Friday, August 10, 2018

அளவைகளும் சாரியைகளும் - 3

சென்ற பகுதியில் 6 அளவை முறைகளைப் பற்றிச் சற்று விரிவாகவே பேசி ஏழாவது அளவை முறையைத் தொட்டோம். இனி அதில் தோய்வோம். 

எண்ணி அளத்தலுக்கு வந்தபின், எண்களைப் பேசாது இருப்பது எப்படி? தமிழிய, வட இந்திய, மேலை மொழிகளின் எண்ணுச் சொற்களிடையே ஒரு வியத்தகு ஓரிமை இருப்பதாகவே நான் உணர்கிறேன். சொற்கள் வேறாயினும், உள்ளிருக்கும் செலுத்தமும் (process) பொருளும் (meaning) ஒன்றுபோற் காட்சி அளிக்கும். தமிழிய மொழிகளுக்கும் இந்தையிரோப்பியனுக்கும் முன்தொடர்பு இருக்குமென நான் சொல்ல, இதுவும் ஒரு காரணம். தமிழில் எண்கள் எழுந்த வகை பற்றிச் சொல்ல ஏராளம் உண்டு. (சில எண்களின் பெயர் விளக்கத்தைச் சங்கமெனும் தொடர்கட்டுரையில் விளக்கினேன். முகநூலில் அதையும் வெளியிடுவேன்.)

சுழியில் தொடங்கி (அருள்கூர்ந்து பூஜ்யத்தைத் தொலையுங்கள்! இதைப் பழகப் பழகக் சுழிக்கருத்தே நமக்குத் தெரியாதென வெளியார் எண்ணுவார்), ஒன்று, இரண்டு, மூன்று, நாலு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, நூறு (நூறி வந்தது நூறு, பொடியாய்ச் சிதறியது), ஆயிரம் (ஐ>அய்>அயிர் = நுண்மை அயிர்த்து வந்தது ஆயிரம். இது தமிழே. இலக்கம் (நொய்யிற்பிறந்த நொய்தல்> நெய்தல் எனும் அழகிய பெயரும் இதற்குண்டு. வடக்கே நொய்தம்>நெய்தம்> நியுதம்), கோடி (குவளை>குவளெ> குவடெ>கோடே>கோடி என்றாகும். வடக்கே க்ரோரே.) என்ற முழு எண்களை (whole numbers) வைத்தே எண்ணியல் தொடங்கியது. இதற்கு மேலும் ஆம்பல், சங்கம், தாமரை, வெள்ளம், ஊழி எனத் தமிழில் எண்களுண்டு. 

இவற்றை விடுத்து பல்வேறு சங்கதப் பெயர்களைத் தமிழ் எண்களாய்ச் சொல்லிப் பீற்றிக் கொள்ளும் முட்டாள்கூத்தும் இணைய வலைத் தளங்களில் நடக்கிறது. என்றைக்கு நம் தமிழர் விழிப்பாரோ, தெரியாது. முழு எண்களுக்குப் பின் அரை, கால், வீசம், மா, காணி, முந்திரி என்ற பின்னங்களும் எழுந்தன. முந்திரிக்குக் கீழும் பின்னங்கள் உண்டு. அவற்றை விரிப்பின் பெருகும்.

சுழியை முதலிற் பயன்படுத்திய ஆவணம் பொ. உ. 459 இல் ஆகத்து மாதம் 25 திங்கட் கிழமையில் காஞ்சிபுரத்தில் எழுந்த ”லோகவிபாக” என்ற செயின நூலாகும். (Penguin நிறுவனம் Georges Ifrah எழுதிய The Universal History of Numbers-இன் 3 தொகுதிகளை வெளியிட்டது. எண்ணியல் தோற்றத்தை அறிய விழைவோர் கட்டாயம் படிக்கவேண்டிய நூல்கள் இவை.) 1000 ஆண்டுகளுக்கு முன் கேரளத்திற் கணிதம் வளர்ந்ததெனில் தமிழர்க்கும் அது பெருமை இல்லையா? சோழ, பாண்டியரைத் தவிர்த்து சேரர் மட்டும் தனியே கணிதத்தை வளர்த்தாரா, என்ன? அங்கு எழுதி வைத்த நூல்கள் சங்கத மொழியில் இருக்கலாம். அதற்கென்ன? இந்தியா எங்கணும் அக்காலத்தில் படித்தோர் மொழி சங்கதமே. இக்காலத்தில் ஆங்கிலத்தில் பலரும் எழுதுகிறாரே, அதைப் போல் இதையும் கொள்ளுங்கள்.

பதின்மமுறை (=தசமமுறை) என்பது இந்தியாவில் தோன்றியதாகவே பலருஞ் சொல்கிறார். அதே பொழுது சுன்னமோ, பதின்ம முறையோ, தமிழில் இருந்ததற்குச் சான்றில்லையென Georges Ifrah சொல்வார். பதின்ம முறைக்கு முந்திய நிலையே தமிழரிடமிருந்தது என்று அவர் சொல்வார். பின் எங்கிருந்து தான் இந்தியாவில் பதின்ம முறை புறப்பட்டது?- என்பதற்கு அவரிடம் விடை யில்லை. பாழ் எனுங் கருத்தீடு பரிபாடலில் வருவது இர்வாவிற்குத் தெரியாது போலும். (பரிபாடலின் காலம் பொ.உ.மு. 50 என “சிலம்பின் காலத்திற்” சொல்லி இருந்தேன். பரிபாடற் காலத்தைப் பொ.உ.5 ஆம் நூற்றாண்டெனச் சிலர் தள்ளும் போக்கைக் கேள்வி கேட்போர் குறைந்து போனார்.) சங்க இலக்கியங்களில் இன்னும் 2,3 இடங்களில் சுழி பற்றிய சிந்தனையுண்டு. தமிழருக்கும் பதின்ம முறைக்குமான தொடர்பில் சரியான ஆய்வு தேவை. அதைச் செய்யத் தான் இங்கு ஆளில்லை. (என் புரிதலின் படி சுழியக்கருத்து சங்க காலத்தில் தமிழர் அறிந்தது தான்.)

இன்னொரு செய்தியுஞ் சொல்லலாம். 1/20ஐக் குறிக்கும் மாவெனும் பின்னம் தெலுங்கு, கன்னட மொழிகளில் இல்லை. வடக்கே உள்ளதாயுந் தெரிய வில்லை. மேலை மொழிகளிலுங் கிடையாது. தமிழிலும், மலையாளத்திலும் மட்டுமேயுண்டு. நம்மை விட்டால் மாயன், எசுடெக் நாகரிகங்களில் உண்டு. சுமேரிய, பாபிலோனிய நாகரிகங்களில் 1/60 உண்டு. 1/20 என்ற பின்னம் புழங்கியவருக்கு 1/10 யைக் கண்டு பிடிக்க முடியாதா, என்ன? தமிழர் ஏன் 20, 80, 320 என்ற மடக்குகளை கீழ்வாய் இலக்கத்திற் பேசினார்?. இதை ஓர்ந்து பார்க்க வேண்டாமா? 1/20, 1/80. 1/320  என்ற சிந்தனை நம் அருகிலிருந்த மற்ற மொழியாளருக்கு வரவே இல்லையே? அவரெல்லாம் வீசம், அதன் மடக்கு என்றே தானே இருந்தார்? பொதுப்புத்தியில் எங்கோ இடிக்கிறதே? உண்மையிலேயே தமிழருக்குப் பதின்ம முறை தெரியாதா?

முழு எண்களும் பின்னங்களுஞ் சேர்ந்து அரிதையெண்கள் (rational numbers) என்ற கருத்து ஏற்பட்டு, சங்க காலத்தில் இயலெண் (natural number) சிந்தனை வளர்ந்தது. நெடுங்காலத்திற்கு முன் வட்டம், விட்டம், ஆரம், சுற்றுவரை (circumference), பரப்பெனும் போது அரியொணா எண்கள் (irrational numbers) கிரேக்கரோடு, நமக்கும் எழாதா? 

pi -இருப்பும், குத்துமதிப்பும் பழந்தமிழ் ஆவணங்களில் இருந்ததா? என்று சான்று தேடுகிறேன். உள்ளமை எண்களின் (real numbers) கருத்தீடு எப்போது எழுந்ததென்று என்னால் சொல்லமுடியவில்லை. நொகையெண்களும் (negative numbers), அமைகண எண்களும் (imaginary numbers), பலக்கெண்களும் (complex numbers) மேலையர் தொடர்பால் நமக்கு வந்தன. முடிவிலி /அ/ வரம்பிலி /அ/ கந்தழி (infinity) போன்றவை இயலெண் வளர்ச்சியாய், சங்க இலக்கியத்திற் தென்படுகின்றன.

இப்பொழுது கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தலெனும் அடிப்படைச் செய்முறைகளுக்கு வருவோம். இவை ஒவ்வொன்றிற்கும் இணைச் சொற்களை இலக்கியத்தில் பயில்வார். அவற்றைத் தொகுத்துக் கூறுவதும் பெரிய வேலை. கூட்டலின் இன்னொரு சொல்லான சேர்த்தல்/சார்த்தலை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். 

சார்+இயை= சாரியை என்பது additive பொருளுடைய ஓர் இலக்கண உருபாகும். சாரியையில் வரும் இயையெனுஞ் சொல்லாக்க ஈறு வலுவானது. நேரியை (instant, n.), எதிரியை (opposite, n.), மாறியை (variable,n.), நிலையை (constant, n.) போன்ற பல்வேறு அறிவியற் சொற்களை உருவாக்கலாம். மொழியாக்க நண்பர்கள் இதன் திறனுணர்ந்தால், அறிவியற்றமிழ் பழந்தமிழோடு தொடர்ச்சி காட்டும். அப்படியின்றேல், செருமானியச் சரச்சொற்கள் போல் நீள நீளக் கூட்டுச் சொற்களே தமிழில் நிறைந்து வழியும். ஓர்ந்து பார்த்தால் அது நல்லதல்ல. தமிழ் விக்கிபீடியாக் கட்டுரைகளில் கூடக் கூட்டுச் சொற்கள் சிறிது சிறிதாய் மிகுந்து வருகின்றன. நண்பர்கள் என்னைக் கோவிக்க வேண்டாம். பொதிவான கிடுக்கமாய் (positive criticism) நான் சொல்வதைக் கொள்ளுங்கள். தமிழ்க் கலைச் சொல்லாக்கத்தில் நமக்கின்னுங் கவனந் தேவை.

இனிப் 10 ஆம் எண்ணுக்கு அப்புறம் சாரியைகள் வருவதைக் கவனிக்கலாம். மாறிவரும் எண்களை மட்டுமே இங்கு நான் அழுத்திச் சொல்கிறேன். ஒழுங்கான எண்களைச் சொல்கையில் சற்று விரைவாய்ப் போவேன். படிப்போர் பொறுக்க. ஆழ்ந்து பார்த்தால், 1 முதல் 10 வரை எண்களில் ஒன்று, இரண்டு, மூன்று, கை>கைது>ஐது>ஐந்து>ஐய்ஞ்சு>அஞ்சு, பல்து>பத்து/பஃது என்பவையே தமிழில் முதலில் எழுந்த எண்கள். இவற்றின் வளர்ச்சியான ஆறு, ஏழு, எட்டின் சொற்பிறப்பை இங்கு நான் சொல்லவில்லை. (ஆறு, ஏழு, எட்டுள் உம்மைத் தொகையுண்டு. பின்னால் வேறு கட்டுரையில் பார்ப்போம்.) 

நாலும், ஒன்பதும் கை, பத்து>பஃது>பது என்னும் எண்களின் குறையாய்க் கிளர்ந்தன. நலிந்த கை (=குறைந்த கை), நால்ங்கை>நான்கை>நான்கு என்றும், [இடை மூக்கொலி குறைத்துப் பயிலும் தென்பாண்டி வழக்கால்] நாலிகை> நால்கை> நால்கு> நாலு> நால் என்றும் பயிலும். இதே போல் ஒலிந்த பத்து (= கழித்தலைக் குறிக்கும் மெலிந்த பத்து), அதாவது 10-1= 9, ஒன்பத்து> ஒன்பது ஆகலாம். (துவண்டதாய்ப் பொருள் உணர்த்தும் ”தொண்டு” என்பதை வேறிடத்திற் பார்க்கலாம்.) எண்களில் முகன்மையான சுழிக் கருத்து தொல்காப்பிய, சங்க இலக்கியத்திற்கு முன்னே இங்கு ஏற்பட்டிருக்கலாம். 

ஒரு/ஓர், இரு/ஈர், மு/மூ, நால்/நான், ஐ, அறு, எழு, எண் என்ற குறு வடிவுகளையும் பழங்காலத்தில் பயின்றுள்ளார். பத்தின் மேல் வரும் எண்கள் எல்லாமே கூட்டல்/சார்த்தல், பெருக்கல் போன்ற அடிப்படை முறைகளை ஒட்டியே எழுந்ததைக் கவனிக்கலாம். 

சார்த்தல்/கூட்டல் முறையின் ஊடே வரும் சாரியைகளின் பங்கு பெரியது. 10+1 = பத்து-இன்-ஒன்று. இதில் இன் என்பது + என்ற குறியீட்டைக் குறிக்கும். மேலும் த் கெட்டு பதினொன்று ஆகும். அதே போல 10+3 = பத்து-இன்-மூன்று.> பதின்மூன்று. இப்படியே பதினாலு, பதினைந்து, பதினாறு, பதினேழு, பதினெட்டில் இன் சாரியை பயின்று ஒரு கூட்டொழுங்கை  உணர்த்தும். இதே முறையில் பதினிரண்டு எனாது பன்னிரண்டு ஆனதும், பதினொன்பது எனாது பத்தொன்பது ஆனதும் பேச்சுவழக்கின் சிதைவாகவே தோன்றுகிறது.

இனி இன்னொரு வகையான பெருக்கலைப் பார்ப்போம். 1*1= 1 இதில் முதல் ஒன்றை குறும்பெயர் கொண்டும், இரண்டாவதை நெடும் பெயராகவுமே பெரும்பாலும் அழைப்பார். சிலபோது குறும்பெயரும் பயனாகிறது. 

பெருக்கல் வாய்ப்பாட்டில் ஓரோன் ஒன்று என்றே சொல்வோம். ஓரொன்று என்றுஞ் சொல்வதுண்டு. ஓரிரண்டு இரண்டு, ஒரு மூன்று மூன்று. ஓரொன்பது ஒன்பது, ஒரு பத்து பத்து என்று முதலெண்ணை குறும்பெயர் வைத்தழைப்பதே தமிழில் பெருக்கற் செயலைக் குறிப்பதாகிறது. 

இதே பாவனையில் 2-ஆம் வாய்ப்பாட்டில், ஓரிரண்டு (1*2) இரண்டு, ஈரிரண்டு (2*2) நாலு, மூவிரண்டு (3*2) ஆறு, நாலிரண்டு (4*2) எட்டு, ஐயிரண்டு (5*2) பத்து, ஆறிரண்டு (6*2) பன்னிரண்டு, ஏழிரண்டு (7*2) பதினாலு, எண்ணிரண்டு (8*2) பதினாறு, ஒன்பத்திரண்டு (9*2) பதினெட்டு என்றாகிறது.

3-ஆம் வாய்ப்பாட்டில் ஒருமூன்று மூன்று, இருமூன்று ஆறு, மும்மூன்று ஒன்பது, நால்மூன்று பன்னிரண்டு, ஐமூன்று பதினைந்து, அறுமூன்று பதினெட்டு; 

4-ஆம் வாய்ப்பாட்டில் ஒருநாலு நாலு, இருநாலு எட்டு, முந்நாலு பன்னிரண்டு, நா(ல்)நாலு பதினாறு; 

5-ஆம் வாய்ப்பாட்டில் ஓரைந்து ஐந்து, ஈரைந்து பத்து, மூவைந்து பதினைந்து; 

6-ஆம் வாய்ப்பாட்டில் ஓராறு ஆறு, ஈராறு பன்னிரண்டு, மூவாறு பதினெட்டு; 

7- ஆம் வாய்ப்பாட்டில் ஓரேழ் ஏழு, ஈரேழ் பதினாலு; 

8-ஆம் வாய்ப்பாட்டில் ஓரெட்டு எட்டு, ஈரெட்டு பதினாறு; 

9-ஆம் வாய்ப்பாட்டில் ஓரொன்பது ஓன்பது, ஈரொன்பது பதினெட்டு; 

10-ஆம் வாய்ப்பாட்டில் ஒருபத்து பத்து, இருபத்து இருபது, முப்பத்து முப்பது, நாற்பத்து நாற்பது.... இங்கே த் எனும் இடையெழுத்து விலகி பெருக்கலெண்கள் 80 வரை போகும்.

இருபதிற்குமேல் எண்களைச் சொல்கையில், இன் சாரியைக்கு மாறாக ’இ’ என்பதைப் பயன்படுத்திச் சார்த்தல் முறையில் எண்கள் பெறப்படுகின்றன. காட்டாக, இருபது+ ஒன்று= 2*10+1 = இருபத்தியொன்று என்றாகும். இகரச் சாரியை பற்றிச் சில செய்திகள் சொல்ல வேண்டும். பொருளதிகாரம் புணரியல் 120 ஆம் நூற்பாவில்,

அவைதாம்,
இன்னே வற்றே அத்தே அம்மே
ஒன்னே ஆனே அக்கே இக்கே
அன்னென்னெ கிளவி உளப்படப் பிறவும்
அன்ன என்ப சாரியை மொழியே

என்பார். இ-எனுஞ் சாரியை இதிற் “பிற” எனும் கணக்கில் வருவதாகவே எனக்குத் தோன்றுகிறது. அன்றேல் அது இன்னின் இடைக்குறையா? அன்றி 165 ஆம் நூற்பா பேசும் ஏகரச் சாரியையின் ஒரு திரிவா என்றுஞ் சொல்ல இயலாது உள்ளது. தமிழரில் மிகப் பலரும் பேச்சு வழக்கில் அழுத்தி விளக்கிச் சொல்கையில் இகரச் சாரியைக்கு மாறாய் ஏகாரச் சாரியையிட்டே சொல்கிறார்.

இகரச் சாரியை இன்னும் ஆய்வுற்கு உள்ளாகும் கருத்தாகிறது. இகரச் சாரியை புழங்குவதை இழிவாய்க் கருதுவோர் மீத்திருத்தவாதிகளாகி இருபத்தொன்று என்பார். [எத்தனை தமிழாசிரியர் இப்படித் திருத்துகிறார் தெரியுமோ?!]

பேச்சுவழக்குப் போகக் கல்வெட்டுக்களிலும் பலவிடங்களில் இகரச் சாரியை தவிர்க்கப் படுகிறது, இகரச் சாரியை தவிர்ப்பது மதிப்புப் புரிதலிற் குழப்பத்தையே உருவாக்கும். இகரச்சாரியையைத் தவிர்த்தால், ”ஒரு பெரிய எண்ணுள் பெருக்கலும் சார்த்தலும் என்ன ஒழுங்கு முறையில் உள்ளன? எது பெருக்கல்? எது சார்த்தல்?“ என்று விளங்கிக் கொள்ளவே முடியாது. இருபத்தொன்று என இகரச் சாரியை ஊடுவராது சொன்னால் 2*10*1 = 20 என்று கூடப் பொருள் மாறி விடுமே?  

எனவே ஏரணஞ் சரிப்பட நிற்க (இடையே வருவது பெருக்கலா, சார்த்தலா என்று அறிய) உரிய இடங்களில் இகரச் சாரியை வந்தே தீரவேண்டும் என்று புரிந்து கொள்ளலாம்..

இக்காலத்தில் இகரச்சாரியையின்றிப் பேச்சில் தொனியை வேறுபடுத்தியோ, அல்லது சொற்கூட்டை அழுத்தியோ சரியான பொருளை வெளிப்படுத்தலாம். எழுதும்போது சொற்களிடையே வெளியை ஏற்படுத்தியும் பொருளைப் புரிய வைக்கலாம். அக் காலத்தில் ஓலையில் எழுதும் சொற்களின் இடையே வெளி என்பது கிடையாது. எனவே வேற்று உத்தியாய்ச் சாரியைகள் இருந்தன. 

தமிழ்க்கணிமை பயிலும் இக்காலத்தில் இகரச் சாரியையின் தேவையை அழுத்தக் காரணமுண்டு. மாந்தரெனில் ஒருவேளை இடம், பொருள், ஏவல் பார்த்துப் புரிந்து கொள்ளலாம். கணியால் இதைச் செய்வது கடினம். இலக்கணமும் கணி போல் நெறிப்பட்டது தான். இங்கு விதிகளில். நீக்குப் போக்குகள் இருந்தால் அவற்றை இலக்கணத்தின் வழி வரையறுக்க வேண்டும். இருபத்தியொன்று போலவே இருபத்தியிரண்டு, இருபத்திமூன்று (2*10+3), முப்பத்திநாலு (3*10+4), நாற்பத்தியைந்து (4*10+5), ஐம்பத்தியாறு (5*10+6), அறுபத்தியேழு (6*10+7), எழுபத்தியெட்டு (7*10+8), எண்பத்தியொன்பது (8*10+9) போன்றவையும் பொருட்குழப்பம் வாராதிருக்க, இகரச் சாரியை கொண்டு ஏரணத்தோடு அமைய வேண்டும். (பல தமிழாசிரியரும் இகரச் சாரியை பற்றி நான் சொல்வதை ஏற்கார். நான் இலக்கணம் வழுவுவதாகவே  சொல்வார்.)

