது. சில வினைச்சொற்களைக் கொடுக்கும். அவற்றில் விளையும் பல்வேறு பெயர்ச்சொற்களைக் கொடுக்காது. printed salvation ஐ எப்படி மறுக்கிறேனோ, அதேபோல் dictionary salvation ஐயும் நான் மறுப்பேன். எனக்கு இலக்கியம். பேச்சுவழக்கு, கொஞ்சம் ஏரணம், simple common sense ஆகியவை முகன்மை என்று எண்ணுவேன். இதை மறுத்து, ”மாறி என்று தான் சொல்வேன்” என்போர் சொல்லிவிட்டுப் போங்கள் எனக்கு ஒன்றும் இல்லை.  நான் வேறியும் மாறியும் என்று சொல்லிப் போவேன். 

மீண்டும் சொல்கிறேன். வேறியில் தவறில்லை.   

அன்புடன்,
இராம.கி.          

தீங்கனி இரவம் - 3

இருவேல் மரம் கிழக்கிந்தியாவிலும், தென்னிந்தியாவிலும், பர்மா, தாய்லாந்திலும் வளரும் மரம். நம் இரு தொடர்ச்சி மலைகளிலும் உண்டு. மஞ்சட் கடம்பு, வேங்கை, பூவன், தேக்கு, கருமருது போன்ற மரங்கள் நிறையும் சோலைகளில், இதுவும் வளரும். சற்று ஈரப்பதம் இருந்தால் வெகு எளிதில் இது முளைத்து கோணல் மாணலாய் வளர்ந்து விடும். இம்மரத்தின் இலை, தளிர், பூ போன்றவற்றைக் கால்நடைகள் விரும்பி உண்ணா என்பார்.  இருள், இருள, யெருள், இருவேல்,  எர்ரா சென்னங்கி, ஜம்பு என்று இம்மரப் பெயர்கள் தென்னிந்திய மொழிகளில் வரும்.  

Burma Ironwood, Pyinkado • Assamese: চিম চপা shin shapa • Bengali: লোহা কাঠ loha kat • Hindi: जंबू jambu, जांबु jambu • Kannada: ಬೆಟ್ಟದಾವರಿಕೆ ಮರ bettadavarike mara, ಹೊನ್ನಾವರಿಕೆ honnavarike, ಇರುಳ್ irul, ಜಂಬೆ jambe, ಷಿಲ್ವೆ shilve, ತಿರುವ tiruva • Konkani: जांबा jamba • Malayalam: ഇരുൾ irula, കടമരം katamaram • Marathi: जांभा jambha, सुरिया suriya, येरूळ yerul • Mizo: thinguk • Nepali: जांबु jambu • Odia: କଙ୍ଗଡ଼ା kangara • Sanskrit: कनककुली kanakakuli, शिंशपा shinshapa • Tamil: இருவேல் iruvel • Telugu: బోజ boja, ఎర్ర చెన్నంగి errachennangi, కొండ తంగేడు konda tangedu • Tulu: ಚಿರುವೆ chiruve, ತಿರುವೆ thiruve • Mizo: Thing-uk

எளிதில் இலையுதிர்க்கும்  இம்மரம்  18 மீ உயரம், 60 செ,மீ தண்டுவிட்டம் கொண்டது. நடுமரத்தில் பொந்தெழலாம். மெதுவான, செஞ்சாயை கொண்ட, சாம்பற்பட்டை பெருந்துண்டுகளாய் உதிர்ந்துபோகலாம். இதன் மரவயிரம் செஞ்சாயைக் கருநிறங் காட்டும். அதனால் இருள்மரம் என்றார் போலும்.  இது இருவுள் (rail) அடிக்கட்டையாகப் பயன்படுகிறது. மரத்தின் கூர்ந்த இரட்டைக் கூட்டிலை நீள்காம்பில் 2-4 இணைகளாய் 3-6 செ,மீ நீளத்தில் உருவாகும்,  இலைக்கு மருத்துவப் பயன் சொல்லப் படவில்லை. பட்டையும், விதையும் சீழ்ப் புண்களைக் குணமாக்கும். மார்ச்சு- ஏப்ரல் மாதங்களில் வெள்ளை நிறச் சிறு பூங்கொத்துகள் பூக்கும். காம்பிலாப் பூக்கள் மீச் சிறியவை. திசம்பரில் நெற்றுக்களைக் காணலாம். இம்மரத்தில் பழங் காணமுடியாது. 10-15 செ,மீ. நீளமுள்ள வளரி போல் வளைந்த கடினத் தட்டை நெற்றுகளே உண்டு. நெற்றில் 6-10 விதைகள் இருக்கும்.  இருள்மரமெனப் பெயர் பெற்றாலும் ”தீங்கனி இரவம்” இதுவல்ல. 

அடுத்து இலந்தைக்கு (Jujube-tree. Zizyphus jujuba) வருவோம். இதன் மாற்றுப் பெயராய் இரந்தை, இரத்தி/தை, இரம், குவலி, கோண்டை, கோல், கோலம், கோலி, கோற்கொடி, வதரம், வதரி,  ஆகியவையுண்டு. இதில் இலந்தை, இரந்தை, இரத்தி/தை போக மற்றவை பழத்தால் எழுந்தவை. இலந்தை= முள்மரம் (இல்-தல்=குத்தல். இலந்தல்= குத்தல். இலந்தை= குத்தும் மரம். லகரமும் ரகரமும் தமிழில் போலிகள். எனவே இரந்தை; மெல்லொலி சில போது வல்லொலி ஆவதால் இரத்தி/தை.  இரு+அம் = இரம். குவலி = குவல்ந்து காணும் பழம். குவல்> குவள்> கோள்> கோள்+ந்+து+ஐ = கோண்டை. குவல்>கோல்; கோல்>கோலம், கோலி, கோல்கொடி (கொடி ஏன் சேர்ந்தது? விளங்கவில்லை.) வற்றம்>வத்தம்>வதரம்/வதரி; பழத்தை வற்றவைத்தும் சாப்பிடலாம்.

சங்கதத்தில் வதரி, badri ஆகும். 108 பெருமாள்தலங்களில் ஒன்றாய், அலகநந்தா  ஆற்றின் மேற்குக் கரையின் இலந்தைக்காடு (சங்கதத்தில் பத்ரிக ஆரண்யம்) சொல்வர்.   

”இரவம்” இலந்தைக்குக் பொருந்துமா? - எனில் பொருந்தும். இல்>இரு>ஈர் என்று புழங்கியுள்ளது. ஈர்த்தல் = குத்திப் பிளத்தல் இரு>இரள்>இரண்டு. ஒன்றை இரண்டாய் இரள்ந்தது இரண்டு. இர(ள்)வு என்பதன் பேச்சுவழக்கில் ளகரம் குன்றி இரவு ஆகும் இரவு>இரவம் என்பது முள் மரத்தைக் குறிக்கும். இரு>இருள் என்பதும் இரளைப் போல் குத்தலைக் குறிக்கும். இரவம் = இருள் மரம் என்றது குத்தும் மரமான இலந்தையைக் குறிக்கலாம். இலந்தை (Ziziphus jujuba) என்பது மூவடுக்கு இதழிகளைச் சேர்ந்த, முட்களுள்ள குறுமரம்  பழத்தை வைத்து மரம் பெயரிடப் பட்டதால், ”தீங்கனி இரவம்” என்ற கூற்றுப் பொருந்துகிறது  சங்க இலக்கியத்தில். இலந்தையை ஒட்டி 3 காட்சிகளுண்டு. 

