துயில், பள்ளி, துஞ்சல், அனந்தல்,
கிடை, படை, சயனம், கனவு,
கண்படை, கண்வளரல், கண்ணடைத்தல்,
கண்ணயர்தல், கண்படுதல், கண்முகிழ்த்தல்
என இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். உறங்குவது என்பதும், இருட்டு, கிடத்தல், படுத்தல், அயர்வு, சோர்வு, வாட்டம், தங்குதல், அடைதல், அணைதல், தாமதம், சோம்பல், சாவு போன்ற கருத்துக்களும் ஒன்றோடு ஒன்று இழைந்தே தமிழில் பயிலுகின்றன. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
1. ஒரு இடத்தைப் பள்ளும் போது (தோண்டும் போது) பெரிதாகச் செய்தால் பள்ளம். சிறிதாகச் செய்தால் பள்ளி(ல்). நாளாவட்டத்தில் இந்த வேறு பாடு குறைந்து போய், ஏன் மாறிக் கூடப் போய், குகைக்கு மற்றொரு சொல்லாகவே 'பள்ளி' என்பது ஆயிற்று. நாகரிகம், மதங்கள் வளர்ந்த பிறகும் பள்ளிகள் மனிதனின் வாழ்விலிருந்தே வந்தன. குராப் பள்ளி, சிராப் பள்ளி போன்ற ஊர்ப்பெயர்கள் எல்லாமே குகைகள் இருந்ததையும், அதில் ஒரு சாரார் வசித்து வந்ததையும் தெரிவிக்கின்றன. இதே பள்ளி, பின் சமயக் காலத்தில், சமணப் பள்ளி, புத்தப் பள்ளி, பள்ளி வாசல் எனப் புதிய மதத்தார் கோயில்களுக்கும் பயன்பட்டது. இச் சமயப் பள்ளிகளில் கல்வியும் கற்றுக் கொடுக்கப் பட்ட போது, கல்விச் சாலையும் பள்ளியாயிற்று.
2. காலையெல்லாம் வேட்டையாடி தன் உண்பசி தீர்த்து அயர்ந்து, சோர்வுற்று மாலையில் திரும்பும் ஆதிகால மனிதனுக்குப் பொழுதுசாய்ந்தால் போக்கிடம் இருட்டும், குவையும், கொடியும் தானே! என்ன தான் தீயின் அண்மையில் இருந்து விழிப்பைக் கூட்டிக் கொண்டாலும், சோர்வும், அயர்ச்சியும் கண்ணைச் சொக்கிக் கொண்டு வரும் தானே! பள்ளப்பட்ட குகையில் கண்ணை மூடிக் கொண்டு கிடக்கும் போது (கொடிய, ஆனால் சிறிய, பாம்புகள் போன்ற ஊருயிரிகள் தன்னைத் தாக்கிவிடக் கூடாது என்பதற்காக கல்லை வெட்டிச் செய்து கொண்ட படுக்கைகளில் படுக்கும் பழக்கம் வந்தது. இந்தப் படுக்கைகளும் பள்ளியென்றே அழைக்கப் பட்டன. பள்ளியில் இருந்து தோன்றியதே படுக்கை.
அதம் என்றாலும் பள்ளம் (பா அதலம் = பாதாலம் (=பாதாளம்)). பள்ளி எனும் சொல் அதன் நீட்சியில் தூக்கத்தையும் குறித்தது.
கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அடைந்தான்;
கன இருள் அகன்றது; காலையம் பொழுதாய்
மது விரிந்து ஒழுகின மாமலர் எல்லாம்;
வானவர் அரசர்கள் வந்துவந்து ஈண்டி
எதிர்திசை நிறைந்தனர்; இவரொடும் புகுந்த
இரும் களிற்று ஈட்டமும் பிடியொடும் முரசும்
அதிர்தலில் அலைகடல் போன்றுளது எங்கும்;
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே!
பள்>படு>படுகு>படுக்கு>படுக்கை. (பள்ளப்பட்ட இடத்தில் தான் படுத்தனர் போலும்.)
3. நிதலம் என்பது கீழ் உலகங்களில் ஒன்று. (இன்றைய நெதர்லாந்து என்ற நாட்டின் பெயரும் இதே பொருளில் தான் இருக்கிறது. நெதர் என்றால் அந்த மொழியிலும் பள்ளம், தாழ்ந்தது என்றே பொருள்.) நித்திக் கிடப்பது நித்தை. நித்தை வடமொழியில் நித்திரை என்று ஆகும்.
4. இதே போல கீழே கிடந்தது கிடை. (என்ன ஆச்சு, ஒரே கிடையா இருக்கா? மருத்துவர் கிட்டே போகலாமா?)
5. சாய்ந்து இருந்தது சயனம். (பெருமாள் திருவரங்கத்திலே கிடந்த திருக்கோலம். தெற்கே பார்த்து சயனம்)
6. படுப்பது படை என்று அறிவது மிக எளிது.
7. அதேபோல ஒடுங்கிக் கிடப்பது, உறங்கிக் கிடப்பது ஆகும்.
8. கொடிகள் மற்றும் மரக்கிளைகளில் தொங்கித் தூங்கியது தூக்கம் (பிள்ளை தாலில் தொங்கும் போது, தூங்கத்தானே செய்கிறது?)
9. இனி அனந்தல். கொஞ்சம் சரவலான சொல். கண்ணை மூடினால் இருட்டு எனும் போது இருட்டே உறக்கத்தின் கூராய்ப் போனது.