இப்படியே இகரச் சாரியை பெய்து இருபது, முப்பது, நாற்பது, ஐம்பது,. எண்பது என வளர்த்தி, பெருக்கல், சார்த்தலால் எண்பத்தியொன்பது வரை வரலாம். இதற்கு அடுத்த எண் நூறில் துவண்டதாய் தொள்நூறு = தொண்ணூறு = 100-10 என்று 90- ஐக் குறிக்கும். துவள்>தொள்; துவண்டு>தொண்டு என்பது குறைப்பொருளையும் கழித்தற் செயலையுங் குறிக்கும். துவளும் நூறு மதிப்பிற் குறைந்த நூறு(100-10) எனப் பொருள் கொள்ளும். தொண்ணூற்றி யொன்று,... தொண்ணூற்றியொன்பதென இகரச் சாரியை பெற்று அடுத்தடுத்த எண்கள் உருவாகும். 

நூறென்பது இன்னொரு கருத்தீடு. நூற்றிற்கப்புறம் எண்ணூற்றி எண்பத்தியொன்பது வரை எக் குறையுமின்றி ”பெருக்கலாலும், இன்-வழி, இ-வழிச் சார்த்தலாலும்” தமிழ் எண்களைக் கட்டலாம். அடுத்தது தொள்ளாயிரம். இதுவும் குறைப்படும் ஆயிரம் (1000--100). மீண்டும் ஆயிரம் வரை முன் போல் நகரலாம். இதற்கு மேல் ஒவ்வொறெண்ணாகப் பார்க்க வேண்டாம். கோடி வரை ஒரே தாவலிற் போகலாம். 

பத்தென்ற சொல்லிற்கு இன் சாரியை ஆயிற்று. இருபது.....எண்பது வரை இகரச் சாரியை. தொண்ணூறு, நூறு போன்றவற்றிற்கும் றகரம் இரட்டி இகரச் சாரியை வரும். ஆயிரத்திற்கு அத்துச் சாரியையும், இகரச் சாரியையும் வந்து ஆயிரத்தி என்றாகும். தொள்ளாயிரம் தொடங்கி எண்பத்தொன்பதாயிரம் வரை இவ் வழக்கந் தொடரும். அடுத்துத் தொண்ணூறாயிரம் அத்துச் சாரியையும், இகரச் சாரியையும் பெற்று நூறாயிரம் வரை வரும். 

நூறாயிரத்திற்கு இன்னொரு பெயர் இலக்கம். (இதன் சொற்பிறப்பை நானிங்கு கூற வில்லை. விளக்கம் நீளமானது இருப்பினும் இது தமிழே.) இதுவும் மகரத்தில் முடிவதால் அத்து, இகரச் சாரியைகளின் பயன் தொடரும். சில போது மிகப்பெரிய எண்களைக் கூறுகையில் (குறிப்பாக இலக்கத்திற்கு அடுத்து எகரம், ஏகாரம் வருகையில்) ஏகாரச் சாரியை ஊடுவதைக் கண்டுள்ளேன். (ஒரு வேளை ஒலிப்புத் தடையோ?) தொண்ணூற்றிலக்கத்தை ஏரணப்படி தொள்கோடி எனலாம். ஆனால் பேச்சு வழக்கில் கேட்டதில்லை. காரணம் தெரியவில்லை.மேற்கூறிய எழுத்ததிகாரம் தொகைமரபு 165 ஆம் நூற்பாச் செய்தியின் படி, கோடியில் ஏகாரச் சாரியை புழங்கத் தொடர்கிறது. 

கீழே ஓரெண்ணை குறியீட்டாலும், எழுத்தாலும் எடுத்துக் காட்டுவோம். 15,67,84,293 = 15*10^7+67*10^5+84*1000+2*100+9*10+3 = பதினைந்து கோடியே அறுபத்தியேழு இலக்கத்தே எண்பத்திநாலு ஆயிரத்தி இருநூற்றித் தொண்ணூற்றி மூன்று. இங்கே ஏ சாரியை 2 இடங்களிலும், இ சாரியை 5 இடங்களிலும், இன் சாரியை ஓரிடத்திலும் வருவதைக் காணலாம். இச்சாரியைகள் வருவதாலேயே தான் எண்ணை நாமும் கணியும் புரிந்து கொள்வதில் குழப்பமில்லை. 

ஆகச் சாரியைகளைப் புழங்கினால், தமிழெண்கள் சீர்படும். அதோடு, சீரிய தமிழ்க் கணிமைக்குக் குழப்பமில்லாத சாரியை விதிகளை கணிக்குச் சொல்லத் தான்  வேண்டும். தமிழ்ச் சொவ்வறையாளருக்கும் (Tamil software writers) இவ்விதிகள் புரியு வேண்டும். மாந்தர் எண்ணெழுதுகையில் என்ன தப்பிருந்தாலும் விளக்கஞ் சொல்லி சரிசெய்து விடலாம். கணிக்கோ, ஓரெழுத்து, ஒரு சாரியை மாறினும் பொருள்மாறி விடும். காட்டாக எண்பத்திநாலு ஆயிரத்தி என்பதை எண்பத்துநாலு ஆயிரத்து என்றெழுதின் சொல்லுங் கருத்து புரியாது போகும். கோடிக்கு மேலும் ஏரணத்தோடு எழுதலாம் எனினும், அடிப்படை புரிய மேலே நான் கூறிய ஒரு காட்டுப்  போதும்.

இனிப் பின்னம் எழுதுவதைப் பார்ப்போம். முதலில் நாம் எடுத்துக் கொள்ளும் பின்னம் 251/320 (= 3/4+1/40+1/320). இதை முக்காலே அரைமாவே மும்முந்திரி எனலாம். இன்னுஞ் சிக்கலாய் 87653/102400 ஐ எடுத்தால், இதையும் 3/4 + 1/10 + 1/320+ (1/320)*[(3/4) + (3/20)+ (1/80)+ (1/320)] என்று பிரித்து, முக்காலே மாவே முந்திரியே கீழ்முக்காலே கீழ்மும்மாவே கீழ்க்காணியே கீழ்முந்திரி எனலாம். 

மறவாதீர்; கால், மா, காணி, முந்திரி என எல்லாவற்றிற்கும் (+) யைக்குறிக்க ஏகாரச் சாரியை பயில்கிறோம். வீசத்திற்கு மட்டும் இகரச் சாரியை பயிலலாம். ஒரு சில இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் அரைக்கும் ஏகாரம் தான். விலக்கான இடங்களை

அரையென வரூஉம் பால்வரை கிளவிக்குப்
புரை தன்றால் சாரியை யியற்கை
 
எனும் தொல்காப்பிய நூற்பா 166 சொல்லும். 

SII Vol III part IV p 473/4 என்பதில் மூன்றாம் குலோத்துங்க சோழன் அளித்த திருக்களர் செப்பேடு கொடுக்கப் பட்டிருக்கும். அதில் ஏகாரம் வந்தும் அரைக்கு முன் வாராமலும் வரும் வாசகங்கள் படிக்க வேண்டியவையாகும். இதில் மாறி, மாற்று என்ற சொற்கள் தங்கத்தின் நுண்ணியத்தைக் (fineness) குறிப்பவை. இக்காலக் carat இற்கு நிகர் ஆனவை. 10 1/2 மாற்று என்பது தமிழில் ஆணிச் செம்பொன்னைக் குறிக்கும். செப்பேட்டில் வரும் தொடர்களை கீழே கொடுத்திருக்கிறேன்.

8 5/8 மாறி பொன் நூற்றொரு கழஞ்சரை, வெள்ளி பதினாற் கழஞ்சே முக்கால், 8 1/2 மாறி பொன் பன்னிரு கழஞ்சு, 8 1/2 மாறி இரு கழஞ்சே நாலு மஞ்சாடியும் ஆறு மா, 8 3/4 மாறி பொன் 3/4 (கழஞ்சு), 8 1/2 மாறி பொன் இரு கழஞ்சே கால், 8 1/4 மாறி பொன் அறுபத்துநாற்கழஞ்சரை, வெள்ளி பத்தொன்பதின் கழஞ்சரையே நாலுமஞ்சாடியும் ஆறுமா, செப்பாணி எடை ஆறரை பலம், பொன் கழஞ்சு, வெள்ளி அரைக்கழஞ்சு, பொன் எழுகழஞ்சே கால், பொன் இரண்டு மஞ்சாடியும் நாலுமா இது மாற்று 8 1/2, வெள்ளி கால், 9 மாறி பொன் இரு கழஞ்சு, 8 5/16 மாறி பொன் இருநூற்றைம்பது ஐங்கழஞ்சே காலே மூன்று மஞ்சாடியும் அஞ்சுமா, 9 1/2 மாறி பொன் பதினாறு கழஞ்சரை, 9 1/4 மாறி பொன் நாற்கழஞ்சே முக்காலெ இரண்டு மஞ்சாடியும் எழுமா, 8 1/4 மாறி பொன் முக்கழஞ்சு, 8 1/2 மாறி பொன் பதின் கழஞ்சு, 8 1/2 மாறி பொன் இரு கழஞ்சே கால், 8 1/2 மாறி பொன் இரு கழஞ்சு,

8 1/2 மாறி பொன் கழஞ்சரை, 8 1/3 மாறி பொன் கழஞ்சே இரண்டு மஞ்சாடியும் நாலுமா, 8 1/2 மாறி பொன் இரு கழஞ்சு, 8 3/4 மாறி பொன் நாற்கழஞ்சு, 9 மாறி பொன் பதினைஞ்கழஞ்சரை, 8 1/2 மாறி பொன் ஐங்கழஞ்சே கால், 8 1/2 மாறி பொன் கழஞ்சு, 9 மாறி பொன் கழஞ்சு, 9 மாறி பொன் இருகழஞ்சே முக்காலே மஞ்சாடி, வெள்ளி முக்காலே (கழஞ்சு) இரண்டு மஞ்சாடியும் மூன்று மா,
வெள்ளி முக்காலே (கழஞ்சு) இரண்டு மஞ்சாடி, 8 1/2 மாறி பொன் அரைக் கழஞ்சு, 8 3/4 மாறி பொன் கழஞ்சரை, 9 மாறி பொன் இருகழஞ்சு, 9 மாறி பொன் முக்கால் (கழஞ்சு), பொன் முக்காலே (கழஞ்சு) நாலு மஞ்சாடியும் ஆறு மா, பொன் கழஞ்சே முக்காலே இரண்டு மா

மேலே இரு பத்திகளில் வாசகங்களை வெட்டியெடுத்துக் கொடுத்தது நீளமான செப்பேட்டில் இருப்பதாகும். இதில் பொன், வெள்ளி, செப்பு மாழைகளால் ஆன அணிகலன்கள் பேசப்பட்டுள்ளன. சில இடங்களிற் கழஞ்சு என்பது இல்லாமல் இருக்கும். அவ்விடங்களில் பிறைக்கோடு போட்டு கழஞ்சைக் குறித்திருக்கிறேன். சில இடங்களில் ஏகாரச் சாரியைக்கு மாறாக உம்மும் பயின்று வருகிறது. பேச்சுத் தமிழில் அப்படியும் சொல்கிறோம். ”7 உருவாயும் 50 காசும் தந்தான்” என்று இக்காலத்திற் சொல்வதில்லையா? பொதுவாகக் கல்வெட்டுக்கள் படித்தால் சாரியைகளுக்கு ஏராளமான காட்டுகளைத் தர முடியும். இச்சாரியைகள் வெறும் எண்களின் ஊடே மட்டும் பயில்வதில்லை. பல்வேறு அளவைகளின் ஊடேயும் பயனாகியுள்ளன.

இளம்பூரணர் தம் உரையில், ”உழக்கே யாழக்கு, கலனே பதக்கு, தொடியே கஃசு, கொள்ளே ஐயவி, காணியே முந்திரி, காலே காணி” என்றுஞ் சொல்லுவார்  ஏகாரம் பெறாததாய் “குறுணி நா(ல்)நாழி” என்று எடுத்துக்காட்டும் தருவார். முடிப்பில் அரை வரும் எடுத்துக் காட்டாய் 166 ஆம் நூற்பாவிற்கு “உழக்கரை, தொடியரை, ஒன்றரை” என்பவற்றைச் சொல்வார்.

அளவுப் பெயர்க்கு நடுவே சாரியைப் பயன்பாட்டைச் சொல்லும் கல்வெட்டு எடுத்துக் காட்டுகள் ஏராளமுள்ளன. கல்வெட்டு வாசகங்களால் இக் கட்டுரையை மூழ்கடிக்க விரும்பவில்லை. 3 அடிப்படைகள் மட்டுமே சொன்னேன். கூடவே 3 நூற்பாக்களுக்கு சொற்பொருள் விளக்கந்தர நான் முற்படவில்லை. இளம்பூரணர், நச்சினார்க்கினியர் உரைகளைப் பார்த்தாலே அவற்றை உணர்ந்து கொள்ளலாம். 

இக் கட்டுரை எழுதிய காரணம் சாரியை விதிகளைப் புரிந்து கொள்வதும், தொல்காப்பிய வழியில் தமிழ்க்கணிமைக்கு வழி காண்பது மட்டுந் தான். தொல்காப்பியம் என்பது ”தமிழறிஞரின் சடங்கு போல் மேடைகளில் ஓதுவதற்கல்ல”. தொல்காப்பியம் என்பது ”வேதம் போல் பாராயணம் செய்வதற்கும் அல்ல”. 

Tholkaappiyam makes sense, if we read it properly and apply it to Tamil computing.

அன்புடன்,
இராம.கி.

அளவைகளும் சாரியைகளும் - 2

ஏழு அளவை முறைகளை இப்பகுதியில் பார்க்கப் போகிறோம். படிப்போருக்குச் சற்று பொறுமை வேண்டும். ஒழுங்கான அளவை முறை இல்லையேல் அறிவியல் இல்லை.

1. நிறுத்தளத்தல் (அல்லது எடுத்தளத்தல்) என்பது எடையளைவைக் குறிக்கும். நிறையும், எடையும் தமிழில் ஒன்று தானே? பொன்னளவை, பண்ட அளவை என 2 வித நிறுத்தளத்தற் பயன்பாடுகள் உண்டு. நெல்(லெடை), மா(வெடை), பிளவு, குன்றிமணி, மஞ்சாடி, பண(வெடை), கழஞ்சு, வராகன் (எடை), கஃசு, பலம், சேர், வீசை, தூக்கு, துலாம், மணங்கு, பாரம் போன்ற அளவைகள் இரு வேறு நிறுத்தலில் வரும் எடையளவைகள் ஆகும். (இப்பொழுது இவை யெல்லாம் மறைந்து போய்ப் பலருக்கும் கிலோ, கிராம், டன் என்றாகிப் போயின.) இன்னுஞ் சில அளவைகளும், நிறுத்தற் சமன்பாடுகளும் உண்டு. நாம் பயன்படுத்திய நாணய அளவைகளுங் கூட இதிற் கிளர்ந்தவையே. (மாடை, காசு போன்றவை இன்னும் விதப்பானவை.) ஒவ்வொன்றையும் பற்றி நீள எழுதவேண்டும் என்பதால், அவற்றை இங்கு நான் பேசவில்லை. (வாய்ப்பு இருப்பின் பின்னொரு நாள் பார்ப்போம்.) இங்கே சொல்ல வேண்டியதை மட்டும் சொல்வேன்..

2. பெய்தளத்தல் என்பது நீர்மப் பெருக்கையும், வாழ்வின் வெவ்வேறு சமயங்களில், குறிப்பாக வேளாண்மையில், விளையும் கூலப் பெருக்கையும் (திண்மப் பொடிகள், தூள்களுக்கும் இது வளர்ந்தது.) குறிக்க எழுந்தது. செவிடு, ஆழாக்கு, உழக்கு உரி, படி, மரக்கால் (=குறுணி), பறை, கரிசை, பதக்கு, தூணி என்பன தமிழரின் பெய்தளவைகள். இன்று யாருக்கும் பெய்தற் கருத்து நினைவுக்கு வருவதே இல்லை. மாறாக, அதை முகத்தளவை என்கிறோம். (இலிட்டர் கணக்கு வந்ததால் எல்லோர்க்கும் மற்றவை மறந்து போயின.) 

நாழி என்பது பெரும்பாலும் படியையும், சிறு பால் உரியையும் குறிக்கும். ஒரு படியில் அரிசியளக்கையில் படியின் விளிம்போடு பெய்த கூம்பு குலையாது (அரிசியை மட்டப் படுத்தாது) அளந்து போடுவர். திண்மத் துகள்களை எப்படி ஒரு கலத்தில் நெறித்து அடைக்கிறோம் - how do we pack solid powders? - என்பதைப் பொறுத்து ஏற்படும் பருமச் சிக்கலை (volume defects) நாளா வட்டத்தில் அறிந்ததால், தேங்க முகத்தளத்தல் என்ற முறையைத் திண்மத் துகள்களுக்கு எனப் (solid particles) பின்னால் பழந்தமிழர் கையாண்டார். அதைக் கீழே பார்ப்போம்.
 .
3. நீட்டியளத்தலில் விரற்கிடை, பெருவிரல், சாண் (இதை அடி/பாதம் என்பர். தமிழ் முறைப்படி, 1 அடி என்பது இன்று பலரும் அறிந்த 8.25 அங்குலமாகும். இதை முனைவர் கொடுமுடி சண்முகம் தன் ஆய்வுப் பட்ட நூலில் நிறுவி இருப்பார். வட முறைப்படி இது 9 அங்குலம். 1 ஆங்கில அடி, 12 அங்குலமாகும். இக் காலத்தில் ஆங்கில அடியையும் மீறி மீட்டரென்று அளவீடு பயில்வதால் நம் ஊற்றுக்களிற் புதைந்து கிடக்கும் செய்திகளைப் பலரும் மறந்து விட்டார். கலைச்சொல் புரிவதற்காக அடி, ஆங்கில அடியை நான் பிரித்தெழுதுகிறேன்.), முழம், சிறுகோல், கோல், பெருங்கோல் (=தண்டம்), கயிறு, கூப்பீடு, காதம், யோசனை என்ற அளவைகள் நீட்டளவையில் அடங்கும். 1 கோலென்பது ஓராளுயரம். அதை 5 ஆங்கில அடி, 5 1/2 ஆங்கில அடி, 6 ஆங்கில அடி என வெவ்வேறு வகையில் நம் நாட்டிற் புரிந்து கொண்டுள்ளார்.

1 கோலுக்கு 5 ஆ.அடி என்பது ஆரியபட்டாவின் அளவுகோல் ஆகும். 5 1/2 ஆ.அடியென்பது தமிழர்வழிப் புரிதல். 6 ஆ.அடியென்பது வடபுலப் புரிதல். வடக்குப் புரிதலே மேலையாசியா, மேலை இரோப்பிய நாடுகளிற் சென்றது. (இன்னும் முடியாத “பழந்தமிழர் நீட்டளவை”த் தொடரை என் வலைப்பதிவில் தேடிப் படிக்கலாம்.) நாமுங் கூட விசயநகர ஆட்சிக்குச் சற்றுமுன், சிறிது சிறிதாக வடவர் அளவைகளுக்கு ஆட்பட்டு விட்டோம். 

இன்று நம் பிள்ளைகளுக்குத் தமிழர் அளவைகள் எதுவுமே தெரியாது. அவற்றைச் சொல்லிக் கொடுக்கவும் நாம் அணியமாயில்லை. காலம் போகும் போக்கு அப்படி இருக்கிறது. எங்கு பார்க்கினும் globalization; becoming orphans; without moorings என்ற நிலை நிலவுகிறது. எண் சாண் உடம்பு, நாலு முழ வேட்டி, கோலாட்டம், கயிறுகட்டி அளத்தல், கூப்பீட்டுத் தூரம், கங்கை குமரியிடை 700 காதம் - என்ற பழக்கங்கள், கருத்தீடுகள், சொலவடைகள் ஆகியன எங்கே? - என்று கேட்க வேண்டி யுள்ளது. இதையெல்லாஞ் சொல்லும் இராம.கி. போன்றோர் பெரும்பாலோருக்கு மடையராய்த் தெரிகிறார்.
 
மேற்சொன்ன அளவை முறைகளில் பரப்பளவையைக் காணாது ஒரு கால் வியந்திருக்கிறேன். ஆய்ந்து பார்த்ததில் ”நீட்டளவை வழியாகவே பரப்பளவை எழுந்தது” என்பது புரிபட்டது. சதுர வடிவத்தை அடிப்படை வரையறையாகத் (Basic definition) தமிழர் கொண்டதால் இம் மாற்றுப் புரிதல் வந்தது. 1 குழி என்பது 1 தண்டச் சதுரம் (தமிழரின் பழம் புரிதலின் படி இது 121 சதுர ஆங்கில அடிகள். வடவர் முறையில் 144 ச.ஆ.அடிகள். ஆரியபட்டா அளவையில் 100 ச.ஆ.அடிகள்) என்று வரையறுப்பார். வரலாற்றிற் பல இடங்களில் இந்த நுணுக்க வேறுபாடு புரியாது இந்தக் காலத்தில் பரப்பளவை, நில அளவைகளில் தவறான சமன்பாடுகளைத் தமிழர் தெரிவிக்கிறார். இக்காலத்தில் விவரம் புரியாது வடவர் அளவையையே தமிழ்ச் சிறார்க்கு நாமும் கற்பிப்பதால், நம் மரபுகளையுந் தொலைக்கிறோம். 

குழியோடு குண்டு (குண்டும் குழியுமாக என்பது சொலவடை), மா, வேலி, பாடகம் என்று நீட்டளவையிற் கிளர்ந்த பரப்பளவைகளும் உண்டு. அம் முறையின் பரிமானத்தை இளம்பூரணர் உரைவழி நாம் உணரவில்லை.

இன்னொன்றையும் சொல்லவேண்டும். பரப்பளவையை நீட்டளவையின் நீட்சியாக்கிய தமிழர், பரும அளவையை நீட்டளவையின் 3 ஆம் பரிமான நீட்சியாய்க் கொள்ளவில்லை. இற்றை அறிவியலில் 1 litre = 1000 cubic centimetre என்று சொல்லும் நாம், உழக்கிற்கும் விரற்கிடைக்குமான சமன்பாட்டை நேரடிப் பழஞ்செய்திகளாற் சொல்வதில்லை. சுற்றி வளைத்து மூக்கைத் தொடுவது போல், மேலைப்புரிதலுக்கு வந்தே மறுமொழி சொல்கிறோம். 