முதல் காட்சி 
”உழைஅணந்து உண்ட இறைவாங்கு உயர்சினைப் புல்அரை இரத்தி பொதிப்புற பசுங்காய் கல்சேர் சிறுநெறி மல்கத் தாஅம்” (நற் 113/2) என்ற வரிகள் மூலம் ”மான் அண்ணாந்து தழை தின்றதால், வளையும் உயர் கிளைகளையும், புல்லிய அடிமரத்தையும் உடைய இலந்தையின் கொத்துக் கொத்தாய்க் கிடக்கும் பசிய காய்கள் மலைசார்ந்த சிறு பாதையில் உதிர்ந்து பரவிக் கிடக்கும்” காட்சி. 

இரண்டாம் காட்சி 
”இரத்தி நீடிய அகன் தலை மன்றத்து - புறம் 34/12” என்ற அடியின் மூலம் ”ஓங்கிய இலந்தை மரம் கொண்ட அகன்ற இடத்தையுடைய பொதியின் விவரிப்பு. 

மூன்றாம் காட்சியில் 
”மதுகை மன்றத்து அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல் கயம் தலை சிறாஅர் கணை விளையாடும் - புறம் 325/11,12” என்ற வரிகளால், ”வலிய பொதியிலில் உலர்ந்த தலையையுடைய இலந்தை மரத்தின் அசையும் நிழலில் மென்தலைச் சிறுவர் அம்பெய்து விளையாடும் காட்சி.

3 காட்சிகளும் இலந்தையின் சிறப்பை உணர்த்தும், 5-12 மீ உயரம் கொண்ட புதராகக் காட்சியளிக்கும் இம்மரக் கிளைகளில் முள்கள் நிறையவே இருக்கும். நெருங்கிய குருணைகளோடும் (close-grained), நுணுகத் துகுப்போடும் (fine-textured) காட்சியளிக்கும் இம்மரம் சிவந்து, கடினமாய், உறுதியாய், நாட்பட உழைக்கும் படி, மட்டஞ் செய்யச் சீய்ப்பதற்கும் பளிச்சுக் காட்டவும்  கூடியதாய் இருக்கிறது. இது கொண்டு, கிணறுகளுக்கு அணைகொடுக்கவும், கட்டிற் கால்கள் செய்யவும். படகு விலாமட்டைகள் செய்யவும். வேளாண் கருவிகள் செய்யவும், வீட்டுத் தூண்கள், உத்தரங்கள், கருவிக் கைப்பிடிகள், நுகங்கள் எனப் பல்வேறு பொருள்கள் செய்யவும் இது பயன்படுகிறது.  இம்மரம் எரிக்கவும் பயன்படுகிறது. இலை, பழம், விதை, வேர் பற்றிய புதலியல் (botany) விவரங்களைத் தவிர்க்கிறேன். ஏற்கனவே இணையத்தில் உள்ளவற்றைத் தேடிவிட முடியும். மருத்துவக் கூறுகளை மட்டும் இங்கு விவரிக்கிறேன். 

https://www.femina.in/tamil/health/home-remedies/elanthai-pazham-medicines-817.html என்ற வலைத்தளத்தில்,

”இலந்தைப் பழம் போல் அதன் இலையிலும் அதிக மருத்துவப் பயன்பாடுகள் கிடைக்கின்றன. இந்த இலைகளை மை போல் அரைத்து வெட்டுக்காயம் மீது கட்டினால் விரைவில் நலம் பெற முடியும். உடலின் மேற்பகுதியில் ஏற்படும் கோடைக்காலக் கட்டிகள் மீது கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும். இலந்தையின் கொழுந்திலை ”சீழ் மூலம், அரத்த அதிசாரம், மெய் எரிச்சல், வயிற்றுக் கடுப்பு, பித்த மேகம் ஆகியப் பிணிகளைப் போக்க சித்த மருத்துவத்தில் பயனாகிறது. இலந்தம் பட்டையை நன்றாகத் தூள் செய்து தேங்காய் எண்ணெயுடன் குழைத்துச் சிரங்குகள், காயம்பட்ட விரணங்களின் மேல் தடவிக்கொண்டு வர ஆறும் எனக் குறிப்பிடப் படுகிறது. கொழுந்து இலவம் இலையை நன்றாக அரைத்து எந்த விதமான கட்டிகளுக்கும் மேலே வைத்துக் கட்டிக்கொண்டு வர அடங்குவதாகக் குறிப்புகள் உள்ளன”.

http://mooligaikal.blogspot.com/2012/04/blog-post_22.html என்ற வலைத்தளத்தில் வரும் செய்தி: 

இல‌ந்தை பழ‌த்‌தி‌ல் ‌நிறைய ச‌க்‌தி‌க‌ள் உ‌ள்ளன. அதைப் போல இல‌ந்தை இலை‌யிலு‌ம் அ‌திக மரு‌‌த்துவ ச‌க்‌திக‌ள் உ‌ள்ளன. இலந்தை இலையை மை போல் அரைத்து வெட்டுக் காயத்தின் மீது வைத்து கட்டினால் விரைவில் காயம் குணமாகும். இலந்தை இலையை அரைத்து எலுமிச்சை அளவு எடுத்து பசு மோரில் கலந்து குடித்து வர எருவாய் கடுப்பு குணமாகும். இலந்தை இலையை அரைத்து அந்த விழுதைக் கட்டிகள் மீது கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும். இலந்தை இலையை மைபோல் அரைத்து[ பூசி வர, மயிரும் புழுவெட்டும் நீங்கும். இலந்தை இலையின் சாறெடுத்து அதனை உள்ளங்கை, உள்ளங் கால்களில் பூசி வர, அங்கு அதிகமாக வியர்வை சுரப்பது கட்டுப்படும்.

http://nammalvar.co.in/2017/12/19/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/ என்ற தளத்தில்,

இந்த இலைகளை மை போல் அரைத்து வெட்டுக்காயத்தின் மீது கட்டினால் விரைவில் நலம் பெற முடியும். உடலின் மேற்பகுதியில் ஏற்படும் கோடைக் காலக் கட்டிகள் மீது கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும். திருக் கீழ்வேளூர், திரு நணா, திரு ஓமாம்புலியூர் முதலிய திருக்கோயில்களில் தலமரமாக இலந்தை விளங்குகிறது.

https://www.tamilmithran.com/article-source/NjQzNjU0/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D என்ற தளத்தில், 

இலந்தை இலையை அரைத்து நாள்பட்ட புண்களின் மேல் வைத்து கட்டினால் புண் விரைவில் ஆறும். இலை மற்றும் பட்டையை நீரில் போட்டு கொதிக்க வைத்து குளித்தால் கை, கால்களில் ஏற்படும் குடைச்சல், வலி போன்றவை நீங்கும். என்று குறிப்பிடப்படுகிறது. வெட்டுக் காயத்திற்கு இந்த மர இலைகளை அரைத்து இழுதாய் போட்டு இழுகுவது கூட  முடியும் போலும். இருப்பினும் ஒரு சித்த மருத்துவர் இதைச் சொன்னால் நாம் உறுதி கொள்ளலாம்.