அல்-இரவு, இருள்.
அந்,அன் - இன்மை
அந்தம் - உள், மறைவு
அந்தப்புரம் - உள்ளே இருக்கும் புரம் அல்லது கட்டு, மறைவான கட்டு.
அத்தமித்தல் - மறைதல், படுதல், உட்புகுதல், அற்றுப்போதல், இல்லாமற் போதல்
அன்+அந்தல் = அனந்தல், இதுவும் உறக்கம் தான். திருவனந்தபுரத்தில் அறிதுயில் கொண்டு படுத்துக்கிடக்கும் அனந்தனைத் தெரியாதார் யார்? அறிதுயில் ஒரு நுண்மையான சொல். அவன் முற்று முழுதாக அறிந்து கொண்டே துயில்வதாக ஒரு பாவனை.
10. கனவு என்பது இருட்டு எனும் பொருளில் கல் ஏனும் வேர்ச்சொல்லில் மலர்ந்தது. நாளாவட்டத்தில் dream என்ற இற்றைப் பொருளிற்கு நீண்டுள்ளது.
மத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்றூத,
முத்துடைத் தாம நிரை தாழ்ந்த பந்தற் கீழ்,
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்!
11. கண் வளரல் என்பது சுவையான சொல்லாட்சி. ஒரு அருமையான சப்பானிய ஐக்கூ பல ஆண்டுகள் முன் படித்தேன். அடிகள் நினைவில் இல்லை. பொருள் மட்டும் ஞாவகத்தில் உள்ளது. தலைவன் கல் ஒன்று வளருவதைப் பார்த்துக் கொண்டிருப்பதாக அதிலொரு முரண் வரும். அப்படிப் பட்ட ஓர் உணர்வில் வருவது தான், கண் வளரல். (கண் எப்படித் தூக்கத்தின் போது வளரும்? பிள்ளையை மடியில் வைத்து ஆராரோப் போட்டால், பின் அது வளராமல் என்ன செய்யும்?)
இது பெரும் பாலும் குழந்தைகளைத் தொட்டிலில் போட்டுத் தூங்க வைப்பதற்குப் பயன்படும். ஒரு நாட்டுப்புறப் பாடல்:
கரும்புருகத் தேனுருகக்
கண்டார் மனமுருக,
எலும்புருகப் பெற்றகண்ணே!
இலக்கியமே! கண் வளராய்!
12. கண்ணடைத்தல் என்பது சேர்ந்துபோய் எழுகவொண்ணாதபடி கண் செருகிக் கொண்டு வருவது.
13. கண்ணயர்தல் கிட்டத் தட்ட அதே பொருளில் தான்.
14. கண் படுதல் என்பது திட்டிப் (=திருஷ்டி) பொருளாக மட்டுமல்லாது தூங்குவதற்கும் ஓரோவழி பயன்படுகிறது. உடம்பு படுவது போலக் கண்ணும் படுகிறது, பதிகிறது.
15. கண்படை, கண்படுதலின் தொடர்ச்சியே.
16. கண்முகிழ்த்தல் 'தோன்றும்' பொருளில் அல்லாது. 'மூடல்' அமங்கலம் என்று கருதி எதிர்ச் சொல்லைப் பயன்படுத்துகிறோம். எங்கள் பக்கம் வீட்டிற்குள், சாமி அறையிலுள்ள விளக்கை 'அணை'யென்று சொல்ல மாட்டார். அதை இடக்கர் அடக்கலாக, 'விளக்கை நல்லா வை' என்று சொல்வார். அதுபோலத் தான் கண்முகிழ்த்தலும்.
17. எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன். இந்தத் துயில், துஞ்சல் மட்டும் தான் கொஞ்சம் சரவல். இரண்டிற்குமே வேர் துய் தான். துயக்கு, துயங்குதல், துயரம் எனப் பல சொற்கள் சோர்ந்து போகும் பொருளிலேயே வழக்கில் உள்ளன. அதேபொழுது ”துயல்தல்” அசைதல் பொருளில் வருவதைப் பார்க்கும் போது கொஞ்சம் வியப்பு வருகிறது.
துயல் = அசைதல்
துயில் = ஆழ்ந்த அசைவில்லாத நிலை.
இது எப்படி என்றால், மண்= செறிந்த நிலை, மணல் என்பது மண் அல்லாதது= செறியாதது என்பதைப் போல. இங்கே ஓர் உயிர் எழுத்து மாற்றத்தில் மாறுபட்ட பொருள்கள் கிடைக்கின்றன.
18. துஞ்சல், துயிலின் நீட்டமே.
அன்புடன்,
இராம.கி.
4 comments:
துயில் - நன்றாக இருக்கிறது. தமிழை மறந்து தூங்குபவர்களை எழுப்ப உங்கள் முயற்சி நன்றாக இருக்கிறது. இங்கு தூங்குப்வர்களை வீட தூங்குவது போல் நடிப்பவர்கள் ஏறாளம். அவர்கள் எழுந்திரிப்பார்களோ இல்லையோ, கண்டிப்பாக எழுந்து ஓடுவார்கள் என்பது தின்னம்.
அன்பிற்குரிய சம்மட்டி,
உங்கள் வருகைக்கும், இனிய சொற்களுக்கும் நன்றி.
அன்புடன்,
இராம.கி.
மிக அருமை சிறப்பு ஐயா
துயில் வார்த்தையை வைத்து ஒரு வாக்கியம் அமைத்து தாருங்கள்
Post a Comment