[காட்டாக, 1 விரற்கிடை = 11/16 அங்குலம் = 1.74625 செ.மீ; எனவே, 1 பரும விரற்கிடை = 5.3249957 cubic centimetre; அப்படியெனில், 1 உழக்கு = 336 cubic centimetre = 63.098643 பரும விரற்கிடை என்று சுற்றி வளைத்துச் சொல்வோம்.) பரும விரற்கிடை/சாண்/முழம்/கோல் போன்ற அலகுகள் நம்மிடம் ஏற்படவேயில்லை. இது பெய்தளத்தலுக்கும், கீழே வரும் தேங்க முகத்தளத்தலுக்கும் பொருந்தும்.   .

4. தெறித்தளவை பற்றி முன்னிருந்த கேள்விகளில் இப்போது எனக்குத் தெளிவு ஏற்பட்டுள்ளது. நீர்/மணற் கடிகையை வைத்தே சங்க காலத்தில் கால இடைவெளியை அளந்தார். ஞாவகங் கொள்க! கால இடைவெளியை நாம் அளக்கலாம், முற்றைக் காலத்தை (absolute time) அளக்க முடியாது. அதுவொரு தேற்றக் கட்டுமானம் (theoretical construct). 

எப்படி ஒரு, இரு பரிமானங்கள் இயல்பு நிலை மீறிய தேற்றக் கற்பிதக் கட்டுமானங்களோ, அப்படியே தனிப்பட்ட காலப் பரிமானமும் எழுந்தது. நால்-பரிமான இருப்பு என்பது அப்படி நம்மைக் கட்டி வைத்தது. பூதியலார் (physicist) ஐன்சுடீன் சொல்லும் வரை நமக்கிது புரியவில்லை. மேலுங் கீழுமாய் இரு குடுவைகளும், இரண்டிற்கும் நடுவே ஒடுங்கியதொரு நாளமும் இருக்கும் நீர்க்கடிகை, (இல்லாவிடில் பெரிய குடுவையிலுள்ள நீரில் அமிழும் சிற்றாழங் கொண்ட கிண்ணம் அல்லது வட்டில் போன்ற நீர்க்கடிகை) என்னும் இருவேறு கருவிகளை வைத்தே அக்காலத்தில் கால இடைவெளியை அளந்தார். இரண்டாம் வகை நீர்க்கடிகையே/நாழிகை வட்டிலே நம்மூரில் மிகுத்திருந்தது. செய்முறையிலும் இரண்டாம் வகை எளிதானது.

முதல் வகைக் கடிகையில் மேலிருக்கும் நீரோ, மணலோ ஒடுங்கிய நாளத்தின் வழி கீழிறங்கித் தங்கும். இரண்டாம் வகைக் கடிகையில் துளை வழிக் கசியும் நீரால் கிண்ணம்/வட்டில் பெருங்குடுவை நீரில் அமிழும். இரு கடிகைகளுக்கும் வெவ்வேறு அடவுகளுண்டு (designs). அவற்றின் அடவிற்குத் தக்கக் கால நேரம் மாறும். முதல் வகை நீர்க்கடிகையில் கீழ்க்குடுவை நிறைந்து மேற் குடுவை வெற்றாகும் வரையுள்ள நேரம் குடுவைக் கொள்ளளவையும், நாளக் குறுக்கு வெட்டையும் பொறுத்தது. இரண்டாம் வகைக் கடிகையில் கிண்ணத்தின்/வட்டிலின் கொள்ளளவையும், கிண்ணத்தின்/வட்டிலின் அடியிலுள்ள நாளக் குறுக்கு வெட்டையும் பொறுத்து அடவிய நேரம் மாறும். நாளத்தால், நேரங் கடிக்கும் (=கணக்குச் செய்யும்) கருவியைக் கடிகையென்றும், நேரத்தை நாளிகை/நாழிகை என்றுஞ் சொல்வர்.

பொதுவாக ஒரு நாழிகையையோ, சிறு பொழுதையோ (10 நாழிகை) காணுங் கருவிகளைச் செய்வார். (அடுத்தடுத்து நாழிகைகளை அறிவிக்கும் இடத்தில் 7,8 நீர்க்கடிகைகள் இருந்தால் தான். தொடர்ந்து நாழிகளைகளைக் கணக்கிட முடியும். நாழிகைக் கணக்கரென்ற வேலையாட்கள் கடிகைக் கூடத்தில் இருப்பார். அக்காலத்தில் 60 நாழிகைக்கும் நேரங்காணுவதற்கு மிகுந்த மாந்தவுழைப்பு தேவை. இன்று ஆட்களேயின்றி எல்லாவற்றிற்கும் எந்திரங் கொண்டு செய்யும் நுட்பம் வந்துவிட்டது.) 

பாகதம்/சங்கதத்திற் கடிகை என்ற சொல் கடிகாவாகிக் நேரத்தையும், கருவியையும் சேர்ந்தே குறித்தது. கண்ணிமை, கைநொடி, மாத்திரை, விநாழிகை, நாழிகை, சிறுபொழுது, பொழுது, நாள், வாரம், பக்கம், மாதம், பெரும்பொழுது, அயனம், ஆண்டு என்பன காலத்தைக் குறிக்கும் அலகுகள் ஆகும்.

அறிவியலில் தடநிலை (state), செலுத்தம் (process; தொடர்நிகழ்ச்சி) என இரண்டுமே முகன்மையானவை.

”இறப்பே நிகழ்வே எதிரது என்னும்
திறத்தியல் மருங்கின் தெரிந்தனருள்ளப்
பொருள்நிகழ்வு உரைப்பது காலமாகும்”

என்று தொல்காப்பியர் பொருளதிகாரம் செய்யுளியல் 202 ஆம் நூற்பாவிற் காலத்தைச் செலுத்த வழி வரையறுப்பார். (இதற்கு முந்திய 201ஆம் நூற்பாவில் கரும நிகழ்வு நடப்பதன் வழி இடத்தை அவர் வரையறை செய்வது இன்னொரு விதப்பு. ஐன்சுடைனுக்கு முன், space-time ஐ இப்படி வரையறுத்தவர் யாருமிலர். நம் சிறப்பு நம் தமிழருக்கே தெரிவதில்லை.) 

தொல்காப்பியரின் வாசகப் படி, Time is perceived through narration of event-sequence. சுணக்கம், தங்கல், தாமதம், தோயம்/தாயம் [ஒவ்வோரிடத்தும் தோய்ந்து தங்கி நகரும் ஆட்டம் தாயக் கட்டம் (time-slot game) எனப்படும். தாயம் என்பது தங்கல், time எனும் ஆங்கிலச் சொல் இது தான்] போன்ற சொற்களெல்லாமே இருப்பிற்கு நேரங் கழியும் ”செலுத்தத்தைக்” குறிப்பன. தொல்காப்பியரின் வரையறை நேரங் கழியும் நிகழ்வுத் தொகுதிகளைக் குறிக்கும். 

மாறாக, ஒளிப்படக் கருவியால் ஓராயிரம் உறைபடங்களாய் (event freezes) நிகழ்வுகளைப் பதிக்கும் முறை 2-ஆவதாகும். நேரம், கணம், காலம், சமயம் போன்ற குறிப்பிட்ட instant ஐக் குறிக்கும் சொற்கள் 2ஆம் முறையைச் சார்ந்தவை. 2 முறைகளுமே காலத்தைப் புரிந்து கொள்ளும் வழிமுறைகள் தாம். கணக்கற்ற கலைஞரால் உறைபடங்கள் உருவாக்கி camera graphics மூலந் தொகுத்து, கண்முன் நிகழ்வு நடந்தது போல் ஓட்டிக் காட்டுவது இக்காலத்திற் ”பாகுபலி” போன்ற திரைப்படங்களில் நடக்கிறது. .

நாளா வட்டத்தில் ஒரு செயலை விடாது திருப்பிச் செய்யும் அதிர்வுகளின் துடிப்பை எண்ணுதல் மூலமே நேரத்தை அளக்க முற்பட்டனர். இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் தெறித்தளத்தல் என்றது கண்ணிமை, கைநொடி போன்ற அதிர்வு நேரங் குறித்ததே. ஒரு விநாழிகை நேரத்தில் (1 விநாழிகை = 0.4 minutes = 24 seconds; இக்கால விநாடியோடு விநாழிகையைக் குழப்பிக்கொள்ளக் கூடாது.) 100 முறை கண்ணிமைக்க/நொடிக்க முடியும் என்று கொண்டார். (எனவே 1 கண்ணிமை = 0.24 seconds) அகரமுதலியின் படி, இசைக்கருவியின் நரம்பைத் தெறித்து (=சுண்டி) செவியருகே வைத்து அளப்பது தெறித்தளத்தல் ஆகும். இம்முறையில், செவியருகே அதிர்வேற்படுத்தி அதிர்வெண்ணையோ அல்லது அதிர்வின் நேர அளவையோ கண்டுபிடிக்கிறாரென ஊகிக்கலாம்.

மேற்சொன்ன கால அளவைகள் போக, வடவர் பழக்கத்தால் முழுத்தம் (= 2 நாழிகை; இதைத்தான் முகூர்த்தம் என்கிறார். தென்பாண்டி நாட்டில் முழுத்தம் என்ற நல்ல தமிழே புழங்கும்.), சாமம் (= 3 மணி; யாமம் என்ற தமிழ்ச் சொல் இரவு 10 மணியிலிருந்து 2 மணி வரையுள்ள நேரத்தைக் குறிக்கும். கும்மிருட்டை இது குறிப்பதால் முன்னால் ஸகரஞ் சேர்த்துச் மாலை 6 மணியிலிருந்து விடியல் 6 மணிவரை குறிக்குஞ்சொல்லாகச் சங்கதங் கொண்டது. 12 மணியை 4ஆல் வகுத்தால் ஒரு சாமம் = 3 மணி என்ற சமன்பாடு கிடைக்கும். 1 இரவு = 4 சாமம் என்பது வடமொழி வழக்கு.), இருது (= இரு மாதம்; இதில் இகரத்தைத் தொலைத்து ருது என்று சங்கதங் கொள்ளும்.) போன்ற அளவைகளும் நம்மிடையே ஏற்பட்டன. இக்காலத்தில் விநாடி, நிமிடம், மணி என்ற அளவுகள் புழக்கத்திலுள்ளன.

5. தேங்க முகத்தளவை என்பது கூலங்கள், திண்மத்துகள், பொடிகளை போன்றவற்றை அளக்கையில் புரைகளை (pores) நெறிப்பது குறித்தது. ஆழ்ந்து பார்த்தால், இதுதிண்மத் துகளின் பருமனை அளப்பதிற் சரியான ஒழுங்குமுறை அளத்தலே ஆகும். திண்மத்துகளைக் கொட்டுகையில், எப்படியடைக்கிறோம் என்பதைப் பொறுத்து வெவ்வேறு புரைமைகள் (porosities) ஒரு குவியலுக்கு ஏற்படும். 

அரிசிப் புரைமையும், அரிசிமாப் புரைமையும் ஒன்றா? இல்லையே? தவிர தேங்க முகத்தளத்தலில் படியின் மேற் குவியும் கூம்பை மட்டத்தோடு வழித்துப் பின் தட்டித் தட்டி, அமுக்கி மீண்டும் திண்மத் துகளால் நிரப்பி, பன்முறை செய்து (iteration) இறுக்கம் ஏற்பட்ட பிறகே அளப்பார். துகள்களுக்கு இடையிருக்கும் இறுக்கத்திற்குத் தக்க, நாம் பெய்தளந்த பருமன் வேறுபடும்.

பெய்தளத்தலில் பெய்திணிவோடு (pouring density) அளந்தால், இங்கே நெரிப்புத் திணிவோடு (compact density) அளக்கிறோம். தேங்குதலென்பது அடைதலையும், இறுக்கத்தையும் (compaction) குறிக்கும். திண்மப் பொடியை தேக்கி முகந்து அளக்காவிடில், இயல்பான புரைமையோடு (natural porosity) கூடிய வெள்ளத்தையே (volume) அளக்க முடியும். 

இற்றை அறிவியலில் மெய்த் திணிவு (true density), மொக்கைத் திணிவு (bulk density), பெய் திணிவு (pour density), இறுக்கத் திணிவு (compact density) என வெவ்வேறு திணிவுகளை, திண்மப் பொடிகளை ஒட்டிப் பேசுவர். தேங்க முகத்தளத்தல் என்பது தமிழரின் அறிவியற் சிறப்பாகும். வேறெந்த மரபினரிடம் தேங்கமுகத்து அளத்தல் முறை கிடையாது. நாம் தான் மற்றார்க்கு இச்சிறப்பைச் சொல்லாதுள்ளோம். (அது சரி, நமக்கே முதலில் இது விளங்க வேண்டுமே?)

மேலே சொன்ன அறிவியற் சிறப்பிற்கு இன்னொரு பக்கமுமுண்டு. அதாவது, தேங்க முகத்தளவையையும், பெய்தளவையையும் ஒன்றிற்கொன்று இணைக்கத் தவறி விட்டோம். புரைமையுள்ளதை உணர்ந்த நாம், அதைத் தனிப்பட வரையறை செய்து, பல்வேறு வாகைகளை (phases) விளக்கி, திண்மத் துகள் என்பது வெறும் திண்மம் மட்டுமல்ல, திண்மமும் காற்றுஞ் சேர்ந்த ஓர் இருவாகைப் பொதி (a body with two phases) என்பதை அறிவியல் பூர்வமாய் விளக்கத் தவறிவிட்டோம். இதன் தொடர்பிலும் மேலையர் புரிதலுக்கே நாம் காத்து நிற்க வேண்டியதாகி விட்டது.   

6. சார்த்தியளத்தல் என்பது ஒன்றை இன்னொன்றோடு சார்த்தி ஒப்பிட்டு அளப்பதாகும். கண்ணிமைக்கும் நேரம், விரல் நொடிக்கும் நேரம் என்று சொல்கிறோமே, அவையெல்லாம் ஒப்பீட்டளவுகள் தாம். நேரம், காலம் என்பவை ஒருவகையில் relative units. இளம்பூரணர், நச்சினார்க்கினியரின் படி, கண்ணிமைக் காலமும் சார்த்தியளத்தலே. வேறொரு எடுத்துக்காட்டும் தர முடியும். இதள் தெறும மானியைப் (Mercury thermometer; தெறுதல் = சுடுதல்) பயனுறுத்தி அளக்கும் போது, வெம்மை (temperature) கூடக் கூட, இதள் தண்டின் நீட்டங் கூடுகிறதல்லவா? இங்கே இதளின் நீட்டத்தை வெம்மையிற் சார்த்தி, அளக்கிறோம். ஆலி (ice), உறைபனி (frigid), சிந்து (snow), சிலிர் (chill); சிலிதை (sleet), குளிர் (cold), வெதுமை (warm), இளஞ்சூடு (mild hot), கடுஞ்சூடு (very hot), கொதி (boiling) என்று பல்வேறு சூட்டு நிலைகளுக்கும் நீரைக் கொண்டு ஓர் எண்ணைத் தொடர்புறுத்துகிறோமே அதெல்லாம் சார்த்தியளத்தலே.

இன்னுஞ் சொன்னால், இற்றை அறிவியலில் மின்சார, காந்தப் புலங்களில் அளக்கப்படும் மின்னோட்டம், மின்னழுத்தம், மின்னாற்றல், காந்தவோட்டம், காந்தவழுத்தம், காந்தவிசை போன்ற பல்வேறு அலகுகளும் சார்த்தியளத்தல் முறையிலே அளக்கப்படுகின்றன. ஒருவகையிற் பார்த்தால் சார்த்தியளத்தல் முறையில்லாவிடில், அறிவியல், நுட்பியல் போன்றவை வளர்ந்தேயிருக்காது எனலாம். இன்னுஞ் சொல்லக் கூடிய சார்த்தியளத்தலின் விரிவை (இங்கே முகன்மை இல்லையென்பதால்) விடுக்கிறேன்.
.
7. எண்ணியளத்தல் என்பதும் நேரத்தை, அதிர்வெண்ணை, பயன்படுத்துவது போலத் தான். அறிவியல், நுட்பியற் துறைகள் மேற்சொன்ன 6 முறைகளைப் பயன்படுத்தி எல்லாவற்றையும் எண்ணியல் மயமாக்கி 7ஆம் முறைக்கு மாற்றி விடுகின்றன. நீரின் உறைநிலை செண்டிகிரேடுப் பாகையில் 0 எனும் போது, அவ்வெண்ணே நமக்குப் பலவற்றையும் உணர்த்துகிறது. இங்கிருந்து ஓரிடம் எத்தனை தொலைவு? 350 கிலோ மீட்டர் என்றால், ஏதோ புரிகிறது அல்லவா? ஒரு நாளைக்கு எவ்வளவு பால் வாங்குவீர்கள்? 1 இலிட்டர். இப்படி எல்லாவற்றையும் எண்மயப்படுத்துவதே இற்றை அறிவியல் வழியாகிறது.

அன்புடன்,
இராம.கி.

அளவைகளும் சாரியைகளும் - 1

சொல்லின் கடையெழுத்துக்கள் வருமெழுத்துக்களோடு இணைவதைப் பற்றி எழுத்ததிகாரம் புணரியலிற் கூறும் தொல்காப்பியர், விதப்பான புணர்ச்சி வகைகளைத் தொகைமரபிற் பேசுவார். இவ்விரு பகுதிகளிலும் ஒருகூறாகச் சாரியைகளும் பேசப்படும். இதன் தொடர்பில்,

உயிரும் புள்ளியும் இறுதி யாகி
அளவும் நிறையும் எண்ணுஞ் சுட்டி
உளவெனப் பட்ட எல்லாச் சொல்லும்
தத்தம் கிளவி தம்மகப் பட்ட
முந்தை வரூஉம் காலந் தோன்றின்
ஒத்த தென்ப ஏயென் சாரியை

என்ற 165 ஆம் நூற்பாவின்வழி, ”அளவு, நிறை, எண்ணுப் பெயர்ப்புணர்ச்சியை எப்படிப் புரிந்துகொள்வது?” என்று அமெரிக்காக் கலிபோர்னியாவிலிருக்கும் பேரா. இராசம் தமிழ்மன்றம் மடற்குழுவில் ”தொல்காப்பியத்தில் தசமமுறை” என்ற தலைப்பிற் கருத்துக்கேட்டார். [நான்மதிக்கும் தமிழறிஞரில் பேரா. இராசம் ஒருவர். ஆங்கிலத்தில் இராசமெழுதிய “சங்க இலக்கியத்திற்கான இலக்கணம்” என்ற நூல் ஓர் அருந்தவ முயற்சி. குடத்திலிட்ட விளக்காய் நிலவும் பேரா. இராசத்தைக் குன்றின் மேலிறுத்தித் தமிழுலகம் பாராட்டும் நாள் கூடிய விரைவில் மலரட்டும்.]

அளவைப் பெயர்களுக்கும் எண்ணுப் பெயர்களுக்கும் இடையே ஓரிமை யுண்டு. அறிவியல் வளர வளர, எல்லா அளவைகளையும் எண்வழி உணர்வதே வளர்ச்சியென ஆனது. தடுக்கிய இடமெலாம் தோயல் (digital) கருவிகள் புழங்கும் இக்காலத்தில் சாரியைகள் ஊடுவரும் அளவைகளின் புணர்ச்சியைப் புரிந்தாள்வது தமிழ்க்கணிமைச் சிந்தனையை வளர்க்கும். பேராசிரியர் கேள்விக்கு நேரடியாக மறுமொழிக்காது சற்றே சுற்றிவளைத்து, எழுத்ததிகாரம் 7 ஆம் நூற்பாவில் தொடங்கி, பல்வேறு அளவை முறைகளைப் பேசி, சாரியைக்கு வந்து, அளவைகளுக்கும் சாரியைகளுக்குமான உறவாடலைச் சொல்ல முற்படுகிறேன். சாரியைகள் இல்லாவிடில் எண்களுமில்லை; அளவைகளுமில்லை. வெவ்வேறு பாவு நூல்களாய்க் (warp threads) அளவைகளைக் கொண்டால் ஊடு நூலாய்ச் (weft thread) சாரியை அமையும். பாவையும் ஊடையும் ஒழுங்குறப் பிணைத்து நெய்ய வில்லையேல் அடர்-துகிலைக் கட்டமுடியாது. முதலில் அளவைகளைப் பார்ப்போம்.

"கண்ணிமை நொடி என அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே"

எனும் நூற்பாவிற்கு உரைசொல்லும் இளம்பூரணர், “நிறுத்தளத்தல் (weighing), பெய்தளத்தல் (measuring liquid volumes), நீட்டியளத்தல் (length measurement), தெறித்தளத்தல் (time measurement), தேங்க முகந்தளத்தல் (measuring powder volume), சார்த்தியளத்தல் (measurement through relative means), எண்ணியளத்தல் (counting)” என 7 முறைகள் கூறி, மாத்திரையளந்ததைச் சார்த்தியளத்தல் முறையென்று சொல்வார். நச்சினார்க்கினியரும் வரிசை மாற்றி இம்முறைகளைப் பதிவார். [பிறைக்கோட்டிற்குள் ஆங்கிலப்பெயர் கொடுத்தது என் புரிதல்/முயற்சி]

இம்முறைகள் பற்றி 2006 இல் ”அளவைகள்” எனுந் தலைப்பில் (http://valavu.blogspot.in/2006/04/blog-post_12.html.) வலைப்பதிவிலும் மடற்குழுக்களிலும் கேள்விகள் எழுப்பினேன். 9 1/2 ஆண்டுகளில் என் புரிதலில் மேலும் தெளிவேற்பட்டு இடுகைப் பிழைகளைத் திருத்தினேன். இன்னொரு பணியில், ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு (Unicode Consortium) திரு. சிறீரமணசர்மா சமர்ப்பித்த பின்ன, சின்ன முன்னீட்டிற் (proposal on fractions and symbols) தவறான குறியீடுகளும் சமன்பாடுகளும், செய்திகளும் நிறைந்தது கண்டு, அவற்றைத் தடுத்து நிறுத்த நண்பர் நாக.இளங்கோவனோடும், கல்வெட்டியலார் சிலரோடுஞ் சேர்ந்து மாற்றாவணம் உருவாக்க வேண்டியிருந்தது. (அம் முயற்சியை வேறிடத்திற் பேசவேண்டும்.) இப்பணிக்காக South Indian Inscriptions தொகுதிகளின் பல்வேறு கல்வெட்டுக்களையும் படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்படிக் கற்றதின் வழி எழுவதே ”அளவைகளும் சாரியைகளும்” எனும் இப்பதிவாகும்.