என்னுடைய பரிந்துரை இன்னும் இலவமாகவே இருக்கிறது. ஆனால் நான் சித்த மருத்துவம் தெரியாதவன். என்னுடைய முடிவை ஏரணத்தின் வழி பெற்றேன். ஒரு மருத்துவரைப் பார்த்து உசாவியே இலந்தையின் இயலுமை பற்றி அறிய வேண்டும். பட்டகை (fact) என்பது ஏரணத்தை (logic) விடப் பெரிதல்லவா?

அன்புடன்,
இராம.கி.

தீங்கனி இரவம் - 2.

கருங்கடுகு (black mustard- Brassica nigra), கேழ்க்கடுகு (brown mustard- B. juncea), வெண்சிறு கடுகு (white mustard- B. hirta/Sinapis alba) என 3 கடுகுகள் உண்டு.  ஐ, எனும் ஓரெழுத்து ஒருமொழி, நுண்மை, வெண்மை ஆகியவற்றைக் குறிப்பதால், ஐயவி,  வெண்கடுகாகும். [நீரில் அவித்தலை மட்டுமின்றி, நெருப்பில் இட்டதும் முன்பு அவியே. (அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின்... )]  கொழுமைக்கும் (health) கடுகு பயனாகும். வெண்கடுகைத் தின்றாலோ, புகை நுகர்ந்தாலோ, தொண்டைத் தொற்று போகுமாம் . காயத் தொற்று போகுமா? தெரியாது. ”வெண் கடுகு, நாய்க்கடுகு  (Cleome viscosa) ஆகிய இரண்டையும் சமமாய் எடுத்து நாளும் புகைத்தால், நோய்க் கிறுமிகள், நச்சுப் பூச்சிகள் வீட்டை அண்டாதாம்”. உடற்புண் குணமாக 10 கி. வெண்கடுகு இலைகளை 100 மி.லி. நெய்யிலிட்டுக் காய்ச்சி வடிகட்டி, அவ்வெண்ணெயைப் புண்ணின் மேல் பூசலாமெனுங் குறிப்பையும் இணையத்தில் பார்த்தேன். 

கடுகெண்ணெய் 2 விதம். 1. செக்கு நெய். 2. பொடியோடு, நீரைக் குடுவையில் இட்டுச் சூடாக்கி இன்னொரு குடுவையில் ஆவி பிடித்துக் குளிர்விப்பது.  2 ஆம் முறையை வேதியலில் நீராவித் துளித்தெடுப்பு (steam distillation) என்பார்.  இந்தக் கடுகு ஆவிப்பு எண்ணெயில் காடி வேதிப்பொருள்கள் குறைந்திருக்கும். இது சங்க காலத்தில் இருந்ததா? - என்பது தெரியாது. ஆனால் செய்வதொன்றும் கடினமில்லை. கடுகெண்ணெயைப் புயவுள்ள பட்டுயிரி ஈரி (powerful antibacterial agent) என்பார். கேடு விளைக்கும்  E. coli, salmonella, staph, listeria போன்ற பட்டுயிரிகளையும், சில கொதியங்கள் (yeasts), பூஞ்சைகளையும்  (fungii) கடுகாவிப்பு எண்ணெய்  அழிக்குமாம். வேர்வை நாளங்களைத் தூண்டி, வேர்வை எழ வைத்து உடம்பின் வெம்மை குறைக்கவும்  இவ்வெண்ணெய் தடவலாம். காய்ச்சல் காலத்தில் பயன்படும். 

வெண்கடுகைக் கத்தூரிமஞ்சள், சாம்பாணியோடு (= சாம்ப்ராணி) அரைத்துப் போட்டால் சுளுக்கு குணமாகுமாம். வெண்கடுகை அரைத்து வீக்கம், கைகால் வாதமுள்ள இடங்களில் அப்பினால், உடல்வீக்கம் வற்றுமாம். (தலைவன் காயத்தோடு  உடல் வீக்கமும் இருக்கலாம்.)  இத்தனை மருத்துச் செய்திகளையும் ஒரு சித்த மருத்துவரே உறுதிசெய்ய வேண்டும். நாட்டு மருத்துப் பொருள் விற்க, இணையத்தில் பலர் இப் புறப்பாட்டைப் பேசுவார். எல்லாம். heresay, வெட்டி யொட்டிய தப்புந் தவறுமான கூற்றுகள்.  உருப்படியான மருத்துவர் கூற்றாக ஒன்றையும் நான் காணவில்லை. நம் நிலை பரிதாபத்திற்கு உரியது.  எதையும் அறிவியல் வழி  ஆய நாம் அணியம் ஆகவில்லை. புண்ணில் பூசிய மைக்களிம்பில், ஐயவி எண்ணெயோ, தூளோ கலந்திருந்ததா? தெரியாது என்று தான் இப்பொழுது சொல்லவேண்டியுள்ளது.  

கருங்கடுகு எண்ணெயின் காரம் அதிலுள்ள allyl isothiocyanate வேதிப்பொருளால் எழும். உடம்பின் பல்லாயிரக் கணக்கான சில் (cell) சுவர்களில் இருக்கும் ( வலி, குளிர், எரிச்சல் உணர வழி செய்யும்) வாய்க்கால்களுக்கு இப்பொருள் ஊறு செய்யுமாம். எனவே கடுகெண்ணெயை அதிகம் தடவுவதும் கூடச் சிக்கல் தான். வெண் கடுகில்  allyl isothiocyanate-இற்குப் பகரியாக, காரங் குறைந்த வேறு isothiocyanate இருப்பதால், ஐயவி எண்ணெயைப் பல இடங்களில் விரும்புவர். இப் புறப்பாட்டில் ஐயவி பயன்பாடு அதனால் தான் சொல்லப் படுகிறது போலும். நான் சொன்ன எந்த வேதியல் காரணமும் பழந்தமிழர்க்குத் தெரியாது. ஆனால் வெண்கடுகு எண்ணெய் நல்லதென பட்டறிவில் அறிந்தது பாட்டில் வெளிப் படுகிறது. 

அடுத்து இரவந்தழை. இரவம் = ஒருவகை மரம், இருள்மரம், Ironwood of Ceylon, Mesua ferrea என அகரமுதலிகளில் குறிப்புண்டு. நாம் முன் நகர அக்குறிப்பு உதவவில்லை. இரவை இருளெனக் குறித்தாரா? இருளேன் மரங் குறிக்கும் விதப்பானது? மரநிறம் கருப்பா? இருளில் பூக்குமா?  புரியவில்லை. 

இது இலங்கையின் தேசிய மரம். நம் மேற்குத் தொடர்ச்சி மலையிலும் உண்டு. பொதுப் புழக்கம் அரிது. இலங்கை விகாரைத் தோட்டங்கள், சாலைகளில் இம்மரம் உள்ளதாம்.  வெவ்வேறு மொழிகளில்  பொதுப்பெயராய். கீழுள்ளவை குறிக்கப்படும்  இவற்றில் இருள்மரக் குறிப்பைக் காணோம். அகராதிப் பணியாருக்கும், புதலியருக்கும் (botanists) இடையே எந்தக் கலந்தாய்வும் நடைபெறவில்லை என்றே தோன்றுகிறது. (நான் நம்மூர் அகர முதலிகளைச் சற்று ஐயத்தோடேயே பார்ப்பேன். பெரும்பாலும் இவறைத் தமிழறிஞர் மட்டுமே செய்திருப்பார். துறையறிஞர் ஆலோசனை மீக்குறைவு.  பெரிய உசாவலும் அதில் இருக்காது.  

