Friday, August 07, 2020

On-line, off-line

மேலே உள்ள ஆங்கிலச் சொற்களுக்கு நண்பர் ஒருவர் தமிழில் இணை கேட்டிருந்தார். நம்மில் பலரும் இதில் முகன்மையான line இற்குச் சொல் தேடாது, on, off இற்குச் சொல் தேடிச் சுற்றி வளைத்து ஒப்பேற்ற முயல்வோம். என்னைக் கேட்டால் பல இடத்தும் பயனுறுத்தும்படி line க்குப் பொதுச்சொல் காணாது இக் கலைச்சொல் சிக்கலைத் தீர்க்க முடியாது என்பேன். பொதுவாக,  line க்குக் கோடு என்றே பலரும் சொல்வர். ஆனால் அதுமட்டும் இணைத் தமிழ்ச்சொல்லல்ல. கோடலின் அடிப்பொருள்  வளைதலே.  “சரி, நேர்கோடு” எனச் சிலர் சொல்ல விழைவார். அதுவும் முரண்தொடையே. அடிப்படையில் 2 புள்ளிகளைக் கயிறால் கட்டித் தொடர்புறுத்துவதை  line என்பார். ஆங்கிலத்தில், இப்படியே வரையறுப்பார். கயிறு தொய்யின் சரியான தொலைவு காணவியலாது. இழுத்துக் கட்டியே line நீளம் அளக்கமுடியும். 

line (n.) a Middle English merger of Old English line "cable, rope; series, row, row of letters; rule, direction," and Old French ligne "guideline, cord, string; lineage, descent" (12c.), both from Latin linea "linen thread, string, plumb-line," also "a mark, bound, limit, goal; line of descent," short for linea restis "linen cord," and similar phrases, from fem. of lineus (adj.) "of linen," from linum "linen". 

இழுக்கப் பட்டது (to draw, to pull, to haul) தமிழில் இழையாகும். திருக்கு ஏறாத நூலைக் குறிக்க இழை பயன்பட்டது. எல்லா இடத்தும் பொதுக் கலைச் சொல்லாய் இழையைப் பயன்படுத்தினால், குழம்பும்.  இழை என்ற சொல் filament இற்கு வெகு சிறப்பாய்ப் பொருந்தும். கயிறு (string) நூல் (spun), கோடு, திரி என வெவ்வேறு சொற்கள் வெவ்வேறு விதப்பிற்குப் பொருந்தியவை. (திரி, பஞ்சைத் திரிப்பதற்குப் பயன்படும். thread இக்குச் சரிவராது. திரியீடு (= திருக்கு இடு) என்று சற்று திரித்து நான் சொன்னது ஒரு பேராசிரியருக்குப் பொறுக்க வில்லை. ”ஆங்கில ஒலிச்சொல் படைக்கிறேன்” என்று  திட்டிவிட்டார். இங்கே சொல்லும் line இற்கும் திட்டத்தான் போகிறார். இருப்பினும் செய்கிறேன்.

இழை, நூல், திரி, கயிறு போன்றவற்றோடு தொடர்புடைய, அதேபொழுது line எனும் புதுக்கருத்தை உள்வாங்கி, ஒருசொல் வேண்டுமென நினைத்தேன். இழுக்கலை இழுவல் (இழுவு-அல்) என்றும் சொல்லலாம். இழுவு, இழுக்கும் தொழில் குறிக்கும்.  இதை இழும்/இழுன் என்றும் சொல்லலாம். இழுக்கப் பட்டது இழுவை/இழுமம்/இழுனம்/இழுனை ஆகும். இழுத்துக் கட்டலை இழுமுதல்/ இழுனுதல் என்றும் சொல்லலாம். இழுமம்/இழுனம்,  அல்லது இழுனை என்பதை line க்கு ஈடாய்ப் பயன்படுத்துகிறேன். இதுவரை எச் சிக்கலும் இப்பயன்பாட்டில் நான் காணவில்லை. இதன் வினைச்சொல் இழுனு-தல் என்றாகும்.

நாம்புரியும் செலுத்தில் (process) சாரா வேறி (independent variable)யின் மதிப்பில் கொஞ்சம் வேறுபட, சாரும் வேறியும் (dependent variable) அதே விழுக்கு வேறுபடும் எனில், இத்தகை உறவுள்ள செலுத்தை, இழுனியச் செலுத்து (linear process) என்றும், கன்னா, பின்னாவென அளவிறந்து சாரும் வேறியில் நிறைய விழுக்கு வேறுபடுமானால் இழுனாச் செலுத்து (non-linear process) என்றும் இற்றை அறிவியலில் சொல்வார். இழுனிய செலுத்தில் அதன் சாய்வு (gradient) மாறாதிருக்கும்;  இழுனாச் செலுத்தில் சாய்வு மாறிக் கொண்டே வரும் (gradient will keep changing). இழுனாச் செலுத்துகள் பலவும் அவற்றின் வாகு (behaviour) களால், இன்றும் அறிவியலில் புதிராகவுள்ளன. அதனால் பலரும் இவற்றை ஆழ்ந்து படிக்கிறார். கணிப்பயன்பாடு கூடிய பிறகே,  இப்படிப்பு ஓரளவு பெருகியுள்ளது. இப்போது கூட்டுச் சொற்களுக்கு வருவோம். இதில் நான் இயலுமையைச் சொல்கிறேன். இவற்றைக் காட்டிலும் பழகிய சொற்கள் இருப்பின் பயிலலாம்.

lineo- = இழுனிய
airline = பறப்பு இழுனம்
align = இழுனாக்கு
baseline = அடியிழுனை/அடியிழை
bee-line = தும்பி இழுனை/தும்பியிழை
borderline = வரம்பிழுனை/வரம்பிழை
byline = எழுதிழுனை = எழுனை
clothes-line = துணி இழுனை/கயிறு
coastline = கடற்கரை
curvilinear = சுருவு இழுனை
dateline = நாள் இழுனை
deadline = முடிவு இழுனை
delineate = இழுனப் படுத்து
flat-line = மட்ட இழுனை
front-line = முன் இழுனை
guideline = காட்டு இழுனை
hairline = முடியிழை
hard-line = கடு இழனை
headline = தலை இழுனை
hemline = முன்றானை

இனி, 
on-line = இழுனை(யின்) மேல். Will you come on the line? இழுனையின் மேல் வருவீர்களா? 
off-line = இழுனை(யை) விட்டு Will you come off the line? இழுனையை விட்டு வருவீர்களா?

switch on = மேற்சொடுக்கு Can you switch  it on? மேற்சொடுக்க முடியுமா?
switch off = விடுச்சொடுக்கு Can you switch it off? விடுச்சொடுக்க முடியுமா?

 

2 comments:

Anonymous said...

ஐயா line என்பதை கை என்றே அழைக்கலாமே.

இராம.கி said...

சரி வராது. Take your hand off the line என்பதை உன் கையை விட்டுக் கையெடு என்று சொன்னாக் குழம்பாதோ? அதே பொழுது, “உன் இழுனையை வீடுக் கையெடு” என்பது சரிவருமே? எப்போதுமே எதிர்மாதிரிகளை (counter examples) தேடி ஓர்ந்து பாருங்கள். ஒரு குறிப்பிட சொல் சரியா, இல்லையா? - என்று விளங்கும்.