[நம்மவர் பலரும் இலக்கியம் பயின்றால் கல்வெட்டுப் படிப்பதில்லை; கல்வெட்டுப் படித்தால் இலக்கியம் பயில்வதில்லை. இரண்டும் ஒன்றிற்கொன்று சேர முடியா எதிரிடைகள் (mutually exclusive) என்று எண்ணிக் கொள்கிறார். இதன் விளைவாய்ப் பெரும்பாலான தமிழறிஞர் கல்வெட்டியலாரை மதிப்பதில்லை; ”கல்வெட்டெல்லாம் கொச்சைத் தமிழ்; சங்க இலக்கியமே உயர்த்தி” என்பர். கல்வெட்டியலாரோ தமிழறிஞரைச் சீண்டுவதேயில்லை. தற்செயலாய்த் தமிழ்மேடைகளில் இருவரும் இருப்பதோடு சரி; இந்நிலை எதிர்காலத்தில் மாற வேண்டும். 

இருவருமே தமிழுக்குத் தேவையானவர்.. வலக்கண்ணால் மட்டுமே பார்த்து, இடக்கண்ணிற் திரை கட்டி, நாம் ஒதுக்கி வைக்க முடியுமோ? ஒதுக்கின், ஒரு மாந்தனுக்கு ஒருங்கான பார்வை எப்படி வரும்? மாந்தனுக்கு ஏன் 2 கண்கள்?] சரி அளவைகளுக்கு வருவோம். இவை பெரும்பாலும் மாந்தவுடலில் தொடங்கி வேளாண் பயிர் விளைப்பில் ஊடுருவிப் பின் போக்குவரத்தில் வளர்ந்து முடிவில் வானில் நிலைத்துள்ளன.

அன்புடன்,
இராம.கி.

Thursday, August 09, 2018

சங்கம் - 8

’சங்கச்’ சொல்லிற்கான வளைவுப் பொருளையும், கூட்டப் பொருளையும், அவற்றின் படியாற்றங்களையும் இதுவரை பார்த்தோம். இனிக் கூட்ட நீட்சியாய் எண்ணிக்கைப் பொருள் பார்ப்போம். இதன்வழி. "படையிலொரு தொகை" என்றவொரு பொருள் குறிப்பிடப்பட்டுள்ளது. 

படையும், படைத் தொகையும் எனப்பார்த்தால் அது பெரிய புலனம். இதன் விவரங்கள் சங்க இலக்கியங்களில் நேரடி கிடைப்பது அரிது. ஏனெனில் அடிப்படையில் சங்கநூல்கள் அகப், புற நூல்களாகும். புறமென்றாலுங் கூடப் பரணி நூல்கள் போல் போரை நேரடியாக விவரிப்பனவல்ல. 

வடபுல நூல்களைச் சார்ந்தே இச்செய்திகளை அணுகவேண்டியுள்ளது. இதனாலேயே தமிழ்நூல்கள் பின்வந்தவை என்று சிலர் கருதலாம். வேர்ச்சொற்கள் பார்த்தால் அப்படித் தோன்றவில்லை. பொ.உ.மு.600 - பொ.உ.200 வரைக்கும் வடக்கிலும் தெற்கிலும் படை தொடர்பாக பல இடையாற்றங்கள் இருந்ததாகவே சொல்ல முடிகிறது. என்னால் முடிந்தவரை, படைத்தொகைச் செய்திகளை, கீழே சுருங்கச் சொல்கிறேன்.

மரஞ்செடிகளின் தண்டுபோலவே மாந்தனுக்கும் கால்களுண்டு. குத்தி நிற்பதை நட்ட நிற்பதாய்ச் சொல்வர். ’நடை’ச் சொற்பிறப்பை என்றேனும் நீங்கள் எண்ணிப் பார்த்ததுண்டா? 

ஒருகாலை முன்நகர்த்திப் பின்நட்டு, இரண்டாங் காலை முன்நகர்த்திப் பின்நட்டு,, அடுத்தடுத்துத் தொடர்வதே நடப்பதாகும். இதிலெங்கு தவறினும் விழ வேண்டியது தான் ஆக, நடுவதில் விளைவது நடை. 

70000 ஆண்டுகள் முன் ஆப்பிரிக்காவிலிருந்து நடந்துவந்து இந்தியத் துணைக் கண்டத்துள் மாந்தர் நுழைந்தார். இனி நிலம்படும் பாதத்திற்கு வருவோம்.

 நடந்துவந்த பாதையிற் சுவடின்றி யாரும் நடக்கமுடியுமோ? படு>படி>பதி என்பது ”பதம்>பாதத்தின்” தொடக்கம். பாதம் படுவதுபோல் மற்ற செயல்களில் மாந்தர் படிவதையும் படுதலென்பார். 

பட்டுவ வாக்கியங்களிற் (passive voice) இதைப் பயன்படுத்துவோம். ”பொத்தகம் என்னால் படிக்கப் பட்டது”. தன் வினையிலும் ’படு’ என்பது துணைவினை ஆகும். ”அவன் செயற்பட்டான்”. ஒருவகையிற் பார்த்தால் படுதல் என்பது ஒரு கட்டகச்சொல் (systemic word).

ஒரு வேட்டையில் 4 ஆட்கள் போவதாய் வையுங்கள். ஆட்களோடு, ஆயுதங்கள் (படைக்கலன்கள்), துணைப்பொருட்கள் (தளமாடப் பயனுறும் தளவாடம்). என எல்லாமுஞ் சேர்ந்தாற்றான் வேட்டை ஆடமுடியும், குறிப்பிட்ட செயலைச் சாதிக்கும் இதை வேட்டைக் கட்டகமென்போம். 

இதுபோல் படுதலைச் செய்யுங் கட்டகம் படை. இதுவொரு பொதுமைச் (generic) சொல். வேட்டை, நிலந்தோண்டல், இன்னொரு மாந்தக்கூட்டம் அழித்தல் என்பன எல்லாமும் படைச்செயல்களே. ஓர் இனக்குழுவின் நிலைப்பென்பது எப்போது சிக்கலாகிறதோ, அப்போது இனக்குழுவிற்காகப் படை ஏற்பட்டே தீரும். நாளாவட்டத்தில் காவல், தாக்கல், அழிவென்ற கண்ணோட்டங்கள் இதனுள் வரும். விலங்காண்டி காலத்திலிருந்து இன்றுவரை படையளவு கூடியுள்ளதே தவிர, கருத்தீடு மாறவில்லை.

துணைக்கண்டத்தின் நெய்தலிலும், அடுத்தடுத்துள்ள திணைகளிலும் மாந்த நகர்ச்சிக்கு நெடுநாட்கள் நடையே வழியானது. நடைக்கு அடுத்த நகர்ச்சி சகடங்களால் விளைந்தது. விலங்காண்டி நிலையிருந்து வளர்ந்தபின், குறிப்பிடத் தக்க நுட்பியல் மாற்றமாய்ச் சக்கரம், சகடம், சகடை, தேர், உருளம்> உருடம்>உருதம்>ரதம் போன்றவை குமுகத்தில் உருவாகின. 

இவை எப்பொழுது எங்கு முதலில் உருவாகின என்பது இன்னுந் தெரியாது. ஆனாற் சிந்து சமவெளியில் இவையிருந்ததற்குச் சான்றுகளுண்டு. [தொடக்கத்தில் காளைகளே சகடங்களை இழுத்திருக்கலாம். கால்> காள்> காளை; கால்நடை என இன்றும் சொல்லப் படுவதே ”காளையின்” சொற்பிறப்பைக் காட்டும்]. இதே போன்ற சான்றுகள் எகிப்திய, சுமேரிய நாகரிகங்களிலும் கிடைத்துள்ளன.

பொ.உ.மு.9000-1800 வரை சிந்துசமவெளியில் குதிரைப்புழக்கம் இருந்தது போல் தெரியவில்லை. இத்தனைக்கும் ஆவ்க்கனித்தான், இரான், நடு ஏசியா போன்ற மேற்கு நாடுகளில் குதிரை உலவியது. ஆரியருக்கும் குதிரைப் பழக்கமுண்டு. இட்டைட், மித்தனி போன்ற நாகரிகங்களில் குதிரை / குதிரை வண்டி கொண்டே ஆரியர் முன்னிலைக்கு வந்தார். 

சிந்துவெளி நாகரிக முடிவில் குதிரைத் தாக்கம் இந்தியாவில் ஏற்பட்டிருக்கலாம். பாரசீகம், அரேபியா போன்ற நாடுகளிலிருந்து நிலம் மூலம் வடக்கேயும், நருமதைத் துறைகள் தொடங்கி தீவகற்பம் முழுதும் கப்பல் மூலம் தெற்கேயும் குதிரைகள் இறக்கப்பட்டன. 

இதன் பின்னர் சுமைவண்டிகளைக் காளைகளும், வேகவண்டிகளைக் குதிரைகளும் இழுத்தன. இந்திய நாகரிகத்தில் பொ.உ.மு.2000/1800க்கு அப்புறமே படை வேலைகளுக்குக் குதிரை பயன்பட்டது. குதிரையையும், வண்டிகளையும் இணைத்த பின்னால் தான் சாலைகளிற் கல்லைப் பாவும் பழக்கமும், மேடுபள்ளமில்லாது சாலைகளை அமைக்கும் நுட்பமும் இந்தியாவிற் பரவியது.
.
இதே நேரத்தில் இந்தியாவில் யானைகளும் மாந்த வேலைக்கு உதவியாய்ப் பழக்கப்பட்டு வந்தன. அவற்றை வைத்து எதிரிக் கோட்டைகளை அழிப்பது பொ.உ.மு.2000க்கு முன்னாலும் இருந்திருக்கலாம். இப்பழக்கம் எப்போது ஏற்பட்டதென உறுதியாய்ச் சொல்ல முடியவில்லை. 

பொ.உ.மு. 1800க்கு அப்புறம், சகடங்களும், யானைகளும், குதிரைகளும் போர் உத்திகளில் சேர்ந்து பயன்படத் தொடங்கின. போரையொட்டிய இலக்கிப்பு முயற்சியில் (logistic effort. இலக்கு= குறிப்பிட்ட இடம்; இலக்கிப்பு= குறிப்பிட்ட இடத்திற்குக் கொண்டு போய்ச் சேர்த்தல்.) தேரும், யானையும் ஒன்றுபோல் கருதப்பட்டன. 

தேரை நகர்த்துவதும், யானையை நகர்த்துவதும் அவற்றின் எடை கூடக்கூட ஒரே யளவு மாந்த முயற்சி கொண்டவையாகக் கருதப்பட்டன. சதுரங்கத்திலும் கூட rook ஐச் சிலர் தேரென்பர். வேறு சிலர் யானையென்பர். இவற்றிற்கிடையே ஒற்றுமைகளும் இருந்தன, வேற்றுமைகளும் இருந்தன. (இரண்டையும் நடத்துவோர் நம்மூரில் ஒரே மாதிரியாய்ப் பாகரென்றே சொல்லப்பட்டார்.)

படையின் முதலலகு பட்டி/பண்டி/பத்தி/பந்தி என்று அழைக்கப்பட்டிருக்கலாம். (இவற்றுள் சரியான சொல் ஏதென்று இங்கே சொன்ன இயலுமைகளுக்குள் என்னாற் சொல்ல முடியவில்லை.) இன்றும் பட்டி என்பது கால்நடைத் தொகுதியையும், கால்நடைகள் கட்டும் இடத்தையும் குறிக்கிறது. (முல்லை நில ஊர்கள் பட்டியென அழைக்கப்பட்டன.) 

’பண்டி’ வண்டியையும், யானையையுங் குறித்தது. வடபுல நூல்களிலும் (மோனியர் வில்லியம்சு அகரமுதலி, மகாபாரதம், அல்பெருனியின் பயணக்குறிப்புகள்), தமிழ் நிகண்டுகளிலும், அகரமுதலிகளிலும், இலக்கியங்களிலும் குதிரை கட்டுந் துறை “பந்தி” என்றழைக்கப்பட்டது. 

13 ஆம் நூற்றாண்டு சேர்ந்த பெரும்பற்றப் புலியூர் நம்பி எழுதிய திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தில் இச்சொல் வரும். இக்கட்டுரையில் இப்போதைக்குப் பட்டியென்றே பயில்கிறேன். மற்ற சொற்களை இன்னும் ஆய்ந்து சரியான முடிவிற்கு வரவேண்டும். 

மகாபாரதப் படி ஒரு பட்டியில் 1 தேர், 1 யானை, (தேரை/யானை சுற்றி) 3 குதிரைகள் (தேரும், யானையும் குதிரைக் கணக்கில் ஒன்றுபோலவே கருதப்பட்டன), ஒவ்வொரு குதிரையையுஞ் சுற்றி 5 காலாள்கள் இருந்ததாய்ச் சொல்வர். 

குதிரைகளுக்கும் ஆட்களுக்குமான மொத்தக் கணக்கைச் சரியாய்ப் புரிந்துகொள்ளவேண்டும். (அரபுப்பயணி அல்பெருனி இதில் தவறினார்.) 1 தேரிழுக்க 4 குதிரைகளெனில் பட்டியில் மொத்தம் 4+3+3= 10 குதிரைகள் இருந்தன. 

ஆட்களைக்கணக்கிட்டால் தலைவன், முன்னால் யானைப்பாகன், பின்னால் துணை யானைப்பாகன், தலைவன் வேல்வீச யானை மேலிருந்து உதவும் 2 வீரர், யானையோடு கீழோடி வரும் உதவியாள் என 1 யானைக்கு 6 பேருண்டு. 

இதுபோல் தலைவன், தேர்ப்பாகன், மெய்க்காவலன், தலைவனுக்குத் தளவாடம் கொடுத்துதவும் 2 வீரர், தேர்ப்பழுது பார்க்கும் தச்சனென 1 தேருக்கும் மொத்தம் 6 பேருண்டு. 

எனவே மகாபாரதப் படி, 1 பட்டியில் 2*[6+3*(1+5)] = 48 ஆட்களிருந்தார். எனவே ஒரு பட்டியில் தேர், யானை, குதிரைகள், ஆட்களின் விகிதம் (1:1:10:48). சனபதங்களுக்குச் சற்று முன்னிருந்த குரு, பாஞ்சால அரசுகளில் இதுவே வழக்கம் போலும்.

மாறாகக் குடிலரின் அருத்தசாற்றப் படி பார்த்தால், 1 தேர் அல்லது 1 யானையைச் சுற்றி 5 குதிரைகள், 1 குதிரை சுற்றி 6 காலாட்கள் என்று வரும். இக்கணக்கின் படி தேர்:யானை:குதிரைகள்:ஆட்கள் ஆகியோரின் விகிதம் 1:1:(4+5):.2*[6+5*(1+6)] = (1:1:14:92) ஆகும். மகத அரசில் இதுவே பழக்கம் போலும். 

(பாரதக் காப்பியம் பொ.உ.மு. 1000-800 ஐ ஒட்டிய கதையைச் சொல்லும். அக்காப்பியம் பொ.உ.மு.400 களில் எழுதப்பட்டு படிப்படியாக இடைச் செருகல்கள் பெற்று பொ.உ.400 வரை எழுதப்பட்டுக் கொண்டே வந்தது. படை பற்றிய விரிவான குறிப்புகள் பெரும்பாலும் இக் காலகட்டத்தின் பிற்பகுதியில் வரையப்பட்டிருக்கலாம்) 

பட்டிக்கு மேலும் அக்காலத்தில் படையணிகளுண்டு. இவற்றைக் கீழே கொடுத்துள்ளேன். சங்கதப் பெயர்கள் அடைப்புக் குறிக்குள் கொடுக்கப் பட்டுள்ளன. தமிழ் விக்கிப்பீடியாவில் சங்கதப் பெயர்களே உள்ளன. தமிழ்ப் பெயர்களை பெரும் ஆய்விற்கு அப்புறமே என்னால் அடையாளங் கண்டுகொள்ள முடிந்தது. அவற்றைக் கீழே சொல்லியுள்ளேன்.

3 பட்டிகள்      = 1 படைமுகம் [சேனாமுகம். மகாபாரதக் கணக்கு (3:3:30:144),           அருத்தசாற்றக் கணக்கு (3:3:42:276)];
3 படைமுகங்கள் = 1 குழுமல்    [குல்ம.      மகாபாரதக் கணக்கு (9:9:90:432),           அருத்தசாற்றக் கணக்கு (9:9:126:828)];
3 குழுமங்கள்    = 1 கணம்     [கண,       மகாபாரதக் கணக்கு (27:27:270:1296),       அருத்தசாற்றக் கணக்கு (27:27:378:2484)]);
3 கணங்கள்     = 1 வானி      [வாகினி.    மகாபாரதக் கணக்கு (81:81:810:3888),        அருத்தசாற்றக் கணக்கு (81:81:1134:7452)];
3 வானிகள்     = 1 தானை     [ப்ரிதனா    மகாபாரதக் கணக்கு (243:243:2430:11664)     அருத்தசாற்றக் கணக்கு (243:243:3402:22356)];
3 தானைகள்    = 1 குமம்       [சமூ       மகாபாரதக் கணக்கு (729:729:7290:34992)     அருத்தசாற்றக் கணக்கு (729:729:10206:67068)];
3 குமங்கள்     = 1 சேனை     [அனீகினி   மகாபாரதக் கணக்கு (2187:2187:21870:104976) அருத்தசாற்றக் கணக்கு (2187:2187:30618:201204)];
10 சேனை      = 1 அக்கவானி. (அக்க்ஷௌகினி அல்லது அக்குரோனி).

இக்கணக்கை மனத்துள் அசைபோட்டுப் பாருங்கள், திகைப்பாயிருக்கும். 

ஒரு சேனையில் 2187 யானை/தேர்களென்பது சாத்தார எண்ணிக்கையல்ல. இதிலுள்ள 2187 யானைகளைப் பழக்கவேண்டுவதும் பெரிய வேலையே. அருத்த சாற்றப் படி நேரடித் தொடர்பிலா ஆள் பேர் அம்பு என இன்னும் பலர் படையை ஒட்டி வேலை செய்திருப்பார். 

மொத்தநாடே எங்கு பார்த்தாலும் படைமயம் ஆனது போலும். ஏறத்தாழ 3 சேனைகளைக் குறிக்கும் 6000 யானைகளை நந்தர் வைத்திருந்தாரென அலெக்சாந்தர் காலக் கிரேக்கக் குறிப்புகள் சொல்லும். 

[பல்வேறு நாடுகளைப் பிடித்த பின்னால், அலெக்சாந்தர் சிந்தாற்றங்கரைக்கு வந்த போது, பெருமாண்ட நந்தர் படையில் 6000 யானைகளுக்கு மேல் இருந்ததாகவும், கிரேக்கர் அதை வெல்ல முடியாதென்று கருதியும், வீடு விட்டுத் தொலைவு வந்த தம் வீரர் பல்வேறு போர்களாற் சோர்ந்தாரென்பதாலும், ”இனிமேலும் இந்தியாவிற்குள் நகர வேண்டாம், ஊருக்குத் திரும்புவோம்” என அலெக்சாந்தர் முடிவு செய்தானாம் போகும் வழியில் பாபிலோனில் நோய்ப்பட்டு இறந்தானாம்.]

நந்தரை வென்று, பேரரசு உருவாக்கிய மோரியர் இன்னும் ஓரிரு சேனைகள் அதிகம் கொண்டிருக்கலாம். வேந்தரின் கனவு சேனையாற் கூடியது பொ.உ.மு.400- பொ.உ. 0 என்று தெரிகிறது. மோரியருக்கு அப்புறம் சுங்கர், கனகரிடம் சேனைகள் குறைந்தன.

ஒரு சேனையளவு படைகொண்ட செங்குட்டுவன் வடக்கே போகையில் இருந்த கனகர் நலிந்து போனவர். (செங்குட்டுவனுக்கு முன் தமிழ் வேந்தர் யாரும் சேனைகள் வைத்திருந்தது போல் தெரியவில்லை. அப்படியேதும் சங்க நூல்களிற் குறிப்பில்லை. நான் படித்தவரை. 1 

சேனையை முதலில் வைத்தவன் ச்ங்குட்டுவன் போலவே தெரிகிறது. அது காறும் படைதிரட்டலில் அவனை மிஞ்சிய அரசன் தெற்கே இருந்ததுபோற் தெரியவில்லை.) தவிர, இந்தியாவில் எவரும் 10 சேனைகள் வைத்திருந்ததாய் வரலாற்றில் எந்தக் குறிப்புகளுமில்லை. 

மேலே வரும் அக்கவானி போன்றவை முற்றிலுங் கற்பனை உருவகங்களாகவே எனக்குத் தோற்றுகின்றன. உயர்வு நவிற்சியின் உச்ச கட்டமாய் கௌரவர் பக்கல் 11 அக்கவானிகளும், பாண்டவர் பக்கல் 7 அக்க வானிகளும் மகாபாரதத்திற் பேசப் படும். 