Common name: Cobra saffron, Ceylon ironwood, Indian rose chestnut • Assamese: নাহৰ nahor, নোক্তে nokte • Bengali: নাগেশ্বর nagesar • Garo: kimde • Gujarati: નાગકેસર nagkesar • Hindi: नागेसर nagesar • Kannada: ನಾಗಕೇಸರ nagakesara, ನಾಗಸಂಪಿಗೆ nagasampige, Atha • Kashmiri: नागकेसरः nagkesarah • Konkani: नाग चम्पो nag champo, व्हडलो चम्पो vhadlo champo • Malayalam: നാഗകേസരം nagakesaram, Churuli, Nagapoovu, Nanku, Vayanavu, Nagacampakam • Manipuri: নাগেসৰ nageshor • Marathi: नागचाफा nag chafa, नागकेशर nagkeshar • Mizo: herh-sê • Nepali: नाग केशर nag keshar • Oriya: ନାଗକେଶର nagakeshara • Pali: नाग naga • Sanskrit: नागकेसर nagakesara • Tamil: நாகமரம் nakamaram • Telugu: నాగకేసరము naga-kesaramu • Tibetan: na ga ge sar • Tulu: ಬೈನಾವು bainavu, ಕೇಶರ keshara.  தமிழில்  இதை மலைநங்கை, நாகசுரம், நாகப்பூ, நாங்கு, நாங்கில், நாங்குல், சுருளி என்றும் அழைக்கிறார்.  
 
13-15 மீ உயரம் வளரும் மரத்தின் அடிவிட்டம் 90 செ,மீ. ஆகலாம். குறுகிய, நீளவாட்டில்  (oblong 7-15 செ,மீ. நீளம்) உள்ள இலைகளின் மேற்பக்கம் அடர்பச்சை; அடிப்பக்கம் வெண்மை. இளந்தளிர்கள் சிவந்தோ, பொன் பூஞ்சையாகவோ (yellowish pink) தொங்கும்.  இளமரப் பட்டை வெடிப்போடு சாம்பல் நிறத்திலிருக்கும். எளிதில் பட்டையைப் பிய்க்கலாம். முதிர் மரங்களின் பட்டை செம்பழுப்பு  வீச்சுடன், கருஞ்சாம்பல் நிறம். பட்டையினுள் ஆழ்சிவந்த இம்மரத்தின் அடர்த்தி (15% ஈரப்பதத்தில்) 940 - 1,195 kg/m3. வெகு எளிதில் மரத்தை அறுக்க முடியாது, இருவுள்களின் (rails) அடிமரக் கட்டையாகவும்,  கட்டமை மரமாகவும் (structural timber) இம்மரம் நெடுநாள் பயனாகிறது. பழங்காலத்தில் ஈட்டி செய்யவும் இது பயன்பட்டது. 

மரவுறுதியால் இரும்பை உணர்த்தும் ஆங்கிலப் பெயர் (Ironwood of Ceylon, Mesua ferrea) ஒட்டியே, ”இருள்மரம்” என்ற பெயர் அகராதிகளில் எழுந்தது போலும். இந்திய மரபில் அப்படிக் குறிப்பில்லை. நம்மூர்ப் பெயர் பூவால் ஏற்பட்டது.  4 வெள்ளை இதழ்களும் ( விட்டம் 4-7.5 cm) நடுவில் ஏராளம் மஞ்சள் கேசரங்களும் (stamens) கொண்ட மணப் பூ இதுவாகும் . முகரும் நறையத்தையும் (perfume),ஊது வத்திகளைம் பூவிலிருந்து செய்கிறார். நம் இலவம்பஞ்சு போல், இதன் காய்ந்த பூவைச் சில நாடுகளில் தலையணைகளில் பொதிவாராம், முற்றலர்ந்த கேசரங்கள் சம்பங்கி போன்றும், இதழ்கள், படமெடுக்கும் நாகம் போன்றும் தெரிவதால் நாக சம்பங்கி, நாகப்பூ, நாக கேசரம் போன்ற பெயர்கள் எழுந்திருக்கலாம். 

இம்மர இலைகளை அரைத்து நெற்றியில் பற்றிட்டால், தீவிரத் தடுமன் விலகுமாம். வித்து நெய்யை அரிப்பு, எரிச்சல், காயம், வாதம் ஆகியவற்றிற்குத் தடவலாமாம். அரவ நஞ்சை முறிக்க, மர வேர் பயன்படுமாம்.  மூல அரத்தக் கசிவிற்கும், சளியோடு கழியும் வயிற்றாலைக்கும் காய்ந்த பூவிதழ்கள் பயன்படும். பெருந்தாகம், அளவு மிஞ்சிய வேர்வை, இருமல், செரிமானம் இன்மை ஆகியவற்றிற்கு அன்றலர் பூவிதழ்கள் தின்பது நல்லதாம். மொத்தத்தில் பூ, இலை, விதைகள், வேர்கள் மூலிகை  மருந்தாய் பயன்படுகின்றன. 

ஆனால், மேற்கூறிய எந்தப் புதலியல் குறிப்பும் பழத்தைப் பற்றிச் சொல்ல வில்லை. ”தீங்கனி இரவம்” எனும் விதப்பு, பாட்டில் வருவதால் ”இது இல்லையோ?” என்ற ஐயமும் எழுகிறது. இம்மர அடையாளம் சரியானால், இப் பழம் பொதுப் பயன்பாட்டில் இன்று கூட இருந்திருக்கவேண்டுமே? அப்படிக் காணோமே?. தவிர, நாகசம்பங்கி மரம் நம்மூர் மரபில் பூவால் விதப்புற்றது.  வெட்டுப்புண்ணுக்கு ”மைபோல் மரப்பொருள் அரைத்த இழுதை” இழுகுவது கூட மேலே புதலியல், மருத்துவக் குறிப்புகளில் புலப்படவில்லை. இந்த ஆய்வின் பின் என் முடிவு ”தீங்கனி இரவம்” என்பது நாக சம்பங்கி அல்ல.  இனி, இருள்மரம் எனும் இருவேல (Ironwood tree, Xylia xylocarpa)மரத்திற்கும், இலந்தைக்கும் (Jujube-tree. Zizyphus jujuba) வருவோம்.

அன்புடன்,
இராம.கி.

தீங்கனி இரவம் - 1

அண்மையில் நண்பர் நாக. இளங்கோ புறம் 281 பாடலை மிகச் சிறப்பாக விளக்கியிருந்தார். கூடவே ”தீங்கனி இரவத்தின்” அடையாளம் பற்றிக் கேள்வியும் எழுப்பினார். நான் "இலந்தை (Jujube-tree. Zizyphus jujuba)' என்றேன்.  நண்பர் இரவாவோ, “நாக சம்பங்கி” என்றார் புறநானூற்று உரைசெய்த இக்கால முகன உரையாளர் பலரும், தம் உரைகளில் நாக சம்பங்கியின் தாவரப் பெயரான, “Mesua ferrea (Cylon Ironwood tree) ”-ஐக் குறிப்பார். 3 ஆவதாய், இருள்மரம் (இருவேல (Burma Iron wood tree, Xylia xylocarpa) என்பதும் இயலுமை காட்டும்.  இரவப் பெயருக்கு 3  மரங்களும் சொந்தங் கொண்டாடும்.  ஆழம் போகாது சரியான மரம் அடையாளங் காணமுடியாது. என் பார்வையைக் கீழே விளக்குகிறேன்.

இப் புறப்பாட்டின் தலைவன் சா(த்)தாரன் அல்லன். குறுநிலக் கிழானில் பெரியவன் ஆகலாம். பாடியவரும் கிழாரே.  அரிசிலாற்றங்கரை சேர்ந்தவூர் அவரது என ஔவை. சு. துரைசாமி சொல்வார். தகடூரெறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, செல்வக்கடுங்கோ வாழியாதன், வேளாவிக்கோமான் பதுமன், அதியமான் நெடுமானஞ்சி, வையாவிக் கோப்பெரும் பேகன், அதியமான் எழினி போன்றோரை அரிசில்கிழார் பாடினார். பாட்டின் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 140-135. பாட்டினுள் 3 வகைச் செயல்கள் சொல்லப்படும். முதலாவது வீட்டின் தாழ்வாரத்தில் தழைகள் செருகுவது. அடுத்தது வீட்டு வளாகத்தில் சிலர் யாழ், பல்லியம் இசைப்பது, மூன்றாவது வெட்டுப்பட்ட வீரனுக்கான மருத்துவப் பணிகளைச் சொல்லித் தலைவி  தோழியை அழைப்பது. அரிசில்கிழார் பாட்டின் (புறம் 281. திணை: காஞ்சி ,துறை: தொடாக் காஞ்சி) அடிகளின் பொருள் புரியத் தோதாக, சற்றே மாற்றிக் கீழே கொடுத்துள்ளேன். 

தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ, 
வாங்கு மருப்பு யாழொடு பல்லியம் கறங்க,  
கைபய பெயர்த்து, மையிழுது இழுகி, 
ஐயவி சிதறி, ஆம்பல் ஊதி, 
இசைமணி எறிந்து, காஞ்சி பாடி, 
நெடுநகர் வரைப்பில் கடிநறை புகைஇ, 
வேந்துறு விழுமம் தாங்கிய பூம்பொறி 
கழற்கால் நெடுந்தகை புண்ணே, 
காக்கம் வம்மோ காதலம் தோழி

பெருவீரர் நடக்கையில்  டங்கென ஓசையிடும் காலணித் தண்டையை இசை மணி என்பர். 10000 பேரை வெற்றி கொண்டோரே இதை அணியலாமெனச் செ.ப. அகரமுதலி உயர்ந்து நவிலும். பெரும்பாலும் வெட்டு, கையில் ஏற்பட்டிருக்கலாம். அடிக்கடி போர் நடந்த சங்க காலத்தில் ( சிச்சிறு இனக் குழுக்களோடு பொருதிக் கரைந்து, சேரர், சோழர், பாண்டியர் எனும் முப்பெரும் இனக் குழுக்கள் சேர்ந்து வந்த காலம். போரும், மண உறவுகளும், பொருளியல் தொடர்புகளும் நிறைந்த காலம்,) ஓயாது சண்டை. பல வீட்டுத் தலைவர்  வெட்டுறுவதும், புண்ணாற்றுவதும், அதற்கென ஆள். பேர், அம்பு இருப்பதும் தொடர்கதை ஆகியிருக்கலாம். It must have been frequent. 

ஏனெனில் தொல்காப்பியம் பொருளதிகாரம் புறத்திணையியல்  24 ஆம் நூற்பாவில், ”இன்னகை மனைவி பேஎய்ப் புண்ணோன் துன்னுதல் கடிந்த தொடாஅக் காஞ்சியும்” என்று ஒரு தனித் தொடருண்டு. ”பேய்ப் புண்ணோன்= பெரும் புண்ணோன்; துன்னுதல் கடிந்த= நெருங்க முடியா அளவிற்கு; தொடாக் காஞ்சி= தொடாது ஆற்றும் செயல்” எனக் கொள்ளலாம். இங்கே புறப் பாட்டில், வெட்டுப்புண் திறந்து கிடந்தது. தைக்கவியலா நிலை. மெதுவே காய வேண்டும். வீட்டையும், மருந்துப் பணிகளையும் தலைவி ஒரு சேர நிருவகிக்கிறாள். அரிசில்கிழார் அவள் திறன் கண்டு வியந்து, தலைவி பார்வையில் பாடுகிறார். பேய்க்காஞ்சி எனச் சில உரைகளிலும் தொடாக் காஞ்சி என வேறு சில உரைகளிலும் துறை குறித்துள்ளார். பாட்டின் நிலை விவரிப்போம்.

பட்டுயிரிகளோ (bacteria), வெருவிகளோ (virae), பூஞ்சைகளோ (fungii) புண்ணுள் சேரக்கூடாது எனில், வீட்டுள் வெளியார் வரக்கூடாது. இதை அறிவிக்க வேப்பந் தழையை வெளித் தாழ்வாரத்தில் செருகுகிறார். பெரியம்மை,, சின்னம்மை,  தட்டம்மை போட்டால், வெளியாருக்கு வெருவி பரவிவிடக் கூடாதென எழுதருகையாக (warning) இன்றும் வேப்பந்தழையைச்  செருகுவோம். வெட்டுப்புண் பட்டால், வேறு சிக்கல். ”உள்ளாருக்குப் பரவக் கூடாது.” பழமரபில் இதற்கும் வேப்பந்தழையைச் செருகுவர் போலும். சூடணி வெருவிக் (corona virus)காலத்தில்  எளிதில் நோய்க்கு ஆட்படுவோர்/ மூத்தோர் ஒரு வீட்டில் இருந்தால், ”வெளியிருந்து வெருவி நுழைய வேண்டாம்” என உணர்த்த, இன்றுஞ் சிலர் தழை செருகிறாரே? . 

அடுத்து வெட்டுப் புண்ணை வெளியார்க்கு உணர்த்த, தீங்கனி இரவந்தழை செருகுகிறார். (வெட்டுக்காயம்  அடிக்கடி ஏற்பட்டது என்றேனே?) இரவந்தழை இதன் குறியீடு. வெட்டுப் புண் உற்றோன் வலியால் துடித்துத் துயிலின்றி முனகுகிறான். அவனைத் தூங்க வைக்க, யாழிசை, பல்லியம் (பல கருவிகள்) முற்றத்தில் சேர்கின்றன. முழவோசைக் குறிப்பு இந்தப் பாட்டில் இல்லை.) வலி ஆறலுக்காக இசை எழுந்ததோ, என்னவோ? வெட்டுக்கையைப் பையப் பெயர்த்து, மை போல அரைத்த இழுதை (nicely ground paste. என்ன இழுதென்று பார்ப்போம்) புண்ணின் மேல்   இழுகி (= அப்பி), புண்தோலில் ஐயவி சிதறி (ஐயவி, ஆகு பெயராய் கடுகெண்ணெயைக் குறிக்கும். நேரே கடுகையல்ல ), எரிச்சல் போக்க மூங்கிலால் ஊதுவார். (ஆம்பல்= மூங்கில். அல்லித்தண்டென சிலர் அறியாது சொல்வார். உடம்பெரிச்சலுக்கு இன்று மின்விசிறி  போடுகிறோமே? அது போல் பழங்காலத்தில் காற்றூதினார் போலும்). 