மேலேயுள்ள கணக்குகளை வைத்துப் பார்த்தால், இத்தகைய படையைக் குருச்சேந்திரம் தாங்கியிருக்குமா என்பதே பெருங்கேள்வி. எனவே தான் பார்தப்போர் என்பது கற்பனைப்போர் என்று சொல்ல வேண்டியுள்ளது. The paraphernalia is too much to consider. Hence the war described could be purely imaginary. 

அடுத்தது அக்கவானி. போர் நடுவே படையினருக்கு ஆணையிடச் சங்கூதும் அளவிற்குப் பெரிதான வானி எனும் பொருளில் பெரும்படையணிக்கு இப்படிப் பெயரிட்டார் போலும். 

சங்கத்தின் முதற்குறை அங்கம். அங்கத்தின் வலித்த ஒலிப்பு அக்கம். சங்கம்> அங்கம்> அக்கம். வளைவுப் பொருளிலிருந்து கூட்டப் பொருளை முன்கொண்டது போல், சங்கிலிருந்து இங்கும் எண்ணிக்கைப் பொருள் எழுந்தது. 

அக்கவானி என்ற சொல்லே கற்பனையை உணர்த்தும். மகாபாரதந் தவிர்த்து ’அக்ஷௌகினி’ வேறெங்கும் பயின்றது போல் தெரியவில்லை. சங்க இலக்கியங்களில் தானையே பெரிதும் பேசப்படும். (தானைக்குத் தண்டமெனும் பெயருமுண்டு.) தானை பயிலும் சங்கநூல் வரிகளைப் பேசினால் கட்டுரை நீளும். எனவே சேனை பேசும் பழைய நூல்வரிகளை மட்டும் இங்கு விவரிக்கிறேன். .

”இகல்வேந்தன் சேனை” என்பது கலி 108 -1 இல் வரும் சொல்லாட்சி. சிலம்பின் 19 ஆம் காதை முடிவில் வரும் வெண்பாவில் ”விற்பொலியும் சேனை” என்ற கூற்று வரும். இவ்வெண்பா பிற்காலப் புலவரால் இடைச்செருகப் பட்டதென வேங்கடசாமி நாட்டார், தம் உரையிற் கூறுவார். 

காதைகளின் இடைவரும் வெண்பாக்கள் இளங்கோ எழுதியதல்ல என்று “சிலம்பின் காலம்” நூலில் நான் சொன்னேன். “வட்கர் போகிய வான்பனந் தோட்டுடன் புட்கைச் சேனை பொலியச் சூட்டி” என்பது சிலம்பு 25 ஆம் காதையின் 146-147 ஆம் வரிகள். ”தண்டத் தலைவரும் தலைத்தார்ச் சேனையும் வெண்டலைப் புணரியின் விளிம்புசூழ் போத” என்பது சிலம்பு 26 ஆம் காதையில் 80-81 ஆம் வரிகள். குடவஞ்சியிலிருந்து வடக்கேகிய படைகள் கடல் விளிம்பைத் தொட்டுப் போந்தனவாம்.

அதே 26 ஆம் காதையில் செங்குட்டுவன் நூற்றுவர் கன்னரின் சஞ்சயனுக்குச் (= தூதனுக்கு) சொல்வதாய் 162-165 ஆம் வரிகள் வரும். ”கூற்றங் கொண்டு இச் சேனை செல்வது நூற்றுவர் கன்னர்க்குச் சாற்றி யாங்குக் கங்கைப் பேர்யாறு கடத்தற்கு ஆவன வங்கப் பெருநிரை செய்க தாம்” என்று வரும். 

செங்குட்டுவன் வெறுந்தானைகளைக் கொண்டிருந்த மன்னனல்லன். பெருஞ்சேனையைக் கொண்டு, கனகரைப் பொருதுமளவிற்கு வடக்கே போனவன். மேலும் சிலம்பு 25ஆம் காதையில் 191-194ஆம் வரிகள் ”தாழ்கழல் மன்னன் தன்திரு மேனி வாழ்க சேனாமுகம் என வாழ்த்தி இறைஇகல் யானை எருத்தத்து ஏற்றி அறைபறை எழுந்ததால் அணிநகர் மருங்கென்” என்று வரும்.

”தம்பெருஞ் சேனையொடு வெஞ்சமம் புரிநாள்” என்பது மணிமேகலை 8.59. இரு பெரும் மன்னர் மணிபல்லவப் புத்தபீடிகையை தாமே கொள்வதற்காக தம்பெருஞ் சேனைகளால் சண்டையிட்டாராம் அடுத்து, சேர, பாண்டியரின் யானை, தேர், குதிரை மாவொடு, வயவர் நிரம்பிய சேனைகளோடு வஞ்சியிற் பொருதி சோழன் காரியாற்று மாவண் கிள்ளி அடைந்த வெற்றி பற்றி, 

வஞ்சியினிருந்து வஞ்சி சூடி
முறஞ்செவி யானையும் தேரும் மாவும்
மறங்கெழு நெடுவாள் வயவரும் மிடைந்த
தலைத்தார்ச் சேனையொடு மலைத்துத் தலை வந்தோர்
சிலைக்கயல் நெடுங்கொடி செருவேல் தடக்கை
ஆர்புனை தெரியல் இளங்கோன் தன்னால்
காரியாற்றுக் கொண்ட காவல் வெண்குடை
வலிகெழு தடக்கை மாவண் கிள்ளி
ஒளியொடு வாழி ஊழிதோ றூழி.

என்று மணிமேகலை 19, 120-128 வரிகள் சொல்லும். இவை போக, சேனைத் தலைவர் பற்றி நாலாடியார் 3 ஆம் பாட்டும், சேனை, சேனாபதி பற்றி நான்மணிக் கடிகை 52, 55 உம், கார்நாற்பது 20 உம் கூறும். 

இக்கூற்றுகளைப் பார்க்கும் போது சேனையளவிற்குத் தமிழர் படைதிரட்ட முடிந்தது பொ.உ.மு.200க்கும் அப்புறமென்றே தெரிகிறது. பொ.உ.மு.462 க்கு அருகில் முதற் கரிகாலன் சேனை கொண்டு படையெடுத்து அசாதசத்துவின் மகன் உதயபட்டனோடு பொருதினானா அல்லது ஒரு சில தானைகளைக் கொண்டு பொருதினானா என்பது தெரியவில்லை. 

சேனைகளுக்கான ஆள்-அம்பு வலுவைப் பார்க்கும்போது அவ்வளவு முந்தைய காலத்தில் பெருஞ்சண்டை நடந்திருக்குமா என்றும் ஐயப்படவேண்டியுள்ளது. இதே போல் தான் மகாபாரதப் போர்ச்செய்திகளும் பின்னால் சேர்க்கப் பட்டவையோ என்று ஐயுறுகிறோம். படைகள் பற்றி வேறொரு கட்டுரையில் விரிவாய்ப் பார்க்கலாம்.

இது காறும் சொன்னவற்றால், வளைவு, கூட்டம், எண்ணிக்கை எனும் 3 பொருள்களின் வழியே பார்த்தால், சங்கம் என்பது அடிப்படையில் தமிழ்ச் சொல்லாகவே தெரிகிறது.

அன்புடன்,
இராம.கி. 

சங்கம் - 7

சங்கமென்ற சொல்லிற்கான பொருள்வரிசையில், மூன்றாவதாய் அமைவது ”கூட்டநீட்சியான” எண்ணிக்கை. இதன்வழிப் பொருட்பாடுகள் "இலக்கங் கோடி, படையிலொரு தொகை" என்பன. தமிழிய, வட இந்திய, மேலை மொழிகளின் எண்ணுச்சொற்களிடையே வியத்தகு ஓரிமையிருப்பதாகவே நான் உணர்கிறேன். சொற்கள் வேறாயினும், உள்ளிருக்கும் செலுத்தமும் (process) பொருளும் (meaning) ஒன்றுபோற் காட்டும். தமிழிய மொழிகளுக்கும் இந்தையிரோப்பியனுக்கும் முன்தொடர்பு இருக்குமென நான்சொல்வதற்கு இதுவுமொரு காரணம். தமிழில் எண்கள் எழுந்தவகை சொல்ல ஏராளம் உண்டு. அதேபொழுது இந்த நீள்தொடரை மேலும் நீட்டுவது முறையல்ல என்பதாற் சுருங்கச் சொல்கிறேன். முதற்கருத்தீடு ’ஒன்றைப்’ பற்றியது.

விலங்கியல், மாந்தவியல் அறிவின்படி, மாந்தனின் உணவுப் பழக்கமே அவனைக் குரங்கிலிருந்து வேறுபடுத்தியது என்பர். பல்வேறு மாந்தக் குரங்குகளில் இறைச்சி சாப்பிடத் தொடங்கியவன் அவனே. ஒருகாலத்தின் அவன் மூளை கிடுகிடுவென வளரத்தொடங்கியதும் இறைச்சி சாப்பிடத் தொடங்கியதாற்றான். இன்றைக்கு மரக்கறியுணவை வலியுறுத்தும் பலருக்கும் இது வியப்பாகலாம். ஆனால் அது உண்மை. ஒந்நு/ஒந்து/ஒண்ணு/ஒண்டு எனுஞ் சொற்கள் (ஒன்னு/ஒன்று என அதன்பின்னும் ஏற்பட்ட திருத்தங்கள்) எல்லாம் பெரும்பாலும் வாயுட்புகும் இறைச்சியால் ஏற்பட்டனவோ என்றே ஐயுற வேண்டியுள்ளது. ஊனிற்கும் ஊணிற்குமான எழுத்துப்போலி இந்த ஊகத்தை நமக்கு எழுப்புகிறது. இதன் விளக்கத்தை இங்கு நான் கூறவில்லை. வேறுதொடரிற் பார்க்கலாம்.

இரண்டென்பது ஊனை ஈரும், இரளும் வினையில் எழுந்ததாய்த் தோற்றுகிறது. ஈர்தல்= இரளுதல்= வெட்டுதல், பிரித்தல். துமி>துவி என வட இந்திய, மேலை மொழிகள் கையாளும். (துமித்தலும் கூட ஈர்தலே.) முன்று என்பது முன்வந்து காட்டும் மூ>மூக்கு, இதை நூ>நுதி>நுசி>நாசி, தூ>துயி>துதி (ஒருபொருட் சொற்கள்) என்றுஞ் சொல்வர். (வடவிந்திய, மேலை மொழிகள் வழக்கம்போல் ரகரத்தை உள்நுழைத்து துயியைத் த்ருயி> த்ரயி> three என்றாக்கும். உலகின் பல பழங்குடிகளும் (1,2, பல) என்றோ, (1,2,3, பல) என்றோ, எண்ணுவதில் தேங்கி நின்றார். இன்னுஞ்சில குடிகள் கைவிரல் கொண்டு, ஐந்தெனும் கருத்தீட்டுள் வந்தார். ஐ, ஐது, ஐந்து, அய், செய் என்றும் தமிழிற் சொல்லப் படும் அள்>அய்>ஐ என்று இச்சொல் வளரும். அள்ளுதல் = சேர்த்தல். ஐந்து விரலும் சேர்த்தே அள்ளுகிறோம். அஞ்சென்பது ஐந்து> அய்ந்து> அய்ஞ்சின் பேச்சு வழக்கு. இன்னும் வளர்ச்சியடைந்தோர், 4,6,7,8 ஆகியவற்றை ஊடே எண்ணி வளர்ந்துள்ளார்.

நால்கை என்பது நலிந்த கையைக் குறிக்கும். ஐந்திற் குறைந்துபோன கை. நால்கை> நால்கு> நான்கெனத் திரியும். கையிலாத நால்/நாலும் பழக்ககால் 4 ஐக் குறிக்கும். ”ஆறு, ஏழு, எட்டு” என்பவை 1,2,3,5 என்ற அடிப்படைகளைக் கொண்டு கூட்டப் பொருளில் எழுந்தன. சற்று நீளமான அவற்றின் சொற் பிறப்புக்களை இங்கு நான் சொல்லவில்லை. ’பல’வெனுங் கருத்தும் முன்னேறிய பழங்குடிகளிடம் இருந்துள்ளது. 10 எனும் அளவிற்கு எண்ணிக்கையில் முன்னேறியோர் புதுக் கற்கால நிலையில் இருந்திருக்கலாம் என மாந்தவியற் குறிப்புகள் சொல்கின்றன. 

பல என்ற சொல்லை வரையறுத்து 10 ஐக் குறித்தது சிந்தனை வளர்ச்சி தான். தொடக்கத்தில் பல், வெளுப்பு நிறத்திற் பிறந்து, பொருள்நீட்சி பெற்று, வாய்ப்பல்லைக் குறித்தது. மேலும் பொருள்நீட்சியில் பன்மையைக் (many) குறித்து, முடிவிற் பல்து> பஃது> பத்து என்றாகி 10 ஐ வரையறுத்தது. மேலை மொழிகளின் ten னுங் கூடத் தந்தம்/பல்லையே குறித்தது. ஈரைந்து என்பதைத் ’துவிசெய்’ ஆக்கி தச எனத் திரித்தும் வடபுலத்தில் ஆள்வர்.

10 வந்தபின், 9 ஏற்படுவது இயல்பு. துவள்ந்து>துவண்டு போன பத்து, தொண்பது ஆனது, தொண்பது>தொன்பது>ஒன்பது ஆயிற்று. தொள்ளும் ஒள்ளும் ஒரே பொருளன. எப்படிக்  கையைத் தொகுத்து நால்/ நாலு, நான்கைக் குறித்ததோ, அப்படித் துவள்>தொள்>தொண்டு என்பதும் ஒன்பதைக் குறித்தது. நமுத்தல்> நவுத்தல்>நவத்தலும் குறையைச் சுட்டும். நவமென்ற வடபுலச்சொல் அப்படி எழுந்தது. இங்கும் மொழிகளிடை ஒரே சிந்தனை தென்படுவதைக் காணலாம். கூர்ந்து பார்த்தால், ஊனில் தொடங்கி, பின் ஈர்ந்து, அடுத்து மாந்தரை மையம் ஆக்கி (anthropocentric) 3,5,10 ஆகிய எண்களைச் செய்துள்ளார். பல்வேறு மொழிகளைக் காண்கையில் இவையே அடிப்படை எண்களாய்த் தெரிவது புலப்படும். இவற்றை வைத்தே, 4,6,7,8,9 என்ற வழிபடு (derived) எண்களை உருவாக்கியுள்ளார்.

அடுத்தது நூறு. இதைச் செய்கையில் மாந்த உறுப்புச் சிந்தனை போதாமல் ஆனது. சில குடிகள் கைவிரல் 10 ஐயும், கால்விரல் 10 ஐயுஞ் சேர்த்து 20 எனும் அலகை உருவாக்கி, எண் கட்டகத்தைச் (numeric system) செய்தார். (தென் அமெரிக்க மாயன்கள் இவ்வகையினர்.) சுமேரியர் போன்றோர் 60 ஐ வைத்து எண்ணு முறை உருவாக்கினர். ஒரு மணிக்கு 60 நுணுத்தம் (minutes), ஒரு நுணுத்தத்திற்கு 60 துளிகள் என இன்றுஞ் சொல்கிறோமே, அது சுமேரியர் வழி வந்தது. பெரிதும் 10 ஐயும், சிறுபால் 60 ஐயும் அடிப்படையாகத் தமிழர் கொண்டார். ஒரு நாளுக்கு 60 நாழிகை. ஒரு நாழிகைக்கு 60 விநாழிகை என்பதும் சுமேரியர் மாதிரிச் சிந்தனை தான். அதே பொழுது 10 இன் சிந்தனை தமிழரிடம் மறையவில்லை. இருபது, முப்பது, ......எழுபது, எண்பது என்று அமைவதும் நம் மரபு தான். தமிழர் எட்டின் அடிப்படையைக் கொண்டார் என்பது பிழையான புரிதல்..

அடுத்த வளர்ச்சி மாந்தவுடலிலிருந்து புவியிற் காணும் கல், மண் என நகரத் தொடங்கியது. உடையக் கூடிய (கல் போன்ற) ஏதோவொன்றைக் கீழே போடுகையில் ஒன்று பலதாவதுபோல், வலிந்து கீழிட்டு நுறுக்கும்> நொறுக்கும் போது நூறாகிறது. பொடிப் பொடியாகிறது. நூறெனும் சொல்லிற்கு சங்க இலக்கியங்களில் இப்பொருள் நெடுகவுள்ளது. நூறு> நீறு= பொடி. நுறுக்குவதற்கு இன்னொரு சொல் சதைத்தல்> சதாய்த்தல். “ போட்டுச் சதாய்ச்சிட்டான் பா” என இன்றுஞ் சொல்வோம். 

சதைத்தலின் இன்னொரு வடிவம் சாத்துதல். சதைத்தலில் எழுந்த வடசொல் சதம். சங்க காலத்தில் தமிழருக்கு வடக்கே (இற்றை மராட்டியக் கோதாவரிக் கரையில் ஔரங்காபாது அருகில்) படித்தானத்தைத் (Paithan) தலைநகராய்க் கொண்ட நூற்றுவர் கன்னர் (பாகதத்தில் சதகர்ணி) ஆண்டார். தமிழகத்தையும் மகதத்தையும் வணிகத்தால், இடையாற்றங்களால், இணைத்தவர் இவரே. எதிரிகளை நூறும் அடைப் பெயரை இவர் பெற்றார். கன்னர் (= கருநர்) என்பது சேரர்/சோழர்//பாண்டியர் போல் ஓர் இனக்குழு அடையாளம். 

தமிழிய, வடவிந்திய மொழிகளிடையே எண்களில் இணைச் சிந்தனை நிலவியது நெடுகவும் உண்மை. அவை தனித் தனியே தேர்ந்து கொண்ட சொற்கள் தாம் வேறு. மேலைச் சொல்லும் நூறுதல். சதைத்தல் போலவே அமையும்..100 க்கான மேலைச்சொற்கள் கொத்தற் கருத்தில் எழுந்தவை. ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகர முதலி பொருள் கூறாது வெறுமே சொல் இணைகளை மட்டுங் காட்டும். Old English hundred "the number of 100, a counting of 100," from Proto-Germanic *hundratha- (source also of Old Frisian hundred, Old Saxon hunderod, Old Norse hundrað, German hundert); first element is Proto-Germanic *hundam "hundred" (cognate with Gothic hund, Old High German hunt), from PIE *km-tom "hundred," reduced from *dkm-tom- (source also of Sanskrit satam, Avestan satem, Greek hekaton, Latin centum, Lithuanian simtas, Old Church Slavonic suto, Old Irish cet, Breton kant "hundred"), suffixed form of root *dekm- "ten. 

கொத்தலும் சாத்தலும் ஒருபொருள் கொண்டன. சகரமும் ககரமும், ஹகரமும் மேலைமொழிகளில் போலிகள். ஒரு பக்கம் ககரம் சகரமாக, இன்னொரு பக்கம் ககரம் ஹகரமாகும். பொருள் ஏதோ ஒன்று  தான்.

நூறென்ற எண்ணுப் பொருள் சொல்லாட்சி சங்க இலக்கியங்களில் பல இடங்களில் வந்துள்ளது. “நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறுபல் வேள்வி முற்றிய வென்று” (திரு.155-156), “நூற்றிதழ்த் தாமரை” (ஐங்.20-2), ”பதிற்றுக்கை மதவலி நூற்றுக்கை ஆற்றல்” (பரி 3-40), “மையிரு நூற்றிமை உண்கண் மான் மறி தோள் மணந்த ஞான்று ஐயிருநூற்று மெய்ந்நயனத்தவன் மகள் மலர் உண்கண் மணிமழை தலைஇயென” (பரி 9-8,9,10), “நூற்றிதழ் அலரின் நிரை கண்டன்ன” (புறம் 27-2), ”புரிபுமேல் சென்ற நூற்றுவர் மடங்க, வரிபுனை வல்வில் ஐவர் அட்ட” (கலி 104 57,58), “மறம்தலைக் கொண்ட நூற்றுவர் தலைவனை” (கலி 52-2), “பன்னூறு அடுக்கிய வேறுபடு பைஞ்ஞிலம்” (புறம் 62.10),”நூறுசெறு வாயினும் தமித்துப்புக் குணினே” (புறம் 184.3) என்பன அவையாகும்.

அடுத்தது ஆயிரம். நுறுக்குவதற்கும் கீழே, விடாது துவட்டி/தவட்டி எடுக்கையில் கல், தவடு>தவிடு பொடியாகிகும். தவட்டல்= சிறு பொடியாக்கல். துவையலும் சிறு பொடியாக்குவதே. என்ன? ஈரஞ் சேர்ந்து பொடியாக்குவது. தவட்டுதல்> தவடு> தவிடு என்பற்கும் மேலைமொழிகளின் thousand ற்கும் தொடர்புள்ளதுபோல் தோற்றுகிறது. 

தவிடு பொடியாதல்; தவட்டுதல், தென்மாவட்டங்களில் இது  சவட்டுதல் ஆகும். சவடென்பது வண்டல் மண்ணை, ஆற்றுமணலைக் குறிக்கும். (ஊரெலாம் காணும் ஆற்றுமணற் கொள்ளை என்பது சவட்டுமணற் கொள்ளையே.) இதே பருமையில் ஆனால் கடற்கரையிற் கிடக்கும் மணல் சற்றே திரிந்து, உப்பை உணர்த்தி, சவடு> சவர் என அழைக்கப்படும். சவத்தலே சவர்த்தலாயிற்று. சவ்வு> சவ்விரம்>  சவிரம்> சாவிரம்> சாயிரமென இச்சொல் திரியும். கன்னடத்தில் சாயிரம் = ஆயிரம். (கன்னடச் சொல் தெரியாவிடின் ஆயிரத்தின் சொற்பிறப்பறிய நாம் தடுமாறியிருப்போம்.) இதற்கு இணையாய்த் தமிழில் அயிரம்/அயிரை = நுண்மணல், கண்ட சருக்கரை. அயிர் = நுண்மை.