காற்று நகர்வால் தண்டோசை எழக்கூடாதென இசைமணி எறிந்து ( =கழற்றி), தலைவன் தூங்கும்படி காஞ்சிப்பண் பாடத் தலைவி, தன் தோழியை அழைக்கிறாள்.   [காஞ்சியை, “நிலையா உலகத்தில் நிலைப்பேறு எய்தல்” என்பார். வெட்டுற்றவன், ”நிலையோம்” என மயங்க, நிலைப்பாயென உறுதி தரக்  காஞ்சிப்பண் இசைக்கப் படுகிறது. இரங்கலுக்கான விளரிப்பண் என்றும் ( வீ.ப.கா. சுந்தரம். தமிழிசைக் கலைக்களஞ்சியம். பா.தாசன் பல்கலை.... பக் 75-76.)  தூங்கவைக்கும் பண் என்றும் சொல்வர்.  செம்பாலையின் விளரியைக் குரலாக்கிப் பண்ணுப் பெயர்க்கக் கிட்டும் பெரும்பண் இது. ( அரி காம்போதியின் தைவதத்தைச் சட்சமாக்கிப் பண்ணுப் பெயர்க்கக் கிட்டுவது தோடி. ஆரோசை: ச ரி1 க1 ம1 ப த1 நி1) துன்புற்றாருக்கு நம்பிக்கை தரப் பாடும் தோடி.. ஊத்துக்காடு வேங்கடசுப்பையரின்,“தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்தில் வந்துதித்த ---” என்ற பாடலை இங்கு நினைவு கொள்க.] 

அதே பொழுது, மற்ற சேடியர் நீள்வீட்டின் வரம்புகள் (= சுவர்கள்) அருகே (இக்காலச் சாம்பிராணிப் புகை போல) அக்கால அகிற்புகையை எழுப்பச் செய்கிறார். தணலுள் வெண்சிறு கடுகும் இடப்படுகிறது.  கடிநறை strong fragrance எனப் பாடலில் வருகிறது.; வீடு நெடுகிலும் புகை எழாது, பெரும்பாலும் முற்றஞ் சுற்றி இருக்கலாம்.  மருத்துவத்தை விவரித்து, ”அன்புத் தோழியே! வேந்தனுறும் விழுமந் தாங்கிய, பூம்பொறி கழலைக் காலில் வேய்ந்த, என் நெடுந்தகையின் (=கணவனின்) புண் காக்க வருவாயோ” என்று தலைவி அழைக்கிறாள். அடுத்த பகுதியில் ஐயவியின் விவரத்தினுள் போய், பின் தீங்கனி இரவத்தை அடையாளங் காண்போம்.

அன்புடன்,
இராம.கி.

Saturday, July 25, 2020

ion

ion (n.) ஏகன்

coined from Greek ion, neuter present participle of ienai "go," from PIE root *ei- "to go." So called because ions move toward the electrode of opposite charge.

cation (n.) கீழேகன்

from Greek kation "going down," katienai "to go down," from kata "down" 

anion (n.) ஏறேகன்

from Greek anion "(thing) going up," anienai "go up," from ana "up" 

electron = மின்னி
ionic = ஏகன
ionize = ஏகனாக்கு
ionosphere = ஏகனக் கோளம்

Tuesday, July 21, 2020

நிகண்டு

அண்மையில் வழக்குரைஞர் Murugesan Maruthachalam நிகண்டின் பெயர்க் காரணம் பற்றித் தமிழ்ச்சொல்லாய்வில் ஓர் இடுகை இட்டிருந்தார். ”தமிழ் நிகண்டை வடசொல் என்போர் உளர். நிகர்சொல் கண்டு சுருக்கமாக நிகர் கண்டு. மிகச் சுருக்கமாக நிகண்டு ஆனது. நீண்டதொடர் நூல்சுருணை நூற்கண்டென்பர். சொற்கள் தொடராக இருந்தால் சொற்றொடர். சொற் கண்டு. நிகரான சொற்கண்டு நிகண்டு. கற்கண்டு - இனிப்பு. கற்கண்டு - கண்டு கற்றல்.. நிகண்டு தமிழே” என்பது அவர் மொழி. 

நான் வேறுபடுவேன். நிகண்டு பற்றி வேறு பலரும் இவருக்கு முன் கேட்டிருந்தார். அப்போதெலாம் வெவ்வேறு வேலைகளால் ஆழ்ந்ததால், மறுமொழி சொல்லாது இருந்தேன். இப்போது முயல்கிறேன்

முதலில் பொறுமையோடு, மணிப்பவள நடையில் இருக்கும் திருவரங்கக் கோயிலொழுகின் அருங்கதை ஒன்றைப் படிப்போமா?    இந்த அரிய பொத்தகம் (முதற்பகுதி) ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ. கிருஷ்ணம் ஆசார்யர் வெளியிட்டது.  [214, கீழை உத்தர வீதி (விக்ரம சோழன் திருவீதி), திருவரங்கம் திருச்சி 620006] பக்கம் 84-86. 

”சுந்தர பாண்டியத் தேவர் கைங்கர்யம்” என்பது குறிப்பின் தலைப்பு. கி.பி.1250- 84 இல் இருந்த முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் பற்றியது. பிற்காலப் பாண்டியரில் பென்னம்பெரிய வெற்றி பெற்றவன் கிட்டத்தட்ட முழுத் தமிழ்நாடும் அவன் கையில் வந்துசேர்ந்தது. (இவன் முன்னோன் மாறவர்மன் சுந்தரபாண்டியனும், இவனும் சோழ குலத்தையே இல்லாமற் செய்தார்கள். திருவரங்கக் கோயிலுக்கு இந்தச் சடையவர்மன் சுந்தரவர்மன் ஏராளமாய்த் திருப்பணி செய்திருக்கிறான்.

”சுந்தரபாண்டியத் தேவர் சேரன் சோழன் வல்லாளதேவன் (ஹொய்சாள மன்னர்கள்) முதலானாரை ஜயித்து, ”எம்மண்டலமு கொண்ட பெருமாள்” என்ற விருது செலுத்தி, அந்த த்3ரவ்யங்களாலே, ராஜமாஹேந்த்ரன் திருவீதி முதலாக, இந்நாலு வீதியும் இருபத்துநாலு துலாபுருஷ மண்டபமுங் கட்டி துலாபா4ரந் தூக்கி, திருமுகத்துறையிலே ஒரு நிறையாக இரண்டு ஓடங் கட்டி, அதில் ஒரு ஓடத்திலே தச்சு முழத்திலே ஏழு முழமிருக்கிற பட்டத்தானையின் மேலே தானும் தன்னுடைய ஆயுத4ங்களுடனேயிருந்து ஒரு ஓடத்திலே அந்த மட்டத்துக்குச் சரியாக ஸ்வர்ணம் முத்து முதலான நவரத்திநங்களும் ஏற்றி, ஆனை துலாபுருஷந் தூக்கி......” என்று அச் செய்தியின் சொற்றொடர் நீண்டு போகும்.

நமக்குத் தேவை ”துலாபுருஷம்” என்பதைப் புரிந்து கொள்வதே. (கஜ துலா பாரம் என்றும் இதைக் கோயிலொழுகு சிறப்பிக்கும்.) இன்றும் பெரிய பெருமாள் கோயில்களில் நடக்கும் துலாபாரம் பார்த்திருப்பீர்கள்.. 40 கிலோ அரிசி கொடுக்க, ஒரு பலங்கையில் 40 கிலோ கல்லையிட்டு, இன்னொரு பலங்கையில் அரிசியைக் கொட்டி துலை சமமாக, நிகராக, நிற்கும் அளவு அரிசியைச் சொரிவர். 40 கிலோ கல்லிற்கு நிகரான அரிசி கொடையாகும். 