சாயிரம்>சகயிரமாகி, பின் சகஸ்ரமாகி, சங்கதத்திற் புழங்கும். இதைத் தலை கீழாய் ஓதி ”சகஸ்ரமே ஆயிரமாயிற்று” என்று சிலர் சொல்வர். சவட்டுதலின் தொடர்பான சவளுதல் = துவண்டு போதல், சவித்துச் சவலையான பயிர் சாவி,. சவித்தழிந்த உடல் சவம். சாவட்டை= சாவிப் பயிர், சாம்பிப் போதல்>சாவிப் போதல்= ஒடுங்குதல் போன்ற சொற்களைப் பாராது இவர் சொல்கிறார். 

சவைத்தலின் இன்னொரு வெளிப்பாடு அவைத்தல்; அரிசி குற்றலைக் குறிக்கும். அவல்= flattened rice. இவற்றையும் சங்கதத்தார் கவனிப்பதில்லை. ஆயிரம் தமிழில்லை எனில் இத்தனையும் தமிழில்லை என்றாகும். ஒரு சொல்லைத் தனித்துப் பாராது, சொற்றொகுதியாய்ப் பார்க்கும் படி நான் சொல்வது இதற்கே. ஆரம் போலவே இன்னொரு சொல் அயிர்தம். சகஸ்ரத்தை ஆயிரத்திற்கு வைத்து, அயிர்தம்>அயுதத்தை வட புலத்தார் பத்தாயிரத்திற்குப் பயனுறுத்தினார். சாயிரம் புழங்காத தமிழரோ அயிர்தமும், ஆயிரமும் ஏறத்தாழ ஒன்றாய் ஒலிப்பதால், குழப்பந் தவிர்க்க, அயிர்தத்தைப் பத்தாயிரமென்கிறோம்..
   
’ஆயிரம்’ பழகிய சங்கச் சொல்லாட்சிகள் ”அடையடுப்பறியா அருவி ஆம்பல் ஆயிர வெள்ளம் ஊழி வாழி, ஆத வாழிய பலவே”  (பதி.63.19-21), “ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள” (பரி.3-42), ”ஆயிர அணர்தலை அரவவாய்க் கொண்ட” (பரி 3-59), “அந்தர வான்யாற்று ஆயிரம் கண்ணினான் இந்திரன் ஆடும் தகைத்து” (பரி.தி.2-95-96), ”சாலி நெல்லின் சிறை கொள் வேலி ஆயிரம் விளையூட்டாக” (பொரு. 247-248), “தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய” (மது 11), “ஆயிரவெள்ளம் வாழிய பலவே” (பதி 21.38), “ஆயிரம்விரித்த அணங்குடை அருந்தலை” (பரி 1.1), “மாசில் ஆயிரம் கதிர் ஞாயிறும் தொகூஉம்” (பரி.3.22), “மின்அவிர் சுடர்மணி ஆயிரம் விரித்த கவைநா அருந்தலைக் காண்பின் சேக்கை” (பரி 13.27-28), “அணங்குடை அருந்தலை ஆயிரம் விரித்த” (பரி.தி.1.79), “அணங்குடை வச்சிரத்தோன் ஆயிரம் கண் ஏய்க்கும்” (கலி.105.15), ”வளஞ்சால் துளிபதன் அறிந்து பொழிய வேலியாயிரம் விளைக நின் வயலே” (புறம் 391.19-21) என்பனவாகும். ஆயிரமென்ற எண்ணிற்கு மேற்பட்ட சொல்லாட்சிகள் தமிழிற் குறைவு. ஆனால் இல்லாதில்லை. நிகண்டுகளிலும், ஒரு சில காட்டுக்களிலுமுண்டு. (மறவாதீர். சங்க இலக்கியங்கள் அகரமுதலிகள் அல்ல.)

அயிர்தலுக்கும் கீழே பொடித்து நொய்வது நொய்தலாகும். ”நொய்> நொசி” ஆங்கிலத்தின் nice ஓடு இணை கொண்டது. ”அம்மண்னைத் தொட்டுப்பார், நொய்யாக இருக்கும்.” நொய்தல், நெய்தலென்று திரிந்து 100000 (=10^5) த்தைக் குறிக்கும். இலவுதல்>இலகுதலும் நொய்தலைக் குறிக்கும். 

இலகல்= நொய்ம்மை. இலகுதல் தன்வினை. இலக்குதல் பிறவினை.. இலக்கிற் பிறந்த இலக்கம், முற்றிலும் தமிழே. இலக்கத்தைச் சங்கதம் இலக்ஷ என்னும். பிறகு, ”தமிழ் அங்கிருந்து கடன் வாங்கியது” என்பர். ”நெய்தலும் குவளையும் ஆம்பலும், சங்கமும் மையில் கமலமும் வெள்ளமும் நுதலிய செய்குறி ஈட்டம் கழிப்பிய வழுமுறை” என்று பரி. 2.13- 15 ஆம் வரிகளிற் பயிலும். 

ஆயிரத்திற்கு மேற்பட்டு அடுத்தடுத்துயரும் எண்களாய் கால எண்ணிக்கை சொல்லப் படும். இலக்கமும் (10^5) நெய்தலும் ஒன்றென வடபுல நூல்களைப் பார்த்தே நான் அறிந்தேன். நெய்தலை வடக்கே ந்யுதமென்பார். 

(தமிழாய்வர் கொஞ்சமாவது பாகதம், சங்கதம் படிக்க வேண்டும். நம்மூர்ச் சிந்தனை வடக்கே பெயர்ந்து கிடக்கிறது. வேரிங்கே விளைவங்கே. நாம் விரும்புகிறோமோ, இல்லையோ, தமிழாய்வாளர் உண்மையறிய சங்கதப் படிப்பு கட்டாயந்தேவை. இந்தக்காலத் தமிழ்ப்படிப்பில் இதை ஒதுக்கியது பெருந் தவறு.) நெய்தல், இலக்கத்தோடு நூறாயிரம் என்றும் வழக்கிலுண்டு. “நூறாயிரம் கை ஆறறி கடவுள்” என்பது பரி. 3.43.

அடுத்தது கோடி. நுணுகிய துகள்களைக் குவ்விக் குவிப்போம். குவ்வியது குவலும்/குவளும். 10^7 எனும் எண்ணுணர்த்தி குவளை என்ற பெயர்ச்சொல் உருவாகும். (கூடிய எண்ணிக்கை என்ற உட்பொருள் இதிலுள்ளது.) குவளை குவளியாகி தெலுங்கிற் குவடியாகி முடிவிற் கோடியாகும். வடக்கே கோடியே புழங்கியது. ’குவளை’ அங்கில்லை. தமிழில் இரண்டும் உண்டு. ஆனால் கோடியே மிகுதி.

 “ஒன்று பத்தடுக்கிய கோடிகடை இரீஇய பெருமைத்தாக நின் ஆயுள் தானே” (புறம் 12.5-6), “கோடியாத்து நாடுபெரிது நந்தும்” (புறம் 184-6), “கோடிபல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய” (புறம் 202-7) ஆகியவை இதற்கான சொல்லாட்சிகள்.

(குவளை= கோடி என்ற இணையைத் தமிழருக்குப் புரிய வைத்தவர் சொல்லறிஞர் இரா.மதிவாணன். [அவருடைய கட்டுரையை அடையாளங் காட்ட பரணில் தேடினேன். இப்போது கிட்டவில்லை. தெலுங்கு மொழி பலவகையில் பாகதத்திற்கும் தமிழுக்குமான பாலமே. நூற்றுவர் கன்னர் ஆட்சியில் ஏற்பட்ட விளைவு இது. (இற்றைத் தமிழாய்வோர் குறைந்தது இன்னொரு திராவிட மொழியையும் கட்டாயம் படிக்கவேண்டும்.)]   

நெய்தல், குவளை என்ற சொற்கள் குவிந்த நுண்துகள்களாய் காட்சி அளித்தாலும், நீர்ப்பூக்களெனும் மாற்றுப் பொருளும் உண்டு. அகப்பாட்டுக்கள் பலவற்றில் அப்படியே ஆளப்படும். அந்த மிகுதியே நம்மை எண்ணுப்பொருள் காட்ட விடாது தடுக்கும்.) ஒவ்வோர் எண்ணுக்கும் ஏழெட்டு நிகர்ச்சொற்களை மரபு கருதி மறைப்பாகப் புழங்குவது இந்தியா எங்கணும் நடைமுறையாகும். காட்டாக வானம்= 1, கை= 5, திசை= 8, கைத்திசை=  58. 

இப்படிப் பல்வேறு சொற்களையும் சொற்கூட்டுகளையும் வட்டார மரபுக்கேற்பப் புழங்குவர். குழூஉக்குறி புரியாதோர் விளங்காது நிற்பர். [”நாலு பேர் சொல்வாங்க” என்ற மரபுப் பேச்சிற்கு ”நாலு திசையிலும் உள்ளவர் சொல்வர்” என்பதே பொருள். ”4 ஆட்கள் சொல்வர்” என்பதல்ல.] 

இலக்கத்திற்கு நெய்தலும், கோடிக்கு குவளையும் அடையாளமாய்க் கொள்ளப் பட்டன. நெய்தலையும், குவளையும் இப்படிப் புழங்கிய பிறகு ஆம்பலையும், தாமரையையும் தமிழர் விட்டு வைப்பாரா, என்ன? ஆம்பல், சங்கம், தாமரை என்ற எண்சொற்களும் கூடப் பிறந்தன.

நூறுகோடி = 10^9 என்ற எண்ணைக் குறிக்க ’ஆம்பல்’ புழங்கியுள்ளது. அவைத்தல் பற்றி முன்சொன்னேன் அல்லவா? அவல் மட்டுமின்றி அவமென்ற பெயர்ச்சொல்லும் அதிற் கிளைக்கும். அதற்கும் மிக நுண்ணிய பொருளுண்டு. ஒரு பொருளை அவத்தி விட்டால் (10^9 பங்காக்குவது என்பது பின்னென்ன?) அழிந்தே போகும். எனவே அவத்திற்கு அழிவுப் பொருளும் வந்தது..அவம்>ஆம் எனத் தொகும். ஆம்புதல், ஆமுதல் போன்ற வினைகளை எழுப்பும். ஆம்பல் பேச்சுவழக்கில் ஆம்ப என்றாகும். 

சங்கதத்தில் ஆம்ப்ய ஆகி, மகரந் தொலைத்து ஆப்ய என்றாகும். யகரமும் ஜகரமும் வடசொற்களில் பல இடங்களிற் (மேலைமொழிகளிலும்) போலி/ ஆப்ய>ஆப்ஜ ஆகும். வட நூல்களில் இதே பொருளில் இச்சொல் புழங்கியது. இதைக் குமுதம்> குமுத> சமுத>சமுத்ர என்றுஞ் சொல்வார். வடபுலத்திலும்  10^9 என்பதே இதன் பொருளாகும். 

ஆம் என்பதற்கு நீரென்ற பொருளுமுண்டு. கொஞ்சங் கொஞ்சமாய் எண்ணுப் புலம் என்பது கல்>மண்>மணலென நீருக்குள் வந்து விட்டது பாருங்கள். இன்னொரு வகையில் அம்பல்> ஆம்பல். அம்புதல்=  கூம்புதல் என்பதால் அல்லியைக் குறிக்கும். அல்= இரவு. பகலிற் கூம்பி, இரவில் மலரும் அல்லிக்கு ஆம்பல் பெயர் ஏற்பட்டது.

அடை/இலை பக்கத்தில் உள்ளது நீராம்பல் பூ. ”அடையடுப்பறியா அருவி ஆம்பல் ஆயிரவெள்ளம் ஊழி வாழி” என செல்வக் கடுங்கோ வாழியாதனை பதி.63.19-21 இல் கபிலர் அழகுறப் பாடுவார். ”அடையடுப்பறியா நீராம்பல் பூ” = 10^9. பூத்த வஞ்சி/ பூவா வஞ்சி என்ற இணையை இங்கு எண்ணிக் கொள்க. 10^9 ஆண்டுகள் செல்வக் கடுங்கோ வாழியாதன் வாழ வேண்டுமாம். 

(இதில் வரும் வெள்ளத்தின் பொருள் இன்னும் பெரிய எண்ணைக் குறிக்கும். கீழே பாருங்கள்.) என்னவொரு ஆசை கபிலருக்கு வந்தது பாருங்கள்? ”நெய்தலும் குவளையும் ஆம்பலும், சங்கமும் மையில் கமலமும் வெள்ளமும் நுதலிய செய்குறி ஈட்டம் கழிப்பிய வழுமுறை” என்று பரி. 2.13-15 ஆம் வரிகளில் அடுத்தடுத்த பெரிய எண்ணாய் ஓர் ஒழுங்கு முறையைக் காட்டும். இது வரை பார்த்த படி, நெய்தல்/இலக்கம்/நூறாயிரம்= 10^5. குவளை/கோடி= 10^7. ஆம்பல்/நூறு கோடி= 10^9. 

இனிச் சங்கத்திற்கு வருவோம். இதன் மதிப்பு இன்னுங் கூட. தமிழரைக் குறைத்து மதிப்பிடாதீர் தோழர்களே! சங்கு பற்றி முன்சொல்கையில் 1000 இடம்புரிச் சங்கிற்கு 1 வலம்புரிச் சங்கு கிடைக்குமென்ற பெருதகை (probability) சொன்னேன். அது போல் 1000 வலம்புரிச் சங்கிற்கு 1 சலஞ்சலம். ஆயிரம் சலஞ்சலத்திற்கு 1 ஐஞ் சுன்னம். இதைப் பெருக்கிப் பாருங்கள். 1000* 1000* 1000 = 10^9 என்றாகும். (இதைத் தான் ஆம்பல் என்று சொன்னோம்.) 

இதற்கு மேலும் இதே பெருதகையில் ஓரெண் வேண்டும் எனில் அது 10^12 தான். சங்கமென்ற சொல்லுக்கு இதையே வழிப்பொருள் ஆக்குவர். வட நூல்களில் இதே பொருள் சொல்வர். 10^12 என்பதை 10^5 * 10^7 = இலக்கங் கோடி என்று சொல்லலாம். தமிழ் அகரமுதலிகளில், நிகண்டுகளில் இப்பொருளுள்ளது. இப்போது புரிகிறதா, சங்கத்தின் எண்ணுப்பொருள்? 

அடுத்தது நூறு சங்கம் 10^14. இதை வெள்ளமென்று குறித்திருக்கிறார். சங்கதத்தில் ஜலதி என்பர். இது வரை சொன்னதில் தாமரை விட்டுப்போனது. அது சங்கத்திற்கும் வெள்ளத்திற்கும் இடைப்பட்டதெனப் பரி. 2.13-15 ஆம் வரிகள் சொல்லும். எனவே பத்துச் சங்கம் = 10^13 = தாமரை ஆகலாம். என்னால் உறுதியாய்ச் சொல்ல முடியவில்லை. வேறு ஏதேனும் விளக்கம் தோன்றினால் பின்னர் சொல்கிறேன். . 

இனி முடிவிற்கு வந்துவிட்டோம். அடுத்த பகுதி வரை பொறுங்கள்.

அன்புடன்,
இராம.கி.

சங்கம் - 6

70000 ஆண்டுப் பழங்குடிகளின் மிச்சசொச்சமாய்த் தமிழர் இருந்திருக்கலாம் என எண்ணுதற்கு இன்றுமுள்ள சங்குப் பயன்பாடும் விளக்கங்களும் காரணமாகும். 

கூட்டம் பெரிதானபின், சங்கின் பயன்பாடு ஓசையெழுப்பப் பயன்பட்டிருக்கலாம். ஒருவேளை கூட்டக்கருத்தே கூட இதன் வழி எழுந்ததோ, என்னவோ?. 

விரைந்த நகர வாழ்வில் இன்றிது அரிதாகினும், தென்பாண்டி நாட்டுப்புற வீடுகளில் பொங்கல் நாளில் தங்கள் வீட்டிற் “பால் பொங்குவதை” ஊரார்க்குத் தெரிவிக்கச் சங்கு முழங்குவது நம்மைச் சிந்திக்க வைக்கும். ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குக் குறுஞ் செய்தி தெரிவிக்கச் சங்கூதுவதும் முரசு அறைவதும் மேலையர் காலம் வரையிலும் இங்கிருந்த பழக்கம்.

கட்டபொம்மன் காலையுணவு அருந்துமுன் திருச்செந்தூரில் முருகனுக்கு பூசையாயிற்றா என நாளுமறிய விழைவானாம். ஒரு கல்லிற்கு ஒருக்காய் செந்தூரிலிருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு முரசறைவித்துச் சங்கும் ஊதுவராம். இது போற் செயற்பாடுகள் தமிழகத்தில் ஏராளம். 

”குழந்தை பிறந்தபோது ஊதப்படும் முதற் சங்கம், திருமணத்தின் போது ஊதப்படும் இரண்டாஞ் சங்கம், வாழ்நாள் முடிகையில் ஊதப்படும் மூன்றாஞ் சங்கம்” பற்றிப் பட்டினத்தார் பாடுவார்.

முதற்சங் கமுதூட்டும்; மொய்குழலார் தம்மை
நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும் - கடைச்சங்கம்
ஆம்போ ததுவூதும்; அம்மட்டோ? இம்மட்டோ?
நாம்பூமி வாழ்ந்த தலம்.

இது போன்ற செயல்கள் வழக்கிலிருந்தவை தாம். பிறந்த பிள்ளைக்கு சங்கின் வழி மருந்தூட்டுவது கூட அண்மைக் காலம் வரை நாட்டுப் புறங்களில் இருந்த பழக்கமே. நெய்தலிலிருந்து மற்ற திணைகளுக்கு இது போன்ற சங்குப் பயன்பாடுகள் விரிந்தன போலும். ஆனால் சங்கின் கூட்டப் பொருள் இதே சொற்பிறப்பின் வழி ஏற்பட்டதா என்பது வேறு கேள்வி. அடிப்படையில் இரு வேறு சொற்பிறப்பில் உருவாகி ஒரே மாதிரி ஒலிக்குஞ் இருபொருட் சொற்களாகவே இவை தோன்றுகின்றன. விரிவாய்ப் பார்ப்போம்.

உம்முதலெனில் பொருந்தல், கூடுதலென்று பொருள்கொள்ளும். ”அவனும் நானும், இனியனுமாய் பள்ளிசென்றோம்.” இங்கே உம் உருபு கூட்டப்பொருள் குறிக்கிறது. உம்>அம் ஆகி, அம்முதலுங் கூடத் தமிழில் பொருந்தலைக் குறிக்கும். அம்>அமை; அமைதல்= பொருந்தல். தெலுங்கில் அம்முதல்= "ஒரு பொருளின் மதிப்பில் உடன்பட்டு விற்றல்". 

அம்முதலில் வந்ததே அங்காடி. தெலுங்குச்சொல் தெரியாதிருந்தால், ’அங்காடி’ எப்படி வந்ததெனத் தெரியாமலே போயிருக்கும். உம்முதலின் முன் சகரஞ் சேர்த்தும் அமையலாம். சும்>சும்மை என்பது மிகுதி குறிக்கும். சும்மைக்கு முந்திய ’சும்முதல்’ வினைச்சொல் (கும்முதலைப் போல்) மிகுத்தலைக் குறித்திருக்க வேண்டும். 

[மிகுத்தலிலிருந்து கூட்டப் பொருளும் பருத்தற் பொருளும் இயல்பாக வரும்.] சும்முதல் தொடர்பான பெயர்ச் சொற்களைப் பதிந்த அகரமுதலிகள் வினைச் சொல்லைப் பதிவாக்கவில்லை. வியப்புறுகிறோம்.] சும்மையொட்டி, சுமை, சுமடு, சும்மாடு, சுமத்தலென்ற சொற்களும் அகரமுதலிகளிற் பதிவாகி உள்ளன.

சம் என்ற சொல்லிலிருந்து சமமென்ற சொல்லுமெழும். சமம் போன்ற அடிப்படைச் சொல்லைத் தமிழ் கடன் வாங்கியிருக்க வழியில்லை. சம்முதல், சமத்தல், சமலுதல்= ஒன்றைப் போல் இன்னொன்றாய் ஒருங்கிருத்தல் என்பதற்கான வினைச்சொல் இந்தையிரோப்பியனிலும் நேரடியாயில்லை. same என்ற பெயர்ச்சொல் மட்டுமே சுற்றிவளைத்துக் கூடுதல், உடனிருத்தல் பொருளில் எழுந்துள்ளது. உடன் இருப்பன ஒன்று போல் இருக்கவேண்டுமே என்று நாம் புரிந்துகொள்கிறோம்.
.
perhaps abstracted from O.E. swa same "the same as," but more likely from O.N. same, samr "same," both from P.Gmc. *samon (cf. O.S., O.H.G., Goth. sama; O.H.G. samant, Ger. samt "together, with," Goth. samana "together," Du. zamelen "to collect," Ger. zusammen "together"), from PIE *samos "same," from base *sem- "one, together" (cf. Skt. samah "even, level, similar, identical;" Avestan hama "similar, the same;" Gk. hama "together with, at the same time," homos "one and the same," homios "like, resembling," homalos "even;" L. similis "like;" O.Ir. samail "likeness;" O.C.S. samu "himself"). O.E. had lost the pure form of the word; the modern word replaced synonymous ilk (q.v.).