ஒரு யானை+ சுந்தர பாண்டியன்+ ஆயுதங்கள் அளவிற்குத் தங்கம், (முத்து போன்ற ஒன்பான் மணிகள்) இடவேண்டுமெனில். துலையில் இது நடவாது. இரு ஓடங்களைக் காவிரியில் நிறுத்தி மிதக்கவிட்டு, பாண்டியன் இதைச் செய்துள்ளான். ஆர்கிமிடிசு விதி அவனுக்குத் தெரியாதிருக்கலாம். ஆனால் செய்து காட்டல் (demonstration) என்பது நடந்திருக்கிறது. ஓர் எடைக்கு நிகரான பொருள் காணும் அழகை மேலே கோயிலொழுகின் விவரிப்பில் பாருங்கள்.

சரி இரு வேறு கோடுகளிடையே  அல்லது பரப்புகளிடையே ஒப்பிட வேண்டுமா? ”அளந்து பார்” என்போம். ”எதற்கு எது நிகர்?” என்று தெரிந்து விடும்.  நீட்டளவு என்பது தமிழில் ஓர் அடிப்படை அளவு. பரப்பளவையைத் தமிழர் வழிநிலை (derived) அளவையாகக் கொண்டு, சதுரக் கருத்தீட்டால் பரப்பை அளப்பார். 

ஒரு கோல் = 5.5 அடி. ஒரு தண்டம் = 11 அடி. ஒரு தண்டச் சதுரம் = 121 ச.அடி என்பார். (வடக்கே 144 ச.அடி. நடுக்கிழக்கு நாடுகளிலும், மீட்டருக்கு முந்தைய கால இரோப்பிய நாடுகளிலும்) தமிழில் ஒரு தண்டச் சதுரத்தைக் குழி என்பார். பின்னால் மா, வேலி போன்ற பரப்பளவுகள் இத் தண்டச் சதுரம் கொண்டு வரையறுக்கப்படும்.

இதேபோல் முப்பரிமான அளவையை நீர்மங்களன்றிக் கூலம்,  பருப்பு,  துகள்/குருனை போன்றவைகளுக்குச் செய்யமுடியாது. ஏனெனில் கையாளும் துகளின் இயல்பைப் பொறுத்து மொத்தைத் திணிவு (bulk density) மாறும். குருனைகளும், அவற்றின் இடையுள்ள காற்றுவெளியும் படுத்தும் பாடு இதன் காரணமாகும் .  இதற்கும் மேல் இன்னொரு பலக்குமையும் (complexity) உண்டு.

ஏனத்துள் துகளை அழுத்தியடைத்தால் மொத்தைத் திணிவை மேலும் மாற்றலாம்.  பொதுவாய் அடைவு (packing) வேறுபாட்டின் காரணமாய், வெள்ள (volume) அளவீட்டிற்கு  ஒரு செந்தர முறை என்பது வேண்டும். இல்லெனில் ஒவ்வொரு முறையும் முப் பரிமானக் கொண்மை (capacity) என்பது மாறும்.
  
நிகரிமை என்பது மேற்சொன்ன அளவீடுகளில் மட்டுமின்றி, நாம் கொள்ளும் விலைமதிப்பிலும் உண்டு. நாணயம் புழங்காக் காலத்தில் ஒரே மதிப்புக் கொண்டவற்றை ஏதோவொரு வகையில் மாற்றிக் கொண்டார். 

காட்டாக, 10 மூடை உப்பும் ஒரு மூடை நெல்லும் ஒரே மதிப்பு என்பது ஒரு கால மரபு. இன்றிது மாறலாம், பின்னால் சோழி, முத்து, பவளம், தங்கம், வெள்ளி, தாள் போன்றவையும் வெவ்வேறு நாணயங்களும் மதிப்பைக் காட்டுதற்கு நிகராக வந்தன. ஆக, ஒவ்வொரு ஒப்புமைக்கும் அடியில் ஓர் அலகு இருக்கிறது. நீளம், கொண்மை, எடை, விலைமதிப்பு என இந்த அலகுகள் மாறலாம்.

சொற்களை ஒப்பிடும் போதும் இது போல் அலகுகள் மாறலாம்.  கோடி, கோடிகம் , படாம், கோசிகம், கூறை, பஞ்சி, சாடி, நீவியம், சீரை, சம்புடம், கலை, கலிங்கம், சூடி, காடிகம், புட்டம், தூசு, காழகம், வட்டம், ஆடை, ஆவரணம், தானை, அறுவை, அம்பரம், ஆசாரம், மடி, பரிவட்டம், சேலை, வத்திரம், உடுக்கை, வாசம், இலக்காரம் எனும் 31 சொற்களை ”சூடாமணி நிகண்டின்” வழி, புடவை எனும் அலகால் ஒப்பிடலாம். 

ஒவ்வொரு நிகண்டு நூலிலும் இதுபோல் 1000க் கணக்கான அலகுகளுண்டு. நிகண்டிற்கு ஆன நிகண்டு அலகுகள் மாறுபடலாம். அந்தந்த அலகில் ஒப்பிடும் சொற்களை நிகண்டில் பட்டியலிட்டிருப்பார்.

நிகண்டில் வருவது 2 வகைச் செய்திகள். 1. சொற்கள் தொகுக்கப்படும் அலகுகள். 2. ஒவ்வோர் அலகிற்குமான சொற்கள். சில அலகுகளில் ஓரிரு சொற்கள் தேறும்,. சில அலகுகளில் அதிக எண்ணிக்கை இருக்கும். 

சரி, நிகர்சொற்களைத் தொகுக்கும் நூலை நிகரி எனலாமே? ஏன் நிகண்டென அதற்குப் பெயரிட்டார்?  வடசொல்லென வழக்கம் போல் சிலர் உரிமை கொள்கிறாரே? 2 கேள்விகளையும் ஆழமாய்ப் பார்ப்போம். குறைந்தது 2700 ஆண்டுப் பழமையான தொல். பொருள். உவம இயலின் 11 ஆம் நூற்பா, 5 ஆம் வரியில், ”நிகர்ப்ப” என்பது வரும். இச்சொல் அங்கு எப்படி எழுந்தது?

நுல்> நுள் என்ற வேர்  பொருந்தற் பொருளில் 2 வகைகளில் சொற்கள் வளர்ச்சியைக் காட்டும்.

நுள்> நள் என்பது ஒரு வகை. நள்ளல், நளி, நட்பு, நடி, நடம், நட்டம், நாடகம், நணி, நணுங்கு, நயம், நசை, நத்து போன்றவை இவ் வகையைச் சாரும். இவற்றை வேறு கட்டுரையில் பார்க்கவேண்டும்.  

நுள்> நிள் என்று திரிவது இன்னொரு வகை. நுள்> நிள் > நிர்> நிரத்தல் = நெருங்கல், கலத்தல், பரத்தல், நிரம்புதல்; நிள்> நிர்> நிரல் = வரிசை அடுத்தடுத்துப் பொருந்தலால் இது வரிசையாகும். 