இதே கருத்தைச் சமமென்ற சொல்லை மட்டுமின்றி, இன்னும் பல சொற்களைச் சேர்த்து ஒட்டு மொத்தமாக ’சமயம்’ என்ற தலைப்பில் நண்பர் ஆசீப்பின் வேண்டுகோளுக்கிணங்கி அவர்களின் கானல் சிறப்பிதழில் எழுதினேன். பின் அதை என் வலைப்பதிவிலும் பதிந்தேன். கீழே சுட்டிகள் கொடுத்திருக்கிறேன்.
 
http://valavu.blogspot.com/2006/03/1.html
http://valavu.blogspot.com/2006/03/2.html
http://valavu.blogspot.com/2006/03/3.html
http://valavu.blogspot.com/2006/03/4.html
http://valavu.blogspot.com/2006/03/5.html
http://valavu.blogspot.com/2006/03/6.html

இக்கட்டுரைத் தொடரிற்சொல்லியதை மீண்டுஞ்சொல்வதிற் பொருளில்லை. எனவே தான் சுட்டிகள் கொடுக்கிறேன். 'சம'த்திற்கு இணையாகத் திராவிட மொழிகள் பலவற்றிலும் [சமம்- மலையாளம், சம- கன்னடம், படகர், சமமு-தெலுங்கு] சொற்களுள்ளன. சமத்தை ஒட்டிய பலசொற்களும் மற்ற திராவிட மொழிகளிலுண்டு. 

அவற்றில் சிலவற்றை பர்ரோ-எமெனோ பதிவுசெய்வார். வெறும் ஒற்றைச் சொல் மட்டும் பார்க்கும் பழக்கத்தை அருள்கூர்ந்து நிறுத்தித் தொடர்புடைய சொற்களைத் திராவிடமொழிகளிற் பார்க்கப் பழகுங்கள். இத்தனை மொழிகளில் கருத்தும், வளர்ச்சியுமிருந்தால்  முந்து திராவிடத்திலும் அது இருந்திருக்குமென அறிவூகம் (intuition) சொல்லும். 

[முந்துதமிழென நான் சொன்னால் பலரும் ஏற்கார்.. பொதுவாகப் புகர் நிறத்தார், கருப்பர் சொல்லை மற்ற தமிழர்/இந்தியர் கேட்பதில்லை:வெள்ளை நிறம் எனில் அதிலேதோ இருப்பதாய் நம்புவது நம்மவர் வழக்கம்.-))] அப்படியான முந்துதிராவிடக் காலத்தில் வேத மொழி இந்தியாவினுள் நுழைய வில்லை என்றே வரலாற்று மொழியியல் சொல்கிறது.

அப்படியும் மீறி முந்துதிராவிடத்திலும், இந்தையிரோப்பியத்திலும் ஒரே பொருளில் ஒருசொல் அமையுமானால் அது பழஞ்சொற்களின் மிச்சசொச்சம் என்பதே அறிவிற்குகந்தது. 

திராவிட மொழிகளுக்கும், இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் இடையே ஏதோ உறவு முந்துபழங்காலத்தில் நாகரிகந் தோன்றிய காலத்தில் இருந்திருக்குமென்று கருதுகோள் கொண்டால் இது போல் ஒப்புமைகளை ஆயலாம். 

[நான் அப்படியொரு கருத்துக் கொண்டவன்.] 

மாறாக ஒப்புமைப்பொருள் சொல்லத் தமிழருக்குச் சொல் கிடையாதென்று அச்சடித்தாற்போல் வேதமோதி, ”வடமொழி மேடு, தமிழ் பள்ளம், மேட்டிலிருந்து நீர் பள்ளத்திற் பாய்ந்தது” என்று கிளிப்பிள்ளை போல் கூச்சலிட்டு முட்டுச் சந்திற்குள் முன்னும் பின்னும் போய்வந்து கொண்டிருக்கலாம்.

I take சமம் as common stock of Dravidian and Indo-European. Period. Such common stock is to be ascertained over a long period of research. முடிவாக same = சம என்றே நான் கொள்ளுகிறேன்.

சமம், சமன், சமல் என்பவை பல்வேறு ஈறுகளில் முடியும் ஒருபொருட் சொற்களில், சமம் என்பதையே பெருவாரியாகப் பயன்படுத்தி மற்ற இரண்டையும் இற்றைத்தமிழில் நாம் துறந்து கொண்டுள்ளோம். 

கும்முதல்= கூடுதல் போலவே சம்முதல்= கூடுதல் என்பதும் பிறந்தது. கூடும் பொருட்கள் ஏதோ வகையில் ஒரே மாதிரி இருக்கும் காரணத்தால், ”ஒன்று போல் இருந்தல்” என்ற வழிப்பொருள் பிறந்தது. முதற் பொருள் இங்கு கூடுதலே. இரண்டாம் பொருளே ’ஒன்றுபோலிருத்தல்’. 

சம்மோடு தொடர்புடைய செம்முதலையும், அதையொட்டி செ, செம், செவ், செய் போன்ற முன்னொட்டுக்களையும், அவை உருவாக்கிய சொற்களையும் இங்கே எண்ணிப் பார்க்கலாம். அம்முதல்= பொருந்துதல்; அம்> அங்கு> அங்கம்= பொருந்திய உறுப்பு; கும்முதல்= குற்றுதல்; கும்> குங்கு= குன்றியது; கும்முதல்> கொம்முதல் = குவிதல்; குங்கு> கொங்கு= குவிந்த மேடான பகுதி.

மலைகளையும், குன்றுகளையும் ஓதுக்கி நிரவலாய்ப்பார்த்தால் தமிழகத்தில் கொங்குப் பகுதியே மேட்டு நிலம். சும்முதல்= தொகுத்தல்; சும்>சுங்கு= ஆடையின் கொய்சகம். சுருங்குதல்> சுங்குதல்; சுங்குடிப் புடவை= சுங்கிய இடங்களில் சாயந்தோய்த்துப் புதுத் தோற்றங் கொண்ட புடவை. இப்படிப் பல்வேறு இணைகளைப் போல், சம்முதல்=  கூடுதல்; சேர்தல்; சம்>சங்கு>சங்கம்= கூட்டம் என்ற சொல் எழுந்தது புரியும்.

கூட்டப்பொருள் என்பது ஈறாறு கூடுமிடம், ஆறு கடலோடு கூடுமிடம் ("சங்குமுகம் ஆடி சாயாவனம் பார்த்து, முக்குளமும் ஆடி முத்திபெற வந்தானோ" என்று எங்களூர்ப் பக்கம் ஒரு தாலாட்டு வரி போகும். 

சங்கு முகத்தைத் தொகுத்துச் சங்கமமாக்கிச் சங்கதம் எடுத்துக்கொள்ளும். அதை மீண்டுங் கடன் வாங்கிச் சங்கமித்தலென்று சில தமிழர் உருவாக்குவார்), 

சேர்க்கை, அவை, புலவர் கூட்டம், முச்சங்கங்கள், செயின புத்த சங்கங்கள், அன்பு, புணர்ச்சி முதலிய பொருட்பாடுகளைக் குறிக்கும். சங்கமென்றசொல் தமிழிலக்கியத்தில் கூட்டப்பொருளில் முதன்முதல் ஆளப்பட்டது. 

மணிமேகலையின் (7.113-114) ”வலம்புரிச்சங்கம் வறிதெழுந் தார்ப்ப, புலம்புரிச் சங்கம் பொருளொடு முழங்க” என்ற வரிகளாகும். புலம்புரிச் சங்கம் என்பது கூட்டப் பொருளில் அமைந்ததே. இதைக் காட்டிக் மணிமேகலை காலத்திற்றான் ’சங்கம்’ கூட்டப்பொருளில் எழுந்ததென்பது பெருந்தவறு. முன் சொன்ன காரணங்களால் சங்கத்திற்குக் கூட்டப்பொருள் முன்பே ஏற்பட்டு இருக்கலாம்.   

[(இடைவிலகலாயினும்) மணிமேகலை காலம்பற்றி இங்கு சொல்ல வேண்டும். சிலம்பும், மணிமேகலையும் ஒரே காலத்தில் அடுத்தெழுந்த நூல்களென்றே பலருங் கொள்வார். அப்படிக் கொள்வதால் தமிழர் வரலாறும், தமிழிலக்கிய வரலாறும் தடுமாறிப் புரிந்துகொள்ளப் படும். 

பெரும் ஆய்வாளாரே இதில் தடுமாறியுள்ளார். ஆழவாய்ந்தால் கதை நடந்த காலத்திற்கு அருகில் 2,3 ஆண்டுகளுக்குள் சிலம்பு நூல் எழுந்திருக்கவே வாய்ப்புண்டு. அதில் வரலாறு மிகுந்தும், புனைவு குறைந்தும் உள்ளதை உணரலாம். 

என் ஆய்வின் படி சிலம்பின் காலம் பொ.உ.மு.75 ஆகும். ”அரைசியல் பிழைத்தோர்க்கு அறங் கூற்றாகும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்” என்ற உண்மைகளோடு, சோழ, பாண்டிய, சேர இனக்குழுக்களை விதப்பாய்ப் பாராது மொத்தத் தமிழரின் சிறப்பையும் தேசிய நோக்கிற் பேசவந்த நூல் சிலம்பாகும். தவிர, எல்லாச் சமயங்களையும் குறையின்றி விரித்துப் பேசிய அந்நூலை வெறுமே செயினச் சமயநூலென்று குறுக்குவதும் சரியல்ல.

மணிமேகலையோ, ஒருசில சிலம்புக் கதைமாந்தரை தன் கதைமாந்தராய் எடுத்து, அளவிற்கு அதிகம் புனைவு சேர்த்து பல்வேறு கால நிகழ்வுகளைக் கலந்து, ஒரு கதையாக்கிச் சிலம்பிற்கு அப்புறம் 500 ஆண்டுகள் கழித்து பெரும்பாலும் பொ.உ.425 இல்) தமிழகத்தில் புத்தமுயர்ந்த களப்பிரர் காலத்து நூலாகும். (இதற்கீடாக செயினப்பெருமை பேசும் நீலகேசியைச் சொல்லலாம்.) 

எப்படி விக்கிரமனின் ’நந்திபுரத்து நாயகியும்’, கல்கியின் ’பொன்னியன் செல்வனும்’ ஒன்று மற்றதின் தொடராய் அதே பொழுது தத்தங் காலங்களில் வேறாய் எழுந்தவையோ, அதுபோற் சிலம்பையும், மணிமேகலையும் கொள்ள வேண்டும். இதைச் செய்யாது ஆய்வுக் குழப்பத்தால் சிலம்பை வலிந்து கீழிழுத்துப் புதினம் என்பது முற்றிலும் தவறான போக்கு. இதுபோல் தவறு ஏறத்தாழ 100 ஆண்டுகளாய் நடந்துவருகிறது.]

அன்புடன்,
இராம.கி.

சங்கம் - 5

இனிச் சங்கென்ற சொல்லின் சொற்பிறப்பிற்கு வருவோம். வரலாற்றுக் கண்ணோட்டத்திற் பார்த்தால் சங்கின் வளைவுப்பொருளே முதலிலெழ வாய்ப்புண்டு. வளைவுப்பொருள் கொண்ட சுல் எனும் வேர்ச்சொல்லில் கிளைத்த நூற்றுக்கணக்கான சொற்களை இன்றும்நாம் பயன்படுத்துகிறோம். சுல்>சுள்>சுழி, சுழி>சுரிதல்>சுரித்தல்; சுரிகுழல், சுரிகை, சுரிதகம், சுரிந்து, சுரிப்புறம்=சங்கு, நத்தை, சுரிமுகம்= சுழித்த முகமுடைய சங்கு, சுரிகுழல், சுரியாணி, சுருங்கு, சுருக்கு, சுருட்டு, சுருணை, சுருள், சுலவுதல், சுழல், சுளுக்கு, சுறட்டுக்கோல், சுறு>சுற்று>சுத்து எனப் பலசொற்கள் நினைவிற்கு வருகின்றன. சங்கையும் அதன்தொடர்பான சக்கு, சக்கரம், சகடம் தவிர்த்த மற்றவற்றை இங்குநான் விளக்கவில்லை. அப்படிச்செய்தால் கட்டுரை நீளும்.

சுல்க்கு>*சல்க்கு>சக்கு என்பது வட்டப்பொருளையும், உருண்டைப் பொருளையுந் தரும். சக்கு>செக்கு= வட்டமாய்ச்சுற்றி எள்நெய் பிழிவிக்கும் இயந்திரம். (அகரச்சொற்கள் எகரத்தில் திரிவது பல சொற்களில் நடந்துள்ளது. காட்டு: பரு>பெரு.) வட்டப்பொருளே இச்சொல்லில் முகன்மை. வட்டமாய்ப் பூக்கும் பூஞ்சாளம்/பூஞ்சணமும், உருண்டைக் கண்ணும் கூடச் சக்கு எனப்படும். (முகத்தின் வழி பார்ப்பதற்கு மீன்போல் தோற்றமளித்தாலும், கண்ணுறுப்பைத் தனியே எடுத்துப்பார்த்தால் அது உருண்டையே.) சக்கான பலாப்பழம் சக்கைப்பழம். மலையாளத்தில் இதுவே பரவலாய்ப் புழங்கும். (நீளுருண்டை ஆயினும் சக்கையின் பெயர் அப்படித்தான்.) குண்டுமுல்லை சக்கைமுல்லை எனப்படும். உடல்வலியற்றுக் குண்டாய்ப் பருத்தவன் சக்கையன் எனப்படுவான். (யாழ்ப்பாண அகராதி). உருண்டையிலிருந்து மிகுதிப்பொருள் வரும். ”மழை சக்கையாய்ப் பெய்கிறது.” 

சக்கிற் பெரியது சக்கம். இதற்கும் வட்டப் பொருளுண்டு. சக்கத்தின் நீட்சி சக்கடம். சக்கடவண்டி என்பது மேற்கூடு இல்லாத கட்டைவண்டி. நாட்டுப் புறங்களில் வேளாண் ஊடாக இன்றும் சக்கடவண்டி புழங்குகிறார். சக்கட வண்டி சக்கர வண்டியாகவும் திரியும். சக்கரத்தைச் சங்கதம் உள்வாங்கிச் சக்ரமாக்கும். 

(சக்ரமே முதலென்போர், மேற்சொன்ன மற்ற சொற்களை யெல்லாம் ஒதுக்கிவிடுகிறார். சிக்கல் இதிற்றான் உள்ளது. வெறுமே ஒற்றைச்சொல் பார்த்து முன்னுரிமைகளைச் சொல்ல முடியாது. மொத்தக் கூட்டத்தையும் பார்த்தே சொல்லவேண்டும். அதனாற்றான் இராம.கி. கட்டுரைகள் நீளம்.) 

சக்கு>சக்கம்>சக்கடம்>சக்கரம்>சக்ரம். சக்கடமிருந்தால் ”சக்கடு”வும் இருந்திருக்கலாம். ஆனால் அதன்பயன்பாடு நமக்குத் தெரியவில்லை. அதன்தொகுதியான சகடும், சகடமும் ”சக்கரம், வண்டி”யென்ற பொருட்பாடுகளில் இன்றும் பயிலப்படுகின்றன. சக்கு> *சக்கடு>சகடு>சகடம். அம் ஈற்றிற்கு மாறாய் ஐ ஈற்றைச்சேர்த்து சகடை என்ற சொல் உருவாகி, வண்டியைக் குறித்தது.

[சகடு-சகடை-சகடம் என்ற சொல்லிணை போலவே உருள்-உருளி-உருளம் என்ற இணையுமுண்டு. இங்கும் முதற்சொல் சக்கரத்தையும், 2,3 ஆம் சொற்கள் வண்டியையும் குறித்தன. எப்படிச் சோளம்> சோழம் என்பது தெலுங்கில்போய் டகரம் ஆகி (சோடம்; தெலுங்குச் சோடர்) இன்னும் வடக்கே போய்த் தகரமாய்த் திரிகிறதோ, அதுபோல் உருளம்>உருடம்>(உ)ருதம் என்றாகி உகரவொலி மறைந்து அகரவொலியேறி ரதமாகும். (தமிழரிற்பலரும் ரதமும் தேரும் வேறானவை என்றெண்ணுகிறார். இரண்டும் ஒருபொருட் சொற்களே.) ரதத்தையொட்டி இந்தையிரோப்பியச் சொற்கள் பலவுண்டு. 

இன்னும் பார்க்கின், சக்கரத்திற்கும் மேலைமொழிகளின் chariot, car க்குங் கூட ஆழ்தொடர்புண்டு. (மூலந் தெரியாது சிந்தனை மயங்கிய நிலையில், முரணைபேசாது, car ஐச் சகடை/சகடம் என்றழைக்க நம்மில் எத்தனைபேர் முன்வருவர்? மரபோடு இவற்றைப் பொருத்தாவிடின், சுற்றிவளைத்துக் காலகாலமும் மகிழுந்தைப் புழங்கவேண்டியது தான்; அன்றேல் காரைக் கடன்வாங்கி எழுதவேண்டியது தான்.]
 
சக்கின் மெல்லோசையில் சங்காகும். சங்கிற்பெரியது சங்கம். சக்கு>சங்கு> சங்கம். வடிவியலில் 360 பாகையில் சுற்றிவரும் போது ஒரே நீள ஆரங் கொண்டிருந்தாற் கிடைக்கும் வடிவம் வட்டமாகும். சக்கரம் வட்டவடிவம். இதில் வளைச்செலுத்தம் (turning process) மட்டுமே நடைபெறுகிறது. 

மாறாக ஒவ்வொரு பாகைக்கும் வளைச்செலுத்தமொடு ஆரநீளமும் சீராகக் கூடுமெனில், வளைச்செலுத்தம்+ ஆரநீட்டம் ஆகிய செலுத்தங்களால் புரிச்சுருவை (spiral curve) உருவாகும். இதன் நீட்சியான முப்பரிமானப் புரிச் சுற்றில் சங்கு எழுந்தது. அடிப்படையில் வட்டமென்பது, ஒரு மூடிய சுற்று. புரிச் சுருவையோ மூடாச்சுற்று. உயிரியலில், சங்குயிரியின் அஃகில்நெக் காடியைக் (DNA; Deoxytibo Nucleic Acid) கண்டு பயந்துவிடாதீர்கள். 

அ.நெ.கா. என்று சுருங்கச்சொல்லலாம். விரித்துச்சொன்னால் அஃகிலரப நெற்றுக் காடி. எத்தனை நாளைக்கு DNA என்று ஆங்கில எழுத்திலோ, டி.என்.ஏ என்று தமிழெழுத்துப்பெயர்ப்பிலோ எழுதிக்கொண்டிருப்போம்?) பொறுத்து, இடம்புரி, வலம்புரி, சலஞ்சலம், ஐஞ்சுன்னம் என்று பல்வேறுவகைச் சங்குகள் விளையும். நம் விரலிற்காணும் வரிகளில் [வரிகையே சங்கதத்தில் (வ்)ரேகையானது.] கூட ஒருவகை சங்காயும். இன்னொன்று சக்கரமாயும் அமையும்,

இதுவரை சங்கின் வளைப்பொருள் பார்த்தோம். குபேர நிதிகளைச் சேர்ந்த சங்கநிதி (முத்து), பவளநிதியும் சங்கோடு தொடர்புற்றவையே. சங்கை அறுத்துப்பெற்ற கைவளையும், சங்குபோல் வளைவு கொண்ட நெற்றியும், சங்கு போல் ஓசையெழுப்பும் துளை கொண்ட குரல்வளையும், சங்குபோல் வலக்கை, இடக்கைகளைப் பிடித்துக் காட்டுவதால் அமையும் உள்ளடங்கிய கைக்குழியும், காலிற் சங்கு பொருத்தியதுபோல் அமையும் கணைக்காலும் சங்கோடு மரபு வரிதியிற் தொடர்புற்றன. 

முடிவில் அழகெனும் பொருளும் சங்கின் வெண்மைகருதி ஏற்பட்டது. இப்போது சொல்லுங்கள் சங்கு நிறையக் கிடைத்த இடங்களில் நிலவிய வட்டாரமொழிச் சொல் இந்தியாவெங்கணும் பரவி நிலைக்குமா? எங்கோ இலாகூருக்குப்பக்கம் உருவான மொழியின் வழிப்பட்ட பிற்றைமொழியில் (சங்கதம்) நிலைக்குமா? 

சங்கு தமிழில்லை யென்பது எப்படிச் சரியாகும்? கடலைவிட்டுப் பெரிதும் தள்ளிய, படித்தவரிடையே மட்டுமிருந்த, சங்கதத்திலா பரதவர் “சங்கென்று” பெயரிடுவார்? அவரென்ன முட்டாள்களா? என்னவொரு விந்தையில் இச் சிந்தனை எழுகிறது? இனிச் சங்கு பற்றிய, பொ.உ. 6 ஆம் நூற்றாண்டிற்கு முந்தைய, இலக்கியச் சொல்லாட்சிகளைப் பார்ப்போம்..

பெருங்கடல் வெண்சங்கு காரணமாப் பேணாது
இருங்கடன் மூழ்குவார் தங்கை - இருங்கடலுள்
முத்தன்ன வெண்முறுவல் கண்டுருகி நைவார்க்கே
ஒத்தனம் யாமே யுளம்.

என்ற கணிமேதாவியாரின் திணைமாலை நூற்றைம்பது 33.ஆம் பாடலே நானறிந்தவரை சங்கின் நேரடிப் பயன்பாட்டிற்கான (கவனம்: நேரடிப் பயன்பாடு) முதற்சான்று. ”பகையணங் காழியும் பால்வெண் சங்கமும், பணில வெண் குடை” என்று சிலம்பின் 11:43 அடியில் சங்கின் நீட்சியான சங்கம் பயிலும். 

இந்நீட்சிப்பொருள் சரியானால் சிலம்பே இன்னும் முந்தைக் கூற்றாகும். சிலம்பு பொ.உ. 5 ஆம் நூற்றாண்டென்பதை என்றும்நான் ஒப்பியதில்லை. அது இரண்டாம் நூற்றாண்டென்பதையும் ஏற்றவனில்லை. சிலப்பதிகாரக்காலம் பொ.உ.மு.75 என்றே ’ சிலம்பின் காலம்” நூலில் நிறுவினேன்.

”தத்துநீர் அடைகரைச் சங்கு உழு தொடுப்பின்
முத்துவிளை கழனி முரிசெம் பவளமொடு”

என்ற பொ.உ.400 களைச் சேர்ந்த மணிமேகலையின் 8: 3-4 ஆம் வரிகள் சங்கின் தொடர் பயன்பாட்டை உறுதிசெய்யும்.