நிள்> நிர்> நிரை = வரிசை; 
நிள்> நிர்> நிரவு> நிரவல் = வரிசை, சமனாக்கல்; 
நிள்> நிர்> நிரம்பு> நிரம்புதல் (=நிறைதல்); 
நிரை> நிறை; நிள்> நிர்> நெர்> நெரு = காலத்தால் நெருங்கிய; 
நெரு> நெருநல்> நென்னல் = காலத்தால் நெருங்கிய நேற்று; 
நிள்> நெர்> நெரி> நெரிசல் (ஒருவரை ஒருவரும் நெருக்கி ஏற்படும் நிலை); நெரு> நெருங்கு (நெருவின் வளர்ச்சி); 
நெரு> நேர்> நேர்தல்  happening.
நெரு> நேர்> நேர்த்தி = பொருந்தியமையும் அழகு; 
நெரு> நேர்= ஒப்பு; 
நேர்> நேரம்= பொருந்துங் காலம்; 
நெள்> நெய்= ஒரு துகள் இன்னொன்றோடு பொருந்தி வழலுதல்,  

வார்ப்பும் (warp) ஊடும் (weft) என நூல்களமையும் முறை; 
நெய்> நெய்த்துவர் = சிவப்பாய் நெய்போல் அமையும் அரத்தம்; 
நெய்> நேயம்> நேசம் = பொருந்திக் கொள்ளும் அன்பு; 
நெய்> நெய்ஞ்சு> நெஞ்சு = நெய்த்தோர் கையாளும் குருதயப் (heart) பகுதி.; 
நெய்> நெய்தல், நெசவு = வார்ப்பும் ஊடும் பின்னிக் கொள்வது. 

இதே வளர்ச்சியில், 
நிள்> நிழு> நிகு> நிகழ் என்பது காலத்தால் நம் கண்முன்னே பொருந்துவது. அடிப்படையில் ஓர்ந்து பார்த்தால் மாந்தருக்கு இறந்த காலமும் எதிர்காலமும் மட்டுமே உண்டு. நிகழ் காலம் என்பது நம் வசதிக்குத் தக்க நாமே பொருத்திக் கொள்ளும் காலம். ஒரு நொடி, ஒரு நுணுத்தம் (minute), ஒரு மணி, ஒரு நாள், ஒரு மாதம், ஓர் ஆண்டு என நம் சிந்தனை காலத்தைக் கூறுபோட்டுக் கொள்ளும். அப்பொருத்திற்குத் தக்க நாம் வரையறைந்து கொள்ளும் நிகழ்காலமும் மாறும்.

நிகு> நிகள்> நிகர் = ஒப்பு.  

இதில் நிகள்தல் என்ற சொல்  வருமா? - என்பது இன்னொரு கேள்வி. 

பொதுவாக ளகரமோ, லகரமோ தான் தமிழில் ரகரமாய்த் திரியும். அவ்வகையில் நிகள் என்பது ஓர் இயலுமையே. இதற்குக் காட்டு முன்னால் சொன்ன கோயிலொழுகில் உள்ளது. அதே பொத்தகம் முதல் பகுதி பக்கம் 40-44 இல் வரும் ”நந்தசோழன்  கைங்கர்யத்தில்” உறையூர் நகரம் நிகளாபுரி எனப் படும் என்பார். நிகளாதல் = நிகரில்லாது ஆதல். ஈடு இணையற்ற ஊர் என வெற்றிப் பொருள் சொல்வதற்காக அவ்வூர் நிகளாபுரி என்ற பெயர் பெற்றது. 

(உறந்தை, திருக்கோழி, கோழியூர், குக்குடபுரி, வாரணபுரி, உரகபுரம் என்ற பெயர்களும் அதற்குண்டு). எனவே நிகள்தல்> நிகர்தல் என்பது சரியான திரிவு தான். கோயிலொழுகில் இச்சொல் பயின்றாலும் நம்மூர் அகர முதலிகளில் இது ஏறவேயில்லை. இப்படி எத்தனை சொற்களைப் பதிவுசெய்யாது போனோமோ? நான் படித்தவரை, மணிப்பவள  நூல்களுக்குள்  அருமையான தமிழ்ச் சொற்கள் பலவும் உள்ளன. நாம்தாம் நம் அறியாமையால் அவற்றை ஒதுக்கி இழக்கிறோம்.

நிகளல் என்பது இறந்தகாலத்தில் நிகள்ந்தது> நிகண்டது என்றும், நிகழ் காலத்தில் நிகள்கிறது என்றும், எதிர்காலத்தில் நிகளும் என்றும் வரும்.  வேள்ந்தது> வேண்டது என்பது போல், கள்ந்தது> கண்டது போல், கொள்ந்தது> கொண்டது போல், நிகண்டது என்பது முற்றிலும் சரி. 

நிகண்ட சொற்கள் நிகருற்ற சொற்கள் தாம். நிகண்டு நூல் = நிகர்ச் சொற்கள்  அடங்கிய நூல். ஜலசமுத்ரத்தில்/நீர்க்கடலில், ஜலத்தை/நீரை விட்டு,  சமுத்ரம்/கடல் என்று பயில்வது போல்,  நிகண்டுநூல் நிகண்டாய் மட்டுமே நின்று கொண்டு உரிய பொருளை  உணர்த்துகிறது. கோயிலொழுகைப் படிக்கா விடில் நிகண்டின் சொற்பிறப்பு எனக்குப் புரிந்திருக்காது.

சரி, வடமொழி என்று சொன்னாரே? அதையும் பார்த்து விடுவோம்.  எடுகோட்டில் உள்ள மோனியர் வில்லியம்சு போய்ப் பார்த்தால், நிகண்ட் என்பதற்கு,

निघण्ट
(H1) नि-घण्ट [p= 546,2] [L=108157] m. ( √ घण्ट् , to speak? ; cf. घण्टा , a bell) a collection of words , vocabulary Cat.
[p= 546,2] [L=108158] N. of a दानव Katha1s.

என்று நி+கண்ட் என்று சொல்லை உடைத்துப் போட்டிருப்பார்.  கண்ட் என்பதைத் தாது என்பார். (அடிப்படையில் அதன் பொருள் தொண்டை). இங்கே பேசுதல் என்று கேள்விக்குறியோடு போட்டிருப்பர். அதாவது பேசுதலாய் இருக்குமோ என ஊகிக்கிறாராம். 

கண்டா எனில் மணி. இங்கே நிகரான சொல் தொகுதி எனும் பொருளே வரவில்லை. என்னைப் பொறுத்தவரை a collection of words , vocabulary Cat என்பது பயன்பாட்டைப் பொறுத்து, குருட்டாம் போக்கில் சொற்பிறப்பு சொல்ல முயல்வதாகும் 

மொத்தத்தில் அவருக்கு நிகண்டின் சொற்பிறப்பு தெரியவில்லை. எனவே தமக்குத் தோன்றிய ஊகத்தைச் சொல்கிறார். சொற்களை உடைத்துப் பொருள் சொல்வது சங்கத அகரமுதலிகளின் இயல்பான வழக்கம். (தமிழிலும் சிலர் இப்படி உடைத்துச் சொல் பொருள் காட்டுவார், 

இதை ஏற்பதும் ஏற்காததும்  உங்கள் உகப்பு. நான் ஏற்க மாட்டேன். என் முடிவில் நிகண்டு என்பது தமிழே. ஒவ்வோர் அலகிற்கும் நிகரான சொற்றொகுதிகள் அடங்கிய நூல் என்பது அதன் பொருள்.

அன்புடன்,
இராம.கி.