‘சங்கறுப்ப தெங்க(ள்)குலஞ் சங்கரர்க்கங் கேதுகுலம்
பங்கமுறச் சொன்னால் பழுதாமோ - சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனாரைப் போல
இரந்துண்டு வாழோ மினி‘

என்பது நக்கீரர் பாடியதாகச் சொல்லப்படும் பாடல். இதன் காலம் தெரியாது. பிறவா யாக்கைப் பெரியோன் ஆகிய சிவபெருமானுக்கும் சங்கரனெனும் பெயருண்டு. ஏனையக் கடவுளர் எதோவொரு தாய் வயிற்றில் பிறந்தவராம். பிறவா யாக்கைப் பெரியோனுக்குக் குலமில்லையாம். 

சுடலைப்பொடி பூசிப் ’பிச்சாஞ் தேகி’யாகிக் கபாலத்தில் பிச்சையெடுத்து உண்பதாகப் புராணங்கள் சொல்லும். நக்கீரர் பின்னிரண்டு அடிகளில் சிவனின் இரந்துண்டு வாழுஞ் செயலைக் குறிப்பிட்டு ”நாங்கள் சங்கை அரிந்துண்டு வாழ்வோமேயன்றி உம் போல் இரந்துண்டு வாழோமெ”னச் சொன்னதாய் இப்பாடல் கூறும்.   நமக்குக் கதை முகனமில்லை. சங்கென்ற சொல்லாட்சியே இங்கு முகன்மை.

அன்புடன்,
இராம.கி.

சங்கம் - 4

கப்பல் நுட்பத்திற்கும் நெய்தல் வாழ்க்கைக்குமான இடையாற்றம் ஒரு பக்கம் இருக்க, கடற்கரைகளிற் கிடக்கும் தொல்பழங் கடலுணவு எச்சங்களின் அகழாய்வுச் செய்திகளை இன்னொரு பக்கம் பார்ப்போம். 

கடலுணவின் பரிமானம் அகன்றது. .ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வழி ஆத்திரேலியா போய் நகர்ந்த நெய்தலார் ஆயிரமாயிரம் ஆண்டுகள் முதலுயிரி (Protozoa), புரையுடலி (Porifera), குழிக்குடலி (Coelentterata), மெல்லுடலி (Mollusca), கணுக்காலி (Arthropoda), தண்டுடை (Chordata) ஆகிய பொலியங்களைச் (Phylum; பொலிதல்= தோன்றி மிகுதல். கணமும் பொலியமும் ஒரே பொருளன.) சேர்ந்த பல்வேறு உயிரிகளை உண்டார். இவற்றில் தான் மீன், நண்டு, இறால், கடல் நத்தை போன்ற உயிரிகளும் உண்டு.

கடல் நத்தைகளும் நில நத்தைகள் போன்று முதுகிற் கூடுகளைக் கொண்டவை [அகட்டுக் காலி (gastropoda; அகடு = வயிறு) வகுப்பில் உள்ள நில நத்தைகள் தம் வயிற்றையே காலாக்கி முன் தள்ளி நகர்வதால் நத்தைப் பெயர் ஏற்பட்டது. நுந்துவது தமிழில் முன்தள்ளலைக் குறிக்கும்.) இவற்றின் கூடுகள் வீடுகளாய்த் தோற்றும். 

மெல்லுடலி வகையில் துருவலைக் (Turbinella) குடும்பஞ் சேர்ந்த துருவலைப் புருவம் (Turbinella pyrum) எனும் கடல் நத்தையும் (sea snail with a gill and an operculum, a marine gastropod mollusk in the family Turbinellidae. இதையே சங்குயிரி என்கிறோம்), இன்னும் நால் வேறு கடல் நத்தைகளும் (நத்திலிகள் எனும் nautilus கள் அவற்றிலொரு வகை) கூடவே இறாலும் தென்னிந்தியக் கடற்கரையில், குறிப்பாகத் தமிழகத்தில், இணைந்தே வளர்கின்றன.    .

இந்தியாவில் கச்சு (130கி.மீ கடற்கரை நீளம்), கேரளம் (65கி.மீ), தமிழகம் (720கி.மீ), ஆந்திரம் (கோதாவரிக் கழிமுகம்) வரை சங்குயிரி வளர்கிறது. (ஆந்திரத்தில் சங்குயிரி வளர்ச்சி மிகக் குறைவு.) குறிப்பாக, வழுவழுப்பான, ஆழமில்லாத, வண்டல் கலந்த கடல் மணற்பகுதியில் (கடலுள் ஏறத்தாழ 16 கி.மீ அகலம் வரை), பவளப் பாறை/ கடற்பாசிப் பகுதிகளில் சங்குயிரி வளர்கிறது.

கடந்த 5000 ஆண்டுகளில் மேற்சொன்ன பகுதிகள் தவிர்த்து வேறிடங்களில் இது வளர்வதாய்த் தெரியவில்லை. கடலிற் கரைந்த உப்புச் சுண்ணாம்பே திரைந்து போய் பீங்கான் படிகமாகிச் சுரித்துச் சங்குக்கூடு ஆகிறது. The shell surface is strong, hard, shiny, and somewhat translucent, like porcelain. இந்தச் சங்குக் கூடுகளும், சிப்பிகளும், கிளிஞ்சல்களுமே நெய்தற் பகுதியில் சுண்ணாம்புத் தேவைக்கான இயல்பொருட்கள்  ஆகும்.

2 பரிமானத்தில் புரிச்சுருவை (spiral curve) எப்படி அமையுமோ, அது போல் முப் பரிமானத்தில் 3 சங்குப்புரிகள் ஒன்றிற்குள் இன்னொன்றாய் அமையும்.

புரிகளுக்குள் பதுங்குவதும் வெளி வருவதுமாய் நத்தை தன் சேமத்தை (safety) நிலைநிறுத்தும் .(கடல் நத்தையின் குறுக்கு வெட்டைப் புரி>spiral என்பார். தோற்றம் புரியாது நாமும் ஆங்கிலச் சொல்லைக் கையாளுவோம்.) 

சங்கில் இடம்புரி, வலம்புரி, சலஞ்சலம், ஐஞ்சுன்னம் என 4 வகையுண்டு. புரியும் சலமும் (சுல்>சல்>சலம் = சுற்று), சுன்னமும் (சுல்+நம்=சுன்னம் = சுற்று) சுற்று, சுரி, சுழிகளைக் குறிக்கும். 

(சொற்பிறப்புத் தெரியாது சிலர் சலஞ்சலம், ஐஞ்சுன்னத்தைச் சங்கதம் என்பார். எத்தனை தமிழ்ச் சொற்களைத் தான் சங்கதமென்று சொல்லி நாம் இழப்போமோ தெரியவில்லை. ஐஞ்சுன்னத்தைப் பாஞ்சசன்யமெனச் சங்கதத்தில் மொழிபெயர்ப்பார்.)

புரி/புரியத்திற்கே (pyrum) சங்குப் பொருளுண்டு. (கடிகைச் சுற்றாய்) வலம் இருந்து இடமாகப் புரிகள் எழுந்தால் இடம்புரியென்றும். (எதிர்க்கடிகைச் சுற்றாய்) வலம் எழுந்தால் வலம்புரியென்றுஞ் சொல்வர். 

இடம்புரிச் சங்குகளே எளிதிற் கிட்டும். பெருதகையின்(Probability) படி, 1000 இடம்புரிகளுக்கு 1 வலம்புரி கிட்டுமென்பர். (1 வலம்புரிக்கு 1000 இடம்புரி விலையுண்டு.) சலம்புரி= சங்கு. சலம்= நீர்வட்டம்; முத்துக் குளிக்கும் துறை. 

சலஞ்சலம் 4 புரிகளானது; வலம்புரியினும் அரிது. 1000 வலம்புரிகளுக்கு 1 சலஞ்சலம் கிட்டுமாம். 5 புரிகள் கொண்ட  ஐஞ்சுன்னம் இன்னும் அரிது. 1000 சலஞ்சலங்களுக்கு 1 ஐஞ்சுன்னம் கிட்டுமாம். சலஞ்சலம், ஐஞ்சுன்னம் என எதுவும் இன்று கிடைப்பதாய் யாருங் கூறுவதில்லை.

கம்பு>கம்புள், கவடு>கோடு, சுரிமுகம், நத்து>நத்தை, நந்து>நந்தம், நாகு, பணிலம், வளை போன்ற சொற்களும் சங்கைக் குறித்தன. கொற்கை அருகே கடலுள் இந்தச் சங்குகள் நிறையக் கிடைத்த ஊர் கவாடபுரம் ஆகும். (மேற் குறித்த இலக்கியச் சொற்கள் பேச்சு வழக்கின்றி தென்பாண்டியிற் சங்கேயென வழக்கிலுள்ளது.) 

”விளங்குகொடி நந்தின் வீங்கிசை” என்ற சிலம்பு 26:203 வரியால் ”நந்து” சங்கிற்கு இணையாய்ப் பயன்பட்டதும், சங்கோசை தமிழர் வாழ்வில் இருந்ததும் விளங்கும். 

நுகும் (முன்தள்ளும்) வினை, நுகு>நுகல்> நகலென விரியும். நகல்தல் நகர்தலாகி move ற்கு இணையாய் இன்று பயனுறுத்துகிறோம். நகலும் உயிரி நகலியாகும். நாகு> நாவு> நாவாய்= துடுப்பால் முன்தள்ளப் படும் கப்பல். நாகுதல்>நாவுதலை ஒட்டிப் பல சொற்கள் தமிழிலுள்ளன. அவற்றை இங்கு விரிக்கின் பெருகும்.

ஆங்கில snail என்பது நம்மூர் நகலியின் திரிவே. snail (n.) Old English snægl, from Proto-Germanic *snagila (source also of Old Saxon snegil, Old Norse snigill, Danish snegl, Swedish snigel, Middle High German snegel, dialectal German Schnegel, Old High German snecko, German Schnecke "snail"), from *snog-, variant of PIE root *sneg-"to crawl, creep; creeping thing" (see snake (n.)). The word essentially is a diminutive form of Old English snaca "snake," which literally means "creeping thing." Also formerly used of slugs. Symbolic of slowness since at least c. 1000; snail's pace is attested from c. 1400.

வளர்ச்சியுறாச் சங்குகளைச் சங்குப் பூக்கள், இளநாடுகள் என்று சொல்வர். கடல் நீரில் முக்குளித்துச் சங்கைப் புரட்டி எடுத்து வருவது சலம்பல்> சலப்பலாகும். சலம்புமிடம் சலாபம். 

பரந்து கிடக்கும் சங்கு, முத்து விளையிடங்கள் ”பார்” என்றுஞ் சொல்லப் படும். கடல்நத்தைக் கறியை அதன் மென்தசை காரணமாய்ப் பச்சையாகவும், சமைத்துஞ் சாப்பிடுவர். 

மிஞ்சும் கழிவுகளும், கடல்தாவர வழியில் பெற்ற பொருள்களும் ஆன சங்கு, மீனெலும்புகள், பல்வேறு உயிரி ஓடுகள், சிப்பிகள், கிளிஞ்சல்கள், முத்து, பவளம் போன்ற பொருள்களையும் தூக்கியெறியாது, செய்து பார்த்துத் பிழை தவிர்க்கும் (trial and error) முறையில் படைக்கலன், உண்கலன், கொள்கலன், அணிகலனெனப் புதுப் பயன்வடிவு கொண்ட பொருள்களை பழங்குடி மாந்தர் செய்தார்.

ஓய்வு நேரத்தில் அப்படிச் செய்ததின் முதற்படியாக்கமே, சங்கின் உச்சி வழி ஒரு துளையிட்டு [by cutting a hole in the spire of the shell near the apex] ஓசையெழுப்பி மற்றோரை அழைத்ததாகும். 

இன்றும் நாட்டுப்புற வாழ்வில், பிறப்பு, திருமண, பிற விழா, இறப்பு ஆகிய நிகழ்வுகளில் மற்றோரை அழைக்கச் சங்கு பயன் படும். பழங்காலக் குடியிருப்புகளில் நாட்டுப் புறங்களில் 6 மணிக்குச் சங்கூதுவதும் உண்டு. இன்றும் பலவூர்களில் மின்சங்கை ஊதுவர். 

தமிழரோடு ஈனியல் உறவு கொண்ட ஆத்திரேலியப் பழங்குடிகளின் நடுவிலும் சங்கு ஊதும் பழக்கம் உண்டு.) ஒரு காலத்தில் கப்பலோட்டத்திலும் ஒருங்கு முயற்சிக்குக் கடலோடிகளை அழைக்கச் சங்கே பயன்பட்டது. போர் தொடங்கவும் சங்கே பயன்பட்டது. 

இற்றை வீளைக்கு (whistle) மாறாய்ச் சங்கு பயனாகியது. ”சங்கே முழங்கு” என்ற கூவல் வெற்றானதல்ல.. இந்தியா எங்கணும் கால காலமாய் உள்ள சங்குப் பயன்பாடு தமிழகத்திலிருந்து கிளைத்தது. அப்புறம் போய் அது தமிழ்ச்சொல்; இல்லையெனில்  என்னவொரு ஏமாற்றுத் தனம்? - என்று எண்ணிப் பாருங்கள்.

நெய்தல் வாழ்க்கையிற் சங்கு மட்டுமல்ல முத்தும் பவளமுங் கூடக் கிடைத்தன. சிப்பியில் மட்டுமின்றி, கடல் நத்தை போன்ற மெல்லுடலிகளிலும் முத்து பிறக்கும். இவ்வுயிரிகளுக்குள் ஒரு நுண் குருணை (grain) புகுந்து உறுத்துகையில் உமிழ்நீர் சுரந்து குருணை மேல் தொடர்ந்து படிந்து சுண்ணாம்புப் படிகமாகி உருள் முத்தாய் (முள்> முட்டு> முத்து) மாறி வளரும். 

மு>நு திரிவில் முத்தை நுத்தென்றுஞ் சொல்வர். நுத்து> நித்து> நித்தில் என்றாகும். வரலாற்று வளர்ச்சியில் நித்தில்> நிதில்> நிதியாகிச் செல்வங் குறித்தது. அக்காலத்தில் முத்தே சங்கநிதி ஆனது. (பாண்டியர்க்குப் பெரிதாயும் சேரர்க்குச் சிறிதாயுங் கிடைத்தது.) 

பவளம் பதும நிதி ஆயிற்று. (சோழ நாட்டில் பவளம் அதிகம் கிடைத்தது.) கடலிற் சோழி/ கவரி/ கவறு போன்றவையே 3 நாடுகளிலும் சிறு நாணயங்கள் ஆயின. மாழை கிடைத்து நாணயம் போன்றவைஅச்சடித்தது நெடு நாட்கள் கழித்தேயாகும். (நாணயச் சிந்தனை கூட நெய்தலில் தொடங்கியிருக்கலாம்.) 

இது போக மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச் சாரலில் பல்வேறு வகைக் கனிமங்கள் கிடைத்த கதை இன்னும் பெரியது. (பாண்டியர்/ சேரரின்) முத்து, (சோழரின்) பவளம், (கொங்கின்) மணிகள், (கோலாரின்) தங்கம், (சேர்வராய மலையின்) கனிமமெனத் வளமான பொருளியல் வளர எல்லா வாய்ப்புக்களும் தமிழ் கூறும் நல்லுலகில் அமைந்தன. நாகரிகம் எழும் அளவிற்குப் பழங்குடி மாந்தர் இங்கேயே நெடுங்காலம் தங்கியிருந்தார். ஆனால் நாகரிகம் என்று எழுந்தது? சரியாய்த் தெரியாது. 

நெய்தல் நாகரிகம் படிப் படியாக வளர்ந்து மற்ற திணைகளுக்கும் பரவியது. பெருத்த ஆமையோடே குடிசைக் கவிப்பாயிற்று. பெருமீன்களின் தோல்கள் பல்வேறு ஆடைகளுக்குப் பயன்பட்டன. கடற் பாசிகள் சாப்பாட்டிற் சேர்ந்தன. 

பெருமீனின் விலாவெலும்பைத் தூக்கி எறிந்தால் சக்கரம்போற் சுழலும் வளை தடியானது. (மாலவன் கைச் சக்கரம் என்றவுடன் ஓவியர் கொண்டைய ராஜு வரைந்த சக்கரப் படிமையை நம்மிற் பலரும் எண்ணிக் கொள்கிறோம். ஆய்வு நோக்கிற் கண்டால், கடிதோச்சி மெல்ல எறியும் கைக்கு வாகாயும், தூக்கி எறிந்தால் பார்ப்போருக்குச் சக்கரம் போல் தோற்றந் தருவதும் வளைதடியே. இவ்வியலுமையை நம்மில் யாரும் எண்ணாது உள்ளோம். பெருமாளின் கைச் சக்கரம், பெரும்பாலும் வளைதடியாகலாம்.) 

பெருத்த எலும்புகளே நெய்தலிற் குண்டாந் தடிகளாயின. ஈட்டிகளும் சூலங்களும் எலும்பின் ஒடிப்பாலும் கல்லுடைப்பாலும் பெறப்பட்டன. வாள்தவிர்த்து நம்மூரில் சொல்லிய எல்லாக் கொலைக் கருவிகளின் முதன்மை இயல் பொருள் (raw material) எலும்பாகவே இருந்ததிருக்கலாம். கல்லையும், இரும்பையும் பின்னர் பழகியிருக்கலாம். .   

நெய்தல் நாகரிகத்திற் கிளைத்த அடுத்த ஆயுதம் வில்லாகும். பெருமீன்களின் (ஒல்லியான) மார்பு எலும்புகளை (கற்றாழைக் கயிறு போன்ற) நரற் கயிற்றால் கட்டி கல்முனை அம்புகளைப் பொருத்தி இதைச் செய்திருக்கலாம். எளிதில் ஒடியும் இவ்வகை வில்களிலிருந்து சிலகாலங் கழித்து ஆற்றுக் கழி முகங்களில் வளரும் பிரம்புத் தடியால் (Calamus rotang; முன்கூறிய பள்ளிக் கரணை, தைக்கால், பத்தமடை போன்றவற்றில் இதுவும் வளர்கிறது. கேரளத்திலும் வளரலாம்.) புதுவகை வில்களைச் செய்தார். 

இன்னுங் காலஞ் செல்ல மலையில் வளரும் திண்மூங்கில்கள் (solid bamboos; கேரளம்/ தமிழ்நாடு எல்லையில் உள்ள ஆனை முடியில் வளரும் Arundinaria densifolia and Arundinaria walkeriana. எல்லா மூங்கில்களும் திண்மூங்கில்கள் அல்ல. பல மூங்கில்களின் கணுக்கள் (nodes) கூடானவை) கொண்டு செய்தார்.

மேலுங் காலங் கழித்து ஞெமை (Anogeissus latifolia. இதற்கு Dhavala என்ற சங்கதப் பெயருண்டு.) மரக்கிளைகளை நேராக்கிச் செய்தார். (சங்க நூல்களில் 9 வெள்ஞெமைக் குறிப்புகளுண்டு). அடுத்து வில்லைச் செய்யக் குங்கிலிய மரத்திற்கும் (Shorea robusta. இதை யா/ஆச்சாவோடு சிலர் குழப்புவர். யா/ஆச்சா= Hardwickia binata) என்று தாவினார். 

தெற்கே குங்கிலியம் வளர வாய்ப்புக் குறைவு. வடக்கு வணிகத்தில் தான் அது வர வேண்டும். வடக்கில் இதைச் சாலமரம் என்பார். மகதத்தின் வடபகுதிகளில் நன்றாகவே வளர்ந்தது.) முடிவில் உள்ளூர் வெண் மருதிற்கும் (Terminalia arjuna; சங்கதத்தில் Kukubha என்பர்) வந்து சேர்ந்தார். நெய்தலை ஒட்டி மற்ற திணைகளில் சில அயிர மாத்திரிகளில் இத்தனையும் கிடைத்ததால், எண்ணிக்கை கூடுமளவிற்கு நெய்தலில் பழங்குடிகள் நெடு நாள் வாழ்ந்திருக்கலாம்.

கத்தி/வாள் எனும் ஆயுதம் நெடுநாட் கழித்து, இரும்பைக் கண்டுபிடித்த பின்னர் முல்லை வாழ்க்கையில் நுழைந்தபின் எழுந்து குமுக மாற்றத்திற்குக் காரணமானது போல் தெரிகிறது. 

(செம்பு சிலவிடங்களிற் கிடைத்தது. ”செம்புக்குப் பின் இரும்பு” என்பது தமிழகத்தைப் பொருத்தவரை ஒரு வகை வறட்டு வாதமே. இக்காலத் தொல்லியலார் பலரும் இதைக் கேள்வி கேட்கிறார்). 

ஆயுதங்கள் போக, பேச்சிற்குப் பின் எழுந்த எழுத்தையுங் கூட நெய்தல் நிலத்தாரே முதலிற் பழகியிருக்கலாம். (எல்லாமே குறிஞ்சி என்பதை நாம் கேள்வி கேட்க வேண்டும்.) 

தாழை, கடற்கரைப் பனையோலை வழி எழுத்துப் பழகுவதற்கும் நெய்தலில் வழிகளுண்டு. இவ்வளவு தொலைவு நெய்தல் பற்றி நான் சொல்லக் காரணம் நெய்தல் நிலத்தாரை வெறும் மீனவரென நம்மிற் பலரும் குறைத்து மதிப்பு இடுவதாலே தான். குறிஞ்சி/முல்லை/.மருதத்தின் பெருமையே நம்மூரில் பலவிடங்களில் பேசப்படுகின்றன. மாறாக, நெய்தலின் இயலுமையைக் காணும் மாற்றுக் கோணம் ஏன் உண்மையாகக் கூடாது?.

அன்புடன்,
இராம.கி.